முகிழ்மதி 75,76,77

முகிழ்மதி 75:

சந்திரமதியை பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு செல்ல விருப்பமற்றவனாய் இல்லம் நோக்கி புறப்பட்டு வந்தான் ஜித்தேந்திரன்.

கதிரவனின் கதிர்கள் பூமியிலிருந்து அகலாத வேளையே வீடு வந்து சேர்ந்த சிறிய மகனை கண்டு ஆச்சரியமுற்றார் வானதி‌.

“என்ன ஜித்து?இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டே?” என அவனது தாய் விசாரிக்க,

அவனோ போலிப் புன்னகையை பூசி “தலைவலிம்மா…அதான் வந்திட்டேன்” என தன் கவலை மறைத்து பொய்யுரைத்தான்‌.

ஆனால் பெற்றவரான வானதி அதற்கே துடித்துவிட்டார்.

“என்ன கண்ணா?ரொம்ப தலைவலிக்குதா?அம்மா தைலம் தடவிவிடட்டுமா?சுக்கு காஃபி ஏதாவது போட்டு வந்து தரட்டுமா ஜித்து?” என படபடப்பாக அவனின் நெற்றியை வருடி கேட்டவரின் அன்பில் அவனின் நெஞ்சம் கனிந்தன.

உடனே அவனிதழில் புன்னகை பூத்திட “என் செல்ல அம்மாவே எனக்கு அதெல்லாம் எதுவுமே வேணாம்” என அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,

“ஒரே ஒரு ஹக் என் அம்மா கொடுத்தாலே போதும்…எவ்வளவு பெரிய தலைவலியா இருந்தாலும் சும்மா பஞ்சாய் பறந்துப்போகும்…லவ் யூ மா” என வேகமாக அவரை கட்டியணைத்துக்கொண்டவனின் மனதில் உள்ள பாரங்கள் குறைந்தாற் போன்ற ஒரு உணர்வு!

அன்னையின் தோளில் முகம் புதைத்து அப்படியே விழி மூடி நின்றிருந்தவனின் முதுகை வருடிவிட்டவாறே “ஆபிஸிலே ரொம்ப வேலையா கண்ணா?” என வானதி பரிவுடன் விசாரிக்க,

அவனோ ‘இல்லை’ என அதே நிலையில் நின்றவாறே தலையசைத்தான்.

அவரோ “நீ ரொம்ப டென்ஷனை ஏத்திக்காதே கண்ணா…உன்னாலே முடியலைனா இன்னொரு அசிஸ்டன்ட் கூட வைச்சுக்கோ…இல்லையா பெரியவன்கிட்ட நான் வேணா பேசட்டுமா?” என இரண்டாவது மகன் முகம் சரியில்லாததை பார்த்து கேட்க,

சட்டென விழி திறந்த ஜித்தேந்திரன் பெருமூச்சுடன் தாயிடமிருந்து விலகினான்.

அதுவரை சிரிப்பை தொலைத்த அவனிதழ்கள் அன்னையிற்காக மீண்டும் புன்னகைத்திட “அம்மா டோன்ட் வொர்ரி…நான் ஓகே…உங்களை ஹக் பண்ணவுடனே பெயின் எல்லாம் போயிடுச்சு…” என கையை விரித்து குழந்தையின் பாவனையுடன் சொன்னவன் “அண்ணாவெல்லாம் டென்ஷன் பண்ண வேணாம்மா…ஏற்கனவே போலிட்டிக்கலா நிறைய பிரஷர் இருக்கு அவருக்கு…என்னை பார்த்துக்க தான் என் அம்மா நீங்க இருக்கீங்களே?” என இனிமையாய் பேசியே அவரின் துயரை துடைத்தான் வானதியின் புதல்வன்.

மகனின் சிரிப்பை கண்டப்பிறகே அவரும் சமாதானமானவர் “நீ இங்கியே இரு…நான் போய் சுக்கு காஃபி போட்டு எடுத்திட்டு வர்றேன்” என அன்புக்கட்டளையிட்ட பெற்றவள்,அவனை குளம்பியை முழுமையாக குடிக்க வைத்தப்பிறகே விட்டார்.

அவனும் தாயின் இந்த பாசத்தில் உருகி “தேங்க் யூ சோ மச் அம்மா” என அவரை முத்தமிட்டு விடைப்பெற்றவன் நாடி சென்றது என்னவோ பாட்டியிடம் தான்!

முகழ்மதிக்கு பாடம் கற்பித்துவிட்டு தூங்கியவர் அப்போது தான் கண் விழித்திருந்தார்.

எப்போதும் அவரின் அறைக்குள் நுழையும் போதே அட்டகாசமாய் புன்னகைத்துக்கொண்டு நுழையும் பேரனின் முகத்தில் கவலை குடியேறியிருந்ததை கண்டு புருவம் சுருக்கினார் காஞ்சனா மாலா.

அனைத்தையும் முகத்திற்கே நேரே பேசியே பழக்கப்பட்டவன் அவன்!

அதனால் அவரிடம் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.

பாட்டியின் அருகே கட்டிலில் சென்று அமர்ந்த ஜித்தேந்திரன் “பாட்டி நான் சொல்லறேன்னு கோவிச்சுக்காதீங்க…எனக்கு இந்த கல்யாணம் அவசியமானு தோணுது?பேசாமல் கல்யாணத்தை நிறுத்திட்டால் என்ன பாட்டி?” என ஒரு எதிர்பார்ப்பும் சோர்வும் கலந்த குரலில் கூறிய பேரனை கண்டு அவரின் நெஞ்சம் துடித்தன.

ஏனோ வழமையாக அவனிடம் இருக்கும் துறுதுறுப்பும் புன்னகையும் இல்லாமல் அவனை பார்ப்பது அவரின் இதயத்தில் ஊசியால் குத்துவது போலிருந்தது.

அதனால் “ஏன் சின்னவனே?என்னாச்சு?இங்க பாட்டிக்கிட்ட வா கண்ணா” என அவனை அன்போடு அரவணைத்து சிகையை வருடிவிட்டவரின் அணைப்பிலே கட்டுண்டு கிடந்தான் பேரன்.

சில வினாடிகள் அப்படியே விழி மூடி இருந்த ஜித்தேந்திரன் பின்பு இமைத்திறந்து காஞ்சனா மாலாவை நோக்கியவன் “பாட்டி ரோகிணி எனக்கு வேணாம்னு தோணுது…ஷீ இஸ் நாட் ஃபிட் பார் திஸ் மேரேஜ்…சில நேரம் என்கிட்ட ரொம்ப நல்லா நடந்துக்கிறாள்…சில நேரம் எனக்கு பயங்கர கோபம் வர மாதிரி நடந்துக்கிறாள்…அவளை என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை…அவளாலே எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு‌ பாட்டி…ஷீ இஸ் வெர்ரி டேன்ஜரஸ்” என மனதில் இருக்கும் அனைத்தையும் அவரிடம் கொட்டினான்.

மூத்தவரின் முகமும் ரோகிணியை எண்ணி தீவிரமாக மாறிவிட “எனக்கு புரியுதுடா பேராண்டி…வெளியிலிருந்து பார்க்கும் போதே அந்த பொண்ணுகிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு எனக்கே தோணுது…அவ நம்ப குடும்பத்துக்கு ஏத்தவளே இல்லை…அதை உன் அப்பன்கிட்ட சொன்னால் எங்க கேட்கிறான்?உன் கல்யாண விஷயத்திலே ரொம்ப உறுதியா இருக்கான்” என ஆதங்கமும் அயர்ச்சியும் கலந்த ஒரு பெருமூச்சுடன் கூறினார்.

“பாட்டி இப்படி யாருக்குமே பிடிக்காமல் எதுக்கு ஒரு கல்யாணம்?இவ்வளவு கஷ்டப்படறதுக்கு பேசாமல் கல்யாணத்தை நிறுத்திடலாமில்லை” என அவன் அழுத்தமான குரலில் கேட்க,

ஆனால் அவரோ “அந்த தப்பை மட்டும் பண்ணிடாத பேராண்டி‌…உன் அப்பன் தாங்கவே மாட்டான்…பெரியவனோட கல்யாணம் நடந்த விதத்திலே அவன் பயங்கர ஏமாற்றமா இருக்கான்…இப்போ நீயும் போய் எனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னால் அவன் உடைஞ்சுப்போயிடுவான்…என் பையனை அப்படியொரு நிலைமையிலே என்னாலே பார்க்க முடியாது சின்னவனே” என்றவரின் குரல் இறுதியாக உடைந்தது.

ஆனால் அவனிற்கு தான் பெரும் ஏமாற்றம்!

அவரையே நம்பி சரணடைந்த ஆடவனிற்கு அவரின் பேச்சு திகைப்பை அளித்தன.

அவரிடமிருந்து இப்படியொரு பதிலை அவன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

அதனால் ‘பாட்டி உங்க பையன் உடைஞ்சிருவாருன்னா…அப்போ என் நிலைமை’ என அவரிடம் கேட்டுவிட அவனின் மனம் துடித்தன.

ஆனால் அவரின் முகத்திலிருந்த கவலை அவனை அதற்கு மேல் எதுவும் பேசவிடவில்லை.

இப்படியெல்லாம் அவனின் உணர்வுகளை நிராகரிக்கக்கூடியவர் அவரில்லை என்பதை அவன் நன்கு அறிவான்.

திடீரென்று அவர் தந்தைக்கு சாதகமாக பேசுவதின் பின்னணியில் தந்தையின் அன்பு மிரட்டல் ஏதோ இருக்கின்றது என்று அவன் சரியாக கணித்துக்கொண்டான்.

