முகிழ்மதி 30,31,32

முகிழ்மதி 30:

 

 


 

 

வெளியில் அவளின் நிலையறியாமல் கவலையுடன் நின்றிருந்தான் வீர்.

“நத்திங் டூ வொர்ரி…வா” என அவனின் தோளில் தட்டி அழைத்து சென்றான் ரத்தினவேல்.

அவனை அழைத்துக்கொண்டு பாட்டியின் அறைக்கு சென்ற ரத்தினவேல் “அவளுக்கு கல்யாணத்துக்கு சம்மதம் தான்…நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க” என்றான் எரிச்சலுடன்.

அதைக்கேட்டு விழி விரித்த வீர் “என்னடா சொல்லறே?” என அதிர்ச்சியாக கேட்க,

அவனோ அவனின் கேள்விக்கு பதிலுரைக்காமல் அங்கு ஓரமாக நின்றிருந்த ஜித்தேந்திரனை பார்த்து ‘வா இங்க’ என்பது போல் தன்னருகே வரும்படி அழைத்தான்.

உடனே அவனிற்குள் குளிர் பரவிட ‘ஐய்யோ செத்தோம்…அண்ணனுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு போலே’ என எச்சிலை கூட்டி விழுங்கியவன் “என்ன அண்ணா?” என பவ்யமாக கேட்டு அருகே வந்தான்.

“இரு” என்றவன் கண்ணாலே அங்கிருந்த மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டான்.

அவ்வறையில் பாட்டி,ஜித்தேந்திரன்,வீர் மற்றும் ரத்தினவேல் நால்வர் மட்டுமே இருந்தனர்.

இப்போது சகோதரனிடம் திரும்பிய ரத்தினவேல் “எங்கடா சந்திரமதி?” அவனின் விழிகளை ஊடுருவி  வினவ,

அவனிற்கோ தூக்கிவாரிப்போட்டது.

அவனோ “ஐய்யோ எனக்கு எதுவும் தெரியாது அண்ணா” என பதறிப்போய் கூற,

“பொய்..” என ரத்தினவேலின் முகம் கடுமையாக மாறியதும் “நான் தான்டா பேராண்டி பண்ணேன்…இப்போ என்ன அதுக்கு?” என காஞ்சனா மாலாவிடமிருந்து குரல் வந்தது.

சட்டென அவர் புறம் திரும்பிய வீர் “பாட்டி நீங்களா?” என அதிர்ச்சியோடு வினவினான்.

அவனால் ஒரு நாளைக்குள் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்க முடியும்?

‘இங்க என்ன நடக்குது?’ என சிந்தை கலங்கிப்போய் நின்றிருந்தான் அவன்.

அதற்குள் காஞ்சனா மாலாவோ “ஆமா நான் தான்…வீர் நீ எதுவும் சொல்லலைனா எனக்கு எதுவும் தெரியாது நினைச்சியா?நான் மூணு தலைமுறையா அரசியல் குடும்பத்தில் இருக்கேன்டா…எனக்கு எதை எப்படி செய்யணும்ன்ற சூட்சமம் நல்லாவே தெரியும்” என வீருக்கு தக்கப்பதிலடி கொடுத்தார்.

அவனோ “பாட்டி…” என தயக்கமாய் இழுக்க,

அவரோ அலட்சியமாக ஒற்றை புருவம் உயர்த்தி “ஒண்ணும் பிரச்சனையில்லை…நீ உன் நண்பனுக்கு சப்போர்ட் பண்ணறே…நல்லா பண்ணு…எனக்கு என் சின்ன பேரன் இருக்கான்டா…விடியற்காலை யாரும் எழுந்திருக்கிறது முன்னாடியே ஸ்கெட்ச் போட்டு பொண்ணை தூக்கியாச்சு” என்றார் சர்வ சாதாரணமாக.

ஜித்தேந்திரனோ ‘பத்த வைச்சிட்டியே பரட்டை…அந்த கடத்தல் சம்பவம் இப்போ ரொம்ப முக்கியமா?’ என பயத்துடன் அவன் ரத்தினவேலை பார்க்க,

அவனும் இவனை தான் விழிகளால் உறுத்து விழித்துக்கொண்டிருந்தான்.

‘போச்சு…போச்சு’ என ஜித்தேந்திரன் வேறுப்பக்கம் திரும்பிக்கொள்ள,

அதில் இன்னும் கடுப்பான ரத்தினவேல் “ஏன்டா நீயும் உன் பாட்டியும் கேங்க்ஸ்டரா என்ன?‌ஸ்கெட்ச் போட்டு பொண்ணை தூக்கறாங்க” என சிடுசிடுக்க,

‘அதை ஏன்டா என்னை பார்த்து கேட்கறீங்க?அங்கு போய் கேளுங்க’ என திருதிருவென ஜித்தேந்திரன் விழித்தான்.

காஞ்சனா மாலாவோ பேரனிற்கு இணையான தெனாவெட்டுடன் “என் பேரனோட வாழ்க்கைய காப்பாத்தணும்னா கேங்ஸ்டர் அவதாரம் என்னடா?முடிஞ்சா கொலையும் கூட பண்ணுவேன்…” என்றார்.

“பாட்டி” என உச்சக்கட்ட கோபத்தோடு ரத்தினவேல் பல்லை கடித்தான்.

“டேய் உன் மனசுலே என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்…உனக்கு எது நல்லதோ அதை தான் பண்ணியிருக்கேன்…முதல்ல போய் கல்யாணத்தை முடி…மீதிய அப்புறம் பார்த்துக்கலாம்” என அலட்சியமாக கூறிவிட்டு அவர் இருக்கையிலிருந்து எழுந்துக்கொள்ள,

ரத்தினவேலால் எதுவும் செய்ய முடியாத நிலை!

அவனின் சிந்தனை அனைத்தும் முகிழ்மதியை சுற்றியை வட்டமடித்தன.

வீருக்கு எதுவும் புரியவில்லை.நண்பனது தற்போதைய நிலை பரிதாபத்தை வரவழைத்தது.

“ஏன் பாட்டி இப்படி?” என அவன் பின்னங்கழுத்தை வருடிக்கொண்டே கேட்க,

“வீர் உனக்கு ஒண்ணும் தெரியாது…நீ அமைதியா வேடிக்கை பாரு” என அவனையும் அடக்கிவிட்டார்.

“அண்ணா உங்களுக்கு ஒண்ணும் தெரியலை…நான் முதல்ல இருந்து எல்லாத்தையும் சொல்லறேன்” என ஜித்தேந்திரன் அவனிடம் கதை பேச வர,

சட்டென ரத்தினவேல் திரும்பி பார்த்த பார்வையில் “அண்ணா உங்களுக்கு அப்புறம் சொல்லறேன்” என முணுமுணுத்தவாறு பாட்டியின் அருகே சென்று நின்றுக்கொண்டான்.

“பாட்டி” என அவன் அவரின் கரத்தை சலுகையோடு பற்றிக்கொள்ள,

அதில் ஆத்திரமுற்ற ரத்தினவேல் “எல்லாம் திட்டம் போட்டு பண்ணறீங்க?பண்ணுங்க…பண்ணுங்க…அந்த திட்டத்தையாவது ஒழுங்கா பண்ணி தொலைச்சீங்களா?டிஜிட்டல் காலத்திலே போய் லெட்டர்…கருமம்…அதையும் லூசு மாதிரி எல்லாம் நம்புதுங்க…புதுசா எதுவும் ஐடியா கிடைக்கலையா உங்களுக்கு?” என பல்லை கடித்து அவன் சீற,

“நானில்லை அண்ணா…பாட்டி தான்…ஐடியா பழசா இருந்தால் என்ன ஒர்க் அவுட்டாகும்னு சொன்னாங்க…” என பாவம் போல் ஜித்தேந்திரன் கூறியதும்,

“டேய் சும்மா இருடா…” என அவனை பாட்டி அதட்டி அடக்கினார்.

அவனிற்கு அங்கு நிற்கும் போது சகோதரன் மற்றும் பாட்டியின் மீது கடுப்பாக வந்தது.

“ச்சை…என்னமோ பண்ணி தொலைங்க…கல்யாணம் முடிஞ்சவுடனே சந்திரமதி சேஃபா இங்க வந்திருக்கணும்” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு ரத்தினவேல் வெளியேறிவிட்டான்.

வீரோ “இங்க என்ன தான் நடக்குது?” என குழம்பிப்போய் கேட்க,

“அது வந்து அண்ணா…” என ஜித்தேந்திரன் முகிழ்மதியை கோவிலில் பார்த்து விரும்பியதில் தொடங்கி பெண் மாறியது வரை அனைத்தையும் கடகடவென ஒப்புவித்திருந்தான்.

ரத்தினவேலின் பழிவாங்கும் விடயம் மட்டும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அனைத்தையும் முழுமையாக கேட்ட வீருக்கு தலை கிறுகிறுவென சுற்றியது.

“சோ ரத்தினவேலுக்கு புடிச்ச பொண்ணு முகிழ்மதி தான்…சந்திரமதியில்லை…அப்படின்னு யாரு கண்டுப்பிடிச்சா? என தலையை தாங்கிக்கொண்டே அவன் கேட்க,

“வேற யாரு கண்டுப்பிடிப்பாங்க…எல்லாம் நம்ப கேங்ஸ்டர் பாட்டி தான் அண்ணா” என கண்சிமிட்டி அவரை கைகாட்டினான் ஜித்தேந்திரன்.

“எனக்கு என் பேரன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் வீர்…அதுக்காக என்ன வேணா பண்ணுவேன்” என காஞ்சனா மாலா தீர்க்கமாக கூறியதும்,வீரக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

ஆனால் உள்ளுக்குள் ஏதோ ஒரு சந்தோஷம்!

