முகிழ்மதி 12

வீர் இருக்கும் வரை அவளினுள் முகிழ்ந்திருந்த துணிச்சல் இப்போது சிறிது சிறிதாக குறைந்து,பின்பு மறைந்தும் போனது.
அவள் ஒரு வித மிரட்சியுடனே அந்த பிரம்மாண்டமான மாளிகைக்குள் நுழைந்தாள்.
வீட்டின் முற்றத்தில் காவலர்கள் சிலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
ஆஜாபாகுவான தோற்றத்துடன் நின்றிருந்த கருப்பு சீருடை அணிந்த காவலர்கள் அவளை அதிகமாகவே பயமுறுத்தினார்கள்.
‘இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டமே?வீர் அண்ணா உள்ள வரை வந்து விட்டுட்டு போயிருக்கலாம்…அதுக்குள்ள தான் மான்ஸ்டர் அவரை கூட்டிட்டு போயிட்டரே…இப்போ என்ன செய்யறது?’ என பெரும் திகிலோடு உமிழ்நீரை கூட்டி விழுங்கியப்படி உள்ளே சென்றாள்.
முதலமைச்சரின் வீடு என்பதால் அவ்விடத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முதல் அடுக்கு,இல்லத்தின் முக்கிய நுழைவாயில்,இரண்டாம் அடுக்கு,வீட்டின் வாசற்படிக்குள் நுழையும் வழி,மூன்றாம் அடுக்கு,வீட்டின் முதன்மை வரவேற்பறைக்குள் நுழையும் வழி என ஆகிய மூன்று இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நீள் வடிவ பாதுகாப்பு வளையத்திற்குள் அவளை அனுப்பி பரிசோதித்த பிறகே காவலர்கள் அவளை உள்ளே அனுமதித்தார்கள்.
வீட்டின் ஆட்கள் உட்பட அனைவரும் இந்நிலை கட்டுப்பாட்டை பின்பற்றியே ஆகவேண்டும் என்பது ரத்தினவேல் ரகுநாத பூபதியின் கட்டளை!
அதனால் அதை தாண்டி வந்தவளை “யூ கேரி ஆன் மேம்” என சிரித்துக்கொண்டே அவர்கள் உட்புறம் கைகாட்ட,
அவளோ வலுக்கட்டாயமாக சிரித்தவாறே தயக்கத்துடன் நுழைந்தாள்.
அதேசமயம் வெளிப்புறம் இருந்த வீட்டின் தோற்றத்தை போலவே,உட்புற தோற்றமும் அவளை மிகவும் கவர்ந்திழுத்தது.
அதனால் வீட்டின் அலங்கார தோற்றங்களை ரசித்துக்கொண்டே வீட்டின் முதல் கட்ட வரவேற்பறைக்குள் புகுந்தாள் முகிழ்மதி.
அந்த பரப்பளவிலும் காவலுக்கு பல பாதுகாவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அங்கிருந்த யாவரும் அவளிற்கு தடை விதிக்கவில்லை.
அதன் முதற்காரணம்,அவளின் தோற்றம்!
மற்றொரு முழுமையான காரணம்,ரத்தினவேல் ரகுநாத பூபதி!
முன்பே அவளை சோதனைக்கு ஆட்படுத்தக்கூடாது என அவனிடமிருந்து ஆணை பறந்து வந்திருந்தது.
முதன்முறையாய் முகிழ்மதியை கண்டவர்களுக்கு பெரும் ஆச்சரியம்.
ஆதலால், பலரின் கண்கள் அவளின் மீது நிலைத்திருக்க,அவளிற்கு தான் அது சங்கடத்தை வரவழைத்தது.
சந்திரமதியை ஒத்திருந்த அவளின் உருவம்,அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அத்தோடு அவர்களின் ஒத்த உருவ ஒற்றுமையே அவள் மணப்பெண்ணின் இரட்டை சகோதரியாக இருக்கக்கூடும் என்ற முடிவிற்கு அவர்களை வரவழைத்தது.
அதனால் அவளிற்கான அவர்களின் தோரணை அப்படியே மாறிப்போனது.
“மேடம் பிளீஸ்” என அவர்களின் முதன்மை காவலன் ஒருவன் பணிவுடன் கூறி,அவளிற்கு உட்புறம் செல்லும் வழியை காட்ட,
அவள் ஒரு கணம் அதிர்ந்து சடுதியில் இலேசாக தலையசைத்தவாறே கரத்தை இறுக்கி பிசைந்துக்கொண்டு நடந்தாள்.
அங்கே ஆட்கள் ஒரு வித பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அதில் பலரும் அவ்வீட்டின் வேலையாட்கள் என்று புரிந்ததோடு,அவர்கள் திருமணத்திற்கான அலங்கார பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்று அவளை புரிந்துக்கொள்ள வைத்தது.
அதனால் எறும்பு போல் சுறுசுறுப்பாக பணிப்புரிந்தவர்களை ஆச்சரியத்துடன் விழி விரித்து பார்த்தப்படி மாளிகையின் முதன்மை வரவேற்பறைக்குள் நுழைந்தாள் அவள்.
அந்த முதன்மை வரவேற்பறைக்குள் நுழைய தகுதியானவர்கள் வீட்டின் உரிமையாளர்களும் ரத்தினவேலின் அனுமதி பெற்ற நபர்களும் மட்டுமே!
ஏனையவர்களால் அதன் எல்லையை அவ்வளவு எளிதில் தொட்டு பார்த்திட முடிந்திராது.
அத்துணை தொலைவு கெடுப்பிடிகள் விதிக்கப்பட்டிருந்தது.
வேலையாட்களில் கூட ஒரு சிலருக்கு மட்டும் தான் அங்கு அனுமதியிருந்தது.
முகிழ்மதிக்கு கொடுக்கப்பட்ட சலுகை அவளின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.
அவ்வளவு ஏன்?
மணப்பெண்ணான சந்திரமதிக்கு கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கோ முதலாளியின் இந்த ஆணையினால் சிறு நெருடல்!
