தங்களது அறைக்குள் குழப்பத்துடன் நுழைந்த முகிழ்மதி கணவனை அங்கு காணாமல் திகைத்தாள்.
விழிகளை நாற்புறமும் அவள் சுழற்ற,கணவன் அந்த அறைக்குள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
‘எங்க போயிட்டாரு இந்த மாமா’ என நெற்றி சுருங்க அவள் சிந்தித்த நேரம் “ஃபைனலி அம்மையாருக்கு புருஷன் ஞாபகம் வந்திடுச்சு போலே” என நக்கலாக கேட்டுக்கொண்டே அறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ரத்தினவேல்.
அவன் குரல் கேட்டு “மாமா” என பரவசமாக அழைத்தப்படியே அவனது திசைப்பக்கம் அவள் திரும்ப,
அவனோ அவளை இமைகள் இடுங்க முறைத்து “இங்க என்னடி பண்ணறே?அப்படியே உன் அம்மா வீட்டுலே குடியிருக்கலாமில்லை…இங்க எதுக்கு வந்தே?” என தாடையை கோபத்தோடு தடவியப்படியே மனையாளை கடந்து சென்றான்.
எப்போதும் அவர்களறைக்குள் நுழைந்ததும் பேசுவதற்கு கூட நேரம் வழங்காமல் அவளை ஆக்கிரமிக்கும் கணவன் தன்னை கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்லவும் அவளின் முகம் சுருங்கின.
அத்துடன் அவன் பேசிய பேச்சிலிருந்தே தன் மீது கண்ணாளனிற்கு சினம் இருப்பதை அறிந்து நாக்கை கடித்தாள்.
‘அப்போ அக்கா இதை தான் சொன்னாங்களா?அச்சச்சோ அம்மா வீட்டுக்கு போனதிலே மாமா செம்ம கோபமா இருக்காரு போலே…இப்போ எப்படி அவரை சமாதானம் செய்யறது?’ என புலம்பிக்கொண்டே கைகளை பிசைந்தாள்.
சட்டென அவளை நோக்கி திரும்பியவன் அவள் பதட்டத்துடன் நின்றிருப்பதை பார்த்ததும் முதல் நாள் அவளை அந்த அறைக்குள் கண்ட ஞாபகம் எழுந்தது.
தன்னறையின் வடிவமைப்பை காண ஆவல் கொண்டு உள்ளே நுழைந்தாலும் தன்னில் பயம் கொண்டு அவள் மிரண்டு நின்ற விதம் கண்முன் வந்து சென்றன.
அன்று அவள் யாரோ ஒரு அந்நிய பெண்…
இன்று அவள் அவனது மனைவி…இப்போதும் அதே நிலை மாறாமல் அஞ்சி நின்ற இல்லாளை பார்த்து சலிப்பாக தலையசைத்துக் கொண்டான் ரத்தினவேல்.
‘இவ கொஞ்சம் கூட மாறவே இல்லை’ என எரிச்சலாக மீசையை முறுக்கிவிட்டு உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தான்.
அவனை போலவே அவளிற்கும் முதல் நாளைய சந்திப்பு நினைவில் எழ ஒரு இனிய படபடப்பு மேலெழுந்தன.
திருமணத்திற்கு பின்பு கூட ஒரு சில நாள் இந்த அறையினுள் அவள் தங்கியப்போதும் சகோதரியின் நினைவில் இருந்ததால் எதையும் கவனித்திருக்கவில்லை.
அன்று தன்னவனின் தோற்றத்தில் அஞ்சி நடுங்கியது,அதன்பிறகு அறையை சுற்றிப்பார்க்க அவன் அனுமதி வழங்கியதும்,அந்த அறையின் அரசர் கால வேலைப்பாட்டை ஆர்வத்துடன் பார்வையிட்டது,இறுதியாக அந்த அறைக்குள் இரகசிய கதவின் பின் ஒளிந்திருந்த சிலை,அதனை முழுமையாக காண விடாமல் அவளின் கண்ணை பொத்தி கோபத்தோடு கணவன் வெளியே அனுப்பியது என ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் நினைவில் எழ அவளின் நெஞ்சம் இப்போது பரபரத்தது.
அன்று புரியாத பலவும் அவளிற்கு அக்கணம் புரிந்தது.
தன் மேல் அப்போதே கணவன் நேசம் கொண்டிருக்கிறான்.அதன்பொருட்டே அறைக்குள் நுழைய யாவருக்கும் அனுமதி வழங்காதவன் தன்னை மட்டுமாக அனுமதித்திருக்கிறான் என்று!
‘அப்போ மாமாவுக்கு நான் தான் ஸ்டார்னு தெரியறதுக்கு முன்னாடியே என்னை அவ்வளவு பிடிக்குமா?’ என நினைக்கும் போதே உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புது இரத்தம் பாய்ந்தது.
