முகிழ்மதி 8,9

முகிழ்மதி 8:

“பூபதி இதெல்லாம் சரியா வரும்னு நினைக்கிறீயா?எனக்கு அந்த துரோகியை பார்த்தாலே அடிச்சு கொல்லணும் போலே தோணுது” என ஆக்ரோஷமாக விஜயேந்திர பூபதி உரைக்க,

சிவராமனை பற்றி எண்ணினாலே அவனிற்குள்ளும் வெடித்து சிதறப்போகும் எரிமலையின் சீற்றம் தான்!

இப்போதே சிவராமனை நடுதெருவில் ஓடவிட்டு வெட்டி கொல்லும் வெறி அவனுள் கிளர்ந்தெழுந்தாலும்,அவன் தன்னை அடக்கிக்கொண்டான்.

“அப்பா எனக்கும் அந்த வெறி நெஞ்சு நிறைய இருக்கு…ஆனால் அரசியல் வேற பர்சனல் வேற…எனக்கு சந்திரமதியை பிடிச்சிருக்கு…தட்ஸ் இட்” என திட்டவட்டமாக கூறி,அத்துடன் அவன் பேச்சை முடித்துக்கொண்டான்.

ஏனெனில்,தந்தைக்கு கூட தன் பழிவாங்கும் படலத்தை பற்றி தெரிவிக்க அவன் விரும்பவில்லை.

தந்தையின் குணம் பற்றி ரத்தினவேல் நன்கு அறிவான்.

அவர் சில நேரங்களில் இளகிய மனம் உள்ளவராய் நடந்துக்கொள்வார்‌.

ஏனெனில்,ஒரு பெண்ணிற்கு தந்தையானவரால் மற்றொரு பெண்ணிற்கு பாதகம் விளைவிக்கும் செயலை செய்வதை ஏற்க முடியாது.

அதை அவர் ஒரு காலமும் விரும்பமாட்டார் என்று அறிவான்.

ஆகையால்,தகப்பனின் மனம் அறிந்த தனயன் அனைத்தையும் மறைத்துவிட்டான்.

மகனின் சொற்களை நம்பிய தந்தையும் வேறுவழியின்றி “சரி விடுப்பா…நீ சொன்ன மாதிரி அரசியல் விஷயத்தை சொந்த வாழ்க்கையிலே கலக்க விடக்கூடாது…உனக்கு என்ன தோணுதோ செய்…உன் வாழ்க்கை நல்லாயிருந்தால் எனக்கு அதுவே போதும்” என மகனின் ஆசையை மதித்து விட்டுக்கொடுத்தவர்,

பின்பு இருக்கையில் அமர்ந்து “ஆமா பூபதி…வெள்ளிக்கிழமை நிச்சயத்தார்த்துக்கு யாரையெல்லாம் இன்வைட் பண்ணனும்…நீ சொல்லறப்படியே செய்திடலாம்…சொல்லு” என்று மகனின் திருமண வேலையில் பங்குக்கொள்ள முன் வந்தார் பெரியவர்.

தந்தையின் புரிதலில் ரத்தினவேலின் இதழோரம் புன்னகை ஒன்று உதயமாகியது.

“அப்பா இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்…நீங்க வேற ஒரு வேலை செய்யணுமே?” என்றவனின் முகம் இப்போது தீவிரத்தை தத்தெடுத்திருந்தது.

அதுவரை அவனிடம் இருந்த இளக்கம் மறைந்து கண்களில் ஒரு ரௌத்திரம் குடியேறின.

அவரிடம் அரசியல் சம்மந்தமாக சில விஷயங்கள் பேசியவன்,சிவராமனை அழித்து ஒழிப்பதற்கான மேலும் சில திட்டங்களை எடுத்துரைத்தான்.

அவை அனைத்திற்கும் அமைதியாய் செவிமடுத்த விஜயேந்திரன் “நீ சொல்லற மாதிரியே செய்திடலாம் பூபதி…டோன்ட் வொர்ரி…எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என மகனிடம் உறுதிமொழி கூறினார்.

அவருக்கு ‘திருமணம் நடக்கவிருக்கும் வேளையில் இதெல்லாம் தேவையா?’ என மனதில் சிறு நெருடல் உண்டாகினாலும்,அவர் மகனிடம் எவ்வித மறுப்பும் கூறவில்லை.

அவன் செய்வது அனைத்தும் சரியாக இருக்கும் என்று நம்பினார்.

ரத்தினவேல் புருவம் நெரிய “அப்பா இந்த விஷயத்திலே ஒரு தப்பும் நடக்கக்கூடாது…அப்படி நடந்தால் நம்ப அரசியல் வாழ்க்கையே அஸ்தமானமாகிடும்” என கடுமையாக எச்சரித்தான்.

“நீ சொல்லறது புரியுது பூபதி…இந்த காரியத்துக்கு நான் நம்ப ஆட்கள் யாரையும் யூஸ் பண்ணாமல் அவன் வீட்டு ஆளை வைச்சே வேலைய முடிக்கிறேன்…நீ என்னை நம்பலாம்” என அவரும் திடமாக பேசி,அவனிற்கு வாக்குறுதி வழங்கினார்.

அதன்பிறகே சிறிது தளர்ந்து அமர்ந்த பூபதியை பார்த்த விஜயேந்திரன் “அப்புறம் பூபதி…பொண்ணு வீட்டுக்காரங்க நம்ப வீட்டுக்கு வராங்கனு அம்மா சொன்னாள்…எப்போ வராங்களாம்?” என அவர் விசாரிக்க,

“இன்னைக்கு தான்ப்பா” என்றான் அவன் சர்வ சாதாரணமாக.

