மண்டபத்தின் வாசலில் விலையுயர்த்தி ஐந்து வாகனத்திலிருந்து ரத்தினவேல் ரகுநாத பூபதியின் குடும்பம் அனைவரும் வந்திறங்கினார்கள்.
நடுவில் உள்ள மூன்று வாகனத்தில் மட்டுமே அவர்களின் குடும்ப ஆட்கள் இருந்தனர்.
முதல் மற்றும் கடைசி வாகனத்தில் அவர்களின் பாதுகாவலர்கள் அணிவகுத்திருந்தனர்.
மணமகனிற்கு உரிய எந்தவொரு அம்சமுமின்றி பூபதியின் முகம் இறுக்கமாக இருந்தது.
ஆனால் அவனை தவிர ஏனையோர் அனைவரின் முகமும் பிரகாசமாக மின்னியது.
சிவராமனும் விஜயலட்சுமியும் கூழைக்கும்பிடு போட்டு அவர்களை வரவேற்க,அதுவரை அனைவரின் முகத்திலும் இருந்த புன்னகை மறைந்தது.
ஏனோ இருவரையும் பார்த்தாலே அவர்களுக்கு கடுப்பாக வந்தது.
விஜயலட்சுமியோ “பெரிம்மா நீங்க சொன்ன மாதிரியே ஆராத்தி ரெடி பண்ணியாச்சு..” என இளித்தவர்,
“அம்மாடி முகிழு…முகிழு…ஆராத்தி எடுத்திட்டு வா கண்ணு” என கொஞ்சலாக உள்நோக்கி சத்தம் கொடுத்ததும் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் மௌனமாக தட்டுடன் வந்து நின்றாள் முகிழ்மதி.
அதுவரை எந்தவொரு ஆர்வமும் இல்லாமல் அசுவாரசியத்துடன் நின்றிருந்த ரத்தினவேலின் விழிகள் இப்போது பெண்ணவளை நிமிர்ந்து நோக்கின.
அவனின் விழிகள் எப்போதும் போல் அவளை தலைமுதல் பாதம் வரை அளவிட ஆரம்பிக்க,அதனை கண்டு காஞ்சனா மாலா புருவம் சுருக்கினார்.
பேரனின் ஒவ்வொரு அசைவும் அவருக்கு அத்துப்படி!
அதனால் அவனது பார்வையின் மாறுப்பாடுகள் அவருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது.
அவன் திருமணம் செய்துக்கொள்ள போகும் பெண்ணான சந்திரமதியை பார்ப்பதற்கும் முகிழ்மதியை அவன் பார்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள்!
‘என்ன இது?’ என அவர் குழம்பிய வேளையில் மெதுவாக அடியெடுத்து வந்த முகிழ்மதி அனைவருக்கும் பொதுவாக ஒரு புன்னகையை உதிர்த்து “எல்லாரும் வாங்க” என மெல்லியக்குரலில் கூறிவிட்டு அவனிற்கு ஆராத்தி சுற்றினாள்.
அவளின் கண்கள் ஆடவனது முகத்தை கூட பார்க்கவில்லை.
அவனது சட்டையின் காலரை பார்த்துக்கொண்டே அவனிற்கு ஆராத்தி சுற்றி முடித்தவள்,அவனது நெற்றியில் பொட்டு வைக்க முயன்றாள்.
அந்தோ பரிதாபம்!
அவனிருக்கும் உயரத்திற்கு அவள் ஏணி வைத்து ஏறினால் தான் அவன் நெற்றியில் பொட்டு வைக்கமுடியும் போலும்.
அவள் நுனிக்காலில் எம்பி போராடி தோற்க,அவனோ அவளிற்கு சிறிதும் வளைந்துக்கொடுக்காமல் விறைப்பாக நின்றிருந்தான்.
அவள் படும் அவஸ்தையை அவன் கண்ணாற கண்டிருக்க,ஆடவனது இதழ்கள் இலேசாக வளைந்து மீண்டது.
ஒரு கணம் தோன்றி மறைந்த அவனின் ஏளன புன்னகை யாவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
நேற்று அவனிடம் சொல்லாமல் சென்ற கோபம் அவனிற்கு!
அத்தோடு தன்னை ஏறிடாமல் ஆராத்தி சுற்றியவளை தன்னை காண வைக்க வேண்டும் என்ற வெறி!
அதனால் அவளை வேண்டுமென்றே சீண்டியிருந்தான்.