ஆனால் மனதில் நினைப்பதை அவனிடம் கேட்டுவிட முடியாது என்பதால்,அவனின் கட்டளையை பின்பற்றினார்கள் ஊழியர்கள்.
மூவரையும் இந்த மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் உட்படுத்திய பிறகே அவர்கள் மூவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் ரத்தினவேலின் ஆணையின் பெயரில் அவளிற்கு முதல் மற்றும் கடைநிலை கட்டுப்பாடு தகர்த்தெறியப்பட்டிருந்தது.
இவை எதையுமே அந்த பேதை உள்ளம் கொண்டவள் அறியவில்லை.
மணமகன் ரத்தினவேலை தவிர,ஏனைய மணமக்கள் வீட்டினர் அனைவரும் வரவேற்பறையில் ஒன்று கூடியிருந்தனர்.
அதையறிந்து முதன்மை வரவேற்பறைக்குள் தயக்கமாக நுழைந்தவளை கண்ட காஞ்சனா மாலா “அடடே…வந்திட்டியா முகில் கண்ணு…இப்போ தான் வந்தியா?வா..வா” என ஆர்ப்பாட்டமாக வரவேற்று,அவளை அணைத்து உச்சி முகர்ந்தார் மூத்தவர்.
அவரின் அந்த செயலில் பாவையவளின் மெய் சிலிர்த்துப்போனது.
குழந்தையிலிருந்து அவளை யாவரும் இவ்வாறு கொஞ்சியதாக நினைவில் இல்லை.
அவள் பார்த்து வளர்ந்ததெல்லாம் வெறுப்பு,வன்மம்,பாகுப்பாடு இவை மட்டுமே!
சந்திரமதி மட்டுமே அவ்வப்போது அவளிடம் பாசமாக உரையாடுவதாக அவள் எண்ணிக்கொண்டிருக்கிறாள்.
ஆதலால்,இவர்களது அணைப்பும் அன்பும் அவளின் நெஞ்சத்தை நெகிழ்த்தியது.
அவரோ அவளிடமிருந்து விலகி “உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு கண்ணு…உனக்கு இந்த கத்திரிப்பூ கலர் தாவணி நல்லாயிருக்கு…நீயும் அம்சமா இருக்கே” என அவளின் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தார்.
வானதியும் அவருடன் இணைந்துக்கொண்டு அவளை அன்பு மழையில் முகிழ்க்க,அதில் இன்பமாய் அமிழ்ந்துப்போனாள்,அந்த இளம் காரிகை.
அவளிற்கு அனைத்தும் புதிது.
புதிதாய் இருந்தாலும் அவளிற்கும் அவர்களின் அன்பு பிடித்தே இருந்தது.
அதனால் அவளின் முகம் மலர்ந்து விகசித்தது.
ஏற்கனவே,அந்த ஊதா நிற லெஹன்காவில் அழகியாய் திகழ்பவள்,இப்போதைய அவளின் முக மலர்ச்சியில் பேரழகியாய் திகழ்ந்தாள்.
“தேங்க்ஸ் பாட்டி…தேங்க்ஸ் அத்தை…என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என அவர்களின் காலில் விழுந்து வணங்கி எழுந்தவளின் இதழ்கள் நன்றாகவே விரிந்திருந்தது.
அவள் மனம் விட்டு சிரிக்கும் போது அவளின் கன்னத்தில் குழி விழுந்தது.
அவள் சிரிப்பதே அரிது.
இல்லை…இல்லை…தன் வாழ்நாளில் அவள் ஒரு முறை கூட சிரித்ததே இல்லை.
அதற்கு விஜயலட்சுமி அவளை அனுமதித்ததுமில்லை.
இன்று அவளின் நெஞ்சம் நெகிழ்ந்திட,அவள் தன்னை மீறி தங்குதடையின்றி மனம் விட்டு சிரித்தாள்.
அவளின் சிரிப்பை கண்ட தமயந்தி வியப்பில் விழி விரித்து “நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி” என மனமாற பாராட்ட,
முகிழ்மதிக்கு அது வெட்கத்தை வரவழைக்க,அவள் “தேங்க்ஸ்” என தலைகுனிந்து மெதுவாக முணுமுணுத்தாள்.
சந்திரமதியும் அவளின் புன்னகையை முதன்முறையாய் காண்கிறாள்.
ஆனால் சந்திரமதி சிரித்தால் முகிழ்மதி போல் கன்னத்தில் குழி விழாது.
அதனால் அவளிற்குமே தங்கையின் புன்னகை ஆச்சரியத்தை கொடுத்தன.
ஆனால் இவையனைத்தையும் தூரத்திலிருந்து கண்ட விஜயலட்சுமியின் முகம் சட்டென மாறிப்போனது.
அவருக்கு தான் முகிழ்மதி சிரித்தால் பிடிக்காதே?
அதனால் அவளின் சிரிப்பை துடைத்தெறியும் வேகம் அவருள்!
எனவே,பிடித்தமின்மையை பட்டவர்த்தனமாக அவர் தன் முகத்தில் காட்டினார்.
இருப்பினும்,யாவரும் பார்த்துவிடுவதற்கு முன்பு முகத்தை மாற்றி,இதழில் போலி புன்னகை ஒன்றை பூசிக் கொண்டார்.
அங்கிருந்த அனைவரின் விழிகளும் முகிழ்மதியின் மீது இருந்ததினால் ஒருவரும் இவரை கவனித்திருக்கவில்லை.
ஆனால் அவரது நொடி நேர முக மாற்றம் தமயந்தியின் கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை.
தமையனை போலவே தமயந்தியும் புத்தி கூர்மை,திறமை மற்றும் ஆளுமையை கொண்ட பெண்!
அதனால் நொடியில் அவரின் உணர்வுகளை படித்த தமயந்தி ‘இந்த அம்மாவுக்கு என்ன தான் பிரச்சனை?பெத்த பொண்ணை யாராவது பாராட்டினால் சந்தோஷம் தானே படுவாங்க…இதென்ன மூஞ்சிய சுழிக்குது’ என புருவம் இடுங்க யோசித்தாள்.
