முகிழ்மதி 42:

ரத்தினவேல் மற்றும் முகிழ்மதி இருவருக்கும் திருமணம் நடந்தேறி ஒரு வாரத்திற்கு மேல் கடந்திருந்தது.
கடந்து வந்த அந்த நாட்களில் புகுந்த வீட்டில் பொருந்திக் கொள்வதற்கு நிறையவே சிரமப்பட்டாள் முகிழ்மதி.
சட்டென யாருடனும் அவளால் ஒட்ட முடியவில்லை.
அவளின் மனம் ஒருவனுடன் மட்டுமே ஆழ பிணைந்திருந்தது.
ஆனால் அவனிடமும் நினைத்ததை எல்லாம் அவளால் பேசிவிட முடியாது.
இருப்பினும்,இப்போதெல்லாம் அவனிடம் சிறிது சிறிதாக பேச முயற்சித்து கொண்டிருக்கிறாள்.
ரத்தினவேலும் அவளை மாற்ற வெகுவாய் முனைந்தான்.
அதற்கான பலன் அவ்வப்போது அவனிற்கு கிடைக்கவும் செய்தது.
ஏனெனில்,தினந்தோறும் குளித்துவிட்டு வரும் மனைவி அவன் அவளது நெற்றியில் குங்குமம் வைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருக்க தொடங்கினாள்.
அதேப்போல் அவனிற்கான பணிவிடைகளை தயங்காமல் செய்தவள்,அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசவும் ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் அவள் பேசும் சில விஷயங்கள் கூட அவர்களை பற்றியதாக இருக்காது.
அவளின் பேச்சில் பெரும்பாலும் மற்றவர்களே இடம்பிடித்திருப்பார்கள்.
அதுவே ரத்தினவேலிற்கு கோபத்தை கொடுக்கும்.ஆனால் கட்டுப்படுத்திக்கொள்வான்.
அன்றொரு நாள் அவன் சட்டை அணிந்துக் கொண்டிருக்கும் போது “வீர் அண்ணாவை பார்த்து ரொம்ப நாளாச்சு…அண்ணா வீட்டுக்கு வரமாட்டாங்களா?” என அவள் கவலையோடு விசாரிக்க,
‘கண்ணு முன்னாடி இருக்கிறவன் எல்லாம் இவ கண்ணுக்கு தெரியாது…எவனோ ஒருத்தனை தான் கேட்பாள்’ என கடுப்புடன் எண்ணிய ரத்தினவேல் “எலெக்ஷன் வரப்போகுது…அந்த வேலையில் வீர் பிஸியா இருக்கான்…வீட்டுக்கு வர்றது கஷ்டம்” என்றவன்,
“நானும் இனி வீட்டுக்கு லேட்டா தான் வருவேன்” என அவன் தன்னை பற்றிய தகவலையும் சேர்த்து கூறினான்.
அதைக்கேட்டு அவளின் முகம் வாடிவிட்டன.
‘சீக்கிரம் வர சொல்லமாட்டாளா?’ என அவன் அவளின் முகத்தையே பார்க்க,
அவளோ ‘ஏன் லேட்டா வர்றார்?சீக்கிரம் வரலாமில்லை’ என மனதிற்குள் சிணுங்கிக்கொண்டாள்.
அதனை வாயை திறந்து சொல்லியிருந்தால் ரத்தினவேல் மகிழ்ச்சியுற்று இருப்பான்.
ஆனால் நினைத்ததை பேசுபவள் முகழ்மதி அல்லவே?
அதனால் அவளோ மௌனமாகவே நின்றிருந்தாள்.
ரத்தினவேலோ ஒரு பெருமூச்சுடன் “சரி நான் கிளம்பறேன்…நீ தனியா இருக்காதே…தமயந்தி கூட லைப்ரரி போய் படிக்கிற வழிய பாரு…இல்லையா பாட்டி கூட இரு” என அவளின் காதோர முடியை ஒதுக்கிவிட,
அவளோ அவனின் தொடுகையில் தேகம் சிலிர்க்க விழி மூடியவள் “ம்” என்றாள்.
இமை மூடி இருந்தவளின் மோன நிலை ஏனோ அவனை தூண்டிவிட,
“சரி நான் கிளம்பறேன்” என்றவன் குனிந்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.
அதனை சற்றும் எதிர்பாராத பெண்ணவள் சட்டென இமை திறந்து திகைப்போடு அவனை ஏறிட “இனி தினமும் இதையும் பழகிக்கோ” என சிரித்தப்படி அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியேறிருந்தான்.
அவன் வெளியேறிய சில நிமிடங்கள் கழித்தும் அவள் அவ்விடத்திலே உறைந்து நின்றிருந்தாள்.
அவனது முத்தத்தில் கலவி என்பது சிறிது மில்லை.
அவனது இதழ் ஸ்பரிசம் அவளின் மேல் அவனிற்கு இருந்த அன்பையும் அக்கறையையும் மட்டுமே காட்டின.
கூடவே,அவளிற்குள் ஒரு பாதுகாப்பான உணர்வையும் கொடுத்தன.
அதனால் சில நிமிடங்களுக்கு பிறகு தன்னிலை அடைந்த பெண்ணவளிற்கு அவனது தாடி மீசையின் குறுகுறுப்பு இப்போதும் நெற்றியில் இருப்பது போன்ற ஒரு மாயை!
உடனே அவன் முத்தமிட்ட இடத்தை தன் விரலால் வருடிக்கொண்டவளின் இதழ்கள் இலேசாக முறுவலித்தன.
கணவனை நோக்கி அவளின் மனமும் ஒவ்வொரு அடியாக நகர்ந்து கொண்டிருந்தன.
அதேவேளை அவளின் தமக்கையையும் அவள் முழுமையாக மறக்கவில்லை.
ஏனெனில்,முகிழ்மதி இப்போதும் தனது தமக்கைக்கு அழைப்பதை நிறுத்தவில்லை.
ஆனால் எதிர்புறமோ அவளின் அழைப்பு முழுமையாய் நிராகரிக்கப்பட்டன.
அதுவே அவளிற்குள் ஒரு குற்ற குறுகுறுப்பை உண்டாக்கி கணவனின் புறம் முழுமையாக செல்லவிடாமல் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தன.
ஆனால் அவளை போலவே சந்திரமதியும் தங்கைக்கு அவள் இழைத்த அநீதிகளை நினைத்து வருத்தத்தில் இருந்தாள்.
சந்திரமதி அவள் வீட்டில் நன்றாக உணவருந்தி ஒரு வாரமாகியிருந்தது.
அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவளிற்கு வீட்டில் சாப்பிடவே அச்சமாக இருந்தன.
ஏனெனில்,அவளிற்கு வேர்கடலை என்றால் ஒரு ஒவ்வாமை!
ஆனால் அன்று சமைத்த உணவில் வேர்கடலையை போட்டு சமைத்திருந்தார்கள்.
அதனால் அவளின் வெண்ணிற மேனியெங்கும் தடித்து சிவந்துப்போயின.
இன்னும் இரண்டு வாய் உணவை அவள் உட்கொண்டிருந்தால் அவளின் உடல்நிலை சீர் கெட்டிருக்கும்.
நல்லவேளையாக சந்திரமதி சிறிது உணவிலே அவற்றினை கண்டறிந்ததால் சரியான நேரத்தில் மருந்தை எடுத்திருந்தாள்.
அவளிற்கும் பெரிதாக எவ்வித பாதிப்புமில்லை.
தாயிடம் அவள் இந்த விஷயத்தை பற்றி உரைக்க “அப்படியா?நீ மருந்து எடுத்துக்கிட்டேயில்லை…சரி போய் படு” என சர்வ சாதாரணமாக கூறி கடந்துப்போயிருந்தார்.
அவரிடம் சிறு பதட்டமோ பதைபதைப்போ எதுவுமில்லை.
அதைக்கண்டு அவளிற்கு நெஞ்சம் வலித்தது.
