முகிழ்மதி 1

ஒரு இளம் பெண் கன்னத்தில் வைத்தப்படியே ஏரிக்கரையின் படிகளில் அமர்ந்திருந்தாள்.

அவளின் மனதிற்குள் சொல்ல முடியாத ஓர் சோகம் நிழலாடின.

அவளின் விழிகள் ஓடிக்கொண்டிருந்த நீரோடையை வெறித்து பார்த்திருந்தது.

அஸ்தமானாகி கொண்டிருந்த சூரிய ஒளியின் கதிர்கள் அவளின் மதி முகத்தில் மோதி,அவள் முகத்தை இன்னும் பிரகாசமாக ஒளிரச் செய்தது.

ஏற்கனவே,பால் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த அவளின் மேனி இப்போது தங்க நிறத்தில் ஜொலித்தன.

அவளின் தங்க நிறத்தை மெருகூட்டி காட்டும் வகையில் அரக்கு நிறத்தில் தங்க சரிகை பூக்கள் போட்ட சுரிதார் அணிந்திருக்க,அதற்கு பொருத்தமான ஒரு பூ கிளிப்பால் அவளின் கருந்கூந்தல் கட்டப்பட்டிருந்தது.

அவளின் சங்கு கழுத்தில் கண்ணிற்கே புலப்படாத வகையில் ஒரு சிறிய தங்க சங்கிலி!

செவியில் இரண்டு சிறிய அளவிளான பொன் நிற ஜமிக்கிகள் அலங்கரித்திருந்தன.

காற்றும் வீசும் போது அசைந்தாடிய ஜமிக்கிகள் அவளின் கன்னத்தை தொட்டு வருடின.

ஒரு முறை…இரு முறை அல்ல…

பல முறை அவளின் கன்னத்தை தீண்டியிருந்தன.

அவளை தழுவினால் புதிதாய் ஒரு ஜனனம் எடுத்துவிடலாம் என்ற எண்ணிவிருந்தது போலும்.

அத்துணை தூரம் அவளின் மிருதுவான ஸ்பரிசத்தில் நேசம் கொண்டிருந்தது,அந்த குட்டி ஜிமிக்கிகள்.

ஒரு பெண்ணிற்கே உரிய அனைத்து லட்சணங்களையும் கொண்டிருந்தாள் அவள்.

வானுலக ரதியே பூமிக்கு வந்து இறங்கியது போல் அம்சமாக இருந்த அவளின் அழகு பார்ப்போரை அசரடிக்கும் வல்லமை படைத்தது.

அப்படியான பேரழகி அவள்!

ஆனால் அவளின் முகத்தில் இழையோடியிருந்தது,ஒரு சோகம்.

அவளின் இதழ்கள் கூட புன்னகைக்க மறந்துவிட்டிருந்தன.

மறந்துவிட்டதை காட்டிலும் மறைத்து வைக்கப்பட வேண்டிய கட்டாயம் அவளிற்கு!

அவ்விடத்திலே அமர்ந்து பல மணி நேரமாக நீரை வெறித்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் சடுதியில் ஒரு சலனம்!

ஏனெனில்,இருள் அரசன் பூமியை ஆக்கிரமிக்க தொடங்கிருந்த வேளையில் முகிழ்மதி சுய உணர்விற்கு வந்தாள்.

முகிழ்மதி என்றால் மலர்ச்சியான நிலவு அல்லது பிரகாசமான நிலவு என்று பொருள்.

ஆனால் அவளின் வாழ்விலே சிரிப்பிற்கோ பிரகாசத்திற்கோ வழியே இல்லை.

அப்படியான கொடூரமான ஒரு வாழ்க்கையை தான் முகிழ்மதி வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்.

குனிந்து தன் கையிலிருந்த அலைப்பேசியை ஒரு கணம் விரக்தியாக நோக்கியவள்,பின்பு ஒரு பெருமூச்சுடன் எழுந்து நடக்க தொடங்கிவிட்டாள்.

அவள் எப்படி வீட்டிற்கு வந்தாள் என்றே தெரியாத வகையில் அவளின் மனம் மரத்துப்போயிருந்தன.

தற்போது வீட்டிற்கு செல்வதில் அவளிற்கு விருப்பமில்லை என்றாலும்,அவள் சென்றாக வேண்டிய கட்டாயம்.

