இறுதி அத்தியாயம் 128

இறுதி அத்தியாயம் 128

தமயந்தியின் பேச்சு திறமையாலும் அவள் இறங்கி செய்த களப்பணியினாலும் ஒரு தொகுதியில் பொது மக்களிடமிருந்து கிடைத்த பலமான ஆதரவினால் இப்போது மாவட்ட செயலாளராக இருக்கிறாள்.

ரத்தனவேல் படிப்படியாக முன்னேறி அமைச்சர் பதவியில் அமர்ந்திருந்தான்.

வீரோ வழக்கம் போல் நண்பனிற்கு பக்கப்பலமாக இருந்து அவனிற்கு அனைத்து உதவிகளையும் செய்துக்கொண்டிருந்தான்.

“நீயும் ஒரு தொகுதியில் நிக்கலாம் இல்லைடா” என ரத்தினவேல் அவனிடம் எடுத்துரைக்க,

“உனக்கே தெரியும்…எனக்கு இந்த பதவி மேலே எல்லாம் ஆசையில்லை பூபதி…எனக்கு உன்கூட இருக்கிறது தான் சந்தோஷம்” என்று உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டான்.

நண்பனின் பதிலில் எப்போதும் போல் ரத்தினவேல் நெகிழ்ந்துப்போனான்.

அதுமட்டுமின்றி தமயந்தி அரசியலில் குதித்தப்போதும் வீர் தனது தோழனிற்கு பாதுகாவலனாக,உதவியாளனாக இருந்தானே ஒழிய,மனைவியினிடம் செல்லவில்லை.

அவளை உடனிருந்து காக்க அவளின் ஆஸ்தான பாதுகாவலன் சம்பத் நியமிக்கப்பட்டிருந்தான்.

அதைக்கண்டு தமயந்தியே ஒரு சில நேரம் “நீங்க என்னை கல்யாணம் பண்ணியிருக்கீங்களா?எங்க அண்ணனை கல்யாணம் பண்ணியிருக்கீங்களானே தெரியலை…என் அண்ணா கிட்ட அப்படி உருகறீங்க” என அவனை கேலிச்செய்வாள்.

அதற்கு அவன் சிறியதாக புன்னகை உதிர்ப்பானே தவிர பதில் எதுவும் பேசமாட்டான்.

அவளிற்கு அவனது விசுவாச குணம் தெரியும் என்பதால் அவளும் அதனை எளிதாக கடந்து விட்டாள்.

வீரை பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த மனிதன்…சிறந்த தமையன்…சிறந்த நண்பன்…சிறந்த மகன்…ஆனால் அவன் சிறந்த காதலன் கிடையாது.

அவனிற்கு எப்போதும் நட்பு தான் முதன்மை…

யாருமற்று நிர்கதியாய் நின்ற சூழ்நிலையில் அவனிற்கு மீண்டும் மறுபிறவி கொடுத்து உயிர்பித்தது அவனது தோழன்!

அந்த நன்றியை அவன் வாழ்வின் இறுதிநொடி வரை மறக்கமாட்டான்.அப்படியொரு நட்பின் தீவிர பக்தன் அவன்.

அவன் அவளிற்கு நல்ல காதலனாக இல்லையென்றாலும் அவளிற்கு என்றும் அவன் சிறந்த கணவன்.

மகப்பேறு காலக்கட்டத்தில் ஒரு அன்னையின் ஸ்தானத்தில் இருந்து அவளை அவன் பார்த்துக்கொண்டது போல் அவளின் அன்னை கூட பார்த்திருக்க மாட்டார்.

தாயின் அன்பிற்கு ஈடுயிணை இல்லை என்பார்கள்.ஆனால் அதையும் தாண்டிவிட்டது,வீரின் அன்பு.

கர்ப்பமாக இருந்த சமயமும் சரி…குழந்தை பிறந்தப்பிறகும் சரி அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான்.

அவளை ஒரு நாள் கூட எந்த வேலையும் செய்யவிட்டதில்லை.

அவ்வளவு ஏன்?

அவன் உடல் களைத்து வேலை முடிந்து வந்த சமயமும் கூட,அவளின் களைப்பை கண்டுவிட்டால் “ரொம்ப அசதியா இருக்கா லட்டு?வா உன் காலை பிடிச்சுவிடறேன்” என்று கூறி இதமாக அவளிற்கான சேவைகள் புரிவான்.

முன்பே அவன் மேல் காதல் பித்தாக இருப்பவள்…இப்போது அவனிற்கு மொத்தமாக அடிமையாகிப்போனாள்.

தற்போது அவன் சிறந்த தந்தையும் கூட என்று மகனை பார்த்துக்கொள்ளும் விதத்தில் அனைவருக்கும் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கிறான்.

சில மாதங்களுக்கு பிறகு,

ரத்தினவேல் மிக முக்கியப் பணியை வேறொரு நபரிடம் கொடுத்திருப்பதை அறிந்து வீர் கவலையுற்றான்.

ரத்தினவேல் அரசன் என்றால்,வீர் அவன் தளபதி…

இப்போது அவன் தன்னை ஒதுக்கி வைத்தது ஒரு மாதிரி இருந்தது.

தனது மனச்சுணக்கத்தை பற்றி அவனிடம் வெளிப்படையாக கேட்கவும் செய்தான்.

