முகிழ்மதி 122(1)


 

 

அனைவரும் வீட்டில் ஒப்புக் கொண்டாலும் திருமணம் தற்போது வேண்டாம் என தமயந்தி முடிவாக கூறிவிட்டாள்.

வீட்டில் இருப்பவர்கள் காரணம் கேட்டதற்கு “இன்னும் கொஞ்ச நாள் நான் உங்களோட இருக்கலாம்னு விருப்பப்படறேன்” என்றிருந்தாள்.

அவள் கூறுவதில் நியாய கூறுகள் இருப்பதினால் பெரியவர்கள் அவளின் முடிவிற்கு ஒப்புக் கொண்டார்கள்.

உண்மையில் வீரின் நேசத்தை பரிசோதிக்கவே அவளிற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.

அதற்காக வீர் அவளையே சுற்றி வரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

அவளது காதலுக்கான அடிப்படை மரியாதை வேண்டி பெண்ணுள்ளம் தவித்தது.

அவனிடமிருந்து மீண்டும் ஒரு நிராகரிப்போ அல்லது அவமதிப்போ அவளால் ஏற்க முடியாது.

அதற்காகவே அவள் நிதானம் காத்தாள்.

அவர்களது காதல் விடயம் கேள்வியுற்ற பிறகு அவள் வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என அவன் எதிர்பார்த்திருக்க,அதிமுக்கியமாக விஜயேந்திரனிடமிருந்து கிளம்பும் என்று தவிப்புடன் அவன் காத்திருந்தான்.

ஆனால் அவ்வாறு எதுவும் நேரவில்லை என்றவுடன் அவனிற்கு அதிர்ச்சி ஒரு புறம் என்றால்,மற்றொரு புறம் பரமானந்தமும் கொண்டான்.

இனி தன்னவளின் கரம் பற்ற தடைகள் ஏதுமில்லை என அவன் எண்ணியிருக்க,அவன் சிந்தனையில் மண் விழுந்தது,அவனது ஆரூயிர் புயலால்!

‘என்ன இது?’ என அவளின் செயல் அறிந்து அவன் திகைத்து தவித்தான்.

தமயந்தியே திருமணம் வேண்டாம் என ஒத்தி வைத்தது,அவனின் இதயத்தில் பாரமேற்றி மனம் வலிக்க செய்தது.

கரை சேரும் மார்க்கம் அறியாமல் இருட்டில் அவன் தவித்த சமயம்,கலங்கறை விளக்கு போல் அவனது வாழ்வில் ஒளியேற்றினார் விஜயேந்திரன்.

எதிர்பாராத நபரிடமிருந்து அவனிற்கு கிடைத்த அந்த உதவி அவனது நெஞ்சை நெகிழ செய்து,அவனுள் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

திடீரென்று ஒரு நாள் அவனை தன்னறைக்கு அழைத்தார் விஜயேந்திரன்.

பணி நிமித்தமாக அவனை அவர் அழைத்திருக்கிறார் என்று அவன் நினைத்ததற்கு மாறாக அவன் உள்ளே நுழைந்த கணமே “வாடா மருமகனே” என ஆர்ப்பாட்டமாக அவனை வரவேற்றதும்,

‘ஏதே மருமகனா?’ என நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவன் விழித்தான்.

அவனது அதிர்ச்சி கண்டு புன்னகைத்தவர் “என் மகளை கல்யாணம் பண்ணிக்கப்போறவன் எனக்கு மருமகன் தானே…உட்காரு” என்று கூறி அவனை ஒட்டுமொத்தமாய் அதிர வைத்தார்.

அவனிற்கோ அவரின் பேச்சு பெரும் வியப்பை அளித்திட,அவனால் நடப்பை நம்ப முடியவில்லை.

