முகிழ்மதி 10,11

முகிழ்மதி 10


 

 

முகிழ்மதியை தவிர்த்து ஏனைய அனைவரும் ரத்தினவேலின் இல்லத்திற்கு புறப்பட தயாராக இருந்தனர்.

சிவராமனும் கூட இப்போது அங்கு செல்ல ஆயுத்தமாகியிருந்தார்.

இதுநாள் வரை அவர்கள் வீட்டிற்கு அவர் சென்றதில்லை.

குற்றவுணர்வும் அதற்கு ஒரு காரணம்.

இப்போது தனது ஆசை மகளை அந்த வீட்டில் திருமணம் செய்து கொடுக்கவிருப்பதால் வேறுவழியின்றி அவர்களுக்கான மரியாதையை வழங்க எண்ணினார்.

ஏனெனில்,தன்னால் மகளின் வாழ்விற்கு எவ்வித தீங்கும் நேரக்கூடாது என விரும்பியது அந்த தந்தை உள்ளம்!

அதுவே,முகிழ்மதி என்று வரும் போது அவரின் மனம் கடும்பாறையாய் மாறிவிடுகிறது.

அத்தோடு எதிர்கட்சி தலைவரான சதாசிவத்திடமிருந்து தப்பி செல்ல,ரத்தினவேல் என்னும் பற்றுக்கோல் அவருக்கு தேவைப்பட்டது.

அவரின் நிற்கதி நிலைக்கு பின்னணியில் இருக்கும் உந்து சக்தி அவன் என்று அறியாமலே அவனிடம் சரணடைய எண்ணியிருந்தார்,அந்த மாமனிதர்.

சுயநலத்தின் மொத்த ரூபம் அவர்!

அவர் மட்டுமல்ல..முகழ்மதியை தவிர்த்து அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் தன்னலம் மட்டுமே பெரிது என கருதும் புண்ணிய ஆத்மாக்கள்.

விஜயலட்சுமி வழக்கம் போல் தங்க நகைகளை அள்ளி போட்டுக்கொண்டு அலங்கார பூஷ்தையுடன் தயாராகி நின்றார்.

சந்திரமதி பட்டு சரிகை வைத்த ஊதா நிற புடவையில் வைர ஆபரணங்கள் அணிந்து மிதமான அலங்காரத்தில் பேரழகியாய் ஜொலித்தாள்.

அந்நேரம் “அடியே முகிழு” என கீழிருந்து விஜயலட்சுமி சப்தமிட,

அவசரமாக கீழிறங்கி வந்த முகிழ்மதியை அவளின் தந்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவரின் உதாசீனம் அவளின் இதயத்தில் சுருக்கென்ற வலியை கொடுத்தன.

அவளை மட்டுமாக விடுத்து அவர்கள் மூவரும் குடும்ப சகிதமாய் செல்லவிருப்பதை கண்டவளின் நெஞ்சம் துயரத்தில் துவண்டன.

அதற்கு தாய் கூறிய போலி காரணத்தை கேட்டவளால் ஏற்கவே முடியவில்லை.

மற்றவர் தன் மீது காட்டும் அக்கறையை கூட ஏன் என்னை பெற்றவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என அவளின் மனம் ஏங்கி விம்மியது.

அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் அவள் இதழ்கடித்து அடக்கிக்கொண்டாள்.

களையிழந்த முகத்துடன் கீழிறங்கி வந்த மகளை பார்த்த விஜயலட்சுமி முகத்தை சுழித்தார்.

ஏனெனில்,சிவப்பு நிற அனார்கலி சுரிதாரில் கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி அணிந்து வந்தவளை பார்த்து “என்னடி டிரஸ் இது?உனக்கு ஒண்ணுமே வாங்கி தராமல் கொடுமைப்படுத்தறாங்கனு ஊருக்கே காட்டணுமா?எங்களை அவமானப்படுத்தவே பிறப்பெடுத்திருக்கியா என்ன?” என படபடவென வெடித்து தள்ள தொடங்கிவிட்டார் அவர்.

சந்திரமதியும் அவளை ஏற இறங்க பார்த்தவள் “முகிழு போன தீபாவளிக்கு பிங்க் கலரிலே மம்மி ஒரு லெஹன்கா எடுத்து கொடுத்தாங்களே அதை போட வேண்டியது தானே?” என கேட்க,

அவளோ பதில் ஒன்றும் கூறாமல் தலைகுனிந்து நின்றிருந்தாள்.

ஏனெனில்,ஒரு தடவை தூரத்து உறவு முறையில் ஒரு விழாவிற்கு சென்று வந்த சமயம் ஒரு ஆடவன் அவளிடம் வந்து பேசினான் என்றதற்காக வீட்டில் அவளிற்கு கடுமையான பூஜை ஒன்று நிகழ்ந்தது‌.

அந்த பூஜையில் சேதாரமானது அவள் மேனி மட்டுமல்ல…அந்த இளஞ்சிவப்பு நிற லெஹன்காவும் தான்!

அதை வெளிப்படையாய் கூற முடியாமல் அவள் தவிக்க “வாயை திறந்து பதில் சொல்லறாளா பாரு?நம்ப பேரை ஊருக்குள்ள நாறடிக்கணும்…அது தான் இவளுக்கு வேணும்” என்றவாறு விஜயலட்சுமி அவளின் கன்னத்தில் இடிக்க,அவளிற்கு வலியில் கண்கள் கலங்கி விட்டது.

“நீயும் மம்மி திட்டறதுக்கு தகுந்த மாதிரி தான்டி நடந்துக்கிறே…எங்க அந்த டிரஸ்…ஊருலே விட்டுட்டு வந்திட்டியா?” என சலிப்புடன் சந்திரமதி வினவ,

அவளோ மெல்லிய குரலில் “அந்த டிரஸ் கிழஞ்சிடுச்சுக்கா” என்றாள் பரிதாபமாக விழித்து..

“கிழிஞ்சிடுச்சா எப்படி?” என புருவம் சுருக்கி சந்திரமதி கேட்க,

அவளோ தாயை காட்டிக்கொடுக்க முடியாமல் திணற,விஜயலட்சுமிக்கு திக்கென்றது.

அவருக்கு அப்போது தான் அந்த உடை எப்படி கிழிந்தது என்பது பற்றிய நினைவே எழுந்தது.

‘ஐய்யோ…இதை மறந்திட்டனே…அன்னைக்கு அடிச்சதை பத்தி சொல்லிவிடுவாளோ’ என அவர் கைகளை பிசைந்தார்.

