முகிழ்மதி 80,81,82

முகிழ்மதி 80:


 

 

முகிழ்மதிக்கு இருந்த அதே அளவு ஆர்வமும் படபடப்பும் சந்திரமதிக்கும் இருந்தன‌.

அதனால் வீரிடம் கூறிய நேரத்திற்கு முன்பாகவே அவளும் விரைந்து தயாராகி அவன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

பத்தரை மணிக்கு வருவதாக உரைத்த காரிகை அங்கு வந்து சேரும் போது காலை 9 மணி!

‘ரொம்ப சீக்கிரம் வந்திட்டமோ?’ என நெற்றியை நீவிக்கொண்டே வந்த சந்திரமதிக்கு வீட்டின் நுழையவாயிலை திறக்க தயக்கமாக இருந்தன.

அவள் வாசலில் நின்றதெல்லாம் ஒரு கணம் தான்!

அதன்பிறகு ஒரு பெருமூச்சுடன் அந்த பெரிய மரக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

வீட்டின் பசுமையான தோட்டத்தில் தொடங்கி அங்கிருந்த ஒவ்வொரு வேலைப்பாடுகளும் பாவையவளின் கண்ணை கவர அனைத்தையும் ரசித்துக்கொண்டே அந்த கல் பாதையில் முன்னேறி சென்றாள்.

அவளை அதிகமாய் கவர்ந்தது அந்த வெண்ணிற ஊஞ்சலும்,அந்த நீரூற்றும்!

அவற்றினை கண்டு மெய்மறந்து அவள் நின்ற நேரம் “மதிம்மா என்ன சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்திட்டே?” என வீரின் வியப்பு குரல் கேட்டதும் அவனை நோக்கி திரும்பினாள் சந்திரமதி‌.

அவன் அப்போது தான் குளித்து வந்திருந்தான் போலும்!

அவனது தலை மூடியின் ஈரம் கூட காயாமல் நீர் சொட்ட சொட்ட அவன் நின்றிருப்பதை பார்த்து “நைட் தூக்கம் வரலைண்ணா.அதனாலே காலையில் சீக்கிரம் எழுந்து ரெடியாகி வந்திட்டேன்…பட் ரொம்ப சீக்கிரம் வந்திட்டனோ?” என இயல்பாக அவள் பேசிய விதம் அவனை ஈர்த்தது.

அதனால் மெல்லியதாக புன்னகைத்த வீர் “நந்திங் உள்ளே வாடா…அம்மாவும் இன்னைக்கு நேரமே எழுந்திட்டாங்க…அதனாலே அவங்களும் கொஞ்ச நேரம் முன்னாடி தான் சாப்பிட்டு தூங்குறாங்க…நீ வா” என பேசிக்கொண்டே அவளை உள்ளே அழைத்துச்சென்றான்.

வீட்டின் வெளித்தோற்றத்தை வேடிக்கை பார்த்தப்படியே உள்ளே வந்தவளிற்கு உள் தோற்றம் அவளை பிரம்மிக்க வைத்தன.

அவளிற்கு ஏதோ கலைக்கூடத்திற்குள் நுழைந்தது போன்ற ஒரு மாயை!

அங்கிருந்த அனைத்து பொருட்களிலும் கலைநயம் மிகுந்து இருந்தது.

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கதை சொல்வது போல் அத்துணை அம்சமாய் இருந்தன.

அவை அனைத்தையும் விழி விரித்து நோக்கியவாறே “உங்க வீடு ரொம்ப அழகா இருக்குண்ணா” என்றாள் சிலாகித்து பாராட்டி…

அவனோ அவளை நோக்கி திரும்பி “உங்க இல்லை நம்ப…” என திருத்தினான்.

அவள் எதுவும் பேசவில்லை என்றாலும் தமையனின் இந்த உரிமையான கடிதல் காரிகையின் நெஞ்சில் ஒரு இதம் பரவ செய்தன.

அதனால் இலேசாக இதழ்பிரித்து புன்னகைத்தவள் “சரி” என தலையசைத்து “அண்ணா இந்தாங்க” என வாங்கி வந்திருந்த பழங்களை அவனிடம் நீட்டினாள்.

அவனோ நெகிழி பையில் இருந்த பழங்களை கண்டுவிட்டு “ஏம்மா நமக்குள்ள இதெல்லாம் அவசியமா?” என மனத்தாங்கலுடன் கேட்டான்.

தங்கை தன்னை வெற்று ஆளாக நினைத்து தள்ளி வைக்கிறாளோ என்றெண்ணி ஒரு கணம் சுணங்கிப்போனான் அவன்.

அவனின் வருத்தம் அறிந்த பெண்ணவளோ “நானா இதை வாங்கிட்டு வரலைண்ணா…விஜிம்மா அவங்க சார்பாக உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க” என விளக்கம் கூறி பையை நீட்டினாள்.

அதன்பிறகே அவனின் மனம் ஆறுதலடைந்தது.

அத்தோடு அவன் அவளிடம் பையை வாங்கியப்படி “விஜிம்மா…” என கேள்வியாக பார்க்க,

அவளோ “அதான் அண்ணா…என்னை ஹாஸ்டெல்ல சேர்த்தாங்களே…அவங்க” என அவரை பற்றி விவரித்தாள்.

உடனே நெற்றியை ஒரு விரலால் நீவியவன் “யாயா மறந்திட்டேன்…அவங்களையும் கூட கூட்டிட்டு வந்திருக்கலாமில்லைம்மா” என கேட்க,

பாவையவளோ “இல்லைண்ணா நான் கூப்பிட்டேன்…பட் அவங்க கொஞ்சம் சங்கடப்படறாங்க…” என்றாள் ஒரு பெருமூச்சுடன்.

அவரின் தயக்கத்திற்கான காரணத்தை யூகித்த வீர் “சரி விடும்மா…அடுத்த முறை நானே அவங்ககிட்ட வந்து பேசறேன்…அவங்களுக்கு ஒரு நன்றியும் சொல்ல வேண்டியது இருக்கு” என்றவாறே பழத்தை உணவு மேசையின் மீது வைத்தான்.

அவளோ “நன்றியா எதுக்கு?” என புரியாமல் கேட்க,

“என்னம்மா இப்படி சொல்லறே?எந்த வித பலனும் எதிர்பார்க்காமல் உன்னோட கஷ்டக்காலத்திலே கூட இருந்திருக்காங்களே…அவங்களுக்கு முறையா நாம்ப நன்றி சொல்லணுமில்லைம்மா” என சொல்ல,

“ஓ…அதை சொல்லறீங்களா?சரி” என சிரித்தவளின் விழிகள் அந்த வீட்டில் ஒரு புகைப்படம் கூட இல்லாததை கவனித்தன.

ஆனால் அதைப்பற்றி அவள் எதுவும் கேட்கவில்லை.

அதற்குள் வீரோ அவளின் களைத்த முகத்தை கண்டு “உன்னை பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலை…இங்க தோசை சட்னி தான் இருக்கு…உனக்கு ஓகேவாம்மா?இல்லைனா சொல்லு வெளியே ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என மேசையில் சாய்ந்தப்படி கேட்க,

அவனின் கேள்வியில் அவனை நோக்கி திரும்பிய சந்திரமதி  “நீங்களா சமைச்சீங்க அண்ணா?” என வினவினாள் ஆச்சரியமாக…

அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி “அதிலென்ன ஆச்சரியம்…இங்க நான் மட்டும் தானே இருக்கேன்…சோ நானே சமைச்சுப்பேன்மா….இல்லையா வெளிய வாங்கிப்பேன்…பட் நீ கவலைப்படாதே நான் ஓரளவு நல்லாவே சமைப்பேன்…பயப்படாமல் சாப்பிடலாம்” என வெகு சாதாரண குரலில் உரைத்தாலும் அவனின் பேச்சில் தனிமைத்துயர் அவனை எந்த அளவு வாட்டியிருக்கிறது என்பது புரிந்தது‌.

அதனால் அவனை எண்ணி அவளின் மனம் உருகிட “அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது…வெளிய எல்லாம் வேணாம்…நீங்களே தோசை சுட்டு கொடுங்க” என இயல்பாக கூறி நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்.

“ஆர் யூ ஷ்யூர்?” என அவளின் முகத்தை கூர்மையாக பார்த்தப்படி கேட்க,

அவளோ “ஷ்யூர்…ஷ்யூர்…சீக்கிரம் போய் தோசைய சுடுங்க…எனக்கு பசிக்குது” என்று அவனை அவசரப்படுத்தினாள்.

“சரி…சரி போறேன்மா” என சிரித்துக்கொண்டே சமையலறைக்குள் சென்ற வீர் அவளிற்கு சுடச்சுட ஒவ்வொரு தோசையாக சுட்டு வந்துக் கொடுத்தான்.

“அண்ணா சட்டினி…அண்ணா தண்ணீ…அண்ணா இன்னுமா தோசை வேகலை…சீக்கிரம் வாங்க…பசிக்குது” என அவள் அவனை உரிமையாய் வேலை வாங்கிய விதம் அவனின் வெறுமையான நெஞ்சத்தை நிரப்பி அவனிற்குள் உவகையை புகுத்தின.