இருப்பினும்,திருமணத்திற்கு பின்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு உயிர் வலியை அனுபவிப்பதை விட,இக்கணமே அதிலிருந்து மாட்டிக் கொள்ளாமல் தப்பி செல்வதே சாமர்த்தியம் என்றெண்ணினான் அவன்.

அதனால் “பாட்டி…” என அவன் ஆரம்பிக்கும் போதே “நீ தேவையில்லாமல் மனசை போட்டு குழப்பிக்காமல் கொஞ்ச நாள் அமைதியா இரு ஜித்து…எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு ரொம்ப செல்லமா வளர்ந்திருக்காள்…அதனாலே அப்படி திமிரா நடந்துக்கிறாள்னு நினைக்கிறேன்…கல்யாணம் பண்ணிட்டு வந்தால் மாறிடும்…கண்ணா கல்யாணம் வரைக்கும் உனக்கு நேரமிருக்கு…அவளோட நீ பழகிப்பாரு…அப்படியும் உன் மனசுக்கு திருப்தியில்லைனு நாம்ப வேற ஏதாவது யோசிப்போம்” என அவனின் சிகையை வருடிவிட்டவாறே அவர் கூற,

அவனோ ‘பாட்டி உங்களுக்கு அவளை பத்தி முழுசா தெரியலை…அவ பண்ணதையெல்லாம் சொல்லவே எனக்கு நாக்கு கூசுது…ராட்சசி அவள்’ என விரக்தியாக எண்ணியவன் “பாட்டி கடைசி வரை போகறதுக்கு இப்போவே நிறுத்திடலாமில்லை” என இயலாமையுடன் கூறி நெற்றியை நீவினான்.

அவரோ “ஜித்து உன் அப்பா மனசை என்னாலே உடைக்க முடியாதுப்பா” என முடிவாக கூறிவிட்டார்.

அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

பாட்டியிடம் பேசினால் தனக்கொரு தீர்வு கிடைக்கும் என்று வந்தவனிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

ஏமாற்றம்…வலி…கோபம்…ஆற்றாமை ஆகிய உணர்வுகள் அனைத்தும் அவனை ஒரு சேர தாக்க,அவரையே சில வினாடிகள் வெறித்து நோக்கியவன்,தன்னிலிருந்த அவரின் கரத்தை மெதுவாக அகற்றிவிட்டு அறையிலிருந்து வேகமாக வெளியேறினான்.

உயிரற்ற பார்வையுடன் சஞ்சலம் நிறைந்த மனதுடன் வெளியேறிய பேரனை கண்களில் வலியுடன் நோக்கினார் அவர்.

‘என்னாலே எதுவும் செய்யமுடியாத நிலைமையிலே இருக்கேன்ப்பா…என் கையை உன் அப்பன் கட்டிப்போட்டுட்டான்…ஆனாலும் உன்னை இந்த நிலைமையிலே பார்க்கவே முடியலை…பாட்டிய மன்னிச்சிடுடா கண்ணா’ என குற்றவுணர்ச்சியின் விளிம்பில் பேரனிடம் மன்னிப்பை யாசித்தவரின் கண்கள் கலங்கியிருந்தன.

ஏனெனில்,அவருக்கும் ரோகிணியை முதல் தடவை பார்த்ததிலிருந்தே பிடிக்கவில்லை.

அவளிடம் ஏதோ தவறாக இருப்பதை நொடியில் கவனித்துவிட்டார் பெரியவர்.

ஆதலால்,தனிமையில் தன் மகனிடம் “விஜய் இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்…நிறுத்திடுப்பா” என அவரிடம் கண்டிப்பான குரலில் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் அவரோ “அம்மா இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும்” என வாழ்க்கையில் முதல்முறையாக தன்னை எதிர்த்து பேசிய புதல்வனை காஞ்சனா ஆழ்ந்து நோக்கினார்.

தாயின் கோபமறிந்தும் இந்தவொரு விடயத்தில் அவர் பின்வாங்குவதாகயில்லை.

ஆதலால் அவரோ தாயின் பார்வையை நேருக்கு நேர் எதிர்கொண்டு “அம்மா இந்த வீட்டுக்கு முதல் மருமகளை தான் உங்க இஷ்டத்துக்கு கூட்டிட்டு வந்திட்டிங்க…அந்த பொண்ணுக்கு நம்ப குடும்பத்திலே கல்யாணம் பண்ணி வரதுக்கு தகுதியே இல்லை. அவள் அப்பன் ஏதோ தில்லு முல்லு பண்ணி ஜெயில்குள்ள போகற நிலைமையிலே இருக்கான்…அவன் பொண்டாட்டி எங்கியோ காணோமாம்…அந்த சந்திரமதி பொண்ணு எவனையோ இழுத்திட்டு ஓடிப்போயிட்டாளாம்…குடும்பமே ஒரு கேடுக்கெட்ட குடும்பம்…இதிலே பட்டப்படிப்பும் இல்லை இந்த பொண்ணுக்கு…பணம் இல்லைனா கூட மதிப்பும் படிப்பும் இருந்தால் பரவாயில்லை…இப்படி எதுவுமில்லாதவளை கூட்டிட்டு வந்ததாலே நம்ப குடும்ப கௌரவமுமே சிதைஞ்சுப்போயிருக்கு…கட்சியிலே இதெல்லாம் தெரிஞ்சு மூஞ்சிக்கு பின்னாடி காறித்துப்பறானுங்க…நல்லவேளையா அந்த சதாசிவத்தை ஏதோ ஒரு விஷயத்தை வைச்சு பூபதி லாக் பண்ணியிருக்கான்…இல்லைனா மீடியாவுக்கு விஷயம் தெரிஞ்சா இதை வைச்சு ஆட்சியை கவிழ்த்து நம்ப குடும்பத்தையும் கட்சியையும் கூறுப்போட ஆரம்பிச்சிடுவாங்க…இதெல்லாம் எதுவும் நடக்கக்கூடாதுன்னா தயவுச்செஞ்சு உங்களை கெஞ்சு கேட்டுக்கிறேன்மா…இழந்த நம்ப குடும்பத்தோட மான மரியாதையை மீட்டு தரப்போறது அந்த ரோகிணி பொண்ணு தான்…அதனாலே இந்த கல்யாணத்தை நடத்த விடுங்க” என இருகரம் குவித்து மன்றாடியவர்,அத்துடன் நிறுத்தவில்லை.

அன்னையின் முகத்தை உணர்ச்சியின்றி நோக்கிய விஜயேந்திரன் “அதையும் மீறி இந்த கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன்னு நினைச்சீங்கன்னா என் உயிரை விடறதை தவிர வேற வழியில்லைம்மா” என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

அதுவரை அசராமல் இருந்த அந்த வயதான பெண்மணி தனது தனயனின் இறுதி வாக்கியத்தில் ஆடிப்போயிவிட்டார்.

அவரை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவருக்கு ஈரக்குலையே நடுநடுங்கிட “விஜய் என்னப்பா பேசறே?எதுக்கு இப்படியெல்லாம் பேசறே நீ?” என துடித்துப்போய் அவரிடம் கேட்டார்.

ஆனால் அன்னையின் துடிப்பை கிஞ்சித்தும் சட்டை செய்யாதவர் “ஆமா அம்மா…மானத்தையும் கௌரவத்தையும் இழந்திட்டு எதுக்கு உயிர் வாழணும்?அப்படி வாழறதுக்கு சாகலாம்” என்றார் நிச்சலனத்துடன்…

‘அப்போ செத்துப்போடா’ என்ற அவரால் சொல்லவே முடியவில்லை.

அதேசமயம் தனது பேரனின் வாழ்வு கண்முன் வந்து நிற்க “விஜய் ஏன்பா இப்படி பேசறே?ஜித்து வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பார்றேன்” என கலங்கிய குரலில் இறைஞ்ச,

அவரோ “அவனுக்கு என்னம்மா குறைச்சல்…ரோகிணி அந்த சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசு…உலகத்தோட மூளைமுடுக்கெல்லாம் அவங்களுக்கு சொத்து நிரம்பியிருக்கு…அதுக்கெல்லாம் சொந்தக்காரன் ஆகப்போறான் நம்ப ஜிந்து…இதைவிட அவனுக்கு வேற என்ன வேணும்?” என மெத்தனமாக கேட்டவருக்கு மகனின் உணர்வுகளை பற்றி சிறிதும் அக்கறை இருக்கவில்லை.

ஆனால் காஞ்சனா மாலாவிற்கு பேரனின் வாழ்வு மீது அதிகப்படியான அக்கறை இருந்தது.

ஆதலால் “விஜய் பணம் காசு இருந்தால் போதுமா?நிம்மதியும் சந்தோஷமும் தான்பா ஒரு மனுஷனுக்கு முக்கியம்…ஜித்துவுக்கு…” என ஆதங்கத்துடன் அவர் பேச ஆரம்பிக்கும் போதே,

“கல்யாணமானால் அதெல்லாம் தானா வந்திடும்” என அசால்ட்டாக கூறியவர்,

“அம்மா ஜித்து உங்க வார்த்தையை மீறி எதுவும் செய்யமாட்டான்…அதனால் அவனை பத்தி கவலையில்லை…ஆனால் நீங்களோ பூபதியோ இந்த விஷயத்தில் எதுவும் செய்யக்கூடாதும்மா…இது என் மேலே சத்தியம்” என அவரின் கரத்தை சட்டென எடுத்து தன் தலையில் வைத்திருக்க,காஞ்சனா மாலாவிற்கோ உள்ளம் அதிர்ந்திட தேகம் வெடவெடத்தன.

மகனின் இந்த கண்மூடித்தனமான பிடிவாதத்தை அறிந்து அவர் துடித்த அதே வேளை பேரனிற்காக அவரின் உள்ளம் பரிதவித்தது.