அவனின் மனதை அதுவரை அழுத்திக்கொண்டிருந்த பாரம் விலகி ஓடிய ஓர் உணர்வு!

முகிழ்மதி நல்லதொரு குடும்பத்தில் திருமணம் செய்துப்போவதை எண்ணி உச்சி குளிர்ந்துப்போனான்.

தங்கைக்கு ஏற்ற மணாளன் ரத்தினவேல் தான் என்பதை எண்ணி பூரித்துப்போனவனின் புன்னகை சட்டென மாறிப்போயின.

‘தங்கைக்கு இந்த திருமணத்தில் சம்மதமா?’ என அவன் அறிய வேண்டிய அவசியம் இருந்தது.

ஆனால் அவளிடம் பேசுவதற்கான சந்தர்ப்பமே அவனிற்கு கிடைக்கவில்லை.

திருமணத்திற்கு அவளை தயார் செய்வதிலே அவளின் நேரமனைத்தும் ஓடிவிட்டன.

சிவப்பு நிற பட்டுப்புடவையில் சர்வ அலங்காரங்களுடன் தயாராகிய முகிழ்மதியை பார்த்து பிரம்மித்த தமயந்தி “முகிழ் அண்ணி நீங்க செம்ம அழகு…நீங்களே எனக்கு அண்ணியா வந்ததிலே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்…” என அவளை கட்டியணைத்துக்கொண்டாள்.

ஆனால் முகிழ்மதியால் தான் எதிலும் பொருந்திப் போக முடியவில்லை.

அவளின் தடுமாற்றத்தை அறிந்த தமயந்தியும் “டோன்ட் வொர்ரி அண்ணி…எல்லாம் சரியாகிடும்…உங்க அக்கா சீக்கிரம் வந்திடுவாங்க” என்றாள் ஆறுதலாக.

அதைக் கேட்டவுடன் கண்ணில் ஒளியுடன் விழி உயர்த்திய பெண் “மதி அக்கா வந்திடுவாங்க தானே?” என கலக்கத்துடன் கேட்கவும்,தமயந்திக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.

எல்லாம் தெரிந்தும் அவளிடம் மறைப்பதை எண்ணி தத்தளித்தாள்.

இருப்பினும் அதனை சமாளித்து “வந்திடுவாங்க” என சிரித்துக்கொண்டே கூறினாள்.

ஆனால் முகிழ்மதிக்கு தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

விஜயலட்சுமியை அவளின் அறை பக்கம் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார் காஞ்சனா மாலா.

அவரோ மகளிடம் தனிமையில் உரையாடுவதற்கு தவியாய் தவித்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு தான் முகிழ்மதி நன்றாக வாழ்ந்தால் பிடிக்காதே?

அதனால் அவளிற்கு இந்த வாழ்வு அமைவதை எண்ணி வயிற்றெரிச்சலாக இருந்தது.

திருமணத்திற்காக கோவிலிற்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டிருந்தது.

அச்சமயம் முகிழ்மதியின் அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.

கதவை திறந்தால் வானதி தான் கையில் ஒரு நகைப்பெட்டியுடன் நின்றிருந்தார்.

“என்னம்மா?” என தமயந்தி அவரிடம் விசாரிக்க,

“இது முகிழுக்காக உன் அண்ணா கொடுத்துவிட்டான் தமி” என சோபையான குரலில் கூறினார்‌.

அவரிடமிருந்து நகைப்பெட்டியை வாங்கிக்கொண்ட தமயந்தி தாயின் முகம் வாடியிருப்பதை கவனித்து “அம்மா டோன்ட் வொர்ரி சந்திரா அண்ணிய விட முகிழ் அண்ணி நல்ல சாய்ஸ்…நல்லாதே நடக்கும்” என அவரை இலேசாக அணைத்து சமாதானம் செய்தாள்.

அவரும் அவளை ஒரு முறை அணைத்துவிட்டு விலகியவர் “எனக்கும் புரியுது லட்டு…ஆனால் சட்டுனு ஏத்துக்க முடியலை…போக போக சரியாகிடும்னு நினைக்கிறேன்…சரி நீ முகிழை பாரு…நாங்க கோவிலுக்கு கிளம்பறோம்” என மிருதுவாக முறுவலித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

‘பாவம் அம்மாவும் அப்பாவும்…அவங்க தான் பயங்கர ஷாக்குலே இருக்காங்க…சரியாகிடும்’ என பெருமூச்சுடன் நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருந்த முகிழ்மதியை பார்த்தவளிற்கும் கவலையாக இருந்தது.

ஆனால் இது கவலையுற்று முடங்கிப்போகும் சமயமல்ல என்றறிந்த பெண்ணவள் “அண்ணி இது உங்களுக்காக…அண்ணா கொடுத்தனுப்பியிருக்கார்” என அவளிடம் நகைப்பெட்டியை நீட்டினாள்.

அதை பார்ப்பதற்கு கூட அவளிற்கு விருப்பமில்லை.

அதனால் மௌனமாக அமர்ந்திருக்க வேறுவழியின்றி தமயந்தியே அதனை திறந்து பார்த்தாள்.

அதில் கண்ணை பறிக்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டு தங்க சலங்கைகள் இருந்தது.

சலங்கையின் தண்டில் சிறு சிறு பூக்கள் பின்னி பிணைந்து வடிவமைக்கப்பட்டு,அந்த சலங்கைகளின் மணிகள் கூட நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன.

“வாவ் கொலுசு செம்ம அழகா இருக்கு அண்ணி” என அவள் சலங்கையை எடுத்து ஆட்டிக்காட்ட,

அதன் சப்தத்தில் விழி உயர்த்தினாள் முகிழ்மதி.

அவளிற்கு கொலுசு என்றால் அவ்வளவு பிரியம்!

சிறு வயதிலிருந்து அவளிற்கு என்று சொந்தமாக இருந்த ஒரே ஒரு பொருள் அந்த கொலுசு மட்டும் தான்!

அதனால் சலங்கையின் மீது அவளிற்கு ஒரு காதல் இருந்தது.

முன்பு அவள் அணிந்திருந்த அந்த கொலுசின் இணை தொலைந்து போனதிலிருந்து அவளிற்கு வருத்தமாக இருந்தது.

அவன் அவளின் மனம் அறிந்து செயல்பட்டது போல் அவளிற்கு சலங்கையை வாங்கி பரிசளித்திருந்தான்.

அந்த சலங்கையை கண்டவுடன் ஏனோ அவளின் அலையடித்த மனம் சிறிது சமாதானமடைந்தது.

அவள் அந்த சலங்கையை ஆர்வமாக பார்த்தாளே ஒழிய அதை அணிந்துக்கொள்ள முற்படவில்லை.

அவளிற்கு அணிந்துக்கொள்ளும் மனநிலையும் இல்லை.

அதை அவளின் முகத்தில் படித்த மற்றவள் “சரி உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ போட்டுக்கோங்க அண்ணி” என பெட்டியை மூடி அவளிடம் ஒப்படைத்துவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து அனைவரும் கோவிலுக்கு செல்வதாக அறிவுறுத்தியதும் “அண்ணி இங்கியே இருங்க…நான் டிரஸ் மட்டும் மாத்தணும்…மாத்திட்டு வந்திடறேன்” என வெளியே வந்த தமயந்தி “வீர் உங்க தங்கச்சிய பாருங்க…நான் டிரஸ் சேன்ச் பண்ணிட்டு வந்திடறேன்” என்றாள்.

அவனோ அவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு “ஏன் இந்த டிரஸுக்கு என்ன குறைச்சல்” என புருவம் சுருக்கி கேட்க,

“வீர் உங்க கண்ணுக்கு நான் எப்பவும் அழகா தான் தெரிவான்…அதுக்காக கல்யாணத்துக்குனு வாங்கின டிரஸை நான் போடாமல் இருக்க முடியுமா?” என குறும்புடன் இதழ்கடித்து அவள் கேட்க,

அவனோ சட்டென மூண்ட கோபத்துடன் “உன்னை போய் கேட்டேன் பாரு…போடி” என திட்டிவிட்டு திரும்ப,

அவளோ “வீர் அந்த டேட்டூ…அதை மட்டும் மறக்காதீங்க” என சத்தமின்றி அவனிற்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியதும் “அடிங்” என அவன் வேகமாக திரும்புவதற்குள் அவள் சிட்டாய் பறந்திருந்தாள்.

‘லூசு’ என இதழுக்குள் அவளை கண்டப்படி திட்டிக்கொண்டே தங்கையிருந்த அறையை மூன்று முறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் வீர்.

உள்ளே நுழைந்த வீர் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்த முகிழ்மதியை பார்த்து அவனே சிலையாகிவிட்டான்.

தன்னை மீறிய ஒரு உணர்வுடன் அவனின் விழியோரம் கசிந்தது.

அவனுடைய சொந்த தங்கையை மணமுடித்து கொடுக்கும் ஒரு உணர்வு அவனிற்குள்!

“டால்…” என தன்னை மீறி உணர்ச்சி பெருக்குடன் அவளை அவன் அழைத்ததும் முகிழ்மதி விழி உயர்த்தினாள்.

அவனை பார்த்ததும் அவளின் உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது.

“அண்ணா” என இதழ்கடித்து அழ தயாரானவளின் அருகே வந்த வீர் “ஏன்மா என்னாச்சு? உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா?உனக்கு பிடிக்கலைனா சொல்லு…கல்யாணத்தை நிறுத்திடலாம்” என படபடப்புடன் அவளின் கரம் பற்றி கேட்டிருந்தான்.