தன் மீது அக்கறையில்லை என்றால் கூட, குறைந்தபட்சமாக அந்த வேலையாளை அழைத்து கண்டிப்பார் என்று அவள் எண்ணினாள்.
ஆனால் அவரோ எதுவும் செய்யவில்லை.
அவரிடம் அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று அவள் மனதை தேற்றிக்கொண்டாள்.
காரிகையும் அன்று நடந்தது தெரியாமல் நிகழ்ந்துவிட்ட ஒரு பிழை என்று எளிதாக கடந்துவிட்டாள்.
அவளிற்கு எப்போதும் உணவுகளை ஆராய்ந்து அன்பாக பரிமாறிக்கூடியவர் பட்டம்மா தான்!
அதன்பொருட்டே தவறு நிகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதினாள்.
அதனால் புதிதாக வந்திருக்கும் பணியாளரிடம் நேரடியாகவே சென்றவள் “எனக்கு வேர்கடலைனா அலர்ஜி…அதனாலே எனக்கு கடலையை வைச்சு செய்யற எந்த பொருளையும் சமையலுக்கு யூஸ் பண்ணாதீங்க” என வேலையாளிடம் தன்னுடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் கூறினாள்.
அவரும் “சரிங்க சின்னம்மா” என பவ்யமாக கேட்டுக்கொண்டார்.
ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவளின் உணவில் வேர்கடலை பொடியை வைத்து ஒரு உருளைக்கிழங்கு பிரட்டலை செய்திருந்தார் அவர்.
அவளிற்கு மீண்டும் ஒவ்வாமையில் மேனியெல்லாம் தடித்து வீங்கியிருந்தது.
இம்முறை அதிகமான வேர்கடலை பயன்படுத்தியதினால் அவளிற்கு நோய் தீவிரமாகியிருந்தது.
அவளின் உடல்நிலை முழுதாக தேறி வர சரியாக இரண்டு நாட்களாகியது.
அப்போதும் கூட விஜயலட்சுமி அந்த பெண்ணின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவளின் தந்தை சிவராமன் ஒரே ஒரு முறை அவளை பார்த்துவிட்டு சென்றார்.
அவரிடம் அவள் நிஜத்தை கூற உத்தேசித்த வேளையில் விஜயலட்சுமி இடைப்புகுந்து “ஒண்ணுமில்லைங்க…புது பொண்ணு தெரியாமல் வேர்கடலையை போட்டிருச்சு…நான் இந்த முறை கண்டிச்சிட்டேன்…புள்ளை தான் பாவம்…வாடிப்போச்சு” என அவளின் தலையை பாசமாக வருடி நாடகத்தை போட்டதும் “இந்த மாதிரி தப்பு இனி நடக்கக்கூடாதுனு சொல்லு விஜி…தப்பு நடந்தால் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்” என எச்சரித்துவிட்டு வெளியேறிவிட்டார்.
மகளின் மேல் கோபமிருந்தாலும் அவருக்குள் பாசமும் இருந்தது.
ஆனால் விஜயலட்சுமியோ அவளை மெத்தனமாக பார்க்க,அவளிற்கு சுறுசுறுவென கோபம் வந்துவிட்டது.
“மம்மி ஏன் இப்படி பண்ணறீங்க?அவங்க வேணும்னு தான் இதை பண்ணியிருக்காங்க…எதுக்காக அவங்களை காப்பாத்தறீங்க?” என இயலாமையுடன் அவள் வினவ,
அவரோ “ப்ச் மதி புரிஞ்சு தான் பேசறீயா நீ?நம்ப குடும்பத்தோடு நிலைமை உனக்கு கொஞ்சமாவது தெரியுமா தெரியாதா?உன் அப்பாவுக்கு பிசினஸுலே ஏகப்பட்ட நட்டமாம்…இன்னும் கொஞ்ச நாள் போனால் நாம்ப தெருவுலே பிச்சை தான் எடுக்கணும்…இப்போ போய் இருக்கிற வேலைக்காரியை விட சொல்லறீயா?கம்முன்னு கிட” என மனசாட்சி சிறிதுமின்றி அதட்டிவிட்டு சென்றுவிட்டார்.
அவளிற்கு அந்நொடி தான் சுருக்கென்றது.
மகளை விட ஒரு பணியாளிற்கு தாய் பரிந்து வருகிறார் என்று எண்ணும் போதே அவளின் இதயத்தில் ஒரு நடுக்கம் தோன்றி மறைந்தன.
‘இல்லை…அப்படி இருக்காது’ என அவள் தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டாள்.
ஆனால் அவளின் மனதில் சந்தேகமென்னும் விதை முளைக்க தொடங்கின.
அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக அந்த வீட்டில் அவளிற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன.
அவளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டன.
அவளிற்கு தினந்தோறும் கொடுக்கப்படும் சேமிப்பு பணம் முதற்கொண்டு அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இதற்கெல்லாம் மேலாக அவளிற்கான அடிப்படை மரியாதை அந்த வீட்டில் மறுக்கப்பட்டது.
ஏனெனில்,வேலையாட்கள் அவளை ஒரு பொருட்டாய் கூட மதிப்பதில்லை.
எந்த வீட்டில் இளவரசியை போல் வலம் வந்தாளோ அந்த இல்லத்தில் ஒரு குப்பையை போல் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.
இதற்கெல்லாம் மேலாக திடீரென்று அவளின் வீட்டில் பணிப்புரிந்த பழைய வேலையாட்கள் எல்லாம் அதிரடியாக நிறுத்தப்பட்டனர்.
இப்போது இருப்பவர்கள் அனைவரும் விஜயலட்சுமியால் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்.
அதேசமயம் ஆட்கள் குறைப்பும் நடந்தேறின.
ஏனெனில்,அடி மேல் அடி விழுவது போல் சிவராமனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிய கையோடு அவரின் தொழிலில் பெரும் நஷ்டம் உண்டாகியிருந்தது.
அவற்றினை சமாளிக்க முயன்று இருக்கும் போது,அவரது சர்க்கரை தொழிற்சாலையில் பணிப்புரியும் தொழிலாளர்கள் சம்பளத்தை ஏற்றி தரும்படி போராட்டம் செய்தனர்.
அதனால் அவர்கள் வீட்டின் நிதி நிலைமை சிறிது சிறிதாக குறைய தொடங்கின.
தொழிலில் உண்டாகிய சிக்கலினால் சிவராமனின் முழு கவனமும் அதன் மீது மட்டுமே இருந்தது.
மகளென்று ஒருவள் இருக்கிறாள் என்பதையே அவர் அடியோடு மறந்துவிட்டார்.
இங்கு வீட்டிலோ சந்திரமதி தினந்தோறும் ஒரு கொடுமையை அனுபவித்து வந்தாள்.
வீட்டு வாசலை தாண்டுவதற்கு கூட அவளிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவளின் அலைப்பேசியும் பிடுங்கி வைக்கப்பட்டன.
சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கும் கைதி போல் அவளை நடத்தினார் விஜயலட்சுமி.
அவளால் தாயை மீறி எதுவும் செய்யமுடியில்லை.
தினமொரு நரகத்தை அனுபவித்த மங்கை ஒரு கட்டத்தில் பொங்கிவிட்டாள்.
“மம்மி ஏன் இப்படி பண்ணறீங்க?நான் என்ன தப்பு பண்ணேன்னு இப்படி என்னை அடைச்சு வைச்சு கொடுமைப்படுத்தறீங்க?அட்லீஸ்ட் என்னை காலேஜுக்கு போகவாது விடுங்க” என ஆதங்கமும் கோபமும் கலந்தக் குரலில் கேட்க,
“ஏதே உன்னை நான் கொடுமைப்படுத்தறேனா?நல்லாயிருக்கு உன் நியாயம்…உன் தங்கச்சிய அடிச்ச மாதிரி தினம் அடிக்கிறானா…சூடுவைக்கிறேனா?இல்லை திட்டறேனா?இல்லை அவளை வேலை வாங்கிற மாதிரி உன்னை வாங்கறேனா?சொகுசா தானே இருக்கே நீ…உன்னை காலேசூக்கு அனுப்ப முடியாது…நீ போய் ஏதாவது ஏழரையை இழுத்திட்டு வந்திட்டால் என்ன செய்யறது?அதுவுமில்லாமல் காலேசுக்கு அனுப்ப காசுமில்லை…உள்ள போ” என அவளை அடித்து விரட்டாத குறையாக பேசி அனுப்பிவிட்டார்.