சத்தியத்தை மீறவும் முடியாமல் அதேசமயம் உடைந்து நொறுங்கியிருக்கும் பேரனை கண்கொண்டு காணவும் முடியாமல் அவர் துடித்துப்போனார்.

ரத்தினவேலிடம் இதைப்பற்றி பேச முடியவில்லை…

அவனிடம் மட்டும் அவர் இந்த விடயம் பகிர்ந்தால் ‘சத்தியமாவது மண்ணாவது?’ என அதிரடியாக சகோதரனின் திருமணத்தை நிறுத்த ஆயுத்தமாகிவிடுவான்.

அதன்பொருட்டே,ரோகிணியை பற்றிய விடயங்கள் அவனின் காதிற்கு செல்லாமல் பார்த்துக்கொண்டார்.

ஆனால் அவன் ஒரே ஒரு முறை அவளை நேரில் பார்த்து விட்டால் கூட அவளின் கபட நாடகத்தை கண்டறிந்துவிடுவான்.

அதற்கான சந்தர்ப்பமே வழங்காமல் மிகவும் தெளிவாக ஒவ்வொரு காரியத்தையும் மேற்கொண்டார் விஜயேந்திர பூபதி.

அவருக்கும் ரோகிணியிடம் மீது பெரிதாக அபிப்பிராயம் இல்லை.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அனைத்தும் சரியாகிவிடும் என்றெண்ணினார்.

தற்போது அவருக்கு மகனின் வாழ்வை விட தன்னுடைய சுய கௌரவம் மட்டுமே பெரிதாக இருந்தது.

முகிழ்மதி 76:


 

 

வீர் அன்று விரைவாகவே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டான்.

தாய் மீண்டும் தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியதாக கேள்வியுற்று பதறிப்போய் தான் வீர் ஓடி வந்திருந்தான்‌.

அவரை ஒரு வழியாக சமாளித்துவிட்டு நீள்விரிக்கையில் வந்து அமர்ந்தவனிற்கு நெஞ்சில் தீராத காயம் ரணமாய் வலித்தன.

‘எப்போ தான் இதெல்லாம் சரியாகும்?என்னாலே முடியலைம்மா?’ என நீள்விரிக்கையில் விழி மூடி முகப்பில் தலைசாய்த்து அமர்ந்திருந்தான் வீர்.

அவனின் வாதையை தீர்க்கக்கூடிய மருந்து புயல் போல் தன்னை காண வந்துக்கொண்டிருப்பதை அவன் அக்கணம் அறியவில்லை.

அவன் தலையை தாங்கியப்படி அமர்ந்திருப்பதை கண்டு அவனருகே வந்த கவிதா “சார்” என மெல்ல அழைத்தாள்.

மெதுவாக கண் திறந்த வீர் கண்ணை தேய்த்துக்கொண்டு “என்ன கவிதா?அம்மா எழுந்திட்டாங்களா?” என வெறுமையான குரலில் கேட்க,

“இல்லை சார்…அவங்க நல்லா தூங்கறாங்க” என்றவள் “ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க?உங்க முகமே சரியில்லையே?அம்மாவை நினைச்சு கவலைப்படறீங்களா?” என மெதுவாக அவனிடம் அக்கறையாக பேசி மனதளவில் நெருங்க முற்பட,

பல வருடங்களாக தன்னை துரத்தி நேசிப்பவளையே மன உறுதியுடன் விளக்கி நிறுத்துபவன் அவன்.

அப்படியிருக்கையில் அவளின் இந்த அக்கறை பேச்சிற்கெல்லாம் மயங்குவானா என்ன?

அவனோ அவளிற்கு பிடிக்கொடுக்காமல் “நத்திங்…லைட்டா தலைவலி…நீங்க போய் அம்மாவை பாருங்க” என அப்படியே அவளை கத்தரித்துவிட முயன்றான்.

ஆனால் அவளோ “அவங்க தூங்கிட்டு தான் இருக்காங்க சார்…நான் வேணா உங்களுக்கு காஃபி போட்டு தரட்டுமா?” என நேசம் நிறைந்த குரலில் அவள் கேட்டதும் வீரின் இமைகள் இடுங்கின.

உடனே அவனின் முகத்தில் அதுவரை இருந்த இளக்கம் விடைப்பெற்று விறைப்பு குடிக்கொள்ள “இங்க பாருங்க கவிதா…நீங்க அம்மாவை பார்த்துக்க தான் வந்திருக்கீங்க…என்னை பார்த்துக்கயில்லை…உங்களுக்கு கொடுத்த வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க” என்றான் முகத்திலடித்தாற் போன்று…

அவனின் பொறுமையெல்லாம் அவனிற்கு பிடித்த நபர்களிடம் மட்டும் தான்!

மற்றவர்களிடம் அவன் எப்போதும் கண்டிப்பானவன்!

அவளும் அவனின் கோபத்தை அறிந்து “இல்லை சார்…நான் இப்போ சும்மா தானே இருக்கேன்…அதான்…” என சமாளிக்கும் விதமாக இழுக்க,

அவளை ஆழ்ந்து நோக்கிய வீர் “சும்மா இருந்தால் புக் எதாவது படிங்க…இல்லையா போய் ரெஸ்ட் எடுங்க…காஃபி வேணும்னா போட்டுக்க எனக்கு தெரியும்” என சற்றே காட்டமான குரலில் பேசியிருந்தான்.

அதில் அவளின் முகம் வாடிவிட்டன.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவனிற்கு கவலையில்லை.

அவளின் பேச்சிலே அவளின் எண்ணங்கள் அவனிற்கு தெளிவாக புரிந்தன.

அதனால் ஆரம்பத்திலே அதை வெட்டி விட நினைத்து அவளிடம் இளக்கம் காட்டவில்லை அவன்.

“ஹும் சரிங்க சார்” என மூக்கறுப்பட்ட உணர்வுடன் சோகமாக உள்ளே சென்றவளை ஒரு பெருமூச்சுடன் நோக்கினான்.

சிறிது அதிகப்படியாக பேசிவிட்டாற் போன்று அவனிற்கு தோன்றின.

ஆனால் ‘இது தான் சரி’ என தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டு குளம்பி தயாரித்து குடிக்க சமையலறை சென்றான்‌.

அவன் குளம்பியை தயாரித்துக்கொண்டிருக்கும் போது கவிதா தண்ணீர் குடிப்பதற்காக அங்கு வந்தாள்.

அவன் அவளை திரும்பி புருவம் சுருக்கி பார்க்க,அவனின் விழி வீச்சில் அஞ்சியவள் “இல்லை சார் தண்ணீர்” என குடத்தை காட்டியதும்,

“ஹும்” என கூறிவிட்டு அடுப்பறை பக்கம் திரும்பிவிட்டான்.

ஆனால் அவன் அடுப்பறை பக்கம் திரும்பிய நொடியே அவனை அங்குல அங்குலமாக ரசித்தவாறே நீரை பருகினாள் கவிதா.

அச்சமயம் “இங்க என்ன நடக்குது?” என கோபமான குரலில் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் தமயந்தி.

அவளை அந்நேரத்தில் அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவளின் குரல் கேட்டு வேகமாக வீர் அவளை நோக்கி திரும்ப,அவளோ இருவரையும் மாறி மாறி முறைத்திருந்தாள்.

அவளிற்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் அந்த கவிதாவை சாம்பலாக்கியிருப்பாள் போலும்!

அப்படியொரு ஆவேசமும் அனலும் அவளின் முகத்தில் தெறித்தன.

கவிதாவோ ‘யாரிது?’ என புருவம் சுருக்கிப்பார்க்க,

அவளின் அந்த ஆராய்ச்சி பார்வையே தமயந்திற்குள் கடுப்பை வரவழைத்தது.

அதே கோபத்துடன் “யார் நீ?” என அதிகாரமாய் கேட்டிருந்தாள்.

அந்த பெண்ணோ ‘என்னை கேள்வி கேட்க நீ யார்?’ என்ற தோரணையில் அவளை பார்த்திருப்பதை பார்த்து பல்லை கடித்தாள் தமயந்தி.

“வீர் இது யாரு?” என இப்போது தன்னவனை உறுத்து விழித்தப்படி கேட்க,

அவனோ “அது அம்மாவை பார்த்துக்கிறதுக்காக வந்திருக்க நர்ஸ்” என ஒரே வரியில் பதில் கூறியவன் “கவிதா நீங்க போய் அம்மாவை பாருங்க” என அவளை அங்கிருந்து அனுப்பினான்.

அவளோ ‘யாரிவள்?’ என தமயந்தியை மேலிருந்து கீழாக பார்த்துக்கொண்டே சென்றாள்.

அவளின் ஆராய்ச்சி பார்வையும் அவளிற்குள் சீற்றத்தையே கொடுத்தன.

அவள் அங்கிருந்து வெளியே சென்றதும் “நீ இங்க என்ன பண்ணறே?” என கூர்மையாக வினவினான் வீர்.

“நீ இங்க என்ன பண்ணறானா?இது என் வீடு நான் எப்போனாலும் வருவேன்” என அவனிற்கு திமிராக பதில் கொடுத்த மங்கை “நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என கேட்டவாறே அவனை நெருங்கினாள்.

ஏனோ அவள் ‘என் வீடு’ என கூறியது அவனின் மனதை தென்றலாய் வருடிச்சென்றன.

ஆயினும்,தன்னை அடக்கி “ஹே கிட்ட வராதே…முதல்ல வெளிய போ” என சமையலறையிலிருந்து அவளை வெளியில் அனுப்ப முனைந்தான்.

ஏனெனில்,இப்போதெல்லாம் அவளின் பார்வையும் பேச்சும் அவனின் இரும்பு இதயத்தை தடுமாற செய்துக்கொண்டிருந்தன.

