முகிழ்மதி 64:
அவனின் இந்த அதிரடியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அதிலும் ‘என் வீட்டிற்கு வந்துவிடுகிறீயா?’ என்று மட்டும் கூறாமல் ‘என் தங்கையாக வந்துவிடுகிறாயா?’ என அவன் கேட்ட விதமே அவனின் கண்ணியத்தை காட்டின.
அவனின் முதல் பேச்சே அவனிடம் அவளை ஈர்த்திருந்தன.
அவளிருக்கும் நிலையில் தன்னை யாரேனும் அரவணைத்து கொள்ளமாட்டார்களா? என்று அவளின் மனம் ஏங்கியது உண்மை தான்!
அதற்காக பழகியிராத ஒரு ஆடவனுடன் செல்ல அவளிற்கு சிறிதும் விருப்பமில்லை.
நம்பியவர்களே அவளை ஏமாற்றி சென்ற நிலையில் மீண்டும் ஒருவரை நம்பி ஏமாற அவளின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
அத்தோடு அவளிற்கு வேறொரு சந்தேகமும் முளைத்தன.
உடனே அவளின் இமைகள் இரண்டும் இடுங்கிட “சோ என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் இங்க நீங்க வந்திருக்கீங்க அப்படி தானே?” என கூர்மையாக அவனை நோக்கி அவள் வினவ,
அவனும் அவளிடம் சுற்றி வளைக்காமல் “ஆமாம்” என தலையாட்டியிருந்தான்.
அதில் சட்டென அவளின் முகம் இறுகி விட்டன.
தன்னை பற்றி அனைத்தும் தெரிந்து வந்திருக்கிறான் என்றால் விஜயலட்சுமி அவளிற்கு இழைத்த அநீதியும் அவனிற்கு தெரிந்திருக்கும் என்று எண்ணியவுடன் ஒரு மாதிரியாகிவிட்டது.
அத்தோடு அவளை பற்றி அவன் எதற்காக தெரிந்துக்கொண்டான் என்ற கேள்வியும் அவளுள் உதித்தன.
அதனால் “உங்களுக்கு எப்படி என்னை பத்தி எல்லாம் தெரியும்னு தெரியாது…பட் என் மேலே இரக்கப்பட்டு தான் நீங்க இங்க வந்திருக்கீங்கன்னா ஐயம் சாரி…நான் அந்த அளவு பரிதாபத்திலே இல்லை…எனக்குன்னு புதுசா ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கு…அதை நான் நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன்…சோ…” என அவள் கையெடுத்து கும்பிட்டு எழுந்துவிட்டாள்.
அவனோ அவளிடம் “ஒரு நிமிஷம் நில்லும்மா…” என புருவம் சுருக்கி அழைக்க,
“உங்க கூட பேச எனக்கு எதுவுமில்லை மிஸ்டர்…என் நேரத்தை வீணாக்காதீங்க” என பட்டென கூறிவிட்டு அவள் விறுவிறுவென அங்கிருந்து நடக்க தொடங்கிவிட்டாள்.
அவனோ அவளின் கோபத்திற்கெல்லாம் சிறிதும் அசராமல் “உன் சிஸ்டர் முகிழ்மதியை பத்தி நீ தெரிஞ்சுக்க விரும்பலையா?” என ஆழ்ந்த குரலில் கேட்டிருந்தான்.
அவளை எங்கு அடித்தால் வீழ்வாள் என்ற வித்தையறிந்து சரியாக அடித்தான்.
அவன் நினைத்தது போலவே அவளின் நடை தேங்கின.
அவளின் இதயத்தின் தாளம் தப்பின.
சட்டென அவனை நோக்கி திரும்பியவள் “முகிழை பத்தி நீங்க என்ன பேசணும்?” என மெதுவாக அவனை நோக்கி வந்தாள்.
அவனோ அவளை அழுத்தமாக நோக்கி “முதல்ல வந்து உட்காரு…சொல்லறேன்” என கறாராக உரைத்து பலகையை தட்டி காட்டினான்.
தங்கை என்றதும் அவளை பற்றி தெரிந்துக்கொள்ளவே அவளின் மனம் தவித்தது.
கூடவே,அவளிற்கு ஏதேனும் பிரச்சனையோ?
அதற்காகவே அவன் வந்திருக்கிறானோ என்றெல்லாம் அவளிற்கு பதைபதைக்க,அதுவரை அவளிடம் இருந்த விறைப்பு இப்போது அகன்றன.
அவன் கூறியது போலவே அவனருகே அவள் வந்து அமர்ந்ததும் “இங்க பாரும்மா சந்திரமதி…நமக்கு பழக்கமே இல்லாத ஒரு ஆளை அவ்வளவு சீக்கிரம் நம்பறதுக்கு கஷ்டமா தான் இருக்கும்…அதனாலே இப்போ அதை பத்தி பேச வேணாம்…நான் சொன்னதை பத்தி நீ நல்லா யோசிச்சு சொல்லு” என தற்சமயம் அவளை தன்னோடு அழைத்து செல்வதை ஒத்தி வைத்துவிட்டான்.
அவளும் அவனிடம் எதுவும் பேசாமல் தங்கையை பற்றிய விபரங்கள் அறிய தவித்தப்படி அவனை பார்த்திருந்தாள்.
ஒரு கட்டத்தில் “முகிழ் எ..எப்படி இருக்காள்?அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை தானே?” என துடித்த நெஞ்சத்தை அடக்கிக்கொண்டு வினவினாள்.
அவளின் விழியில் இருந்த தவிப்பை பார்த்தவனிற்கு வித்தியாசமாக இருந்தது.
அவன் அறிந்த வரையில் அக்காவும் தங்கையும் இதுவரை பேசி கூட பார்த்ததில்லை.
அத்தகைய நிலையில் அவளின் விழியில் இருந்த அச்சமும் தவிப்பும் அவனின் புருவத்தை உயர்த்த வைத்தன.
ஆயினும்,தன் ஆராய்ச்சியை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு “அவளுக்கு அந்த வீட்டுலே எந்த குறையுமில்லை…ஷீ இஸ் ஃபைன்” என்றதும் அவளின் முகத்திலிருந்த பதட்டம் சிறிது சிறிதாக குறைந்தன.
அதையறிந்தாற் போன்று “அவளை அங்க எல்லாரும் நல்லா தான் பார்த்துக்கிறாங்க.பட் அவளாலே அங்க நிம்மதியா இருக்க முடியலை…எந்நேரமும் உன்னை பத்தி தான் அவ நினைச்சிட்டு இருக்காள்…உனக்கு துரோகம் பண்ணிட்டோம்னு ஒரு குற்றவுணர்ச்சி அவளுக்கு இருக்கு…அதனாலே அவளாலே அங்க நிம்மதியா வாழ முடியலை” என்று கூறி ஒரு பெருமூச்சை வெளியேற்றினான் வீர்.
அவன் உரைத்ததை கேட்ட சந்திரமதி உள்ளுக்குள் வருந்தினாள்.
