முகிழ்மதி 127

முகிழ்மதி 127

பனிக்கட்டியாக உறைந்திருந்த அந்த இருண்ட அறையில் மரணத்தின் வாசல் மெல்ல திறந்துக்கொண்டிருந்தது.

சுவர்களில் ஒட்டியிருந்த ஈரப்பதம் கூட வெண்மையான பனித்துகள்களாக மாறியிருந்தது.

மேலே தொங்கியிருந்த மங்கலான மின்விளக்கு காற்றின் அதிர்வில் துடித்துக்கொண்டே இருந்தது.

ஒவ்வொரு துடிப்பும் பெண்களின் உயிர் நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கும் எமனின் விரல்களைப் போல தோன்றியது.

தரையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தமயந்தி நடுங்கிக்கொண்டிருந்தாள்.

அவளின் உதடுகள் நீலநிறமாக மாறியிருந்தன. கர்ப்பவயிற்றை பாதுகாக்க அவள் சற்றும் அசையாமல் இருக்க முயன்றாள்.

ஆனால் குளிர் அவளின் எலும்புகளை உடைத்தெறிய வந்த கொடூர மிருகம் போல தாக்கியது.
அவளருகே சந்திரமதி சுவாசிக்கவே போராடிக்கொண்டிருந்தாள்.

“அ…அண்ணி…” என்று தமி அழைத்த குரல் கூட உடைந்து சிதறியது.

அவளும் சிறிது சிறிதாக தனது சுய உணர்வை இழந்துக்கொண்டிருந்தாள்.

முகிழ்மதி தன் கட்டுகளை விடுவிக்க போராடிக்கொண்டிருந்தாள்.

கயிறு அவளது மென்மையான கைகளில் சிவந்த கீறல்களை உருவாக்கியிருந்தது.

அவள் இழுக்கும் ஒவ்வொரு முறையும் தோள்கள் வலியால் எரிந்தன.

“கடவுளே…” என்று அவளையும் மீறி வலியில் உதடுகள் நடுங்கின.

அதே நேரம் அந்த அறையின் குளிர் இன்னும் பல மடங்கு அதிகரித்தது.

வெளியில் அந்த கொடூரனின் ஆட்கள் இன்னும் அதிகமாக குளிரை அதிகரித்திருந்தான் போலும்.

சந்திரமதியின் தலையோ மெதுவாக ஒரு பக்கம் சாய்ந்தது.

அவளின் நிலையுணர்ந்து “அண்ணி” என தமயந்தி கத்த முயன்றாள்.

ஆனால் அவளது குரல் கூட வெளிவரவில்லை.

முகிழ்மதியின் இதயம் வெளியில் வந்து விழுவது போல் சகோதரிக்காக பதறித்துடித்தன.

அவளின் ஒட்டுமொத்த புலன்களும் தன்னிலை இழக்கக்கூடிய தருணத்தில்,அவளிற்குமே மூச்சு திணறல் மெல்ல வர ஆரம்பித்திருந்தன.

அவளும் தன் உணர்வை இழந்துவிட்டால்,அங்கிருந்து யாராலும் தப்பிச்செல்ல முடியாது.

அந்நொடி…அந்தவொரு நொடி…

அவளின் மனதில் ‘யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்..
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்..’ என்ற பாரதியின் கவிதையும் அதனுடனே அவளது கணவன் அவளிற்கு அளித்த நம்பிக்கை வார்த்தைகளும் சிந்தைக்குள் எழ,

‘இல்ல… இல்ல முகிழ் நீ இந்த சமயம் பயப்படக்கூடாது…நாம்ப எல்லாரும் உயிரோட வெளியப்போகணும்…வயித்திலே இருக்கிற குழந்தை…அண்ணி…அக்கா…எல்லாரும் பிழைக்கணும்…’ என தனக்கு தானே உருப்போட்டப்படி அவளிற்குள் துணிச்சலை வரவழைத்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அறையின் ஒரு மூலையில் உடைந்திருந்த பழைய இரும்புக்கம்பி ஒன்று அவளது கண்களில் பட்டது.

அது அவர்களிடம் இருந்து சற்றே தூரத்தில் இருந்தது.

அவளால் அங்கிருந்து ஒரு அடி கூட நகரமுடியாது…தற்போது அதையெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் அவளில்லை..

அவள் முழங்கால்களை இழுத்து நகர முயன்றாள்.

அவள் உடலை சுற்றி கட்டிய கயிறு வயிற்றை இறுக்கியது.

வலி என்றால் அவளிற்கு அப்படியொரு வலி…

உடலெல்லாம் ரணமாய் வலித்தன.

அவளது கண்களில் நீர் தாரை தாரையாக நிரம்பிக் கொட்டின.

அவளால் பிணியை தாங்க முடியவில்லை.

அச்சமயம் தமயந்தியின் பலவீனமான அழுகை காதில் விழ, முகிழ்மதியின் உள்ளே எங்கிருந்தோ ஒரு தைரியம் எழுந்தது.

பற்களால் இதழை கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டவள்…

மெதுவாக… மிகவும் மெதுவாக…
அவள் தரையில் உடலை இழுத்துக்கொண்டே நகர்ந்தாள்.

குளிரால் தரை பனிப்போல சில்லிட்டு இருந்தது.

அவளது விரல்கள் உறைந்து உணர்விழந்தன.அவள் எதனையும் பொருட்படுத்தவில்லை.

தன்னுயிரை விட அவர்களை காப்பது ஒன்றே அவளின் நோக்கமாக இருந்தது.

வெளியில் காற்று வீசும் சத்தத்துடன், எங்கோ தூரத்தில் நாய் ஊளையிடும் ஒலி கேட்க,அந்த இடமே நரகத்தின் வாசலாக மாறியிருந்தது.

இறுதியாக அவள் தேடி சென்ற அந்த இரும்புக்கம்பியை அவள் விரல்களின் நுனியால் எடுத்தாள்.

அதை எடுத்தவளின் இதழ்கள் ‘கடவுளே நாங்க எப்படியாவது தப்பிச்சிடணும்…’ என தன்னையும் மீறி முணுமுணுத்தன.

இரும்புக்கம்பியின் நுனிப்பகுதியை கொண்டு கயிற்றினை அறுக்க முயன்று அதில் வெற்றியும் கண்டாள் பாவை.

முகிழ்மதி தனது கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்த அந்த நொடி, அவளது கை மற்றும் உடல் முழுவதும் ரத்தக்கீறல்கள் சிவந்த கோடுகளாக பட்டைத் தீட்டப்பட்டு ஜொலித்தன.

சுருக்கென்று உடலெல்லாம் வாதை பொங்கி பெருகினாலும் அந்த வலியை கவனிக்க அவளிற்கு நேரமில்லை.

“அண்ணி அக்கா… பயப்படாதீங்க… நான் இருக்கேன்…” என்று அவள் நடுங்கும் குரலில் கூறியப்படி அடி வைக்க மறுத்த பாதங்களை சிரமப்பட்டு நகர்த்தி முதலில் தமயந்தியின் அருகே வந்து  அவளது கட்டுகளை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

உறைந்து போன விரல்கள் சரியாக இயங்கவில்லை. கயிறு இறுகிப்போயிருந்தது. பல நிமிட போராட்டத்திற்குப் பிறகே தமியின் கைகள் விடுபட்டன.

விடுதலையான உடனே தமயந்தி பெருமூச்சு விட்டாள்.

இப்போது இருவரும் மெல்ல நகர்ந்து “அக்கா…அண்ணி…” என்று இருவரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த சந்திரமதியின் கட்டுகளை விடுவித்து,அவளை உலுக்கி எழுப்பினார்கள்.

ஆனால் அவளின் கண்கள் திறக்கவில்லை.

அவளது உடல் பனிக்கட்டியைப் போல் குளிர்ந்திருந்தது.

