முகிழ்மதி 36:
காரிகையை அவனது கரம் வளைத்ததும் அவளிற்கு மூச்சிறைக்க ஆரம்பித்தன.
அவளின் மேனியெங்கும் மடமடவென வியர்வை அரும்புகள் பூத்துவிட்டன.
அடுத்த கணமே அவளின் மேனியெல்லாம் சில்லிட்டு போக,அதையறிந்து பதறிப்போய்விட்டான் அவன்.
பட்டென அவளின் மேலிருந்து கையை எடுத்துவிட்டு எழுந்து அமர்ந்த ரத்தினவேலின் விழிகள் அவளை அளவிட தொடங்கின.
இப்போதும் அவளின் மேனி நடுங்கிக்கொண்டிருப்பதை கண்ட ஆண்மகன் “முகிழ் ரிலாக்ஸ்…கீழே விழுந்திடுவேன்னு தான் உன்னை பிடிச்சேன்…வேற ஒண்ணுமில்லை” என்று கூறியதும் அவள் அவனை திரும்பி ஏறிட்டாள்.
அவளிற்கு அப்போதும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்க,விழியில் அப்படியொரு மிரட்சி…
முகமெல்லாம் வெளிறிவிட்டிருந்தது போல் அவனிற்கு தோன்றின.
அவனை காணும் அவளின் பார்வையில் வழக்கத்திற்கு புறம்பான ஒரு அந்நிய தன்மை…
அவள் “வே…ணாம்” என போர்வையை இறுக்கிப்பிடித்தப்படி மூச்சு வாங்க கூற,
உடனே ரத்தினவேல் அவளின் நிலையறிந்து “ப்ரீத் முகிழ்…ப்ரீத் இன்ஹேலர் எடுத்து பப் பண்ணு” என தள்ளியிருந்த வாக்கிலே கூறியவன்,
மெத்தையிலிருந்து எழுந்துக்கொண்டு “நான் கிட்ட வரலை…அங்க சோபாவிலே படுத்துக்கிறேன்…நீ தாராளமா படு” என்றுவிட்டு அவன் நீள்விரிக்கைக்கு சென்றுவிட்டான்.
விடி விளக்கு வெளிச்சத்தில் அவள் வேகமாக சுவாச உள்ளிழுப்பனை உபயோகிப்பதை அவன் தூரத்திலிருந்து பார்த்திருந்தான்.
அவளிற்கு இருள் என்றால் பயம் என்பது அவன் முன்பே அறிந்திருந்தான்.
ஆனால் அவன் அவளை சாதாரணமாகவே அணைத்திருந்தான்.
அதற்கே அவளிற்கு பயத்தில் மூச்சிறைக்க தொடங்கியதை பார்த்தவனிற்கு ஏதோ தவறாக தோன்றின.
இதற்கு முன்பு ஆறுதலாக அவளை பலமுறை நெருங்கி தீண்டியிருந்தாலும்,
தற்போது அவளது நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக இருந்தன.
அவளிற்கு உளரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இருக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் அவனுள் உதித்தன.
மெதுவாக அவளை திரும்பி ஏறிட்டான்.
காரிகையவளோ மிரட்சியில் உடல் நடுங்க போர்வையால் உடல் முழுவதையும் இறுக மூடிக்கொண்டாள்.
அவளின் அச்சம் அறிந்து அவளை சமாதானம் செய்ய அவனின் ஆவி துடித்தாலும் அவளை நெருங்க முடியாமல் தவித்தான்.
சில நிமிடங்களில் இறுக விழி மூடியிருந்த பாவையவளிற்கு உறக்கம் வந்துவிட்டிருந்தன.
ஆனால் இங்கு அவர்களது எதிர்கால வாழ்வை பற்றிய கவலையில் மூழ்கியிருந்த ஆடவனிற்கு தூக்கம் பறிப்போனது.
அடுத்த நாள் காலை முகிழ்மதி உறங்கி கண்விழிக்கும் நேரம் ரத்தினவேல் அவ்வறையில் இல்லை.
படுக்கையில் எழுந்து அமர்ந்தவளிற்கு நேற்று இரவு நடந்த சம்பவங்கள் எதுவும் சிந்தையில் இல்லை.
இரவில் அச்சத்தோடு உறங்குவதும் பகலில் அதன் தாக்கம் சிறிதுமின்றி அவள் எழுவதும் அவளின் வாழ்வில் சகஜமான ஒன்று!
ஆனால் அவளின் வாழ்க்கை முறையில் புதிதாக மாட்டிக்கொண்டு தவித்தது என்னவோ ரத்தினவேல் தான்!
இரவெல்லாம் உறக்கம் வராமல் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து குளித்து வெளியே கிளம்பிவிட்டான்.
அவளோ இரவு நடந்த நிகழ்வை மறந்தவளாய் நன்றாக உறங்கி எழுந்ததும் உடல் ஓரளவு புத்துணர்ச்சியாக இருந்தன.
ஆனால் அடுத்த கணமே அவளின் விழிகள் அலைப்பேசியை தான் தேடி எடுத்தன.
தாய் மற்றும் தமக்கையிடமிருந்து ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தாள்.
ம்ஹும்..யாரிடமிருந்தும் எந்த வித தகவலும் வந்திருக்கவில்லை.
உடனே ஏமாற்றத்தில் அவளின் முகம் சுருங்கிவிட்டது.
சில நிமிடங்கள் கழித்து பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டவளின் விழிகள் தன் கணவனை தேடி அலைப்பாய்ந்தன.
அவ்வறையில் அவனை காணாமல் தவித்த பெண்ணவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.
தனது காலை கடன்களை முடித்துக்கொண்டு தலைக்கு குளித்து வெளியே வந்தவள்,சின்ன கரை வைத்த பச்சை நிற புடவையை கட்டிக்கொண்டாள்.
தனது கார் கூந்தலை காய வைத்துவிட்டு பின்னலிட்ட நேரம் ரத்தினவேல் அறைக்குள் நுழைந்தான்.
அவனும் குளித்துவிட்டு வெண்ணிற சட்டை வேட்டியில் தயாராகியிருந்தான்.
அவனை கண்ணாடியின் வழியே கண்டவுடன் அவளிற்குள் ஒரு தடுமாற்றம்!
சட்டென இமைகளை தாழ்த்திக்கொண்டவளை ஆராய்ச்சியாக பார்த்தவாறே அவளை நெருங்கினான்.
அவனிற்கு நேற்று இரவு நடந்த நிகழ்வு கண் முன் வந்து சென்றன.
அவன் அழுத்தமான காலடியோசையுடன் அவளை நெருங்கி வந்ததும் அவளது இதயத்தின் துடிப்பு அதிகரித்தன.
ஒரு வித நடுக்கத்துடனே அவள் தலையலங்காரத்தை முடித்துவிட்டு குங்குமத்தை கையில் எடுத்தாள்.
குங்கும சிமிழிலிருந்து நெற்றி வகுட்டில் குங்குமம் வைப்பதற்காக கையில் எடுத்தவளின் கரம் நடுங்கின.
குங்கும சிமிழ் கீழே சரியக்கூடிய நிலையில் “ஹே பார்த்து” என வேகமாக வந்து தன் கையில் அதனை வாங்கிக்கொண்டான் ரத்தினவேல்.
அவளிற்கு பின்னால் வந்து நின்றவனின் தேகம் அவளின் மெல்லிய மேனியை உரசிக்கொண்டிருந்தன.
அதுவே அவளிற்கு ஒரு படபடப்பை உண்டாக்கிட அவள் இதழ்கடித்துக்கொண்டாள்.
