முகிழ்மதி 19

ரத்தினவேல் தன்னுடைய உரையாடல் யாவரின் காதுகளுக்கும் செல்லக்கூடாது என்பதற்காக மண்டபத்தின் பின் வாசலை நோக்கி சென்றான்.
அவனை பின்தொடர வந்த பாதுகாவலர்களிடம் ஒற்றை கைநீட்டி தடுத்து நிறுத்திவிட்டு அவன் அந்த தோட்டத்திற்குள் சென்றிருந்தான்.
பின்னால் அடர்ந்து வளர்ந்திருந்த தென்னை மர தோப்பிற்குள் நுழைந்த ரத்தினவேல் தனது நண்பன் வீரின் எண்ணிற்கு அழைத்தான்.
எதிர்ப்புறம் வீர் அலைப்பேசியை எடுத்ததும் ரத்தினவேலின் முகம் தீவிரமடைந்தது.
“வீர் எங்கியிருக்கே நீ?” என்று கேட்டவனின் குரலில் அப்படியொரு கடுமை!
ஏனெனில்,இப்போது அவன் எங்கு சென்றிருக்கிறான் என்பதை ரத்தினவேல் அறிவான்.
வீரும் தோழனின் கோபத்திற்கான காரணத்தை நன்கு அறிந்திருந்தான்.
அதனால் ஒரு முறை தொண்டையை செருமி “பூபதி நான் டிரேஸ் பண்ணதிலே எனக்கு ஒரு டிப் கிடைச்சிருக்கு…அங்க தான் நான் போயிட்டு இருக்கேன்” என ஜீப்பை ஓட்டிக் கொண்டே அவன் தகவல் கூற,
அவன் கூறியதை கேட்டு பெருஞ்சினமுற்றான் மற்றவன்.
சட்டென ரத்தினவேலின் முகம் இறுகிவிட “என்ன பைத்தியக்காரத்தனம் இது வீர்?உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?நீ என்ன பண்ணிட்டு இருக்கே?நீ எதுக்கு தனியா கிளம்பினே?” என கோபத்தில் இரைந்தான்.
வீரோ அவனிற்கு சற்றும் குறையாத சீற்றத்துடன் “ஒருத்தன் நம்ப வீட்டுப்பொண்ணையே தூக்க துணிஞ்சிருக்கான்…அவனை நான் சும்மா விட்டிருவேனா பூபதி?அவனையெல்லாம் என் கையாலே துடிக்க துடிக்க கொன்னால் தான் என் மனசு ஆறும்..” என குரலை உயர்த்தாமலே சற்று அழுத்தமாக கூறினான்.
இது தான் வீர்…ரத்தினவேலின் குடும்பத்தை யாரேனும் தொட நினைத்தால் அவர்களை உருத்தெரியாமல் அழிப்பதில் அசூரன் அவன்!
வீருக்கு எப்போதும் எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு நிதானம் இருக்கும்.
ஆனால் கோபம் வந்துவிட்டால் ரத்தினவேலிற்கு நிகரான ஆக்ரோஷமும் வலிமையும் கொண்டவனாகிவிடுவான் வீர்.
கோபத்தில் கூட வீரிடம் ஒரு அழுத்தம் இருப்பதை ரத்தினவேல் நன்கு அறிவான்.
இப்போது அந்த அழுத்தத்தை மீறிய சீற்றம் அவனது சொற்களில் வெளிப்பட “வீர் எல்லா விஷயத்துக்கும் எமோஷனலாகாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறது?எமோஷன் வந்தாலே காரியம் கெட்டுப்போகும்” என ரத்தினவேல் எச்சரிக்க,
வீருக்கோ அதன்பிறகே தன்னுடைய செயல் புத்தியில் உறைத்தது.
நேற்று திருமணத்திற்காக சில பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றிருந்த தமயந்தி சில மர்ம நபர்களால் கடத்தப்பட இருந்தாள்.
அவள் நினைத்திருந்தால் சொடுக்குப்போடும் நேரத்தில் அந்த பொருளை வீட்டிற்கு வரவழைத்திருக்க முடியும்.
ஆனால் அவளிற்கு சக மக்களோடு இணைந்து எளிமையான வாழ்வை வாழ்வதில் தான் விருப்பம்!
அதன் பொருட்டே யாரிடமும் கூறாமல் தனது தோழி ஒருத்தியை அழைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக வெளியே சென்றிருந்தாள்.
நல்லவேளையாக காவலர்கள் சிசிடிவி வழியாக அவளின் கள்ளமறிந்து வீரிடம் விஷயத்தை கூறியிருந்தனர்.
வீர் பதறிப்போய் சரியான நேரத்திற்கு சென்றதால் அவளையும் அவளின் உயிரையும் காக்க முடிந்திருந்தது.
அவளை கண் முன்பு காணும் வரையிலுமே அவனது ஜீவன் அவனிடமில்லை.
அவளை கடத்த முயன்ற ஆட்களை அவன் பிடிக்க நினைக்கும் போது அவர்கள் தப்பியிருந்தார்கள்.
நேற்று அந்த சம்பவம் வீட்டிலுள்ள யாவருக்கும் தெரியாது.
ரத்தினவேல்,வீர்,தமயந்தி மற்றும் அவளின் தோழி பெண் இவர்களை தவிர வேறு யாருக்கும் விஷயம் பகிரப்படவில்லை.
ஆனால் நேற்று அவளை கடத்த முயன்ற ஆட்களை பற்றி எண்ணினால் இப்போதும் அவனது இரத்தம் கொதித்தது.
“பூபதி நீ சொல்லறது புரியுது…பட் தமயந்தி சின்னப்பொண்ணு…அவளை போய் கடத்திட்டு போக பார்த்திருக்காங்க…அவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?அவனுங்க ஒருத்தனையும் நான் சும்மா விடமாட்டேன்…இதுக்கு காரணம் யாருனு கண்டுப்பிடிச்சு அவனுங்க எல்லாரையும் என் கையாலே கொன்னா தான் என் மனசு ஆறும்” என்றான் சீற்றம் குறையாத குரலில்.
தனது தங்கையின் மீது அவன் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி ரத்தினவேலின் நெஞ்சம் கனிந்தது.
அதனால் ரத்தினவேல் தன் குரலை தாழ்த்தி “வீர் உன் மேலே எனக்கு நம்பிக்கையிருக்கு…உனக்கும் அவ தங்கச்சி மாதிரி தான்…அதனாலே தான் லட்டு விஷயத்தை என்னை விட நீ நல்லா ஹேண்டில் பண்ணுவேன்னு உன்கிட்ட ஒப்படைச்சேன்” என்றதும் எதிர்புறமிருந்த வீரிடம் ஒரு ஆழ்ந்த மௌனம்!
அவனிற்கு தோழனிடம் என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.
அவனின் நெஞ்சிலோ ஒரு குற்றவுணர்வு!
ஏனெனில்,தமயந்தி அவனை தமையனாக நினைவில்லை.
அவன் மீது காதல் கொண்டு அவனின் பின்னோடு சுற்றி திரிகிறாள்.