ஆகையால்,அவளின் அருகாமையை ஏற்க முடியாமல் அவன் தடுமாற,அவனின் செல்ல ராட்சசியோ அதையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை.

அவனை நெருங்கி வந்தவள் அவன் குளம்பி கலக்கிக் கொண்டிருப்பதை பார்த்து “காஃபி போடறீங்களா?நகருங்க நான் போடறேன்” என அணிந்திருந்த துப்பாட்டாவை பின்னால் கட்டிக்கொண்டு குவளையை கையில் எடுத்தவளை பார்த்து பதறிவிட்டான் வீர்.

பின்பு அவளின் சமையல் வரலாறு அவனை பீதிக்குள்ளாக்கிட “ஹே நீ முதல்ல டம்பளாரை கொடு…காஃபிய நானே போட்டு குடிச்சிருக்கேன்…உன்னோட பிளாக் காஃபியெல்லாம் குடிக்கிற நிலையிலே நானில்லை…முதல்ல நீ ஹாலுக்கு போடி” என பதறிப்போய் அவளிடமிருந்து குவளையை கிட்டத்தட்ட பிடுங்கியிருந்தான்.

அதில் இடையில் ஒற்றை கைகுற்றி முறைத்த பெண்ணவள் “ஹலோ என்ன ரொம்ப பண்ணறீங்க?எப்படி இருந்தாலும் நான் சமைச்சதை தான் நீங்க சாப்பிடணும்…ஞாபகம் இருக்கில்லை…உங்களை அப்போ பார்த்துக்கிறேன்” என இதழை கடித்து தலைமுடி சிலும்ப வெளியேறியவளை ஒரு வித திகிலுடன் பார்த்தான் வீர்.

ஒருவளது சமையல் கலை அந்த ஆறடி உயர ஆண்மகனை கலங்கடிக்குமா என்று கேட்டால்,ஆம்,கலங்கடிக்கும்..

அதற்கு மிகப்பெரிய சான்றே அவளின் அந்த கரித்த உணவுகள் தான்!

நள பாகத்தில் வல்லுநரான நளனின் மனைவியின் பெயரை வைத்திருந்த தமயந்திக்கு சமையல் என்றும் ஒரு எட்டாத கனி தான்?!

அதை அவள் முயற்சிக்காமல் இருப்பதே நல்லது என வீருக்கு தோன்றின.

‘எக்காரணத்தை கொண்டும் இவளை சமைக்கவே விடக்கூடாதுடா சாமி’ என அச்சத்துடன் தலையை மறுப்பாக தலையசைத்தவாறே மூச்சை இழுத்துவிட்டான்.

அவன் அந்தப் புறமாக திரும்பியதும் மெதுவாக பூனைப்போல் நடந்து வந்த தமயந்தி அவனை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டாள்.

அவளின் தொடுகையில் ஆடவனின் தேகத்தில் மின்சாரம் வந்து பாய்ந்தன.

அதேசமயம் அவளின் செயலில் ஆண்மகன் அவனே விதிர் விதிர்த்துப்போக “தமி…” என அதட்ட நினைத்தாலும் அவனின் குரல் சிறிது குழைவுடனே வந்தது.

அவளோ முன்னால் எட்டி அவனது முகத்தை பார்த்து “சும்மா கட்டிப்பிடிச்சா எப்படி இருக்கும்னு பார்த்தேன்‌…நல்லா தான் இருக்கு வீர்” என இதழ்கடித்து நமுட்டுச்சிரிப்புடன் கூறி கண்சிமிட்டியவள்,அவனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை எல்லாம் தட்டியெழுப்பியிருந்தாள்.

அவனின் விழிகளில் தெரிந்த பாவனையில் பாவையவளின் முகம் சிவந்திட “நான் போய் ஆன்ட்டிய பார்க்கறேன்” என நாணத்துடன் இமைத்தாழ்த்தி கூறியவாறு வெளியே வந்தவளிற்கு படபடப்பாக இருந்தது.

அவளிற்கு மீறிய பதட்டத்துடன் அவன் சமையலறையில் நின்றிருந்தான்.

அவளின் நெருக்கமும் மேனியும் அவனிற்குள் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க,சில வினாடி மயக்கத்தில் மூழ்கிய வீர் சமையல் திட்டில் தலைசாய்த்து கைகட்டி நின்றுவிட்டான்.

ஆனால் அவனின் இதழில் மட்டும் தன்னவளை எண்ணி ஒரு புன்முறுவல் பூத்திருந்தது‌.

வீரிடமிருந்து வெளியேறியவள் நேரே தனது வருங்கால மாமியார் இருந்த அறைக்கு சென்றாள்.

அங்கு அமர்ந்திருந்த கவிதா அவளை ஒரு மார்க்கமாக பார்க்கவும்,மீண்டும் அவளினுள் இறங்கிய கோபம் கிளர்ந்து வந்தது.

அதனால் அவளின் அருகே வந்த தமயந்தி “நீ தான் ஆன்ட்டிய பார்த்துக்க வந்த புது நர்ஸுனு எனக்கு தெரியுது…பட் என்ன வேலைக்கு வந்தியோ அதை மட்டும் நீ பார்க்கணும்…புரியுதா?” என அடிக்குரலில் மிரட்ட,

“ஹலோ அதை சொல்ல நீங்க யாரு?” என கவிதாவும் அவளை எதிர்த்து நின்று கேள்வி எழுப்ப,தமயந்திக்கு அவளின் இந்த துணிச்சல் ஆத்திரத்தை வரவழைத்தது.

இருப்பினும்,தன்னை தானே கட்டுப்படுத்தி “வீர் இஸ் மைன்…அவரோட பியூச்சர் வொய்ஃப்…பியூச்சர் என்ன பியூச்சர் இப்போவே நான் தான் அவர் பொண்டாட்டி…உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என சற்றே அழுத்தமான குரலில் அவள் உரைக்க, அவளின் பேச்சில் அவளின் மனம் உடைந்து நொறுங்கிப்போயின.

“நீ..ங்க பொய் தானே சொல்லறீங்க?” என அவள் நம்பாமல் அப்போதும் வருத்தமாக கேட்க,

அவளை சலிப்புடன் நோக்கிய தமயந்தி “ஹலோ நான் எதுக்கு பொய் சொல்லணும்?இது தான் உண்மை” என கறாரான குரலில் உரைத்தவள்,

சட்டென தன் குரலை தாழ்த்தி “இங்க பாரு…என் வீர் மேலே எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு…ஹீ இஸ் பக்கா ஜென்டில் மேன்…பட் உன் மேலே தான் எனக்கு சந்தேகமா இருக்கு…நான் உள்ள வரும் போதே உன் பார்வையை கவனிச்சிட்டேன்…அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம்…ஆல்சோ ஹீ ஒன்லி லவ்ஸ் மீ…வீணா உன் மனசுலே ஆசைய வளர்த்துக்காமல் இப்போவே உன் எண்ணத்தை குழித்தோண்டி புதைச்சிடு” என சிறிது தன்மையாகவே அவளிற்கு அறிவுரை கூறினாள்.

அந்த பெண்ணோ அப்போதும் “சரி” என கூறாமல் அழுத்தமாக நின்றிருக்க,அவளின் பொறுமை அனைத்தும் காற்றில் பறந்தது.

“இந்தாம்மா பொண்ணே…இதுக்கு மேலையும் உன் கண்ணு அவர் மேலே போச்சு…கண்ணை தோண்டி கையிலே கொடுத்திடுவேன்…மைண்ட் இட்” என பல்லிடுக்கில் சீற,

அவளின் மிரட்டலை கேட்டு அந்த பெண் அரண்டு விட்டாள்..

அவளை மிரட்சியுடன் அவள் பார்த்ததும் “உனக்கு புரிஞ்சதில்லை…” என விரல் நீட்டி அவளை குரலுயர்த்தி தமயந்தி அரட்ட,

அவளோ வேகமாக மண்டையை உருட்டியதும் “அது” என எச்சரித்தாள்.

“ஐயம் ஆல்வேஸ் வாட்சிங் யூ…ஹும்” என தனது இரண்டு விரலால் தன் கண்ணை காட்டி அவளை சுட்டிக்காட்டினாள்.

அச்சமயம் அவர்களின் குரல் கேட்டு மெதுவாக கண்விழித்தார் தேவகி.

அவர் கண்விழித்ததை கண்டதும் “ஆன்ட்டி” என முகம் விகசிக்க அவரை நோக்கி சென்ற தமயந்தி அவர் எழுந்து அமருவதற்கு உதவி செய்தாள்.

அவருக்கு அவளை யாரென்று அடையாளமே தெரியவில்லை.

அதனால் அவளை ஒரு அந்நிய பார்வையுடன் எதிர்கொண்டவரை கண்டு,அவள் மனம் சுணங்கவில்லை.

அவரிடம் அவள் சிரித்தமுகமாகவே “ஆன்ட்டி நான் யாருனு தெரியலையா?ஆமா சின்ன வயசுலே பார்த்தது எப்படி ஞாபகம் இருக்கும்?நான் உங்க ஸ்டூடெண்ட் பூபதியோட சிஸ்டர் தமயந்தி…லட்டு…உங்க வீட்டுக்கு அண்ணா கூட நான் வந்திருக்கேன்…நீங்க கூட என்னை டிராயிங்கா வரைஞ்சு கொடுத்தீங்க…ஞாபகம் இருக்கா ஆன்ட்டி?அந்த டிராயிங் இன்னும் என்கிட்ட பத்திரமா இருக்கு” என மிகவும் பொறுமையாக அவரிடம் அவள் பேசிக்கொண்டிருக்க,கவிதா அவளை வித்தியாசமாக பார்த்தாள்‌.

