முகிழ்மதி 69:

இருவரும் கட்டியணைத்த நிலையிலே நீண்ட நெடிய நேரம் இருந்தார்கள்.
முகிழ்மதியின் விசும்பல் சத்தம் மட்டுமே அந்த அறையை நிறைத்திருந்தன.
ரத்தினவேலின் நெஞ்சை துளைத்துக்கொண்டிருந்த கண்ணீர் சிறிது சிறிதாக குறைய தொடங்கின.
பல நாட்களுக்கு பிறகு,தன் சொந்த தாய்மடி வந்தடைந்த ஒரு நிம்மதி அவளிற்குள்!
காடு மேடெல்லாம் வெறும் காலோடு அலைந்து திரிந்து மீண்டும் வீடு வந்து சேர்ந்த உணர்வு அவனிற்குள்!
அந்த இரண்டு வார பிரிவை அன்றே தீர்த்துக்கொள்பவன் போல் அவளை அவன் இறுக்கி அணைத்துக்கொள்ள,அவளும் பதிலுக்கு அவனின் நெஞ்சில் சரண் புகுந்திருந்தாள்.
அவனின் தாடையை அவளின் சிரத்தில் வைத்து அழுத்திக்கொண்ட ஆடவனின் மனமெல்லாம் உவகையில் ஆர்ப்பரித்தது.
அதையும் மீறிய ஒரு ஆழ்ந்த அமைதி அவனிடம்!
அவளின் அழுகை இப்போது முற்றிலும் தேய்ந்து மறைந்துப்போனது.
அந்த மௌனத்தில் முன்பு இல்லாத ஒரு அசாத்திய நெருக்கம் தம்பதியினருக்குள் இருந்தது.
அதற்கு காரணம்,ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த நேசம் தான்!
முகிழ்மதியின் மெல்லிய உடலின் நடுக்கம் அவன் மார்பின் கதகதப்பில் மெல்ல தணியத் தொடங்கியது.
அவனின் இதயத்தில் வாகாக கண்மூடி தலைசாய்த்து இருந்தவளின் நெற்றி வகுட்டிலிருந்த குங்குமம் அவனின் சட்டையில் படிந்தது.
அவனது தாடி மற்றும் மீசையின் ரோமம் அவளின் மேனியில் ஒரு சிலிர்ப்பை கொடுத்தன.
கண்ணீர்…பிரிவு…பரவசம்…மகிழ்ச்சி என அடுத்த சில நிமிடங்கள் உணர்வுப்பூர்வமான கணங்களாய் கடந்தன.
தம்பதினர் இருவரும் ஒருவரின் அருகாமையை மற்றவர் ரசித்தப்படி மோனநிலையில் கட்டுண்டு கிடந்தனர்.
மேலும்,சில நிமிடங்கள் கடந்தப்பிறகு ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் நெஞ்சில் பதிந்திருந்தவளின் முகத்தை தன்னிரு கைகளில் ஏந்தினான் அவன்.
அவன் கண்கள் இலேசாக சிவந்திருந்தன.ஆனால் அவை கோபத்தினால் அல்ல, இத்தனை நாட்கள் அவளைத் தவிக்கவிட்ட குற்ற உணர்வினால்!
அவளின் முகத்தை தன்னிலிருந்து விலக்கியவுடன் அவளின் விழிகள் மீண்டும் கலங்குவது போலிருந்தது.
அவளின் விழியோடு தன் விழி கலந்த ஆடவன் “இனி நீ எதுக்காகவும் அழக் கூடாதடி” என வலி நிறைந்த குரலில் கூறியவனின் இதழ்கள் அவளின் கன்னத்தில் படிந்திருந்த கண்ணீர் கறைகளை துடைக்க ஆரம்பித்தன.
அவனது ரோமம் அடங்கிய முகம் அவளின் வதனத்தை தீண்டியவுடன் மேனி சிலிர்த்தன.
அவளின் இதயம் துக்கத்தை மீறி படபடக்க அவள் தன் விழிகளை மூடி அவனின் நெருக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.
ஆடவனோ அவனிதழ் என்னும் தூரிகை கொண்டு அவளின் கண்ணீர் முழுவதையும் துடைத்தவன் “உன் கூட பேசாத இந்த இரண்டு வாரமும் உனக்கு மட்டுமில்லை எனக்கும் நரகமா இருந்துச்சுடி.ஆனால் நீ செஞ்சது சரியா முகிழ்?மத்தவங்க பேச்சை நம்பி என்னை நீ தள்ளி வெச்சது எவ்வளவு பெரிய தப்பு…இத்தனை நாளிலே ஒரு தடவையாவது உன்னை பிடிக்காத மாதிரி நான் நடந்திருக்கேனாடி?இதிலே எனக்கு வேற கல்யாணம் பண்ணறதுக்கு பொண்ணு ஏற்பாடு பண்ணறே…ஹும்” என இதழ்கடித்து கோபத்துடன் அவன் அதட்ட,
அவளோ விழி மூடிய நிலையிலே அவனது வசைவுகளை உள்வாங்கிக்கொண்டாள்.
அவளின் தொண்டைக்குழி செய்த தவறை எண்ணி ஒரு முறை ஏறி இறங்கின.
அதை அவதானித்த ஆடவன் “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அப்படி பேசியிருப்பேடி?நீ சரியான நெஞ்சழுத்தம் புடிச்சவே…இதுக்காகவே என்னோட அருமை புரியணும்னு உன்னை நான் விலக்கி வைச்சேன்…நான் விலக்கி வைச்ச பிறகு தான் மேடமுக்கு என் மனசு புரிஞ்சிருக்கு…அப்போ இத்தனை நாளா என்னை பிடிக்காமல் தான் என்னை நீ சகிச்சுக்கிட்டியாடி?” என சீறலான குரலில் வலியோடு கேட்டிருந்தான் அவன்.
இப்போது அவனின் சீற்றத்தில் அவள் பயந்து நடுங்கவில்லை.மாறாக,அவனின் சொற்களில் பொதிந்திருந்த நேசம் உணர்ந்து அவள் சோகமுற்றாள்.
அவளால் காயப்பட்ட மனதிற்கு அவளின் விளக்கம் அவசியமாகியிருந்தது.
தன் நடத்தை அவனை காயப்படுத்தியிருப்பதை அறிந்து உருகிய பெண்ணவள் சட்டென விழி திறந்து “நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க. எ…னக்கு உ..ங்களை ரொம்ப பி..டிக்கும்…எல்லாரையும் விட…ஏதோ புத்திக்கெட்டு போய் அப்படி பேசிட்டேன்…எ..ன்னை மன்னிச்சிடுங்க.இனிமே யார் பேச்சையும் நான் கேட்கமாட்டேன்” என நேசம் உருகிய குரலில் வார்த்தைகள் தந்தியடிக்க பேசியவளின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான் ரத்தினவேல்.
சில வினாடிகள் அவளின் கலங்கிய கண்களையே பார்த்திருந்தவன்,பின்பு ஒரு பெருமூச்சுடன் “சரி விடு…இது தான் உனக்கு ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்…இனியொரு முறை நீ தப்பு பண்ணால் நான் மன்னிக்கவே மாட்டேன் முகிழ்” என கறாரான குரலில் அழுத்தமாக உரைத்தான்.
பாவையவளும் இதழ்கள் பிதுங்க “ம்” என பாவமாக தலையசைத்தாள்.
அவளின் பாவனையை நக்கலாக நோக்கிய ஆடவன் “இப்படி பாவமா முகத்தை வைச்சியே ஊரு ஏமாத்துடி ராட்சசி” என செல்லமாக திட்ட,
“சாரிங்க…இனி இப்படி பண்ணமாட்டேன்…எனக்கு நீங்க மட்டும் போதும்…நீங்க எது சொன்னாலும் செய்யறேன்…வேற எதுவும் வேணாம்…” என கிள்ளை பிள்ளை போல் சொன்னதையே சொன்னவளிற்கு அவன் தன்னை மன்னித்து பழையப்படி பேசினால் போதும் என்ற உணர்வே மிகுந்திருந்தது.
அதன்பொருட்டே எதை பற்றியும் யோசிக்காமல் அவள் பேசிக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவளின் மணாளனோ அவளின் கண்மூடித்தனமான பேச்சை கேட்டு புருவம் நெரித்தவன் “சோ உனக்கு நான் மட்டும் போதும் வேற யாரும் வேணாம்…அப்படி தானே?” என கூர்மையாக அவளை துளைத்தப்படி கேட்க,
அவள் மீண்டும் அவனிலிருந்து வெளிவராமல் வலையில் சிக்கியவளாய் “ஆம்” என தலையாட்ட,
“ஓ..” என கேலியாக இதழை வளைத்து சிரித்த ஆடவன் “சரி இந்த முகிழ்மதிக்கு இனி வீர் அண்ணா வேணாம்…உன் அக்கா சந்திரமதி வேணாம்…வேற யாரும் வேணாம்…எதுவும் வேணாம்…இனி அவ யாரு கூடவும் பேசப்போறதில்லை…அவளுக்கு அவ புருஷன் ரத்தினவேல் மட்டும் போதும்…அப்படி தானே முகிழ்?” என அவளின் பதிலை வைத்து அவளை அவன் மடக்கியிருக்க,
அவளோ இப்போது திருதிருவென விழிக்க ஆரம்பித்தாள்.
தன்னவன் தன்னுடன் பேசிவிட மாட்டானா என்ற ஏக்கத்தில் அவ்வாறு சொல்லியிருந்தாள்.
இப்போது அவன் அதை பற்றி விளக்கமாக எடுத்து விவரித்ததும் அவளால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை.
தனக்கு உயிரானவர்களை எவ்வாறு அவள் வேண்டாம் என்று கூறுவாள்?
அவளிற்கு சந்திரமதி எந்த அளவிற்கு முதன்மையானவளோ அதே அளவு வீரும் அவளிற்கு முதன்மையானவன்!
