முகிழ்மதி 3


 

 

இன்றும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு கண் விழித்தாள் முகிழ்மதி.

மீண்டும் அதே கனவு!

அவளது நெற்றி முழுவதும் வியர்வை அரும்புகள் பூத்திருந்தன.

அவளின் அடர்த்தியான கட்டுக்கூந்தல் கலைந்து கிடக்க,அவளிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் வழக்கத்தை விட சற்று வேகமாக அவளின் இதயத்துடிப்பு அதிகரிக்க ‘கடவுளே இந்த கனவு ஏன் எனக்கு அடிக்கடி வருது?என்னை இது நிம்மதியாவே தூங்க விடமாட்டிக்குது’ என அச்சத்துடன் புலம்பிக் கொண்டே,பக்கவாட்டு மேசையிலிருந்து தனது சுவாச உள்ளிழுப்பானை(இன்ஹேலர்) எடுத்தாள்.

அப்போதும் அவளின் கரங்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.

அவளின் சுவாசம் சீரற்று தாறுமாறாக ஏறி இறங்க,சட்டென உள்ளிழுப்பானை தன் உதடுகளுக்கு இடையில் வைத்து,ஆழமாக மூச்சை இழுத்தாள்.

அவளிற்கு சிறு வயதிலிருந்தே சுவாச கோளாறு நோய் இருந்து வருகிறது.

குறிப்பாக,இந்த கனவு வந்துவிட்டால் அவளால் ஒரு கணம் கூட நிம்மதியாக மூச்சுவிட முடியாது.

அந்த கனவிற்கான அர்த்தம் வேண்டி அவள் பல வகையில் முயன்றும் கிடைத்த விடை என்னவோ பூஜ்ஜியம் தான்!

மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே இந்த கருவியை பயன்படுத்தி வருகிறாள் முகிழ்மதி.

அவளின் சுவாசம் மீண்டும் சீரானதும் விழி உயர்த்தி கடிகாரத்தை நோக்கினாள்.

அது காலை 7 மணியை காட்டியது.

அவள் செய்வதற்கு எந்தவொரு வேலையும் இருக்கவில்லை.

அவளிற்கு இப்போது தான் வயது பதினெழை கடந்து பதினெட்டை தொட்டிருந்தன.

அவளின் பள்ளிப்படிப்பு பத்தாம் வகுப்போடு நின்றிருந்தது.

அவளிற்கு தொடர்ந்து படிக்க விருப்பமிருந்தாலும்,விஜயலட்சுமி அவளை மேற்கொண்டு கல்வி கற்க அனுமதிக்கவில்லை.

பள்ளி கல்வியை முடிக்காததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை.

ஆனால் இரண்டு வருடமாக இறைஞ்சு,அவளின் தந்தை சிவராமன் சிறிது மனமிறங்கியதால் இப்போது தான் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாள்.

அதையெல்லாம் எண்ணி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள்,படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.

குளித்துவிட்டு பச்சை நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட தாவணி அணிந்து வெளியே வந்தாள் முகிழ்மதி.

அவள் தயாராகி கீழிறங்கி வந்தப்போது அங்கு அவளின் சகோதரி சந்திரமதியும் இருந்தாள். 

பதினெட்டு வயதான சந்திரமதி அவளின் இரட்டை சகோதரி.

அவளிற்கு ஒரு வினாடி முன்பு பிறந்ததினாலே முகிழ்மதிக்கு அவள் தமக்கையாகிப்போனாள்.

தோற்றத்தில் இருவரும் ஒன்று போல் இருந்தாலும் இருவரின் குணநலன்களிலும் ஆயிரம் வித்தியாசங்கள்!

குணத்தில் மட்டுமல்ல அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றும் தோரணை என முற்றிலும் வேறுபட்டவர்கள்!

முகிழ்மதி அமைதியான,அப்பாவிப் பெண்ணாக இருக்க,சந்திரமதி துணிச்சலான,தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக இருந்தாள்.

