முகிழ்மதி 23,24

முகிழ்மதி 23:


 

 

கானகத்தில் தனித்து நிற்கும் பெண் மானை போல் பாவையவள் மிரட்சியில் இங்கு தவித்தாள்.

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்ட பாவையவளிற்கு இரத்தம் உறைந்துப்போனது.

அவளின் சுவாசம் முற்றிலும் நின்றுவிடும் போலிருக்க,நெஞ்சில் திகலோடு ‘அம்மா’ என இறுதிமுறையாக கதவை தட்ட கையை தூக்கினாள்.

அந்தோ பரிதாபம்!

அவளால் அதற்கு கூட தனது கரத்தை உயர்த்த முடியவில்லை.

சில நிமிடங்களிலே அவளது உடலின் ஒட்டுமொத்த பலமும் நீர்த்துப்போக அவளின் மேனி மண்ணில் சரிந்தது.

தனது உயிரை மீட்டெடுப்பதற்காக அவள் இடையில் எப்போதும் இருக்கும் சுவாச உள்ளிழுப்பானை அவளின் கரம் தேடி திரிந்தன.

சட்டென அவளின் மேனி மொத்தமும் இரத்தப்பசையின்றி வெளுத்துப்போனது.

ஏனெனில்,அவசரத்தில் அவள் சுவாச உள்ளிழுப்பனை எடுத்து வந்திருக்கவில்லை.

அதற்கான அவகாசம் கூட வழங்காமல் அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்திருந்தார் விஜயலட்சுமி.

அவள் சுவாசமின்றி தரையில் விழுந்து துடிக்கையில் அவளிற்கு அருகே ஒரு அழுத்தமான காலடியோசை ஒன்று கேட்டது.

தன்னை நோக்கி வருவது யார் என்று கூட அவளிற்கு தெரியவில்லை.

அறையெங்கும் சூழ்ந்திருந்த இருள் அவளை அறியவிடவில்லை.

அதனால் அந்த புள்ளி மான் இன்னும் பயத்தில் மிரள,இப்போது அவளின் முகத்தில் திடீரென்று வெளிச்சம் ஒன்று பாய்ச்சப்பட்டது.

இருளில் மூழ்கி தவித்தவளின் வாழ்வில் ஒளியாய் வந்தது போல் இருந்தது,அவன் வருகை!

அவன் வேறு யாருமல்ல,ரத்தினவேல் ரகுநாத பூபதி தான்.

அவனிற்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட அறை இது!

குளித்துக்கொண்டிருந்தவனிற்கு திடீரென்று வெளியிலிருந்து ஏதோ ஒரு பெண்ணின் அழுக்குரல் கேட்டது‌.

உடனே அவனின் புருவங்கள் இரண்டும் இடுங்கிட,அவசரமாக பூந்துவாலையால் தன்னை துடைத்து ஆடையை அணிந்துக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் குளியலறை கதவை திறக்கும் முன்பு அறையின் மின்சாரம் தடைப்பட்டது.

‘ப்ச் மண்டபத்தை ஒழுங்கா மெயின்டெய்னன்ஸ் பண்ணறாங்களா இல்லையா?’ என சலித்துக்கொண்டே மெதுவாக நடந்துச்சென்று அலைப்பேசியை கையில் எடுத்தான்.

அப்போது அவனிற்கு ஒரு பெண்ணின் மூச்சிறைப்பு குரலும்,கூடவே ‘அம்மா’ என்ற ஈனஸ்வரமும் அவனது செவியை அடைந்தன.

அடுத்த கணமே அவனின் செவிகள் இரண்டும் கூர்மைப்பெற, விழிகள் இருளில் அறையை சுற்றி வலம் வந்தது.

இறுதியாக அந்த சப்தம் கதவருகே இருந்து வருவதை அறிந்து அலைப்பேசியின் விளக்கை பயன்படுத்தி ‘யார் அது?’ என பார்க்க முனைந்தான்.

மங்கலான வெளிச்சத்தில் அவளின் உருவம் சரியாக தெரியாததால் அந்த சிறு ஒளியை பயன்படுத்தி முன்னே வந்த ரத்தினவேலின் நெஞ்சம் அதிர்ந்தது.

தரையில் விழுந்த மீனாய் சுவாசத்திற்காக தவித்துக்கொண்டிருந்த முகிழ்மதியை கண்ட ரத்தினவேலின் சப்த நாடிகளும் அடங்கிப்போனது.

அவனிற்கு ஒரு கணம் தன்னுயிரே தன்னை விட்டு நீங்கி சென்றது போலிருந்தது.

சடுதியில் சுய உணர்விற்கு வந்த ரத்தினவேல் “முகிழ்மதி” என பதறிப்போய் வேகமாக அருகே வந்தான்.

அலைப்பேசியை கீழே வைத்துவிட்டு எவ்வித ஆணவமும் இல்லாமல் தரையில் மடிந்து அமர்ந்தான் ரத்தினவேல்.

தரையில் இருந்தவளின் சிரத்தை தூக்கி “என்னாச்சும்மா?” என விசாரித்தவனின் குரலில் அப்படியொரு பதட்டம்…அப்படியொரு தவிப்பு!

தன் உணர்ச்சிகளை தொலைந்திருந்தவனின் முகத்தில் இப்போது ஆயிரமாயிரம் உணர்ச்சிகள்!

இதுவரை அவன் வாழ்நாளில் அவனது ஸ்டார் மறைந்த நாளை தவிர,வேறு எதற்காகவும் இதுப்போல் அவன் துடித்ததில்லை.

அவனின் குரல் கேட்டு பெண்ணவள் இன்னும் அதிகமாக மிரண்டு அவனை தள்ளிவிட முயற்சித்தாள்.

அவளால் சட்டென அவனை அடையாளம் கொண்டுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அவனோ அவளின் அச்சத்தை அறியாமல் காரிகையவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு “என்னாச்சு முகிழ்மதி?ஏன் உனக்கு இப்படி மூச்சு வாங்குது?” என்றவனின் குரலில் தன்னை மீறி ஒரு நடுக்கம்!

அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவளது மேனியின் பலவீனத்தையும் வெளிறிய அவள் முகத்தையும் கண்டவனிற்கு நெஞ்சம் பதைபதைத்தது.

அவளோ சீரற்ற சுவாசத்துடன் கண்களில் வழிந்த கண்ணீரோடு தவித்தவளிற்கு ரத்தினவேலின் சொற்கள் எதுவும் சிந்தையை அடையவில்லை.

அவனை முழுமையாய் உணர்ந்தால் தானே அவளின் சுவாசமும் சீராகும்.

ஆனால் அவளோ அச்சத்தில் அவனின் அருகாமையை உணர மறுத்தாள்.

அதன்பொருட்டே,அவளின் நிலை இன்னும் மோசமாகியது.

அவளின் சுவாசம் எந்நேரமும் தடைப்பட்டு விடும் என்ற நிலையில் “ஓ…காட்” என அவசரமாக அவளை கீழிருந்து தூக்கியவன்,கதவை திறக்க முனைந்தான்.