ஏனெனில்,சிவராமனிற்கு வீட்டில் நடக்கும் பல விடயங்கள் தெரியாது.

முகிழ்மதி அவருக்கு பிடிக்காத மகள் என்றாலும்,அவள் தப்பு செய்தால் கண்டிப்பது தவிர தினந்தோறும் அவளை துன்புறுத்தும் வழக்கமில்லை.

ஆனால் விஜயலட்சுமி நேரெதிர்.

அவளை தினந்தோறும் சொற்களாலும் உடலாலும் காயப்படுத்துவது அறிந்தால் ருத்ர தாண்டவம் ஆடி விடுவார்.

அதை எண்ணி அவர் மிரளும் சமயம்,அத்துணை நேரமாக வேறெங்கோ வெறித்திருந்த சிவராமன் “இங்க டிரஸ் வாங்குறதுக்கு கூட காசு இல்லாமல் நாம்ப என்ன பிச்சையா எடுக்கறோம்…விஜி மதிக்கு புடவை எடுக்கும் போதே சின்னவளுக்கும் சேர்த்து எடுத்திருக்க வேண்டியது தானே…இது என்ன புது பழக்கம்…போடுறதுக்கு டிரஸே இல்லாத மாதிரி மாறி மாறி எல்லாரும் பேசிட்டு இருக்கீங்க” என எல்லாரையும் சேர்த்து அதட்டியவர்,

“மதி உன் டிரஸிலே புதுசா இருக்கிற டிரஸ் ஏதாவது இருந்தால் அவளுக்கு கொடு…விஜி சின்னவ கல்யாணத்துக்காக நூறு பவுன் நகை எடுத்து வைச்சுமே…அதிலிருந்து கொஞ்சம் எடுத்து அவளுக்கு கொடுத்திட்டு சீக்கிரம் வா…நேரமாகுது” என மூவருக்கும் கட்டளையிட்டு அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

திடீரென்று தந்தை அவளிற்காக பேசிய விதம் அவளின் இதயத்தை நனைத்தது.

மழைக்காக வேண்டி பல காலம் தவமிருக்கும் விவசாயி இறுதியில் நிலத்தில் ஈரம் படிந்தாலே மகிழ்ச்சி கொள்ளவார்களே…

அதுப்போல் எதிர்பாராத தந்தையின் ஆதரவில் உள்ளம் பூரித்தது.

ஆனால் தாய் மற்றும் சகோதரியின் செயலால் அவை மீண்டும் வாடி விட்டது.

இப்போது வேண்டாவெறுப்பாக சந்திரமதி அவளின் உடையை எடுத்து அவளிடம் நீட்டியவள் “உன் டிரஸ் மாதிரி இதை கிழிச்சு வைச்சிடாதே…காஸ்ட்லியான டிரஸ்” என கடுகடுத்த குரலில் உரைக்க,

அதேப்போல் விஜயலட்சுமியும் “நகையெல்லாம் பத்திரம்டி…ஏதாவது ஒண்ணு தொலைஞ்சிது…உன்னை தொலைச்சு எடுத்திடுவேன்” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டே நகையை அவளிடம் ஒப்படைத்தார்.

மேலும்,அவர் “ஏய் அங்க வந்து தேவையில்லாமல் எதுவும் பேசக்கூடாது…பெரியவங்க யாராவது பேச வந்தால் கூட எனக்கு பிரீயட்ஸ் டையர்டா இருக்குனு ஓரமா போயிடணும்…அதை விட்டுட்டு எவனாவது பேசவந்தான்னு இளிச்சிட்டு நிற்கறதை பார்த்தேன்…என் பொண்ணுனு கூட பார்க்கமாட்டேன்…வெட்டி கூறுப்போட்டிருவேன்…ஜாக்கிரதை” என படுபயங்கரமாய் மிரட்டினார்.

அவரின் பேச்சே அவளிற்கு உதறலை கொடுத்தது.

‘பேசாமல் அங்கு செல்லாமல் இங்கே இருந்துக்கொண்டால் என்ன?’ என்றும் அவளிற்கு தோன்றிவிட,

அதை தாயிடம் அவள் வெளிப்படுத்த “ஏய் அறிவுக்கெட்ட முண்டம்” என அவளின் தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தவர்,

“உன்னை இங்க விட்டுட்டு போக தெரியாமல் தான் நான் கூட்டிட்டு போறானா?உன் அக்கா கல்யாணம் எந்த பிரச்சனையும் நடக்காமல் இருக்கணும்னு தான் உன்னையெல்லாம் சலிச்சுக்கிறேன்…போ…போய் நல்லா சிங்காரிச்சிட்டு கிளம்பி வந்து சேரு” என அவளின் தோளை தட்டி அவளின் அறையின் புறமாக தள்ளிவிட்டார்.

முகிழ்மதிக்கு சுயபட்சாதாபத்தில் நெஞ்சமே வெடித்து சிதறியது‌.

அவர்களை நெருங்கினால் உதாசீனம் செய்கிறார்கள்,

சரி என்று விலகியிருந்தால் அதற்கும் வழிக்கொடுக்காமல் அவளை வதை கொடுத்து வாதை தந்தால்,மெல்லிய மனம் கொண்ட பாவையவளால் என்ன செய்திட முடியும்?

தினந்தோறும் நரக வேதனை அனுபவிப்பவளை காக்க என்று ஒருவரும் இல்லாமல் அவள் தவிக்கிறாள்…பிணியில் துடிக்கிறாள்…உயிர் பிழைக்கவும் முடியாமல் உயிரை விடவும் முடியாமல் தத்தளிக்கிறாள்.

ஆனால் அவளிற்கான சாப விமோசனம் மட்டும் கிடைக்கவே இல்லை.

அவள் துவண்டு நிற்கையில் தோள் கொடுக்க முன் வரும் பட்டம்மாளை ஊரிலே விட்டு வந்திருந்தனர்.

அதனால் முகிழ்மதி மீட்சியடைய முடியாமல் தனிமையில் துவண்டு இருந்தாள்.

‘தன் சுயமரியாதை இழந்து இப்படியொரு வாழ்வு அவசியமா?’ என தன்னை தானே அவள் பல முறை கேட்டுக் கொள்கிறாள்.

‘இந்த வீட்டை விட்டு தப்பி ஓடி விடலாமா?’ என யோசித்தும் அதற்கான துணிச்சல் மட்டும் அவளிற்கு வரவில்லை.

