பல வருடங்களுக்கு பிறகு,
ரத்தினவேல் ரகுநாத பூபதி தேர்தலில் வேட்பாளராக நின்று வெற்றிப்பெற்றிருந்தான்.
அவனிற்கு தற்போது தலைமை ஏற்பதற்கு உரிய வயதும் தகுதியும் வந்துவிட்டதால் தந்தையின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வராக அன்று பதவி ஏற்க ஒப்புக்கொண்டான்.
அன்று அவன் பதவி ஏற்கப்போகும் தினம்,அந்த விழாவிற்கு செல்வதற்காக குடும்பமாக அனைவரும் தயாராகி கொண்டிருந்தார்கள்.
காஞ்சனா மாலாவிற்கு வயது தொண்ணூற்றை கடந்திருந்தது.
முன்பு போல் அவரால் ஓடியாட முடியவில்லை என்றாலும்,சக்கர நாற்காலியின் துணையுடன் விழாவிற்கு செல்ல தயாராகியிருந்தார்.
விஜயேந்திர பூபதி மற்றும் வானதி இருவருக்கும் வயதின் மூப்பு அவர்களது முகத்திலே தெரிந்தது.
அவரது கணவர் ஒரு வித பரபரப்புடன் இருப்பதை கவனித்து “ஏங்க இப்படி பரபரனு இருக்கீங்க?” என வானதி குழப்பமாக வினவ,
“பின்ன இன்னைக்கு என் பையன் தமிழ்நாட்டு அரியாசனத்திலே அமரப்போற நாளு…அவன்கிட்ட பல வருஷம் கெஞ்சிக் கூத்தாடி இப்போ தான் முதல்வரா பொறுப்பேத்துக்க சம்மதிச்சிருக்கான்…அப்போ எனக்கு சந்தோஷமா இருக்காதா வானு?” என படபடவென சிலாகித்து பேசிய கணவனை வித்தியாசமாக நோக்கினார் வானதி.
“உங்களுக்கு கஷ்டமா இல்லையாங்க?நீங்க நல்லாயிருக்கும் போதே பையனுக்கு எப்படி அவ்வளவு பெரிய பதவியை விட்டுக்கொடுக்கறீங்க?” என தனது நெருடலை வெளிப்படையாக கணவரிடம் கேட்க,
“அட என்ன வானு?எனக்கு இப்போ எழுபது வயசாக்கு மேலாகுது…எனக்கு தேவை மக்களுக்கு நல்லது நடக்கணும்…அவ்வளவு தான்…அதை நான் செஞ்சா என்ன?என் பையன் செஞ்சா என்ன?நம்மாளே முடியலைனு தெரிஞ்சா அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு விலகிப்போயிடணும்…அது தான் அரசியல் சித்தாந்தம்…அதை விட்டுட்டு பதவிக்காக நாம்ப அன் ஃபிட்டுன்னு தெரிஞ்சும் அந்த சீட்டை தேய்ச்சிட்டு இருக்கிறது நம்மையே மொத்தமா அதல பாதாளத்திலே தள்ளிவிடறதுக்கு சமானம்” என தெள்ள தெளிவாக எவ்வித கபடமும் இல்லாமல் விளக்கியவரை பிரம்மிப்புடன் நோக்கினார் வானதி.
தன்னையே மனைவி விழி அகற்றாமல் பார்த்திருப்பதை கண்டு “என்னடி எதுக்கு அப்படி பார்க்கிறே?” என்று கேட்டவர்,
“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க வானு…நீ இன்னமும் நம்ப பசங்களுக்கு அக்கா மாதிரி தான் இருக்கே…என்னை பாரு முடியெல்லாம் நரைச்சிடுச்சு…ஆனால் உனக்கு இப்போ தான் அங்க அங்க நரைப்பு வெளிய தெரியுது…உன் அழகோட இரகசியம் என்ன?” என காதலோடு குறும்பு பொங்க பேசி சிரிக்க,
அதில் வெட்கிப்போனவர் “ச்சீ போங்க…நம்ப பேரப்பிள்ளைங்களுக்கே பத்து வயசுக்கு மேலாகுது…இப்போ போய் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க…போங்க” என சிரித்தப்படி அவர் சொல்ல,அதைக்கண்டு விஜயேந்திரன் பெருங்குரலெடுத்து மீசையை முறுக்கி சிரித்தார்.
அச்சமயம் “தாத்தா பாட்டி ரெடியா?” என அழைத்துக்கொண்டே பேரப்பிள்ளைகள் ஐவரும் உள்ளே நுழைந்தனர்.
முதலில் உள்ளே நுழைந்தது அந்த வீட்டின் மூத்த வாரிசு ஆதிரா தான்…
அவள் அப்படியே தமயந்தியின் வார்ப்பு…அதிரடி சரவெடியான பெண்…
பதினொரு வயதாகியிருந்தது அவளிற்கு…
“தாத்தா பாட்டி ரெடியா?இல்லை நீங்களும் இந்த அப்பா அம்மா மாதிரி லவ்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களா?” என கலாட்டவாக கேட்டுக்கொண்டே வர,
விஜயேந்திரனோ “அப்படியே அத்தை மாதிரி வாயு…” என பேத்தியை கடிவது போல் மெச்சிக்கொண்டவர்,மனதிற்குள் பூரித்துப் போனார்.
அவருக்கு தான் மகள் என்றால் உயிராயிற்றே?
அதனால் பேத்தியும் அவருக்கு பயங்கர செல்லம்…
“ரெடியாகிட்டீங்களா நீங்க?” என பேத்தியிடம் பதில் கேள்வி எழுப்ப,
அதற்கு “நாங்கயெல்லாம் ரெடி தான் தாத்தா…இந்த அப்பாவும் அம்மாவும் தான் ரூமையே திறக்கலை” என பாவமாக கூறினாள் பத்து வயதை தொட்டிருந்த மையா.
“சரி விடுங்க…பங்க்ஷனுக்கு தான் நேரமிருக்கே…பொறுமையா வரட்டும்” என்று சொல்லியவர்,அவர்களின் பின்னோடு தத்தி தத்தி நடந்து வந்த சின்னஞ்சிறிய சிட்டுவை பார்த்து “அட என் தங்கம் தூங்கி எழுந்தாச்சா?பாப்பா எப்போ எழுந்தீங்க?” என வேகமாக முன் வந்து அந்த இரண்டு வயது குழந்தையை அப்படியே தூக்கிக்கொண்டார் வானதி.
அந்த குழந்தை வேறுயாருமல்ல…
ரத்தினவேல் முகிழ்மதி வெளியிட்ட புது வெளியீடு அவள்…
அவளின் பெயர் வெண்மதி…இவளும் முகிழ்மதியின் தோற்றம் மற்றும் குணத்தை உரித்து வைத்திருக்கும் அவர்களின் வாரிசு…
மையாவை போலவே வெண்மதியும் அமைதியான குழந்தை…
“பாத்தி பாப்பாவுக்கு திரஸ்…” என தனது வெற்றுடம்பை காட்டி திரும்பி தனது தமையனது கையிலிருந்த உடையைக் காட்டினாள்.