கதவை பலமுறை இழுத்து பார்த்தும் அவன் தோல்வியையே தழுவினான்.

“என்னாச்சு கதவை திறக்கவே முடியலை…யாராவது இருக்கீங்களா?வீர்…ஜித்…தமி…” என கதவை உடைக்கும் வெறியோடு அவன் தட்டியப்போதும் யாரும் கதவை திறக்கவில்லை.

‘ஷிட்’ என எரிச்சலோடு வேகமாக கீழே குனிந்து அவன் அலைப்பேசியை எடுக்க முனையவும்,அவளின் சிரம் அவனது கரங்களில் தொய்ந்து விழவும் சரியாக இருந்தது.

இதையறிந்த ஆடவனது ஒட்டுமொத்த புலன்களும் ஒரு கணம் செயலிழந்துப்போயின.

சடுதியில் தலையை உலுக்கிய ரத்தினவேல் ‘இல்லை…இல்லை’ என தனக்கு தானே உருப்போட்டு அவளை வேகமாக தனது மெத்தையில் கிடத்தி “ஸ்டார்…ஸ்டார்…” என தன்னை மீறி ‘ஸ்டார்’ என அவளை அழைத்து அவளின் கன்னத்தை தட்டினான்.

இப்போது மிக மெதுவாக அவனது குரல் தூரத்திலிருந்து கேட்பது போல் அவளிற்கு தோன்றின.

உயிர் உடலை விட்டு பிரிந்து கூடாகிப்போகும் நிலையில் அவளின் ஜீவனை கயிறு கட்டி இழுப்பது போல் இருந்தது அவனது தவிப்பும் குரலும்!

ஏனோ அந்த குரலில் இருந்த காந்த சக்தி அவளின் நெஞ்சத்தை ஊடுருவி,அவளின் அச்சத்தை சிறிது குறைத்தது.

உடனே அவளின் இமைகள் இலேசாக அசைந்தன.

அவளின் அச்சம் நீங்கினாலும் அவளின் சுவாசம் மட்டும் சீரடையவில்லை.

அதை கவனித்த ரத்தினவேல் “ஸ்டார்…ஸ்டார் என்ன பண்ணது?” என தவிப்புடன் கேட்டு அவளின் கரத்தை இறுக பற்றிக்கொள்ள,

அவனது அந்த தொடுகை அவளிற்குள் பெரும் பலத்தை கொடுக்க,மெதுவாக இமைகளை பிரித்தவள் “இன்…ஹே…ல்லர்…” என ஒரு வழியாக திக்கி திணறி கூறியிருந்தாள்.

“அது எங்கயிருக்கு?” என கேட்டவனிற்கு திடீரென்று அவள் எப்போதும் தனது இடையில் சொருகியிருக்கும் பையின் நினைவு எழுந்தது.

சட்டென கீழே குனிந்து அவளின் முந்தானையை பார்க்க,அங்கு அவளின் இடை வெறுமையாக இருந்தது.

“ஸ்டார் உன் இன்ஹேலர் அங்கயில்லை…எங்கயிருக்கு?” என படபடப்புடன் கேட்க,அவளிற்கு இப்போது மீண்டும் மூச்சிறைப்பு அதிகமாகியது.

அதை பார்த்தவனிற்கு அவன் உயிரே அவனது கையில் இல்லை.

“ஸ்டார்…பிரித்…பிரித்…” என அவன் அவளது நெஞ்சை நீவிக்கொண்டே வேகமாக தனது அலைப்பேசியை எடுத்து யாருக்காவது அழைக்கலாம் என்று எண்ணினான்.

அவனது கெட்ட நேரம் அலைப்பேசி மொத்தமாய் தன் உயிரை இழந்திருந்தது.

இப்போது முகிழ்மதியின் வாழ்வை போன்று அந்த அறை முழுவதிலும் இருள் சூழ்ந்துவிட்டது.

இருளை கண்டவுடன் அவளிற்கு மீண்டும் சுவாசம் அடைக்கப்பட்டது.

சிறு வயதிலிருந்தே அவளிற்கு இருள் என்றால் பயம்!

அக்கணம் சுவாசிக்க முடியாமல் அவள் திணற,தவித்த பெண்ணவளிற்கு மீண்டும் சுவாசம் வழங்கப்பட்டது.

ஆனால் அவளிற்கு வழங்கப்பட்டது செயற்கையாக உருவாக்கப்பட்ட சுவாசமல்ல!

இயற்கையாக மற்றொரு தவிக்கும் உயிரை காப்பாற்ற வழங்கப்பட்ட சுவாசம் அது!

ஆம்,ரத்தினவேல் தான் அவளின் உயிரை காப்பதற்காக தன்னுடைய சுவாசத்தை அவளிற்கு பகிர்ந்தளித்திருந்தான்.

ஒரு உயிரை காப்பதற்காக எதையும் செய்யலாம் என்ற தார்மீக எண்ணத்துடன் தனது கட்டுப்பாட்டை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு அவளின் இதழை தன் இதழ்கொண்டு சிறைசெய்திருந்தான் ஆடவன்.

அவளை தூக்கி அமர வைத்து தன் அதரங்களை அவளது அதரங்களோடு ஆடவன் இணைத்த அடுத்த கணமே பாவையவளின் மேனி தன்னிச்சையாய் தூக்கிவாரிப்போட்டது.

ஒரு ஆடவனின் ஸ்பரிசத்தை சட்டென ஏற்க முடியாமல் பெண்ணவள் தவித்துப்போனாள்.

‘என்னால் முடியாது’ என்பது போல் அவள் தலையை ஆட்ட,அவளின் இமையோரம் கண்ணீர் கசிந்து வழிந்தன.

அவனோ ஆழமாக காற்றை இழுத்து ஊதி அவளின் இதழ் வழியே அவளின் சுவாசப்பையிற்கு அனுப்பினான்.

அந்த சிறுப்பெண்ணின் மனம் அவனது சுவாசத்தை ஏற்க முடியாமல் தவிக்க,மெதுவாக அவளை விலக்கிய ரத்தினவேல் “இட்ஸ் அ சீ.பி.ஆர்…வேற எதுவுமில்லை” என அழுத்தமாக கூறியதற்கு பிறகே அவள் வேறுவழியின்றி அனுமதித்தாள்.

அவளிற்கு உயிர் வாழும் ஆசை அதிகமாகவே இருந்தது.

அதனால் அவனது சுவாசத்தை விழி மூடி தனக்குள் உள்வாங்கிய பெண்ணவளிற்கு சுவாசம் சிறிது சிறிதாக சீரானது.

அவளிற்கு ஒவ்வொரு முறை சுவாசத்தை பகிரும் போதும் மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து அவளின் மூக்கை பொத்திக்கொண்டு அவளின் இதழ் வழியே அவன் சுவாசத்தை வழியனுப்பினான்.

அவன் கொடுத்த முதல் மூச்சில் அவளின் மார்பு கூட மெதுவாக அசைந்தது.