ஆனால் ஆடவனின் கூரிய விழிகளோ கண்ணாடியின் வழியே அவளின் முக உணர்வுகளை தான் அவதானித்து கொண்டிருந்தன.
இப்போதும் அவன் நெருக்கத்தில் அவளிற்குள் மிரட்சி முகிழ்ந்திருந்தன.
ஆனால் நேற்றைய இரவை போன்ற முரணான அறிகுறிகள் எதுவும் அவளின் முகத்தில் தென்படவில்லை.
அதுவே அவனிற்கு விசித்திரமாக இருந்தன.
ஆயினும்,அவளிடம் அதைப்பற்றி எதுவும் அவன் விசாரிக்கவில்லை.
மாறாக “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?” என விழிகளால் அவளை வருடியப்படி அவன் கேட்க,
அவளோ கருவிழிகள் அங்குமிங்கும் அலைப்பாய “இல்லை முழிப்பு வந்திடுச்சு” என்றாள் தலைக்குனிந்து…
“சரி குங்குமம் வைச்சவுடனே நாம்ப கீழே போகலாமா?” என அவன் அவளை இன்னும் அதிகமாக நெருங்கி நின்று வினவ,
உடனே இதழ்கடித்து “ம்” என முனகியவளின் இதயம் அதிவேகத்தில் படபடக்க,அவளது நடுங்கிய கரங்கள் முன்னாலிருந்த ஆடை அலங்கார மேசையை இறுக பற்றிக்கொண்டன.
அவளின் நிலையை கண்ட ரத்தினவேல் அவளின் காதோரம் குனிந்து “நீ இருக்கிற நிலையிலே ஒழுங்கா குங்குமத்தை வைப்பன்னு தோணலை…சோ நான் வைச்சு விடறேன்” என்றான் மெல்லிய குரலில்.
அதைக்கேட்டு திகைப்பில் விழி விரித்து அவனை கண்ணாடி வழியே ஏறிட்டவளின் முகம் சட்டென சிவந்து விட்டன.
பிறைப்போல் நெற்றியில் தொடங்கிய அவளின் வதனத்தில் அரக்கு நிற பொட்டு மட்டுமே அணிகலனாக இருக்க,அதற்கே அவளின் வட்டவடிவ மதிமுகம் ஜொலித்தன.
மாசு மருவற்ற வழவழப்பான குழைந்த கன்னங்களை இணைக்கும் பாலமாய் அவளின் சிவந்த நிற அதரங்கள்!
உதட்டு சாயமின்றி ஈரத்தில் மினுமினுத்த அதரங்களுக்கு மகுடம் சூட்டியது அவளின் மச்சம்!
ஆடவனது இதழ்கள் அந்த மகுடத்தை வெற்றிக் கொண்டு ஆள துடித்தன.
ஆனால் தற்போது அதனை தன் விழிகளுக்கு மட்டும் விருந்தாக்கிவிட்டு இரண்டு விரல்களால் குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றி வகுட்டில் சூட்டினான்.
அவனது விரல் அவளின் நெற்றியை தீண்டியதும் பாவையவளோ மெய்சிலிர்க்க தன் விழியை இறுக மூடிக்கொண்டாள்.
அந்த சின்னஞ்சிறு ஸ்பரிசம் அவளினுள் ஒரு ஆத்மார்த்தமான உணர்வை தோற்றுவித்தன.
அவளின் நெற்றி வகுட்டில் வைத்திருக்கும் குங்குமத்திற்கு இணையாக அவளின் சிவந்த முகம் போட்டியிட்டன.
அவளின் நெற்றி பொட்டில் அவன் குங்குமம் வைக்க,அவளோ இமைகள் மூடி அவனை நோக்கி திரும்பியிருக்க அந்தவொரு காட்சி அழகான கவிதை போல் கண்ணாடியின் வழியே படம் பிடிக்கப்பட்டன.
அவளின் வதனத்தை ரசித்துக்கொண்டே அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்துவிட்டு தன் கரத்தை விலக்கினான் ஆடவன்.
அப்போதும் அவள் விழி திறக்காமல் நின்றிருந்தாள்.
அவளிடமிருந்து கரத்தை விலக்கிய ரத்தினவேல் அவளின் நாசியின் நுனியில் குங்கும துகள்கள் சிந்தியிருப்பதை பார்த்தான்.
உடனே அதனை தன் உள்ளங்கையினால் அவன் மெல்ல துடைத்துவிட,ரத்தினவேலின் இல்லாளிற்கோ அவனின் மென் ஸ்பரிசம் மேனியை கூசி சிலிர்க்க வைத்தது.
நெஞ்சில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற ஒரு உணர்வு அவளிற்குள் மிகையுற,
அந்த உணர்வின் தாக்கம் தாளாமல் அவள் இதழ்கடித்து நின்றிருக்க அவனோ சிரித்துக்கொண்டே குங்குமத்தை வைத்துவிட்டு விலகிவிட்டான்.
“கீழே போகலாமா முகிழ்?” என மிருதுவான குரலில் அவன் வினவ,
அதைக்கேட்டு படீரென்று மயக்கத்திலிருந்து விழி திறந்தாள் முகிழ்மதி.
ரத்தினவேல் அவளை உரசிக்கொண்டே குங்கும சிமிழை எட்டி ஒப்பனை மேசையில் வைத்துவிட்டு “என்ன போகலாமா?” என புருவம் உயர்த்தி கேட்க,
அவளோ அவனின் ஸ்பரிசத்தில் மயங்கி “ம்” என மந்திரத்திற்கு கட்டுண்டது போல் தலையசைத்தாள்.
“சரி வா…” என அவன் முன்னே செல்ல,அவனை பின்தொடர்ந்து அன்ன நடையிட்டு வந்தாள் ரத்தினவேலின் மனையாள்.
அவள் கீழிறங்கி வந்தவுடன் வானதி “இங்க வாம்மா” என அவளை அழைத்து இரண்டு முழம் மல்லிகை பூவை தலையில் சூட்டிவிட்டார்.
பூவை சூட்டிவிட்டவர் “ரொம்ப அழகா இருக்க முகிழ்மதி” என்று வாஞ்சையுடன் பாராட்டி அவளை பார்த்து புன்னகைத்தார்.
அவளோ இப்போது கூச்சத்தில் நெளிந்துக்கொண்டே புன்னகைத்தாள்.
அவளின் வெட்கத்தை ஒரு பெருமூச்சுடன் மட்டுமே பார்த்தான் ரத்தினவேல்.
“முகிழ்மதி நீ போய் பூஜையறையிலே விளக்கேத்திட்டு பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வாம்மா…வீட்டு மருமக முதல்ல அடுப்பை தான் பத்த வைக்கணும்…” என அவர் சொல்ல,
ஆனால் அவள் பதில் கொடுப்பதற்கு முன்பாக ரத்தினவேல் “அம்மா அவளுக்கு உடம்பு சரியில்லை” என்றான் கண்டிப்பான குரலில்.
உடனே மகனை திரும்பி ஏறிட்ட வானதி “எனக்கு தெரியுது பூபதி…இது சம்பிரதாயம்பா..பால் மட்டும் தான் காய்ச்சணும்…அவளுக்கு உடம்பு நல்லான்னா பிறகு மீதிய பார்த்துக்கலாம்” என விளக்கம் கூறியதும் அவனாலும் மறுக்க முடியவில்லை.
அவன் முகிழ்மதி முகத்தை காண அவளிடம் எவ்வித மறுப்பும் தெரியவில்லை.
அதனால் அவன் மௌனமாகியிருந்தான்.
“உனக்கு சமைக்க தெரியுமா முகிழ்மதி?” என அவர் விசாரிக்க,
“தெரியும் ஆன்ட்டி…பட்டம்மா எனக்கு கத்துக்கொடுத்திருக்காங்க…” என்றாள் அவளிற்கே உரிய கானக்குரலில்.
