முகிழ்மதி 119(1)


 

 

பல கூச்சல்களும் குழப்பங்களும் நிகழ்ந்தாலும் விஜயேந்திர பூபதி தான் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மீண்டும் முதல்வராகியிருந்தார்.

அவரை மீண்டும் முதலமைச்சராக்கியதில் முக்கிய பங்கு ரத்தினவேலுவிற்கு தான் இருந்தது.

ஆதலால் மகனிடம் அதற்குரிய நன்றியுரைத்தவர் “இந்த முறையாவது துணை முதலமைச்சர் போஸ்டிங் நீ ஏத்துக்கலாமில்லை பூபதி” என வேண்டுக்கோளை முன் வைக்க,

அவனோ “இல்லைப்பா…என்னை விட அதிகமான அனுபவமுள்ள ஆட்கள் எல்லாம் கட்சியிலே இருக்கிறாங்க…அவங்க யெல்லாம் இருக்கும் போது நேரடியா நான் சீட்டிலே வந்து உட்கார்றது நல்லாயிருக்குது…எனக்கு என்னோட உழைப்பிலே முன்னேறி வர்றதில் தான் விருப்பம்…அடுத்த முறை நான் எலெக்சனிலே நின்னு வின் பண்ணி எம்.எல்.ஏ ஆகறேன்…அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி மேலே வந்து டெபிட்டி சீ.எம் போஸ்டிங் உட்கார்றேன்…அது தான் நியாயம்..
அது தான் அரசியல் தர்மமும் கூட அப்பா” என தந்தைக்கே அரசியலின் தாத்பரியத்தை பற்றி பாடம் எடுத்தான் தனயன்.

ரத்தினவேலை எண்ணி அவர் பெருமிதம் கொள்ளாத நாளே இல்லை.

அவரை விட வயதில் குறைந்தவனாகினும் ஒவ்வொரு விடயத்திலும் அவனிற்கு இருக்கும் தெளிவும் தீர்க்கமான முடிவெடுக்கும் பக்குவமும் கண்டு அவர் எப்போதும் பிரம்மிப்பார்.

அதன் பொருட்டே,அவனது முடிவிலும் அவன் வாழ்விலும் அவர் தலையிட மாட்டார்.

ஏனெனில்,அவனிடம் இருக்கும் தெளிவு அவர்களது குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லை என்ற திண்ணம்!

அதனால் இப்போதும் அவனது முடிவை ஏற்றுக்கொண்டார்.

அவர் வெற்றி பெற்ற விடயம் கேள்வியுற்று குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வாழ்த்து கூறினார்கள்.

பல நாட்களாக அவரிடம் பேசியிராத மகள் கூட தானாக வந்து “வாழ்த்துக்கள்ப்பா” என மனமாற வாழ்த்து கூற,

“தேங்க்ஸ் லட்டு” என அவளை அணைத்து உச்சிமுகூர்ந்தார் அந்த தந்தை.

முகிழ்மதியோ அவரிடம் வாழ்த்து கூறும் போது “வாழ்த்துக்கள் மாமாப்பா” என,

அவள் கூறியதை கேட்டு அனைவரும் திகைத்தனர்.

ரத்தினவேலோ ‘அடிப்பாவி’ என்பது போல் பார்த்திருக்க,

விஜயேந்திரனோ “அதென்னம்மா மாமாப்பா…புதுசா இருக்கு” என திகைப்புடன் கேட்க,

ரத்தினவேலின் புத்திசாலி மனையாளோ “அத்தை எனக்கு அம்மா மாதிரி அதனாலே அத்தம்மானு கூப்பிடறேன்…அதே மாதிரி நீங்க எனக்கு அப்பா மாதிரி அதனாலே மாமாப்பானு கூப்பிடறேன்” என விளக்கம் தெரிவித்தாள்.

“மாமா” என்று யாரையும் அழைக்கக்கூடாது என கணவன் தெரிவித்ததனால் இருவருக்கும் பாதகமில்லாமல் இருக்க அவள் கண்டுப்பிடித்த வழிமுறை இது!

