முகிழ்மதி 39:
தாயை காண சென்ற வீரின் உள்ளம் தனக்குள்ளே வேதனையில் குமுறியது.
சிந்தைக்குள் ஏதேதோ நினைவலைகள் அவனை சுழன்றியடித்தன.
“வீரா” என தாயின் வாஞ்சையான அழைப்பு அவனின் செவியோரம் கேட்டதும் நெஞ்சிற்குள் சொல்லமுடியாத ஒரு வலி!
வலி என்றால் சாதாரண வலியில்லை…அவனது உயிரையே வேரோடு பிடிங்கி எறியும் அளவு ஒரு வலி!
வானவில்லாய் பிரகாசித்த நாட்களை இருளாய் மாற்றிய அந்த ஒரு நாள் அவனின் கண் முன் வந்து சென்றன.
நடந்த அந்த துயர சம்பவத்தை நினைத்த அடுத்த கணமே அவனின் தேகம் துக்கத்தில் துவண்டன.
‘கத்தியால் குத்தப்பட்டு இரத்தத்தில் தொய்ந்த கிடந்த தாயின் உடல், அவருக்கு அருகிலே இரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கையின் சரீரம்’ இதைப்பற்றியெல்லாம் நினைக்கும் போதே அவனிற்கு நெஞ்சே வெடித்து சிதறின.
உடனே சக்கர திருப்பியை பற்றியிருந்த வீரின் கரம் நடுக்கத்தில் தடுமாறின.
சட்டென சக்கரம் கீறிச்சிட வாகனத்தை நிறுத்திய வீரின் இமையோரம் நீரின் பளபளப்பு!
“அம்மா…டால்” என அவனையறியாமல் அவன் இதழ்கள் முணுமுணுக்க,
அவன் தலை சக்கரதிருப்பியில் சாய்ந்துக்கொண்டது.
தற்போது அந்த முரட்டு மனிதன் தாய் மடி தேடும் கன்றினை போல் ஆதரவின்றி தவித்துக்கொண்டிருந்தான்.
அவனை அணைத்து ஆறுதலளிக்க அவனருகே ஒருவருமின்றி திக்கு தெரியாத காட்டில் திணறும் குழந்தை போல் கண் மூடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்த வீர் சிவந்த விழிகளை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான்.
அடி வயிற்றிலிருந்து ஒரு ஆழமான மூச்சை இழுத்து வெளியேற்றிய வீர் ‘டால்’ என மெதுவாக முணுமுணுத்தவாறு பச்சை குத்தியிருந்த தனது தங்கையின் பெயரை ஒரு கணம் வருடிவிட்டு வண்டியை எடுத்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு அவனது வாகனம் வந்து நின்றது தேவசேனா மனநல மருத்துவமனை!
கண்ணாடியின் வழியே களைந்திருந்த தன் சிகையை அழுந்தக்கோதி திருத்திவிட்டு கீழிறங்கி நின்றான்.
அந்த முரட்டு மனிதனிற்குள் புதைந்திருக்கும் வேதனையை மறைக்கும் விதமாக குளிர் கண்ணாடியை அணித்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
அவனை பார்க்கும் யாவருக்கும் அவனிற்குள் இருக்கும் சோகத்தின் சுவடுகள் தெரியாது.
அப்படியாக தனக்கே உரிய கம்பீர நடையுடன் சட்டையின் கையை மடித்துவிட்டப்படி மருத்துவமனைக்குள் நுழைந்தவனை எதிர்கொண்டார் ஒரு மூதாட்டி.
அவனை கண்டவுடன் “என்னப்பா வீரு…அம்மாவை பார்க்க வந்தியா?” என அன்பொழுக விசாரிக்க,
அவரை குனிந்து நோக்கிய வீர் ‘ஆம்’ என தலையசைத்தான்.
அவரின் கையிலிருந்த தாயின் ஆடைகளை ஆழ்ந்து பார்த்துவிட்டு பெருமூச்சை வெளியேற்றிய வீர் “நீங்க எப்படி இருக்கீங்க பாட்டி?” என சிரித்தப்படி நலம் விசாரிக்க,
“நல்லாயிருக்கேன்பா…என் பேத்தி முழுகாமல் இருக்காள் தம்பி…இரண்டு நாள் முன்னாடி தான் தெரிஞ்சது” என அவர் தன்னுடைய கதையை அவனிடம் தெரிவிக்க,
அவனும் நிறுத்தி நிதானமாக அனைத்தையும் கேட்டவன் “பாட்டி ஏதாவது உதவி வேணும்னா மறக்காமல் கேளுங்க…நான் செஞ்சுக்கொடுக்கறேன்” என பெருந்தன்மையாக சொல்ல,
“அதெல்லாம் வேணாம்ப்பா…உன் தயவுலே தான் என் பேத்தி கல்யாணமே நடந்துச்சு…இல்லைனா அவ குடிக்காரன் அப்பனை வைச்சுக்கிட்டு நான் கல்யாணமே பண்ணியிருக்க முடியாது…நீ செஞ்ச உதவிக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்னே தெரியலை” என கண்ணீருடன் அவர் கூற,
அவர் கூறியதை கேட்டு இமைகள் இடுங்கிய வீர் “இன்னுமா அவர் திருந்தலை…அந்த மனுஷன் திருந்தலைனா சொல்லுங்க…இரண்டு தட்டு தட்டி எல்லாத்தையும் சரிப்பண்ணிடலாம்…” என கடுங்குரலில் உரைத்து கைக்காப்பை பின்னுக்கு தள்ளி அவன் கையை முறுக்கவும்,
அவனது அந்த தோரணையில் பயந்துப்போனவர் “ஐய்யோ அதெல்லாம் வேணாம் தம்பி…என்ன மாயம் நடந்துச்சோ தெரியலை…இப்போல்லாம் குடிக்கிறது இல்லை…நேரத்துக்கே வூட்டுக்கே வந்திடறான்…காசும் கரெக்ட்டா கொடுத்திடறான்…எந்த சாமி புண்ணியமோ தெரியலை…அந்த சாமிக்கு தான் நன்றி சொல்லணும்” என்று சொல்லி மேலே பார்த்து கையெடுத்து கும்பிட்டார் அவர்.
அதைக்கேட்ட வீரின் இதழில் சிறு புன்னகை!
ஏனெனில், ஒழுங்கீனமாக சுற்றி திரிந்தவரை இரண்டு தட்டுத்தட்டி வழிக்கு கொண்டு வந்தவனே வீர் தான்!
அதையறியாத மூதாட்டி கண் முன் நின்ற தேவனை விடுத்து கண்ணிற்கு தெரியாத கடவுளை வணங்கிக்கொண்டிருந்தார்.
“சரி பாட்டி…நீங்க அம்மா துணிய தானே துவைக்கப்போறீங்க…நீங்க போங்க…நான் போய் அம்மாவை பார்த்திட்டு வர்றேன்” என தாயை தேடி சென்றுக்கொண்டிருந்தவனின் இதழில் இருந்த புன்னகை அப்படியே மறைந்துப்போனது.
தாயின் நிலையை பற்றி எண்ணியவுடன் அவன் சரீரம் தானாக விறைத்தது.
அவன் அங்கிருந்து சென்றவுடன் அவரிடம் வந்த ஒரு செவிலிய பெண் “கமலாம்மா யாரு இது?ஆளு சும்மா ஹீரோ கணக்கா இருக்காரு” என அசடுவழிந்துக்கொண்டே பேச,
அவளை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்த பாட்டி “அடியே அவன்கிட்டயெல்லாம் உன் வேலைய காட்டினே செவுல்லே இரண்டு அப்பு விடுவான்…கொஞ்சம் உன் கொட்டத்தை அடக்கு” என வயதில் மூத்தவராய் சிறியவளை எச்சரித்தார்.
