முகிழ்மதி 51,52

முகிழ்மதி 51:

அன்று வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரமதியை பற்றி கேள்வியுற்று ‘எங்க போனாள் இந்த பொண்ணு?’ என மனையாளின் சகோதரியை தேடும் வேட்டையில் தீவிரமாக இறங்கியிருந்தான் ரத்தினவேல்.

ஆனால் எங்கு தேடினும் அவளை பற்றிய சிறு தகவலை கூட அவனால் திரட்ட முடியவில்லை.

மாயமானவளை எப்படியோ போகட்டும் என்று அலட்சியமாக விட முடியாமல் அவனின் மனையாள் தடுத்தாள்.

அவளிற்காக…அவளுடைய மன அமைதிக்காக அவன் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கவில்லை.

விடயம் கேள்வியுற்ற வீரின் நெஞ்சத்தில் நீங்காத ஒரு வலி!

அவன் தான் இளகிய மனம் உள்ளவனாயிற்றே?

அன்றே மனம் உடைந்த பெண்ணை காக்காமல் விட்ட குற்றவுணர்வு அவனை கொன்று தின்றன.

அவனால் சந்திரமதியின் மறைவை எளிதாக கடக்க முடியவில்லை.

ஏனெனில்,முகிழ்மதி அவனிற்கு தங்கை என்றால் அதே வயதுள்ள அவளும் அவனிற்கு சகோதரி போன்றவள் தான்.

அதனால் அவனுமே அன்று செய்த தவறை திருத்திக் கொள்ளும் மார்க்கமாக அவளை கண்டுப்பிடித்தாக வேண்டும் என்ற தீரத்தில் சுற்றி திரிந்தான்.

சந்திரமதியின் விடயம் ரத்தினவேல் வீர் என்ற இரு ஆண்களை தவிர வேறு யாவரின் செவிகளையும் எட்டாமல் பார்த்துக்கொண்டனர் ஆண்கள்.

குறிப்பாக,முகிழ்மதிக்கு தெரியவே கூடாது என்று விரும்பினார்கள்.

இந்நிலையில் ஜித்தேந்திரன் மற்றும் ரோகிணி இருவருக்கும் திருமண பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டிருந்தது.

தேர்தல் முடிவு பெற்ற பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என பெரியவர்களால் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் திருமணம் செய்துக்கொள்ள போகும் மணமகனிற்கோ எதிலும் நாட்டமில்லை.

திருமணத்திற்கு உண்டான கலகலப்பு அவனிடம் சற்று குறைந்தே இருந்தன.

அதற்காக ரோகிணியை முற்றிலுமாக பிடிக்கவில்லையா என்று கேட்டால்,

ம்ஹும்…அதுவுமில்லை.

ஏனோ ஒரு நெருடல் அவனிடம்!

ஆனால் யாவரும் அவனின் மனநிலையை கணிக்கக்கூடிய நிலையில் இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில் மும்முரமாகியிருந்தனர்.

தாயும் தந்தையும் திருமணத்தில்…தங்கை வீரின் காதலை அடைவதில்…பாட்டியோ ஆங்கில நாவலில்…முகிழ்மதி தன் பன்னிரெண்டாவது தேர்வில்…ரத்தினவேல் தேர்தலில் என்று அவரவர் வேலையில் தீவிரமாக இருந்தனர்.

ஜித்தேந்திரனினுள் முகிழ்ந்த சஞ்சலத்தை பற்றிய கவலை யாருக்கும் இருக்கவில்லை.

நாட்கள் செல்ல செல்ல ‘இந்த திருமணம் அவசியம் தானா?’ என்ற குழப்பமே அவனிற்கு வந்துவிட்டிருந்தது.

அவற்றிற்கு எல்லாம் அடிப்படை ரோகிணியின் குணம் தான்!

அவளின் அகந்தையும் சுயநலமும் அவனிற்கு எரிச்சலை கொடுத்தன.

அவனிற்கு சுயநலமாக வாழும் மனிதர்களை கண்டாலே பிடிக்காது.

சந்திரமதியின் மீது அதிக வெறுப்பை காட்டியதற்கு கூட அவளின் அந்த குணம் தானே காரணம்!

இந்நிலையில் அவனிற்கு மனைவியாக வரக்கூடிய பெண் தன் போலவே அனைவருடனும் சகஜமாக பேசி பழக வேண்டும் என்று விரும்பினான்.

தன்னை போலவே தனது குடும்பத்தினரையும் நேசிக்க வேண்டும் என்ற அவா கொண்டிருக்கும் சராசரி ஆண்மகன் தான் ஜித்தேந்திரன்!

ஆனால் அவனின் ஆசையை ஒரு சதவீகிதம் கூட பூர்த்தி செய்யக்கூடியவளாக ரோகிணி இல்லை என்பதில் அவனிற்கு ஏக வருத்தம்!!

அவளின் மீதிருந்த அந்த சிறு ஈடுபாட்டையும் துடைத்தெறியும் விதமாக இருந்தது அவளின் ஒவ்வொரு செயலும்!

ஏனெனில்,இரு குடும்பங்களும் ஒன்றாக சந்தித்த வேளையில் மணமகளான ரோகிணியும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்.

முதல் முறையாக வீட்டிற்கு வருபவள் பாரம்பரிய உடையில் வரவில்லை என்றாலும்,குறைந்தப்பட்சமாக நாகரீகமாக உடுத்தி வந்திருக்கலாம்.

ஆனால் அவளோ நெஞ்சு குழி தெரியும் வகையில் இறுக்கமாக இருக்கும் வெண்ணிற மேல் சட்டையும் பல வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட முட்டிக்கு மேல் வரையிலான குட்டை பாவாடையும் அணிந்து வந்திருந்தாள்.

கிட்டத்தட்ட அவளின் உடல் அங்கங்கள் அனைத்தும் பளீச்சிட்டு காட்டும் வகையில் இருந்தன.

அவளின் உடையை கண்டு வீட்டின் மூத்த பெண்கள் முகத்தை சுழித்தனர்.

அவர்களது வீட்டிலும் பெரிதாக உடைகளுக்கு கட்டுப்பாடு இருந்ததில்லை.

அதேசமயம் இந்த அதீதமான நாகரீகம் அவர்களிற்கு ஒரு ஒவ்வாமையை கொடுத்தன.

ஜித்தேந்திரனும் பெண்களின் சுதந்திரத்தில் தலையிடும் ஆணாதிக்க மனோபவம் கொண்டவனல்ல.

ஆயினும்,இடம், பொருள்,ஏவல் என்று ஒன்று இருப்பதை நன்கு அறிந்தவன்.

இடத்திற்கு ஏற்ப அவள் நடந்துக்கொள்ளாதது அவனிற்குள் முதல் அதிருப்தியை கொடுத்தன.

விஜயேந்திரனிற்கும் அதே எண்ணம் தான்!

தமயந்தியோ பெண்ணியம் என்பது ஆடை சுதந்திரத்தில்லை,தன்னுள் அடங்கியிருக்கிறது என்று எண்ணும் ரகம் அவள்!

