முகிழ்மதி 90:

நிகழ்காலம்,
வீரின் இல்லம்,
சந்திரமதியும் வீரும் வரவேற்பறையில் நின்று பேசிக்கொண்டிருந்த சமயம் அது!
வெறும் கானல் நீராய் மறைந்துவிட்டது என்று எண்ணிய ஒரு கனவு மீண்டும் நிஜமாகிறது என்றால் அவனால் நம்ப முடியவில்லை.
திடீரென்று அனைத்தும் மாயமாகிவிடுமோ என்ற அச்சம் அவனுள்!
ஆதலால்,சிறிது படபடப்புடனே சந்திரமதியிடம் “நான் மறுபடியும் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே மதிம்மா…நிஜமாவே முகிழ் தான் என் டாலா?அவ என் டாலா இருந்தால்,அப்போ நீ?எப்படி அவ தான் என் தங்கச்சினு அவ்வளவு உறுதியா நீ சொல்லறே?” என தன்னுடைய அச்சங்களை அடக்கிக்கொண்டு அவன் கேட்க,
அவளோ மெல்லியதாக புன்னகைத்து “பரவாயில்லை அண்ணா…உங்க பயம் புரியுது…இதுக்கு மேலே கிடைக்கவே கிடைக்காதுனு நினைச்ச ஒரு விஷயம் மறுபடியும் நம்ப கைக்கு கிடைக்கும் போது எப்படி இருக்கும்னு எனக்கு புரியும் அண்ணா…பிகாஸ் நானும் அந்த நிலையில் தான் இருக்கேன்..” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியவள்,
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு “அண்ணா முகிழ் தான் உங்க தங்கச்சினு சொல்லறதுக்கு பல காரணங்கள் இருக்கு…ஒண்ணு,முகிழ் பொறந்திலிருந்து என் கூட வளரலை…அவளுக்கு ஆறு வயசா இருக்கும் போது விபத்திலே அடிப்பட்டு மயங்கின நிலையிலே தான் அவ எங்க வீட்டுக்கே வந்தாள்…அதே மாதிரி உங்க தங்கச்சி ஆறு வயசா இருக்கும் போது தான் இறந்துப்போயிருக்காள்…இரண்டாவது,விஜயலட்சுமி எங்களோட சொந்த அம்மா இல்லை…இன்னும் உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்னா சிவராமன் அன்ட் தேவகிக்கு பிறந்த பிள்ளைங்க தான் நானும் முகிழும்…இப்போ உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என அழுத்தமாக கூறியவளின் முகத்தில் விஜயலட்சுமியை பற்றி எண்ணியுவடன் கோபம் துளிர்த்தது.
வீரோ நெற்றியை நீவி “சிவராமன்…” என யோசனையாக இழுத்தவனிற்கு அப்போது தான் அவனது தேவகி அம்மாவை திருமணம் செய்துக்கொண்ட ஆளின் பெயரே நினைவிற்கு வந்தது.
சிறு வயதில் ஒரே ஒரு முறை மட்டும் தான் சிவராமனை அவன் பார்த்திருக்கிறான்.
அதுவும் திருமண நாளன்று அவனது தேவகி அம்மாவை பிரித்துக்கொண்டு செல்லும் அரக்கனாய் மட்டுமே அவர் தெரிந்தார்.
அவ்வளவே?
அதன்பிறகு அவரை ஒரு முறை கூட பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.அவனின் பாட்டி சுசீலா புலம்பி மட்டும் தான் சிவராமனின் பெயரை அவன் அறிவான்.
அத்தோடு திருமணத்திற்கு பின்பு தேவகி மட்டுமே அவனை அடிக்கடி காண வருவார் என்பதால் சிவராமனின் முகம் அவன் மனதில் பதியவே இல்லை.
பாவம்,அவனும் அப்போது தான் சிறுவன் தானே?
அத்தோடு அவனது தாயை இழந்த சோகத்தில் இருந்தான் அவன்.
அதனால் அவனிற்கு எதுவும் நினைவில் இல்லை.
இப்போதைய அவளின் பேச்சில் அவனின் புருவங்கள் சுருங்கியதோடு விஜயலட்சுமி அவர்களின் அன்னையில்லை என்று உரைத்ததை சிறிது சிறிதாக கிரகித்தவனிற்கு திகைப்பு உண்டாகியது.
அதனால் “என்னம்மா சொல்லறே?உனக்கு எப்படி தெரியும் அது?” என அதிர்ச்சியுடன் அவன் கேட்க,
அவளோ கோபத்தில் சிவந்த முகத்துடன் “அந்த விஜயலட்சுமி என் அம்மாவே இல்லைனு எனக்கே சமீபமா தான் அண்ணா தெரியும்…அதையும் கூட ஏதேச்சையா அவங்க மகன் ரஞ்சனோட ஃபோனிலே பேசும் போது கேட்டுட்டேன்…அவங்க செஞ்ச ஒவ்வொரு விஷயத்தையும் அவங்க வாய் மூலமாவே எனக்கு வாக்குமூலம் கொடுத்திட்டாங்க” என்றவள்,
‘சிவராமனின் வாழ்வில் விஜயலட்சுமி எப்படி நுழைந்தார்?சந்திரமதியை அமுத வாணன் தூக்கி வந்தது?அதற்கு பின்பு நடந்த கொடுமைகள்.முகிழ் எப்படி அங்கு வந்தாள்?அவருக்கும் ரஞ்சனுக்கும் என்ன தொடர்பு?’ என அவள் காதால் கேட்டிறிந்த விடயங்களை அவனிடம் உரைத்தாள்.
அதையெல்லாம் அவள் சொல்ல சொல்ல வீருக்கு அப்படியொரு அதிர்ச்சி!
அவனிற்கு தங்கை மீண்டும் கிடைத்ததில் ஒரு மகிழ்ச்சி என்றால்,விஜயலட்சுமியின் செயல் அவனது இரத்தத்தை கொதிக்க வைத்தது.
ஆதலால்,விஜயலட்சுமியின் மீது மட்டுமின்றி சிவராமனின் மீது ஆத்திரம்,ஆக்ரோஷம்,சீற்றம்,அருவருப்பு,கோபம் என அனைத்து வகையான உணர்வுகளும் ஒரு சேர தோன்றிட அவனின் தேகம் இறுகி முகமெல்லாம் சிவந்துவிட்டது.
“ஆமாண்ணா…இதெல்லாம் கேட்கும் போது என்னை நினைச்சு எனக்கே அருவருப்பு இருந்துச்சு…இப்படியொரு கேடுக்கெட்ட பொம்பளைய அம்மான்னு நினைச்சுயிருக்கமேனு நினைக்கும் போது அவ்வளவு கோபம் வந்துச்சு…அதை விட எனக்கு பெரிய ஆத்திரம் வந்தது என் அப்பங்காரன் ஒருத்தன் இருக்கானே அவன் மேலே தான் வந்துச்சு…எனக்கு வந்த வெறிக்கு இரண்டு பேரையும் அப்படியே கத்தி வைச்சு கொன்னுடலாம் போலே அவ்வளவு ஆத்திரம் வந்துச்சு…ஆனால் கோபத்தை விட முகிழும் நானும் எப்படியாவது பாதுகாப்பா தப்பிக்க வழி ஏதாவது கிடைக்குமானு நான் பார்த்தேன்…பிகாஸ் தன்னோட பேராசைக்காக இத்தனை பேரோட வாழ்க்கைய அழிச்சவங்க…கண்டிப்பா என்னையும் முகிழையும் எது வேணா செய்வாங்கனு தோணுச்சு…ஆனால் எப்படிடா தப்பிக்கிறது நான் தவிச்ச சமயம் தெரிஞ்சோ தெரியாமலோ அத்தான் எங்க லைஃபிலே வந்தாரு…அவரை பார்க்கும் போது எனக்குள்ளே ஏதோ ஒரு நம்பிக்கை…அவராலே எங்களை இந்த நரகத்திலே இருந்து காப்பாத்த முடியும்னு தோணுச்சு…அதுக்காகவே இவரை வைச்சு இங்கிருந்து தப்பிச்சிடலாம்னு நான் யோசிச்சேன்…அதுக்குள்ள இப்படியெல்லாம் நடந்திடுச்சு அண்ணா” என அனைத்தையும் கூறி முடித்ததும் வீருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இரு தங்கைகள் மட்டுமின்றி அவர்களின் தாய் மூவரும் ஒரு தனிமனிதியின் பேராசைக்கு பலியாகியிருப்பதை பற்றி சிந்திக்கும் போதே அவனிற்கு நெஞ்சம் வலித்தது.
அதையெல்லாம் மீறி தங்கைகள் இருவரும் அங்கு அனுபவித்த வந்த கொடுமைகள் அனைத்தையும் செவி வழி உணரும் போதே அவனிற்கு உயிரை யாரோ உருவி எடுப்பது போல் வலித்தது என்றால், அவர்கள் இருவரும் அங்கு அனுபவித்த நரகத்தை அவன் மனக்கண்ணில் காட்சிகளாய் காணும் போது அவனால் தாங்கவே முடியவில்லை.
அவனின் விழிகள் கோபத்திலும் வருத்தத்திலும் சிவந்துவிட,தன் வாழ்நாளில் ஒரு முறை கூட தூக்கியிராத தங்கையின் கரம் பற்றி இழுத்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
முன்பாவது அவனிற்குள் ஒரு தயக்கம் இருந்தது.
ஆனால் இப்போது அவனுடைய தங்கை தான் அவள் என்று ஊர்ஜிதமானதும் அவனிற்கு தடைகள் ஏதும் இருக்கவில்லை.
சிசுவாக வயிற்றில் இருக்கும் போதே அவர்கள் இருவருக்கும் தாயுமானவனாகிப்போனவன் அவன்!
இப்போது சொல்லவே தேவையில்லை…தங்கைகள் இருவரும் அவனின் உயிராகிப்போனார்கள்.
முன்பு புரியாத பல கேள்விகளுக்கான விடை இன்று இந்தவொரு சந்தர்ப்பங்களில் அவனிற்கு கிடைத்தது.