அவளோ “கல்யாணத்தை நிறுத்த முடியுமா?அவ…ர்…விடுவாரா?” என கண்ணில் நிராசையுடன் வினவ,

வீரோ யாரை பற்றியும் சிந்திக்கவில்லை.

அவனிற்கு அவளின் மன நிம்மதி மட்டுமே முதன்மையாக இருந்தது.

அதனால் “யாரு பூபதிய சொல்லறீயா?உனக்கு அவனை பிடிக்கலைனா சொல்லு…கல்யாணத்தை நிறுத்தற வேலைய நான் பார்த்துக்கிறேன்” என அழுத்தமாக கூறியவனின் குரலில் அப்படியொரு உறுதி!

கண்டிப்பாக அவளிற்காக அதை செய்வேன் என்ற தீர்க்கம் அதில் தொனித்தது.

அவன் அவ்வாறு கூறியதும் சட்டென அவளிடம் ஒரு மௌனம்!

“ஏன்டா உனக்கு பூபதியை பிடிக்கலையா?” என மென்மையாக அவன் கேட்க,

மெதுவாக தலையுயர்த்திய பெண்ணவள் தயக்கத்துடன் “அவரை பிடிக்காமல் இல்லைண்ணா…என் மேலே ரொம்ப அன்பா இருப்பார்…அவர் கூட இருந்தால் பாதுகாப்பா இருக்கும்…ஆனால் அக்கா…” என அதற்கு மேல் அவள் பேசமுடியாமல் தடுமாற,அவன் இதழில் மென் புன்னகை ஒன்று தோன்றின.

அவளிற்கு நண்பனின் மீது வெறுப்பு இல்லை என்று தெரிந்த பிறகே அவனின் நெஞ்சம் சிறிது ஆசுவாசமடைந்தது.

தமக்கைக்காக அவளின் மனம் தவிப்பதை அறிந்து “முகிழ் உனக்கு தான் அவனை பிடிச்சிருக்கே…அவனுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்…அப்புறம் எதுக்கு மத்தது எல்லாத்தையும் யோசிக்கிறே?சந்திரமதி விஷயத்தை என்கிட்ட விடு…உங்க அக்கா எங்கயிருந்தாலும் கூட்டிட்டு வந்து நிறுத்திறது என் பொறுப்பு” என சாதுர்யமாக பேசி அவளின் சஞ்சலத்தை அவன் நீக்க முனைய,

அவளோ கண்ணில் ஒளியுடன் “பிராமிஸ்” என கையை அவனின் முன்பு நீட்ட,

அவனோ இதழ்பிரித்து சிரித்து “இட்ஸ் அ பிராமிஸ்” என அவளின் கரத்தில் சத்தியம் செய்தவன் “நீ எதை நினைச்சும் கவலைப்படாமல் கல்யாணத்துக்கு தயாராகுடா” என அவளின் தலையை பாசமாக வருடி ஆறுதல் கூறினான்.

அவளும் அப்போதைக்கு அரை மனதாக அந்த திருமணத்திற்கு தயாராகியிருந்தாள்.

இன்னும் சில நிமிடங்களில் கோவிலில் திருமணம் நடைப்பெற இருந்தது.

மண்பத்திலிருந்து கோவிலிற்கு செல்வதற்கு நூறு அடி தூரம் இருந்தது.

அதனை மணமக்கள் நடந்து கடக்க வேண்டியிருந்தது.

ஆனால் ரத்தினவேலோ முகிழ்மதிக்காக “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…முகிழ்மதி காரில் வந்து கோவில்ல இறங்கிக்கட்டும்…நான் நடந்தே கோவிலுக்கு வர்றேன்” என்று உரைக்க,

அதைக்கேட்டு “பார்றா?காலையிலே யாரோ இந்த கல்யாணமே வேணாம்னு சொன்னாங்க…அது யாருனு தெரியுமா?” என வேண்டுமென்றே ஜித்தேந்திரன் தமையனை வம்பிழுக்க,

ரத்தினவேல் அவனை திரும்பி முறைக்கவும்,

சட்டென ஜித்தேந்திரன் வீரின் பின்பு மறைந்தான்.

வீரோ “டேய் நீ அவன்கிட்ட மிதி வாங்காமல் போகமாட்டேன்னு நினைக்கிறேன்…கொஞ்சம் கம்முன்னு இருடா” என சிரித்துக்கொண்டே அதட்டினான்.

தங்கை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் அவனின் மனம் இலேசாகியிருந்தது.

ரத்தினவேல் கூறியது போலவே முகிழ்மதி மட்டும் வாகனத்தில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டிருந்தாள்.

அவளை கைதாங்கலாக கோவிலுக்குள் அழைத்து சென்றாள் தமயந்தி.

அவளிற்கு முன்பாகவே வந்து மணமேடையில் அமர்ந்திருந்த ரத்தினவேல் முகிழ்மதியில் சொக்கி தான் போனான்.

சிவப்பு நிற காஞ்சிப் புரம் பட்டுபுடவையில் தங்க ஆபரணங்கள் அணிந்து காற்றில் மிதந்து வந்த தேவதையை பார்த்தவனால் அவளிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.

தன்னை மீறி அவளையே அவன் பார்த்திருப்பதை கண்டதும் “ம்க்கும்” என தொண்டையை செருமி கலைத்தார் காஞ்சனா மாலா.

அவனோ அதற்கெல்லாம் அசரவே இல்லை.

அவளையே விழி அகற்றாமல் பார்த்திருக்கும் போதே “பொண்ணை உட்கார வைங்க” என்றதும் சட்டென எழுந்து நின்று விட்டான் அவன்.

அனைவரும் ‘என்னாச்சு?’ என்பது போல் பார்க்க,

அவனோ “ஏன் நின்னுட்டு கல்யாணத்தை நடத்த முடியாதா?” என பாட்டியை பார்த்து கேட்க,

அவன் கேட்டதின் சாராம்சம் அறிந்த ஒரு சிலர் தவிர ஏனையோர் அவனை ஒரு மார்க்கமாக பார்த்தனர்.

முகிழ்மதிக்கு ஓரளவு அவன் தனக்காகவே அதனை கேட்டிருக்கிறான் என்று புரிந்து நெஞ்சம் நெகிழ்ந்தது.

ஆனால் பாட்டியோ “உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்குனு நினைக்கிறேன்…உட்காரு” என அதட்டவும்,

“உன்னாலே தரையில் உட்கார முடியுமா?” என அவளின் அருகே குனிந்து அவன் வினவ,

அவளோ “ம்” என தலைகுனிந்த வாக்கிலே தலையசைத்தாள்.

அவனோ ஒரு பெருமூச்சுடன் “சரி வா” என அவளின் கரம் பற்றி தானே அவளை மனையில் அமர வைத்துவிட்டு தானும் அவளருகே அமர்ந்தான்.

முகிழ்மதிக்கு அவன் அனைவரின் முன்பும் அவ்வாறு நடந்தது சங்கடத்தை வரவழைத்தது.

அவனிற்கு மற்றவர்களை பற்றி எந்தவொரு கவலையுமில்லை.

அவனை ஆளுமையுடன் மட்டுமே பார்த்திருந்த மற்றவர்களுக்கோ அவனின் இந்த அவதாரம் பெரும் அதிர்ச்சி!

அவன் இதுவரை மற்றவர்களை மதித்து பேசியதாக கூட நினைவிலில்லை.

அவ்வாறு இருக்கையில் முகிழ்மதியை அவன் தாங்குவதை அதிசயமாக பார்த்து வாயை பிளந்தனர்.

அவனது சொந்த குடும்பத்தினரே அவனை ஆச்சரியமாக தான் பார்த்தனர்.

தமயந்தியோ “அண்ணா சோ ஸ்வீட்” என சிலாகித்து சொல்ல,

அங்கிருந்த அனைவருக்கும் அதே எண்ணம் தான்!

“என்ன கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை பொண்ணை இந்த தாங்கு தாங்கறாரு…கொடுத்து வைச்சவ தான் மகராசி” என ஒரு சிலர் பொறாமையில் பொங்கவும் செய்தனர்.

விஜயலட்சுமியோ ‘சனியனுக்கு வந்த வாழ்வை பாரு’ என அப்போதும் காழ்ப்புணர்ச்சியுடன் நின்றிருந்தார்.

மணமக்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்ததும் புரோகிதர் மந்திரம் ஓத தொடங்கினார்.

முகிழ்மதிக்கு அதுவரை இருந்த சிறு துணிச்சலும் அவனருகே அமர்ந்தவுடன் காற்றில் பறந்தன.

இப்போது அவளின் மனதில் பதட்டமும் சஞ்சலமும் சரிவிகத்தில் போட்டிப்போட ஆரம்பித்தன.

அவளின் விழியிலிருந்து கண்ணீர் கன்னத்தின் வழியே வழிந்து ஓடின.

அவளின் கண்ணீரை அவதானித்த ரத்தினவேல் மடியில் கோர்த்திருந்த அவளின் கரம் பற்றி அழுத்தினான்.

அவனது தொடுகையில் அவளின் மேனியில் மின்சாரம் பாய்ந்தது.

உடனே அவள் விழியுயர்த்தி அவனை ஏறிட,அவனோ அவளின் விழியோடு விழி கலந்து ‘உனக்கு நான் இருக்கேன்’ என்பது போல் இமை மூடி திறந்த அடுத்த கணமே அவனின் விழியசைவில் கண்டுண்டு போனாள் பாவையவள்.

அதுவரை அவளின் மனதில் சூழ்ந்திருந்த கவலைகள் யாவும் மறைந்து மாயமாகியிருந்தன.

இப்போது அவளது உலகத்தில் அவனும் அவளும் மட்டுமே!