மற்றவர்களை கூட அவளால் புறம் தள்ளிவிட முடியும்.ஆனால் இவர்கள் இருவரும் அவளது வாழ்வில் ஒரு அங்கமானவர்கள்.
அப்படியானவர்களை அவளின் வாழ்விலிருந்து அகற்ற முடியுமா என்ன?
அவள் பதில் கூற முடியாமல் சங்கடமாக நிற்க,
இப்போது அவனின் இதழ்கள் இலேசாக விரிய “என்ன முகிழ் யோசனை?அவங்க யாரும் வேணாம்னு நீ தானே சொன்னே?அப்புறம் என்ன ஆமானு சொல்லு” என அவளை ஆழ்ந்து பார்த்தப்படி வினவ,
அவளோ என்ன பதில் கூறுவது என தெரியாமல் சில கணம் திணறினாலும்,ஒரு முடிவெடுத்த கையோடு நிமிர்ந்தவள் “நீங்க மட்டும் போதும்” என்றாள் மெல்லியக்குரலில்…
அவளிடமிருந்து அப்படியொரு பதில் வரும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
முன்பு எதையும் சிந்திக்காமல் அவள் கூறிவிட்டாள் என்று அவன் எண்ணியிருக்க,அவள் இப்போது யோசித்து அதே பதிலை கூறவும் அவனிற்கு ஆச்சரியமாக இருந்தது.
அதனால் “ஏன்?” என்ற கேள்வி அவனிடமிருந்து ஆர்வத்தில் பறந்து வர,
அவளோ தடுமாறிய விழிகளுடன் “மத்தவங்களை பிரிஞ்சு கூட என்னாலே வாழ முடியுதுங்க…ஆனால் உங்களை பிரிஞ்சு என்னாலே வாழ முடியும்னு தோணலை…இந்த இரண்டு வாரமும் உங்களோட பேசாமல் உங்க அக்கறையில்லாமல் என்னோட உயிரே என்னை விட்டுப்போன மாதிரி இருந்துச்சு…எனக்கு நீங்க வேணும்…இனிமேல் என்ன கோபம் வந்தாலும் என்கிட்ட சொல்லிடுங்க…நான் புரிஞ்சுப்பேன்…ஆனால் என்னை விட்டு பிரியணும்னு மட்டும் நினைக்காதீங்க” என இறைஞ்சியவளின் குரலில் இருந்த வேதனை அவனை எந்த அளவு அவள் நேசிக்கிறாள் என்று வலுயுறுத்தின.
அவளிடமிருந்து இப்படியான ஒரு பதில் வரும் என்று எதிர்பாராத ரத்தினவேல் அவளை வியப்பாக புருவம் மேலிட பார்த்திருக்கும் போதே “பிளீஸ்” என கண்கள் உருக யாசித்த பெண்ணவளோ மீண்டும் அவன் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
இது அதைவிட அவனிற்கு பெரிய அதிர்ச்சி!
ஒரே நாளில் மனையாளின் பல்வேறு கோணங்களை கண்ட ரத்தினவேலின் மனதில் உவகை ஊற்று பொங்கி பெருகின.
தன்னில் அடைக்கலமான மனையாளை தன்னுடன் இறுக்கி அணைத்த ஆடவனிற்கு வானத்தை வசமாக்கிய ஒரு ஆனந்த ஆர்ப்பரிப்பு!
தன்னுடைய விலகல் அவளுடன் இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவன் கனவிலும் நினைக்கவே இல்லை.
அவளோ அவனுள் இன்னும் ஆழமாக புதைந்து அவனின் முரட்டுத்தேகத்தை தன் கரங்களால் சுற்றி வளைத்துக்கொண்டாள்.
அதில் அவனின் மனம் இறக்கைக்கட்டி பறந்தது என்றால்,அவனின் அகமும் புறமும் மலர்ந்து விகசித்தன.
பல நாளைய அவனது நேசத்திற்கான காத்திருப்பு அன்று ஒரு நாளே நிறைவேறியதில் அவனின் விழிகள் பனித்தன.
அவனின் உள்ளம் இலேசாகிட அவனிற்கு ஏனோ அவளை வம்பிழுக்கும் ஆர்வம் தோன்றின.
அதனால் அவளை சீண்டும் விதமாக “இது மட்டும் உன் அண்ணனுக்கு தெரிஞ்சால் என்னாகும் முகிழ்?என் பொண்டாட்டிக்கு உன்னை விட என்னை தான் பிடிக்குமாம்டானு நாளைக்கு அவன்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்” என சிரியாமல் அவன் கூற,
விலுக்கென்று தலையுயர்த்தி அவனை ஏறிட்ட முகிழ் ‘என்ன’ என்பது போல் அதிர்ச்சியில் விழி விரிக்க,
எப்போதும் போல் மனையாளின் பாவனையில் மயங்கிய ஆடவன் “இப்படி கண் விரிச்சு பார்த்தே என்னை மயக்கறடி” என கிறங்கிய குரலில் சொல்லியவன் குனிந்து அவளின் கண்களில் சூடான முத்தத்தை பதித்தான்.
அவனின் முத்தத்தில் அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கின.
பட்டாம்பூச்சியாய் படபடத்த அவளின் இமைகள் தானாக மூடிக்கொண்டன.
அவை இன்னும் ஆடவனின் உணர்ச்சியை தூண்டி விட்டன.
அவளை முத்தமிட்டால் அவனின் உணர்வுகள் அத்துடன் முற்றுப்பெறுவதில்லை அவனின் மோகம் என்பதை உணர்ந்த ஆடவன் விலகினான்.
அத்தோடு நாளை ஒரு முக்கியமான சந்திப்பிற்கு செல்ல வேண்டியிருப்பதால் மென்மையாக அவளின் நெற்றியில் களைந்திருந்த குங்குமத்தை சரி செய்து அங்கே தன் முத்திரையை பதித்தான்.
அவனின் இதழ் ஸ்பரிசத்தில் அவளின் மேனி சிலிர்த்திட,அதனை ரசித்த மணாளன் அவளிடமிருந்து விலகி “முகிழ்” என்றழைத்தான் மென்மையாக..
அவள் மயக்கத்திலே “ம்” என முனக,
அதில் அவனின் இதழ்கள் வசீகரமாய் புன்னகைத்தன.
“முகிழ் போய் தூங்கு…நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு” என அவளை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தினான்.
ஆனால் அவளோ உணர்வுகளின் கொந்தளிப்பில் அவனின் மீதே வந்த சரிந்து விழவும் ‘அது சரி’ என தலையாட்டி சிரித்துக்கொண்டவன்,அவளை தன் கைகளில் ஏந்தி சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.
அவளின் இமைகளுக்குள் கருவிழிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன.
அதில் அவளின் பதட்டம் அறிந்த ஆடவன் “முகிழ் கண்ணை திற?” என அதட்டினான்.
அவள் பட்டென விழி திறந்ததும் “எதையும் யோசிக்காமல் தூங்கு…குட் நைட்” என தாடிக்குள் சிரித்துக்கொண்டே சொல்ல,
அவளோ ‘அவ்வளவு தானா?’ என்பது போல் ஏமாற்றமாய் பார்க்க,
அவனோ ‘என்ன?’ என ஒற்றை புருவம் உயர்த்தினான்.
அவன் வழமையாக இரவு வழங்கும் இதழ் முத்தம் வேண்டும் என்று அவள் எவ்வாறு கேட்பாள்?
அதனால் அவள் ஒரு வித தயக்கத்துடன் “குட் நைட்” என்று கூறி போர்வையால் முகம் வரை இழுத்து மூடிக்கொண்டாள்.
அவனிற்கு அவளின் எதிர்பார்ப்பு என்ன என்று புரிந்தது.
உறங்குவதற்கு முன்பு அவளை முத்தமிடுவதற்கு பழக்கியதும் அவன் தானே?
‘ஓ…என் பொண்டாட்டிக்கு குட் நைட் கிஸ் வேணுமா?அதை வாயை திறந்து கேட்டால் குறைஞ்சாப்போயிடுவாள்?’ என தாராளமாக இதழ்பிரித்து புன்னகைத்தான்.
பாவையவளோ கடந்த சில நாட்களாய் அவனிற்காக தவித்தது போல் அவனின் முத்தத்திற்காகவும் தவித்தாள்.
இப்போது அவன் தன்னை முத்தமிட்டு ‘இரவு வணக்கம்’ கூறவில்லை என்றவுடன் அவளின் முகம் சுருங்கின.
தனது போர்வைக்குள்ளே உறங்காமல் அலைப்பாய்ந்த விழிகளுடன் சோகமாக இருந்தவளின் இதழ்கள் போர்வையை மீறி ஈரத்தை உணர்ந்தன.
முகிழ்மதி 70:

முதலில் அதில் அதிர்ந்த பெண்ணவளிற்கு தன்னில் உணர்ந்த பாரமும் இதழ்களில் ஏற்பட்ட அழுத்தமும் அவளிற்கு நடப்பதை புரிய வைத்தன.
ஆம்,தன்னவளின் ஆசைக்கு இணங்கி ஆடவன் தான் அவளை முத்தமிட்டிருந்தான்.
வெகு நாட்களுக்கு பிறகு அவனின் இதழ்கள் அவளின் இதழ்களோடு சங்கமித்தன.
பல நாள் தவிப்பையும்,பிரிவின் ஏக்கத்தையும் கலைந்தது அந்தவொரு முத்தம்!
போர்வை மேல் அவன் முத்தமிட்டிருந்தாலும் அவனது இதழ்களின் அழுத்தமும் ஆவேசமும் பெண்ணவளின் உணர்வுகளை மெல்ல கிளர்ந்தெழ செய்தன.
