இருவரும் ஒன்றாக ஜீப்பில் வந்துக்கொண்டிருந்த சமயம் தமயந்தியின் விழிகள் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவனது நரம்புகள் இழையோடிய கரங்களை தான் பார்த்திருந்தது.
மலையிலிருந்து கீழிறங்கும் போது அவன் லாவகமாக சக்கரத்திருப்பியை திருப்பி வாகனத்தை செலுத்துவதை அவள் விழிகள் ரசித்திருந்தன.
அச்சமயம் தான் அவள் ஒன்றை கவனித்தாள்.
அவனின் கரங்களில் முன்பு இருந்த வனப்பு இல்லாமல் சதை இலேசாக ஒட்டியிருப்பதை பார்த்தவளிற்கு கவலையாகிவிட்டது.
சட்டென விழி உயர்த்தி அவனை அளக்க தொடங்கியவளின் வேதனை இன்னும் அதிகரித்தது.
வீர் வழக்கத்தை விட சற்று இளைத்திருக்க,
அவனது முகத்தின் அழகை மறைக்கும் விதமாக தாடியை புதர் போல் வளர்த்து வைத்திருந்தான்.
‘தன்னுடைய பிரிவு அவனை இந்த அளவு பாதித்திருக்கிறதா?’ என என்னும் போதே அவளது இதயத்தில் ஏதோ இடறிய உணர்வு!
தன்னை விலக்கி வைத்துவிட்டு அவன் ஒன்றும் மகிழ்ச்சியான வாழ்வை வாழவில்லை என்னும் ஒரு ஆறுதல் அவளுள் தோன்றின.
இப்போது அவளிற்குள் சிறு கோபம் துளிர்த்திட “நீங்க ஒழுங்கா சாப்பிடறீங்களா?இல்லையா?” என குரலுயர்த்தி அதிகாரமாய் வினவ,
அவனோ பக்கவாட்டாக அவளை நோக்கி திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனமாகினான்.
அவன் பதில் எதுவும் கூறவில்லை என்றவுடன் கடுப்பாகிய தமயந்தி “முதல்ல இந்த கண்ணாடிய கழட்டி வீசுங்க…” என மின்னல் வேகத்தில் அவன் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி வெளிய வீச பாய,
“ஹே ஹே அத வெளிய வீசிடாதேடி…அது நீ எனக்கு வாங்கி தந்த கிஃப்ட்” என பதறிப்போய் அவன் உரைக்க,
உடனே அந்த கண்ணாடியை வெளியே வீசாமல் அதனை பார்வையிட்டவாறே “ஏதே நான் வாங்கி தந்த கிஃப்ட்டா?நான் எப்போ வாங்கி தந்தேன்” என நெற்றி சுருங்க அவனை கேள்வியாய் ஏறிட்டாள்.
அவனோ மெல்லியதாக புன்னகைத்தவாறு “நீ டொவல்த் படிக்கும் போது உன் ஃபேமிலியோட மெல்போர்ன் போயிருந்தியே அப்போ எனக்காக நீ வாங்கிட்ட வந்த கிஃப்ட் டி இது…அப்போலிருந்து இப்போ வரை நான் பத்திரமா வைச்சிருக்கேன்” என்றான் உள்ளம் உருகும் குரலில்…
அவன் கூறியதற்கு பிறகே அவளிற்கு அந்த ஞாபகமே வர, அவளின் நெஞ்சம் ஒரு முறை விம்மி தணிந்தது.
தாம் வாங்கி தந்த பரிசை அவன் இத்தனை வருடங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதை பார்க்கும் போது அவளின் மனம் சிறகடித்து பறந்தது.