சற்று நேரத்திற்கு முன்பு,தன்னிடம் அடாவடியாக நடந்துக்கொண்டது அவள் தானா என்று சந்தேகமே அவளிற்கு வந்துவிட்டது.

ஏனெனில், அவற்றிற்கான எந்த வித தடயமும் இல்லாமல் அவரிடம் மென்மையாக உரையாடினாள் தமயந்தி.

தேவகியோ புருவம் சுருக்கி “பூ..பதி…” என மெதுவாக யோசனையுடன் உச்சரிக்க,அவருக்கு இலேசாக அவனின் ஞாபகம் வந்தது.

உடனே பெரிதாக புன்னகைத்த தமயந்தி “ஆமா…ஆமா அவரோட தங்கச்சி தான் நான்…தமி…லட்டு…” என தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

தேவகியோ அவளை குழப்பம் நீங்காத விழிகளுடன் “லட்டு” என யோசனையாக பார்த்திருக்கவும்,அவளிற்கு மனம் வலித்தது.

சிறு வயதில் அவள் கண்டு பிரம்மித்த ஒரு பெண்மணி இந்நிலையில் இருப்பதை பார்த்து அவளின் இதயம் பிசைந்தது.

அவர் தன்னை அந்நிய பார்வை பார்த்தாலும் அவரிடம் விடாமல் பேசிக்கொண்டே இருந்தவள் “ஆன்ட்டி நான் பாருங்க விடாமல் பேசிட்டே இருக்கேன்…நீங்க எழுந்ததிலிருந்து எதுவுமே சாப்பிடலை…நான் போய் உங்களுக்கு பால் எடுத்திட்டு வர்றேன்…” என எழ,

“ஏன்டி சமைச்சு போட்டு என்னை கொல்ல முயற்சி பண்ணது பத்தாதுனு என் அம்மாவை கொல்ல முயற்சி பண்ணறீயா நீ?கொலை கேஸுலே உள்ளப்போயிடாதே… முதல்ல உட்காருடி…நானே என் அம்மாவுக்கு பால் எடுத்திட்டு வந்திட்டேன்” என அவளை வம்பிழுத்துக்கொண்டே வீர் உள்ளே வர,

அவளோ “வீர்” என திரும்பி அவனை பார்த்து பல்லைக்கடித்தாள்.

உடனே தேவகியிடம் திரும்பிய தமயந்தி “ஆன்ட்டி இங்க பாருங்க…உங்க பையன் ரொம்ப ஓவரா போறாரு…அவர் சொல்லற மாதிரியெல்லாம் இல்லை…ஏதோ ஒரு நாள் சோதிப்பிடுச்சு…அவ்வளவு தான்…மத்தப்படி நான் நல்லா சமைப்பேன்” என அவரிடம் ரோஷத்துடன் புகார் வாசிக்க,

“ஆமாம்மா நாயே தின்னிட்டு வாந்தி எடுக்கிற அளவு அவ்வளவு நல்லா சமைப்பாள்” என்றான் அவன் நக்கலாக…

அதைக்கேட்டு கவிதா களுக்கென்று சிரிக்க,சட்டென திரும்பி தமயந்தி முறைத்த முறைப்பில் அவள் அடங்கிவிட்டாள்.

அவள் வந்தவுடன் களையிழந்த அந்த வீட்டிற்கு ஒரு புத்தம் புது பொலிவு கிடைத்தது போல் அவளிற்கு தோன்றின.

வீரும் கூட தன் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு கேலியாக உரையாடுவதை பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

அதிலே,கவிதாவிற்கு வீரின் மனதில் இடம் பிடிக்க தனக்கு எந்தவொரு வாய்ப்புமில்லை என புடம் போட்டது போல் புரிந்தன.

அதனால் ஒரு பெருமூச்சுடன் குடும்பமாய் அவர்களுக்கு தனிமைக்கொடுத்து வெளியேறினாள்.

அவள் வெளியே செல்லும் போது “கவிதா இந்தாங்க காஃபி” என அவன் குவளையை அவளிடம் நீட்ட,

அவளின் பார்வையோ சரேலென்று தமயந்தியை நோக்கின.

அவளோ எதுவும் பேசவில்லை..ஆனால் அவளின் விழியில் பொறாமை என்னும் தீ கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது.

அதனால் “வேணாம் சார்…நீங்க குடிங்க” என்றவளிற்கு வருத்தமோ கோபமோ சிறிதுமில்லை.

ஒரு பேச்சிற்கு கூட அவனை விட்டுத்தரமுடியாத அவளின் பாங்கும்,வீரை காணும் போது அவளின் விழிகளில் தெரிந்த நேசமும் உரிமையும் அவளை நெகிழவே வைத்தன.

தன்னுடைய பொருள் தன்னை விட வேறொருவரிடம் இருக்கும் போது வருமே ஒரு நிம்மதி அது கவிதாவிற்குள்ளும் உருவாகின.

அதற்காக அவளிற்கு வலி இல்லை என்று கூறமுடியாது.

வலித்தது…ஆனால் அவை பொறுத்துக்கொள்ளக்கூடிய வலி தான்!

இங்கு அறையினுள் “இந்தா உனக்கும் காஃபி போட்டேன்…உனக்கு அந்த வெள்ளை கப்” என அவளிற்கு பிரத்யேகமாக எடுத்து வந்திருந்த பீங்கான் குவளையில் ‘ஃபார் எவர் யூ’ என்ற வாசகம் எழுதியிருந்தது.

அதனை ஒரு புன்னகையுடன் பார்த்த தமயந்தி “நான் முதல்ல ஆன்ட்டிக்கு பால் கொடுத்திட்டு குடிக்கிறேன் வீர்…நீங்க காஃபி குடிங்க…உங்க முகமே சரியில்லை…தலைவலிக்குதுனு நினைக்கிறேன்” என பரிவுடன் உரைத்தவள், அவனிடமிருந்து பால் குவளையை எடுத்துக்கொண்டாள்.

“தமயந்தி அம்மாவுக்கு நான் கொடுக்கிறேன் விடு…நீ எதுக்கு?” என வீர் சொல்ல,

தமயந்தியோ “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை…என் மாமியாருக்கு நான் கொடுக்கிறேன்…ஆன்ட்டி வாங்க…பால் குடிக்கலாம்…” என சர்வ சாதாரணமாக கூறி குவளையுடன் தேவகியை நெருங்க,

அவளின் பேச்சை கேட்ட வீரோ “உனக்கு வர வர கொழுப்பு கூடிப்போச்சுடி” என பல்லைக்கடித்து கூற,

சட்டென அவனை நோக்கி திரும்பியவள் “ஆமா…ஆமா ரொம்ப கூடிப்போச்சு…கலோரி பேர்ன் பண்ண வேணா நீங்க வர்றீங்களா?” என விஷமம் கலந்த விழிகளுடன் அவனை மேலிருந்து கீழாக பார்த்தவாறு அவள் கூறியதை கேட்ட வீருக்கு புரையேறிவிட்டன.

அவளின் பேச்சும் பார்வையும் அவனிற்குள் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க,அவளை எச்சிலை கூட்டி விழுங்கியப்படி அவன் பார்த்தான்.

அவளோ “பார்த்து பார்த்து வீர்…கலோரிய பேர்ன் பண்ண வேற உங்களுக்கு எனர்ஜி வேணும்‌…அதுக்கு முதல்ல காஃபிய குடிச்சிடுங்க” என நக்கலாக இதழ்கடித்து சிரித்தப்படி கூற,

அவனோ திகைப்புடன் அவளை நோக்கி ‘அம்மா முன்னாடி எப்படி பேசறாள் பாரு சண்டாளி’ என தனக்குள்ளே திட்டிக்கொண்டு தாயை நோக்கினான்.

அவரோ இங்கு நடக்கும் எதுவும் புரியாமல் குழப்பமாக இருவரையும் பார்த்திருந்தார்.

அதற்குள் தமயந்தி பரிவுடன் அவரை நோக்கி “ஆன்ட்டி வாங்க” என கட்டிலுக்கு அருகில் நின்றவாக்கிலே அவரே தன் மேல் சாய்த்து சிறு குழந்தைக்கு புகட்டுவது போல் பாலை புகட்டினாள்.

அவரும் மறுக்காமல் அவள் கொடுத்ததை குடிக்க,வீர் பெரும் ஆச்சரியமுற்றான்.

அவரை உணவருந்த வைப்பது அத்துணை எளிதான காரியமல்ல.அதனால் எப்படியும் அவளால் நிச்சயம் முடியாது என்றே எண்ணியிருந்தான்‌.

அவள் முயன்று களைத்தப்பிறகு தானே தாயிற்கு பாலை புகட்டலாம் என திட்டமிட்டிருக்க,அவனிற்கு தாயின் இந்த நடவடிக்கை விசித்திரமாக இருந்தது.

‘அம்மா அப்போ என்கிட்ட மட்டும் தான் இந்த அலும்பா?’ என மனதிற்குள் மகன் சலுகையாக கோபித்துக்கொள்ளும் போதே அவரை முழுமையாக பால் அருந்த செய்து,எவ்வித முகச்சுளிப்புமின்றி தனது துப்பாட்டாவினால் வாயை துடைத்துவிட்டாள் அவள்.

அவளின் இந்த அன்பான கவனிப்பை பார்த்த வீருக்கு நெஞ்சம் நெகிழ்ந்தன.

தன்னவளின் இந்த உயரிய குணத்தையும் தன் மீது அவள் வைத்திருக்கும் காதலையும் கண்டவனின் விழிகள் பனித்தன.

அவளின் மீது அவன் வைத்திருக்கும் அன்பு,அவை பாசத்தை தாண்டி அடுத்தக் கட்டத்திற்கு என்றோ நகர்ந்திருந்தன.

நேசம் என்ற வலைக்குள் அவனின் மனம் மாட்டிக்கொண்டன.