அந்த ஒரு நொடி அவளின் கண்களுக்கு அவனை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

அவனையே அவள் விழி அகற்றாமல் பார்த்திருக்க,அவனும் அவளையே பார்த்திருந்தான்.

அச்சமயம் புரோகிதர் “கெட்டிமேளம்…கெட்டிமேளம்” என குரல் கொடுக்க,

கெட்டிமேளம் அதிர,மங்கல வாத்தியங்கள் ஒலிக்க,இறைவனின் சன்னிதானத்தில் அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிப்பாதியாக்கிக்கொண்டான் ரத்தினவேல் ரகுநாத பூபதி.
 

முகிழ்மதி 31:

 


 

 

மங்கல நாதஸ்வரம் ஒருபுறம் இசைக்க,மறுபுறம் கெட்டிமேளத்தின் இரைச்சல் விண்ணை எட்டிய வேளையில் ரத்தினவேல் அவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்ட ஆரம்பித்தான்.

பாவையவளோ அவனது விழிகளின் காந்த சக்தியில் ஈர்க்கப்பட்டு அவனது முகத்தையே அவள் விழி அகலாமல் பார்த்திருக்க,

ரத்தினவேலும் தனது ஒட்டுமொத்த நேசத்தையும் ஒன்று திரட்டி பார்வையாலே அவளின் இதயத்தை ஊடுருவியப்படி மூன்று முடிச்சுகளையும் தானே இட்டான்.

ரத்தினவேல் அந்த மூன்றாவது முடிச்சியை இடும்போது,முகிழ்மதியின் உடல் தன்னை அறியாமல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

அவளது கழுத்தில் ஏறிய அந்த மஞ்சள் கயிறு, வெறும் பந்தம் மட்டுமல்ல… அவளது ஆயுட்காலப் பாதுகாப்பிற்கான அடையாளம் என்பதை அந்த ஒரு நொடியில் உணர்ந்தாள் அவள்.

ரத்தினவேல் அவளை ஏறிட்டபோது, அவனது பார்வையில் தெரிந்த அந்த உரிமையும், ஆளுமையும் அவளுக்குள் ஒருவிதமான நடுக்கத்தைத் தந்தாலும், அது பயத்தினால் வந்ததல்ல,அவன் அவளிற்கு வழங்கிய பந்தத்தினால் தோன்றியது.

நாத்தனார் முடிச்சிடுவதற்காக பின்னால் நின்றிருந்த தங்கைக்கு கூட வாய்ப்பை தர மறுத்திருந்தான்,அந்த தலைமகன்!

அதைக்கண்டு தமயந்தி இதழ்கடித்து சிரிக்க,மற்றவர்களுக்கோ பெரும் ஆச்சரியம்!

‘என்னடா இது?நிஜமாவே பொண்ணு மாறி தான் போச்சா?இல்லை அதே பொண்ணு தானா?’ என மற்றவர்களுக்கு சந்தேகமே வந்துவிட்டது.

காஞ்சனா மாலாவோ தாம் செய்தது சரி என்ற மனநிறைவுடன் மணமக்களின் மீது அட்சதை தூவி ஆசிர்வதித்தார்.

வீருக்கு ஏன் என்றே தெரியவில்லை..தன்னாலே விழிகள் கலங்கிட,அந்த ஆனந்த கண்ணீருடன் அவர்களுக்கு அட்சதை தூவினான்.

அதுவரை சஞ்சலத்துடன் நின்றிருந்த ரத்தினவேல் பெற்றோர் முதற்கொண்டு அனைவருக்கும் பரம சந்தோஷம்!

அக்கணம் சிவராமன் கூட தன் மகளுக்கு மன நிறைவான ஆசிர்வாதத்தை கொடுத்திருக்க,விஜயலட்சுமி மட்டுமே துவேசத்துடன் அட்சதையை தூக்கி எறிந்தார்.

“மாப்பிள்ளை இப்போ பொண்ணோட நெத்தியிலையும் மாங்கல்யத்திலும் குங்குமம் வைங்க” என்றவாறே புரோகிதர் குங்குமம் அடங்கிய கிண்ணத்தை நீட்டினார்.

ரத்தினவேல் அவளின் கழுத்தை சுற்றி கரத்தை கொண்டு சென்று நெற்றியிலும் தாலியிலும் குங்குமம் வைக்க,கிட்டத்தட்ட அவளை அவன் அணைத்திருந்த நிலை தான்!

அவளிற்கோ அவனது கரத்தின் ஸ்பரிசம் தீண்டினாலே அவளின் மேனியில் மின்சாரம் பாயும்!

இப்போது ஆடவனது ஒட்டுமொத்த தேகமும் மொத்தமாய் அவளை உரசியதும் அவள் வேறொரு உலகத்திற்கே பயணம் செய்துக்கொண்டிருந்தாள்.

அவளிற்கு சுற்றி நடக்கும் எதுவுமே தெரியவில்லை.

அவள் சிந்தை யாவிலும் அவன் ஒருவன் மட்டுமே!

தமயந்தி அவர்கள் இருவரது ஆடைகளையும் முடிச்சிட்டதை கூட அவள் அறியவில்லை.

கிடைக்கவே பெறாத அரிய பொக்கிஷம் ஒன்று அவளின் கை சேர்ந்த உவகையில் வானில் சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தாள் முகிழ்மதி.

“மாப்பிள்ளையும் பொண்ணும் அருந்ததி பாருங்க…பார்த்திட்டு அப்படியே பொண்ணுக்கு மெட்டி போட்டுவிடுங்க மாப்பிள்ளை” என புரோகிதர் கூறியதும்,சட்டென எழுந்து நின்றான் ரத்தினவேல்.

முகிழ்மதியோ எழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் கனவில் மிதந்துக்கொண்டிருக்க,அதைக்கண்டு ரத்தினவேலின் இதழில் சிறு கீற்றாய் புன்னகை!

அவன் மிக மென்மையாய் “முகிழ்” என வார்த்தைக்கே வலிக்கும் எண்ணும் விதமாக குழைவாக அவளை அழைத்தான்.

அவனது அந்த ஒற்றை அழைப்பிற்கே அவளின் மேனியில் புது இரத்தம் பாய்ந்தாற் போன்ற ஒரு உணர்வு!

“ஹான்” என அவள் திடுக்கிட்டு அவனை ஏறிட,

“எழுந்திரி” என அவன் அவளிற்கு கைகொடுத்தான்.

அவளோ மந்திரத்திற்கு கட்டுண்டாற் போன்று அவனின் கரம் பற்றி ஒற்றை கையை தரை ஊன்றி எழுந்துக்கொள்ள முயன்றவளால் முடியவில்லை.

அவளது முழங்காலில் இருந்த காயம் அவளை எழவிடாமல் தடுமாற வைத்தன.

உடனே அவளிற்கு உதவுவதற்காக வீரும் தமயந்தியும் முன்னே வர அவர்கள் இருவரையும் ஒற்றை விழியசைவிலே நிறுத்திவிட்டான் ரத்தினவேல்.

பின்பு அவனாகவே அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல் அவளின் இடையில் கையிட்டு அணைத்து தூக்காத குறையாக அவளை பொம்மை போல் தூக்கி நிறுத்தியிருந்தான்.

அனைவரும் அதிர்ச்சியில் வாயை பிளக்க,முகிழ்மதிக்கோ முதல்முறையாய் வெட்கம் என்ற உணர்வு ஆட்கொண்டன.

அவளை தூக்கி நிறுத்திய ரத்தினவேல் காரிகையை தன் கை வளைவில் நிறுத்திய வாக்கிலே “ஆர் யூ ஓகே” என மற்றவர்கள் காதில் விழாத வண்ணம் ரகசியமாய் வினவ,

அவனின் அந்த ரகசிய குரலே அவளின் செவியோரம் மயிற்கூச்சரிய செய்திட அவளோ ‘இல்லை’ என்னும் விதமாக தலைக்குனிந்தப்படியே தலையசைத்தாள்.

அவளது முகத்தில் படர்ந்திருந்த அந்த நாணம், அவனது நெஞ்சிற்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுவரை எந்தவொரு பெண்ணையும் கண்டு அசராத ரத்தினவேல், இன்று ஒரு சிறு பெண்ணின் மௌனத்திலும் வெட்கத்திலும் கட்டுண்டு போனான்.

இருவருக்குமிடையே ஒரு மோன உணர்வு ஆக்கிரமிக்க,

அடுத்ததாக புரோகிதர் “மெட்டி போட்டு ஏழு முறை அக்னியை சுற்றி வாங்கோ” என குரல் கொடுத்ததும்,ஆடவனவன் பெண்ணவளின் கைதலம் பற்றினான்.

நடப்பதையெல்லாம் பார்த்த ஜித்தேந்திரனிற்கு மயக்கம் வராத குறை தான்!

“பாட்டி…பாட்டி…என்னை கொஞ்சம் பிடிங்களேன்…எனக்கு மயக்கமா வருது…நான் பார்க்கிற காட்சி உண்மை தானா பாட்டி?” என தலைச்சுற்றி விழுவது போல் அவரின் தோளிலே விளையாட்டாக தலைசாய்த்தான் ஜித்தேந்திரன்.

“சின்னவனே எனக்கும் மயக்கம் வர மாதிரி தான்டா இருக்கு…என்னையும் நீ கொஞ்சம் பிடிச்சுக்கோவேன்” என அவரும் அவனை போலவே சொல்லி அவன் மீது சாய,

உடனே வெடுக்கென்று தலையுயர்த்திய ஜித்தேந்திரன் “அட பாட்டி இந்த ஜித்து இருக்கும் போது நீங்க கவலைப்படலாமா?நான் உங்களை என் உயிருள்ள வரை காப்பாற்றுவேன் பாட்டி” என பழங்காலத்து நாயகன் போல் வீரவசனம் பேசி அவரை கட்டியணைக்க அவன் முன் வர,

“அட போடா படவா” என அவனின் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டார் காஞ்சனா மாலா.

