முகிழ்மதி 85,86,87

முகிழ்மதி 85:


 

 

அவளின் மனதை ஈர்த்த ஆடவனது பெயர் ராமன்!

அவன் பெரிய வசதியான குடும்பத்து இளைஞன்…ஆனாலும் அவனிடம் தேவகியை ஈர்த்தது அவனின் வசீகரமோ செல்வமோ அல்ல.

அவளின் மீது அவன் செலுத்திய அன்பும்,அவனது கண்ணியமான குணமும் தான்!

தேவகி பலமுறை அவனை நிராகரித்தும் கஜினி முகமது போல் சோர்வுராமல் அவன் படையெடுத்து வந்த விதமே அவளை கவர்ந்திழுத்திருந்தது.

அன்பிற்காக ஏங்கிய உள்ளத்திற்கு அள்ளி அள்ளி தரக்கூடிய ஒரு காதலன் கிடைத்தால் கசக்குமா என்ன?

அவனின் நேசத்தில் மதி மயங்கிவிட்டாள் அவள்.

கல்லூரி காலம் முடியும் வரையிலும் அவர்களது காதல் கதை தொடர்ந்தது.

அதுவரையிலும் தேவகியை அவன் விரலால் கூட தீண்டியதில்லை.

அப்படியிருந்தப் போதும் ‘கண்ணம்மா…கண்ணம்மா…’ என அவளுள் அவன் உருகிய விதம் அவளின் இதயத்தை குழைய வைத்தன.

இளங்கலை கல்வி முடிந்து அவள் சிலை வடிவமைப்பில் முதுகலை பட்டயப்படிப்பை தொடரப்போவதாக தெரிவிக்க “தாராளமா படி கண்ணம்மா…நானும் என் தாத்தா சொன்ன மாதிரி பிசினஸ் எடுத்து நடத்தறேன்…நீ படிச்சு முடிச்சவுடனே நானே உங்க வீட்டுலே வந்து பேசறேன்…நீ அடிக்கடி எனக்கு கடிதம் எழுது” என அவளின் நெற்றியில் முத்தமிட்டு விடைப்பெற்றிருந்தான்.

அது தான் அவன் அவளிற்கு கொடுத்த முதல் முத்தம்!

அவன் கொடுத்த அந்த முத்தத்தில் நிரம்பியிருந்த நேசத்தில் அவளின் மேனி சிலிர்த்தது.

அதனால் விரைவாக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது ராமனிடம் அடைக்கலம் புகுந்துவிட அந்த பெண்ணவளின் உள்ளம் துடித்தன.

இந்நிலையில் தேவகியின் வாழ்வில் சுசீலாவின் வசைவை தவிர மீதியனைத்தும் சுமூகமாக சென்றுக்கொண்டிருந்தன.

அவள் மேலே படிக்கப்போவதாக தெரிவித்ததும் சுசீலா சலங்கை கட்டி ஆடத் தொடங்கிவிட்டார்.

பின்பு எந்த வித செலவும் செய்ய தேவையில்லை என அவள் கூறியப்பிறகே “சரி என்னவோ பண்ணித்தொலை…இந்த வயசுலே கல்யாணம் கட்டிக்கிட்டு போறதை விட்டுட்டு என்ன படிப்பு வேண்டி கிடக்கோ?” என முனகிக்கொண்டே வேறு வேலையைப் பார்க்க தொங்கிவிட்டார்.

அவருக்கும் தற்சமயம் அவளிற்கு திருமணம் செய்வதில் விருப்பமில்லை.

அவளிற்கு திருமணம் என்றால் சீர்வரிசை யெல்லாம் நிறைய செய்ய வேண்டும் என்பதால் ‘நாம் தப்பித்தால் போதும்’ என்ற மனநிலையில் இருந்துக்கொண்டார்.

அவரின் எண்ணம் அறிந்து தேவகி விரக்தியாக சிரித்துக்கொண்டாள்.

அவள் முதுகலை பட்டயப் படிப்பில் சேர்ந்த சமயம் மீண்டும் வாசுகியின் வாழ்வில் சிக்கல்!

இம்முறை அதிக பணமும் நகையும் வேண்டும் என்று அவளை விரட்டி விட்டிருந்தான்,அந்த அரக்கன்.

போன முறை போல் அல்லாமல் வாசுகியின் உடலில் மட்டுமில்லை…ஏழு வயது சிறாரான வீரின் மேனியிலும் திட்டு திட்டாக காயங்கள்!

அதைக் கண்டவுடன் அவளிற்கே மனம் ஆறவில்லை.

“வீர் செல்லம்…என்னாடா கண்ணா?” என நா தழுதழுக்க தேவகி கேட்டதும் தான் தாமதம் “தேவகி அம்மா…அப்பா…அப்பா அடிச்சிட்டாரு…” என அழுதுக்கொண்டே அவளிடம் ஓடி வந்தவனை வாரியணைத்துக்கொண்டவளின் கண்ணிலும் கண்ணீர்!

வாசுகியோ “அம்மா இதுக்கு மேலே என்னாலே அந்த ஆளு கூட முடியாதும்மா…என்னைய அடிச்சா பரவாயில்லை…புள்ளைய போட்டு அந்த அடி அடிக்கிறான்…குடிச்சிட்டு வந்தால் அந்த ஆளுக்கு சுயநினைவே இல்லை…நான் இனி அங்க போகமாட்டேன்…என்னாலே முடியலை” என தரையில் மடங்கி அமர்ந்து கதறியழுத மகளை பார்த்த பெற்றோருக்கும் மனம் பிசைந்தது.

மகளின் கண்ணீர் கண்டப்பிறகு ஞானசேகரனால் பொறுக்க முடியவில்லை.

அதனால் நேரே அவனிடம் சென்று நியாயம் கேட்க கிளம்ப “கொஞ்சம் சும்மா கிடங்க…நாளை பின்ன நம்ப புள்ளை அங்கப்போய் வாழணுமில்லை…நீங்க பாட்டுக்கு ஏதாவது பேசிட்டு வந்திட்டால் புள்ளைய எப்படி அங்க வாழ வைக்கிறது” என அப்போதும் அந்த கொடூரனுக்கு ஆதரவாக பேசிய சுசீலாவை அருவருப்புடன் நோக்கினாள் தேவகி.

‘என்ன பெண் இவர்?’ என்று தான் அவளிற்கு தோன்றின.

வாசுகியோ “இனி நான் அங்க போகமாட்டேன்மா…அப்படி போக சொன்னால் நான் செத்திடுவேன்” என்றதும் அங்கிருந்த அனைவரின் உள்ளமும் பதறிப்போனது‌.

எந்த அளவு அவனிடம் அவள் துன்பத்தை அனுபவித்திருந்தால் அவளின் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தைகள் வந்திருக்கும்?

தேவகியோ “அக்கா என்ன பேசறே நீ?” என நெஞ்சம் பதைபதைக்க கேட்க,

சுசீலாவோ “என்னடி பேச்சு இது? இதுக்காக தான் உன்னைய பத்து மாசம் சுமந்து பெத்தானா?” என ஓவென்று ஒப்பாரி வைத்தார்.

அன்றைய நாளில் இருந்து அந்த வீட்டில் தினந்தோறும் நரகம் தான்!

வாசுகியோ எந்நேரமும் எதையோ பறிக்கொடுத்தது போலவே இருக்க,அவளின் எதிர்காலத்தை எண்ணி அவளின் பெற்றோரும் கவலைக்கடலில் மூழ்கிப்போயினர்.

ஆதலால்,அந்த சிறுவனை பார்த்துக்கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பும் தேவகியின் தலையில் விழுந்தது.

அங்கு நடக்கும் எதுவும் புரியாமல் குழம்பி தவித்த குழந்தையும் தேவகியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான்.

அவனின் பிஞ்சு உள்ளம் தந்தையின் மிருக செயலால் மிகவும் பாதிப்புற்றிருந்தது.

அவனிற்குமே தந்தையிடம் போகவே பிடிக்கவில்லை.

அந்த வீட்டில் இருந்துவிடவே அவனும் விருப்பப்பட்டான்.

அதனால் தேவகியிடம் “அம்மா நான் இங்கியே உங்ககூடவே இருக்கேன்…அப்பா மோசம்…அம்மாவையும் என்னையும் அடிக்கிறாரு” என தனிமையில் சொன்னவனின் பேச்சை கேட்டு அவளின் உள்ளம் அவனிற்காக துடித்தன.

முன்பே அவளை ‘தேவகி அம்மா’ என்று தான் அழைப்பான்.

காலப்போக்கில் ‘தேவகி’ என்ற சொல்லும் மருகி ‘அம்மா’ என்றாகிவிட்டது.

அவளும் திருமணமாகமலே ஒரு குழந்தைக்கு அன்னையாகிப்போனாள்.

எவ்வித சுணக்கமும் இல்லாமல் அந்த சிறுவனிற்கு தாயாகவே அனைத்தையும் முன் நின்று செய்தாள்.

மாதங்கள் பல ஓடியும் கூட வாசுகியால் அவளது கணவன் செய்த கொடுமையிலிருந்து மீள முடியவில்லை.

இந்நிலையில் மெதுவாக சுசீலா அவளை கணவன் வீட்டிற்கு அனுப்புவதை பற்றி பேச,தேவகிக்கே கோபம் வந்துவிட்டது.

