முகிழ்மதி 4,5

முகிழ்மதி 4
 

முன்பே முதல்வர் அந்த வழியில் தன் குடும்பத்துடன் பயணிப்பது அறிந்ததால்,பாதுகாப்பு கருதி,காவலர்கள் மக்களை அப்புறப்படுத்தியிருந்தனர்.

அதனால் அவ்விடத்தில் பெரிதாக ஆட்கள் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி இருந்தது.

ரத்தினவேலின் பெற்றோர் மகிழுந்து அங்கு வந்து சேர்ந்ததும்,

மகிழுந்தின் கண்ணாடியைக் கீழிறக்கிய அவனது தாய் வானதி “என்னாச்சு அத்தே?ஏன் காரை இங்கே நிறுத்தியிருக்கீங்க” என்று அவர் விசாரித்தார்.

காஞ்சனா மாலாவோ “பூபதியை பிள்ளையார் கோவிலுக்குப் போக சொல்லியிருக்கேன் வானதி…அவன் வந்தவுடனே அவனை கூட்டிட்டு நான் வர்றேன்…நீங்க முன்னாடி போங்க” என்று கூற,

அவரும் மென்புன்னகையுடன் “சரிங்க அத்தை” என தலையசைத்துவிட்டு கிளம்பினார்.

ரத்தினவேல் தனது பெற்றோரை விட பாட்டியிடமே ஒட்டுதல் அதிகம்.

அதனால் அவனின் பெற்றோரும் அதை பெரிதாக எடுக்கவில்லை.

இங்கு கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு கீழிறங்கி வந்த ரத்தினவேலின் கரத்தில் தங்க கொலுசு ஒன்று கிடைத்திருந்தது.

‘யாரோடது இது?’ என்ற யோசனையோடு விழிகளை சுழற்றியவனின் பார்வையில் முகிழ்மதியின் பின்புறம் மட்டுமே விழுந்தது.

பச்சை நிறத்தில் சிவப்பு பூக்கள் போடப்பட்ட தாவணியில்  வெண்ணிற முயல்குட்டி போல் துள்ளி குதித்து இறங்கிக்கொண்டிருந்த முகிழ்மதியின் மீது அவனின் கவனம் பதிந்தது.

அவளின் காலில் ஒற்றை பொன் சலங்கை மட்டுமே இருந்தன.

அதுவே,தன் கையிலிருக்கும் சலங்கைக்கு உரியவள் அவள் தான் என்று அவனிற்கு தெள்ள தெளிவாக தெரிவித்தது.

ஆனால் அதை தெரிந்துக்கொண்டவனின் விழிகள் உயர்ந்து பாவையவளை அளவிட,அவளின் வலதுப்புற வதனம் மட்டுமே அவனிற்கு காட்சியளித்தது.

சில வினாடிகளுக்கு அதிகமாக அவளையே அவன் பார்த்திருக்க,அவனது உள்ளத்திலோ பெரும் அதிர்வு!

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் தோன்றிய அதே உணர்வு இவளிடமும் உண்டாகின.

அவளின் இருப்பு அவனிற்குள் ஏதேதோ நினைவுகளை தட்டியெழுப்ப,அவன் சில கணங்கள் சிலையாகிப்போனான்.

அவனின் பாதங்கள் சஞ்சலத்துடன் அவ்விடத்திலே ஊன்றியிருக்க,அவளோ அதற்குள் தலத்தின் இறுதி படியை கடந்திருந்தாள்.

அதன்பிறகே ஆடவனிற்கு சுய உணர்வு தோன்றிட,வேகமாக கையில் சலங்கையுடன் அவளை பின்தொடர முயன்றான்.

ஆனால் அவளை நோக்கி அவன் நடந்தபோது,திடீரென்று தன் மணிக்கட்டை யாரோ இழுப்பது போல் இருக்க,சட்டென திரும்பி பார்த்தான் ஆடவன்.

அவன் திரும்பியபோது,ஒரு பத்து வயது சிறுவன் தன் கையில் பூச்சரத்தை வைத்துக்கொண்டு 
“சார்…சார் தயவுசெஞ்சு இந்த பூவை கொஞ்சம் வாங்கிக்கோங்க சார்…நான் காலையிலிருந்து சாப்பிடவே இல்லை…இதை வித்தா தான் நானும் என் தங்கச்சியும் சாப்பிடவே முடியும் சார்” என்று இயலாமை கலந்த குரலில் இறைஞ்சினான்,அந்தச் சிறுவன்.

அந்த சிறுவன் அவனை நெருங்கியவுடன் அவனின் மெய்க்காப்பாளர் வேகமாக முன் வர,உடனே ரத்தினவேல் அவர்களை ஒற்றை கை நீட்டி தடுத்து நிறுத்தியிருந்தான்.

அடுத்த கணமே அவனின் விழிகள் முகழ்மதியின் மீது பதிய,அவளோ எப்போதோ மின்னல் போல் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அதை கவனித்தவன் ஒரு பெருமூச்சுடன் மீசையை வருடிவிட்டு சிறுவனின் புறம் திரும்பினான்.