ஆயினும் தன் உணர்வுகளை மறைத்துவிட்டு “இதிலே ஒண்ணும் குறைச்சலில்லை” என போலியாக நொடித்தவள்,
“நான் வாங்கி தந்ததாவே இருந்தாலும் இனி என் முன்னாடி கூலர்ஸ் போடக்கூடாது…நீங்க என்ன நினைக்கிறீங்கனு நான் உங்க கண்ணுலே பார்க்கணும்…புரியுதா?” என ஆணைப் பிறப்பித்தப்படியே அவள் அந்த கண்ணாடியை அணிந்துப் பார்த்தாள்.
அவள் கண்ணாடி அணிந்து அவனை பார்க்க,அவனும் அதேநேரம் அவளை தான் பார்த்திருந்தான்.
அவள் அணிந்த கண்ணாடி அவளது பாதி முகத்தை மறைத்திருக்க, அதை கண்டவனின் இதழோரம் முறுவல் மலர்ந்தது.
அவளோ “ப்ச் கண்ணாடி போட்டால் எல்லாம் கருப்பா தெரியுது…இதை போட்டுக்கிட்டு எப்படி வண்டி ஓட்டறீங்க?” என சலிப்பாக கண்ணாடியை கழட்டியப்படியே வினவ,
“சிட்டி டிராஃபிக்கிலே வண்டி ஓட்டும் போது வெயில் முகத்துக்கு நேரா பட்டு கண்ணு கூசும்…அப்போ கூலர்ஸ் போட்டு வண்டி ஓட்டி அதுவே இப்போ பழகிடுச்சு தமி” என கண்ணாடி அணிவதற்கான காரணத்தை அவன் விளக்க,
“உங்க ஃபீலிங்க்ஸை மறைக்கவும் தான்னு சேர்த்து சொல்லுங்க” என்று சொல்லிக்கொண்டே கண்ணாடியை தன் மடியில் பத்திரப்படுத்தினாள்.
அதற்கு அவன் புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்க்க “ஷப்பா உங்களை வாயை திறக்க வைக்கிறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடும்…இதிலே உங்களுக்கு நான் ரொமென்ஸ் வேற கத்து தரணுமா?காட்” என அவள் நெற்றியை நீவிக்கொண்டாள்.
அவனோ அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு “நான் எங்க வாயை திறக்கிறதில்லை…மத்தவங்ககிட்ட பேசறதை விட உன்கிட்ட தான் என் வாழ்க்கையிலே அதிகமா பேசியிருக்கேன் தமி” என்றான் காதலாக…
“அதுக்கு வேணா கின்னஸ் ரெக்கார்ட் தரட்டுமா?ஆளை பாரு…உடம்பை மட்டும் தான் நல்லா ஜீம் போய் எருமை மாடு மாதிரி வளர்த்து வைச்சிருக்கீங்க? ஒழுங்கா ஒரு சோறு சாப்பிட தெரியலை…இதிலே பேச்சு வேற” என அவன் ஒழுங்காக உணவருந்தாமல் தன்னை வாட்டிக்கொண்ட கடுப்பில் சிடுசிடுத்தாள் அவள்.
“ஹே தமி…எனக்கு சாப்பாடு சாப்பிட எல்லாம் தெரியும்டி …ஆனால் நீயில்லாமல் எனக்கு சாப்பிட முடியலை…ஒழுங்கா தூங்க முடியலை…இந்த வாழ்க்கைய ஏன் வாழறோம்னு ஒரு விரக்தியிலே இருந்தேன்” என மனமுருகி அவன் சொல்ல,
அவளோ “ஓ…லவ் டையலாக்கா நல்லாவே இல்லை…அதர பழசா இருக்கு” என அதற்கும் சேர்த்து அவனை நக்கல் செய்ய,அவனோ அவளை திரும்பி முறைத்தான்.
