முகிழ்மதி 118(2)


 

 

சந்திரமதியை கீழ்த்தரமாக பேசியதினால் அவளிற்குள் ஒரு குற்றவுணர்வு இருந்தது.

அதன் பொருட்டே அவளிடம் மன்னிப்பு வேண்ட உத்தேசித்து அங்கு வந்தாள்.

“அன்னைக்கு உங்களை கண்டப்படி பேசினதுக்கு சாரி…நீங்க யாருனு தெரியாமல் அப்படி பேசிட்டேன்…அன்னைக்கு வேற ஒரு பிரஸ்ட்ரேஷனிலே இருந்தேன்…அதையெல்லாம் உங்ககிட்ட காட்டற மாதிரி ஆகிடுச்சு…சாரி” என உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டியவளை வெறுக்க முடியவில்லை.

அவள் பேசிய கடுஞ்சொல்லால் அவளிற்குள் கோபம் இருந்தது தான்.

ஆனால் தற்போது அவளாக வந்து மன்னிப்பு வேண்டியதும் “இட்ஸ் ஓகே நோ பிராப்ளம்…ஐ அன்டர்ஸ்டேன்ட் யூ” என பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தாள்.

அவள் இறங்கி வந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

அவள் தங்களது வருங்கால நாத்தனார் என்பதோடு அண்ணியும் கூட என்று அறிந்ததாலே தழைந்துப்போனாள்.

அத்தோடு அன்று கண்ணீரோடு வெளியேறியவளின் வலி அறிந்த சந்திரமதி “நீங்க ஓகே வா?” என அவளின் நலன் விசாரித்தாள்.

“எதை கேட்கறீங்க?” என தமயந்தி கூர்மையாக அவளை பார்த்தப்படி வினவ,

அவளை நேர்ப்பார்வை பார்த்து “ஐ நோ அபவுட் யூ தமயந்தி…நீங்க பேசினதிலே என் அண்ணனை நீங்க எந்த அளவு லவ் பண்ணறீங்கனு எனக்கு புரிஞ்சது” என்றதும் அவளின் முகம் வீரின் நினைவில் அப்படியே வாடிவிட்டது.

அவளின் கவலையுற்ற முகம் சந்திரமதிக்கு ஒரு மாதிரியாகிவிட “கவலைப்படாதீங்க…அண்ணாவும் உங்களை பயங்கரமா லவ் பண்ணறாரு…அன்னைக்கு நீங்க போனப்பிறகு அவரோட கண்ணே கலங்கிப்போச்சு தெரியுமா?அப்போ தான் அவரும் உங்களை எந்த அளவு நேசிக்கிறாருனு புரிஞ்சுக்கிட்டேன்…பட் அவர் இந்த காதலை மறைக்க ஏதோ ஒரு காரணம் இருக்குனு நினைக்கிறேன்…” என அவளை ஆறுதலாக்குவதற்காக சற்று மனமிறங்கி பேச,

தன்னவனும் தீராத மனவேதனையில் தான் இருக்கிறான் என்று அறிந்ததும் அவளிற்கும் கண்கள் கலங்கின.

அதிலும் அவனது கண்கள் கலங்கியது என்று அறிந்ததும் அவளது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.

இப்போதே அவனை காண துடித்த மனதினை அடக்கி “அவருக்கும் என் மேலே காதல் இருக்கு…ஏதோ ஒரு காரணத்துக்காக தான் அதை மறைக்கிறாருனு எனக்கும் நல்லாவே தெரியும்” என சந்திரமதி கூறியதை ஆமோதிக்க,

“ஓ…அப்புறம் என்ன? நீங்கள் போய் மறுபடியும் அவர்கிட்ட பேசலாமில்லை…” என இருவரையும் இணைத்துவிடும் வேகத்துடன் சொன்னாள் மற்றவள்.

அவளும் சமீபமாக தமையனது முகத்திலிருந்த வலியை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள்.