அப்போது தான் அவர்களின் பின்னோடு வந்திருந்த இரண்டு வசீகரமான ஆண் குழந்தைகளையே கவனித்தார்கள் முதியவர்கள்.
அந்த குடும்பத்தின் இரட்டை ஆண் வாரிசுகள்…
ரத்தினவேல் முகிழ்மதியின் குழந்தைகள்…
அவர்கள் இருவரும் இந்த வருடம் தான் ஒன்பது வயதை தொட்டிருந்தனர்.
இருவரது பெயரும் தேவேந்திர பூபதி மற்றும் நரேந்திர பூபதி ஆகும்.
தேவேந்திர பூபதி,ரத்தினவேலுவிடம் இருக்கும் கம்பீரமும் அழுத்தமும் பெற்றிருந்தான் என்றால், நரேந்திரன் ஜித்தேந்திரனிடம் இருக்கும் வசீகரமும் துறுதுறுப்பும் கொண்டு பிறந்திருந்தான்.
தோற்றத்தில் இருவரும் ஒன்று போல் இருந்த பேரன்களின் அழகை இமைக்காமல் மெய் மறந்து பார்த்த வானதியிடம் வந்த தேவேந்திரன் “பாட்டி பாப்பாவுக்கு டிரஸ் போட்டுவிட சொல்லி அப்பா சொன்னாரு…எனக்கு எப்படி இதை போடணும்னு தெரியலை…நீங்க போட்டு விடுங்க” என அழுத்தமாக உரைத்தப்படி அவளது உடையை அவரிடம் கொடுத்தான்.
அவனிற்கு இணையாக நடந்து வந்த நரேந்திரனோ “குட் மார்னிங் தாத்தா…குட் மார்னிங் பாட்டி” என ஆர்ப்பாட்டமாக சிரித்தப்படி வானதியை அணைத்து காலை வணக்கம் தெரிவிக்க,
“குட் மார்னிங் நரேன்…” என சிரித்துக்கொண்டே சொல்லி அவனை உச்சி முகூர்த்தவர் “நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா?” என அனைவரையும் பொதுவாக பார்த்தப்படி வினவினார்.
“எங்க?மொத்த பேரும் வந்து நாம்ப எல்லாம் சாப்பிட்டு பெரியப்பா பங்கஷனுக்கு போன மாதிரி தான்” என ஆதிரா பெருமூச்சுவிட,
“அக்கா அதெல்லாம் சரியான நேரத்துக்குப்போயிடலாம்..கவலைப்படாமல் இருங்க” என ஒன்பது வயது சிறுவனான தேவ் பெரியவளிற்கு ஆறுதல் கூறினான்.
அதேநேரம் “அடியே சப்ப மூக்கி அக்கா…இப்போ எதுக்கு இப்படி குதிச்சிட்டே கிடக்கே?பொறுமையா ரெடியாகிட்டு வரட்டுமே…உனக்கு பசிச்சா சாப்பிட்டு நேரா ஸ்டேடியத்திலே போய் உட்கார்ந்துக்கோ…நாங்க பொறுமையா வர்றோம்” என நக்கலாய் நரேன் பதில் சொல்ல,
“அடிங்க யாருடா சப்பை மூக்கி…அக்கானு மரியாதை இருக்கா?” என அவனை அடிக்க பாய,
அவனோ “உனக்கு சப்பை மூக்கி தானே…பிறகு வேற எப்படி கூப்பிடறது?” என நக்கலாய் கூறி பழிப்பு காட்டியப்படி அங்கிருந்து ஓட,
“அடேய் ஒழுங்கா நில்லுடா…நிக்கலைனா பெரியப்பாகிட்ட சொல்லிடுவேன்”
“பெரியப்பாகிட்ட சொல்லறதுனா சொல்லுக்கோ…நான் வீர் மாமாகிட்ட சொல்லுவேன்…”
“பெரியப்பா தான்டா பெரிய ஆளு…வீர் மாமா அவர் சொல்லற பேச்சை தான் கேட்பாரு”
“அப்படியெல்லாம் இல்லையே…வீர் மாமா சொல்லறது அம்மா கேட்பாங்க…அம்மா சொல்லறதை அப்பா கேட்பாரு…அப்போ யாரு இங்க பவுர்ஃபுல் வீர் மாமா தானே…” என கையை ஆட்டிக்காட்டி சிரிக்க,
அவளோ புசுபுசுவென மூச்சுவிட்டு அவனை முறைத்தாள்.
“ஷப்பா ஆரம்பிச்சிட்டாங்க…அடுத்த தமி ஜித்து இவங்க இரண்டு பேரும்” என மானசீகமாக தலையிலடித்துக்கொண்டார் விஜயேந்திரன்.
பிள்ளைகளை தன்னுடைய இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தது போல் பேரப்பிள்ளைகளை நடத்த முடியாது அல்லவா?
அதனால் “சரி சரி போதும் சண்டை போட்டது நீங்க வாங்க…பெரிய பாட்டிகூட நாம்ப போய் சாப்பிடலாம்…எனக்கும் பசிக்குது…அவங்க வரப்போ வரட்டும்” என பேரப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்றார்.
வானதியும் சிறியவளிற்கு அந்த கத்திரிப்பூ நிற பாவாடை சட்டையை அணிவித்து “அழகா இருக்கடி செல்லம்” என நெற்றி வழித்து முத்தமிட,அதில் வெட்கத்துடன் “ஹிஹி” என கிளுக்கி சிரித்தது குழந்தை.
பேத்தியின் பொக்கை வாய் சிரிப்பில் கொள்ளைப்போனவர் “அழகுடி” என மீண்டும் ஒரு முறை அவளின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு பேத்தியை உணவு மேசைக்கு அழைத்து சென்றார்.
ஜித்து மற்றும் சந்திரமதி அறை,
சந்திரமதி அவசர அவசரமாக குளித்துவிட்டு புடவைக்கட்டி தயாராகி கொண்டிருக்க,வழக்கம் போல் ஜித்து தன்னவளை தயாராக அனுமதிக்காமல் காதல் சேட்டை புரிந்துக்கொண்டிருந்தான்.
அவள் மடிப்பு எடுத்து சேலையை இடையில் சொருகினால்,அந்த குறும்புக் கண்ணனோ அவளின் வெண்ணிற இடையில் விளையாடி சொருகிய சேலையை எடுத்து வெளியில் விட்டுக்கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் கடுப்பாகிய சந்திரமதி “டேய் இப்போ நீ சும்மா இருக்கிலை…இன்னைக்கு நைட் வெளிய படுக்க வைச்சிடுவேன்” என பல்லை கடித்து சீறியதற்கு பிறகே அவன் சற்று அடங்கிப்போனான்.