சட்டென அவளின் விழிகள் சந்திரமதியை ஏறிட,அவளின் முகமோ நிர்மூலமாகவே இருந்தது.
அவளுள் எவ்வித உணர்வுகளும் பிரதிபலிக்கவில்லை.
அதேநேரம் ஒரு சகோதரியை வருடும் பரிவும் அவளின் விழியில் தென்படவில்லை.
அப்படியே அவளின் விழிகள் சிவராமனை நோக்கி பாய,அவரோ ‘யாருக்கு வந்த விருந்தோ?’ என்பது போல் உட்கார்ந்திருந்தார்.
‘என்ன குடும்பம் இது?வித்தியாசமா இருக்கே’ என தனக்குள்ளே யோசனையில் ஆழ்ந்தவளை அவளின் சகோதரன் ஜித்தேந்திரன் அழைத்தான்.
அவன் அவளின் தோளை சுரண்டியப்போதும் அவளின் சிந்தை வேறு இடத்தில் இருந்ததால் அவனின் அழைப்பை அவள் கவனிக்கவில்லை.
அதனால் “அடியே லட்டு” என அவன் அவளின் காதோரம் குனிந்து கிசுகிசுத்ததும்,உடனே திடுக்கிட்டு தலையுயர்த்தினாள் தமயந்தி.
அவளை குறும்புடன் நோக்கிய ஜித்தேந்திரன் “என்ன லட்டு பகல்லே கனவா?கனவுலே யாரு?சப்பை மூஞ்சி ‘வி’ யா?இல்லை…புதுசா ஒருத்தன்…ஹான் கேன் எமன்னு ஒரு எருமை மாட்டை காட்டினீயே…அவனா?” என இதழுக்குள் சிரித்தப்படி அவன் வினவ,
அதில் கடுப்பான தமயந்தி “டேய் அண்ணா…என் க்ரஷ் இரண்டு பேரையும் ஏதாவது சொன்னே உன்னை கொன்னுடுவேன்டா மவனே…” என அடிக்குரலில் அவனை விரல் நீட்டி மிரட்ட,
அவனோ “ஏன்டி உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?ஒருத்தன் சப்பை மூஞ்சி…இன்னொருத்தன் தின்னே வளர்ந்து கெட்ட காட்டெருமை…” என கூறிக் கொண்டிருக்கும் போதே,
“ஹலோ ப்ரோ…அவனோட பேர் கேன் யாமன்…அவனை எருமை அது இதுனு சொன்னீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்” என நாசி விடைக்க கூறி,அவனை முறைத்தாள்.
“சரி எமனோ குமனோ…ஏதோ ஒண்ணு…என்ன விசித்திரமான டேஸ்ட் உனக்கு?அதுக்கு முதல்ல விளக்கம் கொடு” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கேட்க,
அதில் கடுப்பானவள் “ச்சை போடா உனக்கு வேற வேலையே இல்லை” என அவனின் நெஞ்சில் கைமுட்டியால் ஒரு அடி கொடுத்தவள்,அங்கு நடக்கும் நிகழ்வை கூர்ந்து கவனிக்க தொடங்கினாள்.
அவனும் சிரித்துக்கொண்டே அங்கே பார்வையிட ஆரம்பித்தான்.
அவனது கண்களுக்கு எதுவும் விசித்திரமாக தெரியவில்லை.
ஜித்தேந்திர பூபதி,பூபதி குடும்பத்தின் இரண்டாவது வாரிசு!
ரத்தினவேல் முரட்டுத்தனத்துடன் கூடிய ஆண் அழகன் என்றால்,இவன் பெண்களை வசீகரிக்கக்கூடிய மென் அழகன்!
தாடி மீசை எதுவுமின்றி மழித்துவிட்ட தாடை,அலை அலையான கேசம்,கூரிய நாசி,குறும்பு சிந்தும் இரண்டு கருவிழிகள்,காதில் ஒரு பிளாட்டின கடுக்கன்,எவ்வித தீய பழக்கமும் இல்லாத சிரிப்பை சிந்தும் சிவந்த அதரங்கள் என கலியுக மார்க்கண்டேயனாய் திகழ்ந்தான் அவன்.
மற்ற இரு உடன்பிறந்தவர்களை காட்டிலும் ஜித்தேந்திரன் சிறிது மென்மையானவன்!
தமையனை போல் வேகமும் விவேகமும் இல்லை என்றாலும்,நிதானமும் சமயோசித புத்தியும் கொண்டவன் அவன்.
அதேப்போல் ரத்தினவேல் சிரிக்கவே தெரியாத முரடன் என்றால், ஜித்தேந்திரன் துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க தெரிந்தவன்.
அனைத்தையும் எளிதாக கடந்து செல்லும் குணம் கொண்டதினாலே,அவனின் வாழ்வில் எந்தவொரு பெண்ணும் இதுவரை நிலைத்ததில்லை.
அவனிற்கு பல பெண்களின் மீது ஈர்ப்பு தோன்றினாலும்,அவனின் மனதில் எந்தவொரு பெண்ணும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதன்பொருட்டே எந்தவொரு பெண்ணின் மீதும் காதலில் விழாமல்,வெறும் பழக்கத்தோடு(Dating) நிறுத்திக்கொள்வான்.
அவனது நெஞ்சத்தை எந்தவொரு பெண் அபகரிக்கிறாளோ அவளை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்து தன் ராதாவிற்காக காத்திருந்தான்,இந்த கலியுக கண்ணன்.
அவனிற்கு விருப்பமான ஒரே பொழுதுப்போக்கு தங்கையை சீண்டி வம்பிழுப்பது மட்டும் தான்!
அதை மட்டும் மறக்காமல் பின்பற்றுவான் ஜித்தேந்திரன்.
ஜித்தேந்திரனின் பார்வை முகிழ்மதியின் மீது பதிந்தது.