அவரை இடையில் கைவைத்து முறைத்த அந்த பெண் “அப்பு விடுறதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…முதல்ல அவர் கதைய சொல்லு கமலாம்மா?” என வீரின் முதுகை காட்டி சொல்ல,
அவரோ “நீ அவன்கிட்ட வாங்கி கட்டினா தான் சரிப்படுவா…எனக்கென்ன?” என சலித்தவர் “அவன் பேரு வீரு…பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விபத்துலே அவன் அம்மாவுக்கு தலையிலே அடிப்பட்டிருச்சு…பத்து வருஷமா கோமாவிலிருந்து எழுந்த அந்த அம்மாவுக்கு நடந்த எதுவுமே ஞாபகமில்லை…இப்போ சுய நினைவே இல்லாமல் பைத்தியம் மாதிரி இருக்கு…யாருக்கிட்டயும் எதுவும் பேசாது…பித்துப்பிடிச்ச மாதிரியே தான் இருக்கும்…பாவம் இந்த புள்ளையும் ஓயாமல் ஹாஸ்பத்திரிக்கு வந்திடும்…ஆனால் அவன் அம்மாவுக்கு தான் சரியான பாடில்லை…அம்மா மேலே அம்புட்டு பாசம் இந்த புள்ளைக்கு” என்றான் ஆதங்கமும் வருத்தமும் கலந்த குரலில்..
“ஓ…அம்மா மேலையே இவ்வளவு பாசமா இருக்காருன்னு பொண்டாட்டிய எப்படி வைச்சுப்பாரு?அச்சோ நினைக்கும் போதே நல்லாயிருக்கு” என இந்த பெண் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டாள்.
“மக்கும்…எல்லாம் என் கிரகம்” என தலையிலடித்துக்கொள்ள,
அதற்குள் நடப்பிற்கு வந்த அந்த தாதி பெண் “ஹான் கமலாம்மா…பார்க்க ஆள் நல்லா வசதியான வீட்டுப்புள்ளை மாதிரி இருக்காரு…அப்புறம் அம்மாவை ஏன் வீட்டுலே வைச்சு பார்க்காமல் ஹாஸ்பெட்டல்ல வைச்சு பார்த்துக்கிறாரு” என அதிமுக்கிய சந்தேகத்தை அவரிடம் கேட்க,
“எனக்கென்ன தெரியும்?அவங்க அம்மாவை பார்த்துக்க தான் தம்பி என்னைய இங்க ஹாஸ்பத்திரியிலே சேர்த்து விட்டுச்சு…காசு கொடுத்து உதவி பண்ணறதெல்லாம் வீரோட முதலாளி யாரோ ஒருத்தருனு கேள்வி…அது யாரு என்னானு எனக்கு தெரியாது…அவங்க அம்மா இங்க வந்த அன்னையிலிருந்து நான் இங்கின தான் இருக்கேன்…தம்பியும் என்னைய வேலையாளு மாதிரி நடத்தாது…ரொம்ப நல்ல மாதிரி…இந்த பையனுக்கு இப்படியொரு சோகம்…சரி நகரு…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இவளோ ‘அவர் வெளிய வந்தால் எப்படியாவது பேசி கரெக்ட் பண்ணிடணும்…ஆள் பாக்க சினிமா ஹீரோ மாதிரி இருக்காரு…இளகிய மனசு வேற’ என மனதிற்குள் பல கணக்குகளை போட்டு காத்திருந்தாள்.
ஆனால் அவளின் ஆசையில் மண் விழும் என்பதை அவள் அக்கணம் அறியவில்லை.
மருத்துவமனையின் மேல் தளத்தில் ஒரு சொகுசான வசதியுள்ள அறையை நோக்கி சென்ற ஆடவனின் பாதங்கள் ஒரு கணம் தேங்கின.
கனக்கச்சிதமான மேனி மற்றும் நேர்த்தியான உடையணிந்து கலகலவென பேசிக்கொண்டிருந்த தாயை களைந்த கூந்தல் மற்றும் கசங்கிய உடையுடன் பார்ப்பதை பற்றி எண்ணினாலே அவனிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அதிலும் அவரின் வெறித்த பார்வையும் பேச்சற்ற மௌனமும் அவனை கொல்லாமல் கொன்றன.
அதற்காகவே உள்ளே செல்ல தயங்கிய வீர் வேறுவழியின்றி கண்ணாடியை கழட்டிவிட்டு அவரின் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.
தாயிடம் நடிக்க வேண்டிய அவசியம் அவனிற்கில்லை.
அதனால் கலங்கிய கண்களை மறைக்காமல் மெதுவாக உள்ளுக்குள் நுழைந்தான்.
அவன் நினைத்தது போலவே இரவு உடை அணிந்து,கையில் ஒரு பொம்மையுடன் சுவற்றை வெறித்தப்படி கட்டிலில் அமர்ந்திருந்த அன்னையை பார்த்தவனிற்கு இதயம் துடித்தது.
“அம்மா” என தன்னை மீறி நாதழுதழுக்க அவன் அழைக்க,
அவரோ மகன் வந்ததை கூட அறியாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
அது ஆடவனின் இதயத்தை இன்னும் அதிகமாய் காயப்படுத்தியது.
ஆறடிக்கும் உயரமான மனிதன்…முப்பதை தொடக்கூடிய நிலையில் இருக்கும் ஆடவன் என்பதெல்லாம் அவனிற்கு ஞாபகமில்லை.
அவனது அன்னையை கண்டதும் ஓடிச்சென்று அவரின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்,அந்த வளர்ந்த பால்கன்.
அவனிற்கு உறவு என்று சொல்லிக்கொள்ள கூடிய ஒரே ஜீவன் அவர் மட்டும் தான்!
ஆனால் அவர் இருந்தும் இல்லாத ஒரு நிலை அவனிற்கு!
யாருமின்றி அனாதையை போல் அவன் சிறு வயதிலிருந்து வளர்ந்து வந்திருக்கிறான்.
அவரின் மடியில் அவன் முகம் புதைத்து கண்ணீர் சிந்த,அவரிடமிருந்து எவ்வித எதிர்வினையுமில்லை.
அவர் ஜடம் போலவே அமர்ந்திருந்தார்.
சில நிமிடங்கள் ஆறுதல் தேடும் குழந்தையை போல் அவரின் மடியில் படுத்திருந்த ஆடவன் பின்பு கண்களை அழுந்த துடைத்துவிட்டு எழுந்துக்கொண்டான்.
மெல்ல சிரிக்க முயன்று “ஹேப்பி பர்த்டே அம்மா” என கலங்கிய குரலை சரி செய்தப்படி அவன் கூற,
ம்ஹும்…அவரிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
அவர் பதில் தரவில்லை என்று அவனும் அமைதியாக இருக்கவில்லை.
அவனது கல்லாகிய நெஞ்சை சரி செய்தப்படி தாயிடம் பேசிக்கொண்டே இருந்தான்.
அவன் சென்ற ஒரு வாரம் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவன் தாய் தேவிகாவிடம் ஒப்பித்தான்.
தாயை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவன் செய்யும் வழக்கம் இது!
ஒவ்வொரு நிகழ்வாக சொல்லிக்கொண்டே வந்த வீர்,இறுதியாக ரத்தினவேலின் திருமண செய்திகளை அவரிடம் உரைக்க உத்தேசித்தான்.
தங்கையாகிப்போனவளை பற்றி எண்ணியதும் அவனின் பாரமேறிய மனம் இலேசாகின.