அவனிற்கோ சிறு வயதிலிருந்து தன்னோடு வளர்ந்த பெண் என்ற பாசம் இருந்ததே ஒழிய,அவனிற்கு துளியும் நேசமில்லை.
இருப்பினும்,நண்பனின் வார்த்தைகள் அவனது இதயத்தை குத்தி கிழித்தன.
அவனிடம் நிஜத்தை மறைப்பதினால் உண்டான அழுத்தம் ஏனோ அவனிற்கு துரோகம் செய்வது போன்ற ஒரு உணர்வை கொடுத்தன.
ரத்தினவேலிற்கோ கயவர்களை தனியாக சந்திக்க செல்லும் நண்பனின் நலனே முதன்மையாக தெரிந்தன.
அதனால் ரத்தினவேல் “வீர் அங்க ஆளுங்க எத்தனை பேர் இருப்பாங்கனு தெரியலை…நீ தனியா போக வேணாம்…கூட நம்ப ஆளுங்களை கூட்டிட்டு போ” என்றான் கட்டளையாக.
வீரோ இப்போது ஒரு பெருமூச்சுடன் “சரி பூபதி” என்றான் சுரத்தேயில்லாத குரலில்.
அவனது குரலின் பேதமறிந்து ரத்தினவேலின் புருவம் சுருங்க “எனிதிங் பிராப்ளம் வீர்?” என கேட்க,
உடனே சுதாரித்த வீர் “சாரி பூபதி…உன் என்கேஜ்ஜுமெண்ட்டுக்கு என்னாலே வர முடியாதுனு நினைக்கிறேன்…ஃபோன் கால் வந்ததும் எதை பத்தியும் யோசிக்காமல் கிளம்பிட்டேன்” அச்சமயத்தில் தோன்றிய ஒரு காரணத்தை கூறி சமாளித்தான்.
இப்போது ரத்தினவேலோ தாடி மீசையை நீவிவிட்டப்படி “இட்ஸ் ஓகே…இது ஒண்ணும் அவ்வளவு இம்பார்டென்ட் இல்லை” என்றான் அலட்சியமாக.
அவனை பொறுத்தவரை இந்த திருமணம் சிவராமனை பழிவாங்கும் படலம் மட்டுமே?
அதனால் அவனிற்கு இந்த திருமணம் ஒரு வேண்டாத குப்பை தான்!
ஆனால் வீரோ “பூபதி என்ன சொல்லறே நீ?” என குழப்பமாக கேட்க,
அவனோ எள்ளலாக இதழை வளைத்து “நத்திங் நீ காரியத்தை முடிச்சிட்டு எனக்கு ஒரு கால் பண்ணு” என்றவன்,
அலைப்பேசியை வைப்பதற்கு முன்பு “வீர் திஸ் இஸ் ஆர்டர்…தனியா நீ போகக்கூடாது…அப்படி நீ தனியா போனது தெரிஞ்சது உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியுது…காட் இட்” என குரலை உயர்த்தி அவன் ஆணையிட்டான்.
அவன் ஆணை போல் பிறப்பித்தாலும் அதில் அவனின் மீதான அக்கறையே மிகைந்திருந்தது.
‘உயிருடன் திரும்பி வரவேண்டும்’ என்ற மறைமுக கட்டளை அது!
தோழன் தன் மீது வைத்திருக்கும் அன்பில் நெகிழ்ந்த வீர் “ஓகே பூபதி…நீ சொல்லி நான் எதையாவது நான் மீறியிருக்கேனா?அதையும் மீறி என் உயிர் போனாலும் பரவாயில்லை…உங்க குடும்பம் மட்டுமில்லைனா இந்த வீரே இல்லை பூபதி” என கரகரத்த குரலில் பேசியவனின் கரத்தில் ஜீப் ஒரு கணம் தடுமாறி பின்பு நேரானது.
அவனது விழிகள் கூட இலேசாக கலங்கி விட்டன.
இங்கு ரத்தினவேலோ “ப்ச் இப்படி பேசாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறது வீர்?” என குரலுயர்த்தி அதட்ட,
மற்றவனோ “நடந்ததை எப்பவும் மறக்கக்கூடாது பூபதி…” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“ஆரம்பிச்சிட்டியா?” என நெற்றியை நீவி சலித்தான் ரத்தினவேல்.
அவன் பேச்சை கேட்டு வீரின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
“ஃபைன் வீர்…அப்புறம் உனக்கு இன்னொரு ஆர்டர்…என் குடும்பத்தை தொட்டு என்னை வலிக்க வைக்க நினைச்சானில்லை…அவன் யாருனு எனக்கு தெரியணும்…அந்த நாயுங்க எல்லாம் சாதாரணமா சாகக்கூடாது…ஏன்டா இந்த ரத்தினவேலை தொட நினைச்சோம்னு அந்த பிளடி ஸ்கௌண்டரல்ஸ் துடி துடிச்சு சாகணும்” என்றவனின் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது என்றால்,அவனது பேச்சில் குரோதம் வெளிப்பட்டது.
அவன் பேசிய தோரணை நண்பனான அவனையே ஒரு கணம் நடுங்க செய்தது என்றால் மிகையாகாது.
அவனிற்குள்ளும் கோபம் முகிழ்ந்திருந்ததால் “கண்டிப்பா பூபதி” என அவனின் கருத்தை ஆமோதித்து அழைப்பை துண்டித்தான்.
அழைப்பை துண்டித்த வீரின் வலது கரம் தன் இடையில் சொருகியிருந்த துப்பாக்கியை ஒரு முறை வருடிக்கொண்டது.
அதுவே அவர்களை பகைத்துக்கொண்ட உயிர்கள் அனைத்தையும் மண்ணில் சரிய வைக்கும் என்பதை எடுத்துக்காட்டின.
நண்பனிடம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்த ரத்தினவேலின் நெஞ்சிலும் கோபம் கனன்றன.
தன் கோபத்தை அடக்குவதற்காக கைமுஷ்டியை இறுக்கி தன் தொடையிலே குத்திக்கொண்டான் அவன்.
அவனிற்கே நடப்பது எதுவும் சரியாக இருப்பது போல் தோன்றவில்லை.
அதில் முதல் விடயம்,அவனது திருமணம்…
இரண்டாவது,திடீரென்று அவர்களது குடும்பத்தை அழிக்க எண்ணும் அந்த முகமறியா பகைவன்.
முதலில் இது அரசியல் பகையென்றே அவன் எண்ணியிருந்தான்.
ஆனால் இப்போது அவனிற்கு அவ்வாறு தோன்றவில்லை.
ஏனெனில்,தமயந்தியை கடந்த முயன்றது இது முதல் முறையல்ல…இத்தோடு மூன்றாவது முறை அவளை கடத்த முயற்சி நடந்திருக்கிறது.
‘மற்றவர்களை விட்டு தமயந்தியை மட்டும் தாக்க முற்படுவது ஏன்?’ என அவனின் மனதிற்குள் எழுந்த கேள்விக்கான விடை அவனிற்கு கிடைக்கவில்லை.
இதற்கெல்லாம் மேலாக அவனை படாய் படுத்தி எடுத்தது என்னவோ முகிழ்மதி விடயமே!