வெளியில் மட்டுமே புன்னகை இருந்தது…உள்ளுக்குள் அவன் அழுதுக்கொண்டிருப்பது தங்கைக்கு புரியவே செய்தது.

அதன் பொருட்டே அவன் வலியை நீக்கிவிடும் வேகத்துடன் தங்கை உரைக்க,

தமயந்தியோ கசங்கிய முகத்துடன் ‘இல்லை’ என்று மட்டும் பிடிவாதமாக தலையாட்ட,அதற்கு மேல் அவளாலும் எதுவும் கேட்க முடியவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களது காதல் விவகாரத்தில் தலையிட முடியாது என்பது புரிந்து நாசூக்காக நடந்துக்கொண்டாள்.

ஆனாலும் தமயந்தியின் வேதனையறிந்து அவளின் கரம் பற்றியவள் “டோன்ட் வொர்ரி…அண்ணா மேலே நீங்க வைச்சிருக்கிற காதலே அவரோட மனசை மாத்தி உங்ககிட்ட கூட்டிட்டு வரும்…ஸ்டே ஸ்ட்ராங்” என தனது நாத்தனாருக்கு தன்னால் முடிந்த ஆறுதல் வழங்கினாள்.

அவளின் பேச்சு காயத்தோடு இருந்தவளின் மனதை சிறிது ஆற்றின.

சந்திரமதியிடம் நெருங்கி பேசிய பிறகே அவளின் குணம் அறிந்துக்கொண்ட தமயந்திக்கு அவளையும் பிடித்துப்போனது.

முகிழ்மதியின் மீதிருக்கும் அளவு பிடித்தம் இல்லையென்றாலும் ‘இனி அவளும் தமது குடும்பத்தில் ஒருத்தி…அவளை விலக்கி வைத்து என்ன செய்யப்போகிறோம்?’ என மனதினை தேற்றி அவளுடனும் இயைந்து பழக ஆரம்பித்தாள்.

தற்போது பெண்கள் மூவரும் ஒரு நீள்விரிக்கையில் அமர்ந்துக்கொள்ள,மீதமுள்ள இருக்கையில் மற்ற அனைவரும் அமர்ந்திருந்தனர்.

இப்போது அனைவரின் விழிகளும் தொலைக்காட்சியின் புறமாக பாய்ந்தன.

அச்சமயம் செய்தியில் ரோகிணியின் குடும்பத்தை பற்றிய செய்தி ஒரு வித பரபரப்புடன் ஒளிப்பரப்பாகியது.

‘பிரபல தொழிலதிபர் அசோக் செல்வன் வீட்டில் சமீப காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நிகழ்த்தினார்கள்.

அதில் கணக்கில் வராத பல லட்சம் கோடி மதிப்புள்ள பணமும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் அவரது மகள் ரோகிணி அசோக் செல்வன் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க,அவரிடம் தீவிர விசாரணை நடப்பதாக ஒரு தகவல் உலாவி வருகின்றது.

இதனோடு ஹோட்டல் ரெசிடென்சியில் மூன்று இளம் பெண்களை ரத்தம் வரும் வரை அவர் காயப்படுத்தி இருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

இதுப்போல் பல மனிதர்களை அவர் காயப்படுத்தி இருப்பதோடு சிலரை கொலையும் கூட செய்திருக்கிறார் என்று விபரீதமான தகவலும் தெரிய வந்திருக்கிறது.

இதனோடு மேலும் பல பெரிய தவறுகள் செய்திருப்பதாக மர்ம நபர்களால் காவலர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில்,அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக எக்கச்சக்கமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன’ என்றவாறு ஒவ்வொரு ஆதாரத்தையும் திரையில் ஒளிப்பரப்பி கொண்டிருப்பதை கண்டு குடும்பத்தினரின் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துப்போயினர்.

