சில நிமிடங்களுக்கு பின்பு,
தன்னை யாரோ கடத்தி சென்றிருப்பது தெரிந்தும் கூட சந்திரமதியின் முகத்தில் எள்ளளவும் அச்சமில்லை.
அவளின் கண்ணை கட்டியிருந்த துணியை வேகமாக அவிழ்த்தவன் “அடிப்பாவி என்னடி நீ?கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்திருக்கேன் நான்…உன் முகத்திலே கொஞ்சம் கூட பயமே இல்லை…” என ஜித்து வியப்புடன் கேட்க,
அவளோ “நீங்க தான் இந்த மாதிரி தேவையில்லாத வேலையெல்லாம் செய்வீங்கனு நல்லாவே தெரியும்…ஆமா எதுக்கு கடத்திட்டு வந்தீங்க?” என தெனாவெட்டாக கேட்டுக்கொண்டே சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.
“நல்லதுடி…நல்லது” என அலுப்பாக கழுத்தை நீவிக்கொண்ட ஜித்தேந்திரன் தன்னவளை அளவிட ஆரம்பித்தான்.
அதிகாலை எழுந்தவுடன் நலுங்கு வைக்க வேண்டும் என்பதற்காக சந்திரமதி இப்போது சேலையில் இருந்தாள்.
இளஞ்சிவப்பு நிற ஷிபான் புடவையில் பின்னலிட்ட கூந்தலில் மல்லிகை பூ வைத்திருந்தாள்.
காற்றில் மிதந்து வந்த அவள் பூவின் நறுமணம் ஒரு புறம் அவனின் நாசியை வருடி ஆடவனது உணர்வுகளை தட்டியெழுப்பின.
உடனே “மூன்” என மோகன புன்னகையுடன் அவளை அவன் அணைக்க வர,வேகமாக அவனது கைகளில் சிக்காமல் நகர்ந்து சென்றாள் அவள்.
அவன் ஏமாற்றத்துடன் அவளை திரும்பி ஏறிட “ஜித்து நாளைக்கு காலையிலே கல்யாணம் வைச்சிட்டு என்ன இது?யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?” என சுற்றுப்புறத்தை அலசி ஆராய்ந்தவாறே படபடப்பாக பேச,
அவனோ “யாரு என்ன நினைச்சா எனக்கு என்ன?என் பொண்டாட்டிய நான் கட்டிப்பிடிக்கிறேன்…இதிலென்ன இருக்கு” என மீண்டும் அவளை அவன் அணைக்க வர,அவளிற்கு வந்ததே கோபம்!
“ஜித்து நோ…” என அவள் தீர்க்கமாக மறுப்பு தெரிவித்ததும்,தன்னவளின் உணர்வுகளுக்கு மதிப்பு வழங்கி “சரி போ நான் கிட்டயே வரலை” என பாவமாக கூறி சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டான்.
அவனது பாவமான முகத்தை கண்டு மனமிறங்கினாலும் ‘மதி ஸ்டெடி…அவன் ஒரு ஏமாத்து கள்ளன்…மயங்கிடாதடி’ என தன்னை தானே எச்சரித்து “ஆமா இது என்ன இடம்?எதுக்கு என்னை இங்க கடத்திட்டு வந்திருக்கீங்க?” என மீண்டும் ஒரு முறை இருளில் அவ்விடத்தை ஆராய முற்பட,
அவனோ ஒரு பெருமூச்சுடன் “கட்டின பொண்டாட்டிய கடத்திட்டு வந்து பார்க்கற மாதிரி தான் இருக்கு என் தலையெழுத்து…இது நீங்க இருக்கிற பங்களாவோட மொட்டை மாடி தான்…வேற எங்கியும் உன்னை கடத்திட்டு போகலைம்மா” என்றான் ஒரு வித அலுப்புடன்…
அவனது சலிப்பை உணர்ந்த காரிகையவளோ “ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையாம்…அப்படியிருக்கு உங்க கதை…இன்னும் நாலு மணி நேரம் போனால் என்னை பார்க்கப்போறீங்க…அதுக்குள்ள என்ன அவசரம்?” என ஆயாசமாக கேட்டுக்கொண்டே அவள் மார்பிற்கு குறுக்கே கைகள் காட்டினாள்.
அவனோ பக்கவாட்டாக திரும்பி “அதுக்கு அப்புறம் உன்னை பார்க்க முடியும் தான் மூன்…பட் இப்படி இரகசியமா சந்திக்கிற மாதிரி அதிலே ஒரு த்ரில் கிடைக்காதுடி…அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது…காதலிச்சு பாரு அப்போ தான் இதோட அருமை தெரியும்” என அனுபவித்து கூறியவனின் விழிகளோ தன்னவளை தான் ரசனையுடன் வருடிக்கொண்டிருந்தன.
“அது சரி” என சிரிப்புடன் தலையாட்டிக்கொண்ட சந்திரமதி தலையுயர்த்தி வானத்தை நோக்கினாள்.
அவளிற்கா காதல் பற்றி ஒன்றும் தெரியாது?
அவனை போலவே அவளும் அவனை பிரிந்து வாடி தான் போயிருந்தாள்…
எப்போது நடந்தது எக்கணம் நிகழ்ந்தது என்று எதுவும் தெரியாது…ஆனால் அவனை அவள் நேசிக்க தொடங்கிவிட்டாள்.
மஞ்சள் கயிற்றின் மகிமையா அல்லது அதற்கு முன்பு அவனின் மீது அவளிற்கு இருந்த பிடித்தமா எதுவோ ஒன்று அவன் மேல் அவளிற்கு நேசம் வந்திருந்தது.
தன் குறும்புகளாலே பெண்ணின் மனதை வசீகரித்திருந்தான்,அந்த காதல் ஜித்தன்!
ஆனால் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு ஒரு தயக்கம் இருக்க,தன் மனதை மறைத்து வைத்திருந்தாள் கள்ளனுக்கேற்ற கள்ளியாய்!
வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை ரசித்திருந்தவளின் அருகே அவனும் வந்து நின்றுக்கொண்டான்.
உரசியும் உரசாத ஒரு நிலையில் அவன் வந்து நிற்க,அதுவே அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
ஆனாலும் அவனை அவள் விலக்க முற்படவில்லை.
