முகிழ்மதி 121(1)


 

 

திடீரென்று அவன் அணைத்து கொண்டதும் அவளிற்குள் சொல்ல முடியாத பல மாற்றங்கள்!

அவளை சுற்றியிருக்கும் உலகமெல்லாம் ஒரு கணம் அசையாமல் நின்றது போலான ஒரு உணர்வு!

அவளும் அவனும் மட்டுமான தனிமை!

முதலில் அவனிடமிருந்து விடுப்படவே அவள் தவித்தாள்.

ஆனால் அவனது பார்வையில் தெரிந்த தனக்கான ஏக்கமும் அவனது அழுத்தமான அணைப்பும் காரிகையை உருகிட வைத்தன.

அவனோ அவளை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டான்.

அந்த ஒரு கணம்….அவனது மனதில் நட்பு,பாசம்,விசுவாசம் என்று எந்த வகையான உணர்வுகளும் இல்லை…

அவளின் மீது அவன் வைத்திருக்கும் காதலும் அவளும் மட்டுமே இருந்தார்கள்…

அவனை போலவே சிறிதும் கலப்படமில்லாத அணைப்பு அது…

காதல் மட்டுமே நிறைந்திருந்தது அந்த அணைப்பில்…

அவனது சொல்லப்படாத அந்த காதல் அவனது அணைப்பின் மொழியாக வெளிப்பட்டன…

ஏனிந்த மாற்றம் அவனுள்…

எவ்வாறு நிகழ்ந்தது அவனுள் இந்த மாற்றம்…

இது எதுவுமே அவளிற்கு தேவையாய் இருக்கவில்லை…

அவனின் இந்த ஒற்றை அணைப்பு அவளிற்குள் ஓராயிரம் காதல் கவி பாடின.

அவனின் விழிகளோ அவளின் மீதான அவனது ஏக்கத்தை கதையாய் கூறின.

அவனது மொழியல்லாத நேசத்தில் உருகி கரைந்த பவித்திரமானவளிற்கு வேறு எதுவும் தேவையில்லை…

அவளின் தேடலுக்கான விடை அவளிற்கு கிடைத்துவிட்டது…அது போதும் அவளிற்கு!

அதனால் அவனின் முதுகில் கையிட்டு அணைத்துக்கொண்டவளின் முகத்தில் அப்படியொரு பரவசம்!

அவளின் கரங்கள் தன்னை அணைத்துக்கொண்டதும் ஆடவனின் முரட்டு தேகத்தில் ஒரு உற்சாக ஆர்ப்பரிப்பு!

அவளிற்கான அவனது தவிப்புகள் அனைத்தையும் அவளிடம் கொட்டி தீர்க்கும் விதமாக குனிந்து அவளின் நெற்றியில் அவன் முத்தமிட,பாவையவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கின.

எத்தனை நாள் எதிர்பார்ப்பு அது…

அவன் தன்னை முத்தமிட மாட்டானா?கட்டியணைக்க மாட்டானா? என அவளது பல நாளைய ஏக்கம் அனைத்தும் அன்று ஒரு நாளிலே நிகழ்ந்தன.

அவனிற்கு அந்த ஒற்றை முத்தமும் அவளின் அண்மையும் மட்டும் போதுமாக இருக்க,அவளை அணைத்துக்கொண்டு சில நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டான்.

அந்தவொரு நொடி பொழுது ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததுபோல் ஒரு ஆத்ம சந்தோஷத்தை கொடுத்தன.

காமம் என்ற உணர்வே இல்லாமல் அவர்களுள் நேசம் மட்டுமே முகிழ்ந்திருந்தன.

அவர்களது பிரிவின் வலி மொத்தத்தையும் அவர்களின் மௌனம் மட்டுமே விழுங்கின.

அந்த காதல் பறவைகளுக்கு வார்த்தைகள் எதுவும் தேவைப்படவில்லை…அந்த அணைப்பு மட்டும் அவர்களின் துயரை முழுவதும் துடைத்தெறிய போதுமானதாக இருந்தன.

அவர்களுக்கு இடையே நடந்த வலி நிறைந்த நிகழ்வுகள் யாவும் கானல் நீராய் மறைந்துப்போயின.

தன் உயிரானவனின் மீது அளவுக்கு அதிகமான நேசம் வைத்திருந்தவளால் எவ்வாறு அவனது யாசிப்பை வெறுக்க முடியும்?

