முகிழ்மதி 83,84

முகிழ்மதி 83:


 

 

சற்று நேரத்திற்கு முன்பு,

தனது மகிழுந்தில் மனநல மருத்துவரை ரகசியமாய் சந்திக்க சென்றிருந்தான் ரத்தினவேல்.

நினைத்தப்போதெல்லாம் அவரை யாரும் சந்திக்க இயலாது…ஆனால் அவன் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் சந்திக்க முடியும்.

அவருக்கு அதில் சில நேரம் உள்ளுக்குள் கடுப்பு தோன்றினாலும் அவனின் பதவியும் ஆளுமையும் அவரை அடங்கிப் போக வைத்தது.

அவர் ‘வரமுடியாது’ என முரண்டுப்பிடித்தாலும் அவரை ஆள் வைத்தாவது தூக்கி வந்துவிடுவான் என்று அறிந்து எரிச்சலுடன் அவன் அழைத்த இடத்திற்கு வந்துவிட்டார்.

அதற்கெல்லாம் மேலாக முகிழ்மதியின் உடல்நிலை அவரை அவனிற்கு அடிப்பணிந்து செல்ல வைத்திருந்தது.

அவருக்கு எப்போதும் நோயாளிகள் தான் முதன்மை!

அவரின் குடும்பம் கூட அவருக்கு இரண்டாம் பட்சமே?

அவரை ஒரு விடுதியின் அறையில் தனிமையில் சந்தித்த ரத்தினவேல் “சுத்தி வளைச்சு நான் எதுவும் பேச விரும்பலை…எனக்கு இப்போவே முகிழ்மதியோட கண்டிஷன் பத்தி தெரியணும் டாக்டர்…சொல்லுங்க” என்றான் ஆணைப்பிறக்கும் குரலில்..

அவரோ “மிஸ்டர் ரத்தினவேல் நான் ஏற்கனவே சொன்னது தான் ஒரே ஒரு மீட்டிங்கிலே அவங்களோட மொத்த ஜாதகத்தையும் கணிக்க நான் ஒண்ணும் மந்திரவாதி கிடையாது…அவங்களை கொஞ்சம் கொஞ்சமா அப்சர்வ் பண்ணால் மட்டும் தான் அவங்களை பத்தி முழுசா தெரியும்…இதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்” என்றார் கடுப்பை விழுங்கிய குரலில்.

ஆம்…மருத்துவரை சந்திப்பதற்காக அவன் முகிழ்மதியை யாருக்கும் தெரியாமல் ஒரே ஒரு முறை அழைத்து சென்றிருந்தான்.

அவ்வளவு ஏன்?

அவர் யார் என்பது அவளிற்கு கூட தெரியாது.தனது நண்பர் ஒருவரை பார்க்க செல்வதாக பொய்யுரைத்து அவளை அழைத்து வந்திருந்தான்.

ஒரு பொது இடத்திற்கு அவளை அழைத்து சென்றதால் அவளிற்கும் பெரிதாக எவ்வித சந்தேகமும் தோன்றவில்லை.

மூவரும் பேசிக்கொண்டே உணவருந்திய சமயம் அவன் ஏதேச்சையாக அழைப்பு வந்தது போல் அலைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தான்.

தனிமையில் அவளுடன் இருந்த மருத்துவரோ அவளின் செயல்கள் ஒவ்வொன்றையும் அவதானிக்க தொடங்கினார்.

புத்தம் புதிய நபருடன் அவன் தனியே விட்டுச் சென்றதால் அவளிற்குள் ஒரு தவிப்பும் அச்சமும் உண்டாகிட,அவளின் உடல் வெளுத்து வியர்வை பெருக தொடங்கியிருந்தன.

ஆனால் இவளை போல் பல நோயாளிகளை சந்தித்திருக்கும் மருத்துவராயிற்றே அவர்.

அதனால் அவளிடம் மிகவும் மென்மையாக பேசி அவளின் அச்சத்தை நீக்கியவர்,அவளை பற்றி மெல்ல மெல்ல விஷயத்தை கேட்க ஆரம்பித்திருந்தார்.

அவரின் கேள்விக்களுக்கு எல்லாம் அவள் திக்கித்திணறி பதில் உரைத்தது,தன்னுடைய சிரமங்களை எல்லாம் அவள் தனக்குள் பூட்டி வைத்துக்கொள்ளும் விதம் என அனைத்தையும் அவர் முதல் சந்திப்பிலே கவனித்திருந்தார்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே அவளிடம் அவர் பேசியனதினால் அவளிடமிருந்து அவரால் பெரிதாக எதையும் கண்டறிய முடியவில்லை.

ஆதலால் “மிஸ்டர் ரத்தினவேல்… ஐ திங்க் ஷீ இஸ் சிரியஸ்லி இல்…அவங்க எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்காங்கனு தெரிஞ்சுக்கணும்னா…எனக்கு அவங்க பாஸ்ட் லைஃப் பத்தி எல்லாமே தெரியணும்…சோ ஒரு நார்மல் கான்வர்ஷேசன் மூலமா அதை தெரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம்…ஒரு டாக்டரா புரொசீடு பண்ணால் மட்டும் தான் இது சாத்தியம்” என உறுதியாக கூறிவிட்டிருந்தார்.

ஆனால் அவனோ அவள் மிகவும் அதிகமாக பாதிப்புற்றிருக்கிறாள் என்று தெரிந்த விடயத்திலே அவன் உடைந்து நொறுங்கிப்போயிருந்தான்.

அவனின் முகம் வேதனையில் கசங்கிப்போனதை கண்ட மருத்துவர் “டோன்ட் வொர்ரி…நான் ஏற்கனவே சொன்னது தான் எவ்வளவு பெரிய நோயா இருந்தாலும் அன்பு தான் எல்லாத்துக்கும் மருந்து…சோ யூ கிவ் யுவர் பெஸ்ட்…கண்டிப்பா அவங்க சீக்கிரம் சரியாகிடுவாங்க…அவங்களுக்கு எக்ஸாம்னு சொன்னீங்கயில்லை…அது முடிஞ்சவுடனே அழைச்சிட்டு வாங்க…பார்க்கலாம்” என அவனிற்கு ஆறுதல் கூற அனுப்பியிருந்தார்.

அதன்பிறகு அவன் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையை பற்றியும் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவளின் கடந்த காலம் பற்றி அவன் அறிந்துக்கொண்ட தகவல்களையும் அவருடன் பகிர்ந்திருந்தான்.