உடனே அவர் “ஆன்ட்டி இல்லைம்மா அத்தைனு கூப்பிடு…அது தான் அழகு” என அவளை திருத்தினார்.
அவர் சற்று கணீர் குரலில் பேசவும், கோபித்துக்கொண்டரோ என்றெண்ணிய பாவை “சாரி ஆ..” என்றவள் சட்டென நிறுத்தி “சாரி அத்தை” என மிரட்சியுடனே திருத்தினாள்.
அவளின் மெல்லிய குரல் ஏனோ ஒரு குயில் பாடுவது போன்ற மாயத்தோற்றத்தை அவருக்குள் விதைத்தன.
‘நிஜமாவே இந்த பொண்ணு பேசுதா பாடுதா?’ என அவருக்கு சந்தேகமே வந்துவிட்டது.
“சரி பூபதி…மருமகளை பூஜையறைக்கு கூட்டிட்டு போறீயாப்பா?” என தாய் அவனிடம் கோரிக்கை வைக்க,
அவனோ சலிப்பாக தலையசைத்துக்கொண்டு “வா” என மனைவியை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
பூஜையறைக்குள் நுழைந்தவுடன் இறைவனிற்கு தீபாராதனை காட்டிய மனையாளின் மீது தான் ரத்தினவேலின் விழிகள் பதிந்திருந்தன.
அவளின் ஒவ்வொரு செயல்களையும் அவன் மௌனமாய் கவனித்துக்கொண்டிருந்தான்.
கடவுளிற்கு தீபாராதனை காட்டிவிட்டு ரத்தினவேலிடம் அந்த தட்டை நீட்ட “நீயே வைச்சு விடு” என்றான் அவன்.
அவளோ ‘என்ன?’ என்பது போல் திருதிருவென விழிக்க,
“வை” என அவனிற்கே உரிய அதிகாரத்துடன் அவன் ஆணை பிறப்பிக்க,
அவளோ வேறுவழியின்றி அவனது நெற்றியில் திருநீறு பூசுவதற்கு ஆயுத்தமானாள்.
அவனோ ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமாக இருப்பதினால் பாவையவளிற்கு கண்ணாளனின் நெற்றி எட்டவில்லை.
அவன் வேறு விறைப்பாக நின்றிருக்க அவள் திருநீறு பூச முடியாமல் திணறினாள்.
அவள் வாயை திறந்து குனிய பணித்திருந்தால் அவனும் அதற்கு அடிப்பணிந்திருப்பான்.
ஏனெனில்,அவன் தான் மனைவியின் கட்டளைக்காக காத்திருந்தானே?
அவளோ இறுதி வரை அவன் நெற்றியில் திருநீறு பூசுவதற்கு போராடிக்கொண்டிருந்தாளே ஒழிய, அவனிடம் வாயை திறந்து பேசவில்லை.
‘சரியான அழுத்தம்’ என திட்டிக்கொண்டே இறுதியில் ஆடவனே அவளிடம் இறங்கி வந்திருந்தான்.
மனையாளின் தவிப்பை கண் கொண்டு பொறுக்க முடியாமல் அவனே நெற்றியில் புரண்ட சிகையை ஒதுக்கிவிட்டு கீழே குனிந்தான்.
இப்போது அவளின் முகத்திற்கு நேரெதிரே அவனது முகம் வந்ததும் அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
மிக அருகே தெரிந்த அவன் முகம் அவளின் இதயத்தில் அதிர்வை கொடுத்தன.
கூடவே நாணத்தையும் கொடுக்க அவனின் நெற்றியில் விரல் நடுங்க திருநீறு பூசி கையை வைத்து ஊதி விட்டாள்.
ஆனால் ஊதியவளின் வாயிலிருந்து காற்று தான் வரவில்லை.
அவனின் அருகாமையில் அவளின் சுவாசம் தான் தடுமாறியிருந்தனவே?
சுவாசமே இல்லாத அவளின் மூச்சுக்காற்று அவனை சிலிர்க்க வைத்தன.
அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் விறைப்பாக நிமிர்ந்த ரத்தினவேல் அவனாகவே அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு “சாமி கும்பிட்டு வெளியே வா” என விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஒரு கணம் அவளிற்கு அங்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
ஏனோ அந்த ஒரு நிமிடம் அவளிற்குள் இருந்த அத்தனை சஞ்சலங்களும் விடைப்பெற்ற ஒரு உணர்வு!
மெதுவாக அவன் வைத்த குங்குமத்தை தொட்டு பார்த்தவளின் மேனியில் ஒரு சிலிர்ப்பு!
நெஞ்சிற்குள் ஒரு இனிய படபடப்பு!
அவளின் இதழ்கள் கூட இலேசாக மலர்ந்தன.
சில நிமிடங்கள் அவளின் தமக்கையை கூட அவள் மறந்துவிட்டாள் என்றால் மிகையாகாது.
அவளிற்கு அனைத்தையும் மறக்க வைக்கும் முயற்சியில் தான் ஆடவனும் இறங்கியிருந்தான்.
அதற்காகவே அவளிடம் அவன் நெருக்கத்தை பாராட்டி,அவளின் சிந்தை யாவிலும் அவனது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தான்.
அவன் கொண்ட முயற்சியில் ஓரளவு வெற்றி வாகை சூடினாலும்,அவனால் முழுமையாக வெல்ல முடியவில்லை.
அவன் அங்கிருந்து சென்றவுடன் கடவுளின் புறம் திரும்பியவளின் பிரார்த்தனை என்னவோ அவளின் தமக்கைக்காகவும் அவளின் மனநிம்மதிகாகவும் மட்டுமே இருந்தது.
ஆனால் இவளது எண்ணத்தின் நாயகியோ அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள்.
அவளிற்கு என்று ஒருவரும் இந்த உலகத்தில் இல்லாதது போல் உடலளவிலும் மனதளவிலும் சுருண்டிருந்தாள்.
இப்போதும் முகிழ்மதியை ரத்தினவேல் திருமணம் செய்துக்கொண்டதில் அவளிற்கு எவ்வித வருத்தமும் இல்லை.
ஆயினும்,அவள் கண்ட கனவு குலைந்துப்போனதால் அவளின் வாழ்வே அஸ்தமானமாகியிருந்தது.
அவளின் தாயே அவளிற்கு எதிராகிப்போயிருந்தார்.
இந்நிலையில் சிவராமனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தன.
அதையும் ஊடகங்களின் வழி மட்டுமே அவள் அறிந்திருந்தாள்.
இதற்கெல்லாம் மேலாக ரத்தினவேல் ஒரு புறம் அவனது வேலையை காட்ட தொடங்கியிருந்தான்.
அதன்பலனாய் அவரின் தொழிலுக்கு கடன் கொடுத்து உதவிய ஆசாமிகள் அனைவரும் அவரின் வீட்டின் வாசலில் காத்திருந்தார்கள்.
கடன் தொல்லை ஒரு புறம்,கட்சியை விட்டு நீக்கியது ஒரு புறம் என்று சிவராமன் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிம்மதியும் பறிப்போயிருந்தது.
இரண்டு நாட்களில் அவர்களின் வாழ்க்கையே தலைகீழாக புரண்டுப்போயிருந்தது.
அவர்களை அந்த அவலநிலைக்கு ஆளாக்கியிருந்தான் முகிழ்மதியின் மணாளன்!
தன்னவளிற்கு வலியை கொடுத்த அனைவருக்கும் பல மடங்காக வலியை திருப்பி கொடுத்திருந்தான் அவன்.
