முகிழ்மதி 98:

தமயந்தி வீரை பார்த்து இன்றோடு இரண்டு வாரங்களுக்கு மேல் கடந்துவிட்டது.
அவளால் தகப்பனை மீறி வெளியே செல்ல முடியவில்லை.வேறு ஏதேனும் காரணங்கள் கூறியாவது தன்னவனை பார்த்துவிடலாம் என நினைத்தால்,அதற்கும் முட்டுக்கட்டை போட்டார் விஜயேந்திரன்.
குடும்பமே தமயந்தியிடம் இவர் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொள்கிறார் என ஸ்தம்பிக்கும் வகையில் இருந்தது,அவரின் நடவடிக்கை.
வழக்கமாக அவளிற்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலரை அகற்றிவிட்டு,இப்போது புதிதாக ஒருவரை நியமித்திருந்தார்.
முன்பிருந்த சம்பத் ரத்தினவேல் மற்றும் வீரின் ஆள் என்பதால் அவளிற்கு இதுவரை பெரிதாக பிரச்சனைகள் எழவில்லை.
அவள் எங்கு சென்றாலும் துணை வருவானே ஒழிய,பெரிதாக விதிமுறைகள் எதுவும் விதிக்கமாட்டான்.
அவன் இல்லையென்றால் வீரே அவளை அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்றுவிடுவான்.
ஆனால் இப்போது சாதாரணமாக தோழியின் வீட்டிற்கு சென்றால் கூட அந்த பாதுகாவலனை அழைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டுமாம்.
அவனோ அவளை கண்ணின் இமைப் போல் அசராமல் நின்று காக்க அவளால் வீரை பார்க்க செல்ல முடியவில்லை.
கழிவறை தவிர மற்றைய நேரங்களில் எல்லாம் அவன் அவளை நிழல் போல் தொடர்ந்தான்.
‘என்னவொரு அநியாயம்?’ என அவளிற்கு எரிச்சலாக வந்தது.
தந்தையின் இத்தகைய அடக்குமுறையில் அவளிற்குள் கோபம்,ஆத்திரம்,இயலாமை என அனைத்து உணர்வுகளும் சேர்ந்துக்கொள்ள,அதனுடன் அவனை காண முடியாத தவிப்பும் இணைந்துக்கொண்டன.
அவனை நேசிக்க தொடங்கிய நாட்களுக்கு பிறகு அவள் அவனை பாராமல் இருந்ததே இல்லை…நீண்ட நாட்களாக பிரிந்து இருப்பது இது தான் முதல் முறை!
அவள் இங்கு தலைவனை பிரிந்த நாயகி போல் பசலை நோயால் தவிக்க,அவனோ வெகு நாட்களுக்கு பிறகு ஒன்றிணைந்த தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்தான்.
அவர்களுடன் பல மணி நேரங்களை செலவு செய்தப்போதும் மனதினோரத்தில் அவளை காண வேண்டும் என்ற துடிப்பு இருக்கவே செய்தன.
‘இரண்டு வாரமா என்னாச்சு இவளுக்கு?ஆளையே காணும்?’ என தனக்குள்ளே அவன் குழம்பியிருந்தான்.
அதற்காக நேரடியாக அவளை சென்று பார்த்துவிடவும் அவனால் முடியாது.
தன் மனதிலிருக்கும் உணர்வுகளை அவனே இதுவரை புரிந்துக்கொள்ளவில்லை.
அவளின் அருகாமை அவனிற்கு பிடித்திருக்கிறது.அவளுடன் இருந்தால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.
அதற்காக அவளின்றி அவனால் இயங்கவே முடியாது என்ற நிலையில்லை அவனிற்கு!
அதனால் அவளை தேடி தேடி சோர்ந்துப்போகும் சூழ்நிலையின்றி தன்னுடைய நாட்களை கடத்தினான்.
இங்கு இவள் தான் அவனை காணாமல் தவியாய் தவித்துப்போனாள்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவன் மீது அவள் கொண்ட நேசத்தின் விளைவாக இயற்கையே அவனை காணும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தன.
ம்ஹும்…இயற்கை அல்ல…அவளது தமையன் என்று கூறினால் மிகையாகாது.
எப்போதும் வீரின் வீட்டிலிருக்கும் தன் மனைவியை அழைத்து வரவேண்டி ரத்தினவேல் நேரடியாக அங்கு செல்வான்.
இன்று ஒரு முக்கியமான பணி அவனிற்கு இருப்பதால் தனது நண்பனிற்கு தொடர்புக்கொண்டு “வீர் முகிழை இன்னைக்கு நீயே வீட்டிலே விட்டுரு…எனக்கொரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று உரைத்திருந்தான்.
தங்கையை தன் பாதுகாப்பில் அழைத்து செல்வதென்றால் அவனிற்கு கசக்குமா என்ன?
அதனால் முகிழ்மதியை அவளது புகுந்த வீட்டில் வந்து இறக்கிவிட வந்த வீரிடம் “உள்ள வாங்கண்ணா” என வீட்டின் மருமகளாக அவனை முகிழ்மதி உள்ளே வரவேற்க,
அவனோ “இல்லை டால்…உள்ளே வந்தால் டீலே ஆகிடும்…இன்னும் அரை மணி நேரத்திலே மதிய வேற பிக் அப் பண்ணனும்…இப்போ போனால் தான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்” என தணிந்த குரலில் சொன்னாலும் அவனின் நெஞ்சம் மட்டும் ஏனோ படபடத்தது.
தன்னவளை அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும்,அவளின் இல்லம் முன்பு வந்து நின்றவுடன் அவனின் இதயம் எதையோ எதிர்பார்த்து துடித்தன.
அவளை நேசிக்கவில்லை என அவன் சிந்தைக்குள் முகமூடி போட்டுக்கொள்ள முடியும்?
ஆனால் ஆழ் மனதிற்குள் அவளை பூட்டி வைத்திருந்த அவனது இதயத்தை ஏமாற்ற முடியுமா என்ன?
அதனால் தன்னையும் அறியாமல் அவன் விழிகள் தமயந்தியை தேடி அலைப்பாய்ந்தன.
அதற்குள் முகிழ்மதி அவனது அவசரத்திற்கான காரணமறிந்தவளாய் “சரி அண்ணா…நீங்க போயிட்டு வாங்க…ஆனால் பாட்டி உங்களை பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க…முடிஞ்சா ஒரு நாள் வீட்டுக்கு வந்து பாட்டியை பார்த்திட்டு போங்கண்ணா” என சிறு புன்னகையுடன் சொல்ல,
“சரி” என தலையசைத்தவனிடம் கையசைத்து விடைப்பெற்றாள் அவள்.
படியேறி செல்லும் வரை தங்கையின் மீது விழி அகற்றாமல் பார்த்திருந்தவனின் விழிகளில் தேடல் இருந்தது மட்டும் நிஜம்!
அவனது தேடலின் நாயகியை இறுதி வரை சந்திக்க முடியவில்லை என்றவுடன்,அவன் ஏமாற்றத்துடன் வண்டியை எடுக்க ஆயுத்தமாகினான்.
ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு அவனை சந்திப்பதால் பாதுகாவலர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட “நான் நல்லாயிருக்கேன்…எஸ்…அம்மாவும் நல்லாயிருக்காங்க…நாளையிலிருந்து வேலைக்கு வர ஆரம்பிச்சிடுவேன்…சரி எனக்கு நேரமாகிடுச்சு…உங்களையெல்லாம் அப்புறம் பார்க்கறேன்” என முகம் சுணங்காமல் அனைவரிடமும் சிரித்த முகமாக பேசிவிட்டு,வீட்டின் வாயிலை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு வண்டியை கிளப்ப ஆயுத்தமாகினான்.
அவனது வாகனம் இரண்டடி தான் நகர்ந்திருக்கும்.அதற்குள் அவனை சுழன்றியடிக்கும் புயல் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.
“வீர்” என வேகமாக படியில் கத்திக்கொண்டே அரக்க பறக்க ஓடி வந்தாள் தமயந்தி.
உள்ளே வந்த முகிழ்மதியிடம் அவன் வந்த விபரம் அறிந்து ஓடி வந்திருந்தாள் போலும்!
அவளின் காலில் அப்படியோரு வேகம்!
விழிகளில் தன்னவனை காண வேண்டும் என்ற தவிப்பு!
குரலிலோ ஒரு தழுதழுப்பு!
ஜீப்பின் கண்ணாடி வழியே அவள் ஓடி வருவதை பார்த்துவிட்டு அவன் வண்டியை கீறிச்சிட்டு நிறுத்த,அதற்குள் பாவையவளோ மூச்சிறைக்க அவன் ஜீப்பின் அருகே வந்திருந்தாள்.
வழியில் அவளின் தகப்பன் ஏற்பாடு செய்த பாதுகாவலன் அவளை தடுத்து நிறுத்த முயல,அவனது கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டு வந்தவள்,வேகமாக வீரின் ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.