அந்த சிறுவனோ “சார்…சார் பிளீஸ் சார்…பூ வாங்கிக்கோங்க” என கண்ணில் ஜீவனின்றி வினவிய குழந்தையினை பார்த்தவனிற்கு ‘என்ன தோன்றியதோ?’ தனது பாதுகாவலன் ஒருவனை தன்னருகே வருமாறு அழைத்தான்.

அவனிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தவன் “இந்த பையனோட வீடு எங்கயிருக்குனு விசாரிச்சு ஜெகனுக்கு இன்ஃபார்ம் பண்ணு…இனி இந்த பையன் இங்க பூ விக்கக்கூடாது” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்.

அவனது முகத்தில் தெரிந்த கோபத்தை பார்த்த சிறுவனிற்குள் அச்சம் தோன்றிட “சார்..” என எச்சில் கூட்டி விழுங்கிட,

அதை அவதானித்த ரத்தினவேலோ அவனருகே குனிந்து “கவலைப்படாதே தம்பி…இனி உனக்கும் உன் தங்கச்சிக்கும் மூணு வேளை வயிறு நிறைய சாப்பாடு போட வேண்டியது என் பொறுப்பு…கூடவே நீயும் உன் தங்கச்சியும் படிச்சு முடிக்கிறவரை ஆகிற செலவு என்னோடது…டோன்ட் வொர்ரி” என அவனின் தலையை ஒரு முறை வருடி ஆறுதல் படுத்தியவன்,தனது மெய்காப்பாளனிடம் கண்ணை காட்டியிருந்தான்.

கல்லுக்குள் ஒரு ஈரம்…

அந்த குழந்தையின் மீது இரக்கம் கொண்டான் ரத்தினவேல்.

அதேசமயம் இந்த சிறுவனின் நிலைக்கு காரணமான நபர்களின் மீது ஒரு தார்மீக கோபம்.

அதனால் கண்ணசைவால் சில கட்டளைகளை அவனது மெய்காப்பாளனிற்கு அவன் விதித்தான்.

அவனது கண்ணசைவின் அர்த்தம் உணர்ந்த மெய்காப்பாளனும் அவனிடம் தலையசைத்து விடைப்பெற்றான்.

அவனது கட்டளையின் படி,அந்த இரண்டு குழந்தைகளும் அவர்களது பூபதி அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் குழந்தைகளை பூ விற்க அனுப்பிய அவர்களது குடிகார தந்தை அநாதரவாக நடுரோட்டில் அடிப்பட்டு சாக கிடந்தான்.

அவர்களது தாய் எப்போதோ மரணித்திருந்தார்.

அதன்பொருட்டே,குழந்தைகளுக்கு இந்த அவலநிலை!

அந்த சிறுவன் அங்கிருந்து சென்றவுடன் தனது காப்பாளர்களின் புடை சூழ கீழிறங்கி வந்த ரத்தினவேலின் சட்டை பையில் பெண்ணவளின் கால் சலங்கை அடைக்கலம் புகுந்திருந்தது.

வாகனத்தில் ஏறி அமர்ந்த ரத்தினவேல் தன் சட்டை பையின் மீது ஒரு கரம் பதித்து ‘உன்னை கண்டுப்பிடிக்கிறது ஒண்ணும் எனக்கு அவ்வளவு சிரமமில்லை’ என தனக்கு தானே பேசியவனின் இதழ்கள் இலேசாக விரிந்தன.

பார்ப்பதற்கு கிடைக்காத மிகவும் அரிதான ஒரு பொக்கிஷம்,அவனின் புன்னகை!

முதன்முறையாய் அவன் சிரிப்பை கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

அவன் வாகனத்திலிருந்து இறங்கியதும் ஓட்டுநர் “பெரியம்மா…சின்ன ஐயா சிரிச்சாரா?” என்று வியப்போடு பாட்டியிடம் கேட்க,

பாட்டியும் மனம் நிறைந்த புன்னகையுடன் “ஆமா பழனி…எனக்கும் அதிர்ச்சி தான்…ஏதோ ஒண்ணு குலத்தெய்வ கோவிலுக்கு வரணும்னு முடிவு பண்ணது நல்லதா போச்சு…இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என்று சொன்னார்.

அதே சமயம்,ரத்தினவேல் மீண்டும் தன் முகப்பாவனையை மாற்றி,யாவருக்கும் அடங்காத இறுக்கமானவனாய் நடந்து சென்றான். 

மறுபுறம்,முகிழ்மதியின் மகிழுந்து அவள் வீட்டின் முன்பு வந்து நின்றது.  மகிழுந்திலிருந்து இறங்கிய காரிகை,ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டு,யாரிடமும் பேசாமல் நேராகத் தன் அறைக்குச் சென்றாள்.

தன் காதணிகளையும் உடையையும் அகற்றிவிட்டு,சாதாரண உடை அணிந்து அவள் கட்டிலில் அமர்ந்தாள்.

அப்போது ஏதேச்சையாக தன் பாதங்களை கவனித்தவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

தனது காலில் ஒரே ஒரு தங்க சலங்கை மட்டுமே இருப்பதை பார்த்தவளிற்கு இதயம் நடுங்கின.