ரத்தினவேல் மற்றும் ஜித்தேந்திரன் மட்டும் வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தார்கள்‌.

விஜயேந்திரனிற்கு சொல்லவே தேவையில்லை.

அவரின் முகம் வெளுத்து பேயறைந்தது போல் ஆகியிருந்தது.

‘இப்படியொரு சாக்கடையிலா என் பையனை தள்ளவிருந்தேன்…என் பிடிவாதத்தாலே கல்யாணம் நடந்திருந்தால் அவனோட வாழ்க்கை’ என நினைக்கும் போதே அவரின் ஈரக்குலையே நடுங்கிப் போயின.

“அம்மாடி நல்லவேளை என் பேரனுக்கு இவளோட கல்யாணம் நடக்கலை…அதுமட்டும் நடந்திருந்தால்…ஐய்யோ” என காஞ்சனா மாலாவே நெஞ்சை பிடித்துக்கொண்டார்.

அவரும் கூட இப்படியொரு கொடூரத்தை எதிர்பார்க்கவில்லை.

அதிலும்,ரோகிணியின் வன்முறை செயல் ஒவ்வொன்றும் காணொளியாக திரையில் வெளியாக வானதி மற்றும் முகிழ்மதியின் மேனியில் நடுக்கம் விரவி ஓடின.

தனது அன்னையை தமயந்தி சமாளித்துக்கொள்ள,முகிழை மதி கவனித்தாள்.

ஒரு அடி என்றாலும் அவர்கள் காலம் முழுவதும் எழவே முடியாத வகையில் மரண அடியாக வியூகம் அமைத்து அடித்திருந்தான் ரத்தினவேல்.

கிட்டத்தட்ட அவர்களது ஆணிவேரையே வேரோடு பிடிங்கி எறிந்திருந்தார்கள் அண்ணனும் தம்பியும் ஒன்றாக இணைந்து!

தமையன் ஒரு பக்கம் அதிரடியாக இறங்கி அடித்தாலும் சகோதரனின் துணையுடன் மேலும் சில ஆதாரங்களை திரட்டி நண்பன் வீரின் உதவியுடன் அனைத்தையும் கச்சிதமாக முடித்திருந்தார்கள்.

தமையன் எவ்வித விடயத்திலும் நீ தலையிடக்கூடாது என ஜித்துவை எச்சரித்தாலும்,அவனால் அவ்வாறு அமைதியாக இருக்க முடியிலல்லை.

தன்னவளை அனைவரின் முன்பும் கூனி குறுக வைத்த ரோகிணியை அவனால் எளிதில் விட முடியவில்லை.

அதனால் தன் பங்கிற்கு இரகசியமாய் சில ஆட்களை பிடித்து ஆதாரம் திரட்டி அவனிடம் ஒப்படைத்தான்.

அவனது செயலை எண்ணி ரத்தினவேல் கொதித்தாலும் அவனது முகம் வழியே தெரிந்த உணர்வுகளை படித்தவன் எதுவும் பேசவில்லை.

தம்பிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றே அவனை ஒதுங்கியிருக்க செய்தான்.

ஆனால் அவனோ “அண்ணா பிளீஸ்…என் மூனை அசிங்கப்படுத்தினவளை என்னாலே சும்மா விட்டுட்டு இருக்க முடியாது…என்னை இதிலிருந்து விலக சொல்லாதீங்க” என தீர்க்கமான குரலில் கூறிவனை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “சரி உன்னிஷ்டம்…ஆனால் ஜாக்கிரதை…உயிருக்கு ஆபத்து இருக்கிற எந்த வேலைக்கும் நீ போகக்கூடாது” என கடுமையாக எச்சரித்த பிறகே செயலில் இறங்க அனுமதித்தான்‌.

வீரும் அவர்களது கூட்டணியில் இணைந்துக்கொள்ள மூவரது கூட்டணியில் ரோகிணியின் வம்சாவளியே வேரோடு கருவுறுக்கப்பட்டிருந்தது.