அவளிற்கு ஏனோ முதல் பார்வையிலே அவளை பிடிக்கவில்லை.

உள்ளுக்குள் பெரும் ஏமாற்றம் உண்டாகினும் அந்த ஒட்டுமொத்த குடும்பமும் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

ரத்தினவேல் தவிர வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு தான் ஒன்றாக கூடியிருந்தனர்.

முகிழ்மதி மட்டும் சமையலறையில் இருந்தாள்.

வந்திருந்த விருந்தினர்களுக்கான ஏற்பாட்டை செய்யும் படி பொறுப்பை அவளிடம் ஒப்படைத்திருந்தார் வானதி.

அனைத்தையும் சரியாக செய்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவளின் மேல் அவருக்கு வந்திருந்தது.

கிட்டத்தட்ட மாமியாருக்கு பிடித்த மருமகளாய் அவள் மாறியிருந்தாள்.

அதில்,அவளிற்கும் அலாதி இன்பம்!

பீடை,சனியன் என பல விதமான அவப்பெயரோட கூட்டிற்குள் ஒதுக்கிவைக்கப்பட்ட சிறைப்பறவைக்கு இங்கு வந்த பிறகு தான் சிறகு முளைத்திருந்தது.

ஏனெனில்,இங்கிருந்த அனைவரும் அவளிடம் முகம் திருப்பாமல் அன்பாக பழகும் விதம் அவளை கவர்ந்தது.

அதிலும்,புதிதாக வந்த மருமகள் என்று பாசத்தை கொட்டி அவளை அசௌகரியாய் உணர விடாமல்,அவரின் பிள்ளைகளை போல் கண்டிக்கும் நேரத்தில் கண்டித்து,அதே சமயம் அன்பையும் காட்டி அவளை இயல்பாக ஏற்றவரை அவளிற்கு அதிகம் பிடித்தது.

அவருடன் இருக்கும் சமயங்களில் எல்லாம் தனக்கு அன்னையாக அவரை உணர்ந்தாள் அவள்.

அதுவே பல வருடங்களாய் அன்னையின் பாசத்தை சுகித்தறியாத பாவைக்கு பெரும் பாக்கியமாக இருந்தது.

அதனால் அவரை அவள் “அத்தம்மா” என்றே அழைக்க பழகியிருந்தாள்.

அவளின் அந்த உணர்வுப்பூர்வமான அழைப்பில் அவருக்குள்ளும் ஒரு நெகிழ்ச்சி!

அவரும் மருமகளின் மனம் அறிந்த மாமியாராய்(அன்னையாய்) அவளை வழிநடத்தினார்.

பாவையவளும் தன் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர ஆரம்பித்திருந்தாள்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்ததும் தமயந்தியும் ஜித்தேந்திரனும் ஒரு இருக்கையில் சென்று அருகருகே அமர்ந்து கொண்டனர்.

ரோகிணி நினைத்திருந்தால் காலியாக இருந்த ஏதேனும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கலாம்.

ஆனால் அவளோ ஜித்தேந்திரனிற்கு அருகே அமர்ந்திருந்த தமயந்தியிடம் வந்தவள் “நீ கொஞ்சம் தப்பா நினைக்கலைனா வேற இடத்திலே போய் உட்கார்ந்துக்கறீயா தமயந்தி?” என கோரிக்கை போல் கேட்டாள் சிரித்துக்கொண்டே…

அவள் கேட்டது வேண்டுமானால் தன்மையாக இருந்திருக்கலாம்.

ஆனால் அவளின் தோரணை தமயந்திக்கு ஆணைப்பிறப்பித்தது.

ஜித்தேந்திரனிடம் அவளின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அகங்காரம் அதில் தெரிந்தன.

அவளின் செயலில் தமயந்திக்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

ஜித்தேந்திரனும் தமயந்தியும் அண்ணன் தங்கையாக இருந்தாலும்,அவர்கள் இருவரும் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் போல் எப்போதும் ஒன்றாக சுற்றி திரிவார்கள்.

ஆனால் இன்றோ அவள் தன்னை அதிகாரம் செய்து தமையனிடமிருந்து ஒதுக்குவதை கண்டு ஆத்திரமும் கலக்கமும் இணைந்தே தோன்றின தமியின் மனதில்!

அவளின் பேச்சு அவளை பெற்றவர்களுக்கே சங்கடத்தை கொடுத்தன.

ஜித்தேந்திரனிற்கு சொல்லவே தேவையில்லை.

அங்கிருந்த அனைவருக்கும் அப்படியே முகம் மாறிவிட்டது.

ஆயினும்,தமயந்தி எதுவும் பேசாமல் “அம்மா நான் போய் அண்ணிக்கு ஹெல்ப் பண்றேன்” என வலுக்கட்டாயமாக சிரித்தப்படி அங்கிருந்து விறுவிறுவென சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளின் நடையில் அவளின் கோபம் அப்பட்டமாக தெரிந்தன‌.

தனக்குள் எரிமலையென சினம் குமிந்திருந்தாலும் சபை நாகரீகம் கருதி நடந்துக் கொண்டாள் அவள்.

ஆனால் ரோகிணியோ மற்றவரின் எண்ணத்தை பற்றி கிஞ்சித்தும் மதிக்கவில்லை.

தனக்கு உரித்தானவனின் அருகே திமிராக அமர்ந்து அவனை நோக்கி புன்னகைத்தவள் “ஹாய் ஜித்” என்றாள்.

அவனும் வேண்டாவெறுப்பாக நெற்றியை நீவி “ஹும்” என முணுமுணுத்தான்.

‘என்ன இவ இப்படி நடந்துக்கிறாள்?’ என அவனிற்கு கடுப்பாக வந்தது.

இது அவனிற்கு இரண்டாவது அதிருப்தி!

அவன் தன்னை கண்டு புன்னகைக்கவில்லை என்றவுடன் அவளின் முகம் அப்படியே மாறிப்போனது‌.

அதிலும்,அவனின் விழிகள் தங்கை சென்ற திசையை மட்டுமே பார்த்திருப்பதை கண்டவளிற்கு எரிச்சலாக வந்தது.

இருப்பினும்,அவனை திருமணம் செய்துக் கொள்ளும் வரை அமைதியாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்து நிதானித்தாள்.

இந்நிலையில் குமுறிய நெஞ்சத்துடன் உள்ளே வந்த தமயந்தியோ ‘பெரிய இவ இவ…என்னையே எழுந்துப் போக சொல்லறாள்…என்ன நினைச்சிட்டு இருக்காள்?பிசாசு’ என மனதிற்குள் பொருமிக்கொண்டாள்.

