கத்தியை எதிர் திசையில் வீசிவிட்டு தன் முழு உயரத்திற்கு நின்றான் அவன்.
இனி அலறல் இல்லை…அழுக்குரல் இல்லை…எதுவுமில்லை.
இதுவரை அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்த சப்தம் அடங்கி நிசப்தமாகிப்போனது.
அனைத்தையும் ஒட்டுமொத்தமாய் அடக்கியிருந்தான் ரத்தினவேல் ரகுநாத பூபதி.
ரத்தினவேல் ரகுநாத பூபதி முப்பத்தியொரு வயது ஆண்மகன்.
அவன் பிரபலமான ஒரு அரசியல்வாதி,இருண்ட உலகத்தின் அரசன்(இலுமினாட்டி சமூகம்) மற்றும் தொழில்துறை உலகில் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர்.
தன்னை எதிர்ப்பவர்களுக்கு மரணத்தை பரிசாய் வழங்குபவன்.
முட்டாள்தனத்தை அடியோடு வெறுப்பவன்,பயனற்ற முறையில் நடந்துக்கொள்பவர்களை தன் வாழ்வில் இருந்து வெட்டி வீசிவிடுவான்.
துரோகத்தை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.
இறந்து சடலமாக தொங்கிக்கொண்டிருந்தவனை கைகாட்டி “கிளின் திஸ் மெஸ்” என்று கட்டளையிட்டவன்,விறுவிறுவென தனது மகிழுந்தை நோக்கி நடக்க தொடங்கினான்.
அவன் தனது காரை நோக்கிச் செல்லும் வழியில் அவனது மெய்க்காப்பாளர்கள் சூழ்ந்துக்கொள்ள,அவனது உதவியாளன் ஜெகன் அவனை நெருங்கினான்.
அச்சமயம் அவனது அலைப்பேசி ஒலிக்க “சார் உங்க பாட்டி” என்றவுடன்,அவனது நடை தடைப்பட்டன.
உடனே அருகிலிருந்தவனிடம் ஒற்றை விரல் நீட்ட,அடுத்த கணமே அவனின் முன்பு ஒரு தண்ணீர் புட்டி நீட்டப்பட்டது.
அதனை வாங்கி தன் கரத்தில் படர்ந்திருந்த உதிர கறையை சுத்தம் செய்த ரத்தினவேல் தனது தாடி மீசையை ஒரு முறை நீவிவிட்டு அலைப்பேசியை வாங்கி காதில் வைத்தான்.
அவனது பாட்டியிடமிருந்து வந்த அழைப்பை அவனால் புறக்கணிக்க முடியாது.
அதற்கான துணிவும் அவனிற்கு இருக்கவில்லை.
மற்றவர்களுக்கு அவன் சிம்மச்சொப்பனம்.ஆனால் அவன் குடும்பத்திற்கு என்றும் ஒரு தனயன்.
குடும்பத்தில் மற்றவராவது அவனிடம் பேச அஞ்சுவார்கள்.ஆனால் அவனது பாட்டி ஒருவர் மட்டுமே அவனை ஆளும் வல்லமை படைத்தவர்.
ஊருக்கே அரசனாக இருந்தாலும் அவனது பாட்டியிற்கு இப்போதும் அவன் அதே சிறு வயது பாலகன் தான்!
பாட்டி சொல்லை தட்டாத பேரன் அவன்.
குரலை செருமிக்கொண்டு “சொல்லுங்க பாட்டி” என்று கூறியவனின் குரலில் அப்படியொரு மென்மை!
சற்று நேரத்திற்கு முன்பு,அவன் ஒரு கொலை செய்துவிட்டு வந்தான் என்று கூறினால் ஒருவர் கூட நம்ப மாட்டார்கள்.
அந்த அளவு குரலில் ஒரு குழைவு!
அவன் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அனைத்து காவலர்களும் சுற்றியுள்ள பகுதிகளை வேவு பார்க்க ஆரம்பித்தனர்.
ஏனென்றால் அரசியல் மற்றும் தொழிலில் இரண்டிலும் அவன் கொடி கட்டி பறப்பதால் அவனிற்கு எதிரிகளும் ஏராளம்!
எந்த நேரத்திலும் எந்த வழியிலிருந்தும் அவனை தாக்கக்கூடிய ஆபாயம் இருப்பதால்,தங்கள் முதலாளிக்கு எந்த வித ஆபத்தும் நெருங்கக் கூடாது என கண்ணும் கருத்துமாய் காத்தார்கள் கண்காணிப்பாளர்கள்.
அலைப்பேசியின் எதிர்புறமோ அவனது பாட்டி பேரனை கடிந்துக்கொண்டிருக்க,ஆடவனோ அனைத்தையும் மௌனமாக கேட்டிருந்தான்.