ஒரு தாயின் வயிற்றில் பிறக்காத அம்மூவருக்கும் எப்படி இதுப்போலான பிணைப்பு தானாக உருவாகியது என்று!
முதல் முறை முகிழ்மதியை பார்க்கும் போது அவனில் கிளர்ந்த அந்த புது உணர்வு!
சந்திரமதியிடம் பேசியதற்கு பிறகு உருவான இந்த பந்தம்!
அவர்களுக்கும் அவனை கண்டதுமே எவ்வாறு நெருக்கம் ஏற்பட்டது என்று அனைத்து கேள்விகளுக்குமான விடை அன்று கிடைத்தது.
அத்தோடு எவ்வளவு அழகாக வாழ்ந்திருக்க வேண்டிய குடும்பம் இது!
இந்த குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைத்த ஒவ்வொரையும் உயிரோடு கொன்று புதைக்க அவனின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தது.
அதிலும்,அந்த விஜயலட்சுமியையும் சிவராமனையும் கழுத்தை நெறித்துக் கொள்ளும் அளவு அவனுள் ஆவேசம்!
சந்திரமதியோ தனது தமையனின் நெஞ்சில் முகம் புதைத்து அவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினாள்.
முகிழ்மதியாவது ஆறு வயது வரை தாய் மற்றும் தமையனோடு பாசத்தை அனுபவித்து வாழ்ந்திருக்கிறாள்.
ஆனால் அவளோ குழந்தையிலிருந்தே பெரிதாக பாசத்தை அறியாமல் வளர்ந்த அதிர்ஷ்டமற்ற பெண் அவள்!
அதனால் முகிழ்மதியை ஏற்பது போல் தன்னை அன்னையும் தமையனும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தவிப்பு அவளுள் இருந்தது.
ஆனால் தமையன் எவ்வித தயக்கமுமின்றி ‘நீயும் எங்களில் ஒருவள் தான்’ என்று உரைப்பது போல் ஆறுதலாக அணைத்ததும்,அந்தவொரு சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தாற் போன்று அவனில் உடைந்து அழ தொடங்கிவிட்டாள்.
இது துக்கத்தினால் வந்த கண்ணீர் அல்ல…ஆனந்தத்தினால் பெருகிய கண்ணீர்!
முகிழ்மதியை கண்டதும் தன் மகளை அணைத்துக்கொண்ட தாயின் அன்பும் அவளிற்கு வேண்டும் என்ற பரிதவிப்பு இருந்தது.
இப்போது தமையன் தன்னை ஏற்றதும் அவளின் தவிப்புகள் நீங்கி ஆசுவாசமுற்றது பேதையவளின் உள்ளம்!
தன் மார்பில் அவன் உணர்ந்த தங்கையின் கண்ணீர் அவனின் இதயத்தை சுட்டன.
கண் முன்னே தன் தங்கைகள் இருந்தும் இருவரையும் அடையாளமறிய தவறிவிட்டமே என கலங்கிப்போனான் அவன்.
ஆதலால் “அழக்கூடாது மதிம்மா…” என தழுதழுத்த குரலில் அவன் உரைத்தப்படி அவளின் சிகையை வருட தொடங்கியதும்,
“என்னாலே முடியலைண்ணா…சின்ன வயசிலிருந்து எத்தனை எத்தனை கொடுமைகளை அந்த பொம்பளை எங்களுக்கு செய்திருக்காள் தெரியுமா?ஒரு நாள் கூட அவ அம்மாவா எங்ககிட்ட நடந்ததே இல்லை…அட்லீஸ்ட் எங்க இரண்டு பேரையாவது ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கவிட்டிருக்கலாம்…அதையும் அவ செய்யலை…எங்க இரண்டு பேரையும் நிம்மதியா அவ ஒரு நாளும் வாழ விட்டதே இல்லை…ஒரு விளையாட்டு சாமான் மாதிரி அவளுக்கு ஏத்த மாதிரி தான் எங்களை ஆட்டிவைப்பாள்…என்னை கூட விடுங்க…அம்மு நிலைமை தான் அங்க படுமோசம்…அந்த லேடிக்கு அப்பாவும் பணமும் தான் வேணும்னா எங்க இரண்டு பேரையும் அம்மாகிட்டயே விட்டிருக்கலாமில்லை…நாங்க இரண்டு பேரும் இங்க ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திருப்போம்…இப்படி எங்களோட எல்லாரோட சந்தோஷத்தையும் பறிச்சிட்டு அவ மட்டும் ரொம்ப சந்தோஷமா இருந்ததை நினைச்சா என்னாலே தாங்கவே முடியலைண்ணா…நானெல்லாம் எங்களை பெத்த அம்மா உயிரோடு இருக்கிறதே தெரியாமல் அம்மான்னா இப்படி தானோனு சில நேரம் வெறுத்துப்போய் நினைச்சிருக்கேன்…இப்போ தான் அவ செஞ்ச எல்லாத்துக்கும் பின்னாடி இப்படியொரு காரணம் இருக்குன்னு தெரியுது…இப்பவும் அத்தானோட கண்ணிலே முகிழ் விழலைனா நீங்களும் அம்மாவும் எங்களுக்கு கிடைச்சிருக்கமாட்டிங்க…இப்பவும் எங்க இரண்டு பேர் வாழ்க்கையும் அந்த நரகத்திலே தானே சிக்கிட்டு இருக்கும்…அதையெல்லாம் நினைக்கும் போதே என்னாலே தாங்கவே முடியலை அண்ணா” என அழுதுக்கொண்டே தன்னுடைய வலிகள் அனைத்தையும் வார்த்தைகளாய் கொட்டியவளின் மேனியில் பரவிய நடுக்கம் இத்தனை வருடங்களாய் அவர்கள் அனுபவித்து வந்த வேதனையை பறைச்சாற்றின.
எப்போதும் துணிச்சலாக பேசும் பெண் இன்று உடைந்து அழவும் அவனால் தாங்க முடியவில்லை.
அவளை தன்னோடு அணைத்து சிரத்தில் முகம் புதைத்தவனின் விழியிலிருந்து கண்ணீர் கசிந்தது.
“கவலைப்படாதேடா செல்லம்…உங்க இரண்டு பேரையும் அண்ணா நான் பார்த்துக்கிறேன்…இனி உங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது” என ஆறுதலாக அவன் உரைத்த சொல்லில் ஒரு திடம் இருந்தது.
இங்கு அண்ணனும் தங்கையுமாய் உள்ளே தாயும் மகளுமாய் எவ்வளவு நேரம் தனித்து நின்று பல நாளைய தவிப்பை கண்ணீரில் தீர்த்துக்கொண்டிருந்தார்களோ தெரியவில்லை.
அவர்களது குடும்ப சங்கமத்தில் தன்னுடைய பங்களிப்பை தரும் விதமாக ரத்தினவேல் அங்கு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்கு வந்த ஆடவன் குடும்பமாய் கண்ணீர் கடலில் மூழ்கியிருப்பதை பார்த்து நெற்றியை நீவிக்கொண்டான்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்ததில் அவனிற்கும் அளவில்லாத மகிழ்ச்சி தான்!
ஆனால் இவர்கள் அனைவரும் இருக்கும் விதத்தை பார்த்து பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியிட்டான்.
தனது நண்பனை கண்டதும் வீர் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்ள முன் வர “எனக்கு தெரியும் டா” என ஒற்றை வார்த்தையில் உரைத்தவனின் விழிகள் தன்னவளை தேடி அலைப்பாய்ந்தன.
“ஏதே தெரியுமா? எப்படி” என குழப்பமாக அவன் நண்பன் கேட்க,
சந்திரமதி அவ்விடத்தில் நிற்பதை பார்த்துவிட்டு “பின்னாடி சொல்லறேன்” என நண்பனிடம் கூறியவனின் விழிகளில் இருந்த கட்டளையை அறிந்த வீர் “சரி” தலையாட்டினான்.
ஆனால் ரத்தினவேலின் விழிகளோ தன்னவளை தேடி அலைப்பாய்வதை கண்டுவிட்டு “முகிழ் அம்மா ரூமிலே இருக்கா அத்தான்…” என சுட்டிக்காட்டினாள் சந்திரமதி.
அவளின் ‘அத்தான்’ என்ற விளிப்பில் அவனின் ஒற்றை புருவம் வியப்பாய் ஏறி இறங்கிட, அவனின் நெஞ்சமெல்லாம் தான் இழந்த நட்சத்திரத்தை மீண்டும் தன் கரம் பற்றும் வேட்கையிலே முனைப்பாய் இருந்தது.
சிறு வயதிலிருந்து நட்சத்திரா என்றும் அவனது வாழ்வின் ஒளி…முகிழ்மதி அவனது வாழ்வின் உயிர்நாடி…
இப்போது அவனது ஸ்டாரும் உயிரானவளும் ஒருவளே என்று தெரிந்துக்கொண்டதும் இப்போதே தன் வாழ்வின் உயிரோவியத்தை காண வேண்டும் என அவனின் உள்ளம் பரபரத்தது.
அவனது ஸ்டாரின் இழப்பிற்காக இன்று வரை அவன் வருத்தத்தில் இருந்திருக்கிறான்.
இப்போது அவள் மீண்டும் உயிர்தெழுந்துவிட்டால் என்று நினைக்கும் போது அவனுள் அப்படியொரு பரவசம்!
ஒளி இழந்த அவனது வாழ்வில் மீண்டும் வெளிச்சம் பரவியது போல் உணர்ந்த ஆடவன் வேகமாக தாய் மகள் இருவரும் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
முகிழ்மதி அவளது தாயின் அணைப்பில் கண் மூடி அமர்ந்திருக்க,அவளை அரவணைத்திருந்தது தேவகியின் கரங்கள்!
முகிழ்மதி இப்போதும் அவர் தான் தன் அன்னை என்று உறுதியாக தெரியவில்லை.
ஏனெனில்,அவளிற்கு முழுதாக கடந்த காலங்கள் ஞாபகத்திற்கு வரவில்லை.