இப்போது சகோதரர்கள் இருவரும் தங்களுக்குள் பார்வையை பறிமாறிக்கொள்ள,வீட்டினர் அனைவருக்கும் இது சகோதரர்களின் லீலைகள் என்பது புரிந்துப்போயின.

மீசையை முறுக்கிவிட்டு கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்தவனின் முகத்தில் ஒரு வன்மம் கலந்த புன்னகை!

சகோதரனின் மீது ரோகிணி கைவைத்தது தெரிந்து கொதித்துப்போயிருந்தவன்,அவள் முகிழ்மதியை அவதூறாக பேசி இழிவாக நடந்தியதை அறிந்ததும் அவன் மொத்தமாக தன்னிலையை இழந்துவிட்டான்.

சிறு தண்டனைகளோடு அவர்களை விரட்டி விட சிந்தித்திருந்த ஆடவன் இப்போது தன்னவளிற்காக கீழிறங்கி ரோகிணியின் குடும்பத்தையே மொத்தமாய் பழித்தீர்த்திருந்தான்.

ரோகிணியின் குடும்பம் பற்றிய கொடூர பக்கங்கள் அறிந்தும் கூட அங்கிருந்து யாவரும் விஜயேந்திரனை குற்றம் கூறாமல் ரோகிணி குடும்பத்தை மட்டுமே திட்டினார்கள்.

அதுவே அவருக்கு மேலும் குற்றவுணர்வைக் கொடுத்தன.

ஏனெனில்,அவர்கள் நினைத்திருந்தால் இப்படியான ஆட்கள் நம் வீட்டிற்குள் நுழைவதற்கு காரணமே நீ தான் என அவரின் மீது பழிசுமத்தியிருக்க முடியும்.

அவ்வாறு எதுவும் செய்யாமல் அவர்கள் பெருந்தன்மையாக நடந்துக் கொண்ட விதமே அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

தன் மீது இத்துணை பாசம் வைத்திருக்கும் குடும்பத்தை சமீப காலமாக வதைத்துவிட்டோமே என கலங்கிப் போனார்,அந்த பெரிய மனிதர்.

இப்படியே மேலும் ஒரு நாள் ஓடிவிட,பூபதி குடும்பம் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தார்கள்.

இன்னும் நான்கு நாளில் திருமண வரவேற்பு என்பதால் அதற்கான வேலையில் இறங்கியிருந்தார்கள்.

அதற்கு முந்தைய நாள் தேர்தல் முடிவுகள் வெளிவர இருந்தன.

வரவேற்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு வீர் ரத்தினவேலின் வீட்டிற்கு வந்தான்.

அதுவும் வருவதற்கு முன்பு அவனிற்கு அழைத்து “இப்போ உன் வீட்டுக்கு வரலாமா பூபதி?” என அவன் புதிதாக அனுமதி வேண்ட,

அவனோ கோபத்தில் இமைகள் இடுங்க “இதென்ன கேள்வி?இதுக்கு முன்னாடி வீட்டுக்கு வர்றதுன்னா என்கிட்ட அனுமதி கேட்டுட்டு தான் வருவீயா?ஒழுங்கா வாடா” என திட்டுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவனது முகம் கோபத்தில் இருப்பதை பார்த்துவிட்டு “யாரு கண்ணா ஃபோனிலே?பேசிட்டு நீ ஏன் டென்ஷனா இருக்கே?” என பாட்டி வினவ,

அவனோ “இந்த வீர் ராஸ்கல் தான்…வீட்டுக்கு வரட்டுமானு பர்மிஷன் கேட்டுட்டு இருக்கான்” என்றான் கடுப்பாக…

அவன் கூறியதை கேட்ட விஜயேந்திரனின் விழிகளோ விலுக்கென்று திரும்பி மகளின் முகத்தை அவதானித்தன.

