முகிழ்மதி தடுமாறி கீழே விழுவதற்குள் அவளை தன் முரட்டு கரங்களால் தாங்கியிருந்தான் ரத்தினவேல்.
தன்னை தாங்கியிருந்த கரத்தின் உரிமையாளனை ஏறிட்ட பெண்ணவளிற்கு பேரதிர்ச்சி.
அவசரமாக அவனிடமிருந்து ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தவள் மிரட்சியுடன் அவனை காண,ரத்தினவேலோ அவளை அழுத்தமாக பார்த்திருந்தான்.
அவனது விழிகள் நொடியில் அவளின் பாதாதி கேசம் வரை ஆராய்ந்திருந்தன.
அவளின் அழுது சிவந்த முகம் முதற்கொண்டு அவளது கழுத்திலிருந்த கீறல் வரை அனைத்தும் அவனது கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை.
அவளின் காயங்களை கவனித்த ரத்தினவேலின் இமைகள் இடுங்கின.
அவனது எதிரியின் மகளாகினும் ஒரு பெண்ணின் உடம்பில் காயங்களை பார்த்தவனின் தேகம் கோபத்தில் சிவந்து இறுகின.
அதேசமயம் அவளின் கண்ணோரம் மின்னிய நீர் துளியை பார்க்கையில் அவனது நெஞ்சத்தில் சொல்ல முடியாத ஒரு வலி!
அவனது குடும்ப நபர்களை தவிர வேறு யாருக்காகவும் துடிக்காத அவனது இதயம் அன்று வேறொரு பெண்ணிற்காக துடித்தன.
அவளின் இருப்பு அவனுள் ஒரு தாக்கத்தை கொடுத்தது எவ்வாறு என்பது தான் இங்கு பெரும் வியப்பு!
அன்று கோவிலில் அவனுள் ஏற்பட்ட அதே உணர்வு,இன்று இவளின் அருகில் அவனிற்கு உண்டாகின.
ஆனால் அவளை பற்றி ஆழ்ந்து யோசிக்க விடாமல் அவளின் கண்ணீர் தடுக்க “எதுக்கு அழறே நீ?” என்று வினவினான் அவன்.
அவன் வாழ்நாளில் யாரிடமும் இத்துணை மென்மையாய் பேசியதில்லை.
ஆனால் அவனின் மென்மையே அவளிற்கு வன்மையாய் தோன்றிட,அவளின் விழிகள் பயத்தில் மருண்டன.
அவனோ அவளின் பதிலுக்காக காத்திருக்க,அவளோ பதில் எதுவும் கூறாமல் மருள விழிக்க,
அதில் பொறுமையிழந்த ஆடவன் “உன்னை தான் கேட்கிறேன்?எதுக்கு அழறே நீ?” என குரலுயர்த்தி சீறவும்,
அதற்கே அவளின் மேனி தூக்கிவாரிப்போட்டது.
அவளிற்கு இப்போது அழுகையே வந்துவிட “அது…அது…” என பதில் சொல்ல முடியாமல் திணறியவளை கண்டு “ப்ச்” என உச்சுக்கொட்டி சலிப்பாக நெற்றியை நீவினான் ரத்தினவேல்.
பின்பு ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கியவன்,எதுவும் பேசாமல் தனது சட்டை பையிலிருந்து அவனது கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவள் அதையும் பயத்துடனே நோக்க,இப்போது அவனிற்கு எரிச்சலாக வந்தது.
எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் பெண்ணிடம் என்ன பேசுவது என்றே அவனிற்கு புரியவில்லை.
யாரிடமும் வழிய சென்று உரையாடி அவனிற்கு பழக்கமில்லை.
அவனிடம் பேச்சை விட வீச்சு தான் அதிகம்!
அதனால் மென்மையான பூ போன்றவளை சமாளிக்கும் வகையறியாமல் தடுமாறினான் அவன்.
அந்த தடுமாற்றமே அவனுள் சினத்தையும் விதைத்தது.
“ஏய் எதுக்கு இப்போ அழறே நீ…வாயை திறந்து பதில் பேசு” என காட்டமான குரலில் அதட்டியவன்,
சடுதியில் அவளின் கழுத்திலிருந்த காயத்தை கண்டுவிட்டு “உன் கழுத்துலே என்ன காயம்?” என புருவம் சுருக்கி கேட்டுக்கொண்டே கைக்குட்டையுடன் அவளை நெருங்கியிருந்தான்.