அவளோ அவனிற்கு மேலாக முறைத்து “என்ன முறைப்பு?கண்ணை நோண்டிடுவேன்…சும்மா சாப்பிட முடியலை…தூங்க முடியலைனு டையலாக் பேசிட்டு இருந்தால் இங்க ஒண்ணும் நடக்காது…இதெல்லாம் நீங்களா இழுத்துவிட்டது தானே அப்போ அனுபவிங்க” என எரிச்சலாக கூறி தோளை குலுக்கிக்கொள்ள,
‘என்ன பொண்ணு டா இவ?’ என உள்ளுக்குள் அவன் புலம்பினாலும்,தன் மீது அவள் அளவுக்கதிகமான கோபத்தில் இருப்பதும் தெரிந்தன.
‘இவளை எப்படி சமாளிக்கிப்போறோம்?’ என அவனிற்கே மலைப்பாக இருக்க,மெதுவாக திரும்பி அவளை அளவிட்டான்.
அவனை போலவே அவளும் சற்று உடல் மெலிந்து தான் இருந்தாள்.
அவளது கண்ணிற்கு கீழிருந்த கரு வளையம் அவளது உறங்காத எண்ணிலடங்கா இரவுகளை எடுத்து சொல்லின.
இதற்கெல்லாம் காரணம் தாம் தான் என நினைக்கும் போது அவனின் நெஞ்சம் வலித்தது.
அதனால் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனின் ஒரு கரம் அவளின் மடியிலிருந்த கரத்தை இறுக பற்றிக்கொண்டன.
அவன் தன் கரம் பற்றுவான் என்பதை சற்றும் எதிர்பாராத மங்கையவளிற்கு ஆடவனின் அந்த ஒற்றை தீண்டல் உயிர் வரை சென்று தாக்கின.
அவளின் மேனியில் ஒரு நடுக்கம் விரவி ஓடிட,விழி உயர்த்தி பக்கவாட்டாக அவனை ஏறிட்டாள்.
அவனது கவனம் சாலையில் இருந்தாலும்,அவனோ தனது ஒட்டுமொத்த வேதனையையும் ஒன்று திரட்டி “சாரி தமி” என தன்னவளிடம் உயிர் உருக மன்னிப்பை யாசித்தான்.
அவனது குரல் இலேசாக கரகரத்ததோ?
அவனது மன்னிப்பு அவளது காயம் பட்ட மனதின் காயத்தில் மயிலிறகால் வருடியது போல் இருந்தன.
ஆனால் அவள் வாயை திறந்து ‘உன்னை மன்னித்துவிட்டேன்’ என்று கூறவில்லை.
அவள் எதுவும் கூறாமல் மௌனமாகிவிட,அவளின் விரல்களோ இறுக்கமாக மூடிக்கொண்டன.
அதனை உணர்ந்த ஆடவனோ அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு சாலையின் புறம் திரும்பிக் கொண்டான்.
அவன் உண்டாக்கிய காயத்தின் வடு அவளது இறுக்கத்தின் வழியே தெரிந்திட,
ஒரு பெருமூச்சை வெளியேற்றியப்படி ‘எல்லாம் சரியாகிவிடும்’ என அவளின் கரத்தை ஒரு முறை ஆறுதலாக அழுத்தி விடுவித்தான்.
அவளிடம் அவன் தன் நேசத்தை சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்தியிருந்தாலும் சட்டென அவனை அவளால் நம்ப முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் அவளிற்கு நம்பிக்கை கொடுத்து அதனை உடைத்தெறிவது அவனது வழக்கம்!
ஆதலால் இந்த முறையும் தனக்கு நம்பிக்கை கொடுத்து அதை சிதைத்துவிட்டால் என்ற உணர்வே அவளை நிலைக்கொள்ளாமல் செய்தன.
அத்தோடு தன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவன் விலகியிருந்தது வேறு அவளிற்கு நீர் பூத்த நெருப்பாய் உள்ளுக்குள் புகைந்துக்கொண்டிருந்தது.
அதன் பொருட்டே,அவளால் அவனை முழுமையாக நம்ப முடியவில்லை.
