முகிழ்மதி 33:
சந்திரமதியை விஜயலட்சுமி அறைந்தது பூபதி குடும்பத்தினருக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அதிலும், அதி முக்கியமாக வீருக்கு!
‘சந்திரமதி கொஞ்சம் நல்ல பெண் தானோ?’ என அவனிற்கு தோன்றவும் செய்ய,அவளின் மேல் இரக்கமும் சுரந்தது.
அவனை தவிர அங்கிருந்த யாவரும் சந்திரமதிக்கு சாதகமாக எதையும் எண்ணவில்லை.
ஏனெனில்,அவர்கள் அனைவருக்கும் ரத்தினவேல் மற்றும் முகிழ்மதியின் மகிழ்ச்சியே முதன்மையாக இருக்க மனமுடைந்த மற்றொரு பெண்ணை கவனிக்க தவறியிருந்தனர்.
தன்னுடைய புது மனையாளை கையில் ஏந்தியப்படியே ரத்தினவேல் மண்டபத்தை அடைந்திருந்தான்.
அவளை வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட அவனிற்கு வரவில்லை.
அவளை அந்த மூச்சு முட்டும் இடத்திலிருந்து அழைத்து வர வேண்டும் என்பது மட்டுமே தலைவனின் கடமையாக இருந்தது.
ஒரு வழியாக அவளை தன்னுடைய அறைக்கு தூக்கி வந்திருந்த ரத்தினவேல் காரிகையை மெத்தையில் கிடத்தினான்.
அவளை மெத்தையில் படுக்க வைத்ததும் மெல்ல இமை திறந்த முகிழ்மதி “அ..க்கா…” என ஈனஸ்வரத்தில் முனகினாள்.
தமக்கையின் மீது அவள் வைத்திருக்கும் அன்பை எண்ணி நெகிழ்ந்தான் அவன்.
அதேசமயம் அவனது மனைவியின் வருத்தம் அவனின் இதயத்தில் வலியை கொடுக்க “முகிழ் நத்திங் டூ வொர்ரி…உன் அக்கா நல்லா தான் இருக்காள்… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என அவளின் நெற்றியை பரிவுடன் வருடிவிட,
சட்டென அவளின் விழியோரம் நீர் துளிர்த்திட,
“பாவம் அவ என்னாலே…” என கண்ணீருடன் பேச தொடங்கியவளின் இதழில் ஒற்றை விரல் வைத்து அமைதிப்படுத்தியவன் “முகிழ்மதி சந்திரமதிய நினைச்சு நீ கவலைப்படறதை முதல்ல நிறுத்து…உன் நிலைமையே இங்க மோசமா இருக்கு…இதிலே மத்தவங்களுக்காக நீ வருத்தப்படறே?” என சிறிது கண்டிக்கும் தொனியில் அவன் கேட்க,
பாவையவளின் மனம் சமாதானமாக மறுத்தது.
தற்போது அவளின் எண்ணமெல்லாம் சகோதரியை சுற்றியே வலம் வர,அவள் தவிப்புடன் இதழ்கடிப்பதை பார்த்தவனிற்கு கோபமாக வந்தது.
ஆயினும்,தன்னை அடக்கிய ரத்தினவேல் அவளின் கண்ணீரை விரலால் துடைத்துவிட்டு “இங்க பாரு முகிழ்…சந்திரமதி இனி என் பொறுப்பு…அவளுக்கு எந்த குறையும் வராமல் நான் பார்த்துக்கிறேன்…நீ அவளை நினைச்சு கவலைப்படாமல் நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கு” என ஆதுரத்துடன் மொழிந்து தன்னவளை சமாதானம் செய்தான்.
அவளோ அவனை நம்பாமல் பார்க்கவும் “என்னை நீ நம்பற தானே?” என அவன் அழுத்தமாக வினவினான்.
அவனை நம்புவதா வேண்டாமா என அவளிற்குள் பெரும் குழப்பம்!
இருப்பினும்,அவனது முகத்திலிருந்த ஏதோ ஒரு உணர்வு அவனை நம்ப தூண்டியது.
அதனால் “ம்” என அவள் முனக,
“அப்போ நிம்மதியா தூங்கு…டோன்ட் வொர்ரி” என கட்டை விரலால் அவளின் நெற்றியை நீவி குனிந்து பிறைநுதலில் இதழொற்றினான்.
அவனது இதழின் ஸ்பரிசம் அவளின் மேனியில் ஒரு சிலிர்ப்பையும் ஆறுதலையும் கொடுக்க,அதுவரை அலைப்புற்ற அவளின் மனம் அமைதியுற்றது.
அதன்பிறகு முகிழ்மதி மெல்ல கண்ணயர ஆரம்பிக்க,அவன் அவளின் கரத்தை பற்றியப்படியே எதையோ தீவிரமாக சிந்திக்க தொடங்கினான்.
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்” என வள்ளுவனின் மொழிப்படி ரத்தினவேலும் மனைவியை சமாதானம் செய்வதற்காக மட்டுமே அவ்வாறு கூறியிருந்தான்.
உண்மையில் சந்திரமதியின் வாழ்வை பார்த்துக்கொள்ளும் எண்ணமெல்லாம் அவனிற்கு துளியும் இல்லை.
முகிழ்மதியை தவிர அந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே அவனிற்கு எதிரிகள் தான்!
அத்துடன் முகிழ்மதியிற்கு நடந்த கொடுமைகளை அவளும் கைகட்டி வேடிக்கை பார்த்திருந்தாள் என்ற கோபம் அவனிற்குள்!
அவளாக நேரடியாக துன்புறுத்தவில்லை என்றாலும்,துயரத்தில் தன்னவளிற்கு ஆதரவாக நிற்காத சகோதரியை அவனால் எவ்வாறு மன்னிக்க இயலும்?
அதனால் சந்திரமதிக்கான வலியும் வேதனையும் அவசியம் தான் என்று அவனும் எண்ணினான்.
அத்தோடு முகிழ்மதியை திருமணம் செய்துக்கொண்டதற்காக அவர்கள் யாரையும் அவன் மன்னிக்க தயாராகயில்லை.
அது தன்னவளுக்காக என்றாலும் சரி…
அவனின் பழிவுணர்ச்சி இப்போதும் அவனுள் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது.
அந்த வேள்வி,தன்னவள் அனுபவித்த கொடுமையை நேரில் கண்டப்பிறகு இன்னும் அதிகரிக்கவே செய்தது.
முன்பு சிவராமன் மட்டுமே அவனிற்கு எதிரியாக இருந்தான்.
ஆனால் இப்போது முகிழ்மதி தவிர்த்து அனைவரையும் வஞ்சம் தீர்த்திடவே உத்தேசித்திருந்தான் ரத்தினவேல் ரகுநாத பூபதி.
சந்திரமதி உட்பட அவனுடைய படலத்தில் இடம்பெற்றிருந்தாள்.
அதற்கான திட்டமிடலையும் அன்றே வகுக்க தொடங்கியிருந்தான்,முகிழ்மதியின் மூர்க்கன்.
சிறிது நேரம் கழித்து அறையை திறந்துக்கொண்டு வெளியே வந்த ரத்தினவேலை எதிர் கொண்டார்கள் இரு குடும்பத்தினரும்!
அவர்கள் அனைவரும் இப்போது தான் கோவிலிருந்து வந்திருந்தார்கள் போலும்.
அவனை கண்டவுடன் கண்ணில் வராத நீரை துடைத்தவாறே “ஐய்யோ மாப்பிள்ளை…என் பொண்ணு இப்போ எப்படி இருக்கா?” என போலியாக நடித்துக்கொண்டு முன்னே வந்த விஜயலட்சுமியை அவன் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
அசிங்கத்தை போல் அவரை ஒதுக்கிவிட்டு நேரே தனது பாட்டியை நோக்கி நடந்தான் ரத்தினவேல்.
அவனது செயலில் முகம் கறுத்தாலும் தன்னை சமாளித்து “அம்மாடி முகிழு” என நடித்துக்கொண்டே அவனறைக்குள் நுழையப்போனவரை வேகமாக தடுத்து நிறுத்தியிருந்தான் ஜித்தேந்திரன்.
