சற்று நேரத்திற்கு முன்பு,
சபையின் முன்னால் வந்து நின்ற சந்திரமதியின் உடையை பார்த்த அனைவரும் திகைப்பில் விழி விரித்தனர்.
அவளின் தாயிற்கோ மகள் சொல் பேச்சை கேட்கவில்லை என்ற கடுப்பு ஒரு புறம் இருந்தாலும்,ஆசை மகளை ஒன்றும் கூற முடியாத தவிப்பு மற்றொரு புறம்!
வேறுவழியின்றி சிரித்தப்படி நின்றுக்கொண்டிருந்தார்.
அதேப்போல் மற்றவர்களும் அவள் அணிந்திருந்த மேற்கத்திய உடையை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.
ஆனால் காஞ்சனா மாலா மட்டும் முகத்தை சுளித்தார்.
தமயந்தியோ “ஒரு பொண்ணோட டிரஸை வைச்சு அவளை எடைப்போடக்கூடாது தான்…ஆனாலும் ஒரு குர்த்தியாவது போட்டிருக்கலாம்” என மனம் கேளாமல் முனக,
“பரவாயில்லை விடு…இந்த டிரஸிலே கூட பொண்ணு அழகா தான் இருக்காங்க” என்றான் ஜித்தேந்திரன்.
உடனே அவனை திரும்பி அவள் முறைக்க “ஹே அப்படியெல்லாம் சந்தேகமா பார்க்காதே…ஜஸ்ட் ஒரு காம்பிளிமெண்ட் தான்டி…வேற ஒண்ணுமில்லை” என பதறிப்போய் கூறவும்,
‘அது’ என மிடுக்காக விரல் நீட்டி எச்சரித்துவிட்டு திரும்பியவளின் கருவிழிகள் முகிழ்மதியை கண்டு தெறித்து விடுவது போல் விரிந்தது.
“என்னடா இது?டபுள் ஆக்ஷனா?” என தமயந்தி சத்தமாக கூவ,
“சேம் ஃபீலிங் லட்டு…நான் கனவு எதுவும் காண்றானா?” என வாயை பிளந்த ஜித்தேந்திரனோ அருகிலிருந்த தமயந்தியின் கையை கிள்ள,
அவளோ “ஆஆஆஆ…ஏன்டா என்னை கிள்ளனே” என வலியில் அலறினாள்.
“என் கண்ணை என்னாலையே நம்ப முடியலையே லட்டு…நான் பார்க்கிற காட்சி உண்மை தானா?” என அவன் தன் கண்ணை ஒரு முறை கசக்கிவிட்டு இருவரையும் மாறி மாறி நோக்கினான்.
அதை பார்த்த முகிழ்மதியின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
சந்திரமதி மட்டும் உம்மென்று நின்றிருந்தாள்.
இவர்களது உரையாடல்கள் அனைத்தும் சத்தமாக இருந்தது.
அதனால் அவர்களின் தாய் வானதியோ “உஷ் என்ன சத்தம் இது?இரண்டு பேரும் கீப் குயிட்” என்றார் கண்டிப்புடன்.
“அம்மா இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க?எப்படிம்மா?” என அவன் அப்போதும் அதிர்ச்சி விலகாமல் வினவ,
“ஜித்தா” என பாட்டியின் குரல் உயரவும்,
“மூடிட்டேன் பாட்டி” என வாயை கையால் பொத்திக்கொண்டான் அவன்.
அதைப் பார்த்து தமயந்து இதழ்கடித்து சிரிக்க,அவனோ ஓரக்கண்ணால் தங்கையை முறைத்தான்.
அதுவரை அலைப்பேசியில் மூழ்கியிருந்த ரத்தினவேல் முதன்முறையாய் இவர்களது பேச்சை கேட்டே திரையிலிருந்து விழி உயர்த்தினான்.
அவனின் கண் முன்னால் நின்றிருந்த இரட்டையர்களை ஆழ்ந்து நோக்கியவனின் புருவங்கள் நெறிந்தன.
அவனிற்கு வந்த தகவலில்,சிவராமனிற்கு இரண்டு மகள்கள் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால் சந்திரமதியின் புகைப்படம் மட்டுமே அவனிற்கு கிடைத்திருக்க,முகிழ்மதியை பற்றிய எந்தவொரு விபரமும் அவனிற்கு வரவில்லை.