அதில் திகைத்தவர் “ஏதே இன்னைக்கா?இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கேப்பா” என விஜயேந்திரன் அவனிடம் வினவ,

அவனோ இலேசாக முறுவலித்து “நான் இல்லைனா என்னப்பா?” என்றவன்,கண்ணாலே காஞ்சனா மாலாவின் புகைப்படத்தை காட்டினான்.

அனைவரையும் சமாளிக்கும் வல்லமை படைத்த வித்தகர் அவர்.

அவர் இருக்கையில் இவர்கள் எதற்காக தயங்க வேண்டும்?

அந்த குடும்பத்தின் ஒற்றுமையின் பலமும் அவரே தான்.

அதை உணர்ந்த விஜயேந்திரனிற்கும் தாயை நினைத்து பெருமிதமாக இருந்தது.

“அப்போ நாம்ப சங்கடப்பட வேண்டிய அவசியமே இல்லை…அம்மா எல்லாம் பார்த்துப்பாங்க” என சிரித்துக்கொண்டே அவர் சொல்ல,அவனும் ‘ஆம்’ என ஆமோதிப்பாக தலையசைத்தான்.

இவர்கள் வகுத்த திட்டத்தின் படி,இவர்களது கட்சிக்கு எதிராக சிவராமன் சேகரித்த ஆதாரங்கள் யாவும் காற்றோடு காற்றாய் கரைந்துப்போயிருந்தது.

அவரது விரலை வைத்தே கண்ணை குத்தியது போல்,அவருக்கு விசுவாசமான ஒரு பணியாளரை வைத்தே அனைத்தையும் கைப்பற்றியிருந்தான்,அந்த வித்தகன்.

ஆதாரங்கள் யாவும் தொலைந்துப்போனதால் சிவராமன் பதறிப்போயிருந்தார்.

ஆதலால்,சிவராமன் புதிதாக இணைந்திருந்த கட்சி தலைவரின் முன்பு குற்றவுணர்வுடன் தலைகுனிந்து நின்றிருக்க,

அவரோ “யோவ் நீ அந்த கட்சியை பத்தி துப்பு கொடுக்கறேன்னு சொன்னதாலே தான் உனக்கு இங்க சீட்டே கொடுத்தேன்…இப்போ என்னடான்னா அந்த ஆளு பையனோட உன் பொண்ணுக்கு கல்யாணமாம்…நீ என்னய்யா நினைச்சிட்டு இருக்கே…பார்க்க பழம் மாதிரி இருக்கேன்னு என்னை ஏமாத்த நினைச்சியா என்ன?நான் யாருனு தெரியுமாய்யா?ஒரு சேம்பிள் காட்டட்டுமா?” என தரமிறங்கி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அரிவாளை எடுத்த எதிர்கட்சி தலைவரை மிரட்சியுடன் நோக்கினார் சிவராமன்.

சட்டென அவரின் சட்டையை கொத்தாக பற்றி கழுத்தில் அரிவாளை வைத்த சதாசிவம் “தோ பாருய்யா…நாங்க பார்க்க தான் அரசியல்வாதி…உள்ளுக்குள்ள படு லோக்கலு…ரவடியா இருந்து தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கோம்…எங்கய்யா அந்த ஆதாரம்?ஒழுங்கு மரியாதையா அதெல்லாம் என்கிட்ட கொடு” என நாக்கை மடித்து கடித்தப்படி அவர் பேச,

அவரோ உச்சக்கட்ட பயத்துடன் “ஐயா உங்ககிட்ட தரதுக்காக தான் அந்த ஆதாரம் எல்லாம் என் வீட்டுலே பத்திரமா பூட்டி வைச்சிருந்தேன்…திடீர்னு என் வீட்டுலே வைச்ச ஆதாரமெல்லாம் காணலைங்கய்யா” என திக்கி திணறி ஒரு வழியாக அவர் கூறி முடிக்க,அவருக்கு வந்ததே ஆத்திரம்!

உடனே கையில் இருந்த  அரிவாளால் சிவராமனின் வலது கரத்தில் ஒரு கீறலை போட்டிருந்தார் அந்த கொடூரன்.

“ஆ…” என அவர் வலியில் துள்ளிகுதித்து அலறியதை சிறிதும் மனிதாபிமானின்றி குரூரத்துடன் நோக்கிய சதாசிவம் “தோடா கலர் கலரா ரீல் வுடற வேலையெல்லாம் வேற எங்கியோ வைச்சுக்கோ…என்கிட்ட வேணாம்…இன்னும் இரண்டு நாளில்லே அந்த ஆதாரமெல்லாம் என் கைக்கு வரணும்…அப்படி வரலை…உன்னை உரு தெரியாமல் அழிச்சிடுவேன்…ஜாக்கிரதை” என கட்டை குரலில் மிரட்டி அவரின் ஈரக்குலையை நடுங்க வைத்தார்.

அவரோ கரத்தில் இரத்தம் வழிய சதாசிவத்தை பார்த்திருக்கும் போதே “என்னை ஏமாத்தலாம்னு உன் சம்மந்தியோட திட்டம் போட்டே…மவனே…ஹும்” என நாக்கை மடித்து காட்டி அரிவளால் வெட்டுவது போல் சைகை செய்தார்.

அதில் அவரின் ஈரக்குலையே நடுநடுங்கிப்போனது.

வேறுவழியின்றி அவரிடம் ஒத்துக்கொண்டு வெளியே வந்தவருக்கு அடுத்து என்ன என்றே புரியவில்லை.