அவளின் முகம் வாடியிருப்பதை கவனித்து “தமி அண்ணி என்னாச்சு?ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கையில் கொட்டை வடிநீர் அடங்கிய தட்டுடன் அவள் விசாரிக்க,

தமயந்தியோ “அது அந்த பிசாசு…” என ஆரம்பித்தவள் வேலையாட்கள் சமையலறையில் இருப்பதை கண்டுவிட்டு “நத்திங் காஃபி எடுத்திட்டு போறீங்களா?நீங்க போங்க அண்ணி” என்று அங்கிருந்த திண்டில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

“நீங்க வரலையா?” என தயக்கத்துடன் அவள் கேட்க,

“நான் வரலை…எனக்கு ஒரு மாதிரி தலைவலிக்குது அண்ணி…” என நெற்றியை நீவிக்கொண்டவளின் கோபம் மட்டும் அடங்க மறுத்தது.

உடனே பதறிப்போன முகிழ்மதி “அண்ணி தலைவலிக்குதுன்னா போய் படுக்கலாமில்லை…நான் வேணா உங்களுக்கு தைலம் தேய்ச்சி விடட்டுமா?சுக்கு காஃபி ஏதாவது போட்டு தரட்டுமா அண்ணி?” என வேகமாக அவளருகே வந்துவிட்டவளின் முகத்தில் கவலையின் சாயல் மிகுந்திருந்தது.

தனக்கான அவளின் தவிப்பை கண்ட தமயந்தியின் கோபம் காற்றடித்த பஞ்சாய் விலகி ஓடிவிட,மனம் இலேசானது.

அவளின் கடுகடுத்த முகமும் மென்மையாகிவிட “பெருசா இல்லை அண்ணி…ஒரே ஒரு காஃபி குடிச்சா போதும்” என புன்னகை பூத்தவாறு கூறினாள்.

அடுத்த கணமே “அண்ணி இந்தாங்க காஃபி” என அவளிடம் ஒரு குவளையை எடுத்து நீட்டியிருந்தாள் முகிழ்மதி.

அதைப்பார்த்து இதழ்பிரித்து சத்தமாக சிரித்த தமயந்தி “ஐய்யோ அண்ணி அண்ணி…நீங்க ரொம்ப க்யூட்” என அவளின் கன்னம் பற்றி கொஞ்சியவள் “தேங்க்ஸ்” என குவளையை அவளிடமிருந்து பெற்றிருந்தாள்.

ஆனால் காரிகையோ அவள் தன் கன்னம் பற்றி கிள்ளியதில் வெட்கிப்போனவளாய் இமைத்தாழ்த்தி “நான் வர்றேன் அண்ணி” என அவசரமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

அதைக்கண்டு வாய்விட்டு சிரித்த தமயந்தியோ ‘அண்ணா ரொம்ப கஷ்டம்ண்ணா…எப்படி தான் இந்த அண்ணியை சமாளிக்கிறீயோ?’ என மானசீகமாக கேட்டுக்கொண்டே வடிநீரை உறிஞ்ச தொடங்கினாள்.

அதேசமயம் அவளின் சிந்தைக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

‘உங்களை மாதிரி அவளுக்கு ஏன் இந்த நல்ல மனசில்லை அண்ணி…அவளும் உங்களை மாதிரி இருந்தால் நல்லாயிருக்கும்’ என அவளின் மனம் இரு பெண்களின் குணத்தையும் ஒப்பிட்டு பார்த்து பெருமூச்சை வெளியேற்றின.

ஜித்தேந்திரன் மற்றும் ரோகிணி இருவருக்கும் வீட்டளவில் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அவர்களுக்கு நிச்சயத்தை பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று விருப்பம்!

அவற்றினை பற்றி பேசுவதற்காகவே அவர்கள் அங்கு வந்திருந்தனர்.

ரோகிணியின் தந்தை அசோக் செல்வன் அதைப்பற்றிய விபரம் தெரிவித்ததும் விஜயேந்திரன் “கண்டிப்பா அசோக் செல்வன்…அதெல்லாம் சிறப்பா பண்ணிடலாம்” என சிரித்துக்கொண்டே சொன்னார்.

மற்றவருக்கும் அதில் பெரிதாக எவ்வித ஆட்சேபணையும் இருக்கவில்லை.

ஆனால் ஜித்தேந்திரனிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை‌.

அவனின் முகம் பிடித்தமின்மையுடன் சுருங்கியதும் “என்னாச்சு ஜித்?” என அவனருகே அமர்ந்திருந்த ரோகிணி வினவினாள்.

பெரியவர்கள் இருக்கும் போது தன் அபிப்பிராயத்தை தெரிவிக்க அவன் தயங்கினான்.

“நத்திங்” என்றுவிட்டு அவன் மௌனமானான்.

ஆனால் அவனது மனதின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக “தம்பி சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க…பெரியவனுக்கே இப்போ தான் கல்யாணமாகியிருக்கு…அவனுக்கு இன்னும் எல்லாரையும் கூப்பிட்டு ரிசப்ஷன் கூட வைக்கலை…அப்படி இருக்கும் போது சின்னவனுக்கு பெரிசா விழா வைக்கிறது நல்லாயிருக்காது…உங்களோட ஆசையும் எங்களுக்கு புரியுது…ஒரே பொண்ணு வேறே…உங்களுக்கு வேணும்னா கல்யாணத்தை பிரம்மாண்டமா எந்த குறையும் இல்லாமல் பண்ணிடலாம்…ஆனால் இது வேணாம் தம்பி” என வீட்டிற்கு மூத்தவராக காஞ்சனா மாலா கூறியதை அனைவரும் ஆமோதித்தனர்.

ஜித்தேந்திரனிற்கும் அதே எண்ணம் தான்…

அதன் பொருட்டே அவன் தயங்க,இப்போது பாட்டியும் அதையே பேசவும் ‘லவ் யூ டான்…டான்னா சும்மா’ என அவருக்கு மானசீகமாக ஒரு முத்தத்தை அனுப்பியிருந்தான் அவன்.

அதையறிந்தாற் போன்று அவர் அவனை நோக்கி திரும்ப,அவனோ கையாலே அவருக்கு இதயம் செய்து அனுப்பினான்.

அவரும் ‘நான் பார்த்துக்கறேன்’ என கண்சிமிட்டி புன்னகைத்தார்.

அவனும் பதிலுக்கு யாரும் அறியாமல் ஒற்றை கண்சிமிட்டி புன்னகைத்தான்.

பாட்டிக்கும் பேரனுக்கு இடையே நடந்த சம்பாஷணையை கண்ட பெண்ணவளுக்குள் தீப்பற்றி எரிந்தது.

விஜயேந்திரனிற்கும் தாயின் பேச்சு ஏற்புடையதாகவே இருந்திட “ஆமாம் அசோக் செல்வன்…எங்க முறைப்படி கல்யாணத்தை கோவிலில் வைச்சிட்டு ரிசப்ஷனை எந்த குறையும் இல்லாமல் சிறப்பா பண்ணிடலாம்” என தாயின் பேச்சை ஆதரித்துப்பேசினார்.

ஆனால் அவளின் பெற்றோருக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சட்டென திரும்பி மகளை அவர்கள் ஏறிட்டனர்.

நினைத்தது போலவே அவளின் முகம் ஆத்திரத்தில் செக்க செவ்வேலென சிவந்திருந்தது.

அதைக்கண்டு அவர்களே ஒரு கணம் பயந்துவிட்டனர்.