இப்போது இருவரையும் ஒரே தோற்றத்தில் பார்த்த ரத்தினவேலிற்குமே இது பேரதிர்ச்சி!
இருவரில் யாரை அவன் கோவிலில் சந்தித்தான் என்று அவனிற்குள் சிறு சந்தேகம் ஒன்று முளைத்தன.
இருவரையும் மாறி மாறி ஆராய்ந்தவனிற்கு ஒரே குழப்பமாக இருந்தது.
ஏனெனில்,இருவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
இந்நிலையில் வானதியோ “விஜயலட்சுமி உங்களுக்கு இரண்டு பொண்ணுனு தெரியும்…ஆனால் இரண்டு பேரும் டிவின்ஸுனு நான் நினைக்கவே இல்லை” என ஆச்சரியத்துடன் சொல்ல,
விஜயலட்சுமியோ சிரித்துக்கொண்டே “நீங்க பரவாயில்லை…ஊருலே பல பேருக்கு எங்களுக்கு இரண்டு பொண்ணு இருக்கிறதே தெரியாது…பத்தாம் கிளாஸ் வரை இரண்டு பேருமே வேற ஊரிலே தான் படிச்சாங்க…அவங்க அப்பா மட்டும் தான் இங்க இருந்தாரு…நான் புள்ளைங்க கூட இருந்துக்கிட்டேன்…அதான் யாருக்கும் சரியா விவரம் தெரியலை” என மிக விரிவாக மற்றவருக்கு விவரித்தார்.
“ஓ…அதான் யாருக்கும் தெரியலை போலே…உங்க பெரிய பொண்ணு தான் சந்திரமதி…உங்க சின்னப் பொண்ணு பேரு என்ன?அவ என்ன செய்யறா?” என அவர் விசாரிக்க,
அவரோ முகிழ்மதியின் மீது அலட்சிய பார்வை ஒன்றை வீசிவிட்டு “அவ பேரா?” என ஒரா மாதிரியாக இழுத்தவர்,
பின்பு வேண்டா வெறுப்பாக “அவ பேரு முகிழ்மதி…பெரியவ அளவுக்கு சின்னவ ஒண்ணும் புத்திசாலியெல்லாம் இல்லை…எல்லாத்தையும் தப்பு தப்பா தான் செய்வாள்…ஒரு வேலைக்கும் லாய்க்கில்லை…அதான் பத்தாம் கிளாசுக்கு மேலே படிப்ப நிறுத்திட்டேன்…இப்போ தான் அவ அப்பா திட்டி கரஸ்லே பதினொன்னாம் கிளாஸுக்கு பரிட்சை எழுத போறாள்…ஆனால் சந்திரமதி அப்படியில்லை…ரொம்ப புத்திசாலியான பொண்ணு…சென்னையிலே இருக்க பெரிய காலேஜிலே இன்ஜினியரிங் படிக்கறாள்” என ஒரு பெண்ணை தாழ்த்தியும் மற்றவளை உயர்த்தியும் பேசினார் அவர்.
தாய் அவ்வாறு கூறவும் முகிழ்மதியின் முகம் கறுத்து சிவந்துவிட்டன.
வேண்டுமென்றே அவளை அவமானப்படுத்துவது போல் தாய் பேசவது அறிந்து அவளின் உள்ளம் நொந்துவிட்டன.
அவமானத்தில் அவளின் மேனியெல்லாம் கூனி குறுகியது.
அவரின் பேச்சிலிருந்த முரண்பாட்டை அங்கிருந்த அனைவருமே கவனித்தனர்.
ஆனால் பிள்ளைகளுக்கு இடையே அவர் காட்டிய வேறுபாட்டில் யாவருக்கும் ஒப்புதல் இல்லை.
ஆயினும்,எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தார்கள்.
அவர்களுக்கு முகிழ்மதியை நினைத்து பாவமாக இருந்தது.
அவளின் மீது அனைவரின் விழிகளும் இரக்கத்துடன் பதிய,அதுவுமே அவளிற்கு தலையிறக்கத்தையே கொடுத்தன.
ரத்தினவேலின் விழிகள் மட்டும் அவளின் மீது ஆராய்ச்சியுடன் பதிந்தன.