ஏனோ அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுள் தோன்றும் உணர்வுகளை அவனால் அடக்கவே முடியவில்லை.
அவனின் இயல்பு தொலைவதும் அவனின் உணர்வுகள் வெளிப்படுவதும் அவளிடம் மட்டும் தான்!
அதற்கான காரணம் அவனறிந்தும் அவளை அவனது வாழ்விலிருந்து அகற்ற முடியாமல் தவித்தான்.
இவ்வாறு பல வகையில் குழம்பி நின்றிருந்த ஆடவனின் கவனத்தை கவர்ந்தது அவனது அலைப்பேசியின் அழைப்பு!
பாட்டி என்றதும் அதனை தவிர்க்க முடியாமல் எடுத்து பேசினான்.
“கண்ணா முகூர்த்தத்துக்கு நேரமாச்சுப்பா…கோவிலுக்கு கிளம்பணும் வா” என்று அழைக்க,
அவனோ சிகையை அழுந்தக்கோதி “இதோ வர்றேன் பாட்டி” என வெற்று குரலில் கூறியப்படி முகிழ்மதியை பற்றி எண்ணிக்கொண்டே மண்டபத்தை நோக்கி நடந்தான்.
அவன் திரும்பி வந்துக்கொண்டிருந்தபோது,தூரத்தில் யாரோ இருவரின் உருவங்களை கண்டான் ரத்தினவேல்.
அவர்கள் வெகு தொலைவில் இருந்தப்போதும் ரத்தினவேலின் கூரிய விழிகளுக்கு அனைத்தும் தெள்ள தெளிவாக தெரிந்தது.
அதுவொரு ஆணும் பெண்ணும் என்பதை ஆழ்ந்து நோக்கி அறிந்த ரத்தினவேலின் விழிகளில் திடீரென்று சிவப்பேறியது.
சற்று முன்பு விழி எடுக்காமல் அவன் பார்த்து ரசித்த அதே பெண்ணின் பிம்பம் அது!
அதிலும்,அந்த பெண் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற பட்டுப் புடவை மற்றும் அலங்காரங்கள் அது ‘யார்’ என்பதை அவனிற்கு வெளிச்சமிட்டு காட்டியிருந்தன.
அவனது சிந்தனையின் நாயகி முகிழ்மதி அவள் என்று அறிந்தான்.
அவள் தான் என்று அவனின் மூளை உறுதிப்படுத்தியதும் அவன் அவளை தவறாக எதுவும் எண்ணவில்லை.
பெண்ணவளிற்கு ஏதேனும் ஆபத்தோ என்னும் வகையில் மட்டுமே அவன் சிந்தித்தான்.
அதனால் சினத்தோடு அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவனின் நடை அடுத்த கணமே நின்றுவிட்டது.
தூரத்திலிருந்து இருவரும் முத்தமிடும் காட்சியை கண்ட ரத்தினவேலின் தேகம் இறுகி விட்டது.
வெடுக்கென்று முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டவனின் தலையில் யாரோ கூடைத்தணலை கொட்டியது போல் தேகம் தகித்தன.
அவனது உடம்பிலுள்ள ஒவ்வொரு நாடி நரம்புகளும் ஆக்ரோஷத்தில் புடைத்தன.
அப்போதும் அவனது மூளை அவன் பார்த்த காட்சிகளை நம்ப மறுத்தது.
‘இல்லை…நான் பார்த்தது உண்மையில்லை’ என்றெண்ணி மீண்டும் அவன் அந்த பக்கமாக திரும்பிப்பார்த்தான்.
ஆனால் அவனது நினைப்பை பொய்யாக்கும் விதமாக அந்த பெண்ணும் ஆணும் முத்தமிட்டு கட்டியணைத்திருக்க,அதனை சில வினாடிகளுக்கு மேல் காண முடியாமல் கைமுஷ்டி இறுக விழி மூடியவனிற்கு உதிரம் கொதித்தன.
அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமற்று விறுவிறுவென ரத்தினவேல் நடந்து சென்றுவிட்டான்.
அவன் இன்னும் சில நிமிடங்கள் நின்று கவனித்திருந்தால் அந்த ஆடவன் அவளை பலவந்தப்படுத்தி முத்தமிடுவதை அறிந்து,அவளின் பெண்மையை காத்திருக்கலாம்.
விதி வலியது…நடந்தே தீர வேண்டும் என்னும் நிகழ்வு கண்டிப்பாக எவர் தடுத்தாலும் நடந்தே தீரும்.
மீண்டும் மண்டபத்திற்கு வந்த ரத்தினவேலிற்கு ஆத்திரமென்றால் அப்படியொரு ஆத்திரம்!
இந்த உலகத்தையே எரிக்கும் அளவு ஒரு ஆவேசம் அவனுள்!
இயல்பாகவே அவனது முகம் அழுத்தமாக இருக்கும்.
இப்போது அழுத்தத்தை மீறிய ஒரு இறுக்கம் அவனிடத்தில்!
வெகுளி,ஏமாற்றம்,அருவருப்பு,ஆவேசம்,துரோகம் என அனைத்து வகையான உணர்வுகளும் அவனுள் மூட்டி மோதின.
அவனது விழிகள் இரண்டும் சிவந்திருப்பதை கவனித்த அவனது பாட்டி “என்னாச்சு கண்ணா?” என ஆதுரத்துடன் விசாரிக்க,
அவனோ “ஒண்ணுமில்லை…போகலாம்” என எவ்வித உணர்வின்றி கூறிவிட்டு வேகமாக முன்னேறி நடந்தவனின் உள்ளக்கொதிப்பு அடங்க மறுத்தது.
அவன் திருமணம் செய்துக்கொள்ள போகும் சந்திரமதி சுயரூபம் அறிந்த சமயம் கூட அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
தேவதையாக மனதிற்குள் வரித்து வைத்திருந்தவளின் விம்பம் ஒரு கணத்தில் உடைந்து நொறுங்கிப்போனதை அவன் ஏற்க முடியாமல் தடுமாறினான்.
ஆடவனது முகத்தை வைத்தே அவனது குடும்பத்தினருக்கு எதுவோ சரியில்லை என்று புரிந்தது.
அதனால் அவர்களின் முகத்திலும் இருள் படிய ஆரம்பித்தது.
அவனது தாடை இறுகியே இருந்தாலும் அவனிற்குள் சற்று முன்பு பார்த்த காட்சியே திரைப்படம் போல் ஓடிக்கொண்டிருந்தது.
அவற்றினை நினைக்க நினைக்க அவனின் உள்ளம் கொதித்தது.
“அண்ணா உட்காருங்க” என ஜித்தேந்திரன் அவனை அமர சொல்ல,
ரத்தினவேல் அவனை திரும்பி பார்த்த பார்வையில் சட்டென அவன் பின் வாங்கினான்.
‘காட்…என்ன இந்த அண்ணா ஐய்யனாரு மாதிரி என்னை பார்வையிலே எரிக்கறாரு’ என மிரட்சியில் அவன் எச்சிலை கூட்டி விழுங்கினான்.