அவரும் அவன் கூறியதை கிரகித்து ஒரு முடிவுக்கு வந்தவர் “ஐ திங்க் அவங்களோட இந்த கண்டிஷனுக்கு அவங்க அம்மா தான் காரணம்னு நினைக்கிறேன்…கிளியரா அதைப்பத்தி தெரிஞ்சுக்கணும் மிஸ்டர் ரத்தினவேல்…பட் உங்க லவ் கொஞ்ச நாளிலே அவங்ககிட்ட நல்ல இம்ப்ரூவ்மெண்ட் கொடுத்திருக்குனு நினைக்கிறேன்…அதனாலே தான் அவங்களுக்கு கனவு அதிகமா வர்றது இல்லை…சோ கீப் ஆன் ட்ரையிங்…வீ வில் டூ அவர் பெஸ்ட்” என உத்வேகமான வார்த்தைகள் எல்லாம் கொடுத்து அவனை ஊக்குவித்திருந்தார்.

அனைத்தும் சரியாக சென்றுக்கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் அவன் அவரை தனிமையில் சந்தித்து இவ்வாறு கேட்டதும் அவர் சிறிது கோபமடைந்துவிட்டார்.

ஏனெனில்,அவரை காண பல நோயாளிகள் வரிசையில் காத்திருக்க,அவனோ அவரை இங்கு வரவழைத்தால் கோபம் வராமல் என்ன செய்யும்?

“டாக்டர் ஐ நோ யுவர் இரிட்டேஷன்…பட் இது எலெக்ஷன் டைம்…தேவையில்லாமல் எந்த நியூஸும் பரவ நான் விரும்பலை…ஜஸ்ட் ஐ நீட் ஆ கிளாரிட்டி…தட்ஸ் இட்…” என ஒரு பெருமூச்சுடன் கூறிய ரத்தினவேல் வீரின் இல்லத்தில் நடந்த சம்பவத்தை பற்றி அவரிடம் எடுத்துக்கூறினான்.

“இதுநாள் வரை தூக்கத்திலே மட்டும் தான் அவ அந்த மாதிரி ரியாக்ட் பண்ணி பார்த்திருக்கேன் டாக்டர்…முதல் முறையா சுய நினைவு உள்ள சமயம் இப்படி ரியாக்ட் பண்ணி பார்க்கிறேன்…எனக்கு சம்திங் ஃபிஸ்ஸியா இருக்கு…அதான் உடனே உங்ககிட்ட நேரிலே பேசணும்னு நினைச்சேன்” என நெற்றியை நீவியப்படி சொன்னான் ரத்தினவேல்.

அனைத்தையும் முழுமையாக கேட்ட மருத்துவர் “இதுக்கு இரண்டே சாத்தியம் தான் இருக்கு ரத்தினவேல்…அந்த வீடு அவங்களோட கடந்த காலத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை நினைவுப்படுத்தறதா இருக்க லாம்…அப்படி இல்லையா இது அவங்க ஷட்டர் மெம்மரியா கூட இருக்கலாம்” என்று சொன்னவரின் பேச்சு அவனிற்கே புரியவில்லை.

“ஷட்டர் மெம்மரி?” என அவன் கேள்வியாக அவரை பார்க்க,

அவரோ மெல்லியதாக புன்னகைத்து “மெம்மரி கிளிச்னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டிருப்பீங்க…நம்ப மூளை நாம்ப பார்க்கிற எல்லா விஷயத்தையும் பதிவு பண்ணி வைச்சிருக்கும்…காலப்போக்கிலே நாம்ப பார்த்த விஷயத்தை நாம்ப மறந்திடுவோம்…ஆனால் நம்ப மூளை மறக்காது…பல வருஷம் கழிச்சு அதே இடத்துக்கு நாம்ப போகும் போது சடனா நம்ப மூளை என்னைக்கோ நடந்த ஒரு நிகழ்வை கண்ணு முன்னாடி படம் மாதிரி ஓட்டிட்டு போகும்…இதுக்கு பேரு தான் மெம்மரி கிளிச்…இன்னும் சில பேருக்கு ஏதோ ஒரு சம்பவத்தாலே அவங்க கடந்த காலம் மறந்திருக்கலாம்…ஆனால் அவங்களோட நினைவுகள் மூளைக்குள்ள ஒரு புகைப்படம் மாதிரி ஸ்டோராகி இருக்கும்…இதுக்கு பேரு தான் ஷட்டர் மெம்மரி…இப்போ அவங்க கடந்த காலத்தை மறந்திட்டு புதுசா ஒரு வாழ்க்கைய வாழ்ந்தாலும் அவங்க கடந்த காலத்தை சேர்ந்த ஏதோ ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ அல்லது இடத்தையோ பார்க்கும் போது அவங்களுக்கு இந்த மாதிரி அதிர்ச்சி உண்டாகி மயக்கம் வர வாய்ப்பிருக்கு…அது மாதிரி முகிழ்மதிக்கு ஏதாவது நடந்திருக்கலாம்னு சொல்லறேன்” என மிகவும் பொறுமையாக அவனிற்கு புரியும் விதமாக அனைத்தையும் விளக்கினார்.

ஆனால் அவர் கூறியதை கேட்ட ரத்தினவேலால் தான் அவை எதையும் நம்ப முடியவில்லை.

அதனால் “அப்படியிருக்க வாய்ப்பில்லையே டாக்டர்…” என முகிழ்மதி மற்றும் நட்சத்திரா இருவரின் வாழ்க்கையை பற்றியும் எடுத்துச் சொல்ல,

மருத்துவரோ தோளை குலுக்கி “நான் என்னோட யூகத்தை சொன்னேன் மிஸ்டர் ரத்தினவேல்…அப்படி தான் இருக்கணும்னு என்னாலே நூறு சதவீதம் அடிச்சு சொல்லமுடியாது…ஆனால் ஒரே ஒரு சதவீதம் அப்படி மட்டும் இருந்திட்டால் அவங்களை நாம்ப டீரிட் பண்ணறது ரொம்ப ஈஸி…” என்று மருத்துவ ரீதியாக மேலே சில விடயங்களை கூறி,அவனை மேலும் அதிகமாக குழப்பி விட்டிருந்தார்.

தன் குழப்பத்திற்கு விடைத் தேடி வந்தவனோ இப்போது ‘முகிழ்மதி நட்சத்திராவா?இல்லை…அதுக்கு வாய்ப்பு இல்லையே’ என சுவற்றில் முட்டிக்கொள்ளாத குறையாக சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தான்.

நட்சத்திராவிற்கும் முகிழ்மதிக்கும் அனைத்தும் ஒத்துப்போனாலும் அவனால் இணைக்கமுடியாத ஒரு புள்ளி சந்திரமதி!

அதனால் அவன் மீண்டும் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்க ‘காட்’ என அமைதியற்ற நிலையில் தவித்தான்.

அதேசமயம் வீரின் இல்லம்,

முகிழ்மதி சந்திரமதியின் கட்டளைக்கு இணங்கி வேகமாக பக்கத்து அறைக்கு தேவகியை காண ஓடி வந்தாள்.

ஆனால் அவள் அங்கு வந்த சமயம் தான் தேவகி மெதுவாக எழுந்து அமர்ந்துக் கொண்டிருந்தார்.

அவர் எப்போதும் போல் எழுந்து அமர்ந்தவுடன் “ந..ட்சத்திரா…நட்சு…” என புலம்ப ஆரம்பித்திருந்தார்.

