முகிழ்மதி 21,22

முகிழ்மதி 21

வீர் இல்லத்திற்கு திரும்பி வந்த வேளையில் திருமண கலகலப்பு சிறிதுமின்றி வீடு வெறிச்சோடி இருந்தது.

ஏனெனில்,அனைவரும் களைப்பில் உறங்கியிருந்தனர்.

திருமணத்திற்காக அனைவரும் ஊருக்கு வந்திருந்ததினால் வீரும் ரத்தினவேலின் இல்லத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை!

அதனால் சிறிதும் சத்தம் செய்யாமல் காவலர்களின் பரிசோதனைகளை கடந்து வீட்டிற்குள் நுழைந்தான் வீர்.

அவனிடத்தில் ஒரு துப்பாக்கி இருந்தப்போதிலும் யாவரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

அதனை வைத்துக்கொள்வதற்கான அனுமதி அவனிடம் இருந்தது.

அதேப்போல் அவனது சட்டையிலிருந்த உதிர கறையையும் கண்டும் காணாமல் இருந்துக்கொண்டார்கள்‌ பாதுகாவலர்கள்.

ஏனெனில்,ரத்தினவேலிற்கு அடுத்த நிலையில் அவர்களை வழிநடத்துவது அவன் தான்!

வீர் தன்னுடைய அறைக்குள் நுழைந்த அடுத்த கணமே சொல்லி வைத்தாற் போன்று ரத்தினவேலிடமிருந்து அழைப்பு வந்தது.

‘வாட் அ டைமிங்’ என சிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்ற வீர் “இன்னும் தூங்கலையா பூபதி?” என கேட்க,

அவனோ அவனின் கேள்விக்கு பதிலுரைக்காமல் நெற்றியை நீவியப்படி “நீ வேலைய முடிச்சிட்ட போலிருக்கு” என்று ஆழ்ந்த குரலில் கேட்க,

மெதுவாக தனது இடையிலிருந்த துப்பாக்கியை கையில் எடுத்தப்படி “அதெல்லாம் பக்காவா முடிச்சாச்சு பூபதி” என்றவனின் விழிகள் இப்போது துப்பாக்கியை வெறித்தன.

அவனது குரலை வைத்தே எதுவோ சரியில்லை என்பதை கணித்து ரத்தினவேல் “என்ன விஷயம் வீர்?” என அழுத்தமான குரலில் வினவ,

திடீரென்று அவனின் முகத்தில் ஒரு இறுக்கம்!

“சொன்னப்படி அவனுங்களை போட்டாச்சு பூபதி…பட் அவனுங்களுக்கு அந்த வேலைய கொடுத்தது வேற ஒரு பெரிய கேங்…அது யாருன்னு இன்னும் கண்டுப்பிடிக்க முடியலை” என்றவனின் குரலில் கோபம் கொப்பளித்தது.

ரத்தினவேலோ அதனை கேட்டு சிறிதும் ஆவேசம் கொள்ளாமல் “வீர் இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்…” என்றான் சாவகாசமாக.

“ஹவ்?” என வீர் புருவம் சுருக்கி வினவ,

அவனோ இகழ்ச்சியாக இதழை வளைத்து “ஐ நோ வீர்…அவன் அவ்வளவு சீக்கிரம் மாட்டமாட்டான்…என்கூட மோத நினைக்கிறான்னா கண்டிப்பா நமக்கு ஈக்குவளான ஒரு பெரிய ஆளா தான் இருப்பான்…அவன் அவ்வளவு சீக்கிரம் நம்ப வலையிலே சிக்குவான்னு நீ நினைக்கிறே?” என நக்கலாக ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

வீரோ “அப்புறம் எப்படி அவங்களை பிடிக்கிறது பூபதி?” என துப்பாக்கி முனையால் புருவத்தை நீவியப்படி யோசிக்க,

“புலி பதுங்கி வேட்டையாடும்னு கேள்விப்பட்டதில்லையா?அது மாதிரி கொஞ்ச நாள் பதுங்கியிருப்போம்…அவனாலே ரொம்ப நாள் உள்ளே இருக்கமுடியாது…அவன் கண்டிப்பா ஒரு நாள் வெளிய வருவான்…அப்போ நிதானமா அவனை வேட்டையாடலாம் வீர்” என தீட்சண்ய குரலில் கூறியவனின் விழிகள் இரண்டும் வயமானின் பளபளப்புடன் மின்னியது.

அவன் கூறியதை கேட்டு ஒரு கணம் மௌனம் காத்த வீர் “ஓகே ஃபைன் பூபதி…நீ சொல்லற மாதிரி வெயிட் பண்ணுவோம்” என நண்பனிடம் ஒத்துக்கொண்டாலும்,அவனின் மனம் ஏனோ நெருடியது.

ஆனால் தற்சமயம் அமைதி காப்பது தான் சரியென்று தோன்றிவிட,வீர் நிதானமாக இருக்க எண்ணினான்.

“அப்புறம் பூபதி?உன்னோட என்கேஜ்மெண்ட் என்னாச்சு?எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதா?” என்று விசாரித்தவாறே துப்பாக்கியை மேசையின் மீது வைத்தான்.

சட்டென எதிர்ப்புறம் இருந்தவனிடம் ஒரு மௌனம்!

அவனது மௌனத்தை அறிந்து புருவம் சுருக்கிய வீர் “பூபதி எனி திங்க் பிராப்ளம்?” என கேட்டவனின் முகம் இப்போது தீவிரத்தை தத்தெடுத்திருந்தது.

அவனோ ஒரு பெருமூச்சுடன் “ஆல் செட்” என்றவன்,

“உனக்கு எதுவும் காயம் பட்டிருக்கா வீர்?” என நண்பனின் வலியை அவன் கவனித்து விசாரித்தான்.

வீரோ அப்போது தான் தனது சட்டையை தூக்கி இடையில் இருந்த காயத்தை தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான்.