எரிமலையிலிருந்து வெடித்து சிதறிய நெருப்பு பிழம்பு போல் நின்றவனை நெருங்க அவனது தாயே அஞ்சினார்.
அங்கிருந்த பலரும் தங்களுக்குள் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.
அச்சமயம் “பையன் வந்திட்டாரு…பொண்ணு எங்கே? பொண்ணையும் கூட்டிட்டு வந்திட்டால் நிச்சய பத்திரிக்கைய வாசிக்கலாம்” என புரோகிதர் குரல் கொடுத்ததும்,
“தமயந்தி போய் அண்ணிய கூட்டிட்டு வா” என காஞ்சனா மாலா அவளிடம் கண்ணை காட்ட,அவளோ “சரி” என்று தலையசைத்து வருங்கால அண்ணியை அழைத்து வந்தாள்.
அங்கிருக்கும் அனைவரையும் அசரடிக்கும் வகையில் அரக்கு நிற பட்டுப்புடவையில் தயாராகி வந்த மணமகளை பார்த்த அனைவரின் விழிகளும் விரிந்தன.
வஞ்சியவளின் கொடி இடை தொடங்கி,அவளின் ஒட்டுமொத்த எழில் வளைவுகளும் அவளை பேரழகியாய் காட்டின.
பதின்ம பருவத்திற்கே உரிய பளபளப்பான மேனி அவளிற்கு!
பிரம்மன் செதுக்கிய சிற்பம் போல் நடந்து வந்தவளின் செவியில் “அண்ணி அண்ணா பயங்கர கோபத்திலே இருக்காங்க…நீங்க ஏதாவது கோபப்படுத்திட்டிங்களா?” என கிசுகிசுப்பான குரலில் கேட்க,
அவளோ ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.
அவளும் ஏதோ பதட்டத்துடன் இருப்பது போல் தமயந்திக்கு தோன்றிட “ரிலாக்ஸ் அண்ணி” என அவளின் கரம் பற்றி ஆறுதல் அளித்தாள்.
அவளின் கரம் வழக்கத்திற்கு மாறாக சில்லென்று இருந்தது.
அதனை தமயந்தி புருவம் சுருக்கி பார்க்க,அதற்குள் விஜயலட்சுமி அவளை நெருங்கி “என் தங்கம் செம்ம அழகுடி” என அவளை அணைத்து முத்தமிட,
பாவையவளோ ஒன்று பேசாமல் மௌனம் காத்தாள்.
அவளின் இதயம் மட்டுமே ஏனோ நழுவி சென்றது.
“வா கண்ணு” என மகளை அவரே அழைத்து சென்று ரத்தினவேலின் அருகே நிற்க வைத்தார்.
அவனருகே நின்றதும் அவளின் மேனி இன்னும் அதிகமாக தடதடக்க தொடங்கின.
பெண்ணவள் அவனருகே நின்றதை கூட அறியாமல் கொதித்துக்கொண்டிருந்தான் அவன்.
அவனை அணைத்து குளிர வைக்கக்கூடிய பெண் அவள் ஒருத்தி மட்டும் தான்!
அவனது ‘ஸ்டார்’.
இப்போது முகிழ்மதி!
ஆனால் அவனது கோபத்தை அமிழ்த்த வேண்டிய முகழ்மதி,அவனது சின உணர்வுகளை முகிழ்த்த காரணமாகியிருந்தாள்.
இப்போது அவனை கட்டுப்படுத்த ஆளின்றி அவன் அனலாய் தகித்துக்கொண்டிருந்தான்.
எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவன்,இன்றோ வெண்ணிற சட்டை மற்றும் சாம்பல் நிற கால்சராய் அணிந்து தயாராகியிருந்தான்.
இருவருக்குமிடையே இருந்த உயர வித்தியாசம் சற்று அதிகமாக இருந்தாலும்,இருவரின் அழகும் தோற்றமும் நன்றாக பொருந்தியிருந்தது.
வந்திருந்த அனைவரும் மணமக்களின் ஜோடியை ரசித்தார்கள்.
ஆனால் அவனது உஷ்ண முகம் ‘இந்த நிச்சயத்தார்த்தம் நடக்குமா?’ என்ற சந்தேகத்தை மற்றவர்களுக்கு வரவழைத்தது.
இரு குடும்பத்தினரும் வயிற்றில் நெருப்பை கட்டி காத்திருக்க,காஞ்சனா மாலாவோ காரியத்தை கையிலெடுத்தார்.
காஞ்சனாவின் கட்டளையின் பெயரில் நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட,இரு வீட்டு பெரியவர்களும் தட்டை மாற்றிக்கொண்டனர்.
அவனின் கவனமோ அங்கு நடந்த எதிலும் பதியவில்லை.
அங்கிருந்த அனைவரும் பதட்டத்தில் மணமகளின் சகோதரியை தேடியிருக்கவில்லை.
நிச்சய பத்திரிக்கை வாசித்து முடித்ததும் “பூபதி பொண்ணுக்கு மோதிரம் போட்டு விடு” என அவனின் தந்தை கூறியதும்,
அதுவரை வேறொரு உலகத்திற்கு பயணமாகியிருந்த ரத்தினவேல் நடப்பை உணர்ந்தான்.
அவனிற்கு அனைத்தையும் அடித்து நொறுக்கும் வெறி இருந்தாலும் தற்சமயம் தனது கோபத்தை விட வீரியமே பெரிது என்று கருதி மோதிரத்தை கையில் எடுத்துக்கொண்டான்.
மோதிரத்தை அவள் விரல்களில் அணிவிக்க திரும்பிய ரத்தினவேல் ஒரு கணம் நிதானத்தான்.
பின்பு ‘என்ன நினைத்தானோ?’ அவளின் கரம் பற்றி மோதிரத்தை அணிவித்திருந்தான்.
முகிழ்மதி 20

நள்ளிரவு ஒரு மணி வேளையில் தத்தமது அறையில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் திடீரென்று “அம்மா” என அலறியப்படி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்கள்.
இருவரின் வாழ்விலும் அன்று நடந்த விபரீத சம்பவங்கள் அவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவு அது!
இரட்டை சகோதரிகள் என்பதாலோ என்னவோ இருவரின் முகமும் ஒரே நேரத்தில் வெளிறி வியர்வை அரும்புகள் பூத்திருந்தன.
முதலில் விலுக்கென்று எழுந்து அமர்ந்த சந்திரமதி ஹரிஷை எண்ணி எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
இன்று அவளிடம் அவன் நடந்துக்கொண்ட முறையை பற்றி எண்ணும் போதே அவளின் அடிவயிறு பயத்தில் சுருண்டது.
தங்கையிடம் சிறிதுநேரம் தானாக நடிக்கும் படி கோரிக்கை வைத்தாள் பெண்ணவள்.
முதலில் மறுத்த முகிழ்மதி தமக்கை இறைஞ்சி கேட்டதும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாள்.
அதன்பிறகு அவளின் ஆடைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்துக்கொண்டு ஹரிஷை காண கிளம்பியிருந்தாள் சந்திரமதி.