முகிழ்மதி சுயநலமில்லாத குணம் படைத்தவள்.

ஆனால் சந்திரமதி தன்னலத்தின் மொத்த விம்பம்.

அவள் தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை…சிந்திக்கவும் விரும்பமாட்டாள்.

அதற்கு காரணம் அவளின் பெற்றோர்கள்.

ஒரு தாயின் வயிற்றில் பிறப்பெடுத்திருந்தாலும்,சிறு வயதிலிருந்தே இருவருக்கும் வேற்றுமை பாராட்டியே வளர்க்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களை பொறுத்த வரை சந்திரமதி மிகவும் நல்ல பெண்.ஆனால் முகிழ்மதி என்பவள் கேடுக்கெட்ட தீய பழக்கங்கள் கொண்டவள்.

மிகச்சிறிய வயதிலிருந்தே சந்திரமதி செய்யும் குற்றங்களுக்கான தண்டனை கூட முகிழ்மதிக்கு தான் கிடைக்கும்.

முகிழ்மதி பலமுறை அதனை எடுத்துக்கூற முயன்றாலும்,அவளால் அது முடிந்ததில்லை.

காலங்கள் கடந்து செல்கையில் முகிழ்மதியே தன் சகோதரிக்கான பழியையும் ஏற்று சுமக்க பழகியிருந்தாள்.

இது தான் தனக்கு நியமிக்கபட்ட விதி என்றெண்ணி அவளும் மௌனமாய் சிலுவை சுமந்துக்கொண்டிருந்தாள்.

பெற்றோர்களுமே எங்கு தவறு நேர்ந்தாலும் அதற்கு காரணம் முகிழ்மதியே என முத்திரை குத்தி,அவளை சொற்களால் மட்டுமின்றி உடலாலும் அவளை வதைக்க தொடங்கியிருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை போன்று,சகோதரி செய்த தவறுக்கான தண்டனையையும் சேர்த்து அவளே அனுபவிக்க நேர்ந்தது.

அவளின் இந்த துன்பத்திற்கு மற்றொரு காரணம்,அவர்களது ஒரே மாதிரியான தோற்றமும் முக அமைப்புமே!

அவர்கள் இருவரின் முகங்களும் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்தாலும்,இருவருக்குமிடையில் ஒரு வித்தியாசம் இருந்தது.

முகிழ்மதியின் உதட்டிற்கு மேலே ஒரு சிறிய மச்சம் இருக்கும்,ஆனால் சந்திரமதிக்கு அது இருக்காது.

அதையும் கூட இருவரையும் நெருங்கி நின்று கவனித்தால் மட்டுமே தெரியும்.

இருவருக்குமான வித்தியாசம் அறிய கூடிய ஒரே ஒரு நபர் அவளின் தாய் விஜயலட்சுமி மட்டுமே!

ஆனால்,அதனை யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார் அவர்.

அவருக்கு சந்திரமதி என்றால் கொள்ளை பிரியம்.அதுவே,முகிழ்மதியை கண்டாலே வெறுத்து ஒதுக்குவார்.

எந்த அளவு என்றால் சந்திரமதியை மட்டும் சென்னைக்கு அனுப்பி ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்ப்பித்திருந்தார்.

ஆனால் முகிழ்மதியை பத்தாம் வகுப்போடு நிறுத்தியிருந்தார்.

எதற்காக இந்த ஓரவஞ்சனை என்ற காரணம் தான் அவளிற்கும் பிடிப்படவில்லை.

மொத்தத்தில் முகிழ்மதி மாசு மருவற்ற ‘மதி(நிலா)’ என்றால்,சந்திரமதி களங்கத்தின் மொத்த விம்பம்!

இத்துணை கொடூரங்கள் நடந்தப்பிறகும் அவளால் தமக்கையை வெறுத்து ஒதுக்க முடியவில்லை.

