முகிழ்மதி 72,73,74

முகிழ்மதி 72:


 

 

வீரிடம் பேசியதற்கு பிறகு அவளின் மனம் அலைக்கழித்துக்கொண்டே இருந்தது.

அவளின் அலைப்புற்ற மனதை சிறிது சாந்தப்படுத்தியது,நகரத்தில் இருந்த அந்த பேரங்காடி!

ஏனெனில்,சிறு வயதிலிருந்து இதுப்போல் பெரிய பேரங்காடிக்கு எல்லாம் அவள் வந்ததேயில்லை.

பள்ளி விட்டால் வீடு …வீடு விட்டால் கோவில்…அவை மட்டுமே அவளின் உலகமாக இருந்து வந்திருக்கிறது.

அவளிற்கு அனைத்தும் புதிது…

அங்குள்ள இடங்கள்…மக்கள்…கடைகள் அனைத்தும் அவளிற்கு ஒரு புது அனுபவமாய் மாறின.

பெண்ணவளின் கவனம் சுற்றுப்புறத்தை அலசி ஆராய்வதில் ஆர்வமானது.

மனைவியின் விழிகளில் தெரிந்த உற்சாகத்தை கண்ட ரத்தினவேல் “இப்போ தான் முதல் முறையா இங்க வர்றீயா?” என புருவம் சுருக்கி கேட்க,

“ஆமாங்க…சின்ன வயசிலே இங்கயெல்லாம் வரணும்னு ஆசையா இருக்கும்…ஆனால் அம்மா கூட்டிட்டு வரமாட்டாங்க…அவங்க வாங்கி தர்ற பொருளை தான் வைச்சுக்கணும்…புதுசா எதுவும் ஆசைப்படக்கூடாதுனு சொல்லுவாங்க” என தன்னை மீறிய ஆர்வத்தில் அவள் நிஜத்தை உளறியிருந்தாள்.

அவளின் பேச்சை கேட்ட இருவருக்கும் நெஞ்சில் பாரமேறியது.

அதேசமயம் விஜயலட்சுமியின் மீது ஆத்திரமாக வந்தது.

அந்த விஷ ஜந்துவை எண்ணி தற்போதைய இந்த சுமூகமான நிலையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என கருதிய ரத்தினவேல் “உனக்கு இங்க என்ன வேணுமோ வாங்கிக்கோ…தமி உனக்கு ஹெல்ப் பண்ணுவாள்” என கனிவுடன் மொழிய,

அவளோ அவனை நோக்கி திரும்பி “அச்சோ எனக்கு எதுவும் வேணாம்ங்க…இப்போ தானே நீங்க எனக்கு நிறைய வாங்கிக் கொடுத்தீங்க…நீங்க வாங்கிக்கொடுத்த டிரஸை வைச்சே ஒரு வருஷம் ஓட்டிடலாம்…எனக்கு வேற எதுவும் வேணாம்” என்று சிறுப்பிள்ளையின் பாவனையில் கூறிவிட்டாள் ரத்தினவேலின் மனையாள்.

ஆம்…சமீபத்தில் தான் அவளிற்கு உடைகள்,தங்க அணிகலன்கள்,வைர ஆபரணங்கள் என பலவகையான பொருட்களை அவன் வாங்கி குவித்திருந்தான்.

திருமணமாகிய புதிதில் அவள் இரவு தோறும் இரவு உடை அணியாமல்  சுரிதார் அணிவதை கண்ட ரத்தினவேல் “எதுக்கு ராத்திரி படுக்கிற வேளையிலே நீ சுடிதார் போடறே?நைட் டிரஸ் ஏதாவது போட்டால் காயம் கொஞ்சம் சீக்கிரம் ஆறு மில்லை” என அவளின் காலில் உண்டாகியிருந்த தீக்காயத்தை பார்த்து வினவ,

அவளோ “இல்லை எனக்கு இது தான் கம்ஃபர்ட்டபிள்…” என்றாள் சிறிது தடுமாற்றத்துடன்

“என்ன கம்ஃபர்ட்டபிள்…உன்கிட்ட நைட் டிரஸ் இருக்கா இல்லையா?” என அவளின் தடுமாற்றம் கண்டு அவன் கூர்மையாக அவளை நோக்க,

அவளோ குனிந்த தலையுடன் “இருக்கு” என்றாள் மெல்லியதாகிவிட்ட குரலில்.

“அப்போ அதை போட வேண்டியது தானே முகிழ்?” என்று அவன் கேட்டது வாஸ்தவமான கேள்வி தான்!

ஆனால் அவளால் தான் பதில் கூற முடியவில்லை.

ஏனெனில்,அவளிடம் தற்போது இருக்கும் ஆடைகள் அனைத்தும் அவளின் தமக்கைக்காக தாய் வாங்கி தந்தது.

அதனால் ரத்தினவேலை மயக்குவதற்காக படுக்கவர்ச்சியான இரவு உடைகளை அவர் வாங்கி வைத்திருந்தார்.

அவை உடலின் மேல் இருக்கிறதா இல்லையா என்பதை ஊற்று பார்த்தால் தான் தெரியும் என்பது போல் மிகவும் மெல்லிதான துணி அது!

உள்ளிருக்கும் அனைத்து அங்கத்தையும் வெளிச்சமிட்டு காட்டும் அந்த துணியை அவள் எங்கனம் உடுத்துவாள்?

அதனால் “இல்லை…அதெல்லாம் ஒரு மாதிரி இருக்கு…” என அவள் பதில் கூற முடியாமல் திணறினாள்.

தாலி கட்டிய கணவனே என்றாலும் அவனிடம் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் அவள் தவிக்க,

அவனோ அவளின் அவஸ்தையை உணர்ந்து “என்ன மாதிரி இருக்கு?எனக்கு புரியலை…எப்படி இருந்தாலும் நான் உன் ஹஸ்பெண்ட் தானே முகிழ்?போட்டால் என்ன?” என விவரம் புரியாமல் சாதாரணமாக கேட்டான்.

அவளிற்கு தான் அவனின் கேள்வி உள்ளுக்குள் ஒரு பதட்டத்தை கொடுத்தன.

அவன் முன்னால் அதை உடுத்துவதைப் பற்றி எண்ணினாலே அவளிற்கு ஒரு மாதிரி அசூயையான உணர்வு!

அதனால் அவளிடம் எப்போதும் போல் ஒரு ஆழ்ந்த மௌனம்!

‘ஆரம்பிச்சிட்டாள் மௌன விரதத்தை’ என முனகிக்கொண்டான் ரத்தினவேல்.

“என்னம்மோ பண்ணு போடி” என திட்டிவிட்டு அவன் நீள்விரிக்கையில் சென்று படுத்துக்கொண்டான்.

அவன் அவளிடம் எதுவும் பேசாமல் விழி மூடிக்கொண்டதும் அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அதனால் அடுத்த நாள் இரவு அவன் அறைக்கு வந்ததும் அவனிடம் தயங்கியப்படி வந்த முகிழ் “நேத்து நைட் டிரஸ்…அது வந்து…” என திக்கி திணறி உளறிக்கொட்டியவளிற்கு அவனிடம் அதைப்பற்றி பேச கூச்சமாக இருந்தது.

அதனால் அவளாகவே அவனிடம் ஒரு இரவு உடையை எடுத்து நீட்டினாள்.

அவனிற்கு முதலில் அவள் பேசியதிலிருந்து எதுவும் புரியவில்லை.

அவள் துண்டு துண்டாக பேசியதை வைத்து ஓரளவு அவனாகவே விடயத்தை கோர்த்தவன் ‘அது சரி’ என சலிப்புற்றான்.

“ஏன்டி ஏன் நைட் டிரஸ் போடலைனு கேட்ட கொடுமைக்கு டிரஸையே எடுத்திட்டு வந்து காட்டுவியா நீ?” என மென்மையாக அவளை கடிந்தப்படியே அந்த இரவு உடையை விரித்த ஆடவனிற்கு தலை கிறுகிறுத்தது.

அவன் ஓரளவு கவர்ச்சியை எதிர்பார்த்தான் தான்!

ஆனால் காம தேவனையே வெட்கம் கொள்ள செய்யும் இப்படியொரு உடையை அவனே எதிர்பார்க்கவில்லை.

உடையை தூக்கி விரித்தவனின் ஆடை வழியே எதிர்புறம் நின்றிருந்த முகிழ்மதியே பளீச்சென்று தெரிந்தாள்.

அவளோ நாணத்துடன் முகம் சிவக்க இதழ்கடித்து நின்றிருப்பதை கண்டவனின் உணர்வுகள் தாறுமாறாக பொங்கின.

அப்படியொரு உடையில் அவளை அவன் கற்பனை செய்யும் போதே ஆண்மகனான அவனிற்கே தேகம் சூடேறி சிவந்துவிட்டன.

அதனால் “ம்க்கும்” என தொண்டையை செருமிய ரத்தினவேல் உடையை சட்டென மடக்கி கட்டிலில் தூக்கியெறிந்துவிட்டு “இந்த டிரஸ் பார்த்தாலே தெரியுது…இது எதுவும் உன்னோட சாய்ஸ் இல்லைன்னு…மைட் பி உன் அக்காவுக்கு வாங்கினதா இருக்கலாம்…நான் கொஞ்சம் முன்னாடியே இதைப்பத்தி யோசிருக்கணும்…சரி விடு…உனக்கு பிடிக்காத எதுவும் நீ போட வேண்டாம்” என்றவன்,அடுத்த நாளே அவளின் அலமாரியிலிருந்த மொத்த உடையையும் தூக்கியெறிந்துவிட்டு புதிதாக அவளிற்காக அவன் உடைகளை தேர்ந்தெடுத்து வாங்கி வந்து அடுக்கியிருந்தான்.

தன் மனையாளை கண்டத்திலிருந்தே அவளிற்கு எப்படியான உடைகள் பிடிக்கும் என்பதறிந்து அதற்கு ஏற்ற விதமாக அனைத்தையும் வாங்கி வந்திருந்தான்.

அவன் வாங்கி வந்த ஆடைகள் மற்றும் அணிகலன்களில் அவளின் அலமாரியே நிரம்பி வழிந்தது.