சட்டென தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்த தமயந்தியை அவன் புருவம் சுருக்கி ஏறிட,
அவளோ மூச்சிறைக்க ஏறி அமர்ந்ததோடு “வீர் சீக்கிரம் வண்டிய எடுங்க” என்றாள் ஒரு வித பரபரப்புடன்…
அவனோ “தமி..” என மறுக்க தொடங்கும் போதே “பிளீஸ் வீர்…என்னை இந்த ஜெயில்ல இருந்து காப்பாத்துங்க…பிளீஸ்” என இறைஞ்சியவளின் குரலில் இருந்த தவிப்பு அவனது மனதை பிசைந்தன.
அனைவரையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட பெண்ணின் இந்த தவிப்பு அவனிற்கு என்னவோ போல் இருந்தது.
அத்துடன் களைந்த கூந்தலை கூட சரி செய்யாமல் ஓடி வந்திருந்த அவளின் தோரணை அவனை வாட்டி வதைக்க “சரி எங்க போகணும்?” என கேட்டவாறே அவன் வண்டியை எடுக்க,
அவளோ “எங்க வேணாலும் போங்க வீர்…எனக்கு முதல்ல இந்த இடத்தை விட்டு போகணும்…இங்க எனக்கு ஏதோ மூச்சு முட்டற மாதிரி இருக்கு…என்னாலே முடியலை” என கண்களில் படிந்த சோகத்துடன் பேசியவளின் குரல் அவனது இதயத்தினுள் வலியை ஏற்படுத்தின.
அதனால் வண்டியை வீட்டிலிருந்து வெளியே செலுத்திய வீருக்கு வேறு எதை பற்றியும் கவலை இல்லை.
தற்போது அவளை அவன் அழைத்து சென்றால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று தெரிந்தாலும் தன்னவளின் வேதனை நிறைந்த சொற்கள் அவனை துணிந்து முடிவெடுக்க வைத்திருந்தன.
தமயந்தியோ வீட்டிலிருந்து வாகனம் வெளியே செல்லும் வரை திரும்பி பார்த்தப்படியே வந்தாள்.
வீட்டை விட்டு சில கிலோ மீட்டர் தூரம் வந்தப்பிறகே அவளிற்குள் ஆசுவாசம் தோன்ற,அப்படியே தளர்ந்துப்போய் இருக்கையில் தலைசாய்த்து கண் மூடிக்கொண்டாள்.
வீர் வாகனத்தை செலுத்துக்கொண்டிருந்தாலும் அவனது விழிகள் ஒவ்வொரு நொடியும் அவளை தான் அவதானித்துக் கொண்டிருந்தன.
வழக்கமாக அவளிடம் இருக்கும் புத்துணர்ச்சி இல்லை…ஒரு வித சோபையுடன் இருந்தாள்.
களைந்த கூந்தல்,கண்ணிற்கு கீழே புதிதாக உருவான கருவளையம்,இலேசாக உடல் இளைத்திருப்பது போல் கூட அவனிற்கு தோன்றின.
வெறும் இரண்டு வார பிரிவிற்கே அவள் வாடிய கொடியென துவண்டுப்போயிருந்தாள்.
தன்னவனின் மீது அவள் வைத்திருக்கும் காதல் தன்னை இத்துணை பலவீனமாக்கும் என அவளே அறிந்திருக்கவில்லை.
இந்த இரண்டு பிரிவில் ஒன்று மட்டும் அவளிற்கு நிச்சயமாகியிருந்தது…எக்காரணத்தை கொண்டும் யாருக்காகவும் இழக்க முடியாது என்று!
அது வீரே நினைத்தாலும் அவளால் அவனை பிரிய முடியாது.
அவன் அவளின் இதயத்தில் மட்டுமல்ல…உயிர் மூச்சினுள் ஒன்றாக கலந்துவிட்டான் என்று தெரிந்துக்கொண்டாள்.
வீரும் அவளின் சோர்ந்த தோற்றம் கண்டு ‘என்ன பிரச்சனை இவளுக்கு?ஏன் இப்படி இருக்காள்?’ என கலங்கிப் போய் தான் பார்த்திருந்தான்.
பெண்ணவள் அவனிடம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்றாற் போன்று ஆள் அரவமில்லாத ஒரு மலைப்பாங்கான இடத்திற்கு அவளை அழைத்து வந்திருந்தான்.
வாகனம் நின்ற அரவம் உணர்ந்து மெதுவாக கண்விழித்த தமயந்தி சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்தாள்.
தாம் வீட்டிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் வந்துவிட்டோம் என்பது புரிந்திட,பக்கவாட்டாக திரும்பி அவனை ஏறிட்டாள்.
அவனோ அவளையே ‘என்னாச்சு?’ என கூர்மையாக பார்த்திருக்க,
சில கணங்கள் இமைக்காமல் அவனது விம்பத்தை தன் விழிகளுக்குள் நிரப்பிக்கொண்ட பெண்ணவளின் வலது கண்ணிலிருந்து கரகரவென நீர் வழிய ஆரம்பித்தன.
அவளின் விழி வீச்சில் தடுமாறிக்கொண்டிருந்த வீர் சட்டென அவளின் கண்ணீரை பார்த்ததும் துடித்து விட்டான்.
அதிலும்,தமயந்தி போன்ற பெண் அவ்வளவு எளிதில் அழக்கூடியவள் இல்லை.
ஆனால் இன்று அவனிற்காக அழுகிறாள்…அவனை காணாமல் தவித்ததை நினைத்து அழுகிறாள்.
ஏனென்றே தெரியவில்லை…வீர் என்று வரும் போது அவளின் இதயம் பலவீனமாகிவிடுகிறது.
அதனால் அவளையும் மீறி மனதின் அழுத்தம் கண்ணீராய் வெளிப்பட்டிருக்க “என்னாச்சு லட்டு?ஏன் அழறே?” என பதறிப்போய் கேட்ட வீர் அவளின் கன்னம் தாங்கி விரல் கொண்டு அவளின் கண்ணீரை துடைக்க,
அதற்காகவே ஒவ்வொரு நொடியும் தவமிருந்தவளாய் “வீ..ர்” என நாதழுதழுக்க அழைத்தவளாய் வேகமாக அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
திடீரென்று தன் கழுத்தை கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தவளை கண்டு அவனுள் ஒரு நடுக்கம் பரவி விரவின.
ஆனால் சடுதியில் அவளின் கண்ணீர் ஞாபகம் வர அவளை ஒற்றை கையால் அணைத்து ஆறுதலாக கூந்தலை வருடி விட்டான்.
அவனது அந்த இதமான வருடலிலே அவளின் ஒட்டுமொத்த தவிப்பும் மாயமாகியது போலிருக்க,அவனது நெஞ்சில் இன்னும் ஆழப்புதைத்தாள்.
தாங்கள் இருக்கும் நிலை தவறு என்றாலும்,அவளை அப்படியொரு நிலையில் கண்டதற்கு பிறகு அவனால் விலக்க முடியவில்லை.
சில கணங்கள் அப்படியே கரைந்துவிட,அவளோ மௌனமாய் கண்ணீர் சிந்தி தன்னுடைய தவிப்பு அனைத்தையும் அகற்றியப் பிறகு மெதுவாக விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.
அவளை சுற்றி அவன் கரம் இருந்தாலும்,அதில் ஒரு அன்பு இருந்ததே ஒழிய,ஒரு காதலியை அணைக்கும் அளவு அழுத்தமில்லை.
அவனது விலகல் அவளிற்கு ஒரு புறம் வருத்தத்தை கொடுத்தாலும் மற்றொரு புறம் அவனிடம் பிடித்ததே இந்த கண்ணியம் தானே?
அதனால் மெல்லியதாக முறுவலித்த மங்கை அவனின் நெஞ்சத்தில் அழுத்தமான முத்தமொன்றை பதித்தாள்.
அவளின் முதுகை வருடிக்கொண்டிருந்த வீரின் கரம் அவளின் இந்த அதிரடியில் ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டன.
அவளின் அந்த ஒற்றை முத்தம் உச்சந்தலையில் உள்ளங்கால் வரை சிலிர்க்க செய்தன.
சட்டென விழி தாழ்த்தி அவளை அவன் நோக்க,அவளோ அவனை பார்த்து கண்சிமிட்டி சிரிக்க,ஏனோ அவளின் புன்னகையை தனக்குள் உள்வாங்கி கொள்ள வேண்டும் போல் ஓர் உணர்வு!
ஆனால் மறுகணமே தன் தவறு உரைக்க தலையை உலுக்கி அவன் பேச விளைவதற்குள் அவள் அடுத்ததாக செய்த செயல்,அவனின் நெஞ்சத்தில் கொடூம் வலியை கொடுத்தன.