“அம்மா எனக்கு ஒரு புது தங்கச்சி கிடைச்சிருக்காள்…பேரு முகிழ்மதி…அவளை பார்த்தால் எனக்கு நம்ப டாலை பார்க்கிற மாதிரி தான் இருக்கு…அவளுக்கும் நட்சத்திரா வயசு தான் இருக்கும்மா…ரொம்ப நல்லப்பொண்ணு…அந்த பொண்ணை தான் நம்ப பூபதி கல்யாணம் பண்ணியிருக்கான்…உங்களுக்கு அவ ஃபோட்டோ காட்டறேன் இருங்கம்மா…” என பெருவகையோடு கூறி கால்சராயிலிருந்து அலைப்பேசியை எடுத்தான்.
அதிலிருந்த திருமண புகைப்படத்தை எடுத்து அலைப்பேசியை அவரின் முகத்திற்கு முன்பு நீட்டியவன் “அம்மா இது தான் முகிழ்மதி…உங்க பொண்ணு…பாருங்க…” என முகிழ்மதியை அவன் சுட்டிக்காட்டினான்.
அதுவரை எங்கோ பார்த்திருந்த தேவிகாவின் கருவிழிகள் இலேசாக அசைந்தன.
வீரோ அதனை பற்றி அறியாமல் “அம்மா முகிழ் கல்யாண கோலத்திலே எவ்வளவு அழகா இருக்காள்னு பாருங்க…எனக்கு என்னவோ நம்ப டாலை கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போற மாதிரி ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு…” என சிலாகிப்போடு அவன் பேசிக்கொண்டிருக்கும் போது “ந..ட்ச..த்திரா” என திக்கி திணறி பேசியிருந்தார் தேவிகா.
பல வருடங்களுக்கு பிறகு அவரின் குரல் கேட்டதும் அவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.
அவனிற்கு சில நொடிகள் ‘என்ன நடக்கிறது?’ என்றே தெரியவில்லை.
அதற்குள் தேவிகா கையிலிருந்த பொம்மையை சுட்டிக்காட்டி “ந..ட்சத்..திரா..” என்றார் பிதற்றலாய்..
அவர் சுய உணர்விற்கு வந்திலிருந்து அந்த பொம்மையை தான் தன் மகளாக பாவித்துக்கொண்டிருக்கிறார்.
அதனால் இப்போது அவர் பொம்மையை காட்டி அவ்வாறு சொல்ல,வீருக்கு பேச்சே வரவில்லை.
நடந்தேறிய அதிசயத்தில் வாயடைத்துப்போய் இருந்தான் அவன்.
அவரின் தாயோ மீண்டும் “ந..ட்..சத்திரா..” என சத்தம்போட்டு பொம்மையை அடித்து கத்தவும்,சடுதியில் சுய உணர்விற்கு வந்த வீர் எல்லையில்லா மகிழ்ச்சியில் “அம்மா ரிலாக்ஸ்…நீங்க பேசிட்டீங்கம்மா…பேசிட்டீங்க” என உணர்ச்சி பெருக்குடன் அவரை அணைத்துக்கொண்டவனின் கண்ணில் நீர் வழிந்தது.
அவரோ மந்திரத்தை உச்சரிக்கும் விதமாக மகளின் பெயரை மட்டுமே மீண்டும் மீண்டுமாக சொல்லிக்கொண்டே இருக்க “ஆமா…ஆமா நம்ப நட்சத்திரா தான்மா…” என வீரும் அவருக்கு ஆறுதலாக சொல்லிக்கொண்டே முதுகை நீவி விட்டான்.
கடந்து வந்த கணங்கள் அனைத்தும் வீருக்கு அப்படியொரு உவகையை கொடுத்தன.
எந்தவொரு வார்த்தையும் பேசாதவரின் வாயிலிருந்து வந்த அந்த ஒரு சொல்லே அவனிற்கு இமயத்தை தொட்டுவிட்ட பரவசத்தை கொடுத்தன.
இதுநாள் வரை ஒளியின்றி இருந்தவனிற்கு சிறு நம்பிக்கை ஒளி துளிர்விட,கண்ணில் வழிந்த நீரை துடைத்தவன் “அம்மா இந்த நிமிஷம் எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு…உங்களுக்கு கூடிய சீக்கிரம் சரியாகிடும்மா…நீங்க இருங்க…நான் டாக்டரை போய் கூட்டிட்டு வர்றேன்” என பரபரப்புடன் சொல்லிவிட்டு மருத்துவரை பார்க்க சென்றான் அவன்.
வெளியே சென்ற வீர் தன் அலைப்பேசியை கட்டிலில் மறந்து விட்டுப்போயிருந்தான்.
பேசியின் கருப்பு திரையையே சில கணங்கள் வெறித்து பார்த்திருந்த தேவிகாவிற்கு ‘என்ன தோன்றியதோ?’ “நட்சத்திரா…” என சொல்லிக்கொண்டே அலைப்பேசியை கையால் தட்ட ஆரம்பித்திருந்தார்.
அதேநேரம் தன்னறைக்குள் அடைப்பட்டு கிடந்த சந்திரமதிக்கும்,உணவு மேசையில் உணவருந்த கொண்டிருந்த முகிழ்மதிக்கும் ஒரே நேரத்தில் புரையேறின.
முகிழ்மதி 40:

தலையணையில் முகம் புதைத்திருந்த சந்திரமதிக்கு திடீரென்று புரையேறியது.
அடுத்த கணமே தும்மிக்கொண்டே படுக்கையில் எழுந்து அமர்ந்தவளிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.
அவளின் மனம் விரக்தியில் முகிழ்ந்திருந்தன.
அவளின் முகம் வருத்தத்திலும் சோகத்திலும் தொய்ந்திருந்தது.
சில கணங்கள் சுவற்றையே வெறித்தப்படி இருந்தவளிற்கு தும்மல் மட்டும் நின்றப்பாடில்லை.
அப்போது அவளின் அறைக்கதவு தட்டப்பட்டன.
கதவை திறக்க வேண்டும் என்ற சிந்தனையற்று அவள் அமர்ந்திருக்க “மதி இன்னும் எத்தனை நாளைக்கு உள்ளயே அடைஞ்சு கிடக்கப்போறே…முதல்ல வெளிய வா” என விஜயலட்சுமி எரிச்சலுடன் கதவை தட்டினார்.
ஆம்,கடந்த இரு நாட்களாக ஊண்,உணவு,நீர் இவ்வாறு எந்தவொரு ஆகாரமுமின்றி அறைக்குள்ளே அடைந்துக்கிடந்தாள் அவள்.
அவளிற்கு கிடைத்த அந்த ஒரு ஏமாற்றம் துணிச்சலான பெண்ணவளை அடியோடு சாய்த்துப்போட்டிருந்தது.
களைந்த கூந்தலுடன் கண்ணிற்கு கீழே கருவளையத்துடன் உறக்கமின்றி மேனி துவண்டிருந்தாள் அவள்.
சந்திரமதி பதில் எதுவும் தரவில்லை என்றவுடன் “உன்னை தான் கதவை திறடி” என அவரின் குரல் உச்சக்கட்ட கோபத்துடன் வெளிவந்தது.
அவள் மெதுவாக திரும்பி கதவை நிராசையுடன் நோக்க “ஏய் மயிலு சாவி எடுத்தாடி…இவ கதவை திறக்கிற மாதிரி இல்லை” என வேலைக்காரியை ஏவினார்.
அவர் விட்டால் அந்த கதவையே உடைத்துக்கொண்டு உள்ளே வந்திடுவார் போலும் இருந்தது.
அவளிற்கு தாயின் செயலில் பெரிதாக எவ்வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை.