தவறான எந்தவொரு நோக்கத்திலும் அல்ல.
ஏனோ அவனிற்கு சந்திரமதியை காட்டிலும் முகிழ்மதியை அதிகம் பிடித்திருந்தது.
தனது தமையனிற்கு ஏற்ற ஜோடி அவளாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அவனுள்!
அவனின் எண்ணத்தை பிரதிபலிப்பது போல் அவனது குடும்பத்தினர் அனைவரும் முகிழ்மதியை தாங்குவதை வேடிக்கை பார்த்திருந்தான்.
இத்தனை களேபரத்திலும் சந்திரமதி வேண்டா வெறுப்பாக அமர்ந்திருப்பதை கவனித்த ஜித்தேந்திரன் ‘இவங்களுக்கு என்ன தான் பிரச்சனை?ஏன் எதிலையும் ஒரு ஈடுப்பாடு இல்லாமல் இருக்காங்க…கல்யாணம் பிடிக்கலைனா எதுக்கு இங்க வரைக்கும் வரணும்?’ என தனக்குள்ளே எண்ணி சலிப்புடன் தலையாட்டிக்கொண்டான்.
அச்சமயம் அவர்களின் தாய் வானதி “லட்டு,ஜித்து” என இருவரையும் அழைக்க,
“என்னங்கம்மா” என்று இருவரும் ஒரு சேர அவரை நிமிர்ந்து ஏறிட,
தனது மகவுகளை அர்த்தத்துடன் நோக்கியவர் “லட்டு நீ அண்ணியையும் முகிழ்மதியையும் கூட்டிட்டு போய் வீட்டை சுத்திக்காட்டு…ஜித்து நீயும் கூட போ…சுத்திக்காட்டிட்டு வரும்போது முகிழ்மதிய நீ சாப்பிட கூட்டிட்டு போ லட்டு…ஜித்து நீ சந்திரமதியை கூட்டிட்டு இங்க வந்திடு…இன்னும் சில சம்பிரதாயம் எல்லாம் செய்யணும்” என இருவருக்கும் சரிவிகிதமாக ஆணையிட்டு பொறுப்பை பகிர்ந்தளித்தவர்,அவர்களை அனுப்பி வைத்தார்.
விஜயலட்சுமிக்கு இவையெல்லாம் கடுப்பாக வந்தது.
கூடவே,முகிழ்மதி ஏதேனும் உளறிவிடுவாளோ என்ற அச்சமும் அவருள் தோன்றின. அதனால் சிறிய மகளிடம் விரைந்து வந்தார்.
தனக்கு கிடைத்த புது உறவினர்களால் சிறிது மலர்ந்திருந்த அவளின் முகம் தாய் அவளை நெருங்கியதும் சுருங்கிப்போனது.
படீரென சோர்ந்த முகத்துடன் தாயை ஏறிட்டவளை நோக்கி வந்தவர் “முகிழு கண்ணு ஒரு நிமிஷம் நில்லும்மா” என அன்பொழுக பேச்சை ஆரம்பித்தார்.
அனைவரின் விழிகளும் அவர்கள் மேலிருப்பதை அறிந்த விஜயலட்சுமி “நகைய ஒழுங்கா போடமாட்டியா கண்ணு” என அவளின் கழுத்தில் சுருண்டிருந்த நகையை சரி செய்வதை போல் அவளின் காதருகே குனிந்தார்.
“அடியே முகிழு…இன்னைக்கு நீ தூரம்…யார்கிட்டயும் பேசாமல் ஒழுங்கா ஒரு ஓரமா போய் நிக்கணும்…புரியுதா?” என சிரித்துக்கொண்டே மெல்லிய குரலில் அவளை மிரட்ட,
அவளோ விழியை மட்டும் உயர்த்தி “நான் தான் வீட்டுக்கு தூரமில்லையேம்மா…அப்புறம் ஏன் பொய் சொல்லணும்” என தன்னை மீறி துணிச்சலாய் கேட்டிருந்தாள்.
தன்னை சுற்றி மற்றவர்கள் இருக்கும் தைரியத்தில் அவளது வாயிலிருந்து வார்த்தை வெளிப்பட்டிருந்தது.
மகளின் இந்த தைரியம் அவளின் தாயிற்கு சிறிதும் பிடிக்கவில்லை.
அவரின் முகம் ஒரே ஒரு கணம் விகாரமாய் மாறிவிட்டு இயல்புக்கு வந்தது.
அவள் எப்போதும் தனக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்ற வன்மம் அவருள்!
அதனால் யாவருக்கும் தெரியாமல் அவளிற்கு முன்பு முகத்தை மறைத்து நின்றவர் “என்னடி வீட்டு படி தாண்டின உடனே தைரியம் வந்திடுச்சா?இங்க முடிச்சு மறுபடியும் வீட்டுக்கு வந்து தான் ஆகணும்…தெரியுமில்லை” என உயிரை ஊடுருவும் குரலில் கேட்க,
உடனே அவளின் முதுகுத்தண்டு சில்லிட்டது.
அதிலும் பயங்கரமாய் மாறியிருந்த அவரின் முகம் அவளின் இதயத்துடிப்பை அடியோடு நிறுத்தியது.
அடுத்த கணமே அவளின் துணிச்சல் இருந்த இடம் தெரியாமல் மாயமாகிவிட,அவளின் முகம் பயத்தில் வெளிறியது.
அவள் பதில் பேச முடியாமல் திணற “மூஞ்சியை சிரிச்ச மாறி வை…நான் சொன்னப்படி தான் நீ செய்யணும்…யாருக்கிட்டயாவது எதையாவது சொன்னது தெரிஞ்சது அவ்வளவு தான்” என கர்ண கொடூரமாய் மிரட்டியவர்,
சட்டென முகத்தை சிரித்தப்படி மாற்றிக்கொண்டு “சிரிடி” என அவளையும் கட்டாயப்படுத்தி சிரிக்க வைத்திருந்தார் அவர்.