அவனோ “ஆன்ட்டி” என ஒரு மார்க்கமாக சிரித்தவாறே கடிகாரத்தை தூக்கி காட்டியதும் அவரோ பயத்தில் பின்வாங்கினார்.
அதற்கு மேலும் அவருக்கு உள்ளே செல்லும் துணிச்சல் இருக்குமா என்ன?
‘நாசமா போனவனுங்க…கல்யாணத்துக்கு முன்னாடியே நெருங்கவிடமாட்டானுங்க…இப்போ மட்டும் விடவா போறானுங்க…உங்களையெல்லாம் அப்புறம் பார்த்துக்கிறேன்டா’ என வெஞ்சினத்துடன் அவர் தற்போது ஒதுங்கிக் கொண்டார்.
இதையெல்லாம் கவனித்த ரத்தினவேலோ தமயந்தியிடம் “தமி நீ போய் அண்ணி கூடவே இரு” என கண்ணை காட்டி அவளை அனுப்பியிருந்தான்.
அவன் கண்ணசைவிலே காட்டிய எச்சரிக்கையை புரிந்த தமயந்தியும் “சரி அண்ணா” என்றவாறு அவனறைக்குள் சென்றிருந்தாள்.
அவள் சென்றதும் “பாட்டி நாம்ப எத்தனை மணிக்கு இங்கிருந்து கிளம்பணும்?” என்று அவன் கேட்க,
அவரோ “ஏன் கண்ணா என்னாச்சு புள்ளை இப்போ எப்படியிருக்கு?நல்லாயிருக்கு தானே” என கவலையுடன் விசாரித்தார்.
அவருக்கு இருக்கும் அன்பும் அக்கறையும் கூட அவளது பிறப்பிற்கு காரணமான தகப்பனிற்கு இல்லை.
மூன்றாம் மனிதர் போன்று ஒதுங்கியே நின்றிருந்தார்.
“ஸ்ட்ரெஸ் தான் பாட்டி…வேற ஒண்ணுமில்லை…கொஞ்ச நேரம் தூங்கி எழட்டும்…சரியாகிடும்” என பதிலளித்தான்.
“அப்போ சரிப்பா…புள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும்…அவ எழுந்ததும் எப்போ கிளம்பிறதுன்னு பார்க்கலாம்” என்றார் பெரியவர்.
வீட்டின் மூத்தவரே பதில் கூறியதற்கு பிறகு யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.
அவர்களிடத்தில் வேறொரு வீட்டினராக இருந்திருந்தால் முகிழ்மதி மயங்கி விழுந்ததை அபசகுணமாக கருதியிருப்பார்கள்.
அவளின் புகுந்த வீட்டு ஆட்கள் வெளியே முரட்டுத்தனமாக இருந்தாலும் தங்கமான மனிதர்கள்.
அதனால் அவளின் நிலைமையறிந்து தன்மையாக நடந்துக்கொண்டார்கள்.
வீர் இறுகிய முகத்துடன் நின்றிருப்பதை பார்த்து “ஷீ இஸ் ஃபைன்…நீ வா…உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என நண்பனை அங்கிருந்து கையோடு அழைத்து சென்றான் ரத்தினவேல்.
முகிழ்மதியை தங்கையின் பொறுப்பில் விட்டதினால் அவன் எந்தவொரு கவலையுமின்றி சகஜமாகியிருந்தான்.
விஜயலட்சுமியோ பல் பிடுங்கிய பாம்பு போல் ஜித்தேந்திரனை மீறி உள்ளே செல்ல முடியாமல் ஆத்திரத்துடன் கீழே சென்றுவிட்டார்.
அவர் கீழே சென்றப்பிறகே ஜித்தேந்திரன் தனது பாட்டியிடம் தனிமையில் சந்தித்து பேசினான்.
“பாட்டி இந்த சந்திரமதியை தப்பிக்க வைச்சது யாரா இருக்கும்?காவலுக்கு நின்ன நம்ப ஆளுங்களையும் யாரோ அடிச்சு போட்டிருக்காங்க…அவனுங்க எல்லாம் இப்போ ஹாஸ்பெட்டல்ல தான் இருக்கானுங்கனு நியூஸ் வந்துச்சு” என்றவனின் முகம் வெகு தீவிரமாக இருந்தது.
வழக்கமாக அவன் முகத்தில் இருக்கும் விளையாட்டுத்தனம் முற்றிலும் விலகியிருந்தது.
இப்போது பாட்டியின் முகத்தில் சினம் கொப்பளித்தது.
அவரோ “நம்ப ஆளுங்க மேலே கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கு?” என உச்சக்கட்ட ஆத்திரத்துடன் சீற,
“ஒரு வேளை அண்ணா வா இருக்குமோ?” என அவன் சந்தேகமாக வினவ,
பாட்டியோ மறுப்பாக தலையசைத்து “அவனில்லை சின்னவனே…அவன் தான் கல்யாணம் முடிஞ்சவுடனே சந்திரமதி இங்க இருக்கணும்னு பொறுப்பை நம்பகிட்ட ஒப்படைச்சிட்டானே…அப்புறம் அவன் எதுக்கு தலையிடப்போறான்” என சமயோசிதமாக யோசித்து கூற,
அவனும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்து “நீங்க சொல்லறதும் பாய்ண்ட் தான் பாட்டி” என்றவன்,
சட்டென சுருங்கிய புருவத்துடன் “அப்போ வேற யாரா இருக்கும்?” என குழப்பமாக கேட்டான்.
அவரோ தீட்சண்ய முகத்துடன் “சரி விடு சின்னவனே…யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் மாட்டிப்பான்….பூபதிக்கு இந்நேரம் நியூஸ் போயிருக்கும்…அவன் பார்த்துப்பான் விடு…நீ நம்ப ஆளுங்களுக்கு நல்ல ஹாஸ்பெட்டல்ல வைச்சு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு பண்ணு” என ஆணைப்பிறப்பிக்க,
பாட்டி சொல்லை தட்டாத பேரனாய் “சரி” என்றான் ஜித்தேந்திரன்.
அவர்கள் எண்ணியது போலவே ரத்தினவேல் அதை பற்றி தான் வீரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் தீவிர உரையாடலில் இருந்தார்கள்.
அவர்களுக்கும் அந்த அனாமதேயன் யார் என்பது புரியாத புதிராக இருந்தன.
********
முகிழ்மதி கண்விழிக்கும் போது மாலை நான்கை தொட்டிருந்தது.
அவள் கண்திறக்கும் போதே “அம்மா” என்ற அலறலுடன் தான் எழுந்தாள்.
“அண்ணி ரிலாக்ஸ்…ரிலாக்ஸ்” என தமயந்தி வந்து அவளை சமாதானம் செய்தாள்.
அவளை பார்த்ததும் அவள் திருதிருவென விழித்தாள்.
அவளிற்கு ஒரு கணம் காலையில் நடந்த நிகழ்வு எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை.
ஆனால் அறையை சுற்றி விழிகளை சுழற்றியவளின் பார்வை இறுதியாக வந்து நிலைத்தது அவளின் மாங்கல்யத்தில்!
சில நிமிடங்கள் அதிலே அவளின் பார்வை நிலைக்குத்தியிருந்தன.
பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ தலையுயர்த்திய பெண்ணவள் “வீர் அண்ணா…அவரு…” என தயக்கமாய் இழுத்தாள்.
உடனே மென்மையாக புன்னகைத்த தமயந்தி “அவங்களாம் கீழே இருக்காங்க…நான் அவங்களை வர சொல்லவா?” என கேட்க,
“இல்லை வேணாம்…காணும்னு கேட்டேன்…” என சிரிக்க முயன்றவளின் இதழ்கள் விரிய மறுத்தன.
போலியாக சிரிக்க முயற்சித்தவளை அறிந்த தமயந்தி “பரவாயில்லை அண்ணி…நீங்க கஷ்டப்பட்டு சிரிக்க வேணாம்…உங்க மனசுலே ஓடறது எனக்கு புரியுது” என அவளிற்கு ஆதரவாக பேசியவள்,
“நீங்க எழுந்தவுடனே இந்த பழத்தை கொடுக்க சொல்லி அண்ணா சொன்னாரு…” என்றவாறே அவள் ஆப்பிளை வெட்டி செல்ல,
“இல்லை வேணாம்கா…முதல்ல நான் பாத்ரூம்…” என சொல்ல முடியாமல் அவள் தடுமாறினாள்.