அவளின் மனம் சிறகென்று வானில் பறந்த அதே நேரம் தன்னிடமிருந்து கணவன் மறைத்த சிலையின் நினைவு எழ அவளின் முகம் அப்படியே சிந்தனையில் சுருங்கிவிட்டன.
அவளின் விழிகள் பெண்ணின் சிலை குடிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாக பயணிக்க ‘ஆமா…அது என்ன சிலை?’ என அறிந்துக்கொள்ளும் வேட்கையில் இதயம் படபடத்தன.
அதற்காகவே அவளின் விழிகள் ‘மாமா’ என அவசரமாக தன்னவளை தேடிட,
அவனோ உடைமாற்றும் அறைக்குள் இருப்பதை அறிந்து அங்கு சென்றாள்.
அவள் அவ்வறைக்குள் நுழையும் வேளை மணாளன் அப்போது தான் சட்டையை கழற்றிவிட்டு வேட்டியையும் அவிழ்க்க ஆயுத்தமாக இருந்தான்.
அச்சமயம் படீரென்று அவனது மனையாள் உள்ளே நுழைந்ததும் ரத்தினவேல் மெதுவாக அவளை புருவம் சுருக்கி பார்த்தவாறே ஆடைகளை களைய ஆரம்பித்தான்.
வழக்கமாக கூடல் அல்லாத பொழுதுகளில் மேல்சட்டையின்றி அவன் இருந்தாலே விழிகளை பதட்டத்துடன் மூடிக்கொள்வாள் அவள்.
இன்றோ அவன் உடைகளை களைவதை அறிந்தும் எவ்வித சங்கோஜமும் இல்லாமல் சரசரவென உள்ளே நுழைந்தவள் “மாமா” என அவனை பின்னோடு அணைத்து,அவன் முதுகில் முகம் புதைத்தாள்.
அந்த சிலையை பற்றி அறிவதற்கு அவளிற்குள் அப்படியொரு ஆர்வம்…
கூடவே அவளுள் ஒரு இனம் புரியாத தவிப்பு…
ஏனெனில்,அதுவொரு பெண்ணின் சிலை என்பது அவளிற்கு சர்வ நிச்சயம்!
அப்போது அந்த பெண்ணின் சிலை தாமாக இருக்கக்கூடுமோ என இனிமையான அவஸ்தை உள்ளுறிய அதே வேளை ‘ஆனால் மாமாவுக்கு என்னை சரியா தெரியாதே…அப்போ அது யாரா இருக்கும்?’ என்ற தடுமாற்றம் மற்றொரு புறம்!
தள்ளாடிய சிந்தையுடன் அவள் குழம்பி இருந்ததால் அவளின் மனமோ ‘இது என்னவன்…எனக்கு மட்டுமே சொந்தமானவன்’ என்ற உரிமையுணர்வுடன் அவனை இறுக அணைத்திருந்தது.
தான் நிற்கும் கோலம் கண்டு அவள் அங்கிருந்து சென்றுவிடுவாள் என்று அவன் எண்ணியிருக்க,அவளோ அங்கிருந்து விலகாமல் அவனை வந்து தழுவியதும் அவனது வெற்று தேகம் சிலிர்த்தது.
அத்துடன் அவளின் சில்லிட்ட கரமும் முதுகில் புதைந்திருந்த பாவையவளின் முகமும் ஆடவனது உணர்ச்சிகளை தூண்ட செய்வதாய் இருந்தன.
ஆனால் அவளின் மென்கரங்களின் அழுத்தமும் அவளது திடீர் அணைப்பும் அவனிற்கு எதையோ உணர்த்த,அவளின் கரம் பற்றி வெடுக்கென்று முன்னே இழுத்தான்.
அவனது ஒரு இழுப்பிற்கே அவனது ஆளுகைக்குள் சரணடைந்த அழகு மதியாளின் முகம் பற்றி நிமிர்த்தினான்.
விழி வழியே அவளின் உணர்வுகள் அறிய அதனை ஆழ்ந்து நோக்க,அதுவோ ஓரிடத்தில் நிலையூன்றி நிற்காமல் இங்குமங்கும் கண்ணாமூச்சி ஆடின.
அதில் கடுப்பான ரத்தினவேல் “முகிழ்” என அதட்டலாக அழைத்தான்.
தன்னவனின் அதட்டலில் அவள் மிரட்சியுடன் அவனை ஏறிட,அதில் சிறிது இளகியவன் “என்னடி பிரச்சனை உனக்கு?எதுக்கு இப்படி ரெஸ்ட்லெசா இருக்கே?” என குரலை தாழ்த்தி வினவ,
அவளோ “அது அது…” என பேச முடியாமல் தடுமாறியவள்,பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ சட்டென இமைத்தாழ்த்தி “அது நீங்க வேணும்” என சிறுப்பிள்ளை போல் அவனது வெற்று நெஞ்சில் விரல் வைத்துக் காட்டியவளை கண்டு ரத்தினவேலிற்கு பேரதிர்ச்சி!