ஆனால் அவளுமே சற்று அழுத்தம் தான்.
அவனிற்கு ஈடாக அவனது முகம் நோக்காமல் அழுத்தமாக இருந்தாள்.
இறுதியில் அவனும் தன் ஆணவத்தை விட்டுக்கொடுக்காமல் நின்றிருக்க,வேறுவழியின்றி விஜயலட்சுமியே கடுப்பாகி முன் வந்து அவளின் கரம் பற்றி அவனின் நெற்றியில் திலகமிட்டார்.
அவனது ஸ்பரிசத்தை அவள் விரல் தீண்டியதும் மீண்டும் ஒரு அதிர்வு அவளுள்!
அதனால் இலேசாக அவளின் கரங்கள் கூட நடுங்கின.
ரத்தினவேலின் விழிகளோ ‘உன்னை நான் கூப்பிட்டனா?’ என்பது போல் விஜயலட்சுமியை முறைக்க,
விஜயலட்சுமிக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது.
அதனால் எங்கு அவன் தன்னை அடித்துவிடுவானோ என அஞ்சி “பாப்பா எட்டி வைக்க ரொம்ப கஷ்டப்படுச்சு பெரியம்மா…அதான் நானே வைச்சேன்…” என காஞ்சனா மாலாவிடம் தயக்கமாய் காரணம் சொல்ல,
“சரி பரவாயில்லை விடு விஜி” என்ற காஞ்சனா மாலா “இந்த புடவையிலே நீ அழகா இருக்க என் ராசாத்தி” என அவளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் “கண்ணா இதை முகிழ்மதிக்கு கொடுப்பா” என ஒரு நகைப்பெட்டியை அவனிடம் கொடுத்தார்.
அவனும் ஒரு பெருமூச்சோடு அதனை வாங்கிக்கொண்டு “இந்தா” என அவளின் முன்பு நீட்ட,
அவள் உடனே தனது தாயினை திரும்பிப்பார்க்க “அட என்னைய எதுக்கு கண்ணு பார்க்கறே?பெரியவங்க கொடுங்கிறங்க இல்லை…வாங்கிக்க” என வாயெல்லாம் பல்லாக கூறினார்.
நகைப்பெட்டியை கண்டவுடன் அவரின் கண்கள் ஜொலித்தது.
‘சரியான அல்பம்’ என தமயந்தி மனதிற்குள் திட்டிக்கொள்ள,
முகிழ்மதியோ “ம்” என்று கூறி அவனிடமிருந்து அதனை தாயிடம் கொடுத்தவள்,அதன்பிறகு விலகி அவனிற்கு வழிவிட்டாள்.
வானதியும் மகனிடம் “பூபதி வாப்பா ஆராத்தி எடுத்தவுடனே நிக்கக்கூடாது…நீ வா” என மகனை அழைத்தவர்,
உறவின பெண்மணி ஒருவரை அழைத்து “சித்ரா மருமகள்கிட்டயிருந்து ஆராத்திய வாங்கி நீ ஊத்திட்டு வாம்மா” என ஆணைப்பிறப்பித்தார்.
அத்தோடு முகிழ்மதியிடம் “கண்ணு ஆராத்தி தட்டை அந்த ஆன்ட்டிக்கிட்ட கொடுத்திட்டு நீ எங்களோடு வாடாம்மா” என்றதும் “அண்ணி வாங்க அண்ணி…என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் உங்களை அறிமுகப்படுத்தறேன்” என தமயந்தி அவளின் கையோடு கைக்கோர்த்துக்கொண்டாள்.
ஆனால் தமயந்தி தன்னை அறியாமல் முகிழ்மதியை ரத்தினவேலிற்கு அருகே நிற்க வைத்திருந்தாள்.
அதனை அவன் கவனித்தானே ஒழிய,பெண்ணவளோ எதையும் கவனிக்காமல் தன் நிலையிலே உழன்றாள்.
தமயந்தி தன்னோடு கைக்கோர்த்ததில் சங்கடமுற்று,முகம் மாறாமல் இருக்க பெரும்பாடுப்பட்டாள்.
அதை ரத்தினவேல் கவனித்து தான் இருந்தான்.
அங்கு வந்ததிலிருந்து அவனது விழிகள் அவளை தவிர வேறெங்கும் செல்லவில்லையே?
அதனால் அவளின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்துக்கொண்டிருந்தான்.
