மற்றொரு நாள் வீர் அவளை அவனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
இதற்கு முன்பு அவள் பல முறை தன் வீட்டிற்கு வந்திருந்தாலும்,இன்று முறையாக அவளை தன் அன்னையிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்து வந்திருந்தான்.
அவளை தன் தாயின் முன்னிறுத்தி அவளின் கரத்தை இறுக பற்றிக்கொண்ட வீர் “அம்மா இது தான் உங்க மருமகள்” என அவளை காதலோடு பார்த்துக்கொண்டே மென்சிரிப்புடன் அறிமுகப்படுத்த,அவனை ஆச்சரியமாக ஏறிட்டாள் தமயந்தி.
தேவகியோ அவளை புருவம் சுருக்கி பார்த்திருக்க,விஜயலட்சுமியோ “வாழ்த்துக்கள் தம்பி…வாழ்த்துக்கள் பாப்பா” என இருவருக்கும் பொதுவாக வாழ்த்துத் தெரிவித்தார்.
அவன் இவ்வாறு தன்னை அவனது தாயிடம் அறிமுகப்படுத்துவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
‘இது என் வீர் தானா?’ என உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த மகிழ்ச்சியுடன் அவனை ஏறிட,
தேவகியோ “லட்டு” என அவளை அழைக்க,இப்போது அதிர்ச்சியடைவது வீரின் முறையாயிற்று!
முன்பொரு முறை தன் மனதிற்கு பிடித்தவளை பற்றி அவன் எடுத்துரைத்ததை நினைவுறுத்தி ஞாபகமாய் அவர் அழைக்க “அம்மா நான் சொன்னது ஞாபகம் இருக்கா?ஆமாம்மா இது தான் லட்டு” என பரவசத்துடன் அவளை தன் தாயருகே அழைத்து வந்த நிறுத்த,
அவரோ “ம்” என தலையசைத்தவர் மீண்டும் ஏதோ ஞாபகம் வந்தவராய் முகம் பளீச்சிட “லட்டு வீர் பொண்டாட்டி” என்று அவளை சுட்டிக்காட்டி சிறுப்பிள்ளை போல ஒப்பிக்க,அதைக்கேட்ட தமயந்தியின் முகம் பளீச்சிட்டது.
உடனே தமயந்தியின் விழிகள் இரண்டும் மின்ன “ஆன்ட்டி இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தாங்க?” என ஆர்வமாக நிஜத்தை தெரிந்துக்கொள்ள வினவ,
அவரோ சற்றும் தாமதிக்காமல் “வீர்” என மகனை அவளிடம் போட்டுக்கொடுத்திருந்தார்.
‘வீரா’ என நம்ப முடியாத திகைப்புடன் “அப்படியா நான் வீர் பொண்டாட்டியா ஆன்ட்டி?” என கேலியாக சிரித்துக்கொண்டே வீரை சீண்டலாய் காண,
அதில் இலேசாக முகம் சிவந்த வீரோ ‘போச்சு போ’ என மாட்டிக்கொண்ட பாவனையில் சங்கடமாக கழுத்தை நீவினான்.
அவன் ஒரே ஒரு முறை அன்னையிடம் அவளின் புகைப்படத்தை காட்டி அவளை தன் மனைவி என்று குறிப்பிட்டிருந்தான்.
அவனது தாய் தக்க தருணம் பார்த்து அவனை இவ்வாறு மாட்டிவிடுவார் என துளியும் எதிர்பார்க்கவில்லை.
தன்னவனின் நாணத்தை கண்டு அவள் சிரித்தாலும் அவளின் முகமும் அகமும் மலர்ந்து விகசித்தது.
அவளின் மனமெல்லாம் இலேசான ஒரு உணர்வு!
இந்த ஒரு வார்த்தையை கேட்பதற்காக அவள் எத்தனை ஆண்டுகளாய் தவமிருக்கிறாள்?
அப்படி இருக்கும் போது அவனாகவே அன்னையிடம் தன்னை மனைவி என்று குறிப்பிட்டது அவளிற்கு எல்லையில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்தன.
அவளின் நெஞ்சமெல்லாம் ஒரு தித்தித்திப்பு வியாபித்திட “எஸ்…எஸ் நான் தான் வீர் பொண்டாட்டி லட்டு…என்னை ஞாபகம் இருக்கா ஆன்ட்டி?” என வேகமாக முன் வந்து அவனை இடித்துக்கொண்டு அமர,அவளின் ஸ்பரிசம் அவனிற்குள் சொல்ல முடியாத உணர்வுகளைக் கொடுத்தன.