ஆனால் அது ஆனந்த அதிர்ச்சி!
தன் மனையாள் தாம்பாத்தியத்தை யாசிப்பாள் என அவன் கனவில் கூட எதிர்பார்த்ததில்லை.
அவனையே ஆச்சரிய பெருங்கடலில் முகிழ்த்தும் வகையில் மனையாளின் இந்த அவதாரம் அவனை வேரோடு சாய்ந்தது.
கடந்த இரண்டு நாட்களாக தீராத மன உளைச்சலில் இருந்தவனின் ஊடல் எல்லாம் அவளது இந்த வசனத்தில் தூள் தூளாக நொறுக்கிவிட்டாள்.
அவனோ நீட்டிய அவளது விரலை பற்றி “கம் அகைன் ஸ்டார்…எனக்கு சரியா கேட்கலை” என இதழ்கடித்து சிரித்தப்படி வினவ,
அவளிற்கோ மீண்டும் அதனை வெளிப்படையாக கூற நாணம் தடுக்க அவளின் இமைகள் பட்டாம்பூச்சியாய் படபடத்தன.
அவளின் சிவந்த முகம் மற்றும் படபடத்த விழிகளை உற்று நோக்கியவனின் முரட்டு தேகம் முறைக்கேறி உணர்ச்சிகள் கிளர்ந்தெழ செய்ய “சொல்லுடி என்ன சொன்னே?” என புருவம் உயர்த்தி கேட்டவனின் கரம் அவளின் வெண்ணிற இடையில் ஒரு கிள்ளலை பரிசாக கொடுக்க,
அதில் “ஆ” என இலேசாக துள்ளிகுதித்து அலறியவள் அவனின் பொறுமையை நன்றாகவே சோதித்தாள்.
அத்தோடு அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இதழ்கடித்தவுடன் அவளின் மச்சம் ஆடவனை சுண்டியிழுத்திட சட்டென குனிந்து அவளின் மச்சத்தை புசிக்க ஆரம்பித்துவிட்டன,அவனது அதரங்கள்!
அவன் அதிரடியாக முத்தமிடுவான் என்பதை எதிர்பாராத மங்கை ஒரு கணம் அதிர்ந்து விழி விரிக்க,இறுதியில் அவனது முத்தத்தில் மயங்கி விழிகள் சொருக இமை மூடி நின்றாள்.
தன்னவளின் மயக்க நிலையை உணர்ந்த அவனது கள்வனோ அவளுள் இன்னும் ஆழப் புதைத்து தேனமுதத்தை அள்ளி பெருகும் பணியை மேற்கொண்டான்.
சில நிமிடங்கள் வரை தொடர்ந்த அந்த முத்தத் தாக்குதலுக்கு பிறகு தன்னவளை அவன் விடுவிக்க,அவள் வழமை போல் அவன் வெற்று நெஞ்சில் தொய்ந்து விழுந்தாள்.
அதில் அவனது இதழ்கள் தாராளமாக விரிந்துக்கொள்ள,அவளின் தலையை பரிவுடன் வருடி மனையாளிற்கு உரிய ஆறுதல் அளித்தான் மணாளன்.
அவள் சிறிது ஆசுவாசமடைந்தப்பிறகே அவனது வெற்று தேகத்தில் தலைசாய்த்து இருப்பதை உணர்ந்து படக்கென்று அவனிடமிருந்து விலகிய மனையாள் அவனிருக்கும் கோலம் கண்டு “ஐய்யோ” என முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள்.
அவனோ “ரொம்ப ஓவரா பண்ணாதேடி…இதுக்கு முன்னாடி நீ இப்படி என்னை பார்த்ததே இல்லையா?” என கேலியாக கேட்டவாறே அலமாரியிலிருந்து துவாலை எடுத்து இடையில் கட்டிக்கொண்டான்.
அவனது கேள்வியில் அவளின் மேனி குப்பென்று சூடேறி சிவந்துவிட “மாமா…” என தவிப்புடன் சிணுங்கியவளை ஒரு பெருமூச்சுடன் நோக்கிய ஆடவன் “சரி நீ வெளிய இரு…எனக்கு ஒரே கசகசன்னு இருக்கு…நான் குளிச்சிட்டு வந்திடறேன்” என குளியலறைக்குள் நுழைய ஆயுத்தமானான்.