“ஏன் பூபதி என்னை நம்பாமல் வேற ஒருத்தர்கிட்ட வேலையைக் கொடுத்திருக்கே?” என வெதும்பிப்போய் அவன் வினவ,

அவனை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேலோ “நீ என் நண்பனா மட்டும் இருந்திருந்தால் உன்கிட்ட தாராளமா இந்த வேலைய ஒப்படைச்சிருப்பேன் வீர்…பட் நீ இப்போ எங்க வீட்டு மாப்பிள்ளை…உனக்கு ஏதாவது ஒண்ணுனா முதல்ல பாதிக்கப்படப்போறது என் தங்கச்சியும் என் மருமகனும் தான்…அவங்க கஷ்டப்படறதை என்னாலே பார்க்க முடியாது…அடுத்து என் ஸ்டார்…உனக்கு ஒண்ணுனா அவளாலே தாங்கவே முடியாது…அதனாலே இனி நீ எந்த ஆபத்தான வேலைக்கும் போக வேண்டாம்…அஃபிசியல் வேலை மட்டும் நீ பாருடா” என ஆணித்தரமாக தெரிவித்தான்.

அவனது பேச்சிலிருந்த தர்மம் புரிந்தாலும் “ஆனால் பூபதி?” என அவன் இழுக்க,

“இனி நீ கட்சி ஆபிஸ் வேலை மட்டும் தான் பார்க்கணும் வீர்…கட்டப்பஞ்சாயித்து எதுக்கும் நீ போகவேணாம்” என அழுத்தமாக கூறிவிட,அவனிற்கும் நண்பனின் பேச்சை மீற முடியாத கட்டாயம்!

அத்தோடு அவன் கூறுவதில் நியாயம் இருப்பதால் அவனும் ‘சரி’ என அதை ஒப்புக்கொண்டான்.

அதேசமயம் நெஞ்சை நிமிர்த்தி நண்பனை நேருக்கு நேராக நோக்கிய வீரோ “எனக்கு சொல்லற அதே கருத்து உனக்கும் பொருந்தும் பூபதி…உனக்கு ஒண்ணுனாலும் என் தங்கச்சி தாங்கமாட்டாள்…அப்போ நீயும் இந்த வேலைக்கு எல்லாம் போகக்கூடாது” என கடுமையாக எச்சரிக்க,

மீசையை முறுக்கிவிட்டு சிரித்த ரத்தினவேலோ “டேய் என் வார்த்தைய வைச்சு என்னையே மடக்கறீயாடா நீ?பலே ஆளு தான்டா நீ” என புருவம் உயர்த்தி நண்பனை மெச்சிக்கொள்ள,

“இப்படியெல்லாம் பேசி சமாளிக்க முடியாது…நீயும் இந்த வன்முறை விஷயத்துக்கு எல்லாம் ஒரு முடிவுக்கட்டு” என கறாராக உரைக்க,

அதைக்கேட்டு இன்னும் சத்தமாக சிரித்த ரத்தினவேல் “டேய் ரொம்ப பண்ணாதேடா…ஆல்ரெடி என் பொண்டாட்டி பத்தி தெரிஞ்சு நானே எல்லாத்தையும் குறைச்சுக்கலாம்னு தான் இருக்கேன்…அதனாலே நீ ஒண்ணும் கவலைப்படாதே…” என அவனும் தன்னுடைய தற்போதைய செயல்பாட்டை பற்றி எடுத்துரைத்தான்.

இப்போது நண்பர்கள் இருவருக்கும் வாய்க்கொள்ளாத சிரிப்பு…

என்னவொரு மாற்றம்…

ஒரு காலத்தில் எப்படி இருந்த நண்பர்கள் இருவரும்!

அவன் ‘வெட்டி வா’ என்றால் வேரோடு பிடிங்கி வருபவன் வீர்…

இப்போது தங்களையே நம்பி வந்த உறவுகளுக்காக தங்களை அடியோடு மாற்றிக்கொள்ள உத்தேசித்து கொண்டிருந்தார்கள்.

குடும்பஸ்தர்கள் என்றால் இது தானோ?

“பூபதி டாலுக்கு எப்போ நெக்ஸ்ட் செக் அப் பண்ணனும்?” என வீர் தங்கையைப் பற்றி அக்கறையாக வினவ,

தன்னவளை பற்றி பேசியவுடன் ரத்தினவேலின் முகம் மிகவும் மென்மையானது.

ஏனெனில்,முகிழ்மதிக்கு இப்போது ஏழாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது.

அதுவும்,இரட்டை குழந்தைகள் வேறு!

அதைப்பற்றி எண்ணியதும் அவனின் இதழ்கள் தாராளமாக விரிந்திட “வெள்ளிக்கிழமை போகணும்டா” என்றான்.

“சரிடா…ஹாஸ்பெட்டல் போகும் போது சொல்லு…நானும் வர்றேன்” என தெரிவிக்க,

“ம்” என்று தலையாட்டிய ரத்தினவேலின் நினைவுகளோ பின்னோக்கி சென்றன.

ஒரு நாள் முகழ்மதி அலுவலக அறையில் மேசையின் முன்பு அமர்ந்து வெகு தீவரமாக மடிக்கணினியில் எதையோ பார்த்திருந்தாள்.