ஒட்டி உறவாடி தன்னுடன் பிறந்த சகோதரி என்ற பாசம் அவளிற்கு!

ஆதலால்,தமக்கையின் மீது எப்போதும் பிரியமாக இருப்பாள் முகிழ்மதி.

தற்போது தன்னை பார்த்தவாறே மாடிப்படியிலிருந்து இறங்கி வந்த முகிழ்மதியை பார்த்ததும்,சந்திரமதி நீள்விரிக்கையிலிருந்து வேகமாக எழுந்து வந்தாள்.

அப்போது அவர்களின் பெற்றோர்கள் காலை உணவில் மும்முரமாக இருந்தனர்.

பிள்ளைகளை பற்றிய அக்கறை இருவருக்குமில்லை.

சந்திரமதி வேகமாக முகிழ்மதியை நெருங்கி “முகிழ் ஒரு நிமிஷம் என் ரூமுக்கு வா” என  மெல்லிய குரலில் அழைக்க,

அவளும் எவ்வித மறுப்பும் கூறாமல் தலையசைத்துவிட்டு,தனது தாவணியைத் திருகிக்கொண்டே அவளின் பின்னோடு சென்றாள்.

இருவரும் ஒன்றாக அறைக்குள் சென்றதும்,சந்திரமதி கதவை மூடிவிட்டு முகிழ்மதியை நோக்கி வந்தாள்.

எடுத்த எடுப்பிலே “என்னை மன்னிச்சிடு முகிழ்” என கண்ணீர் குரலில் அவளிடம் மன்னிப்பு வேண்டினாள் சந்திரமதி.

அவளின் முகத்தில் அப்பாவித்தனம் தாண்டவமாடின.

வெளியே மட்டுமே அவளின் முகம் கவலையைப் பூசியிருந்தது.

உள்ளுக்குள் அனைத்தும் வேடம்!

அவள் குற்றவுணர்வு உள்ளவள் போல் முகத்தை வைத்திருக்க,அவளின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வரவில்லை.

அவளின் பேச்சு,பாவனை அனைத்தும் போலியானது.

ஆனால் தமக்கையின் பித்தலாட்டத்தை அறியாத மங்கையவளோ குழப்பம் நிறைந்த முகத்தோடு “எதுக்கு அக்கா சாரி?” என புரியாமல் வினவினாள். 

சட்டென பாய்ந்து வந்து அவளை கட்டியணைத்தவள் “மு..முகிழ் முகிழ் என்னை மன்னிச்சிடுடி…அன்னைக்கு நடந்த தப்புக்கு நான் தான் காரணம்” என அழுகையில் தேம்பிக்கொண்டே அவள் பேச,

தமக்கை அழுகிறாள் என்றவுடன் இந்த பேதை பெண்ணின் மனம் துடித்துப்போனது.

“ஐய்யோ அக்கா எதுக்குக்கா அழறே?அழாதே அக்கா” என அழுகையில் பிதுங்கிய இதழோடு அவளை தன்னோடு சேர்த்த அணைத்த முகிழ்மதிக்கும் அழுகை வந்தது.

அவளோ “என்னால் தானே அன்னைக்கு நீ அப்பாகிட்டயிருந்து அடி வாங்கினே…இதெல்லாம் கேள்விப்பட்டவுடனே என் உயிரே போயிடுச்சு…எல்லாம் என்னாலே தான் முகிழு…நான் அப்படி நடக்கும்னு யோசிக்கவே இல்லை…என்னை மன்னிச்சிடுடி” என்று வராத கண்ணீரை துடைத்தப்படி சொல்ல,

அதையும் நம்பினாள் அந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரி.

அவள் இப்போதும் முகிழ்மதியின் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க முயன்றாள்,ஆனால் உண்மை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

எங்கு காய் நகர்த்தினால் அவள் வீழ்வாள் என்ற வித்தை அறிந்து வைத்திருந்தாள் அவள்.

