முகிழ்மதி 123(1)


 

 

திருமணம் முடிந்த கையோடு வீர் தமயந்தி தம்பதியினர் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள்‌.

தேவகியிடம் அட்சதை கொடுத்து “அம்மா இதை அண்ணா அண்ணி மேலே போட்டு வாழ்த்துங்க” என சந்திரமதி தாயின் கையில் கொடுக்க,

அவரோ மகள் கூறியதை ஏற்று தன் பாதம் தொட்டு பணிந்தவர்களை வாழ்த்தியிருந்தார்.

அன்னையின் ஆசிர்வாதம் கிட்டியதும் வீருக்கு அளப்பறியா ஆனந்தம்!

அதனால் தன் அன்னையை பூரிப்போடு அவன் பார்த்திருந்த வேளையில் “தமயந்தி பூபதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கம்மா” என காஞ்சனா மாலா சொல்ல,

தமயந்தியும் ரத்தினவேலின் காலில் விழப்போக “நான் விழவேணாமா பாட்டி?” என வீர் சந்தேகம் கேட்க, ரத்தினவேலோ நண்பனை யோசனையாக பார்த்தான்.

பாட்டியோ “நீ எப்படிப்பா விழ முடியும்?முகிழ் உன் தங்கச்சியாச்சே…நீ விழ தேவையில்லை” என்றார்.

ஆனால் அவனோ மறுப்பாக தலையசைத்து “பரவாயில்லை பாட்டி…என் தங்கச்சி காலில் விழறது எனக்கு ஒண்ணும் அவமானமில்லை…” என சிறிதும் ஆட்சேபணையின்றி கூறியவனை மற்றவர்கள் ஆச்சரியமாய் பார்த்திருந்தார்கள்.

உடனே ஜித்து “அப்போ நண்பன்” என தமையனை பார்த்தவாறு வினவ,

“என் நண்பன் காலிலே வாழ்க்கை முழுக்க கூட நான் விழுந்துக்கிடப்பேன் ஜித்து…பிகாஸ் அவன் என் நண்பன் மட்டுமில்லை…எங்க வீட்டு குலத்தெய்வமே அவன் தான்” என நண்பனை உணர்ச்சிகள் பொங்க நோக்கியவாறு உரைத்தவனின் குரலில் அப்படியொரு நெகிழ்வு!

அவன் கூறியதை கேட்டு ஒரு கணம் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டார்கள்.

ரத்தினவேலின் நெருங்கிய உறவுகளுக்கோ அவர்களது நட்பின் ஆழத்தை நினைக்கும் போதே மெய் சிலிர்த்தது.

இருவரும் அவர்களின் காலில் விழச் செல்ல முகிழ்மதி பதறிப்போய் பின்னடைய ரத்தினவேலோ நண்பன் விழுவதற்கு முன்பே அவனின் தோள் பற்றி இழுத்து அணைத்தான்.

“தெய்வம் அது இது சொன்னே அறைஞ்சிடுவேன் ராஸ்கல்…நான் எப்பவும் உன்னோட அதே பழைய நண்பன் தான்…புரியுதா?” என அவனின் முதுகை தட்டிக்கொடுத்து மொழிந்தவனின் குரலில் நெகிழ்ச்சி தாண்டவமாடியது.

அந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளை அனைவரும் இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருக்க,அவர்களது மனைவிமார்கள் காதல் பொங்க தனது கணவனை நோக்கியிருந்தார்கள்.

பின்பு அவர்களது தமையன் மற்றும் கணவனது அன்பின் ஆழம் பெண்கள் இருவரையும் பூரித்துப் போக செய்தன.

இப்படியாக தமயந்தி அனைவரின் ஆசியுடன் தன் மனதிற்கினியவனின் கரம் பற்றி புகுந்த வீடு செல்ல ஆயுத்தமாகினாள்.

உணர்ச்சிகள் நிறைந்த அவ்விடத்தை கலகலப்பாக்கும் பொருட்டு வீரின் கரங்களை பற்றிய ஜித்து “அண்ணா…” என ஆரம்பித்தவன்  “ப்ச் பழக்கத்தோஷம்” என சட்டென நாக்கை கடித்துக்கொண்டான்.

வீரோ அவனை புருவம் சுருக்கி காண,மற்றவர்களும் கூட அவனை பார்த்திருந்தார்கள்.

அவனோ தொண்டையை செருமி “வீர் மச்சான் எங்க வீட்டு கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்…அவளை நீங்க கண்கலங்காமல் பத்திரமா பார்த்துக்கோங்க…இது எங்களோட மிகப்பெரிய வேண்டுக்கோள் மச்சான்” என வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் பாணியில் பேச,

அவன் பேசியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்க,வீரும் கூட இணைந்து சிரித்தான்.