ஆனால் அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து ஏதோவொரு உணர்வு அவளை அலைக்கழித்திட,தேவகியை கண்டவுடன் அவளிற்கு மறைந்துப்போன நினைவுகள் அனைத்தும் மின்னல் போல் களங்களாய் வந்து போனது.
அவளின் நினைவில் ஆறு வயது குழந்தையான அவளை அவர் தூக்கி கொஞ்சுவது போன்ற பிம்பம் தோன்று மறைந்தன.
அடுத்த கணமே தேவகியை பற்றிய நினைவுகள் அவளிற்கு சரசரவென ஞாபகத்தில் வந்திருக்க,அவளையும் மீறி “அம்மா” என கதறியவளை அந்த அன்னையவர் அரவணைத்துக்கொண்டார்.
அவளிற்கு இப்போதும் முழுமையாக எதுவும் நினைவில் வரவில்லை.
அவளின் நினைவடுக்கில் இருந்த ஒருவர் தேவகி மட்டும் தான்!
வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை.அதனால் அவரின் அணைப்பிலே அவள் கட்டுண்டு கிடந்தாள்.
அதேப்போல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தேவகிக்கு மற்ற யாவரையும் அடையாளம் தெரியவில்லை என்றாலும்,தான் பெற்றெடுத்த மகளை அறிந்துக்கொள்ள இயலாமல் போகுமா என்ன?
அதனால் அவளை வீரின் அலைப்பேசியில் பார்த்த முதல் கணமே உயிரற்ற ஜடம் போல் இருந்த பெண்மணிக்கு மீண்டும் உயிர் மீண்டு வந்திருந்தது.
இத்தகைய நிலையில் தன் மகளை நேரில் காணும் போது தெரியாமல் இருக்குமா என்ன?
ஆனால் இது கொடுமை என்னவெனில்?
தன் ஒரு குழந்தையை அடையாளம் கண்டுப்பிடித்தவருக்கு மற்றொரு குழந்தையைத் தெரியவில்லை.
அவளை இன்னும் அவர் பார்த்திருக்கவே இல்லை.
தனது நட்சத்திரா திரும்பி வந்த மகிழ்ச்சியில் அவர் உறைந்திருந்தார்.
வீர் அவரின் தவத்தை கலைக்க முனைந்தும் கூட தேவகியோ முகிழ்மதியை விடவேயில்லை.
இப்போது ரத்தினவேல் தன்னவளை காண அங்கு வந்திருக்க,அவனது கண்ணில் முதலில் விழுந்தவர் தேவகி தான்!
அவரை அவன் ஒரு முறை கூட பார்க்க வரவேயில்லை.
ஏனெனில்,அவன் பார்த்து பிரமித்த மிடுக்கான பெண்ணை இப்படியொரு கோலத்தில் காண விரும்பவில்லை.
ஆனால் இன்றோ தன் மனைவிக்கு வந்த ரத்தினவேல் அவனது குருவை கண்டு துக்கத்தில் துவண்டான்.
அவனிற்கு தொண்டை அடைக்க சிகையை அழுந்தக்கோதி தன்னை சமாளித்தப்படி முன்னே நெருங்கினான் ரத்தினவேல்.
தன்னை நிமிர்ந்து கூர்மையாக பார்த்தவரை கண்ட ரத்தினவேல் “மேம்” என அவரை அழைக்க,
அவரின் விழிகள் அவனை வெறித்து நோக்கியதே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
அவரின் நிலையறிந்த ரத்தினவேல் ஒரு பெருமூச்சுடன் அவரை பார்த்தவாறே அவருள் சிறைப்பட்டிருந்த முகிழ்மதியின் தோளில் கைவைத்து “முகிழ்” என மிருதுவான குரலில் அழைத்தான்.
அவன் அவளின் தோளை தொட்டதும் “ஹே என் பொண்ணை தொடாதே போ” என அவனின் கரத்தை ஆவேசமாக வெடுக்கென்று தட்டிவிட்டார் தேவகி.
‘என்ன?’ என திகைப்போடு அவரை அவன் காண,அவரோ அவளை இன்னும் அதிகமாக தனக்குள்ளே புதைத்து வைத்துக்கொண்டார்.
அவரது செயல் தன் மகளை கொடும் பாவிகளிடமிருந்து அடைக்காப்பது போல் இருந்தது.
அதைக்கண்டு ‘சுத்தம்’ என கழுத்தை நீவியப்படி இருவரையும் மாறி மாறி பார்த்திருந்தான்.
தன்னவளாவது அவனது தவிப்பை அறிவாள் என்றெண்ணி அவளை பார்க்க,அவளோ அவளின் தாயிற்குள்ளே புதைந்து விடுவது போல் அவரின் அணைப்பில் அசையாமல் இருந்தாள்.
ஆனால் அவனிற்கோ பெரும் அவஸ்தை!
அவனிற்கு அவள் வேண்டும்…அவளின் அணைப்பு வேண்டும்…அவளின் ஸ்பரிசம் வேண்டும்…அவளின் முத்தம் வேண்டும்…மொத்தத்தில் அவள் முழுமையாக அவனிற்கு வேண்டும் என அவனது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
இழந்த அவனது வாழ்வின் சொர்க்கம் மீண்டும் கைசேர்ந்த உற்சாகத்தை தன் முத்தத்தினால் வெளிப்படுத்த வேண்டும் என்ற பேராவல் அவனிற்குள்!
அவனது ஸ்டார் திரும்பி வந்துவிட்டதை ஸ்பரிசத்தால் உணர அவா கொண்டது அவனின் தேகம்!
‘என்ன செய்வது?’ என அறியாமல் அந்த முரட்டு ஆடவன் ஏக்கத்தில் தவித்த நேரம் “நண்பா நீ என்ன பண்ணாலும் அவங்க தவத்தை களைக்க முடியாது…நானும் மதியும் ரொம்ப நேரமா ட்ரை பண்ணறோம்…அம்மா யாரையும் கிட்ட விடமாட்டிக்கிறாங்க…அவங்களா மனசு வந்து டாலை விட்டால் தான் உன் பொண்டாட்டி உனக்கு கிடைப்பாள்…நீ வெளிய வா” என சிரித்தப்படி அவனை கையோடு அழைத்து சென்றுவிட்டான்.
அவனோ தன் மனையாளை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே வெளியே வந்தான்.
சிறு குழந்தை மிட்டாய் கிடைக்காமல் ஏமாற்றத்தில் தவிப்பது போல் இருந்தது அவனின் செய்கை!
அவனை அழைத்து வந்து நீள் விரிக்கையில் அமர வைத்த வீரிடம் திரும்பிய ரத்தினவேல் “எவ்வளவு நேரமாடா இப்படி இருக்காங்க?” என நெற்றியை ஒற்றை விரலால் வருடியப்படி அலுப்புடன் கேட்க,
அவனோ “கணக்கில்லைடா” என இதழை பிதுக்கி சொன்னவன் “பூபதி இந்த உலகத்திலே ரொம்ப ஹேப்பியான ஆளு யாருனு கேட்டால் நான் தான்னு கத்தி சொல்லுவேன்டா…ஒரு நாளிலே என் வாழ்க்கை இவ்வளவு அழகா மாறும்னு நான் நினைக்கவே இல்லை…இப்போ வரைக்கும் என்னாலே எதையும் நம்பவே முடியலை…நான் இழந்த என் அம்மா கிடைச்சிட்டாங்க…நான் இறந்ததா நினைச்ச என் டால் எனக்கு திரும்ப கிடைச்சிட்டாள்…அதுவும் ஒண்ணுக்கு இரண்டு தங்கச்சி…டபிள்…டிரிப்பிள் சந்தோஷத்திலே நான் இருக்கேன்டா…ஐயம் சோ ஹேப்பி மேன்” என கண்கள் இரண்டும் மின்ன பேசிய அவனது நண்பன் ரத்தினவேலிற்கு புதிதாக தெரிந்தான்.
அவனறிந்த நண்பன் இவ்வாறெல்லாம் உற்சாகமாய் துறுதுறுப்பாய் பேசுபவன் கிடையாது.
சிறு வயதில் அவனது தங்கையான நட்சத்திராவிடம் பேசி அவன் பார்த்திருக்கிறான்.
அவளின் இறப்பிற்கு பின்பு அவனுள் சோகமும் வலியும் எப்போதும் நீங்காத அங்கமாய் அவனை அலங்கரித்திருக்கும்.
இன்று அவன் பேசியதை ஆச்சரியமாக பார்த்தான்.வீரின் பழைய உற்சாகம் திரும்பி வருகின்றது என்று தனக்குள்ளே எண்ணினான்.
அவன் படும் துயரங்களை அருகில் இருந்து பார்த்ததினால் அவனின் மகிழ்ச்சி ஆடவனையும் தொற்றிக்கொண்டன.
நண்பன் இனியாவது மகிழ்ச்சியாக வாழட்டும் என்று பேருவகையுடன் எண்ணினான் ரத்தினவேல்.
வீரோ எங்கு தான் அவளின் கையை விட்டால் அவள் மறைந்துவிடுவளோ என்பது போல் தங்கையை தன் கைவளைவிலே வைத்தவாறே அவனிடம் பேசினான்.
அவனை இரக்கத்துடன் நோக்கிய ரத்தினவேலின் விழிகள் இப்போது சந்திரமதியின் புறம் திரும்பின.
அவளை புருவம் சுருக்கி பார்த்த ஆடவன் “உனக்கு எப்படி இவங்க தான் அம்மான்னு தெரிஞ்சது?” என தனக்குள் உறுத்திய கேள்வியை தொடுத்தான்.