அவள் எண்ணியது போலவே “பரவாயில்லைக்கா…இதிலே உன்னோட தப்பு என்னயிருக்கு…அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னை பார்த்தாலே பிடிக்காது…அதனால்தான் அந்த போட்டோவை பார்த்தவுடனே என்ன ஏதுன்னு கூட விசாரிக்காமல் நான் தான் குற்றவாளினு முடிவுப்பண்ணிட்டாங்க” என்று உச்சக்கட்ட சோகத்துடன் கூறியவள்,

பின்பு வந்த அழுகையை அடக்கி “ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்கா…அவங்களுக்கு நீ தான் அந்த போட்டோவிலே இருக்கிறதுனு தெரிஞ்சா உன்னையும் சேர்த்து அடிச்சிடுவாங்கக்கா…எனக்கு அவங்ககிட்ட அடி வாங்கி பழகிப்போச்சு…ஆனால் நீ அதெல்லாம் தாங்கமாட்டேக்கா…அவங்க கண்ணுக்கு நான் எப்பவும் கெட்டவள் தான்…அப்படியே இருந்திட்டு போகட்டும்கா” என்று உணர்ச்சிபெருக்குடன் சாராவின் முதுகைத் தடவிக்கொண்டே முகிழ்மதி கூறினாள்.

அவளின் சொற்களை கேட்ட சந்திரமதி ஒரு வெற்றிப் புன்னகையை உதிர்த்தாள்.

அவள் மற்றவரிடம் தன்னை மாட்டிவிடக்கூடாது என்று எண்ணியே இப்போது சகோதரியிடம் நாடகமாடினாள்.

அதில் வெற்றியும் கண்டாள்.

முகிழ்மதி அவளிடமிருந்து விலகியதும்,மீண்டும் பரிதாபமான முகப்பாவனையை அவள் மாற்றிக்கொண்டாள்.

ஆனால் அதையும் ‘நிஜம்’ என்று நம்பிய முகிழ்மதிக்கு நெஞ்சம் வலித்தது.

“அக்கா…ஆனால் ஒரு விஷயம்…இதுப்போலே பொது இடத்திலே ஒரு ஆம்பிளைக்கு முத்தம் கொடுக்கிறதெல்லாம் தப்புக்கா…அதெல்லாம் கெட்ட பழக்கம்…இனிமேல் அப்படியெல்லாம் செய்யாதே நீ” என தமக்கைக்காக வருந்தினாலும் ஒரு சகோதரியாக அவளை கண்டிக்கவும் செய்தாள் முகிழ்மதி.

ஆனால் சந்திரமதியோ ‘ஆரம்பிச்சிட்டா பழைய பஞ்சாங்கத்தை…ப்ச்’ என உள்ளுக்குள் எரிச்சலுற்றவள்,வெளியே முகிழ்மதியின் கரத்தை பற்றி “இல்லை முகிழு…நான் எந்த தப்பும் செய்யலை…எனக்கே தெரியாமல் என் ஃப்ரெண்ட்ஸ் நான் குடிக்கிற ஜுஸுலே சரக்கை மிக்ஸ் பண்ணிட்டாங்க…என் சுய நினைவே இல்லாமல் தான் இதெல்லாம் நடந்திருக்கு…அதுமட்டுமில்லாமல் யாரோ அதை போட்டோவா எடுத்து ஆன்லைனிலே போஸ்ட் பண்ணியிருக்காங்கடி…மத்தப்படி நான் மனசறிஞ்சு எந்த தப்பும் செய்யலை” என விசும்பிக்கொண்டே இரண்டு சொட்டு கண்ணீர் விட்டவுடன்,அதை அப்படியே நம்பி விட்டாள்‌ சிறியவள்.