தான் மட்டுமே வேண்டும் என அடைக்கலம் புகுந்தவனை அவளால் உதறி தள்ள முடியுமா என்ன?

ஆதலால் அவனது அணைப்பில் சகலத்தையும் மறந்துவிட்டு அவன் நெஞ்சத்தில் தலைசாய்த்து நின்றாள்.

அவனின் மேல் அவள் கோபமாய் இருந்ததெல்லாம் ஏதோ போன ஜென்மத்தில் நிகழ்ந்த சம்பவம் போல் கறைந்துப்போயின.

இருவரும் கட்டியணைத்த வாக்கிலே எத்துணை நேரம் நின்றிருந்தார்களோ?

சூரியனின் கதிர்கள் பூமியில் தன் ஆதிக்கத்தை இழந்ததை அறிந்தப்பிறகே இருவரும் விலகினார்கள்.

அவனிடமிருந்து அவள் விலகியப்பிறகும் அவனின் விழிகள் அவளை தொடர்ந்திட,பாவையவளிற்கோ அவனது பார்வை என்னவோ செய்தன.

அதனால் மெதுவாக விழி தாழ்த்தி எச்சிலை கூட்டி விழுங்கியவள் “வீர் வீட்டுக்கு போகணும்…நேரமாச்சு” என்றாள் முயன்று வருவித்த குரலில்…

அதன்பிறகே வீருக்கு தாம் பேச வந்த விஷயத்தை பேசவில்லை என்பது உறைத்திட “தமி உன்கிட்ட நான் பேச வந்ததை பேசவே இல்லை” என பின்னங்கழுத்தை வருடியப்படி சொல்ல,

அவனின் தடுமாற்றம் அவளிற்கு புதிதாக இருந்தது.

அதனால் ஒற்றை புருவம் உயர்த்தி “சரி சொல்லுங்க” என மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி நின்றாள்.

அவனோ தொண்டையை செருமி “ஐயம் ரியலி சாரி தமி…நான் உன்னை ரொம்பவே ஹார்ட் பண்ணிட்டேன்…அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக்கூடாது…எல்லா தப்பும் என் மேலே தான்” என அன்று நடந்த நிகழ்விற்காக அவன் மன்னிப்பு வேண்ட,

அவளோ “சரி தப்பு பண்ணிட்டீங்க?அதுக்கு இப்போ என்ன செய்யலாம்?” என தெனாவெட்டாக புருவம் உயர்த்த,

“என்னை மன்னிச்சிடுடி…நீ எனக்கு என்ன தண்டனை வேணா கொடு…நான் ஏத்துக்கிறேன்” அவளின் பிரிவு அவனை இவ்வாறெல்லாம் பேசி வைத்திட,அவளின் புருவம் இலேசாக உயர்ந்தன.

“ஆர் யூ ஷ்யுர்?நல்லா யோசிச்சு சொல்லுங்க வீர்…பின்னாடி பின் வாங்க முடியாது” என எச்சரிக்கும் தொனியில் உரைக்க,

அவனோ “நல்லா யோசிச்சிட்டேன் தமி…உன்னை அப்படி பேசினதுக்கு தினம் தினம் நான் மனசுக்குள்ள செத்துட்டு இருக்கேன்…அதை விட நீ கொடுக்கிற தண்டனை எனக்கு பெரிசில்லைம்மா…” என உணர்ச்சி பெருக்குடன் அழுத்தம் திருத்தமாக சொல்ல,

சட்டென அவளின் இமைகள் இடுங்கிட “திடீர்னு என்ன ஞானயோதியம்?” என நக்கலாக அவள் வினவ,அவனிடம் சட்டென ஒரு மௌனம்!