அதைக் கவனித்தப்படியே உள்ளே நுழைந்த ரத்தினவேலோ “என்ன ஸ்டார்?எதை அவ்வளவு மும்முரமாக பார்த்திட்டு இருக்கே?” என்று கேட்டப்படியே அவளை நெருங்க,

திடீரென்று அவன் குரல் கேட்டதும் அவள் திடுக்கிட்டாலும் சடுதியில் தன்னை சமாளித்தவள் “எப்போ மாமா வந்தீங்க?” என்றப்படி எழுந்து நின்றாள்.

அவனோ “இப்போ தான் வந்தேன்…நீ உட்காருடி” என அவளை நாற்காலியில் அமர வைத்தான்.

அவளும் அதில் அமர்ந்துக்கொண்டு “சாப்பிட்டிங்களா மாமா?” என அவனிடம் சில நல விசாரிப்புகளை மேற்கொள்ள தொடங்கினாள்.

முகிழ்மதி முன்பு போல் எதற்கெடுத்தாலும் அஞ்சி நடுங்கும் அப்பாவி பெண் கிடையாது.

இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்போது முதுகலை பட்டப்படிப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.

கணவன் மற்றும் அன்னையை பின்பற்றி அவளும் கட்டிடக்கலை பொறியாளனாக உருவெடுத்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் பகுதி நேரமாக கணவனிடமிருந்து சிலை வடிப்பது மற்றும் ஓவியம் வரையவும் கற்றுத் தேர்ந்திருந்தாள்.

இதற்கெல்லாம் மேலாக மனதில் நினைப்பதை வெளியில் பேசும் அளவு முன்னேறியிருந்தாள்.

இருப்பினும்,அவளிடம் எப்போதும் இருக்கும் நிதானமும் மென்மையும் மாறவில்லை.

அது அவளின் இயல்பு குணமும் கூட…

அதனை மாற்ற அவனும் முயற்சிக்கவில்லை.

அவளின் விசாரிப்புகளுக்கு பதில் கூறிய ஆடவன் இப்போது காரியத்தில் கண்ணாக “நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லலையே…என்ன பார்க்கறே ஸ்டார்?” என அவளருகே குனிந்து திரையை நோக்கினான்.

அவனது அருகாமை அவளின் மேனியை சிலிர்க்க வைத்தாலும் “இல்லை மாமா…மிஸ்டர் ஸ்டார் இன்னைக்கு ஒரு ஆர்ட்டிக்கள் ரிலீஸ் பண்ணறாரு…ஆனால் அவர் வெளியிட்ட சிற்பம் அப்படியே நீங்க போன வாரம் வடிவமைச்ச சிற்பம் மாதிரியே இருந்துச்சு…அது தான் எப்படினு பார்த்திட்டு இருக்கேன்…” என தயக்கமாய் இழுத்தப்படி அவனை ஏறிட,

அவனோ பதில் எதுவும் கூறாமல் அவளின் முகத்தை ஆழ்ந்து நோக்க,அவனது விழி வீச்சு அவளின் இதயத்தை படபடக்க வைத்தன.

அதேநேரம் அவளின் சிந்தைக்குள் ஏதோ பளீச்சிட,அவளின் விழிகள் சட்டென விரிந்தன.

ஒரு வித பரபரப்புடன் “மா…மா அப்போ அது நீங்க தானா?” என அவனையும் அந்த மடிக்கணினி திரையையும் பார்த்தவளின் முகம் ஆச்சரியத்தில் பிரகாசமுற்றன.

அவனோ “ரொம்ப பெரிய கண்டுப்பிடிப்புடி” என நக்கலாக இதழ்கடித்து சிரித்தப்படி நிமிர்ந்து நிற்க,

அதைக்கேட்ட காரிகைக்கோ ‘என்ன சொல்வது?’ என்றே தெரியவில்லை.

அவளது இலட்சிய நாயகனும் அவளது கணவனும் ஒருவரே என்று தெரிந்துக்கொண்டதில் அவளிற்கு அப்படியொரு மகிழ்ச்சி…

படீரென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்றவள் “ஏங்க நிஜமா நீங்க தான் அந்த ஸ்டாரா?” என உற்சாகம் பொங்க கேட்டவளின் உள்ளம் துள்ளிக்குதித்தன.

அவனோ “இதுக்கு மேலையும் உனக்கு சந்தேகமாடி?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டப்படி மேசையில் சாய்ந்து நின்று மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்ட,

தன்னவனின் அந்த பதிலை கேட்டதும் “மாமா…” என சந்தோஷ கூச்சலிட்டவள்,வேகமாக அவனை வந்து அணைத்துக்கொண்டாள்.

அதனை சற்றும் எதிர்பாராத ஆடவனோ அவளை நோக்கி குனிந்து “ஸ்டார்…” என உயிரை உருக்கும் குரலில் அவளை அழைக்க,அவளின் மெய் சிலிர்த்தன.

அவளது பெயரை தன்னுடைய அடையாளமாக அவன் மாத்திக்கொண்டிருக்கிறான் என்றால் தன் மீது அவனிற்கு எத்தகைய காதல் இருக்க வேண்டும்?

அவனது காதலை பற்றி அவள் சிலாகிக்கும் ஒவ்வொரு தருணமும் அவளால் மூச்சு கூட விடமுடியவில்லை…

அவன் கடந்த வந்த பாதைகள் மொத்தமும் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

அவனிற்கு அவள் என்ன செய்துவிட்டாள்?