முகிழ்மதி 37:

முகிழ்மதி மாமியார் கூறியது போலவே பாட்டியை சந்திக்க சென்றாள்.
அவரோ வழக்கம் போல் “உனக்காக தான் தங்கம் காத்திருக்கேன்…வா” என அவளை அன்புடன் வரவேற்று அரவணைத்தார்.
சட்டென அவர்களது குடும்பத்திற்குள் பொருத்திப் போக முடியவில்லை என்றாலும்,அவர் தன் மீது காட்டும் பாசத்தை அவளால் உணர முடிந்தது.
உடனே அவள் “பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க” என அவரின் காலில் விழுந்து வணங்க,
அவர் அவளின் கூந்தலை வருடி “நல்லாயிரு தங்கம்…நீங்க இரண்டு பேரும் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழணும்” என மனதார வாழ்த்த,அவரின் பேச்சு அவளிற்குள் சங்கடத்தை கொடுத்தன.
அவள் இமைத்தாழ்த்தி இதழ்கடிக்கவும் ‘உன் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்டா பேராண்டி’ என பேரனின் வாழ்வை எண்ணி பெருமூச்சை வெளியேற்றியவர் “இந்தா கண்ணு…உனக்கு இந்த பாட்டியோட கல்யாண பரிசு” என ஒரு நகைப்பெட்டியை கொடுத்தார்.
அவள் அதனை வாங்குவதற்கு தயங்க “பெரியவங்க முதல் முறையா பரிசை கொடுத்தா வேண்டாம்னு சொல்லக்கூடாது தங்கம்…வாங்கிக்கோ” என அழுத்தி உரைத்ததும்,அவள் அதனை வாங்கிக்கொண்டாள்.
அவள் பரிசை வாங்கி திறக்காமல் மடியில் வைத்துக்கொள்ள,அவற்றினை கவனித்த காஞ்சனா மாலா தானாகவே முன் வந்து “கொடுடாம்மா…நானே உனக்கு இந்த நகையை போட்டுவிடறேன்” என பெட்டியை வாங்கி அந்த நகையை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தார்.
அதுவொரு மரகத கல் பதித்த சிறிய அட்டிகை!
அந்த அட்டிகையில் மகாலட்சுமியின் திருவுருவங்கள் கொண்டு செதுக்கப்பட்டிருந்தன.
பழமையான வேலைப்பாடுகள் கொண்டிருந்தாலும் தங்களது பாரம்பரியம் மாறாமல் அத்துணை அழகாய் இருந்தது அந்த அட்டிகை!
அவளின் புடவை நிறத்திற்கு அது பொருந்திப்போகவும் செய்தது.
ஆனால் அவளிற்கோ அந்த நகையின் பகட்டு எதுவும் கண்ணை கவரவில்லை.
சிறு வயதிலிருந்தே அவளிற்கு பெரிதாக நகை,உடைகளின் மீது எவ்வித ஆர்வமும் இருந்ததில்லை.
தனக்காக அவர் பாசமாய் அணிவித்தது தான் அவளிற்கு உவகையை கொடுத்தன.
அதனால் நகையை குனிந்து ஒரு முறை பார்த்துவிட்டு “நல்லாயிருக்கு பாட்டி” என மெல்லியதாக சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“உனக்கு இந்த நகை ரொம்ப அழகா இருக்கு செல்லம்” என அவளை கட்டியணைத்து உச்சி முகூர்ந்தவர் “உன் காலில் இருக்கிற காயம் சரியாகிடுச்சாம்மா?” என அவளின் நலன் விசாரிக்க,
சடுதியில் அவளின் புன்னகை மறைந்து மாயமாகியிருந்தன.
உடனே அவளிற்கு தாயின் நினைவு மனதில் எழுந்தன.
அவளை ஆயிரம் கொடுமைப்படுத்தியிருந்தாலும் அவளால் அவரை வெறுக்க முடியவில்லை.
அத்தோடு தன்னுடைய காயம் பற்றி அவருக்கு தெரிந்ததினால் அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அதனால் தன் காயம் முழுமையாக குணமாகவில்லை என்றாலும் “ம்” என பொய்யாக தலையாட்டினாள்.
அவளின் சமாளிப்பு அவருக்கும் நன்றாகவே புரிந்திட “சரி நீ போய் பால் மட்டும் காய்ச்சிட்டு ஓய்வெடு தங்கம்” என அவளின் கன்னத்தை தட்டி வழியனுப்பி வைத்தார் மூத்தவர்.
அங்கிருந்து செல்லும் முகிழ்மதியை கண்ட பாட்டி ‘நீ அவளை உன் வழிக்கு கொண்டு வர ரொம்பவே கஷ்டப்படப்படணும் பேராண்டி’ என சலிப்பாக தலையாட்டிக்கொண்டவர்,ஒரு ஆங்கில புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருந்தார்.
பாட்டியின் அறையிலிருந்து வெளியே வந்த முகிழ்மதி எதிரே வந்த விஜயேந்திர பூபதியை பார்த்து ஒரு கணம் தயங்கி நின்றாள்.
அவரும் இவளை பார்த்துக்கொண்டே நடந்து வந்தவர்,அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளை கடந்து செல்ல முயன்றார்.
அச்சமயம் “மா..மா” என முயன்று வருவித்த குரலில் அவள் அழைக்க,
அவரோ ‘என்ன?’ என்பது போல் அவளை திரும்பி ஏறிட்டார்.
அவளோ “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றவாறு சட்டென காலில் விழுந்ததும் “என்னம்மா பண்ணுறே?” என அவரே ஒரு கணம் பதறிப்போய் நகர்ந்துவிட்டார்.
அவளோ கீழே மண்டியிட்டப்படியே சிரம் உயர்த்தி ஏறிட்டவள் “அத்தை பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க…” என தவிப்பான குரலில் காரணம் கூறியதும்,
அவரோ பதட்டத்துடன் “நீ முதல்ல எழுந்திரிம்மா…நல்லாயிரு…நல்லாயிரு” என வேகமாக அவளிற்கு ஆசிர்வாதம் செய்து எழுப்பி விட்டார்.
மிகுந்த சிரமப்பட்டு எழுந்து நின்றவள்,அவரிடம் எதுவும் பேசவில்லை.
அவருக்கும் அவளிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
அவருக்கு அவளின் மீது பெரிதாக அபிப்பிராயம் இல்லை.
ஏனெனில், அவருக்கு சிவராமனின் மகள் தங்கள் வீட்டிற்கு மருமகளாய் வருவதே பிடிக்கவில்லை.
ஆயினும்,முகிழ்மதியின் அமைதியும் அவளின் மரியாதை பொருந்திய குணமும் அவரை சிறிது அசைத்து பார்த்தது.
ஆதலால் அவளின் முகம் பார்த்து “நீயும் என் பொண்ணு மாதிரி தான்மா…இனி என் காலிலே எல்லாம் விழாதே..சரியா?” என அவர் பரிவுடன் கூற,
அவள் அவரை விழி உயர்த்தி ஏறிட்டாள்.
அவரோ “சரி நீ போய் பால் ஏதாவது குடிம்மா…நானும் போய் குளிச்சிட்டு வர்றேன்” என உரைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அவளும் “ம்” என தலையாட்டிப்படியே தனது மாமியாரை தேடி வந்தாள்.
அவர் ரத்தினவேலின் அருகே அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்து அங்கு சென்றாள்.
அவளை கண்ட வானதி “என்னம்மா பாட்டிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டியா?” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே “அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..” என சட்டென அவரின் காலிலும் அவள் விழுந்திருந்தாள்.
அதை சற்றும் எதிர்பாராத வானதியோ பதறி எழுந்துவிட்டார்.
