முகிழ்மதி 66,67,68

முகிழ்மதி 66:


 

 

ரத்தினவேல் முகிழ்மதியிடம் நன்றாக பேசியே ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது.

கட்சி மாநாடு முடிந்தப்பிறகு அவளிற்கு பல முறை அழைத்து பார்த்தான்.

அவள் அவனுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றவுடன்,வேறுவழியின்றி தனது தங்கையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

“தமி அண்ணி எங்கே?” என அவன் விசாரிக்க,

அவளோ “அண்ணி இன்னைக்கு நேரமே படுத்திக்கிட்டாங்க அண்ணா…எக்ஸாம் எழுதி டையர்டா இருக்காங்கனு நினைக்கிறேன்…நான் வேணா எழுப்பட்டுமா?” என கட்டிலில் படுத்திருந்த முகிழ்மதியை ஒரு பார்வை பார்த்தவாறு கேட்க,

அவனோ நெற்றி சுருங்க “இல்லை வேணாம் தமி…அவ தூங்கட்டும் விடு…நான் நாளைக்கு வந்து பேசிக்கிறேன்” என அழைப்பை துண்டித்து விட்டான்.

அவளிடம் அவன் குரல் மாறாமல் பேசியது பேரதிசயம் தான்!

அவனின் மனம் ஏமாற்றத்தில் விம்மி தணிந்தது.

முதல் முறையாய் அவனின் நெஞ்சில் ஒரு வலி!

அன்றைய நாள் மாலை பல முறை அவளின் எண்ணிற்கு அவன் அழைப்பு விடுவித்திருந்தான்‌.

ஆனால் அவளோ அவனை முற்றிலும் நிராகரிக்கும் விதமாக எந்தவொரு அழைப்பையும் ஏற்கவில்லை.

அதையறியாத மணாளனோ அவள் ஏதேனும் வேலையாக இருந்திருப்பாள் என்று எளிதாக கடந்துவிட்டான்.

ஆயினும்,அவனின் தவறிய அழைப்பை பார்த்துவிட்டு அவனிற்கு கூப்பிடுவாள் என்று அவன் காத்திருந்தான்.

ஆனால் அவளோ அவனின் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக இறுதி வரை அவனிற்கு அழைக்கவே இல்லை.

அங்கிருந்த அடுத்த ஒரு நாளும் அவளின் அழைப்பிற்காக அவன் காத்திருந்தும்,அவனிற்கு கிடைத்தது என்னவோ வலியும் ஏமாற்றமும் மட்டும் தான்!

தாயிடம் பேசியதற்கு பிறகு அவளின் மனம் சஞ்சலத்தில் தவித்தது என்றால்,அவளின் மூளை எதை எதையோ கற்பனை செய்து ஒரு விபரீதமான முடிவை எடுத்திருந்தன.

அவள் எடுத்த முடிவின் தாக்கம் அவளையே வாட்டி வதைக்க அவளிற்குள் பெரும் அலை வீசின‌.

அதனால் யாரிடமும் பேச விருப்பமின்றி கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள் அவள்.

அவளின் விழிகள் மனச்சோர்வில் மூடியிருந்ததே ஒழிய,அவளும் அன்றைய நாள் இரவு சிறிதும் உறங்கவில்லை.

அவளெடுத்த முடிவுகளை அவளின் மனதாலே கிரகிக்க முடியவில்லை.

அவ்வாறு இருக்கையில் அவளிற்கு எங்கிருந்து நித்திரை தோன்றும்?

அடுத்த நாள் இரவு கணவன் வீட்டிற்கு வரும் வரை சோக பதுமையாய் சுற்றி வந்த பெண்ணவளை கவலையுடன் பார்த்தனர் குடும்பத்தினர்.

அவளை சகஜமாக்க அவர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியை தழுவியது.

‘இந்த பொண்ணுக்கு என்னாச்சு?’ என குழம்பிப்போனார்கள் மற்றவர்கள்.

இந்நிலையில் இரண்டு நாட்களாக அவளை காணாமல் தவித்த கணவன் ஆவலை காணும் வேட்கையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

ஆனால் அவனை அன்புடன் வரவேற்றது அவளல்ல…அவளின் பாராமுகம் தான்.

அவளின் முகம் இறுக்கமாக இருந்ததோடு அவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தன்னை கண்டவுடன் ஓடி வந்து அவனை கட்டியணைத்துக்கொள்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

குறைந்தபட்சமாக தன்னை பிரிந்த ஏக்கம் அவள் கண்ணில் தெரியும் என்று எண்ணினான்.

ஆனால் அவளின் விழியில் அவன் கண்டது என்னவோ வெறுமையும் நிராசையும் மட்டுமே?

அதை கண்டவன் அவளிற்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என பதறிவிட்டான்‌.

அவள் அவனை நிராகரித்ததை கூட அவன் பெரிதாக எடுக்கவில்லை.

அவளின் சோர்ந்த முகத்தை பார்த்தவனிற்கு அவள் மட்டுமே முதன்மையாக இருந்தாள்.

அதனால் தன்னுடைய உணர்வுகளை எல்லாம் தூக்கி தூரயெறிந்துவிட்டு “முகிழ் எனி திங்க் பிராப்ளம்?” என அவளை நோக்கி அவன் ஒரு அடி எடுத்து வைக்க,

அவளோ குனிந்த நிலையிலே மெதுவாக பின்னோக்கி நகர்ந்தாள்.

அவளின் இந்த நகர்வை அவன் தவறாக எடுக்கவில்லை.

தன்னை கண்டு வெட்கம் கொள்கிறாளோ என சாதாரணமாக எண்ணிய ஆடவனோ “என்னாச்சு முகிழ்?ஏன் உன் முகம் சோர்ந்திருக்கு?” என கேட்டவாறு அவளை ஒரே எட்டில் அடைந்து அவளின் கன்னத்தை பற்றியிருந்தான்.

அவளை அவன் நெருங்கிய அடுத்த கணமே அவளோ தீச்சுட்டாற் போன்று அவனின் கரத்தை தட்டிவிட்டு வேகமாக பின்னடைந்தாள்.

அவளின் உதாசீனத்தில் அவனின் முகம் சட்டென கறுத்து சிறுத்தது.

அவன் வாழ்நாளில் இப்படியொரு அவமதிப்பை சந்தித்ததே இல்லை.

அவளும் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை.தாயின் போதனைகள் அனைத்தும் மனதை குழப்பியிருந்ததின் விளைவால் தன்னிச்சையாய் அவளை அப்படி நடக்க வைத்திருந்தது.

தன்னை அவமானப்படுத்தியவர்களை வேரோடு கருவறுக்க கூடிய ஆணவம் கொண்டவன் அவன்.

அன்றோ அவனின் மனைவிக்காக சற்று இறங்கி வந்தான்.

அவளின் மனரீதியான பிரச்சனைகள் அறிந்து தன்னுள் எழுந்த சீற்றத்தை அடக்கிவிட்டு “என்னாச்சு முகிழ்?உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி ஏதாவது நடந்துச்சா?எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு” என தள்ளி நின்ற நிலையிலே கனிவுடன் அவன் விசாரிக்க,அவளிடமோ அப்படியொரு மௌனம்!

ஆழ்கடலின் ஆழத்தை காட்டிலும் ஒரு அடர்ந்த அமைதி அவளிடம்!

ஆனால் அவளிற்குள் ஒரு புயலே வீசிக்கொண்டிருந்ததை அவள் மட்டுமே அறிவாள்.

அவனிற்கு சிறிது சிறிதாக பொறுமை காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.

உடனே விழி மூடி திறந்த ரத்தினவேல் மீண்டும் ஒரு முறை அவளிடம் அவன் நிதானமாக கேட்டுப் பார்த்தான்.

அப்போதும் அவளிடம் அதே அமைதி.அவளின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளிவரவில்லை.

அவள் குனிந்த தலை நிமிராமல் நின்ற விதம் அவனுள் உறங்கிக்கொண்டிருந்த சீற்றத்தை சிறிது சிறிதாக தட்டியெழுப்பின.

அவ்வளவு தான்?

அத்துணை நேரமாய் அவனுள் பூத்திருந்த ஏக்கம்,கவலை அனைத்தும் விலகி ஓடி,அவளின் உதாசீனம் அவனுள் கனலை மூட்டியிருந்தன‌.

அடுத்த கணமே “முகிழ் சீ மீ” என அவ்வறையே அதிர அவன் கர்ஜித்ததும் அவளின் தளிர் மேனி தூக்கிவாரிப்போட தலையை உயர்த்தினாள்.

அவளின் விழியில் தெரிந்த மிரட்சியையும் முக வெளுப்பையும் கண்ட ஆடவனின் கோபம் சற்று தணிந்தது.

அப்போதும் அவனின் சீற்றம் முழுமையாக அகலவில்லை.

அவளை விழிகளால் உறுத்து விழித்தப்படி “ஐ நீட் ஆன்சர்…வாயை திறந்து பேசு முகிழ்” என அழுத்தமாக கூற,

அவளோ பயத்தில் மீண்டும் இமைத்தாழ்த்த செல்ல “கண்ணை கீழே கொண்டுப்போனே மவளே கொன்னுடுவேன்டி” என அவன் பல்லைக்கடித்து உறுமியிருந்தான்.