ஆனால் தமயந்தியோ “டேய் அண்ணா வேணாம்” என அவனை முறைக்க,சந்திரமதி ஒரு புறம் “ஏங்க ரொம்ப கேவலமா இருக்கு…முதல்ல உங்க நடிப்பை நிறுத்துங்க” என இதழை சுழித்துக் கடுப்பாக சொல்ல,

ஜித்துவோ “சரி விடு டி…உங்க அண்ணா பாசமலர் சிவாஜி மாதிரி பேச நினைச்சேன் எனக்கு தான் சரியா பர்ஃபார்ம் பண்ண வரலை…பேசாமல் நம்ப ஸ்டைல்லே போயிடுவோம்” என்றவன்,

“மச்சான் என் தங்கச்சிய நீங்க கண்கலங்காமல் பார்த்துப்பீங்கனு தெரியும்…அதனாலே அம்மாடி லட்டு…எங்க வீர் மச்சானை நீ கண்கலங்காமல் பார்த்துக்கோம்மா…தயவு செஞ்சு உன் சமையல் திறமைய காட்டறேன்னு அந்த பக்கம் மட்டும் போயிடாதே…அப்புறம் அவரை யாரு நினைச்சாலும் காப்பாத்த முடியாது” என்றதும் வீருக்கு அவள் சமைத்த கருகிய உணவு ஞாபகத்தில் எழ அவனையும் மீறி சத்தமாக சிரித்துவிட்டான்.

கணவன் சிரித்ததை கண்டு கடுப்பான தமயந்தி “வீர் உங்களுக்கு என்ன சிரிப்பு?வாயை மூடுங்க முதல்ல” என அவனின் கரத்தில் நறுக்கென்று கிள்ளியவள் அத்துடன் நிறுத்தாமல் “இன்னொருக்கா சிரிச்சீங்க…வீட்டுக்கு போனவுடனே ஒரு பாயாசத்தை போட்டிருவேன்…ஜாக்கிரதை” என அடிக்குரலில் அவள் மிரட்டியதும் அவனோ வாயை கப்பென்று மூடிக்கொண்டான்.

பின்பு அவள் சோறு சமைத்தாலே மகாமட்டமாக இருக்கும் இதில் பாயாசம் என்றால் சொல்லவே தேவையில்லை…

அதனால் அவன் வாயை மூடிவிட ‘அது’ என கெத்தாக அவனை பார்த்துவிட்டு தமையனின் புறம் திரும்பி “டேய் அண்ணா…நீ என்னடா ஓவரா பேசறே?என்கிட்ட வைச்சுக்காதே…அப்புறம் சேதாரம் உனக்கு தான்…” என அரட்டியவள் அவனருகே குனிந்து “காலேஜிலே நடந்ததையெல்லாம் மறந்திட்டியா அண்ணா?அந்த கிஸ் மேட்டரை அண்ணிக்கிட்ட சொல்லட்டுமா?” என இதழ்கடித்து சிரித்தவாறு முணுமுணுக்க,

அதைக்கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்த ஜித்துவோ “ஏ ஆத்தா பரதேவதை…இப்போ தான் காளியாத்தா கொஞ்சமா என் மேலே அருள் பாவிச்சிருக்கு…நீ எதையாவது சொல்லி கெடுத்து விட்டறாதேடி…முதல்ல கிளம்பும்மா நீ” என்று கெஞ்சி கையெடுத்து கும்பிட,

அவளோ “அது அந்த பயம் இருக்கட்டும்” என கெத்தாக தோளை குலுக்கி சொல்ல,

இடையில் சந்திரமதி வேறு “என்ன அண்ணி?” என ஆர்வமாக தமயந்தியைப் பார்க்க,

“என்னடா அண்ணா சொல்லட்டுமா?” என இதழ்கடித்து சிரித்தவாறு கண்சிமிட்டி தங்கை வினவ,

‘ஏய் வேணாம்டி’ என அவன் கண்ணசைத்து மறுக்க,

சட்டென சந்திரமதி அவன் புறம் திரும்பியதும் முகத்தை சகஜமாக வைத்துக்கொண்டு “அதெல்லாம் ஒண்ணுமில்லை மூன்…அவ சும்மா கலாய்க்கிறாள்” என அவனது வழக்கமான வசீகரப்புன்னகையை சிந்தி மனைவியை கவர்ந்திருந்தான்.