அவனின் பார்வை ஏனோ அவளின் மேனியை சிலிர்க்க செய்தன.
படபடப்பை மீறிய ஏதோ ஒரு உணர்வு…
அந்த உணர்வு அருவருக்கத்தக்கதாக இல்லாமல் ஒரு பாதுகாப்பான உணர்வை அவளிற்கு அளிக்க,சட்டென தலையுயர்த்தினாள் அவள்.
அப்போது தான் ரத்தினவேலின் விழிகள் அவளையே துளைத்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்தாள்.
இப்போதும் அவனது முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அவனின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தவளிற்கு இதயத்தில் ஒரு நடுக்கம்.
சட்டென அவள் தன் பார்வையை தழைத்துக்கொண்டாள்.
அவளின் இதயம் வாய் வழியே வந்துவிடுவது போல் அசுர வேகத்தில் துடிக்க,அவளின் இமைகள் பட்டாம்பூச்சியாய் படபடத்தது.
அவளின் இதழ்கள் இரண்டும் துடிக்க,அவளோ இதழ் கடித்து தன் பதட்டத்தை அடக்க முயற்சித்தாள்.
அவளின் இந்த தடுமாற்றம் ஆடவனிற்குள் ஒரு சுவாரசியமான உணர்வை தோற்றுவித்தன.
ஒரு வழியாக முகிழ்மதி தன்னை சமாளித்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக புன்னகைக்க முயன்றாள்.
அவளிற்கு இது பழகிப்போன ஒன்று தான்!
அதனால் வெகு அழகாக தன் நடிப்பை ஆரம்பித்திருந்தாள்.
அவள் தலையுயர்த்தி பெரியவர்கள் அனைவரையும் புன்னகையுடன் வணங்க,அவர்களும் சிறு முறுவலுடன் அவளிற்கு தலையசைத்தார்கள்.
வீட்டின் சிறியவர்களை கூட பார்த்து புன்னகைத்தவளிற்கு ஏனோ ரத்தினவேலை ஏறிடவே முடியவில்லை.
அவனை நோக்கி போலியான புன்னகையை சிந்த அவளிற்கு விருப்பமில்லை.
அதற்கு அவளின் படபடத்த நெஞ்சம் அனுமதிக்க மறுத்தது.
அதனால் அவளின் பார்வை அவன் புறம் செல்லவில்லை.
சிறியவர்களிடம் அவள் சம்பிரதாயமாக உரையாட,விஜயலட்சுமிக்கு அவற்றில் சிறிதும் உடன்பாடில்லை.
அதனால் அவர் தொண்டையை செரும,அடுத்த கணமே முகிழ்மதி தன் பேச்சை நிறுத்திவிட்டாள்.
அவை அனைத்தையும் மௌனமாக கவனித்துக்கொண்டிருந்தான் ரத்தினவேல்.
அடுத்ததாக அவனின் பார்வை சந்திரமதியின் மீது அழுத்தமாக பதிந்தது.
அவள் வேண்டா வெறுப்பாக நின்றுக்கொண்டு இருப்பது அவனிற்குமே புரிந்தது.
ஆனால் தன் திட்டத்தை நிறைவேண்டிய கட்டாயம் உணர்ந்து அவன் அமைதியுற்றிருந்தான்.
இப்போது காஞ்சனா மாலாவின் விழிகள் இருவரையும் கூர்மையாக அளவிட்டது.
அவரின் விழிகள் ஏனோ முகிழ்மதியையே சுற்றி வலம் வந்தன.
அவருக்கு சந்திரமதியை விட முகிழ்மதியை தான் அதிகம் பிடித்துப்போனது.
அதனால் அவரின் விழிகள் ஒரு அலைப்புறதலுடன் அலைப்பாய்ந்தன.
“விஜயலட்சுமி நான் கேட்கறேனு தப்பா நினைக்காதீங்க?உங்க இரண்டு பொண்ணுலே எந்த பொண்ணு அடிக்கடி கோவிலுக்கு போவா?” என்று கேட்டவரின் சொற்கள் கூர்மையுடன் வெளிவந்தது.
ரத்தினவேல் விரும்பியது கோவிலில் பார்த்த பெண் என்பதால் அவருக்குள் சிறு சந்தேகம் எழுந்தன.