“உட்காரு வீர்” என அவனை பணித்தவர்,அவன் யோசனையுடன் அமர்ந்த நொடியே “என் மக உன் மேலே பயங்கர கோபத்திலே இருக்காள்னு உனக்கே தெரியும்…நீ எப்படி அதை சரிப்பண்ணலாம்னு இருக்கே?யோசனை ஏதாவது வைச்சிருக்கீயா?” என அவனது முகத்தை நேரிடையாக துளைத்தப்படி கேட்க,

அவனோ ‘இவருக்கு இப்போ நான் என்ன பதில் சொல்லறது?’ என ஒன்றும் சொல்ல தெரியாமல் விழித்தான்.

ஒருவரை சமாளிப்பது என்றால் அவனிற்கு எளிது…அவர்களது குடும்பமே அதிரடி சரவெடியாக இருக்கும் போது அவனும் என்ன தான் செய்வான்?

அவரோ “என்ன நீ முழிக்கிறே?எங்க வீட்டு தேவதையை உன்னை நம்பி நாங்க தரப்போறோம்…நீ என்னடான்னா அவளை சமாதானம் கூட செய்யமாட்டியா?” என கோபத்தோடு மீசையை முறுக்கிவிட,

‘என்னடா ஆளு ஆளுக்கு என்னைய முறைக்கிறீங்க?’ என அவன் பதில் எதுவும் கூறாமல் அவரை ஒரு பார்வை பார்த்தான்.

அவனது பார்வையை கவனித்தவர் சற்று மனமிறங்கி “சரி உன்னை பத்தி தெரிஞ்சும் இதெல்லாம் எதிர்பார்க்கிறது என் தப்பு தான்…உன்கிட்ட என்ன பிடிச்சதுனு தெரியலை…நீ தான் வேணும்னு என் பொண்ணு பிடிவாதமா இருக்காள்…நான் உன்கிட்ட பேசின எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிடுச்சு வீர்…அதனாலே தான் அவ உன் மேலே பயங்கர கோபத்திலே இருக்காள்…அதாவது தெரியுமா இல்லையா?” என மருமகனிடம் அவளின் கோபத்திற்கான நியதியை எடுத்துரைக்க,

அவனிற்கு இந்த செய்தி முற்றிலும் புதிது!

அவனது விலகலினால் தான் அவள் தன் மீது சினத்துடன் இருக்கிறாள் என்று இதுவரை நினைத்திருந்தான்.

இப்போது தான் அவளது தார்மீக சினத்தின் பின்னணி புரிப்பட “ஏதே தெரிஞ்சிடுச்சா?” என நெற்றியை நீவிக்கொண்டான்.

‘ஓ மேடம் அதனாலே தான் செம்ம கடுப்புலே இருக்காளா?சுத்தம்’ என்று தன்னையே நொந்துக்கொண்டவனிற்கு இனி அவளை சமாளிப்பது பெரும் கஷ்டம் என்பது புரிந்தது.

விஜயேந்திரனோ அவனை இமைகள் இடுங்க நோக்கி “என்ன காந்தி செத்திட்டாரான்ற ரேஞ்சிக்கு கேட்கிறே?அவ இப்போ கல்யாணத்தை தள்ளிப்போட்டதுக்கு காரணமும் இது தான்…நீ அவ காலை பிடிச்சு கெஞ்சிவியோ இல்லை வேற ஏதாவது வழியிலே அவளை சமாளிப்பியோ எனக்கு தெரியாது…அவ முகத்திலே மறுபடியும் பழைய சிரிப்பை கொண்டு வரணும்…அது உன் கையிலே தான் இருக்கு…அப்படி நீ கொண்டு வரலை…என் பொண்ணை உனக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன்…என்ன புரியுதா?” என தனக்கே உரிய அதிகார தொனியில் வருங்கால மருமகன் என்றும் பாராமல் அவனிடம் மிரட்டல் விடுக்க,

வீரோ ‘அது சரி’ என சலிப்பாக தலையசைத்துக்கொண்டாலும்,மகளின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு எத்தகையது என்று அவனிற்கு புலப்பட்டது.