அவளிற்காக அவள் வருந்தது அவளை நெகிழ வைத்தது தான், அதற்காக தன்னை நினைத்து அவள் தன் வாழ்வை கெடுத்துக்கொள்வதை விரும்பவில்லை சந்திரமதி.
“அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு…அதைவிட்டுட்டு தேவையில்லாமல் என்னை பத்தி எதுக்காக நினைச்சிட்டு இருக்காள்?” என வெதும்பிய குரலில் அவள் கேட்க,
அவனோ அவளை ஆழமாக நோக்கி “உன்னை மாதிரி அவளாலே எல்லாத்தையும் ஈஸியா கடக்கமுடியாதும்மா…ஏனால் அந்த பொண்ணுக்கு உன் மேலே அவ்வளவு பாசம்…ஆனால் உனக்கு?” என குத்தலாக கேட்டு அவன் புருவம் உயர்த்தினான்.
முகிழ்மதி அங்கு கொடுமை அனுபவிக்கும் சமயம் அவளை காக்கவில்லை என்ற சினம் அவனிற்குள் புதைந்திருந்தது.
அது அவனையும் மீறி வெளிவந்திருந்தது.
ஆனால் அவளோ அவனிற்கு எவ்வித பதிலும் கூறவில்லை.அவள் இதழ்கடித்து எங்கோ பார்த்தவாறு மௌனம் காத்தாள்.
அவனிற்கே தான் பேசியது அதிகப்படி என்று தோன்றியதினால் “ஊப்” என இதழை குவித்து ஊதி தன்னை கட்டுப்படுத்தியவன் “சரி அதையெல்லாம் விடும்மா…உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்?அதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு…நீ ஏன் ஒரு தடவை கூட உன் தங்கச்சி முகிழை பார்க்க முயற்சி பண்ணலை.அவ மேலே உனக்கு ஏதாவது கோபமிருக்கா?” என அவளை புருவம் சுருக்கி பார்த்தவாறு கேட்க,
அவனை நிமிர்ந்து நோக்கிய சந்திரமதி விரக்தியாக சிரித்து “முதல்ல எனக்கு அவ மேலே கோபம் வந்தது உண்மை தான்…ஆனால் அவளே ஒரு அப்புராணி…அவளை எப்படியும் மிரட்டி தான் கல்யாணம் பண்ணி வைச்சிருப்பாங்கனு எனக்கு நல்லாவே தெரியும்…அவ மேலே கோபப்பட்டு ஒரு பயனுமில்லை…அதுமட்டுமில்லாமல்…” என பேசிக்கொண்டே வந்தவளின் தொண்டை அடைத்தது.
பின்பு அதனை செருமியப்படி “அவ சின்ன வயசிலிருந்து எந்தவொரு சந்தோஷமும் அனுபவிச்சதில்லை…அவளுக்கு கிடைச்சதெல்லாம் நரக வேதனை மட்டும் தான்…நான் அவளை விட்டு ஒதுங்கியிருந்தால் எங்க இரண்டு பேருக்கும் சந்தோஷம் கிடைக்கும்னு நான் யோசிச்சேன்…அந்த வயசுலே எனக்கு என்ன தோணுச்சோ அதை நான் பண்ணேன்…ஆனால் அவளை விட்டு விலகி நான் மிகப்பெரிய பாவம் பண்ணியிருக்கேன்னு இப்போ தான் நான் புரிஞ்சுக்கிட்டேன்…இப்போ எனக்குள்ள ஒரு குற்றவுணர்வு என்னை கொலையா கொன்னுட்டு இருக்கு…இதுக்கு மேலையும் அவளுக்கு எந்தவொரு கஷ்டமும் வரக்கூடாதுனு நினைச்சு தான் அவக்கிட்டயிருந்து நான் பிரிஞ்சு இருக்கேன்…முன்னாடியும் அவளை பிரிஞ்சு தான் இருந்தேன்…அது எங்க நல்லதுக்காக…ஆனால் இப்போ நான் அவளை பார்க்க வர்றாததுக்கு காரணம் அவ நல்லப்படியா வாழணும்னு தான்” என நாதழுதழுக்க பேசி முடித்தவளின் விழியோரம் கண்ணீர் துளிர்த்தன.
வீருக்கு அவள் பேச பேச அவளை பற்றி அவன் வரித்து வைத்திருந்த பிம்பமெல்லாம் தூள் தூளாக உடைந்துப்போனது போலிருந்தது.
ஒரு விஷயத்தை மற்றவரின் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் அவர்களுடன் பேசி பழகி பார்ப்பதற்கும் ஆயிரம் மாற்றங்கள் இருக்கும் என்று அவன் உணர்ந்த தருணம் அது தான்!
அது நாள் வரை அவனுள் அவளை பற்றி நல்அபிப்ராயம் இருந்ததில்லை.முதல்முறையாக அவளின் மேல் அவனிற்கு ஒரு மதிப்பு வந்தது.
மேலும்,அவளுடன் மனம் விட்டு உரையாட தொடங்கியதும் இன்னும் அதிகமாக அவளை அவன் புரிந்துக்கொண்டான்.
ஏனெனில்,தன் கண்ணீரை விரலால் சுண்டிவிட்ட பெண்ணவளோ “சார் உங்களால் முடிஞ்சா இந்தவொரு உதவியை மட்டும் எனக்கு செய்யுங்க…அவளுக்கு நான் வீட்டை விட்டு வெளிய வந்த விஷயம் எதுவும் தெரியவேணாம்…அதுவும் அந்த விஜயலட்சுமியோட உண்மை சுயரூபம் பத்தி தெரிஞ்சால் அவ ரொம்பவே துடிச்சுப்போயிடுவாள்…அடுத்து,நான் சொல்லறதை அப்படியே சொல்லிடுங்க ‘அம்மு உன் மேலே எனக்கு எந்த கோபமும் இல்லை…நீ தேவையில்லாமல் கில்ட்டா ஃபீல் பண்ணறதை விட்டுட்டு அங்க நல்லப்படியா வாழு…நீ என்னைக்கு அங்க நல்லா வாழ்ந்திட்டு இருக்கேன்னு எனக்கு தெரியுதோ?அன்னைக்கு வந்து நான் உன்னை பார்க்கறேன்…என்னை சந்தோஷப்படுத்தற மாதிரி செய் அம்மு’ இதை ஒரு வரி மாறாமல் அப்படியே சொல்லிடுங்க சார்” என மிகவும் நலிந்த குரலில் துக்கத்தை அடக்கிக்கொண்டு அவள் பேசுவதை பார்த்த வீர் “இதை நீயே வந்து அவகிட்ட சொல்லலாமே சந்திரமதி” என்று சொன்னான்.