அவள் அமர்ந்த இடத்திலே அவனை ஏவிய விதம் நிறைவை கொடுத்தாலும் “உன்னை கட்டிக்கப்போறவன் ரொம்ப குடுத்து வைச்சவன்மா” என தங்கையை அவன் கேலியும் செய்தான்.

அவனின் பேச்சை கேட்டதும் அவளின் முகம் சட்டென வாடிப்போனது.

இப்போது தான் ஒருவனை நேசித்து ஏமாற்றம் கொண்டு வெளியே வந்தவளால் அவனது பேச்சை ரசிக்க முடியவில்லை.

அதிலும் காதல்,திருமணம் என்ற பேச்சை கேட்டாலே அவளின் நெஞ்சம் கசந்தது.

அவள் அடைந்த வலியும் வேதனையும் மட்டுமே கண் முன் வந்து சென்றன.

தங்கையவளின் வலியறியாத வீரோ அவளிற்கு மீண்டுமொரு தோசையை சுட்டு வந்து தட்டில் வைக்க “போதும்ண்ணா” என தட்டில் கைகழுவி எழுந்துக்கொண்டாள்.

“ஏன்மா மூணு போதுமா?சட்னி நல்லா இல்லையா?” என ஆதுரத்துடன் விசாரிக்க,

அவளோ துப்பட்டாவில் வாயை துடைத்தவாறே “இல்லண்ணா…சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு…பட்டம்மாவுக்கு பிறகு வேற யாரு சமையலையும் இவ்வளவு ரசிச்சு நான் சாப்பிட்டதில்லை…சாதாரண சட்டினியா இருந்தாலும் சூப்பரா இருந்துச்சு…வெறும் ஹாஸ்டெல் சாப்பாடே சாப்பிட்டு நாக்கு செத்துப்போயிருந்துச்சு அண்ணா…இப்போ தான் என் டெஸ்ட் பட்ஸே உயிர்த்தெழுந்த மாதிரி ஃப்ரெஷா இருக்கு… தேங்க்ஸ் அண்ணா” என மெல்லிய சிரிப்புடனும் நிறைந்த மனதுடனும் அவனிடம் அவள் நன்றியுரைத்தாள்.

நல்ல உணவிற்காக எந்த அளவு அவள் ஏங்கியிருக்கிறாள் என்று அவள் உணவை ரசித்து உண்ட விதத்திலும் அவளின் பேச்சிலும் அவனிற்கு தெள்ள தெளிவாக புரிந்தது.

தங்கையை நினைத்து அவனின் மனம் கனத்தன.

தன்னோடு இங்கு வந்துவிடும்படி கூறினால்,ஏதேனும் முரண்டுப்பிடிப்பாள் என அவளை விட்டுப்பிடிக்க உத்தேசித்தான் அவன்.

அதனால் அவள் உண்ட தட்டை அவன் எடுத்து செல்ல விளைய “அண்ணா கொடுங்க…நான் கழுவி வைச்சிடறேன்…” என அவனிடமிருந்து தட்டை வாங்கி சென்று அவளாகவே கழுவி வைத்தாள்.

அத்தோடு அங்கிருந்த பாத்திரங்களையும் சேர்த்து கழுவி வைத்திருந்தாள் அவள்.

அவளுடைய பொறுப்பான செயலை பார்த்த வீரின் இதழ்கள் புன்னகைத்தன.

அதேசமயம் முன்பு இருந்த இடத்திலிருந்து ஒரு பொருளை கூட நகர்த்தி வைக்காத பெண் இப்போது இந்த நிலைமையில் இருப்பதை கண்டு அவனிற்கு மனம் பிசைந்தது.

இன்று நன்றாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை நாளை எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு ஒரு சிறந்த சான்று,அவனும் அவளும் தான்!

ஒரே நாளில் அவர்கள் இருவரின் வாழ்வும் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டிருந்தன.

அதை எண்ணி ஒரு பெருமூச்சை வெளியேற்றிய வீரிடம் திரும்பிய சந்திரமதி “அண்ணா நீங்க சாப்பிட்டிங்களா?” என அக்கறையுடன் விசாரிக்க,

அவனோ “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டேமா தங்கச்சி” என நக்கலாக சொல்லியவாறே அடுப்பை பற்ற வைத்தான்.

அவளோ “இப்போவாது கேட்டனேனு சந்தோஷப்படுங்க நீங்க” என அவனிற்கு இணையாக பதில் கொடுத்தவள் “சாப்பிடலைனா சீக்கிரம் உட்கார்ந்து சாப்பிடுங்கண்ணா…பட் நான் தோசை சுடுவேன்னு எதிர்பார்க்காதீங்க…எனக்கு சுட்டுப்போட்டாலும் சமையல் வராது..‌சோ என்னை எதிர்பார்க்காதீங்க” என எவ்வித சங்கோஜமும் இன்றி வெளிப்படையாக உண்மையை ஒத்துக்கொண்டவளை அவனிற்கு அளவுக்கதிகமாய் பிடித்தது.

அவனிற்கு ஏனோ அக்கணம் தமயந்தியின் சமையல் திறமை கண் முன் வந்து செல்ல “பரவாயில்லைம்மா நீயாவது சமைக்க தெரியலைனா தெரியலைனு ஒத்துக்கிறே…ஒரு சிலர் இருக்காங்களே சமையலில் சகலகல வள்ளினு நினைச்சு மத்தவங்களை கொல்ல பார்ப்பாங்க” என பீதியுற்ற உணர்வுடன் சொல்ல,

அவனை சந்தேகமாக நோக்கி “யார்கிட்டயோ பலமா அடி வாங்கியிருக்கிற மாதிரி இருக்கு…சரி பரவாயில்லை நீங்க சாப்பிடுங்க அண்ணா” என அவன் தோசை சுட்டு முடித்ததும் அவனருகே உள்ள இருக்கையில் அமர்ந்து அவன் உண்பதை வேடிக்கை பார்த்தாள்.

இடை இடையிடையே “அண்ணா சட்டினி ஊத்தட்டுமா?இந்தாங்க அண்ணா தண்ணீய குடிங்க” என அவனிற்கு பரிமாறி நன்றாக கவனித்துக்கொண்டாள்.

இருவருக்குள்ளும் இயல்பாகவே ஒரு பிணைப்பு உருவாகியிருந்தன.

முதல் நாள் அவர்கள் வீட்டிற்கு அவள் வந்தது போல் இல்லை…

அவள் அங்கு வெகு சகஜமாக பொருந்திப் போக,அவளும் அவனும் நெடு நாளைய சகோதர சகோதரியை போலவே நடந்துக்கொண்டிருந்தனர்.

இருவரிடமும் எவ்வித தயக்கமும் இருக்கவில்லை.

அவளுடன் பேசிக்கொண்டே அவன் உணவருந்தி முடிக்க,அவனின் தலைமுடி ஈரம் காயாமல் இருப்பதை பார்த்து “அண்ணா உங்க முடி இன்னும் காயலை…போய் முதல்ல ட்ரையர் யூஸ் பண்ணுங்க…” என அதட்டினாள் அவள்.

“அதெல்லாம் யாரும்மா போடறாள்…அப்படியே இப்படி காத்தாட களைச்சு விட்டால் அதுவே காய்ஞ்சிடும்” என சிகையை ஒற்றை கையால் கோதியவாறு அவன் உரைக்க,

அவளோ இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தவள் “நல்லா காயும்…காயும்…எனக்கு தோசை தான் சுட தெரியாது…டிரையர் யூஸ் பண்ண தெரியும்…முதல்ல எடுத்திட்டு வாங்க…நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்” என அவனிற்கு கட்டளையிட்டாள்.

அவனோ “எதுக்கும்மா?” என தயங்க,

“எடுத்திட்டு வாங்கனா எடுத்திட்டு வாங்க…போங்க” என அவனை பிடித்து அறையின் பக்கம் தள்ளிவிட்டு ஆணைப்பிறப்பிக்க,

அவனோ ‘ஆளாளுக்கு வீட்டுக்கு வந்து என்னை அதிகாரம் பண்ணறீங்கடா டேய்’ என சலித்துக் கொண்டே முடி உலர்த்தியை எடுத்து வந்து அவளிடம் நீட்ட,

அதை கையில் வாங்கி அவனை ஏறிட்டவள்,அவனின் நெஞ்சு வரை தான் இருந்தாள்.

அதனால் “அண்ணா உங்க பனைமரம் ஹைட்டுக்கு நானெல்லாம் உட்கார்ந்தால் சரி வராது…நீங்க சேரிலே உட்காருங்க…நான் நிக்கறேன்” என சொல்லி அவனை இருக்கையில் அமர வைத்தாள்.

அவனோ “நீ குள்ளக்கத்திரிக்காய் மாதிரி இருந்திட்டு நான் பனைமரமா?நல்ல வருவே” என போலியாக அலுத்துக்கொள்ள,

அவளோ “ப்ச் அதெல்லாம் நீங்களோ நானோ முடிவுப்பண்ணறது இல்லை‌…அப்பா அம்மா ஜீனிலிருந்து வருது…அதுக்கு நான் என்ன பண்ணறது?” என அலட்சியமாய் தோளை குலுக்கிய பெண் முடி உலர்த்திக்கொண்டு அவனது சிகையை களைத்து காய வைத்தாள்.