“பெரியம்மா இதுக்கு மேலேயும் அந்த ஆள் கூட எப்படி நீங்க அக்காவை அனுப்ப நினைக்கிறீங்க?” என சற்று துணிச்சலான குரலில் கேட்க,

“ஏய் நீ வாயை மூடு…உனக்கென்ன தெரியும்‌?நீ பாட்டுக்கு நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு வேற வீட்டுக்கு வாழப்போயிடுவே…என் பொண்ணு மட்டும் கடைசி வரை வாழவெட்டியா வாழணுமா?நீ உன் வேலைய பாரு…போடி” என எடுத்தவுடனே சீறி அவளின் வாயை அடைத்துவிட்டார்.

அப்போதும் கூட பலமுறை அவள் சொல்லிப்பார்த்தும் அவர் கேட்கும் நிலையில் இல்லை.

தன் பேச்சு எடுப்படவில்லை என்றான பிறகு அவளால் என்ன செய்ய முடியும்?

ஞானசேகரன் பேசியும் அவர் கேட்கும் நிலையில் இல்லை.

இம்முறையும் வாசுகியை பேசி சமாதானம் செய்து அங்கு விட்டு வந்திருந்தார்.

அங்கிருந்து செல்வதற்கு முன்பு தோழியிடம் வந்த தேவகி “நீ என்னை மாதிரி இளிச்சவாயா இருக்காதே தேவகி…நீ நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ…யாரை நம்பியும் உன் வாழ்க்கைய ஒப்படைக்காதே…உன் சொந்த காலிலே நில்லு…நான் சொல்லலைனா கூட நீ இதெல்லாம் செய்வேனு எனக்கு தெரியும்…இருந்தாலும் சொல்லணும்னு தோணுச்சு…நல்லாயிருடி” என இறுதியாக அவள் அந்த சொற்களை உதிர்த்துவிட்டு செல்லும் போது அவளின் கண்ணில் உயிர்ப்பே இல்லை.

உயிரற்ற ஒரு பிணம் போல் நடந்து சென்ற தோழியை பார்த்தவளின் நெஞ்சம் ஏனோ பிசைந்தது‌.

ஆயினும் ‘ஒண்ணுமில்லை…ஒண்ணுமில்லை’ என தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்ட தேவகி தன் மனக்குறைகளை எல்லாம் கொட்டி தனது ராமனிற்கு கடிதம் எழுதினாள்.

அவர்களின் காதல்,கடிதம் மூலமாகவே அப்போதும் தொடர்ந்துக்கொண்டிருந்தது.

அவனும் கடிதத்தை பிரித்து படித்துவிட்டு அவளிற்கு ஆறுதலாக சில வார்த்தைகள் எழுதி அனுப்புவான்.

அவனின் அந்த எழுத்துக்கள் தான் அவளை உயிர்ப்புடன் நடமாட வைத்தன.

இந்நிலையில் வாசுகியை புகுந்த வீட்டிற்கு அனுப்பி ஒரு வருடம் கழிந்த நிலையில் அவள் மீண்டும் பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

இம்முறை உயிருடன் அல்ல…உயிரற்ற சடலமாக…!

இனி திரும்பியே வர முடியாத இடத்திற்கு சென்றிருந்தாள் அவள்.

ஆம்,தன் தாயிடம் சொன்னதை செய்து காட்டியிருந்தாள்,அந்த ரோஷக்கார பெண்.

அவள் என்னவோ நிம்மதியாக இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாள்.

ஆனால் யாருமற்ற அனாதை போல் நின்றிருந்தான் அவளின் மகன் வீர்.

அவனை பார்க்க பார்க்க தேவகியின் நெஞ்சம் தாங்கவே முடியவில்லை.

“அக்கா ஏன்கா இப்படி பண்ணே? யாருக்காக இல்லைனாலும் இவனுக்காக யோசிச்சிருக்கலாமேக்கா…” என அவளின் மேல் விழுந்து கதறிய கதறலை கேட்டு அங்கிருந்த உயிரற்ற சுவர்கள் கூட கண்ணீர் சிந்தியிருக்கும்.

சுசீலாவோ “ஐய்யோ தப்புப்பண்ணிட்டனே…நானே என் பொண்ணை கொன்னுட்டனே…” என நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அலறி கத்தினார்.

அந்த சிறு பாலகனோ தாய் தன்னை விட்டு பிரிந்ததை அறிந்தும் அறியாத ஒரு நிலையில் தவித்து நின்றிருந்தான்.

இம்முறையும் அந்த குழந்தையை தேவகி தான் அரவணைத்துக்கொண்டாள்.

ஆனால் அவளின் அரவணைப்பை தனக்கு சாதகமாக்க எண்ணிய அரக்கனோ வாசுகி இறந்த இரண்டே மாதத்தில் தேவகியை பெண் கேட்டு வந்திருந்தான்.

இப்படியொரு ஆடவனை பார்ப்பதற்கு அவளிற்கு அருவருப்பாக இருந்தது.

கூடவே,தன் தோழியாகிய சகோதரியை கொன்றவனின் கழுத்தை நெறித்து கொல்லும் அளவிற்கு அவளிற்கு வெறி இருந்தன.

அதையும் விட ஆத்திரம் அவளின் தாயான சுசீலாவின் மீது இருந்தது.

வாசுகி இறந்த இரண்டாம் நாள் காவல் நிலையத்தில் சுரேந்திரனை பற்றி புகார் கொடுக்கலாம் என்று அவள் உரைத்ததற்கு “அம்மாடி மகராசி…உன் காலிலே விழுந்து கெஞ்சு கேட்டுக்கிறேன்…என் பேரனுக்கு அம்மாயில்லாமல் பண்ணிட்டே…இப்போ அப்பனும் இல்லாமல் பண்ணிடாதேம்மா…தாயே” என அவளின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தவரை பார்த்து “ச்சை” என்றானது தேவகிக்கு!

அத்தோடு அவள் தான் வாசுகியை கொன்றது போல் அவர் பேசிய விதம் அவளின் இதயத்தில் ஊசியால் குத்த ‘எப்படியோ போய் தொலைங்க’ என்ற நிலைக்கு அவரை கடந்துவிட்டாள்.

மற்றவரை வெறுத்து ஒதுக்கினாலும் அவளால் வீரை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

தமக்கைக்கு பின்பு அவனிற்கு தாயாக இருக்க அவள் விரும்பினாள்‌.

ஆனால் அந்த காமூகனோ வீரை தூண்டிலாக வைத்து அவளை சிறைப்பிடிக்க முயன்றான்.

இதற்கு மேலும் பொறுமை காப்பது சரிவராது என்றெண்ணி அவள் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விஷயம் கேள்வியுற்ற அந்த அரக்கனின் குடும்பத்தினர் இரக்கமே இல்லாமல் வீரை நிர்கதியாய் தெருவில் நிறுத்தியிருந்தனர்.

தேவகியோ ‘நல்லது…என் பையனை பார்த்துக்க எனக்கு தெரியும்’ என அவனை தன்னுடன் அழைத்து வந்துவிட்டாள்.

அவளின் நடவடிக்கையை எல்லாம் பார்த்த சுசீலாவிற்கு ஆத்திரம் என்றால் அப்படியொரு ஆத்திரம்!

தன் பேச்சை மீறி அவள் செயல்பட்ட விதத்தில் அவளை கொன்று குவிக்கும் அளவு ஆக்ரோஷம் அவருள் கனன்று கொண்டிருந்தன.

“இப்போ உனக்கு சந்தோஷமாடி?என் பேரனை இப்படி நடுத்தெருவிலே நிறுத்திட்டயில்லை…நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டே…என் வயிறு எரிஞ்சு சொல்லறேன்…நாசமா தான் போவே” என‌ மண்ணை வாரி தூற்றிவிட்டவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் ஞானசேகரன்.

அதில் அதிர்ந்து அவரை பார்க்க “அந்த புள்ளைய எதுக்குடி இப்படி கரிச்சுக்கொட்டறே?அந்த புள்ளை நம்ப பேரனோட நல்லதுக்கு தான் இதெல்லாம் செஞ்சது…அந்த கொலைக்கார குடும்பத்திலே என் பேரன் வளரறதை விட அவன் இங்க அப்பா இல்லாமல் வளரட்டும்…என் பேரனை வளர்க்கிற அளவு எனக்கு உடம்பிலே வலு இருக்கு…அந்த புள்ளைய இனி ஒரு வார்த்தை பேசினே வீட்டை விட்டு துரத்திவிட்டிருவேன்” என ருத்ர மூர்த்தியாய் மாறி கணவர் கர்ஜித்தத்தற்கு பிறகு தான் அவர் அடங்கினார்.

ஆனால் இதுவரை தன்னை கடிந்து கூட பேசியிராத கணவன் அவரை அடித்ததினால் அந்த கோபம் முழுவதும் தேவகியின் புறம் வஞ்சமாக மாறியது.

ஆகையால்,அடுத்து மூன்று வருடத்திற்கு பின்பு ஒருவரை காதலிப்பதாக தேவகி வந்து வீட்டில் சொன்னதும் முதலில் தன் எதிர்ப்பை தெரிவித்தார் சுசீலா.

அதிலும்,ராமன் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என்று தெரிந்ததும் ‘என் பெண்ணோ செத்துப்போயிட்டாள்…இவளுக்கு இப்படியொரு வாழ்வா?’ என வன்மத்துடன் அவளை பழி வாங்க துடித்தார்.

அவள் பல வகையில் போராடியும் ராமனின் தாத்தா அந்த பெரிய மனிதரே தகுதியை விட்டு இறங்கி வந்து பேசியும் கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் ஞானசேகரனே “அவ கிடக்கிறாள்…நீ போய் உன் ஆசைப்படி வாழும்மா” என அவளை ஆசிர்வாதம் செய்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

அவரும் தன் பங்கிற்கு ராமனை பற்றி விசாரித்திருக்க அனைவரும் நல்லவிதமாக கூறியதினால் மகிழ்ச்சியாகவே தலையாட்டிவிட்டார்.