இருள் சூழ்ந்திருந்த இரவு,இந்த ரகசிய சந்திப்பு,தங்களுக்கு பிடித்த நபரின் ஸ்பரிசம்,பூவின் நறுமணம் என அனைத்தும் ஒரு விதமான ஏகாந்த சூழ்நிலையை கொடுத்திருந்தன.
இருவருக்குள்ளும் மோகன உணர்வுகள் ஆட்கொண்டன.
வானத்தை பார்த்திருந்த ரதியவளின் இதழ்களில் புன் முறுவல் பூத்தன.
அச்சமயம் அங்கு நிலவிய அமைதியை களைக்கும் விதமாக “மூன் அழகாயிருக்கில்லைடி” என்று ஜித்து கேட்க,
அவளோ அவனை திரும்பி பாராமலே “அழகா தான் இருக்கு…பட் முழுநிலாவா இருந்தால் இன்னும் அழகா இருக்கும் ஜித்து” என்று உரைத்தாள்.
ஆனால் அவனோ “இல்லையே என் கண்ணுக்கு அது முழுநிலவா தானே தெரியுது…அதுவும் கண்ணுக்கு குளிர்ச்சியா?பளீச்சினு…அப்படியே அந்த நிலவை கடிச்சு சாப்பிடலாம் போலே…அவ்வளவு அழகு…” என அவனது குரலின் பேதமே அவளிற்கு விபரீதத்தை உணர்த்த விசுக்கென்று அவனை திரும்பி நோக்கினாள்.
அவள் எண்ணியது போலவே அவனது விழிகள் அவளின் அழகை தான் வஞ்சனையின்றி ரசித்திருந்தது.
அவன் இத்தனை நேரம் வர்ணித்தது முகிலில் குடியிருந்த நிலவை அல்ல…
அவனது நெஞ்சில் நிறைத்து வைத்திருந்த அவனது மதியை!
அதனை உணர்ந்து “ஜித்து…” என அவள் அதட்ட முயல,
அதுவரை உரசியும் உரசாமல் நின்றிருந்த ஆடவனோ வேகமாக அவளின் இடையில் கையிட்டு அவளை தன்னோடு சேர்த்து இறுக்கினான்.
அதில் அதிர்ச்சியுற்ற காரிகை அவனை தள்ள முற்பட,அதற்கு முன்பாகவே அவளின் விழியோடு விழி கலந்தவன் “என்னோட நிலவே நீ தான்டி…உன்னை தவிர வேற எந்த நிலவும் என் கண்ணுக்கு அழகா தெரியாதுடி” என காதல் கசிந்துருக பேசியவனின் சொற்களில் பாவையவள் மயங்கி விட்டாள்.
தன் கைவளைவில் மயங்கி நின்ற மனையாளின் நெற்றியை ஒற்றை விரலால் வருடி “மூன்றாம் பிறையாய் ஒரு நுதல்” என கிறக்கமாக மொழிந்தவனின் விரல் இப்போது அவளின் புருவத்தை மெல்ல வருடத் தொடங்கின.
அவனின் தீண்டலில் அவள் சிந்தை மறந்து கிறங்கி நிற்க,அவளின் இதயமோ அசுரவேகத்தில் படபடத்தன.
அவனோ தன்னில் உருகி நின்றவளின் புருவத்தை வருடியப்படியே “வானவில்லை வெட்டி வைத்த அழகான இரண்டு புருவங்கள்…நட்சத்திரம் போல் மின்னுக்கின்ற இரண்டு ஒளிரும் கண்கள்…” என சொல்லிக்கொண்டே கண்களை மிருதுவாய் வருட,அவளின் இமைகள் இப்போது தானாக மூடிக்கொண்டன.
அதனை கண்டு அவன் இதழ்கள் மோகத்துடன் விரிந்திட “மேகத்தை வைத்து செதுக்கிய பஞ்சுப்போன்ற இரண்டு கன்னம்…” என கன்னத்தை மென்மையாய் தீண்டியவனின் கரம் அவற்றினை செல்லமாய் கொஞ்சி கிள்ளின.
அதில் அவளின் இமைகளுக்குள் இருந்த கருவிழிகள் தவிப்பில் அலைப்பாய்ந்தன.
அடுத்ததாக அவனது விரல் நாசியை தீண்டிட “பிறை நுனியை போன்ற கூர்மையான நாசி…” என்று கவிப்பாடியவனின் விரல்கள் மெதுவாக கீழ்நோக்கி இறங்கிட,அவளின் இதழ் வழியே உஷ்ணப்பெருமூச்சு ஒன்று வெளியேறின.
ஏனெனில்,அடுத்ததாக அவன் விரல் தஞ்சம் புக இருந்த இடம் அறிந்து அவளின் உணர்வுகள் தாறுமாறாக ஓட தொடங்கின.
ஆடவனின் விரல்களோ இப்போது அவளின் வளைந்த இதழ்களை வருட தொடங்கிட,பாவையவளின் மேனி குப்பென்று சூடேறி சிவக்க ஆரம்பித்தன.
“வளர்பிறை நிலவின் வளைவுதான் உன் இதழ்கள்…புன்னகைக்கும் போது அது பௌர்ணமியாக மாறி என்னை மயக்கம் கொள்ள செய்கிறது” என்றவனின் விரல்களோ அவளின் இதழ்களில் இருந்து நகர மறுத்து அவ்விடத்திலே தவம் கிடந்தன.
அது அவளிற்குள் மேலும் அவஸ்தையை கொடுத்திட அவளின் கரங்கள் மேலெழுந்து அவனது சட்டை காலரை பற்றிக்கொண்டன.
“மொத்தத்தில் அந்த நிலவு கூட உன் அழகின் முன்பு தோற்று மயங்கி நிற்கும் நிலா பெண்ணே” என கவித்துவமாய் அவளின் வதனத்தை மதியோடு ஒப்பிட்ட ஆடவனின் வர்ணனையில் பெண்ணவளின் இதயம் அவன் காலடியில் வீழ்ந்துவிட்டிருந்தது.
அவனது ஒவ்வொரு உவமைக்கும் இணையாக அவன் விரல்களும் அவள் முகத்தில் சஞ்சாரம் சென்றது வேறு அவளை மொத்தமாய் குழைந்துப்போக செய்தன.
அவனின் விரல்கள் அவளின் இதழிலே இளைப்பாறி இருப்பதினால் உண்டாகிய தவிப்பான உணர்வில் காரிகையவள் துவள ஆரம்பித்தாள்.
