முகிழ்மதி 25:

சிவராமன் ஏதோ ஒரு பதட்டத்தில் இருந்தார்.
அவரை கட்சியை விட்டு நீக்கவிருப்பதாக தகவல் கசிந்திருந்தது.
ஒரு புறம் மகளின் திருமணம், மற்றொரு புறம் அவரது பல வருட அரசியல் வாழ்வு அஸ்தானமாகயிருந்தது.
அவருக்கு ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை.
அவர் மொத்தமாய் இடிந்துப்போய் அமர்ந்திருக்க “என்னங்க இங்க என்ன மசமசனு உட்கார்ந்து இருக்கீங்க?அங்க நமக்கு தலைக்கு மேலே வேலை கிடக்கு…” என அளவளாவிக்கொண்டே உள்ளே வந்தார் விஜயலட்சுமி.
சிவராமனோ எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதை பார்த்து “என்ன பிரச்சனை உங்களுக்கு?” என விசாரித்தார்.
அவரோ கவலையோடு “அதை ஏன் கேட்கறே விஜி?” என மடைத்திறந்த வெள்ளமென விஷயங்கள் அனைத்தையும் கொட்டிட,
அதைக்கேட்ட விஜயலட்சுமி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
மனைவி திடீரென்று சிரித்ததும் சிவராமன் அவரை முறைக்க,
உடனே கப்பென்று வாயை மூடிக்கொண்ட விஜயலட்சுமி “ஏங்க இதெல்லாம் ஒரு விஷயமுங்க…கா.வெ.க இல்லைனா சோ.வெ.க கட்சி விட்டு கட்சி தாவறது நமக்கு புதுசா என்ன?” என்றார் குதர்க்கமாக.
“நீ என்ன தான் சொல்லவர்றே விஜி?” என வெதும்பிப்போய் அவர் கேட்க,
“அட என்னங்க நீங்க?அவன் கட்சிய விட்டு தூக்கினால் என்ன?முதலமைச்சருக்கே சம்மந்தியாக போறீங்க.அப்புறம் என்ன பயம்?நாம்ப மாப்பிள்ளை கட்சியிலே சேர்ந்துக்கிடலாம்…மொத இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும்…பொறவு இருக்கு கச்சேரி…நம்ம மதிய விட்டு மாப்பிள்ளைய மயக்கி அவரை நம்ப பக்கம் இழுத்துக்கலாம்…அப்புறம் எல்லாம் நம்ப ராஜ்ஜியம் தான்” என நயவஞ்சகமாக பேசி கணவரை சமாதானம் செய்தார் விஜயலட்சுமி.
அவரோ மனைவியின் பேச்சை திருத்த முனையாமல் “அது நடக்குமா?” என நிராசையுடன் வினவ,
விஜயலட்சுமியோ தழைத்த குரலில் “அதெல்லாம் நடக்கும்…நடக்கும்…நம்ப புள்ளை மதி ஒரு தங்கரதம்…அவ அழகை வைச்சு மாப்பிள்ளைய சுலோவா மயக்கிப்பிடலாம்…அதையும் மீறி மடங்கலைனா எனக்கு நிறைய டிரிக் எல்லாம் தெரியும்…நான் அவளுக்கு சொல்லி தர்றேன்…என் டிரிக்குக்கு மயங்காத ஆளே இல்லை” என பெருமை பிதற்றி மயக்கும் புன்னகையுடன் பேசிய இல்லாளில் சிவராமனும் மயங்கி தான் போனார்.
அதனால் மகுடிக்கு மயங்கிய சிவராமனுக்கு புகுந்த வீட்டில் நுழையவிருக்கும் பெண்ணின் மானம்,மரியாதை எதுவும் முக்கியமாக தெரியவில்லை.
அவரின் சொந்த விருப்பு,வெறுப்பு மட்டும் முதன்மையாக இருந்தது.
சிறியவளை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டிப்படைத்து கொண்டிருந்த விஜயலட்சுமி,
இனி சந்திரமதியையும் தங்களின் இசைவுக்கு ஏற்ப மாற்ற உத்தேசம் கொண்டார்.
இதை எதையும் அறியாமல் சிவராமனும் அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கைப்பாவையாக மாறியிருந்தார்.
ஆனால் திடீரென்று அவரின் முகம் மாற “ஆமா எங்க அவனை எங்கியும் காணலை” என்றவரின் குரலில் இப்போது கடுமை குடியேறியிருந்தன.
அவனை பற்றி கேட்டவுடன் அவருக்கு திக்கென்றது.
உடனே சிரித்து சமாளித்தவராய் “யாரு ரஞ்சனையா கேட்டீங்க?அவன் அப்போவே போயிட்டாங்க…” என கூற,
“நல்லவேளை போயிட்டான்…அவனை தெரியாமல் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன்…கூப்பிட்ட கொடுமைக்கு குடிச்சிட்டு வந்திருக்கான் பரதேசி” என அவர் தனக்குள்ளே சிடுசிடுக்க,
சட்டென விஜயலட்சுமியின் முகம் மாறியது.
கணவரின் முன்பு அதை காட்டாமல் இருக்க பெரும் பாடுப்பட்டு போனார் அவர்.
“விஜி உனக்கும் தான் சொல்லறேன்…இனி அவன் வந்தால் உள்ளயே விடாதே…நாய் வெளியவே குடிச்சிட்டு சாகட்டும்…அவனாலே இந்த கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது…புரியுதா?” என மனைவியை எச்சரிக்க,
“அதெல்லாம் வராதுங்க…நானே அவனை திட்டி அனுப்பிட்டேன்…இனி கல்யாணம் முடியிற வரை இங்க வரமாட்டான்” என இளித்துக்கொண்டே சமாளித்தார்.
ஆனால் இப்போதும் அவன் மண்டபத்தின் ஒரு அறையில் தான் ஆழ்ந்த போதையில் இருந்தான்.
அவனை எவ்வாறு வெளியேற்றுவது என்று பரபரப்பில் தான் விஜயலட்சுமி சுற்றித்திரிந்தார்.
அவனை வெளியேற்றுவதில் கவனமாக இருந்ததால் முகிழ்மதியை பற்றிய ஞாபகமே அவருக்கு வரவில்லை.
சிவராமனோ “சரி மதிய கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ…நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு போகும் போது ஒரு குறையும் வரக்கூடாது…புள்ளை சந்தோஷமா புகுந்த வீடு போகணும்” என்றவர்,
“ஆமா முகிழ் எங்கே?எங்கியும் காணும்” என ஒரு வழியாக சிறிய மகளின் நினைவு அவருக்கு வந்துவிட்டது.
விஜயலட்சுமியோ “அந்த சின்னக்குட்டி அவ ரூமிலே தாங்க இருக்காள்…அவளை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே…ஏதோ நல்லது நடந்தாலே அதுக்கு பொறுக்காது…தலைவலினு ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடக்கு” என மூட்டை மூட்டையாக பொய்களை அள்ளி எடுத்துவிட்டார்.
அதைக்கேட்ட சிவராமனோ “சரி விடு…எதையோ பண்ணிட்டு போறாள்…பிரச்சனை எதையும் இழுத்து விடாதவரை நல்லது” என விரக்தியாக கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.
‘ஆமா அந்த சனியன் கல்யாணம் முடியிற வரை அங்கியே இருக்கட்டும்’ என குரூரமாக சிறிதும் மனசாட்சியின்றி எண்ணிக்கொண்டார் விஜயலட்சுமி.