இப்படியாக ரத்தினவேல் குடும்பத்தினரோடு அவளும் ஒன்றாக மண்டபத்தினுள் நுழைய,தெரிந்தோ தெரியாமலோ பூபதியுடன் இணைந்து நடந்த முகிழ்மதியும் வலது காலை எடுத்து வைத்து மண்டபத்தினுள் நுழைந்திருந்தாள்.
தமயந்தி படபடவென பேசிக்கொண்டே வர “ஏய் அவங்களை கொஞ்ச நேரம் ஃப்ரீயா விடு தமி…பாரு…உன்னை பார்த்து எப்படி மிரண்டுப்போயிருக்காங்க?” என ஜித்தேந்திரன் சொல்ல,
அதன்பிறகே முகிழ்மதியின் முகத்தை பார்த்த தமயந்தி “ஐய்யோ சாரி அண்ணி” என அவளிடமிருந்து கையை பிரித்துக்கொண்டாள்.
மற்றவர் மனம் வாடினால் தான் அவளிற்கு பொறுக்காதே?
அதனால் “சேச்சே நீங்க புடிச்சுக்கோங்க அக்கா…எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை” என மென்மையாக புன்னகைத்தாள்.
அவள் இதழில் புன்னகையை ஒட்ட வைத்திருந்தாலும் ஏனோ அது கண்ணை எட்டவில்லை என்பதை தமயந்தி கவனித்துவிட்டாள்.
“ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க?உடம்பு சரியில்லையா?காய்ச்சல் அடிக்குதா என்ன?” என அக்கறையாக கேட்டுக்கொண்டே அவளின் நெற்றியை தொட்டுப்பார்க்க,
அவளோ சங்கடமாக நெளிந்து தாயை ஒரு முறை பார்த்துவிட்டு “காய்ச்சல் எல்லாம் இல்லைங்க அக்கா…லைட்டா தலைவலி அதான்” என சமாளித்தாள்.
“ஓ…ஓகே…அப்போ ஃபங்க்ஷன் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க” என தமயந்தி கூறினாலும்,அவளின் மனதை ஏதோ ஒன்று நெருடியது.
அவளிற்கே நெருடியது என்றால்,அவளை அணுஅணுவாய் கவனிக்கும் ரத்தினவேலிற்கு அவள் வேடம் தெரியாதா என்ன?
‘என்ன பிரச்சனை இவளுக்கு?’ என்ற சிந்தனையுடன் அவளையே தீர்க்கமாக பார்த்தவாறு நின்றிருந்தான்.
“பாரு உன்னாலே முகிழ்மதிக்கு தலைவலியே வந்திடுச்சாம்…அதுக்கு தான் கொஞ்சம் குறைவா பேசுன்னு சொல்லறது?எங்க கேட்கற நீ?வானமே இடிஞ்சாலும் உன் பேச்சு மட்டும் நிக்காது” என ஜித்தேந்திரன் அங்கிருக்கும் சூழ்நிலையை மாற்ற தங்கையை வம்பிழுக்க,
“டேய் அண்ணா வேணாம்…என்னை சீண்டினே நீ கெட்ட?” என அவள் விரல் நீட்டி எச்சரிக்க,
அவனோ அவளின் எச்சரிக்கையை அறியாமல் “அப்படி தான் சீண்டுவேன்…என்ன பண்ணுவே நீ?” என தெனாவெட்டாக காலரை உயர்த்திக்கொள்ள,
“ஆஹான்…அப்படியா ராசா?” என ஒரு மாதிரியான குரலில் இழுத்தவள் “பூபதி அண்ணா நம்ப ஜித் அண்ணா காலேஜிலே என்ன பண்ணாருனு தெரியுமா?” என அவள் தொடங்கியதும் ஜித்தேந்திரனிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
அதை மறைத்து “சரி…இப்போ எதுக்கு வளவளனு பேசிக்கிட்டு…அப்பா நான் போய் கோவில்ல எல்லாம் ரெடியா இருக்கானு பார்த்திட்டு வர்றேன்” என சாதாரணமாக சொல்வது போல் அங்கிருந்து தப்பி ஓடியே விட்டான்.
பின்பு கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண் எதிர்பாராமல் அவனது கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள்.
இன்று வரை அந்த சம்பவத்தை வீட்டினருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறான் அவன்.
தமயந்தி எப்படியோ அவன் இரகசியம் அறிந்து அவனை அவ்வப்போது மிரட்டிக்கொண்டிருக்கிறாள்.