அவள் விழி மூடி அவன் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்த சமயம் மெதுவாக அவளின் முகத்தை மூடியிருந்த போர்வை அகன்றன.
சட்டென ஒரு குளிர்க்காற்று அவளின் முகத்தை தழுவின.
ஆனால் குளிர்க்காற்றின் இதத்தை மீறி அவளின் வதனம் உணர்ந்த சூடான மூச்சுக்காற்றின் வெப்பம் அவளின் மேனியை குறுகுறுக்க வைத்தன.
அவளின் மென் ஸ்பரிசத்தை மேலும் சிலிர்க்க வைக்கும் விதமாக அவனது உஷ்ணம் கலந்த குரல் அவளின் முகத்தை சிவக்க செய்தன.
“முகிழ் கண்ணை திற” என அவன் உஷ்ணப்பெருமூச்சடன் சொல்ல,
அவனிட்ட கட்டளைக்கு கட்டுப்பட்டு மெதுவாக இமைத்திறந்த பெண்ணவள் தன் முகத்திற்கு நேரெதிரே நூல் அளவு இடைவெளியில் இருந்த கணவனின் முகம் கண்டு அதிர்ந்துவிட்டாள்.
அவன் தன்னருகே இருக்கிறான் என்று அவள் அறிந்ததே?
ஆனால் இப்படி கண்ணோடு கண் பார்க்க…நாசியோடு நாசி உரச…இதழோடு இதழ் பொருத்திக்கொள்ளும் நிலையில் இருந்தவனை கண்டு அவளின் இதயம் தாறுமாறாக துடித்தன.
அவளோ “ஏங்க…” என அதிர்ச்சியோடு வாய் திறந்த அடுத்த கணமே அவளின் திறந்த அதரங்களை மொத்தமாய் கவ்வி சிறைப்பிடித்திருந்தான் அந்த கள்ளன்.
இதுவரை பல முறை அவளின் இதழில் அவன் முத்தமிட்டிருக்கிறான்.
ஆனால் கலவியில் அரிச்சுவடி அறியாத பாவையவளை பயமுறுத்த வேண்டாம் என்றெண்ணி அவளை மென்மையாக மட்டுமே கையாண்டு இருக்கிறான்.
இன்றோ இதுவரை இல்லாத வகையில் அவளின் இதழில் ஆழமாக…மிகவும் அழுத்தமாக…வெகு தீவிரமாக அவன் முத்தமிட்டு கொண்டிருந்தான்.
அவளை பொருத்தவரை முத்தமென்றால் மென்மையாக இதழொற்றி விலகுவதே முத்தம்!
ஆனால் அவளின் பள்ளியறை பாட ஆசானோ அவளிற்கு புதிதாக அந்த முத்தப்பாடத்தை கற்று தந்தான்.
அவனது ஆவேச முத்த தாக்குதலில் பாவையவளின் பெண்மை மலர்ந்தாலும்,புதிதாக அவளுள் அறிமுகமான உணர்ச்சிகளின் வேகம் தாளாமல் அவளிற்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது.
அவள் மூச்சிற்காக திணறியதை கண்ட ஆடவன் அவளை விடுவித்தான்.
அவளின் மார்புக்கூடு வேகமாக ஏறி இறங்க அவனை இமைகள் படபடக்க நோக்கியவளை கண்டு “ரிலாக்ஸ்டி” என சுவாச உள்ளிழுப்பனை அவளிடம் எடுத்து நீட்ட,
அவளும் அதை வாங்கி சுவாசத்தை உள்ளிழுத்தான்.
அவனுள் உச்சம் பெற்ற தாபங்கள் உணர்ச்சிகள் இப்போதும் நீட்சியடையவில்லை.
ஆயினும்,தன்னவளின் உடல்நிலை கருதி “ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டேன் போலே..சாரி…” என சங்கடமாக சிகையை அழுத்தக் கோதி அவன் கூற,
அவளோ ‘இல்லை’ என தலையாட்டியவள் அவனின் கரம் பற்றி தன் கன்னத்தோடு சேர்த்து அழுத்திக்கொண்டாள்.
தன் குற்றவுணர்வை நீக்குவதற்கான அவளின் செயலை அறிந்து அவனின் இதழ்கள் முறுவலித்தன.
“சரி தூங்குடி…குட் நைட்” என அவளின் கன்னம் தட்டிவிட்டு அவன் எழுந்துக்கொண்டான்.
அவளின் சுவாசம் இப்போது சீராகியிருத்தது.
அதனால் அவள் “நீ..ங்க இங்கேயே படுக்கலாமே?” என தன்னருகே இருந்த இடத்தை காட்டி தயக்கத்துடன் கேட்க,
அவனோ “இல்லை முகிழ்…இன்னும் கொஞ்ச நாள் இப்படியே இருக்கலாம்” என முடிவாக கூறிவிட்டான்.
தற்போது அவளிற்கு அந்த திகலூட்டும் கனவு வருவதில்லை தான்!
ஆனால் அவனது உடலின் நெருக்கத்தை ஏற்கும் மனவலிமை அவளிடம் இருக்கிறதா என்று அவனிற்கு உறுதியாக தெரியவில்லை.
அதனால் அவளுடன் ஒரே கட்டிலில் படுப்பதை அவன் தவிர்த்தான்.
முன்பு போல் அவனை இரவு வேளையில் முற்றிலுமாக நிராகரிப்பதில்லை அவள்.
ஆயினும்,மருத்துவரிடம் முழுமையான ஆலோசனை பெறாமல் அவளை உடலளவில் நெருங்க அவன் விரும்பவில்லை.
அவனின் பேச்சில் அவளின் முகம் வாடி விட்டது.
ஆனால் அடுத்த கணமே அவன் எது செய்தாலும் தன்னுடைய நல்லதற்காகவே இருக்கும் என்று அவளினுள் தீனமான் குரல் ஒன்று சொல்ல,தற்சமயம் அவனின் முடிவை அவள் ஆதரித்தாள்.
அன்றைய நாள் இரவு இருவரின் மனதிலும் பிரிவின் கசப்புகள் மறைந்து, காதலின் தேன் துளிகள் அந்த இரவை இனிமையாக்கின.
வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் நிம்மதியாக உறங்கினார்கள்.
****************
அதே நாள் இரவு வேறொரு இடத்தில் மதுப்பானத்தை அந்த காமுகனிடம் வழங்க சென்ற சந்திரமதி அவனது முகத்தை கண்டு அதிர்ந்து விட்டாள்.
ஏனோ அவனை கண்டவுடனே சந்திரமதிக்கு முகமெல்லாம் வியர்த்து வழிய ஆரம்பித்திருந்தன.
அவளது இதயத்தின் துடிப்பு அசுரவேகத்தில் தாறுமாறாக துடிக்க…அவளிற்கு மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது.
அதுவரை அவளிடமிருந்த துணிச்சல் எல்லாம் நொடியில் காணாமல் போக அவன் அவளை அவதானிப்பதற்கு முன்பாக வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.
எதிரே வந்த அந்த மீனு “என்னாச்சு மதி?ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என அவளின் வெளிறிய முகத்தை பார்த்து விசாரிக்க,
சந்திரமதி அவளை பார்க்காமலே “இரு…நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திடறேன்” என நெற்றியிலிருந்த வியர்வையை துடைத்தப்படி கழிவறைக்கு ஓடிச்சென்றாள்.
எதிலிருந்தோ தப்பிப்பது போல் இருந்தது அவளின் செயல்!
வேகமாக கழிவறைக்குள் நுழைந்து கதவை சாற்றிய சந்திரமதி கதவின் மீது சாய்ந்து நின்று மூச்சு வாங்கினாள்.
அவளிற்குள் இப்போதும் பதட்டம் முழுமையாக அகலவில்லை..
‘அவன்…அவன் இங்க எப்படி?’ என தன்னை தானே கேட்டுக்கொண்டவளின் நெஞ்சத்தில் அவன் முகம் கண் முன் தோன்றி மறைந்ததும் அவளின் தளிர் மேனி வெடவெடத்தன.
ஒரே ஒரு கணம் சிறு வயதில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மின்னல் போல் அவளின் மூளையில் பளீச்சிட்டு போக,அவளின் கால்கள் நிற்க முடியாமல் துவண்டுன.
உடனே அங்கே கழிவறையில் அந்த வெண்ணிற லிட்டை மூடிவிட்டு சில நிமிடங்கள் கண் மூடி முகத்தை தாங்கி அமர்ந்துவிட்டாள்.
சட்டென அவளின் விழியோரம் நீர் துளிர்த்தன.
எளிதில் உடைந்துவிடாத பெண்ணிற்கு பயத்தில் அழுகை வரும் போல் இருந்தது.
அவனிடமிருந்து தப்பி வந்தப்போதும் ஏனோ அவன் அவளை துரத்திக்கொண்டு வருவது போல் அவளுள் ஒரு மாயை!
துணிச்சலான பெண்ணை இப்படி நடுநடுங்க வைத்தவன் வேறு யாருமல்ல ரஞ்சன்.
விஜயலட்சுமியின் உறவினன் என்ற பெயரில் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த நச்சு பாம்பு அவன்!
போதை உச்சிக்கு ஏறிவிட்டால் பெற்றெடுத்த தாயிற்கும் மற்றைய பெண்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு அரக்கன்.
அப்படியான ஒரு மோசமான காம வெறி பிடித்த மிருகம் தான் அந்த ரஞ்சன்!
அவனின் உண்மை சுயரூபத்தை நன்கு அறிந்தவள் சந்திரமதி மட்டுமே?
விஜயலட்சுமியின் உறவினனாக வீட்டிற்குள் நுழைந்த அந்த காமூகனிற்கு பெரியவர்கள் குழந்தைகள் என்றெல்லாம் வித்தியாசமில்லை.
அவனை பொறுத்த வரை பெண்கள் என்றாலே அவனிற்கு போதையேற்ற குடிய ஒரு வஸ்து!