அவனின் மிரட்டலில் பயந்துப்போய் அவனை விழி உயர்த்தி ஏறிட்டாள் பாவையவள்.

அவளின் விழிகள் ஏனோ கலங்குவது போல் இருந்தது.

கலங்கிய விழிகளை கண்டவனின் இதயத்தில் உதிரம் கொட்டின.

ஆனால் தற்போது அவன் இளகினால் அவளிடமிருந்து விடயத்தை வாங்க முடியாது என்று மனதை கல்லாக்கி கொண்டு “நான் உனக்கு எத்தனை முறை கால் பண்ணே…நீ ஒரு தடவை கூட என்னோடதை எடுத்து பேசலை…உனக்கு ஏதோ பிரச்சனைனு எனக்கு அப்பவே தெரிஞ்சிடுச்சு …நீ இப்போ வாயை திறந்து பதில் சொல்லு உனக்கு என்ன பிரச்சனை?” என சற்றும் குறையாத அழுத்தத்துடன் அவன் வினவினான்.

அவனின் விழிகளோ அவளின் முகத்தை துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன.

அவளோ அப்போதும் பதில் பேசாமல் அவனையே ஒரு மாதிரி பார்த்திருக்கவும்,அவனிற்கு வந்ததே ஆத்திரம்!

“உனக்கு அப்படியென்னடி நெஞ்சழுத்தம்?வாயை திறந்து பேசுடி” என கழுத்து நரம்புகள் புடைக்க அவன் கத்தியதும், அவளிற்கு மேனி தூக்கிவாரிப்போட்டது.

அவளின் விழியிலிருந்து கண்ணீர் கடகடவென கொட்டிய கையோடு அவள் முதன்முறையாக வாயை திறந்தாள்.

அவளின் இதழ்கள் அழுகையில் துடிக்க வீசும்பிக்கொண்டே “நான் உங்களை எவ்வளவு நம்பினேன்…நீங்க என்னை ஏமாத்திட்டாங்க” என கண்ணீர் குரலில் அவனின் மேல் முதல் குற்றச்சாட்டை வீசினாள்‌.

அவனிற்கோ இம்மையும் புரியவில்லை.மறுமையும் புரியவில்லை.

அவளின் பேச்சை கேட்டு குழம்பிய ஆடவன் “என்ன பேசறே நீ?தெளிவா சொல்லு?” என நெற்றியை நீவியப்படி கேட்டான்.

அவனிற்கு கோபத்தில் நரம்புகள் புடைத்து தலை வெடிப்பது போல் இருந்தது.

அவளோ கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு “நீங்க ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்…ஆனால் நீங்க என்னை ஏமாத்திட்டாங்க…உங்க மேலே நான் வைச்சிருந்த நம்பிக்கையை உடைச்சிட்டிங்க” என கரகரத்த குரலில் என்றாலும் அதில் ஒரு அழுத்தம் நிரம்பியிருந்தது.

அவனிற்கு அப்போதும் எதுவும் புரியவில்லை.

அவளையே இமைகள் இடுங்க அவன் பார்த்திருந்தான்.

அவளின் பேச்சில் அவன் முகம் மட்டும் இறுகியிருந்தது.

அவளோ தானாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே “நா..ன் என் அக்காவை நினைச்சு எவ்வளவு வருத்தப்பட்டேன்னு உங்களுக்கு தெரியும் தானே..‌.அவ என் கூட பேசலை…என் ஃபோன் எடுக்கலைனு எத்தனை நாள் அழுதிருக்கேன்…அவளோட என்னை பேச வைக்கிறேன்…சேர்த்து வைக்கிறேன்னு நீங்க தினமும் என்கிட்ட பொ…பொய் சொல்லிட்டு இருந்திருக்கீங்க…நான் கஷ்டப்படறதை பார்த்து உங்க மனசு இறங்கலையே…எல்லாத்தையும் பார்த்திட்டு அமைதியாவே இருந்திருக்கீங்க?” என நாதழுதழுக்க அவனிடம் பேசியவளின் விழிகள் அவனை குத்தி கிழித்தன.

கண்ணீர் நிறைந்த கண்களாகியினும் அவளின் விழியில் தெரிந்த அந்த வீரியம் அவனது இதயத்தை குத்தி கிழித்தது.

அவள் வாய் வார்த்தையாக துரோகி,அரக்கன் என்று மட்டும் குறிப்பிடவில்லையே தவிர,அவளின் பேச்சில் அந்த பொருள் மட்டுமே ஆழப்புதைந்திருந்தது.

அவளையே அவன் விழி அகற்றாமல் உணர்ச்சிகளற்று பார்த்திருந்தான்.

அவளிற்கு எப்படி அனைத்தும் தெரிந்தன என்று அவனுள் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருக்க அதற்கு விடையாக அவள் தன் அலைப்பேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவன் ‘என்ன?’ என பார்க்கவும்,

அவளின் முகமெல்லாம் அழுகையில் சிவந்திருக்க “இ…ந்தாங்க இதை நீங்களே வைச்சுக்கோங்க…எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க முடியாத கோபத்திலே என்னையும் என் வீட்டு ஆட்களையும் பழிவாங்க தான் என் போனை இப்படி பண்ணீங்கனு எனக்கு தெரிஞ்சிடுச்சு…ஏதேச்சையா அத்தை ஃபோனை வாங்கி அம்மாகிட்ட பேசினதிலே உங்களோட எண்ணம் எனக்கு தெ…ரிஞ்சிடுச்சு…உங்க இஷ்டப்படி இனி நான் யாருக்கிட்டயும் பேச மாட்டேன்” என வார்த்தைகள் தந்தியடிக்க அவனிடம் நீளமாக பேசிவிட்டு அலைப்பேசியை அவள் நீட்ட,அவனோ அதனை வாங்க மறுத்து தேகம் விறைக்க உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தான்.

அவன் ‘பேசு…பேசு’ என்று கேட்டதற்கிணங்கி அவள் பேசிக்கொண்டே இருந்தாள்.

ஆனால் அவள் பேசியதை கேட்க கேட்க அவனின் நெஞ்சம் சிறிது சிறிதாக பிளந்துக்கொண்டிருந்ததை அவள் அறியவே இல்லை.

அவளின் நலனிற்காக அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய,அவளோ அவனின் காதலை ஒவ்வொரு முறையும் அவமதித்துக்கொண்டிருந்தாள்.

அவளை நரகத்திலிருந்து பேணி பாதுகாத்தவனிற்கு அவள் கொடுத்தது துரோகி பட்டம்!

அதுவும் யாருக்காக?

பல வருடங்களாய் அவளை அடித்து துன்புறத்தியவர்களுக்காக அவளை உயிராய் நேசிப்பவனை கொன்று கொண்டிருந்தாள் அவள்.

அவனால் அவளின் இந்த மாற்றத்தை ஏற்கவே முடியவில்லை.

அவள் அவனின் இதயத்தை குத்திக்கிழித்ததோடு மட்டும் நிறுத்தவில்லை.

அவனிற்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று “எனக்கு தெரியும் நான் உங்களுக்கு ஏத்தவளே இல்லைனு…நீங்க பேசாமல் எங்க அக்காவை கல்யாணம் பண்ணி…” என அவள் முழுதாக பேசிமுடிப்பதற்கு முன்பே அவளின் கையிலிருந்த அலைப்பேசி எங்கோ சிதறி விழுந்திருந்தது.

அவளோ “ஆ” என பயத்தில் அலறி காதுகளை பொத்திக்கொண்டாள்.

ஆம்,அதுவரை அவளின் மீது உள்ள காதலுக்காக மௌனமாய் இருந்த ரத்தினவேலின் ஆத்திரம் அவளின் இறுதி பேச்சில் கரையை உடைத்திருந்தன.

அவனுள் எரிமலையாய் சினம் சீறி எழ,அவன் ஆவேசமாக அவளின் கையிலிருந்த அலைப்பேசியை வேகமாக தட்டிவிட்டிருந்தான்.

அவனின் அதிரடியில் பாவையவளின் மேனி வெடவெடக்க,அவனை பயத்தோடு ஏறிட்டு பார்த்தவளிற்கு நெஞ்சில் நீர் வற்றிப்போனது.

கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க முகமெல்லாம் செக்க செவ்வேலென சிவந்திருக்க,தன் கண் முன்னே ருத்ர மூர்த்தியாய் மாறி நின்றிருந்தவனின் தோரணை இதுவரை அவள் அவனிடம் பார்த்தே அறியாதது‌.

அவனின் முகம் அவளின் நெஞ்சில் குளிர்ப்பரவ செய்ய அவள் ஓரடி பின்னோக்கி நகர்ந்தாள்.

அதனை இகழ்ச்சியாக நோக்கிய ரத்தினவேல் “நீ பேசின பேச்சுக்கு உன் இடத்திலே வேற யாராவது இருந்திருந்தால் வந்த கோபத்துக்கு இந்நேரம் உடம்புலே தலை இருந்திருக்காது…வார்த்தைய பார்த்து பேசு” என அவளை விழிகளால் உறுத்து விழித்தவனின் மனமெல்லாம் ஒரு இறுக்கம்!