“ரொம்ப தான் பண்ணறேடி…” என முணுமுணுத்துக்கொண்டே அவளருகே நின்று அவனும் தயாராக ஆரம்பித்திட,
அவளோ இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தப்படி “ஏதே நான் ரொம்ப பண்ணறானா?மனசாட்சி இருக்கா உனக்கு?காலையில் எழுந்திரிச்சதிலிருந்து இதோட மூணாவது தடவை நான் குளிச்சிட்டு வர்றேன்டா…எல்லாம் உன்னாலே தான்” என அவனது தோளிலே ஒரு அடி வைக்க,
அவனோ அசடுவழிய “ஹிஹி உன்னை பார்த்தாலே நான்…” என்ற வசனத்தை முடிப்பதற்கு முன்பே,
“நானா இல்லை…அதானே” என சிடுசிடுத்து “எனக்கு எல்லாம் தெரியும் போய் ஒழுங்கா பசங்களை முதல்ல பாருங்க…ஏழரை மணிக்கே ரெடியானாங்க…அவங்களை முதல்ல சாப்பிட வைச்சிட்டு நீங்களும் போய் சாப்பிடுங்க” என கணவனை அதட்டி போராடி வெளியே அனுப்பி வைத்தாள்.
ஆனால் அறையிலிருந்து வெளியேறும் முன்பு “இந்த பிங்க் கலர் புடவையிலே தேவதை மாதிரி இருக்க மூன்” என சரசமாய் மொழிந்தவன்,அவளிடமிருந்து ஒரு இதழ் முத்தத்தை பரிசாய் பெற்றுக்கொண்ட பிறகே கிளம்பியிருந்தான்.
‘இவரு இருக்காரே…இன்னும் மாறவே இல்லை…சரியான சேட்டைப்பிடிச்ச ஆளு’ என தலையாட்டி சிரித்துக்கொண்டே தயாராக ஆரம்பித்தாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள்,
ஆனால் அவனது மனைவியின் காதலும் மோகமும் திருமணமாகி பன்னிரெண்டு வருடங்கள் கடந்தும் சிறிதும் குறையவில்லை.
இப்போது சந்திரமதி ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் மேலாளராக பணியாற்றி கொண்டிருந்தாள்.
ஜித்தேந்திரனோ தொழில் துறையில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருந்தான்.
ஆயினும்,முதல் நாளில் தொடங்கிய அவளிற்கான தேடலை இன்று வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது.
இனியும் தொடரும் என்பதில் அவளிற்கு சிறிதும் ஐயமில்லை.
அவனது காதலும் காமமும் பெண்ணவளை இன்னும் அதிகமாய் அவனுள் உருக வைத்தது.
அவளின் மேல் உள்ள காதலில் ‘இனி தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம்’ என குடும்ப கட்டுப்பாடு செய்ய வைத்துவிட்டான்.
ஏனெனில்,ஒவ்வொரு முறையும் அவள் பிரசவ வலியில் துடிப்பதை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
குழந்தையை பிரசவிக்கும் நேரம் அவளுடன் அவனும் மறுபிறவி எடுத்து வந்தான்.
அதன்பொருட்டே,அவளின் வலி அறிந்து இத்தகைய நடவடிக்கையை பின்பற்றியிருந்தான்.
அவளிற்கு அதில் சிறிது வருத்தம் தோன்றினாலும் ‘சரி…முகிழ் குழந்தையும் நம்ப குழந்தை தானே’ என்றெண்ணி அவளது மகன்களை தன் மகன் போலே பாவித்து பாசம் காட்டினாள்.
அவர்களுக்குமே சந்திரமதி மற்றொரு அன்னை தான்!
அவளை “மதிம்மா” என்று அழைத்து செல்லம் கொஞ்சிவார்கள்.
ஆதிரா தன் பெற்றோரை திட்டினால் கூட ஆண்கள் இருவரும் அவர்களுக்கு ஆதரவாக குடிப்பிடிப்பார்கள்.
சற்று முன்பு நடந்த நிகழ்வை போல்…
சந்திரமதி இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லியதான கரை வைத்த சிறிய கட்டம் போட்ட பட்டுப்புடவை கட்டியிருக்க,முகிழ்மதியும் அதே வடிவமைப்பு கொண்ட அரக்கு நிற பட்டுப்புடவை கட்டி தயாராகியிருந்தாள்.
கண்ணாடி முன்பு நின்று தனது நீளமான கூந்தலில் பின்னலிட்டு அதில் மல்லிகை பூவை சூட்டிக்கொண்டிருந்தாள்.
கண்ணாடியில் தெரிந்த அவளது முகத்தில் முன்பிருந்த பதின்ம வயதிற்கான முகம் மறைந்து முப்பத்தி இரண்டு வயதிற்குரிய முதிர்ச்சி உருவாகியிருந்தது.
முகிழ்மதி தன் தாயை பின்பற்றி கல்லூரியில் கட்டிடக்கலை பேராசிரியராக பணிப்புரிந்துக் கொண்டிருக்கிறாள்.
அதனுடன் பகுதி நேரமாக இவர்களது கட்டிட வடிவமைப்பு தொழிலில் கட்டிடக்கலை நிபுணராகவும் இருக்கிறாள்.
அதேப்போல் ‘ஸ்டார்’ என்ற பெயரில் கணவன் எழுதிக்கொண்டிருந்த வலைப்பதிவில் அவளும் தனது கணவனுடன் இணைந்து கட்டிடக்கலையின் சிறப்பைப் பற்றி எழுத ஆரம்பித்திருந்தாள்.
தன்னுடைய படைப்புகளையும் கணவனது படைப்புகளையும் ஒன்றிணைந்து அவள் வெளியிட்டாள்.
அந்த ‘ஸ்டார்’ என்ற பெயருக்கு உரிய அடையாளமாய் முகிழ்மதியே முன்னிறுத்தப்பட்டாள்.
“மாமா இது முழுக்க முழுக்க உங்களோட உழைப்பு…நான் எப்படி இதை சொந்தம் கொண்டாட முடியும்” என தயங்கினாள்.
“இங்க பாரு முகிழ்…நான் ஏற்கனவே சொன்னது தான்…இந்த பெயருக்கு சொந்தக்காரி நீ தான்…இது உனக்கு தான் கிடைக்கணும்…இதை நான் என் பொண்டாட்டின்றதுக்காக விட்டுத்தரலை…உன்னோட திறமையை சமீப காலமாக நான் பார்த்திட்டு தான் இருக்கேன்…நீ என்னை விட இதை சிறப்பா செய்யறே…அதனாலே தான் இதை உன்கிட்ட ஒப்படைக்கிறேன்…நீ வெளியில் தெரிஞ்சால் தான் தேவகி அத்தையோட பெயரும் புகழும் என்னைக்கும் மறையாமல் தொடர்ந்து நீடிச்சிட்டே இருக்கும்…இதை என்னோட குருவுக்கு செய்யற மரியாதையா எடுத்துக்கோ” என தன்னவளிடம் சமயோசிதமாக பேசி அவளை சம்மதிக்க வைத்திருந்தான்.