அவனை மன்னிக்கவும் முடியவில்லை…
வீருக்கும்அவளின் இந்த விலகலிற்கான காரணம் புலப்பட ‘அவளோட நம்பிக்கையை பெற நீ ரொம்பவே கஷ்டப்படணும் வீர்’ என தனக்கு தானே அறிவுறுத்திக்கொண்டான்.
சில நிமிடங்கள் இருவருக்குமிடையே ஒரு நீண்ட மௌனம்!
அதனை உடைத்தெறிந்து முதலில் சகஜமாகியது தமி தான்!
அவனிற்கு இப்போது அவளின் நடவடிக்கையில் சிறு குழப்பமே ஏற்பட்டது.
ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது அவள் நம்பிக்கைக்கும் தன் மீது கொண்ட காதலுக்கும் இடையே சிக்கித் தவிப்பது தெரிந்தன.
தன்னை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறாள்…அதே சமயம் அவனால் உண்டான காயம் அவளை ஒரு பக்கம் அல்லாட வைக்கின்றது என்பது அவனிற்கு வெட்ட வெளிச்சமாகியது.
‘காட் நான் என்ன செஞ்சு வைச்சிருக்கேன்?ஜாலியா சுத்திட்ட இருந்த பொண்ணு இப்படி கஷ்டப்படற காரணமே நான் தான்’ என அவன் தன்னையே நொந்துக்கொண்டான்.
விரைந்து அதனை சரிசெய்து அவளின் நம்பிக்கையை பெற வேண்டும் என அவனது உடலும் உள்ளமும் பரபரத்தன.
அதனால் அவன் தன்னுடைய கொள்கை கோட்பாடு என அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தன்னவளிற்காக ஒரு தீர்க்கமான முடிவெடுத்தான்.
அதன்படி அவளது இல்லம் வந்ததும் அவளுடனே இறங்கி நின்றவனை புருவம் சுருக்கி நோக்கிய தமயந்தி “நீங்க எதுக்கு இறங்கறீங்க?” என கேட்டுக்கொண்டே ஜீப்பிலிருந்து கீழிறங்கினாள்.
அவர்கள் இருவரையும் பலரின் கண்கள் சுவாரசியமாக பார்த்திருந்தது.
அதையெல்லாம் இருவரும் பொருட்படுத்தவே இல்லை.
அவனிற்கு அவள் வேண்டும் என்று முடிவெடுத்தப்பிறகு,இனி அனைத்தையும் சமாளிக்கும் வேகமும் உடன் வந்திருந்தது.
அவனிடமிருந்து பதிலளில்லை என்றவுடன் அவனருகே வந்த தமயந்தி “ஹலோ ரவுடி சார்…உங்களை தான் நீங்க எங்க வர்றீங்க?இத்தனை நாளா வீட்டு படி ஏறாமல் மூஞ்சிய தூக்கிட்டு கிளம்பினீங்க?” என அவனது செயலை சொல்லிக்காட்டி எள்ளலாக வினவ,
அவளின் பேச்சை கேட்டு அவன் முகம் சுருங்கவில்லை.
மாறாக,அவளை சாதாரணமாக நோக்கி “உள்ளே வந்து எல்லாரையும் பார்க்க வேணாமா தமி?” என்று கேட்க,
அவளோ “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என அதிரடியாக மறுத்ததும் அவன் திகைத்துவிட்டான்.
“ஏதே வேணாமா?வீட்டுலே பேசாமல் எப்படி நாம்ப கல்யாணம் பண்ணிக்கிறது?” என நலிந்த குரலில் அவன் வினவ,
அவளோ உள்ளுக்குள் ‘பார்றா…அவ்வளவு தைரியமா சாருக்கு’ என வியந்தாலும் வெளியே
“ஹலோ நான் எப்போ உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்…நானெல்லாம் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அவனோ “ஏதே” என விக்கித்துப்போய் நின்றான்.