முகிழ்மதி ஒரு பதட்டத்தில் உள்ளே நுழைந்திருந்தாலும் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்த கணமே மனமெல்லாம் ஒரு மாதிரி பிசையத் தொடங்கின.

அவர் குனிந்த தலையுடன் அமர்ந்திருப்பதை கண்டுவிட்டு அவள் வேகமாக முன்னேறிய வேளை அவரின் வாயிலிருந்து “நட்சத்திரா” என்ற வார்த்தை மீண்டும் வெளிவந்திருக்க,

அதைக்கேட்டவளின் மேனியிலோ பெரும் அதிர்வு!

அதையும் மீறி அவர் அருகே மெது மெதுவாக நடந்துச்சென்றவளின் இதயமெல்லாம் ஏனோ வழக்கத்திற்கு மாறாக படபடத்திட,அவளையும் மீறி “அ..ம்மா” என்ற அழைப்பு வெளி வந்திருந்தது.

சத்தம் குறைவாக அவளின் குரல் வெளி வந்திருந்தாலும் அவை அவரின் செவியில் விழுந்ததற்கு அடையாளமாய் தேவகி இமை உயர்த்தி அவளை பார்த்தார்.

அவளின் குரல் கேட்டு தலையுயர்த்திய நபரை பார்த்த முகிழ்மதியிற்குள் பல ஆயிரம் மின்சாரம் ஒரு சேர தாக்கிய அதிர்ச்சி உண்டாகின.

அவளின் சிந்தைக்குள் புதைந்து கிடந்த காட்சிகள் எல்லாம் மின்னல் போல் அவளை மீண்டும் வெட்டிச்செல்ல “அம்மா…” என தலையை தாங்கி அப்படியே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

அவளது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து ஒரு சத்தமான கேவல் அவளையும் மீறி வெளிவந்தது என்றால்,அவளின் விழிகளிலிருந்து கண்ணீர் கரகரவென வழியத் தொடங்கின.

அவளின் நினைவடுக்கில் ஒரு பழுப்பு நிற புடவை அணிந்த பெண்மணி ஒரு குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சவது போல் இருந்தன.

மற்றொரு புறம்,ஒரு நான்கு வயது குழந்தையோடு பதின்ம வயதில் இருந்த ஒரு இளைஞன் ஓடியாடி விளையாடுவது போன்ற காட்சி உருவாகிட,அதே குழந்தையுடன் வேறொரு இளைஞன் சிரித்து பேசிக்கொண்டே ஒரு சிலையை வடிப்பது போன்ற காட்சியும் கண் முன் வந்து சென்றன.

இதுப்போல் பல்வேறு காட்சிகள் அவளின் விழி முன் வந்து செல்ல,அவை அனைத்து நிகழ்வுகளும் இந்த வீட்டில் இருக்கும் பொருட்களோடு ஒத்துப்போயின.

மேலும்,அவளது நினைவில் வந்த பெண்மணி அச்சு அசலாக தேவகியை உரித்து வைத்திருந்தார்.

அதனால் அந்த காட்சிகளின் வீரியம் தாளாமல் “அம்மா…அம்மா” என அவளின் இதழ்கள் ஒட்டுமொத்த வலியையும் சுமந்து வந்தது போல் முணுமுணுத்தன.

அதுவரை அவளையே புருவம் சுருக்கி பார்த்திருந்த தேவகி,அவள் “அம்மா” என தவிப்புடன் அழைத்த மறுநொடியே “நட்சத்திரா அம்மாவை தேடி வந்திட்டியாம்மா?” என வேகமாக அவளை வந்து அணைத்துக்கொண்டார்.

அவர் அணைத்த மறு நிமிடமே பாவையவளின் மேனி மொத்தமும் அவரின் கரத்தில் உருகிக் குழைந்தன.

ஒரு கன்று பசுவை பார்த்து குழைவது போல்…

ஒரு குழந்தை தன் தாயிடம் குழைவது போல்…

பாவையவளின் உடலும் உள்ளமும் அவரின் அரவணைப்பில் நெகிழ்ந்தன.

அவரின் நெஞ்சில் வாகாக பொருந்திக்கொண்ட அந்த வளர்ந்த மதலையின் கண்ணில் வழிந்த நீரெல்லாம் கானல் நீராய் மறைந்துப்போயின.

அவளின் உடலில் புது இரத்தம் பாய்ந்திட…

பல வருடங்களாய் அவள் எதிர்பார்த்த அந்த தாயின் அன்பும் அரவணைப்பும் அவரின் ஒற்றை அணைப்பில் கிடைத்திட…

அவளின் யுகங்கள் கடந்த தேடுதலுக்கான விடை கிடைத்தாற் போன்ற ஒரு நிம்மதி அவளுக்குள்!

அவரின் அந்த ஒற்றை தொடுகையில் அவள் அவளையே மறந்துவிட்டாள்.

அவளின் ஒட்டுமொத்த துன்பங்களும் பறந்தோடி செல்வது போல் அவளுள் ஒரு பிம்பம்!

‘தாம் யார்?அவர் யார்?தாம் எங்கு இருக்கிறோம்?’ என்ற எதுவுமே அவளின் நினைவடுக்கில் இல்லை.

அனைத்தும் காற்றோடு காற்றாய் கரைந்துப் போயிருந்தன.

பல வருடங்களாய் காடு மேடெல்லாம் சுற்றி திரிந்து மீண்டும் தாய் மடி வந்து சேர்ந்தாற் போன்ற ஒரு இனிய பரவசம் அவளுக்குள்!

“அ…ம்மா…” என அவரிடம் மேலும் ஒண்டிய பெண்ணவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்ட அந்த தாயின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது.

அவர்கள் இருவரும் அணைத்து அமர்ந்த காட்சியை கண்டு தான் சந்திரமதி சிலையாகிப்போனாள்.

அதேசமயம் வீட்டிற்குள் வந்த வீர் தாயின் அறை முன்பு சமைந்து நின்றிருந்த சந்திரமதியை பார்த்துவிட்டு புருவம் சுருக்கினான்‌.

“என்னாச்சும்மா மதி?” என தங்கையை கேட்டுக்கொண்டே அங்கு வந்தவனும் அந்த காட்சியை கண்டு அவளிற்கு மேலான அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டான்.

அவன் அதிர்ந்ததெல்லாம் ஒரே ஒரு நொடி தான்!

அடுத்த கணமே ‘என்ன நடக்குது இங்க?’ என்பது போல் பார்த்த வீர் தாயை நோக்கி ஒரு அடி முன்னே வைத்தான்.

சட்டென அவனின் கரம் பற்றி தடுத்த சந்திரமதி “அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..வாங்க” என அவனை அப்படியே வெளியே அழைத்து சென்றாள்.