சிறு வயதிலிருந்து கோழையாகவே அவளை வளர்த்திருந்தார்கள்.

தற்போது அவை அவளின் முடிவுகளுக்கு தடையாய் இருந்தன.

வாழ்வில் ஒரு பிடித்தமின்றி சகோதரியின் உடையை எடுத்து அணிந்துக்கொள்ள தொடங்கினாள் முகிழ்மதி.

இதே வேளை,முகிழ்மதியின் குடும்பத்தார் அனைவரும் அங்கிருந்து சென்றவுடன்,அதற்காகவே காத்திருந்தாற் போன்று ஒரு கயவன் இல்லத்திற்குள் நுழைந்தான்.

மனிதன் என்ற‌ போர்வையில் இருக்கும் காம கொடூரன் ஒருவன் அவன்.

திருமணம் நடக்கவிருக்கும் வீடு என்பதால் பணியாட்களும் மேலோட்டமாக விசாரித்து அவனை உள்ளே அனுமதித்தனர்.

அந்த கயவனின் விழிகள் முகிழ்மதியின் அறையை தேடி அலைப்பாய்ந்தன.

தமக்கையின் உடையை அணிந்து கொண்ட முகிழ்மதி,தாய் கொடுத்த நகைகளில் எளிமையாக உடைக்கு பொருத்தமாக இருந்த காதணி மற்றும் கழுத்தணியை மட்டும் எடுத்து அணிந்துக்கொண்டாள்.

மீதமுள்ள நகைகளை அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தியவள் கீழிறங்கி வரவேற்பரைக்கு வந்து சேர்ந்தாள்.

சோக பதுமையென எங்கோ வெறித்தப்படி நீள்விரிக்கையில் தனித்து அமர்ந்தவளிற்கு வீட்டில் ஆள் நுழைந்தது கூட தெரியவில்லை.

“முகிழ்மதி…” என யாரோ ஒருவர் உரக்க அவளின் பெயரை அழைத்த பிறகே திடுக்கிட்டு எழுந்து நின்றாள் முகிழ்மதி.

தன் முன்னே ஆறடி உயரத்தில் நின்றிருந்த புதிய ஆடவனை பார்த்த பாவையவளின் விழிகள் மருட்சியில் மிரண்டன.

“யா…யார் நீங்க?” என திக்கி திணறி அவள் கேட்க,

அவனோ மென்மையாக புன்னகைத்து “ஈஸி முகிழ்மதி…என் பேரு வீர்…நான் ரத்தினவேலோட நண்பன்…காஞ்சனா பாட்டி தான் உன்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர அனுப்பி வைச்சாங்க” என சொல்ல,

“நிஜமாவா?நான் எப்படி உங்களை நம்பறது?” என அவள் விழிகளை உருட்டியப்படி சந்தேகமாக வினவினாள்.

சட்டென யாரையும் நம்பாமல் அவள் அவனை பற்றி விசாரித்தது,அவனிற்கு பிடித்திருந்தது.

அவனோ “பரவாயில்லைம்மா…இந்த காலத்தில் இப்படி தான் நீ இருக்கணும்…”  என வெளிப்படையாக அவளை பாராட்டியவன்,

தனது அலைப்பேசியின் வழியாக காஞ்சனா மாலாவை தொடர்பு கொண்டான்.

“பாட்டி நான் வீர்…முகிழ்மதியை கூட்டிட்டு வர சொன்னீங்கயில்லை…அவங்க என்னை நம்ப மாட்டிக்கிறாங்க…இந்தாங்க நீங்களே அவங்ககிட்ட சொல்லுங்க” என அவரிடம் பேசியப்படி அலைப்பேசியை அவளிடம் நீட்டினான்.

அவளோ அதனை வாங்க மறுக்க,அவன் சிறிதும் கோபம் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே ஒலிப்பெருக்கியை உயிர்ப்பித்தான்.

“பாட்டி பேசுங்க” என அவன் சொன்னவுடன்,அவனையும் அலைப்பேசியையும் அவள் மாறி மாறி பார்த்தாள்.

அதேநேரம் “அம்மாடி முகிழு…நான் காஞ்சனா பாட்டி பேசறேன்…வீர் நம்ப வீட்டு பையன் தான்…உனக்கு அண்ணன் மாதிரி…அதனாலே பயப்படாமல் அவன் கூட வீட்டுக்கு வந்திடு செல்லம்” என காஞ்சனா வாஞ்சையுடன் கூற,பெண்ணவளின் மனம் நெகிழ்ந்தது.

உடனே “சரிங்க பாட்டி” என அவரிடம் தலையாட்டி கூறியவள்,எதிரில் இருந்த ஆடவனை கண்ணாலே அளவிட ஆரம்பித்தாள்.

ஆறடி உயரம்,கனிந்த விழிகள்,சவரம் செய்யப்பட்ட வழவழப்பான தாடை,கூரிய நாசி,அழுத்தமான உதடுகள்,உடற்பயிற்சியால் முறுக்கேறியிருந்த தேகம்,ஒட்டிய வயிறு என பார்ப்பதற்கு திரைப்பட கதாநாயகன் போல் இருந்தான் அவன்.

அத்தோடு அடர் நீல நிற சட்டை மற்றும் வெளிர் சந்தன நிற கால் சட்டை அணிந்து நேர்த்தியாக தயாராகி வந்திருந்தவனின் கையிலிருந்த தங்க காப்பு ‘காக்க காக்க’ சூரியாவை அவளிற்கு நினைவுறுத்தியது.

அதனால் அவளின் முகம் மென்மையுற அவனை ஏறிட்டவளை கண்டு “என்ன மேடம்?என்னை முழுசா பார்த்தாச்சா?இப்போவாது என்னை நம்பறீங்கனா நாம்ப கிளம்பலாமா?” என அவன் ஒற்றை புருவம் உயர்த்தி குறும்புடன் கேட்க,

அவளோ “அண்ணா உங்களை பார்க்க காக்க காக்க சூர்யா மாதிரியே இருக்கீங்க” என மனதில் இருப்பதை மறையாமல் வெளிப்படையாக சொன்னாள்‌.

பெரியவர் கொடுத்த நம்பிக்கையில் அவளின் பயம் முழுமையாய் அகன்றவிட,முகிழ்மதியின் இயற்கை குணம் வெளிவந்தது.

அவள் ‘அண்ணா’ என்று அழைத்ததும் அவனின் தேகத்தில் ஒரு நடுக்கம் விரவி மறைந்தது.