அவன் அவ்வாறு நெருங்கி வருவான் என்பதை சற்றும் எதிர்பாராத பெண்ணவளோ ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டாள்.
ஆனால் சடுதியில் நிகழ்விற்கு வந்தவள் “ஐய்யோ கிட்ட வராதீங்க” என துள்ளி குதித்து பின்னோக்கி நகர்ந்தாள்.
உடனே அவன் அவ்விடத்திலே நின்று அவளை அழுத்தமாக ஏறிட,
அவளோ அவனின் முன்பு கைநீட்ட “கிட்ட வராதீங்க…நீங்க தொட்டா எனக்கு ஷாக் அடிக்குது” என சிறுப்பிள்ளை போல் முணுமுணுத்தவளை ‘யாருடா இவ?பைத்தியமா?’ என்பது போல் பார்த்தான் அவன்.
அவனது பார்வைக்கு அஞ்சி நிற்கும் ஆட்களுக்கு மத்தியில் இவள் சிறிது வித்தியாசமாக தென்பட்டாள்.
அவனை கண்டு பலரும் அஞ்சியிருக்கிறார்கள்.ஆனால் இவள் மிரள்வது ஏனோ அவனிற்கு வித்தியாசமாக இருந்தது.
ஒரு சிங்கத்தை கண்டு மான் குட்டி மருண்டு விழிப்பது போன்ற ஒரு பிரம்மை அவனுள்!
அதனால் சற்று குரலை தாழ்த்தி “சரி கிட்ட வரலை…இந்தா கண்ணை துடை” என அவளிடம் கைக்குட்டையை நீட்ட,
அவளோ அதனை ‘வாங்குவதா?வேண்டாமா?’ என தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் தன் பொறுமையிழந்த ரத்தினவேல் “கர்ச்சீப்பை கையிலே வாங்குடி” என அடிக்குரலில் சீறியிருந்தான்.
அதில் மீண்டும் தேகம் தூக்கிவாரிப்போட அவசரமாக அவனிடமிருந்து கைக்குட்டை வாங்கியவளின் கரம் நடுங்கின.
அவளின் விழியில் மளுக்கென்று நீர் கோர்க்க,அதை கவனித்தவன் “ப்ச் என்ன பொண்ணு நீ?சும்மா சும்மா அழுதிட்டே இருக்கே” என வெளிப்படையாகவே சலித்துக்கொண்டான் அவன்.
அவன் மிரட்டியவுடன் அவளின் அழுகை படீரென்று நின்றுவிட,அவனை பாவமாக இமைக்கொட்டி ஏறிட்டவளை பார்த்தவனிற்கு ஏனோ பரிதாபம் தோன்றின.
அவனது உள்ளம் உடனடியாக சந்திரமதி மற்றும் முகிழ்மதி இருவருக்கும் இடையேயான வேற்றுமையை நொடியில் அளவிட ஆரம்பித்தன.
சந்திரமதிக்கும் இவளிற்கும் இடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருப்பதாக ரத்தினவேல் எண்ணினான்.
சந்திரமதி முதிர்ச்சியுற்ற காரிகை என்றால்,முகழ்மதி குழந்தை உள்ளம் கொண்ட குமரி.
அவளின் வதனத்தில் மழலையின் சாயல் தாண்டவமாடுவதை கண்டவனிற்கு முகிழ்மதியின் மீது இரக்கம் சுரந்தது.
அதனால் “ஊப்” என இதழ் குவித்து ஊதியவன் “கண்ணை முதல்ல துடை…நீ அழுதால் கேவலமா இருக்கே” என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் கூறியதை கேட்ட பாவையவளோ ‘ஙே’ என விழித்தாள்.
‘ஏதே கேவலமா இருக்கேனா?’ என வேகமாக தன் முகத்தை அவனது கைக்குட்டையால் துடைத்தவள், அவசரமாக அங்கிருந்த சன்னல் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.
அவளின் அழுது வீங்கியிருந்த முகத்தை பார்த்தவளிற்கு அவனது கூற்று ‘சரி’ என்றே தோன்றியது.
‘ஆமா அந்த மான்ஸ்டர் சொன்ன மாதிரி நான் அழுதால் கேவலமா தான் இருக்கேன்…இனி அழவே கூடாது’ என எண்ணிக்கொண்டது அந்த மடமை உள்ளம்!
அதேசமயம் அவன் அவளருகே இருக்கையில் அச்சத்தில் அவள் மிரண்டாலும்,ஏனோ அவனது கைக்குட்டையை தன் மென் கரங்களுக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள் பெண்ணவள்.
