முகிழ்மதி 28

நேற்று இரவிலிருந்து ஒரு பொட்டு தூக்கமில்லை விஜயலட்சுமிக்கு!
அதிலும்,ரத்தினவேல் மற்றும் வீர் இருவரும் அவரிடம் நடந்துக்கொண்ட முறையை நினைக்கும் போதே தொண்டை குழியில் எச்சில் இறங்க மறுத்தது.
அதேசமயம் அவருக்கு ஒரு விடயம் மட்டும் சர்வ நிச்சயமாக தெரிந்தது.
முகிழ்மதி அவர்களிடம் தான் இருக்கின்றாள் என்று!
‘சனியன் எல்லாத்தையும் அதுங்ககிட்ட ஒப்பிச்சிடுச்சு போலே…நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு வூட்டுக்கு தானே வரணும்…அப்போ இருக்கு அந்த சிறுக்கி மவளுக்கு’ என கறுவிக்கொண்டார்.
அப்போதும் மகளிற்கு என்னவாகிற்றோ என்று கவலைக்கொள்ளாமல் அவளை வஞ்சம் தீர்ப்பதிலே குறியாக இருந்தார் அவர்.
இரவு முழுவதும் அவளை திட்டி தீர்த்தவர்,அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் முகூர்த்தத்திற்கு ஆயுத்தமாகி வந்திருந்தார்.
மூத்த மகளை பார்ப்பதை விட இளையவளை தன் காலிற்கு கீழ் கொண்டு வருவதில் தான் அவரின் முனைப்பு இருந்தது.
அவர் எண்ணியது போலவே முகிழ்மதி கீழிறங்கி வந்தாள்.
ஆனால் அவளின் இரண்டு புறமும் இரண்டு பாதுகாவலர்களுடன்!
அந்த இரண்டு பாதுகாவலர்கள் வேறு யாருமல்ல.
தமயந்தியும் ஜித்தேந்திரனும் தான்!
ஜித்தேந்திரன் அவர் தங்களை நெருங்கி வருவதை கண்டதும் தமயந்தியிடம் கண்ணை காட்டினான்.
உடனே தமயந்தி அந்த சமிக்கையை புரிந்து இலேசாக தலையாட்டியவள் “அண்ணி இதோ இங்க பாருங்களேன்…இது ரொம்ப நல்லாயிருக்கில்லை” என அவளை தன் புறமாக திருப்பி நிறுத்தி தன்னுடைய வளையலை காண்பித்து பேச தொடங்கி விட்டாள்.
முகிழ்மதி இன்னும் அவளின் தாயை கவனித்திருக்கவில்லை.
அவள் ஒரு வித பதட்டத்துடனே அங்கு நின்றிருந்தாள்.
ஆனால் அவளை சுற்றி அரண் அமைத்தது போல் மூன்று ஆண் தூண்கள் இருக்கிறார்கள் என்று அவள் அறியவில்லை.
தமயந்திக்கு முழுமையாக எதுவும் கூறப்படவில்லை என்றாலும் வீர் முகிழ்மதி அறியாமல் அவளை சற்று தள்ளி அழைத்து சென்று “இன்னையிலிருந்து இவ என் தங்கச்சி…இவகிட்ட யாரும் நெருங்காமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு…குறிப்பா அவங்க ஃபேமிலி…” என அவளை எச்சரித்தப்பிறகே பொறுப்பை அவளிடம் ஒப்படைத்திருந்தான்.
அவளிற்கு தன்னவன் உரைக்கும் சொல் தான் வேதவாக்கு!
அந்த அளவு உயிராய் நேசிப்பவளால் அவனது பேச்சை மீற முடியுமா என்ன?
ஆயினும்,அவனை வம்பிழுக்கும் விதமாக “உங்க தங்கச்சிய நான் கண்டிப்பா பத்திரமா பார்த்துக்கிறேன்…பட் அதுக்கு சன்மானமா எனக்கு என்ன தருவீங்க மிஸ்டர் ரவுடி” என யாருக்கும் கேட்காமல் கிசுகிசுப்பான குரலில் அவள் உரைக்க,
அவன் அவளை நன்கு முறைத்தான்.
அவளோ “சொல்லுங்க வீர்” என கண்சிமிட்டி குறும்பாக புருவம் உயர்த்தி கேட்க,
“செவுல்லே இரண்டு அப்பு வேணா தரலாம்…வேற ஒண்ணும் தரமுடியாது” என அவன் சிடுசிடுப்புடன் கூறவும்,
“அதை கொடுத்தாலும் இந்த தமயந்தி வாங்கிக்க ரெடி தான்” என வசீகரிக்கும் குரலில் கூறிய பெண்ணவளை பார்த்தவனிற்கு கடுப்பாக வந்தது.
அவனது கோபத்தை மேலும் ஏற்றி விடும் விதமாக “பட் ஒரே ஒரு அப்ளிகேஷன் மிஸ்டர் ரவுடி…கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க உங்க சிக்ஸ் பேக்கிலே என் முகத்தை டேட்டூ போடணும் …பிகாஸ் அங்க தானே ஃபீரியா இருக்கு…இல்லை…நான் உங்களை கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்…காட் இட்” என ஒற்றை விரல் நீட்டி மிரட்டி கூந்தலை சிலுப்பிக்கொண்டு நடந்து சென்றவளை எரிச்சலுடன் நோக்கினான் வீர்.
‘நீ நினைக்கிறது கனவுலே மட்டும் தான் நடக்கும்’ என சிகையை அழுந்தக்கோதி முணுமுணுத்துக்கொண்டே நண்பனை தேடி சென்றான் வீர்.
இவர்கள் மூவரும் ஒன்றாக கீழிறங்கி வந்திருந்தனர்.
தமயந்தியோ முகிழ்மதியை திரும்பவே விடாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் முகிழ்மதியே அனைத்தையும் மறந்துவிட்டு சகஜமாக மாறிப் போனாள்.
அதற்குள் விஜயலட்சுமி ‘இவளுக்கு இருக்க ஏத்தத்தை பார்றேன்…என்னை கண்டுக்க மாட்டிக்கிறாள்…இன்னைக்கு இவளுக்கு இருக்கு’ என பல்லைக்கடித்து அவளை நெருங்க முற்பட,இப்போது அவரை வந்து வழி மறைத்தான் ஜித்தேந்திரன்.
மற்ற இருவர் அளவிற்கு அவனது தோரணை மிரள வைக்கும் படி இல்லாததால் ‘என்ன?’ என்பது போல் தெனாவெட்டாக அவனை பார்த்தார்.
அவனோ “ஆன்ட்டி உங்களுக்கு என்ன வேணும்?” என சிரித்துக்கொண்டே கேட்க,
அவனின் சிரிப்பு அவருக்குள் வன்மத்தை தூண்டி விட்டன.