அதேப்போல் தன்னுடைய ஆடை மற்றும் ஆபரணங்களை தங்கைக்கு அணிவித்தவள்,கவனமாக அவளின் மச்சத்தையும் ஒப்பனை கொண்டு மறைத்துவிட்டிருந்தாள்.
அவள் கிளம்பும் வேளையில் “அக்கா சீக்கிரம் வந்திடுவ தானே?” என முகிழ்மதி மிரட்சியோடு அவளின் கரம் பற்றி நிறுத்தியதும்,
“அம்மு ஜஸ்ட் டென் மினிட்ஸ் வந்திடறேன்…அதுவரைக்கும் வெயிட் பண்ணு…கொஞ்சம் பிரேவா ஆக்ட் பண்ணுடி…என் வாழ்க்கை உன் கையிலே தான் இருக்கு” என கன்னத்தை வருடி கெஞ்சிவிட்டு முகிழ்மதி போல் வேடமிட்டு வெளியேறி சென்றாள்.
ஆனால் அவள் வரும் வரை காத்திருந்த முகிழ்மதியின் இதயமோ திக்திக்கென அதிர்ந்தது.
அவளிற்கு தான் அச்சம் தோன்றினாலே மூச்சிறைக்க ஆரம்பித்துவிடுமே?
ஒரு வழியாக சுவாச உள்ளிழுப்பனை கொண்டு தன் பதட்டத்தை குறைத்துக்கொண்டாள் அவள்.
வெகு நேரமாக தமக்கைக்காக காத்திருந்தவளிற்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்!
கோவில் சன்னிதானத்திற்கு செல்லும் வரையிலும் சந்திரமதி திரும்பி வந்திருக்கவில்லை.
ஏனெனில்,அவள் அந்த கயவனின் கையில் வசமாக சிக்கியிருந்தாள்.
அவனை சிறையிட்ட அந்த வேடன் அந்த பெண் மானை தன் பிடிப்பிலே வைத்துக்கொண்டான்.
சந்திரமதி ஹரிஷிற்கும் அவளிற்குமான பந்தத்தை இறுதி முறையாக இன்றுடன் பேசி முடித்துவிட்டு வர வேண்டும் என்ற முடிவுடன் தான் அங்கு வந்தாள்.
ஆனால் காமூகனோ அவளை கண்ட நொடியே வாரியணைத்துக்கொண்டான்.
அதனை சற்றும் எதிர்பாராத சந்திரமதியோ அதிர்ச்சியில் சில கணம் உறைந்துப்போய்விட்டாள்.
நிச்சயமாக அவள் அவனிடமிருந்து இப்படியொரு செயலை எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் அவனிடமிருந்து சுதாரித்து விலகுவதற்குள் “பேபி…பேபி…” என குழைந்தப்படி அவளை முத்தமிட தொடங்கியிருந்தான் ஆடவன்.
அதை சற்றும் எதிர் நோக்காத காரிகைக்கு தூக்கிவாரிப்போட்டது.
இருவரும் நேசித்த சமயம் அவளும் அவனை முத்தமிட்டிருக்கிறாள் தான்.
அச்சமயம் இருவருக்குமிடையே காதலர்கள் என்ற பந்தம் இருந்தது.
ஆனால் இப்போது இருவருக்குமான பந்தம் முறிந்து பல நாட்களாகியிருக்க,அவன் அவளை முத்தமிட்டவுடன் அவளிற்குள் அருவருப்பான ஒரு உணர்வு தோன்றின.
அதிலும்,அவனை அவள் எதற்காக பிரிந்தாள் என்ற காரணங்கள் கண் முன் வந்து சென்றவுடன் “ஹரிஷ் விடுடா” என ஆவேசமாக அவனை விலக்கி தள்ளினாள்.
அவனை தன்னிலிருந்து விலக்கி தள்ளிய அடுத்த கணமே அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டிருந்தாள் சந்திரமதி.
அவன் தடுமாறி கீழே விழுந்துவிட்டிருந்தான்.
அவளிற்கு எங்கிருந்து அப்படியொரு கோபமும் ஆவேசமும் வந்ததோ தெரியவில்லை.
அவளின் மேனி ஆத்திரத்தில் சிவந்து வேகமாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தது.
பத்ரகாளியாய் தன் முன்னே நின்றிருந்தவளை அவன் கன்னத்தில் கைவைத்து மிரட்சியோடு பார்த்தான்.
அவளோ “ச்சை…த்தூ கருமம்” என அருவருப்போடு தனது இதழை அவளின் புடவை கொண்டு அழுந்த துடைத்தாள்.
புடவையின் சரிகை அவளின் மென்னிதழை காயப்படுத்தியதை கூட அவள் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அவளின் அழுத்தத்தினால் உதட்டிலிருந்து இரத்தமே வந்துவிட்டிருந்தது.
அதற்குள் கீழிருந்து எழுந்துக்கொண்ட ஹரிஷ் “ஏய் என்னையே அடிச்சிட்டியா?உன்னை என்ன பண்ணறேன்னு பாருடி” என ஆக்ரோஷமாக பேசி,அவள் அவனது கூந்தலை வெடுக்கென்று பற்றிக் கொண்டான்.
அவளோ வலியில் “ஹரிஷ் விடுடா” என அவனின் நெஞ்சிலே ஓங்கி ஒரு அடி வைக்க,
“ஏன்டி இப்போ மட்டும் உனக்கு நான் முத்தம் கொடுத்தா கசக்குது…முன்னாடி மட்டும் இனிச்சிதோ?” என பல்லை கடித்தப்படி அவளின் செவியோரம் கேட்க,
“ஆ…அசிங்கமா பேசாதேடா…” என்று அந்த வலியிலும் அவனிடம் சீறினாள் பெண்ணவள்.
காரிகையவள் பல வகையில் முயன்றும் ஆடவனது பிடியிலிருந்து விலக முடியாமல் தவிக்க,
அதனை குரூர திருப்தியுடன் கண்ட ஹரிஷ் “அசிங்கமா இருக்கா?” என எள்ளலாக கேட்டவன்,
அவளின் கூந்தலை இறுக பற்றி தன்னருகே இழுத்து “இப்போ என்ன பண்ணறேன்னு பார்க்கறேன்டி” என கண்கள் இரண்டும் பளபளக்க வன்மத்தோடு கூறியப்படி மீண்டும் அவளை முத்தமிட குனிந்தான்.
அதற்கு மேலும் அவனது தொடுகையையும் முத்தத்தையும் சகிக்க முடியாத பாவையவள்,தனது காலை பின்னால் தூக்கி அவனது உயிர்நாடியிலே ஓங்கி ஒரு உதைவிட்டிருந்தாள்.
அவனோ “ஐய்யோ” என வலியில் விழிகள் சொருக அப்படியே மண்ணில் சரிந்து விழ,
அவன் கீழே விழுந்தவுடன் அவனிற்கு அருகே விழுந்து கிடந்த அலைப்பேசியை தன் கையில் எடுத்திருந்தாள் பெண்ணவள்.