தமயந்தியோ ‘தப்பிச்சிடா மவனே’ என அவனை கண்டு நக்கலாக சிரிக்க,

அவனோ ‘சண்டாளி தங்கச்சினு ஒரு பிசாசு பொறந்திட்டு என்னை சாவடிக்குது…இவ வேற பார்க்கறாளே…சும்மா இருடி’ என உள்ளுக்குள் பதறிப் போய் கண்ணாலே ‘வேணாம்’ என தங்கையிடம் கண்சமிஞ்கை செய்தான்.

இவர்களின் இந்த செல்ல சண்டையை கண்டு “கல்யாணமாகி கூட இவங்க சண்டை தீராது போலே” என பெரியவர்கள் ஒரு புறம் அலுத்துக்கொண்டார்கள்‌.

வீரோ தன்னவள் செய்யும் அட்டாகாசத்தை மௌனமாய் ரசித்திருந்தான்.

ஆனால் அத்துணை நேரமாய் சண்டையிட்டு கொண்டிருந்த உடன்பிறப்புகள்,தமயந்தி அங்கிருந்து புறப்படும் நேரம் வந்ததும் “லட்டு” “அண்ணா” என அவர்கள் சிந்திய கண்ணீர் கடலில் மண்டபமே நிரம்பி வழியாத குறை தான்!

பார்ப்பவர்களுக்கு சற்று நேரம் முன்பு சண்டைப்போட்டவர்களா இவர்கள் என்று தான் தோன்றியது‌.

வெளியில் பெரிதாக பாசத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் ஜித்துவும் தமயந்தியும் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்கள் போல் தான்!

அதனால் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதை அறிந்ததும் அவர்களால் தாள முடியவில்லை‌.

அவன் நெஞ்சில் அவள் முகம் புதைத்து கண்ணீர் சிந்த,அவனோ அவளிற்கு மேலாக தாரை தாரையாக கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.

ஜித்து தான் இவ்வாறு என்றால் அவர்களது தகப்பன் ஒரு புறம் குலுங்கி குலுங்கி அழுதுக்கொண்டிருந்தார்.

அவ்வளவு பெரிய மனிதர் அழுவதை பார்த்த மற்றவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

விறைப்பாக சுற்றி திரியும் மனிதருக்கு பின்னால் இப்படியொரு முகமா என்றே அனைவருக்கும் தோன்றின.

மகளின் மேல் அப்படியொரு பாசம் அவருக்கு!

வீட்டு பெண்கள் இருவரும் கூட துணிச்சலாக நின்றிருந்தார்கள்.

ஆண்கள் மூவரும் தான் உடைந்துப்போயிருந்தார்கள்.

அவர்களது வீட்டு இளவரசி திருமணம் செய்துக்கொண்டு பிரிந்துச் செல்வதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.

இவர்கள் அனைவரும் அழுவதை பார்த்து முகிழ்மதி ஒரு பக்கம் அழ,ரத்தினவேலிற்கு அவளை சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது.

தமயந்தியோ தந்தை தாய் பாட்டி என ஒவ்வொருவராக கட்டியணைத்து கண்ணீரோடு விடைப்பெற,இறுதியாக தனது பெரிய அண்ணனிடம் வந்தாள்.

அவன் முன்பு வந்ததும் “அண்ணா…” என நா தழுதழுக்க அழைக்க,

“எதுக்கு இப்போ அழுகை?” என்று கேட்டவனின் குரல் இலேசாக கரகரத்தது இருந்தன.

தமயந்தி கண்ணீரோடு அவன் முன் நிற்பதை ஏற்க முடியாத ரத்தினவேலும் தங்கையை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,அவளோ அவனது மார்ப்பினில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ப்ச் தமி அழக்கூடாது…நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தானே கிடைச்சிருக்கு…உன்னோட அழுகையிலே வாழ்க்கையை தொடங்காமல் சந்தோஷமா வாழுடாம்மா” என அவளின் தோளை வருடி ஆறுதல் கூறினான்.

அவனிற்கும் துக்கம் தொண்டையை அடைத்தன.

ஆனால் அவற்றினை சரிச்செய்துக்கொண்டு பேசினான்.