அதனால் “உஷ் தமி…அம்மா முன்னாடி எதுக்கு இப்படி இடிச்சிட்டு உட்காருறே” என மெல்லிய குரலில் அவன் கடிய,
வெடுக்கென்று அவன் புறம் திரும்பிய தமயந்தியோ “பொண்டாட்டினு சொல்லிட்டிங்கயில்லை…அப்புறம் எதுக்கு தப்பா நினைக்கப்போறாங்க?அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க…உட்காருங்க” என இதழை சுழித்து அதட்டி அவனையும் அவளருகே அமர வைத்தாள்.
அவன் சங்கடமாக விஜயலட்சுமியை பார்த்தவாறே அமர,அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தேவகியின் புறம் திரும்பினாள் வீரின் செல்ல புயல்.
“ஆன்ட்டி உங்க பையனுக்கு ஆளு வளர்ந்த அளவு புத்தி வளரலை…ஒழுங்கா லவ் பண்ண கூட தெரியலை தெரியுமா?” என தனது வருங்கால மாமியாரிடம் அவரது மகனை பற்றி குற்றப்பத்திரிகை வாசிக்க,வீருக்கோ எங்கோ சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போன்ற ஒரு உணர்வு!
அவனது சங்கோஜம் அறிந்த விஜயலட்சுமி இதழ்கடித்து சிரித்தப்படி “நான் போய் பாப்பாவுக்கு சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வர்றேன்…நீங்க பேசிட்டு இருங்க தம்பி” என இங்கிதத்தோடு அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறிவிட்டார்.
அவர் வெளியே சென்றதும் “ஏய் அம்மாகிட்ட இதெல்லாம் பேசுவாங்களாடி?” என அவன் அதட்டலாய் கேட்டதை அவள் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
“ஆன்ட்டி ரவுடி சாருக்கு லவ் பண்ணறதை விட லவ் ஃபெயலியரோட தாடி வளர்த்துகிட்டு திரியறதுனா ரொம்ப இஷ்டம்…வேணும்னா அவர்கிட்ட கேட்டுப்பாருங்களேன்” என தேவகியிடம் பேசுவது போல் வீரை ஒரு பக்கம் சீண்டி வம்பிழுத்தாள்.
வீரோ “ம்க்கும்” என தொண்டையை செருமி சிகையை அழுந்தக்கோதினான்.
அவனது தொண்டை செருமலை கேட்டு அவன் புறம் திரும்பிய தமயந்தி “ஆமா தானே…இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் உங்க தாடியிலே நான் ஊஞ்சல் கட்டியே ஆடலாம் போலே…காடு மாதிரி வளர்த்து வைச்சிருந்தீங்க…இப்போ தான் கொஞ்சம் பார்க்க மனுஷன் மாதிரி இருக்கீங்க” என எள்ளலாக சொல்ல,
அவனோ ‘அது சரி’ என தலையாட்டி சிரித்தான்.
அவன் தான் அவளில் மயங்கிக்கிடக்கிறான் என்றால் அவனது தாய் தேவகியோ கதை கேட்கும் ஆவலுடன் ‘அப்படியா?’ என்பது போல் அவள் பேசுவதையே இமைக்காமல் பார்த்திருந்தார்.
அதைப்பார்த்து ‘சுத்தம்’ என அவன் தலையிலடித்துக் கொள்ள,
“ஆன்ட்டி போன தடவை வந்ததை விட இந்த தடவை ரொம்ப இளைச்சுப்போயிட்டாங்க…வீர் உங்களை சரியா கவனிக்கிறதே இல்லை…நான் இங்க வந்ததுக்கு பிறகு நீங்க என் பொறுப்பு ஆன்ட்டி…நான் உங்களை நல்லா கவனிச்சுப்பேன்…அதுக்கு பிறகு உங்க பையன் கூட டூ விட்டிடலாம்…நீங்களும் நானும் ஒரு டீம்…டன்” என அவள் கட்டை கட்டை விரலை நீட்டி காட்ட,
அவரோ “ம்…ம்” என தலையசைத்து அவளை போலவே கையை மடித்து செய்துக்காட்டினார்.