ஆனால் அவர்கள் இருவரின் இதழிலும் அப்படியொரு சிரிப்பு!

நினைத்ததை சாதித்ததினால் உண்டான ஒரு வெற்றி களிப்பு அவர்களிடம்!

இவர்களின் சம்பாஷணையை ஓரவிழியில் கண்ட ரத்தினவேல் முறைக்க,பாட்டியும் பேரனும் ‘அடப்போடா டேய் போடா’ என தூசிப்போல் தட்டிவிட்டு நின்றிருந்தனர்.

தாலி கட்டிய கையோடு, அடுத்த சடங்காக மெட்டி போடும் நிகழ்வு அங்கு அரங்கேறியது.

கோவிலின் ஒரு பெரிய தூணின் அருகில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பால் மற்றும் நீர் நிரப்பப்பட்டிருக்க, அதில் மெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

அவளின் கரம் சில்லிட்டு இருப்பதை கவனித்த ரத்தினவேல் தனது கரத்தின் அழுத்தத்தின் மூலம் அவளிற்கு வெப்பத்தை கடத்தினான்.

ஆடவனது அந்த சூடான வெப்பம் அவளின் நெஞ்சத்தில் ஒரு வெம்மையை பரவ செய்தன.

“அம்மாடி முகிழ்மதி…இரண்டு பேரும் அருந்ததி பார்த்த பிறகு காலை எடுத்து நீ அம்மி மேலே வைம்மா” என வானதி குரல் கொடுத்தார்‌.

“அருந்ததியா அது எங்கயிருக்கு?” என ஜித்தேந்திரன் புருவம் சுருக்கி கோவிலின் மேற்கூரையை பார்த்தான்.

“ஜித்து சும்மா இருடா…அதெல்லாம் ஒரு ஐதீகம்…” என பாட்டி சொல்ல,

“ஓ…அப்படியா?நான் கூட அங்க அருந்ததின்ற ஒரு பொண்ணு வந்து டேன்ஸ் ஆடும்…அதை பார்க்கணும்னு நினைச்சேன்…” என சிரியாமல் சொல்லவும்,அவ்விடத்தில் ஒரு சிரிப்பலை பரவியது.

விஜயேந்திரன் கடுப்பாகி “ஜித்து…” என குரல் உயர்த்த,

“பொத்து தானேப்பா பண்ணிட்டேன்” என வாயை மூடி சைகை செய்யவும்,மீண்டும் அவ்விடத்தில் ஒரு சிரிப்பலை பரவியது.

அதுவரை ஒரு வித அசாதாரண மனநிலையில் இருந்த அந்த சிலரும் கூட இப்போது அனைத்தையும் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

முகிழ்மதிக்கே அவனின் பேச்சு இலேசாக சிரிப்பை கொண்டு வந்திருந்தது.

“சரி..சரி நீ கால்ல அம்மி மேலே வைம்மா” என வானதி முகிழ்மதியிடம் கூற,இப்போது அவளிற்குள் ஒரு பதட்டம்!

அதையறிந்தாற் போன்று அவளின் கரத்தை ஒரு முறை அழுத்தி விடுவித்து அவளின் காலருகே மண்டியிட்டு அமர்ந்தான் ரத்தினவேல்.

அவன் காலருகே அமர்ந்ததும் ஒரு வித தயக்கத்துடன் பாதத்தை எடுத்து அம்மி கல்லின் மீது வைத்தாள் பெண்ணவள்.

சுற்றியிருந்த உறவினர்களில் ஒரு சிலர் “அட பரவாயில்லைப்பா…நான் கூட நம்ப பூபதி எங்க இந்த சடங்கெல்லாம் பண்ணுவான்னு நினைச்சேன்‌…பரவாயில்லை தம்பி எந்த பந்தாவும் இல்லாமல் பொண்ணு காலை புடிச்சு மெட்டி போடறாரு” என தங்களுக்குள் முணுமுணுத்து ஆச்சரியப்பட,

ஜித்தேந்திரனோ ‘ம்க்கும்…இதெல்லாம் என்ன ஜுஜுபி…அவர் காலை புடிக்கிறது மட்டும் தானே நீங்க பார்த்திருக்கீங்க…நான் அதுக்கு மேலையும் பார்த்திருக்கேன்டா’ என மனதிற்குள் எண்ணி இதழ்கடித்து சிரித்தான்.

ரத்தினவேலோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அவனது கவனம் முழுவதும் அவள் மீது மட்டுமே இருந்தது.

அம்மியின் மீதிருந்த அவளின் வலது காலை மெதுவாக பற்றினான் ஆடவன்.

அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான்.

அவளின் பொற் பாதங்களில் அவன் வாங்கி பரிசளித்திருந்த தங்க கொலுசு மின்னிக்கொண்டிருப்பதை!

அதை பார்த்த ரத்தினவேலின் நெஞ்சிலோ அப்படியொரு பரவசம்!

அவளிருக்கும் மனநிலையில் அதை அணிந்திருக்கமாட்டாள் என்று அவன் எண்ணினான்.

ஆனால் தற்போது அவள் சலங்கையை அணிந்திருப்பதை கண்டவனின் தேகமெல்வாம் உவகை ஊற்று பொங்கி பெருகின.

இது நாள் வரை தன்னுடைய எந்தவொரு உணர்ச்சியையும் வெளியில் காட்டியிராத ரத்தினவேல் முதல் முறையாய் தனது மகிழ்ச்சியை முகத்தில் காட்டியிருந்தான்.

மெதுவாக அவளின் முகத்தை அவன் ஏறிட,அவளோ படபடப்புடன் இதழ்கடித்து இமைகளை தாழ்த்தி வேறெங்கோ பார்த்திருந்தாள்.

அவனிற்காக அவள் சலங்கை அணிந்திருந்த விதம் ரத்தினவேலின் இதயத்தில் ஒரு மெல்லிய மழைச்சாரலை ஏற்படுத்தியிருந்தன.

அவளது பாதங்கள் பனிமலரை போல் குளிர்ந்திருக்க, அவனது கரங்களின் வெப்பம் பட்டதும் முகிழ்மதிக்கு உடல் சிலிர்த்தது.

அவளின் பாதங்களை அவன் தீண்டுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு கூட இரண்டு முறை அவளின் பாதங்களை அவன் தன் கரங்களால் தழுவியிருக்கிறான்.

ஆனால் அந்த ஒரு கணம்,அவன் அவளின் பாதத்தை பிடித்தப்போது ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு அவளுள் முகிழ தொடங்கியது போன்ற ஒரு மாயை!

சலங்கை அணிந்திருந்த அவளின் பாதங்களுக்கு முத்தமிட அவனின் உணர்வுகள் தூண்டினாலும்,இருக்குமிடம் அறிந்து மௌனம் காத்தான் அவன்.

ஆனால் தன் உணர்வுகளின் வேட்கை தாளாமல் சற்று அழுத்தமாக அவளின் பாதத்தை அவன் இறுக்கியதும்,

உடனே அவளின் இதயத்தில் முரசு கொட்ட,காரிகையவளிற்கு படபடப்பாக வந்தது.

அதை அவளது உடல் அதிர்வின் மூலம் உணர்ந்த ரத்தினவேல் இதழ் குவித்து ஊதி தன்னை அடக்கினான்.

அடுத்த கணமே கீழே குனிந்தவனின் கரத்தில் சிறு சலங்கை வைத்த ஒரு மெட்டி ஒன்று கொடுக்கப்பட்டன.

காயத்தின் மீதிருந்த கட்டை மறைக்கும் விதமாகப் புடவையை அவள் சற்றே இழுத்துவிட்டிருந்தாலும், ரத்தினவேலின் கண்கள் அந்தக் காயத்தை ஒருமுறை வருடிச் சென்றன.

மெல்ல மெட்டியை எடுத்து அவளது விரல்களில் அணிவித்தான் அவன்.

இரும்பைப் போன்ற அவனது கரங்கள், அவளது மென்மையான விரல்களை தொடும்போது ஒருவிதமான ஆளுமையுடனும், அதே சமயம் அவளின் மீதான அளப்பறியா நேசத்துடனும் அவளின் விரலில் மெட்டியை அணிவித்திருந்தன.

இப்போது மீண்டும் காரிகை யின் மேனியில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தன.

அவன் மெட்டி போடும் அழகை ரசித்து பார்த்திருந்த தமயந்தி “அண்ணா… முகிழ் அண்ணி காலுக்கு இந்த தங்க கொலுசும் மெட்டியும் அவ்வளவு அழகா இருக்கு!” என சிலாகித்து சொல்ல,
ரத்தினவேல் நிமிர்ந்து முகிழ்மதியை ஒரு பார்வை பார்த்தான்.

அடுத்த கணமே அவளின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட,உதட்டை கடித்து தலைக்குனிந்துக்கொண்டாள் அவள்.

அவள் வெட்கத்துடன் தலைக்குனிந்து நிற்பதை பார்த்துக்கொண்டே அவளின் மருதாணியிட்ட இடது கால் பெருவிரலிலும் மெட்டி அணிவித்தான் ரத்தினவேல்.

மெதுவாக எழுந்து நின்ற ரத்தினவேல் அவளின் செவியோரம் 
“கொலுசு தனியா இருந்ததை விட உன் காலுக்கு ரொம்ப அழகா இருக்கு” என மிக மெல்லிய குரலில் அவளிற்கு மட்டும் கேட்கும் விதமாக அவன் சொல்ல, அவளது நெஞ்சிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.