மூர்க்கனாக இருந்தாலும் அவளின் மீது அவன் காட்டிய அக்கறை அவளின் மனதில் ஒரு இதத்தை பரவ செய்தது.
இப்போது அவளின் காயங்கள் கூட அவளிற்கு வலியை ஏற்படுத்தவில்லை.
அவளின் கருவிழிகளோ விறைப்புடன் நடந்து செல்பவனையே அசையாமல் பார்த்திருந்தது.
ரத்தினவேல் வீட்டினுள்ளே நுழைய இருந்த வேளையில் “அண்ணா உங்களை பாட்டி கூப்பிடறாங்க” என எதிரே வந்த ஜித்தேந்திரன் கூற,உடனே அவனின் முகம் மாறிவிட்டது.
அதுவரை அவனது முகத்திலிருந்து இளக்கம் மறைந்து அவனுள் ஒரு இறுக்கம் குடியேறின.
“வர்றேன் நீ போ” அதே உணர்ச்சியற்ற பழைய பாவனை அவனின் குரலில் தொனித்தது.
முகிழ்மதி அவனுடைய உருவம் அங்கிருந்து மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன் முதுகை துளைத்த பார்வையை ரத்தினவேல் அறிந்தே இருந்தான்.
ஆனாலும்,அதனை அசட்டை செய்துவிட்டு உள்ளே சென்றான்.
அவனிற்கு காரணமின்றி யாவரின் மீதும் இரக்கம் காட்டுவது பிடிக்காது.
அதனால் அவன் தன்னிலையை இழக்கும் சந்தர்ப்பத்தை அறவே வெறுத்தான்.
அவன் உள்ளே சென்றப்போது,சந்திரமதி சிவப்பு நிற பட்டுப்புடவையில் தயாராகியிருந்தாள்.
அவளின் அன்னை அவளருகே நின்றிருக்க,சந்திரமதி சிறு பதட்டத்துடனே ஒரு நீள்விரிக்கையில் அமர்ந்திருந்தாள்.
அவளது வலதுப்புற இடம் காலியாக இருந்தது.
“வந்திட்டியா கண்ணா…வா…வந்து பேத்தி பக்கத்துலே உட்காரு” என அவனை வாஞ்சையுடன் அழைத்தார் காஞ்சனா மாலா.
அவனோ வேண்டாவெறுப்பாக அவளருகே வந்து அமர்ந்தான்.
அவனருகே வந்து அமர்ந்த பிறகும் சந்திரமதி அவனை ஏறிடாமல்,தன் மடியில் கோர்த்திருந்த அவளது கரத்தையே வெறித்திருந்தாள்.
இருவரும் ஒன்றாக அமர்ந்தவுடன்,பெரியவர்கள் அவளின் தலையில் பூச்சூட்டி இருவரின் திருமணத்தையும் உறுதி செய்தனர்.
மேலும்,இருவருக்கும் சில சடங்குகளையும் அவர்கள் மேற்கொள்ள,அவனது கண்கள் சிவந்து தாடை இறுகிப்போனது.
அவளின் தலையில் பூச்சூட்டிய அடுத்த கணமே “வெல்கம் டூ அவர் ஃபேமிலி அண்ணி” என தமயந்தி சிரித்தப்படி கூற,
ஜித்தேந்திரனும் பதிலுக்கு “வெல்கம் அண்ணி” என புன்னகைத்தான்.
அதுவரை மௌனமாக தலைகுனிந்து அமர்ந்திருந்த சந்திரமதி தலையுயர்த்தி இருவரையும் நோக்கினாள்.
உடனே பின்னால் இருந்து அவளின் தாய் தோளை இடிக்க,வேறுவழியின்றி வலுக்கட்டாயமாக இருவரையும் பார்த்து சிரித்தாள் சந்திரமதி.
இருவரின் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த வேளையில் “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என உரத்த குரலில் ரத்தினவேல் கூறியிருந்தான்.
அவன் இதுவரை யாரிடமும் அனுமதி கோரியதில்லை.
அதனால் இப்போதும் அவனின் சொற்கள் கட்டளையாகவே வெளிவந்திருந்தது.
திடீரென்று அவன் அவ்வாறு மொழியவும்,அனைவரும் ஒன்றும் புரியாமல் அவனை ஏறிட,
“தம்பி நிச்சயம் பண்ணியாச்சு…இப்போ போய் என்ன பேச போறீங்க?“ என விஜயலட்சுமி இடைப்புகுந்து அவசரமாக கூறினார்.