யாரை அவனின் மனதில் தினந்தோறும் வைத்து பூஜ்ஜித்தானோ அவளின் மீது மலையளவு வெறுப்பு மண்டியது‌.

அதிலும்,விஜயலட்சுமி போன்ற ஒரு கொடூர அரக்கிக்காக தனது புனிதமான காதலை துச்சமென அவள் காலில் போட்டு நசுக்கியதை அவனால் ஏற்க முடியவில்லை.

‘அவளின் மீது அவன் காட்டிய அன்பு,நேசம் எதற்குமே அவளிடம் மதிப்பில்லையா?’ என அவனின் மனம் ஒரு புறம் குமுறியது

திருமணத்தன்றே அவளிடம் ‘என் மனதில் உள்ள பெண் சந்திரமதியில்லை’ என அவன் தெளிவாக கூறி தானே அவளை மணந்துக்கொண்டான்.

அதன்பிறகும் ஒவ்வொரு கணமும் அவளிடம் தன் நேசத்தை சொல்,செயல் அனைத்திலும் காட்டிக்கொண்டிருந்தவனின் அன்பு அவளிற்கு ஏன் புரியவில்லை?

அவனின் நேசத்தை நிரூபிக்க அவன் அக்னி பிரவேசம் செய்ய வேண்டுமா என்ன?

தனக்குள்ளே பல்வேறு கேள்விகளை கேட்டு மருகிய ஆடவனால் மனைவியின் பேச்சை எளிதில் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை.

அவனிற்கு அவளின் பேச்சை நினைக்க நினைக்க இரத்தம் கொதித்தது.

அதனால் மழையில் நனைந்த கோழி குஞ்சிப்போல் நடுக்கிக்கொண்டிருந்தவளை பார்த்தவனிற்கு கோபம் இன்னும் அதிகரித்தது‌.

இதுநாள் வரை அவளிடம் ஒரு தடவை கூட அவன் ஆக்ரோஷமாக நடந்துக் கொள்ளவில்லை.அப்படியிருந்தும் அவளின் பயம் அவனிற்கு சீற்றத்தை கொடுத்தன.

“ச்சை போடி உன்னை பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு” என வெறுப்புடன் முகத்தை வேறுப்புறம் திரும்பிக்கொண்டவனின் கையிலிருந்து இரத்தம் கீழே சொட்டிக்கொண்டிருந்தன.

அலைப்பேசியை ஓங்கி குத்தியதால் உடைந்த கண்ணாடி சிதறல் ஒன்று அவனின் உள்ளங்கையை குத்தி பதம் பார்த்திருந்தது.

அவளின் மேல் உள்ள கோபத்தில் அவன் அதை உணரவே இல்லை.

அதுவரை அவனிடம் மனதிலிருப்பதை கொட்டி தீர்த்த பெண்ணவளிற்கு தற்போது அவனின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அவனிற்கு கோபம் வந்தால் எப்படியிருக்கும் என்று அவள் முதல் முறையாய் பார்க்கிறாள்…

அவனின் கரத்திலிருந்து உதிரம் கொட்டி கொண்டிருந்தன.

அவனின் கரத்திலிருந்து குருதி சொட்டுவதை
முதலில் கவனித்தது முகிழ்மதி தான்!

அதுவரை பயம்,கோபம்,அழுத்தம் என தன்னுணர்வுகளில் உழன்று இருந்த பெண்ணவளால் அவனின் காயத்தை பார்த்ததற்கு பிறகு தள்ளியிருக்க முடியவில்லை.

அடுத்த கணமே “ஐய்யோ இரத்தம்…” என பதறிப்போய் அவனருகே அவள் ஓடி வர,

அவனோ அதற்கு பிறகே கையிலிருந்த காயத்தை கவனித்தான்.

கண்ணாடி துகள் இப்போதும் அவனின் கையில் ஒட்டிக்கொண்டு சுருக்கென்ற வலியை கொடுத்தன.

அந்த கடுமையான வலியிலும் ஆடவன் அவளிடம் “கிட்ட வராதே” என அவளின் முன்பு கை நீட்டி தடுத்து நிறுத்தினான்.

அவனின் கட்டளைக்கு இணங்கி அவ்விடத்தில் அவள் நின்றாலும் “ஏ..ங்க இரத்தம்? உங்களுக்கு வலிக்கப்போகுதுங்க” என காயத்தை பார்த்துக்கொண்டே தவிப்பாக கேட்டவளின் விழிகள் கலங்கின.

அவனோ “வலிக்குதுடி எனக்கு ரொம்ப வலிக்குது…ஆனால் உன்னாலே மனசுலே விழுந்த அடிய விட இதுவொன்னும் பெருசா வலிக்கலை” என்று கூறி விரக்தியாக புன்னகைத்தான்.

அவளோ அவனின் காயத்தையும் அவனையும் அவஸ்தையோடு மாறி மாறி பார்க்க, அவளின் அக்கறை கூட அவனிற்குள் கோபத்தை கொடுத்தன.

“என்னடி சொன்னே?சந்திரமதியை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?அப்போ உன்னை என்னடி பண்ணலாம்?வீட்டை விட்டு அடிச்சு துரத்திடலாமா?” என எரிமலையாய் வெடித்து சிதற,

அவனின் அந்த பேச்சை கேட்டு அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டாள் அவள்.

அவளின் திகைப்பை கண்ட ஆடவனோ நக்கலாக “என்ன பார்க்கிறே?நான் இன்னொரு கல்யாணம் பண்ணதுக்கு பிறகு நீ எதுக்குடி எனக்கு?இரண்டு பொண்டாட்டிய கட்டி ஒரு வீட்டுலயே வாழ வைக்கிற அளவு நான் கேடுக்கெட்டவனில்லை…அவ வந்ததுக்கு அப்புறம் நீ எனக்கு தேவையில்லை” என அவளின் வழியிலே அவளிற்கான பதிலடியை அவன் திருப்பிக்கொடுத்தான்.

நிஜமாகவே,அவள் அப்படியொரு கோணத்தில் யோசிக்கவே இல்லை‌.

தமக்கையை அவனோடு சேர்த்து வைப்பதை பற்றி சிந்தித்து முடிவெடுத்தவள் அதுவரை தன்னை பற்றி சிந்திக்கவில்லை.

அவனை விட்டு பிரிய வேண்டும் என்று எண்ணினாலே அவளின் இதயத்தில் கத்தியால் சொருகியது போன்ற ஒரு வலி எழுந்தது.

அவள் கண்களில் வலியோடு அவனை பார்க்க,அதில் வெகுண்ட அவளின் மணாளனோ “இப்படி பார்த்த மவளே சாவடிச்சிடுவேன்…யாரு என்ன சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிட்டு நம்பிடுவியாடி?இன்னைக்கு உன் அம்மா சொன்னாங்கனு என்னை சந்தேகப்பட்டே…நாளைக்கு வேற எவனாவது எதையாவது சொல்லுவான்…அதையும் நீ நம்புவே?அப்படியிருந்தால் வாழ்க்கையே நரகம் ஆகிடும்டி” என ஆக்ரோஷமாக பேசியவனின் முகம் சட்டென மாறியது.

அவளின் முகத்தை வலியோடு நோக்கிய ரத்தினவேல் “இத்தனை நாளிலே ஒரு நாள் கூட என்னோட அன்பை நீ உணரலையாடி?உன்னை பிடிக்காமல் தான் நான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யறானே…என்னை பார்த்து என்ன சொன்னே பழிவாங்க இப்படி செய்யறேனு…இதுக்கு மேலே என் நெஞ்சை கிழிச்சு தான் உன்கிட்ட நான் காட்டணும்டி” என்றான் இயலாமையும் கோபமும் கலந்த உணர்வோடு…

அவளிற்கோ அப்போது தான் சிறிது சிறிதாக அவளின் தவறு உறைக்க தொடங்கின.

அவளின் விழியில் நீர் பெருக தொடங்கியதை பார்த்ததும் அவனிற்கு இன்னும் அதிகமாய் வலித்தது.

அப்போதும் அவளிற்காக அவனின் மனம் தவித்தது.

இந்த நிலையில் இருக்கும் தன்னை நினைத்தே வஞ்சித்தவன் “அடச்சீ போடி உன்கிட்ட பேசி பேசி எனக்கு டையர்டாகிடுச்சு…நீ என்ன கஷ்டத்திலே இருக்கியோனு உனக்காக பதறிப்போய் எல்லாருக்கும் முன்னாடி ஃப்ளைட் பிடிச்சு ஓடி வந்த எனக்கு நல்ல பரிசு கொடுத்திட்டேடி” என ஆற்றாமையுடன் பெருமூச்சை வெளியேற்றினான்.

அவளோ ஏதோ அவனிடம் பேச வர “போதும்டி…உன்னோட போராட என்னாலே முடியலை…உனக்காக எல்லாத்தையும் செஞ்ச எனக்கு துரோகி,அரக்கன் பட்டம் கொடுத்தது சரியானது தான்…இன்னையிலிருந்து உன் இஷ்டத்துக்கு என்ன தோணுதோ நீ பண்ணு….உன் அம்மாகிட்ட பேசணும்னா பேசு…இல்லை உன் இஷ்டத்துக்கு எங்கியாவது போகணுமா போ…போய் யார்க்கிட்டயாவது அடி மிதி வாங்கணுமா?வாங்கு…உடம்பு முழுக்க சூடு வாங்கணுமா வாங்கு…நான் இனி உன் விஷயத்திலே தலையிட மாட்டேன்…அதே மாதிரி நீயும் என் விஷயத்திலே தலையிடாதே…என் வாழ்க்கையை எப்படி வாழணும்னு எனக்கு தெரியும்” என மிதமிஞ்சிய வருத்தத்தோடு அவளிடம் பேசிவிட்டு விறுவிறுவென குருதி கசிய அருகிலிருந்த அறைக்கு சென்று கதவை சாற்றிக்கொண்டான்.