அவனது அதிர்ச்சியுற்ற முகத்தை பார்த்துக்கொண்டே அவனின் முன்பு வந்து நின்றவள் “சார் ஒரு சாரி சொல்லிட்டால் நான் உடனே உங்களை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சீங்களா?அதெல்லாம் இங்க நடக்காது…வேணும்னா கொஞ்ச நாள் போகட்டும்…நீங்க எப்படி நடந்துக்கிறீங்கனு பார்த்திட்டு நான் முடிவு பண்ணுறேன்” என அவனது விழிகளை ஆழ்ந்து பார்த்தப்படி தெனாவெட்டாக கூற,அவனின் மனம் அதன்பிறகே சிறிது நிம்மதியுற்றது.
தன் மீதுள்ள கோபத்தில் தன்னை முழுமையாக நிராகரிக்கிறாளோ என்று எண்ணி ஒரு கணம் கலங்கிப் போனான்.
ஆனால் அவளோ தன்னுடைய காதலை பரிசோதிக்க விரும்புகிறாள் என்று அறிந்து சகஜமானான்.
அதேசமயம் “ஆனால் தமி இதுக்கு மேலே உன்னை பிரிஞ்சு ரொம்ப நாள் எல்லாம் என்னாலே இருக்க முடியாதும்மா” என்றான் தவிப்பான குரலில்…
அவளோ சிறிதும் இரக்கமின்றி “ஆஹான்…” என அவனை மேலிருந்து கீழாக பார்த்தவாறே கேலி செய்த தமயந்தி “இத்தனை நாளா நான் வேணாம்னு எப்படி இருந்தீங்களோ இப்பவும் அப்படியே இருங்க சார்” என பட்டென அவள் கூறியதும்,அவனின் முகம் கசங்கி சுருங்கிவிட்டது.
அவனின் வாடிய முகத்தை பார்த்தவளோ “இது தான் நீங்க செஞ்ச தப்புக்கான முதல் தண்டனை வீர்” என்றவளின் முகத்தில் வஞ்சப்புன்னகை!
அவனிற்காக எத்தனை நாள் அவள் கலங்கி தவித்திருக்கிறாள்…
‘இன்னும் கொஞ்ச நாள் எனக்காக இவன் தவிக்கட்டும்’ என எண்ணியது அவளின் காயப்பட்ட மனம்!
அவனிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அவளின் வருத்தமும் கோபமும் அவனிற்கு புரிந்தது தான்!
ஆனால் அவளை பிரிந்து அவனும் மகிழ்ச்சியாக இருந்துவிடவில்லையே?
அவளிற்கு இணையான வலியையும் துயரத்தையும் தானே அவனும் அனுபவித்திருந்தான்.
“தமி…” என ஏக்கமாக அவன் அழைக்க,
அவனின் தவிப்பு அவளை பாதித்தன.
அவளாக அவனை விலக்கி வைக்க நினைத்தாலும் அவனை விலக அவளால் முடியவில்லை.
அதனால் அவனை இன்னும் அதிகமாக நெருங்கி நின்றவள் “ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க…இத்தனை நாள் வெயிட் பண்ணிட்டீங்க.இன்னும் கொஞ்ச நாள் எனக்காக வெயிட் பண்ணுங்க” என அவனது விழியோடு விழி கலந்து உரைத்தாள்.
இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து செல்லும் அளவு நெருக்கத்தில் அவள் நின்றிருந்தாள்.
அவளின் நெருக்கமும் பார்வையும் அவனை ஏதேதோ செய்ய,அவளையே அவன் இமைக்காமல் பார்க்கவும் அவனது விழி வீச்சை தாங்க முடியாமல் அவளின் கையிலிருந்த குளிர்க்கண்ணாடியை எடுத்து அவனிற்கு அணிவித்தவளின் கரத்தில் அவனது தாடை முடிக் குத்தின.
“ஸ்ஆ” என கையை வேகமாக உதற,அதற்கே அவன் பதறி விட்டான்.