அவரின் குணம் நன்கு அறிந்தவளாய் தரையில் பதிக்க முடியாத பாதத்துடன் மெல்ல நடந்து வந்து கதவை திறந்தாள்.
அவள் உடலில் தெம்பின்றி சோர்வுடன் நின்றிருப்பதை புருவம் சுருக்கி பார்த்த விஜயலட்சுமி “வெளியே என்ன நடந்திட்டு இருக்கு?நீ உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கே?உன் அப்பாவை கட்சிய விட்டு நீக்கிட்டாங்க…தெரியுமா தெரியாதா?” என எடுத்தவுடனே சீற தொடங்கிவிட்டார்.
தற்போது அவளிற்கு தேவை ஆறுதலும் அன்பும்!
அதை கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை கூட அவருக்கு இல்லை.
மகளின் புண்பட்ட மனதை விட அவரின் பேராசை மட்டுமே முதன்மையாக இருந்தது.
அவளோ எதுவும் பேசாமல் அவரையே வெறித்து பார்த்திருக்க,சட்டென தன் கோபத்தை தணித்துக்கொண்ட விஜயலட்சுமி “இரண்டு நாளா ஏதாவது சாப்பிட்டியா?சாப்பிடலையா?வா…முதல்ல வந்து சாப்பிடு” என அவளின் கரம் பற்றி தரதரவென இழுத்து சென்றார்.
அவரின் செயலில் துளியும் அக்கறையில்லை என்று அவள் நன்கு அறிவாள்.
ஆனால் அவரது திடீர் பாசத்தின் பின்னணியில் ஒரு பெரிய காரணம் இருப்பதை அறிந்த சந்திரமதிக்கு உணவு இறங்க மறுத்தது.
அவளின் தட்டில் பறிமாறப்பட்டிருந்த உணவு வகைகளையே சில கணங்கள் பார்த்திருந்த சந்திரமதி அதனை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளிற்கு உணவை பரிமாறிக்கொண்டே “நடந்தது நடந்துப்போச்சு மதி…இனி ஒண்ணும் பண்ணமுடியாது…உன் தங்கச்சி பெரிய இடத்திலே வாக்கப்பட்டு போயிருக்கான்னு தான் பேரு…ஒரு போனாவது பண்ணாளா பாரு…நன்றி கெட்டவள்” என முகத்தை சுழித்தப்படி முகிழ்மதியை கரித்துக்கொட்ட தொடங்கியிருந்தார்.
அவள் மறுத்து எதுவும் பேசவில்லை…பேசினாலும் அதற்கு மதிப்பில்லை என்று அவளிற்கு தெரியும்.
சிவராமன் சந்திரமதியின் கண்ணில் படவேவில்லை.
அவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஊர் திரும்பியிருந்தார்கள்.
அடித்து விரட்டாத குறையாக அனுப்பிவிட்டிருந்தார்கள் என்பது தான் சரி!
ஆனால் மகள் துயரத்தில் மூழ்கியிருப்பதை அறிந்தும் அவளிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை இருவருக்கும்!
சிவராமனிற்கு சந்திரமதி என்றால் உயிர் தான்!
ஆனால் நடந்த களேபரத்தில் இத்தனை நாட்களாய் முகழ்மதியின் மீது சுமத்தப்பட்ட அனைத்து பழிக்களுக்கும் உரித்தானவள் என்ற உண்மையை கணவரிடம் போட்டு உடைத்திருந்தார் விஜயலட்சுமி.
ஆசை மகளின் விம்பம் உடைந்து தூள் தூளாகியதில் அவரும் மனதளவில் உடைந்து நொறுங்கிப்போயிருந்தார்.
தவறே செய்யாமல் தண்டனையை அனுபவித்த மற்றொரு மகளை பற்றி எண்ணியவுடன் அவரின் நெஞ்சம் துடித்தது.
அதேசமயம் சந்திரமதியின் மீது அதுவே ஆத்திரத்தை வரவழைத்திட,அவருக்குள் ஒரு விதமான அருவருப்பு உண்டாக்கியிருந்தது.
அதனால் அவளின் மீது வைத்திருந்த பாசத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு வெறுப்புடன் விலகியிருந்தார்.
முன்பு முகிழ்மதியை உதாசீனப்படுத்திய சிவராமன் இப்போது சந்திரமதியை உதாசீனம் செய்ய ஆரம்பித்தார்.
இதை யாவும் அறியாத பாவையவளின் விழிகள் தந்தைக்காக ஏங்கி ஏமாற்றத்தில் சுருங்கிக் போயின.
அதனால் மௌனமாக உணவருந்த தொடங்கியவளிற்குள் ஏதோ ஒரு வித்தியாசம்!
சட்டென அவளின் உடலில் ஏதேதோ மாற்றங்கள் நிகழத் தொடங்கி,அவளிற்கு மேனியெல்லாம் பற்றி எரிய தொடங்கின.
இதேநேரம் புகுந்த வீட்டில் இருந்த முகிழ்மதிக்கும் புரையேறியிருந்தன.
அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர்.
திருமணத்திற்கு பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சமயம் அது!
அவர்களோடு இணைந்து அமர அவளிற்கு தயக்கமாக இருந்தது.ஆனால் மனைவி ஒதுங்க நினைத்தாலும் ரத்தினவேல் அதற்கு அனுமதிக்கக்கூடியவன் அல்லவே?
‘இது தான் உனது குடும்பம்’ என அவளின் மனதில் ஆழப்பதிய வைப்பதற்காக அவளை தங்களோடு பிடிவாதமாக அமர்த்தியிருந்தான்.
சந்திரமதி வெளியூரில் படிப்பை தொடர்ந்ததினால் தனிமையில் உணவருந்தி அவளிற்கு வழக்கமாகிற்று!
அதனால் புதிதாக அனைவருடனும் அவள் அமர்ந்து உண்பது ஏனோ வித்தியாசமாக இருந்தது.
ஒரு வித சங்கடத்துடனே வேக வேகமாக உணவருந்தியவளிற்கு புரையேறிவிட,அவளிற்கு அருகே அமர்ந்திருந்த தமயந்தி “பார்த்து மெதுவா சாப்பிடுங்க அண்ணி” என முகிழ்மதியின் தலையை தட்டி தண்ணீர் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் அக்கா” என மெல்லிய குரலில் உரைத்து அவளும் தண்ணீரை வாங்கி பருகினாள்.
அவள் தண்ணீர் குடித்து முடித்ததும் அவளிற்கு சரியாகியிருந்தது.
அச்சமயம் அவளருகே குனிந்த ரத்தினவேல் “எந்த கோட்டையை பிடிக்கிறதுக்காக இவ்வளவு வேகமா அள்ளி சாப்பிடறே நீ?” என சீறலான குரலில் வினவ,
அவள் மருண்ட விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “மெதுவா சாப்பிடு…இல்லை நானே உனக்கு பொறுமையா ஊட்டிவிட வேண்டி வரும்” என அடிக்குரலில் எச்சரிக்க,
அதைக்கேட்ட காரிகையவளோ அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
அவளின் மனதிற்குள் ‘சொன்னதை செய்துவிடுவனோ?’ என்ற படபடப்பு உண்டாகிட,அவள் துடித்த நெஞ்சத்தை அடக்கி மெதுவாக இட்லியை பிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அதைக்கண்டு தனது அடர்ந்த தாடிக்குள் புன்னகைத்துக்கொண்டான் ரத்தினவேல்.
அச்சமயம் அவன் மனைவியின் மீதிருந்த பார்வையை தன் புறம் திருப்பும் விதமாக விஜயேந்திரன் தொண்டையை செருமி பேச ஆரம்பித்தார்.