இன்று நடந்த சண்டையில் அவனை யாரோ ஒருவன் கத்தியால் கீறியிருந்தான்.

யுத்தம் என்று வருகையில் வீரனிற்கு காயம் ஏற்படுவது சகஜம் தான்!

ஆனால் அவனோ தனக்கு வலியை ஏற்படுத்தியவனிற்கு பல மடங்கு வலியை தனது துப்பாக்கியின் மூலம் பரிசாக கொடுத்திருந்தான்.

அதை எண்ணிய வீரின் இதழ்கள் மெல்லியதாக விரிந்தது.

அத்தோடு “நத்திங் பூபதி…ஐயம் சேஃப்” என நண்பனின் கவலையை நீக்க அவன் பொய்யுரைத்தான்.

இவன் விடாக்கண்டன் என்றால் அவன் விடாக்கண்டனிற்கெல்லாம் கொடாக்கண்டனாயிற்றே?

அதனால் கோபத்தில் இடுங்கிய புருவத்துடன் “காயம் பெருசா இல்லைன்றதாலே உன்னை நான் சும்மா விடறேன் வீர்…நாளைக்கு காலையிலே டாக்டர் வருவாரு…இப்போதைக்கு மருந்துப்போட்டு நீ ரெஸ்ட் எடு” என்று கூறி அழைப்பு துண்டித்தான்.

அவன் கூறியதை கேட்ட வீரின் இதழ்கள் இலேசாக விரிந்தது.

‘என்ன மறைச்சாலும் எப்படி தான் என் குரலை வைச்சு கண்டுப்பிடிச்சிடறானோ?’ என தலையாட்டி சிரித்துக் கொண்டே தான் அணிந்திருந்த சட்டையை கழற்றினான்.

கழற்றிய சட்டையை கொண்டு காயத்தை ஒரு முறை அழுத்தி எடுத்தவனிற்கு வலி உயிர்ப்போனது.

ஆனால் அதனை பல்லைக்கடித்து பொறுத்துக் கொண்டான் வீர்.

அவனிற்கு இந்த காயமெல்லாம் பெரிய விஷயமே இல்லை.

அந்த குடும்பத்திற்காக அவன் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தான்.

வீர் இப்போது நன்றாக படித்து அவர்களது நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்க காரணம்,அவனது தோழன் ரத்தினவேல் ரகுநாத பூபதி.

அவனது வாழ்வு மற்றும் படிப்பு இரண்டிற்கும் ஆதியானவனிற்காக எதையும் செய்ய காத்திருந்தான்,அந்த சேவகன்.

அதன் பொருட்டே அவ்வப்போது இந்த குடும்பத்தை காக்க அவன் காவலன் அவதாரம் எடுப்பான்.

இரத்தக்கறை படிந்த தனது ஆடைகளை கழற்றி கீழே வீசிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான் வீர்.
 

 


 

 

பீச்சுக்குழாயிற்கு அடியில் வந்து நின்றவனின் ஆவேசம் மட்டும் அடங்க மறுத்தது.

மேலிருந்து தண்ணீர் அவனது உடலை தொட்டு தழுவி கீழே செல்லும் போது அது சிவப்பு நிறமாக மாறியிருந்தது.

அவற்றினை அவன் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

அதற்காக அவன் ஒரு அரக்கன் அல்ல – சில நேரங்களில் நீதி கூட சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று நம்பும் ஒரு சாதாரண மனிதன் அவன்.

அவனது முதுகின் வழியே நீர் சிறிது சிறிதாக கீழே இறங்கிக்கொண்டிருக்க,அந்த விளக்கின் ஒளியிலும் நீரின் பளபளப்பிலும் அவனது முதுகில் வரைந்திருந்த கருப்பு நிற பருந்து மின்னியது.

ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலிருந்து ஆவேசமாக சீறி பறந்து வரும் பருந்தின் கரத்தில் ஒரு நீண்ட வாள் மின்னியது.

அதற்கு கீழே “சேவியர்” என்ற ஆங்கில வாசகம் எழுதியிருந்தது.

அந்த வாசகம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல.

‘இரத்தம் சிந்த வேண்டியிருந்தாலும்,நான் அவர்களை பாதுகாப்பேன்’ என்ற வீரின் சபதம் அது!

அவனது பாதுகாவலன் அவதாரத்தை இந்த பச்சை குத்தல் வெளிப்படுத்தியது என்றால்,அவனது இடது புற மார்பில் போட்டிருந்த ஒரு நட்சத்திரமும் ‘டால்’ என்ற ஆங்கில வாசகமும் அவனது தங்கையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தின.
 

 


 

 

இன்று அவன் பல உயிர்களை காவு வாங்கியதில் அவனின் மனம் அவர்களுக்காக துடித்தது.

ஆனால் அந்த தகிப்பை நீரின் குளிர்ச்சிக்கொண்டு துடைத்தான் அவன்.

சில நிமிடங்கள் விழி மூடி அவன் சுவற்றில் கைகுற்றி நீருக்கு அடியிலே நின்றிருந்தான்.

அச்சமயம் அவனது அறையின் கதவு கீறிச்சிடும் சத்தம் கேட்க,சட்டென விழி திறந்த வீரின் இமைகள் இடுங்கின.

உடனே பீச்சுக்குழாயை நிறுத்திவிட்டு துவாலையை இடையில் கட்டி சத்தமில்லாமல் வெளியே வந்தான் வீர்.

குளியலறையிலிருந்து அவன் எட்டி பார்க்க அங்கு யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

அதனால் மெதுவாக வெளியே வந்த வீர் சற்று முன்பு அவன் மேசையில் வைத்த துப்பாக்கி அங்கு இல்லாததை கவனித்தான்.

அதில் அவனது விழிகள் கூர்மைப்பெற அறையை சுற்றி பார்வையை சுழற்றினான்.