“அச்சோ என்னம்மா பண்ணறே?உனக்கு உடம்பு வேற சரியில்லை…நல்லாயிரு …முதல்ல எழுந்திரி…” என அவர் அவசரகதியில் கூறி,அவளின் தோள் பற்றி தூக்கிவிட்டார்.
ரத்தினவேலோ நடப்பதை புருவம் சுருக்கி பார்த்திருந்தான்.
அவளை தூக்கி நிறுத்திய வானதி “ஏம்மா பாட்டிக்கிட்ட மட்டும் தானே ஆசிர்வாதம் வாங்க சொன்னேன்…நீ ஏன் மா எல்லார் காலுலையும் பொத்து பொத்துனு விழறே?” என செல்லமாய் கடிந்தார்.
“நீங்களும் பெரியவங்க தானே அத்தை…அதான்” என அவள் தயக்கத்துடன் முணுமுணுக்க,
“நல்லது” என முனகியவர் மருமகளின் இந்த நல்ல குணத்தை எண்ணி பெருமிதம் கொண்டார்.
“சரி…சரி இனி யார் காலுலையும் நீ விழ வேணாம்…நான் போய் சமையலறையிலே பூஜைக்கு ஏற்பாடு பண்ணறேன்…நீ வாம்மா” என்றுவிட்டு அவர் முன்னே செல்ல,
அவரின் பின்னோடு செல்ல எத்தனித்த மனைவியை “முகிழ்மதி” என்றழைத்து தடுத்து நிறுத்தினான் ரத்தினவேல்.
அவளோ மாமியாரை திரும்பி ஏறிட “நீ பேசிட்டு வாம்மா” என சிரித்துக்கொண்டே கூறிவிட்டு முன்னே சென்றார்.
அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்த மங்கை திரும்பி கணவனை நோக்கினாள்.
“இப்போ அம்மா காலிலே விழுந்த மாதிரி வேற யார் காலிலே எல்லாம் விழுந்தே நீ?” என அவன் கடுப்பை விழுங்கிய குரலில் கேட்க,
அவளோ ஒரு நொடி அமைதிக்கு பிறகு “பாட்டி…மாமா…அத்தை இவங்க காலிலே எல்லாம் விழுந்தேன்” என சிறுப்பிள்ளைப்போல் ஒப்பிக்க,
“ஓ..” என தாடையை நீவிய ரத்தினவேல் “எல்லார் காலிலும் விழுந்தே நீ ஏன் என் காலிலே விழலை?நானும் உன்னை விட பெரியவன் தானே” என நக்கலாய் கேட்டான்.
அவனிற்கு மனைவியின் செயல் சிறிதும் பிடிக்கவில்லை.
அந்த கோபத்தில் அவளை அவன் சீண்டியிருக்க,
ஆனால் அவனே எதிர்பாராமல் அவனது காலிலும் அவள் விழுந்து வணங்கியிருந்தாள்.
“ஹே எழுந்திரி…என்ன பண்ணறேடி நீ?” என குரலுயர்த்தி அதட்டி அவளை எழுப்பிவிட்ட ரத்தினவேலிற்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
அவளை பிடித்து தன்னருகே அமர வைத்தவன் “காலிலே காயத்தை வைச்சிட்டு என்ன இது?” என அடிக்குரலில் சீற,
அவளோ அவன் குரல் உயர்த்தியதும் அவனை மிரட்சியுடன் பார்க்க “ஊப்” என இதழ் குவித்து ஊதி சினத்தை கட்டுப்படுத்திய ரத்தினவேல் “நீ காலிலே விழுந்து தான் பெரியவங்களுக்கு கிரேட்டியூட் காட்டணும்னு அவசியமில்லை முகிழ்…மரியாதையும் அன்பும் மனசுலே இருந்தா போதும்…உனக்கு நான் மறுபடியும் சொல்லமாட்டேன்…நீ ரத்தினவேல் ரகுநாத பூபதியோட பொண்டாட்டி…அதை ஞாபகம் வைச்சுக்கோ” என சற்று அழுத்தமாக மொழிய,
அவளும் “சரி” என தலையாட்ட,
“அண்ணி…அண்ணி” என தமயந்தியின் குரல் கேட்டதும் வெடுக்கென்று பயந்துப்போய் எழுந்து நின்றவளை கண்டு ‘இவ திருந்த மாட்டா’ என்னும் விதமாக “ப்ச்” என சிகையை அழுந்தக்கோதி கொண்டான் ஆடவன்.
அச்சமயம் அங்கு வந்த தமயந்தி “குட் மார்னிங் அண்ணி…குட் மார்னிங் அண்ணா” என இருவருக்கும் காலை வணக்கம் தெரிவிக்க,
ரத்தினவேலோ தலையை மட்டும் அசைத்தான்.
ஆனால் அவனின் மனையாளோ சங்கடத்தோடு “குட் மார்னிங் அக்கா” என்றாள்.
அதைக்கண்டு செல்லமாக முறைத்த தமயந்தி “இன்னும் நீங்க இந்த அக்காவை விடலையா அண்ணி?உங்களை விட இரண்டு வயசு தான் நான் பெரியவள்…தமி…இல்லைனா லட்டு இப்படி ஏதாவது கூப்பிடுங்க…அதுவும் இல்லையா அடியே நாத்தனாரேனு கூப்பிடுங்க…சொல்லுங்க அண்ணியாரேனு நானும் டாக்குன்னு வந்து நிப்பேன்…அதைவிட்டுட்டு அக்காலாம் கூப்பிடாதீங்க…நல்லாவே இல்லை” என இதழை சுழித்து படபடவென அவள் பேசிக்கொண்டே செல்ல,
முகிழ்மதியிடமோ வழக்கம் போல் அதே மௌனம்!
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருப்பதை கண்டு சலித்த தமயந்தி “அடப்போங்க அண்ணி…ஏதாவது கேட்டால் வாயை நல்லா பேஸ்ட் போட்ட மாதிரி ஒட்ட வைச்சுக்கிறீங்க…சரி அதை விடுங்க…” என்றவள் அவளின் புறம் குனிந்து “ஆமா அண்ணி…நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்…நீங்க நம்ப குடும்பத்திலே இருக்கிற எல்லார் காலுலையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கனீங்களாமே…நானும் உங்களை விட வயசுலே பெரியவ தான் என் காலையும் விழப்போறீங்களா என்ன?” என இடுப்பில் கைவைத்து திமிராக அவள் கேட்க,
அதையும் நிஜம் என்று நம்பிய பெண்ணவள் “உங்க காலுலையும் விழணுமா அக்கா?” என அப்பாவியாய் கேட்க,
அதுவரை அமைதியாக இருந்த ரத்தினவேல் “ஆமா…வீட்டுக்கு பின்னாடி இருக்க ஆடு மாடு கூட உன்னை விட வயசுலை பெரியவங்க தான்…போய் அதுங்க காலுலையும் விழு” என்றான் எரிச்சலாக…
அதைக்கேட்டு தமயந்தி வாய்விட்டு சிரிக்க முகிழ்மதியோ அவன் புறம் திரும்பி “காலுலே விழறதிலே தப்பில்லைங்க…பெரியவங்க காலிலே விழுந்தால் ரொம்ப நல்லதுங்க” என வியாக்கியானம் பேச,
“என்ன நல்லது அண்ணி…கால்ல விழும் போது பெரியவங்க கிஃப்ட் தருவாங்களே…அது தானே” என தமயந்தி குறுஞ்சிரிப்புடன் கேட்க,
“அது இல்லை அக்கா…மனுச உடம்புலே கால்,கை இது இரண்டோட விரல் நுனியிலும் எனர்ஜி அதிகமா இருக்கும்…அப்போ நம்ப பெரியவங்க காலை தொட்டு கும்பிடும் போது அவங்களோட பாஸிடிவ் எனர்ஜி மொத்தமும் நமக்கு பாஸ் ஆகும்…அதுமட்டுமில்லாமல் பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணும் போது நம்மையே அறியாமல் மனரீதியா பலம் இன்க்ரீஸ் ஆகும்..அப்புறம் அது நமக்கு பாஸிடிவ் தாட்ஸ் கொடுத்து ஒரு உத்வேகத்தை கொடுக்கும்…அதனாலே பெரியவங்க காலிலே விழறது நல்லது” என மதிநுட்பத்துடன் பேசிய மனைவியை கண்டு ஒற்றை புருவம் உயர்த்தினான் ரத்தினவேல்.