இரண்டாவதாக,அவன் கொடுத்த மூச்சில் அவளின் மார்பு கூட இலேசாக சீர்ப்பட துவங்கியிருந்தது.

“கம்மான்…மெதுவா பிரித் பண்ணு ஸ்டார்” என அவளின் மார்புக்கூட்டை பார்த்துக்கொண்டே அவளின் இதழுக்குள் தன் சுவாசத்தை அனுப்பினான்.

அவனின் சொற்கள் அவளிற்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது என்றால்,அவனின் சுவாசம் அவளின் இழந்த உயிரை மீட்டெடுத்து வந்தது.

அவனளித்த சிகிச்சையின் பலனாய் காரிகையின் மேனி மெல்ல மெல்ல சகஜநிலைக்கு மாறியது‌.

அவளது இதழ்களின் வழியே அவனின் சுவாசம் மட்டுமல்ல…அவனின் உமிழ்நீரும் பரிமாற்றப்பட்டிருந்தது.

அதையறியாத பாவையவளும் சுவாசத்தோடு அவனது தேனமுதத்தையும் விழுங்கியிருந்தாள்.

இந்த சுவாச பரிமாற்றத்தில் எந்தவொரு களப்பட உணர்வுகளும் இல்லை.

அவளின் உயிரை காக்க மட்டுமே கொடுத்த மருத்துவ முத்தம் அது!

இறுதி முறையாக அவன் இதழ்கள் அவளிற்கு சுவாசத்தை வழங்கியதும் திடீரென்று ஒரு சீரான சுவாசம் அவளின் நெஞ்சினுள்…

கூடவே அவளிற்கு ஒரு இருமலும் வந்தது.

உடனே அவளிடமிருந்து விலகிய ஆடவன் பெண்ணவளின் நெஞ்சை நீவி “ஆர் யு ஓகே?” என ஆதுரத்துடன் விசாரித்தான்.

அவனின் தொடுகையில் கூட ஒரு அன்பான அரவணைப்பு மட்டுமே இருந்தது.

பாவையவளின் நெஞ்சம் அவனின் அன்பில் நெகிழ்ந்துவிட,மெதுவாக “ம்” என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

இருட்டிற்குள் அவள் தலையாட்டினால் அவனிற்கு எங்கிருந்து தெரியும்?

ஆனால் அவளின் மௌன மொழிகள் அவனிற்கு நன்றாகவே புரிந்தது.

“சரி யு டேக் ரெஸ்ட்…நான் கதவை திறக்க ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கறேன்” என அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவன் எழுந்துக்கொள்ள,

அசேசமயம் தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் உயிர்ப்பெற்றது‌.

அதுவரை இருளிற்கு பழகியிருந்த இருவரின் விழிகளும் வெளிச்சம் வந்ததும் கூசிப்போயின.

அவசரமாக ஒரு முறை கண் மூடி திறந்த ரத்தினவேலின் விழிகள் பெண்ணவளை ஏறிட்டன.

காரிகையவளோ அப்போது தான் மெது மெதுவாக வெளிச்சத்திற்கு பழகிக் கொண்டிருந்தாள்.

அதைக்கண்டு மீசையை முறுக்கிக்கொண்ட ரத்தினவேல் தனது அலைப்பேசியை உயிர்ப்பிப்பதற்கான பணியில் இறங்கினான்.

அலைப்பேசி மீண்டும் உயிர்பெற சில நிமிடங்கள் தேவைப்படும் என்பதால் ரத்தினவேலின் விழிகள் பெண்ணவளை நோக்கின‌.

அவள் இப்போதும் தனது இமைகளை பிரிக்காமல் இறுக்கமாக மூடியிருந்தாள்.

அவன் தனக்கு அளித்தது சிகிச்சை என்று தெரிந்தாலும் ஏனோ அவளின் மனதில் ஒரு சங்கடம்!

தன்னை பார்ப்பதற்கு சங்கடம் கொள்கிறாள் என்பதை அவனறிந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றினான் அவன்.

அதனால் அவளிற்கு தனிமைக்கொடுக்க எண்ணி உடைமாற்றும் அறைக்குள் சென்று வழக்கம் போல் வேட்டி சட்டையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.

அவள் அப்போதும் இறுக்கமாக விழிகளை மூடியிருப்பதை பார்த்தவனின் இதழோரம் ஒரு முறுவல் தோன்றி மறைந்தன.

அவள் அயர்வில் கண் மூடியிருக்கவில்லை என்பதை அவளின் இமைகளுக்குள் ஓடிய கருவழிகளே தெள்ள தெளிவாக காட்டின.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் கண்ணை மூடிட்டே இருக்கலாம்னு நினைக்கிறே?” என சாதாரணமாக ஒலித்த அவன் குரலே அவளிற்கு அதட்டலாய் கேட்டிருந்தன.

அதனால் திடுக்கிட்டு வேகமாக எழுந்து அமர்ந்த பெண்ணவள் “ஸ்ஆ..” என முனகி வலியில் முகத்தை சுழித்தாள்.

அவளின் தீக்காயத்தில் புடவை உரசி பெரும் வலியை கொடுத்திருந்தன.

அவளின் சத்தம் கேட்ட ரத்தினவேல் கையிலெடுத்த அலைப்பேசியை மீண்டும் கீழே வைத்துவிட்டு அவளருகே வந்துவிட்டான்.

“என்னாச்சு?” என அவன் அக்கறையாக வினவ,

அவளோ எப்போதும் போல் வாயே திறக்கவில்லை.

அவனது முகத்தையும் அவள் ஏறிடவில்லை.

இப்போது அவனிற்கு கோபம் வந்துவிட்டது.

“ப்ச் உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை?என்ன பண்ணது சொல்லு?” என அவன் குரலுயர்த்தி கேட்க,

அவள் மிரட்சியுடன் அவனை ஏறிட ‘இப்படி பார்த்தே சாவடிக்கிறாள்’ என கழுத்தை நீவியப்படி வேறு புறம் திரும்பிக் கொண்டான் ரத்தினவேல்.

அதுவரை எதுவும் பேசாமல் அழுத்தமாக இருந்த பெண்ணவள் “தண்ணீ வேணும்” என்றாள் மெல்லிய குரலில்.

சட்டென அவளின் குரல் கேட்டு திரும்பிய ரத்தினவேல் அவளையே சில வினாடிகள் அழுத்தமாக பார்த்துவிட்டு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

“ம்” என விறைப்புடன் அவளிடம் கண்ணாடி குவளையை நீட்டியதும் “தேங்க்ஸ்” என அவள் அதை வாங்க முயன்றாள்.

ஆனால் ஆடவனோ சட்டென அவளிடமிருந்து குவளையை பின்னுக்கு இழுத்தான்.

அதில் ஏமாற்றமடைந்த முகிழ்மதி ‘என்ன?’ என பாவமாக ஏறிட,

அவளை கூர்மையாக நோக்கிய ரத்தினவேல் “ஆமா உன்னை இந்த ரூமிலே தள்ளி கதவை அடைச்சது யாரு?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.