அவளிற்கு என்று பாசமாய் அவளின் பெற்றோர் வாங்கி தந்தது,அது ஒன்று மட்டுமே!

இப்போது இது காணாமல் சென்றது அறிந்தால் விஜயலட்சுமி ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார் என்றே அஞ்சினாள் முகிழ்மதி.

‘அட கடவுளே…எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது…எனக்குனு இருக்கிற ஒரே ஒரு பொருள் அது தான்…அதுவும் இப்போ போச்சு’ என வருத்தத்தோடு முனகிக்கொண்டே எழுந்தவளிற்கு கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது.

ஆனால் அவள் நினைத்தது போல் அந்த அணிகலனை இழந்ததற்கு அவளிற்கு வசைப்படலம் எதுவும் கிடைக்கவில்லை.

அதற்கு மாறாக “என்ன கொலுசை தொலைச்சிட்டியா?” என வெறுப்போடு கேட்டவர்,

பின்பு “சரி விடு சனியன் போய் தொலையட்டும்…ஆனால் வேற கொலுசெல்லாம் நான் வாங்கி தரமாட்டேன்” என்று அலட்சியமாக தாய் பேசியதை கேட்டவளிற்கு திகைப்பாக இருந்தது.

பல வருடங்களாக அவருடன் வாழ்ந்து வருபவளிற்கு அவரின் நடத்தையை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

அவரை மட்டுமல்ல…அவளை சுற்றி இருக்கும் யாவரையும் அவளால் அறிய முடியவில்லை.

அவ்வளவு ஏன்?

அவளுடன் பிறந்த இரட்டை சகோதரியே அவளிற்கு புரியாத புதிர் தான்.

முகிழ்மதி ‘என்ன நடக்குது இங்க?’ என ஒன்றும் புரியாமல் குழம்பிய மனநிலையிலே நாட்களை கடத்தினாள்.

ஆனால் அவளின் உள்ளத்தில் சலங்கையை பற்றிய நினைவு அவ்வப்போது எழுந்து அவளை கவலையுற செய்யும்.

இங்கு ரத்தினவேலிற்கோ ஏனோ அவளை பார்த்ததிலிருந்து அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பல ஜென்மங்களாய் தொடரும் உறவிது என்ற எண்ணம் தான் அவனிற்கு!

அவளின் பொன் சலங்கையை அவ்வப்போது எடுத்து ரசிப்பவனின் மனக்கண்ணில் அவளின் பின்புற தோற்றம் மட்டும் தோன்றி மறையும்.

அவளின் உருவம் நினைவில் எழும் போதெல்லாம் அத்தி பூத்தாற் போன்று அவனின் இதழிலும் புன்முறுவல் பூக்கும்.

அவளை கண்டறியும் முனைப்புடன் வேகமாக செயல்பட்டவனிற்கு வெகு விரைவிலே பலன் கிடைத்தது.

அவளை பற்றிய தகவல்கள் அனைத்தும் அவனது மேசையின் மீது வீற்றிருந்தன.

ஆனால் அவனிடம் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் முகழ்மதி சார்ந்தது அல்ல.

அவளின் சகோதரி சந்திரமதியை பற்றியது.

முகிழ்மதி என்ற ஒரு பெண் அந்த வீட்டில் இருக்கிறாள் என்பது,பலருக்கும் தெரியாது.

சந்திரமதியின் விபரம் மட்டுமே அவனின் கைக்கு கிடைத்திருந்தது.

அதனால் தான் கோவிலில் சந்தித்த பெண் சந்திரமதி என்றே எண்ணினான் ஆடவன்.

சந்திரமதியின் புகைப்படத்தில் தொடங்கி,அவளின் தற்போதைய நிலவரம் வரை அனைத்தும் நிழற்படங்களாக சிதறிகிடந்தன.

அதற்கெல்லாம் மேலாக,அவன் யாரை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு சுற்றி திரிந்தனோ அதே சிவராமனின் புதல்வி அவள் என்றும் தெரிய வந்தது.

உடனே அவனின் இரத்தம் கொதிக்க,அவனின் விழிகள் இரண்டும் வன்மத்தில் சிவந்து விட்டது.

அதிலும்,தினந்தோறும் அவனின் உள்ளத்தில் வைத்து பூஜித்த பெண்ணின் விம்பம் உடைந்து நொறுங்கிப்போனதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவள் வேறொருவனை முத்தமிடுவது போன்ற காட்சியை கண்டவனின் இதயத்தில் எரிமலை வெடிக்க,தேகம் இறுகிப்போனது.

அவளின் நிஜ சுயரூபத்தை அறிந்த ரத்தினவேலோ தீச்சுட்டாற் போன்று சலங்கையை கையிலிருந்து தூக்கியெறிந்தான்.

துளசி என புனிதமாக நினைத்தவள்,கள்ளி செடியாக மாறிப்போனதை அவனால் ஏற்க முடியவில்லை.

அவனிற்குள் ஏமாற்றம்,கோபம்,ஆத்திரம் என அனைத்தும் விஸ்வரூபம் எடுத்து அவனின் ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்தன.