ஏனெனில்,அவன் தன்னை பார்க்க வராத கோபத்தில் அவனிற்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவனை நறுக்கென கடித்து வைத்திருந்தாள்.
அதை சற்றும் எதிர்பாராத ஆடவன் “ஆ…என்னடி பண்ணறே?வலிக்குதுடி ராட்சசி…” என கத்தி அவளின் தலையை விலக்க,
அவளோ அவனிடமிருந்து விலகி “நல்லா வலிக்கட்டும்…நான் உங்களை பார்க்க முடியாமல் கதறிட்டு இருக்கேன்…நீங்க என்னடான்னா வீட்டுக்கு வந்திட்டு கூட என்னை பார்க்காமல் போறீங்க?ஹீம்” என நாசி விடைக்க சீறினாள்.
அவனோ வலி பொறுக்க முடியாமல் நெஞ்சை நீவி “தமி அதுக்குன்னு இப்படியாடி செய்வே?ரொம்ப வலிக்குதுடி” என முகத்தை சுருக்கி சொல்ல,
“ஹலோ மிஸ்டர் ரவுடி…கத்தி குத்து வாங்கி வலிக்காத உடம்பு…நான் கடிச்சு தான் வலிக்குதா?நல்ல கதையா இருக்கே…அதுவும் கட்டி கட்டியா வேற பாடிய மென்டெயின் பண்ணி வைச்சிருக்கீங்க…என்னாலே நல்லா கடிக்க வேற முடியலை…இதிலே சாருக்கு வலிக்குதாம்…யாரை ஏமாத்தறீங்க?” என இதழை சுழித்து திட்டிக்கொண்டே அவள் ஜீப்பை திறந்து கீழிறங்க,
அவளின் பேச்சை கேட்டு கடுப்பான வீர் “ஏன்டி இதுவே நல்லா கடிக்கலையா நீ?நல்லா சிங்கம் மாதிரி பல்லை கூரா வைச்சு கடிச்சிட்டு நான் ஏமாத்தறானா?” என பல்லைக்கடித்துக்கொண்டே அவனும் கீழிறங்கினான்.
அதற்குள் ஜீப்பை சுத்தி அவனருகே வந்திருந்த தமயந்தி “யாரு சிங்கம்?சிங்கம் எப்படி கடிக்கும் தெரியும் உங்களுக்கு…வாங்க கடிச்சு காட்டறேன்” என அவனின் கரம் பற்றி மீண்டும் கடிக்க பாய,
“ஏய் ஏய் ராட்சசி…என்னடி பண்ணறே?” என பதறிப்போய் அவளின் நெற்றியில் கைவைத்து தள்ளி நிறுத்த,
அவளோ படாரென்று அவன் கரத்தை தள்ளிவிட்டு “இன்னொருக்கா என்னை அவாய்ட் பண்ணீங்க?கடிச்சு வைக்க மாட்டேன்…உங்களுக்கு கொன்னு தின்னு ஏப்பம் விட்டிருவேன்…ஜாக்கிரதை” என முகம் சிவக்க சீற,
அவனோ “ஊப்” என இதழை குவித்து ஊதி சலிப்பாக சிகையை கோதிக் கொண்டான்.
பெண்ணவளோ அவனிடமிருந்து வந்து விலகி சுற்றுப்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தாள்.
ஒரு உயிரான மலைப்பகுதிக்கு அவளை அவன் அழைத்து வந்திருந்தான்.
அந்த மலையின் உச்சி வரை மெதுவாக நடந்து சென்றவளிற்கு சென்னை மாநகரம் மொத்தமும் கண்ணில் புலப்பட்டது.
சிறு சிறு புள்ளைகளாய் தெரிந்த கட்டிடங்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் இலேசானது.
தன்னவனை சந்தித்தவுடனே அலைக்கழித்த அவளின் உள்ளம் சமாதானமாகியிருந்தது.
புராண கதைகளில் வருவது போல் ராஜாவின் உயிர் கிளியில் இருப்பது போல் அவளின் மகிழ்ச்சி வீரிடம் மட்டுமே அடங்கியிருக்கிறது.
அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அவளிற்கு அவன் வேண்டும்.அதை யாவும் அறியாமல் அவளின் தந்தை பெண்ணவளை சிறை வைத்து உயிர் மரிக்க செய்கிறார்.
இப்போது ஆள் அரவமற்ற அந்த மலைப்பாங்கும் கண் தெரிந்தவரை இருந்த காட்சிகளும் அவளிற்கு இதமளிக்க மௌனமாக கைகள் கட்டி சில நிமிடங்கள் அதையும் ஆழ்ந்து ரசித்தாள்.
வீட்டிற்கு சென்றால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.அதை பற்றியெல்லாம் அவள் கவலைக்கொள்ளவில்லை.
அந்நொடி தன்னவனுடன் அவள் இருப்பதே போதுமானதாக இருந்தது.

வீரோ காற்றில் அலைப்பாய்ந்த கூந்தலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கலந்த சுரிதாரில் அழகிய சிற்பமாய் கைகள் கட்டி நின்றிருந்தவளை பின்னால் இருந்து ரசித்தவாறே ஜீப்பின் முகப்பில் ஏறி அமர்ந்தான்.
அலைப்பேசியை எடுத்து தங்கையின் எண்ணிற்கு ஒரு தகவல் அனுப்பினான்.
‘நான் வர லேட்டாகும் மதிம்மா…அதனாலே வேற ஒரு ஆளை வர சொல்லியிருக்கேன்..அவனோட காரில் ஏறி வீட்டுக்கு வந்திடு’ என தகவலை அனுப்பியதோடு அந்த வாகனத்தின் எண்ணையும் அவனது பெயர் மற்றும் புகைப்படத்தையும் அவளிற்கு அனுப்பியிருந்தான்.
அவனால் தங்கையை அழைத்து வர முடியாத சமயத்தில் அவளை அழைத்து வர ஒரு ஆளை முன்பே ஏற்பாடு செய்திருந்தான்.
இன்று அவனின் அந்த திட்டம் உபயோகமாக இருந்தது.
அவன் தங்கையின் எண்ணிற்கு தகவல் அனுப்பிவிட்டு நிமிர,தமயந்தியோ அவனையே விழி அகற்றாமல் பார்த்திருந்தாள்.
அவளின் அசையாத பார்வை அவனை என்னவோ செய்ய “ம்க்கும்” என தொண்டையை செருமி ஜீப்பில் கையூன்றி பின்பக்கமாக சாய்ந்து அமர்ந்தான்.
அவளோ இரண்டு வார பிரிவிற்கும் சேர்த்து தன்னவனை அங்குல அங்குலமாக ரசித்திருந்தாள்.
கனகச்சிதமான உடற்கட்டு,சவரம் செய்யப்படாத இலேசான தாடி மீசை,சந்தின நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் கால் சராய் அணிந்து அமர்ந்திருந்தவனை விழிகளால் நிரப்பியவாறே அவனை நோக்கி நடந்து வந்தாள்.
முதல் இரண்டு பொத்தான்கள் திறந்திருக்க அதன் வழியே வெளிப்பட்ட அவனது திண்ணிய மார்பையும்,இலேசாக பளீச்சிட்ட ‘டால்’ என்ற பச்சை குத்தலையும் கண்டு மனம் மயங்கிய பாவையவளிற்கு அவனின் மீதுள்ள காதல் மோகமாய் உருவெடுத்தது.
இதுவரை காதல் என்ற உணர்வை தாண்டி அவனின் மேல் வேறு எந்த உணர்வுகளும் அவளிற்கு தோன்றியதில்லை.
இன்றோ அவன் அவளின் கண்களுக்கு வசீகரமாய் தெரிய,அவளையும் மீறி அவனது நெஞ்சத்திலும் முதுகிலும் இருந்த பச்சைக்குத்தலை விரலால் தீண்ட வேண்டும் என்ற வேட்கை அவளுள் உருவாகின.
அதனால் காலை அகட்டி ஜீப்பின் மீது அமர்ந்திருந்த வீரிடம் வந்தவள்,சட்டென ஜீப் முகப்பின் மேல் கால் வைத்து ஏறி அவனது காலுக்கிடையில் இருந்த இடத்தில் எவ்வித சங்கோஜமின்றி அமர்ந்துக்கொண்டாள்.
ஒரே கணத்தில் இவை நடந்துவிட்டதால் அதை சற்றும் எதிர்பாராத வீரோ அவளின் செயலில் விதிர் விதிர்த்துப்போய் “ஹே..ஹே என்னடி பண்ணறே?” என பதறிப்போய் எழுந்தவனின் தேகமோ இப்போது அவளின் மேனியை மொத்தமாய் உரசியிருந்தன.
அதில் இன்னும் அதிர்ந்த ஆடவன் “த..மி…” என அதட்ட முயன்றவனின் குரல் ஒரு நடுக்கத்துடன் வெளி வந்திருந்தது.