கிட்டத்தட்ட உயிர் பறிப்போகும் நிலை அவருக்கு!

ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் சதாசிவம் அவரை கொன்றுவிடுவார் என்று அறிந்தவரின் தேகம் மொத்தமும் பயத்தில் வியர்த்து வழிந்தது.

ஒன்றும் புரியாமல் அவர் நடுரோட்டில் பரிதாபமாய் நின்றிருப்பதை தூரத்திலிருந்து பார்த்த ரத்தினவேலின் இதழ்கள் வெஞ்சினத்துடன் வளைந்தது.

ஏனெனில்,அவர் வீட்டில் சேமித்து வைத்திருந்த ஆதாரங்கள் யாவும் மாயமாகியிருப்பதின் சூத்திரக்காரன் அவன் தானே!

திட்டமிட்டு யூகங்கள் வகுத்து அவனிற்கு துரோகம் இழைத்தவரை வென்றிருந்தான் தீரன்.

ஆனால் இவையனைத்தும் ரத்தினவேலின் கைவரிசை என்று அவர் சிறிதும் சந்தேகம் கொள்ளாதது சிவராமனது இயலாமை.

அவன் எதை எண்ணி திட்டம் தீட்டியிருந்தானோ அவை ஒவ்வொன்றாக நடந்துக்கொண்டிருந்தது.

அவர்களை பகைத்துக்கொண்டதற்கான தண்டனை அது!

அவன் அளிக்கும் தண்டனை இத்துடன் முடிவு பெறவில்லை.இது வெறும் ஆரம்பம் மட்டுமே?

வாகனத்தில் சாய்ந்து நின்று,கண்ணில் குளிர்க்கண்ணாடியுடன் இளநீரை பருகிப்படியே அவரின் அவலநிலையை ரசித்துக்கொண்டிருந்தான் அந்த இரக்கமற்ற ராட்சசன்.

அவனை பகைத்துகொள்ளாதவரை மற்றவருக்கு அவன் ரட்சகன்…

அவனை பகைத்துக்கொண்டால் அவன் ராட்சசன்..

அவனது ராட்சத அவதாரத்தை அருகே நின்று ஒரு வித ஆயாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் வீர் பிரதாப்.

வீர் பிரதாப் அவனின் ஆரூயிர் நண்பன்.

அவனின் வலது கை என்றும் கூறலாம்.

ரத்தினவேல் ரகுநாத பூபதி ‘ஹும்’ என்றவுடன் அவனின் சகோதரன் ஜித்தேந்திரன் உயிரை பறித்துவிட்டு மட்டுமே வருவான்.

ஆனால் அவனின் தோழன் வீர் உயிரை பறிப்பதோடு மட்டுமின்றி சடலம் இருந்த உருத்தெரியாமல் அழித்துவிட்டு வரும் கெட்டிக்காரன்.

ரத்தினவேலின் மறைமுக பினாமியே இவன் தான்!

உலகத்தின் திரை மறைவிற்கு பின்னால் செய்யும் செயல்கள் யாவையும் பிசிறி தட்டாமல் செய்து முடிப்பான் வீர் பிரதாப்.

வீர் பிரதாப்பிற்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லை.

அவனிற்கு என்று இருந்த உறவுகளும் இப்போது இந்த உலகத்தில் இல்லை.

ஒருவருமின்றி‌ அனாதையாய் சுற்றி திரிந்தவனிற்கு ஆதரவு அளித்து அழைத்து வந்து பாதுகாத்ததே ரத்தினவேல் தான்!

தோழனிற்கு என்று சமுதாயத்தில் ஒரு கௌரவமான அடையாளத்தையும் கொடுத்திருந்தான்.

சிறு வயதிலே வீர் இழந்துவிட்ட பொக்கிஷங்கள் ஏராளம்!

அனுபவித்த கொடூரங்களும் எண்ணில் அடங்காதவை.

ஆதலால்,அவை அனைத்திலிருந்தும் தப்பி செல்லவே ரத்தினவேலுடன் இணைந்து இப்படியான கொடூரமான செயல்களை செய்துக்கொண்டிருக்கிறான்.

ரத்தினவேல் யாவருக்கும் இரக்கம் காட்டமாட்டான்.ஆனால் வீர் அந்த அளவு வன்மை வாய்ந்தவன் இல்லை.

பெண்களின் மீது அவனிற்கு எப்போதும் ஒரு இளக்கம் இருக்கும்.

அவர்களை எதிர்க்க மட்டும் சிறிது தயங்குவான்.

அவ்வளவே?

தற்போது தோழனின் விசித்திரமான ரசனையை பார்த்த வீர் “பூபதி வரவர உன்னை பார்த்தால் எனக்கே பயமா இருக்கு” என அலுப்பாக தலையசைத்து சொல்ல,

ரத்தினவேலோ அவனின் புறம் திரும்பி அலட்சியமாக “கேட்ச்” என காலியான இளநீர் மட்டையை தூக்கி அவனிடம் வீச,

அதை சற்றும் எதிர்பாராத வீர் ஒரு கணம் தடுமாறினாலும் இளநீரை சரியாக பிடித்திருந்தான்.

உடனே அவன் தனது தோழனை முறைக்க ,

ரத்தினவேலோ ஒற்றை புருவம் உயர்த்தி “உன்னை விட வன்முறை கொஞ்சம் கம்மி தான்டா…ஏறு” என எள்ளலாக உரைத்து,ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.

“பூபதி ஏன் நீயே இதை தூக்கிப்போட மாட்டியா?” என கடுப்புடன் கேட்டுக்கொண்டே இளநீர் மட்டையை தூக்கியெறிந்து மற்றொரு புறமாக ஜீப்பில் ஏறி அமர்ந்தான் வீர்.