அவனை தீர்க்கமாக நோக்கி “இதிருந்தா தானேடா என்னை பிளாக் மெயில் பண்ணுவே…இனி இது இருக்காது” என உறுமியவள்,அலைப்பேசியை அருகிலிருந்த கல்லின் மீது விசிறியடித்தாள்.
அவனோ “ஏய்…ஏய்” என அலைப்பேசியை பார்த்து கத்தி எழுத்துக்கொள்ள முயற்சிக்க,
அந்தோ பரிதாபம்!
அவனால் வலியில் எழவே முடியவில்லை.
அதற்குள் அவனது அலைப்பேசி மொத்தமும் தூள் தூளாக நொறுங்கியிருந்தது.
கீழே சிதறி கிடந்த அலைப்பேசியின் செறிவு அட்டை மற்றும் நினைவக அட்டை இரண்டையும் உடைத்து,அப்போதும் ஆத்திரம் தீராமல் கல்லால் நசுக்கி உரு தெரியாமல் அழித்திருந்தாள்.
“இனி எதை வைச்சுடா என்னை மிரட்டுவே?” என சந்திரமதி அவனை எள்ளலாக பார்த்து வினவ,
அவனோ சுருண்டு கிடந்தவாறே “ஒரு காப்பி மட்டும் தான் நான் எடுத்து வைச்சிருப்பேன்னு நினைக்கிறீயாடி…என்கிட்ட…” என்னும் போதே மீண்டும் ஒரு முறை அவனில் ஓங்கி உதைவிட்டிருந்தாள் அவள்.
அவன் “ஆ” என அலற,
“உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்டா…வேற இடத்திலே சேவ் பண்ணி வைக்கிற அளவு திறமையெல்லாம் உனக்கு கிடையாது…அதையும் மீறி வைச்சிருந்தாலும் எனக்கு பிரச்சனையில்லை…நான் இனி பயப்படமாட்டேன்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“ஹே நீ தான்டி என் வாழ்க்கையை அழிச்ச ராட்சசி…உன்னை நான் சும்மாவே விடமாட்டேன்” என அவன் பல்லை கடித்து சீறிக்கொண்டு எழ,
அவளோ வெறுப்போடு “எப்படி எப்படி நான் உன் வாழ்க்கைய அழிச்சானா?த்தூ உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?என்னை காதலிக்கும் போதே இன்னும் மூணு பேரை காதலிச்சிருக்கே?இது ஒரு வாழ்க்கை இதை நான் அழிக்க வேற செஞ்சானா?மானங்கெட்டவனே” என அவன் முகத்தில் காறி உமிழாத குறையாக பேசினாள்.
“உனக்கு பிடிக்கலைனா சும்மா போய் தொலைய வேண்டியது தானேடி…எதுக்கு எல்லார்க்கிட்டயும் உண்மைய சொல்லிட்டு போனே” என அவளிடம் அவன் எரிந்து விழ,
அவளோ அவனை கொலைவெறியோடு முறைத்து “நீ இப்படி ஊரெல்லாம் பொண்ணுங்களை ஏமாத்துவே நான் உன்னை சும்மா விடணுமாடா பரதேசி” என திட்ட,
அவனோ சுருண்டு படுத்தவாறு “ஏய் ஓவரா பேசாதேடி…அப்புறம் உன் கல்யாணமே நடக்காது” என சூளுரைத்தவனை பார்த்தவளிற்கு கடுப்பாக வந்தது.
“உன்னை முன்னாடி காதலிச்ச பாவத்துக்கு உன்கிட்ட நிதானமா பேசிட்டு போகலாம்னு தான்டா வந்தேன்…இதுக்கு மேலே உன்கிட்ட பேசவே கூடாது” என உச்சக்கட்ட சீற்றத்துடன் கூறிவிட்டு அவனை செருப்பு காலால் நெஞ்சிலே பல முறை உதைத்துவிட்டு “இனி நீ எழுந்திரிக்கவே முடியாது…செத்து தொலை போடா” என ஆக்ரோஷமாக பேசிவிட்டு கிளம்பினாள் அவள்.
ஆனால் அவள் சற்றும் எதிர்பாராத வேளை அவளின் காலை எட்டி அவன் பிடித்துக்கொள்ள,
அதில் ஒரு கணம் பயந்து பின்னால் திரும்பியவள் “ஏய் ச்சீ விடு…” என அவனிடம் கத்த,
அவனோ அவளின் காலை இறுகப்பற்றி “நல்லா கேட்டுக்கோடி…இப்போ வேணா நீ என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்…ஆனால் இரண்டு நாள் கழிச்சு நடக்கயிருக்கிற உன் கல்யாணம் கண்டிப்பா நடக்காது…நான் நடக்கவும் விடமாட்டேன்…நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்” என உயிரை சில்லிட வைக்கும் வெஞ்சின குரலில் அவன் கூறியதும் அவளின் மேனி வெடவெடத்தது.
அவளோ நடுக்கத்துடன் “ப்ச் விடு டா” என அவனின் முகத்திலே ஒரு உதைவிட்டு அங்கிருந்து கிட்டத்தட்ட தன்னறைக்கு ஓடி வந்திருந்தாள்.
அவனிடம் துணிச்சலாக பேசிவிட்டு வந்துவிட்டாள் தான்!
ஆனால் இறுதியாக அவன் முகத்தில் தெரிந்த அந்த குரூரமும் அவன் சொன்ன வார்த்தைகளும் அவளை நிலைக்குலைய வைத்தன.
‘இந்த அரக்கனையா நாம் காதலித்தோம்?’ என்று நினைக்கும் போதே அவளிற்கு அழுகை வரும் போலிருந்தது.
அவள் மொத்தமாய் இடிந்துப்போய் அமர்ந்துவிட்டாள்.
இந்த திருமணத்தின் மூலமாக அவள் பல திட்டங்களை தீட்டியிருந்தாள்.
இப்போது அவள் எண்ணியது அனைத்தும் நடக்குமா என்றறியாமல் துடித்துப்போனாள்.
தற்போது அவளிற்கு நிச்சயதார்த்தம்,திருமணம் மற்றும் முகிழ்மதி இவை எதை பற்றிய அக்கறையுமில்லை.
அவனிடமிருந்து தன் பெண்மையை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்பதறியாமல் தத்தளித்து கொண்டிருந்தாள்.
சந்திரமதியின் நிலைமையே இங்கு கவலைக்கிடம் என்றால் முகிழ்மதியின் நிலைமையோ அதற்கும் மேல்!
‘யாரிடமாவது மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?’ என்ற பதட்டமே அவளை சிறிது சிறிதாக கொன்று கொண்டிருந்தது.
அவளிற்காக காத்திருந்து தோற்ற பெண்ணவளை கோவில் வரை அழைத்து சென்றுவிட்டனர்.
‘ஐய்யோ அக்கா…எங்கயிருக்கே நீ?’ என உள்ளுக்குள் தவித்த வேதனையை முகத்தில் கூட காட்ட முடியாத ஒரு அவல நிலை அவளிற்கு!
தனது தமக்கை போல் நடிக்கவே வெகு சிரமம் கொண்டாள் அவள்.