ஏனெனில்,சந்திரமதி அவர்கள் போட்டு வைத்திருந்த விம்பத்திற்குள் சிறிதும் பொருந்தவில்லை.
அனைத்திலும் அவள் வேறுப்பட்டு நிற்க,அதுவே அவருள் சந்தேகத்தை விதைத்தது.
அதனால் அவருக்குள் பேரனுக்கு பிடித்த பெண் முகிழ்மதியாக இருக்கக்கூடுமோ என்ற எண்ணம்!
ஆனால் அவரின் எண்ணத்தில் தீயை ஊற்றுவது போல் விஜயலட்சுமி “சந்திரமதி தான் பெரியம்மா…அவ தான் சென்னையிலிருந்து இங்க வந்திட்டாலே கோவிலுக்கு கிளம்பிடுவாள்…முகிழ்மதி ஒரு சோம்பேறி…வீட்டு படியை தாண்டறதுக்கே அம்புட்டு தடவ யோசிப்பா…இதுலே கோவிலுக்கு எங்க போகறது?” என சிறிதும் வஞ்சனையின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்.
முகிழ்மதி திகைப்போடு தாயை ஏறிட,அவரோ கண்ணாலே அவளை மிரட்டி சமிக்ஞை செய்தார்.
அதனால் முகிழ்மதி மிரட்சியோடு வாயை அழுந்த பூட்டிக்கொண்டாள்.
விஜயலட்சுமி கூறியதை கேட்ட பாட்டி “ஓ” என்றார் ஒரு வித ஏமாற்றத்துடன்.
வேறு வழியின்றி ஒரு பெருமூச்சுடன் பேரனை திரும்பி பார்க்க,அவனோ தலையை மட்டும் அசைத்தான்.
அவனின் தலையசைப்பின் அர்த்தம் உணர்ந்த வானதி “சந்திரமதி இங்க வாம்மா” என அவளை அருகழைத்தார்.
உடனே சந்திரமதி தாயை திரும்பி குழப்பத்துடன் ஏறிட,
அவரோ கண்ணை உருட்டி ‘போ’ என சொல்ல,
அவளும் ஒரு வித கடுப்புடனே அவரை நெருங்கினாள்.
பெரியவர்கள் அவளைப் பார்த்து புன்னகைக்க,அவர்களின் சிரிப்பில் ஒரு பாசமும் பரிவும் நிறைந்திருந்தன.
ஆனால் அவளோ வேண்டா வெறுப்பாக புன்னகைத்தாள்.
வானதி தன் மாமியாரிடமிருந்து ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.
அவளிற்கு முன்னால் நின்றிருந்த சந்திரமதியின் கரத்தை மென்மையாகப் பற்றியவர்,தங்கம் மற்றும் வைரங்களால் ஆன தங்கள் பரம்பரை வளையல்களை அவளிற்கு அணிவித்தார்.
சந்திரமதிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.
‘என்ன நடக்கிறது இங்கே?’ என அதிர்ச்சியாக அவரை அவள் ஏறிட,
அவரோ “வெல்கம் டூ பூபதி ஃபேமிலி மருமகளே” என அவளை கட்டியணைத்து அவளின் நெற்றியில் முத்தம் பதிக்க,அதில் இன்னும் தூக்கிவாரிப்போட்டது அவளிற்கு!
அனைவருக்கும் மேலான அதிர்ச்சியுடன் முகிழ்மதியும் அவர்களை பார்த்தாள்.
விஜயலட்சுமிக்கோ மகிழ்ச்சியில் வாயெல்லாம் பல்லாக மாறியது.
சந்திரமதியை அவர்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதின் அடையாளமாக அவர்கள் அணிவித்த வளையலை பார்த்தவரின் கண்கள் பளிச்சிட்டது.
உடனே மகளை பார்த்து அவர் தலையசைக்க,அவளோ தாயை உணர்வுகளற்று வெற்று பார்வை பார்த்தாள்.
அவளிற்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை.
தன்னுடைய உடையை பார்த்துவிட்டு அவர்கள் தனது விருப்பமின்மையை புரிந்துக் கொள்வார்கள் என அவள் எண்ணியிருக்க,இங்கு நடந்ததோ வேறாக இருந்தது.
அவளிற்கு ஒரு கணம் தலையே சுற்றியது.