இரவு பத்து மணியாகும் வரையிலுமே அவளை பற்றிய அக்கறையில்லை அவருக்கு!
தற்போது ரஞ்சனை எவ்வாறு வெளியேற்றுவது என்பதிலே முனைப்பாக இருந்தார்.
இந்நிலையில் வீர் மண்டபத்திற்கு திரும்பி வந்திருந்தான்.
அவனது முகமே சரியில்லாமல் இருந்தது.
முகிழ்மதியின் குடும்பத்தை விசாரிக்க சென்றவனிற்கு கிடைத்த தகவல் எதுவுமே சரியில்லை.
அவனெதிரே வந்த ஜித்தேந்திரனிடம் “ஜித் பூபதி எங்கே?” என கேட்டவனின் குரலில் சோர்வு மிகைந்து இருந்தது.
அவனை புருவம் சுருக்கி நோக்கிய சிறியவன் “நீங்க வந்தால் அண்ணா உங்களை கூட்டிட்டு வர சொன்னாரு…வாங்க” என அவனை கையோடு அழைத்துச்சென்றான்.
ஆனால் அவனை ஜித்தேந்திரன் அழைத்து சென்றது என்னவோ முகிழ்மதியின் அறைக்கு தான்!
“பக்கத்து ரூம் தானே பூபதி ரூம்” என அவன் குழப்பமாக கேட்டதற்கு ஜித்தேந்திரன் எந்தவித பதிலும் கூறவில்லை.
முகிழ்மதி இருந்த அறையின் கதவை திறந்துவிட்டு “உள்ளே வாங்கண்ணா” என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
ஒரு வித குழப்பத்துடனே கையில் ஒரு கோப்பையுடன் உள்ளே நுழைந்த வீர் கட்டிலில் வாடிய கொடியென படுத்திருந்த முகிழ்மதியை கண்டு பதறி விட்டான்.
அவனின் நெஞ்சம் பதைபதைக்க “என்னாச்சு என் டாலுக்கு?” என அவசரமாக கேட்டுக்கொண்டே முன்னே வந்தவனின் குரல் தன்னை மீறி தழுதழுத்தது.
உடனே அவனருகே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த ரத்தினவேல் “உஷ்” என சுட்டுவிரலை வாயில் வைத்து எச்சரித்தான்.
அதன்பிறகே வீருக்கு முகிழ்மதி உறங்கிக்கொண்டிருப்பதே தெரிந்தது.
அதனால் தன் உணர்ச்சிகளை அடக்கியவனிற்கு ஏனோ அவளின் நிலையை பார்த்தவனிற்கு கண்கள் கலங்கிவிட்டன.
இப்போது வரை அவன் அவளின் காயத்தை பார்க்கவில்லை.
ஆனால் அவளின் வாடி வதங்கிய முகமே அவனின் இதயத்தை கசக்கி பிழிந்திருந்தது.
அவன் அங்கிருந்து செல்லும் போது நாய்க்குட்டியுடன் சிரித்து பேசியப்படி நின்றிருந்தவளின் முகம் கண்முன் நிழலாடியது.
அவனின் நெஞ்சம் துடிக்க “என்னாச்சு என் டாலுக்கு பூபதி?” என கம்மிய குரலில் அவன் விசாரிக்க,
“ஸ்டார்…” என தன்னை மீறி ஆரம்பித்தவன் சட்டென நிறுத்திவிட்டு “என் ரூமிலே போய் பேசிக்கலாம்” என இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டான்.
ஜித்தேந்திரனோ ஒன்றும் புரியாமல் குழப்பமாக நின்றிருந்தான்.
‘ஒருத்தன் என்னாடான்னா ஸ்டார்ங்கறான்…இன்னொருத்தன் என்னாடான்னா டாலுங்கறேன்…அடேய் இவ அவ இல்லை…அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?’ என அவன் மனதிற்குள்ளே புலம்பி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.
அதற்குள் அவளிடம் இலேசாக அசைவு தெரிய “அம்மா வேணாம்…வேணாம்மா…வலிக்குது…நான் எதுவும் தப்பு பண்ணலைம்மா…” என நித்திரையிலே பிதற்ற ஆரம்பித்திருந்தாள்.
அவளின் சத்தம் கேட்டு ஆண்கள் மூவரின் விழிகளும் ஒரு சேர அவளின் புறம் திரும்பின.
முன்பே அவளின் பிதற்றல் சத்தம் கேட்டு தான் ரத்தினவேல் உள்ளே வந்து அவளிற்கு அரவணைப்பாக அமர்ந்திருந்தான்.
இப்போது மீண்டும் அவள் பிதற்றியதும் அவன் ஆறுதலளிக்க முனைவதற்கு முன்பாகவே “டால் ஒண்ணுமில்லை…ஒண்ணுமில்லைம்மா…அண்ணா நான் வந்திட்டேன்டா…வீர் அண்ணா வந்திட்டேன்மா” என தன்னை மீறி கரகரத்த குரலில் கூறி அவளின் கரத்தை ஆறுதலாக பற்றியிருந்தான் வீர்.
ரத்தினவேல் அவனை தடுக்க முனைவதற்கு முன்பாக “வீ..ர் அ..ண்ணா” என தடுமாற்றத்துடன் அழைத்த பெண்ணவளின் கரம் அவனது கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டது.
அதைக்கண்டு அங்கிருந்த அனைத்து ஆண்களும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.
அவள் கண்விழித்துவிட்டாளோ என்றெண்ணி விழி உயர்த்தி மூவரும் ஒரு சேர அவள் முகம் கண்டனர்.
ம்ஹும்…அவர்கள் நினைத்தது போல் அவள் விழித்திருக்கவில்லை.
இப்போதும் அவள் நித்திரையிலிருந்து எழவில்லை.
ஆழ்ந்த உறக்கத்திலும் அவனை அடையாளம் அறிந்து அவள் அவனின் கரம் பற்றியது அவர்களுக்கே சிறிது விசித்திரமாக இருந்தது.
கூடவே,அதிசயமாகவும் இருந்தது.
அங்கிருந்த ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
ஆனால் முதலில் அதிலிருந்து தெளிந்த வீர் “ஆமாடா…உன் வீர் அண்ணா தான்” என மற்றொரு கரத்தால் அவளின் கரத்தை வருடிவிட்டுக்கொண்டே சொல்ல,
அவளோ “அ…ண்ணா கால் வ..லிக்குது…அ…ம்மா சூ…டு” என உறக்கத்திலே பிதற்றியவளின் கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது.
அவன் அவ்வளவு அழுத்தமாக கேட்டப்போது வராத விஷயம் உறக்கத்தில் வீர் அவளிடம் ஒரு வார்த்தை ஆறுதலாக பேசியதும் தானாக வெளிவந்ததை எண்ணி புருவம் சுருக்கினான் ரத்தினவேல்.
தன்னை கடந்து அவள் ஒருவனில் உருகுவதை கண்டு அவன் மனவெழுச்சி கொண்டான்.
ஜித்தேந்திரனோ ‘என்னடா நடக்குது இங்க?இவங்க இரண்டு பேரும் எப்போ இவ்வளவு க்ளோஸானாங்க’ என ரத்தினவேலை பார்த்தான்.
ஆனால் அவனின் விழிகளோ வீர் மற்றும் முகிழ்மதியின் மீது இருப்பதை கண்டு பெருமூச்சுடன் இவனும் அவர்களின் புறம் திரும்பினான்.
முதலில் வீருக்கு தங்கையானவள் சொல்ல வருவதே புரியவில்லை.