“எதுக்கு இவ்வளவு?” என அவளே பேரதிர்ச்சியுடன் கேட்டிருக்க,

அவளை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “என் பொண்டாட்டி எப்பவும் அவளுக்கு புடிச்ச மாதிரி வாழணும்…யாரோ ஒருத்தர் தூக்கிப்போட்ட எதையும் சகிச்சுக்கிட்டு வாழணும்னு எந்தவொரு அவசியமும் இல்லை…யூ ஆர் மை க்யூன்…யூ ஷுட் லிவ் யுவர் லைஃப் வித் டிக்னிட்டி முகிழ்(நீ என்னுடைய ராணி… நீ உன் வாழ்க்கையை கண்ணியத்தோடு வாழ வேண்டும் முகிழ்)” என தீவிரமான குரலில் உரைத்த ஆடவனை பிரம்மிப்புடன் நோக்கினாள் அவள்.

அவனோ அவளை நெஞ்சமுருக நோக்கி குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டிருந்தான்.

அவனின் இந்த அன்பில் அவளின் விழிகள் கூட இலேசாக கலங்கிப் போயின.

சிறு வயதிலிருந்தே அவளிற்கென பிரத்யேகமாக எந்த ஆடைகளையும் விஜயலட்சுமி அவளிற்கு வாங்கி தந்ததில்லை.

சந்திரமதி அணிந்து தரும் உடைகளை தான் அவள் அணிந்து வந்திருக்கிறாள்.

தாயிற்கு தெரியாமல் சில நேரம் சந்திரமதி அவளின் புது உடையை தந்தாலும் விஜயலட்சுமி அதையறிந்து உடையை கிழித்து எறிந்துவிடுவார்.

அதற்கு அஞ்சியே அவள் எவ்வித புது ஆடைகளையும் உடுத்துவதில்லை.

தமக்கையின் பழைய ஆடைகளை மட்டுமே அவள் உடுத்துவாள்.

அதனால் அவளிற்கென்று இதுவரை சொந்தமாக ஒருவரும் உடை வாங்கி தந்ததில்லை.

இப்போது கணவன் தனக்கென்று ஒரு அலமாரி நிறைய அவளிற்கு பிடித்தமான உடைகளை வாங்கி அடுக்கியதும் அவளின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

அதையெண்ணி தன்னவனை அவள் நேசம் பொங்க பார்க்க,அதனை கண்டு “ம்க்கும்…போதும் போதும்…நானும் இங்க தான் இருக்கேன்” என தொண்டையை செருமி கனவில் மிதந்தவளை நிகழ்விற்கு கொண்டு வந்தாள் தமயந்தி.

உடனே முகிழ்மதியும் வெட்கத்துடன் பார்வையை விலக்கிக்கொள்ள,

ரத்தினவேலோ ஒரு பெருமூச்சுடன் சிகையை அழுந்தக்கோதியவன் “ஆமா நீ என்ன வாங்கணும்?” என தங்கையிடம் விசாரித்தான்‌.

அவளோ “அண்ணா அதோ அந்த கடைக்கு போகணும்” என ஒரு கடையை சுட்டிக்காட்டினாள்.

“சரி வா…” என இரு பெண்களையும் அவன் வழிநடத்தி செல்ல,அவர்களை எந்தவொரு கூட்டமும் நெருங்காத வகையில் பாதுகாவலர்கள் கவனித்துக்கொண்டனர்.

அத்தோடு எப்போதும் வேட்டி மற்றும் சட்டையில் வலம் வரும் ரத்தினவேல் அன்று சாம்பல் வர்ண சட்டையும் காக்கி நிற கால்சராயும் அணிந்து,கண்களில் குளிர்க்கண்ணாடி முகத்தில் முகக்கவசம் அணிந்து வந்திருந்தான்.

பாதுகாவலர்கள் கூட காவலர் சீருடையில் வராமல் யாவருக்கும் சந்தேகம் வராத வகையில் மக்களோடு மக்களாக ஆங்காங்கே சிதறி நின்று அவர்களை காவல் காத்தார்கள்.

புதிதாக பார்க்கும் யாவரும் சட்டென அவனை அடையாளம் கண்டறிய முடியாத வகையில் அவனது தோற்றத்தை மாத்தியிருந்தான் ரத்தினவேல்.

அதனால் நிம்மதியாக பெண்கள் இருவரையும் காக்கும் பணியை செவ்வனே செய்தான் ஆடவன்.

பொதுவாக,கடைவலம் செல்லும் பெண்களுடன் ஆண்கள் உடன் செல்லவே அஞ்சுவார்கள்.

சில நேரங்களில் அவர்களின் பொறுமை கூட காற்றில் பறந்துவிடும்‌.

ஆனால் இங்கு ரத்தினவேலோ நிதானமாக அவர்களுடன் ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தான்.

தமயந்திக்கே தமையனின் இந்த மாற்றம் வியப்பை கொடுத்தன.

‘ஹும்…எல்லாம் காதல் படுத்தும் பாடு’ என தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் அவள்.

முகிழ்மதி இப்போதும் அனைத்தையும் ஆர்வமாக பார்த்திருந்தாலே ஒழிய,எதையும் வாங்க உடன்படவில்லை.

தமயந்தியோ பல பொருட்களை வாங்கிக்குவித்தாள்.

ஆனால் வாங்கிய பொருட்களை எல்லாம் பார்த்த ரத்தனவேலின் புருவங்கள் நெரிந்தன.

ஏனெனில்,அவள் வாங்கிய பொருட்கள் யாவும் அவளிற்கானதாக இல்லை.

வயதானவர்களுக்கு ஏற்றாற் போன்று உடைகள்,பொருட்கள் என அவள் வாங்கியதை கண்ட ரத்தினவேல் “யாருக்கு இதெல்லாம் வாங்கறே நீ?உனக்கு வாங்க நீ ஷாப்பிங் வரலையா?” என சந்தேகமாக அவளை பார்த்தப் படி வினவ,

‘ஆத்தி…அண்ணா கூட இருக்கிறதை மறந்திட்டு நான் பாட்டுக்கு என் மாமியாருக்கு தேவையானதை வாங்கிட்டு இருக்கேனே..சரியான கேனைடி நீ’ என தன்னை தானே திட்டிக்கொண்ட தமயந்தி “அதுவொண்ணுமில்லை அண்ணா‌…இதெல்லாம் தேவகி ஆன்ட்டிக்காக வாங்கினது…வீருக்கு இதெல்லாம் தெரியதில்லை…பாவம் அவர் ஆம்பளை என்ன செய்வாரு…அதனாலே பாட்டி தான் இதெல்லாம் என்னை வாங்கி தர சொல்லி சொன்னாங்க” என அவன் நம்பும்படியாக ஒரு காரணத்தை அள்ளி வீசினாள்.

ஆனால் அவ்வளவு எளிதில் அனைத்தும் நம்பக்கூடியவனா அவன்?

“பாட்டி உன்னை?” என தாடையை நீவியப்படி கேட்ட ரத்தினவேலோ இதழை கேலியாக வளைத்து “சரி வாங்கு” என அசால்ட்டாக ஒப்புக்கொண்டு‌ அவளிற்கு அனுமதி கொடுத்திருந்தான்.

‘ஹப்பாடா…அண்ணா நம்பிட்டாரு’ என ஆசுவாச பெருமூச்சுவிட்டவளிற்கு தெரியவில்லை.

அவளது தமையனின் மனதில் அவளின் மேல் சந்தேகமென்னும் விதை விழுந்திருப்பதை!

அதையறியாமல் “அண்ணி நீங்க வாங்க…கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என முகிழ்மதியை இழுத்துக்கொண்டாள்.

வீரின் அன்னை என்றவுடன் முகிழ்மதியும் உளமாற அவளுடன் இணைந்துக்கொண்டாள்.

முகிழ்மதி தேர்ந்தெடுத்து வாங்கிய பொருட்கள் யாவும் நேர்த்தியாகவும் பாரம்பரியம் நிறைந்தவையாகவும் இருந்தது.

“அண்ணி உங்க டேஸ்ட்டே வித்தியாசமா இருக்கு?” என தமயந்தி சொல்ல,

“ஏன் அண்ணி நல்லாயில்லையா?” என சோகமாக அவள் கேட்க,

“நான் எப்போ நல்லாயில்லைனு சொன்னேன்…சூப்பரா இருக்கு” என அவளை பாராட்ட,அதன்பிறகே முகிழ்மதியின் முகம் மலர்ந்தது.

இரு பெண்களுமாய் தேவகிக்கு தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கினார்கள்.

முகிழ்மதி தேவையின்றி கச்சிதமாக செலவு செய்ய எண்ண,தமயந்தியோ விலைக்கூடியிருந்தாலும் மனதிற்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து வாங்கினாள்.

முகிழ்மதியின் இந்த பொறுப்பும் அமைதியும் எவ்வாறு வந்தது என்று அவன் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தான்.

இப்படியே அனைத்து பொருட்களையும் வாங்கியதற்கு பிறகு தங்கை மற்றும் மனைவி இருவருக்கும் சில உடைகளையும் வாங்கி தந்திருந்தான்.

அதில் அளவில்லாத மகிழ்ச்சி தமயந்திக்கு!

ஏனெனில்,இதுப்போல் எல்லாம் அவள் தமையன் அவளோடு வெளியில் வந்ததில்லை.

அதனால் அவளிற்குள் அப்படியொரு உற்சாகம்!

முகிழ்மதியோ “வேண்டாம்ங்க” என மறுத்தாலும் அவள் கணவனா விடுவான்?

அவளிற்கும் உடைகளை வாங்கி குவித்திருந்தான்.

அனைத்தையும் வாங்கி முடித்ததும் மூவரும் மேல் தளத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சுவற்றில் மாற்றியிருந்த ஒரு ஓவியத்தை பார்த்ததும் முகிழ்மதி மெய் மறந்து நின்றுவிட்டாள்.

“என்னாச்சு அண்ணி?” என தமயந்தி அவளிடம் விசாரிக்க,

முகிழ்மதியின் விழிகளோ அந்த புகைப்படத்திலே நிலைத்திருந்தது.

ஆற்றங்கரையில் ஒரு பெண் தனித்து அமர்ந்து நீரோடையை பார்த்திருப்பது போன்ற ஓவியம் அது!