அவளோ “வேணாம் சார்” என மறுப்பாக தலையசைத்தவள்,
“தெரிஞ்சோ தெரியாமலோ அந்த வீட்டுக்கு நான் மருமகளா போக இருந்தேன்…என்னை அங்க பார்த்தால் எல்லாரும் ஒரு மாதிரி சங்கடமா ஃபீல் பண்ணுவாங்க…எனக்கும் அங்க வர ஒரு மாதிரி இருக்கு…கூடவே என்னை பார்த்தவுடனே என் தங்கச்சி ‘அக்கா இது நீ வாழவேண்டிய வாழ்க்கை…நீயே வைச்சுக்கோ’னு என்கிட்ட வந்து சொன்னாலும் சொல்லுவாள்…அவ ஒரு பாசத்துக்கு அடிமையான முட்டாள்…அதனாலே தான் அவங்க வாழ்க்கையிலே என்னாலே எந்தவொரு பிரச்சனையும் வரக்கூடாதுனு நான் ஒதுங்கியிருக்கேன்” என சுற்றியிருக்கும் அனைத்து சூழ்நிலைகளையும் அலசி ஆராய்ந்து அவள் பேசிய விதத்திலே அவளின் முதிர்ச்சி தெரிந்தது.
குறிப்பாக,முகிழ்மதியை பற்றி அவள் சரியாக கணித்த விதம் அவனிற்குமே அதனை ஏற்றுக்கொள்ள கூடியதாகவே முடிந்தது.
அதனால் “முகிழை பத்தி நீ சொன்னது நூறு சதவீதம் சரி தான்…பட் நீ நேரிலே வரலைனா கூட அவகிட்ட ஒரு தடவை ஃபோனிலே பேசினால் எனக்கு சரியா இருக்கும்னு தோணுதும்மா…ஏனால் உன்கிட்ட பேசிட்டாலே அவளுடைய கவலையெல்லாம் பறந்துப்போயிடும்னு நினைக்கிறேன்…இது ஜஸ்ட் என்னுடைய தாட்…உனக்கு என்ன தோணுதோ அதை செய்யும்மா” என அவன் தன் கருத்தை அவளிடம் கூற,
அவளிற்கும் அவை ஏற்புடையதாக இருக்க “சரி நான் அவகிட்ட பேசறேன் சார்…என்கிட்ட அவ நம்பர் இல்லை…நீங்க கொடுத்திட்டு போங்க” என அவனிடம் அவள் எண்ணை வாங்கி சேமித்தாள்.
அவளின் கையிலிருந்த பழைய உடைந்துப்போன அலைப்பேசியை கண்டவனிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அவன் மெதுவாக நிமிர்ந்து அவளை அளவிட்டான்.
அவன் முன்பு அவளை பார்த்ததற்கும் இப்போது பார்த்ததிற்கும் இருக்கும் வித்தியாசம் அவனை சுட்டது.
அனைத்திற்கும் காரணமான விஜயலட்சுமியின் மீது அவனிற்கு ஆத்திரம் வந்தது.
“ஏன்மா அந்த லேடி பெத்த பொண்ணுங்கன்னு கூட பார்க்காமல் உங்களை அவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கு…உங்களுக்கு கோபம் வரலையா?முகிழை கூட விடு..அந்த பிள்ளை ஒரு அப்பாவி…நீ எதுக்காக அமைதியா இருக்கே…உன் அப்பானு வீட்டுலே ஒருத்தர் இருக்காரே அவர் என்ன தான் பண்ணறாரு” என அவனையும் மீறி சொற்கள் சற்று கடுமையாகவே வெளிவந்தது.
சந்திரமதிக்கு அவர்களை பற்றி நினைத்தவுடன் ஒன்றன் பின் ஒன்றாக சிறு வயதிலிருந்து அவர்கள் அனுபவித்த கொடுமைகள் மட்டுமே ஞாபகத்திற்கு வந்தன.
அதனால் ஒரு முறை விழி மூடி திறந்த சந்திரமதி “பிளீஸ் அதை பத்தி பேச வேணாம்…எங்களுக்கு அப்பா அம்மான்னு யாருமே இல்லை…எங்களோட மொத்த வாழ்க்கையும் ஒரு பொய் தான்…நானும் முகிழும் மட்டும் தான் உண்மை…” என ஏதேதோ உளறிக்கொண்டிருந்தவள்,
சட்டென சுதாரித்து “சார் என்கிட்ட எதுவும் கேட்காதீங்க…எல்லாத்தையும் நான் கெட்ட கனவா மறந்திட்டு புது வாழ்க்கை வாழணும்னு நினைக்கிறேன்…பிளீஸ்” என்னும் போதே அவளின் உடலில் ஒரு நடுக்கமும் குரலில் ஒரு தடுமாற்றமும் ஏற்பட்டது.
அவளின் மேனியில் ஊடுருவிய பயத்தை விழி வழியே கண்ட வீருக்கு இவர்களின் வாழ்வில் பெரிதாக ஏதோ மர்மம் புதைந்திருக்கிறது என்று புரிந்துக்கொண்டான்.
இரண்டு பிள்ளைகளின் வாழ்வையும் சிதைத்துவிட்டு எப்படி அவர்களால் வாழ முடிகிறது என இவர்களின் பெற்றோரை எண்ணி அருவருத்தான்.
தற்சமயம் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வேறு பேசினான் அவன்.
“உன்னை பத்தி எல்லாமே தெரிஞ்சு தான் இங்க வந்திருக்கேன் சந்திரமதி…கொஞ்சம் தாமதமாக வந்திட்டேன்னு நினைக்கிறேன்” என்று அவன் சொல்லவும்,
அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.
“அன்னைக்கு கோவில்லே உன்னோட கண்ணீரை பார்த்து என் மனசு தாங்கலைம்மா…அப்போவே உன்னை நான் தேடி வரணும்னு நினைச்சேன்…ஆனால் அதுக்குள்ள என் வாழ்க்கையிலே நிறைய பிரச்சனைகள் நடந்திடுச்சு?” என விளக்கம் கொடுத்த வீரின் முகம் சோர்ந்தது.
அவனின் முகம் கசங்கியதை பார்த்த பெண்ணவளிற்கும் கவலை தொற்றிக்கொள்ள “என்னாச்சு?உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என அவள் மெதுவாக விசாரிக்க,
அவனிற்கு ஏன் என்றே தெரியவில்லை.
அவளிடம் அவன் தாயை பற்றிய விபரங்களை மேலோட்டமாக உரைத்தான்.
அவன் கூறியதை கேட்டவளின் மனமும் அவனிற்காக வருந்தின.
அவனின் முகமறியாத அன்னையை பற்றி எண்ணியவுடன் அவளிற்கு ஏனோ நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி!
அவளின் இதயம் இறுகி பிசைய தன்னையறியாமல் “கவலைப்படாதீங்க அண்ணா…அம்மாவுக்கு சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்” என தன்னை மீறி அவனின் கரத்தை தட்டிக்கொடுத்திருந்தாள்.
அந்தவொரு செயலே அவனை அவள் தமையனாக ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டாள் என்று புரிய வைக்க,அவனின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
“நானும் அந்த நம்பிக்கையில் தான் வாழ்ந்திட்டு இருக்கேன்மா” என்றான் அவன்.
அவள் மேலும் அவனின் தாயை பற்றி விசாரிக்க,அவனும் அவளிற்கு தேவையான பதிலுரைத்தான்.
அவனும் அவளிடம் வீட்டை விட்டு வந்த பிறகு நடந்த நிகழ்வுகளை பற்றி விசாரிக்க அவளும் நடந்த நிகழ்வுகளை விவரித்தாள்.