அடுத்த கணமே,அவளின் மீதான நேசம் மறைந்து அவ்விடத்தை காழ்ப்புணர்வு கையகப்படுத்திட,சிவராமனை பழிதீர்ப்பதற்கு அவளை பகடைக்காயாக மாற்ற எண்ணினான்.

சிவராமன் இவர்களை போல் பெரிய அந்தஸ்து உள்ளவர் இல்லை என்றாலும்,கோடிகளில் புரள கூடிய செல்வந்தர் தான்.

பல வருடங்களாக இவர்களது கட்சியில் இருந்து சேவை செய்தவர்,திடீரென்று பதவிக்கு ஆசைப்பட்டு வேறொரு கட்சிக்கு தாவியிருந்தார்.

அவர் கட்சி விட்டு கட்சி தாவியதில் பெரிதாக இவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை.

ஆனால் பகையாளரின் கட்சிக்கு மாறிய சிவராமன் இந்த கட்சியில் இருந்த அமைச்சர்கள் செய்த குற்றங்கள் மற்றும் பூபதி குடும்பம் பற்றிய ரகசியங்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் அங்கு ஒப்பித்திருக்கிறார்.

அதனால் அவனது தந்தை விஜயேந்திர பூபதியின் முதல்வர் பதவிக்கு மட்டுமின்றி,அவர்களின் கட்சிக்கே பெரும் அபாயம் வரவிருப்பதால்,அவரின் மீது கொலைவெறியில் இருந்தான் ரத்தினவேல்.

இப்போதைய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரின் மகளை தனக்கு சொந்தமாக்கி கொண்டால்,அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என திட்டம் தீட்டினான்.

அதனால் விஜயலட்சுமி பணத்தாசை பிடித்த நபர் என்று தெரிந்ததும்,தனது பாட்டியை வைத்து காயை நகர்த்தியிருந்தான்.

ஆனால் அவரிடம் இந்த பழிவெறியை பற்றி வெளிப்படுத்தாமல் “பாட்டி எனக்கு இந்த பொண்ணு பிடிச்சிருக்கு…கல்யாணம் பண்ணால் நான் இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவேன்…பேசி முடிச்சிடுங்க” என்றவாறு சந்திரமதியின் புகைப்படத்தை உணவு மேசையில் போட்டுவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டான்.

அவர்களது மொத்த குடும்பமும் இதற்காக தானே காத்திருந்தார்கள்.

அதனால் அவனிற்கு திருமணம் செய்து வைத்தால் போதும் என்ற பரபரப்போடு வேகமாக விஜயலட்சுமியிடம் புரோக்கர் மூலம் பேசினார்கள்.

போதுமென்று சொல்லும் அளவு சொத்து கையில் இருந்தாலும்,ஆசை யாரை விட்டது?

புரோக்கர் இந்த சம்மந்தத்தை பற்றி கூறியவுடன் விஜயலட்சுமி வேகமாக ‘சரி’ என்று கூறிவிட்டார்.

பெரிய கோடீஸ்வரர் வீட்டு சம்மந்தம்…அதிலும்,தங்களை விட நூறு மடங்கு சொத்து உள்ளவர்கள்.கூடவே,தமிழக முதல்வரின் மகன் என்றதும் பேராசை அவரின் கண்ணை மறைத்தது.

விஷயம் கேள்வியுற்று சிவராமன் குதித்தாலும் விஜயலட்சுமி பதிவிசாக பேசி அவரையும் மூளை சலவை செய்துவிட்டார்.

“ஏங்க…கடைசி வரைக்கும் ஒரு கட்சியிலே உறுப்பினரா இருந்து சாகறதுக்கு முதலமைச்சரோட சம்மந்தினு ஊருக்குள்ள சொன்னால் எவ்வளவு பந்தாவா இருக்கும்…எல்லா கவர்மெண்ட் கான்ட்ரெக்ட்டும் நமக்கு தான் கிடைக்கும்…கடைசி வரைக்கும் நாம்ப ஜம்முனு வாழலாம்…கொஞ்சம் நல்லா யோசிங்க” என நயவஞ்சகமாக பேசி அவரை சம்மதிக்க வைத்திருந்தார்.

விஜயலட்சுமியின் பேராசையால் வேடவன் விரித்த வலையில் கயல் ஒன்று சிக்கிக்கொண்டது.

அதன்படி,சிவராமன் வீட்டிற்கு சந்திரமதியை பெண் கேட்டு பூபதி குடும்பத்தினர் அனைவரும் வந்திறங்கினர்கள்.

ரத்தினவேலும் தன் இறையை வேட்டையாடும் வெறியோடு இதழ் வளைவு புன்னகையுடன் வீட்டு வாசலில் நின்றிருந்தான்.

அதேசமயம் “எனக்கு இந்த கல்யாணம் வேணாம்” என ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டிருந்தாள் சந்திரமதி.
 

முகிழ்மதி 5

 


 

 

இன்று தன் தமக்கையை பெண் பார்க்க வருகிறார்கள் என்று முகிழ்மதிக்கு தெரியும்.

ஆனால் அவளது வாழ்வில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் தனது சலங்கை தொலைந்த கவலையிலே உழன்றுக்கொண்டிருந்தாள் முகிழ்மதி.