சில நிமிட நடையிலே தன் இல்லத்தை வந்தடைந்தாள் முகிழ்மதி.

அவள் வீட்டின் பெரிய நுழைவாயிலின் முன்பு வந்து நின்றபோது,வாயிற் காவலனால் கதவு திறக்கப்பட்டது.

அது சாதாரண வீடில்லை…அதுவொரு பழங்காலத்து பங்களா!

கிட்டத்தட்ட அரண்மனை போலவே இருந்தது.

திறந்த கதவின் வழியே வீட்டை பார்த்த பாவையவளிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

ஆயினும்,தொண்டையை செருமி சாதாரணமாக இருக்க முயன்று,அதில் வெற்றியும் கண்டாள்.

அச்சமயம் அவளின் வலதுப்புறம் நின்றிருந்த வாயிற்காவலர் மரியாதையுடன் தலைக்குனிந்து அவளை வணங்க,பெண்ணவளோ தலையை அசைத்துவிட்டு அவரை செல்லமாக முறைத்தாள்.

“மாமா என் முன்னாடி இதை பண்ணாதீங்கனு உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…நானும் உங்க பொண்ணு மாதிரி தான்…அப்பா பொண்ணு முன்னாடி தலைக்குனியறது நல்லாவா இருக்கு” என இடையில் கைவைத்தப்படி அவள் கேட்க,

அவரோ கண்கள் பனிக்க “மன்னிச்சிடுங்கம்மா…வணக்கம் சொல்லி சொல்லி பழகிப்போச்சு…இனியொரு தரம் இந்த மாதிரி பண்ணமாட்டேன்” என்று காவலாளி ஒரு இதமான புன்னகையுடன் கூற,

“இது நல்லப்பிள்ளைக்கு அழகு” என கூறி புன்னகைத்தவள்,அங்கிருந்து சென்றாள்.

உள்ளே நுழையும் போது அரண்மனையின் கதவருகே நின்று,நீண்டதொரு ஆழமான மூச்சை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கே இல்லத்தின் வரவேற்பறையில் அவளுடைய பெற்றோர்கள் ஒரே நேரத்தில் விரக்தியுடனும் கவலையுடனும் நீள்விரிக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவர்களை கண்டவுடன் அவளின் முகம் படீரென்று மாறிப்போயின.

உள்ளே நுழைந்ததும்,அவர்கள் இருவரையும் பார்க்காமல் மேலே தன்னறைக்கு செல்லவிருந்தாள்.

ஆனால் அவளின் துர்திர்ஷடம்…

மேலே படியேறி செல்லவிருந்தவளை “முகிழ்” என ஒரு காட்டமான குரல் தடுத்து நிறுத்தின.

அந்த கணீர் குரலைக் கேட்டதும் காரிகையவளிற்கு தூக்கிவாரிப்போடது.

அவளின் பாதங்கள் அவ்விடத்திலே தேங்கி நிற்க,அவளின் மேனியோ அச்சத்தில் வியர்த்து வழிந்தன.

அவளது தந்தையின் குரல் தான் அது!

அவளின் மேனி வெளுத்துப்போய் வெடவெடக்க,அவள் தலையைத் திருப்புவதற்கு முன்பு ஒரு ஆழமான மூச்சை இழுத்து வெளியேற்றினாள்.

அவளின் கரங்கள் ஆதரவிற்காக அவளின் துப்பட்டாவை இறுக பற்றிக்கொண்டன.

சில கணம் தன்னை தானே தேற்றியப்படி திரும்பியவள் “சொல்லுங்க அப்பா” என சிரித்துக்கொண்டே பேச முயன்றாள்.

அவள் சாதாரணமாக இருக்க முயன்றாலும்,அவளின் வார்த்தைகள் நடுக்கத்துடனே வெளிவந்தன.

அவள் அவ்விடத்திலே நிற்க,அவளுடைய தந்தையோ அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தார்.

அவளுடைய தந்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளுடைய இதயத்தில் முரசு கொட்டின.

ஏனெனில்,அவளது முகத்தில் தெரிந்த ஆக்ரோஷம் அவளை நிதானமாக இருக்கவிடவில்லை.

அவரின் விழிகளில் சீற்றத்தை மீறிய ஒரு விரக்தியும் வேதனையும் தாண்டவமாடின.