தன்னவனின் தடுமாற்றம் அறிந்த மங்கை இலேசாக நாணத்துடன் முறுவலித்து “வீர் பிளீஸ் ஹக் மீ” என கிசுகிசுப்பான குரலில் உரைக்க,அவனிற்கோ அவளின் அருகாமையும் பேச்சும் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க,அவன் என்ன செய்வது என தெரியாமல் தவித்தான்.
இதுவரை எந்தவொரு பெண்ணின் ஸ்பரிசத்தையும் அறியாதவன் அல்ல அவன்…
தாய் மற்றும் தங்கைகள் என அனைவரையும் அணைத்திருக்கிறான்…அவ்வளவு ஏன் தமயந்தியை கூட சற்று முன்பு அணைத்திருந்தான்.
அப்போதெல்லாம் தோன்றாத ஒரு மாற்றம் அவனின் தேகத்தில் இப்போது உண்டாக்கிட,அதன் தாக்கம் தாளாமல் அவனின் கரங்களும் அவளை அணைக்க பாய்ந்தன.
ஆனால் அது தவறு என தனக்கு தானே உத்தேசித்து கைமுஷ்டியை இறுக்கி தொடையின் மீது அழுந்த பதித்தவன்,அவளிடமும் “தமி முதல்ல எழுந்திரி” என்றவனின் வாயிலிருந்து மிகுந்த சிரமத்திற்கு பிறகே வார்த்தைகள் வெளிவந்திருந்தது.
அதற்கெல்லாம் அசரக்கூடியவளா அவனது ஜான்சி ராணி?
அவளை அணைக்க துடித்த கரங்களை அவன் தொடையில் அழுந்த வைத்திருப்பதை ஓரக்கண்ணால் அவதானித்த பெண்ணிற்கும் அவனின் உணர்வுகள் நன்றாகவே புரிந்தன.
‘கட்டிப்பிடிக்க தோணுச்சுன்னா கட்டிப்பிடிக்க வேண்டியது தானே?எதுக்கு கட்டுப்படுத்தணும் இந்த ரவுடி’ என மனதிற்குள் சிணுங்கியவள்,பின்பு அவளாகவே இறுகியிருந்த அவன் கரங்களுக்கு மோட்சம் கொடுக்கும் வகையில் அவன் கரத்தை மென்மையாகப் பற்றி தன்னிடையை சுற்றி வளைக்க வைத்தாள்.
அந்தோ அதிசயம்!
அவளின் ஒரே தொடுகைக்கே அவனின் முரட்டுக்கரம் குழைந்து அவளிற்குள் சரணடைந்திருந்தது.
அவளின் இடையை அவன் கரம் வளைத்ததும் அவன் இதழ்களின் வழியே உஷ்ணப்பெருமூச்சு ஒன்று வெளியாகிட,அது காரிகையவளின் கழுத்து வளைவில் பதிந்து அவளையும் சூடேற்றி சிவக்க வைத்தன.
அப்படியே தன்னவளை தன்னோடு சேர்த்து வளைத்துக்கொள்ள அவனது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
ஆயினும்,அவளின் செல்வ நிலையை எண்ணி அவன் அவளிடமிருந்து கரத்தை விடுவிக்க முயற்சிக்க,அதற்கு அவள் அனுமதித்தால் அல்லவா?
இப்போது இன்னும் அழுத்தமாக அவனின் கரத்தை தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டவள்,சிறிது பின்னால் நகர்ந்து இருவரின் தேகத்திற்கும் இடையே எந்தவொரு இடைவெளியும் இல்லாத வகையில் ஒட்டி அமர்ந்துக்கொண்டாள்.
அதில் ஆடவனின் தேகம் மொத்தமும் மின்சாரம் பாய்ந்த ஓர் உணர்வு!
அவனுள் புதைந்துக்கிடந்த உணர்ச்சிகள் யாவும் மெது மெதுவாக கிளர்ந்தெழ ஆரம்பித்த வேளையில்,அப்படியே அணைத்த வாக்கிலே அவன் நெஞ்சில் தலைசாய்த்து விழி மூடி கொண்டாள் தமயந்தி.
அவனை மட்டுமே கணவனாக மனதிற்குள் வரித்து வைத்திருக்கும் பெண்ணவளிற்கு அவை எதுவும் தவறாக தெரியவில்லை.
‘என் புருஷன்…அவன் தோளிலே நான் சாய்ந்துக்கிறேன்’ என்ற கர்வமும் காதலும் அவளின் முகத்தில் மிளிர்ந்தது.
அவள் தன் வெட்கம் துறக்கவில்லை என்றால்,அவன் அவளை விலக்கியே வைத்துவிடுவான் என்பதும் மற்றொரு காரணம்!
அவனின் திண்மையான மார்பில் சாய்ந்து விழி மூடிய தமயந்தியை குனிந்து நோக்கிய வீரின் இதயத்துடிப்பு மட்டும் தாறுமாறாக எகிறின.
அவளின் அண்மையே அந்த ஆடவனை தூக்கிவாரிப்போட செய்தது என்றால்,அவளின் இந்த செயல் அவனிற்குள் புதைந்துக்கிடந்த ஆண்மை உணர்வுகளை தட்டியெழுப்ப ஆரம்பித்தன.
ஆயினும் அவனின் சிந்தை ‘இது தவறு வீர்’ என தனக்குள்ளே அங்கலாய்க்க,அவளின் நெருக்கத்தை ஏற்க முடியாமல் தவித்த வீர் “த..மி வாட்ஸ் ராங் வித் யூ…என்னை விடு…” என நான்கு வார்த்தை பேசுவதற்குள் திணறிப்போனான்.
அத்தோடு அவளிடமிருந்து அவன் தன் கரங்களை விடுவிக்க முயல “வீர் பிளீஸ்…கொஞ்ச நேரம் இப்படியே இருங்க…மறுபடியும் எப்போ உங்களை பார்ப்பேன்னு தெரியலை…பிளீஸ் வீர்…” என இதயம் உருக்கும் குரலில் இறைஞ்சியவளை தன்னிலிருந்து விலக்க முடியவில்லை அவனால்!
அவன் நினைத்திருந்தால் அவளை ஒரேயடியாக உதறி தள்ளியிருக்க முடியும்?
அதற்குண்டான வலிமை உடையவன் தான் அவன்.
ஆனால் அவளின் மீதுள்ள நேசத்தை இரகசியமாய் பூட்டி வைத்திருப்பவனால் அவளின் கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை.
சற்று முன்பு அவள் சிந்திய கண்ணீரும் அவனை நிதானிக்க செய்தன.
அதேசமயம் அவனுள் கிளர்ந்தெழுந்த உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் அவளின் இடையை சுற்றி வளைந்திருந்த கரத்தில் இறுக்கம் கொடுத்து விழி மூடி அமர்ந்துவிட்டான்.
ஆகாயத்தை பார்த்தது போல் அவன் முகம் இருக்க,அவளோ அவன் நெஞ்சில் தலைசாய்த்து கண்மூடி அமர்ந்திருந்தாள்.
ஒன்றோடு ஒன்று உரசிய தேகத்திற்கு இடையே பரவிய உஷ்ணம் மோகத்தைக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு ஆழ்ந்த அமைதியை கொடுத்தன.
இருவரின் ஸ்பரிசத்தையும் வருடி சென்ற வாடைக்காற்றின் குளிமை அவர்களின் மனதில் ஒரு இதத்தை பரவச் செய்தன.
அக்கணம் இருவரின் மனதிலும் இந்த நொடி…இந்த நிமிடம்…இந்த தருணம் இப்படியே உறைந்துவிடக்கூடாதா என்ற ஏக்கமும் உருவாகின.
இருவரும் எத்துணை நேரம் அந்த மோன நிலையில் அமர்ந்திருந்தார்களோ தெரியவில்லை.
மேற்கில் சூரிய பகவானின் கதிர்கள் தன் ஆதிக்கத்தை இழக்கும் சமயமே இருவருக்கும் சுய உணர்வு வந்தது.
அடுத்த கணமே வீருக்கு தன் தவறு புரிய “தமி நகரு” என கரகரத்த குரலில் உரைத்து அவளிடமிருந்து கரத்தை உருவிக்கொண்டான்.
தமயந்திக்கும் பழைய வீர் திரும்பி வந்துவிட்டான் என்பது புரிய சலிப்பாக தலையுயர்த்தி அவனை ஏறிட்டவள் “நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தால் பொறுக்காதே…கொலை பண்ணி கொலை பண்ணி ஃபீலிங்ஸ் மரத்து போச்சு வீர்” என கடுப்பாக திட்டிக்கொண்டே அவனிடமிருந்து எழ ஆயுத்தமானாள்.
ஜீப்பில் ஏறும் போது ஏதோ ஒரு வேகத்தில் ஏறி விட்டாள்.