பின்பு அவள் ‘கால்’ என்று கூறியதை கேட்டு குழப்பமாக தனது விழிகளை அவளது காலிருக்கும் திசைக்கு நகர்த்திய வீர் மொத்தமாய் அதிர்ந்துவிட்டான்.
அத்துணை பெரிய தீக்காயத்தை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவனது உடலிலுள்ள ஒட்டுமொத்த ஆவியும் ஒரு கணம் வெளியேறிவிட்டு மீண்டு வந்ததை போலிருந்தது அவனிற்கு!
அவனின் நெஞ்சம் துடியாய் துடிக்க அவனின் கண்ணிலிருந்து நீரே கசிந்து விட்டது.
அவனது கண்ணிலிருந்து நீர் வழிவதை கூட உணராமல் அவன் காயத்தை வெறித்தப்படி அமர்ந்திருப்பதை கண்ட ஜித்தேந்திரன் “கவலைப்படாதீங்க அண்ணா…டாக்டர் வந்து பார்த்திட்டு போயிட்டாங்க…சீக்கிரம் சரியாகிடும்” என அவனது தோளை பற்றி ஆறுதல் கூறினான்.
அப்போதும் அவனால் அந்த காயத்தை ஏற்க முடியவில்லை.
அவனின் நெஞ்சம் அவளிற்காக விம்மித்துடித்தது.
பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிய வேண்டியவளை இந்நிலைக்கு ஆளாக்கிய ஒவ்வொருவரையும் கொன்று புதைக்கும் வெறி அவனிற்குள் உருவாகின.
அதற்குள் “வ..லிக்குது” என மீண்டும் அவளின் அழுக்குரல் ஒலித்ததும் அங்கிருந்த ஒவ்வொரு ஆண்மகனின் இதயத்திலும் இரத்தம் கசிந்தது.
வீருக்கு சொல்லவே தேவையில்லை.
அவனிற்கு அவன் தங்கை என்றால் உயிர்.
முகிழ்மதியை தன் தங்கையாகவே பாவிக்க தொடங்கிவிட்டதால் அவளின் ரணம் அவனையும் வேரோடு பிடிங்கி எறிய வைத்தது.
அவனின் விழிகளில் நீர் பெருகினாலும் அதை அடக்கிவிட்டு “அழக்கூடாது டால்…அண்ணா வந்திட்டனே…இனி எல்லாம் சரியாகிடும்…நீ தூங்குடாம்மா” என அவளின் கண்ணீரை கட்டை விரலால் துடைத்துவிட்டு அவன் ஆறுதல் கூறியதும் பெண்ணவள் சிறிது சிறிதாக அமைதியாக உறங்க ஆரம்பித்தாள்.
வீருக்குள் பல விதமான சஞ்சலங்கள்…பல விதமான யோசனைகள் ஓடின.
அவளது குடும்பத்தினரே அவளிற்கு இப்படியொரு கொடுமையை செய்தப்பிறகும் அவனால் இனியும் அமைதிக்காக்க முடியாது.
அக்கணம்…அந்நிமிடம்…அந்நொடி வீரின் மனம் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்துவிட்டிருந்தது.
இனி முகிழ்மதி அவன் பொறுப்பு என்று!
ஒரு தமையனின் ஸ்தானத்தில் இருந்து அவளிற்கு அனைத்தும் அவன் செய்துக்கொடுக்க வேண்டும் என்று முடிவே எடுத்துவிட்டான்.
அதனால் முகிழ்மதியின் நெற்றியை வருடிவிட்டப்படி கடந்த ஒரு மணி நேரமாக அவளையே பார்த்திருந்தான்.
நிமிடங்கள் மணித்துளிகளாக கடந்த பிறகும் ஆண்கள் மூவரும் அதே இடத்தில் இருந்து அவளையே பார்த்திருந்தனர்.
சில பந்தங்கள் பிறப்பினால் மட்டும் தோன்றுவதில்லை.
தானாக உணர்வுகளாலும் பிறப்பெடுக்கின்றன.
முகிழ்மதிக்கு வீருக்குமான அந்த சகோதர பந்தமும் அது தான்!
முகிழ்மதி 26:

நிமிடங்கள் மணித்துளிகளாக கடந்த பிறகும் ஆண்கள் மூவரும் அதே இடத்தில் இருந்து அவளையே பார்த்திருந்தனர்.
ஆனால் திருமண வீட்டில் அவர்களால் வெகு நேரம் அப்படியே அமர்ந்திருக்க இயலாதே?
அதிலும், ரத்தினவேல் அங்கு மணமகன்!
ஜித்தேந்திரன் அவனிற்கு சகோதரன்.
வீர் தான் இங்கு அனைத்தும்!
இந்த சூழ்நிலையில் ஒரே இடத்தில் முடங்கியிருக்க முடியாமல் அவள் நன்றாக உறங்கியப்பிறகு “அண்ணா நான் கீழேப்போய் கொஞ்சம் சமாளிக்கிறேன்…தமி வேற முன்னாடியிருந்து முகிழ் அண்ணி எங்கன்னு தேடிட்டு இருக்காள்…நான் ஏதோ பொய் சொல்லி சமாளிச்சு வைச்சிருக்கேன்…நீங்க இங்க பார்த்துக்கோங்க…மூணு பேரும் இல்லைனா சந்தேகம் வந்திடும்” என ஜித்தேந்திரன் கூறினான்.
அவனை விட பெரியவர்கள் இருவரும் முடங்கியிருந்ததால் சிறியவன் பொறுப்பை தன் கையில் எடுத்துக்கொண்டான்.
ரத்தினவேலிடமிருந்து “ம்” என்று மட்டுமே பதில் வந்தது.
அதையே தமையனின் கட்டளையாக எடுத்துக்கொண்டு அவன் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சென்றவுடன் வீரின் முகம் இறுக்கமாக மாறிவிட்டன.
அவனின் முகத்தில் இதுவரை கண்டிராத ஒரு ரௌத்திரம் தாண்டவமாடியது.
இப்போது இருவரும் ரத்தினவேலின் அறைக்கு வந்திருந்தனர்.
அவ்விடத்தில் சில நிமிடங்கள் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தன.
வீருக்கு முகழ்மதியின் தாயின் மீது கொலைவெறி தோன்றின.
பெற்றெடுத்த தாயே இத்தனை கொடூரமாக நடந்துக்கொள்வார்களா என்ற ஆவேசம் அவனிற்குள்!
எப்போதும் நிதானமாக யோசிக்கும் வீர் இன்றோ “பூபதி எனக்கு அந்த விஜயலட்சுமிய ஏதாவது பண்ணனும்…” என்றான் உச்சக்கட்ட ஆத்திரத்துடன்.
ரத்தினவேலோ எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.
“என்ன பூபதி எதுவும் பேசமாட்டிக்கிறே?எனக்கு அவளை அப்படி பார்த்தவுடனே என் நெஞ்சே உடைஞ்சுப்போச்சு…சின்னப் பொண்ணு அவ…அவளை இப்படி செய்ய எப்படி மனசு வந்துச்சு?என்னாலே தாங்கவே முடியலை” என்று கூறும் போதே அவன் குரல் உடைந்தது.
அதுவரை அமைதியாக இருந்த ரத்தினவேல் தலையுயர்த்தி அவனை அழுத்தமாக ஏறிட்டான்.
“வீர் நிதானம் பிரதானம்னு கேள்விப்பட்டதில்லையா?முதல்ல உட்காரு…வா” என்று கூறி தன்னருகே இருந்த இருக்கையை காட்டினான்.