அதனால் தன் மனதை திசைத்திருப்பும் நோக்கத்தோடு படுக்கையில் அமர்ந்து எழுத்தாளர் பிரியங்கா முத்துகுமார் அவர்கள் எழுதிய ‘கிள்ளை மொழி கவிதையிவள்’ என்னும் நாவலை வாசித்துக்கொண்டிருந்தாள்.(சும்மா விளம்பரம்…யாரும் அடிக்க வராதீங்க மக்களே😜)

புத்தகத்தை கீழே இறக்க முடியாத அளவு சுவாரசியமாக கடந்த கதையினை வாசித்த பெண்ணவள்,அந்த நாவலினுள் மூழ்கிப்போனாள்.

சில மணி நேரங்கள் கழித்தும் அவளின் ஆர்வம் சிறிதும் குறையவில்லை.

ஆனால் திடீரென்று பக்கத்து அறையிலிருந்து கேட்ட சத்தத்தில் தன் கவனம் களைந்தாள் முகிழ்மதி.

படுக்கையில் சயனித்திருந்த முகிழ்மதி நாவலை கீழே வைத்துவிட்டு பக்கத்து அறைக்கு சென்றாள்.

அவளின் நெஞ்சத்தில் ஒரு படபடப்பு உண்டாகின.

மெதுவாக,அவள் அறையினுள்ளே எட்டி பார்த்தாள்.

அங்கே அவளின் தாய் விஜயலட்சுமி மற்றும் சந்திரமதி இருவருக்கும் இடையே சூடான விவாதங்கள் சென்றுக்கொண்டிருந்தன.

“மம்மி நான் இப்போ தான் காலேஜே சேர்ந்திருக்கேன்…எனக்கு அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்?” என்று அவள் கடுப்புடன் கேட்க,

அவளின் கேள்வி அவருக்குள் சுறுசுறுவென சினத்தை உண்டாக்கினாலும்,பெரிய மகளிடம் அதை காட்ட விரும்பாமல் “கண்ணு சொன்ன பேச்சை கேளு…மம்மி உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவேன்” என அவளின் கூந்தலை வருடியப்படி கூறினார்.

“மம்மி பிளீஸ்…எனக்கு இன்னும் மூணு வருஷம் படிப்பு இருக்கு…படிச்சு முடிச்சிட்டு கூட நீங்க சொல்லற ஆளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்…இப்போ இது வேணாம் பிளீஸ்” என கெஞ்சலாக சொல்லிப் பார்த்தாள்.

ஆனால் மகளின் கெஞ்சலுக்கும் சிறிதும் அசரவில்லை அவர்.

“ப்ச் என்ன மதி விளையாடறீயா நீ?இது எவ்வளவு பெரிய சம்மந்தம் தெரியுமா?இது மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையறது எல்லாம் கோடியிலே ஒருத்தருக்கு தான் அமையும்…நீ என்னடானா நல்ல வாய்ப்பை தட்டி விட பார்க்கறே” என எரிச்சல் மிகுந்த குரலில் கூறினார்.

அவளிற்கோ இயலாமையில் கண்ணீரே வந்துவிட்டது.

“மம்மி…” என தொடங்கும் போதே அவளின் பேச்சை கத்தரித்தவர் “தேவையில்லாமல் எதுவும் பேசாமல் சீக்கிரம் ரெடியாகு…அவங்க பத்து மணிக்கு வந்திடுவாங்க” என அவர் தன் மகளின் கன்னத்தை தட்டுக்கொடுத்து முடிவாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

செல்லும் முன் முகிழ்மதியை பார்த்தவர் “இங்க என்னடி மசமசனு நிக்கறே…சீக்கிரம் போய் உன் அக்காவை ரெடி பண்ணு” என அவளை அதட்டி விட்டு வெளியேறினார்.

அந்த வீட்டில் விஜயலட்சுமி வைத்தது தான் சட்டம்!

அவரின் சொற்களை சிவராமனால் கூட மீற முடியாது.

அவ்வாறு இருக்கையில் சந்திரமதியால் என்ன செய்திடக் கூடும்?

தமக்கையை நினைத்து அவளிற்கு பாவமாக இருந்தது.

ஆனால் தாயிடம் அவளிற்காக பேச முயன்றால் அவரின் சீற்றம் அனைத்தும் இவளின் புறம் திரும்பிவிடும்.

சந்திரமதி என்பதால் அவளிடம் மிகவும் தன்மையாக எடுத்துக்கூறியிருந்தார்.

இதுவே அவளிடத்தில் முகிழ்மதி இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அவளின் கன்னம் வீங்கி சிவந்திருக்கும்.

இருந்தும் சகோதரியின் மீது உண்டான பரிதாபத்தால் “அக்கா…” என தவிப்பாக அவள் இழுக்கும் போதே,

உச்சக்கட்ட ஆத்திரத்தோடு “ஏய் இருக்கிற டென்ஷனிலே நீ ஏதாவது வாயை திறந்தே சாவடிச்சிடுவேன்…போடி” என அவளிடம் எரிந்து விழுந்தாள்.