இருவரும் வரவேற்பறைக்கு வந்ததும் “எப்படிம்மா இதெல்லாம்?அதுவும் அம்மா…இப்படி யாரையும் ஏத்துக்கமாட்டிங்களே?” என தவிப்பும் தடுமாற்றமும் கலந்த குரலில் அவன் கேட்க,

சந்திரமதியோ அடைத்த தொண்டையை செருமி “அண்ணா நான் கேட்கிறனேனு தப்பா நினைக்காதீங்க?நீங்க உங்க தங்கச்சி இறந்ததை கண்ணு முன்னாடி பார்த்தீங்களா?” என ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்க,

அவனோ அன்றைய நாளின் நினைவில் அவனின் முகம் கசங்கிட “அதை எப்படிம்மா மறப்பேன்…என் இரண்டு கையாலே தான் என் டாலுக்கு கொள்ளி வைச்சேன்…அந்த நாள் இன்னும் என் நினைவிலே இருக்கு” என தனது இருகரங்களையும் பார்த்தவனிற்கு மீண்டும் கண்கள் கலங்குவது போல் இருந்தன.

அவனின் வருத்தம் கண்டு அவளின் உள்ளம் வாடினாலும் பேச வேண்டிய விடயம் கண் முன் நிற்க,அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு அவனிடம் பேசினாள்.

“அண்ணா கொள்ளி வைச்சீங்க சரி…கொள்ளி வைக்கிறதுக்கு முன்னாடி உங்க தங்கச்சியோட முகத்தை கடைசியா பார்த்தீங்களா?” என ஒரு வித படபடப்புடன் கேட்க,

அவள் கேட்பதின் பொருள் புரியாத வீரோ “அதைப்பத்தி எதுவும் கேட்காதேம்மா…அந்த நாள் ஞாபகம் வந்தாலே என்னோட ஒட்டுமொத்த உடலும் துடிக்குது…” என அதைப்பற்றி பேச முடியாமல் அவன் தவிர்க்க நினைக்க,

அவளோ “அண்ணா இது உணர்ச்சிவசப்படறே நேரமில்லை…ஐ நீட் கிளியர் ஆன்சர்…ஒரு காரணமா தான் கேட்கிறேன்…சொல்லுங்க…கடைசியா அவ முகத்தை பார்த்தீங்களா?” என அவனிடம் தோண்டி துருவி கேட்க,

அவனோ “இல்லைம்மா…விபத்திலே  அவளோட முகமெல்லாம் சிதைஞ்சு ஒரு மாதிரி கோரமா இருந்துச்சு…இன்னைக்கு வரைக்கும் அதை என்னாலே மறக்கவே முடியலை…” என சொல்லிக்கொண்டே இருந்தவனின் குரல் இடறியது.

அவனையும் மீறி ஒரு சொட்டு கண்ணீர் கண்ணிலிருந்து வழிந்துவிட்டன.

அதை அவன் துடைக்க தோன்றாமல் அவன் நிற்க,

அவன் கூறியதை கேட்டு நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிய‌ சந்திரமதி “அண்ணா எனக்கு தெரிஞ்சு உங்க தங்கச்சி சாகலை…இன்னும் உயிரோடு தான் இருக்காள்…” என பிடீகையுடன் புதிர் போட்டவளை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவனின் இமைகள் இடுங்கின.

“என்னம்மா சொல்லறே?அது எப்படி?” என கேட்டவனின் குரலில் ஆற்றாமையும் ஏமாற்றமும் இணைந்தே தோன்றின.

அவளோ அவனை ஆழ்ந்து நோக்கி “சரியான மனநிலையில் இல்லைனா கூட அம்மா தன்னோட குழந்தையை கண்டுப்பிடிச்சிட்டாங்க…நீங்க இன்னும் அவளை கண்டுப்பிடிக்கலையா அண்ணா?” என சிரித்துக்கொண்டே அலட்சியமாக புருவம் உயர்த்தி கேட்டவளின் பேச்சு அப்போது அவனிற்கு புரியவில்லை.

அதனால் அப்போதும் மனச்சோர்வுடனே “என்னம்மா ஏதேதோ சொல்லறே?ஒண்ணும் புரியலையே” என மேலோட்டமாக சொல்லிக்கொண்டே சென்றவனிற்கு சிறிது சிறிதாக அவள் கூறியதன் பொருள் உறைத்தன.

இப்போது அவனின் விழிகள்  இரண்டும் அதிர்ச்சியில் விரிய “எ..ன்ன” என கேட்டவனை கண்ட சந்திரமதி குறும்புடன் “ஒரு வழியா எங்க அண்ணாவுக்கு விஷயம் புரிஞ்சிடுச்சுனு நினைக்கிறேன்” என்றாள் புன்னகைத்தவாறு…

அவனிற்கு இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை…

ஆனால் அவள் சொன்னதை கேட்ட ஆடவனின் உச்சந்தலையில் உள்ளங்கால் வரை இருந்த ஒவ்வொரு அணுவிலும் உற்சாக குமிழிகள் நிரம்பி வழிந்தன.

வாழ்நாளில் திரும்பவே கிடைக்காத பொக்கிஷம் தன் கை சேர்ந்தால் எப்படியொரு மகிழ்ச்சி உண்டாகும்…

அதையும் விட நூறு மடங்கு ஆரவாரம் கொண்டன அவனின் உதிர நாளங்கள்…

அவனிற்கு அக்கணம் தன் உடலை விட்டு உயிர் நீங்கனால் கூட இன்பம் தான் என்றதொரு நிலையில் எல்லையில்லா உவகையில் அவன் உள்ளம் ஆர்ப்பரித்தது.

வானத்தில் பறந்து குதூகலித்த அவனின் மனம் சந்திரமதியை பார்த்ததும் தரையிறங்கின.

“மு‌.‌‌..கிழ் தான் டால்னு எப்படிம்மா இவ்வளவு உறுதியா சொல்லறே?அவ என் டால்னா…அப்போ நீ?” என கேள்வியை முடிக்க முடியாமல் அவன் திணற,

அதுவரை அவளின் முகத்தில் இருந்த புன்னகை இப்போது மறைந்தது.

அவளின் முகம் இப்போது இருண்டிட அவளின் இதழ்கள் துக்கத்தில் துடித்தன…

அவளிற்கு தெரிந்த விடயங்களை கோர்த்து முகிழ்மதி தான் நட்சத்திரா என்று கண்டறிந்துவிட்டாள்…

அதை வீரிடம் வெளிப்படுத்தியும் விட்டாள்.

ஆனால் அவளை பற்றிய விபரங்கள் எதுவும் அவளிற்கே தெரியாது…

பின்பு எங்கனம் அவனிடம் அவள் பதில் கூற முடியும்..

அவன் கேட்கும் அனைத்து கேள்விக்கான விடையையும் தரக் கூடிய ஒரே ஒரு நபர் விஜயலட்சுமி மட்டும் தான்!

அதைத் தேடியே ரத்தினவேலும் விஜயலட்சுமியை காண வந்திருந்தான்.