ரத்தினவேலோ தன்னவளின் திறமையை எண்ணி வியந்து புருவம் உயர்த்தினாலும் ‘பார்க்க தான் அம்மாஞ்சி மாதிரி இருக்காள்…சரியான அமுக்கிணி’ என அவளை இகழ்வது போல் மனதிற்குள் புகழ்ந்தான்.

விஜயேந்திரனோ அவள் தன்னை அப்பா ஸ்தானத்தில் வைத்திருப்பதை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்துப்போனார்.

அவளை ஒரு நாள் கூட அவர் மதித்து பேசியதில்லை.

அவளையும் மற்றவரை போல் பத்தோடு பதினொன்றாக அலட்சியமாக நடந்தியிருந்தார்.

ஆனால் அவளோ தன்னை தந்தையென்னும் புனிதமான பந்தத்தில் நிறுத்தியிருப்பதை அறிந்து அவர் கூனி குறுகிப்போனார்.

பணம்,வசதி,கௌரவமெல்லாம் எப்போதும் மேல்பூச்சு மட்டும் தான்…

ஒருவரின் குணமும் அன்பும் மட்டுமே இந்த உலகத்தில் மிகப்பெரியது என அவர் உணர்ந்த தருணம் அது தான்!

அதுநாள் வரை மருமகளை ஒதுக்கி வைத்திருந்த அந்த மனிதர் விழிகள் பனிக்க “நன்றிம்மா” என கரகரத்த குரலில் அவளின் தலையை வருடி மொழிந்தார்.

அன்றிலிருந்து மருமகள் இருவரும் தங்கள் வாழ்வில் சபமல்ல வரம் என புரிந்தவர்,அவர்களையும் தன் மகளை போலவே பாவிக்க தொடங்கினார்.

மருமகள்களால் புதல்வர்களது முகத்தில் இருக்கும் மலர்ச்சியை கண்டவர்,அதேப்போல் மகளும் பிடித்தவனை திருமணம் செய்துக்கொண்டால் இன்பமாய் இருப்பாளோ என்னும் ரீதியில் சிந்திக்க வைத்திருந்தார்கள் முகிழ்மதியும் சந்திரமதியும்!

இந்நிலையில் அனைவரும் வாழ்த்து கூறினாலும் அவரது மனைவியார் மட்டும் எதுவும் கூறவில்லை.

அதுவே அவருக்கு தீராத வருத்தத்தை கொடுத்தது.

அவரிடம் பேசாமல் சென்றப்பிறகே துணைவியாரின் அருமையே அவருக்கு புரிந்தது‌.

அதற்காக மனையார் அவரை அடியோடு வெறுத்துவிட்டார் என்று கூறமுடியாது.

கணவருக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் முன்னர் போல் செய்தார்.மற்றவரின் முன்பாக ஓரிரு சொற்கள் பேசினார்.

தனிமையில் இருக்கும் போது அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே?

நாட்கள் செல்ல செல்ல,அவர் தன்னுடன் பேசாமல் போனது அவருக்கு நரகம் போல் இருந்தது.

வானதியை எவ்வாறு சமாதானம் செய்வது என முழித்துக்கொண்டிருந்தார், மாநிலத்தின் முதல்வர்.

அதிகாரம் இருந்து என்ன பயன்?

அவரது மனையாளிடம் மன்னிப்பு கேட்க அவருக்கு தெரியவில்லை.

அடுத்த நாள் அவரது இரு மகன்களுக்கும் ஊரை கூட்டி பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்கள் அந்த விழாவில் கலந்துக்கொண்டனர்‌.

ஊடகவியலாளர் யாவருக்கும் அவ்விடத்தில் அனுமதி கிடையாது என கறாராக கூறப்பட்டது.

ஏனெனில்,வீட்டு பெண்களின் பிரத்யேக வாழ்வு தடைப்படக்கூடாது என்று கருதியே இந்த ஏற்பாடு!