“அண்ணி அக்காவுக்கு எதுவும் ஆகிடாதுலே?” என்று முகிழ் நெஞ்சம் அடைக்க அழ ஆரம்பிக்க,

தமயந்தியிற்குள் கிலி பரவினாலும் “எதுவும் ஆகாது” என முகிழ்மதிக்கு ஆறுதல் கூறினாள்.

ஆனால் அவளின் உள்ளத்தில் பயம் கரியப் புகையாக பரவிக்கொண்டிருந்தது.

அவளை பல வகையில் எழுப்ப முயன்றும் இருவராலும் அவளை விழிக்க வைக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் தமயந்தியால் சோர்வால் வெகு நேரம் அமர முடியவில்லை.

அதனை கவனித்து “அண்ணி…இங்க வாங்க சாஞ்சுக்கோங்க” என அருகிலிருந்த தூணின் மீது சாய்த்து அமர வைத்தாள்.

மீண்டும் தமக்கையிடம் வந்த முகிழ்மதி இறுதியாக அருகில் கிடந்த பழைய தண்ணீர் டப்பாவில் உறைந்திருந்த பனிக்கட்டியை கையில் எடுத்து அதற்கு தன் கரங்கள் கொண்டு தீ மூட்டி உருக வைத்தாள்.

அவளது யோசனையை போலவே உருகிய பனிக்கட்டியிலிருந்து வழிந்த நீரை கொண்டு சந்திரமதியின் முகத்தில் தடவி மற்றும் தெளித்து அவளை எழுப்ப முனைந்தாள்.

தண்ணீர் முகத்தில் படர்ந்ததும் சில நொடிகளுக்கு பிறகு சந்திரமதியின் இமைகள் சற்றே அசைந்தன.

அதில் முகிழ்மதியின் படபடத்த இதயம் நிம்மதியுற “அக்கா..அக்கா” என அவளின் கன்னம் தட்டி எழுப்பினாள்.

அவள் மெதுவாக கண்களைத் திறந்தாள்.

தன் விழிகளுக்கு முன்பே அமர்ந்திருந்த இரட்டை சகோதரியை கண்டதும் “அ..ம்..மு..” என அவள் மெல்ல முனகினாள்.

அவளது உடலிலுள்ள ஒட்டுமொத்த சக்தியும் உறைந்துப்போயிருந்தால் அவளால் அங்கிருந்து எழ முடியவில்லை.

“அக்கா” என அவளை அணைத்துக்கொண்ட முகிழ்மதியின் கண்ணில் நீரின் தடங்கள்…

அதேப்போல் அவர்களது நிலையை நினைத்து மூவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தன.

தற்போது அவர்களது கண்ணீர் கூட பனிக் காற்றில் உறைய ஆரம்பத்திட ‘இதற்கு மேல் முடியாது’ என்று முகிழ்மதிக்கு தோன்றின.

அதனால் அவசரமாக கதவை நோக்கி அவளின் பார்வை சென்றன.

உடனே முகிழ்மதி வேகமாக ஓடிப்போய் கதவை தள்ளிப் பார்த்தாள்.

அவை திறக்கவில்லை.

அவள் மீண்டும் பலமாக தள்ளினாள்.

அந்த இரும்புக் கதவு சிறிதும் அசைய மறுத்தது.

“வெளியே பூட்டியிருக்காங்க…” என்று அவள் உதடுகள் வறண்டுப்போய் முணுமுணுத்தன.

தமயந்தி உடனே அறையை சுற்றிப் பார்த்தாள்.

அங்கு வேறு எந்தவித சன்னல் திரையும் இல்லாததை அவதானித்தன அவளின் விழிகள்!

“அண்ணி போன் ஏதாவது இருக்கா?” என மெல்ல திக்கித்திணறி அவள் கேட்க,

முகிழ்மதி அந்த அறை முழுவதும் தேடிவிட்டாள்.

அவர்கள் மூவரது அலைப்பேசியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இப்போது அவளும் சோர்ந்துப்போய் அமர்ந்து விட்டாள்.

மூவரின் உடலும் நடுங்கி உறைய ஆரம்பித்தன.

வேறுவழியின்றி சந்திரமதி தமயந்தி இருவரையும் அருகருகே அமர வைத்து,அவர்களுக்கு இடையே தானும் அமர்ந்து இருவரின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

ஓரத்தில் மொத்தமாக இருந்த தார்பாயை மூவருக்கும் சேர்த்து போர்த்திவிட்டு மற்றைய இருவருக்கும் தன் கரத்தால் தீ முட்டி அவளும் அதில் குளிர் காய்ந்தாள்.

அறையின் தடித்த சுவர்கள் வெளி உலகத்தையே விழுங்கியிருந்தன.

தமியும் சந்திரமதியும் அழுதபடி வயிற்றை பற்றிக்கொண்டிருந்தார்கள்.

“எ..னக்கு ப..யமா இருக்கு…” என மெல்ல சந்திரமதி பலகீனமாய் முணுமுணுக்க,

“க..வலைப்படாதீங்க மா..மா சீ.‌..க்கிரம் நம்பளை வந்து கா..ப்பாத்திடுவாரு” என இதழ்கள் தந்தியடிக்க கூறி முகிழ்மதி இருவருக்கும் நம்பிக்கை கூறினாள்.

தனக்கும் அதையே சேர்த்து கூறிக் கொண்டாள்.

எப்போதும் பயந்து நடுங்கும் பெண்…இன்று தன் அச்சத்தை தூக்கியெறிந்துவிட்டு சிங்கப்பெண்ணாய் இருவரின் உயிரையும் காத்து நின்றாள்.

இப்போது இருவருக்கும் ஆதரவாக முகிழ்மதி அமர்ந்திருக்க,மற்ற இருவரும் அவளை அணைத்தப்படி தங்களது கணவர்களுக்காக உயிரை கையில் பிடித்துக் காத்திருந்தார்கள்.

அந்த ஒரு நொடி…

நிராசையின்றி மருகிய உயிர்களுக்கு மீண்டும் ஜீவனளிக்கும் விதமாக தூரத்தில் ஒரு கனமான சத்தம் கேட்டது.

‘டட்…டட்…டட்’ யாரோ வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டிட,மூவரின் மூச்சும் ஒரு கணம் நின்றது.

ஆனால் அவர்களது மூச்சை திருப்பிக்கொணரும் விதமாக மிகவும் பரிச்சயமான மூன்று வெவ்வேறு குரல்கள்!

“முகிழ்…தமி…மூன்”

அந்த குரல்கள் மின்னல்போல் அந்த இருண்ட அறையை கிழித்தெறிந்தது.

மூவரின் கண்களும் இப்போது மகிழ்ச்சியில் பெரிதானது.

‘அவங்க வந்திட்டாங்க’ என்பது போல் மூவரின் பார்வையும் உற்சாகத்துடன் பரிமாறிக்கொள்ளப்பட,

வெளியே ஆண்களின் கோபக்குரல்கள்,அடிதடி சத்தங்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

அதற்கு இடையே துப்பாக்கி சத்தங்களும் கூட இடியாய் முழங்கின.

“டேய் கதவை உடைங்கடா” என்று கர்ஜனையுடன் கூடிய ஒரு குரல் கட்டளையிட,

அடுத்த நொடி…

மிகப்பெரிய சத்தத்துடன் இரும்புக் கதவு உடைந்து உள்ளே பறந்தது.

புகைமூட்டத்திற்குள் இருந்து மூன்று ஆண்கள் புயல்போல் உள்ளே நுழைந்தனர்.

இரும்புக் கதவு உடைந்து விழுந்த அந்த நொடியிலிருந்து சில நிமிடங்களுக்குள், அந்த கொடூரமான இடமே பரபரப்பாக மாறியிருந்தது.

அவர்களது கண்களில் அனல் பறந்துக்கொண்டிருந்தாலும் அதையும் மீறி தத்தமது மனைவிகளுக்கான தவிப்பு தென்பட்டன.