ஆனால் மாப்பிள்ளை வீட்டினரை சேர்ந்தவன் என்பதால் இதழை கஷ்டப்பட்டு விரித்து “ஒண்ணுமில்லை தம்பி…என் பொண்ணுக்கிட்ட ஒரு விஷயத்தை பத்தி பேசணும்…” என்று உரைத்து அவனை தாண்டி செல்ல முயல,
“ஆஹான்…அவ்வளவு சீக்கிரம் நீங்க யாருக்கிட்டயும் பேசமுடியாது ஆன்ட்டி” என அவரின் முன்பு வந்து நின்று மீண்டும் வழி மறைத்தான் சிறியவன்.
அவருக்கு உள்ளுக்குள் கடுப்பாக வந்தது.
“என்ன தம்பி இது…நான் என் பொண்ணுக்கிட்ட பேசணும்னு சொல்லறேன்…நீங்க விடமாட்டிக்கிறீங்க?நான் சத்தம் போட்டால் இங்க என்ன நடக்கும் தெரியுமா?” என ஆத்திரத்துடன் முகம் சிவக்க வினவ,
அவனோ “ஓ…சத்தம் போடப்போறீங்களா ஆன்ட்டி?என்னானு நீங்க சத்தம் போடப்போறீங்க…போடுங்க…நானும் வெயிட் பண்ணி பார்க்கறேன்” என எள்ளலாக கூறி மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி நின்றுக்கொண்டான்.
அவன் இதழ்கள் மட்டுமே புன்னகைத்துக் கொண்டிருந்தது.
அவனது விழிகளில் தெரிந்த ரௌத்திரம் அவரை மிரட்சியுற செய்ய ‘இவன்கிட்ட பேசினால் வேலைக்கு ஆகாது…’ என்றெண்ணி “முகிழு…அம்மாடி முகிழு…” என சத்தமாக மகளை எட்டி அழைக்க,
அவளது தாயின் குரல் அவளது செவியை தீண்டிய கணமே முகிழ்மதி திடுக்கிட்டு திரும்பப்போனாள்.
அதற்குள் தமயந்தி “அண்ணி அங்க பாட்டி ஏதோ எடுத்து வைக்கணும்னு சொன்னாங்க…வாங்க…” என படபடப்புடன் கூறி அவளை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டாள்.
அதைக்கண்டு கடுப்பான விஜயலட்சுமி “அடியே முகி…” என முடிப்பதற்கு முன்பே அவரின் தொண்டைக்குழிக்குள் வார்த்தை சிக்கிக்கொண்டன.
ஏனெனில்,ஜித்தேந்திரன் கையிலிருந்த குட்டி கத்தியை பார்த்தவரின் முகமெல்லாம் பயத்தில் வெளிறி விழிகள் விரிந்தன.
நான்கு சென்டி மீட்டர் நீளம் மட்டுமே இருந்தது அந்த கத்தி!
‘எப்படிறா’ என்பது போல் அவர் மிரட்சியோடு பார்க்க “ஓ…சாரி வாட்சிலே ஒரு சேஃப்டிக்கு எப்பவும் இந்த கத்தி வைச்சிருப்பேன்…பார்க்க தான் இது பொம்மை கத்தி மாதிரி இருக்கும்…பட் பிளேடை விட செம்ம ஷார்ப்…வேணும்னா டெஸ்ட் பண்ணலாமா ஆன்ட்டி?” என சிரித்துக்கொண்டே கத்தியை அவரின் புறம் நீட்டி அவன் கேட்க,
அவரோ சட்டென ஓரடி பின்னால் நகர்ந்து ‘அடேய் நீங்கயெல்லாம் அரசியல்வாதிகளா இல்லை கொலைக்கார கும்பலாடா…ஒரே துப்பாக்கி கத்தியா வைச்சிருக்கீங்க’ என அவர் பீதியுடன் எச்சிலை விழுங்க,
அவனோ சாவகாசமாக கத்தியை கடிகாரத்திற்குள் மீண்டும் சொருகி வைத்தான்.
இப்போது அவை பார்ப்பதற்கு ஒரு சாதாரண கைகடிகாரம் போன்று தான் காட்சியளித்தது.
வயதில் சிறியவனாக இருக்கிறான் அவனை பேசியே விரட்டிவிடலாம் என்ற இறுமாப்புடன் வந்தவரின் நெஞ்சை அடைக்க வைத்திருந்தான் ஜித்தேந்திரன்.
அடுத்ததாக அவனோ “ஆன்ட்டி என்கிட்ட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் கூட இருக்கு…பார்க்கறீங்களா?” என கேட்டுக்கொண்டே தனது கால்சராயினுள் கைவிட்டு அந்த பொருளை வெளியே எடுத்தான்.
அவன் எடுத்த பொருளை பார்த்தவருக்கு நெஞ்சுக்குழி வற்றியேப்போனது…
அதுவொரு சிறு வடிவ கை துப்பாக்கி!
அவர் “ஆத்தி…” என நெஞ்சத்தில் கைவைத்துக்கொள்ள,
அவனோ அவருக்கு நேராக நீட்டி “உங்களை சூட் பண்ணலாமா ஆன்ட்டி?” என்று விளையாட்டாக கேட்டதும் தான் தாமதம்!
“தம்பி என்ன பண்ணறீங்க?” என அவர் நடுக்கத்துடன் திக்கி திணறி கேட்க,
அவனோ அவரின் பயத்தை கண்டுக் கொள்ளாமல் “டிஷ்யூம்” என துப்பாக்கியை அழுத்தியிருந்தான்.
அவருக்கு ஒரு கணம் இதயமே நின்றுவிட்டது.
“அம்மா” என உச்சக்கட்ட திகிலோடு காதை பொத்தி கண்மூடிக்கொள்ள,
அவரின் பயத்தை பார்த்த ஜித்தேந்திரனிற்கு சிரிப்பாக வந்தது.
“ஆன்ட்டி…ஆன்ட்டி…” என்றழைத்து கலகலவென அவன் சத்தமாக சிரிக்க,
அவரோ மெதுவாக ஒற்றை கண்ணை திறந்து அவனை பார்க்க,
அவன் கையிலிருந்த துப்பாக்கியில் நெருப்பு வந்துக்கொண்டிருந்தது.
“என்ன ஆன்ட்டி பயந்திட்டிங்களா?இது ஜஸ்ட் ஒரு லைட்டர் தான்…பட் இதிலே சுட்டால் கூட கை வெந்துப்போகும்…பார்க்கறீங்களா?” என ஒரு மார்க்கமான குரலில் கேட்டுக்கொண்டே அவரை விழிகளால் ஊடுருவினான் ஆடவன்.
அவரோ அவனது ஜித்து வேலையில் மரணப்பயத்தில் உறைந்துப்போயிருந்தார்.
‘ஆத்தி இவனுக்கு அவனுங்களே பரவாயில்லை போலே…இவன் இன்னும் எங்கங்க என்னென்ன ஆயுதமெல்லாம் மறைச்சு வைச்சிருக்கானோ…உங்க சங்காத்தாமே வேணாம்…ஆளை விடுங்கடா சாமி…’ என அவர் அங்கிருந்து ஓடியே விட்டார்.
ஜித்தேந்திரன் பார்ப்பதற்கு தான் சாது…ஆனால் ஒரு காரியத்தை கையாளுவதில் அவன் ஒரு ஜித்தன் என்று அவர் அறியவில்லை.