அவளிற்கும் கட்டியிருந்த பட்டுப்புடவையினால் உடலெல்லாம் வியர்வையாக இருக்க “எனக்கும் குளிக்கணும் மாமா” என ஏதேச்சையாக உரைக்க,
உடனே விழிகள் மின்ன அவளை நோக்கி திரும்பிய ரத்தினவேல் “அப்போ சரி வா…இரண்டு பேரும் சேர்ந்தே குளிக்கலாம்…” என விஷத்துடன் கூறி அவளின் கரம் பற்ற வர,
“அச்சோ…” என அவள் ஓரடி பின்னடைய,
“அது சரி…” என சலிப்பாக தலையாட்டிய ஆடவன் அவளை மேலிருந்து கீழாக நோக்கிவிட்டு “நான் வரவரை நீ டிரஸ் சேன்ச் பண்ணாதேடி…நான் சீக்கிரம் வந்திடறேன்” என உருகி வழியும் தாபத்துடன் உரைக்க,
அவளோ ‘ஏன்?’ என்பது போல் பார்க்க “வந்து சொல்லறேன் இரு…” என உஷ்ணப் பெருமூச்சுடன் அவளது மேனியை வஞ்சனையின்றி அளவிட்டப்படியே அவன் குளிக்க சென்றான்.
அவளிற்கோ அவனது பார்வையும் பேச்சும் அவனது எதிர்பார்ப்பை உரைக்க,அவளின் மேனி மொத்தமும் தாபத்தில் கிளுகிளுத்தது.
கண்ணாடி முன்பு நின்று ஒரு முறை தன்னழகை அளவிட்டவளின் இதயம் தன்னவனிற்காக தவித்து தத்தளித்தன.
இன்று சந்திரமதி தான் மணமகள் என்றாலும் அவளிற்கு எடுக்கப்பட்ட அதே தங்க நிற சரிகை கொண்ட பட்டுப்புடவை அணிந்திருந்தாள் முகிழ்மதி.
ஆனால் அவளிற்கு அரச நீல நிற பட்டுப்புடவை என்றால்,முகிழ்மதிக்கு அரச சிவப்பு நிற பட்டுப்புடவை!
இரண்டு புடவையும் தத்தமது கணவன்மார்களின் தேர்வு!
தங்களது மனையாளின் பொன் நிறத்திற்கு ஏற்றாற் போன்று ஆடை மட்டுமின்றி நகை தேர்விலும் அவர்களது ரசனையை வெளிப்படுத்தியிருந்தார்கள் அவர்கள்.
முகிழ்மதியும் சந்திரமதிக்கு இணையான சர்வ அலங்காரத்துடன் அன்றைய நாள் முழுவதும் வலம் வந்திருந்தாள்.
புடவை மாற்றக்கூட நேரமின்றி இப்போது வரை அதே சிவப்பு நிற பட்டுப்புடவையில் விண்ணுலக ரம்பையை தோற்கடிக்கும் படி இருந்தவளின் அழகை அணுஅணுவாய் ரசித்து அனுபவிப்பதற்காகவே அவனது உடலும் உள்ளமும் கள்வெறிக் கொண்டன.
அதன் பொருட்டே,அவளிடம் அலங்காரத்தை கலைக்க வேண்டாம் என அவன் வலியுறுத்தி சென்றிருக்க,தன்னவனது ரசனையான பார்வையே அவளின் அடி வயிற்றில் தீ முட்ட செய்தன.
அதனால் மணானுக்கு ஏற்ற தர்மபத்தினியாய் அவனது வரவிற்காக கட்டிலில் உடைமாற்றாமல் அமர்ந்து பதட்டத்துடன் காத்திருந்தாள்.
அதேசமயம் அவளின் விழிகள் அவ்வப்போது அந்த சிலையிருக்கும் சுவற்றை வெறிக்கவும் தவறவில்லை.
குளித்துவிட்டு ஈரம் சொட்டிய தலைமுடியுடன் வெண்ணிற வேட்டி சட்டையில் வெளியே வந்த ரத்தினவேலின் விழிகள் அவளின் தவிப்பான பார்வையை கவனித்து விட்டன.
அவளின் விழிகள் பதிந்திருந்த இடத்தை கண்டவனிற்கு அனைத்தும் ஆணித்தரமாய் விளங்கின.
‘ஓஹோ மேடமோட இந்த அதிரடி தவிப்புக்கு காரணம் இந்த சிலை தானா?அதுவும் யாருக்கூட போய் உரிமைப்போராட்டம் நடத்திறாள் இவ’ என தனக்குள்ளே எண்ணி தலையாட்டி சிரித்துக்கொண்டான்.
தனது ஈரம் படிந்த சிகையை கோதியப்படியே அவன் வெளியே வந்ததை கண்டு அவள் மெதுவாக எழுந்து நின்றாள்.
அவனோ அவள் எழுந்து நின்றதை கண்டு சலிப்பாக தலையசைத்தப்படி “முகிழ் இங்க வா…” என அவளை விரல் நீட்டி அருகே அழைக்க,
காரிகையவளோ கணவன் தன்னுடன் சல்லாபம் புரிய அழைக்கிறானோ என்றெண்ணி கால்கள் பின்ன மெதுவாக நடந்து சென்றாள்.