அந்த இருட்டு அறையில் கடந்த சில நாட்களாக ஆகாரம் எதுவுமின்றி குற்றுயிராய் கிடந்தவரை வேறொரு இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அவரை தரையில் தள்ளிய கணம் விஜயலட்சுமியின் முன்பு இருக்கை ஒன்று போடப்பட்டது.

அந்த இருக்கையில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்த ரத்தினவேலை தலையுயர்த்தி பார்த்த விஜயலட்சுமி “நீ…நீயா?” என பேரதிர்ச்சியுடன் கேட்க,

தனது மீசையை முறுக்கி விட்டப்படி “நானே தான்” என இதழை வளைத்து புன்னகைத்தவனின் முகத்தில் வெஞ்சினம் குடியேறியிருந்தது.

அவரோ உச்சக்கட்ட பயத்தில் “நீ எதுக்காக என்னை கடத்தி இப்படி சித்திரவதை செய்யறே?” என்று கேட்டவரின் குரல் தடுமாறின.

பல நாட்களாக இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததோடு உணவு நீர் எதுவுமின்றி கிடந்தவரின் உடல் களைப்பில் வாடி வதங்கியிருந்தது.

அவரது கனத்த சரீரம் கூட சிறிது இளைத்திருக்க,களைந்த கூந்தலுடன் உடையெங்கும் ஒட்டிய புழுதியோடு நிர்கதியற்ற இழிநிலையில் படுத்திருந்தவரை பார்க்க அவனிற்கு சிறிது இரக்கம் வரவில்லை.

மாறாக,அவனின் மனைவிக்கு அவர் செய்த கொடுமைகளுக்கு இதுவே குறைவு தான் என்று அவனிற்கு தோன்றின.

அதனால் அவரின் கேள்வியை புறம் தள்ளிய ரத்தினவேல் “நீ கேள்விக்கேட்டு பதில் சொல்லற நிலைமையிலே நானில்லை…எனக்கு சில விஷயம் தெரிஞ்சாகணும்?முகிழ்மதி சந்திரமதி பத்தின ரகசியம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் நீ இப்போ சொல்லணும்” என தனக்கே உரிய அதிகார தோரணையில் கேட்க,

அவரோ எதுவும் பேசாமல் மௌனமாகிவிடவும்,அதில் அவனின் கோபம் அதிகரிக்க  “பொண்ணுங்க மேலே நான் எப்பவும் கைவைக்க மாட்டேன்…ஆனால் உன்னை மாதிரி ஆளுங்களை அடிச்சாலும் தப்பில்லைனு தோணுது…ஒழுங்கா நீயா வாயை திறந்து சொன்னால் வலியில்லாமல் தப்பிக்கலாம்…நானா திறக்க வைச்சா உன் உயிர் உடம்புலே இருக்காது” என உச்சக்கட்ட சீற்றத்துடன் அவன் கர்ஜிக்க,

அவனது குரலில் அவரின் நெஞ்சம் அதிர்ந்தாலும் “ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை…அவங்க இரண்டு பேரும் என் புள்ளைங்க தான்…” என பதட்டத்துடன் அவர் மொழிந்ததும்,

“ஜெய்” என அவ்வறையே அதிர அவன் கத்த,அவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு வந்த அந்த ஜெய் குனிந்து அவரின் கரங்கள் இரண்டையும் பின்னால் வைத்து கட்டினான்.

அவரோ “ஆ…ஐய்யோ என்னடா பண்ணறீங்க?” என வலியில் கத்தியதை அங்கிருந்த பணியாளர்கள் சிறிதும் பொருட்படுத்திவில்லை.

தனது கைக்காப்பை பின்னுக்கு தள்ளி “இது ஜஸ்ட் சேம்பிள்…இத்தனை நாள் வெறும் பசியோட வலி தான் அனுபவிச்சே…இனி நீ உண்மைய சொல்லற வரை ஒவ்வொரு வலியா உனக்கு அதிகமாகிட்டே போகும்” என உயிரை ஊடுருவும் குரலில் அவன் மிரட்ட,

அவரோ அப்போதும் “ஐய்யோ ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்க?அவங்க இரண்டு பேரும் என் பொண்ணுங்க தான்…என்னை விடுங்க…எதுக்கு இப்படி பண்ணறீங்கடா?ஆ வலிக்குது…” என கத்தி கதறியவரை கண்டு வெறுப்புடன் முகத்தை சுழித்தான் ரத்தினவேல்.

அவர் அத்தனை வலிகளை தாங்கியும் தன்னை கட்டுப்படுத்திய விதம் ரத்தினவேலினுள் உறங்கிக்கொண்டிருந்த மிருகத்தை தட்டியெழுப்பின.

உடனே அவன் “ஜெய்” என மீண்டும் கத்தியதும் இம்முறை அவரின் ஒரு காலை மட்டும் தூக்கி கையோடு இணைத்து கயிறு கட்டப்பட்டது.

தனது கனத்த சரீரத்தை வைத்து அவர் தரையில் படுத்திருக்க ஒற்றை காலை மட்டும் பின்புறமாக தூக்கி கையோடு இணைத்ததும் அவருக்கு வலி உயிர்ப்போனது.

வீட்டில் சொகுசாக அனைத்தையும் ஏவி வேலை வாங்கிய பெண்மணியின் உடல் இதற்கு அடிப்பணியுமா என்ன?

அதனால் அவரின் உடல் வதையில் துடிக்க,அவர் வாயை திறக்கும் வரை அவனின் தண்டனைகள் ஒவ்வொன்றாக மிகுந்துக்கொண்டே இருந்தன.

அவனின் வஞ்சனைகள் அதிகரிக்க அதிகரிக்க அவரின் உடலில் வலி அதிகரிக்க தொடங்கின.

அப்போதும் அவர் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருக்க அடுத்ததாக அவரை மொத்தமாக தூக்கி தண்ணீர் கிடங்கில் வீச அவன் ஆணை பிறப்பித்ததும் அதுவரை அழுத்தமாக இருந்த விஜயலட்சுமி அஞ்சு நடுங்கி விட்டார்.

‘எங்கு தன்னை அவன் கொன்றுவிடுவானோ?’ என வெடவெடத்துப்போனவர் “ஐய்யோ…என்னை விட்டிரு…விட்டிரு…நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்…என்னை விட்டுரு…கொன்னுடுதே” என அந்த பாழடைந்த இடமே அதிர அலறியவரை நக்கலாக நோக்கிய ஆடவன் அவரை விடும் படி தனது பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

அவரை தன் காலுக்கடியில் போட்டதும் “ஒண்ணு விடாமல் எல்லாத்தையும் சொல்லணும்…எதையாவது மறைச்சே உன்னை உரு தெரியாமல் அழிச்சிடுவேன்…ஜாக்கிரதை” என இருக்கைக்கு முன்னே வந்து அவரின் முகத்தை கூர்ந்து பார்த்தப்படி எச்சரிக்க,

அவரின் நெஞ்சில் நீர் வற்றிப்போனது.