பின்பு சிகையை அழுந்தக்கோதி அவளை நோக்கிய வீர் “திடீர்னு எல்லாம் இல்லை தமி…முன்னாடி இருந்தே உன்னை எனக்கு பிடிக்கும்…ஆனால் உன்னை என்னாலே ஏத்துக்க முடியலை…அதுக்கு காரணம் உனக்கே தெரியும் தமி…பூபதி இல்லைனா எங்க குடும்பமே இல்லை…அவனுக்கு என்னாலே ஒரு காலமும் துரோகம் செய்ய முடியாது…அந்த காரணத்துக்காகவே உன் மேல் விருப்பம் இருந்தாலும் ஒதுக்கி வைச்சேன்…ஆனால் எந்த அளவு நான் உன்னை ஒதுக்கி வைக்க நினைச்சனோ அதை விட அதிகமாக உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்…இருந்தாலும் தங்கச்சிங்க வாழ்க்கையை நினைச்சு பின்வாங்கிட்டேன்…இதுக்கெல்லாம் மேலே உனக்கும் எனக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்துச்சு…அந்த வித்தியாசமெல்லாம் ஏணி வைச்சால் கூட எட்டாது…” என அவன் வலி நிறைந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, சட்டென அவனது வெண்ணிற சட்டை காலரை பற்றி அவளருகே இழுத்தவள் நுனி காலால் எம்பி “ஏணி வைச்சு எட்டற அளவு எல்லாம் நீங்க உயரமா இல்லையே…இலேசா நுனி காலிலே எம்பினாலே உங்க தலை ஹைட்டுக்கு வந்திட்டேன் நான்…இதிலே எங்கயிருக்கு வித்தியாசம்” என அவளிற்கே உரிய கோபத்துடனும் நக்கலுடனும் அவள் வினவ,

முதலில் அவளது செயலில் திடுக்கிட்ட வீர் அவளின் பேச்சை கேட்டு அப்படியே இதயம் உருகிவிட்டான்.

தமக்கு இடையே எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதை வலியுறுத்தவே அவள் அவ்வாறு கோபம் கொண்டு பேசியிருந்தாள்.

அதனை உணர்ந்து மெல்லியதாக புன்னகைத்த ஆடவன் “ஏ வாலு…நான் என்ன சொல்லறேன்?நீ என்ன சொல்லறே?” என கடிய முயன்றவனின் குரல் குழைவாகவே வந்தது.

அவளோ மீண்டும் சகஜ நிலைக்கு வந்து நின்று “பின்ன என்ன?நீங்க கண்டதையும் பேசிட்டு இருப்பீங்க?நான் அதை பார்த்திட்டு இருக்கணுமா?ஏற்ற தாழ்வுன்றது தகுதியை பார்த்து வரதில்லை…அவங்க அவங்க மனசை பொறுத்து தான் மாறுப்படும்…தன்னை சுற்றியிருக்கவங்க சந்தோஷத்துக்காக நல்லதை மட்டும் செய்யறவங்க தான் என்னை பொறுத்தவரை பணக்காரன்…அந்த வகையில் நீங்க எனக்கு எப்பவும் பணக்காரன் தான்…நான் உங்களோட பேக் ரவுண்ட் செக் பண்ணியெல்லாம் லவ் பண்ணலை வீர்…உங்களோட குணத்தை பார்த்து தான் காதலிச்சேன்…நீங்க உங்க நட்புக்கு தர்ற மரியாதை…அம்மாவை நீங்க தாங்கற விதம்…உங்க மேலே அன்பு வைச்சு இருக்கிறவங்களுக்காக உயிரையே தர தயாராக இருக்கிற குணம்…உங்களோட விசுவாசம்…என் மேலே நீங்க காட்டற அக்கறை…உங்க தங்கச்சிங்க மேலே நீங்க வைச்சிருக்கிற பாசம்…இப்படி எக்கச்சக்கமா சொல்லிட்டே போகலாம்…இவையெல்லாம் சேர்த்து தான் உங்களை எனக்கு பிடிச்சது…இதுக்கு இடையிலே ஏணி கிணினு என்ன பேச்சு இது?” என எரிச்சல் மிக சிடுசிடுப்புடன் பேசியவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது இதயத்தை இனிதாய் தாக்கின.

அவளோ அத்தோடு நிறுத்தாமல் “இதுக்கெல்லாம் மேலே இதோ உங்க அடங்காத முடி…கூரான நாசி…என்னை பாவமா பார்க்கிற உங்க கண்ணு…பேசவே கூலி கேட்கிற உங்க வாய்…நான் சொல்றதை மறுக்காமல் கேட்கிற உங்க காது…லவ் ஃபெயலர் கணக்கா காடு மாதிரி வளர்த்து வைச்சிருக்கிற உங்க தாடி…உங்க உணர்வுகளை மறைக்க நீங்க போட்டுக்கிற இந்த கூலர்ஸ்…இதோ நீங்க போட்டிருக்கிற இந்த வெள்ளை சட்டை…அதை நீங்க மடிச்சு விடற அழகு…உங்க கையிலே இருக்கிற இந்த வெள்ளி காப்பு‌…உங்க இடுப்பிலே சொருகியிருக்கிற துப்பாக்கியை நீங்க கைவிட்டு எடுக்கிற ஸ்டைல்…அப்புறம் நீங்க போட்டிருக்கிற காக்கி பேண்ட்…பேண்டுக்குள்ள போட்டு…” என அவள் ஆரம்பிக்கும் போதே,