அறையின் கதவை அவன் இறுக மூடியது போல் அவனது மனக்கதவையும் ஆடவன் சாற்றிக்கொண்டானோ?

முகிழ்மதிக்கு வெகு தாமதமாகவே தான் பேசியது அதிகப்படி என்று உறைத்தது.

அத்துடன் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் அவளிற்காக அவன் செய்த செயல்கள்,அவன் காட்டிய அன்பு என ஒவ்வொரு காட்சியாக அவளின் கண் முன்பு வந்து படமாக ஓட,வெகு தாமதமாக அவனின் அன்பை அவள் உணர்ந்தாள்.

ஆனால் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

அதனால் தரையில் மடிந்து அமர்ந்து அவள் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவனின் உதிரம் தரையெங்கும் சிதறியிருப்பதை பார்த்து அவளின் அழுகை இன்னும் அதிகமாகியது.

அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் அவனிற்காக துடித்தன.

அவளின் அழுகை அவனின் இதயத்தை உலுக்கியது.

ஆயினும் மனதை கல்லாக்கிக்கொண்டு காயத்திற்கு மருந்திட கூட விருப்பமின்றி மெத்தையில் ஏறி படுத்துக்கொண்டான்.

“இட்ஸ் ஹேர்ட்டிங்டி” என அவனின் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன.

அவனின் விழியோரம் நீர் துளி வைரங்களாய் ஜொலித்தது.

அவ்வளவு எளிதில் அவனின் கண்கள் கலங்கிவிடாது‌.

அவன் இரும்பை விட உறுதியானவன்.

அப்படியான இரும்பு மனிதனை அழ வைத்திருந்தாள்,அந்த பதினெட்டு வயது பாவையவள்.
 

முகிழ்மதி 67:

 

சந்திரமதி இப்போது அந்த நட்சத்திர விடுதியில் பணிக்கு செல்ல தொடங்கியிருந்தாள்.

விஜயலட்சுமியிடம் பணிக்கு செல்வதாக மட்டுமே தெரிவித்திருந்தாள்.

அவருக்கு விஷயம் தெரிய வந்தால் தன்னை தடுத்து நிறுத்திவிடுவார் என்றெண்ணி அவரிடம் நிஜத்தை மறைத்திருந்தாள்‌.

மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை அவளிற்கு வேலை!

ஜஸ்வந்த்தின் மாமா வெளியே கண்டிப்பாக இருந்தாலும் அவர் ஒரு நல்ல மனிதர்.

கேளிக்கை விடுதியினுள் இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அவர் வழங்கினார்.

சில நேரம் ஒன்றிரண்டு மது போதை ஆசாமிகள் அங்கு பணிப்புரியும் பெண்களிடம் அத்துமீற முயலுவார்கள்.

அச்சமயமெல்லாம் அவர்களை அரண் போல் காப்பவர் அவர் தான்!

விடுதியின் மேலாளர் என்ற ஆணவமின்றி ஊழியர்களுக்கு எப்போதும் ஆதரவாக நிற்பார் நாராயணன்.

‘ச்சை இவரை போயா நாம்ப தப்பா நினைச்சிட்டோம்…எல்லா இடத்திலும் ஒரு நல்லவங்க இருக்க தான் செய்யறாங்க’ என தனக்கு தானே கூறி பெருமூச்சை வெளியேற்றினாள்.

சந்திரமதி கேளிக்கை விடுதியில் பணிப்புரிய ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருந்தது.

அவளிற்கு பெரிதாக எவ்வித பிரச்சனைகளும் எழவில்லை.

அவளிற்கு சீருடையாக வெண்ணிற சட்டை, கருப்பு நிற கால்சராய் மற்றும் அதற்கு ஏற்ற கருப்பு கழுத்துப்பட்டியும் வழங்கப்பட்டிருந்தது.

முதல் இரண்டு நாட்கள் வேலைக்கான பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது.

‘வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும்?எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?மதுவினை எவ்வாறு பணிவாக வழங்க வேண்டும்?’ என்றெல்லாம் அவளிற்கு பாடம் கற்பித்தனர்.

‘என்னடா இதுக்கெல்லாம் கிளாஸ் எடுக்கறாங்க?’ என்பது தான் அவளின் எண்ணமாக இருந்தது.

ஆனால் முதல் இரண்டு நாள் எடுத்த வகுப்பு அவளிற்கு பெரிய உபகாரமாக இருக்க,அவளிற்கு ஒன்று மட்டும் புரிந்தது.

ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒரு நியாயமான காரணம் இருக்கக்கூடும் என்று எண்ணினாள் அவள்.

அந்த வகுப்பின் பலனாய் அவள் வெகு சிறப்பாகவே பணியினை மேற்கொண்டாள்.

அவளின் எழில் பரிமாணங்களை கண்டு வழியும் நபர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவாள்.

‘இன்னும் எத்தனை நாளைக்கு இதெல்லாம் சகிச்சுக்கிறது?’ என அவளிற்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்திட,

‘சீக்கிரம் வேற வேலை ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கணும்’ என தனக்குள்ளே சிந்தித்துக்கொள்வாள்.

நாள் போக்கில் போலியாக மற்றவரின் முன்பு சிரிப்பை பூசிக்கொண்டு வலம் வருவது அவளிற்கு அலுப்பாக இருந்தன.

‘இது தான் நான்’ என வெளிப்படையாக நடந்துக்கொள்பவளை பிடித்து வந்து சிறையில் அடைத்தால் அவளிற்கு எப்படி இருக்கும்?

அவளிற்கு அந்த பணி மூச்சு முட்ட செய்தன.

ஆயினும்,தங்களுடைய நிலையை கருத்தில் கொண்டு அனைத்தையும் தாங்கிக்கொண்டு பணிப்புரிந்தாள்.

இந்நிலையில் அவனது தாயினை காண அழைத்து செல்வதாக கூறிய வீர்,அதன்பிறகு அவளை ஒரு முறை கூட அழைக்கவில்லை.

முதலில் ‘எல்லாரும் அப்படி தான்’ என கசப்பாக எண்ணினாலும்,மற்றொரு புறம் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்ற பதட்டமும் உண்டாகின.

அவனின் எண்ணிற்கு அழைத்து பார்க்கலாம் என்று அவள் அலைப்பேசியை எடுத்துவிட்டாள்.

பின்பு ‘வேண்டாம்’ என தான் எடுத்த முடிவை ஒதுக்கிவிட்டாள்.

ஒரு முறை மட்டுமே பேசி பழகியிருந்த மனிதனிடம் சட்டென உறவாட அவளால் முடியவில்லை.

அதேசமயம் இருவருக்குமிடையே கண்ணிற்கு புலப்படாத ஒரு பந்தமும் இருந்தன.

அதனால் அவனே அழைக்கும் தருணத்திற்காக அவள் காத்திருந்தாள்.

ஏனோ அவனின் அன்னையை காண அவளின் மனம் தூண்டிக்கொண்டே இருந்தன.அதற்காகவே அவரை கட்டாயம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

இந்நிலையில் சந்திரமதி வீர் கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அடுத்த நாளே அவளின் தங்கைக்கு அழைத்தாள்.

ஆனால் அவளின் அலைப்பேசியிற்கு புதிதாக வரும் அழைப்புகளை நிராகரிப்பது போல் ரத்தினவேல் ஏற்பாடு செய்திருந்ததால் சந்திரமதியால் தங்கையை தொடர்பு கொள்ள முடியவில்லை.

மேலும்,இரண்டு முறை முயற்சித்து தோற்றவள் ‘சரி விடு…அவ நல்லாயிருக்காள்னு அண்ணா சொன்னாரே…அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என சாதாரணமாக விட்டுவிட்டாள்.

ஏனெனில்,அவளிற்கு ரத்தினவேலின் மீது அளவுக்கடந்த நம்பிக்கை இருந்தது.

அதற்கு அவளிற்கு பல காரணங்கள் இருந்தன.

அந்த காரணங்களால் தங்கையை பற்றி அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தன் பணியை மேற்கொள்ள தொடங்கியிருந்தாள்.

ஆனால் இங்கு அவளின் சகோதரியோ சிறக்கொடிந்த பறவை போல் கணவனின் நிராகரிப்பில் தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருந்தாள்.

அன்று இரவு முழுவதும் தரையில் மடிந்து அமர்ந்து அழுது ஓய்ந்துப்போனவள்,அப்படியே களைப்பில் உறங்கியிருந்தாள்.

அவளிற்கு இவையெல்லாம் பழக்கம் தான்!

எத்தனை நாட்கள் விஜயலட்சுமியின் கொடுமையால் அழுதழுது தரையிலே உறங்கியிருப்பாள்.