அதனை வீர் ஆச்சரியத்துடன் ஏறிட “வாவ்…ஆன்ட்டி வாங்க ஃஹை ஃபை கொடுக்கலாம்…இனி நீங்க என் கட்சி” என அவரின் கையை இடித்து அவரை அணைத்துக்கொள்ள,
“அம்மா இவளோட சேராதீங்க…அப்புறம் பின்னாடி வருத்தப்படுவீங்க” என வீர் போலியாக எச்சரிக்க,
அவரோ அவனது பேச்சை கேட்டால் தானே?
அவர் எப்போதோ தனது மருமகளது கட்சிக்கு தாவியிருந்தார்.
வீரோ மனதிற்குள் ‘என்னை மயக்கின மாதிரி அம்மாவையும் மயக்கிட்டாள் போலே…கேடி’ என இன்பமாகவே தன்னவளை அலுத்துக்கொண்டான்.
விஜயலட்சுமி அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்த தர,அவர்களது நேரம் இப்படியே கழிந்தது.
வீரோ அவனது தாயுடன் அவனது குட்டிப்புயல் செய்யும் அலப்பறைகளை ரசித்துக்கொண்டிருந்தான்.
விஜயலட்சுமியை அவளும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டாள்.
அதிலும்,அவர் சந்திரமதிக்கு செய்த உதவிகளை கேள்வியுற்று அவரை அவளிற்கும் பிடித்துப்போனது.
அன்றைய நாள் முழுவதும் தமயந்திக்கு அவர்களுடனே கழிந்தது.
இதில் அவளிற்கு என்ன ஆச்சரியமென்றால் வீரும் கூட அன்றைய நாள் முழுவதும் அவளை விட்டு அகலாமல் அவளுடனே நேரம் செலவிட்டது அவளிற்குள் இருந்த சுணக்கத்தை பெருதும் அகற்றின.
அவன் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திலே அவனிற்கு அவள் எத்துணை இன்றியமையாதவள் என்று புரிப்பட,அவன் அருகாமையை ரசிக்கத் தொடங்கிவிட்டாள்.
அவனின் மேல் நம்பிக்கையின்றி இருந்த பெண்ணவளிற்கு நாட்கள் செல்ல செல்ல,இனி ஒரு நாளும் அவன் தன்னை நீங்கமாட்டான் என நம்பிக்கை முழுமையாக வந்தப் பிறகே அவள் திருமணத்திற்கு சம்மதித்தாள்.
திருமணத்திற்கு சம்மதித்தாலும் அவளின் அட்டகாசங்கள் குறையவே இல்லை.
திடீரென்று ஒரு நாள் “வீர் உங்களுக்காக நான் சமைச்சு எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றவாறே அவள் ஒரு உணவு கூடையுடன் உள்ளே நுழையவும்,
அதைப்பார்த்து “ஏதே” என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தான் அவன்.
அவளின் சமையல் திறமை பற்றி அவனை விட வேறு யார் நன்கு அறிவார்கள்?
அவளின் அந்த கருப்பு வர்ண உணவே அவனது காலம் முழுவதற்கும் போதுமானது.
நல்லவேளையாக அன்று அவனிடம் தப்பித்தவன் இன்றோ அவளிடம் வசமாக சிக்கியிருந்தான்.
அவள் உணவு மேசையில் உணவை பிரித்து அடுக்கிக்கொண்டே “வாங்க வீர் சாப்பிடலாம்” என அன்பொழுக அழைத்தாள்.
அவனோ உள்ளுக்குள் உண்டான பீதியுடன் “நிஜமா நீயா சமைச்சா?” என எச்சிலை கூட்டி விழுங்கியப்படி வினவ,
“அதென்ன நீயா சமைச்சனு கேவலமா கேட்கறீங்க?நான் சமைச்சா அவ்வளவு கேவலமா என்ன?” என்றாள் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தப்படி…
‘கேவலமில்லை…அது விஷம்டி…மனுஷன் சாப்பிடுவானா?’ என உள்ளுக்குள் அலறியவன் வெளியே “சேச்சே இல்லைம்மா…நீ ஏன் தேவையில்லாமல் எனக்காக சமைச்சு கஷ்டப்படணும்னு தான்” என பாவமாய் இழுத்தான்.
“அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை…கல்யாணத்துக்கு பிறகு நான் தானே சமைக்கணும்…ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடுங்க” என அவள் சமைத்து உணவை சாப்பிட வைத்து அவனை பெரிதாக சோதித்தாள்.
அவனோ ‘ஏதே கல்யாணத்துக்கு அப்புறம் இதை தினமும் சாப்பிடணுமா?அப்போ என் நிலைமை’ என மனதிற்குள் அரண்டுப்போயிருந்தான்.
அவனது நேசத்தை நிரூபிக்க அவனிற்கு வேறு வழியும் இருக்கவில்லை…
அவள் சமைத்த உணவை தான் உட்கொண்டான்,அப்பாவி வீர்.
இவ்வாறு ஒன்றா இரண்டா?
அவனை சோதிக்க அவள் ஆயிரம் வழிமுறைகளை பின்பற்றி அவன் செய்த தவறுக்கான பழிகளை தீர்த்துக்கொண்டாள்.
அவளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்ல ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடைப்பெறும் நாளும் வந்தது.
ஹப்பப்பா…அவனை திருமணம் செய்வதற்குள் அவள் தான் எத்தனை எத்தனை போராட்டங்களை சந்தித்திருந்தாள்…
பல தடைகளை தாண்டி…பல யுகங்களை கடந்து அவனது கைத்தலம் பற்றும் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு அவளுள்!
நிறைவேறாத கனவு ஒன்று நிஜமாகிப்போகும் பரவசம் அவனுள்!!
இரு இதயங்களின் சங்கமத்திற்கு மௌன சாட்சியாய் அந்த புனிதத் தீ சுடர்விட்டு எரிந்தது.
அதன் பொன்னிற ஜூவாலைகள் கூட அவர்களை ரகசியமாய் வாழ்த்தின.
காதலில் திளைக்கும் இதயங்கள் மட்டுமே அறிந்த ரகசியம் அது!
ஒரு காலத்தில் தவிப்புகளும் காதல்களும் நிறைந்திருந்த அவள் கண்கள்,இன்று அதிகாலைப் பனித்துளியாய் நடுங்கின.
அவை பயத்தினால் அல்ல… இனி ‘அவன் என்னவன்’ என்ற உணர்வு தந்த சிலிர்ப்பினால்!
மற்ற இருவரின் திருமணத்தில் நடந்த களேபர திருமணம் போல் அல்லாமல் பெரியவர்களின் ஆசிப்பெற்று இறைவனின் சாட்சியாய் இருவரது திருமணமும் சிறப்பாக நடக்கவிருந்தது.
வெண்ணிற பட்டு வேட்டி சட்டையில் ஆடவனவன் கம்பீரமாய் மனையில் அமர்ந்திருக்க,அவனிற்கு அருகே சிவப்பு வர்ணத்தில் பட்டு தரி வேலைப்பாடுகளுடன் கூடிய விலையுயர்ந்த பட்டுப்புடவை அணிந்து சர்வ அலங்காரத்துடன் அவள் அமர்ந்திருந்தாள்.
ஆனால் அவளிடம் வழக்கமாக இருக்கும் துறுதுறுப்போ அடாவடித்தனமோ எதுவுமில்லை.
மாறாக,அவள் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்தாள்.
காதல் ஒருவனை போராடி கைப்பிடிக்கும் போது அவளால் எவ்வாறு அலட்சியமாக இருக்க முடியும்…
மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அவளிற்கு…
அவளின் அமைதியை அனைவரும் வித்தியாசமாக பார்த்தனர்.
அவள் தான் மிகவும் உணர்ச்சவசப்பட்டு இருக்கிறாள் என்றால்,அவளிற்கு மீறிய உணர்ச்சி பெருக்கில் அவன் அமர்ந்திருந்தான்.
தனக்காக…தன்னை மட்டுமே உயிராய் நேசித்து பிடிவாதமாய் கரம் பற்றும் மங்கையவளை நினைக்கும் போது அவனின் உயிர் உருகிப்போனது.
அவன் விரல்கள் உறுதியாய் இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு நடுக்கம்!
புரோகிதர் “கெட்டி மேளம்…கெட்டி மேளம்” என அறிவித்து மாங்கல்யத்தை அவன் கையில் கொடுத்ததும்,
அந்த மாங்கல்யத்தை தன் முழு உலகமென அவன் கரத்தில் தாங்கினான்,
ஏனெனில்… உண்மையில் அது அவன் உலகம்தான்…
அந்த உலகத்தில் அவள் மட்டுமே இருந்தாள்!