அவன் “சொல்லு” என சிங்கமாய் மாறி கர்ஜித்ததும்,அதில் மேனி தூக்கிவாரிப்போட,அவரோ எச்சிலை கூட்டி விழுங்கியப்படி “முகிழ்மதியும் சந்திரமதியும் என் பொண்ணில்லை…அவங்க இரண்டு பேரும்…” என ஆரம்பித்து அத்தனை வருடங்களாய் அவர் மறைத்து வைத்திருந்த உண்மைகள் அனைத்தையும் அவனிடம் கொட்ட ஆரம்பித்திருந்தார்.
 

முகிழ்மதி 84:


 

 

தேவகி அன்பும் அழகும் நிறைந்த பெண் மட்டுமல்ல…நல்ல திறமையானவளும் கூட!

சிறு வயதிலே பெற்றோரை இழந்துவிட்டதால் அவள் வளர்ந்ததெல்லாம் அவளுடைய பெரியப்பா ஞானசேகரன் வீட்டில் தான்!

அவளின் பெரியப்பா நல்ல மனிதர் என்றாலும்,அவளின் பெரிய அன்னை சுசீலாவிற்கு தேவகியை அந்த வீட்டிற்கு அழைத்து வந்ததில் சிறிதும் உடன்பாடில்லை.

ஏனெனில்,அவருக்கு வாசுகி என்ற மகள் இருந்ததால் அவள் ஒருவளை வளர்த்து ஆளாக்குவதிற்கே மிகுந்த சிரமப்பட வேண்டியதாய் இருந்தது.

இதில் தேவகியின் பாரமும் சேர்ந்துக்கொள்ள,அதன் பொருட்டே தேவகியை அவர் கரித்துக்கொட்டிக் கொண்டே இருப்பார்.

அத்தோடு ஞானசேகரன் ஒரு ரிக்ஷா ஓட்டுனர்…வாசுகியோ கோவிலுக்கு முன்பு பூ கட்டி விற்கும் சாதாரண பெண்.

இரண்டு வேளை உணவை சாப்பிடுவதற்கே அவர்கள் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

அதில் தேவகியும் சேர்ந்தால் அவருக்கு கோபம் வருவது இயல்பு தானே?

தேவகிக்கு அப்போது வயது பத்து என்றாலும்,அவளுக்கு ஓரளவு பெரிய அன்னையின் கோபம் நன்றாகவே புரிந்தது.

ஆதலால்,முடிந்தவரை வீட்டு வேலைகள் தொடக்கம் அவரது பூக்கட்டும் பணி வரை அனைத்திற்கும் தானும் உதவி அவருடைய மன ஆதங்கத்தை சிறிது குறைத்தாள்.

அத்தோடு படிப்பிலும் அவள் படுச்சுட்டி என்பதால்,பள்ளி மற்றும் கல்லூரி இரண்டையும் இலவச அறக்கட்டளை ஒன்றின் மூலமாகவே படித்து தேர்ச்சிப் பெற்றாள் தேவகி.

சிறு வயதிலிருந்து அவளிற்கு ஓவியம் வரைதல் மற்றும் களி மண்ணால் சிலை செய்தல் இரண்டிலும் ஆர்வம் அதிகம் இருந்தது.

அதனால் களிமண்ணால் சில தெய்வ உருவங்கள் எல்லாம் செய்து அவைகளுக்கு வண்ணம் தீட்டி பூக்கடையின் முன்பு வைத்து அதன் மூலமும் பணம் ஈட்டி கொடுத்தாள் தேவகி.

அப்படியொரு புத்திசாலித்தனம் நிறைந்த பெண் அவள்.

அப்போதே அவளின் திறமையை கவனித்து பலரும் பாராட்டியிருந்தார்கள்.

தங்களுக்காக அவள் இப்படியெல்லாம் செய்வதில் ஞானசேகரனுக்கு பெற்ற மகளை காட்டிலும் தேவகி மீது அதீத பாசம் தோன்றின.

அவளின் திறமையிலும் அவருக்கு ஏகப்பெருமை!

ஆகையால்,தேவகி ஈட்டி தந்த வருமானத்தினால் சுசீலாவின் கொதிப்பு அடங்கினாலும்,நாளுக்கு நாள் அவளின் அழகும் கெட்டிக்காரத்தனமும் அவருள் காழ்ப்புணர்ச்சியை அதிகரிக்க செய்தது.

ஏனெனில்,அவரின் மகள் வாசுகிக்கு படிப்பு சுட்டுப்போட்டாலும் வரவில்லை.அத்தோடு அவள் சிறிது மந்தமாக இருந்தாள்.

எந்த பணியையும் மிகவும் நிதானமாக செய்யக்கூடிய பொறுமைசாலி அவள்.

அதனால் அழகு,அறிவு,சுறுசுறுப்பு,திறமை அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த தேவகியின் மீது உள்ளக்கிடங்கு அதிகரித்தது.

அவருக்கு தான் இதில் வெறுப்பு இருந்ததே ஒழிய,தேவகியும் வாசகியும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

இருவரும் ஒன்றாக நல்லத் தோழிகள் போலவே வளர்ந்து வந்தார்கள்.

தேவகியை விட வாசுகி ஆறு வயது பெரியவள் என்பதால் அவளிற்கு பதினெட்டு அகவை முடிந்தவுடன் திருமணம் முடிக்க திட்டமிட்டார் சுசீலா.

வாசுகிக்கோ தனது பெற்றோர்கள் இருவரையும் பிரித்து செல்வதை விட உயிருக்கு உயிரான தோழி தேவகியை பிரிவதை தான் சிறிதும் ஏற்க முடியவில்லை.

அவளை பிரிவதை எண்ணி அப்போதே அவள் கண்ணீரில் கரைந்து காணாமல் போனாள்.

“அக்கா அழாதீங்க…பொண்ணா பிறந்தால் இதெல்லாம் ஒரு நாள் நடந்தே ஆகணும் அக்கா…வேற வழியில்லை…ஆனால் நீங்க கல்யாணம் பண்ணிப்போனாலும் மாசம் ஒருக்கா என்னை வந்து பாருங்க…நானும் பெரியப்பாவும் உங்களை வந்து அப்பப்போ பார்க்கிறோம்” என சிறு குழந்தை போல் அழுத வாசுகியை தேற்றியிருந்தாள் தேவகி.

பன்னிரெண்டு வயதிலே அவருக்கு இருந்த தெளிவு வேறு யாருக்கும் இருக்காது.

பெற்றோரை இழந்த பெண்ணிற்கு மிக குறுகிய நாட்களில் வாழ்க்கை தனது பாடத்தை கற்றுக்கொடுத்து அவளை முதிர்ச்சியாக்கியிருந்தது.