அதற்குள் “வாங்க அண்ணி” என்றவாறு தமயந்தி அவர்களை நெருங்கினாள்.
முகிழ்மதி 13

முகிழ்மதியும் சந்திரமதியும் அவளை விட சிறியவர்கள் என்றாலும்,அவளது பாசமிகு தமையனை சந்திரமதி திருமணம் செய்துக்கொள்ள விருப்பதால் அவளை ‘அண்ணி’ என்று அழைக்கவேண்டும் என தாயிடமிருந்து கட்டளை வந்திருந்தது.
அதேப்போல் சந்திரமதி ‘அண்ணி’ என்றால் அவளின் இரட்டை சகோதரியான முகிழ்மதியும் அவளிற்கு ‘அண்ணி’ முறை ஆகவேண்டியவள்.
ஆதலால்,இருவரையும் சேர்த்தே ‘அண்ணி’ என்றழைக்க பழகியிருந்தாள்.
ஆனால் ஜித்தேந்திரன் மட்டும் அவர்களை ‘அண்ணி’ என அழைக்கவில்லை.
அவர்களை மரியாதைப்பன்மையுடன் விளிப்பதோடு நிறுத்திக்கொண்டான்.
விஜயலட்சுமிக்கு இவர்களின் செயல் எதுவும் அறவே பிடிக்கவில்லை.
அதிலும்,சந்திரமதியை காட்டிலும் முகிழ்மதியிடம் அவர்கள் அன்பு காட்டும் விதம் அவருக்குள் வெறுப்பையே கொடுத்தன.
பாசம்,மரியாதை எதுவாக இருந்தாலும் மூத்தவளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அவருள் ஒரு வெறி!
உள்ளுக்குள் கனன்ற வெறுப்பை மற்றவரின் முன்பு காட்ட முடியாமல் திணறினார் அவர்.
அதனால் சிறிய மகளை தன் கைப்பாவைக்கு ஏற்றவாறு ஆட்டி வைக்க எண்ணி,அவளை சிரித்துக்கொண்டே மிரட்டி அடக்கிவிட்டார் அவர்.
தற்போது சிறிய மகளை அவர் அரட்டியிருந்தாலும் அவளின் மீது நம்பிக்கையின்றி “வானதி நானும் புள்ளைங்க கூட போய் சுத்தி பார்க்கட்டுமா?வீடு ரொம்ப நல்லாயிருக்கு” என வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டவரின் பேச்சை கேட்டு எரிச்சலுற்றார் வானதி.
காஞ்சனா மாலாவிற்கு விஜயலட்சுமியின் பேச்சு ஒன்று கூட பிடிக்கவில்லை.
அனைத்தும் போலியாக இருந்தது போல் அவர் உணர்ந்தார்.
ஆனால் பேரனுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டவர் “பசங்களா நீங்க போங்க” என அவர்களை அனுப்பிவிட்டு,
விஜயலட்சுமியிடம் திரும்பி “விஜி கல்யாணத்தை பத்தி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…அதனாலே தான் புள்ளைங்களை தனியா அனுப்பறேன்…நீ என்னடான்னா அதை புரிஞ்சுக்காமல் பேசறே” என கடுமையாக முகத்தை வைத்து சிறிது அதட்டலுடனே கூறினார்.
அதில் விஜயலட்சுமிக்குள் கோபம் கொப்பளித்தது.
இருப்பினும்,கண்ணிற்கு முன்பு தெரிந்த மாளிகையின் பிரம்மாண்டமும் அவர்களது செல்வாக்கும் அவரை அடக்கியிருந்தது.
“அப்படிங்களா பெரியம்மா?என்ன பேசணும்னு சொல்லுங்க” என வாயெல்லாம் பல்லாக இளித்துக்கொண்டே அவருக்கு அருகே உள்ள நீள்விரிக்கையில் வந்து அமர்ந்தார்.
செல்லும் முன்பு சந்திரமதியிடம் கண்ணை காட்டி முகிழ்மதி எதுவும் பேசாதது போல் பார்த்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டிருந்தார்.
விஜயேந்திரனுக்கு விஜயலட்சுமியின் செயல் அருவருப்பை கொடுத்தன.
அவருக்கு சிவராமனை தனது இல்லத்தில் பார்த்ததே ஆத்திரம்!
அதனால் அவர் வந்ததிலிருந்து சிவராமனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
சிவராமன் வந்தவுடன் “வணக்கமுங்க ஐயா” என இருகரம் குவித்து வணங்கியதற்கு கூட “ம்” என தலையசைத்தாரே தவிர எதுவும் பேசவில்லை.
தாய் மட்டும் அவரை இங்கு இருந்தாக வேண்டும் என கட்டளையிடவில்லை என்றால் அவர் எப்போதோ அங்கிருந்து சென்றிருப்பார்.
இப்போது அனலிற்கு மேல் கொதிப்பது போல் கடுவன் பூனையாக அமர்ந்திருந்தார் விஜயேந்திர பூபதி.
தமயந்தியோ “வாங்க அண்ணி” என இரு பெண்களின் கையையும் பிடித்து அழைத்து சென்றாள்.
வீட்டின் ஒவ்வொரு அங்கங்களையும் தமயந்தி அங்குல அங்குலமாக இருவருக்கும் சுற்றிக்காட்டினாள்.
இருவருமே எதுவும் பேசாமல் மௌனமாகவே வந்தனர்.
ஆனால் முகிழ்மதி மட்டும் அங்கிருந்த ஒவ்வொன்றையும் கலைநயத்தோடு தொட்டு தடவி பார்த்தப்படி வந்தாள்.
அதையறிந்து அண்ணன் தங்கை இருவரும் ‘என்னடா இது’ என தங்களுக்குள் பார்வையை பறிமாறிக்கொண்டார்கள்.