“அதுவும் சரி தான்…இந்த புடவை ரொம்ப கசகசன்னு இருக்கும்…நீங்க முதல்ல இந்த புடவையை மாத்திக்கோங்க…இருங்க…உங்களுக்காக அண்ணா முன்னாடியே புடவை கொடுத்துவிட்டிருந்தாரு…” என்றவள் எழுந்து சென்று வெங்காய சருகு நிறத்தில் பட்டுப்புடவையை எடுத்து வந்து கொடுத்தாள்.
தனக்காக கணவன் ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படும் விதம் முகிழ்மதியின் இதயத்தை அசைத்து பார்த்தன.
அவள் கட்டியிருக்கும் சேலையை போல் அல்லாமல் மிகவும் மிருதுவாக இருந்த புடவையை கையில் வாங்கிய முகிழ்மதி “தேங்க்ஸ்” என்றாள்.
அவளோ சிரித்துக்கொண்டே “அட அண்ணி தேங்க்ஸ் எனக்கு எதுக்கு?நீங்க அண்ணாவுக்கு தான் சொல்லணும்…எங்க கஞ்சிசட்டைக்குள்ள ஒரு ரொமென்டிக் பாய் இருக்கிற விஷயமே எங்களுக்கு இன்னைக்கு தான் தெரியும்…நீங்க இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் தெரியுமா?க்யூட் கப்பிள்” என படபடவென பேசியவளின் வார்த்தையை கேட்ட முகிழ்மதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
ரத்தினவேலின் கனிவும் அன்பும் அவளிற்கும் தெரியும் தான்!
ஆனால் இப்போதும் அவன் தமக்கைக்கு பார்த்த மணமகன் என்ற எண்ணம் அவளின் மனதில் நீங்காமல் இருந்தது.
அதனால் அவள் கூறியதை கேட்டு பாவையவளால் மகிழ்ச்சியுற முடியவில்லை.
அவள் சங்கடமாக உணர்வதை அறிந்த தமயந்தி சட்டென பேச்சை நிறுத்திவிட்டு “சரி அண்ணி…நீங்க போய் டிரஸ் சேன்ச் பண்ணிட்டு வாங்க…கால்ல காயம் வேற இருக்குனு சொன்னாங்க…பார்த்து குளிங்க அண்ணி” என அவளே முகிழ்மதியை அழைத்து சென்று குளியலறையில் விட்டு வந்தாள்.
காயத்தில் நீர் படாத வண்ணம் நிதானமாக குளித்துவிட்டு வெளியே வந்த முகிழ்மதியை மிதமான ஒப்பனையுடன் தயார் செய்தாள் தமயந்தி.
“நானே பண்ணிக்கிறேன் அக்கா” என முகிழ்மதி மெதுவாக சொல்லிப்பார்க்க,
“அட பரவாயில்லை விடுங்க அண்ணி…நாளைக்கு எனக்கு கல்யாணம்னா நீங்க இதையெல்லாம் பண்ணி விடமாட்டிங்களா என்ன?” என கண்சிமிட்டி கேட்டவளின் மனதில் வீரின் முகம் மின்னி மறைந்தது.
வீருக்கு தங்கை என்றால் அவளிற்கு நாத்தனாராயிற்றே?
அதனால் இப்போதே எதிர்கால உறவு முறையை எண்ணி உவகைக் கொண்டது அந்த பெண்ணின் மனம்!
ஆனால் அவளது சொல்லின் அர்த்தம் அறியாத மங்கையோ மௌனமாகவே இருந்தாள்.
சட்டென அவளால் நடந்த சம்பவங்களிலிருந்து மீள முடியவில்லை.
ஏனோ தன் கணவன் கொடுத்த வாக்கு அவளின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்ததால் அவள் ஓரளவு அமைதியாக இருந்தாள்.
இல்லையென்றால்,அவள் சஞ்சலத்தில் தவித்து கண்ணீரிலே கரைந்துப்போயிருப்பாள்.
அவள் ஆயுத்தமாகி முடிவதற்கும் அறையின் கதவை தட்டிவிட்டு ரத்தினவேல் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
முகிழ்மதி 34:
அவன் வரும் அரவம் உணர்ந்து முகிழ்மதி அவசரமாக எழுந்து நின்றாள்.
உள்ளே நுழைந்த ரத்தினவேலுவும் பட்டாடையை களைந்துவிட்டு எளிமையான வெண்ணிற வேட்டி சட்டையை அணிந்திருந்தான்.
பெரிதாக எவ்வித ஒப்பனையும் இல்லாமலே தேவதையாக ஜொலித்த மனையாளை தன்னை மீறி ரசித்திருந்த ரத்தினவேல் “லட்டு ரெடியா?கிளம்பலாமா?” என தங்கையிடம் கேட்டான்.
கேள்வி தங்கையிடம் இருந்தாலும் அவனின் பார்வை என்னவோ மனைவியிடமே இருந்தது.
ஏனோ அவளிடமிருந்து அவனது விழிகளை அகற்றவே முடியவில்லை.
தமயந்தி அதனை உணர்ந்து இதழ்கடித்து சிரித்தவாறே “ஹான் போகலாம் அண்ணா…இங்கயிருக்கிற உங்க திங்க்ஸ் எல்லாம் மனோஜ் அண்ணா பேக் பண்ணி எடுத்துக்கிட்டாங்க…பட் அண்ணி இரண்டே பீஸ் ஆப்பிள் தான் சாப்பிட்டாங்க…நீங்க ஏதாவது சாப்பிட வைக்கிறதுனா வைங்க…நானும் போய் ரெடியாகறேன்” என அனைத்தையும் பொறுப்பாக கூறியவள்,கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.
அவள் அங்கிருந்து சென்றதும் அவளும் அவனும் மட்டுமே அவ்வறையில் இருந்தனர்.
இதற்கு முன்பு கூட பலமுறை அவனுடன் தனிமையில் இருந்திருக்கிறாள்.
இதுநாள் வரை அவளிற்கு எவ்வித உணர்வும் தோன்றியதில்லை.
ஆனால் முதல் முறையாய் முகிழ்மதியின் நெஞ்சம் ஏனோ படபடக்க,அவனை ஒரு வித பதட்டத்துடன் ஏறிட்டாள்.
அவளின் தவிப்பை அறிந்து அருகே வந்த ரத்தினவேல் “முகிழ்” என்றழைத்தவாறே அவளின் தோள் பற்றி தன்னை நோக்கி திருப்பினான்.
அவனின் தீண்டல் அவளிற்கு ஒரு மாதிரியான உணர்வை கொடுத்தன.
அவளிற்கோ தொண்டை குழியிலிருந்து வார்த்தையே வெளியில் வரவில்லை.
அதேசமயம் தலையுயர்த்தி அவனை காணாதவளின் கருவிழிகள் இங்குமங்கும் அலைமோதின.
இப்போது “முகிழ் என்னை பாரு” என சற்றே அழுத்தமாக அவன் கூறியதும்,அவள் விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.
அப்போதும் அவளின் விழியில் ஒரு அச்சம் ஊடுருவியிருந்தது.
மற்றவரின் விழியில் தன் மீதான பயத்தை காண வேட்கை கொண்டவன் அவன்.
ஆனால் தன்னவளின் விழிகளில் தெரிந்த அச்சம் அவனிற்கு சிறிதும் பிடிக்கவில்லை.