“ஜி..த்து…” என உணர்ச்சிப் பெருக்குடன் அழைத்து அவனது சட்டையின் காலரை இறுகப்பற்றிக்கொண்டவளின் மேனியோ அவளை அறியாமல் அவனது சரீரத்தோடு ஒட்டிக்கொண்டன.
தன்னவளின் கிறக்கத்தை ரசித்துக்கொண்டிருந்த அந்த கள்ளனோ இறுதியாக அவளின் இதழ்கள் இரண்டும் தன் இணை தேடி நடுங்குவதை கண்டதும்,அதன் மேல் இரக்கம் கொண்டு தன் இதழ் கொண்டு அவளது இதழ்துடிப்பை அடக்க உத்தேசித்தான்.
அவளின் உணர்ச்சிகளை தூண்டி அவளை அடக்கியாளும் மாயத்தை அவன் கற்றுத்தேர்ந்திருந்தான்.
முன்பு,அவனை நெருங்க விடாமல் தள்ளிநிறுத்திய பெண்ணவளே இறுதியில் அவனது ஆளுமையின் கீழ் தோற்று அடங்கி நின்றிருந்தாள்.
அன்று போதையில் முத்தமிட்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் அவளின் இதழை முற்றுகையிட்டிருந்தான் அவன்.
போதையின் பிடியில் சிக்கியிருந்ததால் அவளின் இதழில் வன்மை கலந்த ஆலோபனை செய்து அவளை கலங்கடித்திருந்தான்.
இன்றோ முதலில் அவளின் கீழுதட்டை தனக்குள் உள்வாங்கிய ஆடவன் மெதுவாகவும் மென்மையாகவும் குறைந்த அழுத்தத்துடனும் அவளை முத்தமிட ஆரம்பித்தான்.
அவனது மென்முத்தத்தில் பாவையவளின் விழிகள் சொருகிட,அவளின் கரங்கள் ஆடவனின் கழுத்தை சுற்றி வளைத்தன.
ஆடவனும் அவளிற்கு ஏற்ற விதமாக சற்று குனிந்து அவளின் உதட்டை ரசித்து ருசித்து ஆற அமர சுவைத்தான்.
முதலில் கீழ் உதட்டை ரசித்து முத்தமிட்டது போல் அடுத்ததாக அவன் மேலுதட்டையும் உள்வாங்கி மென்மையாக முத்தமிட துவங்கினான்.
அவன் தந்த முத்தத்தில் மயங்கிய பெண்ணவளின் மேனியில் பல்வேறு மாற்றங்கள்!
அவளை அணைத்திருந்த ஆடவனின் கரங்களோ இப்போது அவளில் எல்லை மீறி சஞ்சாரம் மேற்கொண்டன.
தன்னை தீண்டவே கூடாது என்று விதிமுறை விதித்த பெண்ணவளோ அதன் கட்டுப்பாட்டை பற்றிய ஞாபகம் கூட இல்லாமல் அவனின் ஆளுகைக்கு கீழ் கட்டுப்பட்டு நின்றிருந்தாள்.
சில கணங்கள் கழித்து,ஆடவனின் இதழ்கள் மொத்தமாக அவளின் இதழை உள்வாங்கி இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டன.
இப்போது அவனிற்கு இணையாக அவளின் இதழ்களும் முத்தமிட,இருவரின் இதழ்களும் சிறிது சிறிதாக முத்தத்தின் தளத்திற்கு ஏற்ப அசைய ஆரம்பித்தன.
இதுவரை உதடுகள் மட்டுமே இணைந்து இயங்கிக்கொண்டிருக்க,அடுத்ததாக அவற்றில் அவர்களின் நாவும் சேர்ந்து செயல்பட்டன.
இதழோடு இதழ் சேர்த்த முத்தத்தோடு அவர்களது உமிழ்நீரும் கூட பகிரப்பட்டன.
தனக்குள் பரிமாறப்பட்ட காதலியின் எச்சில்களை உள்வாங்கிய ஆடவனிற்குள் பித்தம் சிறிது சிறிதாக அதிகரிக்க தொடங்கின.
வேகம் குறைவாக மிருதுவாக துவங்கிய இதழ் முத்தம் நேரம் செல்ல செல்ல வேகமாகவும் அதீத அழுத்தத்துடனும் வன்மையானதாகவும் உருமாற்றம் பெற்றன.
தன்னவளின் ஒத்துழைப்பும் அவளது ஸ்பரிசத்தின் மென்மையும் ஆடவனின் ஆண்மை நரம்புகளை முறுக்கேறி கிளர்ந்தெழ செய்திட,அவனின் இதழ்கள் அசுரவேகத்திற்கு இயங்க ஆரம்பித்தன.
தன் இதழ் என்னும் ஆயுதம் கொண்டு அவளின் இதழ்களுக்கு மோட்சம் கொடுக்கும் மார்க்கத்துடன் அவன் அவற்றை தாக்க ஆரம்பித்திருக்க,இறுதியில் அவன் இதழ்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு அவள் இதழ்கள் தத்தளித்தன.
மெதுவாக அவளின் உதடுகளை தொட்டு ஆரம்பித்த முத்தம்,நேரம் செல்ல செல்ல வன்முறை மொத்தத்தையும் உள்வாங்கி காதல் தீவிரவாத முத்தமாக மாறியிருந்தன.
அந்த தீவிரத்திற்கு முழுமுதற் காரணமானவன் அந்த காதல் தீவிரவாதி தான்!
அவர்களது முதல் முத்தத்தில் அவளின் இதழில் குருதி கசிந்தது என்றால்,இப்போது அவனது வன்முறை முத்தத்தில் அவளிற்கு தாடைகள் இரண்டும் வலிக்க தொடங்கின.
அதற்காக அவன் அவளிற்கு இடைவெளியே விடாமல் முத்தமிட்டானா என்று கேட்டால்,இல்லை …
அவளிற்கு ஆசுவாசமடைவதற்கு சில நொடி இடைவெளிவிட்டே அவளின் இதழை புசிக்க ஆரம்பித்தான்.
அதற்கே அவளது ஒட்டுமொத்த உயிரையும் உறிஞ்சி எடுப்பது போலான ஒரு வேகம் அவனுள்!
நீண்ட நெடிய முத்தம் அது!