அவளோ ‘என்ன பதில் கூறுவது?’ என தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

அவளிற்கு தாயை மாட்டிவிட சிறிதும் விருப்பமில்லை.

அதனால் அவள் பதில் கூற முடியாமல் தடுமாற “உன்கிட்ட கேள்வி கேட்கிறதே வேஸ்ட்…ஏதாவது கேட்டால் வாயை இறுக்கி பூட்டிக்கோ” என திட்டிவிட்டு அவளிடம் குவளையை கொடுத்தான்.

அவள் அதனை வாங்காமல் பாவமாக அவனை ஏறிட,அவளின் பார்வை அவனை என்னவோ செய்தது.

அதனால் “ஊப்” என இதழை குவித்து ஊதி “பிடி…நான் போய் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்” என அவளிடம் குவளையை கொடுத்துவிட்டு சென்றான்.

அவளோ நடுங்கிய கரத்துடன் தண்ணீரை வாங்கி பருக தொடங்கினாள்.

அவனோ ‘சாவடிக்கிறா’ என மீண்டும் ஒரு முறை புலம்பிக்கொண்டே தனது நண்பன் வீரின் எண்ணிற்கு அழைத்தான்.

இந்நிலையில் அவர்களை புரிந்துக்கொள்ள கூடிய ஒரே நபர் அவன் தான் என்று அவனிற்கு தோன்றியது‌.

ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் இருப்பது தெரிந்தால் பலரும் விமர்சிப்பார்கள்.

அப்படியொரு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என நாசூக்காக காயை நகர்த்தினான் அவன்.

ஆனால் காஞ்சனா மாலா கொடுத்த பணியை நிறைவேற்ற அவன் வெளியே சென்றிருப்பதால்,அவன் அலைப்பேசியை எடுக்கவில்லை.

வேறுவழியின்றி தனது சகோதரன்‌ ஜித்தேந்திரனிற்கு அழைத்தவன் “ஜித் சீக்கிரம் என் ரூமுக்கு வா…அதுவும் தனியா…காட் இட்” என ‘தனியா’ என்ற சொற்களை அழுத்தி கூறியதும் அவனும் புரிந்துக்கொண்டு “இதோ வர்றேன் அண்ணா” என கூறி அழைப்பை துண்டித்தான்.

அவனின் உரையாடல்கள் அலைப்பேசியில் இருந்தாலும் அவனின் விழிகள் மட்டும் கண்ணாடியின் வழியே பெண்ணவளின் செயல்களை தான் பார்த்திருந்தது.

முகிழ்மதி நீரை பருகிவிட்டு கட்டிலிருந்து எழுந்துக்கொண்டாள்.

அவனது மெத்தையில் அமர்ந்திருப்பது அவளிற்கே ஒரு மாதிரியாக இருந்தது.

அதிலும்,இன்றைய சம்பவத்திற்கு பிறகு அவனின் மெத்தையில் அவள் அமர்ந்திருப்பது காரிகையினுள் ஏதேதோ விபரீதமான எண்ணங்களை தோற்றுவித்தன.

அதனை துரத்தியடிக்கவே எழுந்துக்கொண்டவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

அவளது உடல் இன்றைய சம்பவத்தால் வலுவிழந்திருந்தது என்றால்,அவளது காலில் உண்டான தீக்காயம் ஒரு பக்கம் அவளை வாட்டி எடுத்தது.

“ஸ்ஆ” என முனகியப்படி அவனை திரும்பி பார்க்க,

அவன் அலைப்பேசியில் கவனமாக இருப்பதை அறிந்து ‘அவர் பார்க்கிறதுக்கு முன்னாடி போயிடலாம்’ என்றெண்ணி மெதுவாக இரண்டடி எடுத்து வைத்தாள்.

அவள் அந்த இரண்டடியை எடுத்து வைப்பதற்குள் வலி உயிர்ப்போனது.

அவளிற்கு ஏற்பட்ட பிணியில் கண்கள் கூட கலங்கிவிட்டன.

அதனால் நடக்க முடியாமல் தடுமாறியவளை அதுவரை தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்த ரத்தினவேல் தான் வந்து தாங்கி பிடித்தான்.

அவன் தன்னை வந்து பற்றியதும் அதிர்ச்சியில் சாசர் போல் விழிகளை விரித்து அவனை ஏறிட்டாள் அவள்.

“கண்ணை விரிச்சா கொன்னுடுவேன்…வா” என அவளை அப்படியே தனது கரங்களில் தூக்கி சென்று அங்கிருந்த நீள்விரிக்கையில் அமர வைத்தான்.

அவன் அவளை தூக்கியதும் “ஐய்யோ வேணாம்” என்றவளின் மறுப்பு எல்லாம் அவனிடம் எடுப்படவில்லை.

அவனோ அவளை நீள்விரிக்கையில் அமர வைத்துவிட்டு “உனக்கு கால்ல என்ன பிரச்சனை?” என நேரிடையாக அவளின் கண்ணை பார்த்து வினவியிருந்தான்.

பாவையவளோ எதுவும் பேசாமல் எச்சிலை கூட்டி விழுங்க “உன்கிட்ட பேசறது வேஸ்ட்” என அவனே அவளின் காலருகே மண்டியிட்டு அமர்ந்து பெண்ணவளின் புடவையை தூக்கி பார்த்திருந்தான்.

அவன் இவ்வாறு அதிரடியாய் செயல்படுவான் என்று முகிழ்மதி சிறிதும் எதிர்பார்க்கவில்லை‌.

அதனால் அவள் விதிர்விதிர்த்துப்போய் “ஐ..ய்யோ எ..ன்ன ப..ண்ணறீங்க?” என அச்சத்தோடு குரல் நடுங்க கேட்டு அவனை தடுத்து நிறுத்த முயன்றாள்‌.

ஆனால் அவளின் முயற்சிகள் அனைத்தும் வீணாகியிருந்தது.

அவனிற்கு எது தெரிந்துவிடக்கூடாது என இத்துணை நேரமாக மௌனம் காத்தாளோ இப்போது அதுவே நடந்திருந்தது.

ஏனெனில்,அவளின் தீக்காயத்தை கண்டு ஆடவனவனே ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தான்.
 

முகிழ்மதி 24


 

 

ரத்தினவேலின் விழிகள் அந்த தீக்காயத்தில் நிலைத்து நின்றன.

ஒரு பூவை விட மென்மையானவளின் மேனியில் இவ்வளவு கொடூரமான காயத்தை கண்ட அவனது இதயம் ஒரு கணம் தன் துடிப்பையே நிறுத்திவிட்டது.

அதிலும்,அந்த காயத்திற்கு அவள் மருந்திடாததால் அவை இன்னும் பெரிதாகி சீழ் பிடித்து பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

ஆனால் அந்த காயத்தை கண்டு அவன் அருவருக்கவில்லை.

மாறாக,இவ்வளவு விகாரமான காயத்தின் வலியை அந்த சின்னஞ்சிறு பெண் எவ்வாறு தாங்கிக்கொண்டாள் என்று நினைக்கும் போதே அவனின் நெஞ்சம் விம்மி வெடித்தது.