அதனால் அவளின் கன்னத்தை ஒற்றை கையால் பற்றிய ரத்தினவேல் “முகிழ்மதி ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ…கல்யாணம் வேணும்னா அவசரமா நடந்திருக்கலாம்…பட் உன் விருப்பமில்லாமல் இதுக்கு மேலே எதுவும் நடக்காது…உன்னை எந்த விதத்திலும் நான் ஹார்ட் பண்ண மாட்டேன்…அதே மாதிரி நீயும் எதுக்கெடுத்தாலும் கொஞ்சம் பயப்படறதை நிறுத்திட்டு மனசிலே நினைக்கிறதை வாயை திறந்து பேசு…எல்லா நேரமும் உன் மனசுக்குள்ள புகுந்த பார்க்கிற சக்தி எனக்கு கிடையாது…அதுக்கான நேரமும் எனக்கில்லை…அன்ட் தென் ரத்தினவேல் பொண்டாட்டியா இருக்கிறது சாதாரண விஷயமில்லை…தினம் தினம் கத்தி மேலே நிற்கிற மாதிரி தான் இருக்கும் வாழ்க்கை…ஐ நோ உனக்கு அது கஷ்டமா தான் இருக்கும்…வேற வழியில்லை…இனி எல்லாத்தையும் நீ பழகிக்கணும்…ஆனாலும் உன்னை நான் ரொம்ப சந்தோஷமா வைச்சுப்பேன்…நெக்ஸ்ட்,எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான் உன் பக்கம் தான் நிப்பேன்…அதே மாதிரி நீயும் நிக்கணும்னு நான் எதிர்பார்க்கறேன்…முதல் நாளே இதை நான் சொல்லறது உன்னை பயமுறுத்தயில்லை…இது தான் நான்…உன் புருஷனை முதல் நாளிலிருந்தே நல்லா புரிஞ்சுக்கணும்னு தான் சொல்லறேன்” என நிறுத்தி நிதானமாக தன்னுடைய உணர்வுகளை அவளிடம் அவன் தெரிவிக்க,
அவளோ எதுவும் பேசாமல் அவனிடம் சிக்கியிருந்த கன்னத்தை பற்றிய கவலையில் இருந்தாள்.
அவனோ அவளின் கன்னம் பற்றியதினால் குவிந்திருந்த சிவந்த அதரங்களை பார்த்துக்கொண்டே “இன்னும் சில விஷயங்கள் இருக்கு…அதை போக போக பேசிக்கலாம்…இதுவரை சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுதா?” என புருவம் உயர்த்தி கேட்க,
அவளோ வாயை திறக்க முடியாமல் “ம்” என தலையாட்டினாள்.
“என்ன புரிஞ்சுது?” என கேட்டவனின் விழிகளோ உதட்டிற்கு மேலிருந்த அவளின் மச்சத்தை பார்வையால் விழுங்கிக்கொண்டிருக்க,
அவனின் பார்வை அவளை என்னவோ செய்தன.
அதனால் சட்டென இமைத்தாழ்த்திய காரிகையவளோ இமைகள் படபடக்க “நீ..ங்க சொல்லறதை கேட்டு நடக்கணும்” என தடுமாற்றத்துடன் பதில் கூற,
அவனோ ‘விளங்கிடும்…நான் அவ்வளவு நேரம் பேசினதிலே இது தான் உனக்கு விளங்குச்சா?’ என சலிப்பாக தலையசைத்தவனை அவளின் மச்சமும் அதரமும் முத்தமிடும் வேட்கையை தூண்டின.
ஆனால் அத்தகைய சூழ்நிலையில் அவளை நெருங்குவதற்கு அவனிற்கு சிறிதும் விருப்பமில்லை.
அதனால் ஒரு ஏக்க பெருமூச்சுடன் அவளின் கன்னத்தை விடுவித்தான் அவன்.
அவளோ அவன் தன் கன்னத்திற்கு விடுதலை தந்ததும் ‘ஹப்பாடா’ என்பது போல் நிம்மதி பெருமூச்சு விடுவதை கண்ட ரத்தினவேலின் இதழ்கள் இலேசாக விரிந்தன.
இப்போது தனது தாடி மீசையை வருடிய ரத்தினவேல் “ஏன் எதுவுமே சாப்பிடலையாம்?இரண்டு பீஸ் ஆப்பிள் போதுமா உனக்கு?” என அதட்டி கேட்க,
தமக்கையின் நினைவில் இருந்தவளிற்கு தொண்டை குழியில் உணவு இறங்க மறுத்தது.
அதன் பொருட்டே அவளால் உணவை உட்கொள்ள முடியவில்லை.
சகோதரியின் நலன் அறிந்த பிறகே சாப்பிட முடியும் என்ற நிலை அவளிற்கு!
அதனால் “இல்லை பசிக்கலை” என்றாள் தலைக்குனிந்து.
அதில் கடுப்பான ரத்தினவேல் “ப்ச் என்ன பசிக்கலை…நேத்து நைட் ஜுஸ் குடிச்சது…அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சாப்பிடலை…இப்போ கிரேப் ஜுஸ் எடுத்திட்டு வர சொல்லியிருக்கேன்…முதல்ல அதை குடி” என ஆணையிட,
அவளால் அவனை மீற முடியவில்லை.
மீறும் துணிச்சல் அவளிற்கு இல்லை.
சில நிமிடங்களில் ஒரு வேலையாள் பழச்சாறை கொண்டு வந்து கொடுத்தான்.
அவன் கொண்டு வந்த தட்டில் இரண்டு குவளை இருப்பதை கவனித்து “எதுக்கு இரண்டு?” என புரியாமல் அவன் வினவ,
அவனோ “அது வந்துங்கய்யா…வீர் ஐயா தான் நீங்களும் நைட்டிலிருந்து எதுவும் சாப்பிடலைனு கொடுத்துவிட்டாரு” என பயத்துடனே கூற,
உடனே முகிழ்மதி திரும்பி அவனை பார்க்க,அவனோ சங்கடமாக தொண்டையை செருமிவிட்டு “சரி கொடுத்திட்டு போ” என தட்டை வாங்கிக்கொண்டான்.
அவன் சென்றதும் குவளையை அவளிடம் நீட்ட “நீங்களும் நைட்டிலிருந்து எதுவும் சாப்பிடலையா?” என பாவமாக கேட்டாள்.
அவனோ “ம்” என்றானே ஒழிய எதுவும் பேசவில்லை.
“ஏன்?” என அவள் அடுத்த கேள்விக்கணையை கொடுக்க,
அவளை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “தெரியலை…நேத்து நைட்டிலிருந்தே எனக்கு சாப்பிடணும்ன்ற எண்ணமே வரலை…” என்றவன் தன் கையில் ஒரு பழச்சாறை எடுத்துக்கொண்டு நீள்விரிக்கையில் அமர்ந்தான்.
அவன் மட்டுமில்லை…வீரும் கூட இதுவரை எதுவும் உண்டிருக்கவில்லை.
இருவருக்கும் அவளை அப்படியொரு நிலையில் பார்த்திலிருந்து அவர்களுக்கு உணவை பற்றிய எண்ணமே வரவில்லை.
அவள் மட்டுமே அவர்களுக்கு இன்றியமையாதவளாக இருந்தாள் என்றால் மிகையல்ல.
“வீரும் எதுவும் சாப்பிடலை” என தகவல் கூறிய ரத்தினவேல் பழச்சாறை அருந்த ஆரம்பித்தான்.
முகிழ்மதிக்கு அவர்கள் இருவரும் உணவருந்தாததின் காரணம் புரிய,அவளிற்கு எப்படி உணர்வதென்றே புரியவில்லை.
தன் மீது நிபந்தனையில்லாத வகையில் அன்பு செலுத்தக்கூடிய இரண்டு நபர்கள் கிடைத்ததை பற்றி எண்ணும் போதே அவளின் நெஞ்சம் ஒரு பூரிப்பு!
அதிலும், தனக்காக உருகு பவர்களுக்கு என்ன கைம்மாறு செய்வது என விழிகள் பனிக்க அவள் எண்ணும் போதே “நீ எதுவும் செய்ய வேண்டாம்…இப்போதைக்கு ஜூஸ் மட்டும் குடி” என அவளின் எண்ணங்களுக்கு பதிலளித்திருந்தான் பாவையவளின் நாயகன்.
அவளோ ‘எப்படி?’ என ஆச்சரியமாக விழி விரித்து அவனை ஏறிட,
அவனோ காலியான பழச்சாறு குவளையை முன்னால் இருந்த அலங்கார மேசையில் வைத்துவிட்டு ”சீக்கிரம் குடி…ஐந்து மணிக்குள்ள கிளம்பணும்னு சொன்னாங்க பாட்டி…கிளம்பு” என்றான் சுவாதீனமாக.