குறைந்தது ஒரு இருபது முறையாவது அவளின் இதழை மொத்தமாக கொய்து முத்தமிட்டிருப்பான்.
ஒரு கட்டத்தில் அவளின் உதடுகள் இரண்டும் தீயாய் பற்றி எரிய “ஆ…” என வலியில் அலறி அவனை பிடித்துத் தள்ளியிருந்தாள்.
தன்னவளின் சிரமம் அறிந்து அவளிடமிருந்து விலகிய ஆடவனை நன்கு முறைத்தவள் “டேய் நீ என்னடா இப்படி முரட்டுத்தனமா கிஸ் பண்ணறே?விட்டால் என் உதட்டை பிச்சு எடுத்திடுவே போலே…ஸ்ஆ எரியுது என் உதடு…” என இதழை குவித்து ஊதிக்கொண்டே வலியில் கத்தினாள்.
அவளின் வலியை கண்டப்பிறகே அவனிற்கு தாம் வன்மையாக நடந்துக் கொண்டதே புரிய “சாரிடி” என பின்னங்கழுத்தை வருடியப்படி உரைக்க,
அதில் வெகுண்ட பெண்ணவளோ “என்னடா சாரி?அன்னைக்கு தான் போதையிலே ஏதோ உதட்டை கடிச்சு வைச்ச…அந்த காயம் ஆறவே எனக்கு மூணு நாள் ஆச்சு…இன்னைக்கு நல்லா தானேடா இருந்தே…இப்பவும் எதுக்கு இப்படி கடிச்சு வைச்சிருக்கே? வலிக்குது” என கோபத்தில் சிணுங்கிக்கொண்டே அவனை திட்ட,
அவனோ “சாரிடி உன்னை பார்த்தாலே என் ஃபீலிங்க்ஸ் ஓவர் ஃப்லோ ஆகிடுது…நான் என்ன செய்யறது?” என பரிதாபமாக விழிக்க,
அதைக்கேட்டு அவனை நன்கு முறைத்தவளோ “ஓவர் ஃப்லோ ஆகும்டா ஆகும்…இங்க பாரு எப்படி வீங்கிப்போச்சு…காலையிலே யாராவது என் உதட்டை பார்த்தால் என்ன நினைப்பாங்க?என் மானமே போச்சு” என வலியில் சுழித்தப்படி அவனை தாறுமாறாக திட்டினாள்.
அவளின் வருத்தம் கண்டு “சாரிடி மூன்” என அவன் மெதுவாக அவளருகே வர,
“கிட்ட வந்த மவனே கொன்னுடுவேன்டா…சுவர் ஏறி குதிச்சு தானே வந்தே…அப்படியே ஓடிரு…போ” என அவள் கடுப்புடன் விரல் நீட்டி எச்சரிக்க,
“கோபப்படாதே மூன்…காயம் எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு தான்” என தான் அவளை நெருங்க முயன்ற காரணம் உரைக்க,
“நீ இதுவரை பண்ணாதே போதும்…கிளம்புடா சாமி” என கையெடுத்து கும்பிட்டவள்,
சுர்ரென்று வலி ஒன்று உதட்டில் உருவாக “நீ எதுக்குடா முதல்ல வந்தே…என் உதட்டை கடிச்சு வைக்கவா…ஐய்யோ” என அப்போதும் ஆற்றாமையுடன் அவள் புலம்ப,
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஜித்து “ஏய் ரொம்ப ஓவரா பண்ணாதேடி…உன் உதட்டை பார்க்கலாம் வா…” என அவளின் கரம் பற்றி வெடுக்கென்று இழுக்க,
அவள் திமிற முயல “உஷ் மூன்…அமைதியா நில்லு” என அவளை அதட்டி நிற்க வைத்து காயத்தை ஆராய்ந்தான்.
அவளோ உம்மென்ற முகத்துடன் நின்றிருக்க “இலேசா தான்டி வீங்கியிருக்கு…காலையிலே லிப்ஸ்டிக் போட்டுக்கோ…யாருக்கும் எதுவும் தெரியாது” என காயம் ஆராய்ந்து அவன் அறிவுரை கூறியதும் அவள் அவனை ஏறிட்டு முறைத்தாள்.
அவனோ அவளின் நெற்றியில் தட்டி “எதுக்கெடுத்தாலும் உன் கோழி முட்டை கண்ணை போட்டு உருட்டாதேடி மூன்…நைட்டிலே பார்க்கும் போது கொள்ளி வாய் பிசாசு மாதிரியே இருக்கு” என வேண்டுமென்றே அவளை சீண்டி வம்பிழுக்க,
“ஏதே…” என அவள் பத்திரகாளியாய் மாற ஆரம்பித்ததும்,சட்டென குனிந்து அவளின் கழுத்தை பற்றி இதழில் மீண்டும் கவிதை எழுத தொடங்கியிருந்தான்.
முன்பு காயத்தை ஏற்படுத்தியவன் இம்முறை தன் உமிழ்நீர் கொண்டு அவளின் காயத்தை ஆற்றினான்.
முதலில் அவனிடமிருந்து விலக நினைத்த மங்கை அவனது மென்மை கலந்த இதமான முத்தம் தந்த சுகத்தில் விழி மூடி அதனை ஆழ்ந்து அனுபவிக்க தொடங்கினாள்.
எத்துணை நேரம் அந்த முத்த சமாதானம் நீடித்ததோ முதலில் அவளிடமிருந்து விலகினான் ஜித்தேந்திரன்.
அவன் அவளிடமிருந்து விலகியதும் அவள் மெதுவாக விழி திறக்க,அவனோ அவளின் விழியோடு விழி கலந்து “ஐ லவ் யூ டி பொண்டாட்டி” என உயிரை உருக்கும் குரலில் கூறியப்படியே அவளின் கழுத்தில் ஒரு சங்கிலியை அணிவிக்க ஆரம்பித்தான்.
அதனை சற்றும் எதிர்பாராத சந்திரமதி அதிர்ச்சியோடு குனிந்து அந்த சங்கிலியை பார்க்க,அவனோ அவளின் கழுத்தில் அந்த சங்கிலியை அணிவித்துவிட்டு விலகினான்.
மெல்லிய தங்க சங்கிலியில் கோர்த்திருந்த பிறை நிலா போன்ற வைர வடிவ பதக்கத்தை பார்த்தவளின் விழிகள் உவகையில் மின்னின.