நட்பு அல்லது நேசம் என இரண்டிற்கும் இடையில் அவனின் மனம் சிக்கித்தவிக்க,அவனவளோ அனைத்தையும் தாண்டி அவனை அவள் புறமாக இழுத்துக்கொண்டே இருந்தாள்.

அன்னையிற்கு பால் கொடுத்துவிட்டு அவனருகே வந்து அமர்ந்த தமயந்தி அவன் கையில் பாதி குடித்து வைத்திருந்த குளம்பியை வாங்கி அவள் குடிக்க ஆரம்பித்தாள்.

அதை சற்றும் எதிர்பாராத வீர் “ஹே உனக்கு தான் அங்க கப்பிலே காஃபி வைச்சிருக்கேனில்லை‌…அதை குடிடி…இது வேணாம்…” என தடுமாறிய உணர்வுகளுடன் அவளை தடுக்க முயல,

அவனின் அந்த ராட்சசியா கேட்பாள்?

“ப்ச் வீர்…எனக்கு அவ்வளவு காஃபி வேணாம்…நீங்க அதை குடிச்சுக்கோங்க…எனக்கு இது போதும்” என குவளையை தூக்கிக்காட்டி குளம்பியை அருந்த ஆரம்பித்துவிட்டாள்.

அவள் என்னவோ சாதாரணமாக தான் இருந்தாள்.

இங்கு தன்னவளின் செயலில் ஆடவனவன் தன் உணர்வுகளை அடக்கும் வகையறியாமல் தவித்துப்போனான்.

‘காட்…இந்த ராட்சசிக்கு என் மனசை கலைக்கிறதே வேலையா போச்சு’ என மனதிற்குள் போலியாய் சலித்துக்கொண்டே எட்டி அந்த வெண்ணிற பீங்கான் குவளையை கையில் எடுத்தான்.

அவன் அதனை ஒரு முறை உறிஞ்சிய கணமே “எனக்கு இன்னும் கொஞ்சம் காஃபி வேணும் வீர்” என்றவள் வேகமாக குனிந்து அவனிடமுள்ள குவளையில் குளம்பியை சிறிது உறிஞ்சியிருந்தாள்‌.

கிட்டத்தட்ட இருவரின் இதழ்களும் இணையாமலே முத்தமிட்டிருந்தன்.

ஏனெனில்,இருவரின் எச்சில்களும் ஒன்றாக கலந்து மற்றவரின் இதழ்களுக்குள் குளம்பியின் மூலம் பகிரப்பட்டிருந்தன.

அத்தோடு அவளின் அந்த நெருக்கமும் முத்தத்தில் சேராத அந்த முத்த வகையும் அவனிற்குள் ஒரு அவஸ்தையான உணர்வை கொடுத்தன.

‘இவ தெரிஞ்சு தான் பண்ணறாளா?இல்லை தெரியாமல் பண்ணறாளா?’ என தனக்குள்ளே ஆடவனவன் புலம்பி சிகையை அழுத்தக் கோதி கொண்டான்.

மொத்தத்தில் அவனின் இதயம் சிறிது சிறிதாக அவளிடம் நழுவி சென்றுக்கொண்டிருந்தது மட்டும் நிஜம்! 
 

முகிழ்மதி 77:


 

 

வீர் தன்னவளையே விழி அகற்றாமல் பார்த்திருக்க,அவளோ அவனை சிறிதும் பொருட்படுத்தாமல் “ஆன்ட்டி நீங்க என்னோட வர்றீங்களா?உங்களுக்கு முகம் கழுவி வேற டிரஸ் நான் மாத்திவிடறேன்…நான் உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன்” என அவனின் அன்னையை தன் புறமாக இழுக்கும் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தாள் அவள்.

தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அவள் ஒவ்வொன்றாக அவரிடம் எடுத்துக்காட்டினாள்.

அவரோ எவ்வித உணர்வுகளுமின்றி அவளை காட்டியதை பார்த்துக்கொண்டிருந்தார்‌.

அவள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் புரியாமல் நோக்கிய வீர் “எதுக்கு நீ இதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கே?” என சற்று கடுமையாக கேட்டான்.

அவளோ வழக்கம் போல் “என் மாமியாருக்கு நான் வாங்கிட்டு வராமல் வேற யாரு வாங்குவாங்க?அதுவுமில்லாமல் இங்க பாருங்க…ஹாஸ்பெட்டல்ல இருந்த மாதிரியே வீட்டலையும் ப்ளூ டிரஸை மாட்டி விட்டிருக்கீங்க” என அவரின் உடையை சுட்டிக்காட்டி கடுப்பாக கூறியவள்,

“இப்படி இருந்தால் எப்படி அவங்களுக்கு குணமாகும்?இவங்களை சுத்தி எப்பவும் பிளாசண்ட்டா இருந்தால் தான் அவங்க மைண்டும் பீஸ்ஃபுலா இருக்கும்…அப்போ தான் அவங்களுக்கு சீக்கிரம் குணமாகும்…இது கூட தெரியலை பெருசா பேச வந்துட்டாரு…ஆறடி வளர்ந்தால் மட்டும் போதாது…மண்டைக்குள்ள ஏதாவது இருக்கணும்” என சரமாரியாக அவனை வெளுத்து வாங்கி உதட்டை சுழித்தாள்.

அவனோ அவளின் சுழித்த உதட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு நிமிர்ந்தவன் “ஆமா..ஆமா எங்க மூளைக்குள்ள களிமண்ணு இருக்கு…அம்மணி மட்டும் இதிலே பீ‌.எச்.டி பண்ணியிருக்காங்க?” என்றான் நக்கல் தொனிக்கும் குரலில்…

அவளோ ‘நீ என்னவோ பேசிக்கொள்…போடா’ என்பது போல் அவனை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு “ஆன்ட்டி அவரு கிடக்கிறாரு…நீங்க வாங்க” என கவிதாவையும் உதவிக்கு வைத்துக்கொண்டு அவரை மட்டுமின்றி அவர் இருந்த அறையையும் அப்படியே தலைகீழாக மாற்றியிருந்தாள்.

பார்த்தவுடன் மனதிற்கு இதம் தரும் வகையிலான மெல்லிதான வாசனை திரவியங்கள், அறையின் திரைச்சீலை மற்றும் படுக்கையுறை என அனைத்தையும் மாற்றியிருந்தாள்.

அத்தோடு அறையில் தினந்தோறும் பூக்களை மாற்றும் வகையில் ஒரு பூச்சாடியையும் வாங்கி வந்திருந்தாள்.

முதல் நாள் அன்று வெண்ணிற தாமரையை பூச்சாடியில் வைத்த பெண்ணவள் ‘எப்படி இருக்கு?’ என புருவம் உயர்த்தி அவனிடம் கேட்க,

அவனோ அவளை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

‘ரவுடி சாருக்கு ரொம்ப தான் ஏத்தம்…ஹும்’ என இதழை சுழித்துக்கொண்டு தேவகியை குளிப்பாட்டி நல்ல தேனிறத்தில் ஒரு புடவை கட்டி ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள்.

அவளிற்கு பெரிதும் உதவினாள் கவிதா.

அவள் மனச்சுணங்காமல் தனக்கு உதவி செய்வதை கண்ட தமயந்தியோ ‘பாவம் இவ…ரொம்ப நல்லப்பொண்ணு தான் போலே…பரவாயில்லை…அதுக்காக என் வீரை யாருக்கும் விட்டு தரமுடியாது’ என பெருமூச்சுவிட்டாள்.

இங்கு வீரோ மனதிற்குள் ‘ஏதேதோ பேசறாள்?என்னமோ பண்ணட்டும்…சொன்னாலும் கேட்கமாட்டாள்’ என கடுப்பாக புலம்பிக்கொண்டே சமையலறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான்.

அவன் அறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வரவும்,அவனது தாயின் அறைக்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

கதவை திறந்துக்கொண்டு முதலில் வெளியே வந்த தமயந்தி “சர்ப்பரைஸ்” என கையை விரித்து கண்சிமிட்டி கூறியவள்,வேகமாக வலதுப்புறமாக நகர்ந்தாள்.

அவள் நகர்ந்ததும் அவளிற்கு பின்னால் நின்றிருந்த அன்னையை கண்டவனின் விழிகள் வியப்பில் விரிந்தன.

மருத்துவமனையில் இருக்கும் சமயம் தலை வாராமல் கசங்கிய உடையுடன் இருக்கும் அன்னையை, பல வருடத்திற்கு பிறகு அவருக்கு பொருத்தமான நேர்த்தியான பருத்தி புடவையில் இலேசான ஒப்பனையுடன் கொண்டையிட்டு பார்த்ததும் அவனின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கின.

அப்படியே சிறு வயதில் அவன் கண்ட தோற்றத்தை போலவே அச்சுபிசாகாமல் அவர் தயாராகி வந்திருப்பதை கண்டவனிற்கு கண்ணீர் தானாக கன்னத்தில் வழிய ஆரம்பித்தன.

“அ..ம்மா…” என நாதழுதழுக்க அவன் அவரை அழைக்க,அவரோ அவனையே புருவம் சுருக்கி பார்த்திருந்தார்.

அவனிற்கு அதற்கு மேல் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை.

“அம்மா…அம்மா…” என்பதை தாண்டி பேசவே முடியாத சிறு குழந்தையை போல் திணறியவனை பார்ப்பதற்கு பெண்கள் இருவரின் நெஞ்சமும் பிசைந்தது.

தன்னவன் மனம் கலங்கினால் அவளிற்கு பொறுக்குமா என்ன?