அத்தோடு அவளிற்கு வலியை கொடுத்தவர்களின் மீது அவனிற்கு அளவுக்கதிமான ஆத்திரம் தோன்றிட “யார் இதை பண்ணது?” என கர்ஜனையாக கேட்டவனின் குரலில் பாவையவளின் மேனி நடுங்கியது.

அவனது ரௌத்திரம் பொருந்திய முகத்தை பார்த்தவளின் நெஞ்சம் சில்லிட்டுப்போக அவளோ அவசரமாக தனது காயத்தை மறைக்க முயன்றாள்.

அவளின் விழிகள் பயத்தில் அங்குமிங்கும் அலைமோத “அது…அது தெ..ரியாமல் சுட்டுக்கிட்டேன்” என ஒரு வழியாக திக்கித்திணறி பொய் கூறினாள்.

அவள் தன் முகத்தை பார்க்காமல் பேசிய விதமும் அவளின் காயத்தின் வீரியமும் அவனிற்கு நிஜம் எது என்பதை நன்றாகவே தெரியப்படுத்தின.

“முகிழ்மதி…” என அவன் அழுத்தமாக அழைத்ததும்,காரிகையவளால் அவனை நேரடியாக எதிர்க்கொள்ள முடியவில்லை.

அவளிற்கே அவனிடம் பொய் கூறுவது மேனி கூசும் உணர்வை கொடுத்தன.

ஆயினும்,தாயின் தீஞ்செயல்களை அவனிடம் தெரிவிக்க,அவளிற்கு துளியும் விருப்பமில்லை.

அதனால் அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல் இமை தாழ்த்தியவளை உறுத்து விழித்த ஆடவன் “நீயா சுட்டுக்கிட்டால் ஒரு காயம் எப்படி இருக்கும்?யாராவது சூடு வைச்சால் ஒரு காயம் எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் முகிழ்மதி” என்றான் அழுத்தம்திருத்தமாக.

அவளிற்கோ தான் அவனிடம் வசமாக பிடிப்பட்டுவிட்டோம் என்பது நன்றாக புரிந்தது.

இருப்பினும்,அவள் பதட்டத்துடன் முகம் வெளிறி மௌனமாகவே இருந்தாள்.

அவளின் மௌனம் ரத்தினவேலின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றியது போலானது.

‘பார்க்க தான் அமைதி…ஆனால் சரியான நெஞ்சழுத்தம் பிடிச்சவே’ என்றெண்ணிய ரத்தினவேலின் தேகம் விறைத்து இறுகியது‌.

இதன் பின்னணியில் இருப்பவர் விஜயலட்சுமி என்பது அவனிற்கு சர்வ நிச்சயம்!

அவளை அந்த வீட்டில் துன்புறத்துகிறார்கள் என்று அவன் அறிந்திருந்தான்.

ஆனால் இவ்வாறு மனசாட்சி சிறிதுமின்றி அரக்கத்தனமாக நடந்துக்கொள்வார்கள் என்று அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

தற்போது விஜயலட்சுமி மட்டும் கண்முன்னால் இருந்தால் அவரை உயிருடன் கொன்று புதைத்து விடும் ஆக்ரோஷம் அவனிற்குள்!

கூடவே ‘பெத்த தாயே இப்படியெல்லாம் செய்வாளா?’ என்ற சந்தேகமும் அவனது ஆழ்மனதில் முளைவிட்டது.

உடனே அவளின் காலுக்கடியில் மண்டியிட்ட வாக்கிலே அவன் அவளை நிமிர்ந்து ஏறிட,அவளோ முகம் வெளிறி பதட்டத்துடன் அமர்ந்திருப்பதை கண்டதும் ரத்தினவேல் ஆத்திரம் சிறிது மட்டுப்பட்டது.

திருமணம் செய்துக்கொள்ள போகும் சந்திரமதியிடம் ஒரு நிமிடம் அவன் நின்று பேசியதில்லை.

அவளிடம் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகளை கூட முகத்தை கடுகடுவென வைத்து தான் பேசியிருந்தான்.

ஆனால் இவளிடம் மட்டும் ஏன் இந்த மென்மை என்று அவனிற்கே தெரியவில்லை.

அவளின் முகம் வாடினால்,அவன் மனம் வாடுகிறது.

அவள் சிரித்தால்,அவன் மனதில் பூ பூக்கிறது.

இவளிடம் அவன் செலவிடும் நேரங்கள் ஒவ்வொன்றும் அவனது மனச்சிறையில் பொக்கிஷங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

அவ்வளவு ஏன்?

சற்று முன்பு கூட,அவள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட வேளையில் அவனது உயிர் அவனிடமில்லை!

அவள் படும் துயரங்கள் அனைத்தையும் அவனே அனுபவிப்பது போல் நரக வேதனையை அனுபவித்தான்.

அவளின் உயிர் மீண்டு வந்தப் பிறகே அவனால் சுவாசிக்கவும் முடிந்தது.

இதற்கான அர்த்தத்தை அவன் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.

அவனிற்கே அதற்கான விடை தெரியும்.

இப்போது அவனின் மனம் முகிழ்மதிக்கும் பகைக்கும் இடையே சிக்கி தவித்தன.

தற்சமயம் தன்னுணர்வுகளை ஒதுக்கி வைத்த ஆடவன் அவளை ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்த்தான்.

அவளிடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் அதிரடியாக விஷயத்தை வாங்கி தவறு செய்தவருக்கான தண்டனையை தன் வழியில் கொடுத்திருப்பான்.

முகிழ்மதி என்பதால் மட்டுமே அவன் தன் சினத்தை அடக்கிக்கொண்டு மெதுவாக எழுந்து சென்றான்.

அவன் எழுந்து சென்றதும் அவளிற்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

தன்னிடம் அன்பாக,அனுசரணையாக நடந்துக் கொண்ட ஆடவனின் நிராகரிப்பு அவளிற்கு வலித்தது.

அதனால் ஒரு வித ஏக்கத்துடன் இதழ்கடித்து அவனையே அவள் நோக்க,

அவனோ சென்ற வேகத்திலே திரும்பி வந்தான்.

அவனின் கரத்தில் ஒரு முதலுதவி பெட்டி இருந்தது.

அந்த பெட்டியை கண்டவுடன் அடுத்ததாக அவன் செய்யவிருப்பதை அறிந்த பெண்ணவள் “ஐய்யோ வே…ணாம்..” என தடுமாறி கூறியவள்,தனது கால்களை மடக்கி நீள்விரிக்கையில் வைத்துக்கொண்டாள்.

அவளருகே நீள்விரிக்கையில் அமர்ந்த ரத்தினவேல் “ஒழுங்கா காலை நீட்டு முகிழ்மதி” என்றான் குரல் உயர்த்தி…

அவளோ “அது வந்து…நானே…” என வார்த்தை வராமல் தடுமாறியவளை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “ஏற்கனவே நீ மருந்து போட்ட லட்சணத்தை தான் நான் பார்த்திட்டேனே…காலை நீட்டு” என்றான் அதட்டலாக.