ஆனால் அவளிற்கு இந்திய அரசாங்கம் விருது வழங்கிய சமயம் “இந்த ஸ்டார் என் ஒருத்தியுடைய படைப்பு மட்டுமில்லை…இதுக்கு பின்னாடி நிறைய பேரோட உழைப்பும் திறமையும் அடங்கியிருக்கு…முக்கியமா என் அம்மாவோட சிறந்த மாணவர் ஒருவருடைய பங்கு அதில் அதிமுக்கியமானது…அவர் மட்டும் எனக்கு நல் வழிக்கட்டலைனா இந்த விருது சாத்தியமே ஆகியிருக்காது…இந்த நேரத்தில் அவருக்கும் எனது அன்னையிற்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…இது அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம்” என வெளி உலகத்தினரிடம் கணவனது உழைப்பையும் திறமையையும் விட்டுக்கொடுக்காமல் பேசியிருந்தாள்.
கணவனே என்றாலும் அவன் இத்தனை வருடமாக சேர்த்து வைத்திருந்த நன்மதிப்பை தாம் மட்டுமாக எடுத்துக்கொள்வது சரியல்ல என்று அவளிற்கு தோன்றியது.
அதன் பொருட்டே,இதுவொரு குழுவுடைய வெற்றி என்பது போல் பேசிவிட்டு அவள் மேடையிலிருந்து இறங்கியிருந்தாள்.
தன்னவளின் இந்த பக்குவத்தையும் உயர்ந்த குணத்தையும் கண்ட ரத்தினவேலிற்கு அவளின் மீதான காதல் அதிகரித்தது.
அவள் வீட்டிற்கு வந்த நேரம் தன்னுடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அவளிடம் காட்டியதின் விளைவே வெண்மதியின் வருகை!
இப்போது தன் கணவன் முதல்வராக பதிவியேற்க போவதை பற்றிய சிலாகிப்புடன் அவள் தயாராகி கொண்டிருக்க,ரத்தினவேல் வெண்ணிற வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக தயாராக வந்தான்.
அவனை கண்ணாடியின் வழியே கண்டவளின் விழிகளில் ஒரு மயக்கம்!
அவனது கம்பீரமும் வசீகரமும் பெண்ணவளை அதிகமாய் ஈர்த்தது.
அவனை நினைத்து அவளிற்கு பெருமிதமாக இருந்தது.
மக்களில் பெருவாரியான வாக்குகள் பெற்று கணவன் வென்று இருப்பதில் அவளிற்கு எல்லையில்லாத மகிழ்ச்சி!
அதனால் மென்புன்னகை பூத்தப்படி “ரெடியாகிட்டீங்களா மாமா?” என கேட்டுக்கொண்டே அவள் திரும்ப,
அவனோ தனது மீசையை முறுக்கிவிட்டு “பார்த்தால் எப்படி தெரியுதுடி” என புருவம் உயர்த்தி கேட்டவனிற்கு தன்னவளின் பார்வை தன் ஆளுமையின் மேல் கர்வத்தை வரவழைத்தது.
அவளோ “எப்பவும் போலே ஹீரோ மாதிரி மாஸா இருக்கீங்க மாமா” என மூன்று விரலை காட்டி சொல்ல,அவனின் இதழ்களோ தாராளமாக விரிந்தன.
“நீ ரெடியா ஸ்டார்?” என கேட்டப்படி அவளருகே வர,
அவளோ “இதை மட்டும் வைச்சுவிட்டிட்டீங்கனா நான் ரெடி மாமா” என குங்குமச்சிமிழை அவனின் முன்பு நீட்டினாள்.
வருடங்கள் பல கடந்தும் கூட அவர்களுக்கு இடையேயான காதல் துளியும் குறையவில்லை.
ஒவ்வொரு சிறு செயலிலும் அவர்களது நேசம் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.
அவனும் சிரித்துக்கொண்டே அவள் நீட்டிய சிமிழியிலிருந்து குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைத்துவிட,அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.
அவள் ஒரு கணம் விழி மூடி திறக்க “யூ லுக்கிங் கார்ஜியஸ்டி” என்று கூறி குங்குமச்சிமிழை அருகில் வைத்துவிட்டு அவளின் நெற்றியில் மென்முத்தம் பதித்தான்.
அதில் மயங்கிய பெண்ணவளும் அவனது நெஞ்சில் சில நிமிடங்கள் விழி முடி நின்றுக் கொண்டாள்.
“உங்களை நினைச்சா எனக்கு பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு மாமா…அதுவும் உங்க மேலே மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கையை பார்க்கும் போது அப்படியே புல்லரிக்குது…அதிலும் உங்களை பெரும்பான்மையா ஜெயிக்க வைச்சுயிருக்கிறது எல்லாம் நினைக்கும் போதே…” என்றவளால் பேருவகையில் பேச்சே வரவில்லை.
இங்கு நடப்பது எதையும் நம்ப முடியாத பிரம்மிப்பில் அவள் இருந்தாள்.
தனக்காக அவள் அடையும் புளங்காகிதத்தை கண்டு அவனின் தேகமும் சிலிர்த்தன.
அதனால் அவளை தன்னோடு சேர்த்து புதைத்துக்கொண்ட ரத்தினவேல் மீண்டும் ஒரு முறை அவளின் நெற்றியில் முத்தமிட்டு “மக்கள் என் மேலே வைச்சிருக்கிற நம்பிக்கையை நான் என்றைக்கும் காப்பாத்துவேன் ஸ்டார்…அதே மாதிரி என் ஸ்டாரையும் என் குடும்பத்தையும் பெருமைப்படுத்திற மாதிரி கண்டிப்பா நான் ஒரு நல்ல முதலமைச்சரா இருப்பேன்டி” என தன்னவளிற்கு உறுதிமொழியும் அவன் கூற,அவனது பேச்சில் அவள் இன்னும் அதிகமாய் உருகிப்போனாள்.
“உங்க மேலே நம்பிக்கை இருக்கு மாமா” என உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லி அவனது தாடிகள் அடர்ந்த கன்னத்தில் முத்தமிட,ஆடவனவனோ எப்போதும் போல் அவளின் முத்தத்தில் மயங்கிப் போனான்.
அவனிற்குள் உணர்வுகள் தாறுமாறாக உருண்டோட ஆரம்பித்தாலும்,தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “சரி வா ஸ்டார்…நாம்ப கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு” என அவளின் கரம் பற்றி கீழே அழைத்து சென்றான்.
தங்க கொலுசுகள் சத்தமிட தன்னவனின் கரம் பற்றி நிமிர்வுடன் நடந்து கீழிறங்கி சென்றாள் முகிழ்மதி.
அவளின் முகத்திலும் அளவுக்கதிகமான காதலும்,கணவனால் உண்டான பெருமிதமும் நிறைந்து இருந்தன.
ரத்தினவேலை அங்கு கண்டதும் “பெரியப்பா” என அவனை ஓடி வந்து கட்டியணைத்துக்கொண்டாள் ஆதிரா.