இவையனைத்தும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்திருந்த சந்திரமதியோ தன்னருகே நின்றிருந்த தமையனிடம் “பாருங்கண்ணா நம்மளை பாசமலர் பாசமலர்னு மூணு பேரும் எப்படி கிண்டல் பண்ணுவாங்க…இப்போ பாருங்க…மிஸ்டர் ரைட் ஃபேமிலி குலுங்கி குலுங்கி அழறதை” என கிசுகிசுத்து கேலியாக சிரிக்க,

வீரும் அவளுடன் இணைந்து ”அதான் பாரும்மா…இனி நம்மளை இவங்க ஓட்டட்டும்…நாம்ப சேர்ந்து அவங்களை ஒரு கைப் பார்த்துக்கலாம்” என்றவனின் இதழிலும் ஒரு விரிவான புன்னகை!

இருவரும் மகிழுந்தில் ஏறியது தொடக்கம் அவை கிளம்பும் வரை தமயந்தி தனது குடும்பத்தினரை கண்ணீருடன் பார்த்திருக்க,அவர்களும் கூட அவளிற்கு பிரியா விடைக்கொடுத்தனர்.

கண்ணீருடன் வந்த மனையாளை வீர் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,அவளோ “வீர் அவங்க…” என சிறுப்பிள்ளை போல் விம்ம,

“அழக்கூடாதுடா லட்டு…என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீ என்னைக்கும் அவங்க பொண்ணு தான்…உனக்கு எப்போலாம் அவங்களை பார்க்கணும்னு தோணுதோ நீ போய் அவங்களை தாராளமா பார்த்திட்டு வா…இரண்டு நாள் இருக்கிறதினாலும் இருந்திட்டு வா…எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை” என தன்னவளின் துயரம் அறிந்து ஆறுதலாக பேசிய கணவனின் அன்பில் எப்போதும் போல் நெகிழ்ந்த மங்கையவள் “தே..ங்க்ஸ் வீர்” என தழுதழுப்புடன் கூறி அவனை அணைத்துக்கொண்டாள்.

அவனும் புன்னகை பூத்து அவளின் சென்னியில் மென்முத்தம் பதிக்க,அவளின் மேனி சிலிர்த்தது.

அவளிற்கு மட்டுமல்ல…அவளின் ஸ்பரிசம் அவனிற்குள்ளும் ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தன.

அவர்களின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டதும் தனித்து சென்ற ஜித்துவின் கண்ணீர் துடைக்க அவளின் மனைவி சந்திரமதி கிளம்பினாள் என்றால்,ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற எண்ணம் சிறிது மற்றவராய் அழுத கண்ணீர் வடித்த கணவரை சமாதானம் செய்ய வானதி புறப்பட்டார்.

ரத்தினவேலுவும் முகிழ்மதியும் வீரின் வீட்டிற்கு மணமக்களுடன் சென்றிருந்தார்கள்.

அவ்விடத்தில் தனித்து நின்ற காஞ்சனா மாலாவோ தனது பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தார்.

அந்நொடி அவரின் மனதில் இருந்த ஒரே ஒரு வேண்டுதல் ‘என் பிள்ளைங்க எல்லாம் சந்தோஷமா வாழணும் ஆண்டவா’ என்பது மட்டும் தான்!

ஒரு நிறைவான புன்னகை பெரியவரின் முகத்தில்!

முதலிரவு அறை,

புகுந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி விட்டு மீண்டும் தமயந்தியின் பிறந்தகத்திற்கே வந்துவிட்டார்கள்.

அங்கு சிறியவர்களை வழிநடத்தி செல்ல பெரியவர்கள் யாருமில்லை என்பதால் சடங்குகள் அனைத்தும் தமயந்தியின் வீட்டிலே நடைப்பெற்றது.

அவனது தாயும் விஜயலட்சுமியும் கூட இங்கு பூபதி இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்‌.

அதனால் வீர் எவ்வித கவலையும் இல்லாதவனாய் தன்னவளுடன் கூடல் கொள்ள காத்திருந்தான்.

இதுநாள் வரை தன்னவளை காதல் என்ற உணர்வுடன் மட்டுமே அணுகிய கண்ணியவான் அவன்.

முதன்முதலாய் அவனிற்குள் காதல் என்ற உணர்வை தாண்டி மோக உணர்வுகள் அவனிற்குள் முகிழ ஆரம்பித்தன.

அவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அறைக்குள் பால் சொம்புடன் தமயந்தி உள்ளே நுழைந்தாள்.

பச்சை நிற இலேசான கரை வைத்த புடவை உடுத்தி மிதமான அலங்காரத்தில் வந்த தன்னவளை கண்ட வீரின் விழிகள் அவளை வஞ்சனையின்றி ரசிக்க ஆரம்பித்தன.