அவருக்கு மகள் அவனிடம் ஏதேனும் உளறி திருமணத்தை நிறுத்திவிடுவாளோ என அச்சமாக இருந்தது.
அதன் பொருட்டே அவர் கூற,ரத்தினவேலோ அவரின் கேள்விக்கு பதிலே உரைக்கவில்லை.
இருக்கையிலிருந்து எழுந்து நின்று “வா” என சந்திரமதியை பார்த்து கூறியவன்,விறுவிறுவென தோட்டத்தை நோக்கி நடந்திருந்தான்.
உடனே விஜயலட்சுமியின் முகம் அவமானத்தில் சுருங்கிவிட்டது.
அதைக்கண்டு “அவங்க பேசட்டும் விஜயலட்சுமி…இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழப்போறாங்க…ஒருத்தரை ஒருத்தர் பேசி புரிஞ்சுக்கிட்டும்” என வானதி தான் சமாளித்தார்.
விஜயலட்சுமியும் வேறுவழியின்றி “நீங்க சொல்லறதும் சரி தான்…மதி போய் மாப்பிள்ளை கூட பேசிட்டு வா” என சந்திரமதியை அனுப்பி வைத்தார்.
அவளும் அவர் ஆட்டி வைக்கும் பொம்மை போல் அவரின் அசைவுக்கு ஏற்ப இசைந்தாள்.
அவர்கள் இருவரும் வெளியே வந்து, அவளது வீட்டின் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மரப்பலகையில் ஒன்றாக அமர்ந்தனர்.
அவர்கள் இருவருக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி இருக்க,
சில வினாடிகள் அவ்விடத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி.
ரத்தினவேல் பேசுவதற்கு முன் தொண்டையைச் செருமினான்.
இருவரும் அடுத்த ஐந்து நிமிடங்கள் ஏதோ ஒன்றை பற்றி வெகு தீவிரமாக உரையாடினார்கள்.
‘அவன் என்ன கேட்டானோ?அவள் அதற்கு என்ன பதில் கூறினாளோ’ வீட்டிற்குள் நுழையும் போது சந்திரமதியின் முகம் தெளிவாக இருந்தது.
உள்ளே வந்த இருவரையும் அனைவரும் ஆவலாக பார்த்திருக்க,
ரத்தினவேல் பக்கவாட்டாக திரும்பி,சந்திரமதியை ஒரு பெருமூச்சுடன் நோக்கியவன் “கல்யாணத்தை ரொம்ப நாள் எல்லாம் தள்ளிப்போட வேண்டாம்…அடுத்த வாரமே வைச்சுக்கலாம்” என்று கூறி,அவனது சம்மதத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தான்.
அதன்பிறகே அங்கிருந்த அனைவரின் முகமும் உவகையில் மின்னியது.
அவர்களின் புன்னகையை பார்த்தவனிற்கு எரிச்சலாக இருந்தது.
கூடவே,ஒரு குற்றவுணர்வும்…
தனது பழிவெறிக்காக தன் குடும்பத்தையும் சேர்த்து ஏமாற்றிக்கிறோமோ என்று!
அதனால் அதற்கு மேலும் அங்கிருக்க விருப்பமின்றி “எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…பாட்டி மீதியெல்லாம் நீங்க பேசிக்கோங்க” என்றவன்,தனது சகோதரனை தன்னுடன் வரும்படி கண்ணாலே கட்டளையிட்டு,விறுவிறுவென வெளியேறிவிட்டான்.
அவனும் ராமனுக்கு ஏற்ற லட்சுமணனாய் “சரி நானும் கிளம்பறேன் பாட்டி…எனக்கு வேலை இருக்கு” என அனைவரிடமும் முறையாக விடைப்பெற்று ரத்தினவேலின் பின்னோடு புறப்பட்டிருந்தான்.
இல்லத்திலிருந்து வெளியே வந்த ரத்தினவேலின் விழிகளோ அவனையும் அறியாமல் வீட்டின் பின்புறத்தை நோக்கி ஒரு கணம் சென்று வந்தன.
அவனின் கண்ணில் முகிழ்மதி சிக்கவில்லை என்றவுடன்,தனது பின்னங்கழுத்தை வருடியப்படி மகிழுந்தில் ஏறி அங்கிருந்து பறந்தான்.
ஆனால் அவனின் கயல் விழியாளோ அவனது கைக்குட்டையை கரத்தில் வைத்தப்படி,தூரத்திலிருந்து அவன் செல்வதை தான் மறைந்திருந்து பார்த்திருந்தாள்.