இன்றும் அவள் அப்படியே உறங்கியிருக்க,ஆனால் உள்ளிருந்த அவளின் மணாளனுக்கு தான் மனம் தாளவில்லை.

அவளின் உடல்நிலையும் மனநிலையும் கண்முன் வந்து செல்ல,அவனின் நேசம் கொண்ட மனம் அவளிற்காக துடிக்க வேகமாக வெளியே வந்தான்.

மார்பில் கல் பதித்த சிலீரென்ற தரையில் ஆதரவற்ற குழந்தை போல் படுத்திருந்த மனையாளை கண்டதும் அவனின் ஆவி துடித்தன.

அவசரமாக அவளை நோக்கி வந்த ஆடவன் தன் காயத்தை துளியும் பொருட்படுத்தாமல் அவளை மெதுவாக கையில் ஏந்தி அவளை மெத்தையில் கிடத்தியிருந்தான்.

அவன் தன்னை தூக்கியதில் இலேசாக அசைந்த பெண்ணவள் “சா..ரிங்க” என உறக்கத்திலே மன்னிப்பை வேண்டியிருந்தாள்‌.

அவனோ விரக்தியாக புன்னகைத்து “நீ மன்னிப்பு கேட்கிறே நிலையிலே இருக்கலாம்…ஆனால் உன்னை மன்னிக்கிற நிலையிலே நானில்லைடி” என வலி நிறைந்த குரலில் உரைத்தவன் “தூங்கு” என அவளின் நெற்றியை வருடி அவளை மீண்டும் உறக்கத்திற்கு ஆழ்த்தியிருந்தான்.

அவனிற்கு கோபமே அவள் அவனிடம் கேள்விக் கேட்டதற்காக அல்ல.

அவள் கேள்விக்கேட்ட விதம் தான் அவனை அதிகமாய் காயப்படுத்தியிருந்தது.

நிச்சயமாக அவனின் மீது குற்றத்தை சுமத்தாமல் தணிவாக விசாரித்திருந்தால்,அவளிற்கான பதிலை அவன் வழங்கியிருப்பான்.

ஆனால் அவளோ எடுத்த எடுப்பிலே அவனை குற்றம்சாட்டியதை ஏற்க முடியவில்லை.

அதற்கும் மேல் இறுதியாக அவள் உரைத்த வாசகம் அவனது உயிரை வேரோடு பிடிங்கி எறிந்திருந்தது.

அதனால் அவ்வளவு எளிதில் அவளை மன்னிக்க அவன் தயாராகியில்லை‌.

அதனால் அவளின் கன்னத்தில் படிந்திருந்த உவர் நீர் கறையை கண்டு இதழை வளைத்தவன் மனதினை கல்லாக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

பாவையவளும் அவனின் ஸ்பரிசம் தன்னை தீண்டியதை உணர்ந்தாற் போன்று நிம்மதியாக ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள்.

ஆனால் ரத்தினவேல் தன் வாழ்வு எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இதயத்தில் பாரமேறிய உணர்வுடன் அறையின் முற்றத்தில் வந்து நின்றுக்கொண்டு வானத்தை வெறித்திருந்தான்.

அவனின் அடிப்பட்ட கைக்கு அவனே எளிமையாக ஒரு வைத்தியம் பார்த்து வெண்ணிற கட்டையும் போட்டிருந்தான்.

அவனின் சரீரமும் உள்ளமும் மரத்துப்போயிருந்தன.

அதனால் அன்றைய நாள் இரவோடு சரி…தொடர்ந்து வந்த தினங்கள் அவளை அவன் முற்றிலுமாக புறக்கணித்தான்.

இத்தனை நாட்களாய் அவள் பார்த்த அவளின் கணவன் அங்கு இல்லை…

அவனின் கண்ணில் தெரியும் காதல் இல்லை…

அவன் கொடுக்கும் முத்தங்கள் இல்லை…

அதட்டி மிரட்டி அடிப்பணிய வைக்கும் அவனின் அன்பான வார்த்தைகள் இல்லை…

அவனின் கனிவான அக்கறை இல்லை…

மொத்தத்தில் அவன் அவனாகவே இல்லை…முற்றிலும் வேறு ஒருவனாய் மாறி நின்றான்.

அவள் முதன்முறையாய் சந்தித்த அந்த அழுத்தமான ரத்தினவேல் ரகுநாத பூபதியாய் அவன் நின்றிருந்தான்.

எப்போதும் அவனது விறைத்த தோற்றத்தை கண்டு ஒதுங்கி செல்பவள்,இம்முறை ஒதுங்கி நிற்கவில்லை.

அவன் தன்னால் காயப்பட்டிருக்கிறான் என்று அறிந்த பிறகு பாவையவளால் மௌனம் காக்க முடியவில்லை.

அவன் அவளை துச்சமென வெறுத்து ஒதுக்கினாலும் அவள் பின்வாங்கும் நிலையை எல்லாம் எப்போதோ கடந்துவிட்டாள்.

அவன் தன்னை மட்டுமே நேசிக்கிறான் என்று தெரிந்த பிறகு அவனை இழக்க அவள் விரும்பவில்லை.

அதனால் அவளாகவே அவனிடம் மன்னிப்பை யாசிக்க பல வகையில் முயன்றாலும்,ஆனால் ஒவ்வொரு முறையும் “எனக்கு வேலையிருக்கு” என அவளிற்கு பேசவே சந்தர்ப்பம் வழங்காமல் அங்கிருந்து சென்றுவிடுவான் அவன்.

அவளை தேர்விற்கு அழைத்து செல்லும் பொறுப்பை கூட ஜித்தேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டான்.

அவளோ அதைக்கேட்டு கலங்கியவள் “ஏங்க நீங்களே என்னை கூட்டிட்டு போங்களேன்…பிளீஸ்” என கெஞ்சல் குரலில் மன்றாட,

அவனோ அவளை உணர்வுகளற்று நோக்கி “எலெக்ஷன் வருது…என்னாலே வேலையை விட்டு எங்கியும் நகரமுடியாது” என இறுக்கமாக கூறியிருந்தான்.

அவன் மனம் வைத்தால் அவளிற்காக எதையும் செய்யலாம்.

ஆனால் அவளின் செயலால் அவனின் இதயம் வாதையுண்டு இருக்க,அவன் எங்கனம் அவளிடம் தழைந்துப்போவான்?

அவனிடம் பேச அவள் ஒவ்வொரு முறை முயற்சித்தும் சுவற்றில் முட்டி நிற்கும் நிலை தான் அவளிற்கு!

இடையில் ஒரு நாள் அவனாகவே அவளிடம் வந்தவன் “உன் ஃபோனிலிருந்த பக் எடுத்தாச்சு…இனி நீ யாருக்கு வேணா பேசிக்கலாம்” என எங்கோ வெறித்தப்படி கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

அவனின் இந்த உதாசீனம் அவளை வெகுவாய் வருத்திட,அவளிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அவளிற்கு தனிமை கிடைக்கும் நேரமெல்லாம் கண்ணீரிலே கரைந்தாள்,அந்த பதுமை பெண்ணவள்.

‘தாயின் பேச்சை அப்படியே கேட்டிருக்கக்கூடாதோ?அவனிடம் பொறுமையாக பேசியிருக்க வேண்டுமோ?’ என்றெல்லாம் தனக்குள்ளே கேட்டு உள்ளம் மருகிப்போனாள்‌.

அன்னையின் சுயரூபம் அறிந்தும் அவருக்காக தன் மேல் மெய்யான அன்பு கொண்டவனை வருத்திவிட்டனே தினந்தோறும் தன்னை தானே அவள் வஞ்சித்துக்கொண்டாள்.

இந்நிலையில் அவளின் தாயிடமிருந்து மீண்டும் அவளிற்கு அழைப்பு வந்தது.

அவளின் நிம்மதியை பறிப்பதற்காகவே அவர் அழைத்திருந்தார் போலும்!

ஆனால் இம்முறை சிறிது சுதாரித்த பெண்ணவள் அவரின் அழைப்பை ஏற்கவில்லை.

கூடவே,அவரின் அழைப்பை ஏற்று பேச,அவளிற்கு நெஞ்சத்தில் வலுவில்லை.

கணவனை உயிரோடு கொன்ற குற்றவுணர்வு அவளை வாட்டி எடுத்திருக்க,தற்காலிகமாக அவரை ஒதுக்கி வைத்தாள்.

அவரோ தன் அழைப்பை அவள் எடுக்காததினால் அவளை கண்டப்படி அர்ச்சித்து கொண்டிருந்தார்.

களையிழந்த முகத்துடன் வலம் வந்த கணவன் மனைவி இருவரையும் பார்த்து அந்த வீடும் சோகத்தில் மூழ்கியது.

‘என்ன பிரச்சனை?’ என்று கேட்டுவிட வாய் துறுதுறுத்தாலும் அவர்களது அந்தரங்கத்தில் தலையிட யாவருக்கும் விருப்பமில்லை.

அதனால் அங்கு நடக்கும் கூத்தை ஒதுங்கி நின்று கவலையுடன் வேடிக்கை பார்த்தனர்.

ஒரு வாரம் கடந்த பிறகும் அவன் அவளிடம் பாராமுகம் காட்டுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் பேசுவதற்கு அவள் ஆயுத்தமானாள்.