அவளோ வேறுவழியின்றி பழச்சாறை மெதுவாக அருந்தி முடித்தாள்.
அவளிடமிருந்து குவளையை வாங்கி மேசையில் வைத்த ரத்தினவேல் “உன்னாலே நடக்க முடியுமா?” என அவளின் கால்களை பார்த்துவிட்டு அவன் கேட்க,
அவள் எதுவும் பேசாமல் மௌனம் காக்கவும்,
“உன்னாலே முடியலைனா சொல்லு…நான்…” என அவன் ஓரடி முன்னே எடுத்து வைத்ததும் வேகமாக நிமிர்ந்த பெண்ணவள் ‘எங்கு அவன் தன்னை தூக்கிடுவானே?’ என்ற பதட்டத்தில் “இல்லை…இல்லை நானே நடந்துவர்றேன்” என்றாள் அவசரமாக.
அவளின் பதட்டத்தை கண்டு இலேசாக முறுவலித்து மீசையை முறுக்கிய ஆடவன் “சரி வா” என அவளின் கைப்பற்றி கீழே அழைத்து சென்றான்.
மகள் கீழிறங்கி வந்ததும் அவளிடம் பேசலாம் என்று எண்ணியிருந்த விஜயலட்சுமியின் ஆசையில் மண் விழுந்தது.
கண்கொத்தி பாம்பு போல் ஜித்தேந்திரனும் வீரும் அவரையே விழிகளால் எரித்துக்கொண்டிருக்கவும் அவருக்கு அவளை நெருங்கவே அச்சமாகயிருந்தது.
அதிலும்,ரத்தினவேலின் கண்ணிலிருந்த உஷ்ணம் அவரை எட்டி நிறுத்தியது.
‘சாவடிக்கிறானுங்க…இன்னும் இரண்டு நாள் ஆகட்டும் அவகிட்ட பேசிக்கலாம்’ என்று எண்ணியவர் அறியவில்லை.
இரண்டு நாள் கழித்து அவர் பேச கூடிய நிலையிலே இருக்கமாட்டார் என்று!
மேடையில் இருவரையும் அமர வைத்து சில சடங்குகள் செய்தப்பிறகு மணமக்கள் இருவரையும் தங்கள் கிராமத்து பங்களாவிற்கு அழைத்து சென்றனர்.
கீழே வந்தவளின் விழிகள் முதலில் தேடியது என்னவோ தமக்கையை தான்!
அவளை காணாமல் ரத்தினவேலின் முகத்தை அவள் விடைக்காக பார்க்க,அதையறிந்தாற் போன்று “அவ உங்க சென்னை வீட்டுக்கு போயிட்டாள்” என பதில் கொடுத்தான்.
“ஓ…” என்றவளின் முகம் சோர்ந்துப்போனது.
உளச்சோர்வுடனே அந்த வீட்டின் மருமகளாக காலடி எடுத்து வைத்தாள் முகிழ்மதி.
மண்டபத்தில் தாய் தந்தையரிடம் விடைப் பெறும் போது கூட தன்னை பற்றி கவலையுறாமல் “அக்காவை பார்த்துக்கோங்கம்மா” என்று கலங்கிய குரலில் கூற,
ஆனால் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் “அவ கிடக்கிறாள் வீணாப்போனவ…அவ பேச்சு இப்போ எதுக்கு?நீ புகுந்த வீட்டுக்கு போய் அம்மாவோட மானத்தை காப்பாத்தணும்…அம்மாவுக்கு தினமும் மறக்காமல் கால் பண்ணுடா செல்லம்” என கட்டியணைத்துக்கொள்ள,
பாவையவளோ தாயின் பேச்சில் திகைப்புற்றாள்.
அவளது வாழ்நாளில் ஒரு முறை கூட விஜயலட்சுமி சகோதரியை அவமதிப்பாக பேசி கேட்டதில்லை.
இப்போது தாயின் வாயிலிருந்து வந்த சொற்களை கேட்டு அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அவளின் தந்தையோ பெரிதாக எவ்வித ஆரவாரமின்றி வழக்கம் போல் “நல்லாயிரு” என்றதோடு பேச்சை முடித்துக்கொண்டார்.
ஜித்தேந்திரனோ “வீர் அண்ணா…பச்சோந்தி பச்சோந்தினு ஒரு உயிரினம் இருக்கு தெரியுமா? இன்னைக்கு தான் நான் அதை நேரடியா பார்க்கறேன்” என சாடையாக விஜயலட்சுமியை குத்த,
அவரின் முகம் சட்டென மாறிவிட்டது.
வீருக்கும் அதே எண்ணம் தான்!
அதனால் அவரை வெறுப்புடன் நோக்கினான் அவன்.
வானதியோ ஒன்றும் புரியாமல் “ஜித்து இங்க என்ன நடந்திட்டு இருக்கு…நீ என்ன உளறிட்டு இருக்கே?வாயை மூடு” என அதட்ட,
அவனோ குரலை தாழ்த்தி “ஏதே நான் உளருறனா?அது சரி…புரிய வேண்டியவங்களுக்கு நல்லா புரியும்” என குத்தலாக சொல்லிவிட்டு தனது வாகன சாவியை கையில் சுழற்றியப்படி வெளியேறினான்.
மகள் அங்கிருந்து செல்லும் போது பிழிய பிழிய அழுத விஜயலட்சுமியை பார்த்த அனைவருக்கும் கடுப்பாக வந்தது.
அங்கிருந்த பலருக்கும் அது ஒரு போலியான கண்ணீர் என்பது நன்கு தெரிந்தது.
அவள் மகிழுந்தில் ஏறும் வரையிலுமே “கண்ணு பார்த்து இரு…நீ இல்லாமல் நான் எப்படி இருப்பனோ தெரியலை..” என ஒப்பாரி வைத்தவரை பார்த்த முகிழ்மதிக்கே விசித்திரமாக இருந்தது.
அவளும் அவருடன் இணைந்து கண்ணீர் சிந்துவாள் என அவளின் கணவன் எண்ணியதற்கு மாறாக அவளோ “வர்றேன்மா…வர்றேன்ப்பா…அக்காவை பார்த்துக்கோங்க” என்றதோடு விடைப்பெற்றிருந்தாள்.
தற்போது அவளின் ஒரே ஒரு கவலையெல்லாம் தாய் அவளிடம் கடுமையாக நடந்துக்கொள்வரோ என்பதில் மட்டும் தான்!
அதை மெய்ப்பிப்பது போல் அவளின் வீட்டில் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தேறின.
அந்த கலகத்தை ஆரம்பித்து வைத்தவனே தனது மணாளன் என்ற விடயம் மட்டும் பாவையவள் அறியவில்லை.
முகிழ்மதி 35:

இருவரும் வாகனத்தில் ஏறிய பிறகு மகிழுந்து புறப்பட ஆயுத்தமானது.
முகிழ்மதியின் முகம் சஞ்சலத்தில் தொய்ந்து இருந்தது.
அந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தது என்னவோ வீர் தான்!
அதைக்கூட அறியாமல் தனக்குள்ளே மூழ்கியிருந்தவளை கலைத்தது வீரின் குரல்!
“ஆர் யூ ஓகே டால்?” என தீனமான குரல் ஒன்று கேட்டதும் நடப்பிற்கு வந்த முகிழ்மதி அப்போது தான் வீரை ஏறிட்டாள்.
தாயிடம் விடைப்பெறும் போது கூட கலங்காமல் வந்த பெண்ணவளின் விழிகள் அவனை கண்டதும் தானாக கலங்க துடித்தன.
உடனே கலங்கிய குரலில்
“வீர் அண்ணா..” என்றாள் இதழ்கள் துடிக்க…
அதனை கவனித்த ரத்தினவேல் இருவரும் மீண்டும் பாசமலர் நாடகத்தை அரங்கேற்றி விடுவார்களோ என்று கருதி “ம்க்கும்” என தொண்டையை செருமி அவளின் கரம் பற்றி அழுத்தியிருந்தான்.