“ஏன்டி இப்போ எதுக்கு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு வர புதுப்பொண்ணு மாதிரி வெட்கப்படறே?அவ்வளவு சீன் எல்லாம் இல்லை…வேகமா நடந்து வா” என அதற்கும் மனையாளை அதட்ட,
அவள் வேகமாக நடந்து அவனருகே வந்ததும் “உனக்கு என்னடி பிரச்சனை?எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லுனு எனக்கு சலிச்சு போச்சு…என்னடி விஷயம்?” என அவனிற்கு உரிய கணீர் குரலில் வினவியதும்,அவள் மௌனம் காத்தாள்.
“முகிழ்” என சற்றே அழுத்தமாக அவன் அழைத்தப்பிறகே அந்த பதுமையிடமிருந்து சொற்கள் வெளிவந்தன.
அவனை மெல்ல தலையுயர்த்தி பார்த்த காரிகை “அது அதுக்குள்ள ஒரு சிலையிருக்கில்லை…அது யாரு?” என நலிந்த குரலில் சிறிது தடுமாற்றத்துடன் வினவ,
“அதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா அதுக்கு ஏன்டி இவ்வளவு தடுமாறுறே?நான் உன் புருஷன் தான்…உனக்கு அதை எத்தனை தடவை சொல்லியாச்சு…ஆனாலும் நீ கேட்கிறதே இல்லை” என அவளை அவன் முறைத்தான்.
அவர்களுக்குள் எவ்வித ஒளிவுமறைவும் இல்லாத சமயமும் தயங்கிக்கொண்டிருக்கிறாளே என அவனிற்கு ஆதங்கமாக வந்தது.
அவளோ “இல்லை அன்னைக்கு நீங்க அதை திறந்ததுக்கு அவ்வளவு கோபப்பட்டிங்க…அதான் இன்னைக்கு கேட்கலாமா வேணாமானு ஒரு தயக்கம் மாமா” என தனது தயக்கத்திற்கான காரணம் எடுத்துரைத்தாள்.
அதன்பிறகே அவளின் நிலை புரிந்த ஆடவன் இதழை குவித்து ஊதி “ஆமா அன்னைக்கு கோபப்பட்டேன் தான் முகிழ்…அப்போ நீ எனக்கு யாருமே இல்லை…இப்போ அப்படி இல்லையே…நீ என்னோட லைஃப்…நீ எது கேட்டாலும் நான் கோபப்படமாட்டேன்…அதுவுமில்லாமல் அன்னைக்கு உன்னை பார்க்க விடாமல் தடுத்ததுக்கு வேற ஒரு காரணம் இருக்கு…அந்த சிலைய பார்த்தால் உனக்கே தெரியும்…வா நீயே உன் கையாலே அதை திற…” என புதிர்ப்போட்டவனின் பேச்சு அவளின் இதயத்தை தாறுமாறாக துடிக்க வைத்தன.
அவனோ அவளின் கரம் பற்றி அந்த சிலையின் கரத்தை திருப்பி விட,அந்த இரகசிய சுவரு தானாக விலகி அதற்குள் பதுங்கி இருந்த தங்க நிற சிற்பம் இவர்கள் விழிகளுக்கு காட்சிப்பொருளாகின.
ஐந்தடி உயரத்தில் அரசர் கால முறையில் அனைத்து அங்கங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான ஆடை உடுத்தி,அதற்கு ஏற்ற அணிகலன் அணிந்து பாரதநாட்டிய நாயகிபோல் இடையை வளைத்து எழிலாய் நின்றிருந்த பெண்ணவளின் கையில் ஒரு பூமாலை இருந்தது.
முதலில் அவளின் பார்வையில் விழுந்தது என்னவோ அந்த பெண் சிலையின் கவர்ச்சிகரமான தோற்றம் தான்!
ஆதலால் “ஐய்யோ” என அவள் நாணத்தில் பார்வையை விலக்கியிருந்தாள்.
உடனே பக்கவாட்டாக திரும்பி மனையாளை நோக்கிய ரத்தினவேல் “ஏய் முகிழ்…எதையும் கலைநயத்தோடு பார்த்தால் ஆபாசமா தெரியாது…முதலில் உன் பார்வையை மாத்து…அப்போ தான் நிர்வாணம் கூட புனிதமா தெரியும்” என கலைகளை பார்க்கும் விதம் பற்றி அவளிற்கு பாடம் எடுக்க,
சட்டென விழி உயர்த்தி கணவனை ஏறிட்ட மங்கை “ஏங்க நீங்களும் ‘ஸ்டார்’ அவரோட பிளாக்ஸ் எல்லாம் படிப்பீங்களா?அவரும் இதையே தான் சொல்லுவாரு” என விழிகள் மின்ன கூறியதும்,அவனோ அவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கி “ம்” என்று மட்டும் சொன்னான்.
அதில் குதூகலமான அவனது மனையாள் “சூப்பருங்க…அவர் செம்ம டெலென்டெட் தெரியுமா?இரண்டு வருஷமா தான் அவரை நான் ஃபாலோ பண்ணறேன்…அவர் தான் என் கைடு…ஃபிலாசஃபர் எல்லாம்…அவரோட பிளாக் படிச்சு இம்ப்ரஸாகி தான் எனக்கு கலை மேலே பெரிய ஈர்ப்பே வந்துச்சுங்க…” என அதீத ஆர்ப்பாட்டமின்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தவளை ஆச்சரியமாக நோக்கினான்.