அறையிலிருந்த திரைச்சீலைக்கு பின்னால் யாரோ நின்றிருப்பது போல் தோன்ற,சட்டென அந்த அறையின் திரைச்சீலையை விலக்கிய வீரோ அந்த உருவத்தின் கையிலிருந்த துப்பாக்கியை தன் கரம் பற்றியிருந்தான்.

கண் மூடி திறக்கும் வேளையில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்து விழி விரித்தாள் காரிகையவள்.

ஆம்,அவனது அறைக்குள் அத்துமீறி நுழைந்தது வேறு யாருமல்ல தமயந்தி தான்!

“நீ இங்க என்ன பண்ணறே?” என வீர் அவளை அழுத்தமாக பார்த்தப்படி வினவ,

அவளோ அவனிற்கு சளைக்காமல் பதில் பார்வை பார்த்து “இங்க கபடி ஆடலாம்னு வந்தேன் வீர்” என நக்கலாக பதில் கொடுத்தாள்.

“ப்ச்” என சலித்த வீர் “நீ முதல்ல இங்கிருந்து வெளியே போ” என வாசலை நோக்கி கைகாட்ட,

அவளோ இடையில் கைவைத்து “போக முடியாது…என்ன பண்ணுவீங்க ரவுடி சார்?” என புருவத்தை ஏற்றி இறக்க,

இப்போது அவனது இமைகள் கோபத்தில் இடுங்கிட “தமயந்தி திஸ் இஸ் நாட் ரைட்…ஒரு பையனோட ரூமுக்குள்ள இப்படி அத்து மீறி வர்றது தப்பு…யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?” என குரலுயர்த்தாமல் அவளை கண்டிப்பான குரலில் அதட்ட,

அவளோ ஒற்றை புருவத்தை உயர்த்தி “ஹும் என்ன நினைப்பாங்க வீர்…நீயும் நானும் லவ்வர்ஸ்…அதான் ஒரே ரூமிலே இருக்கோம்னு நினைப்பாங்க…அப்புறமென்ன இரண்டு பேருக்கும் டும்…டும்…டும் தான்” என்றாள் இதழ்கடித்து சிரித்துக்கொண்டே…

அதைக்கேட்டு கடுப்பான வீர் “தமயந்தி…” என பல்லைக்கடிக்க,அவன் குரலில் அப்படியொரு சீற்றம்!

“என்ன பேச்சு இதெல்லாம்?தெரிஞ்சு தான் பேசறீயா நீ?” என அவன் தாடை இறுக சீறினான்.

ஆனால் பாவையவளோ தன் முன்னே ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தவனை கண்டு சிறிதும் அஞ்சவில்லை.

அவனிற்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தி நின்றாள்.

தமையனை போல் அவனது கேள்விகளுக்கு பதில் கூறாமல் “மிஸ்டர் ரவுடி சார்…இன்னைக்கு நீங்க வேட்டைக்கு போனீங்கன்னு கேள்விப்பட்டேன்…எங்கயெல்லாம் அடி வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என பதில் கேள்வியை கேட்டுக்கொண்டே அவனது வெற்று தேகத்தை விழிகளால் அலசி ஆராய தொடங்கிவிட்டாள்.

முதலில் அவளின் கேள்வியில் கடுப்பான வீர்,அவளின் விழிகள் தன் தேகத்தில் விரவி பரவிய பிறகே தன்னிலை உணர்ந்தான்.

மேலாடையின்றி இருப்பதை அறிந்து “ஓ…ஷிட்” என துப்பாக்கியால் தன் தலையில் தட்டி வேகமாக அருகிலிருந்த திரைச்சீலையை எடுத்து தன்னை மறைத்துக்கொண்டான்.

அவனது செயலை கண்டு அவள் சிரிக்க,

அவனோ “தமயந்தி…” என குரல் உயர்த்தி கர்ஜித்தான்.

அவளோ அதற்கெல்லாம் சிறிதும் அசரவில்லை.

அதனால் இதழ்பிரித்து சிரித்தவாறே “என்ன சும்மா தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி தமயந்தி தமயந்தினு கூப்பிட்டுட்டு இருக்கீங்க?முதல்ல வெட்கப்படாமல் வெளிய வாங்க ரவுடி சார்” என நடிகர் சிவாஜி போலவே பேசிக்காட்டி கேலிச்செய்தாள்.

அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் அவனிற்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

“ப்ச் தமயந்தி முதல்ல வெளிய போ நீ…” என வாசலை நோக்கி கைக்காட்ட,

உடனே அவனை முறைத்தவள் “ஹலோ மிஸ்டர் ரவுடி…ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க…நான் ஒண்ணும் இங்க உங்க அழகை ரசிக்க வரலை…உங்களுக்கு காயம் பட்டிருச்சுனு கேள்விப்பட்டேன்…முதல்ல அதை காட்டுங்க” என திரைச்சீலையை விலக்க முயற்சிக்க,

அவனோ திரைச்சீலையை இறுகப்பற்றி “எனக்கு மருந்துப்போட நீ யாரு?முதல்ல வெளியே போ” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்.

ஆனால் அவளோ அவனது பொறுமையை மேலும் சோதிக்கும் விதமாக “ஹான்…உங்க பொண்டாட்டி…வேற யாரு?” என நக்கலாக புருவம் உயர்த்தி கூறினாள்.

அவ்வளவு தான்?

அதற்கு மேல் அவன் அடக்கி வைத்த பொறுமையனைத்தும் காற்றில் பறந்திட “ஏய்…” என அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான்.

அவளோ சிறிதும் அச்சமின்றி ‘அடிக்கப்போறீங்களா அடிங்க’ என்பது போல் அவனிடம் கன்னத்தை காட்டிக்கொண்டு நின்றாள்.

அவளின் கன்னம் வரை கரத்தை எடுத்து சென்ற வீர் அவளின் முகத்தை பார்த்ததும் “ச்சை” என கரத்தை இறுக்கிவிட்டான்.