முன்பு அவள் பேசுவதற்காக அவன் தவமிருக்க,

இப்போது அவன் தன்னுடன் ஒரு வார்த்தை பேசிவிட மாட்டானா என சீதையவள் தவமிருந்தாள்.

அவனிற்காக…அவனின் அன்பிற்காக அவள் ஏங்கினாள்.

அதனால் அவனிடம் உரையாடும் தருணத்தை எதிர்நோக்கி சஞ்சலத்தோடு அவள் காத்திருக்க,

அவனோ காலையில் நேரமே எழுந்து கட்சி அலுவலகம் செல்பவன்,நள்ளிரவு நேரம் கடந்தே வீட்டிற்கு வந்தான்.

அவளிற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் அவனும் அவளை போலவே அழுத்தமாக இருந்தான்.

அவளோ தேர்விற்காக படிக்க நேரமே எழுந்துக்கொள்வதால் இரவு பத்து மணிக்கே அவளின் விழிகள் உறக்கத்தை தழுவி விடும்.

அவளை படிக்க வைக்க அவன் ஆசைக்கொண்டதினால் அவனின் மனதினை அடைய ஒரே மார்க்கம் இது தான் என்பதால் அவள் முன்பை விட தீவிரமாக படித்தாள்.

அவளினுள் துக்கம் நிறைந்திருந்தாலும் அவளை படிப்பில் கோட்டை விடாமல் பார்த்துக்கொண்டாள் தமயந்தி‌.

“அண்ணி என்ன பிரச்சனையா இருந்தாலும் படிப்பை மட்டும் விட்டறாதீங்க…நீங்க படிக்கணும்ன்றதிலே உங்களை விட அண்ணா தான் பயங்கர ஆர்வமா இருக்காரு…அவருக்கு படிப்பு ரொம்ப முக்கியம்…எதையாவது நீங்க சொதப்பி வைச்சால் அண்ணா டென்ஷனாகிடுவாரு…” என தமயந்தி அவளை சரியான நேரத்தில் எச்சரித்திருந்தாள்.

அதனால் தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றவே அதிக முயற்சி எடுத்தாள் பாவையவள்.

அதனால் அவனிற்காக அவள் இரவு காத்திருக்க நினைக்க,

அந்தோ பரிதாபம்!

அவளை அறியாமலே நேரத்திற்கே அவளின் விழிகள் சொக்கி உறங்கிவிடுவாள்.

இதனால் அவனிடம் பேசும் நேரம் தள்ளிக்கொண்டே சென்றன.

அவனிடம் காலையிலாவது பேசலாம் என்றால்,அவனோ “முதல்ல போய் படிக்கிற வழியை பாரு…எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என பட்டென கூறி அவளை நிராகரித்துவிடுவான்.

முகிழ்மதியின் முகம் அப்படியே வாடி வதங்கிவிடும்.

பாவம் அவள்…

அவளும் என்ன தான் செய்வாள்?

பதின்ம வயதை அப்போது தான் கடந்திருக்கும் பாவையவளிற்கு அது நாள் வரை அவளின் குடும்பம் மட்டுமே அகிலமாய் இருந்திருக்கின்றது.

அதனால் அவர்களிடம் பேச முடியாமல் அத்தனை நாட்களாய் அவள் தவித்ததற்கு காரணம் கணவன் என்றதும் தன்னை மீறி பேசிவிட்டாள்.

தான் செய்தது தவறு என்று அவள் இப்போது நன்கு உணர்ந்துவிட்டாள்.

அதை அவனின் விலகல் தெள்ள தெளிவாக விளங்க வைத்திருந்தது.

ஆனால் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ள அவன் சந்தர்ப்பமே வழங்காமல் அவளை முற்றிலுமாய் ஒதுக்கி,அவள் உடைந்து நொறுங்கிப்போனாள்.

நிஜத்தில் அவன் அவளை வெறுத்து ஒதுக்கவே இல்லை.

அவனின் கோபம் ஒரு இரண்டு நாள் கூட நீடிக்கவில்லை…மூன்றாவது நாள் அவனின் மனமே அவனிற்கு எதிராக சதிசெய்தன.

அவளின் நிலையிலிருந்து யோசித்து அவளிற்கு சாதகமாக அவனை உருக்கிக்கொண்டிருந்தது.

ஆயினும்,ஒரு சிறிய அழுத்தம்!

அதனால் அவளின் முன்பு மட்டுமே இந்த பாராமுகம்…பின்னால் அவளின் வேதனை கண்டு அவனும் தீரா மனத்துயரில் தான் இருந்தான்.

அவளிடம் பேசாமல் அவன் விலகியப்போதும்,இரவில் அவளிற்கு துணையாய் அங்கு நீள்விரிக்கையில் படுத்துக்கொண்டான்.

ஆனால் அவள் உறங்கிய பிறகு அங்கு படுப்பவன்,காலை பொழுது விடிவதற்கு முன்பே அவன் அங்கிருந்த தடம் அறியாமல் எழுந்து சென்றுவிடுவான்.

அதனால் அவனின் அக்கறையும் அன்பும் அவளை விட்டு இன்னும் நீங்கவில்லை என்றறியாமல் அவள் கவலையில் மூழ்கியிருந்தாள்‌.
 


 

 

நாட்கள் வேகமாக நகர்ந்துக்கொண்டிருந்தன.

சந்திரமதி பணியில் சேர்ந்து இத்தோடு இரண்டு வாரம் கடந்திருந்தது.

அதுநாள் வரை அனைத்தும் நன்றாக சென்றிருந்த நிலையில் அவளின் பணிக்கு உலை வைக்கும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அன்று வழக்கம் போல் தனது இடத்தில் நின்று மதுவை குவளையில் அவள் ஊற்றிக்கொண்டிருக்க,அக்கணம் ஒரு வசதியான வீட்டு ஆடவன் அருகே வந்தான்.

அவனின் விழிகளில் தெரிந்த விஷமமே அவன் சரியில்லை என்று அவளிற்கு புரிய வைத்தது.

அவனின் கண்கள் அவளின் மேல் வளைவுகளிலிருந்து கீழ் வளைவுகள் வரை அனைத்தையும் அங்குல அங்குலமாக பார்த்திருப்பதை கண்ட சந்திரமதிக்குள் அருவருப்பு உண்டாகின.

ஆயினும் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்து “சார் இட்ஸ் யுவர் ட்ரீங்…பீளிஸ் பீ என்ஜாய்” என அவனை நோக்கி அவள் குவளையை நகர்த்தினாள்.

ஆனால் அவனோ அவள் நகர்த்திய குவளையை எடுக்காமல் விழிகளில் மயக்கத்துடன் “ஹவ் மச்?” என்று குழறலாக கேட்டவாறே அவளின் கரத்தை பற்ற,

அவளோ தீச்சுட்டாற் போன்று தன் கரத்தை அவனிடமிருந்து உறுவிக்கொண்டாள்.

அவனோ சிரித்துக்கொண்டே குவளையை கையில் எடுத்து “ஐ நீட் ஒன் மோர் பேபி” என கண்சிமிட்டி விஷமத்துடன் அவளை பார்த்தவாறு கேட்க,

அவனின் பேச்சும் பார்வையும் அவளிற்குள் புழு ஊர்வது போன்ற உணர்வை கொடுத்தன.

அதனால் அவளின் முகம் அஷ்டக்கோணலாகியது.

‘கருமம் புடிச்சவன் போய் தொலைய மாட்டான் போலே…இடியட்’ என மனதிற்குள் திட்டிக்கொண்டே அவனிற்காக இன்னொரு குவளையில் மதுவை ஊற்றி அவனிடம் வழங்கினாள்.

அவனோ அப்போதும் அங்கிருந்து நகராமல் அவ்விடத்திலே அமர்ந்து அவளை விழிகளால் பருகியப்படியே மதுவை ரசித்து குடித்தான்.

சில நேரம் இதுப்போல் காம வெறி பிடித்த மனிதர்கள் வருவார்கள் என்பதால் அவள் அனைத்திற்கும் தயாராகவே இருந்தாள்.

ஆனால் இன்றோ அவனின் பார்வைகள் எல்லை மீறி தன்னில் பதிந்ததை கண்டு அவளிற்குள் கொலைவெறி தாண்டவமாடின.

“முன்ன பின்ன பொம்பளைய பார்த்திருக்க மாட்டான் போல” என அருகே இருந்த பெண்ணிடம் அவள் ஆத்திரத்துடன் முணுமுணுக்க,

“அட நீ வேற மதி…இவன் ஒரு சாவகிராக்கி…இவன் வந்தாலே எனக்கு பக்குனு இருக்கும்…இப்படி தான் ஒரு தடவை அவன் ரூம் கீ கார்ட்டை கொடுத்து ரூமுக்கு வரச்சொன்னான்…என் நெஞ்சே பதறிப்போச்சு…கடைசியா நம்ப மேனேஜர் வந்து தான் என்னை காப்பாத்திவிட்டாரு” என சற்றே மிரட்சியுடன் அந்த பெண் சொல்ல,

அவளோ பல்லைக்கடித்து “அவ்வளவு கேவலமான ஜென்மமா இது?என்கிட்ட மட்டும் வாலாட்டிட்டு வரட்டும் இந்த ரோட் சைடு ரோமியோவோட மூஞ்சி முகரையெல்லாம் பேத்திடறேன்” என கையை முறுக்கிக்கொண்டு அவள் சொன்ன பாவனையில் அந்த பெண் திக்கென அதிர்ந்தாள்.