முன்பிருந்த ஒரு விலகல் இப்போது அவளிடமில்லை.
அவனது காரினை பற்றிய பேச்சு அவளின் இதயத்தை இளக்கியிருந்தது.
இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.
அவளை சந்திக்க மாலை வந்தவன்,இப்போது இருள் கவிழும் நேரம் வந்ததற்கு பிறகே அதை உணர்ந்தான்.
உடனே தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த வீர் “நான் கிளம்பறேன்மா…மணி ஏழாகிடுச்சு…உனக்கும் ஹாஸ்டெல்லுக்கு நேரமாச்சுன்னு நினைக்கிறேன்…வா போகலாம்” என கால்சட்டையை உதறிக்கொண்டு எழுந்து நின்றான்.
அவளும் அவனுடன் எழுந்து நின்றவள் “சரிங்க அண்ணா…நீ பத்திரமா அம்மாவை பார்த்துக்கோங்க…கண்டிப்பா அவங்க சீக்கிரம் சரியாகிடுவாங்க…உங்களுக்கு ஆட்சேப்பணை இல்லைனா நான் ஒரு தடவை அவங்களை பார்க்க வரலாமா?” என தயக்கத்துடன் அவனை ஏறிட்டு கேட்க,
அவனோ “அந்த இடம் உனக்கெல்லாம் செட்டாகுதும்மா…அங்க இருக்கிறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க…வேணாம்” என அவளின் நலன் கருதி மறுத்துவிட்டான்.
ஏனெனில்,மனநல மருத்துவனையில் இருக்கும் நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துக்கொள்வார்கள்.
அவளிற்கு அந்த சுற்றுச்சூழல் பிடிக்காது என்றே அவன் மறுத்தான்.
ஆனால் அவளோ “இதுக்கு மேலே இது செட்டாகும்…அது செட்டாகும்னு பிரிச்சு பார்க்கிற நிலைமையிலே நான் இல்லைண்ணா…எல்லாத்தையும் புதுசா பழகிக்கலாம்…நீங்க அடுத்த முறை அம்மாவை பார்க்கப்போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்க” என்றாள் உறுதியாக..
அவளின் இந்த உறுதிக்கு பின்பிருந்த வலியை அறிந்த நீரின் நெஞ்சம் அவளிற்காக இரத்தம் வடித்தன.
“நான் உன்னை கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மா…பட் ஒரு கண்டிஷன்…நீ நம்ப வீட்டுக்கு வந்திடணும்…அதுக்கு ஓகேன்னா சொல்லு…நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என சிரித்துக்கொண்டே சொல்ல,
அவளோ வெகுவாய் தயங்கினாள்.
சட்டென அவனின் வளையத்திற்குள் செல்ல அவளால் முடியவில்லை.
அதுமட்டுமின்றி விஜயலட்சுமியும் இப்போது அவளின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டாரே?
அவரை பற்றியும் அவள் யோசித்து தடுமாறினாள்.
அவள் தயங்குவதற்கான காரணமறிந்த வீர் “சரி சரி…நீ எதுக்கு தயங்கிறேன்னு தெரியுதும்மா…அந்த அம்மாவையும் கூட்டிட்டு நம்ப வீட்டுக்கு வந்திடு…அவங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு…ஓகே” என அவளின் இடர் அறிந்து அவன் உரைக்க,
அவளோ அப்போதும் “இல்லைங்கண்ணா…இப்போதைக்கு எதுவும் வேணாம்…எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க” என முடிவாக கூறிவிட்டாள்.
அவனோ சிகையை அழுந்தக்கோதி “சரி உன்னிஷ்டம்மா…உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காமல் எனக்கு கூப்பிடு” என அவளிடம் தன் அலைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு அவளை விடுதியில் விட்டப்பிறகே சென்றிருந்தான்.
அப்போதிலிருந்து அவள் அந்த வேலையை பற்றியும் வீர் அளித்த சலுகையை பற்றியுமே யோசித்துக்கொண்டிருந்தாள்.
வீருடனான அந்த பிணைப்பு அவளிற்கு பிடித்திருந்தது.
ஒரு நாள் அவனுடன் பேசியதிலே அவளின் மனம் மாறி ‘அண்ணா’ என்று அழைக்கும் அளவு அவனின் பேச்சு அவளை மாற்றியிருந்தது.
அவனை நம்பி செல்லலாம் என ஒரு மனம் கூறினாலும்,மற்றவரை நம்பி அடி வாங்கிய மனது ‘வேண்டாம்’ என்றது.
அதனால் தற்போது எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் அவள் குழம்பியிருந்தாள்.
இரவெல்லாம் உறங்காமல் விழித்து சிந்தித்த பாவை ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.
மீண்டும் ஒருவரை நாடி இருக்க விரும்பாமல் அவள் தனது சொந்த காலில் நிற்க உத்தேசித்தாள்.
அதனால் ஜஸ்வந்திற்கு அழைத்து அந்த வேலைக்கு வருவதாய் சொல்லிவிட்டாள்.
ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை அங்கு நாட்களை ஓட்டிவிட்டு பின்பு மாறிக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.
ஆனால் அங்கு சென்ற பிறகு அவளின் வாழ்வு அடியோடு மாறவிருப்பதை அவள் அறியவில்லை.
முகிழ்மதி 65:
வீர் தாயுடன் மருத்துவமனையில் இருந்ததால் முகிழ்மதியை தேர்வு எழுத அழைத்து செல்லும் பொறுப்பு ஜித்தேந்திரனிடம் வந்து சேர்ந்தது.
தங்கை மற்றும் அண்ணி இருவரையும் அழைத்து சென்று அவர்களிடத்தில் சேர்ப்பித்தவன் “முடிச்சிட்டு கால் பண்ணுங்க” என இருவரிடமும் ஒரே பதிலையே கூறியிருந்தான்.
முகிழ்மதியின் மனமோ சஞ்சலத்தில் நிரம்பியிருந்தது.
அதனால் வீரை பற்றி விசாரிக்கும் எண்ணம் அற்றவளாய் கணவனே அவளின் நெஞ்சமெல்லாம் ஆகர்ஷித்திருந்தான்.
அன்று காலையிலாவது அவன் தனக்கு அழைத்து பேசுவான் என்று எண்ணியிருக்க,அவனோ அவளை அழைக்கவே இல்லை.
அதில் அவளிற்கு பெரும் ஏமாற்றம்!
அதே கவலையோடு தேர்வையும் எழுதி முடித்துவிட்டு வந்திருந்தாள்.
அவளின் மனமெங்கும் வருத்தம் சூழ்ந்திருந்தாலும்,அவளிற்கு படிக்க விருப்பம் என்பதால் நன்றாகவே எழுதியிருந்தாள்.
அவள் வெளியே வந்த சமயம் அவளிற்காக தமயந்தியும் ஜித்துவும் பள்ளிக்கூடத்தின் வாசலில் காத்திருந்தனர்.