இவையெல்லாம் வீரிடம் அவள் கூறும் போது அவன் அறிந்த விடயங்கள் தான்!
ஆனால் தன்னிடம் அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவனிற்குள் மகிழ்ச்சி முகிழ்ந்தன.
சிறுப்பிள்ளை போல் அவள் தலையாட்டி பேசும் விதம் பார்த்தவனிற்கு இரண்டு கண்கள் போது வில்லை.
‘என் ஸ்டார் எவ்வளவு அழகா பேசறாள்’ என அவளையே இமைக்க மறந்து கண்டவனிற்குள்,சிறு பொறாமையும் கிளர்ந்து எழுந்தன.
உலக வரலாற்றிலே தன்னை எண்ணி தானே பொறாமை கொண்டவன்,அவன் ஒருவனாக தான் இருப்பான்.
ஆம்,அவன் தான் அவளது புகழ்ச்சியின் உச்ச நாயகன் ஸ்டார்…அவளது பெயரில் தான் திரைமறைவிற்கு பின்பிருந்து அவனிற்கு பிடித்தமான பணியை செய்துக்கொண்டிருக்கிறான்.
அதையறியாத அவன் மனையாளோ அவனிடமே அவனை பற்றி புகழாரம் சூட்டிக்கொண்டிருக்க,அவனிற்கு ஒரு கட்டத்தில் கடுப்பு வந்துவிட்டது.
அதனால் அவளின் வாயை அடைக்கும் விதமாக அவளின் கழுத்தை வெடுக்கென்று பற்றியிழுத்து அவள் இதழை சிறைச்செய்திருந்தான்.
அவனது அதிரடி முத்தத்தில் அவள் மயங்கிப்போக,அவளின் இதழில் ஆற அமர இதழராய்ச்சி நிகழ்த்தியிருந்தான் முகிழ்மதியின் மன்னவன்.
அவளின் இதழில் அவன் அழுத்தமாக முத்தமிட்டு விலகியதும் சிவந்த நிற புடவைக்கு இணையாக அவளும் செங்கொழுந்தாகி போயிருந்தாள்.
மனையாளின் முகச்சிவப்பை ரசித்துக்கொண்டே “ஸ்டார்…” என்றவன் “சிலைய பார்க்கலையாடி?” என ஞாபகப்படுத்திய பிறகே அவளிற்கு நடப்பு உரைக்க நாணத்துடன் சிலையின் புறமாக விழிகளை திருப்பினாள்.
அரைக்குறை ஆடையுடன் அங்கங்கள் பளீச்சிடும் பழங்கால பெண்ணின் தோற்றத்தில் இருந்த சிலையை கவனித்தப்படியே விழிகளை முகத்திற்கு உயர்த்தியவளின் மேனியில் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சியுற்றாள்.
“இது…இது…” என பேச முடியாமல் வாய் தந்தியடிக்க கணவனை நோக்கி அவள் உச்சக்கட்ட திகைப்புடன் வினவ,
அவனோ மென்மையாக புன்னகைத்து “எஸ்…இது நீ தான் ஸ்டார்” என அவளை பின்னிருந்து அணைத்தப்படி காதோரம் உரைக்க,அவனது கரத்தில் அவளின் சரீரம் உருகிக்குழைந்தன.
அவளிற்கு ஒரு பக்கம் அது தாமாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் இருக்க தான் செய்தது…
இப்போது அவளின் எண்ணம் நூறு சதவீதம் சரி என்பது தெரிந்ததும் மகிழ்ச்சி பெருவெள்ளம் ஒரு புறம் என்றால் அவளின் மூளைக்குள் பல விதமான கேள்விகள் உதித்தன.
அவளின் மலர்ந்த முகத்தில் குழப்ப மேகங்கள் சூழ்ந்ததை கண்ட ரத்தினவேல் “இந்நேரம் உன் சின்ன மண்டைக்குள் ஆயிரத்தெட்டு கேள்வி முளைச்சிருக்குமே…தலை வெடிக்கிறதுக்கு முன்னாடி அதையும் கேளுடி” என அவளின் தலையோடு தலை முட்டி வினவ,
அவளோ தலையுயர்த்தி அவனை ஏறிட்டு “அன்னைக்கு நீங்க என்னை பார்க்க விடாமல் செஞ்சதுக்கு இது தான் காரணமா மாமா?” என தாம் சிந்தித்து அறிந்த விடயங்களை சரிப்பார்க்க வினவ,
“ஆமாடி…” என ஆமோதிப்பாக தலையசைக்க,
அவளின் சிந்தைக்குள் உதித்த சந்தேகங்களுக்கு அந்த பதில் போதவில்லை போலும்.