இறுதி நொடியிலாவது தமக்கை வந்துவிடுவாள் என்ற ஒரு துளி நம்பிக்கை அவளிற்கு இருந்தது.
ஆனால் தமயந்தி அவளை அழைத்து சென்று கடவுள் சன்னிதானத்தில் நிறுத்தும் வரையிலுமே சந்திரமதி வந்திருக்கவில்லை.
பேசாமல் அனைவரிடமும் தாம் முகிழ்மதி என்று கூறிவிடலாமா என யோசித்துவிட்டாள் அவள்.
அப்படியொரு பதட்டம் அவளிற்கு!
தமக்கை இடத்திற்கு அவள் வருவதற்கு சிறிதும் விருப்பமில்லை.
அதனால் உண்மையை கூறுவதற்கு அவளுள் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த திடம் அனைத்தும் தன்னை சிரித்துக்கொண்டே அரவணைத்த தாயை கண்டதும் அப்படியே உடைந்துப்போனது.
நிஜம் தெரிந்த பிறகு தாய் ஆடவிருக்கும் ருத்ர தாண்டவத்தை மனக்கண்ணில் கண்ட பெண்ணவள் ‘வேணாம்’ என முடிவெடுத்து பின்வாங்கிவிட்டாள்.
அதுவும் தனக்காக அல்ல…தன் தமக்கையை தாய் ஏதேனும் செய்துவிடுவாரோ என்ற அச்சத்தில்!
அத்தோடு தாய் “நீ அழகா இருக்கே கண்ணு” என பாசமாக கூறி கட்டியணைத்ததும் அவளின் நெஞ்சம் அப்படியே உருகிவிட்டது.
பல வருட காத்திருப்பிற்கான பலன் அன்று கிடைத்தது போல் அகமகிழ்ந்துவிட்டாள் பெண்ணவள்.
ஆனால் அதனை வெளிப்படுத்தாமல் இருக்க அவள் மேற்கொண்ட சிரமம் அவள் மட்டுமே அறிவாள்.
ஏனெனில்,அவள் நடிப்பில் சிறு பிசகு நேர்ந்தாலும் தாய் அவளை கண்டறிந்துவிடுவார் என்று வெகு கவனமெடுத்து நடித்தாள்.
சிரிப்பது போல் நடிப்பது தான் அவளிற்கு கைவந்த கலையாயிற்றே?
பல வருட பழக்கம் அன்று அவளிற்கு சரியாக கைக்கொடுத்தது.
அவளது அந்த தைரியம் ரத்தினவேல் அவளின் கழுத்தில் மாலையிட்டதும் ஆட்டம் காண தொடங்கின.
‘நான் செய்யறது சரிதானா?’ என அவள் தவிப்புடன் எண்ணும் போதே “அண்ணி மாலைய போடுங்க” என்ற தமயந்தியின் குரல் காதோரம் ஒலித்ததும்,வேறுவழியின்றி எச்சிலை கூட்டி விழுங்கி அவன் கழுத்தில் மாலையிட்டாள்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமல் இயந்திரத்தனமாகவே அதனை செய்திருந்தனர்.
அவனிற்கு மாலையிடும் போது அவன் உயரம் அவளிற்கு எட்டவில்லை.
இந்த பக்கமாக தமயந்தியும் அந்த புறமாக அவளின் தோழியும் அவளை ஊக்கியதனால் ஒரு வழியாக நுனி காலில் எம்பி அவனிற்கு மாலை சூட்டியிருந்தாள் பாவையவள்.
“இந்த அண்ணா ரொம்பதேன் அநியாயம் பண்ணறாரு பாட்டி” என ஜித்தேந்திரன் அவனது பாட்டியிடம் புலம்ப,
அவரோ குறுஞ்சிரிப்புடன் “இந்த ஆணவம்,பிடிவாதமெல்லாம் இப்போ மட்டும் தான் கண்ணா…இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு பாரு…அவன் மாற்றத்தை பார்த்திட்டு நீயே ‘இது அண்ணா தானா’னு அதிர்ச்சியாகிடுவே” என வயதின் அனுபவத்தில் சொல்ல,
அவனோ இறுகிய முகத்துடன் நின்றிருந்த தமையனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “அண்ணா மாறுவாருன்னு எனக்கு நம்பிக்கையில்லை பாட்டி” என சலிப்பாக இதழை பிதுக்கிக்கொள்ள,காஞ்சனா மாலாவோ எதுவும் பேசாமல் தனக்குள்ளே இரகசியமாய் புன்னகைத்துக்கொண்டார்.
தனது எண்பது வயதிற்கு அவர் எத்தனை விதமான மனிதர்களை சந்தித்திருக்கிறார்.
அதை வைத்தே இப்போதும் தனது பேரனின் எதிர்கால வாழ்வை பற்றி கணித்து கூறினார்.
ஆனால் சிறியவனிற்கோ அவரின் சூட்சமம் எதுவும் புரியவில்லை.
முக்கியமான சடங்குகள் அனைத்தும் முடிவுப்பெற்றதும் இறுதியாக “மோதிரம் மாத்திக்கோங்க” என புரொகிதர் கூறியதும்,காஞ்சனா மாலா கண்ணை காட்ட இரண்டு நகைப் பெட்டிகள் மணமக்களின் முன்பு நீட்டப்பட்டது.
கண்ணை கூசும் அளவு ஜொலித்த அந்த பெரிய வைர கல் மோதிரத்தை பார்த்ததும் ‘கடவுளே’ என அவள் கண்ணை மூடிக்கொண்டாள்.
அவளின் நெஞ்சம் பதைபதைக்க அவளால் அது முடியும் என்றே தோன்றவில்லை.
அதற்குள்ளே “பூபதி மோதிரம் போடுப்பா” என அவன் தந்தை ஆணையிட்டதும்,
ஒரு பெருமூச்சுடன் தன்னிலையிலிருந்து வெளிவந்த ஆடவன் ஒரு மோதிரத்தை கையில் எடுத்தான்.
“அண்ணி மோதிரம் எடுங்க” என தமயந்தி அவளின் தோளை இடித்ததும் பட்டென்று விழி திறந்த மங்கையவள் மோதிரத்தையே சில கணங்கள் வெறித்து பார்த்தாள்.
“உன் கையை கொடு” என ரத்தினவேலின் குரல் ஒலித்ததும் அவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
அதுவரை அவன் யாரிடமும் எதையும் பேசியிருக்கவில்லை.
திடீரென்று அவன் குரல் ஒலித்ததும் அவளின் நெஞ்சம் தடதடக்க,காரிகையவள் மெதுவாக அவனை நிமிர்ந்து நோக்கினாள்.
கரு விழிகள் இரண்டும் மருள,அவனை அச்சத்தோடு நோக்கியவளை தான் ரத்தினவேலும் பார்த்திருந்தான்.
அவளின் முகத்தையே சில கணங்கள் ஆழ்ந்து நோக்கிய ஆடவனிற்கு ‘என்ன தோன்றியதோ?’ அவளிடம் விழியாலே ‘கை’ என்பது போல் அவன் சுட்டிக்காட்டினான்.
ஒரு சில வினாடிகள் மட்டுமே அவனது விழிகளை அவளும் சந்தித்திருந்தாள்.