அவளோ “எனக்கு விஜயலட்சுமி அம்மா இல்லைனு தெரிஞ்சப்பிறகு என் அம்மாவை பத்தி நான் தேடி அலைஞ்சேன்…அப்போ அப்பாவும் அம்மாவும் சேர்ந்திருந்த கல்யாண ஃபோட்டோ ஸ்டோர் ரூமிலே ஒரு பெட்டியிலே கிடைச்சது…அதை பார்த்திருக்கேன்…அதனாலே தான் இங்க அவங்களை பார்த்தவுடனே எனக்கு இவங்க தான் எங்க அம்மான்னு தெரிஞ்சிடுச்சு…பட் அம்மா உயிரோடு இருக்காங்கனு நான் நினைக்கவே இல்லை…விஜயலட்சுமி கூட அவ செத்து ஒழிஞ்சிட்டாள் அந்த மாதிரி ஏதோ பேசி கேட்டேன்…அதனாலே அவங்க உயிரோட இல்லைன்ற எண்ணத்திலே இருந்திட்டேன்…அம்மா உயிரோடு இருக்கிற விஷயம் தெரிஞ்சிருந்தால் முன்னாடியே நான் தேடி வந்திருப்பேன்” என பேசிக்கொண்டே வந்தவளின் குரல் இறுதியில் கமறியது.
தங்கையின் குரல் இடறியதும் அவளின் தோளை அழுத்திய வீர் “நீயாவது பரவாயில்லைம்மா…உன்னாலே முடிஞ்ச வரை போராடி கண்டுப்பிடிச்சிருக்கே?ஆனால் நீங்க இரண்டு பேரும் கண்ணு முன்னாடி இருந்தும் கூட எங்களாலே கண்டுப்பிடிக்க முடியலையேம்மா” என வருத்தமாக சொல்ல,
ரத்தினவேலிற்கும் அதே எண்ணம் தான்!
தன்னவளை அடையாளம் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டமே என்ற குற்றவுணர்வு அவனுள் உருவாகின.
அவனுள் தவிப்பு தோன்றிய கணமே அவனிற்கு மீண்டும் மனைவியை தன் கைச்சிறைக்குள் வைக்க மனம் ஏங்கிட ‘டேய் எப்போடா என் பொண்டாட்டிய விடுவீங்க’ என புலம்பாத குறையாய் அமர்ந்திருந்தான்.
இங்கு வீரின் வீட்டில் உள்ள அனைவரும் பல வகையான உணர்ச்சிகளில் தவித்துக் தத்தளித்துக் கொண்டிருக்க,ஜித்தேந்திரனோ தன்னுடைய அறையில் மெத்தையில் படுத்தவாறு நேற்று நடந்த நிகழ்வை பற்றி சிந்தித்து சிரித்துக்கொண்டிருந்தான்.
அவனவள் ரோகிணிக்கு சரமாரியாக செருப்படி பதில் கொடுத்ததும் ‘ஐய்யோ என் மூன் சோ ஸ்வீட்’ என தனக்குள்ளே கொஞ்சிய ஆடவன் வழக்கம் போல் தூரத்திலிருந்து அவளை பார்த்து ரசித்திருந்தான்.
அவள் தன் பணியை முடிக்கும் தருவாய் வரையிலும், குளம்பியகத்தில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்திருந்த ஜித்துவின் முன்பு நிழலாடியது.
அதை உணர்ந்து அவன் நிமிர்வதற்குள் அவனது முகத்தின் முன்பு யாரோ ஒருவர் சொடக்கிட்டார்கள்.
‘யாருடா அது நம்மளை சொடக்குப்போட்டு கூப்பிடறது?’ என நெற்றி சுருங்க கோபத்துடன் தலையை உயர்த்திய ஜித்தேந்திரனின் விழிகள் வியப்பில் விரிந்தது.
முகிழ்மதி 91:

தன் முன்னே ஒருவர் விரல் சொடக்கிட்டதும் சிறிது கனலுடனே நிமிர்ந்துப்பார்த்த ஜித்தேந்திரன் அங்கு நின்றிருந்த பெண்ணவளை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவனது சண்டக்கோழி…அதுவும் அவனிற்கு மிக அண்மையில்…நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் தித்தித்தது.
இதுவரை அவளை தூரத்திலிருந்து மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த ஆடவன் தன் முன்பே நின்றிருந்தவளின் விம்பத்தை கண்டதும் வியப்பில் விழிகளை விரித்தான்.
அவனிற்குள் அப்படியொரு பரவசம்…
‘மூன்’ என அவனது இதயமெல்லாம் சந்தோஷ கூக்குரலிட்டு படபடக்க…
அவனது உடலெங்கும் புது இரத்தம் பாய்ச்சியது போல் குதூகலித்தன.
ஆனால் ஒட்டுமொத்த உற்சாகத்தையும் ஒரே நொடியில் குலைத்தெடுப்பது போல் “யார் நீ?” என மேசையில் தட்டி கேட்டு அவனது இதயத்தை நொறுக்கியிருந்தாள்,அவனது ராட்சசி
‘ஏதே யாரு நானா?’ என பாவமாக அவளை கண்டு விழித்தான்,அந்த காதல் வாலிபன்.
பின்பு அவளிற்காக அவன் மனதிற்குள் உருகிக்கொண்டிருக்க,அவளிற்கோ தான் யாரென்று தெரியவில்லை என்றால் அவனிற்கு எப்படி இருக்கும்?
அவனிற்கு ஒரு மாதிரி இதயம் வெடிப்பது போல் இருக்க,அவனை மேலும் சிதறடிக்கும் விதமாக “யாருடா நீ?கொஞ்ச நாளா இவளை நீ ஃபாலோ பண்ணறீயாம்?பெரிய மன்மதனா நீ?இல்லை ரோமியோவா?ஹு தி ஹெல் ஆர் யூ மேன்?” என ஒரு வித சிடுசிடுப்புடன் கேட்டு அவளருகே இருந்த மீனுவை சுட்டிக்காட்டி கேட்டவளின் வெண்ணிற முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
‘ஏதே இவளை ஃபாலோ பண்ணறானா?யாருறா இவ?’ என்பது போல் அப்போது தான் அவளருகே நின்றிருந்த மீனுவையே பார்த்தான்.
அவளின் மீது அவனின் விழிகள் கூர்மையாக படிந்ததும்,அதில் மிரண்ட மீனு “ஹே மதி…பிரச்சனை வேணாம்…வாடி போகலாம்” என படபடப்புடன் அவளின் கைப்பிடித்து இழுக்க,
சட்டென அவளிடம் திரும்பிய சந்திரமதி “ஹே சும்மா இருடி…இந்த மாதிரி ஆம்பளைங்களை எல்லாம் சும்மாவே விடக்கூடாது…நீ அமைதியா இரு…நான் கேட்கிறேன்” என தோழியை அதட்டிவிட்டு அவனிடம் திரும்பிய சந்திரமதி “ஹலோ சார்…உங்களை தான் கேட்கிறேன்?எதுக்கு இவளை ஃபாலோ பண்ணறீங்க?பார்க்க பெரிய இடத்து பையன் மாதிரி டிப்டாப்பா இருக்கீங்க?உங்க வீட்டுலே சொல்லி வளர்க்கலையா இப்படி பொண்ணு பின்னாடி போகக்கூடாதுனு…” என அவள் படபட பட்டாசாய் வெடித்து தள்ள,
‘ம்க்கும்…மேடமுக்கு நான் யாருனு கூட தெரியலை…விளங்கிடும்’ என தொண்டையை செருமி சிகையை வருடிக்கொண்டே அவளை நிமிர்ந்து ஏறிட்ட ஜித்துவிற்கு ஏனோ அவளின் கோபத்தை கூட ரசிக்கவே தோன்றின.
அவளின் சினத்தினால் அவளது நாசியின் நுனியும் கன்னமும் சிவந்திருக்க…
கோபத்தில் அவளின் மார்புக்கூடு ஏறி இறங்கிட,அவளின் வளைவி அணியாத கரம் அவனை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன.
வேலை செய்த களைப்பினால் அவளின் காதோர கூந்தல் வியர்வையில் ஓட்டி அப்படியே காய்ந்து போயிருந்தன…
இப்போதும் அதே வெளுத்துப்போன நீல நிற சுரிதார் அவள் அணிந்திருக்க,அவளின் உடை கசங்கியிருந்தது.
பார்ப்பதற்கு களைந்த ஓவியம் போல் காட்சியளித்த பெண்ணவளை கூட அவனின் விழிகள் வஞ்சனையின்றி ரசித்தன.
காதல் ஒரு பித்தம் என்று யாரோ உளறியதை மெய்ப்பிப்பது போல் இருந்தது,அவனின் வழிசல்!
அவளோ அவனை கண்டப்படி பேசியதை பார்த்து “ஹே சந்து…வேணாம்டி விடு…ஒரு பொண்ணு அழகா இருந்தால் சைட் அடிக்க தான் செய்வாங்க…அதுவுமில்லாமல் அவரும் ஹேண்ட்சமா தான் இருக்காரு…” என தோழியின் செவியினுள் வெட்கத்தோடு முணுமுணுத்தாள் மீனு.
ஓரக் கண்ணால் கருப்பு நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து அம்சமாக இருந்தவனின் தோரணையை ரசித்துக்கொண்டிருந்தன மீனுவின் விழிகள்!
விலுக்கென்று அவளின் புறம் திரும்பிய சந்திரமதி “த்தூ…” என துப்புவது போல் சைகை செய்தவள்,
“நிஜமாவே நான் துப்பறதுக்குள்ள ஓடிப்போயிடுடி…செம்ம காண்டுலே இருக்கேன்…இவ்வளவு நேரம் என்கிட்ட பயந்து நடுங்கினது என்ன?கிட்ட வந்தவுடனே பேசற பேச்சு என்ன?அப்படியே ஓடிப்போயிடு” என அவளிடம் அடிக்குரலில் சீறிக்கொண்டிருந்தாள்.
இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கிசுகிசுத்தது அனைத்தையும் கேட்டிருந்த ஜித்தேந்திரன் ‘அட யாரும்மா நீ?உன்னை நான் எதுக்கு பார்க்கணும்?இதிலே என்னை பார்த்து வெட்கம் வேற படுதே இந்த பொண்ணு…காட்’ என மீனுவை பார்த்தப்படி நெற்றிப்பொட்டில் ஒற்றை விரல் வைத்து தட்டிக் கொண்டான்.