அதனால் அவரை அவன் தவறாக எதுவும் நினைக்கவில்லை.

அவனிடம் மிரட்டல் விட்டவரே பின்பு அவனில் இரக்கம் கொண்டவராய்  “அவ கோபத்தை குறைக்க சில ஐடியா தர்றேன்…இதுவும் கூட உனக்காக இல்லை…என் பொண்ணுக்காக…எனக்கு அவ சந்தோஷம் தான் முக்கியம்” என்றவர் மகளை எவ்வாறெல்லாம் சகஜமாக்கி மீட்டுக் கொண்டு வரலாம் என்னும் ரீதியில் அவனிற்கு சில ஆலோசனைகளை அள்ளி தெளிக்க,

அவரின் மேல் கடுப்பில் இருந்த வீர் ‘நம்ப மாமனார் வெளிய பார்க்கிற அளவு முரடு இல்லை போலே…நல்ல மாமனார் தான்’ என்றெண்ணி தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

அவர் கூறியது அனைத்தையும் மனதிற்குள் ஆழப்பதிய வைத்து கொண்ட வீர் “ரொம்ப தேங்க்ஸ் சார்” என பழைய ஞாபகத்தில் அவரிடம் நன்றி கூறிவிட்டு எழ,

அவரோ அவனை முறைத்து “இன்னும் என்ன சார்?மாமானு சொல்லு வீர்” என்று உரிமையாய் அதட்டினார்.

அவனிற்கோ சட்டென சிறு வயதிலிருந்து பழகிய வழக்கத்தை மாற்ற முடியவில்லை.

‘அடேய் நீங்க சட்டு சட்டுனு மாறுவீங்கடா…எனக்கு அதெல்லாம் முடியாது’ என உள்ளுக்குள் அங்கலாய்த்துக்கொண்டே அவன் சங்கடமாக பின்னங்கழுத்தை வருட,அவனது முகம் வழியே அவனது உணர்வுகள் படித்தவராய் “சரி பரவாயில்லை…டேக் யுவர் ஓன் டைம்” என தணிவாக பேசி அவனை அனுப்பி வைத்தார்.

அவரின் அறையிலிருந்து வெளியே வந்த வீரோ இதழை குவித்து ஊதி ‘ஷப்பா குடும்பமே சரியான அடாவடியா இருக்கு’ என எண்ணி தலையாட்டி சிரித்துக்கொண்டவனின் நினைவுகள் சிறிது நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நோக்கி சென்றன.

சில நாட்களுக்கு முன்பு,

ஜித்து சந்திரமதி திருமணம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்த சமயம் அது!

தன் முன்பே கைகள் கட்டி நின்றிருந்த வீரை துளைக்கும் பார்வை பார்த்த ரத்தினவேல் 
“வீர் உனக்கும் தமிக்கும் என்ன பிரச்சனை?” என நேரடியாக கேட்டிருந்தான்.

அவனது நேரடி கேள்வியில் ஒரு கணம் திணறிய வீர் பின்பு தன்னை சமாளித்தப்படி “எனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சனை?ஒரு பிரச்சனையும் இல்லையே பூபதி” என சமாளிப்பாக பதிலுரைத்தான்.

உடனே அவனை விழிகளால் துளைத்த ரத்தினவேல் “இதை வேற யாருக்கிட்டயாவது சொன்னால் நம்புவாங்க…நான் நம்பமாட்டேன்டா…ஒழுங்கா உண்மைய சொல்லு…என்னடா பிரச்சனை?” என அழுத்தம் திருத்தமாக வினவினான்.

அவனோ அப்போதும் “ஏதாவது இருந்தால் தானே சொல்லமுடியும் பூபதி” என்றான் வெகு நிதானமாக…

அவனது பதிலை கேட்டுக்கொண்டே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் “வீர் நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை…டிரெக்ட்டா கேட்கிறேன் என் தங்கச்சியை உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையாடா?” என  புருவம் உயர்த்தி அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டான்.