அதிலிருந்த ஒவ்வொரு காட்சியும் அவளிற்குள் இனம் புரியாத ஒரு உணர்வை கொடுத்தன.

அதனால் அந்த ஓவியத்தை விழி அகற்றாமல் பார்த்தவாறு “இந்த ஓவியம் ரொம்ப அழகா இருக்கு அண்ணி…கலை மேலே அர்ப்பணிப்பு உள்ள ஓவியன் வரைஞ்சா தான் அந்த ஓவியம் நம்பகிட்ட பேசும்…இதை வரைஞ்சவரு கண்டிப்பா ரொம்ப நல்ல ஓவியரா தான் இருப்பாரு…இந்த ஓவியம் என்கிட்ட பேசுது அண்ணி…என்னோட கஷ்டமெல்லாம் பறந்துப்போய் அப்படியே மனசு ரொம்ப இலேசாகற மாதிரி இருக்கு” என முகிழ்மதி தென்றலாய் வருடும் குரலில் உணர்ந்து சொன்னாள்‌.

தமயந்தியோ “அப்படியா தெரிகிறது?என் கண்ணுக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே?” என அந்த ஓவியத்தை உற்றுப்பார்த்தவாறு நாடியை தட்டி கூற,

முகழ்மதியோ “அண்ணி கலைநயத்தோடு பாருங்க‌…அப்போ தான் தெரியும்” என பக்கவாட்டாக திரும்பி உரைத்தாள்.

அவளின் பேச்சை கேட்ட ரத்தினவேலுவின் கண் முன் தேவகியின் முகம் மின்னி மறைந்தது.

முகிழ்மதியின் வார்த்தைகள் ஏனோ அவனிற்கு தேவகியை நினைவுறுத்தின.

அதைப்பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கும் போதே,

முகத்தை சுழித்த தமயந்தி “என்ன கலைநயமோ?எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் கிளாஸ் மெட் கலை மட்டும் தான்” என போலியான அலுப்புடன் சொன்னவள்,

“இதோ பக்கத்திலே இருக்காரில்லை…இவர் தான் அந்த ஓவியத்தை வரைஞ்ச கலைநயம்…எதுவா இருந்தாலும் அவர்கிட்ட பேசுங்க” என தனது தமையனை சுட்டிக்காட்டினாள்‌.

முகிழ்மதி அதிர்ச்சியில் விழி விரித்ததும் “இன்னும் கொஞ்ச நேரம் போனால் நான் மயங்கி விழுந்திடுவேன் போலே பசிக்குது…நான் போய் ஏதாவது சாப்பிடறேன்…நீங்க புருஷனும் பொண்டாட்டியும் கலைய ரசிச்சிட்டு பொறுமையா வாங்க…நான் போறேன்ப்பா” என்றுவிட்டு உணவு உண்ணும் பகுதிக்கு சென்றுவிட்டாள்.

முகிழ்மதியோ கணவனின் புறம் திரும்பி “ஏங்க நிஜமா இது நீங்க வரைஞ்சதா?” என ஓவியத்தை சுட்டிக்காட்டி ஆச்சரியத்தின் உச்சத்தில் கேட்டாள்‌.

அவளின் விழிகள் அவனை பிரம்மிப்புடன் நோக்கின.

அவன் கலா ரசிகன் என்று அவளிற்கு தெரியும்.இன்று தான் அவன் கலைநயம் பொருந்திய ஓவியன் என்று அவள் அறிந்துக்கொண்டாள்.

அவனோ “அப்படியென்னடி உனக்கு சந்தேகம்?நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் தான்” என தலையாட்டி சிரித்துக்கொண்டே சொன்னவன்,

அவளை மேலிருந்து கீழாக ரசனையுடன் நோக்கியவாறே “இன்னும் என்னை பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு…பொறுமையா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்…வா” என இருப்பொருள் பட கூறியவனின் பார்வையில் பாவையவள் வெட்கிப்போனாள்.

வெட்கத்தில் சட்டென இமைத்தாழ்த்தியவளின் கரம் பற்றிய ஆடவன் அவளை அங்கிருந்து அழைத்து சென்றான்.

அந்த ஓவியத்தை கண்ட முகிழ்மதி அதன் கீழே இருந்த ‘ஸ்டார்’ என்ற பெயரை பார்க்க தவறியிருந்தாள்.

அவனுடன் இணைந்து நடந்த பாவையவளிற்கு தன்னவனின் திறமையை எண்ணி பெருமிதமாக இருந்தது.

ஒரு புறம் அரசியல்,தொழில்,மறுப்பக்கம் அவனின் கலைநயம்…இப்படியொரு ஆளுமையையும் கம்பீரமும் கொண்ட ஆடவனிற்குள் இருந்த வல்லமை அவளை மேலும் அவன் புறமாக கவர்ந்திழுத்தது.

‘இவன் என்னவன்’ என மனதில் பெருமிதம் கொண்ட அதே வேளை அவளிற்குள் ஒரு கர்வமும் தோன்றின.

அச்சமயம் காரணமின்றி ஊரில் திரை மறைவிற்கு பின்பு கண்ட சிலை அவளின் ஞாபகத்தில் எழுந்தது.

‘ஆமா அன்னைக்கு அந்த சிலையை நான் பார்த்ததுக்கு ஏன் அவ்வளவு டென்ஷன் ஆனாரு’ என இப்போது பூதங்கரமாய் அவளிற்குள் ஒரு கேள்வி எழுந்தது.

அதைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமும் அவளுள் முகிழ்ந்தன.

அவனிடம் அவற்றினை பற்றி கேட்டுவிடலாம் என அவள் எண்ணும் போதே ரத்தினவேலுவிற்கு அழைப்பு வந்துவிட்டது‌.

அதனால் பெண்கள் இருவரையும் உணவு உண்ண வைத்து வீட்டில் இறக்கிவிட்ட ரத்தினவேல் அலுவலகம் பறந்து சென்றிருந்தான்.

ஆகையால்,அவனிடம் அந்த சிலையை பற்றி கேட்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

************
ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதியில்
போதையில் தள்ளாடியப்படி அமர்ந்திருந்த ரஞ்சனின் சட்டையைப் பற்றி இழுத்த வந்த விஜயலட்சுமி அவனை மகிழுந்திற்குள் தள்ளிவிட்டு தானும் அதில் ஏறி அமர்ந்தார்.

“ஏன்டா என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டியா?குடிச்சின்னா வீட்டுக்கு போய் சேர வேண்டியது தானே?எனக்கு எதுக்குடி போனை போட்டு கண்டப்படி பேசறே?” என அவர் ஆத்திரத்துடன் கத்தினார்.

அவனோ குடிப்போதையில் “பேபி…பே…பி…” என கிறக்கத்துடன் குழறியப்படியே விஜயலட்சுமியை அணைக்க வர,

“அடச்சீ கருமம்புடிச்சவனே…தள்ளிப்போ” என அவனை வெடுக்கென்று பிடித்து தள்ளிவிட்டார் அவர்.

“ஆ” என இருக்கையில் தலையில் அடிப்பட்டு அவன் கத்தினானே தவிர,அவனால் எழுந்திருக்க முடியவில்லை.

கண்ணை கூட திறக்க முடியாத அளவு மயக்கம் அவனிற்கு!

“டேய் இப்படி நிலை தடுமாறுறே அளவு குடிக்காதேனு உனக்கு எத்தனை தடவைடா சொல்லறது?” என அவனின் கன்னத்தை வேகமாக தட்டிக்கொண்டே அவனிடம் அவர் எகிற,

“ஹே விஜி அடிக்காதே…” என அவரை பிடித்து அவன் ஆவேசமாக தள்ளிவிட்டான்.

இப்போது அவரின் கனத்த சரீரம் மகிழுந்தின் கதவில் இடித்து வலி உயிர்ப்போனது.

அந்த வலி தந்த ஆத்திரத்தில் “அடேய் உன்னைய பத்து மாசம் சுமந்து பெத்த கொடுமைக்கு என்னை கொல்லவாடா பார்க்கறே?” என வாயை பிளந்து படுத்திருந்த ஆடவனின் தோளில் சுள்ளென்று ஒரு அடி வைத்தார்.

அவனோ வலி பொறுக்க முடியாமல் “ஆ…வலிக்குதும்மா…” என வலியில் அலறினான்.

அவரோ “ஆமாடா இப்போ தான் நான் உன் அம்மான்னே உனக்கு தெரியுதா? குடிச்சிட்டால் மத்த பொம்பளைக்கும் எனக்கும் கூட உனக்கு வித்தியாசம் தெரியமாட்டிக்குது…உன்னையெல்லாம் பெத்ததுக்கு நான் கிணத்திலே விழுந்து சாகலாம்டா” என தலையிலடித்துக்கொண்டு அவனை சரமாரியாக திட்டனார்.

அவனோ அனைத்தையும் வாங்கிக்கொண்டு இறந்த பிணம் போலவே கிடந்தான்.

ஆம்…விஜயலட்சுமி கூறுவது போல் அவரின் கருவறையில் உதித்த மகன் தான் இந்த ரஞ்சன்!

அவரின் வக்கிரமான குணங்களுக்கு ஏற்ப தப்பாமல் பிறந்திருந்தான் அவன்!

அவன் அவருடைய மகன் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

சிவராமனிற்கே அவனை விஜயலட்சுமியின் சகோதரனாக மட்டுமே தெரியும்.

சிவராமனை திருமணம் செய்வதற்கு முன்பே முறையற்ற உறவில் கருத்தரித்து பிறந்த தறுதலை இவன்!

தகாத உறவில் பிறந்த வாரிசு என்று மற்றவர் அறிந்தால் அவரின் மதிப்பும் மரியாதையும் பாழாகிவிடும் என்று ஊரின் முன்பு தன் சகோதரன் என்றே அறிமுகப்படுத்தினார்.

மகனின் வாயை மூடுவதற்காக அவனிற்கு தேவையான பணத்தையும் நகையையும் கொடுத்து அவனை அடக்கி வைத்திருந்தார்.