அவள் அணைத்ததும் இதழ்பிரித்து புன்னகைத்த ரத்தினவேல் அவளை மென்மையாக அணைத்து விடுவித்தான்.
“பெரியப்பா அப்படியே படத்திலே வர்ற ஹீரோ மாதிரி இருக்கறீங்க…செம்ம கெத்தா…செம்ம ஹேண்ட்சமா…” என அவள் பாராட்டிக்கொண்டிருக்க,அவன் அனைத்தையும் சிறு புன்னகையுடன் பார்த்திருந்தானே ஒழிய எதுவும் பேசவில்லை.
“டேய் சின்னவனே…உன் பொண்ணு எதுக்கு பெரியவனுக்கு சாம்பிராணி போட்டுட்டு இருக்காள்” என தனது சிறிய பேரனிடம் காஞ்சனா மாலா கிசுகிசுக்க,
“ம்க்கும் அது இன்னைக்கு நேத்தா நடக்குது…தினமும் இதை தானே பார்க்கறோம்…அவ என் பொண்ணா அண்ணா பொண்ணானே தெரியலை…அண்ணாகிட்ட அவ காட்டறே ஓர்ஷிப்பிலே எங்க எல்லாரையும் மிஞ்சிடுவாள் போலே…” என புலம்புவது போல் தனது மகளை அவன் மெச்சிக்கொண்டான்.
அவன் கூறுவது நிஜம் தான்…ஆதிராவிற்கு ரத்தினவேலும் முகிழ்மதியும் தான் அவளது இலட்சிய நாயகர்கள்…
அதனால் அவள் அவர்கள் இருவருக்கும் பயங்கர செல்லம்…
முகிழ்மதி “ஆதிக்குட்டி சாப்பிட்டியா?” என அவளின் தலையை வருடியப்படி கேட்க,
“இல்லை முகிழ்மா…உங்களுக்காக தான் வெயிட்டிங்…வாங்க…எனக்கு வந்து ஊட்டி விடுங்க” என அவளிடம் சலுகையாக செல்லம் கொஞ்ச,
“சரி வா” என அவளை அழைத்து ஊட்டிவிட ஆரம்பித்தாள்.
“அம்மு நீ தான் அவளை ரொம்ப கெடுக்கிறே?ஏன்டி இவ்வளவு வயசாகுது…உனக்கு அவ தான் ஊட்டி விடணுமா?ஏன் உனக்கு கையில்லை…” என இருவரையும் சேர்த்து திட்ட,
“நீங்க கூட தான் மையாவுக்கும் வெண்மதிக்கும் ஊட்டிவிடறீங்க…நான் ஏதாவது கேட்கறானா?” என அவளிற்கு தக்கப்பதிலடி கொடுத்தாள் ஆதிரா.
அதைக்கேட்டு சந்திரமதி தனது மகளை முறைக்க “அட விடுக்கா...சின்னப்பிள்ளையை எதுக்கு எதுக்கு திட்டறே?” என முகிழ்மதியும் ஆதிராவிற்கு ஆதரவாக பேச,அவளோ “முகிழ்மானா முகிழ்மா தான்…என் செல்லம்” என அவளது கன்னம் கிள்ளி கொஞ்சி தாயிடம் பழிப்புக்காட்டினாள்.
“நீ தனியா வாடி…உனக்கு இருக்கு” என மிரட்ட,
உடனே “ம்க்கும்” என ரத்தினவேல் தொண்டையை செருமியதும் சந்திரமதி கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
ஆதிராவோ தாயை பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிக்க,சந்திரமதியோ திரும்பி தனது கணவனை முறைத்தாள்.
அவனோ ‘ஏங்கடி…அம்மாவும் மவளும் சண்டைப்போட்டுக்கிட்டிங்க…இப்போ இவ எதுக்கு என்னைய முறைக்கிறாள்…போச்சு நைட் என்னை வைச்சு செய்வாள் போல தெரியுதே’ என ஒரு வித பீதியுடன் அமர்ந்திருந்தான்.
அவன் திருதிருவென விழிப்பதை பார்த்துவிட்டு அவனருகே அமர்ந்திருந்த நரேந்திரனோ “சித்தப்ஸ் உங்க மூஞ்சி ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு” என கேலியாக கேட்க,
சட்டென அவனை திரும்பி முறைக்க “சரி…சரி கூல்டவுன்…மதிம்மாவை சமாளிக்க எனக்கிட்ட ஒரு ஐடியா இருக்கு” என்றான் சிறியவன்.
“என்னடா செல்லம் அது?”. கண்கள் மின்ன ஆர்வமாக அவன் கேட்க,
“பேசாமல் மதிம்மா காலிலே பட்டுனு விழுந்திடுங்க” என வந்த சிரிப்பை இதழ்கடித்து அடக்கியப்படி கூறியதும் அவனை நன்றாக முறைத்தான் ஜித்தேந்திரன்.
அவன் தாராளமாக இதழ்பிரித்து சிரிக்க “சிரிடா சிரி…எல்லாம் என் நேரம்…” என ஜித்து நொந்துக்கொள்ள,
“உஷ் சாப்பிடற நேரம் எதுக்கு பேசிட்டு இருக்கீங்க…அமைதியா சாப்பிடுங்க” என அதட்டியது வேறு யாருமில்ல தேவேந்திர பூபதி.
அப்படியே தந்தையின் கண்டிப்பு அவனிடம்!
அதைக்கேட்டு ஜித்தேந்திரன் “குட்டி பூபதி ஆர்டர் போட்டாரு…யாரு பேசாதீங்க” என வாயை கப்பென்று மூடிக்கொள்ள, அதைப்பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.
இவ்வாறு குடும்பமாய் கலகலப்பாக பேசி சிரித்தப்படி விழா நடைப்பெறும் இடத்திற்கு மகிழுந்தில் புறப்பட்டார்கள்.
அதேநேரம் வீர் தமயந்தி வீட்டில்,
“அம்மா அப்பா கதவை துறங்க…சீக்கிதம் வாங்க” என வீர் மற்றும் தமயந்தியின் ஐந்து வயது மகளான மதுமதி கதவை தட்டிக்கொண்டிருந்தாள்.
நண்பனின் நினைவாக விக்ரம் என்ற பெயர் சூட்டப்பட்டது என்றால்,
தங்கைகளின் ஞாபகத்தில் மதுமதி என தன் மகளிற்கு பெயர் மதி என்று முடியும் படி பெயர் சூட்டியிருந்தான்.
பெயருக்கு ஏற்றாற் போன்று அழகும் அறிவும் நிறைந்த பெண் குழந்தை அவள்..
அவளிற்கு ஐந்து வயது…
விக்ரம் பிரதாப்பிற்கு பதினொரு வயது…
வீர் தமயந்திக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று!
தங்கை கதவை தட்டிக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு “பார்பி இங்க வா…உனக்கு அண்ணா சாக்லேட் வாங்கி வைச்சிருக்கேன்” என அவளை அவ்விடமிருந்து அழைத்து சென்றிருந்தான் விக்ரம்.