அவனின் மனக்கண்ணில் வேறொரு சிறு பெண்ணின் முகம் தோன்றி மறைந்திட,அவனின் விழிகள் சட்டென கலங்கிவிட்டன.

அவனின் பலம் பலவீனம் இரண்டும் அந்த பெண் தான்!

இப்போது அவனுடன் அவளில்லை‌.

அவளை பற்றிய நினைவுகள் அவனுள் எழுந்தவுடன் அவனின் நெஞ்சம் பிசைந்தது.

உடனே இமை சிமிட்டி அவளறியாமல் கண்ணீரை மறைத்த வீர் இதழ்பிரித்து சிரித்தான்.

“அம்மாடி தங்கச்சி நீ சொல்றதை மட்டும் ஜோதிகா கேட்டாங்கன்னா வீடு தேடி வந்து என்னை உதைப்பாங்க” என அவளிடம் விளையாட்டாகவே அவனும் பதில் கூற,

அவளோ விழிகளை விரித்து “அட அண்ணா நான் நிஜமா தான் சொல்லறேன்…உங்களோட டிரஸ்ஸிங்…உங்க கையிலிருக்க காப்பு எல்லாமே அவரை மாதிரி தான் இருக்கு…உங்களோட சிக்ஸ் பேக் கூட அப்படியே இருக்கு…நீங்க ஜிம் போறீங்களா என்ன?” என படபடவென பேசியவளை பார்த்து தலையாட்டி சிரித்தான் அவன்.

இருவரும் பேசிக்கொண்டே அவனது மகிழுந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“தங்கச்சி…உனக்கு லேசர் கண்ணும்மா…எப்படி ஃபர்ஸ்ட் டைம் பார்த்தவுடனே நான் சிக்ஸ் பேக் வைச்சிருக்கேன்னு கண்டுப்பிடிச்சே” என்று கேட்டவாறே அவளிற்கு அவன் கதவை திறந்துவிட,

அவளோ திறந்திருந்த கதவினூடே உள்ளே ஏறாமல் “அண்ணா அதெல்லாம் நான் சூப்பரா கண்டுப்பிடிச்சிடுவேன்…ஏனால் அம்மாவுக்கு தெரியாமல் நிறைய தடவை அந்த படத்தை நான் போனிலே பார்த்திருக்கேன் தெரியுமா?அவ்வளவு பிடிக்கும் அந்த படம்” என அவனை நெருங்கி ரகசிய குரலில் கூறி கிளுக்கி சிரித்தவளின் பேச்சில் அவளின் அப்பாவித்தனம் வெளிப்பட்டது.

அவளின் இந்த கள்ளம்கபடமில்லாத குணம் ஆடவனை கவர்ந்திழுக்க,அவளை தன் தங்கையாகவே அவனின் மனதில் பதிய வைத்தது.

அதனால் அவனின் உள்ளம் கனிந்திட “சரி சரி இந்த ரகசியம் நமக்குள்ளவே இருக்கட்டும் தங்கச்சி…நீ முதல்ல காரிலே ஏறு…நமக்காக அங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என ஆதுரத்துடன் மொழிய,

“ஓ சாரி அண்ணா…தொண தொணனு பேசிட்டே இதை மறந்திட்டேன் பாருங்க” என செல்லமாக நாக்கை கடித்துவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

அவளின் பாவாடை வெளிப்புறமாக சிதறி விழுந்ததை அவள் எடுக்க குனிய,

“நீ உட்காரும்மா…நான் எடுத்து விடறேன்” என அவளை தடுத்து நிறுத்திவிட்டு,ஆண்மகனிற்கு உரிய எவ்வித ஆணவமும் இல்லாமல் அவளின் உடையை வெளியிலிருந்து எடுத்து மகிழுந்தினுள் படரவிட்டு கதவை சாற்றினான்.

பாவையவளிற்கோ ஆடவனது இந்த செயல் அவளின் நெஞ்சை அசைத்து பார்த்தது.

பட்டம்மாள் தவிர அவளிற்காக யாவரும் இதுப்போலான செயலை செய்ததில்லை.

ஆடவனது இந்த ஒரு செயல் அவளை இளவரசியாய் உணர வைத்திட,அவளின் நெஞ்சம் விம்மி தணிந்தது.

தன்னை இளவரசியாய் உணர வைக்கும் ஆடவனாய் எந்த பெண்ணிற்கும் தான் பிடிக்காது.

வீரை அவளிற்கு அளவுக்கதிகமாய் பிடித்துப்போனது.

முதல் பார்வையிலே அவளை அவன் கவர்ந்திருக்க,அவனின் மீது சகோதரத்துவமான ஒரு அன்பு உருவெடுக்க ஆரம்பித்தது.

அதனால் உள்ளம் உருகிட “தேங்க்ஸ் அண்ணா” என கரகரத்த குரலில் அவள் உரைக்க,

அவனும் “இருக்கட்டும் டால்” என தன்னை மீறி நெகிழ்ச்சியுடன் கூறியவன்,தன்னை மீறி அவளின் சிகையை வருட தன் கரத்தை தூக்கியிருந்தான்.

அதன்பிறகே அவன் செய்யவிருக்கும் செயலையும் அவளை அவன் அழைத்த விதத்தையும் கவனித்த வீர் சட்டென சுதாரித்தான்.

ஏனோ அவனின் மனம் அவளை பார்த்ததிலிருந்து அவன் வசமில்லை.

‘டால்’ என்னும் அழைப்பு அவனிற்கு நெருக்கமான நபருக்கான பிரத்யேக அழைப்பு.

அவள் தன் வாழ்வில் இல்லாமல் சென்ற சமயத்திலிருந்து அவன் எந்தவொரு பெண்ணையும் இந்த பெயரிட்டு அழைத்ததில்லை.

தன்னை மீறி வெளிவந்த அழைப்பில் அவனின் விழிகள் இலேசாக கலங்கிவிட்டன.

கண்ணீரை சிந்தி பல வருடங்கள் கடந்துவிட்ட இந்த முரட்டு ஆடவன்,இன்று இரண்டாவது முறையாக கலங்கிப்போனான்.

அவனின் கலங்கிய கண்களை கண்ட முகிழ்மதியோ “என்னாச்சு அண்ணா?” என பதறிப்போய் வினவ,

“நத்திங்” என அவன் கண்ணீரை உள்ளிழுத்து புன்னகைக்க முயன்ற சமயத்தில் “ம்க்கும்” என யாரோ தொண்டையை செருமும் சத்தம் கேட்டது.