அவன் நெருங்கினால் அச்சம்…விலகியிருந்தால் அவனின் மீது ஏதோ இனம்புரியாத ஆர்வம்!
‘இது என்ன மாதிரியான உணர்வு?’ என்று பாவையவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
அதன்பிறகு மணமக்கள் மற்றும் வீட்டு தலைகளின் ஈடுப்பாடு இல்லாமல் திருமண வேலைகள் படு வேகமாக நடந்துக்கொண்டிருந்தது.
சந்திரமதியை காட்டிலும் விஜயலட்சுமி தான் இந்த சம்மந்தத்தினால் வானத்தில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தார்.
இருவரின் திருமண விஷயம் கேள்வியுற்ற முகிழ்மதியின் மனதில் ஏமாற்றம் சூழ்ந்தது.
ஆயினும்,எதுவும் பேசாமல் வழக்கம் போல் ஓரமாக ஒதுங்கியே இருந்தாள்.
இதற்கிடையில் ரத்தினவேலும் தான் கோவிலில் சந்தித்த பெண் முகிழ்மதி என்று விசாரித்து அறிந்துக்கொண்டான்.
அவன் நிஜத்தை அறிந்தவுடன் அவனின் மனதில் நிம்மதியை காட்டிலும் பாரமேறியது.
அத்தோடு முகிழ்மதிக்கு அந்த வீட்டில் நடக்கும் அநீதிகளையும் அந்நியாயங்களையும் அரசல் புரசலாக அறிந்துக்கொண்டான்.
அவர்கள் செய்யும் கொடுமைகளில் கால்வாசி விபரம் அறிந்ததற்கே அவனின் இரத்தம் கொதித்தது.
முழுவதும் அறிந்துக்கொண்டால் அவளது பெற்றோரின் கதி என்னவோ?
அனைத்தும் அறிந்தும் அவன் இந்த திருமணத்தை நிறுத்த முயற்சிக்கவில்லை.
அவனிற்கு அவனது எண்ணங்கள் ஈடேற சந்திரமதியை திருமணம் செய்வது தான் சரியாக இருக்கும் என்று தோன்றின.
அதனால் முகிழ்மதியின் நினைவுகளை மண்ணிற்குள் போட்டு புதைக்க எண்ணினான்.
அவனின் கரத்திலிருந்த முகிழ்மதியின் தங்க சலங்கையை ஒரு இழுப்பறையினுள் வைத்து பூட்டியவன்,தனது மனதையும் அதனோடு சேர்த்து சிறை செய்திருந்தான்.
இங்கு மனம் கேளாமல் முகிழ்மதி தனது தமக்கையிடம் “அக்கா உனக்கு இந்த கல்யாணத்திலே சம்மதமா?” என கவலையுடன் கேட்க,
தனது முகத்திற்கு ஒப்பனை செய்துகொண்டிருந்த சந்திரமதியோ “எனக்கு சம்மதம் தான்டி” என்றாள்.
அதைக்கேட்டு “ஓ..” என இதழை குவித்தவள் “அக்கா நான் கேட்கறேனு தப்பா நினைக்காதே…உனக்கு அவரை பார்த்தால் பயமா இல்லையா?” என அன்றைய நாளின் நினைவில் ஒரு நடுக்கத்துடனே அவள் கேட்க,
உடனே அவளின் புறம் திரும்பிய சந்திரமதி “அடியே கிறுக்கி…அவர் என்ன சிங்கமா புலியா?அவரை பார்த்து பயப்படறதுக்கு” என கேலியாக சொல்லி சிரிக்க,
“இல்லைக்கா…அவரை கிட்ட பார்த்தாலே ஒரு மான்ஸ்டரை பார்க்கிற மாதிரி ஃபீலாகுது…அதுவுமில்லாமல் அவரை பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்…அவர் நிறைய கொலையெல்லாம் பண்ணியிருக்காறாமே…அவரை பார்த்தால் அவங்க அப்பா கூட பயப்படுவராம்…அவர் ஒரு அன்டர் க்ரௌண்ட் டான்னு கூட சொல்லறாங்க…அந்த அளவு கொடூரமான ஒரு ஆளை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணுமா?இதெல்லாம் கேட்கும் போது எனக்கு குலை நடுங்குது…அவர் உனக்கு வேணாம்கா” என மேனி நடுங்க பெரும் திகிலோடு அவள் உரைக்க,
ஆனால் அவளின் சகோதரியோ “ஏய் முகிழு…அவர் கொலை பண்ணா எனக்கு என்ன கொள்ளையடிச்சா எனக்கு என்ன?எனக்கு தேவை பணம்,அந்தஸ்து…அது அவர்கிட்ட நிறையவே இருக்கு…எனக்கு அது போதும்” என்றாள் அசால்ட்டாக.