தங்கைகளின் மீது பாசம் காட்டுவதில் வீர் மட்டுமல்ல…அவனது மகன் விக்ரமிற்கும் ஈடு இணை இல்லை.
அவளை தங்கமாய் தாங்கி பார்த்துக்கொள்வான் விக்ரம்.
அவளுமே “அண்ணா…எனக்கு இரண்டு சாக்கி வேணும்” என அவனது கழுத்தை காட்டிக்கொள்ள,
“நீ இந்த ஒரு இட்லி முழுசும் சாப்பிட்டால் அண்ணா உனக்கு இரண்டு சாக்லேட் தர்றேன்…இல்லை இரண்டும் எனக்கு தான் சரியா?” என தங்கையிடம் ஒப்பந்தம் போட்டு அவளிற்கு ஊட்டிவிட்டு தானும் காலை உணவை உண்ண ஆரம்பித்தான்.
வீரின் வளர்ப்பு ஒரு நாளும் சோடைப்போகாது…
தங்கையை மட்டுமில்லை…தனது பாட்டியிற்கும் தட்டில் உணவை போட்டு வைத்து “பாட்டி சாப்பிடுங்க” என்றான் அக்கறையாக.
இப்போது தேவகிக்கு நன்றாகவே குணமாகிவிட்டது.
முன்பு போல் ஆளுமையுடன் நடமாட வில்லை என்றாலும்,மற்றைய சாதாரணமாக மனிதர்கள் போல் பேசிப் பழகியிருந்தார்.
அதுவே பிள்ளைகள் மூவருக்கும் போதுமானதாக இருந்தது.
இரவில் வீரின் குழந்தைகள் அவருடன் தூங்கும் அளவு குழந்தைகளை மிக நன்றாக கவனித்தார் தேவகி.
“நீயும் சாப்பிடு விக்ரம்” என பேரனை தன்னருகே அமர்த்தி சாப்பிட வைத்தார்.
அவனும் அவர் கூறியதை கேட்டு நடக்க ஆரம்பித்தான்.
விஜயலட்சுமி தற்போது அவர்களுடன் தங்கவில்லை.
அவர்களை போன்ற பெண்களுக்காக இல்லம் ஒன்றை நிறுவி,அவற்றில் தலைவராக பொறுப்பேற்று திறம்பட நடந்தி வந்துக்கொண்டிருக்கிறார்.
அவருக்கு இந்த பொறுப்பை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் ஜித்துவும் சந்திரமதியும் தான்!
ஒரு நாள் அவரிடம் வந்த சந்திரமதி “விஜிம்மா ஒரு டிரஸ்ட் ஃபார்ம் பண்ணியிருக்கோம்…இனி அதை நீங்க தான் பொறுப்பா பார்த்துக்கப்போறீங்க” என அதிரடியாய் உரைக்க,
அவரோ திகைத்து “என்ன டிரஸ்ட் பாப்பா?” என ஒன்றும் புரியாமல் குழப்பமாக வினவ,
அவளோ சிரித்துக்கொண்டே அதைப்பற்றி எடுத்துரைக்க,
அவற்றினை கேட்டு இன்பமாய் அதிர்ந்தவர் “இவ்வளவு பெரிய பொறுப்பெல்லாம் வேணாம் பாப்பா…வேற யாராவது நல்லா படிச்சவங்களா பார்த்து ஒப்படைங்க” என அதிலிருந்து விடுப்பட முயற்சித்தார்.
அவரை செல்லமாக முறைத்தவள் “என்ன பார்த்துக்க தெரியாது…அதெல்லாம் உங்களால் முடியும்…
இன்னும் எத்தனை நாளைக்கு அம்மாவை பார்த்துக்கிட்டு வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கப்போறீங்க?இப்போ தான் அம்மா குணமாகிட்டாங்கயில்லை…இனி உங்களை மாதிரி பெண்களுக்கு வாழ்க்கையிலே முன்னேற உதவிப்பண்ணுங்க…எவ்வளோ பேரு வீட்டு ஆட்களால் கைவிடப்பட்டு என்ன செய்யறது?எங்க போறது?எப்படி படிக்கிறதுனு தெரியாமல் தவறான வழிக்குப் போறாங்க…அவங்களை இனி நல்வழிப்படுத்தி அவங்களுக்கான எதிர்காலத்தை நீங்க அமைச்சுக் கொடுக்கணும்…இது தான் உங்க வேலை விஜிம்மா…உங்களால் அது கண்டிப்பா முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு” என திடமாக கூறி அவரை ஊக்குவித்தாள் சந்திரமதி…
அவர்களை சகமனிதர்களாக மதிக்காத காலத்தில் அவர்களுக்கென ஒரு இல்லம் அமைத்து,அதனோடு ஒரு அறக்கட்டளையும் நிறுவி அவர்கள் வாழ வழி செய்துக்கொடுத்தவர்களின் நற்குணம் அவரை நெகிழ செய்தன.
அதேசமயம் அத்துணை பெரிய பொறுப்பை ஏற்க அவர் தடுமாற,
“விஜிம்மா உங்கிட்ட தைரியமும் தன்னம்பிக்கையும் நிறையவே இருக்கு…இதை வழிநடத்த அனுபவ அறிவிருந்தால் அதுவே போதும்…உங்ககிட்ட அந்த அறிவு நிறையவே இருக்கு…அதை
நீங்க சிறப்பா செய்வீங்கனு நம்பிக்கை இருக்கு…பிளீஸ் ஏத்துக்கோங்க” என ஜித்துவும் அவருக்கு நம்பிக்கை கொடுத்து வலியுறுத்த,
அவனை தொடர்ந்து ஏனைய நபர்களும் அதையே கூற,அவரும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டார்.
முதலில் தயக்கத்துடன் அதனை ஏற்றாலும் விஜயலட்சுமி தற்போது வெகு சிறப்பாக அதனை வழிநடத்தி கொண்டிருந்தார்.
அவரும் கூட தன் இல்லத்திற்கு விழாவிற்கு செல்ல புறப்பட்டுவிட்டார்.
இங்கு வீர் மற்றும் தமயந்தி இருவரும் கூட தயாராகி வெளி வந்தார்கள்.
தமயந்தி அன்று காலை எழவே வெகு தாதமாகியிருந்தது.
அவள் எழுவதற்கு முன்பே காலை உணவை சமைத்துவிட்டு குளிப்பதற்காக அவன் குளியலறைக்குள் சென்றான்.
பீச்சுக்குழாயிற்கு அடியில் ஆடைகளை களைந்துவிட்டு அவன் குளித்துக்கொண்டிருந்த சமயம் அவனது இடையை பின்னாலிருந்து ஒரு வளைவிக் கரம் சுற்றிக்கொண்டது.
வருடங்கள் பல கடந்தும் கூட தன்னவன் மேல் கொண்ட உன்மத்தம் பெருகிக்கொண்டே தான் சென்றது தமயந்திக்கு!