அவளின் முகம் வீரின் பெயர் கேட்டதும் ஒரு கணம் கசங்கி மீண்டும் இயல்பானது.

பாட்டியும் கூட “ஆமா பூபதி…அந்த பயல் இப்போல்லாம் நாம்ப வீட்டுக்கு வர்றதேயில்லை…நான் கூப்பிட்டால் கூட பாட்டி வேலையிருக்கு…அம்மாவை ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போகணும்…அது இதுனு சாக்கு சொல்லறான்…நானும் சரி பையன் அம்மா கவலையிலே இருக்கான்னு விட்டுட்டேன்” என்றார் ஆற்றாமை கலந்த பெருமூச்சுடன்…

“ஆமா…அவனுக்கு என்ன பிரச்சனைனு சொன்னா தானே தெரியும்…எதையும் சொல்லறதில்லை…அழுத்தக்காரன்” என பல்லைகடித்தப்படி அவன் திட்டிக்கொள்ள,

வீரின் தங்கைகள் இருவருக்கும் கலக்கமாக இருந்தது.

சந்திரமதியின் விழிகள் கூட தமயந்தியை பாவமாக பார்த்திருந்தன.

வீர் அங்கு வருவது தெரிந்ததும் தமயந்தி “எனக்கு ஒரு மாதிரி தலைவலியா இருக்கு…நான் ரூமுக்கு போறேன்” என வலியோடு முணுமுணுத்துவிட்டு விறுவிறுவென அங்கிருந்து செல்ல முயல,

“ஏன்மா இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தே?சுக்கு காப்பி ஏதாவது போட்டுட்டு வரட்டுமா?தலை வலி அதிகமா இருக்கா?” என வானதி அக்கறையாக வினவ,

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா…கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிடும்” என்றவளின் குரல் இலேசாக கரகரத்ததோ?

வேகமாக தாயிடம் பதில் உரைத்துவிட்டு இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறி மேலே ஓடினாள்.

அவளிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

எங்கு அங்கு இருந்தால் தன்னை மீறி அழுது விடுவோமோ என்ற பயத்திலே விரைந்து அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அவள் நினைத்தது போலவே அறைக்குள் நுழைந்தவுடன் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பித்தன.

ரத்தினவேலோ யோசனையாக மேலேறிய தங்கையை தான் பார்த்திருந்தான்.

வழக்கமாக வீர் வருகிறான் என்று தெரிந்தால்,அவன் வருவதற்கு முன்பே அவ்விடத்தில் தவமிருக்கும் தங்கை இன்று விலகி ஓடுவது கண்டு அவனின் இமைகள் இடுங்கின.

அவளின் மனநிலை யாருக்கு புரிகிறதோ இல்லையோ விஜயேந்திரனிற்கு தெளிவாக புரிந்தன.

மகள் படும் வேதனை கண்டு அவரும் மௌனமாய் கண்ணீர் வடிக்கவே செய்தார்.

ஆனாலும் வீரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏனெனில்,மனநிலை சரியில்லாமல் இருக்கும் அவனது தாய்,வசதி வாய்ப்பிலும் அவர்களை விட அவன் குறைவு,அத்தோடு அவர்களிடம் பணிப்புரியும் சாதாரண ஊழியன் அவன்,அத்தோடு அவனது தங்கை இருவரும் இங்கு திருமணம் செய்து வந்திருப்பது இவையெல்லாம் சேர்த்து சிந்தித்தே அவர் தயங்கினார்.

நாளை அவர்களது மருமகளின் வாழ்வில் ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்தால் அவை தன் மகளது வாழ்வையும் சேர்த்து பாதிக்கும் என்பது ஒரு காரணம்,மற்றொன்று செல்வ சீமாட்டியாக வளர்ந்த மகள் அங்கு சென்று துன்பப்படுவதை அவரால் காண முடியாது.