அவர் அங்கிருந்து ஓடி சென்றதும் துப்பாக்கியில் எரிந்துக்கொண்டிருந்த புகையை ஊதி அணைத்த ஜித்தேந்திரனின் இதழ்கள் வன்மத்துடன் புன்னகைத்தன.
முகிழ்மதியை சுற்றி மூன்று பாதுகாப்பு அரண்கள் இருக்கையில் அதற்கு மேலும் எங்கு அவரால் மகளை நெருங்க முடியும்?
அதனால் விஜயலட்சுமி முகிழ்மதியை நெருங்க வேண்டும் என்ற கனவை அடியோடு அழித்துவிட்டார்.
அவளை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்தவரை “விஜயலட்சுமி இங்க வா” என காஞ்சனா மாலா அழைத்தார்.
‘இந்த கிழவிக்கு என்ன கேடு…அது எதுக்கு கூப்பிடுது’ என கடுப்புடன் முகத்தை சுழித்துக்கொண்டு அவர் சென்றார்.
ஆனால் அங்கு சென்றதும் தன் நல்லவர் வேடத்தை ஆரம்பித்துவிட்டார்.
“சொல்லுங்க பெரிம்மா…” என இளித்தவரை மேலிருந்து கீழாக நோக்கிய காஞ்சனா மாலா “போய் சந்திரமதிய கூட்டிட்டு வா…நலுங்கு வைச்சா தானே குளிச்சிட்டு புள்ளைய தயார் பண்ண முடியும்…அதை விட்டுட்டு சின்ன பையன் கூட விளையாடிட்டு இருக்கவே” என குரலுயர்த்தி அதட்ட,
‘ஏதே நான் விளையாடறானே…விட்டால் அவன் என்னை கொன்னுருப்பான் கிழவி’ என மனதிற்குள் திட்டியவர் வெளியே பவ்யமாக “சரிங்க பெரியாம்மா” என்றார் கம்மிய குரலில்.
அவரிடமிருந்து சற்று தள்ளி வந்ததும் ‘கிழவிக்கு இந்த வயசுலே அதிகாரத்தை பாரு…இருக்கட்டும்…மதி மட்டும் அங்க கல்யாணம் பண்ணி போகட்டும்…அப்புறம் இருக்கு இந்த கிழவிக்கு’ என வெதும்பிக்கொண்டே சந்திரமதியின் அறை கதவை தட்டினார்.
ஆனால் அவர் ஒரு முறை தட்டியதும் தாளிடாத அந்த கதவு தானாகவே திறந்துக்கொண்டது.
‘என்ன கதவு திறந்திருக்கு’ என குழப்பமாக உள்ளே நுழைந்து “கண்ணு மதி…மதி…” என அழைத்துக்கொண்டே அறை முழுவதும் தேடி பார்த்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
அறை முழுவதையும் அலசி ஆராய்ந்தும் அவருக்கு சந்திரமதி அங்கு இருப்பது போல் தெரியவில்லை.
‘எங்கப்போயிட்டாள் இந்த புள்ளை’ என குழப்பத்துடன் தலையை திருப்பியவரின் பார்வையில் மேசையின் மீதிருந்த காகிதம் கண்ணில் பட்டது.
காற்றில் படபடத்த அந்த காகிதம் அவரின் வயிற்றில் புளியை கரைத்தது.
மெதுவாக அந்த காகிதத்தை கையில் எடுத்து பார்த்தவரின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தது.
அந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் அவரால் அதில் இருப்பதை நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிந்தது.
‘அட குடியக்கெடுத்தவளே’ என அதிர்ச்சியில் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் விஜயலட்சுமி.
அந்த நேரம் ரத்தினவேல் உறவின பெண் ஒருவள் “அக்கா சந்திரமதி தயாரானு பாட்டி கேட்டுட்டு வர சொன்னாங்க” என்றவாறு அங்கு வர,
அவரோ அவசரமாக கடிதத்தை மறைத்து வைக்க முயன்றார்.
ஆனால் அதற்குள்ளே அந்த பெண்ணின் கண்ணில் கடிதம் விழுந்திருந்தது.
அதிலும்,அவர் இடிந்துப்போய் அமர்ந்திருந்த தோரணை வேறு சூழ்நிலையை புரிய வைக்க “பாட்டி…பாட்டி…” என பரபரப்புடன் அழைத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.
“அட நில்லும்மா…நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லை…” என அவர் அவசரமாக தனது கனத்த உடம்பை தூக்கிக்கொண்டு எழுவதற்குள்ளாகவே பூபதி குடும்பத்து வீட்டு பெரியவர்கள் அனைவரும் அந்த அறைக்குள் பிரசன்னமாகியிருந்தனர்.
கூடவே “என்னாச்சு?” என பதறிப்போய் கேட்டுக்கொண்டே சிவராமன் ஓடி வந்தார்.
“விஜயலட்சுமி எங்க உன் பொண்ணு?” என எடுத்த எடுப்பிலே சிங்கத்தின் கர்ஜனையோடு வெளி வந்தது காஞ்சனா மாலாவின் குரல்.
சில நிமிடங்களில் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
விஜயலட்சுமிக்கு தலையே சுற்றியது.
தன் இத்தனை வருடத் திட்டமும், கனவும் ஒரு நொடியில் தரைமட்டமானதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
விஜயலட்சுமி அப்போதும் அந்த சூழ்நிலையை சமாளிக்க முயன்றார்.
“பெரியம்மா சந்திரமதி இப்படியெல்லாம் நடக்கிற பொண்ணில்லை…அவளை யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க…முதல்ல அவளை போய் தேடலாமுங்க…வாங்க…” என அழுக்குரலில் அவர் கெஞ்ச,
சிவராமனோ விஷயத்தை கேள்வியுற்று “என் மானமே போச்சு விஜி… இனி நான் வெளியே தலை காட்ட முடியாது” என தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
“இன்னும் என்ன தேடணும்னு சொல்லுறீங்க?அதான் உங்க பொண்ணு தெள்ளத்தெளிவாக லெட்டர் எழுதி வைச்சிட்டு போயிட்டாளே” என்று அந்த உறவின பெண் சத்தமிட,
“சிவராமா எத்தனை நாளா திட்டம் போட்டு வைச்சிருந்தே நீ…முதல்ல கட்சிய விட்டு போய் எனக்கு துரோகம் பண்ணே…இப்போ உன் பொண்ணு…இதெல்லாம் நாளைக்கு வெளியே தெரிஞ்சா தமிழ்நாட்டிலே ஒரு பையன் மதிக்கமாட்டான்…எங்களையெல்லாம் கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்தறீயா நீ?” என விஜயேந்திர பூபதி சிங்காரம் மாறி கர்ஜிக்க,
சிவராமனோ “ஐய்யோ இல்லீங்கய்யா…நான் அப்படியெல்லாம் எதுவும் பண்ணலைங்க…எங்களுக்கே இது புது செய்தி தான்…என்னை மன்னிச்சிடுங்கய்யா” என கண்ணில் நீருடன் இறைஞ்சினார்.