அறைக்குள் வந்து அமர்ந்த பெண்ணவளிற்கு பேரதிர்ச்சி!
முகிழ்மதியை அவர் கொடுமை செய்வதை அவளும் நன்கு அறிவாள்.
ஆனால் இப்படி அரக்கத்தனமாக நடந்துக்கொண்டிருக்கிறார் என்று அப்போது தான் அவள் அறிந்துக்கொண்டாள்.
தினந்தோறும் அடிப்பது,சூடு வைப்பது இவையெல்லாம் அவளிற்கு புதிய செய்தி!
இவற்றினை பற்றி கேட்டதும்
‘சூடு வைச்சாரா?எப்போ?ஏன்?’ என நினைக்கும் போதே அவளின் ஈரக்குலையே நடுங்கிவிட்டன.
அவளும் தங்கையை சுயநலத்திற்காக உபயோகித்திருக்கிறாள் தான்.
ஆனால் அவளின் தாயின் அளவிற்கு அவள் மிருகத்தனமாக நடந்துக்கொண்டதில்லை.
‘ஐய்யோ அம்மு’ என தங்கைக்காக அவள் மனம் தவிக்க,
அவளிற்கு அப்போது தான் ஒரு விடயம் நன்றாக புரிந்தது.
தான் இப்போது அனுபவிக்கும் கொடுமைகளை விட பல மடங்கு தங்கை அனுபவித்திருக்கிறாள் என்று!
அவள் அனுபவித்த கொடுமைகளை பார்த்து தனக்கு வலித்தாலும் தாயின் கோபத்திற்கு அஞ்சி பின்வாங்கியது தவறோ என்று இப்போது தோன்றவும் செய்தது.
உடனே தங்கைக்காக அனுதாபத்தில் அவளின் மனம் குமுறிட,அவளின் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிய தொடங்கின.
அந்த வீட்டில் அவளிற்கு என்று இருந்த ஒரே ஒரு உறவு முகிழ்மதி என்று அக்கணம் அவள் உணர்ந்தாள்.
அவளை காப்பதற்காக தங்கை செய்த தியாகங்கள் எல்லாம் கண் முன் வந்து செல்ல அவளின் நெஞ்சம் விம்மி வெடித்தது.
பெயரளவில் மட்டும் தான் சந்திரமதி தமக்கை!
ஆனால் நிஜத்தில் முகிழ்மதி தான் அவளிற்கு எல்லாமுமாய் இருந்திருக்கிறாள்.
அவளை தாயை போல் அனைத்து பிரச்சனைகளிலிருந்து காத்ததும் அவள் என்பது புரிய தங்கைக்காக அவளின் மனம் துடித்தன.
“உன்னை நான் புரிஞ்சுக்காமல் போயிட்டனே…சாரி அம்மு” என அவளின் இதழ்கள் துக்கத்தில் தங்கையிடம் மன்னிப்பை வேண்டின.
தாமதமாக செய்த தவறை உணர்ந்து மன்னிப்பை யாசித்தவளின் பாவங்கள் அத்துணை எளிதில் மறையக்கூடியது அல்ல என்று அவள் நன்கு அறிவாள்.
தங்கைக்கு இழைத்த பாவத்திற்கான தண்டனைகளை தான் தற்போது அவள் அனுபவிக்கிறாள்.
அந்த வீட்டில் அவளிற்கென்று யாவருமின்றி தனிமை துயரில் வாடியவளை சமாதானம் செய்ய வென்று ஒருவருமில்லை.
அதுவே அவளிற்கான தண்டனை என்று கருதி சகோதரியிடமிருந்து விலகியிருந்தாள்.
ஆனால் தாயின் இந்த செயல்களுக்கு பின்பு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்ற நெருடல் அவளிற்கு இருந்துக்கொண்டே இருந்தது.
அதனை மெய்ப்பிப்பது போல் ஒரு நாள் அவளிடம் வந்த விஜயலட்சுமி கூறிய விடயத்தை கேட்டு ஸ்தம்பித்துவிட்டாள் சந்திரமதி.
இங்கோ தமக்கை படும் துயரங்களை உணர்ந்தவள் போன்று முகிழ்மதிக்கு ஒரே படபடப்பாக இருந்தது.
அவளிற்கு ஒரே ஒரு முறை தன் சகோதரியை பார்த்து மன்னிப்பு கூற வேண்டும் போல் தோன்றின.
ஆனால் கணவனின் கோபத்திற்கு அஞ்சி அவள் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
ஒருவருக்காக ஒருவர் சகோதரிகள் இருவரும் பாசத்தில் தவித்த அதேநேரம் விதி அவர்களின் வாழ்வில் விளையாட சிரித்தப்படி காத்திருந்தது.
முகிழ்மதி 43:

இரவு வெகு நேரம் கழித்து தான் வரமுடியும் என்று அவன் கூறினாலும் ஏனோ அவனிற்கு மனம் கேளவில்லை.
மனைவிக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருக்கும் போது அவளை தனிமையில் விட விருப்பமின்றி நேரத்திற்கே இல்லம் வந்து சேர்ந்துவிட்டான் ரத்தினவேல்.
அதனை பார்த்து முகிழ்மதிக்கு அளவில்லாத மகிழ்ச்சி!
ஆனால் தன் மகிழ்ச்சியை அவள் அவனிடம் வெளிப்படுத்த முயலவில்லை.
அவளிற்கு அதனை எவ்வாறு செய்வது என்றும் தெரியாது.
சிறு வயதிலிருந்தே தனது சுக துக்கங்களை தனக்குள் வைத்து பழகியிருக்கும் பெண் அவள்!
ஆதலால்,சட்டென அதன் கூட்டிலிருந்து அவளால் வெளிவரமுடியாது.
ஆடவனும் அவளின் குணமும் அது தான் என்பதை சரியாக கணித்து வாழ பழகிக்கொண்டான்.
நாளுக்கு நாள் அவளிடம் பல மாற்றங்கள்!
அவள் நினைப்பதையெல்லாம் பேசவில்லை என்றாலும்,அவனிடம் தயக்கம் துறந்து பேச அளவு அவள் முன்னேறியிருந்தாள்.
தற்சமயம் அவனிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
தன்னவளிற்காக அவன் விரைவாக வர வேண்டி இருப்பதால் பொறுப்புகள் அனைத்தும் வீரின் தலையில் விழுந்தது.
நண்பன் கோடு கிழித்தால் அதனை தாண்டாத கர்ணனாகிற்றே அவன்!
அதனால் எவ்வித முகச்சுணக்கமுமின்றி பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தான்.
வீர் அரசியல் சார்ந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் என்றால்,தொழில் சார்ந்த கடமையை ஜித்தேந்திரன் ஏற்றுக்கொண்டான்.
வீர் ரத்தினவேலின் வீட்டு பக்கம் வந்து பல நாட்கள் கடந்துவிட்டது.
தமயந்தியால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அதனால் வீட்டில் அலுவலகத்தை சுற்றி பார்ப்பதாக பொய் கூறி கட்சி அலுவலகத்திற்கு சென்றாள்.
அவள் அங்கு செல்வது எப்போதாவது நடக்கும் நிகழ்வு என்பதால்,யாவருக்கும் சந்தேகம் வரவில்லை.
சென்னை மாநகரின் அதிகாரம் மிக்க முதலமைச்சரின் கட்சி அலுவலகம் அது!