இதற்கெல்லாம் மேலாக அவனை திருமணம் செய்துக்கொண்டு சென்றால் அவனது‌ தாயிற்கு இறுதி வரை சேவகம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நினைக்கும் போதே அவருக்கு இருதயம் வலித்தது.

அவரும் மற்றவர்கள் போல் சராசரி தகப்பான் தான்!

தன் மகள் கண் முன்னே கஷ்டப்படுவாள் என்பதை அறிந்த பிறகும் எவ்வாறு நரகமான ஒரு வாழ்வை அமைத்து தரமுடியும்?

இவையனைத்தையும் சிந்தித்தே அவர் மகளின் துயரம் அறிந்தும் அவள் காதலனை நிராகரித்தார்‌.

வீட்டிற்கு வந்த வீர் தனியாக வந்திருக்கவில்லை.

பல வகையான சீர்வரிசை அடங்கிய தட்டுகள் மற்றும் பொருட்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

ஒவ்வொரு தட்டிலும் அவனது சக்தி மீறிய விலையுயர்ந்த பொருட்கள் அடங்கியிருந்தன.

அதனை அனைவரும் யோசனையாக பார்த்திட,அவன் மெல்ல விளக்கம் கூறினான்.

“கல்யாணம் அப்போவே செய்யணும்னு நினைச்சேன்‌…அந்த சமயம் சூழ்நிலை சரியில்லை…அதான் இப்போ செய்யறேன்” என வீர் பணிவுடன் கூற,

“வீர் இதெல்லாம் நாங்க எதிர்பார்ப்போம்னு நினைக்கிறீயா?தங்கரதம் மாதிரி உன் தங்கச்சி இருக்கும் போது இந்த தங்கம் வைரமெல்லாம் அவசியமா?” என தட்டில் அவன் வைத்திருந்த தங்க மற்றும் வைர ஆபரணங்களை காட்டி ஆதங்கமாக கேட்டார் பாட்டி.

“அப்படியில்லை பாட்டி…என் தங்கச்சிங்க தங்கம் தான்…ஆனால் முறைனு ஒண்ணு இருக்கே…ஒண்ணுக்கு இரண்டு தங்கச்சி இந்த வீட்டிலே கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்கேன்…உங்க வசதிக்கு செய்ய முடியலைனா கூட ஏதோ என் சக்திக்கு ஏற்ற மாதிரி ஏதாவது செய்யணுமில்லை…பிளீஸ் இதை மட்டும் வேணாம்னு சொல்லாதீங்க” என கையெடுத்து கும்பிட்டு வேண்ட, அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதிரி மனம் பிசைந்தது.

அவனது தங்கை இருவருக்கும் கண்ணீரே வந்து விட்டிருந்தது.

அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் காணும் போதே நன்றாக தெரிந்தது.

அவன் உதிரத்தைக் கொட்டி சம்பாதித்த அனைத்தையும் தங்கைகளுக்காக தாரை வார்த்து கொடுத்திருக்கிறான் என்று!

அதை நினைக்க நினைக்க அவர்களின் உள்ளம் விம்மியது.

புகுந்த வீட்டில் சகோதரிகள் இருவரும் கௌரவமாக வாழ வேண்டும் என்ற அவனின் எண்ணம் அனைவரின் நெஞ்சையும் உருக்கியது.

விஜயேந்திரன் கூட அவனின் தன்மான குணம் கண்டு ஆச்சரியம் கொண்டார்.

அவனது திறமை அவர் அறிந்ததே?

ஆனால் தன் உறவுகளுக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கும் வீரின் இந்த பரிமாணம் அவருக்கு புதிது!

அவனோ பெண்களுக்கு மட்டுமின்றி வீட்டு மாப்பிள்ளை இருவருக்கும் தங்கத்தால் செய்த நகைகளையும் முறையாக வாங்கி வந்திருந்தான்.