“பூபதி கண்ணா மணி பதினொன்றாகுது…இன்னும் வீட்டுக்கு வராமல் என்னடா செய்திட்டு இருக்கே?” என அவர் சப்தமிட்டு அதட்ட,
அவனோ இதழை குவித்து ஊதி “பாட்டி ஒரு முக்கியமான வேலை…இப்போவே முடிச்சாக வேண்டிய கட்டாயம்…அதான் லேட்டாகிடுச்சு…இன்னும் பத்து நிமிஷத்திலே நான் வீட்டிலே இருப்பேன்” என்று கூறி அழைப்பை துண்டித்து அலைப்பேசியை தனது உதவியாளன் ஜெகனிடம் நீட்டினான்.
அவன் அழைப்பை துண்டித்த அடுத்த கணமே துப்பாக்கியிலிருந்து ரவை ஒன்று வெளியே வரும் சத்தம் கேட்டது.
‘டமால்’
திடீரென்று ஒலித்த சத்தம் அங்கிருந்த அனைவரையும் ஒரு சேர அதிர செய்திட,அங்கிருந்த அனைவரும் சுதாரிப்பதற்குள் ரத்தினவேலின் தோளை ஒரு குண்டு துளைத்து சென்றிருந்தது.
உடனே காயத்திலிருந்து இரத்தம் பிய்ச்சி அடிக்க,சட்டென அவனின் மெய்க்காப்பாளர்கள் அவனை அரண் போல் சூழ்ந்துக்கொண்டனர்.
முதலாளியின் கையில் காயமாகியவுடன் அவர்களுக்கு பதட்டமாகிவிட்டது.
ஆனால் ஆடவனோ சிறிதும் பயமின்றி மெய்க்காப்பாளனிமிருந்த துப்பாக்கியை பறித்தெடுத்து,தன்னை தாக்கியவனை குறிப்பார்த்து சரியாக சுட்டிருந்தான்.
தன்னை எதிர்க்க துணிந்தவனை கொன்றப் பிறகே அவனால் ஓய முடிந்தது.
இப்போது நாற்புறமும் இருந்தும் ஆட்கள் துப்பாக்கியால் அவனை தாக்க முற்பட,
அதிவிரைவாக செயல்பட்ட காவலர்கள் சுற்றிலும் நோட்டமிட்டவாறே “சார் வண்டியிலே ஏறுங்க” என அவசரமாக மொழிந்து அவனை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அவனுடனே அவனது உதவியாளன் மற்றும் மேலும் இரண்டு பாதுகாவலர்கள் ஏறிக் கொள்ள,ஓட்டுனர் வேகமாக பூபதி மாளிகையை நோக்கி வண்டியை செலுத்தினார்.
அவர்கள் மகிழுந்து மாளிகையை அடைந்ததும்,ரத்தினவேல் ரகுநாத பூபதி வாகனத்திலிருந்து இறங்கினான்.
அவனின் முழங்கரத்தில் உதிரம் கொட்டி,அவனது வெண்ணிற சட்டையை கறையாக்கியிருந்தது.
அதைக்கண்டு “சார்” என உதவியாளன் இழுக்க,
அவனோ ஒரு பெருமூச்சுடன் “பரவாயில்லை விடு…நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி,வாகனத்திலிருந்து கீழே இறங்கினான்.
கீழிறங்கிய ஆடவன் தனக்கு கதவு திறந்து விட்டவனை அழுத்தமாக நோக்கி “சம்பத் இன்னைக்கு சூட் அவுட் பண்ணது யாருனு எனக்கு தெரியணும்…அது யாரா இருந்தாலும் நாளைக்கு காலையில் அவனோட உயிர் இந்த மண்ணிலே இருக்கக்கூடாது” என அதிரடியாக ஆணையிட்டு மாளிகையை நோக்கி சென்றான்.
வேட்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மீசையை முறுக்கிவிட்டவாறே கம்பீரமாக நடந்து சென்றவனிற்கு பணியாளர்கள் இருவர் கதவை திறந்து விட்டனர்.
“வணக்கம் ஐயா” என அவர்கள் குனிந்து தலை வணங்க,
அதனை சிறு தலையசைப்புடன் ஏற்றவன் “எல்லாரும் தூங்கிட்டாங்களா?” என கணீர் குரலில் கேட்டான்.
“ஆமாங்கய்யா…பெரியம்மா ரொம்ப நேரமா முழிச்சிருந்து இப்போ தான் போய் படுத்தாங்க” என்றான் பவ்யமாக.