‘எனக்கு இந்த கல்யாணம் வேணாம்’ என உரக்க கத்தி சொல்ல அவளின் நாடி நரம்புகள் அனைத்தும் துடித்தது.
இப்போது முகிழ்மதிக்கே ‘என்ன நடக்குமோ?’ என பயத்தில் மூச்சிறைத்தது.
அனைவரின் உணர்ச்சிகளையும் அளந்த ரத்தினவேலின் தாடை இறுகிப்போயின.
அவனிற்குமே இந்த திருமணத்தில் இஷ்டமில்லை.
அதனால் கைமுஷ்டியை இறுக்கியப்படி அமர்ந்திருந்தவனிற்கு,அதற்கு மேல் அங்கிருக்க சிறிதும் விருப்பமில்லை.
சட்டென அவ்விடமே அதிர எழுந்து நின்றவன்,விருட்டென்று வீட்டிலிருந்து வெளியேறினான்.
அவன் அவ்வாறு செய்ததும் பெரியவர்களுக்கே ஒன்றும் புரிப்படவில்லை.
அவன் ஆசைப்பட்டு கேட்ட திருமணம் தானே?
பின்பு ஏன் இவ்வாறு நடந்துக்கொள்கிறான் என அனைவருக்கும் குழப்பமாக இருக்க,பக்கவாட்டாக திரும்பி காஞ்சனா மாலா ஜித்தேந்திரனிடம் கண்ணை காட்டினார்.
உடனடியாக அவனும் தமையனை பின்தொடர்ந்து சென்றான்.
இங்கு சந்திரமதியோ அவனின் அதிரடியில் மிரண்டு “என்…என்னாச்சு?” என திக்கி திணறி வினவ,
வானதி பதில் கூறுவதற்குள் விஜயலட்சுமி புன்னகையுடன் வந்து சந்திரமதியின் தோளில் கைவைத்து அழுத்தியவர் “இப்போ இருக்கிற பசங்களுக்கு எல்லாத்திலையும் ஒரு வேகம்…சந்திரமதி வேற டிரஸ் போட்டுட்டு வரட்டும்…அதுக்குள்ள மாப்பிள்ளை வந்திட்டரான்னா மத்த விஷயத்தை பேசுவோம்” என சிரித்துக்கொண்டே சூழ்நிலையை சமாளித்தார்.
அவருக்கு இந்த சம்மந்தம் கை நழுவி செல்லக்கூடாது.அதனால் அவரே முன் வந்து அனைத்தையும் சமாளிக்க முற்பட்டார்.
“முகிழ் அக்காவை கூட்டிட்டு போய் ரெடி பண்ணு” என முகிழ்மதியிடம் முறைத்துக் கொண்டே கூறி,இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தார்.
அவர் சகஜமாக பேசினாலும் அவரின் முகத்தில் ஒட்டப்பட்டிருந்த புன்னகை மிகவும் போலியானதாக இருந்தது.
அதை பூபதியின் குடும்பமும் கவனித்திருந்தது.
ஆனால் அவர்கள் எதுவும் பேசவில்லை.
ஏனெனில்,தவறு தங்கள் மேல் இருப்பதால் அவர்கள் மௌனாகிவிட்டார்கள்.
தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சந்திரமதி.
அவளை பின்தொடர்ந்து சென்ற முகிழ்மதியோ கிட்டத்தட்ட ஓடி வந்தாள்.
அந்த அளவு சந்திரமதியின் நடையில் கோபமும் ஆக்ரோஷமும் நிறைந்து இருந்தது.
அவள் அறைக்குள் நுழைந்த அடுத்த கணமே,அங்கிருந்த கண்ணாடி பூ ஜாடியை எடுத்து தரையில் வீசியெறிந்தாள்.
அவளின் பின்னோட வந்த முகிழ்மதியோ இதை பார்த்து பயத்தில் காதுகள் இரண்டையும் பொத்திக்கொண்டு கண் மூடி நின்றுவிட்டாள்.
அவள் ஜாடியை உடைத்ததால் கண்ணாடி துண்டுகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன.
அவ்வறையே அதிரும் அளவு எழுந்த சத்தத்தில் முகிழ்மதியின் இதயத்துடிப்பு அதிகரித்தது.
நல்ல வேளையாக,அது ஒலி புகா அறையாக இருந்ததினால் வெளியில் இருந்தவர்களுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை.