அவனிற்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

ஒரு பெண்ணை அடிக்க கை ஓங்கியதை எண்ணி அவன் தனக்குள்ளே அருவருத்துப்போனான்.

ஆயினும்,அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் அவனது நிதானத்தை பரிசோதித்தன.

அதனால் ஒரு கணம் கண்மூடி திறந்து கோபத்தை அடக்கிய வீர் “தமயந்தி சொன்னால் கேளு…முதல்ல வெளிய போ” என்றான் ஆழ்ந்த குரலில்.

“அதெல்லாம் போக முடியாது…” என அவளும் பிடிவாதமாகவே பதில் கூறினாள்.

அவனிற்கு மீண்டும் இறங்கியிருந்த ஆத்திரம் சுறுசுறுவென ஏற,அவளை ஓங்கி அறைய கரங்கள் இரண்டும் பரபரத்தது.

ஆனால் சிறு பெண்ணை காயப்படுத்த மனமின்றி “தம…” என அவன் பேச ஆரம்பித்த வேளையில் “ஐய்யோ என்ன இவ்வளவு பெரிய வெட்டு காயம்?” என பதறிப்போய் கத்தியிருந்தாள் பெண்ணவள்.

இந்த களேபரத்தில் திரைச்சீலை விலகியிருந்ததை அவன் அறியவில்லை.

திரைச்சீலை விலகிய இடைவெளியில் அவள் காயத்தை பார்த்திருக்க “வீர் என்ன இது?” என கலக்கத்துடன் கேட்டுக்கொண்டே அவனது இடையில் இருந்த காயத்தை தன் விரல் கொண்டு வருடியிருந்தாள் .

அவளின் கண்கள் சட்டென கலங்கி விட்டன.

அவளிடம் அதுவரை இருந்த பிடிவாதம்,அழுத்தம் எல்லாம் மாயமாகியிருந்தது.

அவனோ அவள் தன்னை அவ்வாறு தீண்டுவாள் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவளின் தீண்டலில் அவனின் தேகம் சிலிர்த்திட,

அவளோ காயத்தை வருடிக்கொண்டே “வீர்?” என நாதழுதழுக்க அழைத்தவளின் கண்ணிலிருந்து மளமளவென நீர் வழிய தொடங்கின.

அவளின் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டு திட்டவதற்கு வாயை திறந்தவன்,அவளின் கண்ணீரை கண்டு பட்டென மூடிக்கொண்டான்.

திமிராக நடந்துக்கொள்பவளிடம் கோபத்தை காட்டிவிடலாம்.

ஆனால் கண்ணீர் சிந்துபவளை அவனால் அதட்ட முடியவில்லை.

அவளோ அதையே தனக்கு சாதகமாக்க எண்ணியவளாய் “வீர் வாங்க…நான் உங்களுக்கு மருந்து போட்டு விடறேன்” என அவன் கரம் பற்ற,

அவனோ அவளிடமிருந்த தன் கரத்தை உருவிக்கொண்டான்.

அவள் “வீர்” என தவிப்புடன் அவனை ஏறிட,

“என்னை நீ மதிக்கிறதா இருந்தால் முதல்ல வெளிய போ” என்றான் அழுத்தம்திருத்தமாக.

“வீர்…” என அவள் மீண்டும் பேச ஆரம்பிக்கும் போதே அவளின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்திவிட்டான்.

அவனின் விழிகளில் ‘நீ இப்போதே சென்றாக வேண்டும்’ என்ற தீர்க்கம் தெரிந்தது.

பாவையவளால் அதற்கு மேலும் அவனோடு போராட முடியவில்லை.

அதனால் வேறுவழியின்றி கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்தவள் “பிளீஸ் மருந்து மட்டும் போடுங்க வீர்…அதை மட்டும் எனக்காக பண்ணுங்களேன்” என கெஞ்சி கேட்க,

அவன் எங்கோ பார்த்தவாறு “ம்” என்று மட்டும் கூறினான்.

அவனது உதாசீனம் அவளிற்கு வலித்தது.

‘இன்னும் என்ன பண்ணால் என் காதலை நீங்க ஏத்துப்பீங்க வீர்’ என மானசீகமாக அவனிடம் பேசியவள்,அவனது காயத்தை ஒரு வித இயலாமையுடன் பார்த்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறினாள்.

அவள் அறையிலிருந்து வெளியேறியதும் கதவை அழுந்த சாற்றியவனிற்கு ஏனோ மனம் வலித்தது.

அவனிற்கு பிரச்சனை என்று ஒன்று வந்தால் அவன் முதலில் நடுவது அவனது தங்கையை தான்!

அதனால் நெஞ்சில் அவளின் பெயர் இருந்த இடத்தில் கைவைத்து கண்மூடி நின்றுவிட்டான் வீர்.

தமயந்தியின் மேல் அவனிற்கு அளவுக்கதிகமான பாசம் இருந்தது.

கூடவே,கோபமும் பரிதாபமும் இருந்தது.

ஆனால் நேசம் என்பது மட்டும் அவளின் மீது அவனிற்கில்லை.

அப்படியொரு உணர்வு அவளின் மேல் அவனிற்கு வரவும் கூடாது.

அது தவறு என்று தனக்குள்ளே உருப்போட்டு தன் இதயத்தை பூட்டி வைத்திருக்கிறான் அவன்.

இதையறியாத பெண்ணவளோ திறவுகோல் இல்லாத கதவை முட்டிமோதி திறக்க முயற்சித்தாள்.

ஆனால் அந்த கதவு தானாக திறந்தால் ஒழிய,வேறு யார் முயன்றாலும் திறக்காது என பெண்ணவள் அறியவில்லை.
 

முகிழ்மதி 22

ரத்தினவேல் ஒரு புறம் குழப்பமாக தன்னறைக்குள் சுற்றி திரிந்தான்.

அவனிற்குள் ஒரு பெரும் சந்தேகம்!

காலை அவளின் கையை பற்றும் போது அவனிற்குள் இனம் புரியாத ஓர் உணர்வு!