ஒரு குச்சியிற்கு சேலை கட்டிவிட்டால் கூட அதனுடன் சல்லாபம் கொள்ள துடிக்கும் கொடூரன் அவன்.
அப்படியான ஒரு ஆளை மதித்து வீட்டிற்குள் அனுமதித்தால் என்ன நடக்கும்?
சந்திரமதிக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது வயது தான் இருக்கும்.
சிறு பெண் என்றும் பாராமல் அவளை தன் இச்சைக்கு உடன்படுத்த கட்டாயப்படுத்தினான்.
காமத்தின் முதல் சுழி கூட அறியாத அந்த குழந்தையிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்த மகாபாவியை கண்டு மிரண்டாள்…கத்தினாள்…கதறினாள் அந்த சிறுமி.
ஆனால் அவளின் நல்ல நேரம் அவன் அவளிடம் அத்துமீற முயற்சிக்கும் போதே விஜயலட்சுமி வந்து அவளை காத்திருந்தார்.
“டேய் என்னடா பண்ணறே?வெளிய வா” என அவனது சட்டையின் காலரை பற்றி தரதரவென அவனை இழுத்து சென்றிருந்தார்.
அந்த சிறு பெண்ணிற்கு சில கணங்கள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
அவளோ அப்படியே படுக்கையில் அமர்ந்து உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவள் பார்த்த அந்த காட்சி அவ்வப்போது மனக்கண்ணில் தோன்றி அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தன.
அந்த சின்னஞ்சிறிய வயதில் நடந்த சம்பவம் இப்போது வரை அவளுள் பாதிப்பை ஏற்படுத்துக்கின்றன.
அந்த அளவு அவளுள் அவனின் கொடூர செயல் ஆழமாக பதிந்திருக்க,அவளின் மேனி வெடவெடத்தன.
அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவனை அவள் காணவே இல்லை.
அத்தோடு விஜயலட்சுமியோ இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவளை பயமுறுத்தி வைத்திருந்தார்.
“யாருக்கிட்டயாவது இதைப்பத்தி சொன்னனா என்ன நடக்கும்னு தெரியுமில்லை…” என பழுக்க காய்ச்சிய கம்பியை அவளின் முன்பு அவர் ஆட்டி காண்பிக்க,அந்த எட்டு வயதிருக்கும் சிறுமி என்ன செய்வாள்?
வேறுவழியின்றி தாயின் கொடூர மிரட்டலுக்கு அஞ்சி இன்று வரை யாரிடமும் அவள் அதனை பகிரவில்லை.
அன்று விஜயலட்சுமி ஏற்படுத்த இருந்த தீக்காயத்திலிருந்து அவள் தப்பித்தாலும் அவன் ஏற்படுத்திய வடு இப்போதும் இதயத்தில் நீங்காமல் இருந்தன.
அவள் பள்ளி விடுதியிலிருந்து விடுமுறை காலங்களில் வீட்டிற்கு திரும்பி வர அஞ்சியதின் மற்றொரு காரணம் அவன் தான்!
அதையும் மீறி வீட்டிற்கு சென்றாலும்,தன்னை எதுவும் செய்துவிடுவானோ என்ற அச்சத்திலே வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பொழுதும் அவளிற்கு கடக்கும்.
நல்லவேளையாக ஒரு நாள் சிவராமனே அவனை வீட்டை விட்டு அடித்து விரட்டியிருந்தார்.
அதற்கான காரணங்கள் இன்று வரை அவளே அறியாதது.
மகளிற்கு என்று செய்த ஒரே ஒரு நல்ல விடயம் அது மட்டும் தான்!
ஆனால் அவனை அடித்து விரட்டியதில் தீராத வன்மத்துடன் சுற்றி திரிந்தார் விஜயலட்சுமி.
ஏனெனில்,ரஞ்சன் அவருக்கு மிகவும் நெருக்கமானவன்.
இந்த உலகத்தை பொறுத்தவரை அவருக்கு அவன் சகோதரன்.
நிஜத்தில்,அவருக்கு அவன் யார் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்!
சிறு வயதில் ஒவ்வொரு சராசரி பெண்ணும் இதுப்போலான துர்நிகழ்வுகளை கடந்தே வந்திருப்பதால் சந்திரமதியும் நாளுக்கு நாள் அதை மறந்துவிட்டு ஒரு நிம்மதியான வாழ்வை வாழ பழகி விட்டாள்.
அப்படி தான் என்று அவளும் நினைத்திருந்தாள்…
அவனை பார்ப்பதற்கு முன்பு வரை…
பல வருடங்களுக்கு பிறகு அவனை கண்டதும் தாறுமாறாக துடித்த இதயம் தான் ‘நீ இன்றும் எதையும் மறக்கவில்லை’ என்று தெளிவுப்படுத்தியது.
ஒரு கட்டத்தில் அச்சத்தில் நடுங்கிய பாவையவள் ‘மதி…மதி ரிலாக்ஸ்…நீ இன்னும் அதே எட்டு வயசு பெண்ணில்லை…நடந்ததை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடு…உன் நினைவுகளை ஆக்கிரமிக்க கூட அவனுக்கு தகுதியில்லை’ என தனக்கு தானே வலியுறுத்தி அவளை தேற்ற ஆரம்பித்தாள்.
அவளின் அச்சம் சிறிது சிறிதாக தேய்ந்து மறைந்துப்போனதும் அவளுள் கோபம் முகிழ்ந்தன.
முன்பு பயத்தில் வெளுத்த முகம் இப்போது சினத்தில் சிவந்துப்போனது.
‘பொறுக்கி ராஸ்கல்…அப்போ உன்னை என்னாலே எதுவும் செய்ய முடியலை…இப்போ உன்னை ஏதாவது செய்யணுமே?’ என பரபரவென அவளின் விழிகள் அலைப்பாய,அவளின் மூளை விபரீதமான சிந்தனையை கொடுத்தன.
‘பேசாமல் ஓடி போய் அவன் மண்டையை பாட்டிலை வைச்சு அடிச்சு உடைச்சா என்ன?’ என தாறுமாறான எண்ணங்கள் எல்லாம் தோன்ற,
அவளின் மனசாட்சியோ ‘ஹே அவன் செத்துப்போயிடுவான்டி’ என,
‘செத்தா சாகட்டும்…பூமிக்கு பாரமா அந்த நாய் உயிரோடு இருந்து என்ன செய்யப்போகுது?’ என்றாள் அவள்.
‘அவன் போய் சேர்ந்திடுவான் சரி…நீயும் கூடவே ஜெயிலுக்கு போடுவே…அது ஓகேவா?’ என மனசாட்சி எச்சரிக்க,
‘ஓ…அது ஒண்ணு இருக்கில்லை…ஆனாலும் அவனை ஏதாவது செய்யணுமே?’ என அவளும் அவளின் மனசாட்சியும் பட்டிமன்றம் நடந்திக்கொண்டிருந்தார்கள்.
சில நிமிடங்களில் அவளுள் துளிர்த்திருந்த அச்சமெல்லாம் காற்றடித்த பஞ்சாய் பறந்துப்போய் இதயம் இலேசானது.
தன் பெண்மையை அவமதிக்க நினைத்த ஆடவனை அவள் எளிதில் விட தயாராகயில்லை.
அதனால் சில நிமிடங்கள் கழித்து ஒரு முடிவுடன் வெளியே வந்த பாவையவளை எதிர்கொண்ட மீனு “மதி ஆர் யூ ஓகே?” என கவலையாக விசாரிக்க,
“ஐயம் ஓகே…எங்க அந்த ஆளு…” என கேட்டவளின் விழிகள் அவனிருந்த மேசை வெறுமையாக இருப்பதை கண்டு சுருங்கின.
அவளோ “ஓ…அந்த ரோக்கை கேட்கறீயா?அவன் யாரோ ஒரு பொம்பளை கூட இப்போ தான் போனான்” என்றாள் கடுப்பாக…
‘ஒருவேளை அது அவள் தாயாக இருக்குமோ?’ என எண்ணம் தோன்றிய அதே வேளை ‘தப்பிச்சிட்டனே…சரி பரவாயில்லை…இன்னொரு தடவை கண்ணுலே படட்டும்…அவனுக்கு இருக்கு’ என தீரா வன்மத்துடன் அவள் எண்ணிக்கொண்டாள்.
அவனின் மீது அவள் கடும் கோபத்தில் இருந்ததாலோ அல்லது சிறு வயது சம்பவம் அவளின் மூளையை பாதித்திருந்ததாலோ என்னவோ?
அவளிடம் மதுவின் மயக்கத்தில் ஒருவன் எல்லை மீற தொடங்கியதும் அதனை சகிக்க முடியாமல் “பிளடி ஷிட்” என ஆரம்பித்தவள் அவனை கண்டப்படி திட்ட ஆரம்பித்திருந்தாள்.
அவனும் பதிலுக்கு திட்ட அவ்விடத்தில் ஒரு சிறிய கலவரமே நடந்திருந்தது.
அவற்றினை வந்து இடைப்புகுந்து தீர்த்து வைத்தார் நாராயணன்.
“சாரி சார்…அந்த பொண்ணு வேலைக்கு புதுசு மன்னிச்சிடுங்க…” என ஏதேதோ பேசி கெஞ்சலுடன் மன்றாடி அவனை சமாதானம் செய்திருந்தார்.
அவனும் சட்டென அடங்கிவிட்டான்.
ஏனெனில்,அவன் செய்த அந்த அருவருப்பான விஷயம் வெளியே தெரிந்தால் அவனிற்கும் சேர்த்து அவப்பெயர் கிடைக்கும் என்பதால் “நீங்க சொல்லறதாலே விடறேன் சார்…இல்லை இந்த பொண்ணை…” என அவளை ஒரு பார்வை பார்க்க,
அவளோ ‘ஆமா பெரிய இவன் அவன்…என்னை அப்படியே கிழிச்சிருப்பான்…சேடிஸ்ட்’ என கோபத்தில் சிவந்த முகத்துடன் நின்றிருந்தாள்.