உடனே தமக்கைக்காக நெஞ்சம் பதற “ஐய்யோ அக்கா…அழாதே” என அவளின் கண்ணீரை தனது தாவணியால் துடைத்துவிட்டவள்,

“இனி உன்னை தப்பா பேசமாட்டேன்கா…நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு…காலம் கெட்டு கிடக்கு…அந்த கெட்டவங்க பழக்கத்தை வெட்டி விட்டிருக்கா…நமக்கு அவங்க சாவகாசமெல்லாம் வேணாம்” என அவளின்‌ கன்னத்தை ஆதுரத்தோடு வருடினாள்.

அவளின் கரத்தை தன் கன்னத்தோடு அழுந்தப்பற்றிய சந்திரமதியும் “சாரிடி…இனிமேல் நானும் கொஞ்சம் கவனமா இருக்கேன்…நீ அடி வாங்கினால் என்னாலையும் தாங்க முடியாது” என கூறவும்,மீண்டும் அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள் முகிழ்மதி.

சகோதரிகள் இருவரும் ஒன்றாக சமாதானமாகியவுடன் முகிழ்மதி “அக்கா இன்னைக்கு வெள்ளிக்கிழமை…நான் கோவிலுக்கு போறேன்…நீயும் வர்றீயா?” என்று தமக்கையை அழைக்க,

அவளோ “இல்லைடி…நான் இன்னும் குளிக்கவே இல்லை… நீ போயிட்டு வா” என்றாள் போலியான புன்னகையுடன்.

“சரிக்கா…நான் போயிட்டு சீக்கிரம் வந்திடறேன்…நீ ரெஸ்ட் எடு” என மெல்லியதாக சிரித்துக்கொண்டே தலையசைத்து கிளம்பிவிட்டாள்.

சந்திரமதியும் பதிலுக்கு கையசைத்து புன்னகையுடன் அவளை வழியனுப்பி வைத்தாள்.

அவள் அங்கிருந்து சென்ற அடுத்த கணமே அவளின் புன்னகை மறைந்து வெறுப்பு மண்டியது.

‘கடவுளே பொய்யா அழுது அழுது என் கண்ணெல்லாம் எரியுது…சிரிச்சு சிரிச்சு வாயும் சேர்த்து வலிக்குது…போய் ஃபேஸ் மசாஜ் பண்ணால் தான் சரியா வரும்’ என தாடையைப் பிடித்து முனகிக்கொண்டே உள்ளே சென்றாள்.

தாயிடம் கூறிவிட்டு கோவிலுக்கு சென்ற முகிழ்மதி அழகான பச்சை நிற தாவணி அணிந்திருந்தாள்.

அவளது நீள கூந்தலை தளர்வாக பின்னி பின்னலிட்டிருந்தாள்.

வெள்ளி ஆக்சிடைஸால் செய்யப்பட்ட காதணிகள் அவளை மேலும் அழகாகக் காட்டின.

கழுத்தில் அதே நிற வண்ணத்துப்பூச்சி வடிவ கழுத்தணி அணிந்திருக்க,அவளின் விழியில் மை தீட்டியிருந்தாள்.

முகத்தில் சிறிதளவு கூட செயற்கை ஒப்பனையில்லை.

இயற்கையான அழகில் தேவதையாக மிளிர்ந்தாள் ரதியவள்.

இடது கையில் அதே வெள்ளி ஆக்சிடைஸ் வளையல்களும்,வலது கையில் ஒரு கருப்பு நூலும் அணிந்திருந்தாள்.

அவளின் வளையல் குறைந்தபட்ச கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்டு செய்யப்பட்டிருந்தது.

அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவளின் தங்க கால் சலங்கைகள் கலகலத்தன.

இப்படியான தெய்வீக கலையம்சங்களோடு முகிழ்மதி ஒரு புறம் கோவிலுக்கு வந்துக்கொண்டிருக்க,

மறுபுறம் ஒருவன் கனகச்சிதமாக தைக்கப்பட்ட வெண்ணிற பட்டு சட்டை மற்றும் வேட்டி அணிந்து,மகிழுந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தான்.