மனைவிகளை ஒடுங்கி வதங்கிய நிலையில் கண்ட நொடி அவர்களது உயிரே உடலை விட்டு நீங்கியது போலிருந்தன.

அடுத்தகணமே குளிரால் உறைந்த பெண்களை கையில் கொண்டு வந்திருந்த குளிரில் அணியும் மேலங்கியால் சுற்றிக்கொண்டு வெளியில் அழைத்து சென்றனர்.

அவர்கள் வெளியே கொண்டுவந்தபோது, வெளியிலிருந்த மழைக்காற்று கூட பெண்களுக்கு இதமாக தோன்றியது.

அதுவரை உயிரை கையில் பிடித்து போராடிக்கொண்டிருந்த பெண்கள் மூவரும் கணவரது கைகளில் சேர்ந்த நிம்மதியுடன் மயங்கி சரிந்திருந்தனர்.

அவர்களது இதழ்களில் மட்டும் ஒரு சிறு புன்னகை உறைந்திருந்தன.

பெண்கள் மூவரையும் அருகிலுள்ள தங்களுக்கு சொந்தமான ஒரு விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றதோடு மருத்துவரையும் அழைத்து வந்து சிகிச்சை வழங்கினார்கள்.

சில மணி நேரங்கள் கழித்து,

தங்களது மனைவிகள் அருகே அவர்கள் விழிப்பதற்காக ஆண்கள் மூவரும் தவம் கிடந்தனர்.

அந்த அறையில் ஒரு சிறிய வெப்பமூட்டி எரிந்துகொண்டிருந்தது.

அந்த வெப்பத்தைவிட, கணவர்களின் பதட்டமான அன்புதான் பெண்களின் உடலை மெதுவாக உயிர்ப்பித்தது.

முதலில் தன் விழிகளை மலர்த்தினாள் முகிழ்மதி.

ரத்தினவேலோ அவளது கைகளில் ஏற்பட்ட கீறல்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்தவன், கோபத்தால் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தான்.

அவள் கண் விழித்ததும்  “ஸ்டார்” என மெல்லிய குரலில் அழைத்தவனின் குரல் இலேசாக இடறின.

அவளருகே அமர்ந்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன் “இவ்வளவு ரத்தம் வெளிய வர வரைக்கும் நீ போராடிருக்கியாடி?” என்று கரகரத்த குரலில் கேட்டவனிற்கு தன்னவள் பட்ட கஷ்டங்களை பற்றி நினைக்கும் போதே நெஞ்சம் வலித்தது.

முகிழ் பதில் எதுவும் கூறாமல் மெதுவாக சிரிக்க முயன்றாள்.

“சிரிக்காதேடி…உனக்கு ஏதாவது ஆகிருந்தா…” என்று சொல்ல வந்தவன் சொற்களை நிறுத்திக்கொண்டான்.

அவனது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.

அதைக்கண்ட முகிழ்மதியோ அதிர்ந்து அவனை பார்த்தாள்.

அவன் முதன்முதலாய் அழுது அவள் பார்க்கிறாள்…

அதுவும் அவளிற்காக…நினைக்கும் போதே அவளின் நெஞ்சம் படபடத்தன.

அவன் அழுததை கண்டு தாங்க முடியாமல் “மாமா” என அவனது கரம் பற்ற,

அவனோ “நீ தொலைஞ்சுப்போயிட்டேன்னு தெரிஞ்சதும் நான் செத்திட்டேன்டி…” என்று நாதழுதழுக்க கூறி,அவளை வேகமாக அணைத்துக்கொண்டான்.

அவனது பேச்சை கேட்டு அவளின் இதயம் சில வினாடிகள் நின்று பின்பு துடித்தன…

அவனது காதலை பற்றி எண்ணும் போதே அவளின் மேனி சிலிர்த்தது.

‘என் மேல் இத்துணை காதலா?’ என நினைக்க நினைக்க அவளின் உள்ளம் புளங்காகிதம் அடைந்திட “மாமா” என அவனை அணைத்து அவனது கலங்கிய விழியில் முத்தமிட்டிருந்தாள்.

அவளின் அந்த சூடான முத்தம் அந்த மூர்க்கனின் தேகத்தை சிலிர்க்க வைத்திட,அவன் விழி மூடி அவளிற்குள் திளைத்துப்போனான்.

அந்த நொடியில் அவளது முத்தம் அவனிற்கான உயிர்மூச்சாய் மாறிப்போனது.

*********
தமயந்தியின் வயிற்றை வருடிக்கொண்டே அவளை விழி அகலாமல் பார்த்திருந்தான் வீர்.

அச்சமயம் தமயந்தி மெதுவாக கண்விழித்தாள்.

அவளது கைகள் அந்த துர்நினைவில் மீண்டும் நடுங்க ஆரம்பித்திட,உடனே தன் வயிற்றை பற்றிக்கொண்டவள் “குழந்தை…” என பதறிப்போய் மெல்லியக்குரலில் கேட்டவளின் முகம் பயத்தில் வெளுத்தது.

தன்னவளின் பயமறிந்த வீரோ “தமி…தமி ரிலாக்ஸ்…குழந்தைக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை…டாக்டர் செக் பண்ணிட்டாரும்மா” என அவளின் தோளை பற்றி ஆறுதல் கூறிட, அதன்பிறகே அவளின் மனம் ஆசுவாசமுற்றது.

சில வினாடிகள் அவ்விடத்தில் மௌனம் மட்டுமே ஆட்சிச்செய்தன.

இருவருக்கும் சற்றும் பொருந்தாத ஒரு அமைதி அவ்விடத்தில்…

அந்த அமைதியை கிழிக்கும் விதமாக “தமி இங்கியே இரு நான் உனக்கு பால் கொண்டு வர்றேன்…நீ மதியம் சாப்பிட்டது தான்” என்று சொல்லி அவளிற்கு சூடான பாலை எடுத்து வந்து தந்தான்.

அவளின் கணவன் சூடான பாலை மெதுவாக அவளிடம் நீட்ட,அவளோ ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டாள்.

“கொஞ்சமாவது குடி தமி…” என அவளிற்கு மெதுவாக பாலை புகட்ட முனைய,

“வேண்டாம்…” என்றப்படி அவனது நெஞ்சில் சாய்ந்தப்படியே தலையசைத்தாள்.

அவனும் அமைதியாக அவளை தன்னில் சாய்த்துக்கொண்டு கூந்தலை வருடியப்படி “நீ இப்படிச் சோர்ந்து போய் இருக்கிறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா” என உயிரை உருக்கும் குரலில் கூறினான்.

அந்த குரலில் இருந்த வலி தமயந்தியின் கண்களில் நீரை வரவழைத்தது.

“இனி உங்களை பார்க்கவே முடியாதோனு நான் ரொம்ப பயந்துட்டேன் வீர்…” என விழி உயர்த்தி அவனை ஏறிட்டு கூறியவளின் விழிகள் கலங்கியிருந்தன.

அவளின் கலங்கிய விழிகளை பார்த்தவனிற்கும் கண்கள் கலங்கின.

ஆயினும்,தன்னை சமாளித்து “நான் இருக்கும் வரை உனக்கு அப்படி எதுவும் நடக்க விடமாட்டேன்…நீ என் உயிர்டி” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியவனின் இதழ்கள் அவளின் நெற்றியில் அழுந்தப் பதிந்தன.

அவனது உடலில் ஓடிய நடுக்கமும் கண்ணீரும் அவளிற்கு அவை நிஜம் என்பதை வலியுறுத்தின.

அத்துடன் அந்த அறைக்குள் நுழைந்த சமயம் அவனது விழிகளில் அவளிற்கான தேடல் இருந்ததை அவளும் கண்டுக்கொண்டாள்‌.

வேகமாக உள்ளே ஓடி வந்தவன் அவனது தங்கைகள் அவளருகே இருந்தும் கூட “தமி…தமி…தமி…” என அவளை வந்து உயிராய் தாங்கிய விதம் அவளை மெய்சிலிர்க்க வைத்தன.