இதுவரை ஒன்றுமே செய்தது இல்லை…

ஆயினும்,அவளிற்காக அவன் மனதில் ஒரு புனித ஆலயத்தை கட்டி நொடி தவறாமல் அவளை பூஜிக்கும் பக்தனாய் அவன் இருந்தான்.

அதனால் இன்னும் அதிகமாய் அவனை இறுக அணைத்துக்கொண்ட முகிழ்மதியின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“நீங்க… நீங்கதான் அந்த ஸ்டார்னு ஏன் மாமா சொல்லலை?” என்று நம்ப முடியாத பிரம்மிப்புடன் அவன் மார்பில் முகத்தை புதைத்தபடி முணுமுணுத்தாள்.

அவளின் இடையை சுற்றி வளைத்திருந்த ரத்தினவேலோ “நான் எங்கடி சொல்லலை?நான் வரைஞ்ச ஓவியத்தை நீ நுணுக்கமா கவனிச்சிருந்தாலே உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும்…நானும் எப்போ தான் என் மக்கு பொண்டாட்டி இதை கண்டுப்பிடிப்பாள்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…ஆனால் நீ கண்டுப்பிடிக்கிற மாதிரி தெரியலை…அதான் நானே உனக்கு க்ளூ கொடுத்திட்டேன்” என்று அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி சிரிக்க,

அவளோ “நான் மக்கா?” என நாசி சுருக்கி சிணுங்க,

“பின்ன இல்லையாடி?நான் தான் அந்த ஸ்டார்னு கண்டுப்பிடிக்கவே கிட்டத்தட்ட நாலு வருஷமாகியிருக்கு…அதுவும் நான் க்ளூ கொடுத்த பிறகு கண்டுப்பிடிச்சிருக்கே…உன்னை மக்குனு சொல்லாமல் வேற என்ன சொல்லறது?” என புருவம் உயர்த்தி கேட்டு அவன் நக்கலாக சிரிக்க,

“போங்க மாமா” என சிணுங்கி அவனது தோளில் முகம் புதைத்தவளின் இதயம் நெகிழ்ந்துப்போயிருந்தன.

அதனால் மெதுவாக அவனை தலையுயர்த்தி பார்த்த முகிழ்மதி
“ஆனா ஏன் மாமா?என் பெயரை நீங்க எதுக்கு உங்க அடையாளமா வைச்சிருக்கீங்க?” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது.

அவளின் கண்கள் கலங்குவது போல் கூட இருந்தன.

அவனோ அவளை காதல் பொங்க பார்த்தப்படி “நீ இறந்திட்டேன்னு தெரிஞ்ச சமயம் நான் மொத்தமா உடைஞ்சுப்போயிட்டேன் ஸ்டார்…அதுக்கு பிறகு என்னை நான் தேத்திக்க வேறு வேலை பார்த்தாலும் என் மனசுலே ஒரு வெற்றிடம் இருந்திட்டே இருந்துச்சு…அந்த வெற்றிடத்தை நிரப்ப தான் உன் பெயரிலே ஒரு பிளாக் தொடங்கி எழுத ஆரம்பிச்சேன்…கூடவே,உங்க அம்மாவுக்கு செய்யற குருதட்சணையாவும் இதை நினைச்சேன்…என்னுடைய கலை அறிவை பற்றி மத்தவங்ககிட்ட தொடர்ந்து பகிர்ந்துக்கிட்டே வந்தேன்…அதிலே எனக்கு ஒரு ஆத்ம திருப்தி…எனக்கு அதன் மூலமா நிம்மதி மட்டுமில்லை…புகழும் சேர்ந்து கிடைக்க ஆரம்பிச்சது…என்னுடைய திறமையும் நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டே போச்சு…இதுக்கெல்லாம் காரணம் நீ தான்டி…அதனாலே தான் நான் உருவாக்குற ஒவ்வொரு சிற்பத்திலும்… வரையுற ஒவ்வொரு ஓவியத்திலும் நீ இருந்தே…மொத்தத்திலே என் வாழ்க்கையை ஒளிரவைக்க வந்த நட்சத்திரம் நீ தான்டி…உன் பேரு என் அடையாளமா மாறினதிலே நான் தான் ரொம்ப பெருமைப்படறேன்” என சிலாகித்து அவளின் கன்னம் பற்றி பேசியவனின் பேச்சை கேட்டவளின் இதழ்கள் மெதுவாக நடுங்கின.

அவளின் கண்களிலிருந்து உடனே நீர் மிளிர்ந்து விழ ஆரம்பித்திட 
“அடடா… இப்போ எதுக்கு இந்த கண்ணீரு?” என செல்லமாக கடிந்தப்படி அவளின் கண்ணீரை அவன் துடைத்துவிட,

‘தெரியலை…’ என்னும் விதமாக சிரித்துக்கொண்டே அழுதப்படி தலையசைத்தவள் “ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா…” என நாதழுதழுக்க அவனது கரத்தை தன் கன்னத்தோடு சேர்த்து அழுத்தி உரைக்க,

ரத்தினவேலும் “ஐ டூ ஃபீல் இட் டி” என மிருதுவாக கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

முகிழ்மதியோ தன்னை முத்தமிட்டவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனது காதல் இவ்வளவு ஆழமா?