அவன் ரத்தினவேல் ரகுநாத பூபதி.

அவன் அணிந்திருந்த ஆடை அவனது உடலின் பராக்கிரமத்தை எடுத்து காட்டும் வகையில் நேர்த்தியாக பொருந்தியிருந்தது.

அவன் அணிந்திருந்த பட்டு வேட்டியின் சரிகை சுத்தமான தங்கத்தால் நையப்பட்டிருந்தது.

அவனது மணிக்கட்டிலிருந்து வந்த பளபளப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடியதாய் இருந்தது.

ஏனெனில்,அது தங்கத்தால் வைர முற்கள் பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தங்க கைக்கடிகாரம்!

அவை மட்டுமே அவனின் அலங்காரம்!

பெரிதாக எவ்வித அலங்காரமும் இல்லாமலே கம்பீரமான தோரணையில் மற்றவரை கவர்ந்திழுத்தான் அவன்.

இப்போது அந்த விலையுயர்ந்த உடைமைகள் அவனை மேலும் மெருக்கூட்டி ஆண்மையின் மற்றொரு இலக்கணமாய் அவனை திகழ வைத்தன.

நேர்த்தியாக திருத்தம் செய்யப்பட்ட அவனது சிகை மற்றும் தாடி மீசை,இவை மூன்றும் படிய வாரப்பட்டிருந்தன.

புருவங்கள் இடுங்க தாடி மீசையை தடவியப்படி அலைப்பேசியில் வெகு தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தான் அவன்.

“டேய் உன்கிட்ட சொன்னா தான் ஒரு விஷயத்தை பண்ணுவியா?சொல்லாமல் உனக்கே செய்ய தெரியாதா?ஹும்” என அவன் உறும,

எதிர்புறம் இருந்தவன் ‘என்ன கூறினானோ?’,

அதற்கு ரத்தினவேல் உச்சக்கட்ட ஆத்திரத்துடன் “ஷட் யுவர் பிளடி மவுத்…எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் சொல்லிட்டே இரு…இடியட்” என சீறியவன்,

“இன்னும் இரண்டு மணி நேரத்திலே அந்த சிவராமனோட ஃபுல் டீடையல்ஸ் எனக்கு வேணும்…அப்படி இல்லைனா நாளைக்கு அந்த சிவராமனுக்கு பதிலா உன்னோட தலை மண்ணுலே உருண்டு கிடக்கும்” என்றான் உயிரை ஊடுருவும் குரலில்.

அவனது வார்த்தையை கேட்டு எதிரில் இருந்தவனிற்கு குளிர் காய்ச்சலே வந்தது என்றால்,

வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுனருக்கு பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது.

ஆனால் அவனது பக்கவாட்டில் அமர்ந்திருந்த காஞ்சனா மாலாவோ வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தார்.

அவருக்கு அவனது உரையாடல் எல்லாம் பழகிப்போன ஒன்று!

மூன்று தலைமுறையாக அரசியல் குடும்பத்தில் வாழ்ந்து வருபவருக்கு அனைத்தும் அத்துப்படி.

அதனால் பெரிதாக எவ்வித உணர்வையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

இப்போது அவர்கள் அனைவரும் குடும்பமாக குல தெய்வ கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.

மேலும்,மூன்று வாகனத்தில் மீதமுள்ள அவனது குடும்பத்து உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வந்துக்கொண்டிருக்க,இன்னும் சில வாகனத்தில் அவனது மெய் காப்பாளர்கள் பயணித்தார்கள்.

அவன் அரசியலில் மிகப்பெரிய பதவியில் இல்லை என்றாலும்,அவனது தந்தை விஜயேந்திர பூபதி தமிழகத்தின் முதல்வராக இருந்து வருகிறார்.

ஆனால் அவரது அரசியல் பயணத்தின் சாணக்கிய மூளை அவரது தலைமகன் ரத்தினவேல் தான்!