உடனே அவளின் முகம் தொங்கிவிட,இயலாமையுடன் அறையிலிருந்து வெளியேறினாள் முகிழ்மதி.

சந்திரமதிக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை.

ஆனால் தாயின் சொல்லை மீறி நடக்க முடியாமல் தவித்தாள் அவள்.

ஆதலால்,வேறுவழியின்றி ஆகாய நீல நிற லெஹன்கா உடையை உடுத்தி பெண் பார்க்கும் படலத்திற்கு தயாராகினாள்.

பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ அணிந்திருந்த உடையை கழற்றி வீசிவிட்டு வேறு ஆடை உடுத்திக்கொண்டாள்.

வீட்டின் கடிகாரத்தில் மணி பத்தை காட்டிய நிலையில் ரத்தினவேலின் குடும்பம் அனைத்தும் சிவராமனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

விஜயேந்திர பூபதிக்கு ஒரு துரோகியின் வீட்டிற்கு வர சிறிதும் விருப்பமில்லை.

ஆனால் மகனின் ஆசைக்கு தடை விதிக்க மனமற்று திருமணத்திற்கு சம்மதித்தார்.

அதுவே,சிவராமனிற்கோ அவர்களை நேரடியாக எதிர்க்கொள்ள சங்கடம்!

எனவே,இரு வீட்டின் தலைவர்கள் தவிர்த்து ஏனைய குடும்பத்து உறுப்பினர் அனைவரும் அங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

ரத்தினவேலிற்கு அவர்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே அருவருப்பாக இருந்தது.

ஆனாலும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம்!

அவனது வேடம் சிறிது களைந்தாலும் காஞ்சனா மாலா கண்டறிந்துவிடுவார்.

அதனால் கனக்கச்சிதமாக தனது நடிப்பை தொடர்ந்தான் ஆடவன்.

மகிழுந்திலிருந்து பழுப்பு நிற குளிர்க்கண்ணாடியுடன் கீழிறங்கிய ரத்தினவேலின் இதழ்கள் இரண்டும் இகழ்ச்சியாக வளைந்தன.

அவன் அந்த பங்களாவை வன்மத்துடன் பார்த்து நின்றிருக்க,அச்சமயம் அங்கு வந்த அவனது தாய் வானதி “கண்ணா வா” என அவனை அழைக்க,

அவனோ வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக உள்ளே நுழைந்தான்.

தன் அறையில் அமர்ந்திருந்த முகிழ்மதிக்கு வழக்கத்திற்கு மாறாக ஏனோ படபடப்பாக இருந்தது.

இனம்புரியாத ஓர் உணர்வு அவளிற்குள்!

‘ஏன் இந்த பதட்டம்?’ என அவள் சிந்திக்க முயன்றும் கிடைத்த விடை என்னவோ பூஜ்ஜியம் தான்!

இதற்கிடையில்,ரத்தினவேல் குடும்பத்தினர் மொத்தமும் வீட்டிற்குள் வந்து சேர்ந்திருந்தனர்.

அவர்கள் அனைவரையும் வாயெல்லாம் பல்லாக வரவேற்று அமர வைத்தார் விஜயலட்சுமி.

உயர்தர பட்டுப்புடவையில் கண்கள் கூசும் வகையிலான ஆபரணங்கள் அணிந்து பகட்டாக நின்றிருந்த விஜயலட்சுமியை பார்த்தவுடனே யாவருக்கும் பிடிக்கவில்லை.

“அடேய் அண்ணா…மாமி செம்ம அல்டாப்பா இருக்கும் போலே…பொண்ணும் இது மாதிரி தான் இருக்குமா?அப்படி இருந்தால் நம்ப பெரிய அண்ணனுக்கு செட்டாகுமா?” என ரத்தினவேலின் தங்கை தமயந்தி கவலையோடு ஜித்தேந்திரனின் காதில் கிசுகிசுத்தாள்.

“உஷ்…வாயை மூடு தமி…அண்ணா அதெல்லாம் பார்க்காமலா இந்த பொண்ணை செலக்ட் பண்ணியிருப்பாரு…அதெல்லாம் பொண்ணு கேலண்டர் மகாலட்சுமி மாதிரி ஜம்முனு இருக்கும்” என்றான் சட்டை காலரை தூக்கிவிட்டு.

“அடச்சீ வாயை மூடு…அண்ணாவுக்கு தானே பொண்ணு பார்க்க வந்திருக்கோம்…நீ எதுக்கு டிப்பு டப்பா ரெடியாகி வந்திருக்கே?” என அவள் சந்தேகமாக அவனை மேலிருந்து கீழாக பார்க்க,

‘என்ன நேக்கா மறைச்சாலும் பயப்புள்ள கண்டுப்பிடிச்சிடறாளே?’ என பெருமூச்சை வெளியேற்றியவன் “உனக்கு விஷயமே தெரியாதா?இந்த வீட்டுலே பொண்ணுக்கு தங்கச்சி ஒருத்தி இருக்காளாம்…அதான் அந்த பொண்ணும் அழகா இருந்தா கரெக்ட் பண்ணி கூட்டிட்டு போயிடலாம்னு நினைச்சேன்…எப்படி?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க,

சட்டென முகத்தை சுழித்த பெண்ணவள் “த்தூ” என அவனை பார்த்து துப்பினாள்.