அவளின் முகம் சோர்ந்திருப்பதை கண்டு,அண்ணன் தங்கை இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ஒரு வேளை அவள் சரியாக எழுதவில்லையோ என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள்.
அதனால் அவளிடம் தேர்வை பற்றி விசாரிக்காமல் “அண்ணி இன்னைக்கு வெயில் சுட்டெரிக்குது…வாங்க ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்” என அவளை அழைத்துக்கொண்டு பனிக்கூழ் கடைக்கு சென்றனர்.
அவளின் மனமோ அந்த குளிர்ந்த ஆகாரத்தால் கூட சமாதானமடையவில்லை.
ஏனெனில்,அவளின் உடல்,பொருள்,ஆவி அனைத்தும் அவன் ஒருவனிடம் மட்டுமே லயத்திருந்தது.
அவள் எழுதிய தேர்வை பற்றி முதலில் தெரியப்படுத்த விரும்பியதும் அவனிடம் தான்!
அவன் தன்னோடு இல்லையென்றாலும் அவனிற்கு அழைத்து தகவலை பகிரலாம் என்று அலைப்பேசியை கையில் எடுத்தாள்.
ஆனால் சட்டென கணவனை அழைத்து பேச முடியவில்லை அவளிற்கு!
அவள் வெகுவாய் தயங்கினாள்.
மனையாளின் குணமறிந்து ரத்தினவேல் புறப்படும் போது கூட “முகிழ் எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு…என்கிட்ட பேச தயங்கிட்டு இருந்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்டி” என அவளை உரிமையாய் எச்சரித்து விட்டு தான் அவன் சென்றிருந்தான்.
ஆயினும்,அவளுள் தோன்றும் தயக்கத்தை மட்டும் அவளால் துடைத்தெறிய முடியவில்லை.
ஆனால் அங்கு அவளின் மணாளானோ மனைவியை பற்றி சிந்திக்க நேரமின்றி பணியில் மூழ்கியிருந்தான்.
அவளின் மீது அளவுக்கடந்த கோபம் தோன்றியப்போதும்,அவளின் மேல் அளப்பறியா நேசத்தை கொண்டிருக்கும் ஆடவனால் வெகு நேரம் சினத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.
அதனால் காலையில் எழுந்தவுடன் அவளிற்கு தாமே அழைத்து பேசிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தான்.
ஆனால் காலையில் எழும்போதே அவனிற்கு மிகப்பெரிய பிரச்சனைகள் காத்திருந்தது.
அவர்களது கட்சி மாநாட்டிற்காக வடிவமைத்திருந்த மேடை திடீரென்று சரிந்து விழுந்திருந்தது.
நேற்று பெய்த மழையினாலும் வீசிய பலத்த காற்றினாலும்,அவ்விடம் முழுவதும் சேறும் சகதியுமாய் நிரம்பி இருக்கைகள் எல்லாம் தூக்கி வீசப்பட்டிருந்தன.
மாலை நான்கு மணிக்கு மாநாடு தொடங்கவிருந்தது.
மக்களோ அன்று அதிகாலையிலிருந்தே முதல்வரான விஜயேந்திரனை சந்திக்க ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஆகையால்,அந்த கட்சியின் தலைமை ஊழியனாக அவனே களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டிய கட்டாயம்!
இந்த மாநாட்டை சரியாக நடத்தவில்லை என்றால்,அவர்களை வீழ்த்த காத்திருக்கும் பகைவர்களுக்கு தானாகவே வாய்ப்பை தேடி கொடுத்தது போலாகிடும்.
ரத்தினவேலோ தன்னுடன் பக்கப்பலமாக யாருமில்லாததால் அவனே களப்பணியில் ஈடுப்பட்டிருந்தான்.
அவனை கண்டு பதறிப்போய் அவனருகே வந்த பாதுகாவலர்கள் “சார் நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க?நகருங்க சார்…நாங்க செய்றோம்” என்றார்கள்.
ஆனால் அவனோ “நம்ப வேலைய நாம்ப செய்யாமல் வேற யாரு செய்யவங்க…ஆட்கள் வந்து வேலைய முடிக்கிறதுக்கு நேரமாகிடும்…நீங்களும் வாங்க” என அழுத்தமாக கூறி,அவர்களையும் பணிக்கு இழுத்துக்கொண்டான்.
முதல்வரின் மகன் அவனே பணி செய்வதை கண்டு அரசியல் தொண்டர்களும் அவனிற்கு உதவ முன் வந்தார்கள்.
அவர்களுடனே மாநாட்டிற்கு வந்த மக்கள் திரளும் இறங்கி வேலை செய்தார்கள்.
ஆடவன் நினைத்திருந்தால் ஆட்களை ஏவி ஓரமாக ஒதுங்கியிருக்கலாம்.ஆனால் அவனோ தலைவன் என்றால் மற்றவருக்கு வழிக்காட்டியாய் இருக்க வேண்டும் என்றெண்ணினான்.
மக்களே அவனின் இந்த அர்ப்பணிப்பையும் கடமை உணர்வையும் கண்டு அதிசயத்தினர்.
ஊடகவியலாளர்கள் கூட தனது புகைப்பட கருவிகளை கொண்டு அவனை படம் பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.
அவனோ எதை பற்றியும் கண்டுக்கொள்ளவில்லை.
நாடு முழுவதும் இந்தவொரு காட்சியே சமூக ஊடகத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டிருந்தது.
ஒரு சாதாரண மாநாட்டிற்கே அவன் இந்த அளவு இறங்கி பணி செய்வதை கண்டு மக்கள் அனைவரும் அவன் புறமாக ஈர்க்கப்பட்டிருந்தனர்.
அவனால் அவர்கள் கவரப்பட்டத்தோடு ‘இவங்க கட்சிக்கு தான்பா என் ஓட்டு’ என்ற முடிவிற்கும் அவர்களை வரவழைத்திருந்தது.
இங்கு அவன் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு நிமிரும் போது மணி மதியம் இரண்டு!
காலையில் பழச்சாறு அருந்தியதோடு சரி…அதற்கு பிறகு அவன் எதுவும் சாப்பிடவில்லை.
வேலை செய்த களைப்பில் உடல் அலுத்து பசியில் வயிறு கத்தியது.
அவனுடன் பணிப்புரிந்த மக்கள் அனைவரும் களைப்போடு இருப்பதை கண்டுவிட்டு தனது உதவியாளனை அழைத்தவன் “சந்தீப் நான் சொன்ன மாதிரி எல்லாருக்கும் சாப்பாடு தயாரா இருக்கா?” என்று விசாரிக்க,
அவன் “எஸ் சார்” என்றதும் மக்களின் புறம் திரும்பிய் ரத்தினவேல் “எங்களுக்காக உதவி செய்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி” என இருகரம் குவித்து கணீர் குரலில் நன்றி செலுத்தியவன்,
“எல்லாரும் ரொம்ப பசியா தெரியறீங்க?வாங்க சாப்பிடலாம்” என பணிந்து அவர்களுக்கு உணவு உண்ண அழைப்புவிடுத்தான்.