ஒருபோதும் ஓய்வறியாத அந்த இடம் எப்போதும் பரபரப்பின் உச்சத்திலேயே இருக்கும்.அரசியல் பிரமுகர்கள், அதிகாரத் தோரணை கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள்,புகைப்பட கருவிகளுடன் காத்திருக்கும் செய்தியாளர்கள் என அந்த இடமே எப்போதும் ஒரு போர்க்களம் போல் தான் காட்சியளிக்கும்.
ஆனால் அந்த இரைச்சல்களுக்கு இடையில் சற்றும் தன்னிலை இழக்காமல் கட்டுக்கோப்பான அமைதியுடன் நின்றிருந்தான் வீர் பிரதாப்.
வாகனத்திலிருந்து கீழிறங்கிய தமயந்தியை பார்த்து பலரும் அவளிற்கு ‘வணக்கம்’ சொல்லி மரியாதை செலுத்தினார்கள்.
அனைவருக்கும் ஒரு புன்னகையை கொடுத்தவளின் பார்வை முழுவதும் அங்கே நடுநாயகமாக நின்றிருந்த ஆடவனின் மீது மட்டுமே நிலையூன்றி இருந்தன.
ஆறடி உயரத்திற்கு மேலான கம்பீரம், எதற்கும் அசையாத அகன்ற தோள்கள்,எதையும் ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்கள்,வார்த்தைகளைச் செலவு செய்யத் தயங்கும் அந்த மௌனம்… அதுவே அவனை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டியது.
ரத்தினவேலுக்கு அடுத்தப்படியாக அங்கு மதிக்கப்படக்கூடிய நபர் வீர் என்பதால் அனைவரும் அவனை மரியாதையுடன் பார்த்தனர்.
ஒரு சிலரோ ஆடவனது அமைதிக்கு பின் இருக்கும் ஆழியை எண்ணி அஞ்சினர்.
கருப்பு நிற சட்டையில் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று பாதுகாவலர்களிடம் ஆணை பிறப்பித்து கொண்டிருந்த தன்னவனை ரசித்துக்கொண்டே படியேறிய தமயந்தி “வீர்” என்றழைத்தாள்.
யாரிடமிருந்து தப்பி செல்வதற்காக அவன் தங்கையை கூட காணாமல் விலகியிருந்தனோ அவளின் குரலை இங்கு கேட்டதும் வீரின் நெஞ்சம் அதிர்ந்தது.
‘இங்கயும் வந்திட்டாளா?’ என சலிப்பாக எண்ணிய வீர் மெதுவாக அவளை நோக்கி திரும்பினான்.
படிக்கட்டுகளில் இருந்து பட்டாம்பூச்சி போல் பறந்து மேலே வந்த தமயந்தி சாதாரண ஆகாய நீல வண்ண சுரிதார் மட்டுமே அணிந்திருந்தாலும்,அவளது அந்த விளையாட்டுத்தனமான துடிப்பும், காற்றில் அலைபாயும் நீண்ட கூந்தலும் அவளை ஒரு தேவதையாகக் காட்டின.
அதிகாரத்தின் நிழலில் வளர்ந்தாலும், எந்த கவலையுமின்றி திரியும் ஒரு சுதந்திரப் பறவை அவள்.
அவளை நோக்கி அவன் திரும்பியதும் அவளது இதழ்களில் ஒரு குறும்புச் சிரிப்பு மெல்ல அரும்பியது.
‘என்கிட்ட அவ்வளவு சீக்கிரம் தப்பிக்கலாம்னு பார்க்கறீங்களா வீர்?அது நடக்கவே நடக்காது’ என எள்ளலாக மனதிற்குள் எண்ணிய காரிகை “என்ன சார் ஓடி வந்து ஒளிஞ்சுக்கிட்டால் உங்களை கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சிட்டீங்களா?” என கேலியாக கேட்டுக்கொண்டே அவனருகே வந்தாள்.
அவனோ சுற்றி நின்ற ஆட்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இங்க என்ன செய்யறே நீ?” என இமைகள் இடுங்க வினவினான்.
“இதென்ன கேள்வி…என் மனசுக்கு பிடிச்ச ஆளை பார்க்க வந்திருக்கேன்?” என அசால்ட்டாக அவள் கூறியதும்,
வீர் கோபத்தில் அதிர்ந்தான் என்றால்,அருகிலிருந்த பாதுகாவலர்களோ ‘என்ன நடக்குது?’ என்பது போல் சுவாரசியமாக இருவரையும் நோக்கினார்கள்.
அவளோ இதழ்கடித்து சிரித்தவாறு “அட என்ன புரியலையா?என் அப்பாவை தான் சொல்லறேன்…எங்க அவரு?அவரை பார்த்து ஒரு விஷயம் பேசணும்” என அடுக்கு அடுக்காக பல பொய்களை கூறி மற்றவரின் கவனத்தை திசைத்திருப்பிவிட்டாள்.
அதையறியாத மற்றவர்களும் “ஓ…அப்படியா மேடம்…சார் உள்ளே தான் இருக்காரு…போய் பாருங்க” என சொல்லிவிட்டு அவரவர் பணியை பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஆனால் வீரின் முகம் மட்டும் இறுகிப்போனது.
அவள் கூறியதில் பொதிந்திருந்த உள்ளார்ந்த அர்த்தம் மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அவனிற்கு தெரியுமல்லவா?
அதனால் அவளை அவன் முறைக்க ‘என்னை மட்டும் முறைச்சு முறைச்சு பார்க்கறது…மத்தவங்ககிட்ட மட்டும் ‘ஈ’னு இளிக்கிறது…ஆளையும் மூஞ்சியும் பாரு’ என நாசிவிடைக்க அவனை மனதிற்குள் வறுத்தெடுத்தவள் “ஏன் சார்?ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன்…ஒரு அன்பான வரவேற்பு…ஒரு கூல்டிரிங்க்ஸ்…இதெல்லாம் கொடுக்கமாட்டிங்களா?நான்.சீ.எம்மோட பொண்ணு…என்னை கடைசி வரை நிக்க வைச்சே கேள்வி கேட்டு அனுப்பிடப்போறீங்களா சார்?” என வேண்டுமென்றே இமைக்கொட்டி பேசி அவனை சீண்டினாள்.
‘இவளை’ என உள்ளுக்குள் கடுகடுத்தாலும் பெருமூச்சறிந்து “உள்ள வா” என அவளை அங்கிருந்து அவன் அழைத்து சென்றான்.
விஜயேந்திரனின் அறையை நோக்கி அவன் நடக்க தொடங்க,அவனிற்கோ அவளின் வருகையும் மறைமுக பேச்சும் ஆத்திரத்தை கொடுத்திருந்தன.
அதனால் எதுவும் பேசாமல் அவன் மௌனமாக வந்தான்.
அவளும் பக்கவாட்டாக திரும்பி அவனை பார்த்தவாறே அவனுடன் இணைந்து நடந்தாள்.
அவளின் பார்வை அவனிற்கு எரிச்சலை கொடுத்தன.
ஆனால் அவளிடம் பேசினால் தனக்கு தான் ஆபத்து என்று பல்லை கடித்து பொறுமை காத்தான் வீர்.
அவனை போல் அவள் அமைதியாக இருக்கவில்லை.
ஆட்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாத இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தவுடன் “ஏன் இப்போலாம் நீங்க வீட்டுக்கு வரதில்லை?” என தமயந்தி சீறலான குரலில் கேட்க,
அவனோ அவளை பார்க்காமலே “அதை எதுக்கு நீ கேட்கறே?” என்று கேட்டான் முகத்திலடித்தாற் போன்று…
“வீர்…” என அவள் பல்லைகடிக்க,
வீரோ பாறையை போல் எந்த வித உணர்ச்சியுமின்றி இருந்தான்.
அவளிற்கு மனம் வலித்தது.
அவன் அவளை பல வகையில் உதாசீனம் செய்தப்போதும் அவள் தன் காதலுக்காக தனித்து நின்று போராடிக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் அவனோ அவளை ஏறெடுத்தும் பாராமல் அவமதிப்பது நெஞ்சத்தில் சுருக்கென்று தைக்கும் உணர்வை கொடுத்தன.