சில கணங்கள் வரை தோழிகளின் உரையாடலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஜித்து ‘இதுக்கு மேலே முடியாதுடா சாமி’ என தன் முன்னே விரித்திருந்த மடிக்கணினியை மூடிவிட்டு “ஹலோ மிஸ் சண்டைக்கோழி அன்ட் மிஸ் அபிதா குஜலாம்பாள்…இங்க ஒருத்தன் இருக்கேன்…நான் பேசறதையும் கொஞ்சம் கேட்கறீங்களா?” என மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டிக்கொண்டு இதழோரம் பூத்த புன்னகையுடன் கேட்க,
அதன்பிறகே தோழிகள் இருவரின் விழிகளும் ஆடவனின் புறமாக திரும்பின.
அவனை பார்த்ததும் மீனுவின் விழிகள் மின்னியதை கண்ட ஜித்து ‘இது சரிவராது’ என தலையாட்டியவன் “மிஸ் இரண்டு பேரும் கொஞ்சம் முன்னாடி உட்காருறீங்களா?” என தனக்கு முன்பே இருந்த இரண்டு இருக்கையையும் காட்டி சொன்னான்.
அவனது சண்டைக்கோழியோ “ஹலோ மிஸ்டர் நீ சொல்லி நான் உட்காரணுமா?முதல்ல யாரு நீ?” என அவனிடம் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு வர,
மீனுவோ “ஹே வாடி வாடி…உட்காரலாம்..” என தோழியை நகர்த்தி தள்ள,அவளோ அவ்விடத்திலே தூண் போல் நின்று அவளை திரும்பி ஒரு முறை முறைத்தாள்.
அவ்வளவு தான்?
கப்பென்று அவளின் தோழி அடங்கிவிட,அவளை முறைத்துவிட்டு திரும்பி ஜித்துவை விழிகளால் எரிக்க “மிஸ் சண்டைக்கோழி கண்ணுலே ஃப்யர் விடறதை அப்புறம் பண்ணிக்கலாம்…முதல்ல உட்காரு…நான் யாருனு தெரியலைனு சொன்னீங்கயில்லை…உட்கார்ந்தால் சொல்லறேன்” என இதழ்கடித்து சிரித்தவாறு சொல்ல,
அவளோ “ஏதே சண்டைக்கோழியா?” என அவனிடம் மீண்டும் சண்டையிட ஆயுத்தமாகியவளை “ஹே சந்து உட்காருடி…முதல்ல அவர் என்ன தான் சொல்லறாருனு பார்ப்போம்” என தோழியை தள்ளி சென்று ஒரு வழியாய் இருக்கையில் அமர வைத்தாள்.
சந்திரமதி பயங்கர கடுப்புடன் கொதித்துப்போய் அமர்ந்திருக்க,அவளின் சினத்தை ரசித்தவாறே “ரொம்ப டையர்டா தெரியறீங்க?ஏதாவது முதல்ல சாப்பிடுங்க” என கேட்டுக்கொண்டே ஒற்றை விரலை தூக்கி தூரத்தில் இருந்த குளம்பியக ஊழியனை அழைத்தான்.
அதற்குள் இங்கு சந்திரமதியோ “மிஸ்டர் இங்க என்ன நாங்க மாப்பிள்ளை பார்க்கவா வந்திருக்கோம்?எங்களை உபசரிச்சிட்டு இருக்கீங்க” என கடுப்பை விழுங்கிக்கொண்டு அவனை பார்க்க,
அவனோ மனதிற்குள் ‘இல்லை பொண்ணு பார்க்க வந்தேன்…இதை வெளிய சொன்னால் அடிச்சாலும் அடிச்சிடுவாள்…அடக்கியே வாசிப்போம்’ என மனதிற்குள் எண்ணிக்கொண்டு “உங்க முகத்தை பார்த்தாலே பயங்கர பசியோட இருக்கீங்கனு தெரியுது…பசியோடு என்ன பேசினாலும் கோபம் தான் வரும்…முதல்ல சாப்பிடுங்க…பிறகு பேசிக்கலாம்” என தணிந்தக் குரலில் கூறினான்.
அந்த ஊழியன் அருகே வந்ததும் “என்ன வேணும் உங்களுக்கு?” என இரு பெண்களையும் பார்த்து கேட்க,
சந்திரமதி அழுத்தமாக கைகள் கட்டி எங்கோ பார்த்தப் படி அமர்ந்திருக்க,ஒரு பெருமூச்சுடன் மீனுவை பார்த்தான்.
அவளோ தனக்கு பிடித்தமான உணவை சொல்ல,அவளை திரும்பி சந்திரமதி முறைக்க “சும்மா சும்மா முறைக்காதேடி…அவரை பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுது” என அசடுவழிய சொல்ல,
உடனே அவனை திரும்பி ஏறிட்டவளின் விழிகள் அவனை பாதாதி கேசம் வரை ஆராய்ந்தன.
அப்போது தான் அவளின் சிந்தையில் ஒன்று உறைக்க ‘இவன்…இவன்…’ என தனக்குள்ளே ஆழ்ந்து யோசித்தவளிற்கு சட்டென மூளை பளீச்சிட்டது.
அதுவரை அவனின் முகத்தை அவள் சரியாக கவனித்திருக்கவில்லை.
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது போல் மீனு தன்னை ஒருவன் வெகு நாட்களாக பின்தொடர்வதாக பயத்துடன் தெரிவிக்கவும்,அவனை ஒரு கை பார்க்கும் நோக்கத்துடன் வந்திருந்தாள்.
இப்போது தான் அவனின் முகத்தை ஆழ்ந்து கவனித்தவளிற்கு அவன் யார் என்பது புலப்பட்டது.
‘அட ஆமா…இது நம்ப அத்தானோட தம்பியாச்சே?இவன் எதுக்கு மீனுவை ஃபாலோ பண்ணறான்…ஒரு வேளை அப்படி இருக்காதோ?வேற ஏதாவது ரீசனா இருக்குமோ?’ என தனக்கு தானே உரையாடிக்கொண்டிருந்தவளின் இமைகள் இடுங்கின.
அவள் எண்ணியது போலவே ஜித்து “ஒன் பன்னீர் கட்லெட்…ஒன் சிக்கன் ரோல் அன்ட் தென் ஒன் ஐசுடு லேட்டே…ஒன் ஃப்ரேப்பேசீனோ வித் க்ரீம்?” என அவளிற்கு விருப்பமான உணவுகளை ஊழியனிடம் எடுத்து வரும்படி உத்திரவிட்டுக் கொண்டிருந்தான்.
‘இதெல்லாம் என்னோட ஃபேவரைட்டாச்சே?இவனுக்கு எப்படி?’ என குழப்பமாய் அவனை அவள் பார்த்திருக்கும் போதே அவர்களின் புறம் திரும்பியவன் “எஸ்…இப்போ சொல்லுங்க” என இருகரத்தையும் தேய்த்துவிட்டவன் மடிக்கணினியை எடுத்து பையினுள் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
அதற்குள் “நீங்க அத்தானோட தம்பி தானே?” என சந்தேகம் நீங்காத குரலில் அவள் கேட்க,
அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி “அத்தான்…” என கேலியாய் கேட்டவன் “ஒரு வழியாய் கண்டுப்பிடிச்சிட்டே போலே…எஸ் நான் ஜித்தேந்திர பூபதி தான்” என்றான் சிரித்துக்கொண்டே…
இதுவரை அவனது வசீகர புன்னகையில் தடுக்கி விழாத நபர்கள் என்பதே இல்லை.
அவனின் புன்னகையில் மீனு மயங்கிட,சந்திரமதி மட்டும் விறைப்பாய் அமர்ந்து உணர்ச்சியற்று அவனை பார்த்திருந்தாள்.
“ஆமா…இங்க என்ன செய்யறீங்க?எதுக்காக மீனுவை…” என அவள் கேட்கும் போதே அவளின் முன்பு ஒற்றை கைநீட்டி தடுத்து நிறுத்திய ஜித்து “ஒரு குட்டி திருத்தம்…நான் இங்க அடிக்கடி வர்றது உண்மை தான்…பட் இவங்களுங்காக வரலை” என மீனுவை சுட்டிக்காட்டி சொன்னான்.
உடனே மீனுவின் முகம் வாடிவிட “உங்களுக்கு ஏமாற்றமா தான் இருக்கும்…பட் சாரி சிஸ்டர்” என பட்டென ‘சிஸ்டர்’ என்று சொல்லி அவளது குட்டி இதயத்தை உடைத்துவிட்டான்.
அவளோ ‘ஐய்யோ…இப்படி அழகா இருந்த ஒரு பையனும் என்னை தங்கச்சி சொல்லிட்டானே’ என உள்ளுக்குள் குமுறி மானசீகமாக நெஞ்சில் குத்திக்கொண்டாள்.
அவனின் பேச்சை கேட்டு சந்திரமதியின் இமைகள் இடுங்கிட ‘அப்போ’ என்பது போல் அவள் பார்த்த பார்வையில் அனல் தெறிக்காத குறை தான்!
‘ஹப்பா…பேருலே மட்டும் தான் மூன் இருக்கு…கண்ணுலே சன் தான் குடியிருக்காரு…நம்ப ஆளு கொஞ்சம் டேன்ஜரஸ் போலே…ஜித்து பீ வேர்’ என புலம்பி தன்னை தானே எச்சரித்து சுதாரித்தவன் “நான் என்னோட க்ளையண்டை பார்க்க தான் இங்க அடிக்கடி வர்றேன் சந்திரமதி…தே ஆல் லவ் திஸ் பிளேஸ்…உன்னையும் இங்க நான் முன்னாடியே பார்த்திருக்கேன்…கூப்பிட்டு பேசலாம்னு நினைப்பேன்…பட் உன்னை தொந்தரவு பண்ண வேணாம்னு விட்டுட்டேன்…அதை தான் இவங்க தப்பா புரிஞ்சிருக்காங்கனு நினைக்கிறேன்” என மீனுவை சுட்டிக்காட்டி அவள் நம்பும் விதமாக ஒரு காரணத்தை கோர்த்து கூற,
அவளோ அப்போதும் “நிஜமாவா?” என நம்பாமல் கேட்டவளின் விழிகள் கூர்மையாக அவனை துளைத்திருந்தது.