உடனே அவள் விழி உயர்த்தி அவனை ஏறிட,அவளின் அகமுடையானோ மெல்லியதாக புன்னகைத்து “ரொம்ப நாளா உன்கிட்ட சரியா லவ் எக்ஸ்ப்ரஸ் பண்ணலைனு என் மனசு உறுத்திட்டே இருந்துச்சுடி…அதுக்காக என்ன செய்யலாம்னு யோசிட்டே இருந்தேன்…டக்குனு இந்த ஐடியா தோணுச்சு…நாளைக்கு ஊரறிய நீ என் பொண்டாட்டிய மாறுதுக்குள்ள உனக்கு முறைய புரொபோஸ் பண்ணி கிஃப்ட் கொடுக்கணும்னு தோணுச்சு…அதான் இந்த இரகசிய சந்திப்பு…உனக்கு இந்த செயின் பிடிச்சிருக்காடி?” என உள்ளம் குழையும் குரலில் அவளின் சங்கிலியைக் காட்டி அவன் கேட்க,
அவளிற்கோ ஆனந்தத்தில் கண்ணீரின் திரை விழிகளை மறைக்க ஆரம்பித்தன.
முதல் காதல் தோல்வியினால் காதல் என்றாலே கசந்துப்போய் இருந்த பெண்ணவளிற்கு இவனது காதல் ஒரு பொக்கிஷம்!
அவனது காதல் மட்டுமல்ல அவனே அவளிற்கு ஒரு புதையல் தான்!
காதலில் வலிகளை மட்டுமே அனுபவித்து குப்பையாய் தூக்கியெறியப்பட்டவளை இன்று அவன் கோபுரத்தில் ஏற்றி அவளின் பெண்மைக்கு மகுடம் சூட்டி அவளிற்குரிய மதிப்பை வழங்கியிருக்கிறான்.
தன்னுடைய கடந்த காலம் அறிந்தும் தன்னை வெறுத்து ஒதுக்காமல் தன்னையே இப்போது வரை உயிராய் நேசிப்பவனிற்கு அவளின் நேசத்தை தவிர அவள் வேறு என்ன தரமுடியும்?
தன் நடத்தையை புனிதப்படுத்திய அவனுடைய காதலுக்காக அவள் தன் நேசத்தை அவனது காலடியில் சமர்ப்பிக்க தயாராகிவிட்டாள்.
அதனால் விழிகள் கலங்க அவனை ஏறிட்ட காரிகையவளின் கண்ணீரை கண்ட ஜித்தேந்திரன் “ஹே என்னாச்சு எதுக்கு அழறேடி?” என வேகமாக அவளின் கன்னம் தாங்கி கண்ணீர் துடைக்க முயன்றான்.
தன் கன்னத்தை பற்றிய ஆடவனின் கரத்தின் மீது தன் கரம் வைத்து அழுத்தியவள் “பி…டிச்சிருக்கு ஜித்து…” என்றாள் விசும்பிக்கொண்டே…
அவன் கேட்ட கேள்விக்கு சிறிதும் தொடர்பின்றி பதில் கூறியவளை புரியாமல் நோக்கியவன் “என்னடி பிடிச்சிருக்கு?செயினா?” என அவன் அவளின் பதில் அறிய வினவ,
அவளோ ‘இல்லை..’ என தலையாட்ட,படீரென அவன் முகம் சுருங்கிவிட்டன.
ஆனால் அடுத்த கணமே “உ..ங்களை பிடிச்சிருக்கு ஜித்து” என தன் கரம் கொண்டு அவனை சுட்டிக்காட்டியதும் அவனின் விழிகளோ அதிர்ச்சியில் உறைந்தன.
அவளிடமிருந்து இப்படியொரு சொல்லை கேட்டுவிடுவதற்காக பல நாட்களாக அவன் தவமிருக்க,அவனது தவத்தின் வரம் அவனிற்கு கிடைத்ததும் அவனால் பதில் பேசவே முடியவில்லை…
அவன் மகிழ்ச்சியில் வாயடைத்துப்போனான்.
அவன் சிலையாகி சமைந்து நின்றது எல்லாம் ஒரே ஒரு கணம் தான்…அடுத்த கணமே அவனது குளிர் நிலவிற்கு மூச்சடைக்கும் வகையில் முத்தத்தாலே அவளின் முகத்தை குளிப்பாட்டியிருந்தான்.
தன்னவனின் ஆவேச தாக்குதலுக்கு உடன்பட்டு நின்றவளிற்கு மூச்சடைத்தன.
ஆயினும்,அவனிடமிருந்து அவள் விலக முற்படவில்லை.
மாறாக,ஆக்ரோஷ முத்த மாரி பொழிந்தவனின் கன்னம் பற்றி அவன் இதழில் அவள் ஆழ்ந்து முத்தமிட தொடங்கியிருந்தாள்.
அந்த முத்தத்தில் தன் உயிர் காதலை எல்லாம் ஒன்று திரட்டி அவள் அச்சாரம் வழங்கினாள்.
அவளின் அந்த ஒற்றை முத்தம் ஆடவனை அவளில் குழந்தையாய் குழைய வைத்திட,மகுடிக்கு மயங்கும் நாகமாய் அவளில் மயங்கிப்போனான் நாயகன்.

அடுத்த நாள் காலை முகூர்த்த நேரம்,
பத்து நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந்த ஜித்தேந்திரன் கிளம்பும் போது மணி இரண்டரையை தொட்டு விட்டிருந்தது.
அவனிற்கு அவளை பிரிந்து செல்லவே மனமில்லை…
ஆனால் இன்று நடப்பது அவர்களின் திருமணமாகிற்றே?
அதனால் எழுந்தவுடன் அனைவரும் அவர்களை தான் தேடுவார்கள் என்பதால் அவன் கிளம்ப வேண்டிய கட்டாயம்!
“சரி மூன்…இனி ஆட்கள் நம்மை தேட ஆரம்பிச்சிடுவாங்க…நான் கிளம்பறேன்…” என ஏக்க பெருமூச்சுடன் அவளின் நெற்றியில் முத்தமிட்டே வெளியேறியிருந்தான்.