‘அவர் ஏன் தன்னை அவ்வாறு பார்க்கிறார்?’ என்று அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே,

‘படார்’ என்ற சத்தம் அவ்வறையே நிறைத்திருக்க “அம்மாஆஆஆ” என அலறிய முகிழ்மதி தரையில் விழுந்திருந்தாள்.

ஆம்,அவளின் தந்தை சிவராமன் தான் மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

வரவேற்பறையின் குளிர்ந்த பளிங்குத் தரையில் விழுந்திருந்த முகிழ்மதியின் கண்கள் இரண்டும் கண்ணீரால் நிறைந்தன.

அவள் கன்னத்தில் கைவைத்து அழுதுக்கொண்டே தந்தையை ஏறிட,

அதே சமயம் அவளுடைய தாய் விஜயசாந்தி தன் கண்முன் நடந்த காட்சியைக் கண்டு இகழ்ச்சியாய் புன்னகைத்தாள்.

முகிழ்மதியின் கண்களில் கண்ணீரைக் கண்டதில் ஒரு திருப்தியான புன்னகை அவரிடத்தில்!

அடிவாங்கிய பெண்ணவள் அசையாமல் அங்கே அமர்ந்திருக்க, கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று யாரோ அவளுடைய முடியைப் பிடித்து இழுக்க “ஆ…அம்மா வலிக்குது” என வலியில் துடித்து கத்தியவளை தன் உயரத்திற்கு தூக்கிப்பிடித்த சிவராமன் “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பையனுக்கு முத்தம் கொடுத்திருப்பேடி…” என ஆக்ரோஷமாக கேட்டப்படியே அவளின் கன்னத்தில் மீண்டும் ஒரு அறைக்கொடுத்தார்.

அவள் “அம்மாஆஆ” என அலறியப்படியே சுருண்டு கீழே விழுந்தவளின் மேனியெங்கும் வலி ஊடுருவியது.

அவளால் அசையக்கூட முடியவில்லை.

தந்தையின் அடியை விட அவரின் சொற்கள் அவளை உயிரோடு கொன்று புதைத்தது.

உடம்பெல்லாம் மரத்துப்போயிருக்க அவளால் எழுந்துக்கொள்ள முடியாத ஒரு அவல நிலை!

தந்தை எதைப் பற்றி பேசுகிறார் என்று அவளிற்கு தெரியும்.

சற்று முன்பு அலைப்பேசியில் வந்த புகைப்படத்தை அவளும் பார்த்திருந்தாள்.

அந்த புகைப்படத்தில் வந்த செய்தி உண்மையல்ல.

பொய்…

அதனை தந்தையிடம் கூறிவிட அவளின் உள்ளம் துடித்தது.

ஆயினும்,அவளால் வாயை திறந்து நிஜத்தை கூறமுடியாது.

“அப்பா…அப்பாஆஆ” என கதறியவளின் மீது சிறிதும் இரக்கம் கொள்ளாத அந்த மாமனிதரோ “என்னை அப்படி கூப்பிடாதேடி” என்று கூறி,கன்னத்தில் அறைவிட்டார்.

இந்த முறை தரையில் படுத்திருந்த பெண்ணவளை அறைந்ததினால் அவளுடைய நெற்றி தரையில் மோதி உதிரம் கொட்டின.

உடனே அவள் வலியில் துடிக்க, மீண்டும் தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்திருக்க முயன்றாள்,ஆனால் முடியவில்லை.

“அப்பா…” அவள் மேலும் வாயை திறந்து பேசுவதற்குள், அவளுடைய அன்னை விஜயலட்சுமி வேகமாக வந்து அவளுடைய தாடையைப் பற்றிக்கொண்டாள்.

அவருக்கு அந்த புகைப்பட பின்னணியின் சாராம்சம் தெரிந்திருந்தாலும்,அந்த உண்மையை தன் கணவருக்கு தெரியவிடாமல் தடை செய்தார்.

அவளின் தாடையை இறுகப்பற்றிய விஜயலட்சுமி “ச்சை…வாயை மூடுடி…இனி நீ எங்களை அப்பா அம்மானு கூப்பிடாதேடி…அதுக்கான தகுதியே உனக்கில்லை…நீயெல்லாம் எங்களுக்கு மகளாடி?ஒழுக்கங்கெட்டவளே…ஒழுக்கத்தை பத்தி உங்க அக்காகிட்ட கத்துக்கோடி…நீ வாயவே திறக்கக்கூடாது…இனி எப்படிடி நாங்க வெளிய தலைக்காட்டறது நாசமா போனவளே” என்று சற்றும் இரக்கமின்றி அமிலத்தை அவளின் மீது கொட்டினார்.

அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளின் மேனியை தீப்பற்றி எரிய வைக்க,அவளின் உயிர் சிறிது சிறிதாக கூடு விட்டு பறந்து சென்றன.

அவளின் கண்கள் அழுது அழுது சிவந்துப்போயிருக்க,ஒரு கட்டத்தில் கண்ணீரே வற்றிப்போயிருந்தது.

அவளுடைய கழுத்திலும் தாடையிலும் விரல்களின் முத்திரைகள் தடம் பதித்திருந்தன.

அவளின் கன்னம் கூட கன்றி சிவந்து,ஒரு காதோரம் இலேசாக கிழிந்து ஜிமிக்கி கீழ்புறமாக தொங்கிக் கொண்டிருந்தன.

அத்துணை கொடூரமாக நடந்திருந்தார்கள் சிவராமனும் விஜயலட்சுமியும்!

மகளின் மீது அருவருப்போடு பார்வையை செலுத்திய சிவராமன் “வா விஜி…இனி இவ என் பொண்ணே இல்லை…இன்னையிலிருந்து என் பொண்ணு செத்திட்டாள்” என்று அழுத்தமான குரலில் சொன்னவர்,விருட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவளின் தாய் விஜயலட்சுமியோ மகள் அழுதுக்கொண்டிருப்பதை ஒரு வன்ம புன்னகையுடன் பார்த்துக்கொண்டே அவளை கடந்து சென்றிருந்தார்.

அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருத்தி,இந்த சம்பவம் அனைத்தையும் ஓரமாக நின்று பார்த்திருந்தார்.

தன் கண் முன்னால் நடப்பது அநீதி என தெரிந்தும் தடுக்க முடியாத ஒரு கையறு நிலை அவருக்கு!

பின்பு தங்களது எஜமானார்களை எதிர்க்க அவருக்கு தைரியமில்லை.

அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் முகிழ்மதியை நெருங்கி,அவளின் தோளில் கை வைத்தாள்.

அந்த சாதாரண தீண்டலிற்கே அவளின்‌ மேனி வெடவெடத்தன.

அவள் விலுக்கென்று திரும்பியபோது,அந்தப் பணிப்பெண் கண்ணீருடன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

அவருடைய கண்களில் அவளுக்கான அக்கறையும் பரிதாபமும் நிறைந்திருந்தன.

கூடவே,அவளிற்கான அவரது வேதனையும் மிகைந்து இருக்க “வா பாப்பா” என முகிழ்மதியை கைதாங்கலாக அவளின் அறைக்கு அழைத்து சென்றார்.

அவள் அறையின் கதவைத் திறந்து,மெத்தையில் அவளை அமர்த்திவிட்டு அவளுடைய காயத்திற்கு மருந்து போட்டு விட்டார்.

அவள் வலியில் “ஸ்ஆஆ” என முனகும் போதெல்லாம் அவரின் உள்ளம் துடித்தது.

அவளுடைய தலையிலிருந்து வழிந்த உதிரத்தை பார்க்க பார்க்க அவரின் நெஞ்சம் கொதித்தன.

“பாப்பா இனியும் இந்த ராட்சசங்க கூட இருக்காதே…இவங்கயெல்லாம் மனுஷங்களே இல்லை…பேசாமல் நீ ஹாஸ்டெல்லுக்கு போய் நிம்மதியா இரு” என சொல்லிக்கொண்டே, அவளுடைய காயத்திற்குக் கட்டுப் போட்டுவிட்டாள்.

முகிழ்மதி அவளை இலேசாக பார்த்து புன்னகைத்தாள்.

ஏனென்றால், அவளுடைய சிறுவயதிலிருந்தே இந்த வீட்டில் அவளை உண்மையாகவே கவனித்துக் கொண்ட ஒரே நபர் அவர்தான்.

அவளுடைய அம்மா அவளிற்கு கொடுக்காத அன்பை இந்த பட்டம்மா தான் கொடுத்தார்.