அந்தவொரு செயல் ஒரு அன்னை தன் குழந்தையை அமர வைத்து முடியை காய வைப்பது போல் அவனிற்கு தோன்ற,அவளின் செயலில் அவனின் உள்ளம் நெகிழ்ந்தன.

அதனால் அவளின் கரம் தன் சிகையை கோதி விட்ட சுகத்தில் அவன் விழி மூடி அமர்ந்துவிட்டான்.

அவனின் விழிகள் தூக்கத்திற்கு கெஞ்சின.

அப்படியொரு இதம் அவனிற்குள்!

ஒரு வழியாக அவனது சிகையை உலர்த்திய சந்திரமதி “இப்போ பாருங்க உங்க முடி எவ்வளவு நீட்டா காஞ்சிடுச்சு…இதை விட்டுட்டு ஈரத்தோடு சுத்திட்டு இருந்தால் சளி பிடிக்கும்” என அவனை திட்டிக்கொண்டே முடி உயர்த்தியை அங்கிருந்த மேசையின் மீது வைத்தாள்.

அவளின் பேச்சை கேட்டு பட்டென விழி திறந்த வீரோ “தேங்க்ஸ்மா” என உளமாற உரைக்க,

அவளோ “அப்போ நானும் எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்லுவேன்…ஓகே வா?” என இமைச்சுருக்கி அவனை பாவனையாக மிரட்ட,

அவனோ “சரண்டர் மேடம்” என கையை தூக்க,அவளின் இதழில் புன்னகை தோன்றின.

அவளின் சிரிப்பை பார்த்ததும் அவனின் இதழ்களும் தாராளமாக விரிந்தன.

முதல் நாள் அவள் அவனை ‘அண்ணா’ என அழைக்கவே தயங்கி ஒதுங்கியதற்கும் இப்போதைய அவளின் நடத்தைக்கும் இடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.

தன்னை தீண்டவே அஞ்சிய பெண் இன்று அவனை தன் சகோதரனாக ஏற்று உரிமையாய் அவள் நடந்துக்கொண்டது அவனிற்கே ஆச்சரியம் தான்!

சில உணர்வுகள் அனைத்தும் சொல்லிக்கொடுத்து வருவதில்லை…தானாக தோன்றி ஒரு அழகிய பந்தமாய் உருவாகும்.

அப்படியான ஒரு பாசப்பிணைப்பு தான் முகிழ்மதி மற்றும் சந்திரமதியிடம் அவனிற்கு உண்டான இந்த சகோதர உறவு!

இதில் அதிசயம் என்னவெனில்,அவனிற்கு மட்டுமல்ல…அவனை போலவே அவர்களுக்கும் அவனின் மீது அதேப்போலான ஒரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது.

இது தான் காலத்தின் கட்டாயமோ? என எண்ணியவனிற்கு இந்த புது உறவுகள் அவனின் வெற்றிடத்தை நிரப்பி அவனின் வாழ்வை அழகாக்கினார்கள்.

அதிலும்,சந்திரமதியின் பேச்சும் அதட்டலும் அவனின் தாயை நினைவுறுத்தின.

அவரிடம் இருக்கும் அதே நிமர்வும் துணிச்சலும் அவளிடம் இருந்தன.

அதன் பொருட்டே,இன்னும் அதிகமாக அவளிடம் அவன் நெருங்கினான்.

இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருக்க,அங்கு இருவர் மட்டுமே இருந்தாலும் அவ்விடம் ஒரு மாதிரி கலகலப்பாகவே இருந்தது.

அவள் வந்ததிலிருந்து அவனின் புன்னகை சிறிதும் வாடவில்லை.

அவள் அங்கு வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது.அதுவரையிலும் தேவகி எழுந்திருக்கவில்லை.

அவர் இருக்கும் அறையை ஒரு பார்வை பார்த்த சந்திரமதி “அண்ணா அம்மா இன்னும் எழுந்திரிக்கவே காணும்?” என கவலை தொனிக்க கேட்க,

அவனோ “எனக்கும் அதான் தெரியலைம்மா…நைட்டெல்லாம் தூங்காமல் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸா இருந்தாங்க…விடிய காலை தான் தூங்கனாங்க…அப்பவும் ஏழு மணிக்கே எழுந்திட்டாங்க..‌இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி சாப்பாடு ஊட்டி தூங்க வைச்சிட்டேன்” என தாயை எண்ணி வருத்தத்துடன் பெருமூச்சு விட்டவாறு கூறிய ஆடவன் ”ஏன் மா உனக்கு போர் அடிக்குதா?” என அவளிடம் கேட்டான்.

அவளோ “ப்ச் இல்லைனா…அவங்க எழுந்தால் பார்க்கலாம்னு நினைச்சேன்” என்றவாறே அங்கிருந்து எழுந்தாள்.

“அவங்க தூங்கினால் என்னம்மா நீ போய் அவங்களை பாரு” என சொல்லிக்கொண்டே அவனும் எழ,

அவளோ “வேணாம்…வேணாம் ஃபர்ஸ்ட் இம்பிரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்பிரெஷன்…சோ நான் முழிச்சிட்டு இருக்கும் போது தான் பார்ப்பேன்” என கறாரான குரலில் சொன்னவளின் பேச்சை கேட்டு “நல்ல முடிவு” என இதழ்கடித்து சிரித்தான் அவன்.

அவனின் சிரிப்பை கண்டு “அண்ணா டோன்ட் லாஃப் அட் மீ” என அவள் முறைக்க,

“சரிம்மா சிரிக்கலை…” என்றாலும் அவனிற்கு அவள் சொன்ன தோரணை சிரிப்பையே கொடுத்தன,

அவள் அவனை இன்னும் அதிகமாக முறைக்க,அச்சமயம் அந்த வீட்டிற்கு முன்பு மகிழுந்து வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

உடனே புருவம் சுருக்கிய சந்திரமதி “ஏதோ கார் சவுண்டு கேட்குதே அண்ணா…யாரோ வர்றாங்கனு நினைக்கிறேன்?” என குழப்பமாக அவள் வாசலை எட்டிப்பார்த்து உரைக்க,

வீரோ இதழ்கடித்து ரகசியமாய் புன்னகைத்தவன் “தெரியலையே…வா போய் பார்க்கலாம்” என அவளையும் தன்னோடு வாசலிற்கு அழைத்து சென்றான்.

அவனிற்கு அங்கு யார் வந்திருப்பது என்று நன்றாக தெரியும் என்பதால் அவன் சந்திரமதியின் முகப்பாவனையை காண ஆர்வமாக வெளியே வந்தான்.

அங்கு வாசலிற்கு வந்து நின்ற சந்திரமதி வாகனத்திலிருந்து இறங்கிய பெண்ணை கண்டதும் அப்படியே அங்கிருந்த தூணில் அதிர்ச்சியுடன் சாய்ந்து நின்றுவிட்டாள்.

காரணம் அங்கு வந்திருந்த பெண் வேறு யாருமல்ல,அவளின் இரட்டை சகோதரி முகிழ்மதி.

தங்கையை அவளின் திருமணத்தன்று பார்த்தது தான் கடைசி!

அதன்பிறகு பல நாட்களுக்கு பிறகு அவளை இங்கு பார்த்தவுடன் அவளின் விழிகள் இலேசாக கலங்கின.

எதிர்பாராத அந்த நிகழ்வில் அவளிற்குள் மகிழ்ச்சி கரைப்புரண்டோடி ‘அம்மு’ என அவளிதழ்கள் முணுமுணுத்தன‌.

முகிழ்மதி இன்னும் தமக்கையை பார்த்திருக்கவில்லை.

ரத்தினவேலிற்கு மட்டுமே வீரின் வாய்மொழியாக சந்திரமதி அங்கு வரும் விடயம் தெரிந்திருந்தன.

முகிழ்மதிக்கு இன்னும் அவளின் வருகை பகிரப்படவில்லை.

அதனால் தன் கணவனுடன் நுழைவாயிலின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தாள் முகிழ்மதி.

கணவன் செய்த சேட்டையில் அவள் மீண்டும் ஒரு முறை குளித்து வேறொரு மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு வந்திருந்தாள் அவள்.

அவளின் முகத்தில் அவனின் செயலால் விளைந்த வெட்கம் இன்னும் மறைந்திருக்கவில்லை.

அவளின் முகத்தில் தெரிந்த நாணத்தையும் மலர்ச்சியையும் பார்த்த சந்திரமதிக்குள் ஒரு ஆத்ம திருப்தி!

நேற்று ரோகிணையை பார்த்ததிலிருந்து உண்டான அலைப்புறதல் சற்று அடங்கின.

அந்த மைய நுழைவாயிலை திறந்துக்கொண்டு உள்ளே வந்த 
முகிழ்மதிக்குள் புதிதாய் ஏதோ ஒரு உணர்வு!

இதுவரை அவள் வாழ்நாளில் தோன்றியிராத ஒரு வித்தியாசமான உணர்வு அவளுள் ஏற்பட்டன.