அவனது இந்த நேரடி கேள்வியில் வீர் தான் தவித்து தடுமாறிப்போனான்.

நண்பனிற்கு எவ்வாறு தெரிந்தது என்று அவன் அதிர்ச்சியடையவில்லை.

அவனிற்கு தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியமே?

அதனை அவனும் அறிவான்.

ஆயினும்,தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஏன்டா திடீர்னு இப்படி கேட்கிறே?” என பின்னங்கழுத்தை வருடியப்படி அவன் பதில் கேள்வி எழுப்ப,

“இப்போ நான் உன் ஃப்ரெண்டாவோ முதலாளியாவோ கேட்கலை வீர்…என் தங்கச்சிக்கு அண்ணானா கேட்கிறேன்…அவளை பிடிச்சிருக்கா பிடிக்கலையாடா?ஐ நீட் ஒன்லி ஒன் ஆன்சர்” என விடாப்பிடியாக ஒரு முடிவை தெரிந்துக்கொள்ளும் தீர்க்கத்துடன் வினவினான்.

அவனோ எவ்வித பதிலும் கூறாமல் மௌனம் காக்க,அவன் கடுப்பாகிவிட்டான்.

“அதெப்படிடா…உங்க வாயெல்லாம் ஒரு கேள்விக்கேட்டால் தான் ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்குமா?ஒழுங்கா வாயை திறந்து பதில் சொல்லு வீர்…உன்னை தானே கேட்கிறேன்” என அவனை உறுத்து விழித்தப்படி சீறினான் ரத்தினவேல்.

வீர் அவனது கோபத்தை கண்டு பெருமூச்சை வெளியேற்றினான்.

அவன் பதில் கூறாமல் தோழன் விடப்போவதில்லை என்றெண்ணி வேறு வழியின்றி “இல்லை…” என தலையசைத்து அவன் மறுக்கும் முன்பு அவனிடம் ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்தியவன் “நேர்மையான பதில் எனக்கு வேணும் வீர்” என்றான் கறாராக..

மீண்டும் அவனிடம் அதே மௌனம்!

‘சரியான நெஞ்சழுத்தம் பிடிச்ச ஃபேமிலி…தெரியாமல் இவங்ககிட்ட வந்து நாங்க சிக்கியிருக்கோம் பாரு…எல்லாம் நேரம்’ என ரத்தினவேலால் மனதிற்குள் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் மனைவி,சந்திரமதி தான் அழுத்தம் என்றால்,வீர் அதற்கும் மேலாக அழுத்தமாக இருந்தான்.

அவன் அப்போதும் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நிற்கவும் “வீர் நிஜமா எனக்கு வர கோபத்துக்கு உன்னை சப்புன்னு நாலு அரை விட என் கை இரண்டும் பரபரக்குது…நான் கன்னத்திலே அறைக்கொடுக்கிறதுக்கு முன்னாடி வாயை திறந்து பதில் பேசுடா” என கோபத்தில் குரல் உயர்த்தி இரைந்தான்.

அவனது கோபம் கண்டு மெதுவாக தலையுயர்த்திய வீர் “இல்லை பூபதி…அது பத்தி பேசி இனி ஒரு பிரயோஜனமும் இல்லை…எனக்கும் உன் தங்கச்சிக்கும் ஏணி வைச்சால் கூட எட்டாது…” என நலிந்த குரலில் அவன் கூறியதும்,மற்றவனிற்கு வந்ததே ஆத்திரம்!

அவனிற்கு வந்த ஆத்திரத்திற்கு நண்பனது சட்டையைக் கொத்தாக பற்றி நான்கு அறை கொடுக்க அவனது கைகள் பரபரத்தது…

ஆனால் நண்பன் என்ற காரணத்திற்காக கைமுஷ்டியை இறுக்கி அதை அடக்கிக்கொண்டான்.

இருப்பினும்,அவனுள் எழுந்த சினத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏனெனில்,தங்கை சில நாட்களாக அனுபவிக்கும் வேதனையை அவனும் மௌனமாக பார்த்துக்கொண்டு தானே இருந்தான்.