அவள் கடுகடுவென நின்றிருப்பதை கண்டு “நீ ஒரு நிமிஷம் வெளிய வா” என அவளை வெளியில் அழைத்து வந்தார் நாராயணன்.
வெளியே வந்தவுடன் “ஏம்மா கஸ்டமர்கிட்ட இப்படி தான் நீ பிஹேவ் பண்ணுவீயா?நான் நினைச்சால் உன்னை வேலைய விட்டு தூக்கமுடியும் தெரியுமா?” என அவர் போலியாய் அவளை மிரட்ட,
“சார் வேலைய விட்டு தூக்கறதுன்னா தூக்குங்க…இந்த வேலைக்காக அவன் என்ன பண்ணாலும் என்னாலே பொறுத்துப்போக முடியாது” என்றாள் ஒரு நிமிர்வுடன்…
“நீ ஏன்மா இவ்வளவு டென்ஷனாகிறே?இங்கனில்லை…நீ எந்த வேலைக்கு போனாலும் ஹாரஸ்மெண்ட் இருக்க தான் செய்யும்…அதுக்காக அங்கியும் இப்படி தான் நீ நடந்துப்பியா?” என அவர் கண்டிப்பான குரலில் சற்றே எரிச்சலுடன் கூறினார்.
ஏனெனில்,மேலிடத்திலிருந்து ஏதேனும் கேள்வி வந்தால் அவர் பதில் சொல்ல வேண்டுமே?
அந்த கோபத்தில் அவளிடம் அவர் பேசினார்.
ஆயினும்,தன் மருமகன் அறிமுகம் செய்த பெண் என்பதால் சற்று கோபத்தை தணித்து பேசிக்கொண்டிருந்தார் அவர்.
அவளோ சற்றும் தாமதிக்காமல் “கண்டிப்பா சார்…நாங்க காசு பணம் இல்லாமல் தான் வேலைக்கு வரமே ஒழிய இந்த மாதிரி பரதேசிகளுக்கு உடல் சேவை பண்ணயில்லை” என்றவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
அவரோ “என்னம்மா நீ இப்படி பேசறே?” என ஆற்றாமையுடன் கேட்க,
“வேற என்ன சார் நான் பேசணும்னு நினைக்கிறீங்க?இதே என் இடத்திலே உங்க பொண்ணு இருந்தால் இப்படி தான் எல்லாத்தையும் பொறுத்துப்போக சொல்லுவீங்களா?” என அவரை உறுத்து விழித்தப்படி கேட்ட அடுத்த கணமே அந்த மனிதருக்கு வாயடைத்துப்போனது.
அவளின் கேள்வி நியாயமாக இருந்ததால் அவர் ஒரு பெருமூச்சுடன் “நீ இந்த வேலைக்கு செட்டாகமாட்டேன்னு முன்னாடியே எனக்கு தெரியும்…இருந்தும் வேற வழியில்லை…இந்த மேனேஜ்மென்ட் ஆளுங்க பொண்ணுங்களை வேலைக்கு வைக்க சொல்லி பிரஷர் பண்ணறானுங்க…அதான் வேற வழியில்லையில்லாமல் உனக்கு இந்த வேலைய கொடுத்தேன்…கொஞ்ச நாள் எந்த வம்பும் வளக்காமல் இரும்மா…உன்னை வேற ஒரு டிப்பார்ட்மெண்ட்டுக்கு நானே மாத்தி விடறேன்” என்று பொறுமையாக சொன்னார்.
அவளோ சலிப்பாக “சார் எனக்கு மட்டும் எல்லார் கூடவும் சண்டை போட ஆசையா என்ன? பல கஷ்டங்களை மீறி தான் பொண்ணுங்க வேலைக்கு வர்றாங்க…வேலைக்கு வந்த இடத்திலே இவனுங்க தொல்லை வேற…முதல்ல அவனுங்களை கண்ணியமா நடந்துக்க சொல்லுங்க…நானும் அமைதியா பேசறேன்” என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட,
செல்லும் அவளின் முதுகை கண்டவரோ “ப்ச் இங்க நான் மேனேஜரா அந்த பொண்ணு மேனேஜரானே தெரியலை” என நெற்றியை நீவி பெருமூச்சறிந்தார்.
அங்கு நடந்த அனைத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருந்த ஒரு ஆடவனின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
‘சரியான சண்டைக்கோழி’ என அவனிதழ்கள் ரசனையுடன் முணுமுணுத்துக்கொண்டன.
முகிழ்மதி 71:

“டேய் அண்ணா…என்னை நீ ஷாப்பிங் கூட்டிட்டு போக முடியுமா முடியாதா?” என தமயந்தி ஜித்துவிடம் சண்டை போட்டுக்கொண்டு இருக்க,
“ஏய் முடியாதுடி…எனக்கு வேலையிருக்கு” என அலுப்பாக அவன் கூற,
“நீ கூட்டிட்டு போகலைனா நானே தனியா கிளம்பி போயிடுவேன்” என அவளின் தொனியில் மிரட்ட,
அவனோ அவளை முறைத்துக்கொண்டே “அப்படி மட்டும் போய் பாரு நீ…காலை வெட்டி கைலே கொடுத்திடுவேன்” என பல்லைக் கடித்து சீறினான்.
அண்ணன் தங்கை இருவரும் காலையில் எழுந்ததிலிருந்து வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.
“இங்க என்ன பிரச்சனை?” என தனக்கே உரிய கணீர் குரலில் கேட்டுக்கொண்டே அங்கு வந்தான் ரத்தினவேல்.
அவனின் பின்னோடு முகிழ்மதியும் பதிவிசாக நடந்து வந்தாள்.
அங்கு வந்த தமையனை கண்டதும் இருவரும் கப்சிப் என்று அடங்கிவிட்டனர்.
அவர்கள் இருவரின் பார்வை மட்டும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தது.
இருவரையும் இமைகள் இடுங்க நோக்கிய ரத்தினவேல் “உங்க இரண்டு பேரையும் தான் என்ன பிரச்சனைனு கேட்டேன்” என குரலுயர்த்தி அதட்டியதும் “அண்ணா இவ மேலே தான் தப்பு” என ஜித்துவும்,
“அண்ணா ஜித்து மேலே தான் தப்பு” என தமயந்தியும் ஒரே நேரத்தில் மற்றவரை குற்றம்சாட்டினார்.
ரத்தினவேலோ நெற்றியை நீவிக்கொண்டே நீள்விரிக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் “நீங்க என்ன சின்னக்குழந்தைகளா?எப்போ பாரு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க…முதல்ல விஷயம் என்னனு சொல்லுங்க” என்றான் கண்டிப்பான குரலில்…
“நான் சொல்லறேன்…நான் சொல்லறேன்…” என இருவருக்குள்ளும் அதற்கும் போட்டி!
ரத்தினவேலோ ‘இதுங்க திருந்தாதுங்க’ என சலிப்பாக தலையசைத்துவிட்டு தன் மனைவியின் புறமாக திரும்பினான்.
அவளோ எப்போதும் போல் அண்ணன் தங்கை சண்டையை சுவாரசியமாக பார்த்திருந்தாள்.
அவளின் கரு விழிகளில் இருந்த துறுதுறுப்பை பார்த்த ஆடவனின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
“ஏன்டி அவங்க சண்டை அவ்வளவு ஆர்வமா இருக்கா என்ன?” என இதழ்கடித்து சிரித்தவாறு விசாரிக்க,
தன்னையறியாமல் “ம்” என தலையாட்டியவள்,தவறை உணர்ந்து நாக்கை கடித்தப்படி அவனை பதட்டமாக ஏறிட்டாள்.
அவளின் பற்களுக்கு இடையில் கடிப்பட்ட சிவந்த நாவை பார்த்தவனிற்கு ஏனோ அதனை ருசி பார்க்கும் ஆசை எழுந்தன.
தன்னுள் கிளர்ந்தெழுந்த உணர்வின் தாக்கத்தை அடக்க முடியாமல் நாவால் தன் இதழை வருடிய ஆடவனின் விழிகள் மட்டும் விழியாலே அவளை கபளீகரம் செய்தன.
தன்னவனின் விழி வீச்சை கண்ட முகிழ்மதியின் நெஞ்சம் படபடக்க, வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவள் பதட்டத்தில் இதழை கடிக்க,அதில் வெளிப்பட்ட மச்சம் அவனின் உணர்வுகளை தூண்டுவதாய் இருந்தது.
அவளை காண காண அவனுள் புதையுண்ட மோகம் எல்லாம் வெளிவருவது போலிருக்க “ம்க்கும்” என தொண்டையை செருமிக்கொண்டு தன் உடன்பிறந்தவர்களின் புறம் திரும்பினான்.
அவர்களோ இப்போதும் தீவிர விவாதத்தில் ஈடுப்பட்டிருக்க “இரண்டு பேரும் பேசி முடிச்சிட்டிங்கன்னா என்னனு சொல்லுங்க” என ரத்தினவேலின் குரல் ஓங்கி ஒலிக்கவும் அவர்கள் இருவரும் பயத்துடன் அவனின் புறம் திரும்பினார்கள்.
மனைவியிடம் அவன் காட்டிய இதமான முகமில்லை…
மாறாக,அவனிடம் எப்போதும் இருக்கும் ஒரு அழுத்தம் அதில் நிறைந்திருந்தது.
முகிழ்மதிக்கு அப்போது தான் ஒரு விடயம் நன்றாகப் புரிந்தது.
தன்னிடம் மட்டுமே அவன் அவனாக இருக்கிறான் என்று அறிந்தவளிற்கு அவனின் மீது நேசம் அதிகரித்தது.