அவளிடம் மட்டுமே தோன்றும் பிரத்யேகமான உணர்வு அது!

அவனிற்கு தொண்ணூறு சதவீகிதம் அவள் சந்திரமதி அல்ல என்பது நிச்சயம்!

ஆனாலும் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள எண்ணி நிச்சயதார்த்த காணொளியை பார்ப்பதற்கு கேட்டிருந்தான்.

அவை அவனது கரத்திற்கு வந்தும் சேர்ந்திருந்தது.

அவற்றினை மெதுவாக பார்வையிட ஆரம்பித்த ரத்தினவேலின் முகம் அப்படியே மாறிப்போனது.

‘அது மகிழ்ச்சியினாலா?அல்லது சீற்றத்தினாலா?’ என்பதை அவனின் ஆழ்மனம் மட்டுமே அறியும்.

அன்று மணமக்கள் இருவருக்கும் நலுங்கு வைக்கும் வைபவம் தொடங்கயிருந்தது.

நாளை திருமணம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக ஆரம்பித்தன.

அவரவர் வீட்டில் தனித்தனியாக நலுங்கு வைத்துவிட்டு அன்று நல்ல நேரம் பார்த்து மணமக்கள் இருவரையும் மண்டபத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

அவர்கள் நிச்சயத்தை போன்று திருமணமும் அவர்களது குலத்தெய்வ கோவிலில் வைக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர்.மணமகனது உறவினர்களே குறைந்தது ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள்.

பெண் வீட்டின் சார்பாக ஐம்பது பேர் கூட அழைக்கப்படவில்லை.

சிவராமனிடம் அதைப்பற்றி கேட்டதற்கு அவர் பதில் கூற திணறினார்.

காஞ்சனா மாலா வித்தியாசமாக அவரை பார்க்கவும்,விஜயலட்சுமி தான் இடைப்புகுந்து சமாளித்தார்.

“இல்லீங்க பெரியம்மா…நாங்க ஊரு மாத்தி மாத்தி போகவும் பெருசா சொந்தக்காரங்க கூடயெல்லாம் பேசறதில்லை…டச்சு விட்டுப்போச்சு” என சிரித்தப்படி சொல்ல,

“அதுக்குன்னு ஐம்பது பேர் கூடயில்லைன்னா எப்படி?” என அவர் அயர்ச்சியுடன் நம்பாமல் வினவ,

“அதுவுண்ணமில்லைங்க பெரிம்மா…கல்யாணத்துக்கு நாளு கம்மியா இருக்கவும் யாரையும் கூப்பிட முடியலை…அதான் சென்னையிலே பெரிய ரிசப்சனு வைக்கிறோமே அப்போ கூப்பிட்டுக்கலாமுங்க” என ஒரு வழியாக எதையோ பேசி சூழ்நிலையை சமாளித்தார்.

வேறுவழியின்றி “ம்” என காஞ்சனா மாலா கூறினாலும் அவருக்குள் சந்தேகம் என்னும் விதை மனதில் விழுந்தது.

அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றவுடன் “அத்தை இந்த லேடி பண்ணறது எதுவுமே சரியில்லை…எல்லாமே தப்பா தான் இருக்கு…இந்த குடும்பத்திலே தான் நாம்ப பொண்ணு எடுக்கணுமா?” என வானதி கவலையோடு கேட்க,

காஞ்சனா மாலாவிற்கும் அதே எண்ணம் தான்!

ஆனால் அதனை அவர் வெளிப்படுத்தவில்லை.

“வானதி பூபதி ஒரு விஷயத்தை யோசிக்காமல் அதிலே இறங்கமாட்டான் …அவனை நம்பி கல்யாண வேலைய போய் பாரு…நல்லதே நினைக்கிற நம்ப குடும்பத்துக்கு நல்லது தான் நடக்கும்” என அவருக்கு ஆறுதலளித்து அனுப்பி வைத்தவர்,

“ஏப்பா வீர்…வீர்” என வீரை சத்தமிட்டு அழைத்தார்.

அவனோ “சொல்லுங்க பாட்டி” என அவரின் முன்பு வந்து கைகட்டி நின்றான்.

“வீர் நீயும் என் பேரன் மாதிரி தான்…என் முன்னாடி கைகட்டாதேனு எத்தனை தடவை சொல்லறது?” என அவனை அதட்டியவர்,

“வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்.

அவனிடம் அவர் ‘என்ன கூறினாரோ?’ வீரோ ஒரு வினாடி அதிர்ச்சியில் உறைந்துப்போனான்.

சடுதியில் தலையை உலுக்கி வெளியே வந்தவன் “பாட்டி என்ன சொல்லறீங்க?நாளைக்கு கல்யாணம்…இப்போ இது அவசியமா?” என அவன் கேட்க,

அவரோ தீவிரமான முகப்பாவனையுடன் “ஆமா வீர்…எனக்கு என் பேரனோட வாழ்க்கை முக்கியம்…எனக்கு அந்த விஜயலட்சுமிய பார்த்தாலே நெருடலா இருக்கு…நீ சாய்ந்திரத்துக்குள்ள நான் கேட்டதை விசாரிச்சிட்டு வா…அதுக்கு பிறகு நாம்ப முடிவு பண்ணிக்கலாம்…கிளம்பு” என ஆணைப்பிறப்பித்தார்.

“பாட்டி பூபதி…” என தயக்கமாய் அவன் இழுக்க,

“வீர் அவனுக்கு விஷயமே தெரியக்கூடாது…” என அவர் அழுத்தமாக கூறியதும்,ஒரு பெருமூச்சுடன் “சரி” என்று தலையாட்டி வெளியில் கிளம்பினான்.

மண்டபத்தின் வாசலுக்கு ஒரு வித சிந்தனையுடன் வந்துக்கொண்டிருந்த வீரின் பார்வை அங்கு நாய்க்குட்டியை தூக்கி நின்றிருந்த முகிழ்மதியின் புறம் திரும்பியது.