இப்போது அவள் இறங்குவதற்கு சிறிது தடுமாறினாள்.
அவனது உதவி இல்லாமல் அவளால் இறங்கமுடியாது என்பது புரிய,அதனால் விழி உயர்த்தி அவனை அவள் ஏறிட “படுத்தறேடி” என போலியாக அலுத்தவாறு அவளிற்கு உதவ முன் வந்தான் வீர்.
அவளிற்கு கைகொடுத்து அவளை இறக்க அவன் முனைய,சட்டென அவள் அணிந்திருந்த துப்பாட்டா அவளின் காலுக்கடியில் சிக்கிக்கொள்ள இம்முறை தடுமாறி “ஆ..” என கத்தி அவனின் மீதே விழுந்து வைத்திருந்தாள்.
அவள் விழுந்த வேகத்தில் வீர் நிலைத்தடுமாறி ஜீப்பின் பின்னால் சாய்ந்துவிட,அவனின் மீது அவள் பொத்தென்று விழுந்தாள்.
தன் மீது வந்து மோதிய பூ குவியல் கீழே விழுந்துவிடும் அபாயம் இருப்பதால் வேகமாக அவளின் இடையை இறுக்கி தன்னோடு சேர்த்தணைத்த வீர் “பார்த்து லட்டு” என பதறிப்போய் கூறினான்.
ஆனால் அவனின் மீது வந்த விழுந்த காரிகையின் இதழ்களோ தவறுதலாக அவனின் உரமேறிய நெஞ்சத்தில் பதிந்திட,இப்படியொரு விபரீதத்தை இருவருமே எதிர்பார்க்கவில்லை.
அவளின் ஈர இதழ்கள் தன் மார்பில் பதிந்த அடுத்த கணமே அவன் அதிர்ச்சியில் உறைந்துவிட,பெண்ணவளிற்கும் இந்த முத்தத்தினால் முகம் குப்பென்று சிவந்துவிட்டது.
சற்று முன்பு கூட அவள் அவனின் நெஞ்சத்தில் முத்தமிட்டிருந்தாள்.அச்சமயம் அவனது சட்டை இடையே இருந்ததினால் அவளிற்குள் பெரிதாக உணர்வுகள் எதுவும் தோன்றவில்லை.
இப்போது அவளின் இதழ் ஸ்பரிசம் அவனின் வெற்று மார்பில் பதிந்ததும் அவளிற்குள் உணர்வுகள் பொங்க ஆரம்பித்தன.
அதனால் நெஞ்சம் படபடக்க அவள் இதழ் கடித்தப்படி தடுமாற,அவனின் நிலையோ படுமோசம்!
என்ன தான் அவளை அவன் நேசிக்கவில்லை என வெளியே கூறினாலும்,அவன் மனம் முழுவதும் நிரம்பியிருந்த தன்னவளின் இதழ் ஸ்பரிசம் அவனை பாதிக்காமல் இருக்குமா என்ன?
அவளின் முத்தம் அவனிற்குள் புதைந்திருந்த வேட்கையை தூண்டிவிட,இப்போதே அவளின் இதழ்களை கொய்துவிட அவன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
அதனால் அவளின் கன்னம் பற்றி அவள் முகத்தை தன்னை நோக்கி அவன் இழுத்திருக்க,
அதில் அவளின் விழிகள் திகைப்பில் விரிந்திட,அவனோ அவளின் இதழ்களை முத்தமிட நெருங்கிவிட்டான்.
அவளுமே அவனது முத்தத்தை எதிர்கொள்ளும் படபடப்புடன் விழி மூடி காத்திருந்தாள்.
இருவரின் இதழ்களும் உரசிக்கொள்ள நூலளவு இடைவெளி தான் இருந்தது.
சடுதியில் அவனுள் ரத்தினவேலின் முகம் மின்னி மறைந்திட,
அவ்வளவு தான்!
அதுவரை அவனுள் முகிழ்ந்த காதல் மற்றும் மோகம் இரண்டு உணர்வுகளும் மொத்தமாய் அறுந்து விட “தமயந்தி வா போகலாம்” என அவளை தன்னிலிருந்து விலக்கிய ஆடவன்,அவள் நடப்பதை கிரகிப்பதற்குள் ஜீப்பிலிருந்து குதித்திறங்கி அவளின் கரம் பற்றி ஒரே தம்மில் இறக்கியிருந்தான்.
அவளை இறக்கிவிட்ட கையோடு விறுவிறுவென நடந்துச் சென்று ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.
அவனிற்குள் உண்டான உணர்வுகள் எல்லாம் நண்பனை எண்ணியவுடன் மொத்தமாய் வடிந்துவிட ‘நீ என்ன செய்யறே வீர்?அவனுக்கு மட்டும் இது தெரிஞ்சால் உன்னை பத்தி என்ன நினைப்பான்?உன்னாலே அவன் முன்னாடி ஒரு துரோகியா நிக்க முடியுமா?’ என அவனின் மனசாட்சி அவனை குற்றவாளி கூண்டில் ஏற்றி கேள்வி கேட்டதும்,அவனிற்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது.
உண்ட வீட்டில் இரண்டகம் செய்வது போல் தோன்ற அவனின் முகம் இறுகிவிட்டன.
தன்னவனின் முத்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த தமயந்தியின் மனமோ ஏமாற்றத்தில் சுருங்கிப்போயின.
படீரென்று திரும்பி கண்ணாடி வழியே அவன் முகம் காண,அவனின் இறுகிய முகத்தை கண்டவள் ‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியாச்சா?’ என ஆயாசத்துடன் எண்ணியப்படி ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.
அவளிடத்தில் வேறு யாரேனும் பெண் இருந்திருந்தால் ஆடவனின் இந்த அவமதிப்பில் ‘நீயும் வேணாம்…உன் காதலும் வேணாம்…போடா’ என்று சொல்லிவிட்டு விலகியிருப்பார்கள்.
அவனை உயிராய் நேசிக்கும் தமயந்திக்கு அவனது ஒவ்வொரு அசைவுகளுக்கும் அர்த்தம் தெரியும் என்பதால் அவனை புரிந்துக்கொண்டாள்.
அதேசமயம் இதற்கு மேலும் அவனை பிரிந்திருக்க முடியாது என்பது புரிய,தாம் தான் ஏதேனும் முடிவெடுத்தாக வேண்டும் என சிந்தனையில் ஆழ்ந்தாள்.
ஏனெனில்,வீர் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை காத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை அவள் அறிவாள்.
‘என்ன செய்யலாம்?’ என பல வகையில் யோசித்து ஒரு முடிவை எடுத்தவளிற்கு தெரியவில்லை…அவனை தன் வழிக்கு கொண்டு வருவது அத்துணை எளிதல்ல என்பது!
ஜீப்பில் ஏறியது தொடக்கம் அவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை..
இறுகிய முகத்துடனே அவளின் வீட்டில் வந்து அவன் இறக்கிவிட்டான்.
உடனே அவள் அவனை திரும்பி ஏறிட,அவளை விலக்க முடிவெடுத்த நிலையிலும் கூட “என்னோட வந்ததுக்கு ஏதாவது பிரச்சனையாகுமா?நான் வேணா உள்ள வந்த பேசட்டுமா தமி?” என அவன் கேட்டிருக்க,அவளிற்கு சிரிப்பு தான் வந்தது.
‘என்ன டீசைன் இவரு?’ என தனக்குள்ளே தலையாட்டி புன்னகைத்த தமயந்தி “நோ தேங்க்ஸ்…நான் பார்த்துக்கிறேன் வீர்” என கூறிவிட்டு இறங்க சென்றவள்,சட்டென இறுதி கணத்தில் அவனின் கன்னத்தில் அழுந்த இதழ்பதித்து விட்டு இறங்கியிருந்தாள்.
வழக்கம் போல் அவளின் முத்தத்தில் சிலையாகிய ஆடவனைப் பார்த்து ‘ஒரு முத்தத்துக்கே இப்படி உருகி போறாரு…இவரு என்னை விலக்கி வைக்கிறராம்…ம்க்கும்’ என தன்னவனை நொடித்துக்கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவள் சென்ற இரண்டு நிமிடங்களுக்கு பிறகே சுய உணர்வு அடைந்த வீர் தவிப்புடன் பிடரி மயிர்களை இறுகப் பிடித்து தன்னை தானே காயப்படுத்திக் கொண்டான்.
அவனால் அவளை விடவும் முடியவில்லை…அதேசமயம் அவளை ஏற்கவும் முடியவில்லை.
அவனிற்கும் என்ன செய்வது என தெரியாத ஒரு வலி நிறைந்த அவஸ்தை!
அவளை ஏறிட தூண்டிய மனதை அடக்கியப்படி விரக்தியான நிலையுடனே அங்கிருந்து விடைப்பெற்று சென்றான்.