அவனோ “ப்ச்…என்னாலே முடியலைடா…” என தனது கண்ணோரம் துளிர்த்த நீரை சுண்டிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தான்.
தனது தோழனை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “ஆமா நீ எங்கப்போனே?” என காட்டத்துடன் கேட்டிருந்தான்.
வீரும் அவனிடம் நிஜம் எதையும் மறைக்கவில்லை.
காஞ்சனா மாலா அவனிடம் ஒப்படைத்த பணியை பற்றி முழுவதுமாக எடுத்துரைத்திருந்தான்.
அவனிடம் இதுவரை வீர் எதையும் மறைத்ததில்லை.
தமயந்தி விஷயத்தை தவிர…
“என்ன கண்டுப்பிடிச்சே நீ?” என தாடையை நீவியப்படி அவன் கேட்க,
அவனின் முகம் இப்போது வாடி விட்டது.
அவன் கண்டிப்பிடித்ததை வெளிப்படையாக கூறவே அவனிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
ரத்தினவேல் “சொல்லு” என குரல் உயர்த்தியதும் அவனை ஏறிட்ட வீர் தொண்டையை செருமி “நான் விசாரிச்ச வரை அங்க எதுவுமே சரியில்லை…முகிழ்மதியை தவிர எல்லாமே அங்க தப்பா தான் இருக்கு பூபதி…அந்த லேடி விஜயலட்சுமி சிவராமன் இவங்க இரண்டு பேரோட பாஸ்ட் பத்தி யாருக்குமே சரியா தெரியலை…பல விதமான கதை உலாவிட்டு இருக்கு…எது உண்மை எது பொய்யுனே தெரியலை…அப்புறம் அந்த பொண்ணு சந்திரமதி” என்றவன் ஒரு கணம் தடுமாறி நிறுத்திவிட்டான்.
ஒரு பெண்ணை பற்றி அவதூறாக கூறுவதில் அவனிற்கு சிறிதும் உடன்பாடில்லை.அதனால் அவன் தயங்கினான்.
“ஃபைன் உனக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் இங்கயே புதைச்சிட்டு போய் பாட்டிகிட்ட எல்லாம் சரியா இருக்குனு சொல்லு” என ரத்தினவேல் அதிரடியாக கூறியதும் வீர் புருவம் சுருக்கினான்.
“பூபதி என்ன சொல்லறே நீ?அப்போ உனக்கு..” என பேச வந்ததை முடிக்காமல் அவன் நிறுத்தவும்,
ரத்தினவேல் ஆமோதிப்பாக தலையாட்டினான்.
இப்போது மொத்தமாய் அதிர்ந்துவிட்டான் வீர்.
“பூபதி எல்லாம் தெரிஞ்சும் இந்த கல்யாணம் நடக்கிறது அவசியமா?வேணாம்டா…அந்த பொண்ணு சரியில்லை” என நண்பனின் எதிர்காலத்தை எண்ணி அவன் தவிக்க,
அவனோ மறுப்பாக தலையாட்டி “நீ நினைக்கிற மாதிரி சந்திரமதி ஒண்ணும் தப்பான பொண்ணில்லை…ஒருத்தனை லவ் பண்ணியிருக்காள்…அவன் பொறுக்கினு தெரிஞ்சு விலகி வந்திட்டாள்…என்ன ஒண்ணு பயங்கரமான செல்ஃபிஷ்…நாம்ப நல்லாயிருந்தால் போதும்னு நினைக்கிற கேட்டகிரி…அவ்வளவு தான்” என்றான் அலட்சியமாய் தோளை குலுக்கி.
வீருக்கோ நண்பனின் ஆதங்கமும் கோபமும் தோன்றியது.
அதனால் அவன் “பூபதி நீ சொன்ன மாதிரி அவ நல்லவளாவே இருக்கட்டும்…உனக்கு அந்த பொண்ணு மேட்ச் இல்லை…இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்றான் சிடுசிடுப்புடன்.
அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி “ஏன்டா இப்போ தான் ஒரு பொண்ணுக்காக பிழிஞ்சு பிழிஞ்சு அழுதிட்டு வந்தே…இப்போ இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்த சொல்லறே…உனக்கு மனசாட்சி இருக்கா?” என கேலியாக இதழை வளைத்து கேட்க,
வீரோ நெற்றியை நீவி “ப்ச் முகிழ்மதியோட அந்த பொண்ணை கம்பேர் பண்ணாதேடா…அவளும் எனக்கு சிஸ்டர் மாதிரி தான்…அவளுக்கு வேணும்னா ஒரு நல்லப்பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்…இந்த கல்யாணம் மட்டும் வேணாம்” என்றான் பிடிவாதமாக.
ரத்தினவேலோ ஒரு பெருமூச்சுடன் “கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் வீர்” என்றான் உறுதியான குரலில்.
“ஆனால் பூபதி…” என ஏதோ பேச ஆரம்பித்தவனின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்திவிட்டான் அவன்.
அவனின் கை அசைவுக்கு உடன்பட்டு அவன் அமைதியாகிவிட்டான்.
ரத்தினவேல் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து எக்காரணத்தை கொண்டும் மாறமாட்டான் என்று அவனிற்கு தெரியும்.
அதனால் தன் கண் முன்னே நண்பனின் வாழ்வு சீரழியப்போவதை அவனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
அதனால் இந்த திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்ய வேண்டும் என தனக்குள்ளே உறுதிப்பூண்டான்.
தற்போது முகிழ்மதியின் நிலை அவனின் நெஞ்சை சுட்டது.
‘பேசாமல் நீயே முகிழ்மதிய கல்யாணம் பண்ணிக்கலாமே’ என்று கேட்க வாய் வரை வார்த்தை வந்தது.
ஆனால் ‘வேணாம்’ என இறுக மூடிக்கொண்டான்.
அவனின் முகம் வைத்தே அவன் கேள்வியை படித்த ரத்தினவேல் அதைப்பற்றி பேச விரும்பாமல் வேறு பேசினான்.
“வீர் முகிழ்மதியை கல்யாணம் முடியற வரை ஷேப் கார்ட் பண்ண வேண்டியது நீ தான்…கல்யாணம் முடிஞ்சப்பிறகு அந்த விஜயலட்சுமிய என்ன செய்யறதுனு நான் பார்த்துக்கிறேன்” என்று அவன் ஆணைப்பிறப்பிக்க,
வீர் பெருமூச்சுடன் “ம்” என்று மட்டும் கூற,
“பாட்டிக்கிட்ட என்ன சொல்லணும்னு ஞாபகம் இருக்கா?” என இமைகள் இடுங்க அவனை பார்த்தப் படி வினவ,
சட்டென இமை உயர்த்திய வீர் வேண்டாவெறுப்பாக “தெரியும்” என்றான் சற்று எரிச்சல் மிகுந்த குரலில்.
ரத்தினவேலோ அவனை ஆழ்ந்து பார்த்து “குட்” என்றதோடு தன் பணி முடிந்தது போல் அவனின் அலைப்பேசியை எடுத்து பார்வையிட ஆரம்பித்தான்.
இத்துணை களேபரத்திற்கு பிறகும் அவன் திருமணம் செய்துக்கொள்ள தயாராகிய காரணம் அவனிற்கு புரியவே இல்லை.
‘அவன் நினைப்பது எதுவும் அவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது’ என்றெண்ணி சலிப்பாக தலையாட்டி அவன் சென்றுவிட்டான்.