ஏனோ அவளை பார்த்தவுடன் அவனின் மனம் இலேசானது.

அதுவரை இறுக்கமாக இருந்த வீரின் இதழ்கள் இலேசாக விரிந்திட,

அப்போது அவனருகே “ம்க்கும்” என தொண்டை செருமும் சத்தம் கேட்டது.

உடனே பக்கவாட்டாக திரும்பி ஏறிட்டான் வீர்.

தமயந்தி தான் அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்‌.

அவளை கண்டதும் அவன் புன்னகை மறைந்து மாயமானது.

அதில் அவளின் நெஞ்சம் வலித்தது.

கூடவே அவளுள் பொறுமை உணர்வும் எழ “என்ன அங்க பார்த்தால் மட்டும் மூஞ்சி பிரகாசமாகுது…இங்க பார்த்தவுடன் பியூஸ் போகுது…என்ன நடக்குது இங்க?” என அவள் கோபமாக கேட்க,

“அதை உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியமில்லை” என முகத்திலடித்தாற் போன்று கூறிவிட்டு அவன் செல்ல,

“வீர் நில்லுங்க…” என வேகமாக ஓடி வந்து அவனை வழிமறைத்தாள் தமயந்தி.

உடனே அவசரமாக விழிகளை சுழற்றிய வீர் “ஹே என்ன பண்ணறே?முதல்ல நகரு” என அடிக்குரலில் அவளிடம் சீற,

“வீர் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்?அதை மட்டும் கேட்டுட்டு போறேன் பிளீஸ்” என அவள் பாவமாக முகத்தை வைத்து கேட்கவும்,ஆடவனது மனம் இறங்கிவிட்டது.

“சரி என்ன விஷயம்னு கேட்டுட்டு சீக்கிரம் கிளம்பு…யாராவது பார்க்க போறாங்க?” என்றவனின் விழிகள் அப்போதும் சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்துக்கொண்டிருந்தது.

இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் பார்த்து அவதூறு பரப்பி விடுவார்களோ என்ற பயம் அவனிற்கு!

அவனிற்கு தன்னை பேசிவிடவார்களோ என்ற அச்சத்தை விட,அவளை யாரும் தவறாக பேசிவிடக்கூடாது என்ற தவிப்பே மிகுந்திருந்தது.

அவனிற்கு இருந்த தவிப்பும் அச்சமும் அவளிற்கு துளியுமில்லை.

அதனால் தொண்டையை செருமிய பெண்ணவள் “அது ஒண்ணுமில்லை வீர்…நேத்து உங்களை ஹாப் நியூடா பார்த்தேனில்லை…அப்போ தான் ஒண்ணை கவனிச்சேன்…பின்னாடி எங்க அண்ணானுக்காக ஒதுக்கிட்டிங்க…முன்னாடி உங்க ஹார்ட்டை உங்க தங்கச்சிக்காக ஒதுக்கிட்டிங்க…சோ என் பெயரை நீங்க எங்க பச்சை குத்துவீங்க…” என்று விஷமமாக கேட்டவளின் விழிகள் அவனின் தேகத்தில் அலைப்பாய்ந்தன.

அவளின் பார்வையில் ஆடவனவன் தான் விதிர் விதிர்த்துப்போனான்.

“ஹே என்னடி பண்ணறே நகருடி…பொம்பளை புள்ளையாச்சேன்னு பார்க்கறேன்…இல்லை செவுல்லே இரண்டு விட்டுருவேன்” என அவன் உச்சக்கட்ட கோபத்துடன் சீறிவிட்டு அங்கிருந்து நகர,

அவளோ “நீங்க அடிச்சாலும் பரவாயில்லை மிஸ்டர் ரவுடி…பேரு மட்டும் எங்க பச்சை குத்தணும்னு யோசிச்சு வைங்க” என குறும்புடன் கண்சிமிட்டி சொல்ல,

அவனோ சட்டென பின்னால் திரும்பி “உன்னை கொல்லப்போறேன் போடி” என விரல் நீட்டி மிரட்டிவிட்டு ஜீப்பில் ஏறினான்.

அவன் ஓடிய வேகத்தை பார்த்த காரிகையவளோ “ஹாஹா” என வாய்விட்டு கலகலவென சிரித்தாள்.

ஜீப்பை எடுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்த வீருக்கு அந்த பதட்டம் மட்டும் அகல மறுத்தது.

அவளது விழிகளின் வீரியம் அவனை அப்போதும் இம்சிக்க ‘வீர் இது தப்பு’ என தனக்கு தானே வலியுறுத்தி தலையாட்டி அவளின் நினைப்பை விரட்டியிருந்தான் ஆடவன்.

அவன் சென்றவுடன் தமயந்தி நேரே முகிழ்மதியிடம் வந்தாள்.

அவளிற்கு ஒரு விடயம் நன்றாக தெரியும்.

வீர் பிரதாப் முகிழ்மதியை தன் தங்கையாக பார்க்கிறான் என்று!

அதனால் அவளிற்கு முகிழ்மதியிடம் எந்தவொரு கோபமுமில்லை.அவளிடம் எப்போதும் போல் சகஜமாகவே உரையாடினாள்.

“என்ன அண்ணி பண்ணறீங்க?” என கேட்டுக்கொண்டே அவளை நெருங்க,

அவளோ “வாங்க அக்கா” என்றவளின் முகம் சோகத்தில் அழுது வடிந்தது.

அதைக்கண்டு பதறிய பெண்ணவள் “என்னாச்சு அண்ணி?ஏதாவது பிரச்சனையா?ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என ஆதுரத்துடன் வினவ,

கையிலிருந்த நாய்க்குட்டியை காட்டி “அக்கா இது ரொம்ப பாவம்…இது அவங்க குடும்பத்தை விட்டு தனியா பிரிஞ்சு வந்திருச்சு போலே…இதை இதோட குடும்பத்திலே சேர்க்கணும்னு நினைக்கிறேன்…ஆனாக்க குடும்பத்துக்கிட்ட எப்படி சேர்க்கிறதுனே எனக்கு தெரியலையே” என பாவமாக இதழை பிதுக்கி சொன்னாள் முகிழ்மதி.