ஏனெனில்,அந்த வீட்டில் அனைத்தும் அவளின் விருப்பம் தான்!

அந்த விருப்பத்தை தாண்டி அவர்கள் யாரும் எதுவும் செய்யமுடியாது.

அவள் இருக்குமிடத்தில் அவள் மட்டுமே அதிகாரம் செய்யக்கூடியவளாய் இருப்பாள்.

அவளின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய முடியாது…செய்யவும் கூடாது.

மீறி செய்தால் அவர்களுக்கு அவள் கொடுக்கும் தண்டனை வீபரிதமாக இருக்கும்.

அதற்கு அஞ்சியே அவர்கள் சிறு வயதிலிருந்து அவளின் ஆசைக்கு மாறாக நடந்துக்கொண்டதில்லை.

அதனால் மகள் ‘நில்’ என்றால் நிற்பார்கள். ‘உட்காரு’ என்றால் உட்காருவார்கள்.

தற்போதும் அவளின் விருப்பத்திற்காகவே இதை பற்றி பேசினார்கள்‌.

ஆனால் மகளின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தை கண்ட அசோக் செல்வன் எச்சிலை கூட்டி விழுங்கி “நீங்க சொல்லறது புரியுதுங்கம்மா…பெரிய பையன் கல்யாணத்திலே‌ நிறைய குளறுபடினு அரசல்புரசலா நியூஸ் வந்துச்சு…வேணும்னா ஒண்ணு பண்ணலாம்…முதல்ல பெரிய தம்பிக்கு வரவேற்பு வைச்சிட்டு அதுக்கு பிறகு ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயதார்த்தம் விழா வைக்கலாமே?” என மெதுவாக அவர் சொல்லிப்பார்க்க,

அவரை அழுத்தமாக நோக்கி “இல்லீங்க…அது சரிவராது…எங்க பையனோட சந்தோஷத்துக்கு மாறா நாங்க முடிவெடுக்க மாட்டோம்…அவன் ஒரு சில காரணத்துக்காக தான் தள்ளிப்போட்டிருக்கான்…இப்போ போய் இந்த விஷயத்துக்காக நாங்க கட்டாயப்படுத்த முடியாது” என ஸ்திரமாக மறுத்துவிட்டார் காஞ்சனா மாலா.

“இல்லை பெரியம்மா நாங்க என்ன சொல்ல வர்றோம்னா…சின்னவங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது…நாம்ப தான் அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்” என்றெல்லாம் அவளின் தாய் இடையே நயமாக பேசிப்பார்க்க,

காஞ்சனா மாலாவோ “முடியாது” என்றுவிட்டார் தயவுத்தாட்சண்யம் சிறிதுமின்றி…

அவர் ஒரு முடிவில் உறுதியாக நின்றால் அவரின் பிடிவாதத்தை எந்த விதத்திலும் தகர்க்க முடியாது.

அதனால் அவரை என்ன சொல்லியும் அசைக்க முடியாமல் சோர்ந்துப்போனார்கள் ரோகிணியின் பெற்றோர்கள்!

அவர்களுக்கோ ‘மகள் என்ன செய்வாளோ?’ என ஒவ்வொரு நொடியும் திகிலாக இருந்தது.

அவளின் மனம் வெஞ்சினத்தால் சூழ்ந்திருந்தாலும்,அவளின் முகம் மட்டும் சாதாரணமாக இருந்தது‌.

அச்சமயம் முகிழ்மதி அனைவருக்கும் கொட்டை வடிநீரை எடுத்து வந்து கொடுத்தாள்.

அவள் நடந்து வரும் போதே அவ்விடமெங்கும் எதிரொலித்த சலங்கையின் சத்தத்தை கேட்ட ரோகிணி முகத்தை சுழித்தாள்.

ஆதலால் ஜித்தேந்திரனிற்கு மட்டும் கேட்கும் குரலில் “ஜித் உங்க வீட்டு வேலைக்காரி ஏன் இவ்வளவு சத்தமா கொலுசு போட்டிருக்காள்…பிளடி கன்ட்ரி ப்ரூட்…எனக்கு ஒரே இரிட்டேட்டாகுது” என எரிச்சலுடன் முனக,

அவனிற்கு வந்ததே ஆத்திரம்!

அதுவரை அமைதியாக இருந்த ஜித்தேந்திரனின் கழுத்து நரம்புகள் எல்லாம் கோபத்தில் புடைத்துவிட்டன.

அவளின் புறமாக கோபத்தோடு திரும்பியவன் “ரோகிணி மைண்ட் யுவர் வோர்ட்ஸ்…அவங்க என் அண்ணி…” என பல்லிடுக்கில் அவன் சத்தமில்லாமல் உறும,

அவளோ சிறிதும் அச்சமின்றி “ஏதே அண்ணியா?” என இளக்காரமாக முகிழ்மதியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இவனிடம் திரும்பியவள் “ஐயம் சாரி…பட்டிக்காடு மாதிரி புடவை கட்டி ஜல்ஜல்னு மாட்டு கொலுசு போட்டிருக்கவும் நான் ஏதோ வேலைக்காரினு நினைச்சிட்டேன்” என அலட்சியமாக தோளை குலுக்கினாள்.

அவளின் தோரணை அவனிடம் மன்னிப்பு வேண்டுவது போல் இல்லை.

மீண்டும் முகிழ்மதியை அசிங்கப்படுத்துவது போல் அவனிற்கு தோன்றின.

அதனால் எழுந்த சினத்துடன் “ரோகிணி திஸ் இஸ் யுவர் லிமிட்…முன்னாடி என் தங்கச்சிய அவமானப்படுத்தினே‌…இப்போ என் அண்ணிய அசிங்கப்படுத்தறே?இதுக்கு மேலே நீ எதுவும் பேசக்கூடாது…இல்லை என்கேஜ்மெண்ட்டை கால் ஆஃப் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்” என உயிரை ஊடுருவும் குரலில் யாவருக்கும் கேட்காத வகையில் அவன் கடுமையாக எச்சரித்திருந்தான்.

அவளிற்கோ அக்கணமே ‘ச்சை போடா’ என அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு செல்ல தான் எண்ணினாள்.

ஆனால் அவனது ஆளுமையும் அழகும் அவளை கட்டியிழுத்திருந்தன.

அத்தோடு அவளிற்கு தன்னிடம் மயங்காத ஆடவனை அடக்கிக்காட்டும் வெறியும் இருக்க ‘ரோகிணி காம் டவுன்…கல்யாணம் முடிஞ்ச பிறகு இங்கயிருக்க எல்லா பார்ப்பர்ட்டியையும் தூசி தட்டி தூக்கியெறிஞ்சிடலாம்…அதுவரை அமைதியாக இரு’ என தனக்கு தானே அறிவுறுத்தி “சாரி” என்றாள் மெல்லியக்குரலில்.

சட்டென அவள் தனது பாவனையை மாற்றிக்கொண்டதை விசித்திரமாக நோக்கிய ஆடவன் எரிச்சலுடனே திரும்பிக்கொண்டான்‌.