காதலர்கள் விடயத்தில் தலையிடக்கூடாது என விலகியிருக்க,இப்போது உயிரற்ற இருந்த இருவரின் முகத்தையும் பார்த்தப் பிறகு அவனால் மௌனமாக இருக்க முடியவில்லை‌.

அதிலும்,தங்கையின் கண்ணீரை கண்டதற்கு பிறகு அவன் உதிரம் துடித்துப்போயிருந்தன.

அதனால் எழுந்த சினத்துடன் “என்னடா உன் மனசுலே நினைச்சிட்டு இருக்கே?இப்போ தான் உனக்கு தகுதி தராதரம் அந்தஸ்து எல்லாம் கண்ணுக்கு முன்னாடி நிக்குதா?அவகிட்ட முத்தம் வாங்கி மயங்கி நிக்கும் போது எதுவும் தெரியலையா?இல்லை அவ உன் பின்னாடியே நாயா பேயா சுத்தும் போது தெரியலையா? சொல்லுடா” என அவனது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக அவன் தங்கையின் நேசத்திற்காக நியாயம் கேட்க,

அதில் திகைத்த வீர் “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என திக்கி திணறி கேட்க,

அவனை விழிகள் சிவக்க உறுத்து விழித்தவன் “வர வெறிக்கு உன்னை கொன்னுடுவேன்டா…என்னை என்ன நினைச்சே…எனக்கு எதுவும் தெரியாதுன்னா…எனக்கு தெரியாமல் அவ உன் வீட்டு படியிலே காலடி எடுத்து வைச்சிடுவாளாடா?அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கின்ற விஷயம் உனக்கெல்லாம் முன்னாடியே எனக்கு தெரியும்…” என்று கூறி அவனை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தான்.

“முன்னாடியே தெரிஞ்சா அவளை தடுத்து நிறுத்தியிருக்கலாமில்லை பூபதி…” என ஆதங்கம் கலந்த குரலில் அவன் வினவ,

“கேட்கிறான் பாரு கேனப்பையனாட்டம் கேள்வி” என நெற்றியை நீவி சிடுசிடுத்தவன்,

“உன்னை விட ஒரு நல்லவன் என் தங்கச்சிக்கு கிடைக்கமாட்டான்னு நினைச்சேன்டா…அதனாலே தான் அவளை எந்த விதத்திலும் நான் தடுக்கலை…அவளுக்கு அவளை விட உன்னை தான் அதிகம் பிடிக்கும்…அது எனக்கு நல்லாவே தெரியும்…பிகாஸ் என் தங்கச்சி எந்தவொரு இடத்திலும் அவ காதலை மறைச்சதே இல்லை…உன்னை பார்க்கிற அவ கண்ணே ஆயிரம் கதை சொல்லும்…ஆனால் நீ தான்டா கோழை மாதிரி என் தங்கச்சியை ஒவ்வொரு முறையும் காயப்படுத்திட்டு இருக்கே” என்றவனின் குரல் அவனையும் மீறி இடறியது.

அவன் முரடனாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு அண்ணாயிற்றே?

அவளிற்கு ஒன்று என்றால் அவனால் தாங்க முடியுமா என்ன?

உடனே இடறிய குரலை செருமி சமாளித்த ரத்தினவேல் “நானும் நண்பனாச்சேனு பொறுமையா போக நினைச்சேன்‌…ஆனால் நீ இன்னும் இன்னும் என் தங்கச்சியை ஹேர்ட் பண்ணிட்டே இருக்கடா…எனக்கு வர கோபத்துக்கு உன் செவுல்லே நாலு அறை விடணும்னு தோணுது…என் தங்கச்சிக்காகவும் என் பொண்டாட்டிக்காகவும் அமைதியா இருக்கேன்” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்…

அவனது கோபம் கண்டு அவனிற்கும் வலித்தது.