அவனது ஆழத்திற்குள் அவளும் இன்னும் அதிகமாய் முகிழ்ந்துப்போக விரும்பினாள்.

அந்த உணர்வு அவளின் உள்ளத்தை முழுவதுமாக உருக்கிவிட “மாமா…” என மெல்ல அவள் அழைக்க,

அவனும் “என்னடி?” என அவளை விழிகளால் வருடியப்படி கேட்க,

அவனது விழியோடு விழி கலந்த முகிழ்மதி “நான் உங்களை ரொம்ப லவ் பண்ணறேன் மாமா…” என தன்னை மீறி துணிச்சலாக காதலை தெரிவித்திருந்தாள்.

அவற்றினை எதிர்பாராத ரத்தினவேலின் இதயம் ஒரு கணம் நின்று பின்பு துடித்தன.

அவனது விழிகள் வியப்பில் விரிந்திட “ஸ்டார் மறுபடியும் சொல்லு…எனக்கு சரியா கேட்கலை” என பரபரப்புடன் நம்ப முடியாமல் கேட்டப்படி அவள் காதருகே குனிய,

இப்போது முகிழ்மதியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.

ஏதோ ஒரு வேகத்தில் கூறிவிட்டாள்.

மீண்டும் அதனை கூற வேண்டும் என்றதும் அவளிற்கு ஒரு மாதிரி இருக்க “மாட்டேன்…” என்றாள் இதழ்கடித்து படபடப்புடன்…

அதில் சட்டென நிமிர்ந்து அவளை நோக்கியவன் “ஏன்?” என்றான் சிறிது கோபமாக…

அவளோ இதழ்களை அழுத்தமாக மூடிக்கொள்ள,

“முகிழ்” என அவன் அதட்டலாய் அழைத்ததும்,

அவளோ குனிந்த தலை நிமிராமல் “போங்க மாமா…” என செல்லமாய் மொழிந்தவளின் மேனி மொத்தமும் குப்பென்று சூடேறி சிவந்ததை கண்டவனிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

அதனால் கலகலவென தன்னை மீறி சிரித்த அந்த மூர்க்கன் “காதலிக்கிறேன்னு சொல்லி என் ஹார்ட் பீட்டை நிறுத்திட்டு உனக்கு வெட்கமாடி?” என அடாவடியாக வினவியவன்,அடுத்த நொடி,அவளது இடையைப் பற்றி அலுவலக மேசையின் மீது அமர வைத்திருந்தான்.

முகிழ்மதி அவனது செயலில் அதிர்ந்து “மா…மாமா… இது ஆபீஸ் ரூம்” என திக்கி திணறி உரைக்க,

அவனோ “அதனாலே என்ன?” என அசால்ட்டாக கேட்டப்படி அவளின் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட ஆரம்பிக்க,

அவனது முத்தத்திற்கு ஏற்ப அவள் வளைந்தாலும் “யாராவது வந்திடப்போறாங்க மாமா…” என்றாள் ஒரு வித தயக்கத்துடன்…

அவனோ அவளது கழுத்து சதையை மெல்லியதாக கடித்து முத்தமிட்டப்படியே “என் அனுமதி இல்லாமல் இங்க யாரும் வரமாட்டாங்கடி…” என மோகத்தில் முக்குளித்த குரலில் கூறியப்படி,அவள் அணிந்திருந்த சுரிதாரின் மேலாடையை உருவி கீழே வீசியிருந்தான்.

அதில் அவளின் மொத்த மேனியும் அதிர்ந்திட “மா…மா” என விழிகள் சொருக எச்சரித்தப்படி அவனது சட்டை காலரை பற்றி அவனை தடுக்க முயல,

அவனோ அவனை தடுக்க முயன்ற அவளின் கரங்களுக்கு மட்டுமின்றி அவளின் இதழ்களையும் சேர்த்து தன் ஆளுகையினால் பூட்டிட்டிருந்தான்.

இப்போது அவளாகவே அவனது தீண்டலில் மயங்கி அவனிற்கு உடன்பட ஆரம்பித்திட,அதைக்கண்டு அவனது இதழ்கள் மெல்லியதாக புன்னகைத்தன.

அந்த தொடுதலில் அவள் முழுவதுமாக சிலிர்த்து அவனை அணைத்துக்கொள்ள,சில நிமிடங்களில் இருவரது ஆடைகளும் விடைப்பெற்றிட அந்த அலுவலக அறையில் ஒரு சிறப்பான காதல் கூடல் அரங்கேறியிருந்தது.

கூடல் முடிந்த களைப்பில் தன் நெஞ்சில் தலை சாய்த்தவளின் நெற்றியில் முத்தமிட்ட ரத்தினவேல் 
மெதுவாக அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அந்த ஒரு முத்தத்தில்…

ஒரு அரசியல்வாதியின் அதிகாரம் இல்லை.

ஒரு சிற்பியின் கலை இல்லை.

ஒரு ஓவியனின் கவி இல்லை…

ஒரு மெய் காதலனின் உயிர் மொத்தமும் அதில் அடங்கி இருந்தது.

அவர்களது அந்த அழகிய காதல் சங்கமத்தின் சாட்சியாய் தற்போது முகிழ்மதியின் வயிற்றில் ஏழு மாத கரு இருந்தது.
 

மற்ற இரு பெண்களை போலவே முகிழ்மதிக்கும் வெகு விமர்சையாக வளைக்காப்பு நடத்தப்பட்டன.