அவள் மெதுவாக அவனை நோக்கி திரும்ப “உன்கிட்ட என்ன சொன்னேன்” என அவளின் விழிகளை அழுத்தமாக பார்த்து அவன் வினவ,
அதனை புரிந்துக்கொண்ட முகிழ்மதி “சா..ரி” என மெல்லிய குரலில் கூறியப்படி கண்ணீரை விரலால் துடைத்தெறிந்தாள்.
“குட்” என அவளை பார்த்து அவன் மெச்சிக்கொண்டான்.
ஆனால் தங்கையை அவன் மிரட்டியது பொறுக்காத வீரோ “ஏன் பூபதி டாலை மிரட்டறே?” என தங்கைக்கு ஆதரவாக பேச ஆரம்பிக்க,
அதில் கடுப்பாகிய ரத்தினவேல் “டேய் உன் தங்கச்சிய நான் ஒண்ணும் பண்ணலைடா…அழாதேனு மட்டும் தான் சொன்னேன்” என்றான் கடுப்பை விழுங்கிய குரலில்.
அதை நம்பாத வீர் “அப்படியாம்மா?” என கண்ணாடியின் வழியே அவளை பரிவுடன் நோக்கியப்படி கேட்க,
அவளோ ரத்தினவேலை மிரட்சியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு வீரிடம் திரும்பியவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.
அவனோ நண்பனை நம்பாமல் கூர்ந்து பார்த்துவிட்டு “நிஜம் தானாம்மா…நீ இங்க யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை…எதுவா இருந்தாலும் அண்ணாகிட்ட சொல்லு…நான் பார்த்துக்கறேன்” என தங்கையிடம் அழுத்தி விசாரிக்க,
அவளோ நண்பர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு “அப்படி எதுவுமில்லைண்ணா…அவர் அழ வேணாம்னு தான் சொன்னாரு” என்றாள் சன்னமாகிவிட்ட குரலில்.
ரத்தினவேலிற்கு இவர்களது நாடகத்தை காண எரிச்சலாக இருந்தது.
அதையறியாத வீரோ அவளை விழிகளால் வருடி “அப்போ ஓகே…இப்போ இல்லைனா கூட பின்னாடி உனக்கொரு பிரச்சனைனா முதல்ல உனக்கு ஞாபகம் வருது அண்ணானா தான் இருக்கணும்…சரியா?” என சிறு குழந்தையிடம் பேசுவது போல் கனிவுடன் பேச,
அதில் ரத்தினவேலின் பொறுமை காற்றில் பறந்தது.
“வீர் கொஞ்சம் உங்க பாசமலர் நாடகத்தை நிறுத்திவிட்டு வண்டிய சீக்கிரம் ஓட்டறீயா?” என தலையை பிடித்துக்கொண்டு அவன் கேட்க,
“எங்க அண்ணா தங்கச்சி பாசத்தை பார்த்து உனக்கு பொறாமைடா…இல்லைம்மா?” என தங்கச்சியையும் தனது பேச்சில் இழுக்க அவளின் இதழில் சிறு கீற்றாய் ஒரு புன்னகை!
அவள் பதிலேதும் பேசவில்லை என்றாலும் தமையனின் பேச்சில் அவளின் மனம் இலேசாகியிருந்தது.
ரத்தினவேலோ ஒரு கட்டத்தில் ‘இதுங்களோட முடியலை’ என சலித்துக்கொண்டு தனது அலைப்பேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்திருந்தான்.
அச்சமயம் திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாய் “அண்ணா நீங்களும் நேத்திலிருந்து எதுவும் சாப்பிடலைனு இவரு சொன்னாரு…இப்போ ஏதாவது சாப்பிட்டிங்களா?” என கவலை தொனிக்கும் குரலில் விசாரிக்க,
அவனோ மென்மையாக புன்னகைத்து “உன் புருஷன் நான் சாப்பிடலைனா விடுவாராம்மா?இப்போ வரதுக்கு முன்னாடி ஜூஸ் ஒண்ணு வர வைச்சு குடிக்க வைச்சான்மா” என நண்பனை பற்றிய பெருமிதத்தோடு சொல்ல,
பாவையவளோ “ஓ..” என இதழை குவித்து கூறியவள்,தனது கணவனை திரும்பி ஏறிட்டாள்.
பார்க்க முரடன் போல் தெரிந்தாலும் ஒவ்வொருவரை பற்றியும் அவன் சிந்தித்து செயல்படும் விதம் அவளை ஈர்த்தது.
முதல் முறை அவனை பற்றி அவள் கேள்விப்பட்ட சமயம் மிரண்டதற்கும் இப்போது அவனருகே உரிமையாய் அவள் அமர்ந்து வருவதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள்!
அதிலும்,அழையா விருந்தாளியாய் அவர்களது முதல் வாகன சந்திப்பு நினைவில் எழ அவனையே அவள் விழி அகற்றாமல் பார்த்திருந்தாள்.
தன்னை மீறி அவனையே சில நிமிடங்கள் வரை அவள் பார்த்திருக்க,அதை உணர்ந்த ரத்தினவேல் சட்டென விழியுயர்த்தி அவளை ஏறிட்டதும் காரிகையவள் மிரண்டுவிட்டாள்.
அவன் கண்டதும் தலையை வேறுப்புறம் திருப்ப கூட தோன்றாமல் பேந்த பேந்த விழித்தவளை பார்த்தவனிற்கு சிரிப்பு தான் வந்தது.
‘இவளை வைச்சிட்டு நான் என்ன செய்யறது?கஷ்டம்’ என தனக்குள்ளே எண்ணிக்கொண்ட ரத்தினவேல் ‘என்ன?’ என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,
அவனது முரட்டு தாடிக்குள் ஒரு புன்சிரிப்பு ஒளிந்திருந்தது.
அதையறியாத பெண்ணவளோ அவனின் பாவனையில் மிரண்டு ‘ஒண்ணுமில்லை’ என்பது போல் தலையசைத்துவிட்டு தலைக்குனிந்துக்கொண்டாள்.
அவளின் இதயம் மட்டும் அதிவேகத்தில் படபடத்தன.
அவளிற்கு ஒரு மாதிரி பதட்டமாக இருப்பதை கவனித்த ரத்தினவேல் “ஈஸி” என்றுவிட்டு வீரிடம் வேறு சில விஷயங்களை பேச ஆரம்பித்தான்.
வீரும் இருவரின் காதல் நாடகத்தை கண்டும் காணாதது போல் தோழனிடம் அரசியல் சம்மந்தமான விடயங்களை உரையாட தொடங்கிவிட்டான்.
அமைதியாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்பது போல் இப்போது மீண்டும் அவளிற்கு தமக்கையின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது.
உடனே அவளின் இயல்பு மறைந்து முகம் சோர்ந்துவிட்டது.
அதை ஓரக்கண்ணால் அவதானித்த ஆடவன் ‘இவளை என்ன தான் செய்யறதோ?’ என கழுத்தை எரிச்சலாக வருடிக்கொண்டான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் அவளிற்கு ஆராத்தி சுற்றி பெண்ணவளை வீட்டிற்குள் அழைத்துக்கொண்டனர் பூபதி வீட்டினர்.
வீட்டிற்குள் அழைத்து சென்று பூஜையறையில் விளக்கேற்றி கடவுளை வணங்க வைத்தனர்.
அனைத்து சடங்குகளையும் செய்யும் போதும் அவளின் இதழ்கள் வலுக்கட்டாயமாக சிரிப்பை பூசியிருந்தன.
அவளிற்கு தான் போலியான சிரிப்பை கொண்டு வருவது கைவந்த கலையாயிற்றே?
ஆனால் அவளின் சிரிப்பு கண்ணை எட்டாததை அங்கிருந்த அனைவரும் கவனித்திருந்தனர்.
இது தமக்கை வாழ வேண்டிய வாழ்க்கை என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சிந்தைக்குள் அப்படியொரு எண்ணம் தோன்றியதும் அவளின் மனம் குற்றவுணர்வில் விம்மியது.