மகிழுந்திற்குள் மகனை சமாளிக்க முடியாமல் போராடிக்கொண்டிருந்த விஜயலட்சுமியை யாரோ சில மர்ம நபர்கள் கடத்தியிருந்தார்கள்.

அவரோடு சேர்த்து அவருடன் இருந்த ரஞ்சனையும் வாகனத்தோடு தூக்கியிருந்தார்கள்.

இதுநாள் வரை விஜயலட்சுமி முகிழ்மதி விடயத்தில் தள்ளி இருந்ததினாலே ரத்தினவேல் அமைதியாக இருந்தான்.

எப்போது தன்னுடைய மனைவியை தூண்டிவிட்டு தங்களது வாழ்வில் கலகத்தை ஏற்படுத்த அவர் துணிந்து விட்டாரோ?

அதற்கு மேலும் பொறுமை காக்க அவன் மகாத்மாவா என்ன?

அவரை எக்காரணத்தை கொண்டும் மன்னித்து விடக்கூடாது என முடிவெடுத்துவிட்டான் ஆடவன்.

அடுத்த கணமே,ஆள் வைத்து அவரை மகிழுந்தோடு தூக்கியிருந்தான்.

கடத்தி வந்த இருவரையும் தனித்தனி அறையில் போட்டு பூட்டியிருந்தார்கள்.

அதிலும்,விஜயலட்சுமியை சித்திரவதை செய்வதற்காகவே பிரத்யேகமாக ஒரு அறையை ஏற்பாடு செய்து,ஒரு இருட்டு அறைக்குள் சிறை செய்திருந்தான் அவன்.

இருட்டு அறைக்குள் அவர் அனுபவித்த கொடூரங்களை வார்த்தையால் விவரிக்க முடியாது.

அவரின் அலறலும் கதறலும் அவ்விடத்தை அதிர செய்தாலும்,அதை செவியால் ரசித்து கேட்ட ரத்தினவேலின் இதழில் ஒரு குரூரப்புன்னகை!

தன்னவளை எப்படியெல்லாம் வதைத்திருந்தாரோ,அதற்கும் மேலான ஒரு மரண வலியை அவருக்கு தர முடிவு செய்திருந்தான்,முகிழ்மதியின் கண்ணாளன்!
 

முகிழ்மதி 73:


 

 

ஜித்தேந்திரன் சந்திரமதி பணிப்புரியும் அந்த நட்சத்திர விடுதிக்கு ஒரு வாடிக்கையாளரை சந்திக்க வந்திருந்தான்.

அந்த வாடிக்கையாளர் வெளிநாட்டை சேர்ந்த ஒரு மிகப்பெரிய பணக்காரர்.இந்தியாவில் பிரபலமான ஐந்து நகரங்களில் பேரங்காடி கட்டுவதற்காக ஒரு நல்ல கட்டுமான நிறுவனத்தை தேடிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்கு எந்தவித நிறுவனமும் திருப்தியான அணுகுமுறையை வழங்கவில்லை.

அதனால் அவர் தீவிரமாக ஒரு நல்ல நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்க,அந்த தகவல் கசிந்து அவை இவனது செவிகளை வந்தடைந்தது.

அவரை அவ்வளவு எளிதில் சந்திக்கமுடியாது என்று நிமிடத்தில் அவன் தெரிந்துக்கொண்டான்.

மேலும்,அவர் மிகவும் எளிமையான ஒரு மனிதர்.அவர் என்றுமே ஆர்ப்பாட்டமான வரவேற்பை விரும்பாதவர் என்றும் அறிந்துக்கொண்டான் ஜித்து.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் கூட பின்வாங்கியிருந்தார்கள்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை அவனிற்கு விட சிறிதும் மனமில்லை.

எப்பாடுபட்டாவது அதை கைப்பற்றியாக வேண்டும் என அப்போதே அவன் முடிவெடுத்துவிட்டான்.

அதனால் அந்த வாடிக்கையாளர் தொழில் சார்ந்த சந்திப்பை விருப்பப்படாததை தெரிந்துக்கொண்டு,பல வகைகளில் முயன்று அவரை இந்த குளம்பியகத்திற்கு வரவேற்றிருந்தான்.

இருவரும் அந்த விடுதியினுள் இருந்த சிறு குளம்பியகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே கொட்டை வடிநீரை ரசித்து குடித்தனர்.

அவரோ இங்கு வரும் போதே “மிஸ்டர் ஜித்தேந்திரன் உங்ககூட காஃபி குடிக்க வர்றேன்றதுக்காக நான் உங்களுக்கு கான்ட்ரெக்ட் கொடுப்பேன்னு நினைக்காதீங்க” என எச்சரித்திருந்தார்.

ஜித்தேந்திரனோ “மிஸ்டர் விக்டர் இது ஒரு ஃப்ரெண்டிலியான சந்திப்பு தான்…நானும் எதையும் எதிர்பார்க்கலை…ஜஸ்ட் ஒரு கப் ஆப் காஃபி…ஒரு குட்டி கான்வர்ஷேஷன்…தட்ஸ் இட்” என ஆங்கிலத்தில் சிரித்துக்கொண்டே சொன்னான்.

அவனின் இந்த அணுகுமுறை அவருக்கு பிடித்திருக்க அவரும் இங்கு புறப்பட்டு வந்திருந்தார்.

ஆனால் ஜித்தேந்திரனோ நயமாக சிரித்து பேசியே அவரை கவர்ந்திழுத்திருந்தான்‌.

அந்த மாயக்கண்ணனின் புன்னகையிலும் பேச்சிலும் மயங்காதவர்கள் யாரேனும் உண்டா என்ன?

ஆரம்பத்தில் கண்டிப்பாக பேசிய விக்டரே இறுதியில் செல்லும் முன்பு அவனின் பேச்சில் மயங்கி “தேங்க் யூ மிஸ்டர்.ஜித்தேந்திரன்…உங்களோடு ஸ்பென்ட் பண்ண டைம் ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு…இட்ஸ் அவ மெமரபிள் ஒன்…அன்ட் தென் ஐ லைக் யுவர் அப்ரோச்…சீக்கிரம் நாம்ப அபிஷியலா மீட் பண்ணலாம்” என மறைமுகமாக அவனிற்கு ஒப்புதல் கொடுத்திருந்தார்.

ஜித்தேந்திரனிற்கோ நினைத்ததை சாதித்த உற்சாகம் முகத்தில் தெரிய அவனும் “ஷ்யுர் விக்டர்” என அவருக்கு கைக்குலுக்கி விடைக்கொடுத்தான்.

அவர் அங்கிருந்து புறப்பட்டதும் தானும் அதே மகிழ்ச்சியோடு புறப்பட ஆயுத்தமாகியவனின் பார்வை வட்டத்தில் சந்திரமதி விழுந்தாள்.

‘இவ என்ன அடிக்கடி நம்ப பார்வையிலே விழறாள்?சரியில்லையே?’ என அவளை அவன் கடக்க முயன்றாலும்,அவள் அணிந்திருந்த சீருடை அவனை அவள் புறமாக ஈர்த்தது.

‘ஃபைனலி வேலைக்கு சேர்ந்திட்டாளா?’ என சிந்தித்தவனின் புருவங்கள் நெரிந்தன.

அவள் நாராயணனுடன் கோபமாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியை தான் அவன் பார்த்தான்.

அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கையிலே அவன் அமர்ந்திருந்தான்.

மேலாளருக்கும் அவளுக்குமான காரசாரமான அந்த விவாதம் ஏதேச்சையாக அவனின் செவியில் விழுந்தது.

அதனால் அங்கிருந்த செல்ல முயன்ற ஜித்தேந்திரன் “ஒன் கேப்பசீனோ வித் ஃப்ரெஷ் கிரீம்” என உணவக பணியாளனிடம் உத்தரவு கொடுத்துவிட்டு அங்கே அமர்ந்துவிட்டான்.

அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டு இருக்கை தள்ளி தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவனிற்கு முன்பிருந்த கண்ணாடியின் வழியே இருவரின் உருவமும் தெள்ள தெளிவாக தெரிந்தது.

அவன் கேட்ட கொட்டை வடிநீரும் வந்துவிட அதனை வாங்கி உறிஞ்சுக்கொண்டே சுவாரசியமாக அந்த உரையாடலை கால் மேல் கால் போட்டு கேட்டிருந்தான்.

அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டவனின் இதழ்களில் இலேசான முறுவல் ஒன்று தோன்றியது.

தனக்கு முன்பிருந்த கண்ணாடியின் வழியே தெரிந்த அவள் உருவத்தை தான் அவன் அவதானித்திருந்தான்.

அவள் பேச்சில் இருந்த தெளிவும் அவளின் எண்ணங்களும் அவனை புருவம் உயர்த்த செய்தன.

பாவையவள் கோபமாக பேசிக்கொண்டிருக்கும் போது சிவந்த அவளின் நாசியின் நுனியும் நெருப்பை கக்கிய விழிகளும் அவனது ரசனையை தூண்டின.

மேலாளர் என்றும் பாராமல் அவரிடம் துணிச்சலாக பேசி வாயடைக்க வைத்த விதம் அவனை மிகவும் ஈர்த்திட,இறுதியாக மேலாளரின் புலம்பலை கேட்டு அவனிற்கு சிரிப்பு வந்துவிட்டிருந்தது.

அதனால் குடித்துக்கொண்டிருந்த வடிநீரை துப்பிவிட்டு சிரித்தவனை மற்றவர் விசித்திரமாக திரும்பி பார்த்தனர்.

அவனோ மெல்லிழை தாளால் மேசையை துடைத்தவாறு “சாரி” என சங்கடமாக கூறினாலும் அவனின் அதரங்களில் இருந்த புன்னகை மறையவில்லை.

‘சரியான சண்டைக்கோழி’ என அவனிதழ்கள் முணுமுணுத்தது.

அன்று மட்டுமில்லை…மீண்டும் ஒரு நாள் அவளை ஏதேச்சையாக அவன் காண நேர்ந்தது‌.

தற்செயலாக நடந்த சந்திப்பா அல்லது திட்டமிட்டதா என்பதை அவன் ஆழ்மனம் மட்டுமே அறியும்.

அதே குளம்பியகத்தில் தோழன் ஒருவனுடன் அவன் வந்திருந்தான்.