முகிழ்மதி அவருடைய கைகளைப் பிடித்து,அவரை தன் அருகில் அமர வைத்து,அவரின் மடியில் தன் சிரத்தை சாய்த்துக் கொண்டாள்.

உடனே பட்டம்மா கண்ணீரோடு அவளின் நெற்றியை வருட,முகிழ்மதி உணர்ச்சி பெருக்குடன் பேச ஆரம்பித்தாள்.

“உனக்குத் தெரியுமா பட்டம்மா?இந்த வீட்டிலே நான் இருக்கிறதுக்கு ஒரே காரணம் நீதான்… பெத்தவங்களே என்னை வெறுத்து ஒதுக்க,நீ தான் எனக்கு தேவையான எல்லா அன்பையும் கொடுத்தே…நான் உன்னை ரொம்பவே லவ் பண்ணறேன்…அதே மாதிரி என் அப்பா அம்மாவையும் எனக்கு பிடிக்கும்…ஆனால் சில சமயம் நான் உண்மையாவே அவங்க பொண்ணு தானானு சந்தேகம் வருது” என்று சொல்லும் போதே அவளின் இதழ்கள் அழுகையில் துடித்தன.

உடனே பட்டம்மா “அழாதே கண்ணு” என அவளின் கண்ணீரை துடைத்தவர்,

“உன்னோட நல்ல மனசுக்கு உன்னை மதிக்க தெரிஞ்ச,உன்னை மட்டுமே விரும்பக்கூடிய ஒருத்தங்க சீக்கிரமே கிடைப்பாங்க” என்று ஆறுதல் கூறி,அவளை தூங்க வைத்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு மடியில் இருந்த முகிழ்மதியை படுக்கையில் வசதியாகப் படுக்க வைத்தவர் ‘நீ ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும் பாப்பா’ என கன்னத்தை ஒரு முறை பரிவுடன் வருடிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார் பட்டம்மா.

இதற்கிடையில்,ஒரு கட்டிடத்தின் கைவிடப்பட்ட கூடத்தின் நடுவில் ஒருவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

வெண்ணிற வேட்டி சட்டை முறுக்கிய மீசை என தோரணையாக அமர்ந்திருந்தவனை பார்த்தாலே மற்றவரின் நெஞ்சில் நீர் வற்றிப்போகும்.

அவனது முறுக்கேறிய கரங்கள் அவனின் மீசையை முறுக்கிக்கொள்ள,அவனின் கூரிய விழிகளோ எதிரில் இருந்தவனை கூறுப்போட்டன.

அந்த எதிரில் இருந்தவனோ  கண்ணில் உச்சக்கட்ட மிரட்சியுடன் “அண்ணே என்னை மன்னிச்சிடுங்க” என அலறிக்கொண்டிருக்க,அதனை ஒரு வன்ம புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

எதிரில் கைகள் கட்டுப்பட்டு நின்றிருந்தவனின் அலறலும் அழுகுரலும் அக்கூடத்தையே கிடுகிடுக்க வைத்தது.

சுற்றி நின்ற பணியாட்களுக்கு கூட அவனின் மீது இரக்கம் தோன்றினாலும்,இவனோ அலட்சியமாகவே அமர்ந்திருந்தான்.

அவன் பளபளத்த கூரிய கத்தியை தன் கையால் சுழற்றிக்கொண்டே “என் குடும்பத்தையே தொட்டு பார்க்க துணிச்சிட்டயில்லை…இதுக்கு மேலே உன்னை விட்டுவைப்பேனு நினைக்கிறீயா சேது?” என்று புருவம் உயர்த்தி கேட்டவன்,

சட்டென அங்கிருந்த யாவரும் எதிர்பாராத வேளையில் ஆவேசமாக எழுந்து எதிரில் இருந்தவனின் இதயத்தில் கத்தியை இறக்கியிருந்தான்.

அவன் “அம்மாஆஆஆ” என வீறிட்டு சிறிது சிறிதாக தன் உயிரை விட்டிருந்தான்.

அவன் இறக்கும் வரையிலும் அவனது இதயத்தில் கத்தியை அழுத்தி இறக்கியவன்,அவனின் ஜீவன் துடித்து அடங்கிய பிறகே கத்தியை எடுத்து எதிர் திசையில் வீசினான் ரத்தினவேல் ரகுநாத பூபதி.
 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top