தன்னருகே கேட்ட அந்த சத்தத்தில் பாவையவள் திடுக்கிட்டு திரும்ப,அங்கு அவர்கள் இருவரையும் விழிகளால் உறுத்து விழித்தப்படி அமர்ந்திருந்த ரத்தினவேலை பார்த்தவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
 

முகிழ்மதி 11


 

 

ரத்தினவேலை பார்த்ததும் அவளின் மேனி வெடவெடத்து இரத்தப்பசையின்று வெளுத்துப்போனது.

அவனோ அவளை அழுத்தமாக ஏறிட்டவன் “உங்க பாசமலர் நாடகம் முடிஞ்சிட்டால் வண்டிய கொஞ்சம் எடு” என வீரிடம் கட்டளையிட,

வீர் ரத்தினவேலை ஒரு முறை புருவம் சுருக்கி பார்த்துவிட்டு முகிழ்மதியை நோக்கினான்.

முகிழ்மதி ரத்தினவேலை கண்டு அஞ்சுவது அவனிற்கு நன்றாகவே தெரிந்தது.

அதனால் நண்பனை ஏறிட்ட வீர் “அந்த பொண்ணு உன்னை பார்த்து பயப்படுது பூபதி…கொஞ்சம் பயம் காட்டாமல் தான் இருடா” என இறைஞ்சதலாக அவனிடம் வேண்ட,

அவனோ மீசையை முறுக்கிவிட்டப்படி “நான் என்ன சிங்கமா புலியா பயப்படறதுக்கு” என இதழை வளைத்து அவளை பார்த்தப்படி கூறினான்.

வீரோ ‘விளங்கிடும்…இந்த மூர்க்கன்கிட்ட பேசறதுக்கு நாம்ப சும்மாவே இருக்கலாம்’ என ஆயாசத்துடன் எண்ணி,

முகிழ்மதியிடம் திரும்பியவன் “தங்கச்சிம்மா அவர் பார்க்க கொஞ்சம் முரட்டுத்தனமா தெரிஞ்சாலும் நல்ல பையன் தான்…நீ பயப்படாதே…உன் கூட தான் நான் இருக்கனே” என அச்சத்துடன் மிரண்டவளிற்கு சமாதானம் கூறினான்.

அவளோ நம்பாமல் ‘நிஜமாவா?’ என்பது போல் வீரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ரத்தினவேலை ஏறிட,

அவனோ அவளை அழுத்தமாக பார்த்திருந்தானே ஒழிய எதுவும் பேசவில்லை.

அவள் அவனை பதிலுக்காக பார்த்திருக்க,அதை கவனித்த வீர் “உனக்கு பயமா இருந்தால் முன்னாடி வந்து உட்கார்ந்துக்கோம்மா” என அவளை பாசத்துடன் அழைக்க,

அதுவரை மௌனமாக இருந்த ரத்தினவேல் “வீர் பேம்பெர் பண்ணது போதும்…நீ முதல்ல வண்டிய எடு” என அதட்ட,

வீர் முகிழ்மதியை பார்க்க,அவள் இப்போது சிறிது ஆசுவாசமாக அமர்ந்திருந்தாள்.

வீரின் வார்த்தைகள் அவள் நம்பினாள்.

அதையும் மீறி அவனின் மீது அவளிற்கு நம்பிக்கையும் வந்திருந்தது.

அதனால் அவனை மீறி ரத்தினவேல் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று திடமாக நம்பியதின் விளைவால் அவள் அமைதி காத்தாள்.

அதையறிந்த வீர் சிறு முறுவலுடன் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து வண்டியை எடுத்தான்.

ரத்தினவேலின் விழிகள் அவளின் மீதே பதிந்திருப்பதை கண்ட பெண்ணவளின் மேனியில் ஒரு நடுக்கம் ஓடி மறைய,அவள் மெதுவாக கதவை ஒட்டி அமர்ந்துக்கொண்டாள்.

விட்டால் அந்த கதவை திறந்து கீழே குதித்து விடுவது போல் அமர்ந்திருந்தவளை கண்டு சலிப்பாக தலையசைத்துக்கொண்டான் ரத்தினவேல்.

பாவையவளோ மெதுவாக பக்கவாட்டாக திரும்பி அவனை மிரட்சியுடன் ஏறிட,அதேசமயம் அவனுமே அவளை தான் புருவம் நெரிய பார்த்திருந்தான்.

அவள் தன்னை திரும்பி பார்த்தவுடன் ‘என்ன’ என்பதாய் அவன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டதும்,

அவளின் முகம் குப்பென்று வியர்த்துவிட,சட்டென சிரம் தாழ்த்தி வேறுப்புறம் திரும்பிக்கொண்டாள்.

அவனின் பார்வை அவளிற்குள் என்னவோ செய்தது.

அவனின் பார்வை அவளின் இதயத்தை நேரடியாய் துளைக்க,அது அவளின் மேனியில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கியது.

‘என்ன பார்வைடா இது?’ என அவள் தவிப்புற்று கலங்கும் போதே,அவளிற்கு அன்றைய நாளின் நினைவு மனதில் எழுந்தது.

உடனே தனது இடையில் சொருகியிருந்த அவனது கைக்குட்டையை கையில் எடுத்தாள் பாவையவள்.

இன்று அவனை கண்டால்,அவனிடம் எப்படியாவது தந்துவிட வேண்டும் என முடிவெடுத்து வந்திருந்தாள்.

ஆனால் இப்போது அவனிடம் அந்த கைக்குட்டையை கொடுக்க அவளிற்குள் சிறு தயக்கம்!

அதனால் அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் தலைகுனிவதுமாக இருந்த முகிழ்மதியை கண்ணாடியின் வழியே கவனித்த வீர் “முகிழ்மதி ஏதாவது வேணுமா?காரை வேணா நான் ஓரங்கட்டி நிறுத்தட்டுமா?” என கனிவுடன் கேட்க,

அவளோ முன்னால் திரும்பி “இல்லீங்க அண்ணா…ஒண்ணுமில்லை” என வெகு சிரமப்பட்டு புன்னகைத்தவளை கண்டு வருந்தினான் வீர்.

அவளின் உருவம் மட்டுமே வளர்ச்சியடைந்திருக்க,அவள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள் என எண்ணி,அவளிற்காக கவலையுற்றான் அவன்.