அவர்களுக்கு பின்புறம் உள்ள இருக்கையில் தான் சந்திரமதியும் ஜஸ்வந்தும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“உனக்கு வேலையெல்லாம் எப்படி போகுது சந்து…” என ஜஸ்வந்த் மெதுவாக தன் தோழியிடம் கேட்க,

“நீ எதுக்கு இங்க வந்திருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும்டா…நான் கொலைக்காண்டிலே இருக்கேன் அப்படியே ஓடிடுடா” என்றாள் அந்த சண்டைக்கோழி.

“கூல்டவுன் பேப்…நீ பண்ண வேலைய மாமா சொன்னாரு…பாவம் டி அவரு…உனக்கு வேலைப்போட்டு கொடுத்த கொடுமைக்கு அவருக்கு வேலைப்போயிடும் போலே…கொஞ்சம் அடக்கி தான் வாசியேன்” என கிட்டத்தட்ட அவன் மன்றாடிக்கொண்டிருந்தான்.

அதில் சிறிதும் இரக்கம் கொள்ளாத அந்த ராட்சசியோ “ஹும் சரி சரி பார்க்கறேன்…ஆனால் எவனாவது வம்பிழுத்தால் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என பிடிக்கொடுக்காமல் சொல்லி கொட்டை வடிநீரை உறிஞ்சியவளை கண்டு ‘இவ திருந்தற கேஸு இல்லை’ என சலிப்பாக தலையசைத்துக்கொண்டான்.

“ஹே சந்து…பிளீஸ்டிம்மா…ஒரு மாசம் தான்…கொஞ்சம் கரிசனை காட்டேன்டி தாயே” என அவன் காலில் விழாத குறையாக கெஞ்சியதற்கு பிறகு ஒரு பெருமூச்சுடன் “ம்…பார்க்கலாம்டா” என ஒரு மார்க்கமாக கூறியவளை கண்டு ‘இரக்கமே இல்லாத ராட்சசி’ என மனதிற்குள் திட்டிக்கொண்டான்.

அவர்களின் பேச்சை கேட்டு ஜித்தேந்திரன் திரும்பி ஜஸ்வந்தை பார்க்க,

அவனின் விழி பிதுங்கிய தோற்றத்தை கண்ட ஜித்தேந்திரனிற்கு சிரிப்பு என்றால் அப்படியொரு சிரிப்பு!

அவளிடம் பேச முடியாமல் அவன் திணறிய விதமே அவனிற்கு பிடித்திருந்தது.

வெகு நாட்களுக்கு பிறகு,அவனின் அகமும் முகமும் மலர்ந்திருந்தன.

முன்பு திமிராக தெரிந்த அவளின் குணம்,இப்போது அவனிற்கு சுவாரசியத்தை கொடுத்தன.

ஏனோ அவளை பார்க்கும் போதெல்லாம் மனம் இலேசாகியது போல் உணர்ந்தான் அவன்.

ஒவ்வொரு முறையும் அவள் அவனிற்கு புதிதாக…புரியாத புதிராக தெரிகிறாள்.

பார்வைகள் மாறினால் காட்சிகள் மாறலாம் என்பதற்கு ஏற்ப ஆடவனின் உணர்வுகள் அவளை பார்க்க பார்க்க உருமாற்றம் பெற்றுக்கொண்டே இருந்தன.

அவளின் துணிச்சல் அனைத்தும் அவனை ரசிக்க வைத்தன.

அதற்காகவே அவளை சந்திக்க அடிக்கடி இங்கு வந்துவிடுவான்.

அவளை அவன் நிழல் போல் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

‘ஏன்?’ என்று பலமுறை அவனின் மனசாட்சியை கேட்டுக்கொண்டான் ஜித்து.

ஆனால் அவனின் உறக்கத்தை தொலைக்க வைத்த மோகினியை பார்க்க வேண்டும் என்று அவனுள் ஒரு உந்துதல்!

நட்சத்திர விடுதியில் அவளை எப்போது அந்த நீல நிற சுரிதாரில் மிக நெருக்கமாக பார்த்தானோ அன்றிலிருந்து அவளின் விழிகள் அவனை உறங்கவிடாமல் தொந்தரவு செய்கின்றன.

அவன் எதற்காக அங்கு வந்திருக்கிறான் என்று அவனிற்கே தெரியவில்லை.

தனக்குள்ளே பல முறை கேள்விக்கேட்டு கொள்கிறான்.அதற்கான பதில் தான் அவனிற்கு கிடைக்கவில்லை.

தனது அண்ணியை போல் இருப்பதால் அவளை பிடித்திருக்கிறதா என்ற கோணத்திலும் அவன் சிந்தித்து பார்த்துவிட்டான்.

அதற்கும் அவனின் மனசாட்சியிடமிருந்து ‘இல்லை’ என்ற பதிலே வந்தது.

அப்போது அவளை காதலிக்கிறானா என்று கேட்டால்,அவனிடம் அதற்குரிய பதிலும் இல்லை.

அவனே தன் மனதிலிருக்கும் உணர்வுகளை சரி வர புரிந்துக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்க இடையில் ரோகிணியின் தொல்லை வேறு அவனிற்கு!

அவளின் அழைப்பை பார்த்தால் அவனிற்கு பேசக்கூட பிடிக்கவில்லை.

‘இவ ஒருத்தி’ என சலிப்பாக அவளின் அழைப்பை துண்டித்தான்.

அடுத்த கணமே அவனை தேடி அவள் அலுவலகமே வந்துவிட்டாள்.

அலுவலகத்தில் பணி செய்துக்கொண்டிருந்த ஜித்தேந்திரனை காண வந்த ரோகிணியை பார்த்து புருவம் சுருக்கினான் அவன்.

வெண்மை மற்றும் கருப்பு நிற கட்டம் போட்ட முட்டிக்கு மேல் வரை மட்டுமே இருந்த ஆடையுடன் வந்தவளின் விழிகளை குளிர்க்கண்ணாடி அலங்கரித்திருந்தது.

உடலை இறுக்கிப்பிடித்தாற் போன்று அவள் அணிந்திருந்த உடையின் வழியாக அவளின் அங்கங்கள் யாவும் வெளிச்சமிட்டு காட்டின.

அவனோ ஒரு பெருமூச்சுடன் ‘இவ எதுக்கு வந்தான்னு தெரியலையே’ என உள்ளுக்குள் சலித்தாலும் “வா ரோகிணி…எங்க இந்த பக்கம்?” என அவளை வரவேற்று உபசரித்தான்.

அவளோ குதிகால் செருப்பு சப்தமிட ஒயிலாக அவனை நோக்கி நடந்து வந்தவள் “எல்லாம் உங்களை பார்க்க தான் ஜித்” என கண்சிமிட்டியவாறே குனிந்து அவனின் கன்னத்தில் முத்தம் பதிக்க ஆயுத்தமானாள்‌.

ஆனால் அதற்கு முன்பே அவளின் செயலை அறிந்த ஆடவன் “ஹே என்ன செய்யறே நீ?” என பதற்றமாக இருக்கையோடு பின்னால் நகர்ந்தான்.

அவளோ அவனை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்து “ஜித் எதுக்கு இப்போ இப்படி ரியாக்ட் பண்ணறீங்க?நமக்கு தான் கல்யாணம் பேசிட்டிங்களே?அப்புறம் என்ன தயக்கம்” என கடுப்பை விழுங்கிய குரலில் வினவினாள்.

“முதல்ல நீ போய் அங்க உட்காரு” என அங்கிருந்த இருக்கையை கைகாட்டினான் ஜித்தேந்திரன்‌.

அவனின் முகம் கடுகடுவென இருந்தது.

அவன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த இளைஞனாகினும் அவனது குடும்பத்தில் விதித்திருந்த கட்டுப்பாடு அவனை எல்லை தாண்டவிடாமல் தடுத்து நிறுத்தின.

அத்தோடு சந்திரமதியின் மீதான அவனின் உணர்வுகளுக்கு துல்லியமான அர்த்தம் தெரிந்துக்கொள்ளாமல் அவளுடன் ஒன்றிப்போக அவனிற்கு சிறிதும் விருப்பமில்லை.

அதையறியாத பெண்ணவளோ அவனது ஒதுக்கத்தில் கடுப்பானவள் “ப்ச் ஏன் இப்படி கட்டுப்பெட்டித்தனமா நடந்துக்கிறீங்க ஜித்…வீ ஆர் டூ கே கிட்ஸ்…யூ நோ தட் ரைட்” என இதழை சுழித்து கேட்டவாறு மேசையை சுற்றி வந்து இருக்கையில் அமர்ந்தாள்‌.

அவளின் பேச்சை கேட்ட ஜித்தேந்திரனின் முகத்தில் எரிச்சல் கோடுகளின் ரேகைகள்!

அதனால் அவளை ஆழ்ந்து நோக்கிய ஜித்தேந்திரன் “இங்க பாரு ரோகிணி…நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் கட்டுப்பெட்டியில்லை…பட் ஃபீலிங்க்ஸ்னு ஒண்ணு இருக்கில்லை…உன் மேலே எனக்கு இதுவரை அந்த மாதிரி எந்த ஃபீலிங்க்ஸும் இல்லை…அப்படி இருக்கும் போது ஹவ் கேன் ஐ அக்சப்ட் யுவர் கிஸ்” என மனதிலிருப்பதை வெளிப்படையாக கூறிவிட்டான்.

இப்போது அவளின் முகம் அப்படியே மாறிப்போனது.

அவளின் அழகை கண்டு மயங்கி ஒரு பெரிய கூட்டமே அவளை அடைய காத்திருக்க,இவனோ அவளின் மேல் எந்த வித உணர்வும் வரவில்லை என்று கூறியதினால் அவளின் அகந்தை அடிப்பட்டது.

ஆயினும்,திருமணம் முடியும் வரை அவனிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாமல்  “இங்க பாரு ஜித்…தள்ளி தள்ளி இருந்தால் எப்படி ஃபீலிங்ஸ் வரும்…நம்ப கொஞ்சம் இன்ட்டிமேட்டா பழகினால் தானே நமக்குள்ள ஃபீலிங் டெவலப் ஆகும்” என ஆங்கிலத்தில் திமிராக சொல்ல,

அவளிற்கு பதில் கொடுக்கும் விதமாக “எனக்கு அதெல்லாம் வேணாம் ரோகிணி…ஃபீலிங்கன்றது தானா வரணும்…யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவனும் அவளை போலவே ஆங்கிலத்தில் உரையாடியிருந்தான்.