‘ஆடுடா…ஆடு கல்யாணம் முடியற வரை தான் உன் ஆட்டம் அதுக்கு பிறகு என் ஆட்டம் தான்’ என குரூரமாக உள்ளுக்குள் எண்ணியவளின் முன்பு கொட்டை வடிநீர் தட்டு நீட்டப்பட்டது.

உடனே விழி உயர்த்தி முகிழ்மதியை அவள் பார்த்த பார்வையில் கோபம்,வெறுப்பு,வன்மம் என அனைத்தும் இருப்பதை கண்டு பாவையவள் நடுங்கிவிட்டாள்.

அவளிற்காக தானே அவன் அவளை திட்டினான்.அதனால் தோன்றிய ஆத்திரம் அவளின் முகத்தில் பிரதிபலித்தது.

ஆனால் மெல்லிய மனமுடையாளோ அச்சத்தில் எச்சிலை கூட்டி விழுங்கினாள்.

சட்டென அவளின் விழியில் விஜயலட்சுமியின் குரூர முகம் மின்னி மறைந்தன.

உடனே அவளிற்கு இதயத்தின் துடிப்பு அதிகரிக்க தொடங்கின.

அதனை இகழ்ச்சியாக நோக்கிய ரோகிணியோ அவளிற்கு சற்றும் பொருந்தாத மென்சிரிப்புடன் “தேங்க்ஸ்” என்றவாறு குவளையை எடுத்துக்கொண்டாள்.

முகிழ்மதிக்கோ அவளின் ஊடுருவும் பார்வை பயத்தில் முகம் வெளிற செய்திட,அவள் எதுவும் பேசாமல் ஜித்தேந்திரனிடம் கொட்டை வடிநீரை நீட்டினாள்.

அவளின் கையிலிருந்த தட்டு கிடுகிடுவென ஆடியதை கவனித்த ஜித்தேந்திரன் “அட அண்ணி ஏன் உங்க கை நடுங்குது…முதல்ல வாங்க…நீங்க உட்காருங்க…” என தட்டை தன் கையில் வாங்கிக்கொண்டு அவளை அருகே போட்டிருந்த நீள்விரிக்கையில் அமர வைத்தான்.

ரோகிணியின் பாவனையை அவளை தவிர வேறு யாரும் கவனித்திருக்கவில்லை.

ஏனோ அவளின் பார்வை உயிரை ஊடுருவி செல்வது போல் உடலில் நடுக்கத்தை கொடுத்தன.

அவளின் விழிகள் படபடப்பதை கண்டுவிட்டு “ஏதாவது பிரச்சனையா அண்ணி?அண்ணனை வர சொல்லட்டுமா?” என அவன் அவளருகே குனிந்து பேசியதை கண்ட ரோகிணியின் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடின.

முகிழ்மதியோ “ஒ..ண்ணுமில்லை…அவரை தொந்தரவு பண்ண வேணாம்…” என திக்கி திணறி மொழிந்தாள்.

அவளின் பார்வை தப்பி தவறிக்கூட ரோகிணியின் புறம் திரும்பவில்லை.

அப்படியொரு பீதியில் இருந்தாள் அவள்.

அடுத்த கணமே அவளிடம் “என்னாச்சுடாம்மா” என பெரியவர்கள் முதற்கொண்டு பதறிப்போய் அவளிடம் விசாரிப்பதை பார்த்த மற்றவளிற்கு எரிச்சலாக வந்தது.

‘இப்போ இவ என்ன செத்தாப்போயிட்டாள்…பெருசுங்க எதுக்கு இப்போ இப்படி பதறிப்போய் துக்கம் விசாரிக்குதுங்க’ என தனக்குள்ளே இளக்காரமாக எண்ணிக்கொண்டாள்.

ஜித்தேந்திரனிற்கு ஏனோ சந்தேகமெல்லாம் ரோகிணியின் புறம் திரும்பியது‌.

ஏனெனில்,உள்ளே வரும் நேரம் நன்றாக இருந்தவள்,ரோகிணியை கடந்து தன்னிடம் வரும் போது தான் நடுங்கினாள் என்பதை அவன் அவதானித்திருந்தான்.

அதனால் அவளை நோக்கி அவன் திரும்ப அவளோ அப்பாவி போல் முகத்தை வைத்து முகிழ்மதியை பார்த்திருந்தாள்.

ஆயினும்,அவனின் இமைகள் இலேசாக இடுங்கின.
முகிழ்மதி 52:


 

 

முகிழ்மதிக்கு ரோகிணியை நேரில் பார்த்ததிலிருந்து ஏனோ மனம் படபடவென அடித்துக்கொண்டது.

மனிதர்களை எப்போதும் அளவிட்டு பழகியிராத அவளிற்கே அவள் சரியில்லை என்று தோன்றின.

‘எனக்கு ஏன் அப்படி தோணுது?’ என தனக்குள்ளே கேட்டுக்கொண்டவளிற்கு தலைவலித்தது.

அவள் புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருப்பதை கவனித்த தமயந்தி “அண்ணி…அண்ணி…” என அவளின் தோள் பற்றி உலுக்கினாள்.

“ஹான்” என திகைப்பதிலிருந்து வெளி வந்தவள் அவளை பார்த்து விழிக்க,

அவளின் விழியில் இருக்கும் மருட்சியை கவனித்த தமயந்தி “என்னாச்சு அண்ணி?எனி திங்க் பிராப்ளம்?” என்று புருவம் சுருக்கி வினவினாள்.

“இல்லை அக்..” என ஆரம்பித்தவள் தன் தலையில் தட்டி “சாரி அண்ணி…சில நேரம் என்னையே அறியாமல் அப்படி வந்திடுது” என சங்கடமாக கூறினாள்‌.

அதில் மென்மையாக புன்னகைத்த தமயந்தி “இதிலே சங்கடப்பட என்னயிருக்கு அண்ணி?நீங்க எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்…நானெல்லாம் அண்ணா மாதிரி திட்டமாட்டேன்ப்பா…நான் குட் கேர்ளாக்கும்” என சுரிதாரின் காலரை தூக்கிவிட்டு கண்சிமிட்ட,

முகிழ்மதியோ “அப்போ உங்க அண்ணா பேட் பாய்னு சொல்ல வர்றீங்களா அண்ணி?” என அப்பாவியாக கேட்க,

“ஏதே நான் எப்போ அப்படி சொன்னேன்” என பாவமாக தமயந்தி விழித்தாள்.

மற்றவளோ ஒன்றும் புரியாமல் “இல்லை…நீங்க குட் கேர்ள்னா…திட்டற அவரு பேட் பாய்னு தானே அர்த்தம்…” என குழம்பிய முகத்துடன் வினவ,

அதைப்பார்த்து திகைப்பில் விழி விரித்த தமயந்தி “அட அண்ணி…நீங்க பார்க்க தான் அப்பாவி மாதிரி இருக்கீங்க…ஆனால் செம்ம ஷார்ப்பு…அந்த ஷார்ப்பை வைச்சு என் வாழ்க்கையிலே விளையாடாதீங்க தெய்வமே…உங்களுக்கு புண்ணியமா போகட்டும்…” என காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.