அந்த உணர்விற்கான அர்த்தம் அறியாமல் அவள் ஒரு வித தடுமாற்றத்துடன் அடியெடுத்து வைத்தாள்.

அந்த இடத்திற்கு அவள் முதல் முறை வருவது போலவே இல்லை.

பல நாட்களாக அவ்விடத்திலே தங்கி வாழ்ந்தாற் போன்ற ஒரு மாயை!

அவளின் மெய் தன்னையறியாமல் சிலிர்த்திட,அவளின் சிந்தைக்குள் ஏதேதோ காட்சிகள் மின்னல் போல் வெட்டி செல்ல தொடங்கின.

அதிலும்,அந்த வெண்ணிற ஊஞ்சலில் அமர்ந்து அவளை யாரோ ஒரு பெண்மணி அழைப்பது போன்ற காட்சி கண் முன் உருவாகி மறைந்திட,அதன் கனம் தாளாமல் “அம்மா..” என தலையை பிடித்துக்கொண்டாள் முகிழ்மதி.

அவளின் மெல்லிய குரல் கேட்டு “முகிழ் என்னாச்சு?” என பதறிப்போய் ரத்தினவேல் அவளை தன்னோடு தாங்கிக்கொள்ள,

அதற்குள் அவள் தடுமாறியதை கண்ட வீரும் சந்திரமதியும் கூட அவளருகே ஓடி வந்திருந்தனர்.

அவனது இதயத்தினுள் ஆழமாக புதைந்து காரிகையவளிற்குள் நடுக்கம் இழையோடின.

அவளின் மனக்கண்ணில் வந்து சென்ற காட்சிகள் அவளின் இதயத்தை அழுத்த,அந்த சின்னஞ்சிறிய பெண்ணவளால் அதன் பாரத்தை தாங்கவே முடியவில்லை.

அவளின் மெல்லிய மேனி வெடவெடக்க தொடங்கியதை கண்டு அஞ்சிய அவளின் மணாளன் 
“முகிழ்…முகிழ்….ஆர் யூ ஓகே?” என அவளிடம் கேட்டாலும் அவளிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

ஏதோ ஒரு சுழல் அவளை மாய உலகத்திற்கு பிடித்து இழுப்பது போல் இருக்க “அம்மா…அம்மா…” என அரற்றிய பாவையவளோ அவனுள் இறுக்கமாக ஆழப்புதைந்தாள்.

அவளின் அந்த தவிப்பில் அவளின் பிடியிலிருந்த அவனின் வெண்ணிற சட்டை நன்றாக கசங்கிப்போயின.

ஒரு கட்டத்தில் அந்த நினைவுகளின் வேகம் தாளாமல் அவளிற்கு தலை கிறுகிறுத்திட,பெண்ணவள் மூர்ச்சையாகிப்போனாள்.

தன்னில் மயங்கி விழுந்த மனையாளை கண்டு பதறிவிட்டான் ரத்தினவேல்.

அவளை போலவே சந்திரமதியும் வீரும் கூட துடித்துவிட்டார்கள்.

சில நிமிடங்களுக்கு பிறகு,அனைவரையும் தவிக்க விட்ட காரிகை மெதுவாக தன் இமைகளை மெல்ல பிரித்தாள்.

அவள் ஏதோ ஒரு அறையில் படுத்திருப்பது போல் இருக்க,தன் விழிகளை சுழற்றினாள்.

அந்த அறையை சுற்றி சுழன்று பார்த்தவளிற்கு ஏனோ மீண்டும் தலைவலிப்பது போலிருக்க “அம்மு” என ஓடி வந்து அவளின் கரத்தை பற்றிக்கொண்டாள் சந்திரமதி.

தமக்கையின் குரல் அவளின் செவியை அடைந்த மறு வினாடியே படீரென்று அவளை நோக்கி திரும்பிய முகிழ்மதியின் விழிகள் வியப்பில் விரிந்தன.

சகோதரியை அவ்விடத்தில் சற்றும் எதிர்பாராத முகிழ்மதியின் விழிகள் உணர்ச்சிப்பெருக்குடன் கலங்கிட “அக்கா” என இதழ்கள் துடிக்க அழைத்தவள் வேகமாக எழுந்து அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

அவர்களின் பேச்சுக்குரல் கேட்டு உள்ளே வந்த வீரோ சகோதரிகள் இருவரும் கட்டியணைத்து அழுதுக்கொண்டிருந்த காட்சியை கண்டு அப்படியே நின்றுவிட்டான்.

முகிழ்மதியோ “அ…க்கா இது நீ …நீ தானே?” என நம்பமுடியாமல் அழுதுக்கொண்டே கேட்க,

“நான் தான் அம்மு…” என நாதழுதழுக்க கூறி அவளை அணைத்தவளின் கண்களிலும் கண்ணீரின் சாரல்!

தன் தமக்கையை காண்பதற்காக பல நாட்களாக தவமிருந்த தாரிகையின் தவம் பலித்துப்போனதை நம்ப முடியாமலும் அதே சமயம்,கனவொன்று நிஜமானதை எண்ணி பேருவகையும் அடைந்தாள் அவள்.

முகிழ்மதியின் மனதை அடைத்துக்கொண்டிருந்த பாரமெல்லாம் சட்டென ஒரே நொடியில் மாயமாகிய உணர்வு!

“அ..க்கா…” என அவள் சகோதரியை இறுக்கியணைத்து கதறியழ,அவளிற்கு இணையாக சந்திரமதியும் அத்தனை வருடங்களாக அடைத்து வைத்திருந்த துக்கங்கள் அனைத்தையும் அன்றொரு நாளிலே கரைப்பது போல் அழத்தொடங்கினாள்.

பல வருடங்களாக விஜயலட்சுமி என்னும் தடை இருவரையும் பிரித்து வைத்திருக்க,இன்று அவர்களின் பாசத்திற்கு தடையாய் யாருமில்லாததால் அவர்களின் அன்பு கரைப்புரண்டு ஓடத்தொடங்கின.

அவர்களின் நீண்ட நெடிய கனவு நிஜமாகிய நாள் அன்று தான்!

அவர்களின் பல வருட தவிப்புகள் மற்றும் காத்திருப்புகள் எல்லாம் இங்கு கண்ணீர் மழையாய் கொட்டின.

சகோதரிகள் இருவரையும் ஓரமாக நின்று பார்த்திருந்த வீரின் விழிகளிலும் நீரின் தடங்கள்!

அந்த உணர்ச்சிகரமான தருணம் அவர்களின் வாழ்வில் ஒரு நீங்காத சுவடாய் மனதில் ஆழப்பதிந்தது.
 

முகிழ்மதி 81:

 


 

 

சகோதரிகள் இருவரும் வெகு நேரம் கண்ணீரில் கரைந்ததை கண்ட வீரின் மனம் தாளவில்லை‌.

அதனால் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தப்படி “ப்ச் இரண்டு பேரும் இன்னும் எவ்வளவு நேரம் அழுவீங்க” என மெல்லியதாக கடித்த வீர் அவர்களருகே வர,

அவனின் குரல் கேட்டு முதலில் சுதாரித்தது சந்திரமதி தான்!

சகோதரியிடமிருந்து பிரிந்த சந்திரமதி மற்றவளை பார்த்தாள்.

அவளின் முகம் அழுததில் நன்றாக சிவந்து அவளிற்கு மூச்சிறைக்க தொடங்கியிருந்தன.

“முகிழ் ப்ரீத் பண்ணு…அமைதியாகு…டோன்ட் க்ரை” என அவளை அதட்டியவாறே அவளின் கண்ணீரை அழுந்த துடைத்தாள்.

அவளோ “அ..க்கா…” என தேம்பிக்கொண்டே பேசவும்,

தங்கையின் கண்ணீர் அவனின் நெஞ்சில் ஆணியடிப்பது போன்ற உணர்வை கொடுக்க “அழக்கூடாது டால்‌…உன் அக்கா தான் திரும்ப உன்கிட்ட வந்திட்டாளே…இது நீ ஹேப்பியா இருக்க வேண்டிய நேரம்…சிரிடா” என கரகரத்த குரலில் வீரும் அவளை வந்து சமாதானம் செய்ய,

முகிழோ அப்போது தான் வீரை பார்த்தவளாக “அ…ண்ணா” என நின்றிருந்தவனின் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டு அழுதாள்.

அவளின் அழுகை கண்டு மீண்டும் மற்றைய இருவருக்கும் அழுகை வரும் போலிருந்தது.

சந்திரமதியின் விழிகள் கலங்கியதை கண்ட வீர் சட்டென ‘வா’ என கண்ணசைத்து அவளின் புறமாக கை நீட்டியதும்,அதற்காகவே காத்திருந்தாற் போன்று அவளும் அவனிடம் சரண்புகுந்தாள்.

இது கவலையினால் உண்டாகிய துக்க நிகழ்வல்ல…ஆனந்தத்தினால்…மனநிறைவினால் நிகழ்ந்த குடும்ப சங்கமம்!