அவளோ “பார்த்து பத்திரமா போங்க…சுவர் ஏறி குதிச்சு போகும் போது அடிப்பட்டிற போகுது” என அவனில் அக்கறை கொண்டு மொழிய,
அவனோ “உனக்கு உன் கவலையாடி?அதெல்லாம் கவலைப்படாதே…ஃப்ர்ஸ்ட் அட்டம்ட்டிலே டிவின்ஸ் பொறக்கிற அளவு எல்லாம் ஆக்ட்டிவா தான் இருக்கு…இன்னைக்கு நைட் நீயே பார்ப்பே” என இதழ்கடித்து விஷமத்துடன் சிரித்தப்படி கூற,
அவளோ “கருமம்…ஒழுங்கா ஓடிப்போயிடுடா…நான் என்ன சொன்னால் நீ என்ன சொல்லிட்டு இருக்க…முதல்ல கிளம்புடா” என கோபத்தோடு அவனை விரட்டிவிட்டாள்.
ஆனால் அவளின் மனமோ அவன் கூறியதை கற்பனை செய்து தனக்குள்ளே மகிழ்ந்துப்போனது தனிக்கதை!
முகூர்த்த நேரம் புரோகிதர் ஒரு பக்கம் மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்க மணமேடையில் ஆண்மையின் இலக்கணத்துடன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தவனின் விழிகள் தன்னவளை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தது.
சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு சந்திரமதி கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டாள்.
அரச நீல நிறத்தில் நுணுக்கமான தங்க நிற பட்டு சரிகை வேலைப்பாடுகளுடன் பாரம்பரிய முறைப்படி வடிவமைக்கப்பட்ட பட்டுப்புடவை அணிந்து,அதற்கு ஏற்றாற் போன்று அதீத வேலைபாடுகள் கொண்ட மேல்சட்டை,சாமி உருவங்கள் பதித்த விலையுயர்ந்த தங்க ஆபரணங்கள் அணிந்து,திருமணத்திற்கே உரிய ஒப்பனையுடன் நிலவின் பிரகாசத்தோடு கோவிலுக்குள் அடியெடுத்து வைத்து வந்தாள் பதுமை பெண்ணவள்.
அந்த நகைகளோடு அவன் அன்று அணிவித்த சங்கிலியும் உடன் இருந்தது.
ஒப்பனை செய்யும் போது அதை கழட்டி விடும்படி ஒப்பனை பெண்கள் வலியுறுத்த “இல்லை அது இருக்கட்டும்” என அழுத்தமாக கூறிவிட்டாள்.
அவன் அணிவித்த சங்கிலியை கழட்ட அவளிற்கு விருப்பமில்லை.
அவள் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு அந்த சங்கிலியை விட பல மடங்கு அதிகம்…
ஆனால் அவளை பொறுத்து வரை அவன் அவளிற்கு அணிவித்த சங்கிலிக்கு உலகத்தில் மதிப்பே இல்லை…
அவளின் மீது அவன் வைத்த நேசத்தின் அடையாள சின்னம் அது…
அதற்கு அவன் கட்டிய மாங்கல்யம் கூட ஈடாகாது…
அதனால் அந்த சங்கிலியுடனே மணவறை வரை வந்திருந்தாள்.
ஜித்துவோ தன்னவளின் அழகில் சொக்கிப் போய் அமர்ந்திருந்தான்.
எந்த வித அலங்காரமும் இல்லாமலே அவளின் மீதிருந்து அவனால் விழிகளை அகற்ற முடியாது.
இப்போது கேட்கவே தேவையில்லை…
தேவலோகத்து ரதியை மீறிய பேரழகுடன் சர்வ அலங்காரத்தில் நடந்து வந்து அவனருகே அமர்ந்தவளை அவன் விழி அகற்றாமல் நோக்கினான்.
அவன் அருகே வந்து அவள் தலைகுனிந்து அமர்ந்தவுடன் “மூன் இந்த புடவையில் நீ செம்ம அழகா இருக்கடி…உன்னை பார்த்திட்டே இருக்கலாம் போலே இருக்குடி” என வழிசலாய் சொல்லிக்கொண்டே அவளையே அவன் இமைக்காமல் பார்த்திருக்க,அவனது விழி வீச்சும் பேச்சும் அவளின் முகத்தை நாணத்தில் சிவக்க வைக்க ‘டேய் கொஞ்சம் நேரம் சும்மா தான் இருடா’ என பாவையவளை உள்ளுக்குள் புலம்ப வைத்தது.
“டேய் அண்ணா வாயை கொஞ்சம் மூடு…உன்னோட முப்பத்தி இரண்டு பல்லும் தெரியுது…அடங்கு” என தமயந்தி அவனது மாலையை சரிசெய்தப்படி சகோதரனை கேலி செய்ய,அவன் அதையெல்லாம் கண்டுக்கொண்டால் தானே?
அவனின் விழிகள் மொத்தமும் அவளின் மீதே நிலைப்பெற்று இருக்க,அவனின் இதழ்களோ ஓயாமல் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தன.
அவர்களின் பின்னால் நின்றிருந்த தமயந்தியோ ஒரு கட்டத்தில் ‘மரகழண்டிருச்சு’ என புலம்பிக்கொண்டாள்.
அவளின் கரத்தில் வரைந்திருந்த மருதாணியை கவனித்த ஜித்து “இருட்டுலே நீ மெஹந்தி போட்டிருந்ததே தெரியலைடி..உன் கைக்கு மெஹந்தி அழகா இருக்கு…” என அவளை அணுஅணுவாக ரசித்தப்படி அவளின் அழகை வெளிப்படையாக பாராட்டிக்கொண்டிருக்க,அவளிற்கு தான் அது பெரும் அவஸ்தையாய் இருந்தது.
‘கடவுளே…இவன் என் மானத்தை வாங்கறான்’ என சங்கடமாக தலைக்குனிந்து அமர்ந்தவள்,அதன்பிறகு தலையை உயர்த்தவே இல்லை.
அவளது கழுத்தில் அவன் அணிவித்த தாலி இல்லாததை கண்டு “எங்கடி தாலி?” என திகைப்புடன் வினவ,
அவளோ “புது தாலி கட்டும் போது பழசு கழுத்திலே இருக்க வேணாம்னு ஆன்ட்டி கழட்டி கொடுக்க சொன்னாங்க?” என முணுமுணுக்க,
அவனோ ஏமாற்றமடைந்த முகத்துடன் “அது இப்போ எங்கே?” என விசாரிக்க,
“ஆன்ட்டி உண்டியிலே போட சொன்னாங்க…நான் தான் ஞாபகமா இருக்கட்டும்னு எடுத்து வைச்சிருக்கேன்…” என்று கூறி மனதை குளிர்வித்தாள்.