முதல் முறையாய் மிக நீளமாக அவள் பேசிய வசனம் அது தான்!
அவளின் அறிவுக்கூர்மையை பாராட்டும் விதமாக இருந்தது அவனின் பார்வை!
“அப்போ காலிலே விழுந்தாலே நல்லதுனு சொல்லறீங்களா அண்ணி?” என தமயந்தி ஆர்வமாய் கேட்க,
அவளிற்கு முகிழ்மதி பதில் கூறுவதற்கு முன்பே “ஆமா காலங்கார்த்தாலே காலிலே விழறதை பத்தி ஆராய்ச்சி பண்ணறது ரொம்ப முக்கியம்…யாருக்கும் வேலை இல்லையா?” என ரத்தினவேல் இருவரையும் அதட்டியதும்,
“ஐய்யோ வாங்க அண்ணி..அண்ணா டென்ஷனாகிறதுக்குள்ள தப்பிச்சு ஓடிடலாம்” என அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
செல்லும் வழியில் “அண்ணி…அண்ணி…யூ ஆர் சோ ஸ்வீட் தெரியுமா?நீங்க ரொம்ப புத்திசாலி” என அவளின் கன்னம் பற்றி கிள்ளியவள்,
திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவளாய் ”ஐய்யோ இதை மறந்திட்டேன் பாருங்க…சீக்கிரம் வாங்க அண்ணி…நீங்க வந்து பால் காய்ச்சின பிறகு தான் எல்லாருக்கும் காஃபியாம்…அம்மா சொன்னாங்க…முதல்ல வாங்க…பசிக்குது வேற…” என அவளை இழுக்காத குறையாக தள்ளிச்சென்றாள்.
ரத்தினவேலோ மனையாளை புரிந்துக் கொள்ள முடியாமல் அவளையே பார்த்திருந்தான்.
ஒரு வழியாக பாலை காய்ச்சி அதை பொங்க விட்டார்கள் பெண்கள்.
பால் கிழக்கு புறமாக பொங்கியதும் “பால் கிழக்கு பக்கம் பொங்கியிருக்கு…இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என வானதி அதீத உற்சாகத்துடன் கூற,
“ஏன் மேற்கு பக்கம் பொங்கினால் கெட்டது நடக்குமா? என்னம்மா லாஜிக் இது?” என தமயந்தி பரிகாசமாய் குறிப்பிட,
“தமி…” என அவளின் தாய் அதட்டியதும் “சரி” என வாயை மூடிக்கொண்டாள்.
ஆனால் அடுத்த கணமே “அம்மா அம்மா காஃபி வேணும்…எனக்கு பசிக்குது” என சிறுப்பிள்ளை போல் சிணுங்கிக்கொண்டே அவரை பின்னோடு அணைத்துக்கொள்ள,
“சரி சரி பறக்காதே…இரு லட்டு” என அவளை கடிந்தாலும் அவரின் முகத்தில் இருந்த பூரிப்பை ஏக்கத்துடன் நோக்கினாள் முகிழ்மதி.
அந்த காட்சியை பார்த்தவளின் மனதில் ஏதேதோ சிந்தனைகள்!
அவளின் வாழ்வில் இப்படியொரு நிகழ்வே ஒரு நாளும் நடந்ததில்லை.
அவளிற்கு மட்டுமல்ல…அவளின் தமக்கைக்கும் இது நடந்ததில்லை.
சந்திரமதியின் மீது விஜயலட்சுமி பாசம் காட்டியப்போதும் அதிலும் ஒரு விலகல் இருக்கும்.
மொத்தத்தில் அவர் ஒரு தாயாக இருவரிடமும் அன்பு பாராட்டியதே இல்லை.
அவரின் பாசத்தில் கூட சுயநலம் மட்டுமே மிகுந்து இருக்கும் என்று அறிந்து பெருமூச்சறிந்தாள் முகிழ்மதி.
அச்சமயம் அவளின் சிந்தனைகளை களைக்கும் விதமாக வானதி முகிழ்மதியிடம் “முகிழ்மதி நீ என்னம்மா குடிப்பே?காஃபி…பால்…பூஸ்ட்…இல்லை வேற ஏதாவது ஹெல்த் டிரிங் குடிப்பியா?” என அவளின் விருப்பத்தை கேட்க,
அவளோ “நான் எதுவும் குடிக்க மாட்டேன் அத்தை” என்றாள் பணிவாக.
அதைக்கேட்டு புருவம் சுருக்கிய வானதி “ப்ச் என்னம்மா இது?வயசுப் பொண்ணு நீ எதுவும் குடிக்கலைனா எப்படி?இன்னையிலிருந்து கொஞ்சமா காஃபி குடி” என கடிந்து அவளிடம் ஒரு குவளையை நீட்டியவர்,
“உன் புருஷனுக்கு எப்பவும் டிக்காஷன் டார்க்கா இருக்கணும்…பட் அரை ஸ்பூன் சுகர் போட்டு தான் காஃபி குடிப்பான்…இல்லைனா காஃபியே குடிக்கமாட்டான்” என மகனை பற்றி சொல்லிக்கொண்டே கொட்டை வடிநீரை கலந்து முடிந்தவர் “சரி இதை பூபதிக்கிட்ட கொடுத்திடும்மா” என அவளிடம் மற்றொரு குவளையை நீட்டினார்.
அவள் அந்த குவளையை தன் கையில் வாங்கிக்கொண்டதும் “நீங்க இரண்டு பேரும் போய் ஒண்ணா குடிங்கம்மா” என அவர் அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.
அச்சமயம் “அம்மா எனக்கு” என தமயந்தி சிணுங்க,
அதற்கு அவளின் தாயோ “இரு லட்டு…உனக்கு தான் கலக்கறேன்” என கனிவு கலந்த அதட்டலுடன் பேசியதை கேட்டவளின் நெஞ்சம் பிசைந்தது.
முகிழ்மதி 38:

தனக்கு மட்டும் இப்படியொரு தாய் ஏன் அமையவில்லை என்று சிந்தித்தப்படியே அறையிலிருந்து வெளியே வந்த முகிழ்மதியை வழிமறித்தான் ஜித்தேந்திரன்.
“ஹாய் முகிழ்…குட் மார்னிங்…” என தனக்கே உரிய ஆர்ப்பாட்டத்துடன் பேசினான் அவன்.
அவன் குரல் கேட்டு அவள் திடுக்கிட்டு நிமிர “என்ன பகலிலே கனவா மிசஸ்.ரத்தினவேல்” என கண்சிமிட்டி சிரிக்க,
அவளோ “இல்லை” என தலையாட்டினாள்.