செல்லும் அவனது முதுகை ஏறிட்டு பார்த்த ரத்தினவேலின் இதழில் சிறு கீற்றாய் ஒரு புன்னகை!
*****************
சந்திரமதி அவளின் அறையில் தனது வேதனையில் உழன்றப்படியே அமர்ந்திருந்தாள்.
அச்சமயம் உள்ளே வந்த விஜயலட்சுமி “மதி கல்யாணப்பொண்ணு கலகலனு இருக்க வேணாமா?ஏன் சோகமா இருக்கே?” என விசாரிக்க,
அவளோ “நத்திங் மம்மி…” என சிரிக்க முயன்றாள்.
“என் கண்ணு…” என அவளின் கன்னம் வழித்து கொஞ்சியவர் அப்போது தான் அவளின் கரத்தில் மோதிரம் இல்லாததை கவனித்தார்.
“எங்கே உன் மோதிரம் மதி?” என அவர் குரலுயர்த்தி கேட்டதும் “இங்க இருக்கு மம்மி” என அவள் பெட்டியை காட்டினாள்.
“ப்ச் என்ன இது மதி?யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?இந்த கல்யாணத்தில் தான் நம்ப வாழ்க்கையே இருக்கு…முதல்ல மோதிரத்தை எடுத்து போடு” என குரலுயர்த்தி அதட்ட,
வேறுவழியின்றி அவள் அந்த மோதிரத்தை எடுத்து அணிந்துக்கொண்டாள்.
இதுநாள் வரை இந்த திருமணத்தில் பெரிதாக அவளிற்கு நாட்டம் இருந்ததில்லை.
ஆனால் ஹரிஷை அவள் சமாளிக்க வேண்டும் என்றால் அவளிற்கு பணப்பலமும் அதிகாரப்பலமும் தேவை.
அதனால் அவளின் எதிர்கால வாழ்வு சிறக்க ரத்தினவேலை திருமணம் செய்துக்கொள்ள வேண்டியது அவளிற்கு அவசியம்!
அதனால் விருப்பமில்லையென்றாலும் அவனுடனான அந்த திருமணத்தை ஏற்க தயாராகிவிட்டாள் சந்திரமதி.
அவளின் தாய் விஜயலட்சுமியோ கணவரிடம் கூறியது போல் அவளிடம் சில போதனைகளை தூவ ஆரம்பித்துவிட்டார்.
திருமணத்திற்கு பின்பான கணவன் மனைவி உறவை பற்றி அவர் விளக்கமாக கூறியதும் அவளின் முகம் அருவருப்பில் சுருங்கின.
அவரின் பேச்சுக்கள் அவளிற்கே சில இடங்களில் மேனியை கூசச் செய்தது.
“மம்மி…” என அசூயையுடன் அவளை தடுக்க முனைய,அவரோ நிறுத்துவதாக இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலே பொறுக்க முடியவில்லை.
“மம்மி பிளீஸ் எனக்கு தூக்கமா வருது…அவர் வேறே கால் பண்ணறேன்னு சொன்னாரு…நீ கிளம்பு மம்மி” என கொட்டாவி விட்டவாறே பொய் சொல்ல,
அவரோ “யாரு மாப்பிள்ளையா?” என வழிசலாய் சிரிக்க,அவளிற்கு கடுப்பாக வந்தது.
ஆயினும் சமாளித்து “ஆமாம்…” என தலையசைத்தாள்.
உடனே அவர் “அப்போ நான் சொன்ன மாதிரி பேசு…” என ஒரு மார்க்கமாக கையை காட்டி பேசவும்,
அவளிற்கு ஒவ்வாமையில் முகம் அஷ்டக்கோணலாகியது.
ஆனால் அவர் காண்பதற்கு முன்பு தலை குனிந்தவள் “மம்மி நான் பேசிக்கிறேன் நீ போ” என வெட்கப்படுவது போல் நடித்தாள்.
அதை உண்மை என்று நம்பிய விஜயலட்சுமியும் “சரி மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டு நீ தூங்கு மதி…அப்போ தானே காலையிலே புத்தம் புதுசா பூ மாதிரி இருக்கமுடியும்…மாப்பிள்ளையையும் மயக்க முடியும்” என எங்கு சுற்றிலும் அவ்விடத்திற்கே வந்து சேர்ந்தார் அவர்.
அவளிற்கு ஒரே சலிப்பாக இருந்தது.
ஒரு வழியாக பேசி முடித்ததும் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவளாய் “ஆமா மம்மி…முகிழ் எங்கே?சாய்ந்திரத்திலிருந்து பார்க்கறேன்…ஆளை காணும்” என தன் இரட்டை சகோதரியை பற்றி விசாரிக்க,
அதுவரை இருந்த கனிவு அவரிடம் விடைப்பெற்றிட “அந்த சனியனை பத்தின பேச்சு எதுக்கு…நீ தூங்கு” என வெடுக்கென்று கூறிவிட்டு அவர் வெளியேறியிருந்தார்.
அவளிற்கு ஏனோ அந்நிமிடம் தங்கையை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்றின.
அதனால் அவளின் எண்ணிற்கு தொடர்புக்கொண்டாள்.
எதிர்புறம் அழைப்பு சென்றதே ஒழிய,யாரும் எடுப்பதாக தெரியவில்லை.
‘எங்க போயிட்டாள் இவ’ என குழப்பத்துடன் வெளியே வர,அங்கு அவளின் தாய் முகிழ்மதி அறையின் முன்பு நிற்பதை கண்டதும் ‘வேற வினையே வேணாம்பா…அவளை பார்க்கப்போறது தெரிஞ்சது…அவ்வளவு தான்’ என பயத்துடன் பின்வாங்கிவிட்டாள்.
அதன்பிறகு முகிழ்மதியை பற்றி அவள் சிந்திக்கவில்லை.
தாய் அவளை மிரட்டியிருப்பார்.அதனால் தான் அவள் தன் அழைப்பை எடுக்கவில்லை என்று அவளாகவே காரணத்தை யூகித்து அமைதியடைந்திருந்தாள்.
நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ரஞ்சனை ஒரு வழியாய் யாருக்கும் தெரியாமல் துரத்திவிட்டு அவர் முகிழ்மதியை காண வந்தார்.
முகிழ்மதியை அடைத்து வைத்திருந்த அறையின் தாழ்ப்பாள் திறந்திருப்பதை கண்டு பதறிப்போனார்.
அதனால் வேகமாக அவர் கதவை தட்ட,கதவை திறந்தது என்னவோ ரத்தினவேல் தான்!
அவனை அங்கு பார்த்தவுடன் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது.
முகிழ்மதி 27:

ரத்தினவேலை அங்கு சற்றும் எதிர்பாராத விஜயலட்சுமி “மாப்பிள்ளை நீங்க இங்க என்ன பண்ணறீங்க…” என அதிர்ச்சியோடு கேட்டவரின் விழிகள் அவனறையை நோட்டமிட ஆரம்பிக்க,
அவனோ அவரை உயிரை ஊடுருவும் பார்வை பார்த்து “என் ரூமிலே நான் இல்லாமல் வேற யாரு இருப்பாங்க?” என தன் கையிலிருந்த கைகாப்பை அவன் முறுக்கிக்கொண்டு கேட்டதும், பயந்துப்போய் ஓரடி பின்னால் நகர்ந்தார் விஜயலட்சுமி.
அவனின் பார்வை அவரின் நெஞ்சை சில்லிட வைக்க “இல்லீங்க தம்பி எங்க முகிழு…” என எச்சிலை கூட்டி விழுங்கியப்படி அவர் இழுக்க,
அவனோ இமைகள் இடுங்க “முகிழ்மதியா அவளுக்கு என்ன” என்றான் காட்டத்துடன்.