அவளது பழுப்பு நிற கண்களின் விழி வீச்சில் அவனின் இதயம் தடதடத்திட ‘நம்ப ஆளு இவ்வளவு புத்திசாலியா இருக்க வேணாம்’ என தனக்குள்ளே நொடித்த ஆடவன் “எஸ் இட்ஸ் ட்ரூ…க்ளையண்ட்ஸுக்கு இந்த அம்பியென்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு…எனக்கும் இந்த பிளேஸ் ரொம்ப பிடிக்கும்…சோ மீட்டிங் முடிச்சிட்டு இங்கியே உட்கார்ந்திட்டேன்…” என சொல்லிக்கொண்டிருந்த நேரம் அவன் உத்தரவிட்ட உணவுகள் மேசைக்கு வந்துவிட “ஐ ஆல்சோ லைக் திஸ் காஃபி…இட்ஸ் வெர்ரி கிரேட்” என பீங்கான் குவளையை எடுத்து அவளின் முன்பு காட்டினான்.
அவள் ஓரளவு நம்பி சமாதானமாகினாலும் மேசையின் மீது பரப்பி வைக்கப்பட்டிருந்த அவளிற்கு பிடித்தமான உணவுகள் மனதை இடிக்க,அவனோ அதையும் சமாளிக்கும் விதமாக “உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை…சோ எனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணியிருக்கேன்…ஹேவ் இட்…” என தட்டை அவளின் புறம் தள்ளினான்.
அவள் அதனை தீண்டாமல் இருக்கவும் “உனக்கு பிடிக்கலைனா விடு…வேற ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” என இலகுவான குரலில் கேட்க,
அவளோ அதற்கு மேல் முரண்டுப் பிடிக்க விரும்பாமல் அவன் கொடுத்ததை வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.
அவன் அவளது தங்கையின் குடும்பத்து ஆள் என்பதும் அவள் இளகியதற்கு மற்றொரு காரணம்!
தன்னவள் சாப்பிட ஆரம்பித்ததும்,ஜித்தேந்திரனின் இதழ்கள் விரிய,அவன் குளம்பியை ருசிக்க தொடங்கினான்.
மீனுவிற்கோ அவர்கள் பேசும் விதத்தில் இருந்தே இருவரும் உறவினர்கள் என்று புரிந்துப்போனது.
அத்தோடு அவன் வாடிக்கையாளரை சந்திக்க வருவதாக தெரிவித்ததை அவளால் நம்ப முடியவில்லை.
ஏனெனில்,அவனது விழிகளில் ஆராய்ச்சி உணர்வை மீறிய ஒரு உணர்வை அவள் கண்டிக்கிருக்கிறாள்.
அது நிச்சயம் காதல் தான் என்று அவளால் அடித்து கூற முடியும்.
அவன் தன்னை பார்க்கவில்லை என்றால் என யோசிக்கும் போதே அவளின் அருகே அமர்ந்திருந்த தோழியை அளவிட்டது அவள் விழிகள்!
எந்தவித அலங்காரமும் இல்லாமலே பேரழகியாக திகழ்ந்த நண்பியை பார்த்தவள் ‘ஓ…பயப்புள்ளே தன்னோட மச்சினிச்சுக்கு ரூட்டு விடுதுப்போலே…ஹும்…நான் அப்போவே நினைச்சேன்…ஒரு ஹேண்ட்சம் பாய் நம்மை எப்படி பார்ப்பான்னு…இப்போ தானே புரியுது…சரி விடு மீனு நமக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான்’ என ஒரு பெருமூச்சுடன் அலுத்துக்கொண்டே தனக்கு பிடித்த பர்கரை சோகத்துடன் சாப்பிட ஆரம்பித்தாள்.
ஆனால் சந்திரமதியின் மனதிலோ பல விதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.
அவளை அவன் பார்த்திருக்கிறான் என்றால்,அவள் இங்கு வேலை செய்வதையும் அவன் அறிந்து வைத்திருப்பான்.
தான் இங்கு வேலை செய்வதை முகிழ் மற்றும் வீரிடம் கூறியிருப்பானோ?
அவர்கள் இருவருக்கும் இது தெரிந்தால் வருந்துவார்களே என்றெண்ணி அவள் கவலையுற்றாள்.
அதனால் ஒரு வித குழப்பத்துடனே கத்தியால் சேன்ட்விச்சை பாதியாக வெட்டி வேறொரு தட்டில் வைத்தாள்.
அவன் ‘என்ன செய்யறாள்?’ என புருவம் உயர்த்தி பார்க்க,
அவளோ “இல்லை எனக்கு பாதி போதும்…சோ ஹாப் ஹாப் ஷேர் பண்ணிக்கலாம்…இந்தாங்க” என தட்டை அவன் புறமாக நகர்த்தினாள்.
அதற்கே அவனிற்கு உச்சிக்குளிர்ந்துவிட்டது.
‘பார்றா இப்போவே என் ஆளு எனக்கு பாதி பங்கு தர்றாள்…இட்ஸ் கெட்டிங் இன்ட்ரெஸ்டிங்’ என உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான் ஆடவன்.
ஆயினும்,அவளிடமிருந்து உணவை பெற்றுக் கொள்ளாமல் அவளின் பசியறிந்து “எனக்கு வேணாம் சந்திரமதி…இது உங்க இரண்டு பேருக்காக ஆர்டர் பண்ணது…ரொம்ப பசியிலே இருக்கேன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது…இதுக்கு மேலே வெளிய எங்கப்போய் சாப்பிடுவீங்க…இங்கயே டின்னர் முடிச்சிட்டு கிளம்புங்க…எனக்காக வீட்டுலே அம்மா காத்திட்டு இருப்பாங்க…நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன்” என்று ஆதுரத்துடன் மொழிய,ஏனோ அவனது அக்கறையும் மென்மையும் அவளின் இதயத்தை சிறிது அசைத்துப் பார்த்தன.
ஆயினும்,அவளின் மனதை இரும்பாக்கிக்கொண்டு “இட்ஸ் ஓகே…எனக்கு பாதி போதும்” என தோழியை நோக்கி அந்த தட்டை தள்ளிவிட,
அவளோ ‘அடியே நான் எவ்வளவு சாப்பிடறது?’ என பீதியுடன் வயிற்றை நீவிக்கொள்ள,
இவளோ அதை யாவும் கண்டுக் கொள்ளாமல் மீதி பாதி உணவை உட்கொள்ள ஆரம்பித்தாள்.
ஜித்தேந்திரனிற்கு அவளின் செயல் ஒரு மாதிரியாக இருந்தாலும் ‘சரி ஃபர்ஸ்ட் டைம் தானே’ என தன்னை தானே தேற்றிக்கொண்டு கொட்டை வடிநீரை உறிஞ்சியப்படி அவளை பார்த்திருந்தான்.
அவள் சேன்ட்விச்சை கடித்து உண்ணும் போது உருகிய பாலாடைக்கட்டி அவளின் இதழோரம் ஒட்டிக்கொள்ள,அதைப் பார்த்தவுடன் அவனின் கரம் சட்டென அதனை துடைத்துவிட எழுந்துவிட்டது.
அதன்பிறகே சூழ்நிலை உறைக்க ‘காட்’ என அதே கையால் கேசத்தை அழுந்தக்கோதி கொண்டான்.
அவளோ அவன் தூக்கிய கரத்தை அவதானித்திருந்ததால் ‘என்ன?’ என புருவம் உயர்த்தி கேட்க,
அவனோ தன் உணர்வுகளை அடக்கி கண்ணாலே அவளின் இதழை சுட்டிக்காட்டினான்.
அவன் அவளின் இதழை சுட்டிக்காட்டியதும் பாவையவள் முறைக்க “ஹே இரு..எதுக்கு இப்போ முறைக்கிறே?உன் லிப்ஸிலே சீஸ் ஒட்டியிருக்கு…அதை துடைக்க சொன்னேன்” என அவசரமாக மொழிந்து மெல்லிதழ் தாளை எடுத்து அவளிடம் நீட்ட,
“ஓ.. தேங்க்ஸ்” என்றுரைத்து அவன் கொடுத்த மெல்லிதழ் தாளை வாங்கி கீழே வைத்துவிட்டு வேறொரு தாளை எடுத்து இதழை துடைத்தாள்.
‘சரியான திமிருப்புடிச்சவே…இருடி…இன்னும் எத்தனை நாளைக்கு இதெல்லாம்னு பார்க்கறேன்…உன்கிட்டயிருந்து கிரீன் சிக்னல் மட்டும் வரட்டும்…அதுக்கு பிறகு என் லிப்ஸ் தான் உனக்கு டிஸ்ஸு’ என தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டான்.
அச்சமயம் மீனுவிற்கு தாம் அங்கு இருப்பது அதிகப்படி என்று தோன்றியதால் “நான் வாஷ்ரூம் போயிட்டு வர்றேன்” என தோழியிடம் கிசுகிசுத்தவள்,நாசூக்காக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
முகிழ்மதி 92:
அவள் அங்கிருந்து சென்றதும் அதற்காகவே காத்திருந்தாற் போன்று “என் சிஸ்டர் எப்படி இருக்காள்?” என தன் சகோதரியை பற்றி விசாரிக்க,
அவனோ “ஷீ இஸ் வெர்ரி ஃபைன்…அண்ணா அவங்களை நல்லா பார்த்துக்கிறாங்க” என அவளின் மனதை ஆறுதலடைய வைத்தான்.
ஆனால் அவளோ “என்னை நீங்க பார்த்திருக்கீங்கனா நான் இங்க வேலை செய்யற விஷயம் உங்களுக்கு தெரியும் தானே?அதை யார்க்கிட்டயாவது சொன்னீங்களா?” என தயக்கத்துடன் கேட்டாள்.