காலமே நகர மறந்த அந்த மூச்சற்ற நொடியில்,அனைவரின் அட்சதை தூவல்களுக்கு இடையே அவன் மூன்று முடிச்சுகளைப் போட்டு அவளை தன் மனைவியாக்கினான்.
அந்த மூன்று முடிச்சுகளும் வெறும் நூலிழைகள் அல்ல…
மூன்று பெரும் சத்திய பிரமாணங்கள்...எந்த புயலாலும் சூறாவளியாலும் பிரிக்க முடியாத மாபெரும் வாக்குறுதிகள்.
முதல் முடிச்சு,அவனது அசைக்க முடியாத அன்பைச் சுமந்தது.
இரண்டாம் முடிச்சு,அவர்கள் கடந்து வந்த வலிகளையும், புரிதலின்றி பிரிந்து தவித்த தருணங்களையும் சுமந்தது.
மூன்றாம் முடிச்சு, ‘என்றென்றும் நீயே’ என்ற நித்தியத்தைச் சுமந்தது.
அவன் மூன்று முடிச்சுகளை இட்டு முடித்ததும்,சட்டென அவளின் கண்ணிலிருந்து நீர் கசிந்தன.
அந்த கண்ணீர் சோகத்தினால் உண்டாகிய கண்ணீர் அல்ல…பல நாளைய தவிப்புக்கு ஒரு தீர்ப்பு கிடைத்த ஆத்ம திருப்தி.
தன் கண்ணீரை மறைக்க அவள் தன் விழிகளைத் தாழ்த்தினாள்.
அவளிற்கு அந்நொடி உலகத்திலுள்ள ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் கிடைத்தது போல் ஒரு பேரானந்தம்…
தன்னவளின் உணர்வுகளை அறிந்த ஆடவனின் இதயமோ அவளின் காலடியில் சென்று வீழ்ந்துவிட்டன.
அவன் அவளின் கைகள் பற்றி அழுத்த,அவளோ கலங்கிய விழி உயர்த்தி அவனை ஏறிட,அவர்கள் இருவருக்கும் சுற்றியிருந்த உலகம் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது.
சுற்றியுள்ளவர்களின் வாழ்த்துக்கள், சிரிப்புகள், புனித மந்திரங்கள் அனைத்தும் வேறு ஏதோ உலகத்திலிருந்து கேட்பது போல் தேய்ந்து மறைந்துப்போயின.
அவளும் அவனும் மட்டும்…
அவர்களுக்குள் இப்போது ஆழ்ந்த ஒரு மௌனம்!
அந்தவொரு மௌனம் ஆயிரம் மொழிகளைப் பரிமாறிக்கொண்டன.
இருவரின் விழியிலும் காதலை வென்ற களிப்பில்லை…
இருவரின் உயிரும் ஒன்றோடு ஒன்று கலந்த ஒரு முற்றப்பெறாத பந்தத்தின் தொடக்கத்தின் விதையாக இருந்தது அது!
விதியின் சதியால் பிரிந்து மீண்டும் உயிர்ப்பெற்ற ஒரு காதல் கதையாக இருந்தது.
தன்னை உயிராய் நேசித்தவளின் விழியோடு விழி கலந்த வீரின் ஒவ்வொரு அணுக்களும் அவளிடம் ரகசியமாய் மொழிந்தன,
‘இனி நான் எப்போதும் உன்னவன்…ஆனால் உன்னிடம் வந்து சேர தான் சிறிது காலம் எடுத்துக் கொண்டேன்…அதற்காக என்னை மன்னித்துவிடு கண்மணி’ என்று!
அவளது மார்பின் மீது வீற்றிருந்த அந்த மாங்கல்யம் அதற்கு சாட்சியாய்!
தங்கத்தை விட பிரகாசமாய் அவர்களின் நேசத்தை போல் அவை மின்னியது.
ஏனெனில் அது இனி வெறும் தாலி சரடு அல்ல…
அது அவர்களது காதலுக்கான அடையாளம்…
முழுமை பெறவிருக்கும் அழகிய காதல் கதைக்கான தொடக்கம்…
‘மனமது மாற்றங்கண்டால் மணவாழ்வு மங்கலமாகும்!’