அதனால் “சரிம்மா தங்கச்சி…உனக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட தயங்காமல் கேளு…உனக்கு இந்த அண்ணா இருக்கேன்..ஓகேவா” என சிறுக்குழந்தையிடம் பேசுவது போல் மென்மையாக பேசியவனை விழி விரிய நோக்கி புன்னகைத்தாள் முகிழ்மதி.

இருவருக்குமிடையே ஒரு ஆழமான உறவு உருவாகியிருந்தது.

புதிதாக இன்று தான் அவளை பார்க்கிறான் என்ற எண்ணமே அவனிடமில்லை.

பல வருடங்களாக ஒன்று இணைந்து உருவாகிய ஆத்மார்த்தமான பந்தம் போல் இருவருக்கும் தோன்றியது.

அவளை கண்ட முதல் நாளே பெண்ணின் உள்ளம் அறிந்து செயல்பட்ட வீரின் குணத்தை கண்டு பிரம்மித்தாள் காரிகையவள்.

அதனால் சஞ்சலத்துடன் இருந்தவளின் மனம் இலேசாகிட “சரிங்க வீர் அண்ணா” என குழந்தை போல் தலையாட்டியவள்,

அவனிருக்கும் துணிச்சலில் “இந்தாங்க உங்களோட கர்ச்சீப்” என ரத்தினவேலிடம் கைக்குட்டையை நீட்டினாள்.

தமக்கையின் கணவரை ‘மாமா’ என்றழைப்பது வழக்கம்!

ஆனால் இயல்பாகவே அவனை அவ்வாறு அழைக்க அவளின் கூச்சம் தடுத்தது.

அதன் காரணம் தான் ‘ஏன்’ என்று தெரியவில்லை.

அதனால் மொட்டையாக அவனை பன்மையில் விளித்தாள்.

அவனோ அவள் நீட்டிய கைக்குட்டையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் “ஒருத்தருக்கு கொடுத்த பொருளை திரும்ப வாங்கற பழக்கம் எனக்கில்லை…அதனால் நீயே வைச்சுக்கோ” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

முன்னாலிருந்து அதை கேட்ட வீரோ ‘இவன் எப்போடா இந்த புள்ளைக்கு கர்ச்சீப் கொடுத்தான்…என்னடா நடக்குது இங்கே’ என்பது போல் கண்ணாடியின் வழியே இருவரையும் கூர்ந்து நோக்கினான்.

ஏனெனில்,ரத்தினவேல் அவ்வளவு எளிதில் யாருக்கும் தன்னுடைய பொருளை கொடுத்துவிட மாட்டான்.

அவனிற்கு உரிமையான பொருளை யாரேனும் தீண்ட நினைத்தால் கூட எரிமலையாய் வெடித்து சிதறிவிடுவான்.

அதனால் அவனின் குடும்பத்தில் இருப்பவர்களே அவனின் பொருளை தொட அஞ்சுவார்கள்.

அப்படியான ஒரு சூழ்நிலையில் இந்த பெண்ணிடம் எவ்வாறு அவனது கைக்குட்டை இடமாறியது என குழப்பமாய் இருவரையும் நோக்கினான்.

அத்தோடு காஞ்சனா மாலா முகிழ்மதியை அழைத்து வரும்படி பணித்தவுடன் “சரி பாட்டி” என தலையாட்டி வெளியே வந்தவனை தடுத்து நிறுத்திய ரத்தினவேல் “எங்க போறே நீ?” என விசாரித்தான்.

அவன் விபரம் உரைத்ததும் சில நிமிடங்கள் யோசித்தவன்,பின்பு மீசையை முறுக்கிவிட்டு “நானும் உன் கூட வர்றேன்” என ஆணையாக இயம்ப,

“டேய் நீ எதுக்குடா வர்றே?நான் அந்த பொண்ணை கூட்டிட்டு உடனே வந்திடுவேன்” என வீர் புரியாமல் சொல்ல,

அவனை உற்று நோக்கியவன் “வீர் சொல்லறதை மட்டும் செய்…தட்ஸ் யுவர் ஜாப்” என அழுத்தமாக கூறியவுடன்,அவனால் எதுவும் பேச முடியவில்லை.

நண்பனை எதிர்த்து பேச முடியும்?

முதலாளியை எதிர்க்க முடியாதே?

அதனால் அவனை வண்டியில் ஏற்றி அழைத்து வந்தான்.

ஆனால் மனதிற்குள் ‘இவன் எதுக்கு வர்றான்?ஏதோ சரியில்லையே’ என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

இப்போது இந்த கைக்குட்டை கதை தெரிய வரவும்,வீரின் மனதில் சலனம் தோன்ற ஆரம்பித்தது.

அதனால் செவியை கூர்த்தீட்டி ‘என்ன நடக்குது இங்கே?’ என கவனித்தான்.

கைக்குட்டையை தன்புறம் நகர்த்திய முகிழ்மதி சங்கடமாக அவனை  ஏறிட்டு “ஆனால் இது உங்க கர்ச்சீப் ஆச்சே…நான் எப்படி இதை வைச்சுக்க முடியும்?அடுத்தவங்க பொருளை நாம்ப வைச்சுக்கிறது தப்பில்லையா?” என கைக்குட்டையை கண்ணால் காட்டி பாவமாக அவள் கேட்க,

ரத்தினவேல் அவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கிவிட்டு,பின்பு தொண்டையை செருமியவன் “அடுத்தவங்க பொருளை திருடி வைச்சுக்கிறது தான் தப்பு…இதை நான் தானே உன்கிட்ட கொடுத்தேன்…அதனாலே தப்பில்லை” என்றான் மென்மையான குரலில்.

இப்போது அவனின் முகமும் குரலும் கனிந்திருந்தது.

விந்தையிலும் விந்தையாக அவனை அறியாமலே அவனின் மனம் அவளிடம் மட்டும் மிருதுவாய் மாறிவிடுகிறது.

அவளிற்கு என்று வரும் போது அவனின் சிந்தை கூட அவனிற்கு எதிரியாகவிட,அதன் காரணம் தான் அவனிற்கும் புலப்படவில்லை.

காரிகையோ அவன் சொன்னதை கேட்டு “ஓ” என இதழை குவித்தவள்,குனிந்து ஒரு யோசனையுடன் கைக்குட்டையை நோக்கினாள்.

