முகிழ்மதி 115(2)


 

 

அவரின் குரல் கேட்டதும் “சொல்லுங்க ஆன்ட்டி” என்றவளின் மனதில் ‘இவங்க எதுக்கு கூப்பிட்டிருக்காங்க?’ என்ற சிந்தனை!

அவளிடம் மரியாதை நிமித்தமாக இரண்டொரு வார்த்தை பேசியவர் “மதி உன்கிட்ட அத்தை பேசணும்னு சொன்னாங்க பேசறீயாம்மா?” என அவளிடம் அனுமதி வேண்டினார்.

அவளிற்கு முதலில் அதிர்ச்சி!

‘பாட்டியா?’ என வாயை பிளந்தவள்,சடுதியில் தலையை உலுக்கி வெளிவந்தாள்.

அவர் நினைத்திருந்தால் நீ கட்டாயம் பேசவேண்டும் என்று கட்டளையிட்டிருக்க முடியும்?

ஆனால் அவ்வாறு இன்றி அவளிடம் அவர் அனுமதி கேட்டது அவளிற்கு அவர்களின் மேல் ஒரு பெரிய மதிப்பைக் கொண்டு வந்தன.

கூடவே ‘பாட்டி என்கிட்ட பேச விரும்பறாங்கன்னா…அப்போ அவங்களுக்கும் இந்த லவ் விஷயம் தெரியுமா?காட்…இவருக்கு ஸ்பீக்கரே தேவையில்லை போலே…எல்லார்கிட்டயும் போய் நான் லவ் பண்ணறேன்னு சொல்லிட்டு வந்திருக்காரு’ என கடுப்பாக அவனை வறுத்தெடுத்தாலும் அவனது இந்த வெளிப்படையான குணம் ஈர்க்கவே செய்தது.

தவறு செய்பவர்கள் தானே நிஜத்தை மறைக்க முயலுவார்கள்?

அதனால் அவளையும் அறியாமல் அவனை நோக்கி மனம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது.

இப்போது இதழை குவித்து ஊதி “கொடுங்க ஆன்ட்டி…நான் பேசறேன்” என்றவளிற்கு அவரிடம் எப்படி பேசுவது என்று கலக்கமாக இருந்தது.

அவரிடம் அலைப்பேசி கை மாறியதும் “ஹலோ பாட்டி…எப்படி இருக்கீங்க?” என பொறுப்பாக நலன் விசாரிக்க,

“நான் நல்லாயிருக்கேன்மா…நீ எப்படி இருக்கே?” என்றவர்,அவளிடம் வானதி போல் அவளின் குடும்பத்தைப் பற்றி பேசி சில அனுதாப அலைகளை வீச செய்து இறுதியாக விஷயத்திற்கு வந்தார்.

“என் பேரன் விஷயத்திலே நீ என்னம்மா முடிவு செய்திருக்கே?” என அவர் எவ்வித ஒளிவுமறைவுமின்றி நேரடியாக கேட்டுவிட,

எதிர்புறம் அவளிடம் ஒரு ஆழ்ந்த மௌனம்!

அவளால் இப்போது வரை எந்தவொரு முடிவையும் எடுக்க முடியவில்லை.

நேற்று அவன் வந்து கேட்டதற்கு கூட நிற்சிந்தையுடன் மறுப்பு தெரிவித்தவளால் வீட்டு பெரியவரிடம் அதே பதிலை கூற முடியவில்லை.

அவரோ “உன்னோட மௌனமே உன் பதில் என்னனு புரிய வைச்சிடுச்சும்மா…என் பேரனுக்கு உன்னாலே ஒரு நல்லது நடந்திடும்னு நினைச்சேன்…அப்படி எதுவும் நடக்காது போலே…அந்த ரோகிணி தான் வீட்டுக்கு மருமகளா வரணும்னு இருக்கு…அவ இங்க வந்தால் அது வீடா இருக்காது சூடுகாடா தான் இருக்கும்…முகிழ் வேற வாயில்லா பூச்சி…அவ எப்படி சமாளிக்கப்போறளோ?” என தனக்கு தானே கவலையாக உரைப்பவர் போல் அவளிடம் புலம்பினார்.