ஆனால் அவளோ “வீரையும் என் கூட கூட்டிட்டு போறேன் பெரியப்பா…ராம் அதுக்கு ஒத்துகிட்டாரு” என வீரையும் தன்னுடனே புகுந்த வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி வேண்டினாள் தேவகி.

வீரை அவளால் பிரிந்திருக்க முடியாது.ஆதலால்,தனது ராமனிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தாள்.

ஆனால் அவளின் இத்தகைய முடிவில் ஞானசேகரனுக்கு சிறிதும் உடன்பாடில்லை.அதனால் அவரோ “அதெல்லாம் வேணாம்மா…அவன் எங்க பேரன் எங்க கூட இருக்கிறது தான் சரி…நீ உன் வாழ்க்கையை போய் வாழும்மா” என முடிவாக கூறிவிட்டார்.

இருப்பினும்,தேவகியால் வீரை யாருக்காகவும் விட்டு தர முடியவில்லை.

அதனால் அவரிடம் மன்றாடி பார்த்தாள்.

சுசீலாவோ இது தான் சந்தர்ப்பம் என்றெண்ணி “ஏய் அவன் என் பேரன்…அவனையெல்லாம் உன்னோட அனுப்ப முடியாது…முதல்ல உன் அப்பா அம்மாவை கொன்னே…அடுத்து என் பொண்ணு…நாளைக்கு என் பேரனுக்கும் உன்னாலே ஏதாவது ஆகிட்டால் என்னாகறது?” என அவளின் மனதை காயப்படுத்தும் நோக்குடனே பேசியவரின் சொற்கள் நினைத்தது போலவே அவளின் நெஞ்சை சென்றுத் தாக்கியது.

ஆயினும்,வீரை அவளது மகனாகவே பாவித்திருக்க,அவனிற்காக பல வகையில் போராடிப்பார்த்தாள்.

சட்ட வழியில் சென்றால் கூட அவளிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காது என்று தெரிந்ததும் அவள் துடித்துப்போனாள்.

பேசாமல் இந்த திருமணத்தை கூட நிறுத்திவிட்டு அவனுடனே இருந்துவிடலாமா? என்று கூட அவளிற்கு தோன்றின.

‘காதலா?மகனா?’ என அவள் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தாள்.

இருப்பினும்,தனக்காக பல வருடங்கள் காத்திருந்து கைதலம் பற்றிய கண்ணாளனின் ஆசையை நிராசையாக்க அவளிற்கு துளியும் விருப்பமில்லை.

அத்துடன் அவனுமே அவளின் மனமறிந்து “கண்ணம்மா கொஞ்ச நாள் போகட்டும்…அதுக்கு பிறகு உன் இஷ்டப்படி வீரை இங்க கூட்டிட்டு வந்திடலாம்…கவலைப்படாதே” என அவளிற்கு ஆறுதலாக கூறி அவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டியிருந்தான்.

திருமணம் நடந்த அன்று அவளை பிரிய முடியாமல் வீர் அழுத அழுகைக்கு அழவே இல்லை.

அவனின் கண்ணீரை கண்டு அவளின் இதயமும் வெடித்து சிதறியது.

அவளுமே விம்மி வெடித்து மகனிற்காக அழ “நீ அழாதேம்மா…சந்தோஷமா வாழு” என ஞானசேகரன் வீரை அழ அழ தரவென இழுத்து சென்றிருந்தார்.

அதைப்பார்த்தவளின் உள்ளமெல்லாம் ஊசியால் குத்துவது போல் வலிக்க,அவளிற்கு தன் நேசத்தின் மூலமாக சமாதானம் கூறி அரவணைத்துக்கொண்டான் ராமன்.

சுசீலா வேண்டா வெறுப்பாக அவளிற்கு ஆசிர்வாதம் செய்திருந்தார்.

திருமணத்திற்கு பின்பு ராமன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.

அவளிற்கு சிறு கவலைகள் கூட அண்ட விடாமல் போற்றி பாதுகாத்தான்.

ராமனிற்கும் குடும்பம் என்று சொல்லிக் கொள்வதற்கு பாட்டனார் ஒருவர் மட்டுமே இருந்தார்‌.

அவருக்கு தேவகியை பார்த்தவுடனே பிடித்துவிட்டது.

அவளது லட்சணம் பொருந்திய முகம்,அன்பான பாங்கு,அவளின் திறமை அனைத்திலும் கவரப்பட்ட அந்த மாமனிதர் தகுதி எதுவும் பாராமல் பேரனிற்கு மணம் முடித்துவிட்டார்.

அத்தோடு அவளின் வல்லமை மற்றும் இலட்சியம் அறிந்துக்கொண்டு,அந்த இலட்சியத்தில் வெற்றி வாகை சூட அவளை ஊக்குவித்தார்.

அவளிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் முன் நின்று செய்துக்கொண்டிருந்தார்.

தன்னை உயிராய் நேசிக்கும் கணவன்,அவளை அன்பாய் பார்த்துக்கொள்ளும் ஒரு குடும்பம் ஒரு பெண்ணிற்கு வேறென்ன வேண்டும்?

தேவகி மகிழ்ச்சியின் உச்சத்தில் நிலையின்றி மிதந்துக்கொண்டிருந்தாள்.

தேவகி இப்போது படிப்பை எல்லாம் முடித்துக்கொண்டு ஒரு பணியில் சேருவதற்கான தகுதியை அடைந்திருந்தாள்.

பின்பு ஒரு பணியிலும் சேர்ந்து சம்பாதிக்க தொடங்கிவிட்டாள்.

அவள் சம்பாதித்த பணத்தை எல்லாம் வீரின் படிப்பிற்காக கொடுக்க ஆரம்பித்தாள்.

அதற்கு அவளின் புகுந்த வீட்டினர் தடையாக இருக்கவில்லை.

அதனால் அவளின் வாழ்வு தெளிந்த நீரோடை போல் அழகாக சென்றிருந்தது.

ஆனால் அவளது இன்பத்தை குலைக்கும் விதமாக அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் கடந்தப்பிறகும் தேவகி கருத்தரிக்கவில்லை.

அதில் அவளிற்கு கவலை அதிகரித்தாலும் ராமனோ “அட விடு கண்ணம்மா…இதுக்கு எதுக்கு வருத்தப்படறே?இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம்ப ஜாலியா இருக்கலாம்…குழந்தை வந்திட்டால் இப்படியெல்லாம் இருக்கமுடியாது…” என அவளை இழுத்து அணைத்து முத்தமிட ஆரம்பிக்கவும்,தேவகியோ அவனின் முத்தத்தில் உலகத்தையே மறந்திருந்தாள்.

இப்படியே நாட்கள் வேகமாக உருண்டோடின.

இடையில் தேவகி வீரையும் பல முறை சந்தித்து வந்திருந்தாள்.அவனை காண அவள் வரும் போதெல்லாம் “அம்மா” என ஓடி வரும் சிறுவனை கண்டு நெஞ்சம் வலிக்கும்.

கூடவே, அவளிற்குள் ஒரு தித்தித்திப்பும் உண்டாகும்.

குழந்தை என்னும் வரத்திற்காக தவமிருக்கும் பெண்களுக்கு மட்டும் தான் ‘அம்மா’ என்பது ஒரு சாதாரண அழைப்பில்ல…அது தாய்மையை உணர வைக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று தெரியும்.

அதனால் அந்த சிறுவனை தன்னுள் வாரியணைத்து கொஞ்சுபவள்,அவனிற்கு வரும்போதெல்லாம் எதையாவது வாங்கி வருவாள்.

அத்தோடு “வீர் எக்காரணத்தை கொண்டும் உன் படிப்பை மட்டும் விட்டறாதே…அது தான் நம்பகூட கடைசி வரைக்கும் வரும்…நல்லா படி…அடுத்த முறை அம்மா நீ கேட்ட மாதிரி ஹீரோ பேனா வாங்கிட்டு வந்து வர்றேன்” என அவனின் சிகையை வருடி நெற்றியில் முத்தம் பதித்தவளை கண்டு சுசீலா “ம்க்கும்” என நொடித்துக்கொண்டார்.

வீரோ “சரிம்மா” என்றவன் அவளின் அருகே குனிந்து “இங்க பாட்டியோட ஒரு தொல்லைம்மா..பொழுதனைக்கும் திட்டிட்டே இருக்காங்க…என்னை உங்ககூடவே கூட்டிட்டு போயிடறீங்களா?” என பாவமாக சொன்னவனை பார்த்த தேவகியின் உள்ளம் சுருக்கென்று தைத்தது.

அவனை அப்போதே அவளுடன் அழைத்து சென்றுவிட அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் பரபரத்தது.

ஆனால் அவனை தன்னுடன் அழைத்து செல்லும் உரிமை அவளிற்கு இல்லையே?

அதனால் அடைந்த தொண்டையை செருமி “இன்னும் கொஞ்ச நாள் தான்டா கண்ணா…அம்மா வந்து உன்னை கூட்டிட்டு போயிடறேன்…சரியா?” என அவனிடம் பொய்யுரைத்தாள்

அந்த பொய்யை மெய்யாக்க அவள் இதயம் தவித்தன.

அதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா என்ற வகையிலும் அவள் ஆராய ஆரம்பித்தாள்‌.