இதிலும் வீர் தன் உரிமையை விட்டு கொடுக்கவில்லை.

தன் தங்கைக்கான அனைத்தையும் அவனே முன் நின்று பார்த்து செய்தான்.

சந்திரமதியையே உயிராய் தாங்கியவன்,அவனது உயிரில் கலந்துப்போன ‘டாலை’ எளிதில் விட்டுவிடுவானா என்ன?

அவளிற்கும் அன்னையின் ஸ்தானத்தில் முன் நின்று எவ்வித சுணக்கமும் இல்லாமல் அனைத்தையும் செவ்வனே செய்தான்.

வளைக்காப்பு சிறப்பாக முடிந்ததும் தங்கையை தன்னோடு பிறந்தகத்திற்கு அழைத்து செல்ல அவன் விரும்ப “என் ஸ்டாரை எங்கியும் அனுப்ப முடியாது…நீ வேணும்னா இங்க வந்து தங்கி உன் தங்கச்சியைப் பார்த்துக்கோடா” என நண்பனிடம் உறுதியாக கூறிவிட்டான் ரத்தினவேல்.

அவனிற்கு தான் தங்கை என்றால் உயிராயிற்றே?

அதனால் தங்கையின் பேறு காலம் வரையிலும் அவர்களது வீட்டிற்கு அருகே ஒரு வீட்டை பார்த்துக்கொண்டு வந்து அவளை அருகிருந்து பாதுகாத்தான்.

அவன் அப்போதும் அவர்களது வீட்டில் வந்து தங்காததை கவனித்து “ரொம்பவும் ரோஷம் தான் என் மச்சானுக்கு” என ஜித்து நக்கல் செய்ய,ரத்தினவேலோ ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தான்.

அவன் நண்பனை பற்றி அறிந்ததினால் அவனை கட்டாயப்படுத்தவில்லை.

ஜித்து மற்றும் மதி இருவரின் குழந்தையான ஆதிரா மற்றும் தமி வீர் இருவரின் குழந்தையான விக்ரம் இருவருக்கும் மூன்று வயதாகிருந்தது.

மையாவிற்கு ஒரு வயதாகியிருந்தது.

விக்ரமிற்கு தனது தாய் மாமன்கள் என்றால் கொள்ளை இஷ்டம்…

அதேப்போல் ஆதிராவிற்கும் மையாவிற்கும் வீர் என்றால் கொள்ளை இஷ்டம்…

தாய் மாமன் உறவு என்பது ஒரு தாயின் அன்பிற்கு சமானம் அல்லவா?

அதனால் பிள்ளைகளின் மீது அலாதி அன்பை காட்டினார்கள் ஆண்கள் மூவரும்…

இதற்கிடையில் முகிழ்மதியையும் அவளின் வயிற்றில் வளரும் சிசுவையும் அருகே இருந்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தமியும் மதியும் ஏற்றுக்கொண்டார்கள்.

அவர்கள் இருவரையும் கண்ணும் கருத்துமாக முகிழ் பார்த்துக்கொண்டது போல் அவர்களும் அவளை பார்த்துக்கொண்டனர்.

ஜித்துவும் கூட சில நேரம் “அண்ணி கால் வலிக்குதா பிடிச்சு விடட்டுமா?வாங்க ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்…இன்னைக்கு எக்சைஸ் பண்ணீங்களா?” என அவளிடம் அக்கறையாக நடந்துக்கொள்வான்.

அவனது மாமனார் சொல்லவே தேவையில்லை…அவருக்கு மிகவும் பிடித்த மருமகளாகியிருந்தாள் அவள்.

அதனால் அவரும் கர்வம் பார்க்காமல் அவளது நலனில் அக்கறை எடுத்துக்கொள்வார்.

வானதி மற்றும் காஞ்சனா மாலாவிற்கு இங்கு எந்த வேலையும் இருக்காது.

ஏனெனில்,அனைவரும் அவ்வளவு கவனமாக முகிழ்மதியினை பார்த்துக்கொண்டனர்.

மற்ற குழந்தைகளை காட்டிலும் இவர்களது குழந்தையை எதிர்பார்த்து அனைவரும் ஆவலாக காத்திருந்தனர்.

அதற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன.

ஒன்று,ரத்தினவேல் அனைவருக்கும் முதன்மையானவன் என்பதால் அவனது வாரிசும் அவர்களுக்கு முதன்மையாய் தோன்றின.

இரண்டு,மற்ற பெண்களை காட்டிலும் முகிழ்மதி சிறிது மென்மையானவள்…அத்தோடு திருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து கருத்தரித்திருந்தாள்.

மூன்று,அவளின் வயிற்றில் வளருவது ஒன்றல்ல…இரட்டை குழந்தைகள்…அதனாலே அவளை இன்னும் அதிக கவனமாய் பார்த்திருந்தார்கள்.

மற்றவர்கள் அவளை தரையில் விடாமல் தாங்கும் போது ரத்தினவேல் பற்றி சொல்லவே தேவையில்லை.

இரவு நேரம்…

அறை முழுவதும் மங்கலான மஞ்சள் விளக்கு மட்டும் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

இரட்டை குழந்தைகளை சுமந்ததால் மிகவும் சோர்வாக இருந்த முகிழ்மதி, நீள்விரிக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள். அவளது ஒரு கை வயிற்றின் மீது இருந்தது.