முகிழ்மதியோ “நான் எப்போ விளையாண்டேன் அண்ணி?படிச்சிட்டு தானே இருக்கேன் நானு” என ஒன்றும் புரியாத பாவனையுடன் புத்தகத்தை எடுத்து காட்ட,

“அது சரி…” என சலிப்பாக புத்தகத்தை வாங்கி மேசையில் வைத்த தமயந்தி “நான் தான் அண்ணி விளையாண்டேன்…நான் தான் விளையாண்டேன்…நீங்க ஒண்ணும் பண்ணலை…இப்போதைக்கு படிங்க” என நெஞ்சில் அடித்துக்கொண்டு அவளின் புத்தகத்தை காட்டி சொல்ல,

முகிழ்மதியோ பரிதாபமாக விழித்துக்கொண்டு அவளையும் புத்தகத்தையும் மாறி மாறி பார்க்க,

“என்ன?” என தெனாவெட்டாக ஒற்றை புருவம் உயர்த்தி தமயந்தி கேட்க,

அவளோ தயக்கத்துடன் “இல்லை நீங்க ஏதோ என் மேலே கோபமா இருக்கீங்களா என்ன?” என மெல்ல நலம் விசாரிக்க,

“பார்றா அது கூட தெரியுதா உங்களுக்கு” என நக்கலாக இதழை சுழித்து அவள் முறைக்க,

உடனே முகிழ்மதியின் முகத்தில் கலக்கம் சூழ்ந்தது.

அவளின் கலக்கம் சுமந்த விழிகளை கண்ட மற்றவளிற்கு இரக்கம் சுரந்தது.

“என் செல்ல அண்ணி” என அவளின் கன்னம் பிடித்து கொஞ்சியவள் “எதுக்கெடுத்தாலும் இப்படி கலங்கறது?பயப்படறது இதெல்லாம் செய்யாதீங்க அண்ணி…நல்லாவே இல்லை” என்று மொழிந்தாள்.

முகிழ்மதியோ அப்போதும் கவலையாக அவளை ஏறிட “இங்க பாருங்க அண்ணி…எங்க அண்ணா இந்த வீட்டுக்கே ராஜா…நீங்க அவரோட மனைவி…அப்போ இந்த வீட்டுக்கே மகாராணி நீங்க…அதுக்குண்டான கெத்தோடு இருங்க…யாரை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை…மனசுலே இருக்கிறதை பட்டுனு பேசுங்க…எல்லாத்துக்கும் தயங்கிட்டே இருந்தால் எப்படி?உங்களை இப்படி பார்க்க நல்லாவே இல்லை அண்ணி…பிரேவா இருங்க” என நிறுத்தி நிதானமாக அவளிற்கு அறிவுரை கூறினாள்.

தமையனின் மனைவி என்று அவள் வரித்து வைத்திருந்த பிம்பத்திற்கு முகிழ்மதியை செதுக்க முனைந்தாள்.

ஆனால் அவளோ தமயந்தி கூறியதை சரியாக வேறொரு அர்த்தத்தில் புரிந்துக்கொண்டாள்.

‘ஒரு வேளை அவருக்கு நான் பொருத்தமில்லையோ?’ என ஏடாக்கூடமாக புரிந்துக்கொண்டது பேதை உள்ளம்!

அதனால் அவளின் மனதிற்குள் பல விதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

அவளின் முகம் சட்டென வாடிவிட்டதை கவனித்த தமயந்தி “என்னாச்சு அண்ணி?” என அக்கறையாக விசாரிக்க,

அந்த அழுத்தக்காரியா பதில் கூறுவாள்.

அவளிற்கு தான் மனதில் இருப்பதை வெளியில் பேசி பழக்கமில்லையே?

மெதுவாக தமயந்தியை ஏறிட்டு “ஒண்ணுமில்லை அண்ணி” என்று தலையாட்டினாள்.

அதை தமயந்தி சிறிதும் நம்பவில்லை.

அவளையே சில வினாடிகள் அழுத்தமாக நோக்கிய பெண்,அதற்கு மேல் அவளை தோண்டி துருவ விருப்பமின்றி “அண்ணி இப்போதைக்கு நீங்க படிங்க…வேற எதை பத்தியும் யோசிக்காதீங்க…புரியுதா?அடுத்த வாரம் எக்ஸாம் வேற இருக்கு…அதிலே நல்லா மார்க் வாங்கலைனா அண்ணா தோளை உரிச்சு தொங்கவிட்டிருவாரு…சோ நல்லா படிங்க” என தமையனின் சார்பாக அவளை எச்சரித்து,வேறு எதிலும் அவளின் கவனம் செலுத்த விடாமல் ஒரு ஆசானாய் மாறி அவளிற்கு பாடத்தை கற்பித்தாள்.

முகிழ்மதி அக்கணம் தன்னுடைய சிந்தனையை ஒதுக்கி வைத்தாலும் அவளின் மனதிற்குள் உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது.

சாதாரணமாக அவர்களின் திருமணம் நடந்திருந்தால் அவளிற்கு பெரிதாக கவலை இருந்திருக்காது.ஆனால் அவர்களின் திருமணம் நடந்தேறியது பல கூச்சல்,குழப்பங்களுக்கு இடையில் என்பதால்,அவளிற்குள் இந்த திருமண விடயம் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது.

தவிர்க்க முடியாத காரணத்தால் நடந்த ஒரு விபத்து தான் அவர்களின் திருமணம் என்று முகிழ்மதி எண்ணிக்கொண்டிருந்தாள்.

ஆனால் இந்த திருமணத்தை நடத்துவதற்காக அவளின் குடும்பம் மொத்தமும் போராடியிருக்கிறார்கள் என்று அவள் அறியவில்லை.

அதிலும்,அவளின் கணவன் அவள் ஒருத்தியை மட்டுமே நெஞ்சில் சுமந்து அவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டியிருந்தான்.

அதையும் காரிகையவள் அறியவில்லை.

திருமணத்திற்கு முன்பே அவளிடம் தன் மனதில் இருப்பதை அவன் வெளிப்படுத்தியும் கூட,அவள் இன்று வரை அதனை உணரவில்லை என்பது தான் கொடுமையே?

இவள் இங்கு ஒரு பக்கம் குழம்பிக்கொண்டிருக்க,மற்றைய பக்கம் அவளின் மணாளன் மனையாளின் சகோதரியை தேடுவதில் மும்முரமாக இருந்தான்.

அவள் இல்லத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட சூழ்நிலையை கேள்வியுற்ற ரத்தினவேலிற்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

விஜயலட்சுமியை பற்றி எண்ணினாலே அவனின் இரத்தம் கொதித்தது.

அவன் மனதிற்குள் ‘இவயெல்லாம் என்ன பொம்பளையோ?’ என உச்சக்கட்ட கோபத்துடன் அவரை திட்டிக்கொண்டிருந்த கணம் வீர் அவனறைக்குள் நுழைந்தான்.