அவளை அவன் ஒன்றும் வேண்டுமென்றே நிராகரிக்கவில்லை..

அவர்களுக்கு இடையேயான நிதி நிலைமை அவனை தயங்க வைத்தது.

அதே எண்ணத்துடன் “எனக்கும் அவளை பிடிச்சிருக்கு தான்…ஆனால் எனக்கு பயமா இருக்கு பூபதி” என நண்பனிடம் தன் மனதை திறக்க ஆரம்பித்தான்.

“என்ன பயம்” என புருவம் சுருக்கி ரத்தினவேல் வினவ,

அவனை தடுமாற்றமாக ஏறிட்ட வீர் “உங்க அளவு எனக்கு வசதியில்லையே…சொத்துனு பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்லை…எங்களுக்குன்னு சொந்தமா ஒரே ஒரு வீடு தான் இருக்கு…இதையெல்லாம் மீறி அம்மா நிலைமை உனக்கு நல்லாவே தெரியும்…அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டால் அவங்களையும் சேர்த்து பார்த்துக்கிற மாதிரி இருக்கும்…ஒரு கட்டத்திலே அவளுக்கு என் கூட வாழறதில் சலிப்பு கூட வரலாம்…நானும் கோபத்திலே இரண்டு வார்த்தை பேசலாம்…தேவையில்லாமல் மனஸ்தாபங்கள் தான் வரும் பூபதி…அதையெல்லாம் மீறி என்னாலே அவளை நல்லா பார்த்துக்க முடியுமா இல்லையானு சந்தேகமா இருக்கு?” என இதுவரை யாரிடமும் வெளிப்படுத்தாத விடயங்கள் மொத்தத்தையும் நண்பனின் பகிர்ந்துக்கொண்டான்.

அவனது தடுமாற்றத்திற்கான காரணம் அவனிற்கும் புரிந்தது.

அதேசமயம் தேவையில்லாத அச்சம் என்றெண்ணிய ரத்தினவேல் “பைத்தியமாடா நீ…உங்க அம்மா அவளுக்கும் அம்மா மாதிரி தான்…அவங்களை என்னைக்கும் அவ பாரமா நினைக்கமாட்டாள்…அப்படி என் தங்கச்சிய நாங்க வளர்க்கவும் இல்லை…அன்ட் தென் பின்னாடி எப்படியும் சாக தானே போறோம்னு இப்போவே தற்கொலை பண்ணி செத்து போயிடுவீயா என்ன?வாழ்க்கைய அதன் போக்கிலே வாழுடா…வென் யூ திங்க் பாசிஸ்டிவ்…குட் திங்க் வில் ஹேபென்ட்…அதனாலே ரொம்ப யோசிக்காதே” என நண்பனின் தாழ்வு மனப்பான்மைக்கு உரிய அறிவுரைகளை அவன் வழங்கிட,ரத்தினவேலிடம் மனம் விட்டு பேசியதற்கு பிறகே வீரின் மனமும் தெளிவாகின.

ஆரம்பத்தில் விஜயேந்திரனை எண்ணி அவன் தயங்கினாலும் தனக்காக ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் வாழும் ஜீவனின் நேசம் அவனது உயிரை சென்று தாக்கின.

அவனிற்காக அவள் செய்த செயல்கள்,தன்னையே உலகமென அவள் சுற்றி வந்த விதம்,அவனது தாயிடம் வேற்றுமை பாராட்டாமல் அவள் பாசமாக நடந்துக் கொண்டது,தன் மீது அவள் எடுத்துக்கொள்ளும் அக்கறை அனைத்தையும் நெஞ்சில் இருத்தி ‘இப்படியொரு பொண்ணை மிஸ் பண்ணால் நீ தான்டா உலகத்திலே பெரிய கோழை’ என அவனது மனசாட்சியே சரமாரியாக அவனை திட்டி தீர்த்திருந்தது.

அதன்பிறகே அவன் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்திருந்தான்.