இந்த விடயம் மட்டும் வீட்டிற்கு தெரிந்தால் அவனிற்கு தான் முதல் அடி விழும்.
அதிலும்,ரத்தினவேலின் வாயிற்கு பதில் அவனின் முரட்டு கரம் தான் பேசும்!
ஒழுக்கம் உயிரை விட பெரிது என்று எண்ணும் ரகம் அவன்!
அதனால் ஜித்தேந்திரன் அங்கிருந்து ஓடியிருக்க,அதைப்பார்த்து தமயந்தி வெடித்து சிரிக்க “லட்டு என்ன விளையாட்டு இது?” என ரத்தினவேலின் குரல் உயர்ந்ததும் பட்டென்று தமயந்தி சிரிப்பை நிறுத்திவிட்டாள்.
ரத்தினவேல் என்றாலே சிறியவர்கள் இருவருக்கும் பயம்!
அதனால் தமயந்தி “சாரி அண்ணா” என மனமாற மன்னிப்பு வேண்டினாள்.
“உம்” என அவளை தீர்க்கமாக நோக்கியவனின் விழிகள் முகிழ்மதியை ஏறிட்டன.
ஏனென்றே தெரியவில்லை அவனின் விழிகள் எங்கு சுற்றிலும் இறுதியாக அவளை சுற்றியே வட்டமடித்தன.
பாவையவளிற்கு அங்கு நடக்கும் எதுவும் ரசிக்கவில்லை.
ரசிக்கும் மனநிலையில் அவளில்லை.
அவளிற்கு அவர்கள் அனைவரும் பேசுவது ஆறுதலாக இருந்தாலும்,ஆனாலும் உள்ளுக்குள் ஒரு வித அவஸ்தை!
நெருப்பின் மேல் நிற்பது போல் அவளிற்கு இருக்க,மெதுவாக தாயை திரும்பி நோக்கினாள்.
அவள் எண்ணியது போலவே அவர் அவளை பார்வையால் எரித்துக்கொண்டிருந்தார்.
அதைக்கண்டு எச்சில் கூட்டி விழுங்கியவள் “நீங்கயெல்லாம் பேசுங்க…அக்கா தனியா இருப்பாள்…நானும் அங்க போறேன்” என எழுந்து நின்றுவிட்டாள்.
காஞ்சனா மாலாவும் “அதுவும் சரி தான் அம்மாடி…முன்னாடியே தலைவலிக்குதுனு சொன்னே…நீ போய் ரெஸ்ட் எடு…கோவிலுக்கு போகும் போது வா” என அனுசரணையாக பேசி அவளை வழியனுப்ப,
அனைவரிடமும் பார்வையாலே விடைப்பெற்ற முகிழ்மதி ரத்தினவேலை சிறிதும் ஏறடவில்லை.
அவளின் அவமரியாதை அவனிற்குள் ஆத்திரத்தை உண்டாக்கின.
‘அன்று அவளிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதற்காக தன்னை உதாசீனம் செய்வாளா?’ என்று எண்ணியவனின் அகந்தை வெகுண்டெழுந்தது.
அவளிற்கோ நேற்று நடந்த நிகழ்வை பற்றிய ஞாபகம் கூட இல்லை.தாயிற்கு அஞ்சியே அவள் அவனை நிராகரிக்கிறாள் என்றறியாமல் அவன் அநாவசியமாக அவளின் மீது ஆத்திரம் கொண்டான்.
அந்நிலையிலும் அவளது நடையின் வித்தியாசத்தை அவனது கூரிய விழிகள் கண்டுக்கொண்டிருந்தன.
காயத்தில் புடவை உரசி ரண வலியை கொடுத்தன அவளிற்கு!
மற்றவர்களுக்கு அவள் மெதுவாக நடப்பது போல் தெரிந்தது.ஆனால் அவனிற்கோ அவள் ஒரு காலை இழுத்து நடந்தது போல் தெரிந்தன.
‘ஏன் இப்படி நடக்கிறாள்?’ என நெற்றி சுருங்க சிந்தித்த ரத்தினவேல்,அதற்கு மேல் அவளை பற்றி சிந்திக்க மனமின்றி “பாட்டி நான் ஒரு கால் பேசணும் பேசிட்டு வர்றேன்” என காஞ்சனா மாலாவிடம் விடைப்பெற்று வெளியேறியிருந்தான்.
மகள் அங்கிருந்து சென்றப்பிறகே அவரின் மனம் ஆசுவாசமடைந்தது.