அவளின் கரம் ஆடவனது முரட்டு தேகத்தை தழுவியதும் வீரின் இதழ்கள் விரிந்தன.
அத்துடன் குழாயின் வழியே வழிந்த நீர் அவனது வெற்று முதுகில் உள்ள வல்லூறுவின் மீது பட்டு கீழே வழிந்தோடிக் கொண்டிருந்தன.
அதனை ரசித்த பெண்ணவள் அவளிற்கு மிகவும் பிடித்த அவனது பச்சைக்குத்தலுக்கு ஒரு முத்தத்தை பரிசளித்தாள்.
அவளின் இதழ்கள் ஒரு முத்தத்துடன் நின்றுவிடவில்லை.
அவனது பரந்து முதுகுப்பரப்பு முழுவதும் முத்த சஞ்சாரம் சென்றிட, தன்னவளின் செயலில் ஆடவனது தேகம் சிலிர்த்திட,அவனது விழிகள் மயங்கின.
“லட்டு” என அவனது இதழ்கள் தாபத்துடன் முணுமுணுத்திட,அவளோ இன்னும் அதிகமாக அவனை ஓட்டிக்கொள்ள,அவளின் வெற்று ஸ்பரிசம் மொத்தமும் அவனது உணர்ச்சிகளை தூண்டி விட்டன.
அதற்கு மேல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத வீர் வேகமாக திரும்பி தன்னவளை சுவற்றில் சாய்த்து அவளின் இதழில் முத்தமிட்டு,அவளை முழுவதுமாய் கொள்ளையிட தொடங்கியிருந்தான்.
அவனது இந்த ஆளுகைக்காகவே காத்திருந்தவளும் அவனிற்கு இன்பமாய் உடன்பட,அவர்கள் இருவரும் கூடல் கொண்டு குளித்துவிட்டு தயாராகி வெளிவருவதற்கு ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
வெளியில் வந்ததும் நேரே அன்னையிடம் தான் வந்து நின்றான் வீர்.
“சாப்பிட்டிங்களாம்மா?” என அக்கறையாக அன்னையிடம் கேட்க,
அவரோ “ம்…நானும் பிள்ளைங்களும் சாப்பிட்டோம்…நீயும் தமியும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றார்.
அவர் மற்றைய மனிதர்கள் போல் சாதாரணமாக உரையாடுவதை கேட்டு அவனது நெஞ்சம் நிறைந்தது.
அவனது பல வருட காத்திருப்பு ஒரு முடிவிற்கு வந்திருக்க,அவனிற்கு நிம்மதி பெருமூச்சு!
கூடவே,மகிழ்ச்சி…
அவரை குணமாக்குவதற்கு அவன் போராடிய நாட்கள் ஒன்றல்ல இரண்டல்ல…மொத்தமாய் இருபத்தைந்து வருடங்கள்!
இப்போது அவனது கனவெல்லாம் நிஜமாகியதும் அவனிற்கு சொல்லவே முடியாத சந்தோஷம்!
அதனால் அவரை ஒரு முறை அணைத்து விடுவித்த வீர் தன் இமையோரம் துளிர்த்த நீரை விரலால் சுண்டிவிட்டான்.
தன்னவனின் கண்ணீர் அறிந்து தமயந்தி அவனை ஆறுதலாக பற்றிக்கொள்ள,சட்டென சுதாரித்தான் வீர்.
“சரி நீங்க உட்காருங்கம்மா…சாப்பிட்டவுடனே நாம்ப கிளம்பலாம்” என சிரித்துக்கொண்டே கூறி,பிள்ளைகளிடம் அவன் திரும்பினான்.
“அப்பா…” என ஓடி வந்து மகள் அவனது மடியை நிறைத்துக்கொள்ள அவனும் “மது” என மெல்ல அழைத்து அவளை அணைத்துக்கொண்டான்.
“மகளை அப்புறம் கொஞ்சலாம்…முதல்ல சாப்பிடுங்க வீர்” என அதட்டி கணவனிற்கு பரிமாறினாள் தமயந்தி.
உடனே “அம்மா நீங்களும் உட்காருங்க…நான் பரிமாறுறேன்” என விக்ரம் வந்து அன்னையை அமர வைத்தான்.
புதல்வனது இந்த செயலில் அன்னையவளின் உள்ளம் உருகிப்போயின.
“என் செல்லம்டா நீ” என மகனை கொஞ்சிக்கொண்டே சாப்பிட்டு,ஒரு வழியாக குடும்ப சகிதமாய் விழாவிற்கு ஜீப்பில் வந்துச் சேர்ந்தார்கள்.
தமயந்தி இப்போது மகளிர் அணி தலைவியாக பொறுப்பேற்று அதனை வெகு சிறப்பாக செய்துக் கொண்டிருந்தாள்.
மாவட்ட செயலாளராக இம்முறையும் அவளது தொகுதியில் வென்றிருந்தாள்.
வீர் கடமை தவறாத தீரனாய் தனது நண்பனிற்கு உறுதுணையாய் இருக்கிறான்.
அவர்களிற்காக ரத்தினவேலுவை தவிர ஏனைய அனைவரும் வாசலில் காத்திருந்தார்கள்.
தேவகியை கண்டதும் “அம்மா” என சந்திரமதியும் முகிழ்மதியும் அவரை ஓடி வந்து அணைத்துக்கொள்ள,
இந்த புறம் தங்கள் பேரப்பிள்ளைகளை பெரியவர்கள் கொஞ்சினார்கள்.
சிறார்களுக்கு தான் இங்கு ஒரே கொண்டாட்டம்.
ஆதிராவோ “மாமா…” என ஓடி வந்து அவனை அணைத்துக்கொள்ள,
அவளை தொடர்ந்து அனைவரும் அவனை வந்து அணைத்துக்கொண்டார்கள்.
வீர் என்றால் பிள்ளைகள் அனைவருக்கும் இஷ்டம்…அதனால் பிள்ளைகள் அவனை மொய்த்துக்கொண்டார்கள்.
“வாடா என் மருமகனே” என விக்ரமை அணைத்த ஜித்து “அடியே என் குட்டி செல்லம்…மாமாவை பார்க்க வந்தியா?” என மதுமதியை தூக்கி சுத்தி நாசியோடு நாசி உரசிக்கொஞ்ச,
அவளோ “உன்ன பாக்க வல்லை…பிக் மாமா தேன் பாக்க வந்த” என மழலை மொழியில் கூறி அவனது மூக்கை உடைத்துவிட,
அதைக்கேட்ட காஞ்சனா மாலாவோ ”இந்த அவமானம் உனக்கு தேவையா பேராண்டி” என நக்கலாய் சிரிக்க,
அவனோ “டான் வேணாம்…” என அவரை முறைத்தவன் “சரி பெரிய மாமாவை தானே பாக்க வந்தே…அப்போ நான் உன் கூட டூ
..இனி உன் கூட நான் விளையாடவே மாட்டேன்…போ” என அவளை கீழே இறக்கிவிட செல்ல,
“நோ…நோ குட்டி மாமாவும் பிதிக்கும்…மாமா என் கூத விளையாது” என அவனது கழுத்தை இறுக்கமாக காட்டிக்கொள்ள,
“அப்படி வாடி வழிக்கு” என ஜித்து வசீகரமாய் புன்னகைக்க “மாமா ஐக்கீரிம்” என அவனது காதரோம் கிசுகிசுத்து கன்னத்தில் முத்தமிட,
‘அம்மா மாதிரியே சரியான காரியக்காரி’ என உள்ளுக்குள் அவன் திட்டினாலும் வெளியே “பங்க்ஷன் முடியட்டும்…நீயும் நானும் மட்டும் வெளிய போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்…உன் அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாள்…சரியா?” என ரகசியமாய் உரைக்க,
அதுவும் “ம்…ம்…” என கண்கள் விரிய தலையாட்டியது.