தமயந்தியோ தன்னவனை சந்தித்துவிட்டதால் உண்டான மன நிறைவுடன் உற்சாகமாகவே வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் வந்தவுடன் அனைவரும் சுற்றி நின்று கேள்வி கேட்பார்கள் என நினைத்தற்கு நேர் மாறாக “வீர் எங்க லட்டு?அவனை பார்த்து பல நாள் ஆச்சு…அவனை உள்ள கூட்டிட்டு வந்திருக்கலாமில்லை” என காஞ்சனா மாலா அயர்ச்சியாக கேட்க,
அவளின் தாயோ “ப்ச் அவன் வந்தான்னு தெரிஞ்சு அவனுக்கு பிடிச்ச பால் கோவா செஞ்சு வைச்சேன்…நீ என்னடான்னா வாசலோட பிள்ளையை அனுப்பி வைச்சிட்டே…ஆளு வளர்ந்த அளவு உனக்கு புத்தியில்லை தமி” என அவரின் பங்கிற்கு திட்டினார்.
தமயந்தியே ‘என்னடா நடக்குது இங்கே?’ என குழம்பியே போனாள்.
இவர்கள் இருவரும் வீரின் மீதுள்ள பாசத்தில் பேசுகிறார்கள் என்று அவள் ஒதுக்கிவிட,இரவு இல்லத்திற்கு வந்த அவளின் தந்தை மற்றும் தமையன் யாவரும் எதுவுமே கேட்காதது ஆச்சரியமாக இருந்தது.
கூடவே ‘ஹப்பாடா’ என நிம்மதியும் உருவாகிட ‘எப்படியோ தப்பிச்சோம்டா சாமி’ என குதூகலத்தவளிற்கு அடுத்து நடக்க இருக்கும் பிரச்சனைகளை பற்றி தெரியவில்லை.
முகிழ்மதி 99:

வீர் தமயந்தியின் காதல் இவ்வாறு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க ஜித்தேந்திரனின் நேசமோ மிகுந்த கவலைக்கிடமாக இருந்தது.
சந்திரமதியிடம் அவன் பேச நினைத்து அவளை பின்தொடர,அவளோ அவனை கண்டுக் கொள்ளாமல் சுத்தலில் விட்டாள்.
அவள் தெரிந்து அவ்வாறு செய்தாளா அல்லது தெரியாமல் செய்தாளா என்பது அவளிற்கு மட்டுமே வெளிச்சம்!
ஏனெனில்,அன்றொரு நாள் அவளை அவன் சந்தித்துப் பேசியதற்கு பிறகு பல முறை அவனை அவள் பார்த்திருக்கிறாள்.
ஆனால் ஒரு நாளும் அவனுடன் அவள் பேச முயற்சிக்கவில்லை.
யாரோ ஒருவன் அவன் என்பது போலவே அவனை பார்த்தும் பார்க்காதது போல் கடந்துவிடுவாள்.
அவனிடம் அவளிற்கு பேச வேண்டிய அவசியம் கிடையாது..அதனால் அவனை கண்டுக்கொள்ளவில்லை.
அவனிற்கு அப்படியில்லையே…அவளை காண்பதற்காக தானே அவன் அங்கு வருகிறான்.
அதனால் அவனிற்கு கஷ்டமாக இருந்தது.
மனித மனம் விசித்திரமானது என்பார்கள்!
முன்பு தூரத்திலிருந்து அவளை பார்ப்பதிலே நிம்மதியுற்ற அவன் மனம்,அவளிடம் உரையாடியதற்கு பிறகு அவளிடம் பேச வேண்டும் என்று தவித்தது.
அவனின் தவிப்பு அவளிற்கு புரியவில்லை போலும்!
அதிலும்,அவள் மது பானம் பரிமாறும் ஊழியரிலிருந்து அறை சேவை செய்யும் ஊழியராக மாறியதிலிருந்து அவளின் பணி நேரம் மாற்றமடைந்திருந்தது.
முதலில் சில நாட்கள் அவளின் பணி மாற்றம் அறியாமல் அவளை காண வந்து தவித்த ஆடவன்,ஒரு நாள் ஏதேச்சையாக மீனுவை சந்தித்த பிறகே விஷயம் அறிந்தான்.
‘ஓ…ஜாப் சேன்ச்சாகிடுச்சா?அதான் அவளை பார்க்க முடியலை’ என நெற்றியை நீவிக்கொண்ட ஜித்துவிற்கு முன்பு போல் அவளை சந்திக்க முடியவில்லை.
பகல் நேரங்களில் அவனிற்கும் வேலை அதிகமாக இருக்கும்…மாலை பொழுது என்றால் அவனிற்கு பெரிதாக பணி எதுவும் இருக்காது.
அதனால் அவளை சந்திப்பதற்கு எவ்வித தடங்கலும் இருக்கவில்லை.இப்போது இருவருமே தங்களது வேலையின் பின்பு ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் அவனிற்கு அலுவலகத்தில் வேலை இல்லாததினால் அவளை காண நட்சத்திர விடுதிக்கு அவன் வந்திருக்க அப்போது தான் வீருடன் அவள் செல்வதை பார்த்திருந்தான்.
‘இவ ஏன் வீர் அண்ணா கூட போறாள்?என்ன விஷயமா இருக்கும்?’ என புருவம் சுருக்கினான்.
அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒன்றாக கண்டவுடன் சந்தேகம் கொள்ளும் ரகமில்லை அவன்!
வீரை பற்றி அவன் நன்கு அறிவான் என்பதால் அவன் அவளிற்கு ஏதோ உதவி செய்கிறான் என்று மட்டும் எண்ணினான்.
அதனால் அவற்றை பெரிதாக அவன் எடுத்துக்கொள்ளவில்லை.
அவன் நினைத்திருந்தால் அவர்களின் பின்னோடு சென்று அனைத்தையும் தெரிந்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் அவளின் வாய்மொழியாக தெரிந்துக்கொள்வதே உசிதம் என பொறுமைக் காத்தான்.
ஒரு நாள் அவனிற்கு நன்றாகவே தெரிந்துவிட்டது சந்திரமதி வேண்டுமென்றே அவனை நிராகரிக்கிறாள் என்று!
ஏனெனில்,சந்திரமதியின் தோழி மீனு கூட அவனின் வருகை அறிந்து அவனிடம் நலம் விசாரித்து செல்வாள்.
கண்டிப்பாக அவனை பார்த்ததை பற்றி தோழியிடமும் கூறியிருக்கக்கூடும்?
ஆனாலும் அவனை காண அவள் எந்த வகையிலும் முயலவில்லை என்பதே அவனிற்கு வெட்ட வெளிச்சமாகியது.
‘சரியான திமிருப்பிடிச்சுவே…வேணும்னே இவ என்னை சுத்த விடறாள்’ என கடுப்பாகி அவளை மனதிற்குள் வறுத்தெடுத்தான்.
அவன் எண்ணியது சரி தான்!
ஏனெனில்,ஒரு நாள் ஜித்துவை சந்தித்தத்தை பற்றி மீனு சந்திரமதியிடம் வந்து தெரிவித்தாள்.
அதற்கு அவளிடம் எவ்வித பதிலும் வரவில்லை.
அவ்வளவு ஏன்?
சிறிய முகம் மாற்றம் கூட அவளிடமில்லை.
அவள் நிதானமாக அழுக்குப் படிந்த தட்டை வெண்ணிற துணியினால் துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளிடமிருந்து எதிர்வினை எதுவுமில்லை என்றவுடன் “என்ன மதி எதுவுமே பேசமாட்டிக்கிறே?நீ போய் அவர்கிட்ட பேசலையா?” என மீனு விசாரிக்க,
அவளோ வேலையில் கவனமாக “நான் போய் எதுக்கு அவர்கிட்ட பேசணும்?அவர் ஏதோ வேலையா வந்திருக்காரு… வந்த வேலைய அவர் பார்க்கட்டும்…நம்ப வேலைய நாம்ப பார்க்கலாம்” என அசால்ட்டாக சொன்னாள்.
அவளின் அலட்சிய பேச்சை கேட்டு கடுப்பான மீனு “ஹே என்ன மதி இப்படி சொல்லறே?என்னயிருந்தாலும் அவரு உன் ரிலேஷன் தானே?” என அவனிற்காக பரிந்து வந்தாள்.
ஜித்துவின் மனதில் அவள் இருக்கிறாள் என்று தெரிந்ததினாலே அவளிடம் இத்துணை தூரம் பேசிக் கொண்டிருக்கிறாள்.
உடனே துடைப்பதை நிறுத்திவிட்டு அவளை விழி உயர்த்தி ஏறிட்ட சந்திரமதி “ரிலேஷன் தான் அதுக்குனு பார்க்கிற நேரமெல்லாம் பேசணும்னு அவசியமில்லை மீனு” என்றாள் அழுத்தமாக.