“பூபதி இந்த வாரம் சன்டே சென்னையிலே ரிசப்ஷன் வைக்கணும்…அதுக்கு என்னப்பா பண்ணலாம்?” என அவர் இருவரையும் பார்த்தவாறு கேட்டார்.
முன்பு ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு என்பதால் அதை பற்றி விசாரித்தார் அவர்.
ரத்தினவேலோ ஒரு கணம் கூட சிந்திக்கவில்லை.
“இந்த வாரம் வேணாம்பா…கேன்சல் பண்ணிடுங்க” என நிச்சலனத்துடன் கூறிவிட,அங்கிருந்த ஒட்டுமொத்த நபரும் அதிர்ந்து விட்டார்.
ஏனெனில்,அந்த வரவேற்பிற்காக வெளிநாட்டிலிருந்து பல பிரபலங்கள்,தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்கட்சி தலைவர்கள் என அனைவரும் வரவிருந்தனர்.
அத்தோடு பல கோடி ரூபாயை கொட்டி கொடுத்து,அதற்காக ஏற்படு செய்திருக்க இப்போது அவன் சர்வ சாதாரணமாக ‘வேண்டாம்’ என்றவுடன் விஜயேந்திரன் கடுப்பாகிவிட்டார்.
“பூபதி என்னப்பா விளையாடிறீயா?மத்தவங்க கூட ஓகே…ஆனால் பி.எம் அசோக மித்ரன் எல்லாம் பங்கஷனுக்கு வர்றாரு…இப்போ போய் எப்படி கேன்சல் பண்ணமுடியும்” என்று அவர் கோபமாக கேட்க,
அவனோ அப்போதும் தயங்காமல் “கேன்சல் ஆகிடுச்சுனு இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்றான் அசால்ட்டாக.
“பூபதி…” என அவனின் தந்தை எரிச்சலாக குறிப்பிட்டதும் “அப்பா நான் ரிசப்ஷன் வேணாம்னு சொல்லலை…இந்த வாரம் வேண்டாம்…நான் சொல்லும் போது வைச்சா போதும்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
மனைவியின் காயத்தையும் அவளின் மனநிலையையும் கருத்தில் கொண்டே ரத்தினவேல் தந்தையிடம் உறுதியாக மறுப்பு தெரிவித்திருந்தான்.
அங்கிருந்த பலரும் அவனது மறுப்பிற்கான காரணத்தை அறிந்ததினால் மௌனம் காத்தனர்.
அதிர்ஷ்டவசமாக எப்போதும் அவனின் உணர்வுகளை பற்றி அறியாத மங்கையவளிற்கே கணவனது பேச்சின் சாராம்சம் புரிந்தன.
ஆனால் அதற்கான காரணமறியாத விஜயேந்திரனோ “பூபதி இட்ஸ் நாட் ஆ கேம்…நமக்கு நூறு கோடிக்கு மேலே லாஸ் ஆகும்…அந்த பணத்தை என்ன செய்யறது?யோசி பூபதி” என சற்றே ஆதங்கம் கலந்த குரலில் சொல்ல,
இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்த ரத்தினவேலோ “இந்த விஷயத்துக்கான ரெஸ்பான்ஸிபிளிட்டி நான் எடுத்துக்கறேன்ப்பா…யூ டோன்ட் வொர்ரி” என அவரை அழுத்தமாக பார்த்து கூறியவன்,
சகோதரனின் புறம் திரும்பி “ஜித்து நான் டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லறேன்…நம்ப கெஸ்ட் எல்லாருக்கும் இன்ஃபார்ம் பண்ணறது உன்னோட ரெஸ்பான்ஸிபிளிட்டி…காட் இட்” என அவனிடம் ஆணைப்பிறப்பிக்க,
அவனோ தமையன் சொல் தட்டாதவனாய் “சரி” என தலையாட்ட,
அவன் முகிழ்மதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென கிளம்பிவிட்டான்.
அதிரடியாக முடிவெடுப்பது அவனின் இயல்பு என்பதால் குடும்பத்தினருக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை.
ஆனால் புதிதாக அங்கு இணைந்திருந்த முகிழ்மதிக்கு தான் அவனின் அந்த முடிவு ஒரு மாதிரியாக இருந்தது.
கணவன் தனக்காகவே இந்த ஏற்பாட்டை செய்கிறான் என்று எண்ணும் போதே மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருங்கே தோன்றின.
ஆயினும்,தான் வீட்டில் காலடி எடுத்து வைத்த கணமே மிகப்பெரிய நஷ்டத்தை கொண்டு வந்ததினால் அவளிற்கு வருத்தமே மிகையூன்றி இருந்தது.
அவளை போலவே மனவருத்தத்துடன் அமர்ந்திருந்தார் விஜயேந்திர பூபதி.
புதல்வனது துக்கம் பொறுக்காமல் “விஜய் காசை நினைச்சு வருத்தப்படாதேப்பா…இந்த மாதிரி விழா வைக்கிறதே குடும்பத்தோட சந்தோஷத்துக்காக தானே…கல்யாணம் நடந்த சூழ்நிலை உனக்கே தெரியும்.எல்லாத்தையுமே ஒரு கட்டாயத்தோடு நடத்தினால் அதில் சந்தோஷம் இருக்காதுப்பா.பூபதி சொன்ன மாதிரி கொஞ்ச நாள் போகட்டும்…அப்புறம் பார்த்துக்கலாம்” என மகனின் கரம் பற்றி ஆறுதலளித்தார் காஞ்சனா மாலா.
தாய் எடுத்து கூறியதற்கு பிறகே அவரின் மனம் சிறிதும் சமாதானமாகியது.
ஆனால் முழுமையாக அவரின் ஆதங்கம் மனதிலிருந்து நீங்கவில்லை.
நூறு கோடி என்பது குறைவான தொகை அல்லவே?
அதன் பொருட்டே,அவருக்குள் ஒரு நெருடல் இருந்துக்கொண்டே இருந்தது.
அதனால் எதுவும் பேசாமல் அவரும் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
அவரின் முகத்தை கண்ட முகிழ்மதிக்கும் தன்னால் தானோ என்ற குற்றவுணர்வு பீறிட்டது.
உடனே அவளின் முகமும் வாடிவிட “நீங்க இதுக்காக கவலைப்படாதீங்க அண்ணி…எல்லாம் அண்ணா பார்த்துப்பாரு” என தமயந்தி அவளின் கரம் பற்றி சமாதானம் செய்தாள்.
அவளை போலவே ஒவ்வொருவரும் புது மணமகளிற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஆயினும்,அவளின் நெஞ்சம் மட்டும் குறுகுறுப்பில் தவித்தது.
ஆனால் ஆடவனிற்கோ நூறு கோடி ரூபாய் மதிப்பை விட அவனது மனையாளின் நிம்மதி மட்டுமே பெரிதாக இருந்தது.
அந்த அளவு அவளை அவன் நேசிக்கிறான் என்று பாவையவள் உணர தவறினாள்.
அன்றைய முழுவதும் அவளிற்கு அப்படியே கழிந்தன.
இடை இடையே அவளிற்கு தமக்கையின் நினைவும் வந்தது.
அதனால் அவளின் விழிகள் அலைப்பேசியை பார்த்திருப்பதை கவனித்த ரத்தினவேல் பெருமூச்சை வெளியேற்றினான்.
அவர்களிடமிருந்து அவளிற்கு எவ்வித அழைப்பும் வராது என்று அவன் நன்கு அறிவான்.