இறுதியாக ரத்தினவேலின் அறைக்கு முன் வந்து நின்ற தமயந்தி இருவரின் புறம் திரும்பி நின்று “இது தான் பெரியண்ணாவோட ரூம்…இந்த ரூமுக்குள்ள அண்ணாவோட அனுமதியில்லாமல் போகமுடியாது…அதையும் மீறி போனால் அவருக்கு செம்ம கோபம் வந்திடும்” என கதைப்போல் கூறியவளை இருவரும் ஆர்வமின்றி வெறித்தனர்.
ஜித்தேந்திரனோ “உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?இந்த வீட்டிலே இருக்கிற ரூமிலே பெரிய ரூம் அண்ணாவோடது தான்…அவரோட ரூமிலே இருக்கிற இன்ட்டிரியர் செம்ம சூப்பரா இருக்கும்…கிட்டத்தட்ட ஒரு ராஜாவோட அறை மாதிரியே பிரம்மாண்டமா இருக்கும்…அண்ணா இருந்திருந்தால் உங்களை உள்ள கூட்டிட்டு போய் காட்டியிருப்போம்” என்று அவன் அந்த அறையின் பிரம்மாண்டத்தை பற்றி விவரித்து சொல்ல சொல்ல,முகிழ்மதியின் மனம் ஆர்வத்தில் மேலிட்டது.
அப்போதும் இருவரும் ஒன்றுமே பேசவில்லை.
முகிழ்மதி தாய் கொடுத்த எச்சரிக்கையின் விளைவால் எதுவும் பேச முடியாமல் திணறினாள்.
அவளிற்கு தயக்கம் ஒரு புறம் என்றாலும்,முகிழ்மதியின் விழிகளாவது பளீச்சிட்டது.
ஆனால் சந்திரமதியோ ‘எப்போடா முடிப்பீங்க?’ என்ற எண்ணத்துடனே ஒட்ட வைத்த புன்னகையுடன் நின்றிருந்தாள்.
அதை கண்ட இருவருக்குமே ஏமாற்றத்தில் முகம் சுருங்கிப்போனது.
பொதுவாக,ஒருவரிடம் உரையாடும் போது எதிரில் இருப்பவர்கள் முகத்தில் ஏதேனும் ஆர்வத்தை காட்டினால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து பேசமுடியும்.
இல்லையென்றால்,அவர்களின் சுவாரசியம் முற்றிலும் குறைந்துப்போய் சோர்ந்துவிடுவார்கள்.
கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தார்கள் தமயந்தியும் ஜித்தேந்திரனும்!
‘அடப்போங்கடா’ என அலுத்து களைத்துப்போனவர்களை உயிர்ப்பிப்பது போல் முகிழ்மதி முதன் முறையாய் வாயை திறந்தாள்.
தாயின் கட்டளையை மீறி அவள் பேசியிருந்தாள்.
அவனது அறையின் உட்புற வடிவமைப்பு பற்றிய பேச்சு அவளை பேச வைத்திருந்தது என்று கூறினால் மிகையாகாது.
ஏனெனில்,விழிகள் பளீச்சிட மூடியிருந்த அவனது அறையை சுட்டிக்காட்டிய முகிழ்மதி “அக்கா உங்க அண்ணாவோட ரூமை ஒரே ஒரு தடவை நான் பார்க்கமுடியுமா?அவர்கிட்ட ஃபோனிலே எனக்காக கொஞ்சம் பர்மிஷன் கேட்டு சொல்லுங்களேன்” என கண்கள் சுருக்கி இறைஞ்சியவளின் பாவனை,எந்தவொரு பாறையையும் உருகிட செய்வதாய் இருந்தது.
பாறையே உருகிவிடும் போது இவர்களின் மனம் மட்டும் கரையாமல் போய்விடுமா என்ன?
அதனால் தங்கையும் அண்ணனும் தனக்குள்ளே ஒரு முறை பார்வையை பரிமாறிக்கொண்டார்கள்.
அவர்கள் மனம் உருகினாலும் அவர்களது தமையனின் நினைவு எழுந்தவுடன் “நோ” என ஒரு சேர கத்தி,அவளிற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
உடனே அவளின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிவிட்டன.
அதுவரை அமைதியாக இருந்த சந்திரமதிக்கு அவர்களின் மறுப்பு எரிச்சலை கொடுத்தன.
அதனால் தங்கையிடம் “முகிழ் அதிகப்பிரசங்கித்தனமா எதுவும் பண்ணாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறது?மம்மிக்கு இது தெரிஞ்சா என்னாகும்?முதல்ல வா நீ” என பல்லைகடித்து அதட்டி,தங்கையை கையோடு அழைத்து சென்றுவிட்டாள்.
அங்கிருந்து செல்லும் முன் அவர்கள் இருவரையும் அவள் முறைத்துவிட்டே செல்ல,அதை கவனித்த தமயந்தி “என்னடா அண்ணா…அண்ணி நம்மளை முறைச்சிட்டு போறாங்க…அண்ணி கோவிச்சுகிட்டாங்களோ?” என பாவமாய் சொல்ல,
சந்திரமதியின் முறைப்பு அவனிற்குள் சுறுசுறுவென கோபத்தை கொடுத்தன.
ஆனால் அதை அடக்கி “அட விடு லட்டு…கல்யாணம் முடிஞ்சப்பிறகு அவங்களே அண்ணனை பத்தி புரிஞ்சுப்பாங்க…இப்போ நாம்ப மட்டும் அண்ணாவுக்கு ஃபோன் பண்ணி பர்மிஷன் கேட்டோம்… அண்ணா தொலைச்சுக்கட்டிருவாரு…நமக்கு மட்டுமில்லை…அவங்களுக்கும் சேர்த்து தான் திட்டு விழும்…அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்” என தங்கையை அவன் சமாதானம் செய்தான்.
இது தான் ஜித்தேந்திரன்…தங்கையை எந்த அளவிற்கு சீண்டுகிறானோ?
அதே அளவு அவளின் மீது அளவுகடந்த பாசமும் வைத்திருக்கிறான்.அவளிற்கு ஒன்று என்றால் அவன் துடித்துவிடுவான்.
தமயந்திக்கோ மனம் ஆறவே இல்லை.