அவனது குடும்பத்திற்கு அடுத்தப்படியாக அவனிடம் நெருக்கமாக பேசக்கூடிய ஒரு நபர் வீர் தான்!

அதனால் தோழனின் கேள்விக்கு ரத்தினவேல் மெதுவாக பின்னங்கழுத்தில் நெட்டி முறித்தப்படி “நேத்திலிருந்து ஒரே வேலைடா…டையர்டா இருக்கு” என்று அலுப்பாக உரைக்க,

“ஆமா…ஆமா எவனை எப்படி கொல்லலாம்?எவனை எப்படி அழிக்கலாம்?இப்படி திட்டம் போட்டு போட்டு உனக்கு டையர்டா தான் இருக்கும்” என வீர் குத்தலாக சொல்ல,

அதற்கு இகழ்ச்சியாக இதழை வளைத்தவன் “அப்கோர்ஸ் வீர்…எனக்கு எதிரினு ஒருத்தன் கூட இருக்கக்கூடாது…அப்படியிருந்தால் அவன் உயிரோடவே இருக்கக்கூடாது…அது தான் எனக்கு வேணும்” என உயிரை ஊடுருவும் குரலில் கூறியப்படியே அதன் துளையில் சாவியை சொருகி,ஜீப்பை இயக்கினான் ரத்தினவேல்.

“பூபதி நீ சொல்லறதெல்லாம் ஓகே தான்…ஆனால் இது டூ மச்டா…நீ கட்டிக்கப்போற பொண்ணோட அப்பன்னு கூட பார்க்காமல் அந்த ஆளை இந்த அளவு டார்ச்சர் பண்ணறே…இது உன்னோட வாழ்க்கையை தான் பாதிக்கும்” என சஞ்சலத்துடன் அவன் எடுத்து சொல்ல,

ரத்தினவேலோ எள்ளலாக அவனை நோக்கி “வீர் நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ…அந்த ஆளோட பொண்ணுன்றதால் மட்டும் தான் அவளை நான் கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சேன்” என இரக்கமின்றி கூற,

அதைக்கேட்டு அதிர்ந்த வீர் “என்ன சொல்லறே பூபதி?நீ அவரை பழிவாங்க ஒண்ணும் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணலையே” என படபடத்த இதயத்துடனே அவன் கேட்க,

அதற்கு அவனோ நேரடியாக பதில் கூறாமல் தோழனை நோக்கி கண்சிமிட்டி சிரித்தான்.

அவனின் சிரிப்பே நிஜம் என்ன என்பதை அவனிற்கு தெரியப்படுத்திட “பூபதி இதெல்லாம் தப்பு…என்னயிருந்தாலும் அவ ஒரு பொண்ணு” என மனம் கேளாமல் நண்பனின் மனதை மாற்ற முயற்சிக்க,

அவனோ இமைகள் இடுங்க “வீர் யாருக்கும் இரக்கம் காட்டக்கூடாது…இது தான்…” என்னும் போதே,

“உன்னோட எத்திக்ஸ்” என வீர் சிடுசிடுப்புடன் அதை முடித்து வைத்தான்.

அவனால் தோழன் ஒரு பெண்ணிற்கு செய்யவிருக்கும் செயலை ஏற்க முடியவில்லை.

ஒருவரை பழிவாங்க,மற்றொருவரை அதிலும் ஒரு பெண்ணின் வாழ்வை சீரழிக்க முனைவது மனுதர்மம் அல்ல என்று எண்ணினான்.

அதனால் அவனின் முகம் துக்கத்தில் துவளுவதை பக்கவாட்டில் அமர்ந்திருந்த ரத்தினவேல் கவனித்தான்.

ஆனால் அவனிற்கு சாதகமாக எதுவும் கூறவில்லை.

சில வினாடிகள் மௌனம் காத்த வீர் மீண்டும் மனம் தாளாமல் “பூபதி” என்று ஆரம்பிக்கும் போதே,அவனின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்திவிட்டான் அவன்.

அவனின் கை அசைவுக்கு உடன்பட்டு அவனும் அமைதியாகிவிட்டான்.

ரத்தினவேலின் தேகமோ விறைத்து இறுகிவிட்டது.

நண்பன் கிழித்த கோட்டை வீர் ஒரு நாளும் தாண்டியதில்லை.அவனின் நண்பன் மட்டுமாக இருந்தால்,தோழனிற்கு உரிய புத்திமதியை கூறியிருக்க முடியும்.

ஆனால் அவனின் தீவிர விசுவாசி அவன்.

அவனை எதிர்த்து ஒரு பணியை அவனால் செய்திட முடியாது.அத்துடன் ரத்தினவேல் செய்வது அனைத்தும் சரியானது என்று எண்ணுபவன் வீர்.

அதனால் இதன் பின்னணியிலும் ஏதேனும் காரணம் இருக்கக்கூடுமோ என்று சிந்தித்து,அதற்கு மேல் அவற்றினை பற்றி அவன் உரையாடவில்லை.
 

முகிழ்மதி 9


 

 

சந்திரமதி அவளின் முன்னாள் காதலன் அனுப்பிய தகவலை வெறித்து பார்த்திருந்தாள்.

அவன் முன்பு அனுப்பிய தகவலை அசட்டை செய்து ஒதுக்கிவிட்டாள்.

ஆனால் அவனோ அவளை விடுவதாக இல்லை.

விடாமல் தொடர்ந்து அவளின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருக்கவும்,இவளிற்கு பதட்டமாகிவிட்டது.