“நல்லது” என்று தலையசைத்தவன்,விறுவிறுவென தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவன் மின்தூக்கியின் அருகே நெருங்கிய வேளை “கண்ணா இது தான் நீ வீட்டுக்கு வர நேரமா?” என்ற அதட்டல் குரலை கேட்டு, அவ்விடத்திலே நின்றுவிட்டான் ரத்தினவேல்.
அந்த சாரீரத்திற்கு சொந்தக்காரர் அவனுடைய பாட்டி என்பதை அறிந்த ஆடவன் நிதானமாக அவர் புறமாக திரும்பினான்.
அவர் தன் பாசமிகு பேரனின் வருகைக்காக உறங்காமல் காத்திருந்தார்.
அவர் கடிகாரத்தில் இருந்த 12 மணியை கண்ணால் சுட்டிக்காட்ட,அவனோ இதழை குவித்து பெருமூச்சை வெளியேற்றினான்.
‘இவங்க ஏன் இன்னும் தூங்கலை?’ என கழுத்தை நீவிக்கொண்டவனிற்கு அயர்ச்சியாக இருந்தது.
ஏனெனில்,துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அவருக்கு தெரிந்தால்,ஊரையே தலைகீழாக புரட்டி போட்டுவிடுவார் என்று அவனிற்குத் தெரியும்.
அந்த அளவு அவருக்கு இந்த இல்லத்தில் மட்டுமின்றி மொத்த ஊரிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது.
“பாட்டி நீங்க தூங்கலையா?” என அவன் இமைகள் இடுங்க கேட்டான்.
அவனது குரலில் இலேசாக கனிவு இருந்தாலும்,அவனின் முகத்தில் சிறிதும் புன்னகையில்லை.
அவனின் உதடுகள் அடியோடு புன்னகைக்க மறந்து பல வருடங்கள் கடந்திருந்தன.
அந்த மாளிகை முழுவதும் இருள் சுழ்ந்திருந்தாலும்,காஞ்சனா மாலாவின் கூரிய விழிகள் பேரனின் கரத்திலிருந்த காயத்தை கண்டுக்கொண்டிருந்தன.
அதனை அவதானித்த ரத்தினவேல் ‘காட்’ என வேகமாக தன் கரத்தை அவர் அறியாமல் மறைத்தான்.
அவன் விரைவாக செயல்பட்டப்போதிலும் காலம் கடந்திருந்தது.
“கண்ணா என்ன நீ மறைக்கிறே?” என கேட்டுக்கொண்டே முன்னால் வந்தவர்,
“ஹே உன் கையிலே எப்படி காயம் வந்துச்சு?யார் இப்படி பண்ணது பூபதி?” என படபடப்புடன் கேட்டு பேரனை நெருங்கியிருந்தார்.
அவனது உதிரம் பட்டு சிவந்திருந்த சட்டை கண்டவுடன் அவரின் கண்கள் கலங்கி விட்டன.
அவரது கண்ணீரை பார்த்ததும்,அவனின் தாடை இறுகியது.
“பாட்டி நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை…இது ஒரு சின்ன காயம் தான்…டோஸ்ட் வொர்ரி” என்று அவன் சொல்ல,
உடனே தலையுயர்த்தி அவனை முறைத்தவர் “இது உனக்கு சின்ன காயமாடா?முதல்ல இங்கே வந்து உட்காரு…வா…நான் காயத்துக்கு மறந்துப்போடறேன்” என்று அதட்டியவர்,ஊழியர் ஒருவரை அழைத்து “ஜெயா போய் அந்த மருந்து பொட்டிய எடுத்தா” என வேலை ஏவினார்.
அதற்குள் பேரனின் சட்டையை மடக்கி விட்டு காயத்தை பார்த்தவருக்கு நெஞ்சம் வலித்தது.
அவன் பலமுறை இதுப்போல் அடிப்பட்டு வந்திருக்கிறான்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் காயப்பட்டு வரும்போதும் அவரின் நெஞ்சம் தான் வேதனையில் துடித்துப்போகும்.
இப்போதும் கண்களில் நீர் கோர்க்க அவனது காயத்தை சரிசெய்து மருந்திடும் பணியை செய்தார்.
பேரனின் காயத்தை காண்கையில்,அதை ஏற்படுத்திய நபரின் மீது சினம் கொப்பளித்தது.
“பூபதி சுட்டவனை என்ன செஞ்சே?அவன் இன்னும் உயிரோடு இருக்கானா?” என்று கேட்டவரின் விழிகளில் அனல் தெறித்தது.