எப்போதும் போல் அவள் அதிகம் பேசவில்லை.

ஆனால் ரத்தினவேல் அவளது ஒவ்வொரு சிறிய அசைவையும் கவனித்துக்கொண்டிருந்தான்.

“ஸ்டார்… முதுகு வலிக்குதா?” என அவளின் முகத்திலிருந்த வலியை கவனித்து கனிவுடன் கேட்டான்.

அவள் மெதுவாக ‘ஆம்’ என தலையசைத்தாள்.

உடனே அவன் அவளருகே அமர்ந்து மெதுவாக அவளின் முதுகை வருடிக்கொடுத்தான்.

“இப்படி அமைதியா எல்லா வலியையும் நீ மட்டும் தாங்கிக்காதடி…உனக்கு எங்க வலிச்சாலும் என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன்” என்று மிக மென்மையாக அவளை கடிய,முகிழ்மதி அவனை உணர்ச்சிப் பெருக்குடன் பார்த்தாள்.

அவனது கைகளின் வழியே தெரிந்த அக்கறை… அவளது கண்களில் நீரை வரவழைத்தது.

“ஏன் இப்போ அழறே?” என்று பதறியவன் உடனே அவளின் முகத்தை வருட,

அவளோ மெதுவாக அவன் தோளில் சாய்ந்துக்கொண்டு “உங்களோட இந்த அன்பை பார்க்கறப்போ உங்களை தவிர எனக்கு வேற எதுவுமே வேண்டாம்னு தோணுது மாமா…” என காதலோடு உருகிக்கரைய,அதைக்கேட்டு மெல்லியதாக சிரித்த ஆடவன் “சரி உனக்கு நான் மட்டும் போதும்…ஆனால் எனக்கு நீங்க மூணு பேரும் வேணும்டி ஸ்டார்” என அவளின் வயிற்றை மிருதுவாக தடவியப்படி கூறினான்.

அவனது தொடுகை அவளின் இதயத்தை சிலிர்க்க வைத்திட,அவள் இன்னும் அதிகமாய் அவனுள் புதைந்து விழி மூடினாள்.

மேலும் ஒரு மாதங்கள் உருண்டோடி இருந்தன‌.

சிவராமன் அனாதை பிணமாக மருத்துவமனையில் இறந்துக்கிடப்பதாக தகவல் வந்தது.

சந்திரமதிக்கு அவரை காண கூட சிறிதும் விருப்பமில்லை.

ஆனால் முகிழ்மதி தான் சிறிது இரக்கம் குணம் உள்ளவளாயிற்றே?

ஒரு தந்தைக்குரிய கடமை அவர் எதையும் நிறைவேற்றவில்லை என்றாலும்,ஒரு சகமனிதனாக அவருக்கு மதித்தளித்து அவரின் சடலத்தை அடக்கம் செய்துவிடும்படி கணவனிடம் உதவிக்கோரினாள்‌.

மனைவியின் வேண்டுக்கோளை அவன் என்று நிராகரித்திருக்கிறான்?

அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண் கேட்டு அவன் மறுப்பானா என்ன?

அவனிற்கு விருப்பமில்லை என்றாலும் கூட,தன்னவளிற்காக அதையும் செய்தான்.

பெண்களின் தகப்பன் இறந்தப்பிறகு பேத்திகளுக்கு 21 வயது வந்ததும் அமுதவாணன் அவர்களுக்கு சேரும் படி சில சொத்துக்களை எழுதி வைத்திருந்தார்.

அதனை பற்றி அவர்களது குடும்ப வழக்கறிஞர் உரைக்க பெண்கள் இருவரும் ஒருமித்த கருத்துடன் “எங்க அம்மாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கின அந்த குடும்ப சொத்திலிருந்து எங்களுக்கு ஒரு நய பைசா கூட வேணாம்…எல்லாத்தையும் டிரஸ்ட் ஆரம்பிச்சு நல்லக்காரியத்துக்கு பயன்படுத்துங்க…அதுப்போதும்” என்று விட்டிருந்தார்கள்.

அவர்களது கணவர்களுக்கு மனைவிகளின் இந்த முடிவை நினைத்து பெருமிதமாக இருந்தது.

அவர்களின் இந்த தெளிவு ஆண்களை அசரவும் வைத்தன.

முகிழ்மதிக்கு பிரவச நாளும் வந்திருந்தது.

முகிழ்மதி வலி தாங்கமாட்டாள் என அனைவரும் பயத்தில் காத்திருக்க,அனைவரின்‌ எண்ணத்தையும் பொய்யாக்கி தனது வலிகள் அத்தனையையும் தாங்கிக்கொண்டு கதறல் ஒலி சிறிதும் கசியாமல் இரண்டு ஆண் குழந்தைகளையும் பிரசவித்திருந்தாள் முகிழ்மதி.

ஆண் குழந்தைகள் இருவரும் அப்படியே ரத்தினவேலை உரித்து வைத்திருந்தார்கள்.

பலவீனமானவள் என்று கருதிய பெண்,அன்று அவள் எத்தகைய மன உறுதி படைத்தவள் என்று அனைவருக்கும் காட்டியிருந்தாள்.

அவளின் இந்த தீரம் கண்டு அனைவரும் பிரம்மித்தனர்.