ஆனால் உடைந்த பூச்சாடியின் கண்ணாடி துண்டு ஒன்று சந்திரமதியின் கையை கிழித்து பதம் பார்த்திருக்க,அவளின் கரத்தில் குருதி கசிந்தது.
அதை பார்த்து பதறிய முகிழ்மதி “ஐய்யோ அக்கா இரத்தம்?ஏன்கா இப்படி செய்யறே?” என ஓடிவந்து அவளின் கரத்தை பற்றியவளின் கண்கள் இரண்டும் கலங்கியது.
அவளோ “என்னை விடு முகிழு…” என ஆவேசமாக கையை உதற,
அதேவேளை உள்ளே வந்த விஜயலட்சுமி அறையின் நிலையை பார்த்ததும் ஏன் என்று கூட கேட்காமல் முகிழ்மதியின் கன்னத்தில் ஓங்கி அமைந்திருந்தார்.
“அம்மா” என அதிர்ச்சியில் அவள் கூவ,
“வாயை மூடுடி…எல்லாம் உன்னால் தான்…என் மானத்தை வாங்கவே பிறப்பெடுத்திருக்கே நீ” என உச்சக்கட்ட ஆத்திரத்தோடு அவர் சீறினார்.
சந்திரமதியின் மீதிருந்த கோபத்திற்கு முகிழ்மதி வடிகாலாக அவருக்கு தேவைப்பட்டாள்.
தங்கை அடி வாங்கியதும் சந்திரமதியின் மேனி தன்னாலே நடுங்கியது.
அவளின் உடல் வெடவெடத்ததை திருப்தியாக நோக்கிய விஜயலட்சுமி “மதி கண்ணு ஒழுங்கா நான் எடுத்து வைச்ச டிரஸை போட்டு ரெடியாகிட்டு கீழே வா” என அவர் ஆணையிட,
சந்திரமதியோ ‘என்ன பேசுவது?’ என தெரியாமல் சிலையாகி நின்றாள்.
அவள் அவரையே நம்பாமல் வெறித்திருக்க,
“அம்மா அக்காவுக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டமே இல்லைம்மா…அவளுக்கு இப்போ தானே பதினெட்டு வயசாகுது…இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே” என தமக்கை படும் வேதனை தாங்காமல் தன் துணிச்சலை எல்லாம் ஒன்று திரட்டி முகிழ்மதி தாயிடம் பேச,
அவரோ கண்கள் இரண்டும் சிவக்க மீண்டும் அவளின் கன்னத்தில் ஒரு அறை விட,அவளோ சுருண்டுப்போய் கீழே விழுந்திருந்தாள்.
அவள் “அம்மாஆ” என வலியில் அலறினாள்.
ஏனெனில்,உடைந்த கண்ணாடி துண்டின் ஒரு பகுதி கீழே விழுந்தவளின் கரத்தை பதம் பார்த்திருந்தது.
அதில் வலி உயிர் போக அவளின் கண்ணிலிருந்து நீர் ஆறாக பெருக்கெடுத்தது.
அதை கவனியாதவரோ “என் பொண்ணுக்கு எது நல்லது எது கெட்டதுனு எனக்கு தெரியும்…நீ மூடிட்டு உன் வேலைய பாருடி” என அவளின் மீது வெறுப்பை உமிழ்ந்தார்.
ஆனால் அப்போதும் தன் வலியை தாங்கிக்கொண்டு பேச முயன்றாள்.
ஏனெனில்,தமக்கையின் துக்கம் தன்னை விட பெரியது என்று கருதினாள் அவள்.
ஆனால் அவள் பேச வாயை திறக்கும் போதே “ஏய் நான் சொன்னது உனக்கு கேட்டுச்சா இல்லையா?என் பொண்ணு விஷயத்திலே தலையிடாதேடி” என அவளின் சங்கு கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.
இம்முறை கண்ணாடி துண்டுகள் அவளது மணிக்கட்டு, உள்ளங்கை மற்றும் கழுத்தின் இடது பக்கத்தில் ஆழமான வெட்டுக்களை ஏற்படுத்திவிட,அவளோ “அம்மாஆஆ” என உச்சக்கட்ட ரணவேதனையில் துடித்தாள்.