அவன் பதறிப்போய் “ஹே வாயை மூடுடி” என வேகமாக அவளின் வாயை பொத்தி தடுத்து நிறுத்தினான்.

அவள் ஏதேனும் ஏடாகூடமாக பேசி விடுவாளோ என்ற பயம் அவனிற்கு!

அவளோ “அடச்சீ கைய எடுங்க” என அவனது கரத்தை தட்டிவிட்டவள் “பேண்டிக்குள்ள போட்டிருக்கிற பெல்ட்டுனு சொல்ல வந்தேன்…அதுக்குள்ள உங்க மூளை காஜியா நினைக்குது” என முகத்தை சுழித்து அவனை திட்டினாள்.

அவனோ “என் மூளை காஜியா நினைக்குது சரி” என தலையாட்டி சிரித்துக்கொண்டான்.

அவளின் பேச்சு ஒவ்வொன்றும் அவனது அத்தனை நாள் வேதனையை வேரோடு துடைத்தெறிந்து,அவனின் மனதை இலேசாக்கின.

அவளது வாய் ஓயாத பேச்சை கேட்கவே தவம் கிடந்தன அவனது காதுகள்!

அவளோ தன் பேச்சை மேலும் தொடர்ந்தாள்..

“இப்படி எல்லாமே உங்ககிட்ட எனக்கு பிடிக்கும்னு நான் சொல்ல வந்தேன் வீர்…” என அவள் இறுதியாக அவனது கண்ணாளனின் வர்ணனைகளை முடித்துக்கொள்ள,

தன்னை அணு அணுவாக ரசித்து கூறும் அவளின் பேச்சில் அவனின் உள்ளம் குழைந்திட “இதுக்கு நீ மொத்தமாவே என்னை பிடிக்கும்னு சொல்லியிருக்கலாமே?” என மென்சிரிப்புடன் வினவ,

அவளோ “சொல்லியிருக்கலாம் தான்…ஆனால் ஒரு சில மரமண்டைக்களுக்கு நேரே சொன்னால் கூட என் காதல் புரிய மாட்டிக்குது…அதனால் தான் அவங்களுக்காக விளக்கி விளாவரியா சொல்ல வேண்டியிருக்கு” என குத்தலாக அவனை பார்த்தப் படி உரைக்க,அவனின் முகம் அப்படியே வாடி விட்டன.

அவள் கூறுவது அத்தனையும் உண்மை என்பதால் 
“நீ சொன்னது உண்மை தான் தமி…நீ என்னை சுத்தி சுத்தி வந்து உன் விருப்பத்தை சொன்ன சமயம் உன்னோட அருமை எனக்கு தெரியலை…நீ என்னை விலக்கிட்டு மொத்தமா போனப்பிறகு தான் எனக்கு நீ எந்த அளவு முக்கியமானவள்னு புரிஞ்சது… என்னை சுத்தி எல்லாருமே இருந்தாலும் எனக்குள்ள வெறுமை மட்டும் தான் இருந்துச்சு…
நீயில்லாத இந்த கொஞ்ச நாள் தான் நான் ஏன் உயிரோட இருக்கேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன்…அந்த அளவு நீ எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்திட்டு போயிட்டடி…முன்னாடியே இதெல்லாம் புரிஞ்சுக்காத நான் நிஜமாவே மரமண்டை தான் இல்லை” என வருத்தம் தொய்ந்த குரலில் கேட்டவனின் நெஞ்சமும் முகமும் கலங்கிப்போயின.

அவளோ “இதிலென்ன சந்தேகம்?நீங்க மத்த எல்லா விஷயத்திலும் ஹீரோ தான்…ஆனால் காதல் ரொமென்ஸ் இது இரண்டிலும் நீங்க ஜீரோ தான்” என வெளிப்படையாக கூறிவிட,அவள் கூறிய பாவனையில் அவனிற்கு சிரிப்பு வந்துவிட “அப்போ நீயே எனக்கு எப்படி காதலிக்கணும்னு கத்துக்கொடு” என அவளிடம் காதல் பாடம் கற்க தயாராகிவிட்டான் அந்த மாணவன்.