அப்போதும் சில ஊடகவியலாளர்கள் ஏதேனும் தகவலோ அல்லது புகைப்படமோ கசிந்து வெளிவந்துவிடாதா என கழுகுப்போல் காத்திருந்தார்கள்.

வரவேற்புக்கும் தத்தமது மனையார்களுக்கான உடையை கணவன்மார்களே தேர்ந்தெடுத்தார்கள்.

எப்படியும் அவர்களை கண்டு ரசித்து அனுபவிக்கப்போகும் கலா ரசிகர்கள் அவர்கள் தானே?

ஆதலால்,பெண்களும் அவர்களிடமே தங்களை முழுமையாய் ஒப்படைத்து விட்டனர்.

அவர்கள் நம்பியதற்கு ஏற்றாற் போன்று அவளின் பொன் நிற மேனிக்கு ஏற்றாற் போன்று தங்கத்தால் வேலைப்பாடுகள் கொண்ட தங்க நிற லெஹன்காவும்,அதற்கு ஏற்ற தங்க நிற ஆபரணங்கள் அணிந்து ஜொலித்தாள் ரத்தினவேலின் மனையாள் முகிழ்மதி!

முகிழ்மதி தங்க நிறத்தால் ஜொலித்தாள் என்றால்,சந்திரமதி அவளிற்கு இணையாக ஊதா நிற வேலைப்பாடு கொண்ட லெஹன்காவில் தேவதையாய் ஒளிர்ந்தாள்.

அவளின் ஊதா நிறத்தை தூக்கிக்காட்டும் வகையில் வைரத்தலான அணிகலன்கள் அணிந்து அந்த இருளை கிழித்துக்கொண்டு ஒளிரும் நிலா போல் பிரகாசித்தாள் சந்திரமதி‌.

நம் விழா நாயகிகள் தான் இவ்வாறெல்லாம் அனைவரின் மனதை கவர்ந்தார்கள் என்றால்,அவர்களது கதாநாயகர்கள் சொல்லவே தேவையில்லை.

ரத்தினவேல் அவனது உயரத்திற்கும் கம்பீரத்திற்கும் ஏற்றாற் போன்று படிந்து வரப்பட்ட அடர்ந்த சிகை,தாடி மீசையுடன் கருப்பு நிற பிளேசர் கோர்ட் சூட்டிலும்,

ஜித்தேந்திரன் அவனது துறுதுறுப்பையும் கம்பீரத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக சாம்பல் வர்ண கோர்ட் சூட்டிலும் வானில் இருந்து இறங்கி வந்த ராஜகுமாரர்கள் போல் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்கள்.

நால்வரும் ஒன்றாக அந்த வரவேற்பறைக்குள் நுழைந்ததும் பார்க்க கண்கோடி வேண்டும் போல் தோன்றின.

அப்படியொரு வசீகரமான ஜோடிகள் இருவரும்!

ஒரேப்போல் தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள் தான் அன்றைய நாளில் பேசும் பொருளாகவே மாறிப் போனார்கள்.

சாதாரண நாட்களில் கூட இருவரின் ஆடையையும் தோற்றத்தையும் வைத்து இருவரையும் எளிதாக வித்தியாசப்படுத்திவிடலாம்.

இன்று இருவரது ஆடையின் நிறம் தவிர ஒப்பனைகள் தோற்றம் என அனைத்தும் ஒன்று போலவே இருக்க மற்றவர்கள் இருவரையும் அடையாளம் காண்பதில் குழம்பிப்போனார்கள்.

அவர்களது நெருங்கிய உறவுகள் மட்டும் எளிதாக பெண்களை அடையாளம் கண்டுக்கொண்டார்கள்.

முகிழ்மதியின் பணிவும் அழகும் ஒரு சிலரை ஈர்த்தது என்றால்,சந்திரமதியின் நிமிர்வும் அழகும் மற்ற சிலரை ஈர்த்தது.