‘ஆத்தி…இவன் ஆபத்தான ஆளுப்பா…இவன் கிட்ட பேச்சு கொடுக்காமல் இருக்கிறது தான் நமக்கு நல்லது’ என்றெண்ணி “ஹிஹிஹி…அவளுக்கு ஒண்ணுமே இல்லை தம்பி…தெரியாமல் வந்திட்டேன்…நீங்க தூங்குங்க” என இளித்துக்கொண்டே கமுக்கமாக உள்ளே பார்க்க முயல,
அவனோ “ம்க்கும்” என தொண்டையை செருமி மீசையை முறுக்கியதும் ‘ஐய்யோ அடிச்சாலும் அடிச்சிடுவான் போலே’ என சிரித்து சமாளித்தப்படியே அவனறையை கடந்து வந்தவருக்கு மனதில் பெரும் குழப்பம்!
‘இங்க தானே அவளை அடைச்சு வைச்சோம்…சனியன் எங்கப்போய் தொலைஞ்சதுனே தெரியலையே…ஒரு வேளை பக்கத்து அறையா இருக்குமோ…’ என அவர் அவனறைக்கு பக்கத்து அறையை தட்ட கையை தூக்கியதும் “என் ரூமுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணறீங்க?” என சூடான குரலில் கேட்டுக்கொண்டே அங்கு வந்தான் வீர்.
அவரோ ஒரு கணம் திடுக்கிட்டு அவனை ஏறிட்டவர் “இது உங்க ரூமா தம்பி?” என அசட்டுத்தனமாக வினவ,
அவரின் முகத்தை பார்த்தவனிற்கு அப்படியொரு ஆத்திரம்…
இடையில் சொருகியிருக்கும் துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொல்லும் அளவு ஆத்திரம்!
ஆயினும்,நண்பனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தணிவாக பேசி வேண்டியதாக இருந்தது.
அவரை ஆழ்ந்து நோக்கிய வீர் “ஆமா இந்த நேரத்திலே நீங்க என்ன செய்யறீங்க?” என சந்தேகமாக அவரிடம் வினவ,
அவரோ “ஒண்ணுமில்லை தம்பி…சும்மா” என்றவரின் விழிகளில் சூழ்ந்த குழப்பம் மட்டும் நீங்காமல் இருந்தது.
அதனால் அவர் அவ்வறையையே குறுகுறுவென பார்த்திருக்கவும் “ம்க்கும்” என தொண்டையை செருமினான் வீர்.
‘இவனுக்கு என்ன பிரச்சனை?’ என கடுப்பாக விழி உயர்த்திய விஜயலட்சுமியின் நெஞ்சக்கூடு காலியானது.
“ஒரே தூக்கமா வருது…போய் தூங்கணும்” என சலிப்பாக கூறியப்படியே துப்பாக்கியால் நெற்றியை நீவிக்கொண்டிருந்தான் வீர்.
அவனின் கரத்திலிருந்த துப்பாக்கியை பார்த்தவரின் விழிகள் இரண்டும் தெறித்து விடுவது போல் விரிய ‘ஆத்தி’ என நெஞ்சில் கைவைத்து கொண்டார்.
ஏதேச்சையாக அவரை கவனிப்பது போல் அவரின் புறம் திரும்பிய வீர் “ஓ…சாரி நீங்க இன்னும் கிளம்பலையா?நீங்க கிளம்பிட்டீங்கனு நினைச்சிட்டேன்” என சிரித்துக்கொண்டே துப்பாக்கியை இடையில் சொருக்கியவன் “இன்னைக்கு தான் இதிலே பத்து பேரை போட்டு தள்ளிட்டு வந்தேன்” என அலட்சியமாக கூறினான்.
அதைக்கேட்டவருக்கு சர்வ அங்கமும் நடுங்கியது என்றால்,அடுத்ததாக அவன் கூறியதை கேட்டவருக்கு ஈரக்குலையே நடுங்கிவிட்டன.
“நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க?அந்த பத்து பேரும் சேர்ந்து ஒரு பொண்ணை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க…எனக்கு வேறே பொண்ணுங்களை டார்ச்சர் பண்ணற ஆட்களை கண்டாலே பிடிக்காது…அதான் போட்டு தள்ளிட்டேன்” என்றான் சர்வசாதாரணமாக.
அவரோ உச்சக்கட்ட பயத்தில் “என்ன தம்பி ஏதோ கொசுவை அடிச்சு கொன்ன மாதிரி சொல்லறீங்க…அது பத்து உயிர் தம்பி” என வாயை பிளக்க,
அவனோ அலட்சியமாக தோளை குலுக்கி “கரெக்ட்…பட் பொண்ணுங்களை டார்ச்சர் பண்ணற ஆட்களை கண்டாலே எனக்கு கொல்லணும்னு தான் வெறி வரும்…என்ன பண்ணறது?நீங்களே சொல்லுங்க உங்க பொண்ணை யாராவது ரூமுக்குள்ள அடைச்சு சூடு வைச்சு இப்படியெல்லாம் யாராவது கொடுமை பண்ணால் நீங்க என்ன செய்யவீங்க?” என கர்ஜனையான குரலில் கேட்டுக்கொண்டே அவன் ஓரடி முன்னே வைத்தான்.
அவ்வளவு தான்?
அவரது உடலிலுள்ள ஒட்டுமொத்த அணுவும் பீதியில் உறைந்துவிட்டன.
அவர் வசமாக அவர்களிடம் சிக்கிக்கொண்டது அவருக்கு புரிந்துவிட,தான் உயிர்ப்பிழைத்தால் போதும் என்று எண்ணியவராய் “எனக்கு தூக்கம் வருது தம்பி…நீங்க தூங்குங்க” என அவசரமாக மொழிந்துவிட்டு அங்கிருந்து ஓடியேவிட்டார்.
அவரின் முதுகை வெறித்த வீரின் விழிகள் இரண்டும் வெஞ்சினத்துடன் சிவந்துப்போனது.
“வீர்..” என பின்னாலிருந்து ரத்தினவேலின் குரல் கேட்டப்பிறகே வீர் தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்.
“சாரி…ஐ காண்ட் கன்ட்ரோல்…” என பெருமூச்சுடன் சொல்லிக்கொண்டே அவன் திரும்ப,
ரத்தினவேலோ ஆமோதிப்பாக தலையசைத்து ஏற்றவன் “இட்ஸ் ஓகே…நோ பிராப்ளம்…இந்நேரம் அந்த லேடிக்கு முகிழ்மதி நம்ப கூட இருக்கிறது தெரிஞ்சிருக்கும்…சோ வி கிப் ஹர் சேஃப்” என்றான்.
“ஓகே” என தலையாட்டிய வீரின் முகமோ வெகு தீவரமடைந்தது.
ஒரு தங்கையை காக்க நினைக்கும் தமையனின் தீரம் அவனிற்குள்!
அன்றிரவு முழுவதும் முகிழ்மதியை ஒரு பொக்கிஷத்தை பார்ப்பது போல் ஆண்கள் மூவரும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
“நான் பார்த்துக்கிறேன்…நீங்க போங்க…” என வீர் கூறியும்,
“அண்ணா அதெல்லாம் முடியாது…நீங்க எப்போ பாரு ஏதாவது வேலை செஞ்சிட்டு இருக்கீங்க…உங்களுக்கு ஒரு ரெஸ்ட் தேவை…கொஞ்ச நேரம் போய் படுத்திட்டு வாங்க” என ரத்தினவேலின் மனதில் இருப்பதை ஜித்தேந்திரன் கூறியிருந்தான்.
