முகிழ்மதி 120(2)


 

 

முன்பிருந்த தமியாக இருந்தால் வீருக்கு பக்கத்து இருக்கை என்றவுடன் அவளின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருக்கும்.

இப்போது அவளின் இதயம் அவனருகே அமர தயங்கின.

சகோதரிகள் இருவரும் பின்னால் அமர்ந்திருக்க,அவளோ இப்போது வீரின் அருகே அமர வேண்டிய கட்டாயம்!

‘இதெல்லாம் உன் வேலையா?’ என சந்திரமதியை அவள் முறைப்பாய் ஏறிட,அவளோ தனக்கு இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் வெளியே வேடிக்கை பார்த்தாள்.

வேறுவழியின்றி ஒரு பெருமூச்சுடன் ஏறி அமர்ந்தாள் தமயந்தி.

அவனின் விழிகள் மொத்தமும் அவளை ஏக்கத்துடன் ஏறிட்டன‌.

அவளோ தன்னருகே ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணமே இல்லாதவளாய் சாலையை வெறித்திருந்தாள்.

அவளின் பாராமுகம் அவனிற்கு அதீத வலியை கொடுத்தன.

அவனை கண்டதும் மலரும் முகமில்லை அவளிடம்…

மாறாக,அவளின் முகத்தில் ஒரு வெறுமை…இதயத்தில் ஒரு இறுக்கம்!

அதனால் ஜீப்பில் ஏறிய பிறகு யாவரும் எதுவும் பேசவில்லை.

வீர் ஒரு பெருமூச்சுடன் வண்டியை எடுத்தான்.

அவனது மனம் சீரற்று துடித்தாலும் அவன் செலுத்திய வாகனம் சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.

நால்வரும் ஏதோ மயானத்திற்குள் புகுந்தது போன்று ஒரு ஆழ்ந்த நிசப்தம் அவர்களிடம்!

அதனை முதலில் தகர்ந்தெறிந்தது சந்திரமதி தான்!

“அண்ணா அம்மா எப்படி இருக்காங்க?” என உரையாடலை தொடங்கி வைத்தாள்.

அவனும் தங்கை கேட்கும் கேள்விகளுக்கு பதிலுரைத்தான்.

அவனது பதில் தங்கையிடம் இருந்தாலும் அவனின் விழிகள் என்னவோ தன்னவளை அவ்வப்போது இரகசியமாய் தீண்டிவிட்டு வந்தன.

அதேநேரம் வேகத்தை அதிகரிக்கும் கருவியை அவன் முடுக்கும் நேரம் எதிர்பாராமல் அவனது கரம் அவளின் தொடையை உரசி சென்றிருக்க,சட்டென இருவரின் மேனியிலும் மின்சாரம் பாய்ந்த ஒரு உணர்வு!

அவன் கரம் தன்னை தீண்டியதில் விதிர் விதிர்த்துப்போன மங்கையவள் வேகமாக தன் காலை நகர்த்திக்கொள்ள,வீருக்கோ திடீரென்று உடலில் மாறுப்பட்ட உணர்வில் ஒரு மாதிரியாகிவிட்டது.

அதனால் இதழை குவித்து ஊதியப்படியே சக்கர திருப்பியை இறுகப் பற்றினான்.

முகிழ்மதியோ எதுவும் பேசவில்லை…அமைதியாக அந்த காதலர்களின் ஓரங்க நாடகத்தை தான் கவனித்துக் கொண்டிருந்தாள்.

தமக்கையின் முந்தைய நடவடிக்கைக்கான காரணம் தெள்ளத் தெளிவாக புரிந்தன.

பழைய முகிழ்மதியாக இருந்திருந்தால் அவளால் எதையும் கண்டறிந்திருக்க முடியாது.

இப்போது இருப்பவள் ரத்தினவேல் ரகுநாத பூபதியின் மனைவி முகிழ்மதியாயிற்றே?

அனைத்தையும் வேரூன்றி கவனிக்க வேண்டும் என்ற கணவனின் பாடம் அவளிற்குள் தற்சமயம் வேலை செய்தது.

அதனால் நிஜம் அறிந்ததும் அவளிற்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் உண்டாகின.

‘என்னடா நடக்குது இங்கே?’ என்பது போல் முகிழ்மதி பக்கவாட்டாக திரும்பி சகோதரியை ஏறிட,அவளோ கண்ணாலே இருவரையும் சுட்டிக்காட்டி கைகோர்த்து ‘லவ்’ என இதழசைத்து சொன்னாள்.

அவள் கூறியதும் அவளின் விழிகள் இன்னும் பெரிதாக விரிய ‘உஷ்’ என வாயில் விரல் வைத்து தங்கையை எச்சரிக்க,அவளோ வேறுவழியின்றி ‘சரி’ என தலையசைத்து வைத்தாள்.