“வீர் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்?” என அவள் நலிந்தக்குரலில் சொல்ல,
அவனோ அப்போதும் அவள் முகம் நோக்காமல் “எனக்கு வேலையிருக்கு” என்றான் உணர்ச்சியற்ற குரலில்…
அவளோ “வேலை…வேலை …எப்போ பாரு உங்களுக்கு வேலை தான் முக்கியமா?நான் உங்களுக்கு முக்கியமில்லையா வீர்?” என சிடுசிடுப்புடன் கேட்க,
அவனோ சிறிதும் தயங்காமல் “இல்லை…” என்றறிருந்தான்.
அவளிற்கு வந்ததே சீற்றம்!
கையிலிருந்த கைப்பையால் அவனது நடுமண்டையில் இரண்டு அடி வைக்க கைகள் இரண்டும் பரபரத்தது.
ஆயினும் தன்னவனை காயப்படுத்த மனமின்றி “ச்சை போடா…ஃபீலிங்க்ஸ் இல்லாத எருமை மாடு” என கடுப்போடு திட்டிவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.
அவள் அவ்வாறு அவனை திட்டி சென்றது அவனிற்கு கோபத்தை வரவழைப்பதற்கு பதிலாக சிரிப்பையே கொடுத்தன.
‘சரியான லூசு’ என தலையாட்டி சிரித்துக்கொண்டவனின் புன்னகை சடுதியில் மறைந்துப்போனது.
‘வீர் இது தப்பு’ என தனக்கு தானே அறிவுறுத்தி இளகிய மனதை மீண்டும் இறுக்கிப்பிடித்தான்.
ஆனால் வேகமாக உள்ளே சென்ற தமயந்தி தந்தைக்கு பதிலாக தமையனிடம் வசமாக சிக்கியிருந்தாள்.
‘இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை…ஒரே ஏழரையா இருக்கு’ என உள்ளுக்குள் புலம்பி,பீதியுற்றாள்.
அவள் எண்ணியது போலவே அவளின் தமையனோ ‘ஏன் வந்தே?எதுக்கு வந்தே?’ என கேள்வியில் அவளை குடைந்தெடுக்க,
ஒரு வழியாக ஏதேதோ காரணங்கள் கூறி தப்பி வெளியே வருவதற்குள் அவளிற்கு மேனி சோர்ந்து விட்டது.
அவளின் அந்த களைப்பு கூட தன் முன்னே நீட்டப்பட்ட பழச்சாறை கண்டதும் விலகி தூர ஓடிப்போனது.
ஏனெனில்,அவளிற்கு பழச்சாறை கொடுத்து அனுப்பியது வீர் என்று தெரிந்து அவளின் அகமும் முகமும் மலர்ந்து விகசித்தது.
‘பாசத்திலும் அக்கறையிலும் உங்களை அடிச்சுக்க முடியாது வீர்…அதனாலே தான் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு’ என தனக்குள்ளே சிலாகித்துக்கொண்டு பழச்சாறை குடித்து முடித்தாள்.
அங்கிருந்து விடைப்பெறும் முன்பு அவனறைக்கு சென்று அவனை சந்தித்தாள் பாவையவள்.
அவள் தன்னறைக்குள் வந்தது அறிந்தும் அவன் தலையை உயர்த்தவே இல்லை.
‘திமிருப்புடிச்சவன்’ என திட்டிக்கொண்டு “ஹலோ மிஸ்டர் ரவுடி சார்” என சொடக்கிட்டு அவள் அழைத்ததும் அவன் இமைகள் இடுங்க தலையுயர்த்தினான்.
அவள் தன்னை சொடக்கிட்டு அழைத்த விதம் அவனிற்கு சிறிதும் பிடிக்கவில்லை.
அதனால் அவளை தன் கூரிய விழிகளால் துளைத்தெடுக்க,அவளோ அவனிற்கு சளைக்காமல் பதில் பார்வை கொடுத்து “என்கிட்டயிருந்து தப்பிக்கிறேன்னு ஓடி ஒளியறதை விட்டுட்டு ஒழுங்கா வீடு வந்து சேருங்க…இல்லை…” என அவள் விரல் நீட்டி மிரட்ட,
அவள் நீட்டிய விரலை வெடுக்கென்று பற்றிய வீர் “போனால் போகட்டும் சின்னப்பொண்ணுனு பார்த்தால் என் முன்னாடியே விரல் நீட்டி பேசறே?வீட்டுக்கு வரமுடியாது…என்ன பண்ணுவே?” என கடுகடுத்த குரலில் அவன் கேட்க,
அவளோ தன் விரலை பற்றியிருந்த அவனது முரட்டு கரத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் “ஓ…வரமாட்டிங்களா ரவுடி சார்…அப்போ சரி நான் பெட்டி படுக்கையெல்லாம் தூக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்திடறேன்…எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை” என அலட்சியமாக கூறி அவள் தோளை குலுக்க,
அவளின் பேச்சில் ஆடவனின் மனம் தான் அதிர்ந்துப்போனது.
உடனே அவளின் விழிகளை அவன் ஏறிட,
அவள் கண்ணில் இருந்த தீரத்தை கண்டவனிற்கு ஒரு மாதிரியாகிவிட்டன.
அவள் விளையாட்டிற்காக அதை பேசவில்லை என்று அவனிற்கு தெள்ள தெளிவாக புரிந்திட,சட்டென பிடித்திருந்த அவளின் விரலை விடுவித்தான்.
ஆனால் மேசையை சுற்றி வந்து அவனை நெருங்கிய பெண்ணவள் ஆடவன் உணர்வதற்கு முன்பே அவனது சட்டையின் காலரை பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தாள்.
அவளின் அதிரடியில் அவன் சிலையாகி போய்விட,அவளோ “ஏன் இந்த பிடிவாதம் உங்களுக்கு வீர்?அந்த மூணு வார்த்தையை மட்டும் தான் நான் உங்ககிட்ட சொல்லலை…மத்தப்படி எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கும் நல்லாவே தெரியும்…அப்புறம் எதுக்காக என்னை புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்க?” என இயலாமையில் பேச ஆரம்பித்தவளின் குரல் இறுதியில் தழுதழுத்தது.
அவனோ அவளின் கரத்தை தன்னிலிருந்து பிரித்தெடுத்துவிட்டு “இங்க பாரு தமயந்தி எண்ணெய்யும் தண்ணீரும் என்னைக்கும் ஒட்டவே ஒட்டதுனு உனக்கு நல்லா தெரியும்…அப்புறம் எதுக்கு வீணா என்னை சுத்தி வந்து நேரத்தை வீணடிக்கிறே நீ…உன் மேலே எனக்கு இப்பவும் அக்கறை இருக்கு…ஆனால் நீ எதிர்பார்க்கிற மாதிரி அது காதல் எல்லாம் இல்லை…அதனால் மனசை மாத்திட்டு வேற வேலையை போய் பாரு” என்றான் தீட்சண்ய குரலில்.
ஆனால் அவளோ அவனை அழுத்தமாக பார்த்து “நோ வீர்…உங்களை என்னாலே மறக்கவே முடியாது…மறந்திட்டு வேற ஒருத்தனை நினைக்கவும் முடியாது…அதை ஏன் சொல்லறேன்னு உங்களுக்கு போக போக புரியும்” என்றவள்,
தன் கைப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு “பை தி வே எனக்கு நம்பிக்கை இருக்கு…ஒரு நாள் நீங்களும் என்னை புரிஞ்சுப்பீங்கனு..” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் இடைமறித்தான்.
“தமயந்தி” என அவன் அழுத்தமாக ஆரம்பிக்க,
அவனின் முன்பு ஒற்றை கரம் நீட்டி “நீங்க எதுவும் பேச வேணாம் வீர்…அண்ணி உங்களை பார்க்க விருப்பப்படறாங்க…முடிஞ்சா வீட்டுக்கு வந்து அவங்களை பாருங்க” என்றுவிட்டு கதவு வரை சென்ற பெண்ணவள் திடீரென்று தன் நடையை நிறுத்திவிட்டு அவனை நோக்கி திரும்பினாள்.