உடனே அவனது கோபத்தில் பயந்துப்போய் பட்டென அவள் காலை நீட்டியதும்,நிதானமாக அவளின் காலை பற்றி சேலையை காயம் தெரியும் படி ஏற்றியிருந்தான்.

மற்றவர்களுக்கு சிம்மச் சொப்பனமாக இருக்கும் ஒரு மனிதன் அவளது காலை பற்றியதும் அவளிற்கு கூச்சமாக இருந்தது.

அதனால் அவள் வெட்கத்தோடு “நானே…” என நெளிந்துக்கொண்டே கூறியதும்,அவன் நிமிர்ந்து பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.

அவளின் காயத்தை பார்க்கும் போது அவளிற்கே உமட்டுவது போலிருந்தது.

அதனால் வேறுப் புறம் திரும்பிக்கொண்டவளின் முகம் ஒவ்வாமையில் சுருங்கியிருந்தது.

ஆனால் ஆடவனனோ சிறிதும் முகச்சுளிப்பின்றி அவளின் காலை தன் மடியில் வைத்து மென்மையாக காயங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

அதற்கே அவளிற்கு வலி உயிர்ப்போனது.

அவளிற்கு வலியை பொறுத்து பழக்கம் என்பதால்,அவன் காயத்தை சுத்தம் செய்து மருந்திடும் வரையிலும் தன் பிணியை இதழ்கடித்து பொறுத்துக்கொண்டாள்.

ஒரு பதினெட்டு வயது பெண் இந்த ரணத்தை தாங்கிக்கொள்வதை கண்டு அவனிற்கே ஆச்சரியமாக இருந்தது.

சிறு வயதிலிருந்தே வலிகளை தாங்கி அவளின் மேனியே மரத்துப்போயிருந்தது என்பதை அவன் அறியவில்லை.

ஒரு கட்டத்தில் அவளின் காயத்திற்கு மருந்திடும் அவனிற்கே வலிப்பது போலிருக்க காரிகையவளோ இரும்பு போல் அமர்ந்திருப்பதை கண்டு “உனக்கு வலிக்கலையா?” என்று கேட்டிருந்தான்.

உடனே அவன் புறம் திரும்பிய பெண்ணவள் “வலிக்குது” என்றாள் சிறு பிள்ளைப் போல்…

அவளது முகப்பாவனையே அவள் எவ்வளவு வலியை தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவனிற்கு தெரியப்படுத்தியது.

“ஜஸ்ட் டூ மினிட்ஸ் முடிஞ்சிடும்…இரு” என அவனும் சிறுப்பிள்ளைக்கு சொல்வது போல் கனிவுடன் மொழிய,

“ம்” என தலையாட்டினாள் காரிகையவள்.

அவளிற்கு இப்போது தயக்கமெல்லாம் இல்லை.

அவனது ஆணவமற்ற செயல் அவளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஒரு மயிலிறகால் மருந்து தடவுவது போல் தன் விரல் கொண்டு அவளின் காயத்தில் களிம்பு மருந்தை தடவ ஆரம்பித்தான் அவன்.

ஏனோ ஆடவனது அந்த மென் ஸ்பரிசம் பெண்ணவளின் மேனியை சிலிர்க்க வைத்தன.

ஆயுதம் கொண்டு மற்றவரை கொலை செய்யும் வீரனவன். இப்போது அவளிற்கு வலிக்குமோ என்ற அச்சத்தில் காரிகையை கண்ணாடி போல் மிக மென்மையாக கையாண்டான்.

சில நேரங்களில் அவனின் கரங்கள் நடுங்கவும் செய்தன.

அவனின் மனதிற்குள் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்தது.

ஆனால் அவன் ஆழ்கடல் போல் மௌனமாக இருந்தான்.

முதலில் அருவருப்பில் முகத்தை திருப்பிய பெண்ணவளின் விழிகளோ இப்போது ஆடவனின் மீது நிலைப்பெற்றிருந்தது.

பட்டம்மாவிற்கு அடுத்தப்படியாக அவளிற்கு ஒருவர் அக்கறையாக மருந்துப்போடுவது என்றால் அது ரத்தினவேல் தான்!

எவ்வித முகச்சுளிப்புமின்றி அவன் மருந்துப்போடுவதையே பார்த்திருந்தவளின் விழிகள் கலங்கிப்போயின.

அது நாட்கள் வரை அவனை ஒரு முரடன் என்று மட்டுமே எண்ணியிருந்த முகிழ்மதிக்குள் முதல் முறையாய் ஒரு சலனம்!

அவளிற்கு மருந்திட்டு தலையுயர்த்திய ஆடவன் அவளின் கண்ணீரை கண்டு புருவம் சுருக்கினான்.

அவளின் கண்ணீர் அவன் இதயத்தில் சுருக்கென்றது.

“ஏன் அழறே?” என அவன் கேட்க,

அவளோ துக்கத்தில் “இல்ல… இதுவரைக்கும் யாரும் எனக்காக இப்படி…” என்று அவள் பாதியிலேயே பேசமுடியாமல் நிறுத்தினாள்.

அவன் அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

அவனது பார்வையில் இதுவரை அவள் கண்டிராத ஒரு பரிவு,ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது.

அவனின் அந்த பார்வையே அவளிற்கு ஆயிரம் யானையின் பலத்தை கொடுத்தன.

அவளின் விழியோடு விழி கலந்து “இனிமே யாரும் உன்னைத் தொட முடியாது முகிழ்மதி… உன் நிழலை தொடணும்னா கூட என்கிட்ட அனுமதி வாங்கி தான் உன்னை தொடணும்…அவ்வளவு சீக்கிரம் யாரும் உன்னை நெருங்க முடியாது” என்று கூறியவனின் சொற்களில் இருந்த தீரம் பாவையவளை அடியோடு சாய்த்தது‌.

எந்த மாதிரியான அர்த்தத்தில் அந்த வார்த்தைகளை அவன் கூறினான் என்று அவளிற்கு தெரியாது.

அவனிற்கும் தெரியாது…

ஆனால் இனி அவள் தன்னுடைய பொறுப்பு என்பதில் மட்டும் அவன் உறுதியாகியிருந்தான்.

அவளின் மரத்த நெஞ்சிற்கு ஏதோ உணர்ச்சிகள் வந்தது போலிருந்தது அவனின் சொற்கள்!‌

அதனால் அவனையே அவள் விழி அகலாமல் பார்த்திருக்க,அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.

அந்த அறையில் நிலவிய நிசப்தத்தில், இருவரின் இதயத் துடிப்பும் மட்டுமே ஒலித்தது.

ரத்தினவேல் தன் கைகளை அவளது காயத்திலிருந்து எடுத்துவிட்டு, மெதுவாக அவளது பொன் பாதங்களை வருடினான்.

அது ஒரு காதலனின் ஸ்பரிசமாக அல்லாமல், ஒரு காயப்பட்ட ஜீவனிற்குக் கிடைக்கும் ஆறுதலாக இருந்தது.