அவர்களது கையில் தங்க மோதிரத்தை போட அவன் முன் வர ஜித்தேந்திரன் “அண்ணா…” என ஆரம்பித்தவன்,

“சாரி பழக்கத்தோஷம்…இதெல்லாம் எதுக்கு?” என வருத்தமாக வினவ,

அச்சமயம் ரத்தினவேல் “ஜித்து அமைதியா இரு” என சகோதரனை அதற்கு மேல் பேச விடாமல் அடக்கிவிட்டான்.

அதேப்போல் தோழனிடம் திரும்பிய ரத்தினவேல் “இப்போ என்னடா உன் தங்கச்சிங்களுக்கு சீர் வரிசை செய்யணும்…அவ்வளவு தானே செய்” என அனுமதி வழங்கியவன்,அவனது கரத்தையும் நீட்ட வீரின் முகம் மலர்ந்தது.

நண்பனின் கரத்தில் மோதிரத்தை போட்டுவிட்டு,அதேப்போல் ஜித்துவின் கரத்திலும் மோதிரத்தை போட்டுவிட்டான்.

மோதிரத்தை தூக்கிகாட்டி “போதுமாடா?இப்போ சந்தோஷமா?” என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி வினவ,

வீரும் “ம்” என இதழ்விரிந்த புன்னகையுடன் தலையாட்ட,

“நானும் எல்லாத்தையும் ஞாபகம் வைச்சுப்பேன்டா…நீயும் என்னைக்கும் எதையும் மறக்காதே” என அவனை அழுத்தமாக பார்த்தப்படி கூறியவனின் சொற்களில் புதைந்திருந்த பொருள் அங்கிருந்த யாவருக்கும் புரியவில்லை‌.

வீர் கூட அவனது பேச்சை கேட்டு குழம்பிப்போய் தலையாட்டினான்.

சில நிமிடங்கள் அவர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு அழும் தங்கைகளை சமாதானம் செய்து புறப்பட ஆயுத்தமானவனை “வீர் இரண்டு வாய் சாப்பிட்டு போப்பா” என வானதி சொல்ல,

“பரவாயில்லை அத்தை…ரிஷப்ஷன் சம்மந்தமா கொஞ்சம் வேலையிருக்கு…நான் கிளம்பறேன்” என அனைவரிடமும் பொதுவாக விடைப்பெற்று கிளம்பினான்.

அவன் அங்கிருந்து விடைப்பெறும் நேரம் வரையிலும் அவனது உள்ளம் அவளை காண தவியாய் தவித்தது.

ஆனால் அவனது உள்ளத்து இதயராணி அவனை காண விருப்பம் அற்றவளாய்,அதேசமயம் அவனை காண தவமேற்று அறைக்குள் கண்ணீர் விட்டப்படி வாடிக் கிடந்தாள்.

இறுதி வரை அவளை காண முடியாத ஏக்கத்துடன் இதயம் வலிக்க வெளியேறியவனின் விழிகள் கலங்கிப்போயின.

தனது ஜீப்பில் ஏறி பயணித்த வீர் அவனையும் அறியாமல் அன்று தமயந்தியுடன் வந்த மலையின் முகட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தியிருந்தான்.

மலையின் உச்சிக்கு வந்தவுடன் ஜீப்பை நிறுத்திவிட்டு அதன் மேல் ஏறி அமர்ந்தவனின் மனமெல்லாம் அவளின் ஞாபகங்கள் மட்டுமே!

அப்படியே விழி மூடி சில நிமிடங்கள் தலைசாய்த்து அமர்ந்தவனின் இமையோரம் நீர் கசிய ஆரம்பித்தன.

“சிந்திய மழைத்துளி போல் 
அவள் ஞாபகங்கள் 
அவனுள் குளமாய் தேங்கி நிற்க
நெஞ்சோடு இயைந்து 
உயிரில் கலந்தவிட்டவளின் 
புன்னகை மட்டுமே இப்போது மிச்சமாய்”
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top