விழாவிற்கு வந்த பலரும் “இரண்டு பொண்ணுங்களும் லட்டு மாதிரி இருக்காங்க…அழகு மட்டுமில்லை…இரண்டு பேரும் இரண்டு விதம்…ஒரு பொண்ணு தெளிவா பேசுறாள்…இன்னொரு பொண்ணு ரொம்ப திறமையா மென்மையா பேசறாள்…உங்க பசங்க இரண்டு பேரும் கொடுத்து வைச்சவங்க” என விஜயேந்திரனிடம் மருமகள்களை பாராட்டி புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.

அதுவரை மற்றவர்கள் என்ன சொல்லவார்களோ என்ற நெருடலுடன் இருந்த விஜயேந்திரனிற்கு அதன்பிறகு தான் ஆசுவாசம் கூடின.

அவர் தன் மகன்களையும் அவர்களது இணையிரையும் கர்வம் பொங்க நோக்கினார்.

அவர்களது விம்பமும் அழகும் அவரையே அப்படியே ஈர்த்தெடுத்தன.

அருகில் நின்றிருந்த மனையாரிடம் “பசங்க மருமக்களோட நிக்கறதை பார்க்கும் போது அவ்வளவு அழகா அம்சமா இருக்கு…என் கண்ணே பட்டிட்டிடும் போலே…நைட் சுத்தி போட்டிரு வானதி” என உள்ளம் உருக கூற,

அவரோ கணவனை விசித்திரமாக நோக்கிவிட்டு “ம்” என பெருமூச்சறிந்தார்.

மற்றவர்களுக்கே அப்படி என்றால்,மணமகன்களோ தங்களது மனையாளின் அழகில் சொக்கிப்போய் இருந்தார்கள்.

பெண்களும் கூட ஆண்களின் வசீகரத்தில் உள்ளம் களவாடிப்போயிருந்தார்கள்‌.

இரண்டு ஜோடிகளும் எப்போது தனிமை கிடைக்கும் என ஆவலோடு அந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்க தொடங்கியிருந்தார்கள்.

இங்கு மற்றொரு இடத்தில் சோக பதுமையாய் தமயந்தி பாட்டியுடன் அமர்ந்திருந்தாள்.

பாட்டி விருந்தாளிகளிடம் பேசிக்கொண்டிருக்க அவளின் விழிகளிளோ பெரும் சோகம்!

அவளின் முகம் தான் சோர்வுடன் இருந்தது.

ஆனால் அவளின் எழிலும் ஆடையும் அவளின் சோர்வை மீறி பளபளத்தன.

ஏனெனில்,தனது மனைவிகளுக்கு இணையாக தங்கையும் விழாவில் ஜொலிக்க வேண்டும் என்று இரு தமையன்களும் இல்லாளிற்கு தேர்ந்தெடுத்தாற் போன்று அதீத வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளி நிறத்திலான லெஹன்காவை தமயந்திக்காக தேர்ந்தெடுத்திருந்தனர்.

அந்த ஆடைக்கு ஏற்ற பிளாட்டின அணிகலன் அணிந்து இலேசான ஒப்பனையில் நட்சத்திரம் போல் மின்னினாள் அவள்.

அவளிற்கு இவற்றை அணிவதில் துளியும் விருப்பமில்லை.

தன் மீது உள்ள பாசத்தில் உடையை எடுத்த தந்த அண்ணன்களை அவமதிக்க விரும்பாமல் அவற்றினை உடுத்திக்கொண்டாள்.

அவளை ரசிக்க வேண்டிய கண்ணாளனோடு ஊடல் கொண்டு இருந்தவளிற்கு எதுவும் ரசிக்கவில்லை.

‘யாருக்காக இந்த அலங்காரம்?யார் பார்ப்பதற்கு இந்த அலங்காரம்?எனக்கு இது தேவையே இல்லை?என்னை எல்லாரும் விடுங்க?நான் எங்கியாவது போய்விடுகிறேன்?’ என்னும் ரீதியில் அனைத்தையும் பிடுங்கியெறிந்துவிட்டு உரக்க கத்த வேண்டும் போல் ஒரு உணர்வு!