அவர்களது உதவிக்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக அவனும் அவர்களுடனே உணவருந்த அமர்ந்தான்.
அவனின் இந்த எளிமையான அணுகுமுறை இன்னும் அதிகமாய் அவர்களை கவர்ந்தது.
இப்படியே அன்றைய பொழுது ஓடி மாநாடு தொடங்குவதற்கான நேரமும் வந்து சேர்ந்தது.
‘அன்றைய மாநாட்டில் என்ன பேச வேண்டும்?எப்படி பேச வேண்டாம்?’ என அனைவரையும் அழைத்து ஒரு ஒத்திகை பார்த்து முடித்தவன்,வேகமாக குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் மாநாட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அவன் குளிக்க சென்ற சமயம் அவனின் மனையாளிற்கு அழைத்து பார்த்தான்.
ஆனால் அவளோ வானதியின் அலைப்பேசி வழியாக விஜயலட்சுமியிடம் உரையாடி கொண்டிருந்ததால் கணவனின் அழைப்பை அவள் எடுக்கவில்லை.
அவளின் அலைப்பேசிக்கு அழைத்து ஓய்ந்தவன் ‘சரி மீட்டிங் முடிச்சிட்டு கூப்பிடுவோம்’ என பெருமூச்சுடன் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டான்.
இங்கு முகிழ்மதியோ கணவனை பிரிந்த துயரில் மூழ்கியிருந்ததால் அவளிற்கு சற்று அதிகமாகவே தமக்கையின் நினைவு வந்தது.
அவளிடம் பேசி தன் மனக்குறைகளை கொட்ட வேண்டும் போல் அவளிற்கு தோன்ற,தன் அலைப்பேசியின் வழியே அவளிற்கு அழைத்து ஓய்ந்தாள்.
தன் மீது உள்ள கோபத்திலே அவள் அலைப்பேசியை எடுக்கவில்லை என்றெண்ணிய பெண்ணவள் தனது மாமியாரின் அலைப்பேசியை வாங்கி வந்து அவளின் எண்ணிற்கு தொடர்புக்கொண்டாள்.
ஆனால் எதிர்ப்புறம் அந்த அலைப்பேசியை எடுத்ததோ விஜயலட்சுமி தான்!
சந்திரமதியை வீட்டை விட்டு அடித்து துரத்திய கையோடு அவளின் பொருட்கள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்திருந்தார்.
அத்தோடு சிவராமன் மகள் எங்கே என்று விசாரித்ததற்கு “அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க?” என தனது ஓப்பாரியை ஆரம்பித்தவர்,
“வீட்டிலிருக்க நகை பணம் எல்லாத்தையும் எடுத்துகிட்டு எவனையோ இழுத்திட்டு ஓடிட்டாங்க…நான் ஆசைய வளர்த்த இரண்டு புள்ளைங்களுக்கும் என் மேலே பாசமே இல்லை…என்னாலே தாங்கவே முடியலைங்க” என முந்தானையை வாயில் பொத்தி அழுவது போல் ஓவென கத்தி அழவும்,அதை அப்படியே நம்பி விட்டார் சிவராமன்.
இப்போது மகளின் மீது அவருக்கு அளவுக்கடந்த கோபம் வந்தது.
சமீபமாக அவளின் மீது பெரிதாக அபிப்பிராயம் இல்லாததாலும், தன்னுடைய பிரச்சனைகளே அவரின் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்ததாலும் “பணம் நகைய எடுத்து ஓடிட்டாளா?சரி போய் தொலையட்டும் விடு…நான் பெத்தது இரண்டும் உருப்படவே உருப்படாதுங்க…அப்பானு பாசம் கொஞ்சம் கூட இல்லை…எக்கேடோ கெட்டு ஒழியட்டும்…அவளுங்களுக்காக நீ ஏன் அழறே?உனக்கு நான் இருக்கேன்…வா” என துணைவியாரை அணைத்து சதாமானம் செய்தவருக்கு மகளை தேட வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.
அதேப்போல் விஜயலட்சுமியின் மீது அவருக்கு எவ்வித சந்தேகமும் வரவில்லை.
இந்நிலையில் விஜயலட்சுமி ஒரு புறம் சந்திரமதியின் மீது ஏகக்கடுப்பில் இருந்தார்.
அவளை அடித்து விரட்டும் போது கூட அவர் எதையும் யோசிக்கவில்லை.
ஆனால் அவள் திரும்பி வராதது அவருக்குள் ஆத்திரத்தை கொடுத்தன.
அடிப்படை பணம் கூட இல்லாமல் பஞ்சபரதேசியாய் அலைந்து திரிந்து இறுதியாக அவரின் காலடியில் வந்து விழுவாள் என விஜயலட்சுமி கணக்கிட்டிருந்தார்.
அவளை வைத்து முகிழ்மதியின் வாழ்வில் கலகமூட்டவும் காத்திருந்தார் அந்த சூட்சமதாரி.
ஆனால் அவரின் எண்ணங்களை பொய்யாக்கிவிட்டு சுயமரியாதையோடு வாழ வழியை தேடிக்கொண்டாள் சந்திரமதி.
அவள் திரும்பிவராததிலே விஜயலட்சுமியின் ஆணவத்தில் அடி வாங்கியிருக்க,நாளுக்கு நாள் அவரின் திட்டத்தில் விரிசல் விட ஆரம்பித்தது.
‘அவளை அவ்வளவு எளிதாக அடித்து விரட்டியிருக்கக்கூடாதோ?’ என அவர் வருந்திக்கொண்டிருந்தார்.
கூடவே,அவளின் மீது பெருஞ்சினமும் தோன்றின.
ஏனெனில்,முகழ்மதியை நெருங்க கூடிய துருப்புச்சீட்டு சந்திரமதி மட்டுமே?
தற்போது அந்த துருப்புச்சீட்டு கைவசமிழந்ததும் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக்கொண்டிருக்க,காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் சந்திரமதியின் அலைப்பேசி வழியாக அவருக்கு நற்பேறு வாய்த்தது.
ஆம்,தமக்கையிடம் பேச எண்ணி அவளின் எண்ணிற்கு அழைத்தவளின் அழைப்பை ஏற்றிருந்தார் விஜயலட்சுமி.
அலைப்பேசி அந்த பக்கமாக எடுத்தவுடன் “அக்கா…” என கரகரத்த குரலில் அழைத்தாள் முகிழ்மதி.
அவளின் குரல் கேட்டதும் அவருக்குள் அப்படியொரு ஆர்ப்பரிப்பு!
அவரின் பேராசைக்கு தீனி போட முகிழ்மதியின் வடிவில் ஒரு புதையல் கைக்கு கிடைத்திருக்கும் போது அவருக்கு என்ன கவலை?
அத்தோடு இத்தனை நாட்களாய் அவளை நெருங்க முயன்று தோற்றவருக்கு அவளின் மீது வன்மமும் அதிகரித்திருந்தது.