அவனோ தாடையை ஒரு முறை நீவி “அவன் உயிரோடு இருப்பானு நினைக்கிறீங்களா பாட்டி?” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
அவரோ “அம்பு எய்தவனை கொன்னுட்டே சரி…அம்பு எய்த காரணமா இருந்தவனை…” என்று இழுக்க,
“இந்நேரம் அவன் கதை முடிஞ்சிருக்கும்” என்றான் ஒரு வித அகந்தையுடன்.
அதேசமயம் அவனது அலைப்பேசிக்கு ‘சார் நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டோம்’ என்று தகவல் வந்தது.
“கதை முடிஞ்சது பாட்டி” என அவன் அலைப்பேசியை தூக்கி காட்டி இதழை வளைத்து புன்னகைக்க,
“நல்லது…நாசமா போனவன் சாகட்டும்” என வெறுப்போடு சொன்னார் பெரியவர்.
அதற்குள் அவனது காயத்திற்கு உரிய மருந்து வைத்து கட்டியவர் “பூபதி நாளைக்கு நாம்ப குலத்தெய்வ கோவிலுக்கு போறோம்” என்றார்.
அவர் அவனிடம் வேண்டுக்கோளாக முன் வைக்கவில்லை.
அவர் அவனிற்கு கட்டளையிட,அவன் அவரிடம் வாதிட வில்லை.
அவரிடம் வாதிட்டு அவனால் வெற்றி பெற முடியாது என்பது அவனிற்கு தெரியும்.
அதனால் விருப்பமில்லை என்றாலும் “சரி” என்று தலையசைத்து ஒப்புக்கொண்டான்.
உடனே அவர் அவனது கன்னத்தை வழித்து நெட்டி முறித்து புன்னகைக்க,
“சரி பாட்டி…நீங்க தூங்குங்க…நேரமாச்சு…நானும் போய் ரெஸ்ட் எடுக்கறேன்…நாளைக்கு கட்சியில் ஒரு இம்பார்ட்டென்ட் மீட்டிங் இருக்கு” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
அதேநேரம் வீட்டில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த முகிழ்மதி “ஆஆஆஆ” என அலறிக்கொண்டே எழுந்தாள்.
அவளின் மேனி முழுவதும் வியர்வையில் குளித்திருக்க,அவளின் மதி முகமோ பயத்தில் வெளுத்திருந்தது.
அவளிற்கு மூச்சு விடவே ஒரு கணம் சிரமமாக இருந்தது.
சடுதியில்,அந்த கனவை பற்றி நினைவுகள் எழுந்தவுடன் அவளின் இதயம் உச்சக்கட்ட வேகத்தில் படபடத்தது.
அவளின் கரங்கள் மொத்தமாக நடுங்கின.
‘இது என்ன மாதிரியான கனவு…நினைக்கும் போதே படுபயங்கரமா இருக்கே…அந்த துப்பாக்கி சவுண்டு…கையிலே இரத்தம்…’ என்று தன் நெற்றியை வருடியவள், மிகுந்த சிரமத்துடனே மூச்சுவிட்டாள்.
தனக்கு வந்த மங்கலான கனவை பற்றி நினைக்கும் போதே அவளிற்கு நெஞ்சில் நீர் வற்றிப்போனது.
இங்கு இவள் கனவு கண்டு பயத்தில் வெடவெடத்திருக்க,அதேவேளை சென்னையில் ஒரு பிரபலமான கேளிக்கை விடுதியில் கையில் மதுபான குவளையோடு ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள்.
ஒரு இளம் ஆடவன் அவளின் இடையை வளைத்து முத்தமிட,அதை சற்றும் எதிர்பாராத பெண்ணவளோ ஒரு கணம் அதிர்ந்தாள்.
ஆனால் மறு கணமே “சுஜி இங்க வேணாம்…ஓரமா போயிடலாம் வா” என அவனை அழைத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கியவள்,தானும் அவனிற்கு முத்தமிட ஆரம்பித்திருந்தாள்.
முத்தமிட்டு விலகிய அந்த ஆடவன் “சந்து செம்ம அழகுடி நீ” என கிறங்கிய குரலில் உரைத்தவாறே அவளின் முக வடிவை அளந்தான்.
அவளும் அவனின் தீண்டலில் விழி மூடி மயங்கி நின்றாள்.
கண் மூடி நின்றிருந்தவளின் வதனம் அப்படியே அந்த மதியின் மறு பிம்பமாய் காட்சியளித்தது.
ஆம்,அவளின் மதி வதனம் அச்சு அசலாய் முகிழ்மதியின் வதனம் போலவே இருந்தன.
முகிழ்மதியே மற்றொரு உருவம் எடுத்து வந்துவிட்டாற் போன்ற ஒரு மாயை!
இருவருக்கும் எவ்வித வேறுப்பாடுமில்லை.