எங்கு அடித்தால் அவள் வீழ்வாள் என்பது அறிந்து அந்த அனுபவசாலி பெண்மணி நேர்த்தியாக காயை நகர்த்தினார்.

அவர் எண்ணியது போலவே ‘முகிழ்’ என்றதும் அவளிற்கு சுருக்கென்றது.

அவளின் நெஞ்சம் உடனே படபடத்தன.

அதுவும் ரோகிணியை பற்றி எண்ணியவுடன் அவள் முகிழ்மதியை கொடுமை செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் கண் முன் வந்து சென்றன.

அவளின் முகம் வெளுத்துவிட “பாட்டி நீங்க நினைச்சா கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாதா?” என பதட்டத்துடன் வினவ,

அவரோ “வாய்ப்பில்லைம்மா…என் பையனுக்கு இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்னு நான் சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன்…அதனாலே நேரடியா எதிலையும் என்னாலே இறங்க முடியாது…அதே மாதிரி எனக்கு என் பேரனோட வாழ்க்கை முக்கியம்…அதுக்காக தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்…” என்றவர்,

“நீ நினைச்சா ஜித்துவோட வாழ்க்கை அப்புறம் இந்த குடும்பத்தையே மொத்தமா காப்பாத்த முடியும்” என அதிரடியாக வலை வீசி அவளை அதில் வீழ்த்த முயன்றார்.

அவளோ அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியாகி “நான் எப்படி பாட்டி?” என திக்கி திணறி வினவ,

“அது தான்மா உண்மை…நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திட்டாலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்…முடிவு உன் கையிலே தான்மா இருக்கு” என்று சமயோசிதமாக திட்டமிட்டு உரைக்க,

அவளோ அவருக்கும் மீறிய புத்திசாலித்தனத்துடன் “பாட்டி இந்த பிரச்சனைக்கு வேற வழியும் இருக்கு…அத்தான் கிட்ட சொல்லலாமே” என மெதுவாக சொல்லிப்பார்க்க,

‘இவ ரொம்ப புத்திசாலியா இருக்காளே…கொஞ்சம் பார்த்து தான் பேசணும்’ என பெருமூச்சறிந்தவர் “இல்லைம்மா அது சரிவராது…” என்றவர் சமீப காலமாக தகப்பன் மகன் இருவருக்கும் இடையேயான மோதலை பற்றி எடுத்துரைத்து அவளின் வாயை அடைத்தார்.

இதுப்போல் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் ஏதோ ஒரு காரணம் கூறிக்கொண்டே இருக்க,இறுதியாக அவர் “ஏன் மா என் பேரனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமில்லையா?இல்லை அவனை பிடிக்கலையா?” என கூர்மையாக வினவியதும்,

அவள் ஒரே ஒரு கணம் மௌனம் காத்தாள்.

சடுதியில் தொண்டையை செருமியவள் “அவரை பிடிக்காமல் நான் மறுப்பு சொல்லலை பாட்டி…ஹீ இஸ் குட் ஹியுமன் பீயிங்…அவரை எனக்கும் பிடிக்கும்…பட் எனக்கு தான் இப்போ கல்யாணத்திலே இஷ்டமில்லை” என்றாள் தன் மனதை மறைக்காமல்…

அதுவே அவருக்கு பெரிய ஆறுதலாக இருக்க “அப்போ ஜித்துவை கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை?அப்படி தானேம்மா?” என அவளை தனது பேச்சிலே மடக்கிவிட,