அவள் மேனி அவஸ்தையில் துடிதுடிக்க,அதன் உணர்வுகளின் வேகம் தாளாமல் அவள் கைகளை பிசைந்தாள்.

அவளின் தவிப்பை ஆடவனவன் ரசித்து பார்த்திருந்தான்.

அதனை கெடுக்கும் விதமாக புரோகிதர் “அக்னியை சுற்றி ஏழு முறை வலம் வந்திட்டிங்கன்னா இந்த கல்யாண சடங்கு அத்தோடு முடியுது” என அறிவுறுத்த,

அடுத்த கணமே அவளின் கரம் பற்றி அக்னியை சுற்றி வலம் வர தொடங்கினான் ஆடவன்.

அக்னியை வலம் வரும்போது அவளையும் அறியாமல் ஒரு நடுக்கம்!

அழையா விருந்தாளியாய் தமக்கை யின் நினைவு அவளை வந்து ஒட்டிக்கொண்டன.

உடனே அவளின் மேனி குற்றவுணர்வில் நடுங்க,அதனை அவளின் கரம் வழியே அறிந்து தன் ஸ்பரிசத்தின் மூலம் அனைத்தையும் மறக்க செய்தான்.

ஆடவனது அந்த ஒற்றை அழுத்தமும் ஸ்பரிசமும் அவளின் உலகத்தையே மறக்க செய்தது.

ஒரு தற்காலிகமான ஏற்பாடாக தொடங்கிய இந்த திருமணம், இப்போது இருவருக்குள்ளும் ஒரு நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்த தொடங்கியிருந்தது.

விஜயலட்சுமி தூரத்திலிருந்து இதைப் பார்த்துவிட்டு ‘இந்தக் கொலுசு எப்போ இவ கால்ல வந்துச்சு?இவன் எப்போ இவளுக்கு இதை வாங்கிக்கொடுத்தான்?என்ன நடக்குது இங்கே?’ என சந்தேகத்தில் புருவம் சுருக்கினார்.

அவருக்கு ஒரு விடயம் தெரியவில்லை, அவர் சித்திரவதை செய்த அதே பாதங்களுக்கு ரத்தினவேல் இப்போது ராஜ மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று!

அனைத்து சடங்குகளும் முடிந்து மணமக்கள் அக்னியை வலம் வந்தனர்.

அவனை நோக்கி ஒவ்வொரு முறை அவள் அடி எடுத்து வைக்கும் போதும்,அவளின் உலகம் அவனின் உலகமாய் மாறிக்கொண்டிருந்தது என்பதை அவளே அறியேன்.

மேலும்,இதுநாள் வரை யாருமின்றி தனிமரமாய் இருந்தவளை இப்போது ஒரு மாபெரும் ஆலமரம் அரணாக காத்து நின்றது.

திருமண சடங்குகள் அனைத்தும் முற்றுப்பெறும் வேளை அது!

ரத்தினவேல் முகிழ்மதியின் கரம் பற்றி அக்னியை இறுதியாக வலம் வந்த அந்த வேளையில்… மண்டபத்தின் நுழைவாயிலில் ஒரு நிழல் தோன்றியது.

கலைந்த கூந்தலும், அழுது வீங்கிய கண்களுமாய் அங்கே வந்து நின்றாள் சந்திரமதி.

அவளை அப்படி கண்டதும், ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப்போயினர்.

தனது தமக்கையை கண்டதும் அதுவரை முகிழ்மதியின் நெஞ்சை சூழ்ந்திருந்த மாயை களைந்து சென்றிட “அ…க்கா” என விம்மலாக அழைத்தவளின் கரம் தீச்சூட்டாற் போன்று கணவனது கரத்திலிருந்து உதறி விலகிக்கொண்டன.
 

முகிழ்மதி 32:

சந்திரமதியை கோவிலின் வாசலில் கண்ட ரத்தினவேலின் இமைகள் இரண்டும் இடுங்கின.

அதற்குள் அவனின் மனையாள் தனது கரத்தை உருவ முயன்றதை அறிந்த ரத்தினவேல் அதற்கு அனுமதிக்கவில்லை.

அவனின் பிடி இப்போது இறுகியது.

அவனது பிடியினால் பாவையவளின் மெல்லிய கரத்தில் வலி ஏற்பட்டாலும் நெஞ்சினோரம் ஒரு தென்றல் வீசவும் செய்தது.

ஆனால் பெண்ணவள் அச்சந்தர்ப்பத்தில் அவை யாவும் அறியாமல் தமக்கையையே நடுக்கத்துடன் பார்த்திருந்தாள்.

ரத்தினவேல் திரும்பி முகிழ்மதியை காண,அவளின் விழிகள் கலங்குவதற்கு ஆயுத்தமாகி இருப்பதை கவனித்தான்‌.

அதற்குள் சூழ்நிலையை தன் கையில் எடுத்த காஞ்சனா மாலா “பூபதி கல்யாண சடங்கு பாதியிலே நிக்கக்கூடாது…முழுசா அந்த சுத்தையும் முடிச்சிடுங்க…எதுவா இருந்தாலும் பிறகு பேசிக்கலாம்” என அழுத்தமாக கூறிவிட,

அதையே வேதவாக்காக பற்றிக்கொண்ட ரத்தினவேல் “முகிழ் வா” என அவளின் கரம் பற்றி அக்னியை சுற்ற முனைந்தான்.

ஆனால் அவனால் மனைவியை அங்கிருந்து ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை.

ஏனெனில்,காரிகையின் பாதங்கள் அவ்விடத்திலே வேரூன்றிருந்தன.

இயற்கையாக அவளை விட அவனது உடல்வலிமை சற்று அதிகம் என்பதால்,பெண்ணவளின் பிடிவாதம் தகர்த்தெறியப்பட்டன.

வேறுவழியின்றி மணாளன் தந்த அழுத்தத்தினால் அவனின் இழுப்பிற்கு நடக்க தொடங்கினாள் ரத்தினவேலின் புத்தம் புது மணாட்டி.

அவளின் விழிகளிலிருந்து கடகடவென நீர் வழிய அவளின் நெஞ்சம் மட்டும் குற்றவுணர்வில் தவித்தன.

அதிலும்,தன்னுடைய இரட்டை சகோதரி வந்து நின்ற கோலத்தை பார்த்தவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடிக்க,அவளின் இதழ்கள் மட்டும் “அக்கா” என்னும் மந்திரத்தை சத்தமின்றி உச்சரித்துக்கொண்டிருந்தன.

மனையாளின் தவிப்பை ஆடவனவன் அறிந்திருந்தாலும் அவனுடைய இல்லாளை எதற்காகவும் விட்டுத்தர தயாராகயில்லை அவன்.

அவள் அழுத்தம் என்றால்,அந்த அழுத்தத்தை இலகுவாக்கக்கூடிய மந்திரம் அவனிடமிருந்தது.

‘காதல்’ என்னும் மூன்று எழுத்து வித்தையின் மூலம் அந்த வித்தகனின் முயற்சிக்கு என்றுமே ஜெயம் தான்!

இன்றைய அவர்களது திருமணம் அதை ஊர்ஜிதப்படுத்தியிருந்தது.

ஆனால் சந்திரமதி தான் மொத்தமாய் இடிந்துப்போய் நின்றிருந்தாள்.

தன் முன்னே காணும் காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை‌.

சில வினாடிகள் ‘நிஜம் எது?பொய் எது?’ என்று தெரியாத ஒரு நிலையில் தவித்தவளிற்கு நடக்கும் நிகழ்வுகள் அவளிற்கு நிஜத்தை தெள்ள தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தன.

அவளிற்கு அனைத்தும் புரிந்ததும் அவை அவளின் இதயத்தில் பேரிடியாக விழுந்தன.

அவளின் எதிர்கால வாழ்வை செப்பனிட இருந்த ஒரு நம்பிக்கையும் தகர்த்தப்பட்டதில் அவள் உடைந்து நொறுங்கிவிட்டாள்.

இதற்காக…இந்த ஒரு தருணத்திற்காக தான் அவள் கடந்த சில நாட்களாய் ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

ஆனால் அவள் கண்ட கனவுகள் எல்லாம் வெறும் கற்பனையாகவே போய்விட்டதை உணர்ந்தவளால் அழ கூட முடியவில்லை.

விரக்தி,ஏமாற்றம்,துக்கம்,வலி என அனைத்து உணர்வுகளும் ஒரு சேர அவளை தாக்க,அந்த புது தம்பதியினரையே வெறித்து பார்த்திருந்தாள் அவள்.

ஜித்தேந்திரனோ “பாட்டி கல்யாணம் முடிஞ்ச பிறகு தானே அவளை வெளிய விட சொன்னோம்…அதுக்குள்ள எப்படி இவ தப்பிச்சு வந்தாள்” என பாட்டியின் காதோரம் கிசுகிசுக்க,

பாட்டியோ “எனக்கும் தெரியலைடா…இப்போதைக்கு கல்யாணத்தை முடிப்போம்…அதுக்கு பிறகு அவளை அடிச்சு விரட்டுவோம்” என முணுமுணுத்தார்.

சந்திரமதி எதுவும் பேசாமல் துக்கத்தை அடைக்கிக்கொண்டு நின்றிருப்பதை பார்த்த அவனிற்கே ஒரு மாதிரியாக இருந்தது.

சந்திரமதியை அவனிற்கும் பிடிக்காது தான்!