விஜயேந்திர பூபதி தற்போது முதல்வராக பணியேற்றதற்கு காரணமும் இவனே!

விஜயேந்திர பூபதியின் மனைவி வானதி.

இவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள்.

முதலாமவன்,ரத்தினவேல் ரகுநாத பூபதி.

இரண்டாவது,ஜிதேந்திர பூபதி,25 வயது.

மூன்றாவது,தமயந்தி.21 அகவை கொண்ட இளம்பெண்.வீட்டின் செல்லப்பிள்ளை.

அன்பும்,குறும்பும் நிறைந்த அழகான பெண்.வீட்டின் செல்லப்பிள்ளை.

காஞ்சனா மாலாவிற்கு அடுத்ததாக ரத்தினவேலிடம் துணிச்சலாக பேசிக்கூடிய ஒரு ஆள் இவள் ஒருவளே.

தற்போது வீட்டிற்கு மூத்த வாரிசான ரத்தினவேலிற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த காஞ்சனா மாலா,ஒரு முறை குலத்தெய்வ கோவிலுக்கு சென்று குறி கேட்டு வந்துவிடலாம் என்று எண்ணி இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.

ஆனால் இதைப்பற்றி அவனிடம் குடும்பத்தார் யாவரும் மூச்சே விடவில்லை.

அவனிற்கு முன்பே தெரிந்தால் கோபம் கொள்வான் என்று அறிந்தே காஞ்சனா மாலா இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.

இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் குல தெய்வ கோவிலை அடைய இருந்த சமயத்தில்,பாட்டி ஓட்டுநரிடம் ஏதோ ஒன்று சொல்லவே,அவர் காரை நிறுத்தினார்.

அதை கவனித்த ரத்தினவேல் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு பாட்டியை ஏறிட்டான்.

“என்ன ஆச்சு பாட்டி?எனி திங்க் பிராப்ளம்” என்று விசாரிக்க,

அவர் உடனே அங்கிருந்த பிள்ளையார் கோவிலை கைகாட்டி தன் விரல்களை அசைத்தார்.

அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை அவன் நொடியில் புரிந்துகொண்டான்.

அவன் ஒரு பெருமூச்சுடன் “குல தெய்வ கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி இங்க போகணுமா?சரி வாங்க” என்று கீழிறங்க,

அவரோ “இல்லை கண்ணா…நீ மட்டும் போயிட்டு வா…என்னாலே அவ்வளவு தூரம் படியேறி வரமுடியாது” என்றார்‌.

அவனோ சலிப்பாக தலையசைத்துக்கொண்டே கீழிறங்கினான்.

கோவிலின் வாசலில் நின்று அவன் கோபுரத்தை ஏறிட,அதே நேரம் அந்த கோவிலுக்கு செல்லும் படியின் வழியே முகிழ்மதி தாவணியை ஒரு கையில் பிடித்தப் படி ஏறிக்கொண்டிருந்தாள்.

அவளின் பின்புறத்தை கவனித்த ரத்தினவேலின் புருவங்கள் இரண்டும் இடுங்கின.

ஆயினும்,அதனை பெரிதாக எடுக்காமல் தலையை உலுக்கியப்படி வேகமாக மேலேறி சென்று கடவுளை வணங்கிவிட்டு கீழிறங்கி வந்தான்.

அவ்வாறு கீழே வந்த ஆடவன் அப்போது தான் படியின் ஒரு ஓரத்தில் அவிழ்ந்து கிடந்த,ஒரு பெண்ணின் பாத சலங்கையை கவனித்தான்.

கீழே குனிந்து அந்த தங்க சலங்கையை கையில் எடுத்தவனின் விழிகள் படியின் வழியே துள்ளி குதித்து இறங்கிக்கொண்டிருந்த முகிழ்மதியின் மீது பதிந்தன.

முன்பு கண்ட அதே பெண் என்றவுடன் அவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top