“ஹே என்ன பண்ணப்போறே மதி?” என படபடப்புடன் கேட்க,

அவளோ அவளை நோக்கி மெதுவாக திரும்பி “நடக்கும் போது பாரு” என கூறி நக்கலாக ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

அவளின் விழிகள் மட்டும் அந்த காமுகனை ஒரு மார்க்கமாக பார்த்திருந்தது.

அவளின் பாவனை வயிற்றில் புளியை கரைக்க “மதி வீணா பிரச்சனை வேணாம்…அப்புறம் வேலை போயிடப்போகுது” என பயத்துடன் கூற,

“போனாலும் அதை பத்தி எனக்கு கவலையில்லை…வேலைக்காக எல்லா அசிங்கத்தையும் தாங்கிட்டு இருக்க முடியாது மீனு” என தீட்சண்ய குரலில் கூறினாள்.

அந்த பெண்ணோ “உன்னை மாதிரி தைரியம் எனக்கும் இருந்திட்டால் பரவாயில்லை மதி…ஆனால் படுத்த படுக்கையா கிடக்கிற அம்மாவை கவனிக்க காசு வேணுமே…வேற எவனும் இந்த அளவு சம்பளம் தரமாட்டிக்கிறான்…இப்போவே இரண்டு வேலைய பார்ட் டைமா செஞ்சு தான் எங்க வயித்தையும் அம்மாவோட மெடிக்கல் பில்லையும் கவனிக்கிறேன்” என்று சற்று கவலை தொய்ந்த குரலில் கூற,சந்திரமதிக்கு அந்த பெண்ணின் மீது இரக்கம் சுரந்தது.

தாயிற்காக அவள் இவ்விடத்தில் வந்து வேலைப்பார்ப்பதை கண்டு அவளின் நெஞ்சம் விம்மியது.

தன்னை விட அவளின் நிலை பரிதாபமாக இருப்பதறிந்த சந்திரமதி “கவலைப்படாதே மீனு…எல்லாம் சரியாகிடும்…வேலை நமக்கு முக்கியம் தான்…அதுக்குன்னு இந்த மாதிரி ஆளுங்ககிட்ட அடங்கிப்போகணும்னு அவசியமில்லை…உன்கிட்ட அத்துமீறி எவனாவது நடந்துக்கிட்டால் என்கிட்ட வந்து சொல்லு…லெட் மீ டீல் தெம்” என அவளின் கைப்பிடித்து ஆறுதல் கூறினாள்.

அவளின் மனதினை சமாதானம் செய்வதற்காக அவள் அவ்வாறு கூறியிருக்க,ஆனால் அடுத்த நாளே அந்த பெண் “மதி அந்த ஆள் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்” என ஒருவனை சுட்டிக்காட்டி அழுகையோடு சொல்ல,

அவளோ ‘என்னடா இவ ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு நிஜமாவே இந்த புள்ளை என்னைய ரவுடி வேலைக்கு கூப்பிடுது’ என எண்ணினாள் மலைப்பாக…

ஆயினும்,வாக்குறுதிகளை அள்ளி வீசியது அவள் என்பதால் வேறுவழியின்றி “சரி விடு…இனி நீ அந்த டேபிளுக்கு போக வேணாம்…நான் பார்த்துக்கிறேன்” என அவளிற்கு தைரியம் கொடுத்த பெண்ணவள் அடுத்த முறை அவளே அவனுக்கான மதுவை எடுத்துக்கொண்டு அருகே சென்றாள்.

தலையை தொங்கவிட்டு இருந்த ஆடவனை பார்த்த சந்திரமதி எரிச்சலை உள்ளடக்கி “சார் நீங்க கேட்ட ட்ரீங்” என சிரித்தப்படி கூறி,அந்த மேசையின் முன்பு பானத்தை வைத்தாள்‌.

அவனிற்கு ஏற்கனவே போதை தலைக்கு ஏறியிருந்தது.

அவன் நிலைத்தெரியாத வகையில் மதுவை உட்கொண்டிருக்க,இப்போது மீண்டும் ஒரு குவளையை கேட்டிருந்தான்.

அவளோ ‘விளங்கிடும்’ என மனதிற்குள் சலித்துக்கொண்ட சமயத்தில் “ஓ.. ட்ரீங் வ…ந்திடுச்சா செ…ல்லம்” என அரை கண்ணை திறந்தப்படி நிமிர்ந்த ஆடவனின் முகத்தை கண்டவளின் முகம் பேயறைந்தாற் போன்று மாறியது.

************************
நாளுக்கு நாள் அவனின் விலகல் முகிழ்மதியை உயிரோடு கொன்றுப் புதைக்க ஆரம்பித்தன.

அக்கணம் அவளின் வாழ்வில் அவன் எத்துணை அளவு இன்றியமையாதவன் என்று அவள் உணர்ந்த தருணமும் அது தான்!

அவனின்றி ஒரு வாழ்வை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று அவள் அறிந்துக்கொண்டாள்.

அந்த இரண்டு வார பிரிவு அவளிற்கு அனைத்தையும் கற்று தந்திருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனின்றி அவளால் இருக்க முடியாது என்பதை உணர்ந்த காரிகையவள் அன்றிரவு வந்த தூக்கத்தையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு அவனிற்காக விழித்திருந்தாள்.

அவளையும் மீறி சில சமயம் கண்கள் சொக்கின.

அதனால் இடையே மூன்று முறை நீரினால் முகத்தை அடித்து கழுவிக்கொண்டு வந்திருந்தாள்.

அச்சமயம் அவர்கள் அறைக்குள் நுழைந்த ரத்தினவேல் அவள் உறங்காமல் இருப்பதை கண்டு புருவம் சுருக்கினான்.

ஆனால் அவளை கண்டுக் கொள்ளாதது போல் செல்ல திரும்பியவனை ஒரு தேன்குரல் தடுத்து நிறுத்தியது.

“ஏங்க ஒரு நிமிஷம் உங்ககிட்ட பேசணும்…” என தட்டுமாறி வந்தது அவளின் குரல்.

அவனோ அவளை நோக்கி திரும்பாமல் வழக்கம் போல் “நைட் ரொம்ப நேரமாச்சு…எதுவா இருந்தாலும் காலையிலே பேசிக்கலாம் தூங்கு” என்று விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான்.

“இல்லீங்க…எனக்கு தூக்கம் வரலை…இப்போவே பேசலாம்…” என அவளிற்கே உரிய பாணியில் மெல்லியதாக குரல் வந்தாலும் அவனிடம் பேச வேண்டும் என்ற உறுதி அதில் தெரிந்தன.

அவளின் பேச்சை கேட்டு அவனின் ஒற்றை புருவம் ஏறி இறங்கின.

அவளை திரும்பி காண தூண்டிய மனதை அடக்கிய ஆடவன் “எனக்கு தூக்கம் வருது” என முகத்திலடித்தாற் போன்று கூறிவிட்டு விறுவிறுவென குளியலறைக்குள் சென்றுவிட்டான்.

அவனின் பேச்சில் அவளின் அகமும் முகமும் சோர்ந்துவிட்டன‌.

ஆயினும்,அன்று அவளின் மனதில் தோன்றிய திடம் அவளை துவள விடவில்லை.

அந்த மனோத்திடத்தை கொடுத்தவன் அவன் தானே?

அவளிற்குள் துணிச்சல் என்ற உணர்வை புகுத்திய ஆசானிடமே அதனை காட்டிவிட அவள் எண்ணினாள்.

அவன் அவளிடம் முன்பு போல் பேச வேண்டும் என்பதற்காக அந்த ஆகாயத்தையும் வில்லாய் வளைக்கக்கூடிய நிலையில் அவள் இருந்தாள்.

அதனால் குளியலறையிலிருந்து அவன் வெளியே வருவதற்காக பதட்டத்துடன் காத்திருந்தாள் காரிகையவள்.

இரவு உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்த ரத்தினவேல் குளியலறையின் வாசலுக்கு முன்பு நின்றிருந்த அவனின் மனையாளை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவனின் விழிகள் ஒரே ஒரு கணம் வியப்பில் விரிந்தன.

அவளோ கைகளை பிசைந்தப்படியே “ஏ…ங்க பிளீஸ்..” என சொற்கள் பிசறிடிக்க வெளி வந்தன‌.

அவனோ அவளை கூர்மையாக நோக்கி “எனக்கு துக்கம் வருதுனு சொன்னேன்” என்றான் அழுத்தம்திருத்தமாக.

அவனின் குரலில் கோபம் நிறைந்திருப்பதை உணர்ந்த பெண்ணவளின் மேனி வெடவெடத்தாலும் “ஒ..ரு அஞ்சு நிமிஷம் மட்டும்” என மெதுவாக சொல்ல,

அவனின் விழிகள் இடுங்கிட “ஏய் உன்கிட்ட ஒரு தடவை சொன்னால் புரியாதா?உன் விஷயத்திலே நான் தலையிட மாட்டேன்…அதே மாதிரி என் விஷயத்திலே நீ தலையிடக்கூடாதுனு சொன்னில்லை…அப்புறம் எதுக்கு என்னை நச்சரிச்சிட்டே இருக்கே…போடி” என உறுமியவனின் குரலில் அவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

அவனின் பேச்சு அவளின் மனதை காயப்படுத்திட அவளின் விழியிலிருந்து முணுக்கென்று கண்ணீர் வெளியே வந்தது.