இந்நிலையில் ஒரு நாள் ராமன் அவளிற்காக ஒரு தங்க சலங்கையை வாங்கி வந்து அவளிற்கு பரிசளித்தான்.

தங்கத்தினாலான சலங்கையை கண்டு விழி விரித்த தேவகி “ஏங்க எனக்கு எதுக்கு தங்க கொலுசு?காசு ரொம்ப கூட இருக்குமே” என அவளிற்கு அந்த தங்க கொலுசின் வேலைப்பாடு பிடித்திருந்தாலும் சிறிது சங்கடமும் அவளிற்கு இருந்தன.

ஆனால் அவனோ “காசை பத்தி நீ ஏன் கலலைப்படறே கண்ணம்மா?இது மாதிரி ஆயிரம் என்ன லட்சக்கணக்குலே வாங்க கூட நம்பகிட்ட காசு கொட்டி கிடக்கு..இது உனக்காக நான் ஆர்டர் கொடுத்து வாங்கினது” என சிரித்துக்கொண்டே சொன்னவனை பார்த்து அவள் மெல்லியதாக புன்னகைக்க,

அவளின் புன்னகையில் மதி மயங்கிய ராமனோ “என்னோட தங்கரதமான பொண்டாட்டிக்கு இந்த பரிசு ரொம்ப அழகா இருக்கு” என கிறக்கத்துடன் மொழிந்தவாறே குனிந்து அவளது சலங்கையோடு சேர்த்து அவளின் பாதத்திலும் முத்தமிட்டிருந்தான்.

அதில் அவளின் முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்துவிட “ஏங்க என்ன செய்யறீங்க?” என கூச்சத்துடன் காலை இழுக்க முயன்றவளின் பாதங்களை விடாமல் அவனின் இதழ்கள் முன்னேற தொடங்கின.

அவனின் முத்தத்திலும் தீண்டலிலும் நெகிழ தொடங்கியவளின் காதலுக்கு சாட்சியாய் அடுத்த மாதமே கருவுற்றாள் தேவகி.

அவளது வயிற்றில் வளருவது இரட்டை கரு என்று அறியாமலே அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அவளை கொண்டாடி தீர்த்தார்கள்.

ராமனின் பாட்டனாருக்கு சொல்லவே தேவையில்லை?

முன்பே தேவகியை தரையில் நடக்கவிடமாட்டார்..இப்போது அவளை பூஜையறையில் வைத்து பூஜிக்காத குறை ஒன்று தான்!

அவளை அப்படி தாங்கினார்கள்.

அவர்கள் மட்டுமின்றி அவளின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரம சந்தோஷம்!

வீரோ “ஐய் எனக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது…ஜாலி ஜாலி…” என துள்ளி குதித்து குதூகலித்தான்.

சுசீலா மட்டும் முகத்தை உர்ரென்று வைத்திருந்தார்.

தன் மகளிற்கு இதுப்போல் வாழ கொடுத்து வைக்கவில்லை என மனதிற்குள் கறுவினார்‌.

அவரது வயிறு பற்றி எரிந்ததாலோ அல்லது அவர் முன்பு விட்ட சாபமோ தெரியவில்லை.

தேவகிக்கு மூன்றாம் மாதம் நடந்துக்கொண்டிருக்கும் தருவாயில் விஜயலட்சுமி என்னும் சூறாவளி அவர்களின் வாழ்வில் நுழைந்து,தேவகியின் வாழ்வை வேரோடு பிடிங்கி எறிந்திருந்தது.

ஆம்,தேவகியின் கணவன் தான் ராமன் என்கிற சிவராமன்!
 

முகிழ்மதி 86:


 

 

மனைவியின் மீது உயிராய் இருந்த ஆடவனை தன் வசப்படுத்தி தேவகியை அவனின் வாழ்வில் இருந்து அடித்து துரத்தியிருந்தாள் விஜயலட்சுமி.

பொதுவாக,ஆண்கள் மனைவியின் கர்ப்பப்பேறு காலத்தில் சபலத்தில் தடுமாறுவார்கள்.

ஏனெனில்,மனைவியோடு பல இரவுகளாக கூடி களைத்து சுகத்தை அனுபவித்தவர்களுக்கு உடல் தேவை இன்றியமையாததாக இருக்கும்.

ஆனால் கர்ப்ப காலத்தில் சில நேரங்களில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம்!

அந்த நிலையில் ஆண்கள் சிலரின் தேகம் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தடுமாறும்.அவ்வாறு தடுமாறிய மனதை வெற்றிக்கொள்ளும் ஆடவர்கள் மட்டுமே சிறந்த கணவான்கள்!

ஒரு சில ஆண்கள் இந்த சூழ்நிலையில் வழி தடுமாறி தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள்.

அப்படியான மனிதர்களில் ஒருவன் தான் சிவராமன்.

கர்ப்ப காலத்தில் இருப்பதினால் அவளை நெருங்க முடியாமல் சபலப்புத்தியில் தடுமாறி கொண்டிருந்தவரை விஜயலட்சுமி தக்கச்சமயம் பார்த்து தன்புறமாக வளைத்துப் போட்டிருந்தாள்.

அப்பாவி பெண்ணாக வேலை தேடி அந்த வீட்டிற்கு ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு வந்த பெண்ணவளிற்கு சிவராமனின் மீது ஒரு கண் இருந்தது.

அத்தோடு அவன் தன் மனைவியை தாங்கும் விதத்தை பார்த்தவளிற்கு தனக்கும் இவையெல்லாம் கிடைக்க வேண்டும் என்ற பேராசையும் வக்கிரமும் மனதில் எழுந்தது.

பதினைந்து வயதிலே ஒரு காமூகனை நம்பி கற்பை பறிக்கொடுத்து பிள்ளையை பெற்றவளிற்கு சிவராமனை பார்த்ததும் பிடித்துப்போனது

அதனால் தான் பெற்றெடுத்த மகனையே தனது தூரத்து உறவு முறை சகோதரன் என பொய் சொல்லி வீட்டில் வேலைக்கு சேர்ந்தாள்.

சிவராமனது செல்வச்செழிப்பையும் கம்பீரத்தையும் பார்த்தவளிற்கு அவனை எப்பாடுபட்டாவது அடைய வேண்டும் என்ற வெறி அவளுள் கொளுந்துவிட்டு எரிந்தது.

அதனால் தனக்கு அடைக்கலம் கொடுத்த தேவகியின் வாழ்வையே பறித்தெடுக்க முடிவெடுத்து விட்டாள்.

இந்நிலையில் தன் மனைவியை நெருங்க முடியாமலும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவனை கண்டுக்கொண்ட விஜயலட்சுமி அதை தனக்கு சாதகமாக்க எண்ணினாள்.

ஆனால் அவள் பல வகையில் போராடியும் அவனின் ஓரவிழி பார்வை கூட அவளின் மேல் விழவில்லை.

பெயருக்கு ஏற்றது போலவே அவன் ஸ்ரீ ராமனாகவே நடந்துக்கொண்டான்.

அதில் வெகுண்ட விஜயலட்சுமிக்கு அவனின் மீதான கள்வெறி இன்னும் அதிகமாகியது.

கயமையின் குணமுள்ள பெண் வேறு எப்படி சிந்திப்பாள்?

அவள் மனதில் தேங்கியுள்ள கழிவைப் போலவே தேர்ந்தெடுத்த பாதையும் வக்கிரமாக இருந்தது.

குறுக்கு வழியில் அவனை அடையும் விதமாக இரவு தோறும் அவன் அருந்தும் பாலில் ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டி விடும் மாத்திரையை கலந்துக்கொடுத்திருந்தாள்.

அந்த அதீத போதையிலும் அவன் நாடியது என்னவோ அவனின் காதல் மனையாளை தான்!

மனைவியின் மீது அளவுக்கதிகமான நேசமிருக்க,தன்னுணர்ச்சிகளை அடக்க முடியாமல் அவளை அவன் நெருங்க முயல “ஏங்க வயித்திலே குழந்தை இருக்கு…இந்த மாதிரி நேரத்திலே கூடாதுனு டாக்டரம்மா சொன்னாங்க…நகருங்க” என சிணுங்கலாக அவனை நிராகரித்துவிட்டாள்.

அவனிற்கோ இப்போதே தன்னுள் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளை யாரிடமாவது கொட்டியே தீர வேண்டும்.இல்லையேல் அவனிற்கு உயிரே போய்விடும் போன்ற ஒரு வலி மிகுந்த உணர்வு!

அவன் தன்னை தானே அடக்க முடியாமல் வலியுடன் போராடிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து தனிமையில் நின்றிருந்தவனிடம் பேசுவதற்காக விஜயலட்சுமி வந்தாள்.

அவள் வேண்டுமென்றே உடலை வளைத்து நெளித்து வந்த விதம் அவனிற்குள் இருந்த உணர்ச்சிகளை தூண்டி விட ‘இல்லை…இல்லை இது தப்பு…தப்பு’ என அவனின் மனசாட்சி கூக்குரல் கொடுத்தன.

அவன் மனம் முரண்டினாலும் அவள் கொடுத்த வசிய மருந்து அவனை அங்கிருந்து செல்ல விடவில்லை.

அவள் கொடுத்த மருந்து பால் உணர்ச்சியை தூண்டக்கூடிய மருந்து மட்டுமில்லை…அவனை தன்னிலை இழக்க வைத்து நிலை தடுமாற வைத்திருந்தது.

தொடக்கத்தில் அவளிடமிருந்து விலகிப்போன சிவராமன் இறுதியில் சுய கட்டுப்பாட்டை இழந்து அவளில் எல்லை மீறி நடந்திருந்தான்.