பிரிந்த சொந்தங்கள் ஒன்றிணையும் போது உண்டாகும் ஒரு பரவசம்…

பல வருடங்களாக உயிரின்றி தவித்த ஜீவன்களுக்கு உயிர் கிடைத்தது போன்ற ஒரு ஆத்ம நிம்மதி…

இப்படி பல வகையான உணர்வுகளில் சிக்கித்தவித்தார்கள் இம்மூவரும்!

தன் வயிற்றில் முகம் புதைத்த பெண்களின் சிகையை வருடியப்படியே விழி மூடி சில வினாடிகள் நின்றிருந்தவன் அடிவயிற்றிலிருந்து ஒரு ஆழமான மூச்சை எடுத்து வெளிவிட்டான்.

அந்தவொரு நொடி பல யுகங்கள் வாழ்ந்தும் கிடைக்காத ஒரு பொக்கிஷம் தன் கை சேர்ந்த புளங்காகிதம் அடைந்தான் அவன்.

தங்கைகளை சில நிமிடங்கள் அழவிட்ட வீர் அவர்களை தன்னிலிருந்து விலக்கி “அழக்கூடாதும்மா…நான் சொன்ன மாதிரி இது சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்…உங்க வாழ்க்கையிலே எந்த பிரச்சனை வந்தாலும் உங்களுக்காக நான் இருக்கேன்…இனி நீங்க சிரிச்சிட்டே இருங்க…எனக்கு அது போதும்” என உணர்ச்சிகள் பொங்க பேசியவன், இருவரின் கண்ணீரையும் அழுந்த துடைத்துவிட்டான்.

அவனின் விழிகளிலும் நிரம்பியிருந்த கண்ணீரை பார்த்த முகிழ்மதி “நீங்களும் அழாதீங்க அண்ணா” என எட்டி அவனின் கண்ணீரை பிஞ்சு விரலால் துடைத்துவிட்டாள்.

கண்ணீரை துடைத்துவிட்ட அவளின் கை ஸ்பரிசம் ஏனோ சிறு வயதில் அவன் கண்ணீரை துடைத்த டாலின் நினைவைக் கொடுக்க,அவனின் நெஞ்சம் மறைந்த தங்கையை நினைத்து துவண்டது.

ஆனால் தற்சமயம் இழந்த ஒரு தங்கைக்காக ஈடாக இரண்டு பொக்கிஷங்கள் கிடைத்திருப்பதால்,அந்த அழகிய தருணத்தை ரசிக்க பழகினான் அந்த தாயுமானவன்.

அவர்கள் மூவரும் வெகு சில நிமிடங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினர்.

முகிழ்மதிக்கு அப்போதும் அந்த அறையை சுற்றி பார்க்கும் போது மனதில் ஒரு வலி உண்டாகியதை அவளால் தடுக்க முடியவில்லை.

அதனால் தமக்கையின் கரங்களை இறுகப் பற்றி கொண்டவளின் மேனி நடுங்கின.

“நத்திங் டூ வொர்ரி” என அவளின் நடுங்கிய கரத்தை ஆறுதலாக தட்டிக்கொடுத்தாள்‌ பெரியவள்.

சகோதரிகள் இருவரும் சமாதானமாகியதும் அவர்களுக்கு தனிமைக் கொடுக்க எண்ணிய வீர் “சரி நீங்க பேசிட்டு இருங்கடாம்மா…எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு…அம்மா எழுந்தால் எனக்கு ஒரு கால் பண்ணுங்க…பக்கத்திலே தான் போயிட்டு உடனே வந்திடறேன்” என இருவரின் சிகையை கோதியப்படி கூற,

பாவையவளின் விழிகளோ தன்னவனை தேடி அலைப்பாய “அ..ண்ணா எங்க அவரு?” என ஏமாற்றத்துடன் கேட்டவளை பார்த்த வீர் “பூபதி கொஞ்சம் வெளிய போயிருக்கான்மா…வந்திடுவான்…வெயிட் பண்ணு” என மெல்லியதாக சிரித்தப்படி கூறிவிட்டு வெளியேறினான்.

அவனின் பேச்சை கேட்டு அவளிற்குள் ஏமாற்றம் பரவினாலும்,தற்போது தமக்கை அவளுடன் இருப்பதினால் அவளின் கவனம் சந்திரமதியிடம் திரும்பின.

அவள் மயங்கியதும் மருத்துவர் ஒருவரை அழைத்து பார்த்திருந்தான் ரத்தினவேல்.

அவர் சாதாரண மயக்கம் என்று கூறியதற்கு பிறகே அங்கிருந்த அனைவருக்கும் மனம் அமைதியுற்றன.

ஆனால் அவனிற்கு ஏனோ மனைவியின் மயக்கம் சாதாரணமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

அதுவரை தன்னுடன் வாகனத்தில் நன்றாக வந்தவளிற்கு எப்படி திடீரென்று மயக்கம் வரும் என அவனின் மனம் இடித்துரைத்தன.

அதனால் அதற்கான விடையறிய வேண்டிய அவசியம் உணர்ந்த ரத்தினவேல் ஒரு இடத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தான்.

வீர் தங்களுக்கு தனிமைக்கொடுத்து வெளியேறியதற்கான காரணம் சந்திரமதிக்கு நன்றாகவே புலப்பட்டன.

அவனது புரிதலை எண்ணி பெருமிதம் கொண்டவளின் இதழ்கள் இலேசாக விரிந்தன.

ஆனால் முகிழோ இப்போதும் ஒரு வித குற்றவுணர்வுடன் இருந்ததால் “அக்கா நீ என் மேலே கோபமா இருக்கியா?” என மெல்ல கேட்டாள்.

சட்டென அவளை நோக்கி திரும்பிய சந்திரமதி “உன் மேலே எனக்கென்ன கோபம்?” என புரியாமல் வினவினாள்.

அவளோ “இல்லைக்கா நீ என் மேலே பயங்கர கோபமா இருக்கேன்னு அம்மா சொன்னாங்க…நிஜமா என் மேலே கோபமா இருக்கியா நீ?” என வருத்தம் தொய்ந்த குரலில் கேட்க,

அவளின் பேச்சை கேட்டு பரபரப்பான மற்றவள் “ஹே இரு…இரு அம்மாவா?அவங்ககிட்ட நீ எப்போ பேசினே?” என கேட்டவளின் நெஞ்சில் ஒரு திகில் பரவின.

அவரை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் தங்கையின் வாழ்வில் ஏதேனும் ஒரு கெடுதல் விளைவித்திருப்பாரோ என அஞ்சினாள் சந்திரமதி‌.

அதனை மெய்ப்பிப்பது போல் தங்கை கூறியதை கேட்ட சந்திரமதிக்கு ஆத்திரமாக வந்தது.

‘ச்சை என்ன பொம்பளை அவங்க…ஒரு பெண்ணா இருக்கவே தகுதியில்லாத ஜென்மம்’ என அருவருப்புடன் விஜயலட்சுமியை பற்றி எண்ணிக்கொண்டாள்.

தாயின் சுயரூபம் அறியாத அந்த குழந்தையுள்ளம் கொண்ட குமரியோ “அக்கா அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க?ஏதோ பிரச்சனைனு சொன்னாங்க…எல்லாம் சரியாகிடுச்சா?” என கவலையாக கேட்டாள்.

அவர்கள் இரக்கமின்றி அத்தனை கொடுமை செய்தும் அவர்களின் மீது இப்போதும் அன்பை செலுத்தும் இந்த பெண்ணை பார்த்து அவளிற்குள் பரிதாபம் தோன்றின.

அவர்கள் செய்த கொடூரங்களை பற்றி எண்ணும் போதே சந்திரமதியின் நெஞ்சம் எரிமலையாய் குமுறியது.

அதனால் “முகிழ் நான் இப்போ சொல்லறேன் கேட்டுக்கோ…இனி உனக்கு அவங்க அப்பா அம்மாயில்லை…உனக்கு நான் எனக்கு நீ…இது மட்டும் தான் அங்க உண்மை…நீ பார்க்கிற எதுவும் நிஜம் கிடையாது…புரியுதா?” என்றாள் அழுத்தம் திருத்தமாக…

தங்கையிடம் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

அனைத்து உண்மைகளும் தெரிந்தால் அவளால் தாங்கமுடியாது என்ற காரணத்திற்காக மறைக்க முற்பட்டாள்‌.

ஆனால் முகிழ்மதியோ “அச்சோ அக்கா…ஏன் அப்படி சொல்லறே?என்னயிருந்தாலும் அவங்க நம்ப அப்பா அம்மா” என பதறிப்போய் சொல்ல,

“ம்க்கும் அப்பா அம்மா…” என விரக்தியாக சொல்லியவள் “முகிழ் உன்கிட்ட என்னாலே எல்லாத்தையும் சொல்ல முடியாது…ஒண்ணு மட்டும் சொல்லறேன்…அவங்க ஒண்ணும் நம்ப அம்மா கிடையாது…அம்மானு கூப்பிட கூட தகுதியில்லாத ஒரு ஆளு அவங்க” என உச்சக்கட்ட சீற்றத்துடன் கூறியவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அவளின் கோபத்தை கண்ட முகிழ்மதி பயந்து “ஏன்கா இப்படி சொல்லறே?அம்மா மேலே ஏதாவது உனக்கு கோபமா?அதான் இப்படி பேசறீயா?” என அவளாக ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு கேட்டாள்.