அவனோ அதையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு “என்னயிருந்தாலும் அண்ணனை விட நான் கொஞ்சம் பர்சனலாட்டி ஜாஸ்தி தான்…இருந்தாலும் இன்னைக்கு கொஞ்சம் கம்மியா ரெடியாகி வந்திருக்கேன்” என அலட்டலாக அவன் காலரை தூக்கி விடப்படி சொல்ல,

அவளோ முகத்தை சுழித்து “டேய் ஜித்து…தயவு செஞ்சு உன் வாயை கொஞ்சம் மூடுடா…பால் விளம்பரத்திலே வர பசு மாடு மாதிரி ஈனு இளிச்சிட்டு இருக்கே..பார்க்கவே கேவலமா இருக்கு” என அவனை எரிச்சலாக அதட்ட,

இவர்களின் பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ரத்தினவேலின் பொறுமை காற்றில் பறந்தது.

சட்டென திரும்பி அவர்களை அவன் ஒரு பார்வை தான் பார்த்தான்.

அடுத்த கணமே இருவரும் கப்சிப் என்று அடங்கிவிட்டார்கள்.

ஜித்தேந்திரனோ “சாரி அண்ணா” என முணுமுணுத்து தலைக்குனிந்து கொண்டான்.

அவன் எப்போதும் தமையனிற்கு அடங்கிப்போகும் இலட்சுமணன்!

அவன் கிழித்த கோட்டை தாண்டவே மாட்டான்.

அவனின் வலது கை ஜித்தேந்திரன் என்றால்,அவனின் இடது கை ரத்தினவேலின் நண்பன் வீர்!

தற்போது தனது சகோதரனை அழுத்தமாக நோக்கிய ரத்தினவேல்,பின்பு தனது அலைப்பேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

அனைவரும் நீள்விரிக்கையில் வந்து அமர்ந்தபோது,முகிழ்மதிக்குள் ஏதோ ஒரு விசித்திரமான உணர்வு!

வெகு நாட்களாக பழகிய ஒரு உறவு அவளை தேடி வந்துவிட்டாற் போன்ற உவகை ஊற்று அவளுள் பொங்கி பெருகின.

அவளை தனிமை சிறையிலிருந்த காக்க வந்த பராமத்மா வந்துவிட்ட ஒரு ஆர்ப்பரிப்பு அவள் உள்ளத்திற்குள்!

அந்த வித்தியாசமான உணர்வின் தாக்கம் அவளை உந்தி தள்ள,வேகமாக அவள் தன்னறை சாளரத்தின் வழியே கீழே எட்டி பார்த்தாள்.

முகிழ்மதி ஆகாய நீல நிற அனார்கலியில் வெள்ளை கற்கள் பதித்த சுரிதார் ஒன்றை அணிந்திருந்தாள்.

ஆனால் அவளின் அடர்த்தியான கார்க்குழல் கட்டுக்குள் அடங்காமல் அவிழ்ந்து கிடந்தது.

திடீரென வீசிய தென்றல் காற்று அவளது கூந்தலை பறக்கச் செய்தது.

உடனே முகத்தை மறைத்த கூந்தலை ஒதுக்கிவிட்டு பார்த்தவளின் விழிகளில் ரத்தினவேலின் பின்புறம் மட்டுமே விழுந்தது.

‘யார் இது?’ என ஒரு வித ஏமாற்றத்துடனே சன்னலின் கம்பியை பற்றியவளின் நெஞ்சம் அடைத்தது.

ஒரு வித அமைதியின்மையும் பல உணர்வுகளின் கலவையும் அவளை தடுமாற செய்திட,சட்டென்று தனது படுக்கையிலிருந்து துப்பாட்டாவை எடுத்து அணிந்துக்கொண்டு கீழிறங்கி சென்றாள்.

அவள் படிக்கட்டுகளின் தாழ்வாரத்தின் அருகில் வந்து நின்றபோது,ஒரு ஆடவன் வெண்ணிற பட்டு சட்டை மற்றும் வேட்டியில் ஒரு வயதான மூதாட்டியுடன் உள்ளே நுழைவதைக் கண்டாள்.

உடனே அவளின் விழிகள் அவனை தலைமுதல் கால் வரை ஆராய தொடங்கின.

பரந்து விரிந்திருந்த தோள்கள்,உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடல்வாகு,இறுக்கமான தசைப்பிடிப்பு,கவர்ச்சிகரமான முகம் என ஆண்மையின் அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்த தலை மகனை அவளின் கண்கள் முழுமையாக ஆராய்ந்தது.

ஏனோ ஆடவனின் வசீகரம் அவளை சிறிதும் கவரவில்லை.

அதற்கு காரணம்,எந்தவொரு உணர்ச்சியும் இல்லாத அவனது முகம்!

அவனின் கண்கள் குளிர்க்கண்ணாடியால் மறைக்கப்பட்டிருக்க,அதேப்போல் அவனது அழுத்தமான உதடுகளோ சிரிப்பை தொலைத்திருந்தன.