வீரும் கூட தங்கையின் உறுதியை பார்த்து கண்கள் கலங்கிப்போனான்.

குழந்தை பிறந்த நொடியே வீர் ஒரு குழந்தையை ஏந்தியிருந்தான் என்றால்,மற்றொரு குழந்தையை காஞ்சனா மாலா ஏந்தியிருந்தார்.

ரத்தினவேலோ தன் உயிரானவளின் வலி உணர்ந்து அவளருகே அமர்ந்து அவளை கவனித்துக்கொண்டான்.

தன்னவனது காதலை கண்டு அவள் மெல்லியதாக இதழ்பிரித்து புன்னகைக்க,

“ஆர் யூ ஓகே?வலிக்குதாடி?” என்று இதயம் கசிய கேட்டவனின் குரல் இலேசாக கரகரத்தது.

அவளும் அவனது கரம் பற்றி “நீங்க பக்கத்திலே இருக்கும் போது எனக்கு என்ன வலி மாமா இருக்கப்போகுது” என மெல்லியக்குரலில் உரைத்தவளை நேசத்துடன் நோக்கிய ரத்தினவேல் குனிந்து அவளின் நெற்றியில் முத்தம் பதித்தான்.

அவளோ “ஐய்யோ மாமா எல்லாரும் பார்க்கறாங்க” என வெட்கத்துடன் சுற்று நிற்பவர்களை கண்காட்சி சொல்ல,

“யாரு பார்த்தால் எனக்கு என்னடி?எனக்கு நீ தான் முக்கியம்” என தீர்க்கமாக மொழிந்தவனின் பேச்சை கேட்டு “ம்க்கும்…நாங்களும் இங்க தான் இருக்கு பேராண்டி” என பாட்டி உரைக்க,

சட்டென பாவையவளின் முகம் சிவந்துவிட்டது.

அவனோ “இன்னும் நீங்கயெல்லாம் வெளிய போகலையா?” என அவரை நோக்கி திரும்பாமலே கேட்க,

உடனே ஜித்துவோ “டான் இந்த அவமானம் உங்களுக்கு தேவையா?” என இதழ்கடித்து சிரிக்க,

“டேய்…டேய் நீ குழந்தை பெத்தப்ப பண்ண அலப்பறைய விட இது எவ்வளவோ பரவாயில்லைடா…ஹாஸ்பெட்டலே அழுது புரண்டது…பொண்டாட்டி விட்டு நகராமல் கூடவே இருந்து எங்களை இம்சை பண்ணது?அவனாச்சும் வெளிய தான் போக சொன்னான்…நீ என்னடானா எங்க எல்லாரையும் பிடிச்சு வெளிய தள்ளி கதவை சாத்திட்டே…அதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என எள்ளலாக பாட்டி பதில் கேள்வி கேட்க,

அவனோ “ஹிஹிஹி அதெல்லாம் இப்போ எதுக்கு பாட்டி?” என அசடு வழிய கழுத்தை வருடியப்படி மனைவியை பார்க்க,அவளோ சங்கடமாக வேறுப்புறம் திரும்பியிருந்தாள்.

அதற்குள் ரத்தினவேல் தொண்டையை செருமியதும் ”சரி…சரி வாங்க…அண்ணா அடிச்சு துரத்தற முன்னாடி நாம்ப குட்டிபசங்களோட வெளிய போயிடலாம்” என அவரை தள்ளிக்கொண்டு வெளியே சென்றான்.

அவர்களை தொடர்ந்து ஏனையவர்களும் சிரித்தப்படி அறையிலிருந்து வெளியேறினார்கள்.

ரத்தினவேலோ தன்னவளை “ஸ்டார்” என்றழைத்து காதலோடு பார்த்திருந்தான்.

அவளும் அவனிற்கு சளைக்காமல் பதில் பார்வை பார்த்திருந்தாள்.

அவனின் பெயரை உலகம்
ஆயிரம் முறை உச்சரித்திருந்தாலும்…

அவனின் இதயம் மட்டும்
ஒரே ஒரு பெயரைத் தான்
மௌனமாக ஜெபித்தது…

“ஸ்டார்…”

சிற்பங்களில் உயிர் ஊட்டிய
அந்த கலைஞன் கூட,

தன் உயிரின் வடிவத்தை
அவளிடமே திருடிக்கொண்டான்…

உலகம் ரசித்த “ஸ்டார்”
ஒரு மனிதனின் புகழல்ல…
ஒரு பெண்ணின் நினைவால்
பிறந்த காதலின் அடையாளம்…

அவளை பார்த்த கணமே
அவன் வாழ்வு ஓவியமானது…

அவள் சிரித்த நொடியே
அவன் இருள் நிலவொளியானது…

“ஸ்டார்…” என்று அவன் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும்
அந்த பெயரில்
காதல் மட்டும் இல்லை…

அவன் முழு உயிரும் இருந்தது…

மக்கள் கண்களில்
அவன் ஒரு தலைவன்…

கலை உலகத்தில்
அவன் ஒரு அதிசயம்…

ஆனால் அவள் கண்களில் மட்டும்
இன்னும் காதலுக்காக
தவிக்கும் மூர்க்கன் தான் அவன்…

அவனது கண்களில் அந்த மூர்க்கனை மயக்கும் முகிழ்மதி அவள் தான்…

அவனது “ஸ்டார்”.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top