‘ஹப்பாடி இந்த சனியன் போய் தொலைச்சிடுச்சு…அவ இருந்தாலே பங்கு பக்குனு இருக்கு’ என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அவரின் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதை எடுத்து பேசிய விஜயலட்சுமியின் முகம் சடுதியில் மாறியது.
சில நிமிடங்கள் கழித்து,யாவருக்கும் சந்தேகம் வராத வகையில் மெதுவாக மண்டபத்தின் பின் வாசலுக்கு சென்றார்.
அங்கு அவருக்காக ஒரு ஆறடி உயர ஆடவன் காத்திருந்தான்.
அவனிற்கு வயது முற்பது இருக்கும்.
அவன் புகைப்பிடித்தப்படி நின்றிருக்க,
தன்னை யாரும் காண்கிறார்களா என சுற்றிலும் நோட்டமிட்டவாறே அவனை நெருங்கிய விஜயலட்சுமி “உன்னை இங்க வராதான்னு சொன்னேனில்லைடா…எதுக்கு இங்க வந்தே?” என எடுத்தவுடனே அவர் சீற,
“ப்ச்…எல்லாத்துக்கும் ஏறிட்டு வராதே விஜி…கையிலே சுத்தமா காசில்லை…காசில்லைனா ஒரு பொம்பளையும் கூட படுக்க வரமாட்டிக்கிறாளுங்க…நான் என்ன செய்யறது?” என அவன் சலித்துக்கொண்டே புகையை இழுத்து ஊதினான்.
“பொம்பளை பின்னாடி போவதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லறதுடா” என திட்டிக்கொண்டே வந்தவரின் நாசி உணர்ந்த துர் வாடையில் சட்டென மூக்கை பொத்திக்கொண்டார்.
“டேய் பகல்லே போதை போட்டுட்டியா…ஏன்டா இப்படி பகல்லே போதைய போட்டுட்டு இங்க வந்திருக்கே…யாருக்கிட்டயாவது மாட்டினால் என்னாகிறது?” என முகத்தை சுழித்து அதட்ட,
அவனோ “அட அதை விடு விஜி…நான் பணம் கேட்டிருந்தானே ரெடி பண்ணியா இல்லையா?சீக்கிரம் கொடு…அங்க ஓட்டல்ல ஜலஜா எனக்காக காத்திட்டு கிடக்காள்” என கண்களில் மயக்கத்தோடு புகையை இழுத்தப்படி சொல்ல,
“கருமம்…கருமம்…இங்கவே அவளை இழுத்திட்டு வந்திட்டியா?” என நெற்றியில் அடித்துக்கொண்டவர்,
பின்பு அவசரமாக தனது முந்தானையை பிரித்து “டேய் இந்தாடா…இப்போதைக்கு இந்த காசு மட்டும் தான் தேறுச்சு…உனக்கு வேணும்னா அடுத்த தடவை அதிகமா தர்றேன்” என அவனிடம் ஒரு குட்டி நகை மூட்டையை கொடுத்தார்.
ஆனால் அவனோ அந்த மூட்டையை கையில் வாங்காமல் வேறு எங்கோ பார்த்திருந்தான்.
அவனது விழிகளில் தெரிந்த கபடத்தை பார்த்த விஜயலட்சுமிக்கு பகீரென்றது.
ஒரு முயலை வேட்டையாடப்போகும் நரியின் பளபளப்பு அவனின் விழிகளில் தெரிந்தது.
உடனே அவனின் பார்வை சென்ற திசையை நோக்கி தானும் திரும்பியவர், மொத்தமாய் அதிர்ந்துவிட்டார்.
அவர் நினைத்தது போலவே அவ்விடத்தில் அழகிய பதுமையாய் அமர்ந்திருந்தது வேறு யாருமல்ல.
அவரின் புதல்வி முகிழ்மதியே தான்!
யாரின் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக வீணான பொருட்கள் போடும் அறையில் வந்து சோர்வுடன் அமர்ந்திருந்தாள் அவள்.
அவளை சன்னல் திரையின் வழியே கண்டு அவன் வேட்டையாடும் பார்வை பார்த்திருந்தான்.