அதுவே,பல ஆண்டுகளாக அவன் சிரிப்பதையே வெறுத்திருக்கிறான் என்பதை அவளால் கண்டறிய முடிந்தது.

அவன் சபையின் நடுவில் நின்று, எந்தப் புன்னகையும், உணர்ச்சியும் இல்லாமல், முகத்தில் எந்தப் பாவனையும் காட்டாமல் அமர்ந்திருப்பது அவளிற்கு எரிச்சலை கொடுத்தன.

விஜயலட்சுமி அவனை வரவேற்றதற்கு,அவனிடமிருந்து சிறு தலையசைப்பு கூட வராததையும் அவள் ஊன்றி கவனித்தாள்.

‘பெரியவங்களுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லமாட்டிக்கிறான்?இவனெல்லாம் என்ன மனுஷனோ மான்ஸ்டர்’ என வெறுப்போடு முகத்தை சுழித்தவளின் மனக்கண்ணில் பல வகையான விம்பங்கள் தோன்றி மறைந்தன.

திடீரென்று அவளிற்கு தலை வேறு வலிக்க தொடங்க,அவள் படிக்கட்டின் கைப்பிடியை இறுக்கமாக பற்றிக்கொண்டு விழி மூடினாள்.

மூடிய இமைகளுக்குள் மங்கலான முகம் ஒன்று தோன்றி மறைந்திட,அந்த உருவத்தின் கரம் உதிரத்தால் நனைந்திருந்தன.

அடுத்த வினாடியே அவளின் இதயத்துடிப்பு அதிகரிக்க,அவளது சுவாசம் சீரற்றதாக மாறியது.

அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க முடியாமல் தடுமாறியவள்,வேகமாக தன்னறையை நோக்கி ஓடினாள்.

தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவள்,சுவாச உள்ளிழுப்பானை தன் இதழ்களுக்கு இடையே வைத்து அதிலிருந்து காற்றை வேகமாக உள்ளிழுத்தாள்.

அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தவள்,ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

அந்த அறையின் சுவற்றை வெறித்த நேரத்தில் அதே மங்கலான முகங்கள்…உதிர கறை படிந்த கரங்கள் என மீண்டும் மீண்டும் அவளின் நினைவலையில் அதுவே வந்து செல்ல,

திடீரென்று யாரோ கதவு தட்டும் சத்தம் செவியில் விழ,உடனே அவளின் கற்பனைகள் மறைந்து,அவளை நிகழ்காலத்திற்கு வெளிக்கொணர்ந்தது.

அடுத்த கணமே,ஒரு பெருமூச்சுடன் எழுந்த பெண்ணவள் கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரி பார்த்துவிட்டு,கதவை திறந்தாள்.

வெளியில் அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி பட்டம்மாள் நின்றிருந்தார்.

அவரை கண்டவுடன் அவளின் புன்னகை விரிய “என்ன வேணும் பட்டம்மா?” என வினவினாள்.

அவரும் பதிலுக்கு புன்னகைத்து “மேடம் உன்னை கீழே கூப்பிடறாங்க பாப்பா…வர்றீயா?” என வாஞ்சையாக அழைப்பு விடுக்க,

“இதோ வர்றேன் பட்டம்மா” என்றவள்,தனது முகத்தை மறைத்த கூந்தலை அள்ளி குதிரைவாலாக இறுக்கி போட்டுக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் கீழே வந்தாள்.

அவளின் முகத்தில் வெள்ளை கற்கள் பதித்த பொட்டு தவிர,வேறு எந்த வித ஒப்பனையும் இல்லை.

வெகு சாதாரணமாக இருந்தவளின் பளிங்கு முகம் அவளின் உணர்வுகளை எடுத்து காட்டுவதாய் இருந்தது.

அவள் படிக்கட்டுகளில் இறங்கியபோது,சந்திரமதி முன்பே அங்கு நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அவள் வழக்கம் போல கருப்பு நிற அகன்ற கால் ஜீன்ஸ்,ஆழமான கழுத்துடைய நீல நிற கிராப் டாப் அணிந்து,தலைமுடியை விரித்துப் போட்டு,அதீத ஒப்பனையுடன் இருந்தாள்.

அவளை பார்த்த முகிழ்மதியின் விழிகள் இரண்டும் திகைப்பில் விரிந்தன.

‘ஐய்யையோ அக்கா என்ன இதைப்போட்டிருக்கா?முன்னாடி லெஹன்கா தானே போட்டிருந்தா?’ என அதிர்ச்சியுடன் விழி விரித்தப்படி தனது தாயை ஏறிட,

அவரின் முகமோ கடுகு போட்டால் வெடிக்கும் அளவு சிடுசிடுப்புடன் இருந்தது.

அதில் தனது உமிழ்நீரை கூட்டி விழுங்கிக் கொண்டாள் அவள்.

ஏனெனில்,தமக்கை தவறு செய்தாலும் அவளிற்கு தான் அடி விழும் என்பதை அவள் நன்கு அறிவாள்.

அதனால் ஒரு வித பீதியோடு சபையில் வந்து நின்றவளை ரத்தினவேலின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாக நோக்கியது.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top