அவன் பேசியதை கேட்டு “ம்க்கும் இதையும் நான் தான் உங்களுக்கு கத்து தரணுமா?கடைசி வரை நீங்களா எதுவும் கத்துக்க மாட்டிங்க…விளங்கிடும்” என நெற்றியை கடுப்பாக தட்டிக்கொள்ள,அவன் மனம் விட்டு வெகு நாட்களுக்கு பிறகு சிரித்தான்.

சிரிப்பை தொலைத்திருந்தவனின் இதழில் சில நிமிடங்களில் சிரிப்பை மீட்டு வந்திருந்தாள்,வீரின் குட்டி புயல்!

அவளோ சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாய் “ஒரு விஷயத்தை நான் மறந்திட்டேன் வீர்” என்றாள் வெகு தீவிரமாக…

இப்போது அவனது முகமும் தீவிரமாகிவிட “என்ன?” என அவன் கேட்க,

“இது எல்லாத்தையும் விட எனக்கு இன்னொரு விஷயம் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும் வீர்” என அதே தீட்சண்ய முகப்பாவனை அவளிடம்!

“என்ன அது?” என அவன் ஆர்வமாக புருவம் உயர்த்தி வினவ,

“உங்க வல்லாறு டாட்டூ” என அவனது முதுகை காட்டி கூறியவளோ “பட் அதை நான் இதுவரை முழுசா பார்த்ததில்லை…அரைக்குறையா தான் பார்த்திருக்கேன்…எனக்கு அதை எப்போ முழுசா காட்டுவீங்க?” என வெட்கம் சிறிதுமின்றி கேட்டவளின் பேச்சை கேட்டு அவனின் முகம் சிவந்துவிட்டது.

“தமி” என அதட்டிய வீர் “நீ முதல்ல வா…இரட்டுற நேரம் வந்திடுச்சு” என இதழ் கடித்து சிரித்துக்கொண்டே ஜீப்பை நோக்கி நடக்க,

அவளோ “அப்போ நீங்க காட்டமாட்டிங்க?” என கடுப்பாக வினவ,

அவனோ ‘மாட்டேன்’ என தலையசைத்தவாறு குளிர்க்கண்ணாடியை எடுத்து மாட்ட,

‘மாட்டிட்டான்யா அவன் கவசத்தை…இனி அவன் என்ன நினைக்கிறான்னு கண்டுப்பிடிக்கவே முடியாது’ என இதழை சுழித்தவள் “சரி போனால் போங்க…எப்படியும் கல்யாணத்துக்கு பிறகு காட்டி தானே ஆகணும்…அப்போ பார்த்துக்கறேன்…” என சிறிதும் வஞ்சனையின்றி பேசியவளின் பேச்சை கேட்டு அவனிற்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது.

அவன் இதழை குவித்து ஊதி ‘ஊப் எப்படி பேசறாள் பாரு’ என அவளை திட்டினாலும் சில நாட்களாக இழந்திருந்த அவனுள் மடிந்துப்போன உயிர்ப்பை,அவளின் இந்த துறுதுறு பேச்சு மீட்டு வந்திருந்தது.

அவளும் இப்போது ஜீப்பில் வந்து ஏறி அமர்ந்தவள் “ஹலோ சார்…இந்த பேச்சிலே உங்க தண்டனைய மறந்திடாதீங்க…நீங்க பண்ண தப்புக்கு கண்டிப்பா தண்டனை இருக்கு…புரியுதா?” என ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,

அவனோ “ஹும்” என தலையாட்ட,அவளின் இதழ்களோ இரகசியமாய் வளைந்தன.

அவள் வகுத்து வைத்திருந்த திட்டங்கள் அறியாத அப்பாவி வீர் அவள் மீதுள்ள நேசத்தில் வசமாக அவள் விரித்த வலையில் சிக்கிக்கொண்டான்.

அவ்வளவு எளிதில் ரத்தினவேலின் தங்கை அவளிற்கு செய்ததை மறந்துவிடுவாளா என்ன?

அவனிற்கான தண்டனையை அவள் அப்போதே நியமித்து வைத்துவிட்டாள்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top