அவனோ ‘இப்போ என்ன’ என்பது போல் பார்க்க,
அவளோ அவனது வயிற்றின் மீது ஒரு முறை பார்வையை பதித்துவிட்டு “கூடிய சீக்கிரம் உங்க சிக்ஸ் பேக்கிலே என் முகத்தை பச்சைக்குத்த ரெடியாகிக்கோங்க மிஸ்டர் ரவுடி சார்…” என இதழ்கடித்து குறும்புடன் கூற,
அதுவரை அவ்வறையில் இருந்த மனநிலையை அவள் அப்படியே மாற்றிவிட “ச்சை நீ போடி முதல்ல…” என அருகிலிருந்த காகித எடையை அவன் கையில் எடுக்க,
‘ஆத்தி இருக்கிற கோபத்திலே அடிச்சாலும் அடிச்சிடுவாரு இந்த மனுஷன்…’ என அங்கிருந்து கதவை திறந்துவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.
‘சில்வண்டு மாதிரி இருந்துக்கிட்டு பேச்சை பாரு’ என “ஊப்” என இதழ்குவித்து ஊதி காகித எடையை மேசையில் வைத்துவிட்டு அவளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளியே வந்தான்.
அது தான் வீர்…
அவனின் எதிரியாகவே இருந்தாலும் கூட பெண்களின் மீது அவனிற்கு எப்போதும் ஒரு சிறப்பு அக்கறை இருக்கும்.
அதற்கு காரணம் அவனின் தாய் மற்றும் தங்கை!
அவளின் மேல் ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் அவளை தீவிர பாதுகாப்புடனே வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
வீரை நோக்கி அவளை காந்தமாய் கவர்ந்திழுத்ததும் இந்த குணம் தானே?
அதனால் யாவரும் அறியாமல் அவனை பார்த்து கண்சிமிட்டி விடைக்கொடுத்தவளின் செயலில் ஆடவனவன் ஒரு கணம் தடுமாறிவிட்டான்.
பின்பு தன்னை தானே சமாளித்துக்கொண்டவனிற்குள் தானாக வேலி ஒன்று உருவெடுத்தது.
தன் எல்லைகளை அவன் நன்கு அறிவான். அதனால் தன் இதயம் ஒருவேளை எட்ட முடியாத ஒன்றை விரும்ப துடித்தாலும்,அதை அந்த மௌனத்திற்குள்ளேயே புதைத்து விடும் உறுதி அவனிற்கு இருந்தது.
அதனால் எளிதில் தன்னை திசை திருப்பி கொண்டவனிற்குள் தங்கையின் நினைவு வந்து தானாக ஒட்டிக்கொண்டன.
அதனால் தங்கையை காண்பதற்கு அங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான் வீர்.
முகிழ்மதி 44:

தங்கையை சந்திப்பதற்காக நண்பனின் இல்லத்திற்கு வந்தான் வீர்.
அவனை வாசலில் நுழையும் போதே கண்டு விட்ட முகிழ்மதிக்கு பேரானந்தம்.
அடுத்த கணமே படிக்கட்டிலிருந்து துள்ளி இறங்கியவள் “அண்ணா” என உற்சாகத்துடன் ஓடி வந்தாள்.
அவளை பார்த்த வீரின் விழிகள் பனித்தது.
“ஏய் மெதுவா போ” என கணவன் கடிந்ததை கிஞ்சித்தும் அவள் பொருட்படுத்தவில்லை.
தமையனாகிய தாயுமானவனை பார்த்ததும் அவளிற்குள் ஒரு இனிய பரவசம்!
அவள் மட்டுமல்ல…அவனிற்குள்ளும் உவகை ஊற்று பொங்கி பெருகின.
அவளருகே வந்ததும் “எப்படியிருக்கம்மா” என்று கேட்டவனின் குரலில் அப்படியொரு குழைவு!
நேற்று தமயந்தியிடம் பேசிய கடின பாணி அவனிடத்தில் துளியுமில்லை.
அவனது பார்வையில்…பேச்சில்…செயலில் அனைத்திலும் பாசம் மட்டுமே நிறைந்திருந்தன.
அவனருகே மூச்சிறைக்க வந்தவள் “நான் நல்லாயிருக்கேன் அண்ணா…நீங்க?” என சிரித்துக்கொண்டே கேட்க,
“நானும் நல்லாயிருக்கேன்மா…இங்க உனக்கு எல்லாம் செட்டாகிடுச்சா?” என அவளின் கூந்தலை வருடியப்படி கேட்க,
அவளோ “ம்” என மெதுவாக தலையாட்டினாள்.
பாசமலர் இருவரும் வாசலில் நின்றுக்கொண்டே பேசுவதை மற்றொரு பாசமலர்கள் ஒரு சலிப்புடன் வேடிக்கை பார்த்திருந்தனர்.
இதை யாவும் அறியாத வீரோ “ஏதாவது பிரச்சனைனா அண்ணாவுக்கு ஃபோன் பண்ணு வந்திடறேன் முகிழ்…என் நம்பர் உன்கிட்ட இருக்கில்லை” என பரிவு கலந்த குரலில் கேட்க,
“இல்லையே?” என அவள் இதழை பிதுக்கி சொல்ல,
அவனோ தன் அலைப்பேசியை எடுத்து “உன் நம்பர் என்கிட்ட இருக்கும்மா…நானே உனக்கு கால் பண்ணறேன்…நோட் பண்ணி வைச்சுக்கோ” என அவளின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
அழைப்பு போனதே தவிர மணியடிக்கும் ஓசை அருகில் எங்கும் கேட்கவில்லை.
அவன் யோசனையாக புருவம் சுருக்கியதும் பாவையவள் விபரம் தெரிவித்தாள்.
மேல் நோக்கி தங்கள் அறையை காட்டிய பெண்ணவள் “அண்ணா ஃபோன் மேலே இருக்கு…நான் அப்புறமா பார்த்து அதை சேவ் பண்ணிக்கிறேன்” என தலையாட்டியப்படி சொல்ல,
“சரி” என தலையசைத்து அலைப்பேசியை தனது கால்சட்டை பையினுள் போட்டுக்கொண்ட வீர் “வாம்மா…உள்ளே போய் பேசுவோம்” என அவளின் கரம் பற்றி உள்ளே அழைத்து சென்றான்.
அச்சமயம் அவளின் முகம் மாறிட “என்னாச்சும்மா?” என அவன் குழப்பமாய் விசாரிக்க,
“நீங்க ஏன் அண்ணா இத்தனை நாளா என்னை பார்க்கவே வரலை?” என செல்ல கோபத்துடன் வினவினாள்.
தங்கையை இத்தனை நாட்களாய் காண வராதது தவறு என்று அவனிற்கும் அப்போது தான் உறைத்தது.
நல்லவேளையாக தமயந்தி அவனிற்கு தெரிவித்ததினால் அவன் அங்கு வந்திருந்தான்.
அதனால் மானசீகமாக அவளிற்கு நன்றியுரைத்த வீர் சிறிது குற்றவுணர்வுடன் “சாரிடாம்மா…கொஞ்சம் பிஸி…இனி உன்னை பார்க்க அடிக்கடி வர்றேன்…இல்லையா உனக்கு கால் பண்ணி பேசிடறேன்…நீ கவலைப்படாதேடா” என தங்கையிடம் உரையாடியப்படியே அவளை நீள்விரிக்கைக்கு அழைத்து சென்றான்.
இருவரும் உள்ளே செல்லும் போது அங்கு நின்றிருந்த இருவரையும் கடந்து தான் சென்றனர்.
ஆனாலும் அவர்கள் இருவரையும் சிறிதும் பொருட்படுத்தவில்லை வீரும் முகிழ்மதியும்!