ஏனெனில்,அவளின் வீட்டினர் அவளிடம் தொடர்புகொள்ள வேண்டிய அந்த ஒரு வழியையும் அடைத்தவனே அவன் தான்!
இதை யாவும் அறியாமல் அவளோ தமக்கையிடம் பேசுவதற்கு தவம் கிடந்தாள்.
மற்றொரு புறம் அவளின் வரவேற்பு நிகழ்வு மூளையை குடைந்தன.
அதைப்பற்றி கணவனிடம் பேச நினைக்கிறாள்.ஆனால் அவனிடம் பேச அவளிற்கு துணிவு வரவில்லை.
அவனிடம் பேச முயன்று தோற்று ஒரு வழியாய் இரவு வேளையும் வந்துவிட்டிருந்தது.
இரவில் தங்களது படுக்கை அறைக்குள் சோகமாக நுழைந்த மனையாளை புருவம் சுருக்கி பார்த்தான் ரத்தினவேல்.
அவன் அங்கு அறையில் இருப்பதை கூட கவனியாமல் குளியலறைக்குள் நுழைந்து அணிந்திருந்த உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.
நேற்று போலவே அவள் அரக்கு நிற சுரிதார் அணிந்து வெளியே வந்ததும் “முகிழ்மதி” என அதட்டலாய் அழைத்தான் ரத்தினவேல்.
திடீரென்று அவன் குரல் கேட்டு திடுக்கிட்ட பெண் மிரட்சியுடன் அவனை நோக்கி திரும்பினாள்.
“உன் சின்ன மண்டைக்குள்ள என்ன யோசனை ஓடிட்டு இருக்கு?” என அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே அருகே வந்தான்.
அவள் விஷயத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்று தெரியாமல் பதட்டத்துடன் துப்பட்டாவை பிடித்து சுழற்றினாள்.
அவனிடம் பேசுவதற்கு அவள் தயங்கும் விதம் சினத்தை வரவழைத்தது.
‘இவகிட்ட நான் இன்னும் என்ன மாதிரி தான் நடக்கணும்’ என அவனிற்குள் ஒரு ஆயாசமும் உண்டாகின.
“முகிழ்மதி என் வாழ்க்கையிலே நான் நிறைய பேரை பார்த்திருக்கேன்..ஆனால் பதினெட்டு வயசுலே உன்னை மாதிரி ஒரு அழுத்தக்காரிய நான் பார்த்ததே இல்லை…ஊப்” என வெளிப்படையாக சலித்து இதழை குவித்து ஊதினான்.
அவளோ ‘என்ன சொல்கிறான்?’ என்பது போல் அவனை விழி உயர்த்தி பாவமாக பார்க்க,
‘இப்படி அப்பாவி மாதிரி பார்த்து பார்த்தே என்னை ஏமாத்தறாள்’ என முனகிக்கொண்டே பின்னங்கழுத்தை வருடிய ரத்தினவேல் “இங்க பாரு முகிழ்மதி…என் வாழ்க்கையிலே எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு மேலே யார்கிட்டயும் நான் பேசினதில்லை…என் கண்ணசைவை பார்த்தே எல்லாரும் வேலை செய்வாங்க…ஆனால் நீ என்னை திரும்ப திரும்ப பேச வைக்கிறே?இது தான் ஃபைனல்…இதுக்கு மேலே இதை பத்தி நான் சொல்லமாட்டேன்…நல்லா கேட்டுக்கோ…நான் உன்னோட புருஷன்…நீ என்னோட பொண்டாட்டி…அதனாலே உன் மனசுலே இருக்கிற விஷயத்தை என்கிட்ட ஓப்பனா பேசு…அப்படி நீயா பேசலைனா நான் பேச வைக்கிறேன்?” என கண்டிப்பான குரலில் கூறியவனின் சொற்களை அவள் கிரகிப்பதற்கு முன்பாகவே அவளின் இடைப்பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான் ஆடவன்.
அதில் விதிர் விதிர்த்துப்போன பாவையவள் அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள்.
தன்னை அவ்வாறு அவன் அணைப்பான் என்று எதிர்பாராத காரிகைக்கு வாயடைத்துப்போனது.
அவளை பேச வைப்பதற்காக அவன் செய்த வித்தை அவளிதழை அடியோடு மூட வைத்திருந்தது.
முகிழ்மதி 41:
அவனின் தொடுகை அவளிற்குள் ஒரு இனம்புரியா உணர்வை தொற்றுவித்த அதே வேளை அவளிற்குள் ஒரு அசூயையான உணர்வையும் கொடுத்தன.
சட்டென ஒரு ஆடவனின் நெருக்கத்தை ஏற்க முடியாமல் தவித்தாள் அவள்.
‘விடுங்க…’ என்று சொல்ல அவளின் இதழ்கள் துடித்தன.
ஆனால் வாயிலிருந்து வார்த்தைகளே வெளிவரவில்லை.
பேசாமடந்தையாகி போனவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கிய ஆடவன் “முகிழ் என் முகத்தை பாரு” என சற்றே அழுத்தமாக கூற,
அதில் திடுக்கிட்டு தலையுயர்த்தவளின் முகத்தை நோக்கிய மணாளன் “நீ வாயை திறந்து பேசலைனா இது தான் உனக்கு தண்டனை…இன்னைக்கு போனால் போகட்டும்னு விடறேன்…ஆனால் அடுத்த முறை…” என சொல்லிக்கொண்டே அவளை விடுவித்தவனின் விழிகள் அவளின் சிவந்த அதரங்களை குறிப்பாய் காணவும்,பாவையவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
உடனே அவள் தன் இதழ்களை பற்களால் கடித்துக்கொள்ள,
அவளின் இதழோடு அமிழ்ந்துப்போன அந்த மச்சத்தை வேட்கையோடு பார்த்தவாறே சிகையை அழுந்தக்கோதியவன் “உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…இப்போ சொல்லு…உன் சின்ன மண்டைக்குள்ள என்ன ஓடிட்டு இருக்கு” என்று கேட்டவாறே அருகிலிருந்த மெத்தையில் அமர்ந்தான்.
பாவையவளோ இறுதியாக அவன் கண்ட பார்வையிலே விக்கித்துப்போய் நின்றிருந்தாள்.
அவளிடம் அத்துமீறி நடந்துக் கொள்ள அவனிற்கும் விருப்பமில்லை.
இப்போதும் கூட அவளிடம் தனக்கான உரிமையை ஆழப்பதிய வைக்க மட்டுமே அவ்வாறு நடந்திருந்தான்.
ஆனால் அதையறியாமல் அவன் திடீர் அணைப்பில் அவள் பயந்து போய் நிற்க,அவளை தலையுயர்த்தி ஏறிட்ட ரத்தினவேல் ‘சுத்தம்’ என முனகிக்கொண்டான்.
அவனிற்கு முன்பு ஆயிரம் பேர் நின்றால் கூட அவனால் சமாளித்திட முடியும்.
ஆனால் அவனது மனையாள் ஒருத்தியை வழிக்கு கொண்டு வருவதற்குள் அந்த மூர்க்கனிற்கு போதும் போதுமென்றானது.
அந்த அளவு அவனை ஆட்டிப்படைத்தாள் அவனது காதல் அரசி!
“முகிழ்…” என அவன் சத்தமாக அழைத்ததும் அவள் திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்ப “ப்ச் இங்க வா…வந்து உட்காரு” என அருகேயிருந்த கட்டிலை தட்டிக்காட்டினான்.
அவளோ “இல்லை…நான்…” என ஆரம்பிக்கும் போதே அவன் விழியில் கனல் கூடின.
அதில் மிரண்ட பாவையவள் வேறுவழியின்றி அவனருகே சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தாள்.