அச்சமயம் அவர்களின் மோன நிலையை களைக்கும் விதமாக அறையின் கதவு தட்டப்பட்டது.

உடனே திடுக்கிட்டு அவள் தன் பாதங்களை அவனிடமிருந்து பறித்துக்கொள்ள முயன்றாள்.

“ப்ச் காலை மடக்காதே…இப்படியே நீட்டு…மருந்து தடவியிருக்கு பாரு” என அவளை அதட்டிவிட்டு காலை தன் மடியிலே வைத்துக்கொண்டான்.

அவளோ சங்கடமாக “யாராவது தப்பா நினைக்கமாட்டாங்களா?” என தனது காலை இழுத்துக்கொள்ள முயல,

“நினைச்சா நினைச்சிட்டு போறாங்க…” என சர்வ சாதாரணமாக கூறியவன் இறுதி வரை அவளின் காலை விடவில்லை.

“அண்ணா” என ஜித்தேந்திரன் இரண்டு முறை அழைத்ததும் “கதவு தாழ்ப்பாளை திறந்திட்டு உள்ளே வா” என்றான்‌ கணீர் குரலில்.

அதுவரை அவனிடமிருந்த மென்மை விலகி ஒரு கடுமை அவனிடம் வந்து ஒட்டிக்கொண்டன.

அவள் அதனை அதிர்ச்சியாக பார்த்திருக்கும் போதே “யார் அண்ணா வெளிய தாள் போட்டது?” என குழப்பமாக கேட்டுக்கொண்டே உள்ளே வந்த ஜித்தேந்திரனின் விழிகள் இரண்டும் தெறித்து விழுவது போல் விரிந்தது.

நீள்விரிக்கையில் அமர்ந்திருந்த முகிழ்மதியை விட தமையனது மடியிலிருந்த அவளது கால்கள் தான் அவனை ஸ்தம்பிக்க வைத்தன.

‘நிஜமா நான் பார்க்கிற காட்சி உண்மை தானா?’ என அவன் தனது கண்ணை இரண்டு முறை கசக்கியெல்லாம் பார்த்தான்.

அவன் பார்த்தது நிஜம் என்று அறிந்ததும் அவன் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.

இதில் அவன் பார்த்தது சந்திரமதியல்ல முகிழ்மதி என்று தெரிந்தால்?

‘என்னடா நடக்குது இங்கே?’ என அதிர்ச்சியில் வாயடைத்துப்போனவனிற்கு பேச்சே வரவில்லை.

அவனின் முகப்பாவனைகளை கண்ட முகிழ்மதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது‌.

அவளின் முகத்தை அவதானித்த ரத்தினவேல் ஒரு பெருமூச்சுடன் “நீ நல்லா காலை நீட்டிக்கோ” என அவளின் கால்களை நீள்விரிக்கையில் வைத்துவிட்டு எழுந்துக்கொண்டான்.

அதன்பிறகே அவளிற்கு ஓரளவு நிம்மதியாக இருந்தது.

அதற்குள் தன் சித்தம் தெளிந்த ஜித்தேந்திரன் “அண்ணா இங்க என்ன நடக்குது?வெளியே பார்த்தால் கதவு தாள் போட்டிருக்கு…உள்ளே பார்த்தால் சந்திரமதி இருக்காங்க…கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தனியா…” என ஜித்தேந்திரன் பதற்றத்தில் படபடவென வார்த்தைகளை கொட்டினான்.

ரத்தினவேலோ நிதானமாக “கொஞ்சம் இரு” என அதிகார தோரணையில் கூறிவிட்டு கழிவறை சென்று கரங்களை கழுவிட்டு வந்தான்.

அப்போது தான் ஜித்தேந்திரன் அவளின் காயத்தையே பார்த்தான்.

“ஐய்யோ என்ன இவ்வளவு பெரிய காயம்?எப்படி ஆச்சு?” என படபடப்புடன் கேட்டுக்கொண்டே அவளை நெருங்கிய ஜித்தேந்திரன் அதன்பிறகே ஒரு வித்தியாசத்தை கவனித்தான்.

நீள்விரிக்கையில் அமர்ந்திருப்பவளின் விழிகளில் இருந்த அந்த மிரட்சியும், முகத்தில் இருந்த அந்த மென்மையும் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது.

சந்திரமதியிடம் இருக்கும் அந்த திமிரோ, அலட்சியமோ இந்த முகத்தில் இல்லை.

அவளது கைகளில் இருந்த அந்த நடுக்கத்தை பார்த்ததும் ஜித்தேந்திரனின் கண்கள் பெரிதாக விரிந்தன.

சந்திரமதி அங்கு இருந்ததே அவனிற்கு பேரதிர்ச்சி என்றால் முகிழ்மதி தனது தமையனோடு இருந்தது அவனிற்கு தலையை கிறுகிறுக்க வைத்தது.

அவனோ தொப்பென்று இருக்கையில் அமர்ந்து “நீ…நீங்க இ..ங்க என்ன பண்ணறீங்க?” என திக்கி திணறி கேட்டவனின் முகம் பேயறைந்தது போல் மாறிப்போனது.

அவளோ ‘என்ன பதில் சொல்வது?’ என தெரியாமல் திருதிருவென விழிக்க,

அதற்குள் குளியலறையிலிருந்து வெளியே வந்த ரத்தினவேல் “ஆமா ஜித்…இது முகிழ்மதி தான்..அவளை யாரோ இது காலி ரூமுன்னு நினைச்சு இந்த ரூமுக்குள்ள தள்ளி கதவை சாத்திட்டாங்க…யாருன்னு தெரியலை…திடீர்னு மூச்சு திணறல் வந்திடுச்சு…நல்லவேளையா நான் உள்ளே இருந்தேன்” என சுருக்கமாக அவன் விளக்கமளித்ததும்,அவனிற்கு ஓரளவு விபரம் புரிந்தது.

ஆனால் அவனிற்குள் ஒரு பெரும் குழப்பம்!

அவன் நினைப்பதையெல்லாம் தமையனிடம் கேட்டுவிட முடியாது.அதனால் அவன் வேறு பேசினான்.

“அண்ணா இதை யார் பண்ணது?” என்று கோபம் கொப்பளிக்க அவன் வினவியதும்,ரத்தினவேலின் பார்வை முகிழ்மதியின் மீது விழுந்தது.

அவளோ மேனி வெடவெடக்க தலைக்குனிய அவன் சலிப்பாக தலையசைத்துக்கொண்டான்.

“இப்போதைக்கு அது யார்னு தெரியலை…பட் யார் இதை பண்ணியிருந்தாலும் நிச்சயமா அவங்களுக்கான தண்டனையை நான் தருவேன்” என உயிரை ஊடுருவும் குரலில் முகிழ்மதியை அவன் பார்த்துக்கொண்டே கூற,

அவளோ விதிர்விதிர்த்துப்போய் அவனை ஏறிட,அவனின் விழிகளில் சிறிதும் இளக்கமில்லை.