தமயந்தியோ அந்த எதிர்பாராத உரசலுக்கு பிறகு இவர்கள் யாவரின் புறமும் திரும்பவே இல்லை.

வீரை ஏறிடுவதற்கு அவளிற்கு ஒரு மாதிரி சங்கோஜமாக இருக்க,அவள் இதழ் கடித்து வெளியே வெறித்தாள்.

அந்த பயணம் முடியும் வரையிலும் அவள் அவனை நிராகரித்துக்கொண்டே வர,அவனிற்கு இதயம் சுருக்கென்றது.

முன்பு தாம் அவளை உதாசீனம் செய்த சமயமும் அவளிற்கும் இப்படி தான் வலித்திருக்குமோ? என அவளின் முந்தைய வலியையும் சேர்த்து அவன் அனுபவித்தான்.

சில நிமிட நேர பயணத்திற்கு பிறகு,அவர்களது இல்லம் வந்துவிட அதிலிருந்து முதல் வேளையாக இறங்க ஆயுத்தமானாள் தமயந்தி.

அவளின் செயலை அறிந்த வீர் சட்டென அவளின் கரம் பற்றி தடுத்து நிறுத்தியிருந்தான்.

அதில் திகைத்து அவள் அவனை ஏறிட்டாள்.

அவனோ அவளை கண்டுக்கொள்ளாமல் அதிர்ச்சியில் வாயை பிளந்த தங்கைகளை பார்த்து “நான் உங்க அண்ணி கூட கொஞ்சம் தனியா பேசணும்…அதனாலே அவளை வெளிய கூட்டிட்டுப்போறேன்…நானே கொஞ்சம் நேரம் கழிச்சு கொண்டு வந்து விட்டிடறேன்…நீங்க உள்ளப்போங்கம்மா” என்றான் மென்மை மாறாத தொனியில்.

இதற்கிடையில் தமயந்தி ஒரு புறம் “வீர் என்ன செய்யறீங்க?கையை விடுங்க” என பல்லிடுக்கில் சீறி அவனிடமிருந்து கரத்தை உருவ முற்பட,அவனது பிடி இன்னும் அதிகமாக இறுகின.

“ஸ் ஆ வலிக்குது வீர்” என அவள் மெல்லியதாக அலறியதும்,அவளின் வலி அறிந்த வீர் தன் பிடியை இலேசாக தளர்த்தினான்.

ஆனால் அவனது பார்வை மட்டும் சகோதரிகளின் புறமே இருந்தன.

தமயந்தியின் கரத்தை அவன் விடாமல் பற்றியிருப்பதை கண்டு “அண்ணா ஏதாவது பிரச்சனை வந்திடப்போகுது” என சந்திரமதி படபடக்க,

அவளை சிரித்தப்படி நோக்கிய வீர் “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…நீங்க போங்க…” என அழுத்தமாக உரைக்க,

முகிழ்மதி பயத்துடன் அவனை ஏறிட,அவனிடம் அதே மென்மை!

“நீ உள்ள போ டால்…அண்ணனை நம்பு…போடா” என பார்வையால் இருவரையும் வருடி சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

அவர்கள் இருவரும் கீழிறங்கியதும் 
“வீர்…” என அடிக்குரலில் கர்ஜிக்க,

அவனோ தங்கைகள் இருவரும் அங்கிருந்து அகன்ற பிறகே தமயந்தியின் புறம் திரும்பினான்.

அவளோ “என்ன இது?முதல்ல கையை விடுங்க” என அவனிடமிருந்து கையை வெடுக்கென்று உதறி பிடுங்க முயல,

அவனுமே அவள் கரத்தை எளிதாக விட்டவன் “இப்போ நீ கேட்டதுக்காக நான் உன் கையை விடறேன்…இனி வேற எதுக்காகவும் உன் கையை விடமாட்டேன்” என பூடகமாக அவன் கூறிய சொற்களின் அர்த்தம் உணர்ந்தவளின் உள்ளம் தடுமாறின.

அவன் கூறியதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவளின் தவித்தன.

அவனால் காயப்பட்ட அவளின் மனமோ ‘தமி ஓவரா சந்தோஷப்படாதே…அவர் எப்போ எப்படி மாறுவாருனு உனக்கே தெரியும்’ என எச்சரிக்க,

உடனே அவளின் முகத்தில் கோபம் படர்ந்திட “என்ன டிராமா இதெல்லாம் வீர்” என அவன் தன் கரம் பற்றியதை நினைவுறுத்தி வினவினாள்.

அவனோ ஒரு பெருமூச்சுடன் “உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் தமி” என்றான்.