அவர்கள் இருவரும் மடமடவென விஷயத்தை விவரித்தனர்.
“அண்ணா ஷாப்பிங் போகலாம்னு ஜித்து அண்ணாவை கூப்பிட்டேன்…அவன் வர மாட்டிக்கிறான்…சரின்னு என்னை தனியா அனுப்புனு சொன்னால் அதுவும் கேட்க மாட்டிக்கிறான்” என ஜித்துவை முறைத்துக்கொண்டே சொல்ல,
“நீ தனியா எங்கியும் போகக்கூடாது” என இருவேறு குரல்கள் அழுத்தத்துடன் வெளிவந்தது.
அந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் சாட்சாத் அவளின் இரு தமையன்கள் தான்!
ஏற்கனவே இரண்டு முறை அவளை கடத்த முயற்சி நடந்திருக்கையில் எவ்வாறு அவளை தனித்து அனுப்புவார்கள்?
அவளை கடத்த முயன்ற விடயம் அவர்கள் இருவரையும் தவிர வீட்டில் உள்ள வேறு யாருக்கும் தெரியாது.
அதன் பொருட்டே,அவளை தனித்து அனுப்ப அஞ்சினார்கள்,அந்த பாசமுள்ள சகோதரர்கள்.
“நீ தனியா எங்கியும் போகக்கூடாது லட்டு…இட்ஸ் அ வார்னிங்” என ரத்தினவேல் கடுமையாக எச்சரிக்க,அவளின் முகம் சுருங்கிவிட்டன.
உடனே ஜித்துவோ “நான் ஃப்ரீயா இருந்தால் கூட்டிட்டுப் போயிடுவேன் அண்ணா…பட் எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என சொல்ல,
இப்போது தங்கையை நோக்கிய ரத்தினவேல் “லட்டு அவன் தான் வேலையிருக்குன்னு சொல்லுறானே…அவனை விடு…உனக்கு என்ன பொருள் வேணும்னு சொல்லு…வீட்டுக்கு வர வைச்சிடலாம்” என ஆதுரத்துடன் மொழிய,
“அண்ணா அது சுத்தப்போர்…எனக்கும் மத்தவங்க மாதிரி கடைக்கு போய் நேரிலே பார்த்து பர்சேஸ் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணா…பிளீஸ்” என சோகமும் கெஞ்சலுமாய் அவள் கேட்க,அவளின் விழியில் தெரிந்த எதிர்பார்ப்பும் ஆசையும் அங்கிருந்த அனைவரையும் உருக்கி விட்டது.
முதலில் மனமிறங்கிய ஜித்து “லட்டு ஒரு ஒன் வீக் வெயிட் பண்ணு…நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என தங்கைக்காக அவன் சொல்ல,
“ஒன் வீக்கா” என சோகமாக இழுத்தவளை பார்க்க பாவமாக இருந்தது.
ரத்தினவேலோ தாடியை நீவி “என்னாலையும் உன் கூட வரமுடியாது லட்டு…வேணும்னா வீரை கூட்டிட்டு போ…” என்று சொன்னதற்கு பிறகே அவனிற்கு நிதர்சனம் உரைத்தது.
“அண்ணா வீர் அண்ணாவாலே எங்கியுமே நகரமுடியாது மறந்திட்டீங்களா?” என அவனின் சூழ்நிலையை ஜித்து எடுத்துரைக்க,
“ஆ..ஆமா மறந்திட்டேன்…” என ஒற்றை புருவத்தை விரலால் வருடிவிட்டவனின் மனதில் வருத்தம் ஆக்கிரமித்தது.
நண்பனின் தற்போதைய நிலையை அறிந்த ரத்தினவேலின் நெஞ்சில் பாரமேறியது.
அங்கிருந்த மூவரின் முகமும் வாடிப்போயிருப்பதை கண்ட முகிழ்மதிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
அவளிற்கு இதுவரை எந்தவொரு விவரமும் பகிரப்படவில்லை.
அதனால் வீரின் கடந்த காலம் எதுவும் தெரியாத அப்பாவியாக அவள் இருந்தாள்.
‘வீர் அண்ணாவுக்கு என்னாச்சு?’ என குழப்பமாக அனைவரின் முகத்தையும் அவள் மாறி மாறி பார்த்தாள்.
ஏனோ அவளின் நெஞ்சம் பிசைந்தது.
பதிலுக்காக அவள் அனைவரையும் பார்க்கும் போது அவர்களின் முகத்திலிருந்த வேதனை அவளுள் ஒரு அச்சத்தைக் கொடுத்தன.
சற்று நேரம் கழித்தும் யாவரும் பதிலுரைக்கவில்லை என்றவுடன்,அவளாகவே வாயை திறந்தாள்.
“வீர் அண்ணாவுக்கு என்ன பிரச்சனை?” என்று மெல்லிய குரலில் கேட்டு அங்கிருந்த அமைதியை கலைத்தாள் முகிழ்மதி.
அவளின் கேள்வியில் குழம்பிய ஜித்து “என்ன அண்ணி இப்படி கேட்கறீங்க?வீர் அண்ணாவோட அம்மாவை ஹாஸ்பெட்டல்ல இருந்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க…தெரியுமில்லை” என புருவம் சுருக்கி கேட்க,
அதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற முகிழ்மதி “வீர் அண்ணாவுக்கு அம்மா இருக்காங்களா?” என கேட்டு விழி விரித்தாள்.
அவள் கேட்ட தோரணையே ‘காந்தி செத்துட்டாரா?’ என்பது போல் இருந்தது.
“அண்ணி அவரை பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா?” என புரியாமல் அவன் வினவ,
அவளோ ‘இல்லை’ என பாவமாக தலையாட்டினாள்.
ரத்தினவேலோ “நான் அவகிட்ட எதுவும் சொல்லலைடா…இதுவரை சொல்லறதுக்கான அவசியம் வரலை…இனி தெரிஞ்சுக்கட்டும்” என்றான் ஒரு பெருமூச்சுடன்
அதன்பிறகு தான் தன் தமையனை பற்றி அவள் எதுவும் தெரிந்துக்கொள்ளவில்லை என்பதே புரிந்தது.
அவள் விசாரித்து தெரிந்துக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்பது வேறு கதை!
தனக்கு ஒன்று என்றால் முன்பு வந்து நிற்கும் சகோதரனை பற்றி அவள் ஒரு முறை கூட நலம் விசாரித்ததில்லை என்பது உறைக்க,அவளின் இதயம் குற்றவுணர்வில் தவித்தன.
அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக தமயந்தி சொன்ன விடயங்கள் அவளை அடியோடு உடைத்துப்போட்டன.
“அண்ணி வீருக்கு ஒரு அம்மா இருக்காங்க…” என தொடங்கி அவருக்கு விபத்து நடந்தது தொடக்கம் இப்போது அவர் மனநல மருத்துவமனையில் இருந்தது வரை அனைத்தையும் சுருக்கமாக எடுத்துக்கூறிய தமயந்தி “இப்போ அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாங்க அண்ணி…பாவம் ஆன்ட்டி…அவங்களுக்கு வீர்,நட்சத்திராவை தவிர வேற யாரும் ஞாபகத்திலே இல்லை” என சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கின.
தன் தாயுமானவனின் நிலையை கேட்ட முகிழ்மதிக்கு நெஞ்சே வெடித்தது.
இத்தனை நாட்களாக தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து சுயநலமாக இருந்ததை எண்ணி பாவையவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி தன்னை அவன் தங்கையாக ஏற்றுக்கொண்ட தாயுமானவன் அவன்!
அப்படியானவன் பல வருடங்களாக தனிமையில் அனுபவித்த வேதனை அவளை சுட,அவளின் கண்ணிலிருந்து கரகரவென கண்ணீர் வழிய ஆரம்பித்தன.
ஏனோ அந்த முகமறியா அவனது தாயின் நிலையை கேள்விப்பட்டதிலிருந்து அவளிற்குள் இருக்கும் உயிரை யாரோ உருவியெடுத்தது போலானது.
அவளின் அழுகையை கண்டதும் அங்கிருந்த அனைவரின் இதயமும் துடித்தன.
குறிப்பாக,அவளின் மணாளனிற்கு!
அவள் இவ்வாறெல்லாம் வேதனையுறுவாள் என்று அறிந்தே அவனும் வீரும் அனைத்தையும் மறைத்ததே?
காரிகையவளிற்கு விஷயம் கேள்வியுற்றதிலிருந்து நெஞ்சமெல்லாம் ஊசிப்போல் குத்த “ஏ…ன் என்கிட்ட யாரும் சொல்லலை?” என கேவிக்கொண்டே கேட்டவளின் முகமெல்லாம் அழுகையில் சிவந்திருந்தது.
“ப்ச் முகிழ் இப்போ எதுக்கு அழறே நீ?ஷீ இஸ் ஃபைன்…முன்னாடி பேசாமலே இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் அவங்க பரவாயில்லை…நீ அழாதே” என ரத்தினவேல் அவளை தோளோடு அணைத்து சமாதானம் செய்ய,
தமயந்தியும் ஜித்துவும் கூட அவளின் அழுகையை கண்டு கலங்கினார்கள்.
“அண்ணி அண்ணா சொன்ன மாதிரி இப்போ ஆன்ட்டி கொஞ்சம் பரவாயில்லை…வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பிறகு நல்லாவே முன்னேற்றம் தெரியுதுனு வீர் சொன்னாரு” என தமயந்தி வருத்தத்தோடு தகவல் சொல்ல,
முகிழ்மதியின் அழுகை இன்னும் நின்றப்படில்லை.
கண்ணீரில் சுமந்த விழிகளோடு கணவனை ஏறிட்ட முகிழ்மதி “ஏ…ங்க நா…ன் அவங்களை பார்க்கலாமா?” என இதழ்கள் நடுங்க கேட்டாள் அவள்.