ம்ஹும்…அவனாக அவளை நாடவில்லை…அவனிற்கு போதையேற்றி அவனை தன் வழிக்கு வர வைத்திருந்தாள்.

அவனும் அந்த கபடத்தாரி விரித்த வலையில் சரியாக விழுந்திருந்தான்.

தான் நினைத்ததை அடைந்த வெற்றிக்களிப்பு அவளிடம்!

அன்றைய இரவெல்லாம் அவனது உடலில் இருந்த காம வஸ்துக்கள் எல்லாம் தீரும் வரை அவளுடன் களியாட்டம் ஆடிய ஆடவனிற்கு அதன்பிறகே தான் செய்த தவறு உறைத்தன.

போதை குறைய குறைய தனது மனைவிக்கு துரோகம் இழைத்திருப்பதை அறிந்து அவன் துடித்துப்போக,அவனது குற்றவுணர்வை கண்ட விஜயலட்சுமி தன் நாடகத்தை போட ஆரம்பித்தாள்.

“ஐய்யோ என் வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டிங்களே ஐயா…இப்போ நான் எப்படி வாழறது?நான் போய் செத்துப்போறேன்…” என்றெல்லாம் அவள் கதற,அதை பார்த்தவனின் நெஞ்சம் வெடித்தது‌.

அவனிற்கு தான் எப்படி அப்படியொரு தவறு செய்தோம் என்றே தெரியவில்லை.

அவன் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே இடிந்துப்போய் அமர்ந்துவிட்டான்.

ஆனால் விஜயலட்சுமியோ தன் அப்பாவி நாடகத்தை தொடங்கவும்,அதில் இன்னும் கலங்கிப்போன சிவராமன் “தப்பு என் மேலே தான்‌மா…நான் ஏன் இப்படியொரு தப்பு செஞ்சனே எனக்கே தெரியலை…ஆனாலும் நான் பண்ணது தப்பு…நீ எனக்கு என்ன தண்டனை வேணா கொடு…செய்த தவறுக்கான தண்டனையை நான் ஏத்துக்கிறேன்…ஆ..னால் தேவகிக்கு மட்டும் எதுவும் தெரிய வேணாம்…உன்னை கெஞ்சுக்கேட்டுக்கிறேன்…” என அப்போதும் தேவகியை முன்னிறுத்தி அவன் பேசுவதை கண்டு உள்ளுக்குள் அவளின் வன்மம் அதிகரித்தது.

அதனால் “உங்களை மன்னிக்கிறதுக்கு எனக்கு என்ன தகுதியிருக்குங்கய்யா…பரவாயில்லை விடுங்க…நான் எங்கியாவது ஆறோ குளமோ போய் விழுந்து சாகறேன்…அது தான் எனக்கான தண்டனை” என முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழுதவளை பார்த்தவனிற்கு மனம் பிசைந்தது.

அவளின் பேச்சு அவனை துடிக்க வைத்தது.

அவனை பொறுத்தவரை அவள் ஒரு கன்னிப்பெண்…நிதானத்தில் இல்லாததால் அவள் ஒரு குழந்தைக்கு தாயானவள் என்று கூட அவனிற்கு தெரியவில்லை.

அவளிற்காக பரிதவித்த ஆடவன் குற்றவுணர்வுடன் “தயவு செஞ்சு இப்படியெல்லாம் சொல்லாதேம்மா…நீ செத்திட்டால் என் குற்றவுணர்வே என்னை கொன்னுடும்…என்னாலே நிம்மதியா வாழ முடியாது…உன்னையும் உன் தம்பியையும் வாழ்நாள் முழுக்க நான் பார்த்துக்கிறேன்…அழாதேம்மா” என அவளை சமாதானம் செய்தவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

‘ஒரு புறம் அவனின் மனைவி கருவுற்று இருக்கிறாள்.மற்றொரு புறம் வேலைக்காக வந்த அபலை பெண்ணை கற்பழித்து இருக்கிறான்?’ அவனை நினைத்து அவனிற்கே அவமானமாக இருந்தது.

அவன் குற்றவுணர்வில் மனைவியை பார்க்கும் போதெல்லாம் தவிக்க,விஜயலட்சுமிக்கோ ஒரே கொண்டாட்டமாகிவிட்டது.

அவள் எதிர்பார்த்ததும் இதை தானே?

ஆயினும்,அவளிற்கு அது போதவில்லை.

தேவகியின் மொத்த இடத்தையும் பறிக்க ஆசைக்கொண்டாள்.

அதனால் அவனிற்கு சந்தேகம் வராத வரையில் அவ்வப்போது  அவனின் உணர்ச்சிகளை தூண்டும் மருந்தை கொடுத்து அவனை தன்புறமாக ஈர்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த மருந்தை வாங்குவதற்கு தேவையான பணத்தையும் அவனே அவனையறியாமல் அவளிற்கு கொடுத்து உதவினான்.

அவனிற்கே ஒரு கட்டத்தில் ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை.

இப்படி ஒரு நாள் மட்டுமில்ல…அவனையும் அறியாமல் பல இரவுகள் அவளுடனே கழித்திருந்தான்.

அவனிற்கு போதை இறங்கிய பிறகே தான் செய்துக்கொண்டிருக்கும் காரியமே உறைக்கும்.

ஆனாலும் அவனால் அவனுள் தோன்றும் ஆண்மையை தூண்டி விடும் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

ருசி கண்ட பூனை அவ்வளவு எளிதில் பாலை வெறுத்துவிடுமா என்ன?

ஒரு நாள் ருசித்த பழத்தின் சுவை நாவை விட்டு அகல மறுக்க இந்த ரகசிய உறவு தொடர்கதையானது.

இரவு நடக்கும் களியாட்டம் அரசல் புரசலாக பணியாளர்களின் வழியாக பாட்டனாரின் கதை எட்டியிருந்தது.

அவர் உடனே தனது பேரனை அழைத்து அவனை வார்த்தையால் வதைத்தத்தோடு அவனின் கன்னம் வீங்கும் அளவு அடித்திருந்தார்.

தேவகி போன்ற நல்ல பெண்ணிற்கு துரோகம் இழைத்ததை அவராலே ஏற்க முடியவில்லை.

தவறு தன் மேல் இருக்கவும் அவன் எதுவும் பேச முடியாமல் தலைக்குனிந்து நின்றிருந்தான்.

“இனி இப்படி நடக்காது தாத்தா” என அவரிடம் வாக்குக்கொடுக்க,

“ஆமாண்டா…எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவும் செய்யாத மாதிரி முகத்தை வைச்சிருக்கிறதை பாரு…கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க எப்படி தான் உனக்கு அந்த குரங்கை பிடிச்சதோ?கருமம்…” என தலையிலடித்தவர் “அப்பா அம்மா இல்லாத பையனா போயிட்டே…அதையும் தாண்டி நீ என் பேரன்…இல்லைனா நீ பண்ணதுக்கு உன்னை வெட்டி பொலிப்போட்டிருப்பேன்…அவளை முதல்ல அடிச்சு துரத்தி விட்டு பொண்டாட்டியோட வாழற வழியை பாரு” என உச்சக்கட்ட ஆத்திரத்துடன் கூறினார்.

அவனிற்கு அதில் விருப்பமில்லை என்றாலும்,எங்கு தன் மனைவியை இழந்துவிடுவோமோ என அஞ்சி அவளிற்கு தேவையான பணத்தை கொடுத்து வெளியே அனுப்ப முடிவெடுத்தான்.

அதை விஜயலட்சுமியிடமும் கூறிட அவளின்‌ முகம் ஒரு கணம் அப்படியே விகாரமாய் மாறியது.

அவளின் மனதிற்குள் ‘என்னையே வெளிய அனுப்ப பார்க்கிறேயில்லை…நீ எப்படி உன் பொண்டாட்டியோட நிம்மதியா வாழறேனு பார்க்கிறேன்’ என குரூரமாக எண்ணி வெளியில் “சரிங்க ஐயா…எங்களை மாதிரி வேலைக்காரங்களுக்கு இது தான் கதினு எனக்கு நல்லாவே தெரியும்…நீங்க அம்மா கூட நல்லா வாழுங்க…நான் வீட்டை விட்டு போயிடறேன்” என நல்லவள் போல் நீலிக்கண்ணீர் வடித்தவரை பார்த்த சிவராமனிற்கு பாவமாக இருந்தது.

ஆனால் அவனிற்கு வேற வழியில்லை.

அவள் நாளை அந்த வீட்டை விட்டு செல்வதாக இருக்க,அன்றைய நாள் இரவு அவன் குடித்த பாலில் போதை மருத்தை அதிகமாக்கி ஆடவனை மொத்தமாய் நிலைத்தடுமாற வைத்து அவனோடு உறவு வைத்துக்கொண்டாள்.

இப்படியான மருந்துகள் எல்லாம் அவ்வளவு எளிதில் யார் கையிற்கும் கிடைக்காது.

ஆனால் விஜயலட்சுமியை போன்ற மோசமான பெண்ணிற்கு அனைத்து தீய பழக்க வழக்கங்களும் அத்துப்படி!

பணத்தை கொடுத்தால் அவளிற்கு உதவி செய்ய நிறைய காமுகன்கள் வெளியில் இருந்தார்கள்.

அதன்மூலம் எளிதாக மருந்தை வாங்கி சிவராமனின் மீது பிரயோகித்தாள்.

இதில் கொடுமை என்னவெனில் இவையனைத்தையும் செய்வது விஜயலட்சுமி என்று கூட அவனிற்கு தெரியவில்லை.