அவளோ “அது வந்து…” என பதில் கூற முடியாமல் திணற,

“இங்க பாரும்மா…என் பேரன்றதுக்காக இதை நான் சொல்லலை…ஜித்து ரொம்ப இனிமையான பையன்…அவனுக்கு அவன் குடும்பம்னா அவ்வளவு இஷ்டம் தெரியுமா?நான் சின்னதா ஒரு கால் வலினு சொன்னால் கூட துடிச்சுப்போயிடுவான்…அடுத்த நிமிஷமே அவனே எனக்கு ஒத்திடம் கொடுத்து காலை அமுக்கி விடுவான்…அவன் கையிலே என்ன மாயமிருக்கோ தெரியலை…நிமிஷத்திலே வலி எல்லாம் பறந்துப்போயிடும்…ஆம்பளைன்ற திமிர் பார்க்கவே மாட்டேன்…தங்கச்சியை கூட அப்படி தாங்குவான் தெரியுமா?அவன் அம்மாவை சொல்லவே தேவையில்லை…அப்படிப்பட்ட ஆளு வரப்போற பொண்டாட்டிய எப்படி தாங்குவான்னு நான் சொல்லி தான் நீ தெரிஞ்சுக்கணும் இல்லைம்மா…உலகத்திலே ரொம்ப கொடுத்து வைச்ச பொண்ணு யாருனா அது அவனுக்கு வர பொண்டாட்டியா தான் இருக்கும்…உனக்கு இப்போ கல்யாணத்திலே விருப்பமில்லைனு தள்ளிப்போடறேன்னு வைச்சுக்கோ…நாளைக்கு இவனை மாதிரி ஒரு பையன் நீ தேடும் போது உனக்கு கிடைப்பானாம்மா…அதே மாதிரி ரோகிணியவோ இல்லை…வேற ஒரு பொண்ணையோ இவன் கல்யாணம் பண்ணாலும் உன்னை மனசுலே வைச்சுக்கிட்டு அவன் எப்படிப்பா நல்லா வாழ முடியும்?வாழ்க்கையே அவனுக்கு நரகமா மாறிடும்…
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்னு ஒரு பழமொழி இருக்கு…காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது…உன்னை இந்த அளவு நேசிக்கிறவன் நாளைக்கு கிடைப்பானானு யோசி‌ம்மா…அதே மாதிரி இந்த வீட்டுக்கு மருமகளா வரவ நல்லவளா இருப்பான்னு சொல்லவும் முடியாது…முகிழோடு ஒத்துப்போவாளா இல்லை ஓரகத்தி சண்டைப்போடுவாளானு எதுவுமே தெரியாது…ஆனால் இந்த குடும்பத்தோடு அமைதிக்காக…என் பேரன் உன் மேலே வைச்சிருக்கிற காதலுக்காக…உன் தங்கச்சிக்காக…முக்கியமா உனக்காக யோசி…உன் எதிர்காலத்துக்கு ஜித்துவை கல்யாணம் செஞ்சால் எப்படி இருக்கும்…அவனை தவறவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்…எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வா” என இறுதி முறையாக தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை அவளின் புறம் வீசி,அவளின் மனதில் தாம் நினைத்தது போல் ஒரு ஆழமான தாக்கத்தை உருவாக்கியிருந்தார்.

அவளும் அவர் எண்ணியது போலவே அக்கணத்திலிருந்தே சிந்திக்க ஆரம்பித்துவிட “உன்கிட்ட நான் பேசின விஷயம் எதுவும் அவனுக்கு தெரியாது…நீயும் அவன்கிட்ட எதுவும் சொல்லவேணாம்மா…கல்யாணம் நல்லப்படியா நடந்துச்சுன்னா பொறவு சொல்லிக்கலாம்‌…நீ யோசிச்சு நல்லா முடிவெடு…ஆனால் நேரம் குறைவா இருக்கு…அதையும் ஒரு பக்கம் மனசுலே வைச்சுக்கோம்மா” என நயமாக அவளிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார் மூதாட்டி.

அவர் அழைத்ததற்கான பணியை செவ்வனே செய்து முடித்திருந்தார் பெரியவர்.