“என்னடி இப்படி பேசறே?அவர் இங்க வர்றதே உனக்காக தான்னு எனக்கு தோணுது…” என மறைமுகமாக அவனின் நேசத்தை எடுத்துரைக்க,
அதில் சினமுற்ற சந்திரமதி “என்னடி உளறிட்டு இருக்கே?அவர் எதுக்கு என்னை பார்க்க வரணும்?” என்றவளின் குரலில் ஸ்ருதி ஏறியது.
அவளும் சட்டென இடையில் ஒற்றை கைக்குற்றி “நீ தெரிஞ்சு தான் பேசறீயா?இல்லை தெரியாமல் பேசறீயா மதி?” என சந்தேகமாக தோழியை மேலிருந்து கீழாக பார்த்தாள்.
சந்திரமதியோ அப்போதும் குழப்பமாக அவளை புருவம் சுருக்கி பார்க்க,
‘அது சரி…இந்த ரோபோட்டுக்கு காதல் வந்திட்டாலும்’ என இதழை சுழித்த மீனு “காதல்ல நீ பயங்கர வீக்னு தெரிஞ்சும் உன்கிட்ட இதை பேசறேன் பாரு..எல்லாம் என்னை சொல்லணும்” என்றவாறு தலையில் அடித்துக்கொண்டாள்.
‘காதல்’ என்ற சொல்லை கேட்டதும் நொடியில் அவளின் முகம் அப்படியே மாறிப்போனது.
அதனால் நெஞ்சம் அடைக்க “காதலா?” என கேட்டவளின் மனதில் ஆயிரம் குத்தூசிகள் ஒரே நேரத்தில் குத்தியது போன்ற வலியை கொடுத்தன.
மற்றவளோ தோழியின் மனமறியாமல் “ஆமா காதல் தான்…அதுவும் அவருக்கு உன் மேலே பயங்கர லவ்ஸு மதி…அன்னைக்கு நாம்ப அவரோட சாப்பிட்டோமில்லை…அப்போ அவரோட பார்வை முழுக்க உன் மேலே மட்டும் தான் இருந்துச்சு…நல்லா யோசிச்சு பாரு உனக்கு பிடிச்ச ஃபுட்டை எப்படி அவர் கரெக்ட்டா ஆர்டர் பண்ணாரு?அந்த அளவு உன்னை அவர் நோட் பண்ணியிருக்காரு…நான் அடிச்சு சொல்லறேன் அவர் உன்னை பயங்கரமா லவ் பண்ணறாரு மதி” என ஜித்துவின் நேசத்தை சிலாகித்து சொல்லிக்கொண்டிருக்க,அவள் பேச பேச சந்திரமதியின் முகம் இருண்டுக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் அவளின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியாமல் “ஷட் அப் மீனு…எதுவும் தெரியாமல் லூசு மாதிரி உளறிட்டு இருக்காதே” என உச்சக்கட்ட சீற்றத்துடன் கத்தியிருந்தாள்.
அவள் கத்தியதை கேட்டு மிரண்ட மீனு பயந்துப்போய் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
சந்திரமதியோ கோபத்தில் மூச்சிறைக்க அவளை கொலைவெறியோடு முறைத்திருந்தாள்.
இப்போது தான் ஒருவனின் காதல் வலையில் சிக்கி தப்பித்து வெளியே வந்திருக்கிறாள்.
மீண்டும் ஒரு காதலா?
அவளிற்கு நினைக்கவே மனம் கசந்தது.
காதல் என்றவுடன் முதலில் அவளின் நினைவிற்கு வந்தவன் ஹரிஷ் தான்!
அவனை பற்றி எண்ணியவுடனே அவனால் அவள் அனுபவித்த வலியும் வேதனையும் மட்டுமே நெஞ்சில் எழ,இப்போதும் மனம் ரணமாய் வலித்தது.
கூடவே,காதல் என்றவுடன் ஒரு சீற்றமும் உருவாகிட அவற்றினை தான் மீனுவிடம் காட்டினாள்.
தன்னை கண்டு மருண்ட மீனுவை உறுத்து விழித்த சந்திரமதி “மீனு தேவையில்லாமல் எதை எதையோ கற்பனை பண்ணி உளறிட்டு இருக்காதே…எந்த வேலையும் இல்லைனா கேபினிலே போய் உனக்கு பிடிச்ச டிராமா பாரு…முதல்ல இங்கிருந்து வெளியே போ” என அவளை அடித்து விரட்டாத குறையாக துரத்திவிட்டாள்.
அவளுமே ‘ஆத்திஈ..இருந்த கோபத்திலே அடிச்சாலும் அடிச்சிடுவாள் போலே…தப்பிச்சு ஓடிருவோம்டா சாமி’ என அந்நொடி அவளிற்கு பயந்து அங்கிருந்து ஓடியிருந்தாள்.
‘ஆளை பாரு…லவ்வாம் லவ்வு…அவனுக்கு அந்த காட்டேரி கூட கல்யாணம் இருக்கிறது தெரியாமல் பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காள்’ என தோழியை திட்டிக்கொண்டே விட்ட பணியை தொடர்ந்தாள்.
சந்திரமதியின் மனமோ தோழியின் பேச்சை நம்ப மறுத்தது.
‘ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு பைத்தியம் மாதிரி பேசறாள்…போடி’ என அவளின் பேச்சை பெரிதாக பொருட்படுத்தாமல் கடந்து விட்டாள்.
அதற்கு மற்றொரு காரணம் ரோகிணியுடனான அவனின் திருமணம்!
அத்தோடு அவளை அவன் புகழ்ந்து பேசியதை கேட்டப்பிறகும் தோழியின் பேச்சை நம்புவாளா என்ன?
ஆகையால்,அவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் வழமை போல் நாட்களை கடத்தினாள்.
ஆனால் ஐந்து நாட்கள் கழித்து விடுதி சீருடையை கழட்டிக்கொண்டிருந்த தோழியிடம் மெதுவாக வந்த மீனு “மதி…மதி…” என அவள் மெதுவாக ஆரம்பிக்க,
“என்னடி?” என்றாள் வெடுக்கென்று…
அதில் அவளின் முகம் சுருங்கிவிட்டன.
உடனே தன்னுடைய சுரிதார் மேலாடையை உடுத்திக்கொண்டு அவளிடம் திரும்பிய சந்திரமதி “என்ன பிரச்சனை உனக்கு?” என சிடுசிடுப்புடனே கேட்டாள்.
“சொன்னால் திட்டக் கூடாது” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு…
அவளின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய சந்திரமதி “திட்டற மாதிரி எதையாவது சொன்னால் கண்டிப்பா திட்டுவேன்…முதல்ல சொல்லு” என்றவாறே கொண்டையிட்டிருந்த கூந்தலை அவிழ்த்துவிட்டாள்.
‘சரியான சிடுமூஞ்சி’ என உள்ளுக்குள் வசைப்பாடினாலும் அவளிற்காக தவித்த ஜித்துவின் முகம் மின்னி மறைய தொண்டையை செருமி பேச ஆரம்பித்தாள்.
“ஹே மதி…இன்னைக்கும் அவர் வந்திருக்காருடி…நீ வேணா ஒரு வார்த்தை அவர்கிட்ட போய் பேசலாமில்லை…அவரை பார்க்க பாவமா இருக்கு” என சோகத்துடன் சொல்ல,
முதலில் அந்த அவர் யாரென்று தெரியாமல் புருவம் சுருக்கியவள், அவளிற்கு தெரிந்ததும் தோழியை முறைத்தாள்.
“கண்டப்படி உளராதேனு ஏற்கனவே சொல்லிட்டேன்…அப்படி இருந்தும் ஏன்டி இப்படி பைத்திக்காரி மாதிரி உளறிட்டு இருக்கே” என முகம் சிவக்க சீற,
“இல்லை மதி…அவர் கண்ணு உன்னை தான்டி தேடிட்டு இருக்கு…நீயே யோசிச்சு பாரு…முன்னாடி நீ பாரிலே வேலை செய்யற டைமுக்கு வந்தவரு இப்போ எப்படி பகல் டைமிலே சரியா வர்றாரு…நீயே சொல்லியிருக்கே…அவர் ஒரு கம்பெனியோட மேனேஜிங் டைரக்டர்னு…அப்படி இருக்கவரு கிளையண்டை இங்க வந்து தான் பார்க்கணும் என்ன அவசியம்?இதெல்லாம் உன்னை பார்க்கிறதுக்காக அவர் விடற புருடா…கொஞ்சம் யோசிச்சு பார்றேன் மதி” என தோழிக்கு எப்படியாவது புரிய வைத்துவிடும் நோக்குடன் அவள் நயமாக சொல்லிக்கொண்டிருக்க,
சந்திரமதியோ வெடுக்கென்று “ப்ச் போடி லூசு…கண்ட கண்ட டிராமாவையும் பார்த்து ஏதாவது உளறிட்டு இருக்காதே…அவருக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகிடுச்சு…அப்புறம் எதுக்கு என்னை பார்க்க வரணும்?இது தெரியாமல் லவ்வு அது இது பினாத்தாதே…ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பற வழிய பாரு…போ” என அதட்டலாய் கூறி கைப்பையை எடுத்து மாட்டிக்கொண்டாள்.