அனைத்து குமுறல்களையும் அடக்கி தான் அவள் அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவள் நினைப்பிற்கு நேரெதிராக அந்த விழாவிற்கு வந்த நேரம் தொட்டு அவளது காதலனின் விழிகள் அவளின் மீது தான் ஏக்கத்துடன் நிலைப்பெற்றிருக்கிறது என்று அறிய தவறினாள் காரிகை.

அவனது விழிகள் மட்டுமல்ல…அவனோடு இணைந்து பல இளைஞர்களின் வசீகர பார்வையும் அவளின் மீது தான் இருந்தது.

இளைஞர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரின் பார்வையும் அவளையே வட்டமடித்தன.

அவள் முதலமைச்சரின் மகள் என்பதோடு பேரழகியாய் திருமண வயதில் அவள் இருக்கும் போது இந்த பார்வைகள் எல்லாம் சகஜம் தானே?

ஆனால் அவளோ வானத்திலிருந்து இந்திரனே கீழ் இறங்கி வந்தாலும் கூட அவளது வீரை தவிர ஒருவரையும் ஏறிட்டு பார்க்கமாட்டாள் என்று ஒருவரும் அறியேன்.

காஞ்சனா மாலாவின் இதழ்கள் மற்றவருடன் உரையாடி கொண்டிருந்தாலும்,அவரின் விழிகள் பேத்தியை ஒரு பக்கம் அவதானித்துக் கொண்டிருந்தன.

இடையில் “ஏன் லட்டு ஒரு மாதிரி இருக்கே?உடம்பு எதுவும் சரியில்லையா?” என அவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தார்.

அவளோ “அதெல்லாம் எதுவுமில்லை பாட்டி…ஒரு மாதிரி டையர்டா இருக்கு…அவ்வளவு தான்” என நலிந்த குரலில் உரைத்தாள்‌.

“சரி இரும்மா…இப்போ தானே பங்கஷன் ஆரம்பிச்சிருக்கு…இப்போவே கிளம்பினால் நல்லாயிருக்காது…கொஞ்சம் நேரம் இரு…அப்புறம் நீயும் நானும் கிளம்பிடலாம்‌” என பேத்தியின் மீதுள்ள அக்கறையுடன் கூறினார்.

“சரி பாட்டி” என அவரிடம் தலையசைத்து ஒப்புக்கொண்டவளின் விழிகள் ஏதேச்சையாக அந்த புறமாக நடந்துச்சென்ற வீரை கண்டு நிதானித்தது.

‘அவனை பார்க்காதே திரும்பு’ என அவள் மூளை அறிவுறுத்தினாலும்,அவனை பார்க்கும் படி அவளின் இதயம் தூண்டின.

அதனால் அவனையே அவள் இமைக்க மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்.

எப்போதும் இல்லாத வகையில் அன்று ஏனோ இன்னும் வசீகரமாய் அவளின் விழிகளுக்கு தெரிந்தான் வீர்.

சந்தின நிற பிளேசர்,உள்ளே வெளிர் நீல நிற சட்டை,ஆகாய நீல நிற ஜீன்ஸ்,பல நாட்களாக சவரம் செய்யப்படாத தாடி மீசை என்று இருந்தவனின் தோற்றம் அவளை அப்படியே வசீகரித்தது.

அவனது உணர்வுகளை மறைக்க பயன்படுத்தும் குளிர்க்கண்ணாடி இப்போதும் அவனது விழிகளை மறைத்திருந்தன.

‘இன்னும் எத்தனை நாளைக்கு அந்த கண்ணாடிய வைச்சு எல்லாத்தையும் மறைப்பீங்க வீர்?’ என அவனிடம் மானசீகமாக கேட்டவளிற்கு தொண்டை அடைத்தன‌.