அவள் அத்துணை பொறுமையாக கூறியும் புரிந்துக் கொள்ளாமல் பேதை போல் பேசும் தங்கையின் மீது சிறு கோபம் அவளுள் முகிழ்ந்தன.

“கோபமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை…அவங்க நம்ப அம்மா இல்லை…இனி நீ அவங்ககிட்ட பேச வேணாம்…அவங்களா உன்னை கூப்பிட்டாலும் பேசாதே…நீ என்னை மதிக்கிறேன்னா அதை மட்டும் செய் முகிழ்” என தீட்சண்யமாக உரைத்தவளின் முகத்தில் ஒரு தீர்க்கும் இருந்தன.

அவளின் முகத்தில் இருந்த தீரமும் பேச்சின் பொருளும் சிறிது சிறிதாக அவளின் சிந்தையில் உறைத்து சத்தமின்றி அவளின் தலையில் ஒரு இடியை இறக்கியிருந்தது.

‘அம்மா இல்லையா?அம்மா இல்லையா?’ என அவளின் மூளை அதிலே உழன்றுக்கொண்டிருக்க,

சந்திரமதியோ ‘எதுவும் பேசாதே?’ என்று சொன்னதற்கு பிறகு முகிழ்மதி என்ன செய்வாள்?

அவளின் பூடகமான பேச்சு ஒன்று கூட அவளிற்கு புரியவில்லை.

அவள் குழப்பமும் தவிப்புமாய் அமர்ந்திருப்பதை கண்டு இரக்கமுற்ற சந்திரமதி 
“இங்க பாரு முகிழ்…ஒரு சில விஷயமெல்லாம் உன்கிட்ட என்னாலே சொல்லமுடியாது…சொன்னாலும் அதை தாங்கிக்கிற மனநிலை உனக்கு இல்லை…அதனாலே தான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லலை…நமக்கு அவங்க வேண்டாம் அம்மு…உனக்கு நான் இருக்கேன்…இதோ வீர் அண்ணா இருக்காங்க…உன் புகுந்த வீடு இருக்கு…அதையெல்லாம் விட உனக்கு உன் ஹஸ்பெண்ட் மலைப்போலே துணை இருக்காரு…இதை விட வேற உனக்கு என்ன வேணும்?நீ பழசு எல்லாத்தையும் மறந்திடு…இதுவரை நீ மத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும்…உனக்கு நடந்த கொடுமை அநியாயம் எல்லாத்தையும் பொறுத்துக் கிட்டது போதும்…இனி நீ உனக்காக வாழு…என்னை பத்தி கூட யோசிக்காதே…சரியா?” என மிகவும் பொறுமையாக சகோதரிக்கு புரியும் விதமாக எடுத்துக்கூறினாள்.

இருவருக்கும் ஒரே வயது என்றாலும்,இருவரும் வளர்ந்த விதம் வேறு!

சந்திரமதி வெளியே சென்று பல பேருடன் பேசி பழகியிருந்ததால் அவளால் அனைத்தையும் பகுத்து பிரித்துப் பார்க்க முடிந்தது.

ஆனால் முகிழ்மதி அப்படியானவள் இல்லை.

மிகவும் மென்மையான பெண்…வீடு என்னும் சுவருக்குள் பல இன்னல்களை தாங்கி வளர்ந்தவள்.

அதனால் அவளின் சிந்தனை வட்டங்கள் மிக குறுகியவை!

சட்டென அவளது குடும்பத்து உறுப்பினர்களான தாய் தந்தையை நிராகரிக்க முடியவில்லை.

ஆதலால்,அவளது பெற்றோர் விடயம் அவளிற்குள் புழுப்போல் அரித்தன.

ஆயினும்,தமக்கையின் பேச்சில் ஏதேனும் நியாயம் இருக்கும் என்று கருதியவள் தற்சமயம் அவள் கூறியது போல் நடந்துக்கொள்ள உத்தேசித்து “சரி அக்கா…நான் அவங்களோட பேசலை…ஆனால் நீ…நீ ஓகேவா?உனக்கு என் மேலே…” என அதற்கு மேல் பேச முடியாமல் திணறிய தங்கை கூற வருவதை உணர்ந்துக்கொண்டாள் சந்திரமதி.

“அம்மு நிஜமா இந்த கல்யாணத்தினாலே உன் மேலே எனக்கு எந்த கோபமோ வருத்தமோ இல்லை” என தீர்மானமாக உரைக்க,

“ஆனால் அக்கா நீ?அவரை…” என அவள் தவிப்புடன் இழுக்க,

“அம்மு எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை…இன்ஃபேக்ட் அவர் மேலே எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை…அவருக்கும் அப்படி தான்… இந்த கல்யாண பேச்சு வார்த்தை எல்லாமே ஒரு ஒப்பந்தம் மட்டும் தான்” என அவள் அடுத்த குண்டை தூக்கி வீசியதும்,சிறியவள் ‘என்ன?’ என்பது போல் விழி விரித்து திகைப்புடன் அவளை நோக்க,

அதற்கு சந்திரமதி மெல்லியதாக புன்னகைத்து “அதுமட்டுமில்லை அம்மு…அவங்க வீட்டிலிருந்து புடிச்சுப்போய் பார்க்க வந்த பொண்ணு நானில்லை நீ” என அவளை சுட்டிக்காட்ட,

“ஏதே நானா?” என அன்றைய நாளில் அவளிற்கு மூன்றாவது அதிர்ச்சி அது!

சந்திரமதியோ அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்து “ஆமா கோவில்ல பார்த்து பிடிச்சுப்போய் தான் பொண்ணு கேட்க வந்திருக்காங்க…ஆனால் நான் என்னைக்கு கோவிலுக்கு போயிருக்கேன்…கோவில்னு சொன்னவுடனே அது நீ தான்னு தெரிஞ்சிடுச்சு…ஆனால் அந்த விஜயலட்சுமி தான் உனக்கு பதிலா என்னை காட்டிட்டாங்க…இப்போவாது புரியுதா?உன் புருஷனுக்கு பிடிச்ச பொண்ணு நானில்லை நீ தான்” என்றாள் அவளின் கரம் பற்றி…

முகிழ்மதிக்கு மீண்டும் தலை கிறுகிறுப்பது போல் இருந்தது.

அதிலும் விஜயலட்சுமியை தாய் என்று குறிப்பிடாமல் பெயர் சொல்லி அவள் விளித்தது வேறு அதிர்ச்சியாக இருந்தது.

‘என்னடா நடக்குது இங்க?’ என ஒன்றும் புரியாமல் குழம்பிப்போனது அந்த வளர்ந்த குழந்தை!

மற்றொரு புறம்,தன்னவனிற்கு பிடித்த பெண் தான் என்பது தெரிந்ததும் மனதினோரம் ஒரு இதமும் பரவின.

ஆயினும்,அன்றைய நாளில் அவளிற்கு பல அதிர்ச்சிகள் வந்துக்கொண்டே இருந்தன.

அதனால் அவள் ஒரு வித குழப்பதிலும் அதிர்ச்சியிலும் அமர்ந்திருக்க,

அதைக்கண்ட சந்திரமதி “முகிழ் ரிலாக்ஸ்…உனக்கு எல்லாமே அதிர்ச்சியா இருக்கும்னு எனக்கு புரியுது…பட் இது தான் உண்மை…நான் இந்த கல்யாணம் வேணாம்னு அவங்ககிட்ட பல தடவை சொல்லியும் கேட்கவே இல்லை…அவங்க பேச்சை மீறினால் என்ன நடக்கும்னு உனக்கு தான் தெரியுமே…வேற வழியில்லாமல் ஒத்துக்கிட்டேன்…நான் ஒத்துக்கிட்டதுக்கு இன்னொரு காரணம் அத்தான்…ஐ மீன் உன் புருஷன் எனக்கு கொடுத்த டீலிங்” என்றாள் சிரித்துக்கொண்டே…

“டீலிங்கா?” என திகைப்புடன் எச்சிலை கூட்டி விழுங்கியப்படி கேட்க,

“ஆமா…உனக்கு எல்லாத்தையும் சொன்னால் தான் புரியும்…முதல் நாள் அவங்க வீட்டிலிருந்து நம்ப வீட்டுக்கு வந்திருந்தாங்கயில்லை…அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?” என அன்று நடந்த நிகழ்வை அவள் கூற ஆரம்பித்தாள்.
 

முகிழ்மதி 82:

அன்று சந்திரமதியை பெண் பார்க்க பூபதி வீட்டினர் வந்திருந்த சமயம்,அவளை தனியே அழைத்து சென்றுப் பேசினான் ரத்தினவேல்.

இருவரும் தனிமையில் தோட்டத்தில் வந்து அமர்ந்ததும் அவன் எடுத்த எடுப்பிலே “உனக்கு இந்த கல்யாணத்திலே விருப்பமில்லையா?” என நேரடியாக கேட்டிருந்தான்.

அவனது நேரடி கேள்வியில் அவளின் உள்ளம் திக்கென்று அதிர்ந்திட “உங்களுக்கு எப்படி?” என திகைப்புடன் அவள் வினவியிருந்தாள்.