‘அப்போ பாட்டிகிட்ட இவர் எதுவும் சொல்லலையா?அவர் சொல்லமாலே என்கிட்ட தன்னோட பேரனுக்காக பேசியிருக்காங்களா பாட்டி’ என நினைக்கும் போதே அவளின் நெஞ்சம் நெகிழ்ந்தன.

என்னவொரு பாசமான குடும்பம்?

ஒருவரின் மீது ஒருவர் செலுத்தும் அன்பை பார்க்க அவளிற்கு பிரம்மிப்பாக இருந்தது.

அவர்களது வீட்டு பையன் ஒருவனின் காதலுக்காக இவர்கள் அனைவரும் இறங்கி வந்து அவளிடம் யாசிப்பதை பார்க்கும் போது ஒரு பெண்ணாக அவளின் உள்ளம் பூரித்தன.

அத்தோடு அந்த வீட்டில் முகிழ்மதியை அவர்கள் அனைவரும் நடத்தும் விதத்தை கண் முன் காணவில்லை என்றாலும்,அவளின் வழியாக அவர்களை பற்றி கேட்டு அறிந்தவளிற்கு அவர்களின் மீது நன்மதிப்பு இருந்தது.

இப்போது சொல்லவே தேவையில்லை…செல்வந்தர்கள் என்ற பகட்டு எதுவுமின்றி,வயதில் சிறியவள் என்று அவளை அவமதிக்காமல் தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பெரியவர்களுக்காகவே தனது முடிவினை மறுபரிசீலனை செய்யும் முடிவை எடுத்தாள்.

அவள் எடுத்த முடிவோடு ஜித்தேந்திரனிற்கு அழைத்து “நான் உங்ககிட்ட பேசணும்?வர முடியுமா?” என அவனை நேரில் சந்தித்து பேச ஆயுத்தமானாள்.

அன்று தான் ஜித்து தனது தங்கையுடன் திரையறங்கிற்கு வந்திருந்தான்.

அவள் அழைத்ததும் செல்ல வேண்டும் என இதயம் பரபரத்தப்போதும் “நீ கூப்பிட்டு உடனே வரலைன்னு தப்பா எடுத்துக்காதே மூன்…தமி வீட்டுக்குள்ளயே அடைஞ்சு ஒரு மாதிரி இருந்தாள்…அவ முகமே சரியில்லை…அதான் அவளை அழைச்சிட்டு தியேட்டருக்கு வந்திருக்கேன்…படம் முடிஞ்சதும் அவளை வீட்டுலே விட்டுட்டு வரட்டுமா?கோவிச்சுக்காதே மூன்” என தணிந்த குரலில் வேண்டுக்கோள் முன்வைத்தவனின் செயல் அவளை இன்னும் அதிகமாய் ஈர்த்தது.

அவன் நினைத்திருந்தால் காதல் மட்டுமே முக்கியம் என்று அவள் அழைத்ததும் வந்திருக்க முடியும்.

ஆனால் ஒரு பெண்ணிற்கு அண்ணனாக அவன் பொறுப்பாக  சிந்தித்து பேசிய விதம் அவளின் மனதை வசீகரித்திட “ஒண்ணும் அவசரமில்லை…பொறுமையா வாங்க” என பெருந்தன்மையாக கூறி அழைப்பை துண்டித்தாள்.

தமயந்தி மனமொடிந்து போயிருக்கும் விடயம் அவளும் நன்கு அறிவாள்.அதனால் அவளை தனித்து விடாமல் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கைக்காக யோசிப்பவனை யாருக்கு தான் பிடிக்காது.

முன்பு பாட்டியின் பேச்சில் இளகியிருந்தவளை ஜித்துவின் இந்தவொரு செயலும் சேர்த்துக்கொள்ள ‘நிஜமாவே அவங்க சொல்லற மாதிரி இவன் குட் சோல் தான்’ என எண்ணியவளின் உள்ளம் அவனின் பக்கம் நன்றாகவே சாய்ந்துவிட்டது‌.