இத்துணை நாட்களும் மற்றவருக்கு பிறகு தான் அவள் என்று எண்ணியிருந்தாள்‌.

இன்று முதன் முறையாய் அவனது உயிரே அவள் தான் என அவளிற்கு  உணர்த்தியிருந்தான்,அவளின் மணாளன்.

அதனால் அவனது காதலில் நெக்குருகிய பெண் அவனது கழுத்தை வளைத்து நெஞ்சில் முகம் புதைத்தாள்.

அவனோ “லட்டு கொஞ்சூண்டு பால் குடிடி” என அவளிற்கு எடுத்து வந்த பாலைப்புகட்டினான்.

“வேணாம்னா விடமாட்டிங்களா வீர்?” போலியாய் சலித்தாலும்,அவன் கொடுத்ததை குடித்து முடித்திருந்தாள்.

அவள் குடித்ததும் குவளையை வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்தவன்,அவளது வயிற்றினை வருடிப்படியே அவளின் அண்மையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அவள் மீண்டும் தன் கை சேர்ந்ததை நம்ப முடியவில்லை.

அதனால் அவளை தன் கைவளைவிலே வைத்திருந்தான்.

***************
சந்திரமதி இன்னும் பலவீனமாக கட்டிலில் படுத்திருந்தாள்.

அவளது கணவன் அவளது அருகிலிருந்து ஒரு நொடியும் நகரவில்லை.

அவளது குளிர்ந்த விரல்களை தனது இருகைகளுக்குள் வைத்தபடி மெதுவாக சூடு ஏற்றிக்கொண்டிருந்தான்.

சந்திரமதி கண்களை திறந்து அவனை பார்த்தாள்.

“போதும் போதும்…இப்படியே என் கைய தேய்ச்சு தேய்ச்சு ரேகைய அழிச்சிடாதீங்க” என்று மெல்லிய குரலில் அவனை அதட்ட,

திடீரென்று அவள் பேசியதும் மகிழ்ந்த ஜித்து,அவளின் பேச்சை கேட்டு வசீகரமாய் புன்னகைத்தான்.

“உனக்கு இந்த நிலைமையிலையும் என்னை திட்டலைனா தூக்கம் வராதா மூன்?” என அவளிற்கு பதில் கொடுத்தாலும்,அவளை எழுப்பி அமர வைத்தான்.

“பின்ன நானில்லாமல் நீங்க நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தீங்களா?அதெல்லாம் இந்த ஜென்மத்திலே நடக்காது…செத்தாலும் பேயா வந்து உங்களை டார்ச்சர் பண்ணுவேன்” என தன்னவனின் முகம் வாடியிருப்பதை கண்டு அவள் அந்த சூழ்நிலையை மாற்ற பேச,

ஆனால் அவனோ “ப்ச் என்னடி பேச்சு இது?சாவு அது இதுனு…நீ இல்லாத இந்த கொஞ்ச நேரமே நான் செத்து பிழைச்சேன்டி…” என கோபமாக கடிந்தவனின் குரல் இறுதியில் அழுகையில் தொய்ந்து வந்தன.

“நீங்க இல்லாமல் நான் மட்டும் என்ன பண்ணுவேன் ஜித்து?” என்று கண்ணீரோடு இதழை பிதுக்கி சொல்ல,

“அப்புறம் எதுக்கு என்னை விட்டுப்போறே?கடைசி வரை என் டார்ச்சரை அனுபவிச்சிட்டு என் கூடவே இரு…என்னை விட்டுட்டு போற ஐடியாவே வேண்டாம்…புரியுதா?” என அதட்டலாக கூறியவனோ குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவனது பேச்சை கேட்டு சந்திரமதி சோர்வாக சிரித்தாள்.

“கவலைப்படாதீங்க…இன்னும் என்கிட்ட நீங்க அடி வாங்க வேண்டியது நிறைய இருக்கு…அதெல்லாம் கொடுக்காமல் நான் எங்கப்போகப்போறேன்” என அவனிற்கு இணையாக அவளும் வம்புப்பேச,

“அடிப்பாவி” என வாயில் கைவைத்தாலும் தன்னவளை அருகிழுத்து அணைத்துக்கொண்டான் ஜித்து.

அவளும் அவனில் வாகாக சாய்ந்துக்கொள்ள,அவன் அவளது தலைமுடியை வருடிக்கொண்டே “நீங்க மூணு பேரும் உயிரோட இருக்கீங்க…எங்களுக்கு அதுவே போதும்டி…இனி உங்களை எந்த காரணத்துக்காகவும் ஈஸியா விடமாட்டோம்” என 
மெதுவாக சொன்னவனின் குரலில் ஒரு தீரம் இருந்தது.

வெளியில் இன்னும் மழை கொட்டிக்கொண்டிருந்தது.

ஆனால் தம்பதியினர் அறைக்குள்…

மூன்று பெண்களும், மூன்று ஆண்களின் அன்பில் மெதுவாக உயிர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
 

மனைவிகள் மூவரும் சகஜநிலைக்கு மாறியதும் அடுத்த நாள் காலை வீட்டு பெரியவர்களது கையில் அவர்களை ஒப்படைத்துவிட்டு ஆத்விக்கை அடியோடு ஒழிக்க புறப்பட்டிருந்தார்கள்,ஆடவர்கள்.

அவர்களை காணவில்லை என்றவுடன் மூவரையும் கண்டுப்பிடிக்க அலைக்கழித்துப் போனவர்களுக்கு சிறு ஒளியாய் ஒரு ஆதாரம் கிடைத்தது.

சமீபத்தில் ஒரு நாள் ஆத்விக் தமயந்தியை சந்திக்க வந்திருந்தான்.

ரோகிணியின் செயல்பாட்டை பற்றி அறிந்ததற்கு பிறகு தமயந்திக்கு அவனிடம் பேசவே விருப்பமில்லை.

ஆனால் அவனோ “தமி பிளீஸ்…எனக்கும் அதுக்கும் எந்த தொடர்புமில்லை…ரோகிணியும் அவங்க அப்பாவும் இவ்வளவு பெரிய தப்புப்பண்ணியிருக்காங்கனு எனக்கே இப்போ தான் தெரியும்…என்னை பத்தி உனக்கு தெரியுமில்லை…எனக்கு உன்னோட நட்பு வேணும் தமி…” என கண்ணீர் விடாத குறையாக அவளிடம் இறைஞ்சியப்போதும் தமயந்தி மனமிறங்கவில்லை.

“இவ்வளவு நடந்ததுக்கு பிறகு நாம்ப நட்பா இருக்கிறது சாத்தியமில்லை ஆத்வி…இனிமேல் என்னை சந்திக்க வராதீங்க” என தீட்சண்யக்குரலில் கூறி அவனை நிராகரித்திருந்தாள்.

இவர்கள் இருவரது உரையாடலை ஏதேச்சையாக சந்திரமதி தூரத்திலிருந்து பார்த்திருந்தாள்.

அப்போது தான் ஆத்விக்கின் முகத்தை உற்று கவனித்திருந்த சந்திரமதிக்கு சற்று நெருடலாக இருந்தது.

ஏனெனில்,ஜித்து கடத்தி வைத்திருந்த சமயம் அவளிற்கு உதவி செய்தது இவன் தான் என அவளிற்கு நன்கு அடையாளம் தெரிந்திருந்தது.

அதனால் “அண்ணி இவ்வளவு நேரம் உங்ககூட பேசினது யாரு?” என சந்திரமதி சந்தேகமாக வினவ,

அவளும் நிஜத்தை மறைக்க முயலவில்லை.

அவள் நடந்ததை மேலோட்டமாக கூறி “என்கிட்ட மன்னிப்பு கேட்டு நட்பை தொடர முடியுமானு கேட்டாரு…நான் முடியாதுனு சொல்லிட்டேன்…சரி நீங்க வாங்க…வெயில்ல ரொம்ப நேரம் நிக்க வேணாம்” என அவளை அழைத்துச் சென்றிருந்தாள்.