எப்போதும் விடிவதற்கு முன்பே தன் அறைக்கு சென்றுவிடும் சிவராமன் அன்றைய பொழுது நன்றாக விடிந்த பிறகும் தன்னறைக்கு செல்லவில்லை.

அப்படியொரு போதை கிறக்கம் அவனுள்!

காலையில் கண்விழித்த சமயம் தன்னருகே கணவன் இல்லாததை கவனித்த தேவகி ‘எங்கே இவரை காணும்?’ என அவனை ஒவ்வொரு அறையாக தேடிக்கொண்டே வந்தாள்.

இறுதியாக ஒரு அறைக்குள் நுழைந்தவளின் இதயம் அங்கிருந்த காட்சியை கண்டு உடைந்து தூள் தூளாக சிதறிப்போனது.

அவளின் பாத கொலுசொலி சத்தம் கேட்டு ஆழ்ந்த உறக்கத்திலும் கூட “கண்ணம்மா” என அவளின் பெயரை அழைத்தவாறே விஜயலட்சுமியை அணைத்து முத்தமிட்ட காட்சியை கண்ட எந்தவொரு பெண்ணால் தான் தாங்கிக்கொள்ள முடியும்?

ஒரு கணவனை எந்தவொரு நிலையில் ஒரு பெண் காணக்கூடாதோ அப்படியானதொரு நிலையில் அவனை கண்டதும் அவள் உயிருடன் மரித்து விட்டாள்.

அவளின் ஒட்டுமொத்த தேகமும் அருவருப்பிலும் ஆத்திரத்திலும் சிவந்துவிட, தன்னுள் குமுறிய எரிமலையின் சீற்றத்துடன் அந்த அறையிலிருந்து வெளியேறியவள் தான்!

அதன்பிறகு ராமன் என்ற அத்தியாயத்தை அவளின் வாழ்விலிருந்து அழித்துவிட்டாள்.

பல வருடங்களாய் அவனை மட்டும் உயிராய் நேசித்து வாழ்ந்து வந்தவளிற்கு அவன் கொடுத்த வலி,உடலை விட்டு உயிரை பிரியும் வலியை விட கொடூரமானது.

அத்தனை நாட்களும் சொர்க்கத்தை மட்டும் கொடுத்த ஆடவன் அவளிற்கு ஒரு நாளில் நரகத்தை காட்டியிருந்தான்.

சந்தனமும் பன்னீரும் கொண்டு அவளை குளிப்பாட்டியவனின் கரங்கள் அவள் மேனியில் பயணித்த இடமெல்லாம் அசிங்கத்தை வாரியிறைத்தது போல் அருவருத்துப்போனது.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என தன்னை தானே கேட்டுக்கொண்டவளின் நெஞ்சில் பல நூறு குண்டுகள் துளைத்த ஒரு ரணம்!

அவள் அளவுக்கதிகமான நேசித்த ஒரு நபரும் அவன் தான்…

அவள் அளவுக்கதிகமாக வெறுத்த ஒரு நபரும் அவன் தான்!

அவளின் உடலை ஒவ்வொரு அணுவாக துளைக்கும் அளவு பிணி இருந்தப்போதிலும் அவனை பிரிந்து வந்த நாட்கள் தொட்டு அவள் அழவே இல்லை..

அழுவதற்கு தகுதியான ஆள் அவனில்லை என்ற திண்ணம் அவளிற்குள்!

அவளிடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால் இந்நேரம் மூலையில் முடங்கி சோகத்தில் மடிந்துப்போயிருப்பார்கள்.

தேவகி அவ்வளவு எளிதில் உடைந்துவிடும் பெண்ணல்ல.

அவள் ஒரு ஆக்க சக்தி…அத்தோடு வயிற்றில் இருக்கும் குழந்தை அவளை ஒரு இடத்தில் சுணங்கி உட்காரவிடவில்லை.

அவனை அவள் வெறுத்தாலும் அவனின் மீது அவள் வைத்த காதல் உண்மை!

அதற்கு சாட்சியாய் அவளின் வயிற்றில் அவனின் குழந்தை வளர்கிறது.

அவனை வெறுத்து ஒதுக்குவது போல் குழந்தையை அவளால் தூக்கியெறிய முடியவில்லை.

அவள் நன்றாகவே வாழக்கூடாது என்று சபமிட்ட சுசீலா கூட அவளில் பரிதாபம் கொண்டார்‌.

அவளிற்காக இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினார்.

ஆனால் அவளோ கலங்கவே இல்லை…அவளிற்கு அப்படியொரு அழுத்தம்!

முன்பை விட அவளுள் துணிச்சலும் நிமிர்வும் அதிகரித்திருந்தது.

சிவராமனின் பாட்டனார் அவளிடம் வந்து பேசி பார்த்தார்.

அவரை நேருக்கு நேர் பார்த்து “ஐயா ஒரு தடவை சாக்கடை நம்ப மேலே தெறிச்சிருச்சு என்ற காரணத்துக்காக தினம் தினம் சாக்கடையிலே குளிக்க ஆசைப்படக்கூடாது” என ஒரே ஒரு வசனம் தான் பேசினாள்.

அதுவே அவரின் முகத்தில் செருப்பால் அடித்தது போன்ற ஒரு உணர்வு!

தவறு செய்தவன் தன் பேரன் என்பதால் அவரால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை‌.

அந்த பெரிய மனிதர் உடைந்து நொறுங்கவிட்டார்.

அப்போதும் அவளின் கணவன் அவளிடம் நேரில் வந்து பேச முற்படவில்லை.

அவன் செய்திருப்பது சாதாரண பிழை அல்ல…எந்தவொரு கணவனும் மனைவிக்கு செய்யக்கூடாத துரோகம்!

செய்த பிழையை உணர்ந்தவனிற்கு அவளின் முகத்தில் முழிக்க முடியாத அளவு தலையிறக்கம்!

அவன் தினந்தோறும் மனதிற்குள் செத்து மடிந்துக்கொண்டிருந்தான்.

ஆயினும்,அவளின் வயிற்றில் வளரும் குழந்தை அவனது உயிரணுவில் உதித்த உயிராயிற்றே?

ஆதலால்,குழந்தையை விட முடியாமல் அவன் தத்தளித்தான்.

அந்நேரமும் அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்க எண்ணிய விஜயலட்சுமி அவனிற்கு ஆறுதல் சொல்வது போல் அவனை மனதளவில் நெருங்க முற்பட்டாள்.

சிவராமனின் பாட்டனாரும் குடும்ப வாரிசுக்காக தேவகியிடம் மீண்டும் பேச வர,அவளிற்கு பகீரென்றது.

‘இது என் குழந்தை’ என தன் வயிற்றோடு கையை வைத்து அவள் அழுத்திக்கொண்ட நேரம் அவளின் குழந்தை முதல் முறையாய் தன்னிருப்பை அவளிற்கு காட்டியிருந்தது.
 

முகிழ்மதி 87:

 

குழந்தை தன்னிருப்பை காட்டியதும் அதற்கு மேல் அவள் எதற்காகவும் சுணங்கவே இல்லை.

அவளிற்குள் அப்படியொரு பிடிவாதமும் அழுத்தமும் குடி வந்திருந்தது.

அதனால் அவரை நோக்கி நிமிர்ந்த தேவகி “ஐயா இங்க பாருங்க…உங்க மேலே எனக்கு நிறைய மரியாதை இருக்கு…அதை மறுபடியும் கெடுத்துக்காதீங்க…குழந்தை உருவாகறதுக்கு காரணமா இருக்கவங்க எல்லாம் அப்பாகிட முடியாது…இது என் குழந்தை…இனி என் குழந்தைக்கு எல்லாமுமா நான் இருப்பேன்…அதை வளர்த்து ஆளாக்கிற அளவு உடம்பிலே வலுவும் என் கையிலே நல்ல வேலையும் இருக்கு…இதுக்கு மேலே குழந்தைக்காக சேர்ந்து வாழ சொல்லி என்கிட்ட வராதீங்க” என அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தாள்.

ஆசையாக ‘தாத்தா’ என்று அழைப்பவளின் வாயிலிருந்து ‘ஐயா’ என்று வந்த விதமே அவள் அனைவரையும் வெறுத்து ஒதுக்கிவிட்டாள் என்று தெரிந்தது.

அவருக்கும் மனம் வலித்தது.

ஆயினும் தன் குடும்ப வாரிசை அவருக்கு விட்டுக்கொடுக்க மனமில்லை.

ஆதலால் “அம்மாடி ஒரு தடவை நல்லா யோசிச்சு பாரும்மா…அவன் ஏதோ தெரியாமல் பண்ணிட்டான்…அந்த பொம்பளையை நான் அடிச்சு துரத்திட்டேன்…இனி இந்த மாதிரி தப்பு எதுவும் நடக்காதும்மா…மறுபடியும் நீங்க இரண்டு பேரும் குழந்தைக்காக…” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளின் முகம் அருவருப்பில் சுருங்கின.

அவளின் முகமாற்றத்தை கண்டு அவரை பேச்சை நிறுத்திவிட்டார்.

அவரை கோபத்துடன் உறுத்து விழித்தவள் “ஐயா உங்களை ஒரே ஒரு கேள்வி நான் கேட்கிறேன்?அதுக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லுங்க…இதுவே உங்க மகளுக்கோ இல்லை பேத்திக்கோ நடந்திருந்தால் நீங்க இப்படி தான் அந்த மாதிரியான ஒரு ஆளை ஏத்துக்க சொல்லுவீங்களா?” என்று தீட்சண்ய குரலில் கேட்டதும்,அவருக்கு சாட்டையால் அடித்தது போல் சுள்ளென்று வலித்தது.