அவளின் காயத்திலிருந்து உதிரம் கொட்டிக்கொண்டு இருக்க,அதில் சிறிதும் இரக்கமில்லாதவர் “ச்சை முதல்ல வெளிய போடி” என அவளை பிடித்து வெளியே தள்ளி கதவை சாற்றினார்.
சந்திரமதியோ தாய் சகோதரியை கொடுமைப்படுத்துவதை பார்த்து பயத்தில் சிலையாகிப்போனாள்.
அவள் ஒன்றும் நல்லவளில்லை தான்.ஆயினும்,உதிர காயத்தோடு நின்றிருந்த முகிழ்மதியை கண்டு அவளிற்கும் வலித்தது.
வெளியே முகழ்மதியோ கண்களிலிருந்து நீர் வழிய எழுந்துக்கொள்ள முடியாமல் தடுமாறி ஒரு வழியாக எழுந்துக்கொண்டாள்.
நிற்க முடியாமல் தடுமாறியவள் விருந்தினர்களின் முன்பு ஒரு காட்சியை உருவாக்க விருப்பமின்றி பின் வாசல் வழியாக கொல்லை புறத்திற்கு சென்றாள்.
ஏனெனில்,அவளின் அறை மேல் மாடியில் இருந்தது.
மேலே செல்ல வேண்டும் என்றால் அவர்களை தாண்டியே செல்ல வேண்டும்.
ஆதலால்,வீட்டின் பின்புற தோட்டத்தில் போடப்பட்டிருந்த திண்டில் சென்று அமர்ந்தவளின் கண்ணிலிருந்து நீர் வழிந்தது.
அவள் அங்கே குத்துகாலிட்டு அமர்ந்து,தன் முகத்தை உள்ளங்கைகளால் மூடிக்கொண்டு கதறியழுதாள்.
காயத்தினால் ஏற்பட்ட ரணத்தை விட,அவளது நெஞ்சத்தின் ரணம் தான் மரண வதையை கொடுத்தன.
‘எதற்காக நாம் பிறந்தோம்?’ என்ற எண்ணம் அவளுள் மேலோங்கிட,
‘பேசாமல் தாம் தற்கொலை செய்துக்கொண்டால் என்ன?’ என்ற நினைப்பு கூட ஒரு கணம் அவளுள் வந்து சென்றது.
ஆனால் தற்கொலை செய்துக்கொள்ளும் துணிச்சல் அவளிடம் இல்லை.
அப்படியான கோழை பெண்ணவளால்,தான் எடுத்த முடிவை பின்பற்ற முடியாமல் தவித்து தத்தளித்தாள்.
அதனால் இயலாமையில் அவளிற்கு அழுகை அதிகரித்தது.
தொடர்ந்து தேம்பி அழுததால் அவளின் தொண்டை குழியே நீரின்றி வற்றிப்போனது.
அவளை சமாதானம் செய்வதற்கு கூட யாவரிமில்லை என்று எண்ணும் போதே அவளின் இதயம் சுருக்சுருக்கென தைத்தது.
ஒரு கட்டத்தில் அழுது அழுது தன்னை தானே தேற்றியவள்,அந்த கல் திண்டிலிருந்து எழுந்தாள்.
ஆனால் வெகு நேரமாக மடங்கி அமர்ந்திருந்ததால் அவளது காலின் இரத்த ஓட்டம் தடைப்பட்டு தரையில் அடி வைக்க முடியாமல் தடுமாறினாள்.
“அம்மாஆஆ” என பயத்தோடு தரையில் விழ இருந்தவளின் மணிக்கட்டை ஒரு இரும்பு கரம் அழுந்த பற்றி நிறுத்தியது.
“கேர் ஃபுல்” என்றவனின் குரல் கேட்டவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
அந்த குரலில் இருந்த வன்மையே பெண்ணவளின் மேனியை அதிர செய்தது என்றால்,திடீரென்று தீண்டிய அவனது கரம் அவளின் தளிர் மேனியில் மின்சாரத்தை உண்டாக்கியது.
சட்டென அவனின் கரத்தை தட்டிவிட்டு விழி உயர்த்தி அவனை ஏறிட்டவள்,அங்கு நின்றிருந்த நபரை பார்த்ததும் அச்சத்தில் ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
ஏனெனில் அங்கு தன்னுடைய முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றிருந்தான் ரத்தினவேல் ரகுநாத பூபதி.