அவர்கள் தங்கள் உலகத்தில் மூழ்கிப்போயிருந்தனர்.
தமயந்தியோ ‘ம்க்கும்’ என பொறாமையில் தொண்டையை செருமினாள் என்றால்,அவளிற்கு அருகே இருந்த ரத்தினவேலிற்கு காதில் புகை வராத குறை தான்!
பின்பு அவளை அவனிடம் ஒரு வார்த்தை பேச வைப்பதற்காக அவன் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக்கொண்டிருக்க,அவள் வீரிடம் சரளமாக பேசுவதை பார்த்தவனிற்கு கடுப்பாகிப்போனது.
உடன்பிறப்புகள் இருவரின் விழியிலும் பற்றி எரிந்த தீயை மேலும் எரிய வைக்கும் விதமாக “இரண்டு பேரும் அப்படி என்னத்தை இவ்வளவு ஆர்வமா பார்த்திட்டு இருக்கீங்க?” என கேட்டுக்கொண்டே இருவருக்கும் நடுவே வந்து எட்டிப்பார்த்தான் ஜித்தேந்திரன்.
அங்கு தெரிந்த காட்சியை பார்த்த ஜித்தேந்திரனின் விழிகள் விரிய “அட நம்ப நவீன யுக பாசமலரா?இந்த படத்தை தான் காசில்லாமல் ஓசியிலே பார்த்திட்டு இருக்கீங்களா?வெர்ரி ஃபன்னி” என தங்கையின் தோள் தட்டி சிரிக்க,
சட்டென திரும்பி ரத்தினவேல் அவனை பார்த்த பார்வையில் ஜித்தேந்திரன் வாயை கப்பென்று மூடிக்கொண்டான்.
தமையன் முறைக்கிறான் என்று தங்கையருகே வந்த ஜித்தேந்திரன் “லட்டு அண்ணா பொறாமையிலே பொங்கறாரு போலே…காமெடியா இருக்கு” என அவளிடம் மெல்லிய குரலில் சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிக்க,
ஆனால் அவனிற்கும் மேலாக “டேய் அண்ணா…முதல்ல நீ ஆஃபிஸ் கிளம்பு…வர கடுப்புக்கு…உன்னை…” என பல்லைக்கடித்தப்படி அவள் அக்கம் பக்கத்தில் அவனை அடிக்க ஆயுதம் தேட,அவளின் கையிற்கு சிக்கியதோ பூச்சாடி தான்.
‘அண்ணா கடுப்புலே இருக்காரு சரி…இவ ஏன் பொங்கறாள்?’ என அவன் ஒன்றும் புரியாமல் சிந்திக்கும் போதே அவள் பூச்சாடியை கையில் எடுத்ததும் ‘ஆத்தி’ என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தான் அவளின் சகோதரன்.
அதற்குள் அவளோ அவனை அடிக்க பூச்சாடியை ஓங்க,அதில் மிரண்டு வேகமாக பின்னடைந்தவன் “அடிப்பாவி கொலைக்காரி…இப்போ எதுக்கு என்னை கொல்ல வர்றே…போடி லூசு” என கண்டப்படி அவளை திட்டிவிட்டு அவன் அங்கிருந்து ஓடியே விட்டான்.
அவளோ “ச்சை போடா” என எரிச்சலுடன் முனகிவிட்டு திரும்பிக்கொள்ள,இப்போது ரத்தினவேலின் விழிகள் தங்கையின் மீது சிந்தனையுடன் பதிந்தது.
காரிகையவளோ அதை யாவும் அறியாமல் வீர் முகிழ்மதியிடம் பேசுவதை ஏக்கமும் கோபமுமாய் பார்த்திருந்தாள்.
வீர் முகிழ்மதியிடம் பேசி முடித்தப்பிறகே நண்பனையே கவனித்தான்.
“ஹே பூபதி…நீ எப்போ வந்தே?” என ஆச்சரியமாக கேட்க,
‘ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டுட்டே’ என மனதிற்குள் நினைத்த ரத்தினவேலின் முகம் வெளியே உணர்ச்சியற்று இருந்தது.
தமயந்தியின் எண்ணமும் அதுவாக தான் இருந்தது.
முகிழ்மதியும் அதேநேரம் அவனை திரும்பிப் பார்த்தாள்.
அவனோ அவளை ஆழ்ந்து ஒரு கணம் நோக்கிவிட்டு “உன்கிட்ட பேசணும் கொஞ்சம் வா” என நண்பனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
தன்னை கணவன் பார்த்த பார்வையிலே அவனிற்கு தன் மேல் ஏதோ ஒரு கோபம் என்று புரிந்துக்கொண்டாள் முகிழ்மதி.
ஆனால் அதற்கான காரணம் அவளின் சிறிய மூளைக்கு எட்டவில்லை.
தமயந்தியின் முகமும் சோகமாக இருப்பதை கவனித்த முகிழ்மதி “அக்கா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கவலையோடு கேட்க,
“நத்திங் அண்ணி…நீங்க வாங்க…போய் படிக்கலாம்” என தன்னை சமாளித்து அவளை அழைக்க,
“இருங்க அக்கா…அண்ணா காலையிலே ஏதாவது சாப்பிட்டாருன்னு தெரியலை…நான் அவருக்கு ஏதாவது கொடுத்திட்டு வந்திடறேன்” என வேகமாக சமையலறைக்கு சென்றாள்.
‘எனக்கு கூட இதெல்லாம் தோணலை…இவளுக்கு எப்படி?’ என அவளை ஆச்சரியமாக நோக்கினாள் தமயந்தி.
தன்னை விட சிறிய பெண் என்றாலும்,அவள் சிந்தித்து செயல்படும் விதம் அவளை ஈர்த்தது.
அத்தோடு சிறிது சிறிதாக அவள் அந்த குடும்பத்தோடு ஒன்றி போவதை பார்ப்பதற்கு அவளிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
‘இந்த வீர் மட்டும் மனசு மாறிட்டால் இன்னும் நல்லாயிருக்கும்’ என பெருமூச்சுடன் அங்கிருந்து வீட்டு நூலகத்திற்கு சென்றாள்.
அதேநேரம் ரத்தினவேல் தன்னுடைய அலுவலக அறையில் நண்பனிடம் மனைவியின் உடல்நிலையை பற்றி தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தான்.
தங்களது சொந்த வாழ்வை பற்றி முழுமையாக பகிராமல் அவள் உறக்கத்தில் அலறுவதை பற்றி தெரிவித்த ரத்தினவேல் “சம்திங் இஸ் ஃபிஸ்ஸீ வீர்…ஐ திங்க் ஷீ இஸ் மென்டலி அன்ஸ்டேபிள்…நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு…இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது…இது எலெக்ஷன் டைம் வேறே…அதனாலே தான் பொறுப்பை உன்கிட்ட ஒப்படைக்கிறேன்…எனக்கு சிட்டியிலே ஒரு பெரிய சைக்கார்டிஸ்ட்டோட கான்டெக்ட் வேணும்…இந்த விஷயம் முகிழுக்கு கூட தெரிய வேணாம்” என விஷயத்தை கூறி முடித்ததும் வீரிடத்தில் ஒரு அபரிமிதமான அமைதி!
அவனின் முகம் வேதனையில் சுருங்கிப்போனது.
அதை கவனித்து “வீர் என்ன பிரச்சனை?” என புருவம் சுருக்கி வினவ,
அவனோ அடைத்த தொண்டையை செருமி “இல்லை அந்த சின்னப் பொண்ணு என்ன கொடுமையெல்லாம் அனுபவிச்சிருந்தால் இப்படியொரு நிலைக்கு ஆளாகியிருக்கும்…ஏற்கனவே அம்மா அப்படியொரு நிலைமையிலே இருக்காங்க…இப்போ இவளும்…” என பேசும் போதே அவனின் குரல் கரகரத்தது.
அவனிற்கு முகிழ்மதியின் நிலையை பற்றி எண்ணினாலே நெஞ்சம் வலித்தது.