அவனோ இதழை வளைத்து “உன் முகத்தை பார்த்தாலே தெரியுது…ஏன் விருப்பமில்லை?யாரையாவது லவ் பண்ணறீயா என்ன?” என நக்கலாக புருவம் உயர்த்தி கேட்க,

அவன் இவ்வாறெல்லாம் நேரடியாக கேட்பான் என்பதை எதிர்பாராத பெண்ணவள் ஒரு விதமாக சங்கடமுற்றாள்.

அவனின் கேள்விக்கு அவளிடம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தன.

அவளின் மௌனமே அவனிற்கு வெளிச்சத்தை எடுத்துக்காட்டியதோடு அவன் முன்பே ஹரிஷுடனான அவளின் புகைப்படங்களை பார்த்திருந்தான்‌.

அதனால் “ஓகே ஐ டோன்ட் நீட் யுவர் பர்சனல்…நான் பேச வந்ததை பேசிடறேன்…எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை…” என அவளின் முகத்திற்கு நேரே வெளிப்படையாய் கூறியிருந்தான்.

அவனின் இந்த பேச்சு அவளிற்கு நிம்மதியை கொடுத்த அதே சமயம் சற்று முன்பு அவன் தன்னை கேட்ட கேள்வி ஞாபகம் வர “சோ நீங்களும் யாரையோ லவ் பண்ணறீங்க?அப்படி தானே?” என்று விவரமாக கேட்டு அவனை மடக்கினாள்.

அவளின் கேள்வியில் அவனின் ஒற்றை புருவம் ஏறி இறங்கின.

‘சரியான கேடி’ என மனதிற்குள் எண்ணிய ஆடவன் “என்னோட பர்சனலை உன்கிட்ட ஷேர் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லைனு நினைக்கிறேன்” என அவளிற்கு இணையாக பதில் கொடுத்த ரத்தினவேல் “ஓகே நான் பாய்ண்டுக்கு வர்றேன்…எனக்கு இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்…சோ என்னை நீ கல்யாணம் பண்ணிக்கனும்னா உனக்கு என்ன வேணும்?” என அவனிற்கே உரிய தெனாவெட்டுடன் நேரடியாக அவளின் விழிகளை நோக்கி கேட்டிருந்தான்.

அவனது பேச்சை வேறு ஏதேனும் ஒரு பெண் கேட்டிருந்தால் நிச்சயமாக ‘போடா’ என்று கிளம்பியிருந்திருப்பாள்.

ஆனால் சந்திரமதி அப்படியான பெண்ணில்லை…

எப்போது இந்த நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என வழி தேடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணினாள்‌.

அவளிற்கு விஜயலட்சுமியோடு இருப்பது சிறிதும் பிடிக்கவில்லை.

ஆனால் அவரின் கட்டுப்பட்டிலிருந்து வெளியே சென்றாலும்,அவள் சமுதாயத்தில் வாழ்வதற்கு தேவையான பொருளாதார நிதியுமில்லை.

வீட்டை விட்டு வெளியே சென்றால் பிச்சை தான் எடுக்கவேண்டும் என்றெண்ணி அங்கே வேண்டா வெறுப்பாக இருந்தாள்‌.

இப்போது வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்ததும் அவளின் கண்கள் மின்ன “நீங்க என்ன தருவீங்க?” என அவனிடம் ஒப்பந்தம் பேச தயாராகினாள்.

அவளின் விழிகள் ஒளிர்ந்த விதத்தை கண்ட ரத்தினவேலோ அதனை பேராசை என தப்பர்த்தம் பாவித்து இகழ்ச்சியாக இதழை வளைத்தான்.

‘சிவராமனோட பொண்ணு வேற எப்படி இருக்கும்’ என எள்ளலாக எண்ணிய ரத்தினவேல் “ஒன்லி ஒன் இயர் அக்ரிமெண்ட்…ஒரு வருஷம் முடிஞ்சப்பிறகு நீ என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு காம்பன்ஷேசனா ஐம்பது கோடி வாங்கிட்டு போயிடலாம்…அன்ட் தென் நீ என் பொண்டாட்டியா எனக்கு எதுவும் பண்ண வேண்டிய அவசியமில்லை…ஜஸ்ட் ஊருக்கு முன்னாடி நடிச்சா மட்டும் போதும்…என் விரல் நுனி கூட உன் மேலே படாது…உன் இஷ்டப்படி வாழலாம்…நான் எதுவும் கேட்கமாட்டேன்…அதே மாதிரி என் கிட்டயும் ஏன் எதுக்குனு நீ எதுவும் கேட்கக்கூடாது…இது தான் ரூல்ஸ்…இந்த கண்டிஷன்ஸுக்கு எல்லாம் ஓகேனா சொல்லு…அக்ரிமெண்ட் ரெடி பண்ணிடறேன்” என ஒரு தொழிலதிபராக அனைத்தையும் நுணுக்கமாக பேசி அவளை தன் புறம் ஈர்த்தான்.

முதலில் ஒருவரை தன் வலையில் விழ வைக்க வேண்டும் என்றால் அவரின் பேராசையை தூண்ட வேண்டும் என்பார்கள்.

அதனால் அவளை திருமணம் செய்து சிவராமனை பழிவாங்க உத்தேசித்திருந்த ஆடவனிற்கு அவளை திருமணம் செய்ய வேண்டியது கட்டாயம்.

ஆதலால் சூழ்ச்சி மேற்கொண்டு அவளை அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தான் அந்த அரசியல்வாதி!

அவளும் அவன் எண்ணியது போலவே அவன் விரித்த வலையில் சிக்கினாள்.

ஆனால் அவளோ அவனிற்கும் மேலாக “ஓகே ஃபைன்…எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு…பட் ஒன் கண்டிஷன்…” என விதிமுறைகளை விதித்தவனிடமே அவள் விதிகளை சொல்ல,

அதில் உள்ளுக்குள் வெகுண்டாலும் அவன் வெளியே “ம்” என அவளை மேலே சொல்லும் படியாக ஊக்கினான்.

அவளோ அவனை நேருக்கு நேராக பார்த்து “நீங்க ஏதோ ஒரு ரீசன்காக தான் என்னை கல்யாணம் பண்ண நினைக்கிறீங்கனு எனக்கு தெரியுது…எனக்கு அதுக்கான ரீசன் எதுவும் வேணாம்…சோ நீங்க சொல்லற எல்லா கண்டிஷனுக்கும் நான் உடன்படறேன்…அதேமாதிரி என்னோட இந்த ஒரு கண்டிஷனையும் சேர்த்துக்கோங்க” என்றவள்,

தொண்டையை செருமி “கல்யாணத்துக்கு பிறகு என் டிவின் சிஸ்டர் என் கூட தான் இருப்பாள்…அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஆர்க்கி படிக்கணும்னு ரொம்ப ஆசை…சோ அவ என்ன படிக்க நினைக்கிறாளோ அதுக்கு ஆகவேண்டிய செலவு மொத்தமும் நீங்க ஏத்தக்கணும்…கூடவே நீங்க சொன்ன மாதிரி ஒரு வருஷம் கழிச்சு கொடுக்கிறதா சொன்ன பணத்தை கொடுத்திட்டால் அதை வாங்கிட்டு நாங்க இரண்டு பேரும் கிளம்பிடுவோம்…இதுக்கு ஓகேவா உங்களுக்கு?” என சிறிது தயக்கத்துடன் என்றாலும் அவளின் குரல் ஒரு வித தீரத்துடனே வெளி வந்திருந்தது.

அவளின் பேச்சை கேட்ட ஆடவனிற்கு விசித்திரமாக இருந்தது.

தாய் தந்தை இருக்க தங்கையை எதற்காக தன்னுடன் புகுந்த வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற கேள்வி அவனுள் உதித்தது.

அதனால் புருவங்கள் இரண்டும் நெரிந்திட “சந்திரமதி வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்?உன் அப்பா அம்மா உயிரோடு இருக்கும் போது எப்படி தங்கச்சியை உன் கூட கூட்டிட்டு வரமுடியும்?அதுக்கு உன் பேரெண்ட்ஸ் அனுமதிக்கணுமில்லை…எல்லாம் தெரிஞ்சு தான் பேசறீயா நீ?” என கண்டிப்பான குரலில் அவன் கேட்க,

அவளோ அவனை தீர்க்கமாக நோக்கி “அவங்களோட பர்மிஷன் எதுவும் எனக்கு தேவையில்லை மிஸ்டர் ரத்தினவேல்…ஷீ இஸ் மை சிஸ்டர்…அவளை இந்த நரகத்திலே விட்டுட்டு என்னாலே அங்க நிம்மதியா இருக்கமுடியாது…அவளும் நானா சொல்லறதை மட்டும் தான் கேட்பாள்…அவளை பத்தி பிரச்சனையில்லை…உங்களுக்கு இந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா சொல்லுங்க…இல்லைனா ஃப்ரீயா விடுங்க” என நெஞ்சை நிமிர்த்தி துணிச்சலுடன் கூறி எழுந்து விட்டாள்.