தூரத்திலிருந்து இதனை கவனித்த தமயந்தி “இரண்டு கூட்டு களவாணியும் என்ன திட்டம் போடுறீங்க?ஜித்து அண்ணா இவளுக்கு மட்டும் நீ ஐஸ்கிரீம் ஏதாவது வாங்கி கொடுத்தே செத்தே மவனே…சளிப்பிடிச்சு காய்ச்சல் வந்தால் என்னை படுத்தி எடுக்கிறாள்…அடங்காப்பிடாரி” என இருவரையும் எச்சரிக்க,
“அம்மா மாதிரி தானே பிள்ளையும் இருக்கும்” என ஜித்து பட்டென்று உண்மையை சொல்லிவிட,
“அடிங்க” என அவள் முன்னே வர,
விஜயேந்திரனோ “இந்தா ஆரம்பிச்சிட்டாங்க…முதல்ல வாங்க உள்ளப்போகலாம்…விழா ஆரம்பிச்சிடும்” என அனைவரையும் உள்ளே தள்ளிக்கொண்டு சென்றார்.
மொத்த குடும்பத்திற்கும் முன் வரிசையில் இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
ஆதிராவும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் “விக்ரம் இங்க வாடா” என அவனை தன்னருகே அமர்த்திக்கொண்டாள்.
அவளருகே மையாவும் விக்ரம் அருகே மற்ற இரு ஆண் பிள்ளைகளும் அமர்ந்துக்கொண்டனர்.
மதுமதி தனது மாமனின் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்துக்கொள்ள,
வெண்மதி அவளது தாய் மாமனான வீரின் மடியில் அமர்ந்துக்கொண்டாள்.
அவர்களுக்கு அருகே மனைவிமார்கள் அமர்ந்துக்கொண்டனர்.
வீரின் மற்றொரு புறம் முகிழ்மதியும் அவளின் தாயும்,அதற்கு அடுத்து விஜயேந்திரன்,வானதி மற்றும் காஞ்சனா மாலா என அனைவரும் இருந்தார்கள்.
விஜயலட்சுமி அப்போது தான் வேகமாக உள்ளே நுழைய “இப்போ தான் வந்தியா?சீக்கிரம் வா” என காஞ்சனா மாலா அவரை தன்னருகே அமர வைத்துக்கொண்டார்.
ஏனையவர்களும் அவரை குடும்பத்தில் ஒருவராய் நினைத்து நலம் விசாரிக்க அவரின் நெஞ்சம் நனைந்துப்போனது.
இப்போது விஜயலட்சுமி அந்த கட்சியில் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.
அதுவும் கூட ஊடகவியலாளர்களால் பெரிதாக பேசப்பட்டன.
பெரும்பாலும்,கடவுளின் அம்சம் உள்ள அந்த பெண்களை அருவருப்பாக எண்ணி ஒதுக்கக்கூடிய காலக்கட்டத்தில்,அவருக்கு சம உரிமை வழங்கி கட்சியில் இணைத்துவிட்டிருந்த ரத்தினவேலின் புகழை நாடெல்லாம் பேசினார்கள்.
அவனது இன்றைய வெற்றிக்கு காரணமும் ஆடவனது இந்த பண்பு தான் காரணம்!
தன்னை சார்ந்தவர்களை எப்போதும் அவன் ஏமாற்றியதில்லை.
நம்பிக்கையானவர்களை தன்னருகே வைத்துக் கொள்ளவே அவன் நினைப்பான்.
அதுவே அவனது வெற்றிக்கு முழுமுதற் காரணம்!
அனைவரும் ஆவலாக காத்திருந்த அந்தவொரு நிமிடம் வந்திருந்தது.

ரத்தினவேல் ரகுநாத பூபதிக்கு தற்போது வயது நாற்பத்தி மூன்று…
அந்த வயதிற்கு உரிய கம்பீரமும் ஆளுமையும் அவனிடம் இருந்ததே ஒழிய வயதின் மூப்பு சிறிதுமில்லை…
மேடையில் ஆளுநரின் அருகே நின்றிருந்த கணவனை காதல் மிதக்க கண்கள் கலங்கி முகிழ்மதி பார்த்திருக்க…
அந்நேரம் “ரத்தினவேல் ரகுநாத பூபதி எனும் நான்…” என அவன் சொல்லும் போது அங்கிருந்த அரங்கமே அதிர்ந்தன.
அவனது குடும்பத்திலுள்ள அனைவரின் மேனியும் ஒரு கணம் சிலிர்த்துப்போயின.
உறவுகள் அனைவரும் அவனை பெருமிதம் பொங்க பார்த்திருக்க,
ஆனால் அந்த மூர்க்கனின் விழிகள் மொத்தமும் தனது வாழ்வில் முழுமதியாய் வந்த முகிழ்மதியின் மேல் தான் வீற்றிருந்தது.
அவனிற்கு இணையான காதல் பார்வையுடன் அவளும் தன் வாழ்வை வசந்தமாக மாற்றியவனை கண்ணீர் திரையுடன் பார்த்திருந்தாள்.
அவன் குரல்
தமிழகத்தின் சுவர்களை அதிர வைத்திட,
அவன் இதயத்தை அதிர வைத்தது
என்னவோ…
அவளின் கலங்கிய விழிகள் தான்…
பதவியின் உச்சியில் நின்றாலும்
அவன் பார்வையின் சிம்மாசனம்
என்றும் அவளுக்கே சொந்தம்…
நாற்பத்தி மூன்றாம் வயதிலும்
நரை கூட தொடாத கம்பீரம் அவனுக்கு,
அவளை பார்க்கும் அந்த கண்களில் மட்டும்
இன்னும் அதே தீவிர காதல்…
மக்கள் முன் முதல்வனாய் நின்றவன்,
அவள் முன் மட்டும்
இன்னும் அதே முரட்டு காதலன் தான்…
அரசியல் வரலாற்றில்
அன்று ஒரு தலைவன் பதவி ஏற்றான்…
அதேவேளை அவளின் இதயத்தில்
மீண்டும்
ஒரு காதலன் பிறந்தான்.
**********முற்றும்********