அதைப்பார்த்து அவனிற்குள் எரிச்சல் மூண்டாலும் தன்னை தானே ஆசுவாசப்படுத்தி கொண்டான் ரத்தினவேல்.
“இப்போ சொல்லு…என்ன பிரச்சனை உனக்கு?” என அவளை தீர்க்கமாக பார்த்தவாறு அவன் வினவினான்.
அவளோ “அது வந்து…” என கைகளை பிசைந்தப்படி இழுக்க,
‘ஷப்பா..’ என அவனிற்கு சலிப்பாக வந்தது.
அவளோ ஒரு வழியாய் தொண்டையை செருமி “ரிசப்ஷன் சொன்ன தேதியிலே நடக்கட்டுமே” என மெதுவாக சொல்லிப்பார்க்க,
அவனிடமிருந்து “ஏன்?” என ஒற்றை கேள்வி மட்டுமே பறந்து வந்தது.
அவளோ எச்சிலை கூட்டி விழுங்கி “இல்லை எனக்காக தான் நீங்க அந்த தேதியை தள்ளி வைக்கிறீங்கனு தெரியும்…அது வேணாமே…எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை” என ஒரு வழியாக தட்டுத்தடுமாறி மனதில் இருப்பதை கூறியிருந்தாள்.
உடனே தாடையை நீவிய ரத்தினவேல் “ஓ…உனக்காக தான் இதெல்லாம் செய்யறேன்னு உனக்கு தெரியுதா?ஒரு வழியா உன் மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போலே” என புருவம் உயர்த்தி அவன் நக்கல் குரலில் உரைக்க,
சட்டென விழி உயர்த்திய முகிழ்மதி ‘அவரு என்னை நக்கல் பண்றாரா என்ன?’ என குழப்பமாக அவனை பார்த்தாள்.
அவனோ மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி “என்ன பார்வை இது?நான் சொல்லறது தானே நிஜம்…என்னைக்கு நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சு வைச்சிருக்கே?” என்று கேட்டு அவளை ஆழ்ந்து நோக்கினான்.
அவனது விழி வீச்சை ஏற்க முடியாமல் இமைத்தாழ்த்திய பெண்ணவளிற்கோ அவன் கூறுவது என்னவென்றே புரியவில்லை.
‘நான் என்ன புரிஞ்சுக்கணும்?’ என்ற மனநிலையில் அவள் யோசித்திருப்பதை அறிந்த ஆடவன் வழக்கம் போல் தன்னை நொந்துக்கொண்டு “சரி அதை விடு…என்னைக்கு உனக்கு என்னை புரிஞ்சுக்கணும்னு தோணுதோ அப்போ புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…இப்போ நாம்ப விஷயத்துக்கு வரலாம்” என பெருமூச்சுடன் கூறியவன்,
“இங்க பாரு முகிழ்மதி…நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண ரிஷப்சனில்லை…பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவாங்க…ரிஷப்சன் முழுக்க நின்னுட்டே இருக்கணும்…இதையெல்லாம் விட வரவங்க எல்லாரையும் சந்தோஷமா உபசரிச்சு பேசணும்…பங்கஷனுக்கு வரவங்க எல்லாம் நல்லவங்களா இருக்கணும்னு அவசியமில்லை…நம்மை எப்படி சரிக்கலாம்னு திட்டம் போட்டு வரவங்க தான் அதிகமா இருப்பாங்க…வேணும்னே பலதும் பேசுவாங்க…எல்லாத்தையும் சமாளிக்கிற திறமை உனக்கு இருக்கணும்…இல்லையா அதை கடக்கிற அளவு பக்குவமாவது உனக்கு இருக்கணும்…இதுக்கிடையிலே மீடியாக்காரங்க வேற கழுகு மாதிரி நியூஸுக்காக சுத்திட்டு இருப்பாங்க….அவங்களுக்கு நாமளே வாய்ப்பை அள்ளி கொடுத்திடக்கூடாது…கூடவே நைட் டிரின்க்ஸ் பார்ட்டி வேற இருக்கும்…சிலரெல்லாம் குடிச்சிட்டால் புத்தி பேதலிச்சு போயிடுவானுங்க…அவனுங்களையும் நீ சமாளிக்கணும்…நிறைய பேர் உன்கிட்ட வந்து பேசுவாங்க…யாருக்கிட்டயும் முகம் காட்டமுடியாது…இதுக்கெல்லாம் மேலே உன் உடம்பும் மனசும் சரியில்லைனு எனக்கு நல்லாவே தெரியும்…நடந்த சம்பவத்தாலே நீ தான் அதிகமா பாதிக்கப்பட்டிருக்கே…சோ என்னைக்கு உன் மனசும் உடம்பும் எல்லாரையும் எதிர்க்கொள்ள தயாரா இருக்கோ அன்னைக்கு வந்து சொல்லு…மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என மிக நீளமாக அவளிற்கு புரியும் வகையில் அவனது காரண காரியங்களை எடுத்து கூறினான் முகிழ்மதியின் மணாளன்.
இதுநாள் வரை யாருக்காகவும் தன் செயலுக்கான நியாயத்தை கூறியிராதவன் முதல் முறையாய் தன் விதிகளை மாற்றி மனைவிக்கு விளக்கமளித்தான்.
பாவையவளிற்கோ அவன் கூறியதையெல்லாம் கேட்கவே மலைப்பாக இருந்தது.
அதேசமயம் தனக்காக பல வகையில் சிந்தித்து செயல்பட்ட கணவனில் முதல் முறையாய் ஒரு ஈர்ப்பு உண்டாகின.
அதனால் அவனையே அவள் விழி அகலாமல் பார்த்திருக்க,
அவளின் பார்வை அவனிற்குள் இருந்த உணர்வுகளை தூண்டிவிட செய்வதாய் இருந்தது.
ஆயினும்,தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு “இப்போ சொல்லு…நான் சொன்னது இல்லாமல் உனக்கு வேற ஏதாவது ஒப்பினியன் இருக்கா?” என புருவம் உயர்த்தி அவன் கேட்க,
அவளோ ‘இல்லை’ என மெதுவாக தலையாட்ட,
அவனோ காப்பை பின்னுக்கு தள்ளிக்கொண்டு எழுந்து நின்றவன் “பேச எதுவுமில்லைனா நீ தூங்கு…” என்றுவிட்டு நீள்விரிக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அடுத்த கணம் அவனுடனே பதறிப்போய் எழுந்த முகிழிற்கு அவனிடம் பேச வேண்டியிருந்தது.
ஆனால் அவனை எவ்வாறு குறிப்பிட்டு தடுத்து நிறுத்துவது என்றே தெரியவில்லை அவளிற்கு!
அவள் அவனை அழைக்க முடியாமல் திணறுவதை அவனும் அறிந்து தான் இருந்தான்.
இருப்பினும்,அவன் தன் நடையை நிறுத்தவில்லை.
‘என்ன தான் பண்ணறான்னு பார்க்கறேன்?’ என புன்னகைத்தப்படியே நடந்த ரத்தினவேலை ஒருவழியாக “ஏங்க…” என முயன்று வருவித்த குரலில் அவள் அழைத்திருந்தாள்.
அவளின் அழைப்பு ரத்தினவேலின் இதழை மேலும் விரிய வைத்திட,அதை மறைத்து “என்ன?” என்றவாறே அவளின் புறம் அவன் திரும்பினான்.
ஒரு கணம் அவனிடம் அதைப்பற்றி பேச தயங்கியவளிற்கு கணவன் சற்று முன்பு கொடுத்த தண்டனை நினைவில் எழுந்தவுடன் “இல்லை…நீங்க இங்கயே…” என கட்டிலை சுட்டிக்காட்டி இழுத்தாள்.