அடுத்த கணமே மந்திரத்திற்கு கட்டுண்டது போல் தன் கரத்தை அவனிடம் நீட்டியிருந்தாள்.
அவனும் குனிந்து அவளின் கரம் பற்ற,காரிகையவளிற்கோ மீண்டும் தன் உடலில் மின்சாரம் பாய்ந்த ஒரு உணர்வு!
உடனே அவள் பதட்டத்தோடு தன் கரத்தை பிடிங்க முயற்சிக்க,அதற்கு அவன் அனுமதித்திருக்கவில்லை.
ஏனெனில்,அவளின் கரத்தை அழுந்த பற்றிக்கொண்ட ஆடவன் அவளின் விரலில் மோதிரத்தை அணிவித்திருந்தான்.
அதில் அவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்திட,அதற்குள் அவளின் கரத்தை விடுவித்த ஆடவன் அவளின் முன்பு தன் கரத்தை நீட்டியிருந்தான்.
அவள் அவனையே அசையாமல் பார்த்திருக்கவும், அவன் தன் நீட்டிய கரத்தை விழியால் சுட்டிக்காட்டினான்.
அவன் பார்வையில் வசியம் இருந்ததா அல்லது பயத்தில் பாவையவளின் சித்தம் கலங்கி விட்டதா என்று தெரியவில்லை,
தன் முன்பு நீட்டியிருந்த கரத்தை மென்மையாக பற்றி காரிகையும் அவனிற்கு மோதிரம் அணிவித்திருந்தாள்.
அவனது விரலில் அவள் மோதிரம் இட்டதும் அவளிற்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஆட்கொண்டன.
அவளின் மேனி சிலிர்த்திட அவர்களது இணைந்த கரத்தையே அவளின் விழிகள் அசையாமல் பார்த்திருந்தன.
சட்டென அவனின் கரம் அவளின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொள்ள,அவளிற்கு பல யுக காத்திருப்பிற்கான பலன் கிடைத்தது போல் இதயம் பரவசத்தில் துடித்தன.
இதுவரை அவளிற்குள் தோன்றிடாத ஒரு புது மாற்றம் அவளுள் நிகழ,அவள் இந்த பூலோகத்தை விட்டு பறக்க தொடங்கியிருந்தாள்.
அவளின் கரத்தை பற்றியப்படியே அவன் கோவிலை சுற்றி வலம் வந்ததை கூட அவள் அறியவில்லை.
மீண்டும் ஒரு முறை இறைவனை தரிசித்து அனைவரும் அவளிடம் விடைப்பெற்று சென்றதும் அவளின் ஞாப இடுக்கில் இல்லை.
அதற்கு அடுத்து நடந்த அனைத்தும் ஏதோ கனவில் நடப்பது போலவே அவளிற்கு தோன்றியிருந்தது.
அவளை யாரோ அழைத்து வந்து மீண்டும் அவள் அறைக்குள் விட்டது கூட நினைவில்லை.
இப்படியே சகோதரிகள் இருவரும் தங்களது உலகத்தில் சஞ்சரித்திருக்க,நல்லவேளையாக விஜயலட்சுமியை காஞ்சனா பாட்டி பிடித்து வைத்துக்கொண்டார்.
இல்லையென்றால்,இவர்கள் இருவரது ஆள் மாறாட்டத்தையும் கண்டறிந்து முகிழ்மதிக்கு கடுமையான தண்டனை வழங்கியிருப்பார்.
இப்போது இருவரையும் தொந்தரவு செய்ய யாருமில்லாததால் பெண்கள் இருவரும் தத்தமது அறைக்குள் அடைந்து கிடந்தனர்.
‘தான் செய்தது சரியா?’ என முகிழ்மதியும்,
‘அவன் என்ன செய்வான்?’ என்று சந்திரமதியும் சஞ்சலத்தில் உழன்றனர்.
அப்படியே கண்ணீரோடு உறங்கிய இருவருக்கும் நடு இரவில் விழிப்பு வந்திருந்தது.
திடுக்கிட்டு எழுந்த முகிழ்மதி அவசரமாக தன் கரத்தில் ரத்தினவேல் அணிவித்த மோதிரத்தை பார்த்தாள்.
அந்த இருளை கிழித்துக்கொண்டு ஒளிர்ந்த வைர மோதிரத்தை பார்த்தவளின் மனதில் குற்றவுணர்வு அதிகரித்தது.
அதிலும்,அவளின் கனவிலும் ஆடவனின் முகம் வந்து அவளை இம்சித்திருக்க ‘இது தப்பு…அவரை பத்தி நான் நினைக்கக்கூடாது…அவர் என் அக்காவுக்கு தான் சொந்தம்’ என தன்னை தானே குற்றம் சாட்டியவள், அக்கணமே அவள் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டினாள்.
அவள் மோதிரத்தை கழட்டும் போது தன் மேனியிலிருந்து உயிரை பிரிப்பது போலான ஒரு வலி அவளிற்குள் எழுந்ததை தடுக்க முடியவில்லை.
அவளிற்கு தான் வலியும் வேதனையும் புதிதல்லவே?
அதனால் இதயத்தில் ஊடுருவிய ரணத்தை பொறுத்துக்கொண்டு அடுத்த நாளே அந்த மோதிரத்தை தனது தமக்கையிடம் ஒப்படைத்திருந்தாள்.
தமக்கையிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவள் எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை.
அதேப்போல் மற்றவளும் எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.
“தேங்க்ஸ்” என்ற ஒரு வார்த்தை மட்டுமே தங்கையிடம் அவள் கூற,அவளும் “ம்” என்று மட்டும் கூறி வெளியேறிவிட்டாள்.
அவள் சென்றதும் தன் விரலில் மோதிரத்தை அணிந்து பார்த்த சந்திரமதிக்கு ஏனோ அது தனக்கு பொருத்தமில்லாதது போல் தோன்றின.
அதனால் சட்டென மோதிரத்தை கழற்றி அந்த நகைப்பெட்டியிலே வைத்து மூடியவள்,தன் தலையை கையால் தாங்கிக்கொண்டாள்.
முகிழ்மதிக்கு ஏனோ அழுகை வரும் போலிருந்தது.
இருப்பினும்,தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.
அவள் வேண்டுமென்ற நிராகரித்தாலும் இறைவனின் சன்னிதானத்தில் உறவினர்களின் சாட்சியாய் ஆரம்பித்த அந்த பந்தம் அவ்வளவு எளிதில் அறுப்பட கூடியதல்ல என்று அவள் அறியவில்லை.
இதே நேரம் அசூரர்களை வதம் செய்ய கிளம்பிய வீர் இரவு ஒரு மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தான்.
அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையெல்லாம் உதிர கறை!
அதன் வாடை அவனின் நிம்மதியை குலைக்க அவன் மெதுவாக தன் ஆடைகளை களைத்துவிட்டு நீருக்கடியில் நின்றான்.
அச்சமயம் அவனின் அறைக்குள் பதிவிசாக பூனை போல் ஒரு உருவம் நுழைந்தது.