ஆனாலும் சந்திரமதிக்கு இந்த விடயம் உறுத்திக்கொண்டே இருக்க,ஒரு நாள் தனது கணவன் ஜித்துவிடமும் அவள் அதைப்பற்றி வெளிப்படையாக பேசியிருந்தாள்.

இப்போது அவனிற்குள்ளும் குழப்பம் சூழ்ந்திட “நீ நிஜமா தான் சொல்லறீயா மூன்?அது அவன் தானா?” என மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்திக்கொள்ள வினவ,

அவளோ “ஐ நோ சென் பர்சன்ட் ஜித்து…அவன் தான் இது…இவன் ரோகிணியோட அண்ணன்…ஆனால் அன்னைக்கு எதுக்கு என்னை காப்பாத்தி கல்யாணத்தை நிறுத்த அனுப்பனும்…எனக்கு எங்கியோ இடிக்குது” என ஊசலாடும் மனதுடனே தனது கருத்தை வெளிப்படுத்த,அவனிற்கும் அதே எண்ணம் தான்!

அதனால் “சரி நீ இந்த விஷயத்தை விடு மூன்…நான் பார்த்துக்கிறேன்” என தன்னவளை சமாதானம் செய்திருந்தவன்,அந்தவொரு நொடியிலிருந்து ஆத்விக்கை பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தான்.

அச்சமயம் தமயந்தியும் கல்லூரி முடித்து கருவுற்றிருந்தாள்.

ஜித்துவுடைய தேடுதலுக்கு விடையாக ஆத்விக் அவர்களது உண்மையான வாரிசில்லை என்று தெரிந்து,இன்னும் ஆழமாக அவனை தோண்டி துருவினான்.

ஆனால் அவனிற்கு கிடைத்த விடை என்னவோ பூஜ்ஜியம் தான்!

இதற்கு மேலும் தமையனிடம் இதை மறைப்பது சரிவராது என்று அவனிடமும் விடயத்தைத் தெரிவித்தான்.

இப்போது மற்றைய இரு ஆண்களுக்குமே நெருடலாக இருக்க,ரத்தினவேல் தனது செல்வாக்கை முழுமூச்சாய் பயன்படுத்தி அவனை பற்றி அறிய முற்பட்டான்.

ஆத்விக் சார்ந்த தகவல் மொத்தமும் அவனது மேசையில் வந்து சேர்ந்த நேரம் பெண்கள் மூவரும் கடத்தப்பட்டிருந்தனர்.

இருள் சூழ்ந்த கானகத்தில் தள்ளிவிட்டது போல் ஒளியின்றி தவித்த ஆண்களுக்கு வெளிச்சம் கிடைத்தது ஆத்விக்கின் வரலாறு!

சட்டென மூவருக்கும் ‘ஒரு வேளை அவன் தான் செய்திருப்பானோ?’ என்ற சிறு சந்தேகம் முளைத்ததும் அடுத்த கணமே அவனது அலைப்பேசியின் சமிக்ஞையை ஆராய்ந்திட,அவர்களுக்கு அனைத்தும் வெட்ட வெளிச்சமாகியிருந்து.

அவற்றினை வைத்தே தங்களது மனையாள் மூவரையும் காப்பாற்றி மீட்டு வந்திருந்தார்கள் ஆண்கள்‌.

முகிழ்மதியின் காலில் இலேசாக சூடு வைத்ததற்கே ஆண்கள் மூவரும் உச்சக்கட்ட கொதிநிலையில் இருந்தார்கள்.

இப்போது ஆத்விக் அவர்களது உயிரானவர்களின் உயிரை பறிக்க நினைத்திருக்கிறான்.

அவனை அவ்வளவு எளிதில் அவர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

ரோகிணி அவர்களது குடும்பத்தை தொட நினைத்ததற்கே ஆயுட் காலம் முழுவதும் சிறையில் இருக்க ஏற்பாடு செய்திருந்தான் ரத்தினவேல்.

இன்று அனைத்திற்கும் பின்புலமான ஆத்விக்கிற்கு மரணத்தை விட கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்கள்.

அதன்படி,ஆத்விக் என்ற மனிதன் இருந்த அடையாளமே தெரியாத வகையில் அவனை கடத்தி மொத்தமாய் சிதைத்து,கொடூர விலங்களுக்கு இரையாய் கொடுத்திருந்தார்கள்.

அவனது சரீரத்தின் எச்சம் கூட கிடைக்காத வகையில் மிச்சமின்றி அழித்திருந்தார்கள்.

மகனிற்கே மிகக்குரூர தண்டனை என்றால்,அவனது பிறப்பிற்கு காரணமானவருக்கு சொல்லவும் வேண்டுமா?

அதுவரையிலும் கூட பெரிதாக எதிரியாக கூட காணாமல் சதாசிவத்தை அடக்கி வைத்திருந்த ரத்தினவேல்,அவரது இத்தனை வருட அரசியல் பயணத்தை முழுவதுமாய் நிர்மூலமாக்கியிருந்தான்.

அவர்களது கட்சிக்காரர்களே அவரை அரசியலிலிருந்து அடித்து துரத்துவது போல் கட்சிக்குள்ளே ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தி அவரை பிளந்து வெளியே தள்ளியிருந்தான்.

அவர் இப்போது யாருவருக்கும் உதவாத செல்லக்காசாக வீட்டிற்குள் அடைந்துக் கிடந்தார்.

அவரின் கடந்தகாலம் அறிந்ததினால் அவர்களின் குடும்பமே அவரை அசிங்கத்தை போல் ஒதுக்கி தள்ளியிருந்தார்கள்.

இப்போது சிவராமன் உயிர் வாழ கதியற்று இருப்பது போல்,சதாசிவமும் அனாதையாய் நிற்கதியாய் கிடந்தார்.

தற்போதைய ஆத்விக்கின் தந்தை மட்டும் தனது மகனை தேடி அலைந்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு மகனது பித்தலாட்டங்கள் எதுவும் தெரியாது என்பதால் அவனது திடீர் தலைமறைவை எண்ணி கலங்கிப்போயிருந்தாரே ஒழிய,அதற்கான காரணங்கள் யாவும் அவருக்கும் தெரியவில்லை.

இப்போது ஆண்கள் மூவரின் மனமும் எதிரிகள் அனைவரையும் வேட்டையாடி அழித்தப்பிறகே சமாதானமாகியது.

ஆண்கள் மூவரும் சாந்தமுற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப,நாட்கள் எப்போதும் போல் வண்ணமயமாய் கடக்க ஆரம்பித்தது‌.

அவர்களது மனைவிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

மூன்று பெண்களும் வெளியே தனித்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டன.

அவர்களுக்கும் சூழ்நிலை புரிவதினால் அவற்றினை மறுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் முகிழ்மதியின் துணிச்சல் அனைவராலும் பாராட்டப்பட்டன.

வெகுளியான பெண் என்று அனைவரும் நினைத்திருக்க,தேவையென்றால் ஒரு பெண் ஆத்ம சக்தியாகவும் மாறுவாள் என்று நிரூபித்துக் காட்டியிருந்தாள் முகிழ்மதி.

பெண்கள் மூவர் மட்டுமின்றி அவர்களது வயிற்றில் வளரும் சிசு இப்போது உயிருடன் இருப்பதற்கு காரணமே அவள் தான்!

அதனால் அவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் அவளிற்கு நன்றிக்கடன் பட்டிருந்தார்கள்.

ரத்தினவேலுவிற்கு சொல்லவே தேவையில்லை…

தன் மனைவியைப் பற்றிய பெருமிதம்,அவளின் மீதுள்ள நேசத்தை அதிகரிக்க செய்திட,அவளை இரவு பகல் பாராமல் கொண்டாடினான்.