முதல் முறையாக அவளாக ஒரு கோரிக்கையை முன் வைக்கிறாள்.அதனை நிறைவேற்றாமல் அவளது கணவனால் இருக்க முடியுமா என்ன?
“கண்டிப்பா போகலாம்…அதுக்கு முன்னாடி நீ மீதியிருக்கிற எக்ஸாமை மூடி” என அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.
அவளோ ஏக்கமாக அவனை பார்க்க “இன்னும் ஒரு எக்ஸாம் தானே இருக்கு…அதை முடி நான் கூட்டிட்டு போறேன்” என கறாராக உரைக்க
அவளும் வேறுவழியின்றி “சரி” என தலையாட்டினாள்.
ஆனால் அவளின் முகமும் அகமும் வீரையும் அவனது அன்னை மற்றும் இறந்துப்போன தங்கையை நினைத்து வருந்திக்கொண்டிருந்தது.
அங்கு சூழ்ந்திருந்த கனத்த அமைதியை நீக்கும் விதமாக ”சரி காலையிலே எதுக்கு எல்லாரும் சோகமா இருக்கீங்க…ஷீ வில் பி ஆல்ரெட் சூன்” என அனைவரையும் தேற்றியவன்,
“தமி நீ எங்கியோ போகணும்னு சொன்னியே கிளம்பு…நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என அவளை அதிர வைத்து,
சகோதரனிடம் “ஜித்து நீ போய் உன் வேலைய பாரு…முகிழ் நீயும் இதுவரை எங்கியும் சுத்தி பார்த்தது இல்லை தானே…நீயும் கிளம்பு” என வீட்டிற்கு மூத்தவனாக படபடவென ஆணைகளை பிறப்பிக்க ஆரம்பித்தான்.
உடனே அவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஆளுக்கொரு புறமாக பிரிந்து ஓடினார்கள்.
அவனின் மனையாளை கிளப்பி தயார் செய்வது தான் அவனிற்கு பெரும் போராட்டமாக இருந்தது.
வெளியில் வந்த பிறகும் அவள் சோர்வுடனே இருப்பதை கண்டு “அண்ணி அவ்வளவு கவலையா இருந்தால் பேசாமல் நீங்களே வீர் கிட்ட பேசிடுங்க” என தமயந்தி யோசனை கூறினாள்.
முகழ்மதியிற்கு அதுவே “சரி” என்று தோன்ற கணவனின் அனுமதி வேண்டி அவனை ஏறிட்டாள்.
“ஹே எல்லாத்துக்கும் என்கிட்ட கேட்கணும்னு அவசியமில்லை…நீ பேசு” என அவன் அனுமதிக்கொடுத்த அடுத்த கணமே புதிதாக ரத்தினவேல் வாங்கி வந்திருந்த அலைப்பேசியில் வீருக்கு அழைத்தாள்.
இங்கு வீர் அவனின் தாயை வீட்டிற்கு அழைத்து வந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது.
அலைப்பேசியிலிருந்த உருவத்தை கண்டு அவர் நட்சத்திரா என்று கூறியதை பெரிதாக அவன் எடுக்கவில்லை.
தங்கையின் இறந்த சடலத்தை அவன் கண்முன்னாலே எரியூட்டியதற்கு பிறகும் அவனால் தாய் கூறுவதை எவ்வாறு நம்ப இயலும்?
அதனால் அவர் சித்தம் கலங்கி உளறிக்கொண்டிருக்கிறார் என்று கருதி,தாயிற்காக அவன் மனவேதனை அடைந்தான்.
தாயினை பார்த்துக்கொள்வதற்காக கவிதா என்ற செவிலியப்பெண்ணை தான் மருத்துவர் நியமித்திருந்தார்.
அந்த பெண் வேறு யாருமில்லை…மருத்துவமனையில் முதல் முறை வீரின் தோற்றத்தை கண்டு மெய்மறந்து நின்றாளே அதே செவிலிய பெண் கவிதா தான்!
அவளிடம் பொறுப்பை ஒப்படைத்ததால் அவளிற்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.
தினந்தோறும் அவனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று அர்ப்ப சந்தோஷத்தில் மிதந்தாள்.
ஆனால் அவனின் மேல் ஒரு பெண்ணின் நிழல் விழுந்தால் கூட ஒருத்தி ருத்ர தாண்டவம் ஆடிவிடுவாள் என்று அந்த பெண் அக்கணம் அறியவில்லை.
‘நட்சத்திரா’ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்த அன்னையை ஒரு வழியாக சமாளித்து அறையிலிருந்து வெளிவந்த வீரின் அலைப்பேசி ஒலித்தது.
அவனின் எண்ணிற்கு அழைத்தது வேறு யாருமல்ல…சந்திரமதி தான்!
‘ஓ காட் இவளை மறந்திட்டோமே?’ என நெற்றியை தட்டிக்கொண்டு அழைப்பை ஏற்றவுடன் “ஹலோ சார்…பெருசா வசனமெல்லாம் பேசனீங்க?அதுக்கு அப்புறம் ஒரு கால் இல்லை…ஒரு மெசேஜ் இல்லை…இதிலே பாரி வள்ளல் மாதிரி சலுகைய வேற அள்ளி வீசனீங்க?” என எடுத்த எடுப்பிலே படபட பட்டசாய் வெடித்து தள்ளியவளின் பேச்சை கேட்டு வீரின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
முகிழ்மதியுடன் பேசினால் அவனின் உள்ளம் நெகிழ்ச்சியில் மிதந்தது என்றால்,சந்திரமதியுடன் பேசினால் அவனின் பாரமெல்லாம் தூர விலகி ஓடியது.
“ஹே சந்திரமதி கொஞ்சம் மூச்சு விட்டு பேசும்மா…ஏன் இப்படி கேப்பே விடாமல் பேசறே நீ?” என சிரித்துக்கொண்டே சாவகாசமாக இருக்கையில் வந்து அமர்ந்தான்.
அவளோ “ஹலோ நான் செம்ம கோபத்திலே இருக்கேன்…நீங்களா கூப்பிடற வரை நானா கூப்பிடக்கூடாதுனு தான் நினைச்சேன்…பட் அம்மாவுக்காக தான் இப்போ கூட கூப்பிட்டேன்…இப்போ சொல்லுங்க…ஏன் என்னை ஹாஸ்பெட்டல் நீங்க கூட்டிட்டு போகலை?” என சிறிது கோபத்துடனே பேசினாள்.
தாயை பற்றிய பேச்சு வந்தவுடன் அவனின் முகம் வாடிவிட்டன.
சட்டென அவனிடம் ஒரு மௌனம்!
அவனின் அமைதி அவளின் கோபத்தை தணித்து ஒரு பயத்தை கொடுத்தன.
ஒருவேளை அவனின் தாயிற்கு ஏதேனும் ஒன்றோ என தவித்த பெண்ணவள் “என்னாச்சு அண்ணா?அ…ம்மா நல்லா இருக்காங்க தானே?” என வினவும் போதே அவளையும் மீறி குரல் நடுங்கின.
அவனோ ஒரு பெருமூச்சுடன் “இப்போ அம்மா ஹாஸ்பெட்டல்ல இல்லை…வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாச்சு மதிம்மா” என மேலோட்டமாக அவரின் உடல்நிலையை பற்றி தெரிவிக்க,
அவளின் இதயத்தில் வலி ஒன்று எழுந்தது.
அவனிற்காக அவளின் உள்ளம் தவிக்க “ஐயம் சாரி அண்ணா…உங்க நிலைமை தெரியாமல் நான் வேற கோபப்பட்டுட்டேன்” என சங்கடமாக மன்னிப்பு வேண்ட,
“அட பரவாயில்லை…நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்…அம்மா டென்ஷனிலே உன்னை நான் மறந்திட்டேன்…ஐயம் சாரி” என அவனும் பதிலுக்கு மன்னிப்பு வேண்டினான்.
அவனின் மன்னிப்பை அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டன.
“அட விடுங்க அண்ணா…நமக்குள்ள என்ன மன்னிப்பு?நமக்கு அம்மா தான் முக்கியம் நீங்க அவங்களை பாருங்க” என அவனின் மனதை. இளகுவாக்கியவள்,
ஒரு கணம் தாமதித்து “அன்ட் தென் ஒரு ரிக்வெஸ்ட் அண்ணா…இந்த வாரம் சன்டே நான் உங்க வீட்டுக்கு வரலாமா?” என தயக்கத்துடன் இழுத்தாள்.
அவனோ “என்னம்மா நீ இப்படி கேட்கறே?நீயும் என் தங்கச்சி தான்னு என்னைக்கோ நான் சொல்லிட்டேன்…இது உன் வீடு எப்போ வேணா நீ வா” என ஆதுரத்துடன் அவளிற்கு அனுமதி வழங்க,
அவனின் குரலை வைத்து அவன் கவலையில் இருப்பதறிந்த சந்திரமதி “ஹலோ பிரதர்…வா…வானு சொன்னா மட்டும் பாத்தாது…அட்ரஸ் சென்ட் பண்ணுங்க மொத” என அவளிற்கே உரிய துறுதுறுப்புடன் அவனை சீண்டி பேச,
அவனும் சிரித்துக்கொண்டே “இதோ உடனே அனுப்பறேன்” என அலைப்பேசிலிருந்து அவளிற்கு தகவல் அனுப்பினான்.
“ஐ காட் இட் பிரதர்…யூ டோன்ட் வொர்ரி…சீக்கிரம் அம்மா சரியாகிடுவாங்க…எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க…ஐ வில் பீ தேர் ஃபார் யூ…ஓகே” என அவனிற்கு ஆறுதல் கூறியே அழைப்பை துண்டித்தாள் அவள்.