அவளை ஒரு கணம் விசித்திரமாக நோக்கினான் ரத்தினவேல்.
‘இப்போ இப்படி சொல்லுவாள்…ஏதேச்சையா கைப்பட்டால் கூட காமவெறி பிடிச்சவனை பார்க்கற மாதிரி பார்ப்பாள்…எதுக்கு வம்பு?’ என தலையை உலுக்கிய ரத்தினவேல் “நத்திங்…எனக்கு அது தான் கம்ஃபர்ட்டபிளா இருக்கு…நீ படு” என்றுவிட்டு நீள்விரிக்கையில் சென்று படுத்துவிட்டான்.
அவனது உயரத்திற்கு அந்த நீள்விரிக்கை போதவில்லை என்பதை அவள் கவலையுடன் நின்று பார்த்தாள்.
கண்களில் கரம் வைத்து படுத்திருந்த ரத்தினவேல் அவளை நோக்கி திரும்பவில்லை.
ஆனால் அவளை காணாமலே அவளின் தவிப்பை அறிந்தவனாய் “முகிழ் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை…இன்னும் இரண்டு நாள் தான்…சென்னைக்கு போய்விட்டால் அங்க இரண்டு பெட் இருக்கு…சோ நோ பிராப்ளம்…அதுவரை இங்க நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…நீ பேண்ட்டை காயத்திலே படாத மாதிரி ஏத்திவிட்டு தூங்கு…ஏர் ஃபாலோ மேலே பட்டால் தான் சீக்கிரம் காயம் சரியாகும்” என எவ்வித முகச்சுளிப்புமின்றி அக்கறையுடன் பேசிய கணவனை பிரம்மிப்புடன் நோக்கினாள் அவள்.
அவனை பற்றி அவள் கேள்வியுற்றதெல்லாம் அவன் ஒரு மான்ஸ்டர் என்று தான்!
ஆனால் அவளை நோக்கி வைக்கும் அவனது ஒவ்வொரு அடியிலும் அவன் ஒரு தேவதூதன் என்று அவளிற்கு புரிந்தது.
அவனை சில நிமிடங்கள் ரசித்து பார்த்தவளின் மனதிற்குள் அவன் ஒரு சிறந்த மனிதனாய்…காதலனாய்…கணவனாய் பதிய ஆரம்பித்த தருணம் அது தான்!
அதே உற்சாக மனநிலையோடு கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தாள் முகிழ்மதி.
நேற்றிரவு சரியாக உறங்காததினால் ரத்தினவேலும் மிக விரைவாக உறக்கத்தை தழுவியிருந்தான்.
அவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் சமயம் அவனின் காதில் ஒரு பெண்ணின் தீனக்குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்க,சட்டென அவனின் உறக்கம் களைந்தது.
அவனின் மனைவி முகிழ்மதி தான் உறக்கத்திலே “அம்மா…அம்மா…” என பிதற்றிக்கொண்டிருந்தாள்.
உடனே அவளருகே ஓடிச்சென்று அவன் பார்க்க,அவளின் விழியிலிருந்து நீர் வழிய…உடலெல்லாம் வியர்வையால் குளித்திருந்தன.
நேற்று இரவு அவன் கண்ட அதே அறிகுறி இன்றும் தென்பட,அவளை நெருங்கவே அவன் அஞ்சினான்.
ஆனாலும் மனையாள் சிரமப்படுவதை கண் கொண்டு காண சகிக்காமல் “முகிழ்…” என மெதுவாக அவன் அழைத்து அவளை தொடவும்,
அதற்கு எதிர்வினையாய் அவளின் மேனி தூக்கிவாரிப்போட,அவனின் கரத்தை ஆவேசமாக உறக்கத்திலே தள்ள முயன்றாள் அவள்.
அத்துடன் அவளின் பிதற்றல் இப்போது அலறலாக மாறவும்,அவன் தீச்சூட்டாற் போன்று கரத்தை விலக்கிக்கொண்டான்.
பகலில் காணும் முகிழ்மதி போல் அவனிற்கு அவள் தெரியவில்லை.
அவளிற்கும் இவளிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
அவன் தீண்டினாலே அஞ்சி நடுங்கும் மனைவியை பார்த்தவனின் நெஞ்சத்தில் சுருக்கென்று வலி தைத்தன.
அவனிற்கு நாக்கு உலர்ந்து தொண்டை அடைத்தன.
இருப்பினும் தொண்டையை செருமி “ஸ்டார் ரிலாக்ஸ்…நான் உன் புருஷன் ரத்தினவேல் தான்…உனக்கு நான் இருக்கேன்மா…நீ பயப்பட வேணாம்…ரிலாக்ஸ்…” என தள்ளி நின்றே அவளிடம் அவன் கலங்கிய குரலில் சமாதானம் செய்ததும்,சிறிது சிறிதாக அவனின் குரலுக்கு கட்டுப்பட்டு அவளின் பிதற்றல் குறைந்து இறுதியில் நின்றுப்போனது.
சில கணங்களிலே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட,அன்றும் நித்திரை இல்லாமல் தவித்தது என்னவோ அவன் தான்!
அவனிற்கு நடப்பது எதுவும் புரியவில்லை.
ஆயினும்,தன்னவள் படும் வேதனை அவனின் அடிவயிற்றை சுருட்டிக்கொண்டன.
அவளிடம் எதுவோ சரியில்லை என்பது மட்டும் அவனிற்கு நன்றாக புரிந்துப்போனது.
இரவு முழுக்க அவளருகே உறங்காமல் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்திருந்தான் அவன்.
அவனின் விழிகள் முழுவதும் அவளிடம்…
ஆனால் சிந்தனைகள் வேறெங்கோ அலைப்பாய்ந்து கொண்டிருந்தன.
அவன் அவனாகவே இல்லை அந்த சில மணி நேரங்கள்…
அதனால் அவளை ‘ஸ்டார்’ என்று குறிப்பிட்டதை கூட அவன் அறியவில்லை.
இப்படியே அங்கிருந்த இரண்டு நாட்களும் உருண்டோடிட,ஆடவனின் உறக்கம் தொலைந்தன.
அவர்கள் சென்னைக்கு வந்து மேலும் ஒரு வாரம் கடந்திருந்தன.
பகலில் அவனது நெருக்கத்தை ஏற்பவளால் இருள் சூழ்ந்த வேளைக்கு பிறகு அவனின் தீண்டலை அவளால் ஏற்க முடியவில்லை.
அவனை நிச்சலனமின்றி நிராகரித்தாள்.
அதிலும்,உறங்கிய சில நிமிடங்களிலே பித்துப்பிடித்தவள் போலவே அவள் நடந்துக்கொள்ளும் விதம் வித்தியாசமாக இருந்தது.
சில சமயங்களில் இரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் காரிகை திடீரென்று “அம்மா” என அலறி எழுவாள்.
சில நேரம் மூச்சிறைக்க ஆரம்பித்திட,நடு இரவில் சுவாச உள்ளிழுப்பனை அவள் பயன்படுத்தினாள்.
இன்னும் சில சமயங்களில் உறக்கத்திலே ஏதேதோ பிதற்றிக்கொண்டே இருப்பாள்.
இதையெல்லாம் மௌனமாக கவனித்த ரத்தினவேலிற்கு சர்வ நிச்சயமாக ஒன்று தெரிந்துவிட்டது.
அவளின் மனநிலை நிலையாக இல்லை என்று!
மிக தீவிரமாக ஏதோ ஒரு சம்பவத்தால் அவளின் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவன் அறிந்துக்கொண்டான்