இப்படியே இரண்டு மாதங்கள் உருண்டோடிட,

சந்திரமதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் குழந்தையை வரவேற்றார்கள்.

பூபதி குடும்பத்தின் முதல் பெண் வாரிசுக்கு ‘ஆதிரா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

மின்னல் போல் தங்களது வாழ்வில் அதிரடியாய் அவள் நுழைந்ததினாலே அவளிற்கு அந்த பெயரை சூட்டினார்கள் ஜித்து சந்திரமதி தம்பதியினர்.

அடுத்த மூன்றே மாதத்தில் தமயந்தி ஒரு அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள்.

அவனிற்கு ‘விக்ரம் பிரதாப்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

பூபதி என்பது வலிமையையும், ஆட்சி அதிகாரத்தையும் குறிக்கும் ஒரு கம்பீரமான பெயர்.

நண்பனின் நினைவாகவே அதே ஆளுமையும் வலிமையும் குறிக்கும் பெயரான விக்ரம் என்ற பெயரை மகனிற்கு சூட்டியிருந்தான் வீர்.

நட்புக்கு என்றும் மரியாதை வழங்குபவன் இப்போதும் வழங்கினான்.

வீட்டினர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…

குழந்தைகள் இருவரையும் பார்த்துக்கொள்வதிலே பெண்களுக்கும் நேரம் போனது.

குழந்தைகளுக்கு ஒரு வயது இருக்கும் தருவாயில் பெண்கள் குழந்தையை வானதியிடம் ஒப்படைத்துவிட்டு தங்களது இலட்சியத்தை தேடி ஓட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சந்திரமதி மீண்டும் கருவுற்றாள்.

அதைக்கேட்டு இம்முறை தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் ஜித்து.

விஷயம் கேள்வியுற்ற காஞ்சனா மாலாவோ “டேய் பேராண்டி…என்னடா அதுக்குள்ள இன்னொன்னா?வரிசையா பிள்ளை பெத்தப்போடற யோசனையிலே எதுவும் இருக்கியா என்ன?” என பேரனை கேலிச்செய்ய,

அவனோ “பாட்டி ஏன்?இல்லை ஏன்னு கேட்கிறேன்…போங்க பாட்டி” என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு செல்ல,

“நான் என்ன இல்லாததையா சொன்னேன்…உன் பையன் எதுக்கு இப்போ மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு போறான் வானதி?” என மருமகளிடம் கேட்க,

“எனக்கும் தெரியலையே அத்தை…ஒருவேளை இப்போ குழந்தை வேணாம்னு நினைச்சிருப்பாங்க போலே…சடனா வரவும் ஷாக் ஆகிட்டான்…சரியாகிடுவான் விடுங்க…நாம்ப அடுத்த தொட்டிலுக்கு இப்போவே ஆர்டர்‌ கொடுப்போம்…வாங்க அத்தை” என பெண்கள் இருவரும் மகிழ்ச்சியாக குழந்தைக்கு தொட்டில் ஏற்பாடு செய்ய கிளம்பினார்கள்.

முகத்தை உர்ரென்று வைத்திருந்த கணவனை கண்டு சிரித்த சந்திரமதி “இப்போ எதுக்கு மூஞ்சிய தூக்கி வைச்சிருக்கீங்க?” என அவனின் கன்னம் பிடித்து கொஞ்ச,

அவனோ “இந்த முறை கன்ட்ரோலா தானே இருந்தேன்…அதெப்படி மறுபடியும் குழந்தை உருவாச்சு?” என்றான் ஒன்றும் அறியாத அப்பாவியாய்…

அவனை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக நோக்கிய சந்திரமதி “நம்ப ஒன் அன்ட் ஆஃப் இயர் ஆனிவர்சரி ஞாபகம் இருக்கா?அன்னைக்கு…” என அன்றைய நாளை அவள் அவனிற்கு ஞாபகப்படுத்தினாள்.

சில நாட்களுக்கு முன்பு,

குழந்தை பிறந்ததிலிருந்து சந்திரமதியிடம் அவன் அன்பாக பழகினாலும்,அவனிடம் ஒரு விலகல் இருந்துக்கொண்டே இருந்தது.

அவளை நீங்காமல் பசைப்போல் ஒட்டிக் கொண்டே திரிபவன் அவளை அறவே நிராகரித்தான்.

முதலில் குழந்தை பிறந்திருப்பதினால் தன்னை விலகியிருக்கிறான் என்று அவள் எண்ணியிருந்தாள்.

குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் கடந்தும் கூட அவளை உடல் ரீதியாக அவன் அணுகவே இல்லை.

அதையும் அவள் எளிதாக கடந்துவிட்டாள்.

ஆனால் ஒரு வருடம் கடந்தும் அவளை நெருங்க முற்படாதது அவளிற்குள் சந்தேகத்தைக் கொடுத்தன.

அதற்காக அவளை முற்றிலுமாக விலகியிருக்கிறானா என்று கேட்டால் ‘இல்லை’ தான்.

அவளை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குபவன் தாம்பாத்திய உறவுக்கு மட்டும் மறுப்பு தெரிவித்தான்.

இதை இப்படியே வளரவிடுவது சரியல்ல என்று எண்ணிய பெண் காலையில் ஜித்து பரபரப்பாக அலுவலகம் கிளம்பி கொண்டிருக்கும் நேரம் அவனின் முன்பு வந்து நின்றாள்.

கழுத்துப்பட்டியை கட்டிக்கொண்டு நின்றவன் அவளை நிமிர்ந்து ஏறிட “ஜித்து இன்னைக்கு ஈவினிங் எப்போ வருவீங்க?” என ஆசையாக கேட்டுக்கொண்டே அவனது கழுத்தைப் பட்டியை கட்டிவிட ஆரம்பித்தாள்.

அதனை கண்டு மென்மையாக புன்னகைத்த ஜித்து “எனக்கு ஈவினிங் ஹோட்டல் சோழாவிலே ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு மூன்…வீட்டுக்கு வரவே ஒன்பது மணி ஆகிடும்” என தகவல் தெரிவித்தான்.

“ஓ…” என ஏமாற்றத்துடன் அவள் முகத்தை சுருக்க,

“ஏன்டி என்ன விஷயம்?” என கேட்டுக்கொண்டே கண்ணாடியின் முன்பு சென்று நின்று தலைவார ஆரம்பித்தான்.

அவளும் விடாமல் அவனின் பின்னோடு வந்து அணைத்து “இல்லை இன்னையோட நமக்கு கல்யாணமாகி ஒன்றைரை வருஷமாகுது…சோ அதை ஸ்பெஷலா கொண்டாடலாம்னு நினைச்சேன்…உங்களாலே சீக்கிரமா வரமுடியுமா?” என தனது வெட்கத்தையெல்லாம் துறந்துவிட்டு அவனிடம் கலவியை யாசிக்க,

அவனோ நாசூக்காக தன்னை தழுவிய கரங்களை விலக்கிவிட்டு “சாரிடி மூன்…உனக்கு ஏமாற்றமா தான் இருக்கும்..‌.ஆனால் இன்னைக்கு நிச்சயமா முடியாது…உனக்காக வேணும்னா நாளைக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போகாமல் லீவு போட்டு உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணறேன்…ஓகே டியர்” என அவளை நோக்கி திரும்பி செல்லம் கொஞ்சிவிட்டு அவன் புறப்பட்டு சென்றுவிட்டான்.

அவளும் வேறு வழியின்றி கணவனிற்காக இரவு ஒன்பது மணி வரை காத்திருந்தாள்.

இரவு நேரத்திலாவது அவனுடன் சிறிது நேரம் செலவளிக்கலாம் என்று சில ஏற்பாடுகளை செய்துவிட்டு அவள் காத்திருந்தாள்.

மணி இரவு ஒன்பதரையை கடந்தப்பிறகும் அவன் வீட்டிற்கு வரவில்லை.