அவளின் கண்ணீரை பார்த்தவுடன் அவனிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

உடனே முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டான் ஆடவன்.

பெண்ணின் கண்ணீர் ஆண்களை உருக வைக்கும் ஆயுதம் என்பது போல் ஆடவனின் பிடிவாதத்தை அது சிறிது சிறிதாக தகர்க்க ஆரம்பித்தன.

ஏற்கனவே அவளின் மேலுள்ள கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருந்தவனின் பிடிவாதம் ஆட்டம் காண ஆரம்பித்தது.

அதனால் சிகையை அழுந்தக்கோதிய ஆடவன் “நீ போய் தூங்கு” என அவளை பார்க்காமலே முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் அங்கிருந்து ஒரு அடி மட்டுமே எடுத்து வைத்திருப்பான்.அதற்கு மேல் அவனால் நகரவே முடியவில்லை.

ஏனெனில்,அந்த ஆறடி உயர முரட்டு ஆடவனை தடுத்து நிறுத்தியிருந்தது ஒரு பூங்கரம்!

அவளின் அந்த அதிரடி செயலில் அவனே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

அவனின் இந்த அதிர்ச்சிக்கு காரணம் பாவையவளின் மென் கரங்கள் இரண்டும் ஆடவனின் இடையை சுற்றி வளைந்திருந்தது.

அவள் அப்படியொரு செயலை செய்வாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

தன்னை தொட்டு பேசவே யோசிக்கும் மனைவி இன்று அவனை அணைத்திருக்கிறாள்.

அதுவும் முதல் முறையாக…

அவனிற்குள் என்னவென்று பகுத்தறிய முடியாத உணர்வுகள் எல்லாம் தோன்றிட,அவன் இமைகளை மூடிக்கொண்டான்.

அவளின் அணைப்பில் அவனிற்குள் இருந்த இறுக்கம் முற்றிலும் அகன்றுவிட,அவனின் இதயமும் தேகமும் உருகிப்போயின.

அவனை பின்னிருந்த வாக்கிலே அணைத்திருந்தாள் அவனின் மனைவி.

அவளின் அணைப்பு ஒரு பூ அவனை இதமாய் வந்து வருடியது போலிருந்தது.

அவளின் அழுத்தமில்லா அணைப்பு அவனின் அழுத்தத்தை குறைக்கும் என்று அவன் அன்று தான் உணர்ந்தான்.

அவளோ ஆடவனின் முதுகில் தன் முகத்தை ஆழப் புதைத்து “நா…ன் தப்பு பண்ணிட்டேன்…என்னை மன்னிச்சிடுங்க பிளீஸ்” என விசும்பிக்கொண்டே சொன்னவளின் பேச்சை கேட்டு,அவனின் தேகம் அன்றைய நாள் நினைவில் மீண்டும் விறைத்தது.

ஆனால் அவனிற்காக அவள் சிந்திய கண்ணீர் அவனின் சட்டையை மீறி வெற்று தேகத்தை துளைத்தன.

தேகத்தை துளைத்த அம்புகள் இதயத்தை ஊடுருவி,அவனை மெதுவாய் இளகச் செய்தன.

சில கணங்கள் அவளின் அணைப்பிலே கட்டுண்டு நின்றிருந்தான் ஆடவன்‌.

அவளின் கரத்தை உதறிவிட்டு அவன் விலகவும் இல்லை..அவளை முழுமையாக அவன் மன்னித்து அரவணைக்கவும் இல்லை.

அவன் நின்ற நிலையிலே இருக்க “ஏ…ங்க ஃப்ளீஸ்…என்னை மன்னிச்சிடுங்க…நீங்க என்னோட நல்லதுக்காக தான் இதெல்லாம் செ…ய்யறீங்கனு தெரியாமல் அப்படி பேசிட்டேன்…இ..னி இது மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேங்க…இந்த ஒரு முறை எ…ன்னை மன்னிச்சிடுங்க…” என தேம்பிக்கொண்டே பேசியவளின் இதழ்கள் அவனின் முதுகை உரசி,ஆடவனை சிலிர்க்க வைத்தன.

அவளோ தன் தவறுகள் அனைத்தையும் கண்ணீரிலே கரைப்பவள் போல் அழுதுக்கொண்டிருந்தாள்.

அவளின் அழுகை அவனின் இதயத்தை சுட்டன.

அவளின் மேல் கோபம் இருந்தாலும் அவளின் கண்ணீர் அவனை அடியோடு சாய்த்தன.

அப்போதே அவளை அணைத்துக்கொள்ள அவனின் காதல் மனம் தவித்தாலும்,அன்று அவள் பேசிய வார்த்தைகள் அவனை இறுக்கிப்பிடித்தன.

அதனால் தன் கை முஷ்டியை இறுக்கி மௌனமாய் இருந்தான் ஆடவன்.

ஆனால் அவளோ அன்றே தன் மனதிலிருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டி விடும் விதமாக “உ…ங்களோடு பேசாமல் நீங்க இல்லாமல் என்னாலே இயல்பா இருக்கவே முடியலைங்க….இந்த இரண்டு வாரமும் எனக்கு நரகம் மாதிரி தான் இருக்கு…என் மனசை யாரோ கத்தியாலே குத்தின மாதிரி வலிக்குதுங்க…எனக்கு நீங்க மட்டும் போதும்…வேற யாரும் வேணாம்…உங்களை வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் கேட்கமாட்டேன்…உங்களை மத்தவங்க பேச்சை கேட்டு சந்தேகப்பட மாட்டேன்…நீங்க செய்யற எல்லாமே என் நல்லதுக்கு தான்னு புரிஞ்சுக்கிட்டேன்…இனிமேல் நீங்க சொல்லற மாதிரி எல்லாமே கேட்கறேங்க…பிளீஸ்ங்க என்னோட ப..ழைய மாதிரி பேசு…ங்களேன்” என வாய்விட்டு கதறியவளின் சொற்கள் ஒவ்வொன்றும் அவனின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் ஆழப்பதிந்தது.

அவளிடம் அவன் எதிர்பார்த்தது இதை தானே?

தன்னை அவள் புரிந்துக்கொள்ள வேண்டும்…மற்றவரை காட்டிலும் அவளிற்கு அவன் உயர்வாக இருக்க வேண்டும்…இவற்றினை தானே அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்தான்.

இந்த சில நாள் பிரிவு அவளிற்கு என்ன தேவை என்பதை தெள்ள தெளிவாக அவளிற்கு உணர்த்தியிருந்தது.

அத்தோடு அவளின் மனதில் அவன் மேலிருக்கும் அன்பையும் புரிய வைத்திருந்தது.

அவளின் தமக்கை…அம்மா…அப்பா…வீர்…தமயந்தி…புகுந்த வீட்டினர் இப்படி யாருமே அவளிற்கு தேவையில்லை.

அவளிற்கு தேவையான ஒரே ஒரு உறவு,அவளின் மணாளன் மட்டுமே!

அவனின் அன்பு…அவனின் அருகாமை…அவனின் நேசம்…அவனின் அக்கறை…அவ்வளவு ஏன் அவனில் இருக்கும் அனைத்தும் அவளிற்கு வேண்டும் என்று அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் வேட்கையில் துடித்தன.

அவனிற்கோ அவளிடமிருந்து அவன் எதிர்ப்பார்த்த அனைத்தும் அவளின் வாய்மொழியாக கிடைக்கப்பெற்றதும்,அதுவரை அவனின் நெஞ்சோரம் ஒட்டிக்கொண்டிருந்த அந்த சிறு பாரம் கூட விலகி ஓடியிருந்தன.

அவனின் இதழில் இலேசாக புன்னகை ஒன்று உதயமாகின.

அவனின் வாழ்வு அந்த ஒரு நொடியில் வண்ணமயமாய் மாறியது போல் அவன் உணர்ந்தான்.

காரிகையவளோ உடைந்து நொறுங்கிப்போய் நின்றிருந்தாள்.

அவனிடம் தன் மனதிலிருக்கும் அனைத்தையும் கொட்டியும் அவனிடம் மன்னிப்பை யாசித்தும்,அவன் சற்றும் இறங்கி வராதது அவளின் இதயத்தில் பெரும் வலியை கொடுத்தன.

அதற்கு மேலும் அவனுடன் போராட முடியாத முகிழ்மதி துவண்டு அவனிடமிருந்து விடுப்பட முயற்சித்தாள்.

ஆனால் அடுத்த கணமே அவளின் கரம் பற்றி முன்னோக்கி இழுத்திருந்தான் ரத்தினவேல்.

அவனின் அதிரடியில் அவளின் விழிகள் சாசர் போல் விரிந்துக்கொள்ள “கண்ணை இப்படி விரிக்காதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறதுடி” என கோபத்துடன் அவளின் கன்னம் கிள்ளிய ஆடவன் அவளை இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தான்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top