அதைப்பார்த்து “ப்ச்” என வெறுப்போடு முகத்தை திருப்பிக் கொண்டார் அவர்.
வானதிக்கோ மகனின் எதிர்கால வாழ்வை எண்ணி கவலையாக இருக்க “என்ன இப்படி கழுத்தை அறுத்திட்டீங்க விஜி?என் பையன் ஆசைப்பட்டான்ற ஒரே காரணத்துக்காக தான் உங்க வீட்டு படியேறி வந்து பொண்ணு கேட்டோம்…இப்போ என் பையனை மொத்தமா அவமானப்படுத்திட்டிங்கயில்லை…இப்போ என் பையன் எப்படி வெளியே தலைக்காட்டுவான்…கடவுளே” என கண்ணில் நீருடன் புலம்பி தலையை பிடித்துக்கொண்டார் அவர்.
விஜயலட்சுமியோ “வானதி என் பொண்ணு அப்படி பண்ற புள்ளை இல்லை…அவளை யாரோ கடத்திட்டாங்க…வாங்க அவளை போய் தேடலாம்” என தவிப்புடன் கூற,
அதுவரை மௌனமாக இருந்த காஞ்சனா மாலா தீர்க்கமான பார்வையுடன் எழுந்தார்.
“விஜயலட்சுமி இதுக்கு மேலே பேசறதுக்கு இங்க ஒண்ணுமே இல்லை…எனக்கு குறிச்ச நேரத்திலே என் பேரன் கல்யாணம் நடந்தே ஆகணும்” என அவர் தீட்சண்ய குரலில் கூறியதும்,
அங்கிருந்த அனைவரும் ‘என்ன உளருறாங்க?’ என்பது போல் அவரை பார்க்க,
அவரோ “சந்திரமதி போனால் என்ன?அதான் முகிழ்மதி இருக்காளே…இரண்டு பேரும் இரட்டை பிள்ளைங்க தானே…அவளை வைச்சு கல்யாணத்தை நடத்திடலாம்” என அதிரடியாக குண்டை தூக்கி வீசியிருந்தார்.
அவர் கூறியதை கேட்டு அவ்விடத்தில் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு நிசப்தம்!
அங்கிருந்த அனைவருக்கும் ‘என்ன பேசுவது?’ என்றே தெரியவில்லை.
அதே நேரம் தனக்கு நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல் முகிழ்மதி அவஸ்தையுடன் தாவணியை பற்றி சுருட்டியப்படி வெளியே நின்றிருந்தாள்.
அவளிற்கு அருகே நின்றிருந்த தமயந்தி “என்னடா?” என புருவம் உயர்த்தி ஜித்தேந்திரனிடம் கேட்க,
அவனோ வந்த சிரிப்பை இதழ்கடித்து அடக்கி “நத்திங்…உள்ளே ஒரு சினிமா படம் ஓடிட்டு இருக்கு…அதுவும் ஆக்ஷன் அன்ட் எமோஷனல் ஃபிலீம்” என மெல்லிய குரலில் அவளிடம் கூற,
தமயந்தியோ அவனை முறைத்து “டேய் அண்ணா…என்ன நடக்குது இங்கே?” என இடையில் கைகுற்றி கேட்க,
“வெயிட் அன்ட் ஸீ…” என கண்சிமிட்டி கூறினான் அந்த மாயக்கண்ணன்.
“டேய் ஜித்து…” என அவள் சண்டைக்கு செல்லும் போதே ரத்தினவேலும் வீரும் அங்கு பரபரப்புடன் வந்து சேர்ந்தனர்.
ரத்தினவேல் அவர்களை தாண்டி செல்லும் போது அவனின் விழிகள் முகிழ்மதியின் மீது அழுந்தப்பதிந்து மீண்டது.
வீருக்கும் அவ்விடத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை.
“என்னடா?” என்று அவனும் குழப்பமாய் ஜித்தேந்திரனிடம் வினவ,
“அண்ணா வந்திட்டாருல்லை…இப்போ மெயின் பிக்சர் ஸ்டார்ட் ஆகிடும்…லெட் ஸீ” என நேரடியாக எதுவும் கூறாமல் மர்மப்புன்னகை பூத்தான் அவன்.
ஆனால் அவனது பேச்சை கேட்ட மற்றவருக்கு தான் தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது.
அதிலும்,முகிழ்மதிக்கு அடிவயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டோடின.
அவளிற்கு விஷயம் புரியவில்லை என்றாலும்,அவளின் உள்ளுணர்வு அவளிற்கு ஏதோ ஒரு கதைக்கூறியது.
முகிழ்மதி 29:
முகிழ்மதியை கீழே அனுப்பிவிட்டு நண்பனிடம் வந்த வீர் “பூபதி முகிழ்மதியை நான் என் தங்கச்சியா தத்தெடுத்துக்கலாம்னு இருக்கேன்…லீகல் ஃபார்மாலிட்டிக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்” என அவன் முடிவாக அறிவிக்க,ரத்தினவேல் அவனை இமைகள் இடுங்க பார்த்திருந்தான்.
“நீ தெரிஞ்சு தான் பேசறீயா வீர்?உன்னாலே ஸ்டார் இடத்தில் வேறொரு பொண்ணை வைச்சு பார்க்க முடியுமா?” என தீர்க்கமான குரலில் அவன் கேட்க,
சில வினாடி வீரிடம் ஆழ்ந்த மௌனம்!
பின்பு தலையை உலுக்கி விழி உயர்த்திய வீர் பிரதாப் “ஐ டெம்ன் ஷ்யூர் பூபதி” என திடமாக கூறியிருக்க,
அவனை சலிப்பாக நோக்கிய ரத்தினவேல் “எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சு பார்த்துக்கலாம்…இப்போ எதுவும் பேச வேணாம்” என அவனும் திட்டவட்டமாக உரைத்தான்.
அச்சமயம் ரத்தினவேலிற்கு அவனது பாட்டியிடமிருந்து அழைப்பு வந்தது.
“உடனே சந்திரமதி ரூமுக்கு வா பூபதி” என்றவரின் குரலில் இருந்த அழுத்தம் ரத்தினவேலின் புருவத்தை சுருங்க வைத்தது.
அவனிற்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய “ம்” என்று மட்டும் உரைத்த பூபதி விழியசைவிலே ‘வா’ என வீரை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
“என்னடா?” என வீர் கேட்டதற்கு ரத்தினவேலிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
கீழே வந்த ரத்தினவேலின் கூரிய விழிகள் மேடைக்கு அருகே மஞ்சள் நிற தாவணியில் பதட்டத்துடன் நின்றிருந்த முகிழ்மதியின் மீது பதிந்தது.
அவளிற்கு அருகே தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்த சகோதர சகோதரிகளை பார்த்த ரத்தினவேலிற்கு ஓரளவு விடயம் புரிப்பட்டிருந்தது.
ஜித்தேந்திரனின் இதழில் இருந்த புன்னகையும் அவனின் கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை.