‘ஒரு வேளை நான் யூஸ் பண்ணதாலே மறுபடியும் எப்படி யூஸ் பண்ணறதுனு யோசிக்கிறாரோ?அதுவும் சரி தான்…இவ்வளவு பெரிய ஆளு…எதுக்காக மத்தவங்க யூஸ் பண்ணதை திரும்ப யூஸ் பண்ணனும்’ என தனக்குள்ளே ஒரு புரிதலுக்கு வந்தவள்,அந்த கைக்குட்டையை மீண்டும் இடையில் சொருகிக் கொண்டாள்.

அவன் ஒரு அர்த்தத்தில் கூறியிருக்க,அவள் புரிந்துக்கொண்டதோ வேறு!

அதை ஆடவனவன் தான் அறியவில்லை.

ஆனால் அவனின் கூரிய விழிகள் மட்டும் தனது கைக்குட்டை இடம்பெற்றிருந்த அவளின் வெற்றிடையை ஒரு பார்வை பார்த்துவிட்டு,பின்பு ஒரு பெருமூச்சுடன் விலகியது.

அதன்பிறகு வாகனத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி!

யாரும் எதுவும் பேசவில்லை.

சில கணங்களுக்கு பிறகு,பூபதி குடும்பத்தினரின் மாளிகையும் வந்துவிட்டது.

வானை முட்டும் உயரத்தில் ஓங்கி வளர்ந்திருந்த அந்த வெண்ணிற மாளிகையை கண்டு முகிழ்மதி “ஆ”வென வாயை பிளந்தாள்.

மகிழுந்து கண்ணாடி திரையின் வழியே அந்த ஐந்தடுக்கு பழங்கால மாளிகையை பார்த்தவளிற்கு பிரம்மிப்பு உண்டாகியது.

இது ஒரு சாதாரண மாளிகை அல்ல.

ஒரு அற்புதமான மாளிகையை போல் தோன்றும் மிகவும் பிரம்மாண்டமான அரண்மனை!

சூரியனின் பொன்னிற ஒளியில்  அந்த பளிங்கு நிற மாளிகை பிரகாசத்துடன் மின்னியது.

சுவர்களில் பளபளக்கும் தங்க நிற விளக்குகள்,கட்டிடத்தின் நுட்பமான வடிவமைப்புகள், கம்பீரமான குவிமாடங்கள்,அங்கே சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த தங்க நிற சிற்பங்கள்– இவை அனைத்தும் அந்த மாளிகையின் பெருமையையும் பழங்கால மரபையும் வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது.

முகிழ்மதி தன் வாழ்நாளில் பல விலையுயர்ந்த கட்டிடங்களை பார்த்திருக்கிறாள்.

ஆனால் அவை எதுவும் பெண்ணவளின் மனதை இதுப்போல் கொள்ளை கொண்டதில்லை.

முதன்முறையாய் ஒரு மாளிகையின் கட்டிடக்கலை அவளை வெகுவாய் கவர்ந்திழுத்தது.

அதனால் விழிகள் இரண்டும் வியப்பில் விரிய “வாவ்…பேலஸ் எவ்வளவு சூப்பரா இருக்கில்லை” என சிறுப்பிள்ளையின் உற்சாகத்துடன் கேட்டுக்கொண்டே ரத்தினவேலை திரும்பி ஏறிட்டாள்.

அவளின் விழிகள் இரண்டும் பரவசத்துடன் மின்னியதை உணர்வுகற்று பார்த்தான் அவன்.

ஆனால் அவனின் வெறுமையான முகத்தை பார்த்தவுடன் அவளின் புன்னகை மறைந்து முகம் கும்பிப்போனது.

வீருக்கு தான் அவளின் சோர்ந்த முகத்தை கண்டாலே பிடிக்காதே?

அதனால் அவன் “உனக்கு இந்த பங்களா ரொம்ப பிடிச்சிருக்கா முகிழ்மதி?அப்படியென்ன இந்த பங்களாவில் ஸ்பெஷல்” என அவளின் மனதை திசைமாற்ற கேள்வி கேட்க,

இப்போது மீண்டும் அவளின் முகம் பளீச்சிட்டது.

அவளிற்கு மிகவும் பிடித்தது கட்டிடக்கலை.

அவளிற்கு வருங்காலத்தில் ஒரு கட்டிட கலை வல்லுநராக வேண்டும் என்பதே இலட்சியம்.

அவளிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை பற்றி பேச கசக்குமா என்ன?

அதனால் அவனின் கேள்வி அவளை தூண்டிவிட,அவனிடம் தன் மனதை திறக்க ஆரம்பித்துவிட்டாள் பாவையவள்.

“என்ன அண்ணா இப்படி கேட்டுட்டீங்க?இந்த பேலஸோட ஸ்பெஷலே அந்த சிலையும் கோல்டன் லைட்டும் தான்…நிஜமா அந்த அலங்கார சிலையோட வேலைப்பாடு எல்லாமே செம்ம சூப்பரா இருக்கு…எல்லாமே பளிங்கு கல்லிலே செதுக்கி பண்ணியிருக்காங்க…வழவழப்பான அந்த கல்லிலே சிலை செதுக்கிறது ரொம்பவே கஷ்டம்…அது தான் இங்க ஹைலைட்டே…அதுக்கு ஏத்த மாதிரி அந்த கோல்டன் லைட் அன்ட் பெயிண்ட் அட்டகாசமா இருக்கு…கண்டிப்பா இதை டீசைன் பண்ண ஆர்க்கிடெக்ட் ரொம்ப ரசனைக்காரனா தான் இருந்திருப்பாருனு நினைக்கிறேன்” என மடைத்திறந்த வெள்ளமென அந்த கட்டிடத்தை பற்றி சிலாகித்து பேசியவள்,அந்த கட்டிடத்தை வடிவமைத்த கலைஞரையும் பாராட்டியிருந்தாள்.

அதையெல்லாம் நிதானமாக கேட்ட வீர் “அப்படியா?” என ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே நண்பனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

அவனோ “ம்க்கும்” என தொண்டையை செருமி வேறுப்புறம் திரும்பிக் கொண்டான்.

ஏனெனில்,அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளரே ரத்தினவேல் ரகுநாத பூபதி தான்!

சில வருடங்களுக்கு முன்பு இந்த கட்டிடத்தின் வடிவமைப்பை முழுமையாய் மாற்றி சீர் செய்து இந்த மாளிகையின் அழகிய தோற்றத்திற்கு காரணமானவன் பூபதி.

சிறு வயதிலிருந்தே அவனிற்கு பிரத்யேகமாக கட்டிடக்கலையின் மீது அலாதி விருப்பம்!