அதே சமயம் அவனின் கோபம் முழுவதும் விஜயலட்சுமியின் புறம் திரும்பின.
உடனே அவனது முகம் ரௌத்திரத்தில் சிவக்க “அந்த பொம்பளைய பத்தி நினைச்சா எனக்கு இப்பவும் இரத்தம் கொதிக்குது பூபதி…எனக்கு என்னவோ இதுக்கெல்லாம காரணம் அந்த பொம்பளையா தான் இருக்குமோனு தோணுது” என பேசியவனிற்கு விஜயலட்சுமியின் மீது கொலைவெறி தாண்டவமாடியது.
பெண்களை கடவுளை போல் தொழுபவனின் வாயிலிருந்த வந்த அவச்சொற்களை ரத்தினவேலால் நம்ப முடியவில்லை.
அதுவே அவனிற்கு முகிழ்மதியின் மீது இருக்கும் பாசத்தை அவனிற்கு வெளிச்சமிட்டு காட்டின.
ஆயினும் நண்பனின் தோள் தட்டிய ரத்தினவேல் “ரிலாக்ஸ்…இப்போதைக்கு எனக்கு அந்த லேடி மேலே சந்தேகம் மட்டும் தான் இருக்கு…எல்லாத்துக்கும் காரணம் அவ தான்னு தெரிய வரட்டும்…அப்புறம் இருக்கு… ஆல்ரெடி அந்த லேடிக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு இப்போவே நான் எழுதிட்டேன்…அவ்வளவு சீக்கிரம் அந்த லேடியை ஒழிக்கக்கூடாது…கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை பண்ணி தான் ஒழிக்கணும்” என உயிரை ஊடுருவும் குரலில் சொன்னவனின் முகத்தில் பெரும் ஆவேசம்.
அதுவும் சாதாரண ஆவேசமெல்லாம் இல்லை…
வதம் செய்யவிருக்கும் சிவப்பெருமானின் ஆவேசம் அவனிடத்தில்!!
வீருக்கும் அதே அளவு ஆத்திரம் இருந்தது.
இந்நிலையில் அந்த அறையின் கதவை தட்டிவிட்டு முகிழ்மதி நுழைய அதுவரை அவர்களிடத்தில் சீற்றமனைத்தும் நீர் ஊற்றி அணைத்து போல் அப்படியே குளிர்ந்துப்போனது.
இருவரையும் பார்த்துக்கொண்டே கையில் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வந்தவளிடம் வேகமாக முன் வந்து தட்டை வாங்கிக்கொண்டான் வீர்.
“நீ எதுக்கும்மா இதெல்லாம் தூக்கிட்டு வர்றே?யாருக்கு இது?” என அவன் மெல்ல தங்கையை கடிந்துக்கொள்ள,
“இல்லைனா உங்களுக்கு தான்…காலையிலே சாப்பிட்டிங்களா தெரியலை…அதான் உங்களுக்கு…” என தட்டை சுட்டிக்காட்ட,
அவளின் அந்த அன்பில் அவனின் நெஞ்சம் நனைந்தது.
அத்தோடு வீட்டு தலைவியாய் அவனை அவள் உபசரித்த விதம் அவனிற்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்படியொரு அருமையான பெண்ணிற்கு தீங்க நினைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என்ற வெறியும் அவனுள் உருவாகின.
ரத்தினவேலோ “ம்க்கும்” என தொண்டையை செருமி “முகிழ் உங்க பாசமலர் நாடகம் முடிஞ்சிடுச்சுன்னா போய் படிக்கிற வேலைய பாரு” என அதட்டி அவளை அனுப்பி வைத்தான்.
அவளோ சுருங்கிய முகத்துடன் “வர்றேண்ணா” என அங்கிருந்து வெளியேறினாள்.
தங்கையின் முகம் வாடினால் தமையனிற்கு பொறுக்குமா என்ன?
அதனால் ஆதங்கத்துடன் அவனின் புறம் திரும்பிய வீர் “ஏன் பூபதி இப்படி அவளை அதட்டறே?கொஞ்சம் அன்பா நடந்துக்கலாமில்லை…பாவம்” என்று வருத்தமாக சொல்ல,
“ஏதே நான் அன்பா நடந்துக்கலை…நீ அதை பார்த்தே…ஹும்” என தாடையை ஒரு மார்க்கமாக கேட்டுக்கொண்டே அவனை மேலிருந்து கீழாக பார்த்து வைத்தான் ரத்தினவேல்.
தினந்தோறும் அவளிடம் அவன் படும் துயரம் அவனிற்கு மட்டும் தானே தெரியும்.
அதனால் ஒரு பெருமூச்சுடன் அமைதியாகியவனிடம் “பூபதி…” என அறிவுரை கூற ஆரம்பிக்க,
அவனின் முன்பு ஒற்றை கைநீட்டி தடுத்தவன் “உன் தொங்கச்சி வகை வகையா உனக்கு ஏதோ கொண்டு வந்திருக்காயில்லை…நீ முதல்ல அதை சாப்பிடு” என அவன் கையிலிருந்த தட்டை காட்டி அவனது வாயை அடைத்தான்.
‘இவன் ஏன் இப்போ இவ்வளவு டென்ஷனாகிறான்?’ என ஒன்றும் புரியாமல் குழம்பிய வீர் தங்கை அளித்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
ரத்தினவேலிற்கு உள்ளுக்குள் பற்றி எரிந்தது.
அவனது மனைவி தன்னை விட்டு வேறொருவரிடம் நெருக்கமாக இருப்பது அவனிற்கு அறவே பிடிக்கவில்லை.
அதற்காக வீரிடம் அவள் பேசவே கூடாது என்று தன்னநலத்துடனும் எண்ணவில்லை.
‘அவளிற்கு தான் மட்டுமே முதன்மையாக இருக்கவேண்டும்.அவனை விட தன்னிடம் நெருக்கமாக அவள் பேச வேண்டும்’ என்று விரும்பினான் ஆடவன்.
இவனது ஆசைகள் யாவும் இன்று வரை வெறும் நிராசையாக இருப்பதினாலே அவனிற்குள் கோபம் முகிழ்ந்தன.
இரவில் தங்களது அறைக்குள் நுழைந்த தன் மனையாளை அவன் இமைகள் இடுங்க பார்த்திருந்தான்.
குளியலறைக்குள் நுழைந்து உடைமாற்றி வெளியே வந்த பெண்ணவள்,நீள் விரிக்கையில் அசையாமல் அமர்ந்திருந்த கணவனை கண்டு திடுக்கிட்டாள்.
வழக்கமாக அவள் உடை மாற்றி வரும் நேரம் அவன் ஒன்று ஏதேனும் வேலை செய்துக்கொண்டிருப்பான்.
இல்லையென்றால்,நீள்விரிக்கையில் படுத்திருப்பான்.
இன்று அவளையே பார்த்தவாறு அவன் அமர்ந்திருப்பதை கண்ட பெண்ணவள் ‘என்னாச்சு?’ என்று கேட்டுவிட துடித்தாள்.
ஆனால் அவளிற்குள் ஒரு தடுமாற்றம்!
அவன் பார்த்திருந்த தோரணை வேறு அவளை அச்சுறுத்த தயங்கினாள்.
‘பேசுவோமா?வேண்டாமா?’ என தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்திய பாவை ஒரு வழியாக ‘பேசிவிடுவோம்’ என தன் கூட்டிலிருந்து வெளியே வந்து அவனை நோக்கி சென்றாள்.
அவளருகே வரும் வரையிலுமே அவனின் பார்வை மாறவில்லை.
அவனருகே வந்து ‘என்னாச்சு?’ என கேட்க வாயை திறந்தவளின் கரம் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான் ஆடவன்.
அடுத்த கணமே அவனின் மடியில் தொப்பென்று வந்து விழுந்தவளை குழந்தைப்போல் தாங்கியிருந்தான் முகிழ்மதியின் மணாளன்.