அவளின் முகத்தில் தெரிந்த தவிப்பையும் சங்கடத்தையும் கண்ட ஜித்து “கவலைப்படாதே…நான் யார்க்கிட்டயும் சொல்லலை…நான் இதுவரை எந்த விஷயத்தையும் அண்ணாகிட்ட மறைச்சது இல்லை…முதல் முறையா உன் விஷயத்தை யாருக்கிட்டயும் சொல்லலை…அது ஏன்னு எனக்கே தெரியலை…பட் நீ ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கேன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது…இல்லைனா இந்த மாதிரி ஒரு இடத்திலே வேலைக்காக வரணும்னு உனக்கு அவசியமே இல்லை” என தன்னவளின் முகத்தில் தெரிந்த கழிவிரக்கத்தை பார்த்தவாறு நிதானமாக உரைத்தான்.
அவள் இங்கு பணி செய்வதை அவன் தெரிந்துக்கொண்டது அவளிற்கு ஒரு விதமான அவமானத்தை கொடுத்தன.
ஏனெனில்,அவர்கள் இருவரும் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் தான் பேசியிருக்கிறார்கள்.
அதன்பிறகு ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் இருவரும் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
அவ்வளவு ஏன்?
திருமண நாள் அன்று கோவிலில் அவன் பேசிய பேச்சுக்கள் இன்று வரை அவள் மறக்கவில்லை.
அப்படியெல்லாம் தன்னை அளவுக்கதிமாக வெறுப்பவன் இன்று இப்படி தன்னிடம் தன்மையாக நடந்துக்கொள்வதற்கு அவளின் இப்போதைய பட்சாத்தாப நிலை தானே காரணம் என்பதால் உண்டான கழிவிரக்கம் அவளுள்!
அதனால் அவளின் முகம் கறுத்து சிவந்தன.
அதேசமயம் தன்னுடைய பாவமான நிலையறிந்தும் அவன் அதற்கு மேல் எவ்வித கேள்வியும் கேட்காமல் இருக்கும் விதமே அவளிற்கு சிறிது ஆறுதலாக இருந்தன.
ஆடவனும் தன்னவளின் உணர்வுகளை அறிந்தாற் போன்று அவளை எதுவும் கேட்கவில்லை.
அச்சமயம் தான் அவளிற்கு ரோகிணி கூறியது நினைவு வர ‘அப்போ இவனை தான் அவ கல்யாணம் பண்ணிக்க இருக்காளா?பாவம் இவன்’ என அவளிற்குள் பரிதாபம் தோன்றிய அதே வேளை அவளால் தன் தங்கைக்கு ஏதேனும் ஆபத்து வந்திடுமோ என அச்சமும் உண்டாகின.
ஆதலால் “உங்களுக்கு மேரேஜ்னு கேள்விப்பட்டேன்…வாழ்த்துக்கள்” என கடமையாக சொல்ல,
அவனோ ‘ம்க்கும் அது ஒண்ணு தான் குறைச்சல்’ என கடுப்புடன் எண்ணி “அது நடந்தால் தானே” என முணுமுணுத்தான்.
அவனது முணுமுணுப்பு அவனருகே அமர்ந்திருந்தவளில் காதில் நன்றாக விழுந்திருக்க,அவளின் நெஞ்சம் பரபரத்தது.
ஏனெனில்,அவளுமே அந்த திருமணம் நடக்கக்கூடாது என்று விரும்புகிறாள்.
ரோகிணி மாதிரியான ஒரு பெண் அந்த வீட்டிற்கு சென்றால்,தங்கையை அவள் ஏதேனும் செய்துவிடுவாளோ என்ற தவிப்பு அவளுள்!
ஆதலால் “என்ன சொன்னீங்க?” என கண்கள் பளீச்சிட அவள் கேட்க,
அவளின் பழுப்பு நிற விழியில் சட்டென தோன்றிய மின்னலை பார்த்த ஆடவனின் இதயம் தடுமாறின.
தன்னை ஈர்த்த அவளின் விழிகளுக்கு முத்தமிட அவனின் உணர்வுகள் துடித்தாலும் இதழை குவித்து ஊதி “நத்திங்…தேங்க்ஸ் சொன்னேன்” என சமாளித்தான்.
உடனே “ஓ…” என்றவளின் முகத்தில் ஏமாற்றம் சூழ்ந்தது.
அவளின் இந்த திடீர் ஏமாற்றத்தின் காரணம் அவன் அறிவானல்லவா?
அன்று மாலை தானே ரோகிணியை அவள் வெளுத்து வாங்கியிருந்தாள்.
அதனால் அவனின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.
சந்திரமதிக்கு ஏனோ உள்ளம் நெருடிக்கொண்டே இருக்க “கேட்கறனேனு தப்பா நினைக்காதீங்க…நிஜமாவே உங்களுக்கு இந்த கல்யாணத்திலே விருப்பமா?அந்த பொண்ணை பத்தி நல்லா விசாரிச்சீங்களா?” என தயக்கத்துடன் வினவினாள்.
தாம் பேசுவது அதிகப்படி என்று தெரியும்.ஆனால் தன்னுடைய சகோதரியின் நிம்மதி முதன்மையாக இருக்க கேட்டிருந்தாள்.
அவனிடம் அப்படியொரு கேள்வி கேட்டதற்கு பிறகே தன்னுடைய அதிகப்பிரசங்கித்தனம் புரிய ‘சாரி’ என வாயை திறந்த பேதையவளின் மனதில் நெருப்பை அள்ளிக் கொட்டும் விதமாக “அட என்ன இப்படி சொல்லறே?ரோகிணி பணக்கார வீட்டுப்பொண்ணா இருந்தாலும் அந்த திமிரு கொஞ்சம் கூட இல்லை…அடக்கம்னா அடக்கம் அப்படியொரு அடக்கம்…பெரியவங்களை ரொம்ப மரியாதை நடத்துவாள்…அதிலே தான் நான் இம்ப்ரைஸாகிட்டேன்…உலகத்திலே அந்த மாதிரி ஒரு பொண்ணை பார்க்கவே முடியாது…ஷீ இஸ் குட் லுக்கிங் அன்ட் வெர்ரி ஸ்வீட் கேரக்டர்” என வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றும் விதமாக சிலாகித்து சொன்னவனின் இதழோரம் ஒரு குறும்பு புன்னகை தவழ்ந்தது.
அவன் நினைத்தது போலவே கடுப்பாகிப்போன சந்திரமதியோ ‘ஏதே ஸ்வீட் கேர்ளா?டேய் அந்த மேனாமினிக்கி ஸ்வீட் கேர்ளாடா லூசுப்பயலே…முன்னப்பின்ன ஸ்வீட் கேர்ளை நீ பார்த்திருக்கியா?’ என அவனது சட்டையைப்பிடித்து கேட்க தூண்டிய உணர்வை அடக்கிக்கொண்டு அவள் மௌனமாக இருக்க,
ஆனால் அவனோ அவளை மேலும் வம்பிழுக்கும் விதமாக “ரோகிணி மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்கணும்னு என் அப்பா கூட சொன்னாரு…அவளாலே யாரு கஷ்டப்பட்டாலும் தாங்கவே முடியாது…எல்லாரையும் சரிசமமாக நடத்துவாள்…அப்படியொரு நல்ல குணம் அவளுக்கு…மத்தவங்களை கஷ்டப்படுத்தறே மாதிரி ஒரு வார்த்தை பேசமாட்டாள்…நிஜமாவே அவ ஒரு ஏஞ்சல் தெரியுமா?” என வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் சொன்னான்.
அவன் கூறிய அனைத்தும் ரோகிணியின் குணங்களுக்கு அப்படியே நேர் எதிர்விதமாக இருந்தது.
ஆனால் அவன் பேச பேச வெண்ணிறத்தில் இருந்த அவளின் மதி முகம் செந்நிறமாய் மாறிக்கொண்டே இருக்க ‘ஏதே ஏஞ்சலா?அதுவும் அவளா கருமம் கருமம்’ என தலையிலடித்துக்கொள்ளாத குறையாக வெதும்பிப்போய் அமர்ந்திருந்தாள்.
‘ஒரு நிமிஷம் உன்னை பாவம்னு நினைச்சேன்டா…பட் இப்போ அவளுக்கு ஏத்த பைத்தியக்காரன் நீ தான்…உன்னையெல்லாம் இனி ஆண்டவனே நினைச்சாலும் காப்பாத்த முடியாது…எப்படியோ போடா’ என முறைத்துக்கொண்டே அவனை மனதிற்குள் சரமாரியாக திட்டினாள்.
அவள் பொருமிக்கொண்டே அமர்ந்திருப்பதை பார்த்தவனிற்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது.
ஆனால் குளம்பியை பருகுவது போல் குவளையை வாயருகே வைத்து இதழ்கடித்து அடக்கினான்.
சந்திரமதிக்கோ ரோகிணியை பற்றி பெருமையாக பேசியவனின் முகத்திலே ஓங்கி ஒரு குத்துவிட வேண்டும் போல் இருந்தது.
அதனால் கடுப்புடன் “உங்களுக்கு என்னோட ஆழ்ந்த இரங்கல்…” என சொல்லப்போனவள்,
இறுதி நேரத்தில் சுதாரித்து “மனமார்ந்த வாழ்த்துக்கள்…அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொ…ம்ப நல்லாயிருங்க” என வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டே வாழ்த்தினாள்.
அந்த கள்ளனோ எதுவும் பேசாமல் அறியாதவன் போலவே “நன்றிங்க” என சிரித்தப்படி சொல்ல,
அவன் சிரிப்பை பார்த்த பெண்ணவள் ‘இப்போவே நல்ல சிரிச்சுக்கோ…கல்யாணத்துக்கு அப்புறம் உன்னாலே சிரிக்கவேமுடியாது’ என ஒரு பக்கம் அவனை நினைத்து பாவமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ‘இப்படியொரு இளிச்சவாயினுக்கு இது தேவை தான்’ என அலட்சியமாய் தோளை குலுக்கிக்கொண்டாள்.