வீர் ரத்தினவேலை பார்க்க “போ” என தலையாட்ட சிறிது நேரம் அவன் படுக்கையில் அயர்ந்துவிட்டு வந்தான்.
அவனிற்கு உறக்கம் என்பதே வரவில்லை.
படுக்கையில் விழுந்தால் முகிழ்மதியின் தீக்காயமே கண்முன்னால் வந்து இம்சித்தது.
அதேப்போல் தான் ரத்தினவேலிற்கும் மொத்தத்தில் ஆண்கள் அனைவருக்கும் அது உறக்கம் வராத இரவாகிப்போனது.
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மண்டபத்தில் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்துவிட்டன.
குடும்பத்து ஆட்களும் ஒவ்வொருவராக எழுந்ததை கவனித்த ரத்தினவேல் “இதுக்கு மேலே நம்மாலே இங்க இருக்கமுடியாது…தமி வில் டேக் கேர்” என்றான்.
வீரோ “இல்லை…நீங்கப்போய் கல்யாண வேலைய பாருங்க…நான் இங்கயே இருக்கேன்” என்றான் சுவற்றில் சாய்ந்து நின்று…
இப்போது மூவரும் அவளின் அறையின் முன்பு நின்றிருந்தனர்.
அவனை அழுத்தமாக நோக்கிய ரத்தினவேலோ “வீர் எழுந்தவுடனே பாட்டி உன்னை தான் தேடுவாங்க…” என கூறியதற்கு ஏற்றாற் போன்று அவனின் அலைப்பேசி அலறியது.
வீரும் அதனை எடுத்துப்பார்த்துவிட்டு நண்பனை பார்த்து புன்னகையை உதிர்த்தான்.
ஏனெனில்,காஞ்சனா மாலா தான் அவனிற்கு அழைத்திருந்தார்.
ஜித்தேந்திரன் அலைப்பேசியை எட்டிப்பார்த்துவிட்டு “எப்படி அண்ணா உங்களுக்கு மட்டும் எல்லாரை பத்தியும் தெரியுது?” என அவன் ஆச்சரியமாக கேட்க,
வீரோ அவன் தோளில் தட்டி “அதனாலே தான்டா உன் அண்ணா பாஸா இருக்கான்…நாம்ப இன்னும் அவனுக்கு சேவகனா இருக்கோம்” என்றான் சிரித்துக்கொண்டே…
“அது வேணா உண்மை தான்…மைண்ட் ப்ளோயிங்” என அவன் இதழை பிதுக்கி தமையினை பாராட்ட,
உடனே ரத்தினவேல் அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்ததும் ஜித்தேந்திரன் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
‘பாராட்டறதுக்கூட தப்பாடா சாமி’ என உள்ளுக்குள் புலம்பி கடுப்புடன் நின்றிருக்க,
திடீரென்று ஒரு கணம் புருவம் சுருக்கிய ரத்தினவேல் “ஐ திங்க் ஷீ வெக்டு அப்” என்றான் ஒரு வித பிடீகையுடன்…
“யாரு?” என மத்த இருவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்து கேட்ட வேளையில் முகிழ்மதி இருந்த அறையின் கதவு சத்தமின்றி திறக்கப்பட்டது.
இரவு நன்றாக உறங்கி எழுந்த முகிழ்மதிக்கு நேற்று நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நினைவில் எழுந்தது.
உடனே தாயை பற்றிய நினைவுகள் அவளில் வந்ததும் அவளிற்கு அச்சத்தில் உடல் வியர்த்தது.
அவசரமாக படுக்கையிலிருந்து எழுந்த முகிழ்மதி பத்தே நிமிடத்தில் குளித்துவிட்டு வந்திருந்தாள்.
இரவு மருத்துவர் வந்து அவளிற்கு சிகிச்சை அளித்ததாலோ அல்லது ஆண்கள் மூவரின் அன்பான கவனிப்பாலோ பாவையவளிற்கு ஓரளவு காயம் சரியாகியிருந்தது.
அவளின் உயிரை குடித்த ரண வலி இப்போது சிறிது மட்டுப்பட்டிருந்தது.
ஒரு வழியாக குளித்து தயாராகி கதவை திறந்து வெளியே வந்த முகிழ்மதிக்கு தூக்கிவாரிப்போட்டது.
தன் அறையின் முன்பு நின்றிருந்த ஆறடி உயர மூன்று ஆண்களுக்கு நடுவில் அவள் சிறு பொம்மை போல் நின்றிருக்க,அவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
மஞ்சள் நிற பட்டுப்பாவாடை தாவணியில் தயாராகி வந்த முகிழ்மதியை ஆண்கள் மூவரும் ஆச்சரியமாக நோக்கினார்கள்.
சட்டென மற்ற இரு ஆண்களும் ரத்தினவேலை திரும்பி ஏறிட,அவனின் விழிகளோ அவளை தான் ஆராய்ச்சியுடன் பார்த்திருந்தது.
இப்போது வீருக்கே குழப்பமாக இருந்தது.
சந்திரமதியை திருமணம் செய்துக்கொள்ள இருப்பவன்,முகிழ்மதியின் மீது செலுத்தும் அக்கறையும் பார்வையும் அவனிற்குள் சஞ்சலத்தை விதைத்தது.
‘இதுக்கு இவன் இந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாமே…எதுக்கு இந்த வேஷம்?’ என அவனிற்குள் சிந்தனைகள் தாறுமாறாக ஓடின.
அதனை தடுக்கும் விதமாக முதலில் வாயை திறந்தான் ஜித்தேந்திரன்.
“முகிழ்மதி எங்க கிளம்பிட்டிங்க?” என்று அவன் பரிவுடன் அவளை நோக்கி வினவ,
அவளோ “அது வந்து கல்யாணம்…” என திக்கி திணறி ரத்தினவேலை பார்த்துக்கொண்டே கூறினாள்.
அவனோ ஒரு முறை மீசையை முறுக்கிவிட்டு ‘பார்த்துக்கோ’ என்பது போல் இரு ஆண்களிடமும் கண்ணசைத்துவிட்டு சென்றுவிட்டான்.
அவனிற்குள் சிறு கோபம் முகிழ்ந்துக்கொண்டிருந்தது.
அவனிடம் எதையும் கூறாமல் வீரிடம் மட்டும் அவள் பேசியதினால் உண்டான கடுப்பு அது!
அதன்பொருட்டே அவள் நலமாக இருப்பதறிந்து நண்பனின் பாதுகாப்பில் அவளை விட்டு சென்றான்.
அவன் சட்டென அங்கிருந்து அகன்றதும் அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
நேற்றிலிருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவன்,இன்று அவளிடமிருந்து விலகிச்செல்வதை கண்டு ஏனோ மனம் வலித்தது.
ஆனால் அவளின் மனமே அவனிற்கு இன்று திருமணம் என்பதை வலியுறுத்த,வேறுவழியின்றி தன்னை தேற்றிக்கொண்டாள்.
“முகூர்த்தம் ஏழு மணிக்கு தான்…நீங்க இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாமில்லை…” என ஜித்தேந்திரன் அக்கறையுடன் சொல்ல,
அவனிடம் இதற்கு முன்பாக நன்றாக பேசி பழகியிராததால் அவள் தயக்கமாக
“இல்லை அம்மா தேடுவாங்க” என்றாள் இமைத்தாழ்த்தி…
அவள் அவ்வாறு கூறியதும் ஜித்தேந்திரனிற்கே எரிச்சல் வந்தது.