அதனால் அவளறைக்குள் வந்ததும் அவளின் கையிலிருந்த பால் சொம்பை வாங்கி மேசையில் வைத்த வீர் “தமி…” என தாபத்தோடு அழைத்து அவளின் கன்னம் பற்றி நெற்றியில் இதழ் பதிக்க வர,

சட்டென அவன் இதழில் கைவைத்து தடுத்த தமயந்தி “ப்ச் முதல்ல நகருங்க வீர்” என அவனை தன்னிலிருந்து விலக்கினாள்.

அவனோ திகைப்புடன் “ஏன்டி?” என கவலையாக வினவ,

அவனை நன்றாக முறைத்த தமயந்தியோ “உங்க மேலே நான் இன்னும் கோபமா தான் இருக்கேன் வீர்…அதனாலே கிட்ட வராதீங்க” என்றாள் சிடுசிடுப்புடன்.

அவனிற்கு இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை…

அவர்களுக்குள் அனைத்து பிரச்சனைகளும் முடிவுற்றது என்று அவன் நினைத்திருக்க,அவள் இப்போதும் அவனின் மீது சினத்துடன் இருப்பதாக தெரிவித்ததும் அவன் குழம்பி விட்டான்.

“என்னடி இப்படி பேசறே?நமக்குள்ள இருக்கிற பிரச்சனைய தான் நாம்ப பேசி முடிச்சாச்சே…இப்போ மறுபடியும் என்னடி பிரச்சனை?” என ஆயாசமாக வினவ,

அவளோ ஒற்றை புருவம் உயர்த்தி “ஏதே பேசிமுடிச்சாச்சா?அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே…இன்னும் ஒரு பிரச்சனைய நீங்க என்கிட்ட பேசவே இல்லை…என் அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை விலக்கி வைக்க நினைச்சீங்கயில்லை…இப்போ கூட என் அண்ணா மட்டும் உங்ககிட்ட பேசலைனா சார் கடைசி வரை தனியா தானே இருப்பீங்க…இப்பவும் அதே மாதிரி தாடி வைச்சிட்டு பிரம்மசாரியாவே தனியா சுத்துங்க…எனக்கு தூக்கம் வருதுப்பா” என அலட்சியமாக கூறிக்கொண்டே கட்டிலை நோக்கி நடக்க,

அவளின் பேச்சை கேட்டு அதிர்ச்சியுற்ற வீரோ “ஏய் ஏய் லட்டு…லட்டு…நான் சொல்லறதை கேளுடி” என அவளை துரத்திக்கொண்டு பின்னால் செல்ல,அவளோ சிறிதும் மனம் இறங்காமல் போர்வையை இழுத்து போர்த்தி கட்டிலில் படுத்துவிட்டாள்.

அதற்கு மேல் அவனிற்கு ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை.

சில நிமிடங்கள் அவளின் பெயரை சொல்லி அழைத்துப் பார்த்த வீர் அவளிடம் சிறிதும் அசைவில்லை என்றவுடன்,நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினான்.

வேறுவழியின்றி அவனும் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் அவளருகே படுத்துவிட்டான்.

சில நிமிடங்களுக்கு பிறகு போர்வையை இலேசாக விலக்கி கணவனை திரும்பி ஏறிட,அவனோ கவலை சிறிதுமின்றி கண்மூடி உறங்கிக்கொண்டிருந்தான்.

அதனை கண்ட தமயந்தியோ ‘மூளை இருக்கா இந்த ஆளுக்கு…இப்பவும் என்னை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வோம்னு இல்லாமல் தூங்கறதை பாரு…புத்திக்கெட்ட மனுஷன்…இவரை வைச்சுக்கிட்டு நான் என்ன தான் செய்யறது?’ என வாய்விட்டு அவனை திட்டிக்கொண்டே இதழை சுழித்தப்படி திரும்பிப் படுத்தாள்.

அவனின் மீது அவளிற்கு கோபமெல்லாம் இல்லை…

இப்போதாவது தனக்காக தன் கூட்டை விட்டு வெளியில் வந்து பேசுவானா என்று பெண்ணவளின் நெஞ்சம் எதிர்பார்த்தது.

ஆனால் இப்போதும் அவன் தன்னிலை மாறாமல் அழுத்தமாக இருந்து தன்னை விட்டுக்கொடுத்ததும் அவளின் முகம் சுண்டிப்போனது.

‘என் மேலே இவருக்கு இவ்வளவு தான் காதலா?என் மேலே அவருக்கு ஆசையே இல்லையா?நான் வேணாமா அவருக்கு?’ என அவளின் மனதிற்குள் ஏதேதோ சிந்தனைகள் ஓடி அவளின் நெஞ்சில் காயத்தை உண்டாக்கின.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top