மீனுவோ அவள் இறுதியாக கூறியதை கேட்டு “ஏதே கல்யாணம் நிச்சயமாகிடுச்சா?என்னடி சொல்லறே?” என அதிர்ச்சியில் வாயில் கைவைத்துக்கொள்ள,
சந்திரமதியோ ஒரு பெருமூச்சுடன் “ஆமா…அவருக்கு அடுத்த மாசம் கல்யாணமாம்…என் சிஸ்டர் கூட சொன்னாள்…அதனாலே கண்டதையும் பேசாமல் நீ போய் ரெடியாகு” என அவளின் தோளில் கைவைத்து தள்ளிவிட,மீனுவிற்கு தான் இப்போது தலையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது.
‘வேறொரு பெண்ணோட நிச்சயமானவரு எதுக்காக இவள் பின்னாடி சுத்தறாரு…ஒரு வேளை நான் தான் தப்பா நினைக்கிறனோ’ என தனக்குள்ளே குழம்பிப்போனாள்.
இருவரும் ஒன்றாக வெளியே கிளம்பி வரும் போது ஜித்தேந்திரன் இன்றும் வழக்கம் போல் அமரும் அதே குளம்பியகத்தில் அமர்ந்திருந்தான்.
சந்திரமதியை கண்டதும் அவனின் விழிகள் மின்னியதை கச்சிதமாக கண்ணில் படம் எடுத்த மீனு தோழியின் காதோரம் குனிந்து “மதி நான் சொன்னப்போ நீ நம்பலை இல்லை…நீயே எதுவும் தெரியாத மாதிரி அவரை கவனிச்சு பார்றேன்…அவர் கண்ணுலே தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரியுது” என கிசுகிசுப்பான குரலில் சொல்லிவிட்டு,அவள் எங்கு தன்னை அடித்து விடுவாளோ என்று “பை” என சிட்டாய் பறந்திருந்தாள்.
‘இவளை’ என தப்பி ஓடிய தோழியின் முதுகை முறைத்த சந்திரமதியோ மெதுவாக திரும்பி ஜித்தேந்திரனை பார்த்தாள்.
தன்னை அவள் கண்டதும் அவனின் முகம் மலர்ந்து விகசித்திட அவளை நோக்கி தனக்கே உரிய வசீகர புன்னகையைச் சிந்தினான்.
முதல் முறை அவன் புன்னகையை கண்டு மயங்காத பெண்ணவள் இன்றோ அவன் சிரிப்பில் ஒரே ஒரு கணம் தடுமாறிவிட்டாள்.
உடனே படபடத்த விழிகளை நேராக திருப்பிக்கொண்ட சந்திரமதி வேகமாக நட்சத்திர விடுதியிலிருந்து வெளியேறினாள்.
மீனு தோழியிடம் அவனை பற்றி சொல்லியே அவளின் மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தியிருந்தாள்.
அதன் விளைவே அவளின் இந்த தடுமாற்றம்!
அதேசமயம் அவளின் காதல் தோல்வி வேறு கண்முன் வந்து இம்சிக்க,அவளின் முகத்தில் இருள் சூழ்ந்தது.
அவளின் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை கண்ட வீர் “என்னாச்சு மதிம்மா?ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு…உடம்பு எதுவும் சரியில்லையா?” என பரிவுடன் விசாரிக்க,
அவன் காட்டிய கரிசனையில் ஜித்துவின் நினைவு பின்னுக்கு சென்றுவிட “நத்திங் அண்ணா…இன்னைக்கு கொஞ்சம் வேலை…அதான் முகம் ஒரு மாதிரியா இருக்கு” என அவனிடம் பொய் கூறி சமாளித்தவள்,
“அண்ணா அம்மு வீட்டுலே தானே இருக்காள்…சீக்கிரம் வாங்க வீட்டுக்கு போகலாம்…அப்புறம் அத்தான் அவளை கூட்டிட்டு போயிடுவாரு” என அவள் பரபரப்புடன் ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.
“ஆமா…நாளைக்கு ஏதோ டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும்னு பூபதி சொன்னான்…அதனாலே நாளைக்கு டால் வீட்டுக்கு வரமாட்டாள்னு நினைக்கிறேன்…நீ வா இன்னைக்கே கொஞ்ச நேரம் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு” என சொல்லிக்கொண்டே அவன் வண்டியை எடுத்தான்.
“அண்ணா அத்தானுக்கு அம்மு மேலே பயங்கர லவ் இல்லைண்ணா…போலிட்டிக்கல்ல பெரிய ஆளா இருந்தாலும் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் அவளை அப்படியே ஏத்துக்கிட்டாரு…இதுவே அவர் இடத்தில் வேற யாராவது இருந்தால் இதெல்லாம் இவ்வளவு ஈஸியா கடந்திருப்பாங்களானு தெரியலை…நம்பளை பத்தி எல்லாமே தெரிஞ்சும் இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை நம்பளை குறைவா அவர் பேசினதேயில்லை…பார்க்க தான் முரட்டுத்தனமா இருக்காரு…ஹீ இஸ் அ பக்கா ஹீரோ மெட்டிரியல் அண்ணா” என ரத்தினவேலை பாராட்டி பெருமிதமாக உரைக்க,
வீரும் அதை ஆமோதிப்பது போல் மென்மையாக புன்னகைத்து “நீ சொல்லறது எல்லாம் உண்மை தான்மா…எப்பவும் அவன் இருக்கிற இடத்திலே அவன் தான் ஹீரோவா இருப்பான்…அவன் அரசியல்ல மட்டுமில்லை…நிஜ வாழ்க்கையிலும் அவன் ஹீரோ தான்…முகிழ்பட்ட கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து பூபதி இப்போ அவளை அப்படி தாங்கறான்…டாலை முதல் முறையா பார்க்கும் போது அவ கண்ணிலே உயிரே இல்லை…இப்போ அவ முகமெல்லாம் சிரிப்பை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு…நம்ப வாழ்க்கையிலே வெளிச்சத்தை கொடுத்ததே அவன் தான்மா…அவன் மட்டும் இல்லைனா இதெல்லாம் சாத்தியமே இல்லை” என அவனது நண்பனை பாராட்டி புகழ்ந்ததோடு அவனை எண்ணி புளங்காகிதமும் அடைந்தான் வீர்.
அதனை சந்திரமதியும் ஒப்புக்கொள்வது போல் மௌனமாக இருந்தாள்.
திடீரென்று அவளிற்கு தண்ணீர் தாகம் எடுக்க,அவளோ தனது கைப்பையிலிருந்த புட்டியை எடுத்து நீர் பருக ஆரம்பித்தாள்.
அவ்வேளையில் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த வீர் பக்கவாட்டாக தங்கையிடம் திரும்பி “டாலுக்கு கிடைச்ச மாதிரி உனக்கும் அவனை மாதிரியே ஒரு பையன் கிடைச்சிட்டால் எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும் மதிம்மா” என சிலாகித்து அவன் எதிர்பார்ப்பை சொன்னதும்,சட்டென பாவையவளின் மனக்கண்ணில் ஜித்துவின் முகம் தோன்றி மறைந்திட,அடுத்தகணமே “த்தூ” என குடித்துக்கொண்டிருந்த நீர் முழுவதையும் வெளியே துப்பியிருந்தாள்.
அவளிற்கு புரையேறியதை பார்த்து வண்டியை ஓரங்கட்டி நிறுத்திய வீர் “பார்த்து மெதுவாக குடிம்மா” என அவளின் தலையை தட்ட,அவளோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.
அவன் முகம் அவளின் மனதில் தோன்றி மறைந்ததை எண்ணி விக்கித்து போய் அமர்ந்திருந்தாள்.
‘நல்லப்பையன்னு சொன்னவுடனே எனக்கு ஏன் அவன் முகம் ஞாபகம் வந்துச்சு…கடவுளே’ என அவள் குழம்பிப்போய் அமர்ந்திருந்தாள்.
அத்துடன் அவளின் குழப்பத்திற்கெல்லாம் காரணமான தோழியின் மீது ஆத்திரமும் வர ‘எல்லாம் இவளாலே வந்தது…ஏதேதோ பேசி என் மனசை கெடுக்கிறாள்’ என பல்லை நறநறவென கடித்தாள்.
நட்சத்திர விடுதியில் அமர்ந்திருந்த ஜித்துவோ தன்னை கண்டு அவள் முகம் திருப்பி சென்றதை எண்ணி கவலையில் ஆழ்ந்து இருந்தான்.