இருவருக்குமிடையே ஒத்து வராது என்று கூறி,ஊருக்கு வரும் முன் அவர்களது காதலை ரத்து செய்துவிட்டே வந்தாள்.

அவளின் மீதுள்ள கோபத்தினாலே அவர்கள் இருவரும் இணைந்திருந்த புகைப்படத்தை அவன் இணையத்தில் பதிவிட்டிருந்தான்.

அதில் பலியானது என்னவோ முகிழ்மதி தான்!

அவள் காதலை நிராகரித்தாலும்,அவன் அவளை பின்தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தான்.

அங்கிருக்கும் வரை அவளை மிரட்டி அவளின் உடலை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தான் அவன்.

அவன் தினந்தோறும் உடலளவில் கொடுக்கும் நரக வேதனை தாங்காமலே அவள் ஊருக்கு தப்பித்து ஓடி வந்திருந்தாள்.

இங்கு வந்ததும் அவளின் திருமணம் நிச்சயமாகிவிட,அதிலும் மிகப்பெரிய சம்மந்தம் கிடைத்ததும் ‘சரி’ என்று தலையாட்டியிருந்தாள்.

முதலில் அவளிற்கு திருமணத்தில் உடன்பாடில்லை என்றாலும்,அவர்களது செல்வ நிலை அவளை ஒப்புக்கொள்ள வைத்தது.

அத்தோடு அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மற்றொரு காரணம் ரத்தினவேல்.

அன்று அவனிடம் பேசியதற்கு பிறகே அவளின் மனம் தெளிந்தது.

திருமணம் உறுதியானவுடன் அவள் தன் அலைப்பேசி நம்பரை மாற்றி,சுஜித் என்னும் நபரின் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள்.

ஆனால் அந்த முற்றுப்புள்ளி காற்புள்ளியாய் மாறி தொடர்கதையானதும் இவளிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவளின் புதிய எண்ணை எப்படியோ கண்டறிந்திருந்தான்.

சுஜித் அனுப்பிய தகவலிற்கு அவள் பதில் அனுப்பவில்லை என்றவுடன்,அடுத்த வினாடியே அவளும் அவனும் முத்தமிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை அவளிற்கு அனுப்பி வைத்தான் அவன்.

அதை கண்டவுடன் அவளின் மேனியில் மின்சாரம் தாக்கிட,வேறுவழியின்றி ‘சுஜித் வெள்ளிக்கிழமை வந்து உன்னை மீட் பண்ணறேன்’ என அவசரமாக தட்டச்சு செய்தவள்,அவர்கள் சந்திக்கவிருக்கும் இடத்தையும் அவனிற்கு அனுப்பி வைத்தாள்.

அவனிற்கு தகவல் அனுப்பிவிட்டு அலைப்பேசியை கட்டிலில் தூக்கியெறிந்தவள்,தன் சிரத்தை இருக்கரங்களால் தாங்கிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

ஏனெனில்,இரண்டு நாள் கழித்து ரத்தினவேல் மற்றும் சந்திரமதி இருவருக்கும் அதிகாரப்பூர்வமான நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது.

அந்த விழாவிற்காக பல பிரபலங்கள் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கு முந்தைய நாளே,அவனை அவள் சந்திக்க வருவதாக குறிப்பிட்டிருந்தாள்.

அவனை சந்திந்து ‘என்ன பேசுவது?எப்படி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அவனை துரத்திவிடுவது?’ என பல வகையில் அவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் பல வகையில் அவள் சிந்தித்தாலும் அவளிற்கு கிடைத்த தீர்வு என்னவோ பூஜ்ஜியம் தான்!

ஏனெனில்,சாதாரணமாக கூறினால் கேட்டுக்கொள்ளும் ரகமல்ல சுஜித்.

அதனால் செய்வதறியாது தடுமாறியிருந்தாள்.

இந்நிலையில் அவர்களது  திருமணத்திற்காக ரத்தினவேலின் குடும்பம் மொத்தமும் அவர்களது பூர்வீக வீட்டிற்கு செல்லவிருந்தனர்.

அவர்களது பூர்வீக வீடு ஒரு கிராமத்தில் இருப்பதினால் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே மணமக்கள் வீட்டினர் அனைவரும் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை!

அதையறிந்த சந்திரமதிக்கு தப்பி செல்ல வழிகிடைத்தவிட்ட திருப்தி உண்டாகியது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்கிருந்து தப்பி விடலாம் என்றெண்ணி,ரத்தினவேலின் பூர்வீக ஊருக்கு சென்றுவிட்டாள் சந்திரமதி.

ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் அவளின் பாதச்சுவடுகள் அறிந்து,அவளை பின்தொடர்ந்து வந்திருந்தான்,அந்த மகாப்பாதகன்.

அதை காரிகையவள் அறியவில்லை.

பூர்வீக ஊருக்கு சென்றாலும்,பெண் வீட்டினரை அவர்களுக்கு சொந்தமான வேறொரு பங்களாவில் தங்க வைத்திருந்தனர்.

முகிழ்மதியோ திருமணம் சார்ந்த எந்தவொரு நிகழ்விலும் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தாள்.

உடன்பிறந்த சகோதரியின் சந்தோஷமான நிகழ்வில் கலந்துக்கொள்ள முடியாத தன் கையறு நிலையை எண்ணி அவளின் மனதில் ஒரு பெரும் வலி!

ஆனால் அவளை போலவே அவளின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மனநிலையில் இந்த திருமணத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிவராமன் தன் உயிரை காப்பாற்றி கொள்ளும் வகையறியாமல் தவித்து தத்தளித்து கொண்டிருக்க,

சந்திரமதியோ சுஜித்தை எண்ணி கலங்கயிருந்தாள்.