அதனால் அவள் பேசிய அடுத்த கணமே “ஏன்டி ஒரு வழியா உனக்கு மனசு வந்து எனக்கு கூப்பிடணும்னு தோணிருச்சு போலே…உனக்கெல்லாம் கொஞ்சம் கூட நன்றியுணர்வே இல்லையா?” என வெஞ்சினத்துடன் கேட்ட விஜயலட்சுமியின் குரல் நக்கலாகவும் இணைந்து ஒலித்தது.
அவரின் குரல் கேட்டு அதிர்ந்த முகிழ்மதி “அ..ம்மா” என திக்கி திணறி அழைக்க,
“ஆமா..ஆமா அம்மா தான்…ஏன்டி கல்யாணம் பண்ணிட்டு போனதும் தான் போனே…புருஷனை பார்த்தவுடனே பொறந்த வீடு மறந்துப்போச்சாடாடி உனக்கு?அப்படியொரு மயக்கமா?” என எடுத்த எடுப்பிலே அவர் அமிலத்தை வாரி இறைத்தார்.
அதைக்கேட்டு வலியில் அவள் முகம் சுருங்கிவிட்டன.
அவளோ மன வேதனை தாளாமல் “அ…ம்மா…” என்றாள் அழக்குரலில்…
அவளின் அழுகையில் சட்டென சுதாரித்தார் அவர்.
சந்திரமதியை இழந்ததுப்போல் கைக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தை இழக்கக்கூடாது என எண்ணினார்.
“சரி…சரி அழுது கிழுது தொலையாதே…எனக்கு கேட்கவே சகிக்கலை” என முகத்தை சுழித்தார்.
அவளும் தன் கண்ணீரை துடைத்து “என் மேலே கோபமாம்மா?” என பாவமாக கேட்க,
அதற்காகவே காத்திருந்த விஜயலட்சுமியோ “பின்ன கோவமில்லாமல் எப்படிடி இருக்கும்?கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதோட சரி…அதுக்கு பொறவு ஒரு போனு இல்லை…நானே கூப்பிட்டாலும் போனு போவ மாட்டிக்குது…சரின்னு நேருலே வந்தாலும் யாரும் எங்களை உள்ள விடமாட்டகிறாங்க?நாங்க என்னத்த நினைக்கிறது?நீ எங்களை எல்லாம் தலைமுழுகிட்டு புருஷனே கதின்னு கிடக்கறேன்னு நினைச்சிட்டேன்…” என சந்தடி சாக்கில் அவளின் மீது வன்மத்தை கக்கினார்.
அவளோ அவரது நேரடி குற்றச்சாட்டில் கவலையுற்று “அம்மா அப்படியெல்லாம் இல்லம்மா…நீங்க நம்பலைனா அவர்கிட்ட கூட கேளுங்க…அவர் கூட அக்காவை சமாதானப்படுத்தி கூடிய சீக்கிரம் உங்களையெல்லாம் இங்க கூட்டிட்டு வர்றேனு எனக்கு வாக்கு கொடுத்திருக்காரு…அப்படி இருக்கும் போது நான் எப்படிம்மா உங்களை மறப்பேன்…நானும் தினமும் உங்களுக்கெல்லாம் போன் போட்டு போட்டு பார்த்து வேற வழியில்லாமல் தான் அத்தை போனை வாங்கி இன்னைக்கு கூப்பிட்டேன்…என் ஃபோனிலிருந்து உங்களுக்கு ஃபோனு போக மாட்டிக்குது…ஏதோ பிரச்சனை போலேம்மா” என குரல் தழுதழுக்க அப்பாவியாக சொன்னவள்,
“எனக்கு நீங்க வந்ததே தெரியாதும்மா…செக்யூரிட்டிக்கு உங்களை எல்லாம் நல்லா தெரியுமே?அவங்க ஏன் உங்களை உள்ளவிடலை” என வேதனை தொய்ந்த குரலில் பொறுமையாக கேட்க,
அவருக்கு இப்போது ஒன்று நன்றாகவே புரிந்துப்போனது.
அவளின் பேதைத்தனத்தை தனக்கு சாதகமாக மாற்றி அவர் விளையாட எண்ணியிருக்க,ஆனால் அவளின் மடமையை வைத்து ரத்தினவேல் விளையாடியிருக்கிறான் என்று தெரிந்தது.
அதையறிந்ததும் அவரின் நெஞ்சம் வஞ்சத்தில் கொதித்தது.
‘அவளை வைச்சு என்கிட்ட விளையாட நினைச்சயில்லை…இப்போ பாரு உன் விரலை வைச்சே உன் கண்ணை குத்தறேன்டா’ என குரூரமான திட்டத்தை தீட்டியவர்,அதற்கு ஏற்றாற் போன்று முகிழ்மதியிடம் பேச ஆரம்பித்தார்.
அதுவரை இருந்த அவரின் பாவனை முற்றிலும் மாறிவிட “கண்ணு இப்போ தான் புரியுது…இது எல்லாத்துக்கும் காரணம் உன் புருஷன் தான்மா…உன்னையும் எங்களையும் பிளான் பண்ணி பிரிச்சிட்டாரு…” என மொத்த பழியையும் தூக்கி அவன் மீது சுமத்தினார்.
அவளின் வாழ்விலிருந்து அவரை அவன் அகற்ற முயல,அதையே அவனிற்கு செய்து அவனை வலிக்க வைக்க தந்திரமாக செயல்பட்டார்.
ஆனால் முகிழ்மதியோ அவர் கூறியதை சிறிதும் நம்பவில்லை.
ஏனெனில்,அவளின் கணவனை பற்றி அவள் நன்கு அறிவாள்.
அதனால் அவளின் தாய் கணவனின் மீது பழி சுமத்துவதை ஏற்க முடியாமல் மௌனம் காத்தார்.
அவளின் அமைதி அவரை உசுப்பி விட ‘புருஷன் மேலே அம்புட்டு நம்பிக்கையா?’ என இகழ்ச்சியாக எண்ணியவர் அவளிடம் அதே கடுப்புடன் “அடியே ஏன்டி இப்படி மக்கு மண்ணாந்தையா இருக்கே?நல்லா யோசிச்சு பாரு…நாங்க யாருனு தெரிஞ்சும் எங்களை வீட்டுக்குள்ள விடவே இல்லை…அதே மாதிரி மறு வீட்டுக்கு அழைச்சிட்டு போறதை பத்தி பேச உங்க மாமியார் வீட்டுக்கு கூப்பிட்டேன்…அவங்களும் என் போனை எடுக்கவே இல்லை…இன்னும் நல்லா யோசிச்சு பாரு…உன் போனிலிருந்து வராத போனு எப்படி உன் மாமியா போனிலிருந்து வந்துச்சு…இதிலே உனக்கு தெரியலையாடி?நீ ஒரு பக்கம் மக்கா இருக்கே…இந்தா இந்த உன் அக்காக்காரி ரூமூக்குள்ள அடைஞ்சே கிடக்கிறாள்.வெளிய வந்தே பல நாளாச்சு ஆருக்கிட்டயும் பேசறதில்லை” என வராத அழுகையை வரவழைத்து அவர் கண்ணீர் சிந்தியதும் முகிழ்மதியின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.