அவள் அவனிடம் துணிச்சலாக பேசினாலும் அவளின் விழியில் தெரிந்த வலி அவனின் இதயத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது.

அவளின் அந்த வலிக்கு பின்பு ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருப்பது போன்று அவனிற்கு தோன்றின.

ஆனால் அவற்றினை ஆராய்ச்சி செய்ய விடாமல் சிவராமனின் மீதிருந்த பழிவெறி தடுத்து நிறுத்தியிருந்தன.

அதனால் அவனும் தோளை குலுக்கி “ஓகே ஃபைன்…இட்ஸ் யுவர் விஷ்…” என அவளின் விருப்பத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தான்.

அதேசமயம் தங்கையின் மீது அவள் வைத்திருந்த அந்த பாசம் அன்றே அவனின் மனதை இலேசாக பாதித்திருந்தது.

அத்தோடு முகிழ்மதியின் மீது அவனிற்கு அச்சமயம் ஒரு மென்மை இருக்கவே செய்தன.

அவள் சிவராமனின் மகள் என்பதற்காக அதை ஒதுங்கிக் கொண்டே அவன் வந்திருந்தான்.

ஆனால் அதையும் மீறி அவளின் மீது அவன் கொண்ட காதல் அவனின் பழி வெறியையும் மீறி வெளியே வந்திருக்க,இறுதியாக அவனின் காதல் மட்டுமே அவனிற்கு உயர்ந்ததாக தெரிந்தன.

அத்துடன் தன்னவள் அங்கு அனுபவிக்கும் வலிகளை தெரிந்தும் பிறகு அவளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது என்றெண்ணினான்.

முதல் சந்திப்பில் சந்திரமதியிடம் பேசியதற்கு பிறகு அவளின் மீது அவனிற்கு ஒரு நல் அபிப்பிராயம் இருந்தது.

அதன்பொருட்டே,வீர் அவளை பற்றி தவறாக பேசும் போதும் கூட அவளிற்கு சாதகமாக ரத்தினவேல் பேசியிருந்தான்.

அதனால் அவளிடம் பேசினால் சர்வ நிச்சயமாக தன்னை புரிந்துக்கொண்டு அவளாகவே விலகிவிடுவாள் என்று திருமணத்திற்கு முன்பு அவளிடம் பேசவிட உத்தேசித்திருந்தான்.

அவள் கேட்ட பணத்தை கொடுத்துவிடும் யோசனையில் அவன் இருந்தான்.

ஆனால் அதற்குள் பாட்டியும் ஜித்துவும் அவளை கடத்தி பல விபரீதங்கள் நிகழ்ந்து முகிழ்மதிக்கும் அவனிற்கும் திருமணம் நடந்தேறியிருந்தது.

திருமணத்திற்கு பின்பு கூட அவளிற்கு தேவையான பணம் கொடுத்து விடலாம் என்று தான் எண்ணியிருந்தான்.

அவளின் மீதிருந்த இளக்கம் கூட தன்னவள் அங்கு அனுபவித்து வந்த கொடுமைகள் முழுதாக அறியாத வரை மட்டுமே!

தன்னவள் தினந்தோறும் இரவு அவள் கதறிய கதறலை கண்டப்பிறகு சந்திரமதிக்கு எதுவும் தரவே கூடாது என்று முடிவெடுத்துவிட்டான்.

அதன் பொருட்டே விஜயலட்சுமி பற்றி அறிந்தும் அவளிற்கு இந்த தண்டனை அவசியம் என்றே ஒதுங்கியிருந்தான்.

ஆனால் அவரின் கொடுமைகள் எல்லை மீறியதற்கு பிறகு அவனால் பொறுமையாக காண முடியவில்லை.

சந்திரமதியை அடித்து துரத்தியப்பிறகு அவனிற்கே மனம் கனத்தன.

அதனால் அவளை பாதுகாக்க முடிவெடுத்து நிழல் போல் அவளை தொடர ஒரு ஆளை ஏற்பாடு செய்திருந்தான்.

அவள் சொந்த காலில் நின்று முன்னேற முயன்றதை கண்டு,அவளை உள்ளுக்குள் பாராட்டவும் செய்தான்.

சில நாட்கள் அவள் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ளட்டும்.அதன்பிறகு தாமே அவளை படிக்க வைத்து நல்ல ஒரு வேலையை வாங்கி கொடுக்கலாம் என முடிவெடுத்திருந்தான்.

அவனின் இந்த முடிவை பற்றி அறிந்த ஒரே ஆள் வீர் மட்டும் தான்!

அவன் நினைப்பதை செயல்படுத்தி முடிக்கும் செயல் வீரன் அவன் நண்பன் தானே?

அவனும் தோழனிற்கு ஆதரவாக…அவளிற்கு தமையனாக அவளிற்கு அனைத்தையும் செய்ய காத்திருந்தான்.

சந்திரமதிக்கு ரத்தினவேலின் பழி உணர்ச்சி எதுவும் இன்று வரை தெரியாது.

திருமணத்தில் நாட்டமில்லாத ஒரு ஆடவன் சமுதாயத்தில் ஒரு மதிப்பிற்காகவே வீட்டினர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தான் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் என்று தன் மேல் தன்னுடைய விரலின் நுனி கூட படாது என வாக்குக்கொடுத்த ஆடவன்,கோவிலில் அனைவரின் எதிர்க்க தன் தங்கையை பாதுகாத்து,அவள் மயங்கியதும் அவளை தூக்கி அரவணைத்து சென்றானோ அக்கணமே அவனின் மனம் அவளிற்கு தெள்ளத் தெளிவாக புரிந்துப்போயின.

அவன் தனது தங்கையை நேசிக்க ஆரம்பித்துவிட்டான் என்று அறிந்ததோடு,அவனின் விழியில் இருந்த உறுதியையும் நேசத்தையும் கண்கூடாக கண்டப்பிறகு அவளை அவன் நன்றாக பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையை அவளுள் விதைத்தன.

அதன் பொருட்டே,தங்கைக்கு நல்ல வாழ்க்கை கிடைத்த நம்பிக்கையில் அவள் விலகிக்கொண்டாள்.

ஆயினும்,முதல் நாள் சந்திப்பு அவளை உறுத்திக்கொண்டே இருக்க, சமீபத்தில் ஒரு நாள் மனம் கேளாமல் வீரிடம் அவனை பற்றி விசாரித்தாள்.

வீர் அவளிடம் பழிவுணர்ச்சியை பற்றி எதுவும் கூறாமல் அவளிடம் “உன்னை பொண்ணு பார்க்க வந்த சமயம் பெருசா அவனுக்கு எந்த விருப்பமும் இல்லை…அதனாலே அப்படி பேசியிருப்பான் மதிம்மா…ஆனால் அவன் விரும்பற பொண்ணு முகிழ் தான்…ஹி லவ்ஸ் ஹர் லாட்…அவளை கோவில்ல முதல் முறை பார்த்த சமயமே அவனுக்கு பிடிச்சிருந்துச்சு…அந்த சமயம் அதை உணரலை…போக போக அவ இல்லாமல் வாழ்க்கை இல்லைனு புரிஞ்சுக்கிட்டு உன்கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்த நினைச்சான்…அதுக்குள்ள இப்படியெல்லாம் ஆகிடுச்சு…சோ நீ எதை நினைச்சும் கவலைப்படாதே மதிம்மா…நம்ப முகிழ் அங்க நல்லா வாழுவாள்…என் ஃப்ரெண்ட்டுன்றதுக்காக இதை சொல்லலை…அவளுக்கு ஏதாவது அங்க பிரச்சனைனா அவளுக்கு அண்ணானா நான் நிற்பேன்…புரியுதா?” என நண்பனை விட்டுக்கொடுக்காமல் அதேசமயம் ஒரு தமையனாகவும் இருவருக்கும் இடையே நின்று பேசினான்.

அவன் உறுதியாக கூறியதற்கு பிறகே அவளை அரித்துக்கொண்டிருந்த விஷயமெல்லாம் பறந்து ஓடின.

அவளிற்கு தெரிந்த விடயங்களை மட்டுமே தனது தங்கை முகிழ்மதியிடம் அவள் கூறினாள்.

அனைத்தையும் கேட்டு முகிழ்மதிக்கு ‘என்ன பேசுவது?எப்படி பேசுவது?’ என ஒன்றும் புரியவில்லை.

அவள் ஒரு விதத்தில் குழப்பி போய் அமர்ந்திருக்க அவளை சமாதானம் செய்யும் விதமாக சந்திரமதி பேச ஆரம்பிக்கும் முன் அருகிலிருந்த அறையிலிருந்து ஏதோ ஒரு முனகல் சத்தம் கேட்டது.

“அம்மா எழுந்திட்டாங்க போலே முகிழ்…நீ போய் பாரு…நான் அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு வர்றேன்” என பரபரப்புடன் தங்கையை அனுப்பிவிட்டு அவள் தமையனுக்கு தொடர்பு கொண்டாள்.

தமையனிடம் விடயத்தை பகிர்ந்துவிட்டு அங்கு சென்ற சந்திரமதி அங்கு நடந்தேறிய காட்சியை கண்டு சிலைப்போல் உறைந்து நின்றுவிட்டாள்.
 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top