இப்போது அவனது குடும்பத்திற்கு உரிமையாக ஒரு பிரம்மாண்ட கட்டிடக்கலை நிறுவனமே இருக்கிறது.

அரசியலில் அவனின் பங்களிப்பு இருந்தாலும்,அவனின் முற்று முதல் தொழிலே இது தான்!

அதையறியாத பாவையவளோ “என்ன அண்ணா அப்படியானு அசால்ட்டா சொல்லுறீங்க?அவர் மட்டும் யாருனு தெரிஞ்சா நான் அவரை என் குருவாவே ஏத்துப்பேன்…விட்டால் அவரை கல்யாணம் கூட பண்ணிப்பேன்…அந்த அளவு இது பிடிச்சிருக்கு” என மாளிகையின் மீது கண்ணை பதித்தப்படி படபடத்தாள் அவள்.

அவளிற்கு இருந்த சந்தோஷத்தில் ‘என்ன பேசுகிறோம்?’ என்று அறியாமலே பேசியிருந்தாள்,அந்த பத்தொன்பது வயது மங்கையவள்

ஆனால் ரத்தினவேலோ அவளின் விளையாட்டு பேச்சை கேட்டு சட்டென திரும்பி அவளை இமைகள் இடுங்க வெறிக்க,

வீரோ “அது சரி” என இதழ்கடித்து சிரித்தப்படி முன்னால் திரும்பிக்கொண்டான்.

அவனால் தன்னுடைய சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

தோழனின் முன்பு சிரித்தால் அவனிடம் வாங்கிக்கட்ட நேரிடும் என்று அறிந்தே உஷாரானான்.

அந்தோ பரிதாபம்!

என்ன முயன்றும் ரத்தினவேல் அவனின் சிரிப்பை நொடியில் அவதானித்து இருந்தான்.

உடனே அவனின் முகம் ரௌத்திரத்தில் சிவந்துவிட “பேசினது போதும் நீ முதல்ல கீழே இறங்கு..” என முகிழ்மதியை பார்த்து உறுமியவன்,

“நீ முதல்ல வண்டியை எடுடா” என வீரை பார்த்து கத்தினான்.

முகிழ்மதிக்கோ அவன் திட்டியதும் மேனி நடுங்கிட மீண்டும் அவளின் முகம் வாடிவிட்டது.

அதனால் “ம்” என சோகமாக கூறி வண்டியின் கதவை திறந்து இறங்க முயற்சித்தாள்.

வீருக்கும் அவன் கோபமாகிவிட்டான் என்பது புரிய,அவனது இதழிலிருந்த சிரிப்பு மறைந்துப்போனது.

அதற்குள் அவள் கீழிறங்க சிரமப்படுவதை கண்டு “இரும்மா‌…நான் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணறேன்” என வீரே கீழிறங்கி வந்து அவளிற்கு உதவி செய்தான்.

அவளும் கவனமாக கீழிறங்கி வந்து “தேங்க்ஸ் அண்ணா” என இதழ்பிரித்து புன்னகைத்தாள்.

“நோ மென்ஷன்மா” என பதிலுக்கு புன்னகைத்த வீர் இப்போதும் அவளின் சிகையை வருட கையை தூக்கியிருந்தான்.

அதற்கு பின்பே தான் செய்யவிருக்கும் காரியம் உணர்ந்து தன் கரத்தை அடக்கிக்கொண்ட வீரின் முகம் மாறிப்போனது.

ஆனால் வலுக்கட்டாயமாக அவளிற்காக சிரித்துக்கொண்டே “சரிம்மா நீ உள்ளே போ” என அவளை வழியனுப்பி வைத்துவிட்டு வண்டியில் ஏறியவனின் மனம் சஞ்சலத்துடன் தவித்தது.

தோழன் அகத்திற்குள் படும் வேதனையை அவனின் முகத்தின் வழியே அறிந்த ரத்தினவேல் “வீர் ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கோ…அவ ஒண்ணும் நட்சத்திரா கிடையாது” என அழுத்தமாக உரைக்க,

‘நட்சத்திரா’ என்ற பெயரை கேட்டதும் சட்டென அவனின் கண்கள் கலங்கிவிட்டன.

“ஐ நோ டா…பட்…” என அவன் தழுதழுத்த குரலில் ஆரம்பிக்கும் போதே,

அவனின் முன்பு ஒற்றை கைநீட்டி தடுத்து நிறுத்தியவன் “ஷி இஸ் நோ மோர்…அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என திடமான குரலில் கூறினான்.

சடுதியில் சிவராமனை நினைத்து அவனின் முகம் மாறிவிட “அன்ட்  ஒன் மோர் கண்டிஷன்…அவ கூட நீ நெருங்கி பழகாமல் இருக்கிறது தான் உனக்கு நல்லது…அப்புறம் நீ தான் வருத்தப்படுவே” என்றான் இறுகிய குரலில்.

அவனின் குரலில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதை அறிந்த வீரோ சரெலென்று அவனின் புறம் திரும்பினான்.

நண்பனின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய வீர் “பூபதி நீ என்ன செய்யப்போறே?அவளை ஏதாவது செய்யப்போறீயா?” என நெஞ்சம் படபடக்க வினவ,

ரத்தினவேலோ உறுத்து விழித்த விழிகளுடன் அவனை பார்த்திருந்தானே ஒழிய எதுவும் பேசவில்லை.

“பூபதி…” என தவிப்புடன் ஆரம்பிக்கும் போதே,அவனின் விழிகளில் கனல் கூடியது.

கண்ணாலே அதற்கு மேல் பேசவேண்டாம் என அவன் எச்சரிக்கை செய்ய,வீர் பட்டென்று அடங்கிப்போனான்.

ஆனால் வீரின் மனம் மட்டும் புதிதாக அறிமுகமாகிய தங்கைக்காக பதறித்துடித்தது‌.

அவளிற்கு ஏதேனும் நடந்துவிடுமோ என்று நினைக்கும் போதே,அவனின் உயிரை பிடிங்கி எறிவது போன்ற ஒரு வலி அவனுள் உருவாகியது.

அதனால் ‘என்ன நடக்கப்போகுதோ?’ என்று உயிரை கையில் பிடித்து அவளிற்காக அவனின் உள்ளம் பரிதவிக்க,இதேநேரம் முகிழ்மதியின் வீட்டிற்குள் மறைந்து நின்றிருந்த அந்த காமூகன் விஜயலட்சுமியின் எண்ணிற்கு தொடர்புகொண்டான்.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top