“நீங்க தான் இன்னைக்கு காப்பி போட்டிங்களாம்…கிச்சனிலிருந்து நியூஸ் வந்துச்சு…காப்பி குடிக்கிற மாதிரி இருக்குமா? இல்லை இந்த தமி போடுவாளே…மாடு கழனி தண்ணீய கழுவி ஊத்தின மாதிரி ஒரு காஃபி…அது மாதிரி இருக்குமா?” என இதழ்கடித்து சிரித்தப்படி அவன் கேட்க,
அவளோ பதறிப்போய் “ஐய்யோ இல்லை…நான் போடலை காஃபி…அத்தை தான்” என அவசரமாக மொழிய,
“ஹலோ…ஹலோ எதுக்கு இவ்வளவு டென்ஷன்…ஜஸ்ட் ரிலாக்ஸ்…நீங்க வாங்க முதல்ல உட்காருங்க” என நாற்காலியை இழுத்துப்போட்டான்.
அவளோ கையிலிருந்த குவளையோடு “பரவாயில்லை…” என தயங்கினாள்.
“அட உட்காருங்க முகிழ்மதி” என சட்டென அவளின் கரம் பற்றி இருக்கையில் அமர வைத்தவன் “அண்ணாவுக்கு தானே காஃபி கொடுங்க…நான் கொடுக்கறேன்” என அவளின் கரத்திலிருந்து குவளையை வாங்கினான்.
அச்சமயம் “ஜித்து நீ இப்போ அவளை என்ன கூப்பிட்டே?” என கடுமையாக கேட்டுக்கொண்டே ரத்தினவேல் அங்கு வர,
அவனோ ஒன்றும் புரியாமல் “என்ன அண்ணா?” என புருவம் சுருக்கி வினவினான்.
‘அடடா…என்ன தப்பு பண்ணேன்னு தெரியலையே?’ என அவன் அப்போதும் தன் தவறை உணராமல் புலம்பினான்.
அவனை அழுத்தமாக நோக்கிய ரத்தினவேல் “இவங்க உனக்கு யாரு?” என தங்கள் இருவரையும் பயத்துடன் பார்த்த முகிழ்மதியை காட்டி கேட்க,
அவனோ “அவங்க எனக்கு அண்ணி” என விடைக்கொடுத்தவனிற்கு சிறிது சிறிதாக தன் தவறு புரிந்தது.
‘ஆஹான் செத்தேன்’ என மானசீகமாக அவன் தலையில் கைவைத்துக்கொள்ள,
அவன் எண்ணியது போலவே “அப்புறம் என்ன பேரு சொல்லி கூப்பிடறே?எனக்கு என்ன மரியாதை கொடுக்கிறீயோ…அதே மரியாதை அவளுக்கும் கொடுக்கணும்…புரியுதா?” என குரலுயர்த்தி அவன் கண்டிக்க,
அவனோ “சாரி அண்ணா…சாரி அண்ணி” என இருவரையும் பார்த்து மெல்லிய குரலில் கூற,
உடனே மனைவியின் புறம் திரும்பி “முகிழ்மதி உனக்கும் இதே தான்…என்ன முறையோ அதை சரியா ஃபாலோ பண்ணனும்” என அழுத்தம் திருத்தமாக சொல்ல,
அவளோ எச்சிலை கூட்டி விழுங்கியப்படி “சரி” என தலையாட்டினாள்.
‘அது’ என்பது போல் பார்த்த ரத்தினவேலிடம் “அண்ணா காஃபி” என பவ்யமாக அவன் நீட்ட,
“நீ என்ன என் பொண்டாட்டியாடா?” என அவன் அதற்கும் அரட்ட,
‘ஆத்திஈஈ…காலையிலே என்ன காண்டோ தெரியலை…நம்மளை இந்த வாரு வாருறாரு’ என மிரண்ட ஜித்தேந்திரன் “அண்ணி” என பாவமாக குவளையை முகிழ்மதியிடம் நீட்ட,
அதை கையில் வாங்கியவளிற்கோ ‘ஒரு காஃபிக்கு இந்த அக்கப்போரா’ என்று தான் இருந்தது.
அவள் அவனிடம் நீட்டியதும் அவன் அதனை வாங்கி பருக தொடங்கினான்.
உடனே ஜித்தேந்திரன் “நீங்க இரண்டு பேரும் காஃபி குடிங்க…நான் உள்ளே போய் அம்மாகிட்ட காஃபி வாங்கிக்கிறேன்” என அசடு வழிய சிரித்து சமாளித்தவாறே சமையலறைக்குள் ஓடி விட்டான்.
அவன் அங்கிருந்து சென்றதும் மனையாளை விழிகளால் பருகியப்படியே கொட்டை வடிநீரை அவன் உறிஞ்சிக்குடித்தான்.
அவளின் தலையிலிருந்து வீசிய மல்லிக்கை பூவின் நறுமணம் ஒரு புறம் ஆடவனின் உணர்வுகளை தூண்டிக்கொண்டிருந்தன.
அவளிற்கோ அவனது பார்வையின் வீச்சில் தொண்டை குழியில் கொட்டை வடிநீர் இறங்க மறுத்தது.
நெஞ்சம் படபடக்க எச்சிலை கூட்டி விழுங்குவது போல் அவள் வடிநீரை விழுங்கி வைத்தாள்.
“முகிழ் பார்த்து மெதுவா குடி…சுடப்போகுது” என அவன் மென்மையாக கடிய,
அவளோ அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்னும் விதமாகவே கடகடவென கொட்டை வடிநீரை மிரட்சியுடன் தொண்டைக்குள் சரித்திருந்தாள்.
ரத்தினவேல் வழக்கம் போல் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு மீசையை நீவிக்கொண்டான்.
இங்கு சமையலறைக்குள் வந்த சகோதரனை கண்டு தமயந்தி வெடித்து சிரித்தாள்.
சமையலறை திண்டில் அமர்ந்திருந்தவள் “என்ன ஜித்து அண்ணா…பெரியண்ணாகிட்ட செம்ம வாங்கு வாங்குன போலவே…” என நக்கலாக அவள் சொல்லி சிரிக்க,
அதில் கடுப்பானவன் “வாயை மூடுடி…சிரிச்சா கொன்னுடுவேன் மவளே” என அவன் பல்லைக் கடிக்க,
“உனக்கு நல்லா வேணும்…என் காஃபிய கழனி தண்ணீ மாதிரி இருக்கும்னு சொன்னேயில்லை” என அவள் இதழை சுழித்து பழிப்பு காட்ட,
“அதை வேற நீ கேட்டு தொலைஞ்சிட்டியா?உண்மைய தானே சொன்னேன்” என அவன் தோளை குலுக்க,அவள் முறைத்தாள்.
அதனை கண்டுக்கொள்ள ஜித்தேந்திரன் “சரி அதை விடு…ஆமா…அண்ணா எதுக்கு காலையிலே என் மேலே செம்ம காண்டுல இருக்காரு” என கதைக்கேட்கும் மார்க்கத்துடன் தங்கையின் அருகே அவன் செல்ல,
அவளோ அவனை மேலிருந்து கீழாக பார்த்தவாறே “ம்க்கும் உனக்கு ஒண்ணுமே தெரியாதாக்கும்” என இகழ்ச்சியாக புருவம் உயர்த்தி சொன்னாள்.
அப்போது தான் சந்திரமதியை கடத்தியதற்காக தமையன் கோபத்தில் இருக்கின்றான் என்று அவனிற்கு புரிந்தது.
உடனே புருவம் நெறித்தவன் “ஏய் அதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லைடி…நம்ப டான் சொன்னதை தான் நான் செஞ்சேன்” என அவன் ஏதேதோ உளர தொடங்கவும் “ஜித்து” என தமயந்தி கண்ணை உருட்டி பல்லை கடித்தாள்.