ஆதலால் “ஆனால் மாமா…அப்போ என்னை உங்களுக்கு தெரியாதே?அப்புறம் எப்படி தத்தரூபமா வடிச்சீங்க?” என மற்றொரு கேள்விக்கணையை தொடுக்க,
அவனோ தீர்க்கமான குரலில் “நான் சிலையா வடிச்சதே முகிழ்மதியை இல்லை…என்னோட ஸ்டாரை…” என்று ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவளை மேலும் குழப்பியடித்தான்.
அவளின் குழம்பிய முகம் கண்டு சிரித்துக்கொண்டே அவளை தன்னை நோக்கி திருப்பிய ரத்தினவேல் “என்னடா குழப்பறேன்னு பார்க்கறீயா?” என புருவம் உயர்த்த,
“ஆமா” என அவள் பாவமாக தலையாட்ட,
அவளின் பாவனை கண்டு அவனிற்கு பாவமாக இருக்க “உனக்கு சில விஷயங்கள் தெளிவா சொன்னால் தான் புரியும்…என்னோட வா…” என்றவன் அந்த பெண் சிற்பத்தின் காலில் இருந்த சலுங்கையை காட்டி “இது என்னனு தெரியுதா?” என அவளை கூர்மையாக பார்த்தப்படி கேட்டான்.
அதனை உற்றுப்பார்த்தவளின் விழிகள் சடுதியில் விரிந்திட “இது…இது என்னோட கொலுசு…ஒரு கொலுசு தொலைஞ்சுப்போச்சுனு கழட்டி வைச்சிட்டேன்…அது எப்படி எங்கே?” என திக்கி திணறி தடுமாற்றத்துடன் அவனிடம் வினவ,
அவனோ “இது நீ கழட்டி வைச்ச கொலுசு இல்லைடி…நீ கோவில்ல தவறவிட்ட கொலுசு” என்றான் நிறுத்தி நிதானமாக…
அதைக்கேட்டு ‘என்ன?’ என அதிர்ச்சியுடன் அவள் விழி விரிக்க,
அவளின் விழியோடு விழி கலந்து “ஆமா ஸ்டார்…உன்னை அன்னைக்கு தான் கோவில்ல முதல் முறையா பார்த்தேன்…ஆனால் சில நொடி தான் உன் முகத்தை பார்த்திருப்பேன்…ஏன்னே தெரியலை…இந்த முகம் என் மனசுலே ஆழ பதைஞ்சுப்போச்சுடி” என மனமுருகி சொன்னான்.
அவளிற்கு அப்போதும் புரிந்தும் புரியாத ஒரு குழப்ப நிலை!
தன்னவளின் குழப்பமறிந்து “நீ சொன்ன விஷயத்தை நீ மறந்திருக்கலாம் ஸ்டார்…நீ சொன்ன ஒவ்வொரு விஷயமும் என் மனசுலே ஆழ பதைஞ்சு போயிருக்கு” என தன் நெஞ்சை தொட்டுக் காட்டி கூறியவன்,
“உனக்கு ஆறு வயசு இருக்கும் போது நீ என்கிட்ட ஒரு கோரிக்கை வைச்சே…நானும் அதை செய்யறேன்னு பிராமிஸ் பண்ணேன்…அது என்னான்னா உன்னோட பர்த்டேக்கு உன்னோட உருவத்தை ஓவியமா வரைஞ்சு சிலையா வடிச்சு கிஃப்ட் பண்றேன்னு சொன்னேன்…ஆனால் உன்கிட்ட என்னோட கிஃப்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி நீ காணாமல் போயிட்டே…ஆனால் நான் உனக்கு செஞ்ச பிராமிஸை மறக்கலை…ஒவ்வொரு வருஷமும் உன் பர்த்டே வரும் போதெல்லாம் தவறாமல் உன்னோட பரிசை நான் ரெடி பண்ணி வைச்சிடுவேன்…அப்படி இந்த வருஷம் வரப்போற உன் பிறந்த நாளுக்கு சில நாள் முன்னாடி தான் உன்னை கோவில்ல பார்த்தேன்…பார்த்த அடுத்த நிமிஷமே உன் முகம் என் நெஞ்சிலே ஆழமா பதிஞ்சுப்போயிடுச்சு…அத்தனை வருஷமா உன்னோட சின்ன வயசு உருவத்தை சிலையா செதுக்கின என் உளி எப்படினே தெரியலை…இந்த சிலையை தான் செதுக்கியிருந்துச்சு…” என அங்கிருந்த சிலையை சுட்டிக்காட்டினான்.
“சிலையை செதுக்கி முடிச்சப்பிறகு அதை தள்ளி நின்னு பார்த்த சமயம் நானே ஷாக் ஆகிட்டேன்…அதுவும் உன்னோட முகத்தை சிறு வித்தியாசம் கூட இல்லாமல் தத்தரூபமாய் செதுக்கி வைச்சிருக்கேன்…இந்த உதட்டுக்கு மேலே இருக்கிற மச்சம் உட்பட” என அவளின் இதழ் மேல் இருந்த மச்சத்தை தொட்டு உரைத்தான்.