அகமுடையானை பற்றிய அவரின் குற்றச்சாட்டை ஒதுக்கி தள்ளியவளால்,சந்திரமதியின் நிலையை எளிதாக கடக்க முடியவில்லை.
சந்திரமதிக்கு ஒன்று என்றால் அவள் துடித்துவிடுவாள் என்பது தெரிந்தே,அவளை வைத்து வலையை விரித்தார்.
அவர் விரித்த வலையில் வசமாக சிக்கியது அந்த பட்டாம்பூச்சி!
“என்ன அம்மா சொல்லறீங்க?அ…க்கா…” என பேசமுடியாமல் திணற,
“ஆமாடி உன் அக்கா அன்னைக்கு ரூமுக்குள்ள போனவ தான் இன்னும் வெளியவே வரலை…காலேஜுக்காவது போ கண்ணுனு சொன்னால் ‘என் வாழ்க்கையே போச்சு’னு இடிஞ்சுப்போய் உட்கார்ந்திருக்காள்…அந்த அளவு மாப்பிள்ளையை அவ விரும்பியிருக்காள் போலே…” என அலைப்பேசியின் வழியே வராத கண்ணீரை துடைப்பது போல் அவர் பேச,
முன்பே தமக்கையின் வாழ்வை பறித்துவிட்டமோ என்ற குற்றவுணர்வில் தவித்த முகிழ்மதிக்கு இப்போது நெஞ்சே அடைத்துவிட்டது.
அவளுக்குள் ஒரு சூறாவளியே வீசிக்கொண்டிருக்க,அதன் சீற்றத்தை அதிகரிக்கும் விதமாக “உன் புருஷனுக்கு நீ எங்களோட பேசறதே பிடிக்கலை கண்ணு…அதான் இப்படியெல்லாம் செய்யறாருனு நினைக்கிறேன்” என்று கூறி அவனின் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்ததோடு மேலும் “உனக்கு தெரியுமா தெரியாதுன்னு எனக்கு தெரியலை…இனி எப்போ பேசுவனோ?உங்க அப்பாவோட நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சுடி…கட்சியை விட்டு எடுத்திட்டாங்க…கம்பெனியும் கைநழுவிப்போற மாதிரி தான் இருக்கு…இன்னும் கொஞ்ச நாளிலே நாங்க நடுத்தெருவுக்கு வரப்போறோம்னு நினைக்கிறேன்…எங்களுக்கு எங்களை நினைச்சு கூட கவலையில்லை…ஆனால் உன் அக்கா சொகுசா வாழ்ந்தவே?அவளும் எங்களோட நடுத்தெருவிலே நிப்பான்னு யோசிக்கும் போதே மனசு கிடந்து வாட்டுதுடி…சரி எங்களை விடு…உன் புருஷனுக்கு தெரிஞ்சா திட்டப்போறாரு…நீ நல்லாயிருந்தால் எங்களுக்கு அதுவே போதும்…சரி நான் வைச்சிடறேன்…அப்போ அப்போ அம்மாவுக்கு போனை போட்டு பேசு” என நயவஞ்சகமாக பேசி சிறிது சிறிதாக அவளின் மனதில் நஞ்சை கலக்கினார்.
தனக்கு எதிராக திட்டம் திட்டிய ரத்தினவேலுவின் வாழ்க்கையை நிர்மூலமாக அவள் எண்ணிவிட்டார் போலும்!
தாயின் பேச்சை கேட்கும் போதே அவளின் மேனியெங்கும் ஊசியால் குத்திய பிணி உருவாகின.
‘ஏன் அவர் இப்படி செய்தாரு?அவரை எந்த அளவு நான் நம்பினேன்?’ என தனக்குள்ளே துடித்துப்போனவளிற்கு தமக்கை யின் நினைவு எழ “அம்மா அக்கா…” என அதற்கு மேல் அவளை பற்றி பேசமுடியாமல் தொண்டை அடைத்தன.
“அவளுக்கு உன்கிட்ட பேச விருப்பமில்லையாம்…அவ வாழ்க்கையை நீ பறிச்சிட்டேன்னு செம்ம கோவத்திலே இருக்காள்…நீ அவளை பத்தி யோசிக்காதே…நீ நல்லாயிரு” என அவளை வார்த்தைகளை குத்தி குத்தி மனதை ரணமாக்கிவிட்டே அலைப்பேசியை துண்டித்திருந்தார்.
அவளோ தன்னவனின் மற்றொரு சுயரூபம் அறிந்து உடைந்து நொறுங்கிப்போய் அமர்ந்து விட்டாள்.
அவனின் மீது அவள் மலைப்போல் நம்பிக்கை வைத்திருந்தாள்.ஆனால் இன்றோ அவனை பற்றி அவள் செதுக்கி வைத்திருந்த பிம்பம் எல்லாம் உடைந்து நொறுங்கிப்போனதை அவளால் ஏற்கவே முடியவில்லை.
மற்றொரு புறம் கணவனை தவறாகவும் அவளால் சித்தரிக்க முடியவில்லை..
அவளிறிந்த வகையில் அவளிடம் அன்பாக நடந்துக்கொள்ளும் ஒரு சிறந்த கணவன் அவன்..
ஒவ்வொருவருக்காகவும் யோசித்து செயல்படும் உயர்ந்த மனிதன்…
அரசியல்,குடும்பம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொறுப்பானவன்!
அதனால் அவளின் தாய் கூறியதை முழுமையாக ஏற்க முடியாமல் அவள் உள்ளம் தவித்தது.
‘இல்லை…அவர் அப்படியில்லை…அம்மா ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க’ என அவனிற்கு சாதகமாக அவளின் மனசாட்சி அவளை சமாதானம் செய்தாலும்,தமக்கையை பற்றி தாய் உரைத்த விடயம் அவளை அவமானத்தில் குறுக வைத்தது.
‘இது தனக்கான வாழ்வே இல்லை…இது தமக்கை வாழ வேண்டிய வாழ்க்கை…நான் அவளிற்கு பதிலாக வந்தவள்…தன்னவனின் கம்பீரத்திற்கும் பதவிக்கும் நான் ஏற்றவளே இல்லை’ என இவ்வாறெல்லாம் அவளின் சொந்த மூளையே அவளை குழப்பி கலங்கடித்திருந்தது.
அனைத்தையும் மறந்துவிட்டு கணவனோடு பின்னி பிணைந்ததை பற்றி எண்ணும் அவளிற்கு அசிங்கமாக இருந்தது.
‘இல்லை…இது எனக்கான வாழ்வே இல்லை…அங்க என் குடும்பம் கஷ்டப்பட்டுட்டு இருக்கும் போது நான் எப்படி சந்தோஷமா வாழ முடியும்…வேணாம் எனக்கு இந்த வாழ்க்கை..’ என தனக்குள்ளே ஏதேதோ பேசி மருகியவள்,இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தாள்.
அவளின் பைத்தியக்காரத்தனமான அந்த முடிவு ரத்தினவேலை அடியோடு வீழ்த்தி,அவளின் மீது அவனிற்குள் வெறுப்பை கொண்டு வரும் என்று அவள் கனவிலும் சிந்திக்கவில்லை.