அதிலும்,அவள் மயங்கி விழுந்த சமயம் அவளிற்காக அவன் துடித்த விதம் நேரில் கண்டிருந்தாளே?

அக்கணமே அவளின் இதயம் அப்படியே நழுவி சென்று அவன் காலடியில் விழுந்துவிட்டது.

ஆனால் அதை அவள் தான் அச்சமயம் உணர்ந்திருக்கவில்லை.

அவனை நேரடியாக சந்தித்து தனது கடந்த கால காதலை அவனிடம் தெரிவித்தாள்.

அவனை ஏற்க முடிவெடுத்தப்பிறகு தயங்குவது அனார்த்தம் என்று தோன்றியதால் அவனிடம் எதையும் மறைக்காமல் உரைத்து விட்டாள்.

நிச்சயம் அவன் முகத்தில் கோபமோ அல்லது அருவருப்போ ஏதேனும் ஒரு உணர்வை வெளிப்படுத்துவான் என அவள் காத்திருக்க,

அவளிற்கு பதட்டமாக இருந்தது.

ஆனால் அவளே ஆச்சரியப்படும் வகையில் காரிகையவளின் முகத்திலிருந்த பதட்டம் கண்டு “இங்க பாரு மூன்…நான் முன்னாடியே சொன்னது தான்…உன்னோட கடந்த காலம் என்னோட முடிவை எந்த விதத்திலும் மாற்றப் போறதில்லை…எனக்கு நீ தான் முக்கியம்…உன்னையே நேசிக்கும் போது உன்னோட கடந்த காலத்தை எப்படி என்னாலே ஏத்துக்க முடியாமல் போகும்?” என புருவம் உயர்த்தி கேட்க,

அவனது முதிர்ச்சியான பேச்சை கேட்டு திகைத்தவள் “நான் பண்ணது தப்பா தெரியலையா?” என சந்தேகமாக வினவினாள்.

அவனோ மறுப்பாக தலையசைத்து “நிச்சயமா இல்லை…சொல்லப்போனால் உன் மேலே எந்த தப்பும் கிடையாது மூன்…அன்புக்காக ஏங்கின நீ ஒருவனை நம்பி ஏமாந்திருக்கே…எனக்கு கோபமெல்லாம் அவன் மேலே மட்டும் தான் அந்த ராஸ்கல் மட்டும் என் கையாலே கிடைச்சான்…அவனை அப்படியே துடிக்க துடிக்க வைச்சு கொல்லணும்னு தோணுது…” என்றவனின் முகம் கோபத்தில் இறுகி சிவந்துப்போனது.

அவனின் கழுத்து நரம்புகள் புடைத்த விதத்தை கண்டு அஞ்சிய பெண் “ஜித்து…” என தவிப்புடன் அழைக்க,

அவளின் அச்சம் கண்ட மறு கணமே அவனின் முகத்திலிருந்த கோப ரேகைகள் மறைந்து கனிவு பிறந்தன.

நொடியில் மாறிய அவன் முகத்தை பார்த்தவளிற்கு தன் மீதான அவனது நேசம் எத்தகைய ஆழமானது என்பது புரிந்தது.

அவளின் விழிகள் இலேசாக கலங்குவது போல் இருக்க “மூன் எனக்கு உன்னை நினைச்சா தான் பாவமா இருக்கு…எப்படியொரு கஷ்டத்தை நீ அனுபவிச்சு வந்திருக்கே…தனியா இதெல்லாம் நீ ஃபேஸ் பண்ணயிருக்கேன்னு நினைச்சாலே எனக்கு மனசு வலிக்குது…காதல்னாலே ஏன் உனக்கு இவ்வளவு வெறுப்புனு இப்போ தான் எனக்கு புரியுது…ஆனால் உன் வாழ்க்கையிலே கருப்பு பக்கமா இருக்கிற காதலை அழகான வண்ண காகிதமா மாத்த எனக்கொரு வாய்ப்பு கொடு மூன்…நிச்சயமா உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்…என்னை நம்பு…ஷேல் ஐ…” என உணர்ச்சிகரமாக பேசி அவன் கரம் நீட்டியதும் அவளின் விழியோரம் நீர் கசிந்தன.