அவளது மனதின் மாயக்குரலை அவன் கேட்டது போல் அவளின் புறமாக அவன் திரும்ப,அவளோ சட்டென விழிகளை தாழ்த்தி வேறெங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

ஆனால் குனிந்து இருந்தவளின் இமையோரம் நீர் துளிர்க்க அதை யாவரும் அறியாமல் சுண்டிவிட்டாள் அவள்.

அவனோ அவளையே நேசத்துடன் கூடிய வலியுடன் நோக்கினான்.

‘நான் ஏன்டி உனக்கு ஏற்றவளா இல்லாமல் போயிட்டேன்’ என அவனின் இதயம் உள்ளுக்குள் கூச்சலிட்டு குமுறின.

அவன் காணாத நேரம் அவளும்,அவன் காணாத நேரம் அவளும் என இருவரும் விழா முடிவடையும் நேரம் வரை காதல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாளே விஜயேந்திரனிடமே வந்து நின்ற பலரும் அவரது மகளை பெண் கேட்டிருந்தார்கள்.

ஆனால் அவரோ “இல்லை அவ காலேஜ் போய் படிக்கணும்னு விருப்பப்படறாள்…இப்போதைக்கு கல்யாணம் செய்யற ஐடியா இல்லை” என பதிவிசாக மறுத்துவிட்டார்.

மனைவி கூட அவரின் பேச்சில் வியப்பாய் புருவம் உயர்த்தினார்.

அவர்கள் வந்து கேட்டதும் கணவர் அடுத்த கணமே அதில் செல்வாக்கான குடும்பத்தில் பெண்ணை கட்டுக்கொடுக்க துணிந்துவிடுவார் என்று எண்ணினார்.

‘போச்சு மறுபடியும் முதல்ல இருந்தா?’ என அவர் தவித்த வேளை,விஜயேந்திரனே மறுப்பு தெரிவித்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தன.

‘பரவாயில்லை மனுஷன் கொஞ்சம் அடிப்பட்டு மனசு திருந்திருக்காரு போலே…இதே மாதிரி தமி வாழ்கையிலே எந்த வில்லாங்கமும் கொண்டு வராமல் இருக்கணும் ஆண்டவா’ என இறைவனிடம் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை இறைவனும் காதுக்கொடுத்து கேட்டிருந்தார் போலும்.

மகளின் விழிகள் ஏக்கத்துடன் வீரின் மீது பதிவதும்,அவள் காணாத வேளை அவனது விழிகள் இவள் புறம் வலியுடன் பதிவதையும் விஜயேந்திரன் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.

தன் பேச்சிற்கு கட்டுப்பட்டு மகளும் சரி…வீரும் சரி விலகியிருப்பதை கண்டவரின் நெஞ்சம் கனத்தது.

தன் மீது அவர்கள் இத்துணை மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கும் போது நாம் எதற்காக மகளின் வாழ்விற்கு முட்டிக்கட்டையாக இருக்க வேண்டும் என எண்ணினார்.

அதனால் யாருக்காகவும் தன்னிலையில் இருந்து இறங்கிவராத அவரின் மனம் தனது ஆசை மகளிற்காக இறங்கி வந்தன.

மகளின் மகிழ்ச்சியே அவரின் மகிழ்ச்சியும் கூட!

இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வரும் விதமாக அன்றைய இரவு விழா முடிவுப்பெற்ற கணமே தமயந்தியை தனியே அழைத்தார்.

“வீரும் நீயும் கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு மனப் பூர்வமான சம்மதம் லட்டு” என்று மனநிறைவுடன் அவர் சொல்ல,

அவரின் பேச்சை கேட்டு மகள் துள்ளி குதிப்பாள் என அவர் நினைத்திருக்க,அதற்கு எதிராக அவரின் மகளோ “எனக்கு சம்மதமில்லைப்பா” என கூறி,அவரின் தலையில் இடியை இறக்கியிருந்தாள்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top