இனி என்ன நடந்தாலும் சரி…தடைகள் பல வந்தாலும் சரி தன்னவளின் கரம் பற்றுவதே தன் வாழ்வின் இலட்சியமென கருதி அவளிடம் வந்து சேர்ந்தான்.

.அவனிற்காக…அவனின் மேல் உள்ள காதலுக்காக அவள் பல வருடங்கள் போராடியிருந்தாள் .

இப்போது அவன் அவளின் மேல் உள்ள காதலை காட்ட வேண்டிய தருணம் என்று புரிந்தது.

ஆதலால்,தமயந்தி அவனை சுற்றி வந்து தன் நேசத்தை காட்டியது போல் வீர் அவளின் மேல் உள்ள நேசத்தை அவளிற்கு காட்டிட முயன்றுக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் கல்லூரி விட்டு வெளியே வந்த தமயந்தி ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்த வீரை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை.

அரக்கு நிற சட்டை மற்றும் சந்தன நிற கால்சட்டை,கண்களில் வழக்கம் போல் ஒரு குளிர்க்கண்ணாடி அணிந்து தோரணையாக ஜீப்பில் சாய்ந்து நின்று அவளை பார்த்து புன்னகை பூத்தான்.

அதிலும்,அவன் கூறியதற்கு இணங்க சவரம் செய்யப்பட்ட தாடை மீசையுடன் அவனிற்கே உரிய வசீகரத்துடன் பழைய தோற்றத்தில் நின்றிருந்தவனை கண்ணை இமைக்காமல் ரசித்தாள் அவள்.

அவள் மட்டுமின்றி அவளுடன் இணைந்து நடந்த வந்த தோழிகளும் அவனை ரசித்தது தான் வில்லங்கமாகிப்போனது.

“வாவ் வாட் ஆ மேன்…சிக்ஸ் பேக் வைச்சிருப்பாரு போலே…செம்ம ஹேண்ட்சமா இருக்காரு…யாருப்பா இந்த ஹீரோ?” என வழிசலாய் சொல்லிக்கொண்டே அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களின் பேச்சை கேட்ட தமயந்திக்கு காதில் புகைவராத குறை தான்!

அவளிற்கு அவளது வீரை யாரேனும் பார்த்தாலே பொறுக்காதே?

இதில் அவனது அழகை அவர்கள் வர்ணிக்க வேறு செய்யவும் கடுப்பாகிவிட்டாள்

“ஹலோ அது என் ஆளு…யாராவது அவரை பார்த்தீங்க…கண்ணை நோண்டி கையிலே கொடுத்திருவேன்” என தோழிகளின் புறம் திரும்பி முறைக்க,

“ஏதே உன் ஆளா?சொல்லவே இல்லை…” என அவர்கள் அதிர்ச்சியில் விழி விரிக்க,

அவளோ தன்னை மீறி “அதான் இப்போ சொல்லறேனில்லை…ஹீ இஸ் மை ஃபியான்சி” என கெத்தாக மொழிந்தவள் “அவர் உங்களுக்கு அண்ணா…புரியுதா?” என ஒரே நொடியில் அவனை அவர்களுக்கு தமையனாக்கியிருந்தாள்.

அவர்களோ ‘அடப்பாவி’ என வாயை பிளக்க அதனை கண்டுக்கொள்ளாமல் ” சரி சரி பை…நான் கிளம்பறேன்…அவர் எனக்காக தான் வெயிட் பண்றாரு” என அனைவரையும் அவ்விடத்திலே கத்தரித்துவிட்டு வீரிடம் வந்தாள்.

அவனோ அவளை பார்த்து கையசைக்க,அவளோ ‘ரொம்ப முக்கியம்…இவன் வேற அழகா இருந்து தொலையறானே’ என வேகமாக அவனை நெருங்கியவள் “உங்களை யாரு இங்க வரச்சொன்னது?” என அடிக்குரலில் சீறினாள்.