விஜயலட்சுமியோ அனைத்தும் நல்லப்படியாக நடந்து பல லட்ச கோடிகளுக்கு தாம் அதிபதியாக வேண்டும் என்ற பதட்டத்துடன் காத்திருந்தார்.

இப்படியானதொரு நிலையில்,அவர்களது திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருப்பதால்,பெண்ணை முதல் முறையாய் இல்லத்திற்கு அழைத்த வர காஞ்சனா மாலாவிற்கு உறுத்தலாக இருந்தது.

அதனால் விஜயலட்சுமியிடம் “விஜி முதல் முறையா பொண்ணை ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றது சரிவராது…அதனாலே ஜோசியர்கிட்ட இதைப்பத்தி கேட்டேன்…கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு நாள் சந்திரமதியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விளக்கேத்த சொன்னாரு…நாளைக்கு நாள் நல்லா இருக்கு…நீ என்ன செய்யறே?சந்திரமதியை நாளைக்கு இங்கு கூட்டிட்டு வந்திடு…ஒரு சின்ன சடங்கு செஞ்சு வீட்டுக்குள்ள அழைச்சுக்கலாம்” என அவர் சொல்ல,

விஜயலட்சுமிக்கு உள்ளுக்குள் கறுக்கென்று இருந்தாலும் “சரிங்க பெரியம்மா” என ஒத்துக்கொண்டார்.

காஞ்சனா மாலாவோ அத்துடன் நிறுத்தாமல் “விஜி சின்னவளை உறுதி செய்ய வந்தனைக்கு பார்த்ததோட சரி…அதுக்கு பிறகு நீ புள்ளைய கண்ணிலே காட்டலை…அதனாலே சந்திரமதியோட அவளையும் கூட்டிட்டு வந்திடேன்” என சொல்ல,

முகிழ்மதி பற்றிய பேச்சை எடுத்தவுடன் விஜயலட்சுமியின் முகம் மாறிவிட்டது.

அதனால் “பெரியம்மா…சின்னவளை நாளைக்கு வீட்டுக்கு கூட்டியாறது கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன்…புள்ளை வீட்டுக்கு தூரமாகியிருக்காள்…முதல்முறையாய் தீட்டிடோட எப்படி அவளை அங்க கூட்டியறது?” என வேண்டுமென்றே ஒரு காரணத்தை கூறி தட்டகழிக்க எண்ணினார்.

அவரின் பேச்சை கேட்டு “ஓ..” என யோசனையோடு இழுத்தவர்,பின்பு ‘என்ன நினைத்தாரோ?’ தொண்டையை செருமி “புள்ளைய மட்டும் தனியா விட்டுட்டு வர்றது நல்லாயிருக்காது…விஜி நீ பேசாமல் ஒண்ணு பண்ணு…பொண்ணோட தானே முதல் முறையா வீட்டுக்கு கூட்டியாற கூடாது…சந்திரமதியை முன்னாடியே கூட்டிட்டு வந்து விளக்கேத்த வைச்சிடலாம்…பொறவு கொஞ்சம் நேரம் கழிச்சு சின்னவளையும் கூட்டிட்டு வந்திடலாம்…தமயந்தி கூட வீட்டுக்கு தூரம் தான்…அவகூட புள்ளை இருந்துக்கட்டும்” என பெரிய மனதியாக சிக்கலுக்கான தீர்வை விரைவாக வழங்கினார் அவர்.

அதைக்கேட்டு விஜயலட்சுமிக்கு பற்றிக்கொண்டு வந்தாலும்,அவரை தேவையின்றி பகைத்துக்கொள்ள விரும்பாமல் “சரி” என்றுவிட்டார்.

அவளை அங்கு அழைத்து செல்வதில் சிறிதும் விருப்பமில்லை அவருக்கு!

ஏனெனில்,கோவிலில் அவர்கள் கண்டது முகிழ்மதி என்ற விபரம் தெரிந்தால்,திருமணத்தில் பிரச்சனை வருமோ என்று அஞ்சினார் அவர்.

அவரின் அச்சம் கூட முகிழ்மதியின் மீது கோபமாக உருவெடுத்தது.

‘எல்லாம் இவளால் தான்’ என எண்ணியவர் “அடியே முகிழு” என அறையிலிருந்தவளை அதட்டி வெளியே அழைத்தார்.

தாயின் கணீர் குரல் கேட்டு “சொல்லுங்கம்மா” என வேகமாக பதறி ஓடி வந்தவளை உறுத்து விழித்தவர் “முதல் முறையா மதியை அழைச்சிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போறேன்…சனியன் உன்னையும் கூட்டிட்டு வர சொல்லி அந்த காஞ்சனாம்மா சொல்லுது…உன்னையெல்லாம் கூட கூட்டிட்டு போனால் இந்த காரியமாவது விளங்குமாடி…நாசமா போச்சு” என அமிலமாக வார்த்தைகளை கொட்டினார்.

எதற்காக திடீரென்று அவர் தன்னை வார்த்தையால் வதைக்கிறார் என்று அந்த இளங்குருத்திற்கு சிறிதும் விளங்கவில்லை.