சட்டென அவர் மௌனமாகிவிட அதனை விரக்தியாக நோக்கியவள் “இப்போ உங்களுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் ஐயா…உடைஞ்ச கண்ணாடிய கூட ஒரு நாள் ஒட்ட வைக்கமுடியும்…ஆனால் உங்க பேரன் எனக்கு செய்தது துரோகம்…கற்பு பெண்களுக்கு மட்டுமில்லை…ஆண்களுக்கும் உண்டு…அவர் என்னைக்கு எனக்கு துரோகம் பண்ணறாரோ அப்போவே அவர் ஒரு சாக்கடையாகிட்டாரு…நான் முன்னாடியே சொன்ன மாதிரி அந்த சாக்கடையோட சேர்ந்து வாழறதெல்லாம் சாத்தியமே இல்லை…அப்படி நாத்ததை பொறுத்துக்கிட்டு வாழறதுக்கு செத்துப்போறதே மேல்…உங்களை கையெடுத்து கும்பிடறேன்…நானும் என் குழந்தையும் நிம்மதியா வாழணும்னு நினைச்சீங்கன்னா எக்காரணத்தை கொண்டும் எங்களை பார்க்கவே வராதீங்க” என திட்டவட்டமாக பேசி கையெடுத்து கும்பிட்டவளை அதற்கு மேல் அவர் தொல்லை செய்வதற்கு வரவில்லை.

அவளை சந்திக்கும் தகுதியும் அவருக்கு இருக்கவில்லை…

ஏனெனில் அவரின் பேரன் செய்த காரியம் அப்படியானது.

ஆனால் இந்த சம்பவத்தால் வயதில் மூத்தவரான பெரியவருக்கு மன உளைச்சலில் நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை கேள்வியுற்றும் கூட அவள் அவரை சென்று பார்க்கவில்லை.

அவளின் நெஞ்சம் இரும்பாகியிருந்தது.

அன்றைய நாளோடு கணவன் என்னும் பந்தத்திற்கு மட்டுமல்ல…அவனை சார்ந்த உறவுகள் அனைத்திற்கும் அவள் முற்றும் போட்டு முடித்து வைத்துவிட்டாள்.

இனி அவளின் வாழ்வில்…அவள்…அவளின் குழந்தை…வீர் இதை தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

ஒருவருக்கு அனுபவம் வாழ்க்கை பாடத்தை கற்று தரும் என்பார்கள்.ஆனால் அவளின் துயரங்கள் அவளிற்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்திருந்தன.

அதன்பலனாய்,இனியொரு ஆடவனை தன் வாழ்வில் நம்பும் ஒரு முட்டாள்தனமான முடிவை அவள் எடுக்கவில்லை.

யாருடைய உறவும் வேண்டாம் என தனித்து நின்று போராடி வாழ்வில் முன்னேறினாள்.

அதற்கு அவள் கற்று தேர்ந்த கல்வியும் திறமையும் அவளிற்கு துணை நின்றது.

தொடக்கத்தில் சமுதாயத்தில் தனித்து நின்று போராடுவது சிரமமாக இருந்தது.

ஆனாலும் அவள் ஒருவள் ஒரு புறமும் அவளிற்கு எதிரே ஒட்டு மொத்த சமுதாயமும் நின்றாலும் தைரியமாய் நின்று அனைவரிடமும் யுத்தம் செய்தாள்.

அவளின் கடுமையான யுத்தத்திற்கு பின்பு அவளின் வாழ்வு என்றும் ஏறுமுகம் மட்டும் தான்!

நாட்கள் செல்ல செல்ல,தேவகியின் வயிற்றிலிருந்த குழந்தையும் வளர்த்துக்கொண்டே இருந்தது.

அவளிற்கு ஏழாம் மாதம் இருக்கும் தருவாயில் ஞானசேகரன் இயற்கை எய்தினார்.

தன்னுடைய இரு மகளின் வாழ்வும் சீரழிந்துப் போனதை கண் முன் கண்டப்பிறகு அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை.

அவரின் அலைக்கழிந்த இதயமே ஒரு கட்டத்தில் அவரின் இதயத்துடிப்பையும் நிறுத்தி உயிரை காவு வாங்கியிருந்தது.

ஒரு துயரத்திலிருந்து மீண்டு வருவதற்குள் அவளின் வாழ்வில் அடுத்த பேரடி அவரின் இழப்பு…

இருப்பினும்,அவள் எதற்காகவும் சோர்வுறவில்லை.

அதன்பிறகு அவர்கள் இருந்த வீட்டை விற்றுவிட்டு புதிதாக ஒரு வீடை வாங்கி வேறு இடத்திற்கு குடிப்புகுந்தாள் தேவகி.

சுசீலாவையும் அவருடனே அழைத்துக்கொண்டாள்.

சிறு வயதிலிருந்து அவளை அவர் திட்டிக்கொண்டே இருந்தாலும் அவளிற்கு அவர் பெரிதாக எவ்வித கொடுமையும் செய்ததில்லை.

சொற்களால் வதைக்க மட்டுமே செய்வார்.

அத்தோடு தேவகியின் வாழ்வு இப்படியொரு நிலைக்கு ஆளானதும் அவரிடம் நிறைய மாற்றங்கள்!

தன்னுடைய வயிற்றெரிச்சலே அவளின் வாழ்வை பறித்திருக்காமோ என குற்றவுணர்வும் சேர்ந்துக்கொள்ள,அவளை கொடுமை செய்ததற்கெல்லாம் சேர்த்து அவளின் பேறு காலத்தில் அவளை நன்றாக பார்த்துக்கொண்டார்.

அதற்காக ஒரேயடியாக அவளுடன் ஒட்டி உறவாடவில்லை…அது தான் அவரின் குணம்!

சுசீலா இயல்பில் கெட்டவரெல்லாம் இல்லை…அவருடைய ஏழ்மையும் தன் மகளின் மீதான பாசமும் மட்டுமே தேவகியின் மீது வெறுப்பை கொண்டு வந்திருந்தன.

ஆனால் கணவரின் திடீர் மரணமும் தேவகியின் திருமண வாழ்வும் அவரின் வாழ்வில் பேரடியாய் விழுந்திருக்க,அவரின் மனதில் இருந்த கழிவுகள் எல்லாம் அடித்து செல்லப்பட்டிருந்தது.

அத்தோடு அவர் அவளை நிறைய முறை அவமதித்து பேசியும் கூட,தன்னை வெறுத்து ஒதுக்காமல் தன்னுடனே அழைத்து வந்து பார்த்துக்கொள்ளும் தேவகியின் மீது அன்பும் உருவானது.

அவள் செய்யும் அனைத்திற்கும் நன்றி கடனாக அவளை கையில் வைத்து தாங்கவில்லை என்றாலும்,தன்னால் முயன்ற வகையில் அவளின் உடல்நிலையை பார்த்துக்கொண்டார்.

தனது பெரியம்மாவின் மாற்றம் தேவகிக்கு மகிழ்ச்சியை கொடுக்க,அவளும் ஓரளவு தன் கவலைகள் துறந்து நன்றாக வாழ்ந்தாள்.

அனைவரின் மனதில் ஒரு சஞ்சலம் நிரம்பியிருந்தாலும் ஒருவனிற்கு மட்டும் எல்லையில்லாத ஆனந்தம்!

அது வேறு யாருக்குமல்ல சிறியவன் வீருக்கு தான்…

தன்னுடைய அம்மா இனி தன்னுடனே வசிக்கப்போகிறாள் என்று தெரிந்ததிலிருந்தே அவன் குத்தாட்டம் போடாத குறை ஒன்று தான்!

அதனால் குதூகல மனநிலையுடன் எந்நேரமும் தேவகியின் முந்தானையை பற்றியே சுற்றி திரிவான்.

அத்தோடு இரவு உறங்கும் போது அவளை கட்டியணைத்து படுத்துக்கொள்ளும் வீரை சுசீலா அதட்டுவார்.

“டேய் அவ புள்ளைதாச்சி பொண்ணுடா…தூக்கத்திலே அவ மேலே கைய்யு காலை போட்டால் வம்பா போயிடும்…நீ வந்து என் கூட படு…இல்லை அடி வெளுத்திடுவேன்” என்று அவர் வசைவு மொழி பொழிந்து மிரட்ட,

அவனோ “போங்க பாட்டி…” என சிணுங்கிக்கொண்டே தேவகியின் முந்தானையை பற்றிக்கொள்ள,

அதில் மென்னகை பூத்த தேவகியோ “பரவாயில்லை பெரியம்மா…அவன் சின்னப் பையன் தானே நான் பார்த்துக்கிறேன்…விடுங்க” என வீரை தன்னுடனே படுக்க வைத்துக்கொண்டாள்.

அவளின் பேச்சில் அவனின் முகம் மலர்ந்திட,அதில் கடுப்பானவர் “என்னமோ பண்ணு போ…நீ தான் அவனை ரொம்ப கெடுக்கிறே தேவகி?” என திட்டிக்கொண்டே சென்றுவிட்டார் சுசீலா.

வீரோ அவளின் முந்தானையின் வாசத்தை முகூர்ந்தவாறே அவளுடனே ஒட்டி படுத்துக்கொண்டான்.

தாயை இழந்த குழந்தைக்கு மீண்டும் அன்னையின் அன்பு அவள் வழியாக கிடைத்ததும் அந்த சிறாரின் உள்ளம் அதனை தக்க வைத்துக்கொள்ள தவித்தது.