அவன் தன்னிடம் திமிராக பேசியதை கேட்டு உள்ளுக்குள் பற்றி கொண்டு எரிந்தன.

அவளோ அணிந்திருந்த உடையே முன்னால் இறக்கிவிட,அதில் அவளின் முன்னழகில் பாதி அவனின் விழிகளுக்கு பளீச்சிட்டன.

அதைக்கண்டு ‘ச்சை’ என வேகமாக முகத்தை திரும்பிக்கொண்டான்.

‘இவ என்ன தான் நினைச்சிட்டு இருக்காள்?’ என ஜித்துவிற்கு கடுப்பாக வந்தாலும்,தன்னை தானே அடக்கிக் கொண்டான்.

ஆனால் அவளிற்கோ அவன் தன்னழகை கண்டும் மயங்காதது உள்ளுக்குள் அவளின் அகந்தையை சீறி விட,அவளிற்கு அப்படியொரு கோபம் வந்தது.

அதனால் அவனை உறுத்து விழித்த மங்கையவள் “ஜித்…என்னை பார்த்து உங்களுக்கு ஃபீலிங் வரலைனா தப்பு என்கிட்ட இல்லை…உன்கிட்ட தான் இருக்கு…” என அவனை மேலிருந்து கீழாக இளக்காரமாக நோக்கினாள்.

அவள் கூற வருவதின் பொருள் புரிந்துக்கொண்ட ஜித்தேந்திரனிற்கு ஆத்திரம் என்றால் அப்படியொரு ஆத்திரம்!

அதிலும்,அவளின் பார்வை தன் தேகத்தில் பதிந்த விதம் அவனது பொறுமையை உடைத்துக்கொண்டு அவனை எரிமலையாய் வெடித்து சிதற வைத்தது.

அவனின் விழிகள் இரண்டும் சிவக்க “ரோகிணி ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை பிளேஸ்..” என்றான் உறுமலாக…

அவனது கோபத்தை கண்டப்பிறகு தான் அவள் தன் தவறை உணர்ந்து சுதாரித்தாள்.

அதனால் “ஜித் இது ஜஸ்ட் ஜோக்…இதை ஏன் சீரியஸா எடுத்துக்கறீங்க…” என அவள் சமாளிக்கப்பார்க்க,

அவனோ அவளை உறுத்து விழித்து “ஷட் அப்…எழுந்து முதல்ல வெளியப்போடி” என சிங்கமாய் மாறி கர்ஜிக்க,

இப்போது அவளிற்கும் ஆத்திரம் தோன்றிட “இதுக்கு ரொம்ப வருத்தப்படுவீங்க ஜித் நீங்க…” என  அவள் ‌கடுமையாக எச்சரிக்க,

அவனோ முகத்தை சுழித்து “சரிதான் போடி” என அதீத வெறுப்புடன் கூறியிருந்தான்.

அது இன்னும் அவளிற்குள் புதைந்திருந்த வன்மத்தை தூண்டிவிட்டன.

“ஜித் மைண்ட் யுவர் லாங்குவேஜ்” என அவனை விரல் நீட்டி மிரட்ட,

அவனோ ‘போடி’ என்ற பாவனையுடன் தெனாவெட்டாக அவளை பார்த்திருக்கவும்,அவளிற்கு ஒரு மாதிரி அவமானமாகிவிட,அவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

அவனின் மீதுள்ள கோபத்தையெல்லாம் கதவை அடித்து சாற்றி அவள் காட்டியதும் “ஜோக்காம்…ஜோக்கு…பிளடி” என அவளை தாறுமாறாக திட்டிக்கொண்டவனிற்கு ஆத்திரம் அடங்க மறுத்தது‌.

ஜித்தேந்திரன் அவ்வளவு எளிதில் கோபம் கொள்பவன் கிடையாது.

ஆனால் அவளின் பேச்சு ஆடவனது ஆண்மையை இழிவுப்படுத்தி அவனது தன்மான திரியை கிள்ளிவிட்டிருந்தது.

அவள் தூண்டிய திரி அவனுள் கொளுந்துவிட்டு எரிய தொடங்கிட,வெகு நேரத்திற்கு அவனின் சீற்றம் அடங்க மறுத்தது.

‘ஷிட்…ஷிட்..’ என தன்னிலை இழந்து தலையை தாங்கிக்கொண்டவனிற்கு அதற்கு மேல் வேலை செய்ய மனமில்லை.

அதனால் வேகமாக அங்கிருந்து எழுந்துக்கொண்ட ஜித்தேந்திரன் சந்திக்க சென்றது என்னவோ சந்திரமதியை தான்!

வீட்டிற்கு சென்றால் அவனின் முகத்தை பார்த்து அனைவரும் பயந்துவிடுவார்கள் என்று கோபத் தீயை அணைக்க அவன் நாடி சென்றான் அவனவளிடம்!

ஆனால் அவளோ இப்படியொரு ஆடவன் தன்னை மறைந்திருந்து ரசிப்பது கூட அறியாமல் மகளிர் விடுதியிலிருந்து வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அவன் அறையிலிருந்து வெளியே வந்த ரோகிணியோ ‘உன்னை பிடிச்சிருக்கிற ஒரு காரணத்துக்காக தான்டா இத்தனை நாளா அமைதியா இருந்தேன்…இப்போ நீ என்னையே அவமானப்படுத்திட்டயில்லை…உன்னை சும்மா விடமாட்டேன்டா…’ என தனக்குள்ளே ஒரு திட்டத்தை வகுக்க ஆரம்பித்துவிட்டாள்.
 

முகிழ்மதி 74:


 

 

சந்திரமதியை காண்பதற்கு ஜித்தேந்திரன் அந்த விடுதிக்கு வந்துவிட்டான்.

ஆனால் அவள் இன்னும் அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.

எப்போதும் அமரும் அதே குளம்பியகத்தில் வழக்கம் போல் ஒரு கொட்டை வடிநீரை உறிஞ்சியப்படி அவளிற்காக அவன் காத்திருந்தான்.

அவனிற்குள் எரிந்துக் கொண்டிருந்த தீ மட்டும் அணைய மறுத்தன‌.

‘என்னை எப்படி அவ அப்படி பேசலாம்?’ என தனக்குள்ளே ரோகிணியை நினைத்து வெதும்பிப்போனான்‌.

அவனுள் கொந்தளித்த மனதை அடக்கும் வகையறியாமல் இங்கு வரை வந்துவிட்டான்.

ஆனால் ‘ஏன்?எதற்காக?’ என அவனிற்கு சிறிதும் புரியவில்லை.

அவனின் இதயம் உந்தி தள்ளியதில் இங்கு வரை அவன் வந்துவிட்டான்.

அவள் வருவதற்கு வெகு நேரம் பிடித்ததால் அவனின் மனம் ஒரு நிலையிலின்றி தவித்தன.

ஒரு கட்டத்தில் ‘ஆமா நீ எதுக்கு இங்க வந்திருக்கே?நீ என்ன நினைப்பிலே இருக்கே ஜித்து?உனக்கு வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் அது ஞாபகம் இருக்கா இல்லையா?’ என சரமாரியாக மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் அவன் திட்டமிட்டே அதனை தட்டிவிட்டான்.

அவனது பொறுமையை வெகுவாய் சோதித்தப் பிறகே விடுதியினுள் நுழைந்தாள் காரிகை!

ஒரு வித பரபரப்புடன் விடுதியின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தவளின் மீது அவனின் விழிகள் ஆழப்பதிந்தன.

அவளை கண்டவுடன் அதுவரை அவன் நெஞ்சில் கனன்ற தீ,நீர் ஊற்றி அணைத்தது போல் சாந்தமாகின.

பெயருக்கு ஏற்றாற் போன்று வட்டவடிவ மதி முகம்,அவளின் பிறைநுதலை அலங்கரித்த சிறிய கருப்பு நிற பொட்டு,அழகிய மைத்தீட்டிய பழுப்பு நிற விழிகள்,கூந்தலை ஏற்றி தூக்கிக்கட்டிய குதிரை வால்,காதில் சிவப்பு நிற நெகிழி குட்டி ஜிமிக்கி,அதே வெளிறிப்போன சிவப்பு நிற சுரிதார் என அந்த எளிமையான அலங்காரத்திலே வானுலக ரதியாய் தோன்றினாள் அவள்.

பேருந்தில் பயணம் செய்து வந்ததிருந்ததால் அவளின் மேனியெங்கும் வியர்வை பூத்திருந்தன.

ஏனோ அவளது களைத்த தோற்றம் கூட அவனை கவரவே செய்தன.

தனது கைப்பையை அலசி ஆராய்ந்தவாறே உடைமாற்றும் அறையை நோக்கி அவள் வேகமாக நடந்தாள்.

திடீரென்று அவளின் அலைப்பேசி ஓசையெழுப்ப அதை எடுத்து காதில் வைத்த மங்கையவள் “ஆமா…இன்னைக்கு பஸ் கொஞ்சம் லேட்டு மீனு…நான் ஒரு ஃபைவ் மினிட்ஸிலே ரெடியாகிட்டு வந்திடறேன்…அதுவரைக்கும் நீ மேனேஜரை சமாளி” என அவசரமாக பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

அவளின் பிம்பம் மறையும் வரை தூரத்திலிருந்தவாறே அவளை பார்வையால் பின்தொடர்ந்தான் ஜித்து.

அவன் அவளை பின்தொடர நினைக்கவில்லை…அவளிடம் பேசவும் முற்படவில்லை.

மாறாக,இங்கு வர வேண்டும் என்று தோன்றியது,வந்துவிட்டான்..

அவளை பார்க்க வேண்டும் போல் தோன்றியது,பார்த்துவிட்டான்…

அவனிற்கு தேவையான அமைதியும் கிடைத்துவிட்டது.

அதற்கு மேல் அவனிற்கு வேறு எதுவும் தேவைப்படவில்லை.