“என்கிட்ட பேசறதுக்கு என்னயிருக்கு?” என இமைகள் இடுங்க அவள் வெடுக்கென்று கேட்க,

“என் கண்ணை பார்த்து சொல்லு தமி…உனக்கும் எனக்கும் இடையிலே எதுவும் இல்லைனு” என அவளை அவன் நேர் பார்வை பார்த்து வினவியதும்,அவளால் சட்டென பதில் எதுவும் கூற முடியவில்லை.

அவனின் மீது உயிரை வைத்திருப்பவளால் எவ்வாறு ஒரு பேச்சிற்கு கூட எதுவுமில்லை என்று கூற முடியும்?

தன் பொய்யாக கூட மறக்கமுடியாமல் அவள் மௌனமாகிவிட,அவனோ அவளின் அமைதியை தனக்கு சாதகமாக ஏற்று வண்டியை எடுத்தான்.

அவன் வாகனத்தை இயக்கியும் தமயந்தி அவனை தடுக்க முனையவில்லை.

சிறிது தூரம் படியேறி வீட்டு வாசல் வரை வந்துவிட்ட முகிழ்மதியோ சடுதியில் நின்றுவிட்டாள்.

நுழைவாயிலின் வழியே வெளியேறிய தமையனது வாகனத்தை பயத்துடன் நோக்கி “அக்கா எனக்கு பயமா இருக்கு” என கைகளை பிசைந்தாள்.

“எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்குடி…ஆனால் எதுவும் நடக்காதுனு நினைக்கிறேன்” என அவளும் திக்திக்கென அதிர்ந்த மனதுடனே உரைத்தாள்.

முகிழ்மதியோ தன் கணவனை எண்ணி அஞ்சி “இந்த விஷயம் மாமாவுக்கு தெரிஞ்சா?” என பீதியுடன் கூற,

படீரென்று அவளை நோக்கி திரும்பியவள் “எனக்கு தெரிஞ்சு அத்தானுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு நினைக்கிறேன்…நண்பனை மீறி வீர் அண்ணா எதையும் செய்யமாட்டாரு…அதே மாதிரி வீட்டுலே இருக்கிற மத்தவங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது…நம்ப மாமனாரு மட்டும் தைய்ய தக்கானு குதிப்பாருனு நினைக்கிறேன்…ஆனால் அவரை அத்தான் பார்த்துப்பாரு” என புத்திசாலித்தனமாக அனைத்து கூறுகளையும் ஆராய்ந்து தெளிவான விளக்கமளித்தாள் சந்திரமதி.

அதைக்கேட்டு முகிழ்மதியின் இருண்ட முகம் பளீச்சிட “நிஜமாவாக்கா?எதுவும் பிரச்சனை வராதில்லை” என பரபரப்புடன் வினவ,

அவளிற்கு நூறு சதவீதம் எதுவும் தெரியவில்லை என்றாலும் தங்கையை சமாளிக்க “அதெல்லாம் எதுவும் வராது” என்றாள்.

அதன்பிறகே முகிழ்மதியின் முகம் பூவாய் மலர்ந்து விகசித்தன.

“அப்போ சரி அக்கா…தமி அண்ணி நமக்கு அண்ணியா வந்திட்டால் ரொம்ப நல்லது…நானும் கூட சில நேரம் அவங்களே நமக்கு அண்ணியா வந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சிருக்கேன்…ஆனால் மத்தவங்க என்ன நினைப்பாங்களோனு வெளிய சொன்னதில்லை…எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்கா…அவங்க நம்ப அண்ணனை நல்லா பார்த்துப்பாங்க” என தமயந்தியை பற்றி சிலாகித்து அவள் பேசிக்கொண்டிருக்க,

அதை ஆமோதிக்கும் விதமாக “தட்ஸ் ட்ரூ…அண்ணா இத்தனை வருஷமா அவருக்கான வாழ்க்கையை வாழவே இல்லை…அம்மாவுக்காக…இப்போ நமக்காகனு தான் இதுவரைக்கும் அண்ணா வாழ்ந்திருக்காரு…இனியாவது அவருக்காக வாழட்டும்…அண்ணா மாதிரி இன்ட்ரோவொர்ட் ஆளுக்கு தமி அண்ணி தான் கரெக்ட் சாய்ஸ்…பார்ப்போம் என்ன நடக்குதுனு” என உள்ளுக்குள் தங்கைகள் இருவருக்கும் ஆசைகள் நிறைந்திருந்தாலும் ‘என்ன நடக்குமோ?’ என்ற அச்சமும் ஒரு ஓரம் படர்ந்திருந்தது.