“வீர்…” என மெதுவாக அவனருகே வந்து அவனின் கைத்தொட்டு அழைக்க,அடுத்த கணமே அவ்விடத்தில் இருக்கும் யாவரையும் பொருட்படுத்தாமல் “தேங்க்ஸ் தமி…” என அவளை இழுத்து அணைத்தவனின் சூடான கண்ணீர் காரிகையின் கழுத்து வளைவை நனைத்தது.

அவனின் அதிரடி செயலை அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

அதனால் அவளிற்குள் அதிர்ச்சி…ஆச்சரியம்…நெகிழ்வு…மகிழ்ச்சி என பல வகையான உணர்வுகள் அவளை வந்து தாக்க,தானும் அவனை அணைத்துக்கொண்டாள்.

“வீர் என்ன இது சின்னக் குழந்தை மாதிரி காம்டவுன்…” என அவனின் முதுகை வருடி சமாதானம் செய்தவளின் இதயம் பூவாய் மலர்ந்துப்போயின.

ஏனெனில்,இதுவரை தன் கூட்டிற்குள்ளே முடங்கி கிடந்த மனிதன் வெளியே வந்ததை எண்ணி பேருவகை கொண்டாள் காரிகை.

அவனது சிறகை சிறிது சிறிதாக விரித்து பறக்க வைத்த அவனின் தேவதையை எண்ணி உள்ளக்களிப்பில் அவளிற்குள் புதைந்துக்கிடந்தான் அவன்.

அன்றொரு நாளிலே அவனின் இழந்த மகிழ்ச்சி யாவும் ஒட்டுமொத்தமாய் திரும்ப கிடைத்தது போல் வானத்தின் எல்லையில் பறந்தான் வீர்.

கவிதாவோ அவர்கள் இருவருக்கும் தனிமைக்கொடுத்து தேவகியை வெளியே அழைத்து சென்றிருந்தாள்.

ஒரு கட்டத்தில் வீர் தன்னை தானே அடக்கிக்கொண்டு அவளிடமிருந்து விலகியவன் “தேங்க்ஸ் தமி…அம்மாவை இப்படி பார்த்து பல வருஷமாச்சு…உனக்கு எப்படி நன்றி சொல்லறதுனே தெரியலை…” என அவன் உணர்வுப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்க,

அவளோ “எனக்கு நன்றி சொல்ல ஒரே ஒரு வழி தான் இருக்கு வீர்” என வெகு தீவிரமான குரலில் சொல்ல,

அவளை பற்றியறிந்தும் அவள் விரித்த வலையில் வலுக்கட்டாயமாக விழுந்தான் ஆடவன்.

“என்ன அது?” என மெதுவாக அவன் கேட்க,

அவளோ “வேறென்ன உங்க சிக்ஸ் பேக்கிலே என் ஃபேஸ் டேட்டூவை போடணும்…அது தான் என் வாழ்நாள் இலட்சியம்” என கூறி அவள் கண்சிமிட்டி சிரித்ததும் “ஏய் போடி லூசு” என அவளை திட்டிவிட்டு அன்னையை காணும் வேட்கையுடன் வெளியே வந்தவனின் அகமும் முகமும் மலர்ந்திருந்தன.

தன்னவனின் முகம் மலர்ந்த பிறகே தமயந்தியின் மனமும் இலேசாகிட “வீர் டேட்டூ போடுவீங்களா மாட்டிங்களா?” என அவனை சீண்டிக்கொண்டே பின்னால் சென்றாள்.

அவர்கள் இருவரும் வெளியில் சென்றுப் பார்க்கும் போது அந்த வெண்ணிற ஊஞ்சலில் அமர்ந்திருந்த தேவகியை பார்த்தவனிற்கு பழைய நினைவுகள் எல்லாம் மின்னல் போல் கண்முன் வந்துப்போயிருந்தன.

அவன்…அவனது தங்கை…தாய் என மூவரும் ஒன்றாக செலவளித்த நாட்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக காட்சிகளாக அவன் சிந்தையில் ஓட,

அவனை போலவே அவரது தாயின் சிந்தனையிலும் அந்த காட்சி ஓடியது போலும்!

உடனே அவர் மகனை காணும் தவிப்புடன் “வீர்…வீர்…” என பதட்டத்துடன் அவனை அழைக்க,

அன்னை தன்னை தேடியதும் பாசத்திற்கு ஏங்கும் கன்றுக்குட்டியாய் “அம்மா நான் இங்க தான் இருக்கேன்” என அவர் அருகே அவன் ஓடி வந்ததும் வேகமாக மகனை அணைத்துக்கொண்டார் தேவகி.

இத்தனை நாட்களும் அவன் தான் அவரை அணைத்திருக்கிறான்.அவர் எப்போதும் ஜடம் போல் தான் அமர்ந்திருந்திருப்பார்.

இன்று முதல் முறையாக அவராகவே அவனை பாசத்தில் அணைத்திருந்தார்.

அதில் அவன் உள்ளம் கொண்ட உவகைக்கு அளவே இல்லை….

அந்தவொரு நிமிடத்தில் இந்த உலகத்திலே மிகுந்த மகிழ்ச்சியுள்ள ஒரு மனிதன் யாரென்றால் அவனாக தான் இருப்பான்.

அவரோ “வீர்…வீர்…” என மகனை தன் நெஞ்சோடு அணைத்து அவனின் சிகையை கோதிவிட,அவனிற்கு அகிலமே மறந்துவிட்டது.

சிறு குழந்தையின் குதூகலத்தோடு அவரில் அவன் சரணடைந்திருக்க,இந்த காட்சியை தள்ளியிருந்து பார்த்திருந்த தமயந்திக்கு நெஞ்சம் நிறைந்துப்போனது.

அன்றைய நாள் பொழுது அவளிற்கு வீரின் வீட்டில் நேரம் கழிந்திட,அவளின் உள்ளமும் தன்னவனிற்காக மகிழ்ச்சியுற்றன‌.

அவள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது.

அவளை பிரிவதற்கு அவனிற்கு சிறிதும் மனமில்லை.தன்னுடனே அவளை வைத்துக்கொள்ள அவன் மனம் ஏங்கின.

ஆனால் அவளை தன்னோடு இருத்திக்கொள்ள அவனிற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்பதை அவன் அறிவான்.

ஆதலால் இன்னும் சில கணங்கள் அவளுடன் நேரத்தை செலவளிக்க விரும்பிய வீர் “நானே உன்னை கொண்டு வந்து விடறேன் தமி” என சொல்லியவன்,

பாதுகாவலனிடம் “மேடமை நான் கூட்டிட்டுப்போறேன்…நீங்க போங்க” என அனுப்பி வைத்துவிட்டான்.

தன்னவனின் இந்த செயல் பெண்ணவளை ஆகர்ஷித்து மனதை மயக்கியது‌.

அவனுடன் ஜீப்பில் ஏறிக்கொண்டாள் தமயந்தி.

ஜீப்பை மிதமான வேகத்தில் வீர் செலுத்திக்கொண்டிருக்க,இருவருக்குமிடையே ஒரு ஆழ்ந்த மௌனம்!

அந்த மௌனம் வருத்தத்தினால் உருவானது அல்ல…இருவரின் மனமும் அதீத இன்பத்தில் முகிழ்ந்ததால் உண்டானது.

அத்தோடு இருவருக்குள்ளும் மற்றவரின் மீதான தீராத வேட்கை வாகனத்தினுள் ஒரு மோன நிலையை கொடுத்தன‌.

அவர்களுக்கு இடையேயான அந்த சுகந்தமான நிலை விபரீதமான கற்பனைகளை அவளுள் விதைக்க ‘இது சரிவராது’ என தலையை உலுக்கிக்கொண்டு “வீர்” என்றாள்.

அவனும் அவளை போலவே அவளின் மேல் பொங்கி எழுந்த உணர்வுகளை அவளிடம் காட்டக்கூடாது என்பதற்காக கண்ணாடி அணிந்து தன் உணர்வுகளை மறைத்திருந்தான்.

அவள் தன்னை அழைத்ததும் அவளை நோக்கி திரும்பாமலே “ம்” என தன்னை மீறி அவன் குரல் ஒரு வித மயக்கத்துடனே வெளிவந்தது.

அவனது அந்த மந்தகாச குரல் பெண்ணவளை மயக்க ‘கடவுளே…இது சரிவராது’ என எச்சிலை கூட்டி விழுங்கியவள் “வீர் ஆமா வீட்டிலே கேட்கணும்னு நினைச்சேன்…ஏன் உங்களுக்கு நாற்பது வயசு நர்ஸெல்லாம் கண்ணுக்கே தெரியாதா?அதெப்படி சிறுசு வயசா பார்த்து புடிச்சிருக்கீங்க.?” என அவனை முறைத்துக் கொண்டே அவள் கேட்க,

அதுவரை அங்கு நிலவிய மோன நிலை அறுப்பட்டுப்போக இருவரும் சகஜமாகினார்‌.

இப்போது அவளின் கேள்வியில் சலித்த வீர் “ஏன்டி நானா அந்த பொண்ணு வேணும்னு சொன்னேன்…டாக்டர் தான் அனுப்பி வைச்சாங்க…” என அயர்ச்சியுடன் மொழிய,

அவளோ “டாக்டர் அனுப்பி வைச்சாங்க…சோக்டர் அனுப்பி வைச்சாங்க இதெல்லாம் எனக்கு தேவையில்லை…அவர் அனுப்பி வைச்சாரு சரி…நீங்க உடனே என்ன சொல்லியிருக்கணும்… எனக்கு யாராவது வயசான ஆளை அனுப்புங்கனு சொல்லணுமா இல்லையா?” என இடுப்பில் கைவைத்து பக்கவாட்டாக அவனை முறைத்தப்படி கேட்க,

அவனோ அவளை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு “ப்ச் தமி…இதெல்லாம் ஒரு பிரச்சனையா?அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி மாதிரி…” என சொல்ல,

அதில் கடுப்பான பெண்ணவள் “ஆமா இவர் பெரிய பாசமலர் சிவாஜி…பார்க்கிற எல்லாரையும் தங்கச்சியா ஏத்துப்பாரு…பேசாமல் உங்க வீட்டுக்கு தேவகி இல்லமுக்கு பதிலா பாரத விலாஸ்னு மாத்திட்டு கூடவே இங்கு ஒரு அண்ணன் இலவசம்னு ஒரு போர்ட் போட்டு வைச்சிடுங்க…அதை பார்த்திட்டு எல்லாரும் அண்ணானு ஓடி வரட்டும் ஆளை பாரு” என அவனின் தோளில் ஒரு இடி இடித்தாள்.