அவளின் மீது அவனிற்கு ஒரு ஈர்ப்பு இருப்பது நிஜம்!

அதேப்போல் அவளின் தற்போதைய நிமிர்வு,எளிமையான தோற்றம்,பேச்சு அனைத்தும் அவனிற்கு பிடித்திருக்கிறது.

அவ்வளவே?

அதற்கு மேல் அவளை நேசிக்கிறான் என்ற மார்க்கத்தை நோக்கி அவனின் மனம் செல்ல விளையவில்லை.

மீறி சென்றாலும் அவனால் தற்சமயம் அதை ஏற்கமுடியாது.

ஏனெனில்,காதல் என்ற உணர்வுகளுக்குள் அவன் செல்வதற்கு தடையாய் இருந்தாள் ரோகிணி.

ரோகிணியை அவனிற்கு அறவே பிடிக்கவில்லை…ஆனாலும் அவளுடன் நடந்தேறிய திருமண பேச்சு வார்த்தையை அவனால் அப்படியே நிராகரிக்க முடியாது‌.

இதில் அவன் மட்டுமல்ல…அவனது குடும்பத்தின் மொத்த கௌரவமும் அடங்கியிருக்கிறது.

அத்தோடு அவனது தந்தையின் அரசியல் எதிர்காலமும் அவனது திருமணத்தில் தான் அடங்கியிருக்கிறது.

ஆகையால்,சட்டென எந்தவொரு முடிவையும் அவனால் எடுக்க முடியாது.

சூழ்நிலை கைதியாய் இந்த திருமணத்தில் அவன் விலங்கிட்டு அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறான்.

அதனால் தற்போது தூரத்திலிருந்து அவளை பார்ப்பதை தவிர அவன் வேறு எதைப்பற்றி சிந்திப்பதையும் தவிர்த்தான்.

அடுத்த ஐந்தே நிமிடத்தில் மதுப்பானம் பரிமாறுபவர் சீருடையில் வெளிவந்த சந்திரமதியை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்‌.

அவனின் மனசாட்சியே அவன் செய்வதை பார்த்து ‘த்தூ’ என காறி உமிழ,

‘சரி சரி விடு…நான் பண்ணறது பைத்தியக்காரத்தனம்னு எனக்கே தெரியாது…பட் வேற வழியில்லை’ என கழிவிரக்கத்துடன் தலையை ஆட்டிக்கொண்டான்.

அதேசமயம் திருமணத்திற்கு முன்பே தன்னை ஊசலாட செய்துக்கொண்டிருக்கும் இந்த பந்தம் அவசியமா என்று அவனிற்குள் ஒரு உணர்வு தோன்ற தொடங்கின.

ரோகிணியின் தோரணை,பேச்சு என அவனிற்கு ஒன்று கூட பிடிக்கவில்லை.

இன்று மட்டுமல்ல…அவளுடன் எப்போது அவன் உரையாடினாலும் அது முரண்பாடுடனே முடிந்தது.

அவளின் பேச்சில்,செயலில் மட்டும் முரண்பாடில்லை…அவளே ஒரு முரணாக அவனிற்கு தெரிந்தாள்.

இன்று போல் பல சம்பவங்கள்..

அவளின் வாயிலிருந்து ‘நாம்’ என்ற வார்த்தையே வருவதில்லை.

அவள்…அவளது ஆசை…அவளது விருப்பம்…அவளது பிடிவாதம்…அவளது ஆணை…அவளது பேச்சு என எங்கும் எதிலும் அவள்…அவள் மட்டுமே!

அவளின் வாழ்வில் முழுமையாக அவள் ஒருவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

அவளின் வாழ்வில் பெற்றோர்களுக்கு கூட இடம் இருப்பதாக அவனிற்கு தோன்றவில்லை.

அவளிற்குள் ‘தான்’ என்ற தராக மந்திரம் மட்டுமே இருந்தன.

சில நேரம் அவனிற்கே ‘உன் வாயிலிருந்து நாம்பன்ற வார்த்தையே வராதா?எதுவா இருந்தாலும் நான்…நான் நான் மட்டும் தானா?’ என கேட்டுவிட நாவு துறுதுறுக்கும்.

வீணாக எந்தவித பிரச்சனைகளும் வேண்டாம் என கருதி அவளின் பேச்சை சாதாரணமாக கடந்துவிட்டான்.

ஆனால் இன்றோ அவளின் பேச்சு எல்லை மீறி,அவனுள் இருந்த ஒட்டுமொத்த பொறுமையையும் அடித்து விரட்டிவிட்டு அவள் தனக்கு வேண்டவே வேண்டாம் என்ற உறுதியான முடிவிற்கு அவனை வரவழைத்திருந்தது.

அதனால் ஒரு வித திடமான முடிவுடன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

தமையனிடம் அதைப்பற்றி பேசி விடலாம் என்று முதலில் எண்ணினான்.

பிறகோ ‘வேணாம்…அண்ணனுக்கே ஆயிரம் பிரச்சனை…இதிலே என் பிரச்சனையையும் சேர்த்து இழுத்து வைக்க வேண்டாம்’ என முடிவெடுத்து தனது பாட்டியிடம் பேசிவிட முடிவெடுத்தான்.

ஆனால் பாட்டியிடமிருந்து அவனிற்கு கிடைத்த பதில் அவனை ஒரேயடியாக அதிர வைக்கும் என அக்கணம் அறியவில்லை.

***********

தமயந்தி வீரின் வீட்டிற்கு புறப்படுவதற்கு ஆயுத்தமாகி இருந்தாள்.

தமையனிடம் பாட்டியின் மேல் பழியை தூக்கிப்போட்டவள்,வீட்டில் தாயிடம் “அம்மா அண்ணா தான் வீர் வீட்டிலே இந்த பொருள் எல்லாம் கொடுத்திட்டு வர சொன்னாங்க…நான் கொடுத்திட்டு வந்திடறேன்மா” என அப்பட்டமான பொய்யுரைத்தாள்.

வானதிக்கு பெரிதாக சந்தேகம் எதுவும் வரவில்லை.

தன் பெரிய மகன் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என நம்பக்கூடியவர் அவர்.

அத்தோடு அவருக்கும் வீரை அதிகம் பிடிக்கும்.தன் மகன் போல் தான் அவனையும் பாவிக்கிறார்.

அதனால் “சரி பார்த்து பத்திரமா போயிட்டு வா லட்டு…கூட யாரு வர்றாங்க?” என ஒரு அன்னையாக மகளின் மேல் உள்ள அக்கறையில் விசாரிக்க,

“செக்யூரிட்டி ஆபிசர் சம்பத் வர்றாரும்மா…பிரச்சனையில்லை” என அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு புறப்பட்டாள்.

செல்வதற்கு முன்பு அங்கு வந்த முகிழ்மதியிடம் “அண்ணி இன்னும் ஒரு எக்ஸாம் தானே இருக்கு?அதுக்கு எல்லாம் பிரிபேர் பண்ணிட்டீங்களா?” என கேட்க,

அவளோ “இங்கிலீஷ் மிச்சமிருக்கு அண்ணி…அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு” என புத்தகத்தை பாவமாக தூக்கிக்காட்டினாள்.

அவளின் பாவனையில் இரக்கம் கொண்ட தமயந்தி “அட அண்ணி வீட்டுலே ஒரு இங்கிலீஷ் லிட்ரேச்சரை வைச்சிட்டு உங்களுக்கு என்ன கவலை?வாங்க என் கூட?” என அவளின் கரம் பற்றி தரதரவென இழுத்துச் சென்றாள்.

“இங்கிலீஷ் லிட்ரேச்சரா யாரு அது அண்ணி?” என தனக்கே உரிய மெல்லிய குரலில் முகிழ்மதி வினவ,

“சொல்லறேன்…சொல்லறேன் வாங்க” என நமுட்டுச்சிரிப்பு சிரித்தப்படி அவள் அழைத்து சென்றது என்னவோ பாட்டியின் அறைக்கு தான்!

“பாட்டியா?” என அவள் ஆச்சரியமாக கேட்டாள்.

அவளால் நம்பவே முடியவில்லை.

ஆங்கிலத்தையும் அவரது தோற்றத்தையும் இணைத்து பொருத்தி பார்க்கவே முடியவில்லை.

உடனே ஒரு கணம் நின்று அவளை நோக்கி திரும்பியவள் “அட என்ன அண்ணி?நம்ப பாட்டி ஒரு வெள்ளைக்கார துரையம்மா‌…அந்த காலத்திலே இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிருக்காங்க…நம்பலைனா வாங்க ஒரு சேம்பிள் காட்டறேன்” என தோரணையாக கூறி அவளை உள்ளே அழைத்துச்சென்றாள்.

காஞ்சனா மாலா வழக்கம் போல் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை கையில் வைத்தப்படி அமர்ந்திருந்தார்.

“ஹலோ டான்…டான்” என ஆர்ப்பாட்டமாக கதவை தட்டி அழைத்தப்படியே தமயந்தி உள்ளே நுழைய,

அவரோ அவளை விடுத்து முகிழ்மதியை பார்த்தவர் “அட முகிழு…வாடாம்மா…என்ன விஷயம் கண்ணு?” என அவளை ஆதுரத்துடன் வரவேற்று தன்னருகே அமர வைத்தார்.

அதில் கடுப்பான தமயந்தி “ஹலோ பாட்டி…பேரனோட பொண்டாட்டிய பார்த்தவுடனே பேத்திய மறந்திட்டீங்க பார்த்தீங்களா?” என இடையில் கைவைத்து முறைக்க,

அவரோ “லட்டு நீ எப்போதுமே என் பேத்தி தான்…ஆனால் முகிழு எப்பையாவது தானே இங்க வர்றாள்” என்றவர்,

“சரி என்ன விஷயம்?” என இருவரையும் பார்த்தவாறு அவர் கேட்க,

முகிழ்மதியோ அவர் மேசையில் மடித்து வைத்திருந்த ஆங்கில நாவலை அதிசயமாக பார்த்திருந்தாள்.

சந்தன நிற பருத்தி புடவை,கையில் தங்க வளையல்,கழுத்தில் சிறு தங்க சங்கலி,காதில் சிறு வைர கல் பதித்த தோடு இதை மட்டுமே அணிந்திருந்தார் அவர்.