ஆனால் ஒரு பெண்ணாக அவளின் வேதனை அவனிற்கு புரிய “பாட்டி அவளை பார்க்க பாவமா இருக்கு” என அவளிற்காக பரிந்து வர,

வெடுக்கென்று அவனை நோக்கி திரும்பியவர் “பரிதாபமா இருக்காள்னா நீ வேணா கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என அவனை கூர்மையாக பார்த்தப்படி வினவ,

அவனோ நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து “ஆத்திஈ…நான் கல்யாணம் பண்ணாமல் சந்நியாசியா வேணா போவனே ஒழிய இந்த பிசாசை மட்டும் கல்யாணம் பண்ண மாட்டேன்…ஆளை விடுங்கடா சாமி” என கையெடுத்து கும்பிடாத குறையாக கூறியிருந்தான்.

‘அது’ என்பது போல் திமிராக பார்த்தவர் “அப்போ அமைதியா என்ன நடக்குதுனு மட்டும் வேடிக்கை பாரு…நமக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை…புரிஞ்சிதா?” என அவனை பார்க்காமலே ஆழ்ந்த குரலில் அவர் உரைக்க,

அவனோ அதை புரிந்துக்கொண்டு “அட பாட்டி…முதல்ல அவ யாரு?அவ யாருனே எனக்கு தெரியாது பாட்டி?அப்புறம் எங்கிருந்து கடத்தறது?” என சாதுர்யமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு அவன் சற்றே அதிகமாக பேச,

அவரோ மெதுவாக அவன் புறம் திரும்பி “பேராண்டி…நடிக்கலாம்டா ஆனால் கொஞ்சம் கம்மியா நடி…அதிகமா பண்ணி மாட்டிக்காதே” என பல்லிடுக்கில் எச்சரிக்க,

“ஓ…அப்படிங்கறீங்க?சரி நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன் கேங் லீடர்” என பணிவுடன் கூறி,சட்டையை இழுத்துவிட்டு ஒன்றும் தெரியாத நல்லப்பிள்ளை போல் நின்றுக்கொண்டான் அவன்.

அவனை சலிப்பாக பார்த்து தலையசைத்த காஞ்சனா மாலா சந்திரமதியின் புறம் திரும்பினார்.

அதற்குள் ரத்தினவேலும் முகிழ்மதியும் தங்களது திருமண சடங்கை முடித்திருந்தார்கள்.

இப்போது தனது சகோதரியிடம் சென்று அவளின் நலன் விசாரிக்க அவளின் மனம் விளைந்தாலும் பச்சாதாபத்தினால் அவள் துவண்டாள்.

அவள் தடுமாறி நிற்பதை கண்ட ரத்தினவேலிற்கு தன்னையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.

அதுவரை ஒரு ஓரமாக நின்றிருந்த விஜயலட்சுமி “மதி இவ்வளவு நேரம் எங்கடி போனே?” என அவளின் அருகே கடுப்புடன் ஓடி வந்தார்.

அவளோ தாயிடம் எவ்வித பதிலும் கூறாமல் தாயை தாண்டி தங்கையை நோக்கி சென்றாள்.

“முகிழ் என்ன நடக்குது இங்கே?” என விரக்தியாக கேட்டவளின் குரலில் ஆத்திரம் சிறிதும் இல்லை.

அவளின் விழிகளில் நிராசையும் வேதனையும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

அதற்கே முகிழ்மதியின் இதயம் வெடிக்க “அது வந்து…இ…ல்லை அக்கா…” என பதில் கூற முடியாமல் திணறியவளிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“நீ என்னோட கனவை ஒட்டுமொத்தமா சிதைச்சிட்ட முகிழ்” என அவள் நேரடியாக குற்றசாட்டியதும் அந்த சிறுப்பெண்ணால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை‌.

அவளை பார்ப்பதற்கு முன்பே குற்றவுணர்வில் தவித்த பெண்ணவளிற்கு அவளின் நேரடி குற்றச்சாட்டு இதயத்தை சரிமாரியாக வெட்டியது போன்ற ரணத்தை கொடுத்தன.

உடனே அவள் அழுகையில் வெடித்த இதழ்களுடன் “ஐய்யோ இல்லை அக்கா…” என அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்ததும்,சந்திரமதி சட்டென பின்னால் நகர்ந்துவிட்டாள்.

அந்த ஒரு செயல் மென்மையான பூவையவளின் இதயத்தை இரண்டாக பிளந்தன.

அவளின் கண்ணீர் பெருகி அவளிற்கு மூச்சு வாங்க தொடங்கவும்,அதுவரை நிதானமாக இருந்த ரத்தினவேல் “ஸ்டாப் இட் சந்திரமதி…எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்…நீ முதல்ல கிளம்பு” என்பது போல் அவளிற்கும் மனைவிக்கும் இடையே வந்து நின்றான்.

சந்திரமதி சுயநலவாதிதான், தான் வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவள்தான். ஆனால் தன் தங்கை முகிழ்மதிக்கு தன் மேல் இருக்கும் பாசத்தை அவள் அறிவாள்.

அப்படியான பெண் தன் இடத்தைப் பறித்துக்கொண்டதை அவளால் தாங்க முடியவில்லை.

அதன் பொருட்டே அவளிடம் தன்னை மீறி பேசியிருந்தாள்.

இப்போதும் அவளின் கனவு சிதைந்ததை அவளால் ஏற்க முடியவில்லை.

கண்முன்னே கட்டிய கோட்டை தகர்த்தெறியப்பட்டால் யாருக்கும் வலிக்கும் தானே?

அவளிற்கும் வலித்தது.

அதிலும்,அவள் நம்பிய ஒருவன் அவளை நம்ப வைத்து ஏமாற்றியது புரிய அவளிற்கு ரத்தினவேலின் மீது ஆத்திரமாக வந்தது.

அதனால் “ஏன் இப்படி பண்ணீங்க?என்கிட்ட நீங்க என்ன சொல்லி பிராமிஸ் பண்ணீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?ஆனால் இப்போ என்ன பண்ணியிருக்கீங்க?என்னை நீங்க நம்ப வைச்சே ஏமாத்திட்டீங்க…நீங்க ஒரு துரோகி” என இயலாமையுடன் கூடிய கோபத்தில் அவள் கத்த,

அவளின் பேச்சை கேட்ட அங்கிருந்த அனைவருக்கும் இரத்தம் கொதித்தது.

“ஹே யாரை பார்த்து துரோகினு சொல்லறே?பல்லை கழட்டிடுவேன்…நீ ஓடிப்போயிட்டு என் அண்ணா மேலே பழிப்போடறீயா?” என ஜித்தேந்திரன் அவளிடம் எகிறிக்கொண்டு செல்ல,

“ஜித் நீ அமைதி இரு…எதுவா இருந்தாலும் நான் பேசிக்கிறேன்…” என ரத்தினவேல் அதிகாரமான குரலில் இடைமறித்ததும் ஜித்தேந்திரன் அவளை முறைத்துக்கொண்டு அமைதியுற்றான்.

அவளோ அழுகையில் பிதுங்கிய இதழ்களை கடித்துக்கொண்டு “நான் ஒண்ணும் ஓடிப்போகலை…காலையிலே யாரோ என் முகத்திலே துணியப்போட்டு கடத்திட்டு போயிட்டாங்க…எனக்கு யாரு அது என்னானு எதுவுமே தெரியலை…நான் கண்ணு முழிக்கும் போது ஒரே இருட்டா இருந்துச்சு…அப்போ ஒருத்தன் ‘சீக்கிரம் போ இல்லைனா உன் கல்யாணம் நின்னிடும்’னு சொல்லி இங்க கொண்டு வந்துவிட்டான்…ஆனால் இங்க வந்தால்…” என தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே வந்தவளின் விழிகள் ரத்தினவேலிற்கு பின்புறமிருந்த தங்கையின் மீது ஒரு முறை படிந்து மீண்டன.

உடனே முகிழ்மதியின் மேனி அழுகையில் துடிக்க,அதையறிந்தாற் போன்று பின்னால் தன் கையிட்டு அவளை ஆறுதலாக பற்றிக்கொண்டான் ஆடவன்.

கூடவே ஒரு பெருமூச்சுடன் ஓரக்கண்ணால் தன் பாட்டியை பார்த்து அவன் முறைக்க,

அவரோ தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் திமிராக நின்றிருந்தார்.

அதைப்பார்த்து இதழ்குவித்து ஊதிக்கொண்டான் அவன்.

ஆயிரம் இருந்தாலும் தவறு செய்தவர் அவன் குடும்பத்தினர் என்பதால் சபை முன்பு அவர்களை விட்டுத்தர தயாராகயில்லை ரத்தினவேல்.

அதனால் சந்திரமதியின் புறம் திரும்பிய ரத்தினவேல்  “இங்க பாரு சந்திரமதி…உன்னை யார் கடத்தினாங்க…எதுக்காக கடத்தினாங்கன்னு எனக்கு தெரியாது.இங்க யாரும் இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணலை…எங்க குடும்ப கௌரவத்தை காப்பாத்த தான் முகிழ்மதி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாள்…அதே மாதிரி உனக்கு கொடுத்த பிராமிஸும் நான் மறக்கலை…பட் இப்போ அந்த பிராமிஸுக்கு எந்த வேல்யூவும் இல்லைனு நினைக்கிறேன்…சோ தேவையில்லாமல் என்னையும் என் மனைவி முகிழ்மதியையும் நீ எதுவும் பேசக்கூடாது…” என கூர்மையாக அவளை பார்த்தவாறு தீர்க்கமாக கூறியிருந்தான்.

சந்திரமதிக்கு தன் வாழ்க்கை பறிப்போனதை விட தன்னுடைய கனவுகள் ஒட்டுமொத்தமாய் பறிப்போனது தான் மாபெரும் கவலையே?

அவளிற்கு ரத்தினவேலின் மீது எந்தவொரு விருப்பமுமில்லை.