அறைக்குள் பதட்டமாக நுழைந்த வீரை ஏறிட்ட ரத்தினவேல் ‘என்ன?’ என இமைகள் இடுங்க விழியால் வினவினான்.

அவனோ “பூபதி நான் அம்மாவை பார்க்க போகணும்…எனக்கு ஒரு இரண்டு மணி நேரம் பர்மிஷன் கொடுக்கறீயா?” என படபடப்புடன் கேட்ட நண்பனை பார்த்த ரத்தினவேல் “வீர் முதல்ல பதட்டப்படாமல் உட்காரு…பொறுமையா என்னானு சொல்லு” என இருக்கையை காட்டினான்.

அவனோ அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு “இல்லைடா உட்காரயெல்லாம் எனக்கு டைமில்லை…போன வாரம் தான் அம்மாகிட்ட முன்னேற்றம் தெரிஞ்சுதுனு சந்தோஷப்பட்டேன்…இப்போ திடீர்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மயங்கி விழுந்திட்டாங்களாம்…நான் உடனே போகணும் பூபதி” என அவசரமாக கூறினாலும் அவனின் குரல் கரகரத்து ஒலித்தது.

தாயின் மீது அவன் வைத்திருக்கும் அன்பை நன்கு அறிந்த ரத்தினவேல் ஒரு பெருமூச்சுடன் “ஓகே நீ கிளம்பு…பட் பர்மிஷன் எல்லாம் வேணாம்…இன்னைக்கு நீ ஃபுல் டே லீவு எடுத்துக்கோ” என்றான் கனிந்த குரலில்.

அவனோ “இல்லை பூபதி எலெக்ஷன் டைம் வேறே…நான் கிளம்பி வந்திடறேன்” என அப்போதும் நண்பனிற்காக சொல்ல,

அவனை கூர்ந்து நோக்கிய ரத்தினவேல் “வீர் நான் சொல்லறதை மட்டும் செய்…நீ தேவையில்லாமல் எதுவும் பேசாதே‌…முதல்ல கிளம்பு…ஏதாவது பிராப்ளம்னா கால் பண்ணு” என கண்டிப்பாக பேசினாலும்,அவனது பேச்சில் மறைந்திருந்த மறைமுக அக்கறையை எண்ணி நெகிழ்ந்தான்.

அதனால் கண்கள் பனிக்க “தேங்க்ஸ் பூபதி” என மனம் உருக யாசித்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

தன்னுடைய ஜீப்பில் அவன் அங்கிருந்து கிளம்பி சென்றதும் ரத்தினவேலிற்கு ஒரு அழைப்பு வந்தது.

அதை ஏற்று காதில் வைத்து பேசியவனின் புருவங்கள் இரண்டும் யோசனையில் சுருங்கின.

அவனிற்கு வந்த தகவல் சந்திரமதியை பற்றியது தான்!

வீட்டிலிருந்து அடித்து துரத்தப்பட்ட பெண்ணவள் கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் இருந்திருக்கிறாள்.

தற்போது அவள் எங்கு என்று தெரியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை பற்றி தான் சிந்தித்துக்கொண்டிருந்தான் ரத்தினவேல்.

ஆம்,அவனிடம் கூறப்பட்டது போல் சந்திரமதி ஒரு வாரமாய் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

யாருமற்ற அனாதையாய் நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட சந்திரமதி நடக்கக்கூட தெம்பில்லாமல் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் போடப்பட்டிருந்த பலகையில் சென்று அமர்ந்தாள்.

அவளின் காலில் காலணியில்லை…சாலையிலிருந்த கல் கிழித்து பாதத்தில் இரத்தம் வடிந்தது.

அதையும் அவள் பொருட்படுத்தவில்லை.

அவளின் மூளைக்குள் பல்வேறு விதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

அவளின் ஒட்டுமொத்த வாழ்வும் கடந்த சில நாட்களில் தலைகீழாக மாற்றப்பட்டிருந்தது.

‘நாங்க என்ன பாவம் செஞ்சோம்?ஏன் சின்னவயசிலிருந்து எங்களை அன்பா பார்த்துக்கிற அம்மா அப்பா கிடைக்கலை…மத்தவங்க மாதிரி சந்தோஷமான ஃபேமிலி ஏன் எங்களுக்கு கிடைக்கலை…என் தங்கச்சிக்கிட்ட சிரிச்சு கூட பேசமுடியாத ஒரு அவலம்…பேசினால் அதுக்கொரு தண்டனை…எல்லாத்தையும் பயந்து பயந்து செய்யற ஒரு கேவலமான வாழ்க்கை…இப்போ அவளோட மூஞ்சிய கூட என்னாலே பார்க்க முடியலை…ஏன்? எதுக்காக?எங்களுக்கு மட்டும் இந்த மாதிரி ஒரு நிலைமை?ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்திட்டே இருந்தால் நாங்க என்ன தான் செய்யறது?இந்த நரகத்திலே வாழறதுக்கு பதிலா எங்களை கருவிலே கொன்னிருக்கலாம் எங்க அம்மா…பாவத்துக்கான பரிசு நாங்க…அந்த பாவம் தான் எங்களை விடாமல் துரத்ததா?கடைசி வரை போராடியே எங்க வாழ்க்கை முடிஞ்சிடுமா?இதுக்கு மேலே என்னாலே போராட முடியலைம்மா…வலிக்குது…மனசு உடம்பு எல்லாம் சேர்ந்து வலிக்குதும்மா…முடியலை’ என அருகிலிருந்த கம்பியில் தலைசாய்த்து தனக்குள்ளே அரற்றிக்கொண்டிருந்தவளிற்கு நெஞ்சம் அடைத்தது.

எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருந்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்துக்கொண்டிருந்தது.

அவளின் ஒட்டுமொத்த ஆற்றலும் வடிந்துவிட்டிருக்க,அங்கு அவளின் உடலில் உயிர் மட்டுமே மிஞ்சியிருந்தது.

அவள் நினைத்திருந்தால் முன்பு போல் தாயின் சொல்லுக்கு அடிப்பணிந்து தங்கையின் வாழ்வில் குழப்பம் ஏற்படுத்தி சுயநலமாக வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால் அவளால் அது ஒரு போதும் செய்யமுடியாது.

அவள் சுயநலமிக்கவள் தான்…அந்த சுயநலத்தில் தங்கையும் அடக்கம் என்பதால்,பல வருடங்களுக்கு பிறகு அவளிற்கு நல்லதொரு வாழ்வு கிடைத்திருக்க அதனை கெடுக்க அவளால் ஒரு போதும் முடியாது.

அதற்கு அவள் அனுபவிக்கும் வலியும் வேதனையே மேல் என்று தோன்றிவிட,தாயிடம் துணிந்து பேசி இப்போது நிர்கதியாய் தெருவில் நிற்கிறாள்.

அடுத்த வேளை உணவுக்கு கூட அவளின் கையில் பணமில்லை.