அதனால் ஒன்றும் புரியாமல் விழித்தவளை பார்த்து எரிச்சலுற்றவர் “எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி மூஞ்சைய வைச்சுக்கிறதை பாரு…உன்னை பார்த்தாலே எனக்கு பிபி எகிறிதுடி…ச்சீய் உள்ளே போ…நாளைக்கு ஒரு நல்ல டிரஸா போட்டு ரெடியாகியிரு…பிச்சைக்காரி மாதிரி எதையாவது மாட்டிட்டு வந்து நின்னு என் மானத்தை வாங்காதே” என பல்லைக்கடித்து வெறுப்புடன் கூறி,அவளின் நெற்றியில் ஒரு அடி வைத்து அனுப்பினார்.

முகிழ்மதிக்கோ தாயின் பேச்சும் செயலும் வழக்கம் போல் உயிர் போகும் வேதனையை கொடுக்க, அடக்கப்பட்ட அழுகையுடன் நெற்றியை தேய்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.

அவள் அங்கிருந்து செல்லும் வரை அவளின் முதுகை அருவருப்புடன் நோக்கிய விஜயலட்சுமி,நீள்விரிக்கையில் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்து அலைப்பேசி பார்த்துக்கொண்டிருந்த சந்திரமதியிடம் வந்தார்.

அவளருகே அமர்ந்து “கண்ணு மதி…நாளைக்கு நம்ப எல்லாரையும் மாப்பிள்ளை வூட்டுக்கு வர சொல்லியிருக்காங்க…அன்னைக்கு வாடமல்லி கலரிலே ஒரு பட்டுப்புடவை எடுத்தோமே அதை கட்டிக்கோ…உன் கலருக்கு சும்மா நச்சுனு இருக்கும்…அந்த வைர கல்லு வைச்ச நகையும் போட்டுக்கோ…புடவைக்கு மேட்ச்சா இருக்கும்” என தேனொழுகும் குரலில் அவளின் கன்னத்தை தடவியப்படி அவர் சொல்ல,

அவளோ அலைப்பேசியில் மும்முரமாக இருந்த வாக்கிலே “சரி மம்மி” என்றாளே ஒழிய,அதற்கான காரணத்தை அறிய முற்படவில்லை.

தாயின் பேச்சில் சிறிதும் கவனம் எடுக்காமல் மெத்தனமாக அவள் அமர்ந்திருந்தாள்.

இதுவே அவளிடத்தில் முகிழ்மதி இருந்திருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும்.

ஆனால் சந்திரமதி என்பதால் “நீ தான்டி என் தங்கம்” என அவளிற்கு நெட்டி முறித்து உற்சாகமாக கூறி,நாளைக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க சென்றார் விஜயலட்சுமி.

************
ரத்தினவேலின் பூர்வீக வீடு,

மணப்பெண்ணை வரவேற்பதற்காக வீடு மொத்தமும் பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தது.

காஞ்சனா மாலா மற்றும் வானதி இருவரும் வீட்டு பணியாட்களை ஏவி,வேலை வாங்கி கொண்டிருந்தனர்.

காஞ்சனா மாலாவிற்கு ஒரு விஷயத்தை தொடங்கினால்,அதில் எந்த வித சோடையும் இருக்கக்கூடாது.அனைத்தும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.

ஆதலால்,வயது எழுபதை தொட்டிருந்தப்போதும் அவரே முன் நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

அதேசமயம் ரத்தினவேலிடம் பேசிவிட்டு வந்த வீரின் முன்பு பிரச்சன்னமானாள் ஒரு இளம் பெண்.

அவள் வேறு யாருமல்ல,பூபதி குடும்பத்தின் இளைய வாரிசான தமயந்தி.

தன்னை வழி மறைத்து நின்றவளை அவன் புருவம் நெரிய ஏறிட,

“ஹலோ வீர் சார்…எப்படியிருக்கீங்க?முன்னாடி மாதிரி வீட்டு பக்கம் வர்றதே இல்லை…இவ்வளவு நாள் எங்க போனீங்க?” என இடையில் ஒற்றை கைகுற்றி அதிகாரமாய் அவள் வினவ,

அவனோ “வேலை நிறைய இருந்துச்சு” என்றான்‌ எங்கோ பார்த்தப்படி.

உடனே “ஓ…” என இதழ் குவித்து தலையசைத்தவள் “வேலை நிறைய இருந்துச்சு…அதனாலே நீங்க வரலை…சரி நான் நம்பிட்டேன்” என நக்கலாக கூறியவளின் விழிகள் அவனை அழுத்தமாக ஏறிட்டது‌.

அவனும் அவளிற்கு சலிக்காத பதில் பார்வை பார்த்தவன் “பேசி முடிச்சிட்டனா நான் கிளம்பட்டுமா?” என அங்கிருந்து செல்ல முயல,

“ஹலோ சார் அதுக்குள்ள எங்க தப்பிக்க பார்க்கறீங்க?” என சட்டென அவனின் முன்பு கைநீட்டி தடுத்து நிறுத்தினாள்.

அவனோ “ப்ச்” என சலிப்பாக அவளை ஏறிட,

“இந்த சலிச்சுக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்…உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை?” என அவனிடம் அவள் எகிற,

அவனிற்கு அவளது பேச்சின் தோரணை கோபத்தை வரவழைத்தது.

ஆனால் நண்பனின் தங்கை என்பதால் சிறிது எரிச்சலை அடக்கி “அதையே தான் நான் உன்கிட்ட கேட்கறேன்…உனக்கு இப்போ என்ன பிரச்சனை?” என அடக்கப்பட்ட சினத்துடன் வினவினான்.

அவளோ நாசிவிடைக்க “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…உங்களுக்கு தான் என்கிட்ட ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன்” என அவனை உறுத்து விழித்தப்படி சொல்ல,

அவனிற்கு பெரும் சலிப்பாக வந்தது.