விட்டால் அவளின் கண்ணிலிருந்து ஒரு அருவியே கொட்டும் போல் இருந்தது தமயந்திக்கு!

உடனே காரிகையின் மனம் சிறியவளை பார்த்து உருகிவிட்டது.

‘அச்சோ…எவ்வளவு சாஃப்ட் இவங்க?ஒரு நாய்க்குட்டிக்காக இவ்வளவு ஃபீல் பண்ணறாங்க…அதான் நம்ப ஆளுக்கு கூட பிடிச்சிருக்கு போலே…சோ ஸ்வீட்’ என்றெண்ணியவளிற்கு முகிழ்மதியை நினைத்து பெருமிதமாக இருந்தது.

அதனால் மென்மையாக புன்னகைத்து “அண்ணி இப்போ என்ன இந்த நாய்க்குட்டியை அவங்க ஃபேமிலியோட சேர்க்கணும்…அவ்வளவு தானே?” என புருவம் உயர்த்தி கேட்க,

முகிழ்மதியோ “ம்” என பாவமாக தலையாட்டினாள்.

உடனே தமயந்தி “சேகர் அண்ணா…இங்க வாங்க” என்று ஒருவரை அழைத்தாள்.

அவர் வந்ததும் “அண்ணா இந்த நாயை வாங்கிட்டு போய் அவங்க ஃபேமிலிகிட்ட ஒப்படைச்சிடுங்க” என அவள் ஆணைப்போல் கூறியதும்,

‘ஏம்மா நான் ஒரு பாடிக் கார்ட்மா…என்னை போய் நாயை கொண்டு ஃபேமிலிக்கிட்ட ஒப்படைக்க சொல்லறீங்க?’ என்பது போல் அவர் திருதிருவென விழிக்க,

அவரின் புலம்பலை அறிந்த தமயந்தியோ குரலை செருமி “அண்ணா இந்த நாயை சரியா அவங்க ஃபேமிலிக்கிட்ட சேர்த்திட்டு அவங்க ஃபேமிலிய மொத்தமா ஹோமிலே சேர்த்து விடுங்க…இதெல்லாம் பண்ணிட்டு எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்பணும்…புரியுதா உங்களுக்கு?” என அதிகாரமாய் அவள் ஆணை வேறு பிறப்பிக்க,

அவரோ வேறுவழியின்றி “எஸ் மேடம்” என விறைப்பாக வாழ்த்து தெரிவித்து நாயை முகிழ்மதியிடம் வாங்கிக்கொண்டு விடைப்பெற்றார்.

ஆனால் மனதிற்குள் ‘இப்போ நான் தெரு தெருவா வேற அலையணுமா?நல்ல பொழுப்புடா கோவிந்தா உனக்கு’ என முணுமுணுத்துக்கொண்டே சென்றார்.

முகிழ்மதியோ “அக்கா அவர் சரியா ஒப்படைச்சிருவாரு தானே?” என அவரின் முதுகை கவலையோடு பார்க்க,

“அண்ணி தமயந்தியை நம்பினோர் கைவிடப்படார்…அதெல்லாம் பக்காவா பண்ணிடுவாரு” என கண்சிமிட்டி சிரித்தவள்,

“அண்ணி நீங்க எதுக்கு வெயில்ல நிக்கறீங்க?உள்ளே போய் ஏஸிலே  உட்காருங்க…நான் போய் ஜித் அண்ணாவை பார்த்திட்டு உடனே வர்றேன்” என முகிழ்மதியை உள்ளே அனுப்பிவிட்டு விடைப்பெற்றாள் தமயந்தி.

முகிழ்மதியும் மெதுவாக தன்னறையை நோக்கி நடந்துச்சென்றாள்.

அவளிற்கு அந்த மோதிரத்தை கழட்டி கொடுத்ததிலிருந்தே மனம் வெறுமையாக இருந்தது.

அதற்கான காரணத்தை அறிந்துக்கொள்ளும் பக்குவம் அவளிற்கு இல்லை.

அதனால் சோக பதுமையாய் தன்னறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவளின் பின்னோடு ஒரு கயவன் உள்ளே நுழைய இருந்தான்.

நல்லவேளையாக இறுதி சமயத்தில் அவனது சட்டையின் காலரை பற்றி யாரோ தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

அது வேறு யாருமில்ல விஜயலட்சுமி தான்!

யாவரும் பார்ப்பதற்கு முன்பே அவனின் சட்டை காலரை பற்றி தரதரவென இழுத்து சென்ற விஜயலட்சுமி ஒரு அறைக்குள் அவனை போட்டு அடைத்தார்.

கதவை சாற்றிவிட்டு “என் குடிய கெடுக்க வந்த சண்டாளா?ஏன்டா இப்படி பண்ணறே? உன்னை தான் இந்த பக்கமே வர வேணாம்னு சொன்னேனில்லை…எதுக்குடா வந்தே?” என அவனின் முதுகில் நான்கு அடி போட்டார்.

அவன் தான் நிரஞ்சன்.நேற்று அவரிடமிருந்து நகை மூட்டையை வாங்கிக்கொண்டு சென்ற ஆடவன்.

அவனோ இப்போது போதையில் தள்ளாடிக்கொண்டே “விஜி சும்மா அடிக்காதே சொல்லிட்டேன்…என்னைய அந்த ஆள் தான் கல்யாணத்துக்கு கூப்பிட்டாரு” என்றதும் அவர் அடியை நிறுத்திவிட்டார்.