அவளின் மனநிலை அறிந்தாற் போன்று அவளை தனிமையில் விடாமல் யாரேனும் ஒருவர் அவளுடன் பேசிக்கொண்டே இருந்தனர்.
அவளிற்கு கிடைத்த தனிமையில் தன்னுடைய அலைப்பேசியை வாங்கி சகோதரிக்கு அழைத்திருந்தாள்.
ஆனால் எதிர்ப்புறம் அவளின் அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது என்ற தகவலை மட்டுமே கொடுத்தன.
மனைவியின் தவிப்பை கவனித்த ரத்தினவேல் “உன் அக்காவுக்கு கொஞ்சம் டைம் கொடு முகிழ்மதி…நீயும் பெரிய கொலைக்குத்தம் எதுவும் பண்ணலை…சந்தர்ப்ப சூழ்நிலையில் இது நடந்திடுச்சு…அதனாலே கொஞ்சம் ரிலாக்ஸா இரு” என இழுத்துப்பிடித்த பொறுமையுடன் அவளிற்கு அறிவுரை கூறினான்.
அவன் அவளிற்கு அறிவுரை கூறும் போது ஏற்றுக்கொள்பவளின் விழிகள் அவ்வப்போது அலைப்பேசியை பார்த்துக்கொண்டே இருந்தன.
ஒரு சில வேளைகளில் அவளின் நிலை பரிதாபத்தை கொடுத்தாலும்,இன்னும் சில வேளைகளில் கோபத்தை வரவழைக்கவும் தவறவில்லை.
‘இவ சரிப்பட்டு வரமாட்டாள்’ என கடுப்பாக எண்ணிக்கொண்டே வெளியே வந்த ரத்தினவேலை வானதி எதிர்கொண்டார்.
“என்னம்மா?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க,
“பாட்டி ஏதோ உன்கிட்ட பேசணுமாம்…வா பூபதி” என அவனை அவர் அறைக்கு அழைத்து சென்றார்.
அவர் முன்பே அங்கிருந்த நீள்விரிக்கையில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கவாட்டாக போடப்பட்டிருந்த இருக்கைக்கு சென்றான் அவன்.
“சொல்லுங்க பாட்டி” என கணீர் குரலில் கூறியப்படி நீள்விரிக்கையில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனின் முகம் சரியில்லாததை கவனித்தார் காஞ்சனா மாலா.
சட்டென அவரின் நெற்றி சுருங்க “என்ன கண்ணா?ஏதாவது பிரச்சனையா?” என விசாரிக்க,
அவனோ “நத்திங்…நீங்க எதுக்கு கூப்பிட்டிங்க?” என பேச்சை மாற்றிவிட்டான்.
அவனிற்கு தன்னுடைய சொந்த வாழ்வை பற்றி மற்றவரிடம் விவாதிப்பதில் சிறிதும் விருப்பமில்லை.
பேரனின் மனம் அறிந்து அவர் அமைதிகாத்தார்.
ஆனால் இப்போது வாயை திறந்தது அவனின் தாயார்.
“அது வந்து கண்ணா…கல்யாணம் தான் அவசரமா நடந்திடுச்சு…ஆனால்…” என அவர் இழுக்க,
உடனே ரத்தினவேலின் புருவங்கள் இரண்டும் இடுங்கின.
“ஆனால்…” என அழுத்தமாக வினவியவனின் குரலில் கோபம் கொப்பளித்தது.
அவர்கள் பேச வரும் விடயம் அவனிற்கு ஓரளவு புரியவே செய்தன.
அதன் பொருட்டு அவனுள் ஒரு சீற்றம்!
அவரோ மாமியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “கொஞ்ச நாளைக்கு இரண்டு பேரும் சேர்ந்து ஒரே ரூமிலே இருக்க வேண்டாம்…” என அவர் கூறி முடிப்பதற்கு முன்பே “முடியாது” என வெடுக்கென்று எழுந்து நின்றுவிட்டான் ரத்தினவேல்.
அவன் எழுந்து நின்ற வேகத்தை கண்டு அவனின் தாய் வானதியே மிரண்டுவிட்டார்.
“ப்ச் பூபதி…எதுக்கு இப்போ கோபம்…இந்த கல்யாணமே அந்த புள்ளைக்கு ஒரு அதிர்ச்சியா இருக்கும்…இப்போ போய் இரண்டு பேரும் ஒரே ரூமில் எப்படி இருக்க முடியும்?அதுக்காக நான் தான் இந்த யோசனை சொன்னேன்” என அழுத்தம் திருத்தமாக கூறினார் காஞ்சனா மாலா.
அதுவரை தாயை முறைத்துக்கொண்டிருந்த ரத்தினவேல் இப்போது பாட்டியின் புறம் திரும்பி “ஐ நோ வாட் ஐ ஹேவ் டூ டு…நோ ஒன் எல்ஸ் ஷுட் டெல் மீ எனிதிங்” என ஆங்கிலத்தில் அவன் திட்டவட்டமாக கூற,
அவனிற்கு இணையாக அவனை அழுத்தமாக நோக்கிய பாட்டி “வீ நோ தட் டூ பூபதி…பட் யூ ஆல் சோ நீட் டூ அன்டர்ஸ்டேன்ட் தட் கேர்ள் அ லிட்டில் டூ” என்றார் கம்பீரம் குறையாத குரலில்…
உடனே இதழை குவித்து ஊதிய பூபதி “பாட்டி நானும் மனுஷன் தான்…மிருக மில்லை…இந்த நிலைமையில் எப்படி நடக்கணும்னு தெரியும்” என முகத்திலடித்தாற் போன்று கூறிவிட்டு சென்றவனின் முகத்தில் அப்படியொரு சீற்றம்!
அவன் சொற்களில் அனல் தெறித்தன.
“அத்தை என்ன இது?” என வானதி கவலையோடு அவரை பார்க்க,
அவரோ “அவன் இவ்வளவு தூரம் சொல்லறானில்லை…பார்த்து நடந்துப்பான்…எனக்கு என் பேரன் மேலே நம்பிக்கையிருக்கு” என்றவரின் இதழ்களும் பெருமூச்சை வெளியேற்றின.
வீரும் அவ்விடத்தில் இருந்ததினால் நண்பனின் பின்னோடு வெளியேறியவன் “பூபதி எதுக்கு உனக்கு இப்படியொரு கோபம்?உன் நல்லதுக்கு தானே பாட்டி சொல்லறாங்க” என ஆதங்கமாய் வினவ,
சட்டென அவனின் புறம் திரும்பிய பூபதி “என்ன மண்ணாங்கட்டி நல்லது..” என வெடித்தான்.
விட்டிருந்தால் அவன் பார்வையாலே அவனை எரித்திருப்பான் போலும்!
நண்பனின் கோபம் அவனிற்கு பழக்கம் என்பதால் “சரி…சரி கூல் டவுன்டா…என்ன பிரச்சனை உனக்கு?பொறுமையா சொல்லு” என வீர் தன்மையாக கேட்டப்பிறகே ரத்தினவேலின் கோபம் சிறிது மட்டுப்பட்டது.
அவனோ அணிந்திருந்த காப்பை பின்னுக்கு தள்ளிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் “ஏற்கனவே அக்கா பைத்தியத்திலே இருக்கிறவளை எப்படி தெளிய வைக்கிறதுனு தெரியாமல் குழம்பிப்போய் இருக்கேன்…இதிலே தனித்தனி ரூமிலே வேற படுத்தால் விளங்கிடும்” என்றான் சிடுசிடுப்பு குறையாத குரலில்.
இப்போது தோழனின் அச்சம் என்ன என்று அவனிற்கும் புரிய “சரி…சரி நீ சொல்லறது புரியுது…சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்டா” என அவனின் தோளை தொட்டு அமைதியாக்கினான்.
அவனை புரிந்துக்கொண்டு பேசிய நண்பனின் சொல்லில் ஓரளவு சாந்தமுற்றான் ரத்தினவேல்.
ஆனால் அவனது கோபத்தை அதிகரிப்பது போல் முகிழ்மதியின் செயல்கள் ஒவ்வொன்றும் இருந்தன.