பார்ப்பதற்கு அவள் ஏதோ மேலோட்டமாக அந்த வார்த்தைகளை கூறியது போல் இருந்தாலும்,அதில் ஒரு உயிர்ப்பு இருந்தது.
அவனின் மீது ஒரு அன்பு இருந்தது.
‘உங்களுக்காக நான் எப்போதும் வந்து நிற்பேன்’ என அவள் கூறியதை கேட்டு அவனின் நெஞ்சம் நெகிழ்ந்தன.
அவன் அலைப்பேசியை கனிவுடன் பார்த்திருக்கும் போதே அடுத்ததாக முகிழ்மதியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
மற்றொரு தங்கையின் எண்ணை பார்த்ததும் அவனின் நெஞ்சம் நிறைந்துவிட “ஹலோ சொல்லுடாம்மா” என பேசியவனின் குரல் குழைந்தது.
அவளோ “எ…ன்கிட்ட ஏ..ன் அண்ணா அ…ம்மா பத்தி எ..ல்லாத்தையும் ம..றைச்சிட்டீங்க?” என திக்கி திணறி கண்ணீருடன் கேட்டவளின் கரகரத்த குரலை கேட்டு அவன் திகைத்தான்.
அவளின் அழுகையை கண்டு அவன் பதறி எழுந்துவிட்டான்.
“என்னாச்சும்மா?ஏன் இப்போ அழறே?ஏதாவது பிரச்சனையா உனக்கு?” என அவன் பரிதவிப்புடன் வினவ,
அவளோ “அ…ண்ணா அண்ணா” என தேம்பிக்கொண்டு இருக்கவும்,பட்டென அவளிடமிருந்து அலைப்பேசியை பிடுங்கியிருந்தான் ரத்தினவேல்.
அதற்குள் எதிர்புறம் வீர் தவித்து துடித்துப்போனான்.
அவளிடமிருந்து அலைப்பேசியை வாங்கிய ரத்தினவேல் “வீர் நத்திங் டூ வொர்ரி…அம்மா விஷயம் இப்போ தான் கேள்விப்பட்டாங்க மேடம்…அதுக்கு தான் புதுசா டேமை திறந்து விட்டிருக்காள்” என தன்னை நோக்கி பரிதாபமாய் விழித்த மனையாளை பார்த்து உரைக்க,
அதன்பிறகே வீரின் மனம் சமாதானமுற்றது.
“வேற ஒண்ணும் பிரச்சனையில்லையே பூபதி…டால் அழவும் நான் பயந்திட்டேன்” என நெஞ்சை நீவிக்கொண்டே அவன் உரைக்க,
அவனோ முகிழ்மதியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே “ஓ டாலுக்கு என்ன வேலை?பொழுதனைக்கும் டேமை திறந்து விட்டு அடுத்தவனை கலங்கடிக்கிறது தான் வேலை” என மனையாளை சீண்டினான்.
அவளோ பாவமாக அவனை நோக்கவும் ‘மூஞ்சியே இப்படி வைச்சே ஏமாத்தறாள்’ என சலிப்பாக தலையசைத்தான்.
அதற்குள் வீரோ “ப்ச் ஏன் பூபதி அப்படி சொல்லறே?அவ ஒரு குழந்தை மாதிரி…சின்ன வயசிலிருந்து வீட்டுக்குள்ளயே அடைச்சு வைச்சு வளர்த்திட்டாங்கயில்லை அதான் அப்படி இருக்காள்…ஆனால் பூ போலே மனசுடா என் டாலுக்கு…பிளீஸ் அவளை எதுவும் சொல்லாதே…பாவம்” என தங்கைக்காக பரிந்து வந்தான்.
ரத்தினவேலோ கழுத்தை நீவி “டேய் போதும்டா சாமி…உன் குழந்தைய நான் எதுவும் சொல்லலை…அவகிட்ட நீயே பேசு” என அவனின் பேச்சை கேட்டு கடுப்பாகி மனைவியிடம் அலைப்பேசியை நீட்டினான்.
அவள் அலைப்பேசியை வாங்க கைநீட்டவும்,அவளை அழுத்தமாக நோக்கிய ரத்தினவேல் “இங்க பாரு முகிழ்…அவன்கிட்ட அழுகாமல் பேசறதுனா பேசு…இல்லைனா ஃபோன் தரமாட்டேன்” என செல்லமாய் கண்டிக்க,
அவளும் “இல்லை…இல்லை அழலை” என வேகமாக கண்ணீரை அழுந்த துடைத்துக்கொண்டு அலைப்பேசியை கையில் வாங்கினாள்.
இங்கு நடக்கும் கணவன் மனைவி நாடகத்தை பார்த்து தமியோ மனம் நிறைய புன்னகைத்தாள்.
ஏனெனில்,கடந்த இரண்டு வாரமாய் அவர்கள் இருவரும் விலகியிருப்பதை கண்டு குடும்பமே கவலையில் மூழ்கியிருந்தது.
இப்போது இருவரும் ஒன்றாகியதும் அவளினுள் மகிழ்ச்சி நிரம்பியது.
அத்தோடு கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த அன்யோன்யத்தை கண்டு தானும் வீரும் இதுப்போல் ஒன்றுப்பட்டு வாழ ஏக்கம் கொண்டன அவளது மனது!
அவனின் தாயிற்கு சேவகியாய்…அவனிற்கு தாயாய்…தாரமாய் என அனைத்துமாக அவனிற்கு அவளிருக்கும் நாளை எதிர்நோக்கி அவள் உள்ளம் பரிதவித்தன.
மூவரும் ஒன்றாக மகிழுந்தில் சென்றுக்கொண்டிருந்தார்கள்.
அதனால் அங்கு நடக்கும் யாவையும் அமைதியாக தமயந்தியும் ரத்தினவேலும் பார்த்திருந்தனர்.
முகிழோ கணவனிடமிருந்து அலைப்பேசியை வாங்கி “அ..ண்ணா உங்களை பத்தி எனக்கு எதுவுமே தெரியலை…நீங்க எவ்வளவு பெரிய கஷ்டத்திலே இருந்திருக்கீங்க…நான் இது எதுவுமே தெரியாமல் இருந்திருக்கேன்…என்னை மன்னிச்சிடுங்க அண்ணா” என பேசிக்கொண்டிருக்கும் போதே அவளின் குரல் தழுதழுத்தது.
அருகில் அவளின் மணாளனோ “க்கும்” என தொண்டையை செருமியதும் முகிழ் வந்த கண்ணீரை வேகமாக துடைத்தாள்.
அதைக்கண்டு ரத்தினவேலின் விழிகள் பனித்தன.
எதிரில் இருந்த வீரோ “டால் நீ எதுக்கு சாரி சொல்லறே?நீ ரொம்ப சாஃப்ட்டான பொண்ணும்மா…உனக்கு இதெல்லாம் தெரிஞ்சா தாங்கமாட்டேன்னு தெரிஞ்சு தான் மறைச்சிட்டேன்…இதுக்கு நீ சாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை…எல்லாத்தையும் அண்ணா நான் பார்த்துக்கறேன்” என அவளின் சிறு கலக்கத்தையும் துடைத்தெறிய முனைந்தான்.
அவளோ “அ…ண்ணா அ…ம்மா எப்படி இருக்காங்க?” என அவளால் என்ன முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளின் உணர்வுகளோடு இணைந்திருந்த வீரிக்கும் கண்கள் கலங்கின.
சட்டென அதை மறைத்து “இப்போ அவங்க பரவாயில்லை டால்…நல்லாவே பேசறாங்க” என அவளை சமாதானம் செய்வதற்காக பொய் கூறினான்.
அதை நிஜம் என்று நம்பிய முகிழ்மதியோ “சரி அண்ணா கவலைப்படாதீங்க…அம்மாவுக்கு சீக்கிரம் சரியாகிடும்…எனக்கு நீங்க இருக்க மாதிரி உங்களுக்கும் அம்மாவுக்கும் நான் இருக்கேண்ணா” என உணர்ந்து கூறியவளின் சொல்லில் அவனின் மீது அவள் கொண்ட பாசம் தெரிந்தன.
சற்று முன்பு சந்திரமதி கூறிய அதே வார்த்தைகளை அச்சு பிசகாமல் முகிழ்மதியும் கூறியிருந்தாள்.
இதுநாள் வரை தனக்கென்று யாருமில்லையே என தனிமையில் அனைத்து துயரங்களையும் அனுபவித்த வீருக்கு புதிதாய் இரண்டு சொந்தங்கள்!
அதுவும் அவனிற்காக துணை நிற்க…அவனின் கஷ்டங்களை பகிர்ந்துக்கொள்ள…
இதற்கு மேல் அவனின் வாழ்வில் என்ன வேண்டும்?
அவன் இழந்த ஒட்டுமொத்த சந்தோஷங்களும் திரும்ப கிடைத்தது போல் அவனின் உள்ளம் பரவசமடைந்தது.
“தேங்க்ஸ்டாம்மா” என உயிரை உருக்கும் குரலில் சொன்னவனிடம் “அண்ணா எக்ஸாம் முடிஞ்சு அங்க கூட்டி வர்றேன்னு அவரு சொன்னாரு…சன்டே நான் வந்து உங்களை பார்க்கறேன்…நீங்க அம்மாவை பத்திரமா பார்த்துக்கோங்க அண்ணா” என பேசி முடித்து அவள் அழைப்பை துண்டித்தாள்.
இங்கு வீரோ ‘என்னடா நடக்குது இங்கே?’ என குழம்பிப்போய் இருந்தான்.
அவனின் இரு தங்கையும் ஒரே நாளில் அவனது வீட்டிற்கு வருவதாக தெரிவித்திருக்க முதலில் குழப்பம் ஏதேனும் வருமோ என்று எண்ணினாலும் ‘சரி இதுவும் நல்லதுக்கு தான்’ என ஆசுவாச பெருமூச்சறிந்தான்.