அவள் வயிற்றில் பிறக்காத மதலையாகினும் அவன் என்றும் அவளுடைய மகன் தான்.

தன் மார்பில் தலைசாய்த்து உடலை குறுக்கி படுத்திருந்த வீரின் தலை ஒரு கையால் வருடியப்படி,வயிற்றினுள் இருக்கும் தன் குழந்தைகளுக்கும் அதே அரவணைப்பை கொடுத்தாள் அவள்.

தன் நெஞ்சில் அவனையும் கருவறையில் தன் குழந்தையையும் அவள் சுமக்க,வீரோ அந்த சின்னஞ்சிறிய வயதிலே தனது தங்கையை சுமக்க தொடங்கியிருந்தான்‌.

தேவகியோடு வீட்டிலிருக்கும் சமயமெல்லாம் அவளுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டே இருப்பான்.

“பாப்பா நீ வெளியே வந்தவுடனே அண்ணா நான் தான் உன்னை பார்த்துப்பேன்…உன்னை யாருக்கிட்டயும் விடவே மாட்டேன்…எந்நேரமும் உன்னை தூக்கிட்டே சுத்துவேன்…நீயும் நானும் சேர்ந்து நிறைய விளையாடலாம்…உனக்கு என்னலாம் வேணுமோ அண்ணா பெருசாகி எல்லாத்தையும் நான் வாங்கி தர்றேன்…இன்னும் ஒரு மாசம் தான்…அதுவரைக்கும் அம்மா வயத்திலே பத்திரமா இருங்க…நீங்க வெளியே வந்தவுடனே அண்ணா நான் பார்த்துக்கிறேன்” என அவன் குழந்தையுடன் பேசி அவளின் வயிற்றில் முத்தமிட்டதும் தேவகிக்கு மனம் உருகி சிலிர்த்துவிடும்.

அவளிற்கே உள்ளம் உருகும் போது அவளின் வயிற்றில் இருக்கும் சிசுக்களின் மனம் நெகிழாதா என்ன?

அப்போதே உள்ளிருக்கும் வீரின் தங்கைகளுக்கு அவன் பாசமிகு தமையனாகிப்போயிருந்தான்.

தினந்தோறும் அவனின் குரல் கேட்பதற்காக குழந்தைகளும் தவமிருக்கும் போலும்.

வேறு யாரு குரலுக்கும் அடிப்பணியாத குழந்தைகள் அவனின் குரல் கேட்டவுடன் உற்சாகமாய் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிடும்.

தேவகியோ “ஆ அம்மா..” என இனிய அவஸ்தையில் வயிற்றை பிடித்துக்கொண்டு அலறும் அளவிற்கு பிள்ளைகளின் சேட்டைகள் தொடரும்‌.

“உள்ளே இருக்கும் போது உங்க அட்டூழியம் தாங்கலை…வெளிய வந்து உன் அண்ணனும் நீயும் என்னென்ன பண்ணப்போறீங்களோ தெரியலை?” என போலியாக தனது பிள்ளைகளை சலித்துக்கொள்வாள்.

“அம்மா பாப்பா என்ன அட்டூழியம் பண்ணாலும் நான் பார்த்துக்கிறேன்…நீங்க நிம்மதியா வேலை பாருங்க” என வீர் பெரிய மனிதன் போல் பேசிய தோரணையில் தேவகி பெருமிதம் கொள்வாள்.

சுசீலா அவன் “பாப்பா” என விளிப்பதை கண்டுவிட்டு “அதென்னடா பாப்பா?வயித்திலே இருக்கிறது இன்னும் என்ன குழந்தைனே தெரியலை…அதுக்குள்ள பாப்பானு சொல்லறே?பொறக்கப்போறது பையனா இருந்தா என்ன பண்ணுவே” என நக்கலாக கேட்க,

அவனோ “இல்லை பாட்டி…இது தங்கச்சி பாப்பா தான்…நீங்க வேணா பாருங்க…” என அவளின் வயிற்றை தொட்டு பார்த்து உறுதியுடன் கூற,

குழந்தைகளும் அச்சமயம் “ஆம்” என்பது போல் வயிற்றை எட்டி உதைக்க அதை வீரின் பிஞ்சுக்கரங்களும் உணர்ந்தது.

உடனே அவனின் முகமெல்லாம் விகசிக்க “ஐய் பார்த்தீங்களா?பாப்பாவும் நான் சொன்னதுக்கு ஆமா சொல்லுது” என குதூலகமாக உரைக்க,தேவகியின் இதழில் இருந்த புன்னகை வாடவே இல்லை.

அந்த காலக்கட்டத்தில் வயிற்றில் வளரும் சிசுக்களின் வளர்ச்சியை அறிவதற்கு எந்த வித வசதியுமில்லை.

அப்போதைய காலத்தில் இருந்த மருத்துவர்கள் பெண்களை கையால் பரிசோதித்து அதற்கு ஏற்றாற் போன்று வைத்தியம் பார்ப்பார்கள்.

அதிலும்,ஒரு சிலர் வீட்டிலிருந்தே குழந்தையை பெற்றுக் கொள்வார்கள்.

இந்நிலையில் மருத்துவமனையின் வாசலை மிதித்து பிரசவம் பார்ப்பது நூற்றில் ஒரு பெண்ணாக தான் இருப்பாள்.

தேவகியும் அந்த நூற்றில் ஒரு பெண்ணாக திகழ்ந்தாள்‌.

அவளிற்கு ஒன்பதாம் மாதம் முடிந்து குழந்தை பிறக்க வேண்டிய தினமும் வந்தது.

நாற்பத்தி எட்டு மணி நேரமாக தொடர்ந்து வலியை கொடுத்துக்கொண்டிருந்த தேவகியின் மகவுகள் அவளை கடுமையாக சோதித்தப்பிறகே இப்பூவலகிற்குள் பிரவேசித்தார்கள்.

குழந்தை பிறந்த சமயம் தான் மருத்துவருக்கே அது இரட்டை குழந்தைகள் என்ற விடயமே தெரிந்தன.

முதல் குழந்தை மண்ணில் உதித்த சமயமே தேவகி ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்ததால் அவளிற்கு இரண்டாவது குழந்தை பிறந்த விடயமே தெரியாமல் போனது.

அந்த மருத்துவர் இதுவரை பிரசவித்த பெண்களில் இரட்டை குழந்தை பிறந்தது இது தான் முதல் முறை!

அதனால் அவருக்கே அது அதிசயமாகயிருந்தது.

அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.

அவரின் அந்த இன்பத்திற்கு வேறொரு காரணமும் இருந்தது.

தன்னுள் உண்டான மகிழ்வோடு இரட்டை சகோதரிகளில் ஒரே ஒரு குழந்தையை மட்டும் தூக்கி சென்று அவரிடம் ஒப்படைத்தார் மருத்துவர்.

அந்த குழந்தையை தன் கரங்களில் ஏந்தியது வேறு யாருமல்ல…சாட்சாத் சிவராமனின் பாட்டனார் அமுத வாணன் தான்!

தேவகியின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவர் அவளை காண வரவில்லை என்றாலும்,அவர்களது குடும்ப வாரிசு எங்கோ ஒரு மூலையில் ஏழை வீட்டில் வளருவதை அவர் சிறிதும் விரும்பவில்லை.

ஆதலால்,தங்களுடைய வீட்டு வாரிசை பார்த்துவிட்டு செல்ல வந்தவருக்கு தித்திக்கும் விதத்தில் கிடைத்த செய்தியில் அவரின் மூளை அந்நொடி குரூரமாக சிந்தித்தது.

அவருக்கு தேவை அவரின் குடும்ப வாரிசு…அதேப்போல் தேவகியின் மனநிம்மதியும் அவருக்கு முக்கியம்!

அதனால் தனக்குள்ளே ஒரு திட்டம் தீட்டியவர்,ஒரு குழந்தையை மட்டும் தன்னுடன் கொண்டு செல்லும் இரக்கமற்ற முடிவை எடுத்து,அதைப்பற்றி மருத்துவரிடமும் பேசினார்.

முதலில் அவர் முரண்டுப்பிடித்தாலும் பணத்தை கொடுத்து வாயை அடைந்திருந்தார்.

அவர் கொடுத்த பணம்,அந்த விடயம் அறிந்த அனைவரின் வாயையும் மூட வைத்திருந்தது.

இதன்மூலமாக தேவகிக்கு பிறந்தது ஒற்றை குழந்தை என்று அனைவரிடமும் பகிரப்பட்டது.

அதனால் யாவருக்கும் தெரியாமல் பிறந்த குழந்தையிலிருந்து ஒரு குழந்தையை மட்டும் தன்னுடன் தூக்கிக்கொண்டு தடயமே இல்லாமல் அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டு சென்றுவிட்டார்.

அப்போதைய காலத்தில் இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதால் யாவருக்கும் எவ்வித சந்தேகமும் தோன்றவில்லை.

மற்றவர்களுக்கு சந்தேகம் தோன்றாமல் இருக்கலாம்.இரண்டு குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளிற்கு தெரியாமல் இருக்குமா என்ன?

அவளிற்கு ஏனோ மனம் முரண்டிக்கொண்டே இருந்தது.அதற்கான காரணம் அவளறியவில்லை என்றாலும்,எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு ஆழ்மனதில் தோன்றி அவளை அலைக்கழித்தன.

அவளே அறியாத ஒன்றை அவளும் யாரிடம் கேட்டு தெளிவுப்பெறுவாள்?

அதனால் அந்த உறுத்தலுடனே மண்ணில் உதித்த மகளுடன் நேரத்தை செலவு செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top