அதில் அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கின.
“அந்த சமயம் என் மனசு தவியாய் தவிச்சுப்போச்சு…ஏதோ என் ஸ்டார் மேலே வைச்சிருக்கிற பாசத்துக்கு துரோகம் பண்ணிட்டது போலே நினைச்சேன்…ஆனாலும் இந்த சிலையை தூக்கிப்போட முடியலை…ஏதோவொரு இனம் புரியாத உணர்வு இந்த சிலையை என்னோட கட்டியெழுத்துச்சு…என்னை ரொம்பவே டிஸ்ட்ர்ப் பண்ணிட்டே இருந்துச்சு…அதனாலே அரைக்குறையா செதுக்கின சிற்பத்துக்கு டீடையிலிங் ஆட் பண்ணி பெயிண்ட் அடிச்சு இங்கே ரகசியமா பூட்டி வைச்சிட்டேன்…கூடவே உன்னோட கால் கொலுசையும் இதனோட வைச்சிட்டேன்…நீ என் மனசை டிஸ்ட்ர்ப் பண்ணதாலே தான் உன்னை பார்க்கிற சமயமெல்லாம் எரிஞ்சு விழுந்தேன்…ஆனாலும் என் மனசு ‘நீ என் ஸ்டார்’னு சொல்லாமல் சொல்லிட்டே இருந்துச்சு…எனக்கு மட்டும் தான் அப்படினு யோசிச்சா வீரும் அதே மாதிரி உன்கிட்ட நட்சத்திராவை ஃபீல் பண்ணியிருக்கான்…அப்போவே எங்க உள்ளுணர்வு சொன்னதை கேட்டிருந்தால் நம்ப கல்யாணம் வரைக்கும் உன்னை கஷ்டப்படவே விட்டிருக்கமாட்டேன்…முன்னாடியே எல்லாரையும் அடிச்சு நொறுக்கிட்டு உன்னை தூக்கிட்டு வந்திருப்பேன்டி…சாரிடி லேட்டா வந்ததுக்கு” என அவனது கண்மணியின் கன்னம் பற்றி உயிர் உருக்கும் குரலில் அவன் பேச,
எப்போதும் கம்பீரமாக இருக்கும் கணவனின் தழுதழுப்பான குரல் அவளிற்கு ஒரு மாதிரியாக இருக்க “நீங்க மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமே இல்லை மாமா…என்னோட கடந்த காலம் எல்லாம் ஏதோ போன ஜென்மத்திலே நடந்த மாதிரி மாயமாகிடுச்சு…இந்த நொடி இந்த நிமிஷம் உங்ககூட நான் இருக்கிற ஒவ்வொரு தருணத்தை மட்டும் தான் என் வாழ்க்கையாவே நான் உணருறேன்…அது மட்டும் தான் எனக்கு சந்தோஷத்தை கொடுக்குது…நீங்க ஒரு தேவதை மாமா…என் வாழ்க்கைய மட்டுமில்லை…என் அக்கா வாழ்க்கை நல்லப்படியா மாறினதுக்கு காரணமும் நீங்க தான் …அது மட்டுமில்லாமல் உங்களால் தான் என்னோட அம்மா அண்ணா எல்லாரும் கிடைச்சிருக்காங்க…எனக்கு இது போதும் மாமா” என முதிர்ச்சியாக வார்த்தைகளை உதிர்த்து அவனை அணைத்துக் கொள்ள,அவளின் சொற்கள் அனைத்தும் ஆடவனின் இதயத்தில் பன்னீர் தூவி சிறப்பித்தது போல் குளிர்ந்துப்போயின.
அதனால் அவளை கட்டியணைத்தப்படி விழி மூடி நின்றிருந்த ரத்தினவேல் நிமிடங்கள் சில கழித்து
“நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப்போறேன் ஸ்டார்…அதை பார்த்தால் நான் சொன்னதை நீ இன்னும் தெளிவா புரிஞ்சுக்க முடியும்” என்று அவளின் கரம் பற்றியவன், சிலைக்கு பின்புறமிருந்த ஒரு சிவப்பு நிற பொத்தானை அழுத்தியதும் அதற்கு பின்பிருந்து ஒரு கதவு தானாக திறந்தது.
மாயாஜால படத்தில் வருவதை போல் இருந்த அந்த காட்சியை அதிசயமாய் விழி விரித்து அவள் பார்த்திருக்க,அவளின் கரம் பற்றி அந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே அழைத்து சென்றான்.
அவன் அழைத்து சென்ற இரகசிய கதவின் பின்பே மறைந்திருந்த அறையை பார்த்தவளின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் தெறித்து விழுவது போல் விரிந்தன.