“என்னாச்சுடி” என அவளின் கரம் பற்ற வர,
அவளோ “நொன்னாச்சு…” என அவனது கரத்தை தட்டிவிட்டு சீறியவள்,
“முதல்ல வீட்டுக்கு போன உடனே இந்த தாடி மீசைய டிரிம் பண்ணுங்க வீர்…எப்படி புதர் மாதிரி வளர்ந்து வைச்சிருக்கீங்க?பாருங்க…நீங்களா நாளைக்குள்ள டிரிம் பண்ணலை…நானா டிரிம்மர் எடுத்திட்டு வந்து ஷேவ் பண்ணிவிடுவேன்” என அவனது தாடியை பிடித்து இழுத்தப்படி மிரட்டல் விடுக்க,
அவளின் பிடி அவனிற்கு வலித்தாலும் அவள் கூறியதில் உண்டாகிய கற்பனையில் அவனின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.
அவளோ கண்ணை உருட்டி “ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்க…என்னை தவிர வேற எதை பத்தியும் நினைக்கக்கூடாது…அப்படி நினைச்சீங்க கனவுலே பேயா வந்து கூட டார்ச்சர் பண்ணுவேன்…ஜாக்கிரதை” என அக்கறையை கூட அதிரடியாய் காட்டியவளின் மீது வீருக்கு காதல் பொங்கி பெருகின.
இதை தானே…அவளின் இந்த அன்பான மிரட்டலை தானே அவன் இத்தனை நாட்களாய் இழந்து தவித்துக் கொண்டிருந்தான்.
அதனால் நேசத்தோடு புன்னகைத்தவன் “ஊருக்கு உபதேசம் பண்ணறதுக்கு முன்னாடி நாம்ப ஒழுங்கா இருக்கணும்டி” என அவளை மேலிருந்து கீழாக பார்த்தவாறு அவன் கூற,அவள் அவனை முறைத்தாள்.
அவனோ அதை கண்டுக்கொள்ளாமல் “நீயும் ஒழுங்கா சாப்பிட்டு நிம்மதியா தூங்குடி…ரொம்ப இளைச்சுப்போயிட்டே” என தன்னவளின் வாடி வதங்கிய மேனியைப் பார்த்து வேதனையுடன் கூற,
‘ரொம்பத்தேன்’ என உள்ளுக்குள் நொடித்தவள் “அதெல்லாம் எங்களுக்கு தெரியும்…நீங்க ஒண்ணும் சொல்ல தேவையில்லை…” என இதழை சுழித்தாள்.
சுழித்த அவளது இதழின் மீது அவனது பார்வை ஒரு கணம் பதிந்து மீள,அவன் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தாலும் அவனது ஊடுருவும் பார்வையை அறிந்த தமயந்திக்கு ஒரே படபடப்பாக இருந்தது.
ஆதலால் “முதல்ல நீங்க கிளம்புங்க” என வேகமாக அவனை ஜீப்பின் கதவை திறந்து உள்ளே ஏற்றியவள் குனிந்து “அப்புறம் நல்லா ஞாபகம் வைச்சுக்கோங்க வீர்…நீங்க என்னை இம்ப்ரஸ் பண்ணறதை வைச்சு தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிலாமா வேணாமானு முடிவு பண்ணுவேன்…கொஞ்சம் சொதப்பினாலும் உங்களை ரிஜெக்ட் பண்ணிடுவேன்…பை” என அதிரடி சரவெடியாய் போகிற போக்கில் வெடித்து சிதறிவிட்டு கிளம்பியவளை கண்டு தலையாட்டி சிரித்த வீர் ‘முதல்ல தாடி மீசைய ஷேவ் பண்ணனும்…ஷேவ் பண்ணலைனா…அவளே பண்ணிவிடுவாளே?’ என என தாடையை நீவி தனக்குள்ளே சிரித்துக்கொண்டே தன்னவளின் நினைவில் வண்டியை கிளப்பினான்.