அவன் நேரே அவர்களை தாண்டி சந்திரமதியின் அறைக்குள் விறுவிறுவென நுழைந்தான்.
ஜித்தேந்திரனோ தமையன் தன்னை கடந்து சென்றதும் ‘காட்…நான் தான் இதை பண்ணேன்னு அண்ணா கண்டுப்பிடிச்சிடுவரோ?’ என உள்ளுக்குள் பீதியுற்றாலும் ‘அட பார்த்துக்கலாம் போ’ என அலட்சியமாக இதழை சுழித்துவிட்டு நின்றுக் கொண்டான்.
வீர் வந்து விடயத்தை கேட்டப்பிறகே அனைவருக்கும் உண்மையே தெரிய வந்தது.
வீருக்கே அது பேரதிர்ச்சி தான்!
அவனிற்கும் இந்த திருமணம் நடப்பது பிடிக்கவில்லை தான்.ஆனால் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவனால் மகிழ்ச்சியுற முடியவில்லை.
அவனிற்கு தோழனை நினைத்து கவலையாக இருந்தது.
சமுதாயத்தில் மிகப்பெரிய பதவி மற்றும் பொறுப்பில் இருக்கும் மனிதனின் திருமணம் நின்றால் உலகம் எவ்வாறெல்லாம் அவனை அவமதிக்கும் என்றறிந்து அவன் வருத்தம் கொண்டான்.
தமயந்திக்கு மகிழ்ச்சி மற்றும் வருத்தம் இரண்டுமே சரிவிகிதமாக ஆக்கிரமித்திருந்தன.
ஆனால் முகிழ்மதியின் கண்ணோட்டமோ முற்றிலும் வேறாக இருந்தது.
தமக்கையின் விடயம் கேள்வியுற்று மொத்தமாய் இடிந்துப்போய் நின்றிருந்தாள்.
மற்றவர்களுக்கு சந்திரமதி யாரோவாக இருக்கலாம்.ஆனால் முகிழ்மதிக்கு அவள் இரட்டை சகோதரி!
கருவில் உதித்த சமயத்திலிருந்து ஒன்றாக அவளோடு பயணிக்கும் சகோதரியை காணவில்லை என்று கேள்வியுறும் போது அவளால் எவ்வாறு நிம்மதியாக இருக்கமுடியும்?
மற்றவர்கள் கூறும் கதையெல்லாம் அவள் சிறிதும் நம்பவில்லை.
சில வேளைகளில் சுயநலமாக சிந்தித்தாலும் அவள் துணிச்சலான பெண் என்பதை நன்கு அறிவாள்.
அப்படியான பெண் கோழைப்போல் ஓடிவிட்டாள் என்பதை ஏற்க முடியாமல் தவித்த முகிழ்மதி “இ..ல்லை…என் அக்கா அப்படி பண்ணறே பொ…ண்ணில்லை..” என இதழ்கள் அழுகையில் துடிக்க கூறியவளின் குரல் கேட்டு மற்ற மூவரும் அவளின் புறம் திரும்பினார்கள்.
அதன் பிறகே அவர்களுக்கு அவளின் நிலைமையே புரிந்தது.
உடனே வீர் பதறிப்போய் அவளருகே வந்து “டால் டோன்ட் க்ரை…என்னாச்சுனு முதல்ல விசாரிப்போம்…அழக்கூடாதும்மா” என ஆதரத்துடன் மொழிந்து அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
அவளோ அவனை ஏறிட்டு “அ..ண்ணா அக்கா அப்படி பண்ணமாட்டாள்…” என அவளின் அறையை கைகாட்டி திக்கி திணறி கண்ணீருடன் பேச,
அவளின் கண்ணீர் அவனின் நெஞ்சில் வலியை ஏற்படுத்த “சரி…சரி பேசிக்கலாம்…நீ அழக்கூடாதும்மா” என ஒரு குழந்தையை சமாதானம் செய்வது போல் அவளின் கரத்தை வருடிவிட்டவனை பார்த்து வாயை பிளந்தாள் தமயந்தி.
அவள் வீரை இப்படியொரு அவதாரத்தில் பார்த்ததே இல்லை.
வீர் பாசமானவன்…பண்பானவன் என்று அவள் அறிந்த விடயம் தான்!
ஆனால் அவன் தங்கை நட்சத்திரா இறந்த பிறகு இறுக்கத்துடன் சுற்றி வந்த வீர்,திடீரென்று இவளிடம் பாசத்தில் குழைவதை காண ஆச்சரியமாக இருந்தது.
அதனால் அதிசயித்து வாயை பிளந்தவளை கண்ட ஜித்தேந்திரனின் இதழ்கள் இலேசாக விரிந்தது.
உடனே அவளின் காதோரம் குனிந்து “வாயை கொஞ்சம் மூடு லட்டு…ஈ உள்ளே போயிடப்போகுது” என கிசுகிசுப்பான குரலில் கேலி செய்ய,
அதில் திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்பிய தமயந்தி “என்னடா நடக்குது இங்கே?” என கண்ணால் இருவரையும் சுட்டிக்காட்ட,
அவனோ தோளை குலுக்கி “உனக்கு தான் இது புதுசு…நான் நேத்திலிருந்தே இந்த பாசமலர் படத்தை ஓசியிலே பார்த்திட்டு தான் இருக்கேன்” என்றான் நக்கலாக.
“இது வேறய்யா” என நெற்றியை நீவியவளிற்கு திடீரென்று ஏதோ ஒன்று உறுத்த,தனது தமையனையே குறுகுறுவென பார்த்தாள்.
‘ஐய்யையோ இவ வேற கண்டுப்பிடிச்சிட்டா போலே…பார்க்கறாளே…பார்க்கறாளே’ என உள்ளுக்குள் பீதியுற்றாலும் வெளியே இதழை சிரித்தாற் போன்று வைத்திருந்தான் ஜித்தேந்திரன்.
ஆனால் இவன் ஜித்தன் என்றால் அவள் எத்தனியாயிற்றே?
அதனால் ஒற்றை புருவம் உயர்த்திய தமயந்தி “ஹலோ பிரதர் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் வா…வா அப்படிக்கா போவோம்” என அவனின் சட்டை காலரை பற்றி அங்கிருந்து அவனை தரதரவென இழுத்து சென்றிருந்தாள் தமயந்தி.
வீரோ இவை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
அவனிற்கு அவனது புது தங்கை மட்டுமே உலகமாகியிருந்தாள்.
அவளை சமாதானம் செய்வதே தன்னுடைய தலையாய கடமை என்பது போல் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்திருந்தான்.
சந்திரமதி எழுதி வைத்திருந்த அந்த கடிதம் இப்போது ரத்தினவேலின் கையில் படபடத்துக்கொண்டிருந்தது.
அவனின் முகம் மட்டும் பாறை போல் இறுகியிருந்தது.
சிவராமனோ கைகள் நடுங்க ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்.
மகள் அதில் எழுதி இருந்த வரிகள் ஒவ்வொன்றும் அவரின் அரசியல் வாழ்வின் மரண சாசனமாக அவருக்குத் தெரிந்தது.