“என்னடா சொல்லறே?நிசமா அந்த ஆள் தான் வர சொன்னாரா?இதை நான் நம்பணுமா?” என சந்தேகமாக அவர் கேட்க,

“ஹே நிசந்தான்” என தனது அலைப்பேசியை எடுத்து அவரிடம் ஆதாரமாக காட்ட, அதன்பிறகே அவர் நம்பினார்.

அப்போதும் முகிழ்மதியின் பின்னோடு அவன் சென்றது அவருக்கு உறுத்த “டேய் உன்னை அந்த ஆள் கல்யாணத்துக்கு கூப்பிட்டால் வந்தோமா சாப்பிட்டமோனு கிளம்பறதை விட்டுட்டு அவ பின்னாடி எதுக்குடா போறே?” என பல்லை கடித்தார் விஜயலட்சுமி.

அவனோ அரைப்போதையில் “ஹாஹா அவளா அந்த ஓயலெட் கலர் புடவையிலே நல்லா சிக்குனு இருக்காள் விஜி…அவ மேலேயிருந்து என்னாலே கண்ணே எடுக்க முடியலை” என கண்கள் சொருக குழறிக்கொண்டே இருந்தவனை பார்த்தவருக்கு அடி வயிறு கலங்கியது‌.

‘கடவுளே இவனை நம்பினாக்கா சரிவராது…ஏதாவது பண்ணி கல்யாணத்தை கெடுத்துவிட்டிருவான்…முதல்ல இவனை எப்படியாவது அந்த ஆள் பார்க்கிறதுக்கு முன்னாடி துரத்தி விடணும்’ என அவரின் நரி மூளை தந்திரமாக யோசிக்க தொடங்கின.

அப்போதும் அவன் செய்த காரியத்தின் வீரியம் அவருக்கு புரியவில்லை.

இந்த கல்யாணம் மட்டுமே முதன்மையாக இருந்தது.

அவனோ அங்கிருந்த மெத்தையில் உருண்டு புரண்டவாறே “முகிழு…முகிழு…அடியே நீ எனக்கு தான்” என பிதற்ற ஆரம்பித்திருந்தான்.

‘சனியன் எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கு பாரு’ என தலையிலடித்தவர்,

முதலில் முகிழ்மதியை இந்த பாதகனின் கண்ணில் சிக்காமல் காக்க வேண்டும் என்றெண்ணினார்.

அதனால் அவனிருந்த அறையை சாற்றி தாளிட்டவர் நேரே முகிழ்மதியின் அறைக்கு வந்தார்.

கதவை தட்டி அவளை வெளியே அழைத்தவர் “முகிழு வா” என அவளின் கரம் பற்றி வெறித்தனமாக இழுத்து சென்றார்.

அவரின் இறுகிய பிடியில் அவளின் வெண்ணிற கைகள் நன்றாக சிவந்துவிட்டன்.

அவளோ வலியில் “அம்மா எங்க கூட்டிட்டு போறீங்க?” என முனகலாய் வினவ,

“ஏன் எங்க போறோம்னு சொன்னால் தான் கூட வருவியோ?வாடி” என தரதரவென இழுத்து சென்று மண்டபத்தின் மூன்றாவது தளத்தின் மூலையில் உள்ள ஒரு அறையினுள் தள்ளி கதவை சாற்றினார்‌.

அவர் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்துவிட்டாள்.

அதற்குள் கதவை தள்ளிட்ட விஜயலட்சுமி “இதோ பாரு முகிழு…நானா வந்து உன் கதவை திறக்கிற வரை நீ உள்ளயே அமைதியா கிட…என்ன புரியுதா?” என அவளிடம் மெதுவாக கூற,

அவளோ அதற்குள் பயந்துப்போய் எழுந்து வந்து “அம்மா கதவை திறங்க…பிளீஸ் பயமா இருக்கும்மா…அம்மா” என அவள் வாய்விட்டு கதவை தட்டி கதறியும் அவருக்கு மனமிறங்கவில்லை.

அவரோ “ஹே வாயை மூடுடி…உன்னை சுடுக்காட்டிலையா விட்டுட்டு போறேன்…பயமா இருக்கிறதுக்கு…கொஞ்ச நேரம் மூடிட்டு உள்ளயே இரு” என சீறியவர், அறையின் வெளிப்புறமாக தாளிட்டு விட்டு கிளம்பிவிட்டார்.

ஆனால் துர்திர்ஷட வசமாக அந்த அறை அவர் நினைத்தது போல் காலி அறையல்ல.

மெத்தையின் மீதிருந்த ஆடையே அங்கு யாரோ இருக்கிறார்கள் என்பதை பாவையவளிற்கு தெரிய வைத்தது.

அவர் ஏதேனும் காரணம் சொல்லி அங்கு விட்டிருந்தால் கூட பரவாயில்லை.

எதுவும் கூறாமல் அவளை அந்த அறையினுள் தள்ளிவிட்டு சென்றதோடு அறையிலிருந்த ஆண்மகனது உடை அவளை மிகவும் அச்சுறுத்தியது.

விபரீதமான கற்பனைகள் அவளின் மூளைக்குள் விஸ்வரூபம் எடுத்து,அவளின் அடி வயிற்றை கலங்க வைத்தது.

அதையறிந்த இளம்பெண்ணவளோ “அம்மா…அம்மா பிளீஸ் பயமா இருக்கு…கதவை திறங்க” என கதறியழுதுக்கொண்டே கதவை தட்ட,

அந்தோ பரிதாபம்!

அவளின் குரலை கேட்க அங்க ஒருவருமில்லை.

சில நிமிடங்கள் வரை கதவை தட்டி சோர்ந்துப்போனவள்,கண்ணில் நீருடன் தரையில் அமர்ந்தாள்.

திடீரென்று அவ்வறையிலிருந்த மின்சாரமும் தடைப்பட்டுவிட,அவளிற்கு இப்போது பயத்தில் மூச்சிறைத்தது.

அப்போது அந்த அறையின் குளியலறை கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தான் அவன்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top