ஏனெனில்,அவளிற்கு முதன்முதலில் அணிவித்த தாலி அது…அவனிற்கு அது என்றும் தனிச்சிறப்பு!
அதில்லை என்றவுடன் அவனிற்கு கவலையாக இருந்தது.
இப்போது தன்னை போல் அவளும் எண்ணி அதனை எடுத்து பத்திரப்படுத்தி இருப்பதை அறிந்ததும் அவளின் மேல் எக்குத்தப்பாக காதல் பெருகிட “புத்திசாலி என் மூன்..லவ் யூ டி” என அவளை வெளிப்படையாய் பாராட்டியவனிற்கு அவளை முத்தமிட வேண்டும் போலே ஒரு உணர்வு!
அவளிற்கோ அவன் திடீரென்று காதலை கூறியதும் அவளின் விழிகள் விரிந்தன.
அவனிடம் அவள் எதுவும் பேச முடியாமல் திருதிருவென விழிக்க,
அவளின் சங்கடம் உணர்ந்து “டேய் பேராண்டி…தாலி கட்டின பிறகு அவ உன்கூட தான்டா வரப்போறாள்…செத்த நேரம் வாயை மூடேன்டா” என காஞ்சனா மாலா கூட அதட்டி பார்த்துவிட்டார்.
அவன் அடங்குவதாக தெரிவதில்லை.
தன்னவளிடம் ஓயாமல் பேசுவதோடு அவளையும் அவன் பேச்சில் இழுத்து பேசிக்கொண்டிருந்தான்.
“நான் எப்படி இருக்கேன்டி” என்று அவன் தன்னை காட்டி கேட்க,
அவளோ வந்ததிலிருந்து அவனை பார்க்கவே இல்லை…
எங்கு அவனை அவன் ரசிக்க விட்டால் தானே?
அவளிற்கு நேரம் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தால் அவள் எங்கனம் தன்னவனை ரசிப்பாள்?
மெதுவாக தலையுயர்த்தி அவனை அவள் விழியால் அளவிட்டாள்.
ஆறடி உயரத்தில் இலேசாக சவரம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் பட்டு வேட்டி சட்டையில் பேரழகனாய் அமர்ந்திருந்தவனை அவளின் விழிகளும் வஞ்சனையின்றி ரசித்தன.
அதிலும்,அவனது வசீகர புன்னகை அவளை சுண்டியிழுக்க ‘நீ அழகன்டா’ என விழிகள் மின்ன மனதிற்குள் கொஞ்சிக் கொண்டாள்.
அவனோ சிரித்தப்படி அவளின் காதோரம் குனிந்து “உன்னோட கம்பளீமெண்ட்டுக்கு தேங்க்ஸ்டி” என்றான் குறும்பாக…
அவளோ திகைப்பில் விழி விரிக்க “கண்ணை விரிக்காதேடி…அப்புறம் எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணிடுவேன்” என்றதும் அவளோ திடுக்கிட்டாள்.
‘கடவுளே இவன் சொன்னதை செஞ்சாலும் செஞ்சிடுவான்’ என அவசரமாக தலைக்குனிந்துக்கொண்ட மனையாளை பார்த்தவனின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.
அவனிற்கு தான் தன் மனையாளை வம்பிழுத்து சீண்டுவது என்றால் அலாதி பிரியமாயிற்றே?
அதன்பொருட்டே அவளை வம்பிழுத்து அவளின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தான்.
வீரும் முகிழ்மதியும் மட்டுமே அவனது அட்டகாசத்தை ரசித்திருந்தார்கள்.
அவர்களது வீட்டு தேவதைக்கு திருமணமாயிற்றே?
அதிலும் அவர்களுக்கு பிடித்தமான ஒரு நபருடன்…அதைவிட அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?
நொடியும் தங்கையை விட்டு அகலாத அவன் பார்வையே அவனின் நேசத்தை பறைச்சாற்ற ஒரு தமையனாக அவனிற்குள் மகிழ்ச்சியூற்று பெருக்கெடுத்தன.
தேவகி விஜயலட்சுமி இருவரும் கூட திருமணத்திற்கு வந்திருந்தனர்.
தேவகிக்கு ஓரளவு குணமாகியிருப்பதால் இப்போதெல்லாம் மனிதர்களை அறிந்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்திருந்தார்.
முகிழ்மதி தாயின் அருகே அவருக்கு துணையாக அவரை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
அவள் தன்னை கண்டுக்கொள்ளாமல் தாயுடன் நின்றிருந்தது ரத்தினவேலிற்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.
அன்று வீட்டிலிருந்து கிளம்பியவள் இப்போது வரை அவனிடம் வந்து சேர்ந்திருக்கவில்லை.
அவளை பிரிந்து அவன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க,அவளென்றால் எவ்வித கவலையுமின்றி மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு அவனிற்குள் கோபம் கொப்பளித்தது.
அவனே இங்கு கோபத்தில் இருக்க ஜித்தேந்திரன் தனது காதலியிடம் செய்யும் அட்டூழியத்தை பார்த்து கடுப்பாகியவன் “டேய் அமைதியா உட்காருடா” என குரலுயர்த்தி தம்பியை அதட்டியப்பிறகே ஜித்தேந்திரன் கப்பென்று வாயை மூடி அமைதியாக அமர்ந்தான்.
சந்திரமதிக்கு அதன்பிறகு தான் ஆசுவாசமாக இருந்தது.
ஓரக்கண்ணால் மனையாளின் நிம்மதி பெருமூச்சை கண்ட ஜித்தேந்திரன் ‘உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன்டி’ என கடுப்பாக எண்ணிக்கொண்டான்.
தமயந்தியும் கூட “சொல்லறவங்க சொன்னால் தான் அடங்குவான் போலே” என அவனை வசைப்பாடினாள்.
விஜயேந்திரன் இந்த திருமணத்தில் ஏதேனும் பிரச்சனைகளை கொண்டு வருவார் என நினைத்ததற்கு மாறாக அவர் மௌனமாக அனைத்திலும் கலந்துக்கொண்டார்.