‘என்னை யாரும் தேட வேண்டாம்… எனக்கு பிடித்தவனுடன் போகிறேன். இந்த திருமணத்தில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை!’ என மிக சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதிவைத்துவிட்டு பறந்து சென்றிருந்தாள் சந்திரமதி.
விஜயலட்சுமி ஒரு பக்கம் புடவை முந்தானையில் வாயை பொத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அந்த அழுகையிலும் மகளை பிரிந்த துயரத்தை விட, கைநழுவிப்போன அதிகாரத்தின் மீதான ஏமாற்றமே விஞ்சி நின்றது.
ரத்தினவேல் எதுவும் பேசாமல் அங்கிருந்த சுவற்றையே வெறித்து பார்த்திருந்தான்.
வானதியோ “பூபதி பாட்டி என்னென்னவோ சொல்லறாங்கப்பா…எங்களாலே சட்டுனு ஒரு முடிவுக்கு வர முடியலை…ஆனால் உன் கல்யாணம்…” என அதற்கு மேல் பேச முடியாமல் அவர் இதழை கடித்துக்கொள்ள,
விஜயேந்திரனும் எதுவும் பேச முடியாமல் ரத்தினவேலை போல் இறுக்கமாக நின்றிருந்தார்.
“இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி?சட்டுப்புட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என ரத்தினவேலின் உறவினர் ஒருவர் கூறியதும்,
அந்த கடுஞ்சூழலை தன் கட்டுப்பாட்டிற்குள் கீழ் கொண்டு வரும் விதமாக காஞ்சனா மாலா தொண்டையை செருமினார்.
“எல்லாருக்கும் பொதுவாவே நான் பேசிடறேன்…பூபதி நீயும் கேட்டுக்கோப்பா…” என ரத்தினவேலை அழுத்தமாக பார்த்து கூறியவர்,
அவன் சிரம் உயர்ந்ததும் “நான் முன்னாடியே சொன்னது தான் சிவராமன்…இதோ பாருங்க…என்ன சூடான செய்தி கிடைக்கும்னு பத்திரிக்கைக்காரங்க ஒரு பக்கம் ரகசியமாக உளவுப்பார்த்திட்டு இருக்காங்க…இன்னொரு பக்கம் நம்ப சொந்தகாரங்க…எப்போடா இவங்க ஒடுங்கிப்போவாங்க…அப்போ பார்த்து அடிக்கலாம்னு அவனுங்க ஒரு பக்கம் காத்துகிடக்கானுங்க…இதுக்கெல்லாம் மேலே இது சாதாரண வீட்டு கல்யாணம் கிடையாது…தமிழ்நாட்டோட முதலமைச்சர் வீட்டு கல்யாணம்…அடுத்த வாரம் நடக்கயிருக்கிற ரிஷப்ஷனுக்கு பி.எம்யிலிருந்து பெரிய பெரிய தொழிலதிபர் எல்லாம் வருவாங்க…இப்போ போய் பொண்ணு ஓடிப் போயிட்டாள்…கல்யாணம் நின்ன விஷயமெல்லாம் தெரிஞ்சா எங்களை யாரு மதிப்பாங்க…எங்க குடும்ப கௌரவமே கப்பலேறிடும்…எங்களோடது மட்டுமில்லை…உங்களோட மானமும் தான் போகும்…இதுக்கு மேலே உங்களாலே வெளியே தலைக்காட்ட முடியாது…அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகிடும்…எனக்கு அதையெல்லாம் விட ரொம்ப முக்கியம் என் பேரன்…அவன் ஒரு அவமானத்தை சந்திக்க நான் விடமாட்டேன்…அதனாலே என் பேரன் ரத்தினவேலுக்கு இன்னைக்குக் கல்யாணம் நடந்தே ஆகணும்…அதுவும் முகிழ்மதி தான் பொண்ணு” என அங்கிருந்த ஒருவரும் எதிர்த்து பேச முடியாத வகையில் அனைவரையும் ஆட்டிப்படைத்தார் பெரியவர்.
அவரின் பேச்சில் இருந்த தீர்க்கம் அனைவரின் வாயையும் அடைத்திருந்தது என்றால் மிகையல்ல.
எண்பது வயது அனுபவமுள்ள பெண்மணி என்பது அவரது தெளிவான பேச்சில் நன்றாகவே தெரிந்தது.
அவர் அங்கு பேசிமுடித்ததும் அவ்விடத்தில் ஒரு ஆழ்ந்த மௌனம்!
ஒரு ஓரமாக நின்றிருந்த மகனை பார்த்து “விஜய் உனக்கும் சேர்த்து தான் சொல்லறேன்…நீ என்னவோ மூணாவது மனுஷன் மாதிரி ஒதுங்கி நிக்கறே இங்க வா?நீ என்ன சொல்லறே?” என தன் மகனையும் அதட்டி அந்த பேச்சில் இழுத்தார்.
அவரோ “நான் என்னங்கம்மா சொல்லறது நீங்க சொன்னால் சரியா தான் இருக்கும்” என பெருமூச்சுடன் தன் சம்மதத்தை கூறிவிட்டார்.
உடனே அவரின் இதழில் சிறு புன்னகை ஒன்று ஊதியமாக அங்கிருந்த மற்றவரின் முகத்தை அளவிட ஆரம்பித்தார் பெரியவர்.
அனைவரின் முகத்திலும் அரைக்குறையான சம்மதம் தெரிந்தது.
விஜயலட்சுமிக்கு மட்டும் ஆத்திரமாக வந்தது.
‘இந்த சனியனுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா?’ என மனதிற்குள் வெந்து புழுங்கினார் அவர்.
“நீ என்னப்பா சொல்லறே?” என அவர் ரத்தினவேலை பார்த்து கூர்மையாக வினவ,
அதுவரை மௌனமாக இருந்த ஆடவன் “எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை பாட்டி” என்றான் அழுத்தமாக.
ஆனால் காஞ்சனா மாலாவோ “பூபதி உன்கிட்ட நான் அனுமதி கேட்கலை…இது என்னோட ஆணை…நீ பண்ணி தான் ஆகணும்” என முடிவாக குரலுயர்த்தி கட்டளையிட்டார்.
அவரை விழிகளால் உறுத்து விழித்தவனால் அவரை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை.
அவனால் பேசவும் முடியாது.
சிறு வயதிலிருந்து பாட்டியை பார்த்து மற்றவரை அதிகாரம் செய்ய கற்றுக் கொண்டவன் அவன்.
அவரின் ஆளுமையையும் கம்பீரத்தையும் பார்த்து வளர்ந்தவனால் அவரின் பேச்சை மீறமுடியாது.
அதனால் அவன் மௌனம் காக்க,
“அப்போ சரி பெரியம்மா…புள்ளை கிட்ட நான் போய் பேசறேன்” என விஜயலட்சுமி புறப்பட ஆயுத்தமானார்.