அவனிடமிருந்து “சாரி மூன்…பதினொரு மணி வரை வேலை இருக்கு…நீயும் பேபியும் தூங்குங்க டியர்” என்ற தகவல் மட்டும் வந்திருந்தது.

அவற்றினை படித்தவுடன் கடுப்பான மங்கையவள்,அவனிற்காக பிரத்யேகமாக தயார் செய்திருந்த அலங்காரத்தை எல்லாம் களைத்தெறிந்தாள்.

அவனின் மீது கோபம் இருந்தாலும்  அவனது பணிச்சுமை புரிந்து,அதனை ஏற்றுக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

ஆனால் அடுத்த நாள் அவளிற்காக நேரம் செலவளிப்பதாக கூறிய ஆடவனோ “சாரி மூன்…திடீர்னு பிராஜெக்ட்டிலே ஒரு இஸ்ஸு…நான் ஆஃபிஸ் போயாகணும்…வீக் என்ட் வெளிய போகலாம்…பிளீஸ்டி” என இறைஞ்சு வேண்டினான்.

அவள் அதையும் புரிந்துக்கொண்டு மௌனம் காத்தாள்.

ஒரு வாரம் கடந்தும் கூட அவன் அவளை கண்டுக் கொள்ளவே இல்லை.

தினந்தோறும் குழந்தையை உறங்க வைத்துவிட்டு அவனிற்காக காத்திருந்து அவள் கிட்டத்தட்ட ஏமாற்றமுற்று சோர்ந்துப்போனாள்.

ஒரு வாரம் இரண்டு வாரமாக தொடர்ந்தது.

அவன் அவளை வேண்டுமென்றே விலக்குகிறான் என்பது அவளிற்கு சர்வ நிச்சயம்!

அவளின் மனம் இப்போது கலங்கிப்போயின.

‘அவருக்கு என்னை பிடிக்கலையோ?கொஞ்ச நாளிலே அவருக்கு நான் கசந்துப்போயிட்டானா?’ என்றெல்லாம் குழம்பி தவித்துப்போனாள்.

இதையெல்லாம் எண்ணி சோர்ந்துப்போன பெண்ணவளோ இரவு உடையை அணிந்துக்கொண்டு மெத்தையில் படுக்க ஆயுத்தமானாள்.

அச்சமயம் அறையின் கதவை வெடுக்கென்று திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த ஆடவன் அவளை பிடித்து இழுத்து வன்மையாய் முத்தமிட ஆரம்பித்தான்.

அவனது அதிரடியில் திகைத்த பாவையவள் சில வினாடிகளில் அவனது முத்தத்திற்கு மயங்கி உடன்பட்டாள்.

அவனோ அவள் அணிந்திருந்த இரவு உடை மொத்தத்தையும் ஆவேசமாக கிழித்தெரிந்துவிட்டு அவளை ஆட்கொள்ள துவங்கினான்.

அவனிடமிருந்தே இப்படியொரு ஆக்ரோஷத்தை அவளே எதிர்பார்க்கவில்லை.

அவனது செயலில் மிரண்ட சந்திரமதி “ஜித்து வலிக்குது…பிளீஸ்…மெதுவா” என வெளிப்படையாக கூறியதற்கு பிறகே அவனும் சற்றும் நிதானமடைந்தான்.

அவளை அவசரமாக ஆக்கிரமித்துவிட்டு அவளின் மேல் படர்ந்த ஜித்து அவளின் கன்னத்தை ஆழமாக கடித்து வைத்தான்.

அவள் வலியில் “ஆ…ஏன்டா கடிக்கிறே?” என அவனது வெற்றுத்தோளில் பட்டென ஒரு அடி வைத்திருந்தாள்‌.

அவனோ “வலிக்குதா நல்லா வலிக்கட்டும்டி” என கோபத்துடன் மொழிந்தவன்,வேகமாக எட்டி தனது அலைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டிய “என்னடி இது?” என உறுமலாக கேட்டான்.

ஆம்,சிறிது நேரத்திற்கு முன்பு தனது மனக்குமுறல்கள் அனைத்தையும் அவனிற்கு ஒலி தகவலாக பதிவுச் செய்து அனுப்பியிருந்தாள்.

அதனை அவளிடம் போட்டு காண்பித்து “நீ எனக்கு கசந்திட்டியா?யாருடி இப்படியெல்லாம் சொன்னது பைத்தியக்காரி மாதிரி பேசி வைச்சிருக்கே?” என பல்லை கடித்து சீற,

அவளோ “ஆமா நான் பைத்தியம் தான்…உங்களுக்காக நான் ஏங்கறேன்னு தெரிஞ்சும் கூட இந்த ஒரு வருஷமா என்னை நீங்க அவாய்ட் பண்ணிட்டே இருக்கீங்க?அப்போ என்னனு நினைக்கிறது…உங்களுக்கு என்னை பிடிக்கலையா ஜித்து?என்னோட இருக்கிற உறவு உங்களுக்கு கசந்திடுச்சா?” என்று கேட்கும் போதே அவளின் விழிகள் கலங்கிப்போயின.

அவனது விலகல் அவளின் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவனோ “ப்ச் பைத்தியக்காரி…நான் உன்னை விலகியிருந்ததுக்கு காரணம் நீ எனக்கு கசந்ததாலே இல்லைடி…நீ தேனாய் இனிக்கிறே…ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் உன்னை ருசிச்சிட்டே இருக்க தான் என்னோட மனசும் உடம்பும் ஏங்குது…உன் மேலே அவ்வளவு ஆசையிருக்கு…அந்த ஆசையே உனக்கு விலங்கா மாறிக்கூடாதுனு தான் நான் விலகியிருக்கேன்” என உயிரை உருக்கும் சொன்னவனின் விரல்கள் அவளின் கண்ணீரை துடைத்தன.

கண்ணீரை துடைத்த அவன் கரங்களை பற்றிய சந்திரமதி “என்ன சொல்றீங்க?” என குழப்பமாக ஏறிட,

அவனோ தொண்டையை செருமனி பேச ஆரம்பித்தான்.

“உனக்கு இப்போ தான்டி குழந்தை பொறந்து ஒரு வருஷமாகுது…நார்மல் டெலிவரியா இருந்தாலும் நீ பட்ட வலியை உன்கூடவே இருந்து கண்ணாலே பார்த்தப்பிறகு என்னாலே உன்னை நெருங்க முடியலைடி…என்னோட தாம்பாத்திய சுகத்தை விட பெண்களோட பிரசவ வலி எவ்வளவு கொடுமையா இருக்குனு அதை நேரிலே பார்க்கும் போது தான் நானே தெரிஞ்சுக்கிட்டேன்…நீ இவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தை பெத்ததை பார்த்தப் பிறகு என்னாலே உன்னை நெருங்க முடியலை‌…எங்க உன்னை நெருங்கி அதனாலே எங்க குழந்தை உருவாகிடுமோ?அதனாலே நீ கஷ்டப்படுவியோனு பயமா இருக்கு” என அச்சத்துடன் கூடிய கவலையுடன் விளக்கியவனின் பேச்சில் அவளின் மீதான நேசம் மட்டும் பிரதானமாக இருந்தது.

இறுதியில் அவளிற்காக யோசித்து தான் அவன் விலகியிருந்து இருக்கிறான் என்று தெரிந்ததும் உருகிப்போன பெண்ணவள் “லூசா நீங்க?பிரசவ வலி எல்லா பெண்களுக்கு வருவது இயற்கை தான்…அந்த நிமிஷம் வலியா இருந்தாலும் அதுக்கு பிறகு சந்தோஷமா இருக்கும்…அந்த சில நிமிஷ வலிக்காக காலம் பூராவும் என்னை நீங்க விலகியே இருப்பீங்களா?” என கணவனின் கன்னத்தை பிடித்து கிள்ளி ஆட்ட,

அவனோ “எனக்கும் உன்னை பிரிஞ்சு இருக்க கஷ்டமா தான் இருக்குடி…ஆனால் …” என அப்போதும் அவளின் நலனிற்காக சிந்தித்த கணவனின் அன்பில் அவளிற்கு காதல் எக்கச்சக்கமாய் கூடியது.