அதை பார்த்தவருக்கு சுறுசுறுவென ஆத்திரம் பொங்கி பெருகிட “அடேய் எடுப்பட்ட மவனே…அவ என் பொண்ணு…அவளை இப்படி பார்க்காதே பார்க்காதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறது?” என கையாலே அவனின் முதுகில் இரண்டு அடி வைக்க,
“ஆ…வலிக்குது விஜி…எதுக்கு இப்போ அடிக்கிறே?” என அவன் கத்த,
“டேய் கத்தாதேடா…அந்த ஆள் ஏதாவது பார்த்திடப்போறாரு…காசு வாங்கிட்டு முதல்ல கிளம்புடா…மதி கல்யாணம் முடியற வரை இந்த பக்கம் வராதே…போடா” என படபடப்புடன் கூறி,அவனை துரத்திவிட முயன்றார்.
ஆனால் அவனோ “சும்மா துரத்தாதே விஜி…முன்னாடி தக்காளி மாதிரி தளதளனு இருந்தாள் இப்போ என்னடானா ரசகுல்லா மாதிரி பளபளனு இருக்கா…அப்படியே சாப்பிட்டிடலாம் போலே” என்று விஷமத்துடன் உரைத்து நாவால் இதழை வருடிக்கொள்ள,
“செருப்பு பிஞ்சிடும் மவனே…முதல்ல வெளிய போடா…ஏற்கனவே நடந்ததெல்லாம் பத்தாதா?மறுபடியும் ஏதாவது நடந்துச்சு…உன்னை வெட்டி போலிப்போட்டிருவேன்…கிளம்பு நீ” என அவனின் முதுகில் சப்பென்று ஒரு அடி வைத்து அவனை துரத்திவிட்டார்.
ஆனால் செல்லும் முன் முகிழ்மதியை அவன் பார்த்த பார்வை விஜயலட்சுமியின் வயிற்றில் தீப்பற்றி எரிய செய்தது.
துரியோதனின் துகிலுரிக்கும் பார்வை அது!
அதனால் சிறிது பயத்துடனே முகிழ்மதியை நெருங்கியவர் “ஏய் உங்க அக்காவுக்கு தானே கல்யாணம்…நீ எதுக்கு இப்போ சீவி சிங்காரிச்சிட்டு நிக்கிறே…முதல்ல ரூமுக்கு போடி” என அவளை துரத்திவிட்டார்.
முன்னுக்கு முரணாக பேசிய தாயின் வார்த்தையில் அவளிற்கு சிறிதும் வருத்தமில்லை.
இது தான் அவரின் குணம் என்று அறிந்தவள்,அவரிடம் எதுவும் பேசாமல் தனது தமக்கையின் அறைக்கு சென்றாள்.
அதுவரை தங்கையின் வருகைக்காக வேண்டி நகத்தை கடித்து காத்திருந்த சந்திரமதி முகிழ்மதி அவளின் அறைக்குள் நுழைவதை கண்டதும் விரைவாக அவளை நெருங்கினாள்.
“முகிழு வந்துட்டியா…வா…வா உனக்காக தான் வெயிட் பண்ணேன்” என வேகமாக கதவை தாளிட்ட சந்திரமதி.
சட்டென கண்ணில் பூத்த நீருடன் அவளின் கரம் பற்றிய பெண் “முகிழு இப்போ என் வாழ்க்கையே உன் கையிலே தான் இருக்கு…பிளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் அம்மு” என்று கரகரத்த குரலில் பேசியவள்,உரைத்த விடயத்தில் முகிழ்மதிக்கு தலையே கிறுகிறுவென சுற்றியது.
உடனே தீச்சுட்டாற் போன்று அவளின் கரத்தை உதறியவள் “ஐய்யோ அக்கா…நீ என்ன சொல்லறே?என்னாலே அதெல்லாம் முடியாது” என கிட்டத்தட்ட அலறி விலகி நின்றவளின் முகம் பயத்தில் வெளிறிப்போனது.
ஆனால் சந்திரமதி சோர்ந்து விடாமல் “முகிழு…முகிழு…பிளீஸ்டி…உன் கையை காலா பிடிச்சு கேட்கறேன்…பிளீஸ்…பிளீஸ் எனக்காக…” என கெஞ்சி அவள் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு கதறியதும் பேதையவளிற்கு இரக்கம் வந்துவிட்டது.
அவளின் இரக்கக்குணத்தினால் மீண்டும் ஒரு முறை தமக்கையின் சதிவலையில் வீழ்ந்துப்போனாள் முகிழ்மதி.
தமக்கையிடம் ஒப்புக்கொண்டதின் விளைவாய் அந்த புள்ளிமான் தானாக வேடனிடம் சிக்கிக்கொண்டது.