அப்போது சரியாக அவளுடைய தோழி மீனு அங்கு வர “சரி நாங்க கிளம்பிறோம்” என விடைப்பெற்று தனது தோழியை அழைத்துக்கொண்டு விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
“நான் வேணா டிராப் பண்ணட்டுமா?” என அவன் கேட்டதற்கு “நோ தேங்க்ஸ்…நீங்க போய் உங்க ஃபீயான்சிய சாரி சாரி உங்க ஏஞ்சலை போய் பாருங்க…பாவம் அந்த ஸ்வீட் கேர்ள் உங்களுக்காக காத்திட்டு இருப்பாங்க” என சிரித்துக்கொண்டே உச்சக்கட்ட எரிச்சலுடன் சொல்லிவிட்டு சென்றவளின் முதுகை பார்த்தவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
அவள் அங்கிருந்து சென்றதும் தன்னை மீறி வெடித்து சிரித்த ஆடவனை பலரும் விசித்திரமாக பார்க்க “சாரி” என சிகையை அழுந்தக்கோதியவனோ ‘சோ ஸ்வீட்’ என அவளை மனதிற்குள் கொஞ்சியப்படி மேசையை பார்த்தவன்,அப்போது தான் அவள் வைத்துவிட்டு சென்ற பணத்தை கவனித்தான்.
அவளும் அவளின் தோழியும் உண்ட உணவிற்கான பணம் சரியாக வைக்கப்பட்டிருந்தது.
‘சரியான ரோஷாக்காரி தான் நம்ப ஆளு’ என அவள் வைத்துவிட்டு சென்ற பணத்தை எடுத்து கால்சராயினுள் வைத்தவன், தன்னுடைய காசை கொடுத்தான்.
பின்பு தனது பையுடன் வெளியே வந்த ஜித்து அங்கு நின்றிருந்த பெண்கள் இருவரையும் கண்டான்.
அவ்விடத்தில் மீனு “ஏன் மதி இப்படியொரு ஹேண்ட்சமான ஆளு உன் சொந்தக்காரன்னு சொல்லவே இல்லை” என ஆதங்கமாய் கேட்க,
“வேணாம் மீனு…வாயை மூடிட்டு வா…நானே செம்ம கடுப்பிலே இருக்கேன்” என எரிச்சலுடன் அவள் மிரட்ட,
“ஏன் என்னாச்சு?” என மற்றவள் கேட்க,
“ஹேண்ட்சமா இருந்து என்ன பிரயோஜனம் மண்டைக்குள்ள களிமண்ணு தான் இருக்கு…மூளையே இல்லாத லூசு பையன்…” என பற்களை நறநறவென கடித்தப்படி அவனை கண்டப்படி அவள் அவன் செவியில் விழ,
‘அடிப்பாவி…லூசு பையனா?என் மூளைக்குள்ள களிமண்ணு இருக்கா?அது சரி’ என அவன் தலையாட்டி போலியாய் சலித்துக்கொள்ள,
அவள் இன்னும் தோழியிடம் அவனை வசைப்பாடிக்கொண்டே நடந்து செல்ல,அவர்கள் இருவரின் குரல் சிறிது சிறிதாக தேய்ந்து மறைந்தது.
‘இந்த சண்டைக்கோழிய வைச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேனோ?’ என பெருமூச்சு விட்டவன்,தன் முன்னே வந்து நின்ற வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.
தனக்காக வாகனத்தை எடுத்து வந்த விடுதி பணியாளனிடம் “தேங்க்ஸ் ப்ரோ” என முறுவலித்தப்படி நன்றியுரைத்துவிட்டு வண்டியை ஓட்டி சென்றவனின் இதழ்களில் உருவான புன்னகை அதன்பிறகு வாடவே இல்லை.
நேற்று நடந்த அந்த நிகழ்வை எண்ணியே அவன் மெத்தையில் படுத்தவாக்கில் சிரித்துக்கொண்டிருந்தான்.
முதல் நாள் உரையாடலே அவனிற்கு வெகு சுவாரசியமாய் இருக்க,அவனது எதிர்காலம் மிகவும் மகிழ்ச்சியாய் அமையும் என்று அவன் எண்ணினான்.
‘என் மூனுக்கு பயங்கர கோபம் வருதே…பட் அதுவும் நல்லா தான் இருக்கு’ என்றெண்ணியவனிற்கு அவள் ‘ஆழ்ந்த இரங்கல்’ என உரைத்தவிதத்தை இப்போது எண்ணினாலும் சத்தமிட்டு சிரிக்க தோன்றின.
அதனால் அவன் சத்தமிட்டு சிரிக்க, ஏதேச்சையாக அந்த வழியே வந்த தமயந்தியோ திடுக்கிட்டு ‘அட இந்த அண்ணாவுக்கு என்னாச்சு?இப்படி சிரிக்கிறாரு’ என மெதுவாக அவனறையை திறந்து பார்க்க,
அவன் தனியாக சிரிப்பதை கண்டுவிட்டு ‘அடே லூசே…இந்த அண்ணா என்ன தானா சிரிச்சிட்டு இருக்கு…பைத்தியம் ஏதாவது பிடிச்சிருக்குமோ?’ என தலையிலடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.
எதிரே அவளது மூத்த தமையன் வந்துக்கொண்டிருக்க “அண்ணா என்ன தனியா வந்திருக்கீங்க?அண்ணி எங்கே?” என அவள் கேட்டதை கூட பொருட்படுத்தாமல் அவளை கடந்துச்சென்ற தமையனை பார்த்த தமயந்தியோ ‘ஒரு அண்ணா என்னன்னா பைத்தியக்காரன் மாதிரி தனியா சிரிச்சிட்டு இருக்கான்…இன்னொரு அண்ணன் என்னன்னா?பித்து பிடிச்ச மாதிரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் நடந்துப்போறாரு…என்ன தான் நடக்குது இங்கே’ என முணுமுணுத்தவாறு தலையில் கைவைத்து மூடியை பிடித்துக்கொண்டிருக்க,
அச்சமயம் அந்த புறமாக வந்த வானதி ‘இவ என்ன பைத்தியக்காரி மாதிரி தனியா பேசிட்டு இருக்காள்…என்னாச்சு இவளுக்கு?’ என புருவம் சுருக்கியவர் “தமி ரூமிலே போய் படுக்காமல் பைத்தியக்காரி மாதிரி ராத்திரி வேளை வேலைய நின்னு தனியா பேசிட்டு இருக்கே…நேரமாகுது…போய் படுப்போ” என அதட்டல் போட்டார்.
தாயின் குரல் கேட்ட தமயந்தியோ ‘அது சரி என் அண்ணனுங்க டைட்டு…நான் தான் பைத்தியம்’ என தன்னையே நொந்துக்கொண்டு அறையினுள் சென்று படுத்தாள்.
இங்கு தன்னறைக்குள் வந்து படுத்த ரத்தினவேலிற்கோ உறக்கம் என்பதே வரவில்லை.
எப்போதும் நீள்விரிக்கையில் படுப்பவன் அன்று தன் மனையாள் துயில் கொள்ளும் படுக்கையில் விழுந்தான்.
அவன் மெத்தையில் விழுந்ததும் அவனை அப்படியே உள்வாங்கிக்கொண்ட மெத்தை கூட அவளின்றி மூள் படுக்கை போல் தான் இருந்தது.
அவளுடன் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கவில்லை என்றாலும் அவளின் இருப்பே அவனின் ஸ்வாசத்தை நிரப்பின.
ஆனால் இன்றோ அவளின்றி அவனிற்கு மூச்சு முட்டுவது போலிருந்தன.
அவள் தான் தன்னுடைய ஸ்டார் என்று தெரிந்ததிலிருந்தே அவளின் நெருக்கம் வேண்டி அவன் துடித்துக்கொண்டிருந்தான்.
பல விதமான போராட்டங்களுக்கு பிறகு ஒன்றிணைந்த அந்த குருவிக்கூட்டை கலைக்க அவனிற்கு மனம் வரவில்லை.
அத்தோடு மகளை விட்டுக்கொடுப்பதற்கு அவளின் தாயாரும் தயாராகயில்லை.
அவனின் நட்சத்திரமும் அவனுடன் வரும் நிலையில் இல்லை.ஒரு நாளில் பல விதமான அதிர்ச்சிகளை உள்வாங்கியிருந்தாள் காரிகை.
தற்சமயம் அவளின் சிந்தையெங்கும் அவளின் தாயார் மட்டுமே நிரம்பியிருந்தார்.
வேறு யாருடைய நினைவும் அவளிடமில்லை…
அவன் மட்டுமல்ல…வீர்,சந்திரமதி யாருடைய ஞாபகங்களும் அவளிடமில்லை.
தாயின் முந்தானையை பிடித்துத்திரியும் சிறு குழந்தையின் மனநிலையில் அவள் இருந்தாள்.
மருத்துவரிடம் அதைப்பற்றி கேட்டதற்கு “நத்திங் டூ வொர்ரி…ரொம்ப வருஷம் கழிச்சு மறுபடியும் அவங்க அம்மாவை பார்த்ததாலே அவங்க மூளை ஃப்ரீஸ் ஆகியிருக்கும்…இப்போ அவங்க மட்டும் தான் முதன்மையா இருப்பாங்க…சோ அவங்க ரெக்கவராக டைம் கொடுங்க…அவங்க கொஞ்சம் கொஞ்சமா நடப்பு புரிஞ்சு வெளிய வரட்டும்…இதிலே பயப்பட ஒண்ணுமே இல்லை” என அவர் கூறிவிட,வேறுவழியின்றி மனைவியை தனது நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
முகிழ்மதியும் சுற்றம் மறந்து தாயிடமே ஒண்டியிருக்க,அவனிற்கும் வேறு வழியில்லை.
அதனால் அவனுடைய மனையாள் இழந்த மகிழ்ச்சியை அவளின் பிறந்தகத்தின் வழியாக அனுபவிக்கட்டும் என்று விட்டுக்கொடுத்தான்.
ஆனாலும் அவளின்றி உறக்கம் வர மறுக்க,அவனிற்கு அவை கோபத்தை வரவழைத்தன.
அந்த கோபமெல்லாம் விஜயலட்சுமியின் மீது ஆத்திரமாக மாறியது.
அவரால் தான் அனைவருக்கும் இவ்வளவு துயரங்களும் வேதனைகளும்!
அவரை பற்றி நினைக்க நினைக்க அவனுடைய கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின.
அவரை செதில் செதிலாக பிரித்து கொல்லும் அளவு வெறி அவனுள் கனன்றன.