அன்றைய இரவு உணவை வேண்டா வெறுப்பாக கொறித்துவிட்டு எழுந்த மனைவியை அவனால் அதட்ட முடியவில்லை.
அனைத்திற்கும் அவளை அதட்டிக்கொண்டே இருந்தால் அவளின் மனம் காயப்படும் என்பதால் சிறிது பொறுத்துப்போனான்.
ஆனால் அன்றைய நாள் இரவு அவளின் பின்னோடு அறைக்குள் நுழைந்தவனை கண்டு அவள் மிரண்டு விழித்தாள்.
அவளின் அச்சத்தை கண்ட ஆடவனின் நிதானம் காற்றில் பறந்தது.
“முகிழ்மதி என்ன பிரச்சனை உனக்கு?உன் இஷ்டமில்லாமல் நான் தான் உன்னை எதுவும் பண்ணமாட்டன்னு சொல்லிட்டனே அப்புறமும் எதுக்கு பயப்படறே நீ?” என அவன் அதட்டலாய் வினவ,
அவளிற்கு பயத்தில் தூக்கிவாரிப்போட்டது.
“அது வந்து…” என எச்சில் கூட்டி விழுங்கியவளை ஒரு கணம் கூர்ந்து நோக்கிய ரத்தினவேல் “நீ தூங்கு” என்றுவிட்டு அறையின் கதவை நோக்கி சென்றான்.
அந்நேரம் “இல்லை…நீங்க இங்கியே இருங்க…” என சத்தமாக அதே சமயம் தவிப்புடன் அவளின் குரல் வெளிவந்தது.
அவளின் குரல் கேட்டு அவளை நோக்கி திரும்பிய ரத்தினவேல் “ஆர் யூ ஷ்யுர்?” என்று கேட்டு பாவையவளின் விழிகளை உற்று நோக்க,
அவளோ சட்டென இமைத்தாழ்த்தி “ம்” என தலையசைத்தாள்.
“முகிழ்” என கனிந்த குரலில் அவன் அழைக்க,
அவனது வாயிலிருந்து ஒவ்வொரு முறை முகிழ் என்ற அழைப்பு வெளிவரும் போதும் அவளின் மேனி சிலிர்த்தது.
அவளின் வாழ்விற்கே புது அர்த்தம் கிடைத்தாற் போன்று ஒரு உணர்வு!
அத்துணை மிருதுவாய் ஒலித்தது அவன் குரல்!
வானத்திலிருந்து பொழியும் மழைச்சாரல் போல் அவள் மனதிற்கு ஒரு இதமளித்தன.
தன்னை தென்றலாய் வருடிய அவன் அழைப்பில் பெண்ணவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அதற்காகவே காத்திருந்த ரத்தினவேல் “உன்கிட்ட நான் மறுபடியும் மறுபடியும் சொல்லமாட்டேன் முகிழ்மதி…என்னை பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை…உன் மனசுலே நினைக்கிறதை என்கிட்ட தைரியமா பேசலாம்…ஏனால் நான் உன்னோட புருஷன்…நீயும் மிசஸ் ரத்தினவேல் ரகுநாத பூபதின்றதை என்னைக்கும் மறக்கக்கூடாது…உன் மனசுலே முதல்ல இதை அழுத்தமா பதிய வை” என ஆழ்ந்து கூறியவன் அவளின் மனதில் ‘அவன் அவளின் கணவன்’ என்ற உணர்வை பசுமரத்தாணி போல் பதிய வைக்க முனைந்தான்.
‘எறும்பு ஊற கல்லும் தேயும்?’ என்பது போல் அவளிற்குள் தன்னை கணவனாக பதிவேற்றம் செய்துக்கொண்டிருந்தான்.
அவனின் முயற்சி புரிந்தும் புரியாத ஒரு நிலையில் மனையாள் நின்றிருப்பதை பார்த்த ரத்தினவேல் “இங்க வா…கால் கட்டை மாத்தி மருந்துப்போடணும்” என அவளை தாண்டி நீள்விரிக்கைக்கு செல்ல,
அவளோ “நானே…” என அவஸ்தையாக கூறி இதழ்கடிக்க,
“உன்னை வான்னு சொன்னேன்…வேற எதுவும் நான் கேட்கலை” என அவன் அழுத்தமாக கூறியதும் வேறு வழியின்றி அவனின் இழுப்பிற்கு சென்றாள்.
எப்போதும் போல் அவளின் பாதங்களை தன் மடியில் வைத்து அவளின் கால்களுக்கு மருந்திட்டான்.
அவள் அணிந்திருந்த சலங்கையை ரசித்துக்கொண்டே மருந்திட்டு முடித்தவன் “கொலுசை வேணா கழட்டிடலாமா?தூங்கும் போது காயத்திலே படப்போகுது” என அவளை நிமிர்ந்து பார்த்து கேட்க,
அவளோ தான் அணிந்திருந்த சலங்கையை பார்த்தவாறே “இல்லை இருக்கட்டும்…காயத்திலே படாத மாதிரி நான் பாத்துக்குவேன்” என்றாள் தணிவாக.
அவளிற்கும் அந்த சலங்கை மிகவும் பிடித்திருந்தது என்பதை அறிந்து அவனும் புன்னகைத்தான்.
அதற்காக அவளிடம் சலுகை எடுத்துக்கொண்டால் சிறியவள் மிரண்டுவிடுவாள் என்பதறிந்து “சரி நான் போய் படுக்கிறேன்…நீயும் டிரஸ் சேன்ச் பண்ணிட்டு தூங்கு…இந்த டிரஸோட படுக்காதே” என ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கூறிவிட்டு கைகளை சுத்தம் செய்துக்கொண்டு,கட்டிலில் ஏறி படுத்துவிட்டான்.
‘அவள் என்ன செய்யவிருக்கிறாள்?’ என்பதை அறிய எண்ணி விழி மூடி உறங்குவது போல் அவளை கவனித்திருந்தான் அவன்.
காரிகையோ கட்டிலில் படுத்திருக்கும் அந்த ஆறடி உயர மனிதனை படபடப்புடன் பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவள்,வேறுவழியின்றி உடையுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவளது கால் சலங்கையின் நாதம் சங்கீதமாய் அவன் காதில் ஒலிக்க,அவனின் மனம் தேனில் ஊறிய கனி போல் தித்தித்தன.
உள்ளே சென்ற பெண்ணவள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பட்டுப்புடவையை களைந்துவிட்டு ஒரு சாதாரண சுரிதாரை அணிந்துக்கொண்டு வந்தாள்.
வெளியே வந்தவளின் பாதங்கள் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு தயங்கின.
எங்கு சென்று படுப்பது என புரியாமல் அவள் விழித்தாலும் மங்கையவளின் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவளின் உரிமையை உரக்க கூறின.
இது தான் தனக்கு விதித்த வாழ்வு என்று அவளிற்கு புரிந்தது.
ஆயினும்,அவளினுள் ஒரு பெரும் தடுமாற்றம்!
பின்பு அவளாகவே மனதில் ஒரு ஊசலாட்டத்துடன் அவனிற்கு அருகே உள்ள இடத்தில் படுத்துக்கொண்டாள்.
அவள் வாழ்நாளில் எந்தவொரு நபருடனும் இதுவரை உறங்கியதில்லை.
முதன்முறையாய் ஒரு நபர்…அதிலும் அவளின் கணவனிற்கு அருகே படுத்திருப்பது அவளின் அடிவயிற்றில் ஒரு குறுகுறுப்பை கொடுத்தன.
அதனால் கட்டிலின் ஓரத்திற்கு நகர்ந்து சென்று படுத்தாள்.
இன்னும் ஒரு சென்டிமீட்டர் நகர்ந்தாலும் அவள் கீழே விழுந்துவிடும் அபாயம்!
அச்சமயம் துடுப்பின்றி தோணியில் தத்தளித்தவளை காப்பாற்றிய துடுப்பு போல் அவளை இரு கரங்கள் சுற்றி வளைத்தன.
ஆனால் அந்த துடுப்பு அவளை காப்பதற்கு பதிலாக அவளிற்கு அச்சத்தை கொடுத்து மூச்சிறைக்க வைத்தன.