அதனால் அவனை கட்டியணைத்து “ஜித்து இப்படி ஆனால்னு எல்லாம் இழுக்காதீங்க…கர்ப்பம்ன்றது பெண்களுக்கு ஒரு வரம்ங்க…அதுவொரு சாபம் கிடையாது…அந்த வரத்தின் மூலம் நமக்கு கிடைக்கிற வரப்பிரசாதம் தான் குழந்தை…அப்படியான பிரசவ வலியை தாங்கினதால் தான் நமக்கு ஆதிரான்ற வரம் கிடைச்சிருக்காள்” என தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தன் குழந்தையை சுட்டிக்காட்டி உரைத்தவள்,

“இந்த மாதிரி ஒரு பரிசுக்காக எத்தனை வலியை வேணும்னாலும் தாங்கலாம்ங்க…இதுக்கு போயா நீங்க என்னை விலகியிருந்தீங்க…உங்களை என்னங்க செய்யலாம்?” என மெல்லிய சிரிப்புடன் கேட்டு அவனின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

அவனிற்கும் அப்போது தான் மனம் தெளிவுற்றது.

பொதுவாக,பெண்களின் பிரசவ வலியை நேரில் காணும் ஆண்கள் சிலரின் மனநிலை இவ்வாறாக இருக்கும்.

அதற்காகவே வெளிநாட்டு கலாச்சாரப்படி நமது ஊரில் ஆண்களை பிரசவ அறைக்கு அனுமதிக்க மாட்டார்கள்‌.

ஆனால் அதையும் மீறி ஒரு சில மருத்துவர் பெண்களின் வலியை ஆண்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கணவரை உள்ளே அனுமதிப்பார்கள்.

அவ்வாறு உள்ளே சென்றதின் விளைவு தான் தாம்பத்தியம் பற்றிய ஜித்துவின் பயத்திற்கு காரணியாய் அமைந்தது.

அவர்களது அந்த ஒரு வருடப்பிரிவிற்கும் காரணக்கர்த்தாவாகியிருந்தது.

இப்போது மனைவியின் பேச்சில் தெளிந்த ஜித்து “அப்போ உனக்கு இதிலே ஒண்ணும் பிரச்சனையில்லையே” என அவளின் விழியை கூர்ந்தப்படி வினவ,

அவளோ “எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை…” என சிரித்துக்கொண்டே சொல்ல,அதன்பிறகே ஆடவனது மொத்த தயக்கமும் மறைந்திட பழைய ஜித்து மீண்டு வந்திருந்தான்.

அவனது காதலும் குறும்பும் கூட திரும்ப வந்திட “நான் ஹிக்கி ஸ்டாம்ப் கொடுத்தா கூட உனக்கு ஓகே மூன்?” என விஷமத்துடன் நாசியோடு நாசி உரசி வினவ,

அதில் வெட்கத்தில் சிவந்த மங்கை “கடைசி வரை நீங்க கடிச்சு வைக்கிறதை மட்டும் விடமாட்டிங்க…அப்படி தானே” என கிண்டலாக கூறினாலும் “ஹும்” என அவனது கழுத்தை வளைத்து தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள்.

தன்னவளே விருப்பம் தெரிவித்தப்பிறகு அவனிற்கு என்ன கவலை?

தன்னவளின் இதழை சிறை செய்து முத்தமிட ஆரம்பித்தவனின் இதழ்கள் மெதுவாக கீழிறங்கி அவளது நெஞ்சத்தை அடைந்தன.

அங்கும் தன் முத்த யுத்தத்தை அவன் ஆரம்பித்திட,சட்டென அவனது விழிகள் வியப்பில் விரிந்திட “ஹே” என சந்தோஷம கூச்சலிட்டவாறு அவளை விழி உயர்த்தி ஏறிட,

அவளோ “என்ன?” என புருவம் உயர்த்தி கேட்க,

“எப்படிடி?” என்று கேட்டவனின் முகத்தில் அப்படியொரு பரவசம்…மகிழ்ச்சி…

அவனது முகத்தில் தெரிந்த உணர்வுகளை படித்தவளிற்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க “உஷ் அதெல்லாம் எதுவும் கேட்காதீங்க…” என நாணத்துடன் வாயில் விரல் வைத்து முகம் சிவக்க உரைக்க,

ஆடவனோ உச்சக்கட்ட ஆனந்தத்துடன் “தேங்க்ஸ்டி மூன்” என அவளின் இதழில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தவன்,அவளது தாய்மையின் தேனமுதம் முழுவதையும் அருந்தியிருந்தான்.

அவன் கொடுத்த வன்மை பொருந்திய வலியையும் அவனிற்காக இதழ்கடித்து அவள் பொறுத்துக்கொள்ள,அன்றைய நாளில் அவளது வயிற்றில் மீண்டும் ஒரு முறை ஜீவன் ஜனித்தது..

அன்றைய நாளை நினைவுறுத்தி “இப்போ புரியுதா?” என அவள் கிண்டலாக அவனை கேட்க

அவனோ “ஊப்…ஆமா அன்னைக்கு சந்தோஷத்திலே நான் நானா இல்லை…” என பின்னந்தலையை வருடிக்கொண்ட ஜித்து ”சாரிடி…அவ்வளவு தூரம் பேசிட்டு நான் மறுபடியும் தப்புப்பண்ணிட்டேன்…ஐயம் ரியலி சாரி” என்று மனமாற வருந்தி மன்னிப்பு வேண்டினான்.

“ப்ச் இப்போ எதுக்கு சாரி?எனக்கு இந்த பேபி உருவானதில் ஹேப்பி தான்…பிரசவ வலியை பத்தி கவலைப்படாதீங்க…அதை நான் பார்த்துக்கிறேன்…உங்களுக்காக எத்தனை பேபி வேணா என்னாலே பெத்துக்க முடியும்…டோன்ட் வொர்ரி…” என உறுதியாக கூறி, அவனை‌ ஆறுதலாக அணைத்துக்கொண்டாள்.

முதல் குழந்தை உருவான சமயம் அவன் அவளிற்கு ஆதரவாக இருந்தான்…

இன்று இவள் அவனிற்கு ஆறுதலாக இருந்தாள்.

தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து புரிதலுடன் செயல்படுவது தானே திருமண உறவின் தாத்பரியம்…

அதனை தெளிவாக புரிந்துக்கொண்டு செயல்பட்டார்கள் தம்பதியினர் இருவரும்.

சந்திரமதி இரண்டாம் முறை கருவுற்றிருந்ததால் அவளையும் தனது குழந்தைகளையும் ஜித்து தாங்க ஆரம்பித்தான்.

அவனது குடும்பத்தினரும் அவனிற்கு பக்கப்பலமாய் இருந்தார்கள்.

அதன் பலனாய்,சந்திரமதி ஜித்து தம்பதியினருக்கு இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் பெயர் ‘மையா’ என்று சூட்டப்பட்டது.

மையா என்றால் பண்பானவள்.

முகிழ்மதியினை போன்ற அடக்கமும் பணிவும் கொண்டு பிறந்திருந்தாள்.

கிட்டத்தட்ட அப்படியே முகிழ்மதியை கொண்டு பிறந்திருந்தாள் அவள்.

இப்போது விக்ரம்,ஆதிரா இருவரும் இணைந்து சிறியவளை அன்புடன் வரவேற்றார்கள்.

விக்ரமும் ஆதிராவும் ஒரே வயது உடையவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உண்டாக ஆரம்பித்தது.

அடுத்த இரண்டாவது தலைமுறைக்கான நட்பு அங்கு பிறந்தது.

மையா பிறந்து ஒரு வருடம் கழித்து,
தமயந்தி தந்தை தமையனை பின்பற்றி தீவிரமாக அரசயலில் இறங்கியிருந்தாள்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top