அவனோ “நல்லவனா இருக்கிறது அவ்வளவு பெரிய தப்பா?” என ஆதங்கத்துடன் கேட்க,

“நீங்க நல்லவனா இருங்க ரவுடி சார்…அதுக்கு இவ்வளவு ஏமாளியா இருக்காதீங்க?நாட்டிலே இருக்கிற எல்லா பொண்ணுங்களும் உங்க தங்கச்சி தான்…அதுக்காக அவங்க எல்லாரையும் உங்க வீட்டுலே கூட்டிட்டு வந்து வைக்க முடியாது…அதனாலே உங்க உணர்ச்சிவசத்தை அடக்குங்க” என தன்னவனை திட்டி அறிவுரை கூறியதோடு “இங்க பாருங்க வீர்…உங்களுக்கு தங்கச்சி பிடிக்கும்  தான்…அதுக்காக ஊருலே இருக்கிற பொண்ணுங்க எல்லாரையும் தங்கச்சி அக்கானு என்னை விட்டுட்டு உங்க கண்ணு வேற யாரு மேலையாவது போச்சு…உங்களை…” என சட்டென அவனே எதிர்பாராத வேளையில் துப்பாக்கியை எடுத்து அவனின் இடைக்கு குறி வைத்திருந்தாள்.

அவளின் அந்த செயலில் ஒரு கணம் ஆடவனே அதிர்ந்துவிட்டான்.

அதிலும் அவளின் கையிலிருந்த துப்பாக்கி அவனை பயம் கொள்ள செய்ய,அவசரமாக தன் கால்சட்டை பையை தடவிப்பார்த்தான் அவன்.

அவன் பாதுகாப்பிற்காக எடுத்து வந்திருந்த துப்பாக்கி அவனிடமில்லை.

“ஹே இதை எப்போடி எடுத்தே?” என கடுப்பாக அவள் கேட்க,

அவளோ அவனின் நெஞ்சில் குறி வைத்து “அதெல்லாம் எப்போவோ எடுத்தாச்சு…இப்படி அசால்ட்டா இருந்தா எப்படிங்க ரவுடி சார்?எதிரி பட்டுன்னு போட்டு போயிடுவான்” என திமிராக ஒற்றை புருவம் உயர்த்தி சொல்ல,

“ப்ச் லூசு…நீ துப்பாக்கிய கொடு…எதை வைச்சு விளையாடறதுனு இல்லை…கொடுடி” என அவளிடம் துப்பாக்கியை வாங்க முயல,

அவளோ அவனிடம் கொடுக்க மறுத்து தன் இடைக்கு பின்னால் வைத்து மறைத்தாள்.

அதற்குள் தமயந்தியின் வீடு வந்திருக்க,அவனோ வீட்டு வாசலில் வந்து ஜீப்பை கோபத்தில் கீறிச்சிட்டு நிறுத்தியிருந்தான்.

அதனால் அவள் புறமாக நன்றாக திரும்பி அமர்ந்த வீரோ “தமி இட்ஸ் டேன்ஜரஸ்…எனக்கு கோபம் வருதுக்குள்ள கொடுத்திடு” என கடுமையான குரலில் அவன் எச்சரித்ததும்,

அவளோ “சரி…சரி கூல் டவுன் மிஸ்டர் ரவுடி…தர்றேன் இருங்க” என சிரித்துக்கொண்டே மெதுவாக பின்னாலிருந்து துப்பாக்கியை எடுக்க,

அதற்கு மேல் பொறுமையில்லாத ஆடவனோ “ப்ச் கொடு தமி” என அவளை நோக்கி குனிந்து வெடுக்கென்று துப்பாக்கியை பிடுங்கிய அதே வேளை தன் முகத்திற்கு நேரெதிரே இருந்த வீரின் கன்னத்தில் அழுத்தமாக இதழ்பதித்திருந்தாள் அந்த சேட்டைக்காரி.

அவளிடமிருந்து அப்படியொரு அதிரடியை சற்றும் எதிர்பாராத ஆடவன் மின்சாரம் தாக்கிய உணர்வில் சிலையானான்.

அவனிற்கு ஒரு கணம் ‘என்ன நடந்தது?’ என்றே புரியவில்லை.

அவன் கையிலிருந்த துப்பாக்கி மீண்டும் நழுவி அவளின் மடியிலே விழுந்ததை கூட அறியாத நிலையில் இருந்தான்.

தன்னருகே அப்படியே ஸ்தம்பித்துப்போய் அமர்ந்த தன்னவனை குறும்புடன் நோக்கிய தமயந்தி “வீர் ரிலீஸ்…” என அவனின் முகத்திற்கு முன்பு விரல் சொடக்கிட்டவள்,அவன் தன் சுய உணர்விற்கு வருவதற்கு முன்பு அவனது மற்றைய கன்னத்திலும் முத்தமிட்டு அவசரமாக ஜீப்பிலிருந்து கீழிறிங்கினாள்.

இப்போது மீண்டும் ஒரு முறை அதிர்ந்து விட்டான் வீர்.

அவள் கதவை அடித்து சாற்றிய சத்தத்தில் தன்னிலைக்கு வந்த வீர் ‘என்னை என்னடி பண்ணே?’ என்பது போல் அவளை பார்த்து அவன் திருதிருவென விழிக்க,

அவனது பாவனை அவளிற்கு சிரிப்பை பீறிட்டு வர வைத்தது.

“ஹலோ அப்பாவி குழந்தை சார்…ஒழுங்கா வீடு போய் சேருவீங்களா மாட்டிங்களா?இல்லை மயங்கிப் போய் எங்கியாவது மோதிடுவீங்களா?” என அவனை தொட்டு உலுக்கியவளின் முகத்தை பார்த்த ஆடவனின் முகம் இலேசாக சிவந்தது.

ஆண்கள் வெட்கப்படும் தருணம் கூட ஒரு அழகு தான்!

அவனது நாணத்தை பார்த்த பெண்ணவள் இன்னும் சத்தமாக சிரிக்க,

அவனோ தொண்டையை செருமி “தமி என்ன வேலை பண்ணறே நீ?” என அதட்டலாய் கேட்க முயன்றும் அவன் குரலின் ஸ்ருதி சற்று குறைவாகவே வெளிவந்தது.

அவளோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனிடம் திரும்பியவள் “என்ன வேலையா? கிஸ் பண்ணேன் ரவுடி சார்…நீங்க எனக்கு தான்னு இப்போ கல்யாண பட்டாப்போட்டாச்சு…சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…புரியுதா?” என ரகசிய குரலில் கூறியவள்,

ஜீப்பினுள் படீரென்று தலையை விட்டு “அப்புறம் வீர்…கிஸ் பண்ணும் போது உங்க தாடி குத்திருச்சு…என் லிப்ஸ் வலிக்குது…அதையும் சீக்கிரம் டிரிம் பண்ணிடுங்க…ஓகே” என வெட்கம் கலந்த குரலில் அவனிடம் செல்ல அணையிட்டு “பை” என அவனிடம் கையசைத்து விடைப்பெற்றாள்.

ஆனால் ஆடவனோ பேயறைந்தது போல் ஒன்றும் புரியாமல் அவள் போகும் திசையையே பார்த்திருந்தான்.

அவளோ வீட்டுப்படியேறும் போது அவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்ததும்,அவனது இதயம் அப்படியே நழுவிவிட்டன.

ஏற்கனவே அவளின் பேச்சிலும் முத்தத்திலும் மயங்கி இருந்தவனிற்கு அவளின் இந்த செயல் அவனை கிறங்க வைத்து உணர்வுகளை தூண்டிவிட்டன.

அவனிற்குள் புதிதாக ஏதேதோ உணர்வுகள் கிளர்ந்தெழுந்ததும் ‘ஓ காட்’ என சிகையை கோதிக்கொண்டவனின் நெஞ்சமெல்லாம் அவளின் நினைவுகள் மட்டுமே!

ஆடவனிற்கோ அவள் தன்னை முத்தமிட்ட நினைவுகள் வந்ததும் தன்னையறியாமல் விரல்கள் அவனின் கன்னத்தை வருடின.

அவள் முன்பு இதழ்பதித்தது போன்ற ஒரு உணர்வை தோற்றுவிக்க,அவனின் முரட்டு தேகம் சிலிர்த்தன.

அவனிற்கு இதயம் சிறகு முளைத்து பறப்பது போன்ற உணர்வை கொடுக்க ‘யாராவது பார்த்தால் என்னாகறது?கொஞ்சம் கூட பயமே இல்லை இவளுக்கு’ என இலேசாக இதழ்பிரித்து சிரித்துக்கொண்டே வண்டியை எடுத்தான்.

அவளிடம் அவன் போராடி வாங்கிய துப்பாக்கியோ இப்போது கேட்பாரற்று அநாதரவாய் பக்கத்து இருக்கையில் கிடந்தது.

அவர்களது வீட்டிற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை இரண்டு ஜோடி விழிகள் இமைகள் இடுங்க பார்த்திருந்தன.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top