அவர் முகிழ்மதியை தூண்டிவிட்டு கலகமூட்ட நினைத்திருக்க,அதையறிந்தாற் போன்று “நில்லு விஜி…நீ போக வேண்டாம்…பூபதி நீ போய் முகிழ்மதிக்கிட்ட பேசி சம்மதம் வாங்கு” என பேரனிடம் கட்டளையிட,
அவனோ அவரை ஆழ்ந்து பார்த்து “நீங்க நினைச்சதை நடந்துங்க பாட்டி” என இரட்டை அர்த்தத்துடன் கூறி,கடிதத்தை அங்கே வீசிவிட்டு வெளியேறினான்.
பாட்டியின் சொல்லை மீறி நடக்கும் அதிகாரம் அவனிற்கு துளியுமில்லை.
அதனால் வேறுவழியின்றி அவனே அவளிடம் பேசுவதற்கு சென்றான்.
உள்ளே சென்ற சில நிமிடங்களில் வெளியே வந்த ரத்தினவேல் சிங்கமென அவள் முன்பு வந்து நின்றான்.
அவனது விழிகளில் அப்படியொரு கோபம்…முகத்தில் அப்படியொரு ஆத்திரம்!
கூடவே எதுவும் செய்ய முடியாத இயலாமை!
“உன்கிட்ட பேசணும் வா” என முகிழ்மதியின் கரத்தை இறுகப்பற்றிய ஆடவனது முகம் இறுக்கமாக இருந்தது.
அவனின் பிடியில் அவளின் மெல்லிய கரம் வலித்தன.
அவளின் முகப்பாவனையில் அதனை படித்த வீர் “பூபதி” என தவிப்புடன் ஏதோ பேச முன் வர,
“டேய் உன் தங்கச்சிய ஒண்ணும் பண்ணலைடா…பேச தான் கூட்டிட்டு போறேன்…வந்திடறான் பாசமலர்” என கடுப்புடன் மொழிந்து “முகிழ்மதி வா” என அவளை வேகமாக அழைத்து சென்றான்.
அவளோ பாவமாக வீரை திரும்பி பார்க்கவும் ‘ஒண்ணுமில்லை…நான் இருக்கேன்’ என கண்ணை மூடி திறந்து ஆறுதல் கூறி அனுப்பினான்.
வீரோ நட்புக்கும் பாசத்திற்கும் இடையில் அல்லாடி தவித்தான்.
இருப்பினும், நண்பன் அவளை காயப்படுத்தமாட்டான் என்ற நம்பிக்கை அவனிற்கு இருந்தது.
அவளை ஒரு அறைக்குள் அழைத்து சென்று கதவை சாற்றினான் ரத்தினவேல்.
ஏற்கனவே தமக்கையை காணாமல் தவித்த பெண்ணவள் இப்போது பீதியில் அவனை கண்டு விழித்தாள்.
கதவை தாழிட்டு திரும்பிய ரத்தினவேல் பயத்தில் உறைந்து நின்றிருந்த முகிழ்மதியை கண்டு சிறிது கோபத்தை கட்டுப்படுத்தினான்.
அவனிற்கும் இந்த திருமணம் நின்றதில் பேரானந்தம் தான்!
ஏனெனில்,அவனின் உணர்வுகள் முகிழ்மதியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் போது சந்திரமதியை திருமணம் செய்ய அவனிற்கும் விருப்பமில்லை.
அதனால் இந்த திருமணத்தை நிறுத்த அவன் வேறு சில திட்டங்களை தீட்டி வைத்திருந்தான்.
அதையெல்லாம் கெடுக்கும் விதமாக அனைத்தும் நடந்ததும் அவனிற்கு ஆத்திரமாக வந்தது.
அத்தோடு அவளிற்கு பதில் இவள் என்பதை ரத்தினவேலால் ஏற்க முடியவில்லை.
அது எப்படியானதொரு வலியை ஒரு பெண்ணிற்கு கொடுக்கும் என்று அவளின் நிலையில் இருந்து சிந்தித்தான் அவன்.
ஒரு வலியுடன் தொடங்கிய பந்தம் எத்தகைய வேதனையை கொடுக்கும் என்றறிந்து தான் அவன் கோபம் கொண்டான்.
அவ்வாறு வலியையும் வேதனையையும் கொடுக்கும் திருமண பந்தத்தை அவனாலே ஏற்க முடியாத நிலையில் அவளால் மட்டும் எங்கனம் ஏற்க முடியும்?
இவ்வாறெல்லாம் அவன் மனப்போராட்டத்தில் தவித்தாலும் அவனிற்கு தற்போது வேறு வழியில்லை.
அதனால் மனதை கல்லாக்கிக்கொண்டான்.
அவளின் கண்ணீர் கண்டு அவனின் சினம் முழுமையாக அகன்றுவிட்டன.
ஆயினும்,அவளிடம் கோபமாக பேசினால் மட்டுமே நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என்றறிந்த ஆடவன் “உன் அக்கா ஓடிப்போயிட்டா தெரியும் தானே?” என கேட்க,
அவளோ “இ…இல்லை அக்கா அப்படி பண்ணமாட்டாள்” என நடுக்கத்துடன் பதிலுரைத்தாள்.
“இப்போ அவ அப்படி பண்ணாளா?பண்ணலையான்னு விவாதிக்க எனக்கு டைமில்லை முகிழ்மதி…முதல்ல இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்” என அழுத்தமாக கூறிக்கொண்டே அவளின் புறம் அடியெடுத்து வைத்தான் ரத்தினவேல்.
அவளோ தன்னை மீறி பின்னால் ஓரடி எடுத்து வைத்து ‘கல்யாணமா?எப்படி?’ என்பது போல் பீதியுடன் ஏறிட,
அவனோ அவளை ஆழ்ந்து நோக்கி “கல்யாணம் நடக்கும்…ஆனால் பொண்ணு நீ தான்” என்றான் அதிரடியாக.
அதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள் முகிழ்மதி.
“எ..என்ன சொல்லுறீங்க?” என அவள் இதயம் படபடக்க அவனை பார்க்க,
அதற்குள் அவளை நெருங்கி வந்திருந்த ரத்தினவேல் “எஸ்…நீ தான்” என்றான் திடமாக.
சட்டென கண்ணில் துளிர்த்த நீருடன் “இல்லை…என்னாலே முடியாது…இது வேணாம்…பிளீஸ்” என அவள் தழுதழுத்த குரலில் கெஞ்ச,
அவளின் கண்ணீரும் கெஞ்சலும் அவளை விட அவனிற்கு தான் அதிகமாக வலித்தது.
ஆனாலும் கண்மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்திய ரத்தினவேல் “உனக்கு வேற சாய்ஸ் இல்லை முகிழ்மதி…நீ என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்” என்றான் தீட்சண்யக் குரலில்.
அவளால் அவனை பேசியதை ஏற்க முடியவில்லை.
நேற்றிலிருந்து தன்னை பூ போல் பார்த்துக்கொண்டவனின் இன்றைய அவதாரம் அவளை அச்சுறுத்தியது.