ஆனால் வாசுகியை பெண் பார்க்க வந்த மணமகன்களோ அவரை பார்த்துவிட்டு ‘இந்த பொண்ணு வேணாம்’ என பின்னங்கால் பிடறியடிக்க ஓடிவிட்டனர்.

ஏனெனில்,தேவகியை போல் வாசுகி பேரழகி இல்லை.

மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம்…பூசிய உடல்வாகு…பதினெட்டு வயதை மீறிய ஒரு முதிர்ச்சி அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தன.

அவளிற்கு பதினெட்டு வயது என்றால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.

அவற்றினாலே வரும் வரன்கள் எல்லாம் தட்டிப்போயின.

அதைப்பார்த்து கவலைக் கடலில் மூழ்கினார் சுசீலா.

ஆனால் வாசுகியோ இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை.

அவருக்கு தன் தங்கையுடன் மேலும் சில நாட்கள் உடன் இருக்கலாம் என்ற கொண்டாட்டம்!

ஒரு கட்டத்தில் தேவகி பூப்பெய்தி பருவப் பெண்ணாக உருவெடுத்திருக்க வாசுகியை பெண் பார்க்க வந்த நபர்கள் தேவகியை மணமுடித்து தருமாறு கேட்டு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார்கள்.

அவ்வளவு தான்?

அத்தனை நாட்களாய் அவர் மனதிற்குள் வைத்திருந்த குமுறல்கள் அனைத்தையும் அந்த சந்தர்ப்பத்தில் மொத்தமாக வெளியில் கொட்டியிருந்தார்.

“அப்பன் ஆத்தாளை முழுகினவளை வீட்டுக்கு கூட்டிட்டு வராதேனு தலைப்படா அடிச்சுக்கிட்டேன்…இன்னைக்கு பார்த்தியா நீ வளர்த்த பாம்பு நம்ப பொண்ணோட வாழ்க்கையையே முழுங்கிட்டு நிக்குது…எல்லாம் நாசமா போச்சு…இவ கால் வைச்ச வீடு விளங்கவே விளங்காது…இவ அப்பன் ஆத்தா மாதிரி நம்மளையும் மண்ணுக்குள்ள புதைக்கிற வரை இவ விடமாட்டாள்…” என நெஞ்சு நெஞ்சாக அடித்து ஒப்பாரி வைத்தவரின் சொற்கள் சிறு பெண்ணான தேவகியின் இதயத்தில் ஈட்டியைச் சொருகின.

ஆனால் அவளின் காயத்திற்கு மருந்து தடவி இதம் சேர்த்தது என்னவோ வாசகியும் பெரியப்பாவும் தான்!

தங்கையை அவ்வாறு பேசியவுடன் அமைதியின் சொரூபமான வாசுகியே தாயின் பேச்சில் அன்று வெகுண்டுவிட்டாள்.

“அம்மா யாரோ ஏதோ சொன்னதுக்காக தேவகி என்ன பண்ணுவாள்?அவளை எதுக்கு இப்போ கடிச்சு கொட்டறீங்க?இதெல்லாம் அநியாயம்மா” என தங்கைக்கு ஆதரவாக நின்றாள் அந்த சாந்த சொரூபி.

அவளுடன் பெரியப்பாவும் உடன் நிற்க “அப்பனுக்கும் மகளுக்கும் இன்னைக்கு நான் சொல்லறது புரியாது…இவளாலே நீங்க இரண்டு பேரும் மானங்கெட்டு நிக்கும் போது தான் தெரியும்…அப்போ வைச்சுக்கிறேன் உங்களை…எப்படியோ நாசமா போங்க” என வசைப்பாடிவிட்டு அமைதியாகிவிட்டார்.

மற்ற இருவரும் அனலில் இட்ட புழுவாய் துடித்த பெண்ணவளை சமாதானம் செய்தாலும்,சுசீலாவின் சொற்கள் அவளின் மனதில் ஒரு தீராத காயத்தை உருவாகியிருந்தது‌.

ஏனெனில்,தேவகி ஒரு சுயமரியாதை உள்ள பெண்!

அத்தோடு பெரிய தந்தையின் வீட்டில் இருந்தாலும் தன்னால் முயன்ற தொகையை சம்பாதித்து அவர்களிடம் கொடுத்துவிட்டு வாழக்கூடிய தன்மானம் உள்ளவள்.

அதே போல் வீட்டிலிருக்கும் ஒரு வேலையை விடாமல் அவர்கள் தனக்கு சோறு போடும் நன்றிக்கடனிற்காக அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்பவள் அவள்.

அப்படியான சிறுப்பெண்ணை கழுத்தை சுற்றிய பாம்பு போல் அவர் பேசிய விதம் அவருக்குள் ஒரு தீர்க்கமான முடிவை கொடுத்திருந்தன.

அவளின் அந்த முடிவு மிகப்பெரிய விளைவை கொண்டு வரும் என அந்த வயதில் அறியவில்லை.

அன்றிலிருந்து அவர்கள் அனைவரிடமும் இருந்து ஒதுங்கி வாழ பழகிக் கொண்டாள் தேவகி.

வாசுகியாக அவளிடம் பேச வந்தாலும் அவள் பேசுவதில்லை.

அதில் வாசுகிக்கு வருத்தம் உருவாகினாலும் தங்கையின் மனநிலை அறிந்து இறுதி வரை அவளுடனே துணை இருந்தாள்.

இந்நிலையில் வாசுகிக்கு ஒரு வரன் கூடி வர,அவளிற்கு திருமணம் நல்ல முறையில் நடந்தேறின.

அச்சமயம் தேவகிக்கு வெறும் பதினைந்து வயது தான்!

அதனால் அவள் அப்போதும் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை.

இந்நிலையில் வாசுகிக்கு திருமணம் நடந்த ஒரே வருடத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அவனிற்கு ‘வீர் பிரதாப்’ என்ற பெயரும் சூட்டப்பட்டிருந்தது.

அந்த பெயரை தேர்ந்தெடுத்தது கூட தேவகி தான்!

தமக்கையிடமிருந்து அவள் ஒதுங்கினாலும் வாசுகி என்ற அன்பான பெண் அவளை தன்னோடு இணைத்து பிடித்து வைத்திருந்தாள்.

வீருக்கு நான்காம் அகவை வரும் சமயம் வரை வாசுகியின் திருமண வாழ்வு நன்றாக சென்றுக்கொண்டிருந்தது.

அச்சமயம் தேவகியும் கல்லூரியின் முதல் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

பெண்கள் பள்ளிப்படிப்பை முடிக்க திணறும் காலத்தில் அவள் கல்லூரி வரை சென்றுப் படித்தாள்.

அதுவும்,ஒரு காசு செலவில்லாமல் இலவச கல்வி முறையில்!

இந்நிலையில் ஒரு நாள் தனது கணவனுடன் சண்டையிட்டு பிறந்தகத்திற்கு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள் வாசுகி.