மணமேடையில் அமர்ந்திருந்த சிறிய மகனின் முகத்திலிருந்த மலர்ச்சியை கண்டவர்,அவரையும் அறியாமல் ஆசுவாச பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.
ரோகிணியுடன் அவன் ஒரு நாளும் இதுப்போல் சந்தோஷமாக சிரித்து பேசியது கிடையாது என்பது புரிய,தன் கட்டாயத்தினால் அநியாயமாய் மகனின் மகிழ்ச்சியை அழித்திருப்போம் என்பது உறைத்தது.
விஜயேந்திரன் இயல்பில் கெட்டவரெல்லாம் இல்லை…சிறிது கௌரவம் பார்ப்பார்.
ஏனெனில்,சிறு வயதிலிருந்தே செல்வந்தர் வீட்டில் ஒற்றையாளாக பிறந்து வளர்ந்தவர் அவர்.
அதனால் சிறிது மிதப்புடனே வலம் வந்தார்.
ரத்தினவேல் முகிழ்மதியை திருமணம் செய்ததில் இருந்து அவர்களது கட்சியில் உள்ள பலரும் அவரின் காது படவே அவர்களை இளக்காரமாக பேசி விமர்சித்தார்கள்.
சில இடங்களில் அவரை மதிக்காமல் அவருக்கு எதிராக பேசவும் தொடங்கினார்கள்.
அது அவருக்கு ஒரு தலையிறக்கத்தை கொடுத்தன.
அதற்காகவே மற்ற இரு பிள்ளைகளின் திருமணம் வழியாக தன் மரியாதையை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடினார்.
மற்றவருக்காக…தன்னுடைய சுய கௌரவத்தை மீட்டெடுக்க போராடியவர் பிள்ளைகளின் சந்தோஷம் எதில் இருக்கிறது என்பதை கணிக்க மறந்துவிட்டார்.
தற்போது அவரின் கண்ணை மறைத்திருந்த திரை இலேசாக விலகியதும்,அவரால் அனைத்தையும் தெளிவாக காண முடிந்தது.
அவரின் கண்மூடித்தனமான பிடிவாதத்தால் அவர் தன் மனைவியை இழந்துவிட்டார்.
ஆம்,அவரது மனைவி அவருடன் பேசியே பல நாட்கள் ஆகின்றது.
ஒரு அன்னையாய் பிள்ளைகளிள் வாழ்வில் கணவர் விளையாடியதை சிறிதும் ஏற்க முடியவில்லை.
அத்தோடு சபையினர் அனைவரின் முன்பும் அவரை அவமதித்து பேசிய விதம் அவரின் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்தியிருந்தது.
தன் இல்லத்தரசி பேசாததற்கு பிறகே அவர் செய்திருக்கும் தவறின் வீரியம் புரிந்தது.
அதனோடு சேர்த்து பிள்ளைகளின் மதிப்பு,மரியாதையையும் இழந்து தனிமரமாய் நின்றிருப்பது புரிய அவரின் மனம் வலித்தது.
மகனின் முகத்தில் இருந்த மலர்ச்சி கண்டு அப்படியே தன் மகளை நோக்கினார்.
அவள் ஒப்புக்காக சிரித்தாளே தவிர,அவளின் சிரிப்பு கண்ணை எட்டவில்லை.
மெதுவாக,வீரை திரும்பி பார்க்க அவனது நிலையும் அதே தான்!
தங்கையின் திருமணம் கண்டு முழுமையாக மகிழ்ச்சியுற முடியாமல் அவனின் காதல் அவனது நெஞ்சை பாரமாய் அழுத்திக்கொண்டிருந்தது.
வீரின் விழிகளாவது அவ்வப்போது ஏக்கத்துடன் தமயந்தியின் மீது பதிந்தது.
ஆனால் அவளோ அவனை ஒரு தடவை கூட ஏறிட்டு காணவில்லை.
முன்பு அவன் அவளிற்காக ஏங்கி பின்னாலே வந்தாள்,இன்று அந்த நிலைமை அப்படியே தலைகீழ்!
அவளின் ஒற்றை பார்வைக்காக அவன் ஏங்கிக்கொண்டிருக்க,அவளோ அவனை அடியோடு விலக்கி நிறுத்தியிருந்தாள்.
காலம் மட்டுமே அவர்களது காதல் நிறைவேறுமா?இல்லையா என்பதற்கான விடையை கொடுக்க முடியும்.
இங்கு தாலியை அவன் கரத்தில் கொடுத்துவிட்ட புரொகிதர் “கெட்டி மேளம்…கெட்டி மேளம்” என கணீரென்று குரல் எழுப்பியதும், அவனும் தன் வாழ்வின் வரத்தை கைப்பற்றும் ஆரவாரத்துடன் அவளின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சையையும் இட்டு சந்திரமதியை முறையாக அனைவரின் ஆசிர்வாதத்துடன் தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.
சிறிய மகனின் திருமணத்தை கண்ணில் நீர் பொங்க பார்த்திருந்த வானதியை திரும்பி பார்த்த ரத்தினவேல் “என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா?” என உள்ளார்ந்த அர்த்தத்துடன் கேட்க,
“ஆமாப்பா…” என தலையசைத்தவரை அழுத்தமாக பார்த்த புதல்வன் “நீங்க எப்படிம்மா இந்த கள்ளக்கூட்டத்தோடு சேர்ந்தீங்க?” என தாடையை நீவியப்படி வினவ,
அவரோ “என்னப்பா சொல்லறே?ஒண்ணும் புரியலையே?” என குழப்பமாக மகனை ஏறிட,
அவனோ “உங்களுக்கு புரியலை…நான் நம்பிட்டேன்…” என ஒரு மார்க்கமாக தலையாட்டியவனின் விழிகள் அன்னையை அழுத்தமாக துளைத்தன.
அவருக்கோ அப்போதும் எதுவும் புரயவில்லை.
அவனை புருவம் சுருக்கி ஏறிட “சின்னப்பையனோட வாழ்க்கைய காப்பாத்த ரொம்ப போராடிட்டீங்க போலம்மா” என அவன் நக்கலாக கேட்டதற்கு பிறகே அவருக்கு அனைத்தும் புரிப்பட ‘ஆத்தி இவனுக்கு எப்படி தெரிஞ்சது?’ என பயத்துடன் மலங்க மலங்க விழித்தார் அவர்.