முகிழ்மதியின் ஏமாற்றம் சுமந்த முகம் அவளிற்கு குற்றவுணர்வை கொடுத்தன.
“ஆனாலும் அண்ணா…பாவம் நம்ப சின்ன அண்ணி…அவங்களுக்கு இந்த இன்ட்ரீயர் அன்ட் ஆர்க்கி மேலே பயங்கர கிரேஸ் இருக்கு போலே தெரியுது…பட் அவங்க வீட்டுலே அதெல்லாம் படிக்க வைக்கிற மாதிரி தெரியலை” என முகிழ்மதிக்காக பரிந்து பேசிய தங்கையின் தோளை ஆறுதலாக தட்டிய ஜித்தேந்திரன்,
“எஸ் நானும் இந்த வீட்டை சுத்திக் காட்டும் போதே முகிழ்மதியை கவனிச்சேன்…எல்லாத்தையும் பிரம்மிப்போடு தொட்டு பார்த்திட்டே வந்தாங்க…ஒவ்வொரு பொருளையும் தொட்டு பார்க்கும் போது அவங்க கண்ணுலே ஒரு காதல் தெரிஞ்சது…அண்ணாவுக்கு அடுத்தப்படியா நான் இதை முகிழ்மதிக்கிட்ட ஃபீல் பண்ணேன்…பட் இதை பத்தி கவலைப்பட வேண்டியது அவங்க ஃபேரண்ட்ஸ் நாம்ப என்ன செய்ய முடியும் லட்டு?” என ஆதங்கமாக கேட்ட ஜித்தேந்திரன்,
“எதையும் யோசிக்காதே…நீ வா” என அவளை ஆதுரத்துடன் கூறி அழைத்து சென்றான்.
முகிழ்மதியோட பழகிய சில நிமிடங்களிலே அவளை பற்றி ஆணிவேர் வரை அவர்கள் புரிந்துக் கொண்டிருந்தார்கள்.
அவள் எப்போதும் ஒரு திறந்த புத்தகம் தான்.
அவளின் பளிங்கு முகம் அனைத்தையும் வெளிச்சமிட்டு காட்டிவிடும்.கள்ளம்கபடமில்லாத அவளின் குணம் தான் அதன் காரணம்!
அதனால் அவளின் நிலையை எண்ணி அவர்கள் இருவரும் வருந்த செய்தார்கள்.
ஆனால் ஜித்தேந்திரன் போல் தமயந்தி இதை எளிதில் விடவில்லை.
அவள் முகிழ்மதியை தனிமையில் சந்தித்து பேசினாள்.
அவளிடம் தங்கள் தமையனின் கோபத்தை பற்றி எடுத்துக்கூறி,அதற்காகவே அந்த அறைக்குள் அவளை அழைத்து செல்ல முடியவில்லை என்று மன்னிப்பையும் வேண்டினாள்.
முகிழ்மதி எப்போதும் தவறு செய்பவர்களை மன்னிப்பதில் அன்னை தெரசாவாயிற்றே?
அதனால் இப்போதும் “பரவாயில்லை இருக்கட்டும் அக்கா…இதிலே உங்க தப்பு எதுவுமில்லை” என பரந்த மனப்பான்மையுடன் அவளை மன்னித்துவிட்டாள்.
அதன்பிறகே தமயந்தியின் மனம் ஆறுதலடைந்தது.
அவள் இலேசான உள்ளத்துடன் “சரி வாங்க அண்ணி…உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் அவளை அமர வைத்து உணவை பரிமாறிக்கொண்டே அவளிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள்.
அவளின் வீட்டை பற்றி பேச்சுக்கொடுத்தாள் தமயந்தி.ஏனெனில்,அவர்களது குடும்ப அமைப்பே சிறிது வித்தியாசமாக இருப்பது போல் தோன்றின.
அதனால் தமயந்தி பல வகையில் தோண்டி துருவினாலும் அவளது பிறந்த வீட்டு ஆட்களை பற்றி அவள் ஒரு குறை கூறவில்லை.
இறுதியில் அவளே ‘இது தேறாது’ என அலுத்துக்கொண்டு குடும்பம் சார்ந்த பேச்சை விடுத்து,அவளை பற்றிய பேச்சை தொடங்கினாள்.
அவளை பற்றி பேச தொடங்கியவுடன்,அவள் மடைத்திறந்த வெள்ளமென அனைத்தையும் கொட்டினாள்.
அவளுடன் நடைப்பெற்ற உரையாடலில் அவளிற்கு ஒரு விடயம் மட்டும் நன்றாக புரிந்துப்போனது.
கட்டிட கலையின் மீது தீராத காதல் கொண்டுள்ளாள் அவள் என்று!
கலையின் மீதிருந்த அவளின் விருப்பம் அவளை மீறி பேச்சில் வெளிப்பட்டது.
“அண்ணி எனக்கு ஒரு டவுட்…நீங்க டென்த்துக்கு மேலே ஸ்கூலே போகலை…அப்புறம் எப்படி உங்களுக்கு ஆர்க்கி பத்தி இவ்வளவு நாலேஜ்?” என அவள் ஆர்வமும் குழப்பமும் கலந்தக்குரலில் தமயந்தி வினவ,
“அது வந்து அக்கா…” என அவள் ஆரம்பிக்கும் போதே,
இடைமறித்த தமயந்தி “அண்ணி நான் உங்களை அண்ணினு கூப்பிடறேன்…நீங்க அக்கானு கூப்பிட்டால் நல்லாயிருக்காது…தமயந்தி…தமி..தந்தி இப்படி எப்படி வேணா கூப்பிடுங்க…” என்றவள்,
சட்டென நிறுத்தி “பட் மந்தி மட்டும் கூப்பிடாதீங்க…கூப்பிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்” என விரல் நீட்டி போலியாய் எச்சரித்தாள்.