அதற்கு காரணம்,வீரின் தந்தை குடிப்போதைக்கு அடிமையாகி தினந்தோறும் அவளிற்கு நரகத்தை காட்டுவதாக சொன்னாள்.

முரட்டு ஆண்களுடன் கூட ஒரு பெண் வாழ்ந்து விடலாம்.ஆனால் மதுவிற்கு அடிமையாகிய ஆடவனுடன் எல்லாம் வாழ்வது சாத்தியமில்லாத ஒன்று!

வாசுகி அழுதுக்கொண்டே கூறியதை கேட்டதும் ஒட்டுமொத்த வீடும் ஸ்தம்பித்தது.

இதற்கெல்லாம் மேலாக வாசுகியின் கணவன் சுரேந்திரன் அவளை திருமணம் செய்தது கூட தேவகிக்காக என்றதும் தேவகி உடைந்து நொறுங்கிப்போனாள்.

தன்னால் தமக்கையின் வாழ்வு பாழாகியிருப்பதை அறிந்து அந்த சின்னஞ்சிறிய உள்ளம் வேதனையில் துடிக்க “அட குடிய கெடுக்க வந்த பாவி…நான் அப்போவே சொன்னனே” என தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார் சுசீலா.

அங்கிருந்த யாவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அன்றைய காலக்கட்டத்தில் தமக்கை இருக்கும் போதே தங்கையையும் சேர்த்து திருமணம் செய்து கொள்வதெல்லாம் சகஜமானது‌.

அதனால் வாசுகி என்னும் தூண்டிலை போட்டு தேவகியென்னும் மீனை பிடிக்க காய் நகர்த்தியிருந்தான்,அந்த கேடுக்கெட்டவன்.

தினந்தோறும் அவளை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் செய்த கொடுமைகள் போதாது என்று ‘உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி வைச்சா நீ இந்த வீட்டிலே இருக்கலாம்…இல்லைனா வீட்டை விட்டு வெளிய போடி’ என அந்த இரக்கமற்ற மிருகம் அவளை அடித்து விரட்டியிருந்தது.

கண்ணீரும் கம்பலையுமாக இதையெல்லாம் வாசுகி சொல்லிக்கொண்டிருக்க,அவரின் கையிலிருந்த குழந்தையோ ஒன்றும் புரியாமல் அனைவரையும் கண்டு பரிதாபமாய் விழித்தது.

அந்த மதலையை பார்த்த தேவகியின் உள்ளம் குற்றவுணர்வில் பரிதவித்தன.

பதினெட்டு வயதான பாவையவளிற்கு தாம் என்ன குற்றம் செய்தோம் என்று கூட புரியவில்லை.

‘இயற்கை கொடுத்த அழகை தவிர அவள் வேறு எந்த குற்றமும் செய்யவில்லையே…ஏன் இப்படி தன்னால் யாருக்கும் நிம்மதியில்லை…நான் என்ன பாவம் செய்தேன்?’ என்றெல்லாம் தன்னை தானே அவள் வருத்திக்கொண்டிருக்க,சுசீலாவும் அவளின் மனதை மேலும் நோகடிக்கும் விதமாக அவரை வார்த்தையால் வதைத்து கொன்றார்.

அதுமட்டுமன்றி கணவனது வீட்டிற்கு இனி செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த வாசுகியை தரதரவென இழுத்துச் சென்று அந்த கொடும்பாவியிடமே ஒப்படைத்துவிட்டு வந்திருந்தார் சுசீலா.

அதற்கு வரதட்சணையாக மேலும் சில சீர் வரிசைகளை கொட்டி குவித்து “மாப்பிள்ளை இதை வைச்சுக்கிட்டு என் பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க…இனி அவ உங்க மனசு கோணாமல் நல்லா நடந்துப்பாள்” என காலில் விழுந்து இறைஞ்சி மகளை விட்டு வந்திருந்தார்.

அங்கு அவரை அனுப்புவதில் அங்கிருந்த யாருக்கும் விருப்பமில்லை.

குறிப்பாக,ஞானசேகரனே “வேணாம் சுசீலா…அந்த புள்ளை உடம்பிலே காயத்தை பார்த்தீயா?எப்படி போட்டு மாடு மாதிரி அடிச்சிருக்கான்…அங்க அவளை அனுப்பி வைக்க வேணாம்” என பலமுறை மனையாரிடம் யாசித்து பார்த்துவிட்டார்.

ஆனால் சுசீலாவோ “சும்மா இருய்யா…பொண்ணை வாழவெட்டியா வீட்டுலே வைச்சுக்கிட்டு ஊரு முழுக்க பேச்சு வாங்க சொல்லறீயா?குடும்பம்னா இப்படி சண்டை சச்சரவு எல்லாம் வர தான் செய்யும்…அதெல்லாம் நாள் போக போக எல்லாம் சரியாகிடும்” என கணவரை அதட்டி அடக்கிய தோடு “முதல்ல இந்த சனியனை தலைமுழுகு…எல்லாம் இதிலே வருது” என அங்கு ஓரமாக நின்றிருந்த தேவகியின் மனதை கத்தியால் சொருகவும் தவறவில்லை அவர்.

நாட்கள் செல்ல செல்ல,தேவகிக்கு அந்த வீட்டில் இருப்பது நரகம் போல் தான் இருந்தது.

வீட்டை விட்டு வெளியேறி செல்லும் அளவிற்கு அவளிற்கு துணிச்சலும் இருக்கவில்லை.

இந்நிலையில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தாலும் தேவகியின் இயற்கை எழில் அபரீதமாக மின்னியதை பார்த்த பல ஆண்களுக்கும் தலைகிறுகிறுத்துப் போனது.

அவளின் மேல் உள்ள ஈர்ப்பு அவளது திறமையை பற்றி அறிந்து கொண்டு காதலாக மாறிய கதையும் பலது உண்டு.

அவளிடம் பலரும் தங்களது நேசத்தை வெளிப்படுத்தி தலைக்குப்புற விழுந்து மண்ணை கவ்வியிருந்தனர்.

ஏனெனில்,தேவகி எந்தவொரு ஆணிடமும் இரண்டு வார்த்தை நின்று பேச கூட மாட்டார்.

ஆண்களை எதிர்கொள்ளும் அவளின் நேர்க்கொண்ட பார்வையே பலரையும் ஓட வைத்திருந்தன.

ஒரு சிலர் அவளின் பதிலால் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர்.

மொத்தத்தில்,அந்த கல்லூரியில் படித்த ஆண்களுக்கு ஒரு எட்டாத மதி தான் தேவகி!

அதில் பலருக்கும் வருத்தம்!

ஆயினும்,நிதர்சனம் அறிந்து தூரத்திலிருந்தப்படியே அவளின் அழகை ரசிக்க கற்றுக்கொண்டனர்.

ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகத்தில் உண்டு என்பது போல் அதே கல்லூரியில் வேறொரு பிரிவை சேர்ந்த ஒருவன் தேவகியின் மனதை கவர்ந்திருந்தான்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top