அவனிற்கும் அதுவே என்பது அவளிற்கும் நன்கு தெரியும்.

ஆனால் திடீரென்று தங்கையை அவசரமாக மணமகளாக்க வேண்டிய அவசியம் தான் அவளிற்கு புரியவில்லை.

அதனால் மூண்ட கோபத்துடன் “நான் காணும்னு உடனே என் தங்கச்சியை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?இதெல்லாம் உங்களுக்கு நியாயமா இருக்கா?அதிகாரம் இருந்தால் என்ன வேணா பண்ணுவீங்களா?இவ இல்லைனா அவள்னு போயிட்டே இருப்பீங்க இல்லையா?” என அவனிடம் அவள் சீறிக்கொண்டு செல்ல,இப்போது ரத்தினவேலிற்கே கடுப்பாக வந்தது.

அதேசமயம் தங்கையின் மீது அவளிற்கு இருந்த சிறு அக்கறையும் புரிய,அவன் மௌனம் காத்தான்.

இப்போது அவனிற்கு பதிலாக காஞ்சனா மாலா முன் வந்தார்.

“ப்ச்…இங்க பாரு சந்திரமதி…கல்யாணம் எப்படி நடந்துச்சு…என்ன மாதிரி நடந்துச்சுன்றது உனக்கு தேவையில்லாதது…நடந்தது நடந்துப்போச்சு…இதுக்கு மேலே எதையும் மாத்த முடியாது…இனி முகிழ்மதி தான் எங்க வீட்டு மருமகள்…எங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனைய நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் அழுத்தம்திருத்தமாக.

அவரை தீட்சண்யத்துடன் நோக்கியவள் “நானும் எதையும் மாத்தணும்னு நினைக்கலை பாட்டி…என் சிஸ்டரோட வாழ்க்கையை தட்டி பறிக்கிற அளவு நான் வில்லி இல்லை…ஆனாலும் என்னாலே இதை ஏத்துக்க முடியலை…யாரோ திட்டம்போட்டு தான் இதை பண்ணியிருக்காங்க…எனக்கு அது யாருன்னு தெரியணும்…” என அவருக்கு இணையான அழுத்தத்துடன் உரைக்க,

‘இவ இப்போதைக்கு போகமாட்டா போலவே’ என ஜித்தேந்திரன் சலிக்க,

பாட்டியோ ‘நாம்ப நினைக்கிற அளவு இவ முட்டாளில்லை…நல்லா புத்திசாலியான பொண்ணு தான் போலே…இப்படியே விடறது நமக்கு தான் ஆபத்து’ என தனக்குள்ளே எண்ணி கொண்டார்.

அவளிற்கு உரிய பதில் கூற ரத்தினவேல் விளையும் போது அவனின் பின்னால் நின்றிருந்த அவனது மனைவி நிலைத்தடுமாறி அவன் மேல் தொய்ந்து விழவும் “முகிழ்” என பதறிப்போய் வேகமாக திரும்பி அவளை பிடித்துக்கொண்டான்.

முகிழ்மதிக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட உடல் உபாதையும் மன உளைச்சலும் அவளை மூர்ச்சையாக செய்திருந்தது.

“ஐய்யோ என்னாச்சு?” என அங்கிருந்த அனைவரும் பதறி விட்டனர்.

அவளையும் அறியாமல் சந்திரமதியின் இதயமும் அவளிற்காக துடித்தன.

வீரோ “டால்…” என தவிப்புடன் முன்னே வர,

“சாதாரண மயக்கம் தான்…நான் பார்த்துக்கறேன்டா” என அவனை தடுத்து நிறுத்திவிட்டு அவனே அவளை தன்னிரு கைகளில் ஏந்தியிருந்தான்.

அவனது செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் வாயை பிளந்தனர்.

“முகிழ்…” என அவளின் கன்னம் தட்டியழைத்தவனின் குரலில் அவனை மீறிய ஒரு தவிப்பு இருந்தது.

உடனே சந்திரமதியின் புறம் திரும்பிய ரத்தினவேல் “உன்னை கடத்தினது யாருனு விசாரணை பண்ணற அளவு எனக்கு நேரமில்லை சந்திரமதி…என் மனைவிக்கு முடியலை…நான் கிளம்பறேன்” என கர்ஜனையாக கூறிவிட்டு கோவிலிருந்து விறுவிறுவென தன் புது மனைவியுடன் வெளியேறிவிட்டான்.

சந்திரமதியோ தங்கையின் மேல் அவன் கொண்ட அக்கறையை புருவம் சுருக்கி நோக்கினாள்.

அவளிடம் அவன் ஒரு நாள் கூட இவ்வாறு நடந்துக்கொண்டதில்லை என்பது அவளின் சிந்தையில் உறைத்தது.

‘ஒருவேளை அவருக்கு அவளை பிடிச்சிருக்கா?’ என்னும் வகையில் அவள் சிந்திக்க தொடங்கினாள்.

அவர்கள் இருவரையும் அவள் யோசனையினூடே பார்த்திருக்கும் போதே அவளருகே வந்த தமயந்தி “மதி அண்ணி இனி உங்களுக்கும் எங்களுக்கும் தான் எந்த சம்மந்தமும் இல்லையே…கிளம்புங்க” என திமிராக அவளிடம் வந்து கூற,

உடனே சந்திரமதியின் விழிகள் இவர்களின் புறம் திரும்பின.

அதற்குள் அவளின் முன்னே வந்த ஜித்தேந்திரன் “இன்னும் என்ன அண்ணி பன்னீனு கூப்பிட்டு இருக்கே…அவங்க தான் அண்ணனை கல்யாணம் பண்ணலையே” என நக்கலாக சொல்ல,

அதில் சுறுசுறுவென கோபம் ஏறிவிட்டது அவளிற்கு!

“ஷட் அப்…என்கிட்ட தேவையில்லாமல் பேசாதீங்க…” என சீறிக்கொண்டு அவள் செல்ல,

பட்டென அவளின் கன்னத்தில் ஒரு அடி விழுந்திருந்தது.

விஜயலட்சுமி தான் மகளை அறைந்திருந்தாள்.

அவளோ பெரும் திகைப்புடன் “மம்மி” என கன்னத்தில் கைவைத்து பார்க்கும் போதே “சும்மா மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை என்ன மரியாதை இல்லாமல் பேசிட்டு இருக்கே?” என அவளிடம் வார்த்தைகள் கடித்து துப்பினார்.

விஜயலட்சுமியா தன்னை அறைந்தது என அவள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.

அவளால் சில கணங்கள் இங்கு நடக்கும் எதையும் நம்பவே முடியவில்லை.

“மம்மி அவங்க…” என அவள் பேச விளையும் போதே,

“போதும் நிறுத்துடி…அது உன் தங்கச்சி வீடு…மரியாதையோடு நடந்துக்கோ…புடிக்கலையா நீ வெளிய போ” என அவளின் கரம் பற்றி இழுத்து வாசல் பக்கம் தள்ளிவிட்டார்‌.

அவள் அப்போதும் “மம்மி என் மேலே எந்த தப்பும்…” என தவிப்புடன் தன் நியாயத்தை புரிய வைக்க முயலும் போதே “ப்ச் போதும் நிறுத்துன்னு சொன்னே…வாயை மூடிட்டு நீ கிளம்புடி” என கத்தியதும் அவமானத்தில் சுருங்கிய முகத்துடன் “அப்பா” என தந்தையை ஏறிட,அவரோ முகத்தை வேறுப் புறம் திருப்பிக்கொண்டார்.

அவரின் அந்த உதாசீனம் அவளிற்கு செருப்பால் அடித்த ஒரு உணர்வு!

இந்த உலகமே அவளிற்கு எதிராக திரும்பியது போல் தோன்றவும் அவளின் கண்ணிலிருந்து முதன்முறையாய் நீர் வழிய ஆரம்பித்தன.

சட்டென வழிந்த கண்ணீரை துடைத்தாள்.

அத்துணை நேரமாய் தன் பலவீனத்தை காட்ட விரும்பாமல் அழுத்தமாக நின்றிருந்த பெண்ணிற்கு இப்போது அழுகை வந்தது.

அவள் கண்ணீரை துடைத்தப்போதும் மனதின் தாக்கத்தினால் நீர் வழிந்தன‌.

அதனால் அங்கிருக்கும் யாவரின் முன்பும் தன் கண்ணீரை காட்ட விருப்பமில்லாதவளாய் வேகமாக கோவிலிருந்து வெளியேறினாள்‌.

ஆனால் அவளின் சின்னஞ்சிறிய நெஞ்சம் மட்டும் சிறிது சிறிதாக வெடித்து சிதறிக்கொண்டிருந்தது.

சந்திரமதி அங்கிருந்து வெளியேறியதும் “மன்னிச்சிடுங்க பெரியம்மா…சின்னப்புள்ளை ஏதோ தெரியாமல் பேசிடுச்சு…நீங்க எதுவும் மனசுலே வைச்சுக்காதீங்க” என நீலிக்கண்ணீர் வடித்து கையெடுத்து கும்பிடவும்,காஞ்சனா மாலா எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றிருந்தார்.

இப்போது அவருக்கு மகளின் வாழ்வை விட அவரின் பேராசை மட்டுமே முதன்மையாக இருந்தது.

அவர்கள் இருக்கும் நிலைமையில் அவருக்கு ரத்தினவேல் குடும்பத்தின் உதவி அவசியமாய் இருக்க, அதனால் அவர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை அவர்.

சந்திரமதி இல்லையென்றால் முகிழ்மதி…அவளை வைத்து நினைத்ததை சாதித்து கொள்ளலாம் என்பது அவரின் திண்ணம்!
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top