உடனே அவன் முகம் வாடிட “ப்ச்” என தன்னையே நொந்தவள் “சரி முதல்ல கண்ணாடிய கழட்டுங்க வீர்” என அவனிடம் கையை நீட்ட,

அவனோ குழப்பமாக “ஏன்” என கேட்க,

“கழட்டுங்கன்னா கழட்டுங்க” என அவனிடம் கேட்டவள் அவன் கழட்டி தரும் வரை கூட பொறுமையின்றி அவளை அவனது உயரத்திற்கு எம்பி கண்ணாடியை கழட்டியிருந்தாள்.

“ஏன்டி?” என பாவமாக வினவ,

“பாவமா பார்த்தால் உங்களை நான் சும்மா விடுவேனா?முதல்ல வண்டியிலே ஏறுங்க…அதுக்கு அப்புறம் உங்களுக்கு இருக்கு” என திட்டிக்கொண்டே வாகனத்தில் ஏறி அமர,அவனும் ஏறி அமர்ந்தான்.

தாம் வந்தது பிடிக்கவில்லையோ என அவன் நினைக்க,அவளோ பொறாமையில் பொங்கி கொண்டிருந்தாள்.

அவன் வண்டியை இயக்கி பாதி தூரம் சென்றதும் அவளோ 
“உங்களை யாரு நல்லா டிரஸ் பண்ணிட்டு வர சொன்னது?அதிலையும் ஸ்டைலா கூலர்ஸ் போட்டு போஸ் வேற” என சிடுசிடுக்க,

“ஹே நான் உன்னை பார்க்க தான் வந்தேன்டி” என மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டே சொல்ல,

“என்னை தானே பார்க்க வந்தீங்க?அப்புறம் எதுக்கு இப்படி மேக்கப் பண்ணிட்டு வந்திருக்கீங்க” என அவள் அப்போதும் மனம் கேளாமல் முறைக்க,

அவள் பேச்சை கேட்டு திகைத்த வீர் “ஏதே மேக்கப் பண்ணிட்டு வந்திருக்கேனா?ஏய் நான் என்ன பொம்பளையா மேக்கப் பண்ணிட்டு வர்ற?” என்றான் அலுப்பாக…

“அப்புறம் ஏன் நீங்க இவ்வளவு அழகா இருக்கீங்க?” என அவனது கன்னத்தை பிடித்து கிள்ளியப்படி அவள் வினவ,

“தமி அநியாயம் பண்ணாதேடி” என அவளை திரும்பி பார்த்து கேட்டவனின் இதழ்கள் சிரிப்பில் துடித்தன.

அவளோ “இனி என்னை பார்க்க வர்றதா இருந்தால் ஏதாவது சுமரா இருக்கிற டிரஸ் போட்டு வந்தால் போதும்…இப்படியெல்லாம் அழகா டிரஸ் பண்ணிட்டு வராதீங்க…முக்கியமா இந்த கண்ணாடி” என கண்ணாடியை தூக்கி வேற காட்ட,

அவனோ “இதென்னடி அநியாயமா இருக்கு” என சிரித்துக்கொண்டே கேட்க,

“அதெல்லாம் அப்படி தான்…நீங்க என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சா போதும்…வேற யாருக்கும் அழகா தெரியவேணாம்…முடிஞ்சா தலைய எல்லாம் களைச்சு விட்டிட்டு சட்டைய கிழிச்சு போட்டுட்டு வாங்க” என்று வேறு சொல்ல,அவளின் தன்னுடைமை உணர்வை பார்த்து அவனிற்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை…

ஆனாலும் அவளின் அட்டகாசத்தை அவன் ரசித்தான்.

அவளின் கலாட்டாக்கள் அத்துடன் முடிவுப்பெறவில்லை…

வீரை வாட்டி வதைக்கும் அவளின் பணி ஒவ்வொன்றையும் சுகமான தொல்லையாகவே அவன் ஏற்றான்.

அதுவும்,வாழ்க்கை முழுவதற்கும்!
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top