அவளின் எச்சரிக்கைக்கு பிறகே தாய் அங்கிருப்பது அவனிற்கு புரிய,சட்டென முகத்தை மாற்றி “ஹாய் அம்மா நீங்களும் இங்க தான் இருக்கீங்களா? நான் உங்களை பார்க்கவே இல்லையே…நீங்க இன்னைக்கு ரொம்ப க்யூட்டா இருக்கீங்க…லவ் யூம்மா” என அவரை பின்னோடு கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட,
அவரோ அவனின் தோளில் ஒரு அடி வைத்து “டேய் கள்ளா…நடிக்காதே…இரண்டு கூட்டுக்களவாணியும் என்ன இப்போ பேசிட்டு இருந்தீங்க?” என கூர்மையாக அவர்களை பார்த்து வினவ,
“அது ஒண்ணுமில்லைம்மா…நம்ப பாட்டி அண்ணாவோட கல்யாணத்தை அதிரடியா நடத்தினாங்கயில்லை…அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்…வேற ஒண்ணுமில்லை” என சிரித்தே சமாளித்தான்.
அந்த மயக்கும் மாயக்கண்ணனின் புன்னகையில் தற்சமயம் மயங்கிய அவனது தாயும் “என்னமோ சொல்லறே நானும் நம்பறேன்” என தலையாட்டியப்படி அவனிற்கு கொட்டை வடிநீரை கலக்கினார்.
அவர் அந்த புறமாக திரும்பியதும் ஜித்தேந்திரன் இதழை குவித்து ஊதி தங்கையை காண,அவளோ சிரித்துக்கொண்டே ‘சொல்லட்டுமா’ என தாயை கண்ணால் சுட்டிக்காட்ட,
இவனோ ‘பிச்சு…பிச்சு…’ என விரல் நீட்டி மிரட்டினான்.
அதற்குள் “ஜித் இந்தா காஃபி…உன் அப்பா கீழே வந்திட்டாரா?” என கேட்டவாறே வானதி திரும்ப,
அவனோ மீண்டும் நல்லப்பிள்ளை போல் சிரித்தாற் போன்று முகத்தை வைத்துக்கொண்டு “இன்னும் வரலைம்மா…நீங்க காஃபி குடிச்சிட்டிங்களா?” என அக்கறையாக அவன் வினவ,
“இல்லை கண்ணா…அப்பாவுக்கு கொடுத்திட்டு குடிக்கிறேன்” என சோர்வுடன் கூறியவரின் முகத்தில் பசி நன்றாக தெரிந்தது.
அதனையறிந்த ஜித்தேந்திரன் “அம்மா…அம்மா…எல்லாத்தையும் கவனிச்சிக்கிற மாதிரி கொஞ்சம் உங்களையும் கவனிங்க…முதல்ல இந்தாங்க காஃபிய குடிங்க…எனக்கு நான் போட்டுக்கிறேன் நகருங்க” என அவரை தள்ளி நிறுத்திவிட்டு அவன் கொட்டை வடிநீர் போட ஆயுத்தமானான்.
“இல்லை கண்ணா…அப்பா…” என ஆரம்பிக்கும் போதே “உஷ்” என சுட்டு விரலை வாயில் வைத்து ‘பேசாதீங்க’ என்று சைகை செய்தான்.
பின்பு அணிந்திருந்த வெண்ணிற முழுக்கைசட்டையை மடித்துவிட்டு கொண்டு அவன் கொட்டை வடிநீரை தயாரிக்க ஆரம்பித்தான்.
ஆண்மகன் என்ற எவ்வித அகந்தையுமின்றி அவன் மடமடவென வேலை பார்ப்பதை தாயின் பூரிப்போடு பார்த்திருந்தார் வானதி.
தமயந்தியோ “டேய் அண்ணா என்னடா பண்ணறே?” என கீழிறங்கி வந்து அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் ஓரமாக நின்று அவனை ஆச்சரியமாக பார்த்திருந்தனர்.
இடையில் தாய் வடிநீர் அருந்தாமல் இருப்பதை கண்டு “அம்மா காஃபிய குடிங்க…ஆறிடும்” என அதட்டவும் மறக்கவில்லை அவன்.
அவன் வடிநீர் தயாரித்து முடித்ததும் “கண்ணகி அக்கா இதை அப்பாகிட்ட கொடுத்திடுங்க” என ஒரு வேலைக்கார பெண்மணியை அழைத்து அவரிடம் குவளையை ஒப்படைத்தான்.
அவரும் பணிவாக அதனை வாங்கிக்கொண்டு சென்றுவிட “டேய் அண்ணா நீ பாட்டுக்கு காஃபி கொடுத்துவிட்டுட்டே…காஃபி நல்லாயில்லைன்னா என்னடா செய்வே?” என அதிர்ச்சியுடன் வினவியப்படி அங்கு மிச்சமிருந்த வடிநீரை எடுத்து பருகினாள்.
வடிநீரை பருகியவளின் விழிகள் இரண்டும் விரிய “வாவ் அண்ணா காஃபி சூப்பர்…நிஜமா எல்லாமே பக்கவா இருக்கு” என சிலாகித்து பாராட்ட,
அவனோ சட்டை காலரை தூக்கிவிட்டு “அது தான் ஜித் ஸ்பெஷலிட்டி” என்று கூறி கண்சிமிட்டி பெருமிதமாக புன்னகைத்தான்.
அவளோ இதழை பிதுக்கி “பேஷ்…பேஷ்…சூப்பர்…உனக்கு வரப்போற பொண்டாட்டி கொடுத்து வைச்சவங்க” என இரண்டாவது கொட்டை வடிநீரை நாக்கு சொட்டி குடிக்க ஆரம்பித்தாள்.
தங்கை ருசித்து குடிப்பதை பார்த்து ரதித்தவன் “ஆளை பாரு” என அவளின் நெற்றியில் செல்லமாக ஒரு தட்டு தட்டிவிட்டு அவனும் கொட்டை வடிநீரை எடுத்து பருக தொடங்கினான்.
வானதியோ தனது மகனின் சிகையை ஆதுரத்துடன் வருடியப்படி “என் பையனை நீ என்ன நினைச்ச லட்டு?சும்மா உன்னை மாதிரி வீட்டை சுத்தி வந்து பொழுது ஓட்டறவனில்லை அவன்…சின்ன வயசிலிருந்து என் கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு இவன் தான் எனக்கு எல்லாம் ஓடி ஓடி பண்ணுவான்” என மகனை பற்றி வியந்துரைக்க ஆரம்பிக்க,
“அதானே உங்க ஆசை மகனை புகழுந்து என்னை திட்டலைனா உங்களுக்கு மனசே ஆறாதே…போங்கம்மா…எனக்கு எங்க அப்பா இருக்காங்க…அப்பா…” என அவள் கோபத்தில் இதழை சுழித்தப்படி அங்கிருந்து தந்தையிடம் புகார் வாசிக்க செல்ல,
அதைக்கண்டு தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.
அவள் வெளியேறியதும் “அம்மா கேட்கணும்னு நினைச்சேன்…எங்க இந்த வீர் அண்ணாவை காணும்?” என ஜித்தேந்திரன் தாயிடம் வினவ,
“மறந்திட்டியா நீ?இன்னைக்கு அவனோட அம்மாவுக்கு பிறந்தநாள்” என அவர் ஒரு வித கவலையுடன் சொல்ல,
இப்போது ஜித்தேந்திரனின் முகம் வாடிவிட்டது.
“ஆமாம்மா…பாவம் அவரோட அம்மா” என வீரின் தாயிற்காக பரிதாபம் கொண்டான் ஆடவன்.
அதேநேரம் வீர் நெஞ்சம் குமுற தனது தாய் தேவிகாவை பார்க்க ஜீப்பில் சென்றுக்கொண்டிருந்தான்.