அவளிடம் பேசவே அவனிற்கு விருப்பமில்லை.

ஆனால் தன் வழியை மறைத்து பேச்சு கொடுப்பவளை ஒதுக்கி தள்ளிவிட்டு செல்ல முடியாமல் “தமயந்தி இப்போ உனக்கு என்ன வேணும்?” என அழுத்தமான குரலில் அவன் வினவ,

அவளோ தோளை குலுக்கி “நீங்க தான் வேணும்” என்றாள் அசால்ட்டாக.

அவளின் பதிலை கேட்டு “வாட்” என அதிர்ந்தவனின் இமைகள் கோபத்தில் இடுங்கின.

அவனது கோபத்தை கண்டவளின் இதழ்கள் தானாக முறுவலிக்க “சரி சரி…விடுங்க…டென்ஷனாகாதீங்க மச்சான்…அதுக்கெல்லாம் இன்னும் நேரம் இருக்கு…முதல்ல வந்த விஷயத்துக்கு வர்றேன்” என கூற,

அவள் ‘மச்சான்’ என குறிப்பிட்டதில் கடுப்பான வீர் கைமுஷ்டியை இறுக்கி “மச்சான்… அது இதுனு கூப்பிட்டே…பல்லை தட்டி கையிலே கொடுத்திடுவேன்” என விரல் நீட்டி எச்சரித்தான்.

“எங்க பல்லை தட்டுங்க பார்ப்போம்” என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனை அவள் நெருங்க,

அவனோ “ஹே கிட்ட வராதே நீ” என பதறிப்போய் அவசரமாக ஓரடி பின்னே நகர்ந்தான்.

சட்டென அவள் அவ்விடத்திலே நின்றுவிட,அவன் அவளை கொலைவெறியோடு பார்த்தான்.

அவளோ “ரொம்பதேன்” என இதழை சுழித்து பழிப்பு காட்டியவள்,

“சரி அதை விடுங்க…என் டிரஸ் எப்படியிருக்கு?” என்று கேட்டவாறே அணிந்திருந்த உடையை கண்ணால் சுட்டிக்காட்ட,

அவனோ ‘இது ரொம்ப முக்கியமா?’ என்பது போல் அவளை முறைக்க,

“சும்மா சும்மா முறைக்காதீங்க மச்சான்…நீங்க முறைச்சா நான் பயப்படமாட்டேனு உங்களுக்கு நல்லாவே தெரியும்…அப்புறம் எதுக்கு பூச்சாண்டி காட்டறீங்க?” என்றவாறே தாவணியை இடையில் சொருகி தெனாவெட்டாக அவனை பார்க்க,

அவனோ எரிச்சலுற்று “அதெல்லாம் சொல்ல முடியாது…நீ முதல்ல நகரு” என்றவாறே அவளை கடந்து செல்ல முற்பட,

அடுத்த கணமே அவனின் கரம் பற்றி நிறுத்தியவள் “பதில் சொன்னால் இங்கயிருந்து நீங்க போகலாம்…இல்லைனா நீங்க சொல்லற வரை இங்க தான் நிக்கணும்…எப்படி வசதி?” என ஒற்றை புருவம் உயர்த்தி எள்ளலாக கேட்க,

‘ஆ…சாவடிக்கிறாளே’ என ஒற்றை விரலால் நெற்றியை நீவிய வீர் “என்ன உன் பிரச்சனை?இந்த டிரஸ் நல்லாயிருக்கா இல்லையான்னு சொல்லணும்…அவ்வளவு தானே…” என்றவன்,அவளின் கரத்திலிருந்து தன் கரத்தை உதறிவிட்டு அவளை மேலிருந்து கீழாக தன் கூரிய விழிகளால் அளவிட ஆரம்பித்தான்.

தங்க நிற ரவிக்கை,அதே தங்க நிற பாவாடை,அரக்கு நிறத்தில் தாவணி அணிந்து,அதற்கு ஏற்றாற் போன்ற தங்க ஆபரணங்களுடன் இலேசான ஒப்பனையில் தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த மங்கையாக திகழ்ந்தாள் அவள்.

கண்டவுடனே அவனிற்கு புரிந்தது அவள் ரவிவர்மன் செதுக்கிய சிலை என்று!

ஆயினும்,தன் எண்ணங்களை தூக்கி தூர ஒதுக்கிவிட்டு “ரொம்ப கேவலமா இருக்கே…நகரு” என ஒரே எட்டில் அவளை தாண்டி சென்றுவிட்டான் அவன்.

‘ரொம்பதேன்’ என நொடித்தவள்,

‘போ…போ இன்னைக்கு நீ சிக்கலைனாலும் இன்னொரு நாள் என்கிட்ட மாட்டாமலா போவே…அன்னைக்கு வைச்சுக்கிறேன் உன்னை…’ என நாசி விடைக்க தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டாள் அவள்.

அவளிடமிருந்து தப்பி வந்த வீருக்கோ நெஞ்சில் பாரமேறியது‌.

தமயந்தி அவனை விரும்புவதை அவன் நன்றாகவே அறிவான்.

ஆனால் அவளை அவனால் ஏற்க முடியாது‌.அதற்கான தகுதியும் அவனிற்கில்லை.

மேலும்,நண்பனிற்கு துரோகம் இழைப்பது மகாப் பாதகம் என்று நினைப்பவனால் நிச்சயம் அவளை ஒரு காலமும் ஏற்க முடியாது.

அதையெல்லாம் எண்ணி பெருமூச்சுடன் சிகை கோதி வெளியேறியவனை காஞ்சனா மாலா அழைத்தார்.
 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top