இங்கு வீரோ அவன் எப்போதும் தனிமையில் உருகி நிற்கும் அந்த மலை முகட்டை நோக்கி சென்று ஜீப்பை நிறுத்தினான்.

அவளோ அழுத்தமாக ஜீப்பினுள்ளே அமர்ந்திருக்க,அவனோ ஒரு பெருமூச்சுடன் சுற்றி வந்து அவள் பக்க கதவை திறந்துவிட்டான்.

அவளோ அவனை சிறிதும் ஏறிடாமல் முகத்தை வேறுப்பக்கம் திருப்பிக்கொள்ள “தமி பிளீஸ்…கீழே இறங்கி வாம்மா” என கெஞ்சலான குரலில் மன்றாட,அவளிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அவனது முகம் இலேசாக வாடினால் கூட அவளால் பொறுக்கமுடியாது.

இன்றோ அவன் தீராத மனவலியோடு இருப்பது அறிந்தும் அவள் இறுக்கமாக இருக்கிறாள்.

அவளிற்கே தாம் செய்வதில் சிறிதும் உடன்பாடில்லை என்றாலும்,மீண்டும் அவன் தன்னை காயப்படுத்திவிடுவானோ என பயமாக இருந்தது.

அதனால் அவளின் மேனி விறைத்து இறுகிட “பிளீஸ் தமி” என மீண்டும் அவன் குரல் உருகியதும் அவளின் மனமும் குழைந்துவிட்டது.

“ப்ச் நகருங்க..” என அவன் நீட்டிய கரத்தை பொருட்படுத்தாமல் அவளாகவே கீழே இறங்கிக்கொண்டாள்.

எப்போதும் உரசிக்கொண்டு இருப்பவளின் இந்த விலகல் அவனை அம்பு கொண்டு தைத்தன.

அதனால் ஒரு விழி மூடி திறந்து அவளை ஏக்கம் சுமந்த விழிகளுடன் ஏறிட,அவளிற்கோ அவனது முகத்தை பார்த்தவுடன் இதயம் தடுமாறின.

அவன் வேதனை கண்டு அவளின் உள்ளமும் துடிக்க,உடனே அவன் துயர் துடைக்க வேண்டி அவளின் உள்ளமும் சரீரமும் பரபரத்தன.

‘நோ’ என தன்னை தானே அவள் கட்டுப்படுத்திக்கொள்ள வெகு சிரமமாகியது‌.

அதனால் காற்றில் பறந்த தனது கூந்தல் கற்றைகளை காதோரம் ஒதுக்கியவாறே அவனை கடந்து ஜீப்பின் முன் புறம் சென்று நின்றாள்.

ஜீப்பில் இருந்து அவள் இறங்கிய தருணத்திலிருந்து அவனது விழிகள் அவளையே விழி அகற்றாமல் பார்த்திருந்தன.

அவளின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்தையும் ஒன்று விடாமல் அவனின் பார்வை வருடின.

பச்சை நிற சுரிதார்,பின்னலிட்ட கலைந்த கூந்தல்,எவ்வித ஒப்பனையுமில்லாத களைப்புற்ற முகம்,ஒல்லியும் அல்லாத குண்டும் அல்லாத இலேசாக பூசிய உடல்வாகு,கழுத்தில் மெல்லியதான ஒரு தங்க சங்கிலி,காதில் வளையம் போன்ற பச்சை நிறத்தில் தங்க தோடு இவை மட்டும் தான் அவளின் அலங்காரம்!

ஆனால் அதற்கே அவனின் விழிகளுக்கு அவள் பேரழகியாய் தெரிந்தாள்.

அவளை கண்ணாலே சிறைச்செய்தப்படி அவளருகே அவன் நின்றான்.

இருவரும் ஜீப்பின் முகப்பு பகுதிக்கு முன்பு வந்து நின்றார்கள்.

“வீர் என்ன பேசணும்?” என கேட்டுக்கொண்டே அவனை ஏறிட்டவளின் இதயம் அவனது பார்வையில் நழுவிச்சென்றன.

எங்கு அவன் இமை சிமிட்டினால் கூட அவள் மறைந்துவிடுவாளோ என்பது போன்ற ஒரு ஆழமான பார்வை அவனிடம்!

ஆனால் அவனது அசையாத பார்வை அவளின் இதயத்தை நேரடியாக சென்று தாக்குவது போல் இருக்க,அவள் பெரிதும் தடுமாறினாள்.

‘என்ன பார்வைடா இது?’ என எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள்.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து பதிலிளில்லை என்றவுடன் “ப்ச்” என சலித்து அவள் அங்கிருந்து நகர முற்பட,அவனோ அவள் சற்றும் எதிர்பாராத வகையில் அவளை படீரென்று அணைத்துக்கொண்டான்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top