இவர்களது காதல் சாம்பாஷணைகளை வெளியில் இருந்த பணியாளர்கள் தொடங்கி பாதுகாவலர்கள் வரை அனைவரும் பார்த்திருந்தனர்.
அதைப்பார்த்து அனைவரும் ‘என்னடா நடக்குது இங்கே’ என “ஆ”வென அதிர்ச்சியில் வாயை பிளந்தார்கள்.
பணியாளர்களுக்கு தெரிந்த விடயம் வீட்டின் முதலாளிகளுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?
வானதி மற்றும் ஜித்துவை தவிர தமயந்தியின் குடும்பத்தினர் அனைவருக்கும் இவர்களது காதல் விவகாரம் முன்பே தெரியும் என்பதால் இவர்கள் இருவரும் மட்டும் அதிர்ச்சியுற்றனர்.
தமயந்தியோ வீரிடம் அவ்வாறு பேசிவிட்டு வந்தாலும் அன்றைய இரவே வீட்டினரிடம் தன்னுடைய காதல் விஷயத்தை போட்டு உடைத்துவிட்டாள்.
‘இருந்தாலும் இவளுக்கு தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி தான்’ என ஜித்துவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால் தமயந்திக்கு பிடித்தமானவன் வீர் என்பதினால் அவனிற்கு உள்ளுக்குள் பரம சந்தோஷம்!
வானதிக்கு சொல்லவே தேவையில்லை…வீர் எப்போதும் அவரின் வயிற்றில் பிறக்காத ஒரு மகன்!
அப்படி இருக்கும் போது புதல்வியின் முடிவை எதிர்ப்பாரா என்ன?
உடனே அந்த தாய் மனம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.
ஆனால் விஜயேந்திரனும் பூபதியும் எப்படியான எதிர்வினை பூரிவார்கள் என அதிர்ச்சியாக நெஞ்சம் அதிர காத்திருக்க, அனைவரும் திகைக்கும் வகையில் “ஃபைனலி முடிவு பண்ணிட்டியா?ஐயம் சோ ஹேப்பி ஃபார் யூ லட்டு” என ரத்தினவேல் அவளை அணைத்து விடுவித்தான் என்றால்,
விஜயேந்திரனோ ‘கடைசியா பெட்டர்மாஸ் லைட் எரிஞ்சிடுச்சா?’ என மனதிற்குள் வீரை எண்ணி ஆசுவாச பெருமூச்சுவிட்டவர் “நல்லாயிருடா லட்டு” என அவளின் தலையில் கைவைத்து ஆசிர்வாதித்தார்.
“தேங்க்ஸ்ப்பா” என வாய் நிறைய புன்னகைத்தவள் தந்தையை சலுகையாக அணைத்துக்கொண்டாள்.
அவர் ஒரு ருத்ர தாண்டவமே ஆடி தீர்ப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க,அதற்கு நேரெதிராக நிகழ்ந்ததும் அனைவரும் ஸ்தம்பித்து போயினர்.
இதில் விஜயேந்திரன் வேறு “கல்யாண தேதி குறிக்கலாமாடா லட்டு” என்று அவளிடம் கேட்டதும் அனைவருக்கும் மயக்கம் வராத குறை ஒன்று தான்!
காஞ்சனா மாலாவே மகனின் இந்த அதிரடி மாற்றத்தை நம்ப முடியாத திகைப்போடு தான் பார்த்திருந்தார்.
ரத்தினவேலோ ஒற்றை புருவத்தை உயரத்தினானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
அனைவரின் வாய்மொழியாக ஜித்து தான் “இங்க என்ன தான் நடக்குது?கொஞ்சம் யாராவது சொல்லமுடியுமா?” என திருதிருவென விழித்தப்படி வினவினான்.
தமயந்தியோ தந்தையையும் தனது பெரிய தமையனையும் மாறி மாறி பார்த்துவிட்டு புன்னகைத்தாள்.