தான் சொன்னதை செய்வேன் என்ற தீர்க்கம் மட்டுமே இருந்தது.

முகிழ்மதியின் காயத்தை பார்த்த ஜித்தேந்தரனிற்கே தாள முடியவில்லை.

அவளின் மேல் பரிதாபமும் தோன்றின.

“அண்ணா காயம் ரொம்ப பெருசா இருக்கு…டாக்டரை பார்க்கலாமா?” என அவளின் காயத்தை பாவமாக பார்த்தப்படி வினவ,

“சரி கூப்பிடு…பட் யாருக்கும் தெரிய வேணாம்” என ஒப்புக்கொண்டான் ரத்தினவேல்.

உடனே அவன் “அண்ணா இவங்க…” என முகிழ்மதியை கைகாட்ட,

ரத்தினவேலோ ஜித்தேந்திரனின் கண்களை நேராகப் பார்த்து “ஜித் முகிழ்மதியோட திங்க்ஸ் எல்லாத்தையும் பக்கத்துக்கு ரூமுக்கு மாத்து…அவ அங்கயிருக்கிற விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது…குறிப்பா அவளோட குடும்பத்து ஆட்களுக்கு…” என்று தீர்க்கமான குரலில் கூறினான்.

அவன் கூறியதை கேட்டு ஜித்தேந்திரன் அதிர்ச்சியில் உறைந்தான் என்றால், பாவையவளிற்கோ தூக்கிவாரிப்போட்டது.

“என்ன அண்ணா சொல்லுறீங்க? இவங்களை காணலைனா பெரிய பிரச்சனையாகிடாதா?” என அவன் திகைப்புடன் வினவ,

அவனோ “யாரும் அவளை தேடி வரமாட்டாங்க…அப்படியே வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்…ஷி இஸ் மை ரெஸ்பான்ஸிபிளிட்டி” என்றான் அழுத்தம் திருத்தமாக.

பெண்ணவளோ அவன் சொற்களை சிறிதும் உள் வாங்காமல் “ஐய்யோ வேணாம்…வேணாம்…நான் போறேன்…அம்மா என்னை தேடுவாங்க…” என பதறிப்போய் எழுந்தாள்.

“அச்சோ உட்காருங்க…” என ஜித்தேந்திரன் அவளை தடுப்பதற்கு முன்பாக,

ரத்தினவேல் அவளருகே வந்து அவளது தோளை மென்மையாக அழுத்தி அமர வைத்திருந்தான்.

அவள் அதிர்ச்சியாக அவனை ஏறிட “நீ எப்போ இந்த ரூமுக்குள்ள வந்தியோ?அப்பவே உன்னைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திடுச்சு.இனிமே நீ சொல்லுறது எதுவும் இங்க நடக்காது…அமைதியா உட்காரு” என்றான் அதிகாரமும் அன்பும் கலந்த அதட்டலுடன்.

தன் அண்ணனின் பிடிவாதம் தெரிந்த ஜித்தேந்திரன், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

ரத்தினவேலின் வார்த்தைக்கு அவன் எப்போதுமே கட்டுப்பட்டவன்.

அதுமட்டுமில்லாமல், முகிழ்மதியின் அந்த பரிதாப நிலை அவனிற்குள்ளும் ஒரு இரக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

தமையனின் சொற்களில் இருந்தே அவளிற்கு அவளது குடும்பத்தினரால் ஆபத்து என்பதும் புரிந்தது.

அதனால் “சரிண்ணா… நீங்க சொல்லறபடியே செய்யறேன். ஆனா மத்தவங்களுக்கு சந்தேகம் வராதபடி நான் பார்த்துக்கிறேன்,” என கூறிவிட்டு, முகிழ்மதியின் உடைகளையும் மற்ற பொருட்களையும் பக்கத்து அறைக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டை தொடங்கியிருந்தான்.

இப்போது அந்த அறை முகிழ்மதியின் புகலிடமாக மாறியது.

அறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் மாற்றப்பட்ட பின், ரத்தினவேல் முகிழ்மதியை பக்கத்துக்கு அறைக்கு மாற்றியிருந்தான்.

அவளை தன் கையில் தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்தவனை “ஆ” என வாயை பிளந்து பார்த்தான் ஜித்தேந்திரன்.

மெத்தையில் படுக்க வைத்ததும் அவளது விழிகளில் தாயை நினைத்து பயம் சிறிதும் குறையவில்லை.

அதை அவதானித்த ரத்தினவேல் “பயப்படாதே நான் இருக்கேன்” என அவளின் மருதாணியிட்ட கரத்தை ஒரு முறை அழுத்தி விடுவித்தவன்,

“இந்த கதவு நானோ ஜித்தேந்திரனோ வந்தால் மட்டும் தான் திறக்கும்…அதனால் நீ நிம்மதியா ரெஸ்ட் எடு” என சொல்லிவிட்டு அவன் வெளியேறினான்.

வாசல் வரை சென்று நின்றவன் மீண்டும் அவளை திரும்பி பார்த்தான்.

“முகிழ்மதி ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. ரத்தினவேல் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டான்னா, அதை யாராலயும் மாத்த முடியாது. நீ இங்க இருக்கிறது தான் உன் உயிருக்கு பாதுகாப்பு” என உறுதியாக கூறிவிட்டு விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.

ஜித்தேந்திரனோ “உங்களுக்கு ஏதாவது வேணும்னா என் நம்பருக்கு கால் பண்ணுங்க…டேக் கேர்…பயப்படாதீங்க…நாங்க இருக்கோம்” என அவளை பார்த்து சிநேகமாக புன்னகைத்தான்.

அவனிற்கு பதில் புன்னகை கூட அவளால் தரமுடியவில்லை.

அவளின் அடிவயிறு தாயை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தது.

இங்கு கதவை சாற்றிவிட்டு வெளியே வந்து ஜித்தேந்திரன் நேரே சென்று சுவற்றில் முட்டிக்கொண்டான்.

சற்று முன்பு,அவன் கண்ட காட்சியிலே அவனது மூளை வேலை நிறுத்தம் செய்தது.

ரத்தினவேலின் கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பையும்,முகிழ்மதியின் பாதங்களை அவன் மடியில் வைத்திருந்த விதத்தையும் நினைக்கும் போதே அவனிற்கு பைத்தியம் பிடித்தது.

‘இப்போ இந்த அண்ணா யாரை கல்யாணம் பண்ணிக்கப்போறாரு ‌…முகிழ்மதியா?சந்திரமதியா?’ என உச்சக்கட்ட குழப்பத்துடன் சுவற்றில் மூட்டிக்கொண்டிருந்தான்.

அந்நிலையில் அவனை வேறு யாரும் பார்த்தார்கள் என்றால் நிச்சயம் பைத்தியம் என்று தான் நினைப்பார்கள்.

‘ஐய்யோ…ஐய்யோ என்ன நடக்குமோ நடக்கட்டும்…அடப்போங்கடா’ என நடப்பதை வேடிக்கை பார்க்க தயாராகிவிட்டான் அவன்.
 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top