அவரது பாரம்பரியமான தோற்றத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அவளால் பொருத்திக்கொள்ளவே முடியவில்லை.

முகிழ்மதி இங்கு நாவலை கவனிப்பதற்குள் விடயத்தை அவரிடம் பகிர்ந்த தமயந்தி “ராஜமாதா காஞ்சனா மாலா அவர்களே,தங்களுடைய ஆங்கில புலமையை திருமதி முகிழ்மதியிடம் காட்டி தங்களது திறமையை நிரூபிக்க வேண்டுமாறு தங்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…பட்டையை கிளப்புங்கள் ராஜமாதா” என நாடகப்பாணியில் மிடுக்காக உரைத்து கைத்தட்டினாள் அவள்.

அவளின் பேச்சை கேட்டு புன்னகைத்த காஞ்சனா மாலாவோ “லட்டு இங்கிலீஷ் புலமையை காட்டுன்னு தமிழ் உரைநடையிலே சொன்ன ஒரே ஆள் நீயா தான் இருப்பே?” என பேத்தியிடம் நக்கலாக சொல்ல,

“டான் என்ன நக்கலா?எல்லாரும் போற மாதிரி நாம்ப ஏன் ஒரே ரூட்டிலே போகணும்…வித்தியாசமா போகலாமேன்னு மாத்தி யோசிச்சா என்னையே கிண்டல் பண்ணறீங்களா?” என முறைத்துக்கொண்டே கேட்டவள்,

“சரி பரவாயில்லை விடுங்க…வாங்க கம்மான்…உங்க புது பேத்திக்கு ஒரு சேம்பிளை அள்ளி கொட்டுங்க” என முகிழ்மதியை காட்டி சொல்ல,

முகிழ்மதியோ அப்போதும் அவருக்கு ஆங்கிலம் பேச தெரியும் என்பதை நம்ப முடியாத பாவனையிலே அவள் பார்த்தாள்.

அவளின் நம்பாத பாவனை அவளின் முகத்திலே தெரிய,

உடனே காஞ்சனா மாலாவின் முகத்தில் இருந்த தோரணை கம்பீரமாக மாற “ஹாய் ஓய் ஆர் யூ கம்மிங் ஹியர்…” என ஆரம்பித்து அவர் பேசிய சரளமான ஆங்கிலத்தில் அவளின் விழிகள் இரண்டும் சாசர் போல் விரிந்தன.

அவரின் பேச்சில் சிறு பிசறில்லை….தற்போதைய தலைமுறையினரே பயன்படுத்த தயங்கும் சொற்களை உபயோகித்து உரையாடிவருக்கு பதில் சொல்ல அவள் தான் திணறிப்போனாள்.

அடுத்த ஐந்து நிமிடம் தொடர்ந்த அந்த ஆங்கில உரையாடலில் முகிழ்மதி வாயை பிளக்காத குறை தான்!

‘எப்படி?’ என அவளின் அதரங்கள் வாய்விட்டு கேட்கவில்லையே தவிர அவளின் விழிகள் தமயந்தியை நோக்கின.

“அது தான் நம்ப டான் அண்ணி…பாட்டியை பத்தி நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?வெள்ளக்கார துரைங்ககிட்டயே படிச்சு பதக்கம் வாங்கினவங்க நம்ப பாட்டி…தாத்தாவே இவங்களோட இங்கிலீஷ் புலமையை பார்த்து தான் கட்டிக்கிட்டாரு தெரியுமா? அதுமட்டுமில்லாமல் பாட்டி நிறைய போயம் எழுதியிருக்காங்க…இப்போ சொல்லுங்க…இவங்க உங்களுக்கு ஒரு நல்ல டீச்சரா இல்லையா?” என தமயந்தி கெத்தாக புருவம் உயர்த்தி கேட்க,

அவளோ அகமும் முகமும் மலர “ஆம்” என தலையாட்டினாள்.

தனது பாட்டியை பெருமிதமாக நோக்கி “நம்ப டான் கூட ஒரு பத்து நாள் பேசினீங்க…நீங்களும் இங்கிலீஷிலே எக்ஸ்போர்ட் ஆகிடுவீங்க அண்ணி…ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கூட போக தேவையில்லை…ஓசியிலே புதுசு புதுசா வொர்ட்ஸ் கத்துக்கிலாம் நம்ம டிரெண்டிங் டான்கிட்ட…அப்படியொரு ஜீனியஸ் நம்ப பாட்டி” என சிலாகித்து அவரின் தோளில் சாய்ந்தப்படி பேசிக்கொண்டிருந்தாள் தமயந்தி.

அவளின் முகஸ்துதிக்கெல்லாம் மயங்காத காஞ்சனா மாலா “போதும்…போதும்…என்னை எதுக்கு நீ கலாய்ச்சிட்டு இருக்கே?உனக்கு ஏதோ வேலையிருக்குனு சொன்னீயே?கிளம்பலையா நீ?” என இடைப்புகுந்து பேத்தியை அதட்ட,

சட்டென அங்கிருந்து எழுந்தவள் “அட ஆமா பாட்டி…நான் மறந்தே போயிட்டேன்…அண்ணிய உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்…நீங்க பார்த்துக்கோங்க…நான் சீக்கிரம் போயிட்டு வந்திடறேன்…பை அண்ணி…பை பாட்டி” என அவசரமாக விடைப்பெற்று புறப்பட்டாள் வீரின் இல்லத்திற்கு!

தன்னுடன் அவள் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றாள்.

அவள் சென்றதும் முகிழிடம் திரும்பிய பெரியவர் “முகிழு…உனக்கு இங்கிலீஷிலே என்னம்மா சந்தேகம்?” என அவளின் புத்தகத்தை கையில் வாங்கியப்படி கேட்க,

அவளோ அவருக்கு தொந்தரவு கொடுக்கிறமோ என்றெண்ணி “பாட்டி” என தயங்கினாள்.

அவளின் தயக்கம் அறிந்த காஞ்சனா அவளை இதமாக நோக்கி “நான் உனக்கும் பாட்டி மாதிரி தான்மா முகிழு…என்கிட்ட ஏன்மா தயங்கிறே?எதுவா இருந்தாலும் வாயை திறந்து பேசு” என்றார் கனவு தொனிக்கும் குரலில்.

அவளோ கைகளை பிசைந்து “அதில்லை பாட்டி…நீங்க ஓய்வெடுக்கணும்…உங்களை தொந்தரவு பண்ண கஷ்டமா இருக்கு” என தடுமாற்றத்துடன் உரைக்க,

“ஓ…நீ அப்படி வர்றீயாம்மா?” என சிரித்தவர் “எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை…நீ உன் சந்தேகத்தை கேளு…எனக்கு தெரிஞ்ச மாதிரி நான் சொல்லி தர்றேன்” என்றார் அவர்.

அவளும் ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும் நேரம் செல்ல செல்ல அவரது ஆங்கில புலமையிலும் கற்றுத்தரும் பாணியிலும் லயத்துவிட்டாள்.

வானதி இருவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து தரும் வரை,இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.

“போதும் போதும் படிச்சது…இந்தாங்க களைப்பா இருப்பீங்கனு ஜுஸ் எடுத்திட்டு வந்திருக்கேன்” என சிரித்துக்கொண்டே உள்ளே வந்தவர் பாட்டியிடம் ஒரு குவளையை எடுத்து நீட்டினார்.

அவர் இனிப்பு போட்டு குடிப்பதில்லை என்பதால் அவருக்கு ஏற்றாற் போன்று எடுத்து வந்திருந்தார்.

அதனால் முதலில் ஒரு குவளையை அவரிடம் கொடுத்தவர் தட்டை அவளை நோக்கி நீட்ட,

அவளோ “சாரி அத்தை…நீங்க எதுக்கு இதெல்லாம் எடுத்திட்டு வர்றீங்க?” என சங்கோஜத்துடன் குவளையை நோக்கினாள்.

“யார் கொண்டு வந்தால் என்னம்மா?என் பிள்ளைங்களா இருந்தால் நான் செய்யமாட்டானா?” என அவரின் பெருந்தன்மையான பேச்சை கேட்டவளின் விழிகள் பனித்தன.

முன்பு தன்னுடைய கலக்கத்திலே சுழன்றுக்கொண்டிருந்ததால் இவர்களது அக்கறை எதுவும் அவளின் மனதில் பதியவில்லை.

ஆனால் தனது கணவனின் மீதான அவளின் நேசத்தை உணர்ந்தப்பிறகு அவளிற்கு அனைத்தும் புதிதாய் தெரிந்தன.

அவளிற்கு தெளிவாகவும் புரிந்தன.

எண்பது வயதை கடந்தும் சிறிதும் முகம் சுணங்காமல் பாட்டி பாடம் எடுத்த விதம்,தன்னுடைய களைப்பை உணர்ந்து பழச்சாறு கொண்டு வந்த மாமியாரின் அக்கறை,அளந்து பேசினாலும் அவ்வப்போது விஜயேந்திரன் காட்டும் பரிவு,எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கொளுந்தனர் மற்றும் நாத்தனார் வெளிப்படுத்தும் பாசம், இதையெல்லாம் மீறிய கணவனின் காதல்!

பிறந்த வீட்டில் அவளிற்கு கிடைக்காத யாவும் இங்கு புகுந்த வீட்டில் அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரமாய் கிடைப்பதை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தாள் அவள்.

ஒரு ஓரத்தில் அவளின் தமக்கையை காணும் தவிப்பு இருந்தாலும்,அவளின் புது சொந்தங்கள் அவளின் மனதிலுள்ள வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டே இருந்தனர்.

அந்நேரம் அவளின் வாழ்வில் இருந்த இருண்ட பக்கங்கள் யாவும் கிழிந்து காணாமல் போனது போல் அவளுள் ஒரு மாயத்தோற்றம்!

அவளின் அகமும் புறமும் இலேசாகியது போல் ஒரு உணர்வு!

இதயத்தில் இருந்த காயங்கள் எல்லாம் ஒரே நொடியில் தொலைந்து போனது போல் உணர்ந்தாள் அவள்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top