‘என்ன பெண் இவள்?அவர்கள் அவ்வளவு கொடுமை செய்தும்…அவர்களை சுற்றியே வருகிறாளே’ என ஆற்றாமையுடன் தலையசைத்துக்கொண்டான்.
அதேசமயம் அவர்களின் மேல் அவள் வைத்திருக்கும் அன்பை எண்ணி வியப்பாகவும் இருந்தது.
அக்கணம் அவளின் மீது ஒரு மரியாதையும் எழுந்திட “சரி நீங்க கீழே வாங்க…வீர் அண்ணா…நீங்க இவங்களை பார்த்துக்கோங்க…நான் தமி ரெடியாகிட்டாளானு பார்த்து கூட்டிட்டு வர்றேன்” என இருவரிடமும் விடைப்பெற்று மின்தூக்கியின் வழியே கீழே சென்றுவிட்டான்.
அவன் அங்கிருந்து சென்றதும் அங்கு நின்றிருந்த இருவரிடத்திலும் ஒரு ஆழ்ந்த மௌனம்!
முகிழ்மதிக்கு நேற்றிரவு அவனிடம் நடந்துக்கொண்டது எதுவும் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் அவனிடம் பேசிவிட்டு அவள் தாயிடம் வாங்கிய தீக்காயம் ஆறாத ரணமாய் வலித்தது.
அதனால் அவனிடம் அவள் பேச தயங்கினாள்.
அவள் வெளியில் வந்த சமயம் ஆண்கள் மூவரையும் பார்த்ததோடு சரி…
அதற்கு பிறகு அவள் வீரின் முகத்தை பார்க்கவே இல்லை.
அவனிற்கோ அவள் தன்னிடம் பேசிவிட வேண்டும் என்ற தவிப்பு…
அவள் தன்னை நிராகரிப்பது தெரிந்து அவன் அவளிடம் பேச தயங்க…
அவளோ பயத்தில் தாவணியை பிசைந்துக்கொண்டு நின்றிருந்தாள்.
அவனிடம் உரையாட வேண்டும் என்று நெஞ்சை மூட்டும் அளவு ஆசை அவளிற்குள்ளும் நிறைந்திருந்தது.
தாயின் மீதுள்ள அச்சம் அவளை அவனிடம் பேசவிடாமல் தடுத்தன.
அவளிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.
அந்த மூன்று ஆண்களும் அவளின் அறையின் முன்பு நின்று தன்னை பாதுகாத்திருக்கிறாள் என்று!
தனக்காக யாருமில்லை என்று துவண்டுக்கொண்டிருந்த பெண்ணவளிற்கு தனக்கு ஒன்று என்றால் துடிக்க இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே நெஞ்சம் உவகையில் விம்மி தணிந்தது.
அதற்கு மேல் அவளால் அவனிடம் பேசாமல் இருக்கமுடியவில்லை.
தன்னை கோழிக்குஞ்சு போல் அடைக்காத்த அனைவருக்கும் சிறு நன்றியாவது உரைக்க வேண்டும் என்றெண்ணி விழி உயர்த்தினாள் பாவையவள்.
‘நன்றி’ என உரைக்க வாயை திறந்தவளின் இதழ்கள் அவனது முகத்தை கண்டதும் பசைப்போட்டது போன்று ஒட்டிக்கொண்டன.
அவன் முகத்தில் தெரிந்த தவிப்பு…பாசம்…அன்பு…எதிர்பார்ப்பு…அதையெல்லாம் விட அவனது கண்ணீர்…
அதைப்பார்த்ததும் பாவையவளின் விழிகள் தன்னாலே கலங்கிவிட்டன.
அதுவரை அழுத்தமாக இருந்தவளின் இதயம் மொத்தமாய் உருகிவிட “அண்ணா” என அழைத்தவளின் குரல் உடைந்துவிட்டன.
அதற்காகவே காத்திருந்தாற் போன்று அவளின் முன்பு தன் கரம் நீட்டி “நல்லாயிருக்கியாம்மா?” என கரகரத்த குரலில் வினவ,
முதலில் அவனிடம் தன் கரம் கொடுக்கவே தயங்கிய பெண்,பின்பு தானாகவே அவனிடம் தன் கரத்தை ஒப்படைத்து “நல்லாயிருக்கேண்ணா” என்றதும் இருவரின் விழியிலிருந்தும் நீர் வழிய தொடங்கின.
சில நிமிடங்கள் கண்ணீர் மற்றும் மௌனத்தில் கரைந்தது அவர்களது நேரம்!
அவர்கள் இருவரின் அன்பை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை.
ஆடவனது அந்த அன்பும் அரவணைப்பும் அவளிற்கு ஏனோ இழந்த ஒரு சொந்தத்தை மீட்டுக்கொடுத்தது போலிருந்தது.
அச்சமயம் வீர் அவளின் கூந்தலை பாசத்துடன் வருடியப்படி “நீ என்கூட என் தங்கச்சியா என் வீட்டுக்கு வந்திடறீயா?” என தன்னை மீறி கேட்டிருந்தான்.
அதை அவளிடம் கேட்டதற்கு பிறகே அவனுடைய தவறு உரைக்க ‘காட் நான் என்ன பண்ணறேன்?அவ சின்னப்பொண்ணு அவகிட்ட போய் என்ன பேசறேன்?’ என தன்னையே கடிந்துக்கொண்டு அவளிடம் அவன் மறுப்பு தெரிவிக்க முனைந்தான்.
ஆனால் அவனையே ஸ்தம்பிக்க செய்யும் வகையில் “வர்றேண்ணா” என தலையாட்டியிருந்தாள் அவள்.
அவளின் தலையை வருடியவனின் கரம் உறைந்து நின்றுவிட,சட்டென அவளை குனிந்து நோக்கிய வீர் “என்னம்மா சொன்னே?” என தவிப்புடன் அவளை கேட்க,
இப்போது தடுமாறி நிற்பது அவள் முறையானது.
அவளிற்குமே அவனிடம் ஏன் அவ்வாறு கூறினாள் என்றே தெரியவில்லை.
அவள் பதில் கூற தெரியாமல் விழிக்க,அவனோ மென்மையாக அவளை நோக்கி “இதுக்கு மேலே உன்னை அந்த நரகத்திலே விடமுடியாதும்மா…இனி நீ தான் என் தங்கச்சினு நான் முடிவு பண்ணிட்டேன்” என கூறியவனின் குரலில் அப்படியொரு உறுதி!
அவள் “அண்ணா” என பயத்தில் மிடறு விழுங்க,
“நான் பார்த்துக்கிறேன்” என அவளின் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துக்கொண்ட வீர் ஒரு தீட்சண்ய முடிவெடுத்துவிட்டான்.
அடுத்த கணமே,அவன் எடுத்த முடிவை தனது நண்பனிடம் தெரிவித்தான் வீர்.
“பூபதி முகிழ்மதியை நான் என் தங்கச்சியா தத்தெடுத்துக்கலாம்னு இருக்கேன்…லீகல் ஃபார்மாலிட்டிக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்” என அவன் முடிவாக அறிவிக்க,ரத்தினவேல் அவனை இமைகள் இடுங்க பார்த்திருந்தான்.
அதேநேரம் கீழிருந்த மணமகளின் அறையில் சந்திரமதியை காணவில்லை என்று ஒரே கூச்சலாக இருந்தது.