அவளின் போலி கோபத்தை கண்டு மென்மையாய் சிரித்த முகிழ்மதி “கண்டிப்பா மந்தி கூப்பிடமாட்டேன்…நீங்க என்ன மங்கி மாதிரியா இருக்கீங்க?ரொம்ப அழகு அக்கா நீங்க…” என்றவள் சட்டென நாக்கை கடித்து,அவளை மிரட்சியோடு பார்க்க,
அவள் என்னவோ செல்லமாக தான் முகிழ்மதியை முறைத்தாள்.
ஆனால் முகிழ்மதி அதற்கே பயந்துவிட்டாள்.
அவள் சொல் பேச்சை கேட்கவில்லை என்று திட்டிவிடுவாளோ என மிரண்டு “சாரி” என கவலையாக மன்னிப்பு வேண்ட,
தமயந்திக்கு அவளின் மீது பரிதாபம் தான் வந்தது.
அவளிற்கு நொடியில் சந்திரமதி மற்றும் முகிழ்மதி இருவருக்கும் இடையேயான வளர்ப்பு வேற்றுமை புரிந்துப்போனது.
‘ஒரு கண்ணுலே சுண்ணாம்பு ஒரு கண்ணுலே நெய்யா…ஹும்’ என கவலையாக பெருமூச்சுவிட்டாள்.
அதனால் முகிழ்மதியின் மீது அன்பு அதிகரிக்க “அண்ணி…அண்ணி…இதுக்கு எதுக்கு சரி?எனக்கு உங்க மேலே கோபமே இல்லை…” என அவளின் கன்னம் கிள்ளி சமாதானம் செய்தவள் “சரி என்னை எப்படி கூப்பிடணும்னு தோணுதோ கூப்பிடுங்க…உங்க விருப்பம்” என இறுதியாக அவளின் முடிவிற்கே விட்டுக்கொடுத்தாள் தமயந்தி.
ஆனால் ஒன்று,அவள் தமையனிடம் அனுமதி வாங்கி,முகிழ்மதியை அந்த அறைக்கு அழைத்து செல்ல வேண்டும் என தனக்குள்ளே உறுதிக்கொண்டாள்.
அவளின் அந்த சிறிய ஆசையாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற அவா அவளிற்குள்!
அதன்படி,ரத்தினவேல் வீட்டிற்கு வந்ததை தெரிந்துக்கொண்ட தமயந்தி “அண்ணி நீங்க நம்ப தோட்டத்தை சுத்தி பார்த்திட்டு இருங்க…நான் வந்திடறேன்” என பரபரப்புடன் கூறிவிட்டு அவள் எழுந்து சென்றுவிட்டாள்.
முகிழ்மதியும் அவள் சொன்னது போலவே தோட்டத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.
தமயந்தி அவளது தமையனிடம் அதைப்பற்றி பேச,அவனின் முகமோ எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை.
“அண்ணா” என அவள் ஆரம்பிக்கும் போதே,
“அவுட் சைடர்ஸ் யாரும் என்னோட ரூமுக்குள்ள வர்றது பிடிக்காதுனு உனக்கு தெரியாதா?” என அவளை உளுந்து விழித்தப்படி அவன் வினவ,
அவளோ “அண்ணா அது வந்து…” என தடுமாறினாள்.
அவளிற்கு அவனிடம் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை.
அவள் திணறலை கண்ட ரத்தினவேல் “யாருக்காகவும் என்னோட ரூல்ஸை மாத்த முடியாது தமி…உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என அழுத்தம் திருத்தமாக கூறிவிட,
அவளிற்கு வேறு வழி தெரியவில்லை.
அவனை எதற்காகவும் கட்டாயப்படுத்த முடியாது என்பது தெரிந்ததால்,அவள் “சரி அண்ணா” என சோர்ந்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
அவள் அங்கிருந்து சென்றவுடன் ரத்தினவேல் அரசியல் சம்மந்தமான தனது பணியை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
சில நிமிடங்கள் அந்த பணியிலே தன் நேரத்தை செலவிட்ட ரத்தினவேல் மெதுவாக சன்னல் திரைக்கு அருகே சென்று நின்றான்.
மேலிருந்து கீழாக பார்த்த ரத்தினவேலின் விழிகள் இரண்டும் பளீச்சிட்டன.
ஏனெனில்,பச்சை பசேல் என்று பசுமையோடு இருந்த அவனது தோட்டத்தில் ஒரு அழகான வண்ணத்துப்பூச்சி!
அதுவும்,ஊதா நிற லெஹன்காவில் ஐந்தடி உயரத்தில் நின்றிருந்த அந்த வண்ணத்துப்பூச்சியிடமிருந்து அவனால் கண்ணை எடுக்க முடியவில்லை.
கதிரவனின் கதிர்கள் அவளின் மேல் பட்டு அவளின் சருமம் ஜொலித்தது.
தன்னந்தனியாக நின்று செடிகளை ஆசையாக வருடிக்கொண்டிருந்தவளின் மென்மை அவனை கட்டியிழுத்தது.
அவளை இன்னும் அதிகமாக பார்க்க தூண்டியது அவன் மனம்!
சட்டென நடப்பை உணர்ந்த ரத்தினவேல் “ம்க்கும்” என தொண்டையை செருமி
விழிகளை அவளிடமிருந்து திருப்பினான் அவன்.
அப்போது தான் சற்று முன்பு தங்கை அவளை பற்றி கூறிய விடயங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்தில் எழுந்தது.
உடனே அவனிற்குள் என்ன மாற்றங்கள் நிகழ்ந்ததோ?
அடுத்த கணமே அலைப்பேசியின் வழியே யாரையோ தொடர்பு கொண்ட ரத்தினவேல் அவர்களிடம் சில கட்டளைகளை பிறப்பித்தான்.
அவன் விதித்த ஆணையின் படி,அடுத்த சில நிமிடங்களில் முகிழ்மதி அவனது அறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தாள்.
அதுவும்,துணைக்கு யாவருமின்றி தன்னந்தனியாய்!
இப்போது அந்த பட்டாம்பூச்சி வேட்டையாடும் வேங்கையிடம் தனியாக சிக்கியிருந்தது.