தங்குவதற்கு இடமில்லை…

அணிந்திருக்கும் உடையை தவிர அவளிடம் வேறு எதுவுமில்லை.

அவ்விடத்திலே அவள் எவ்வளவு நேரம் அழுதுக்கொண்டே அமர்ந்திருந்தாளோ பல நூறு மனிதர்கள் அவளை கடந்து சென்றிருந்தனர்.

அவள் அழுவதை கண்டு ஒரு சிலர் ஆறுதல் சொல்ல முன் வந்து அவளிடம் பேச,அவளோ யாருக்கும் பதில் கூறவில்லை.

வாழ்க்கையையே துறந்து வந்த பெண்ணவளிற்கு அனைத்தும் வெறுத்துவிட்டிருந்தது.

இத்தனை வருடங்களாக அவளை வளர்த்தவரையே இதுவரை அவள் நம்பிய தில்லை.

புதிதாக அவளிடம் பேசும் நபர்களை நம்பிவிடுவாளா என்ன?

அதனால் யாரிடமும் எதுவும் பேசாமல் அனைவரையும் நிராகரித்துவிட்டாள்.

அவளிற்கு அழுது அழுது கண்ணிலிருந்த நீர் கூட வற்றிப்போனது.

பகல் தொடங்கி இருள் சூழவே தொடங்கியிருந்த வேளை அது!

அச்சமயம் அங்கிருந்த யாவரும் சற்றும் எதிர்பாராமல் மழை வேறு சடசடவென கொட்ட ஆரம்பித்திருந்தது.

அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி அந்த பேருந்து நிறுத்த குடையில் மழைக்காக தஞ்சம் புகுந்தனர்.

அதில் சிலரின் பார்வை இரக்கத்துடன் பதிந்தது…

சிலரின் பார்வை அலட்சியத்துடன் பதிந்தது.

ஆனால் சில ஆண்களின் பார்வை வக்கிரத்துடன் அவளின் மேல் பதிந்தது.

அவளோ அதை எதனையும் உணரும் நிலையிலில்லை.

அங்கிருந்து பலரும் அவளை பற்றி தான் சலசலத்தனர்.

மழை நின்றதும் கூட்டம் சிறிது சிறிதாக அங்கிருந்து களைந்து சென்றது.

இப்போது அந்த நிறுத்தத்தில் ஐந்து பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

அதில் நான்கு ஆண்களும் ஒரே ஒரு பெண்ணும் அடக்கம்!

அங்கிருந்த அந்தவொரு பெண்ணும் ஒரு திருநங்கை…வயது நாற்பது இருக்கும்.

அந்த காமூகன்களோ அவளின் மேல் இரக்கம் கொள்வது போல் அவளிடம் நெருங்கி அமர்ந்து பேச முயன்றார்கள்.

ஆனால் அந்த நான்கு ஆண்களின் பார்வையும் அவளின் செழித்த அழகில் மட்டுமே பதிந்திருந்தன.

அதிலும் மழையின் சாரல் அவளின் மேல் விழுந்து அவளின் இளஞ்சிவப்பு நிற சுரிதார் உடலோடு ஓட்டி அவளின் வரிவடிவங்களை ஆண்களுக்கு வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருந்தது.

அதுவரை அதனை ஓரமாக இருந்து கவனித்த அந்த பெண்மணியோ ஆண்களின் செயல் எல்லை மீறவும் “அடச்சே எழுந்துப்போங்கய்யா…நீ எதுக்கு அந்த புள்ளை பக்கத்துலே உட்கார்ந்திங்கன்னு எனக்கு தெரியாது பாரு…பெருசா வந்திட்டானுங்க ஆறுதல் சொல்ல…போங்கடா” என தனக்கே உரிய கணீர் குரலில் கத்தியதோடு கைபையால் அவர்களை அடித்து விரட்டினார்.

“எல்லாத்தையும் வந்து கெடுத்திடுச்சு இந்த ***…” என மேலும் சில கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டிக்கொண்டே அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

அவரோ “அட போங்கடா” என காலால் எட்டி உதைப்பது சைகை செய்யவும்,அவரின் ஆறடி தோரணையில் பயந்த அந்த நபர்கள் அங்கிருந்து ஓட்டமே பிடித்திருத்தனர்.

அப்போது வரை சந்திரமதி தன் சுய உணர்விற்கு வந்திருக்கவில்லை.

அவர்கள் அங்கிருந்து கிளம்பியதும் சந்திரமதியின் புறம் திரும்பிய அந்த பெண்மணி “ஏய் பாப்பா…பஸ் ஸ்டாண்டிலே உட்கார்ந்து என்ன செய்யறே?எழுந்து உன் வீட்டுக்கு போம்மா…காவாலி பசங்களோட கண்ணெல்லாம் உன் மேலே தான் இருக்கு…இங்கயிருக்கிறது உனக்கு தான் ஆபத்து…கிளம்பு…போ..போ” என அவளின் தோள் தட்டி குரல் உயர்த்தி எச்சரிக்க,அதில் திடுக்கிட்டு அவரை நோக்கினாள் அவள்.

தன் முன்னே நின்றிருந்த அந்த பெண்மணியை கண்டு மிரண்டாள் அவள்.

அவளின் அச்சத்தை கண்ட பெண்மணியோ “எந்த பிரச்சனையா இருந்தாலும் வீட்டுக்கு போய் பார்த்துக்க பாப்பா…இங்க உட்காராதே…கிளம்பு…கிளம்பு” என அவளை அங்கிருந்து அடித்து விரட்டாத குறையாக மிரட்டவும்,

அவள் வேறுவழியின்றி பயத்துடன் அங்கிருந்து எழுந்து நின்றாள்.

அவளின் காலில் காலணி இல்லாததை கண்ட அந்த பெண்மணி “பாப்பா இந்தா என் செருப்பை போட்டுக்கோ” என அவர் தன் செருப்பை அவளிடம் கழட்டி கொடுக்க,

அவளோ அவரை சிறிதும் சட்டை செய்யாமல் வெற்று காலில் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவளிற்கு எங்கு செல்வது யாரை பார்ப்பது என்று எதுவுமே புரியவில்லை.

உலகமே சூன்யமாகியது போல் ஒரு உணர்வு!

அவளின் மூளை காலியாகியிருந்தது.

எக்காரணம் கொண்டு தங்கையை நாடி செல்லக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.

அதனால் மெதுவாக அவள் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போதே நின்ற மழை மீண்டும் பொழிய ஆரம்பித்தன.

அவளோ அதை கூட அறியாமல் உணர்வுகள் இழந்த நிலையில் மழையில் நனைந்துக்கொண்டே நடந்து சென்றாள்.

அவளின் மனம் மரத்து இருந்தாலும்,அவளின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருந்ததே?

அதனால் கடந்த இரண்டு நாட்களால் உணவருந்தாமல் இருந்தது,அவளின் மன உளைச்சல்,தற்போது மழையில் நனைந்தது என எல்லாம் சேர்ந்து அவளை தலைச்சுற்றி மயங்கி விழ வைத்திருந்தது.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top