ஆயினும்,தமக்கைக்கு சொந்தமானவனை தன் கணவனாக ஏற்க முடியாமல் “ஏ…ன் என்னை இப்படி வற்புறுத்துறீங்க?முதல்ல அக்கா எங்கன்னு கண்டுப்பிடிங்க…பிளீஸ்…இப்படியெல்லாம் பேச வேணாமே” என கிட்டத்தட்ட அவனிடம் இறைஞ்சினாள்.
“முகிழ்மதி உன் அக்கா இந்த கல்யாணம் வேணாம்னு லெட்டர் எழுதி வைச்சிட்டு போயிட்டாள்…இதுக்கு மேலே அவளை நீ தேட சொல்லறீயா?”
“இல்லை…” என அவள் தலையாட்டும் போதே,
அவளின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்தவன் “நீ எதுவும் பேச வேணாம்…கல்யாணத்துக்கு ரெடியாகு முகிழ்மதி” என இறுதி முடிவாக கூறிவிட்டான்.
அதற்கு மேல் அவனோடு போராட முடியாது என்று அவளிற்கு புரிந்துவிட்டது.
மனதிற்குள் ஒரு பெரும் போராட்டம்…
விழிகளில் ஆறாய் பெருகியது கண்ணீர்…
ஆனால் தப்பிக்க வழியில்லை என்பது மட்டும் அவளிற்கு நிச்சயம்!
ரத்தினவேலின் அந்த பிடிவாதமான பார்வை அவளைக் கட்டிப்போட்டது.
தமக்கைக்காக நிச்சயம் செய்தவனை தான் ஏதோ அபகரிப்பது போல் அவளிற்கு தோன்றியது.
வெட்கம்,வேதனை,அவமானம் மற்றும் துக்கம் அனைத்தும் கலந்த உணர்வுகளோடு அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
அவளின் விழிகள் இதிலிருந்து என்னை காப்பாற்றேன் என்பது போல் கெஞ்சின.
அவனிற்கு அவளை கண்கொண்டு காண முடியவில்லை.
அதனால் விழிகளை தாழ்த்திய ரத்தினவேல் “உன் கால்ல காயம் எப்படி இருக்கு?” என சாதாரணமாக கேட்டுக்கொண்டே அவளை அருகிலிருந்த கட்டிலில் அமர வைத்தான்.
அவளோ அவனிடம் எதுவும் பேச முற்படவில்லை.
ஏமாற்றத்தில் தொய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.
அவளின் காலிற்கு அருகே மண்டியிட்டு அமர்ந்த ரத்தினவேல் “உன்னை தான் கேட்கறேன் காயம் எப்படியிருக்கு?” என அதட்டலாய் கேட்டவாறு அவளை நிமிர்ந்து பார்க்க,
அவளிடம் அதற்கும் பதிலளில்லை.
முகிழ்மதி பார்ப்பதற்கு தான் அமைதியான பெண்.
ஆனால் உள்ளுக்குள் ஆழ்கடலின் ஆழியை விட அழுத்தமானவள்!
அவளிடம் இப்போதும் மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தன.
பதிலை அவளிடம் எதிர்பார்ப்பது வீண் என்பதறிந்த ரத்தினவேல் ஒரு பெருமூச்சுடன் பாவாடையை தூக்கிவிட்டு காயத்தை ஆராய்ந்தான்.
அப்போதும் அவளிடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை.
அவள் சிலைப்போல் அமர்ந்திருந்தாள்.
ரத்தினவேலோ ஒரு முறை அவளது காயத்தை ஆராய்ந்தான்.
காயத்தின் மீது இப்போது வெண்ணிறகட்டுப் போடப்பட்டிருந்தன.
கட்டு ஈரமின்றி நேர்த்தியாக இருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்துவிட்டு எழுந்து நின்ற ரத்தினவேல் “டாக்டர் சொன்ன மாதிரி இன்னைக்கு நைட் கட்டை கழட்டிட்டு மருந்துப்போடணும் முகிழ்மதி…நீ ரொம்ப நடக்கவேண்டாம்…காயம் சீக்கிரம் சரியாகாது…கீழேயே ரெஸ்ட் எடு” என்றான் அக்கறையாக.
எப்போதும் போல் அவனது கவனிப்பில் அவளின் மனம் பனித்தன.
இத்துணை பரிவை காட்டும் மனிதன் ஏன் தன்னை புரிந்துக்கொள்ள மாறுக்கிறான் என துயரத்துடன் எண்ணினாள் காரிகை.
இறுதி முறையாக அவனிடம் பேசி பார்த்திட எண்ணி அவனை ஏறிட்ட முகிழ்மதி “உங்களுக்கு என் அக்காவை தானே பிடிக்கும்…அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணறீங்க?கொஞ்சம் யோசிங்களேன்” என அலைப்பாயும் விழிகளுடன் அவன் மனதை மாற்ற அவள் முயற்சிக்க,
அவனோ அவளை அழுத்தமாக நோக்கி “நான் எப்போ சந்திரமதியை பிடிக்கும்னு சொன்னேன்” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.
அவளோ “அப்போ…” என அதற்கு மேல் பேசமுடியாமல் திணற,
அவனோ அவளின் விழிகளை நேருக்கு நேராக நோக்கி “அது ஒரு மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்…எனக்கு பிடிச்ச பொண்ணு அவ இல்லை…அவளை மாதிரி இருக்க வேறொரு பொண்ணு” என தெளிவான குரலில் இயம்பியும் அவளிற்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் குழப்பமாக அவனை ஏறிட ‘விளங்கிடும்’ என தொண்டையை செருமிய ரத்தினவேல் “உன் காலுக்கு கொலுசு ரொம்ப அழகா இருக்கும்…முடிஞ்சா இன்னைக்கு போட்டுக்கோ…காயத்திலே படும்னா வேணாம்” என சொல்ல,
அவளோ ஒன்றும் புரியாமல் சிறுப்பிள்ளை போல் விழித்தாள்.
உடனே சலிப்பாக தலையாட்டிய ரத்தினவேல் “தமி வந்து உன்னை ரெடி பண்ணுவா…நீ இங்கயே இரு” என கூறிவிட்டு விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.
அவள் அப்போதும் எதுவும் புரியாமல் குழம்பி தவித்தாள்.
அவளிற்கு தலையும் புரியவில்லை…காலும் புரியவில்லை.
அவளின் மனமெல்லாம் தமக்கையில் மட்டுமே லயத்திருந்தது.
அவளால் தமக்கையை தவிர வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.
அவன் கூறிய சொற்களை அவள் ஆழ்ந்து அவதானித்திருந்தால் அப்போதே அவளிற்கு அவனின் மனம் விளங்கியிருக்கும்.
இப்போது ஒரு வித சஞ்சலத்துடன் இதழ்கடித்து அமர்ந்திருந்தவளை அலங்கரிக்க தமயந்தியுடன் ஒப்பனையாளர்களும் உள்ளே நுழைந்தனர்.
முகிழ்மதியும் தனக்கு விதித்தது இந்த வாழ்க்கை தான் என்று அதனை ஏற்க தயாராகிவிட்டாள்.
அந்த சிறுப்பெண்ணால் வேறு என்ன செய்திட முடியும்?