அதைக்கேட்டு பிடித்தமின்மையுடன் முகத்தை சுழித்த முகிழ்மதி “இருந்தாலும் அக்கா…” என ஆரம்பிக்கும் போதே,
“ஏய் உன்னை என் பொண்ணு விஷயத்திலே தலையிடாதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…அவ மனசை கலைக்காமல் வெளிய போடி” என அவளின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார் விஜயலட்சுமி.
அதைக்கண்டு பதறிவிட்டாள் சந்திரமதி.
“முகிழ்” என கீழே விழுந்தவளை தூக்கிவிட அவள் முன்னே செல்ல,விஜயலட்சுமி அவளின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்தியிருந்தார்.
முகிழ்மதியோ இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் சுயபட்சாதாபத்தில் தன்னை நினைத்து வருந்தியப்படியே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
சந்திரமதிக்கு அவளின் தாய் சகோதரியை நடத்தும் விதத்தில் சிறிதும் ஒப்புதல் இல்லை.
அதனால் ஒரு வித ஆதங்கத்துடன் “மம்மி பாவம் அவள்…ஏன் இப்படி பண்ணறீங்க?” என அவளிற்காக சந்திரமதி பரிந்து பேசவும்,அடுத்த கணமே விஜயலட்சுமியின் முகம் விகாரமாய் மாறிவிட்டது.
அதை கவனித்த சந்திரமதியின் நெஞ்சில் நீர் வற்றிப்போக “மம்மி…அது வந்து…” என ஆரம்பித்தவளை கொலைவெறியோடு உறுத்து விழித்தவர் “இன்னொரு தடவை என் முன்னாடி அவளுக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசக்கூடாது…அப்படி பேசினால் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்” என விரல் நீட்டி எச்சரிக்க,
அவளோ பயத்தில் உமிழ்நீரை கூட்டி விழுங்கி ‘இல்லை’ என தலையசைத்தாள்.
விஜயலட்சுமியின் உண்மை சுயரூபத்தை சந்திரமதி நன்கு அறிவாள்.
அதனால் அவரை பகைத்துக்கொள்ள அவளிற்கு சிறிதும் துணிச்சலில்லை.
சிறு வயதிலிருந்தே தங்கையை அவர் நடத்தும் விதம் அறிந்தவள்,எங்கு அவரின் வன்மம் தன் புறம் திரும்பிவிடுமோ என அடக்கியே வாசித்தாள் அவள்.
இப்போதும் அவள் அவருக்கு அடிப்பணிந்து நடந்துக் கொண்டாள்.
அதனால் மட்டுமே அவள் செய்யும் தவறுகள் அனைத்தும் அவரால் மறைக்கப்பட்டு உதாசீனம் செய்யப்படுகிறது.
இல்லையென்றால்,அவளின் குற்றங்கள் அனைத்தும் தந்தையிடம் சென்று,முகிழ்மதிக்கு பதில் அவள் தண்டனை அனுபவிக்க நேர்ந்திருக்கும்.
ஆகையால்,தன் பழிப்பாவங்களை கருத்தில் கொண்டு மௌனமாகிவிட்டாள் காரிகையவள்.
‘அது’ என இளக்காரமாக அவளை ஏறிட்ட விஜயலட்சுமி “பெரிய வீட்டிலிருந்து கல்யாணத்துக்காக உனக்கு சீர் அனுப்பியிருக்காங்க…வா வந்து பாரு” என இயல்பாக அவளிடம் உரையாட,
“அப்படியா மம்மி?சூப்பர்…வாங்க போய் பார்க்கலாம்” என அவரை தள்ளிக்கொண்டு சென்றாள்.
அதேசமயம் அவளின் அலைப்பேசி எண்ணிற்கு அவளின் காதலன் சுஜித்திடமிருந்து தகவல் வந்தது.
‘சந்து உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன்…அதுவும் சி.எம் பையனாம்…உன்னை ஒரு தடவை நான் பார்க்கணுமே?’ என அவன் சூட்சமத்துடன் அனுப்பியிருந்த தகவலை வாசித்தவளின் மேனியில் உதறல் எடுத்தது.