எதை எதையோ நினைத்து அவள் பயந்துக்கொண்டிருக்க,உனது பயமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் அவன் தூள் தூளாக்கியதும் அவளின் மனதில் அப்படியொரு பேரானந்தம்..

அதனால் அவனிற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக அவனது கரத்தில் மெதுவாக தன் கரம் பதித்தாள்.

அவனது கரங்களில் தன் கரம் பதிந்த கணம் அவளின் மேனி சிலிர்த்துவிட,அன்று அவளின் கரத்தை இறுகப்பற்றிய மணாளன் இன்று ஊரறிய உலகறிய அவளின் கைத்தலம் பற்றியிருந்தான்.

மங்கள நாண் சூட்டிய மறுகணமே ‘இக்கணம் பற்றிய உன் கரத்தை இனி ஒரு நாளும் விடமாட்டேன்’ என்பது போல் அவளின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டான்.

அவனது பிடியில் தெரிந்த அழுத்தத்தில் அவனை இமை உயர்த்தி பார்த்தவளின் விழிகள் காதல் பரவசத்தில் மின்னின.

‘யாருடா நீ?எங்கிருந்து வந்தே?வந்த சில நாட்களிலே என் வாழ்வை இவ்வளவு அழகாக்கிட்டியே? உன்னை நான் தவறவிட்டிருந்தால் அது தான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் பாவமா இருக்கும்…என் வாழ்வில் வந்ததுக்கு உனக்கு மிகப்பெரிய நன்றிடா’ என பிரம்மிப்பும் நன்றியுணர்வுடனும் அவனை ஏறிட்ட தன்னவளை கண்டு அவன் இதழ்பிரித்து புன்னகைத்தான்.

அவனது வசீகர புன்னகையில் மயங்கிய காரிகையவளின் மனம் அவளை அறியாமல் அவனின் நெஞ்சத்தில் தஞ்சமடைந்தன.

பாட்டியின் போதனையும் ஜித்துவின் காதலுமே அவளை இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தன.

எப்போதும் சுயநலமாக சிந்திக்கக்கூடிய பெண் இன்றும் சுயநலமாகவே சிந்தித்தாள்.

ஆனால் நன் முறையில்…

இப்படியொரு நேசத்தை தன் மீது வைத்திருப்பவனை அவளால் இழக்க முடியவில்லை என்பது ஒன்று…
மற்றொன்று…அவளின் தங்கை முகிழ்மதிக்காக!

தங்கையை காக்கவும்,அவளுடனே இறுதி வரை இருப்பதற்காகவும்!

தன் காதலை அடையும் மார்க்கமாகவும் இந்த திருமண பந்தத்தை மனதார ஏற்றுக்கொண்டாள்.

திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணை வீட்டில் வந்து விளக்கேற்றும் படி உரைக்க,அவளும் அந்த வீட்டிற்குள் தீபமேற்றி பிரகாசத்தை கொண்டு வந்தாள்.

வானதி தனது மாமியாரிடம் “அத்தை போச்சு…போச்சு…பூபதிக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு…” என பதறிப்போய் உரைக்க,

அவரோ ‘அவன் கண்டுப்பிடிக்கலைனா தான் அதிசயம்…எவ்வளவோ பார்த்திட்டோம்…அவனை சமாளிக்க முடியாதா?’ என அலட்சியமாக எண்ணியவர் “நீ எதுக்கும் பயப்படாதே…அவன் உன்னை எதுவும் சொல்லமாட்டான்…நான் பார்த்துக்கிறேன்…நீ போய் நடக்க வேண்டிய சடங்கை பாரு…போம்மா” என மருமகளிற்கு தைரியம் கூறி அனுப்பி வைத்தார்.

மாமியார் இருக்கும் துணிச்சலில் அந்த பெண்மணியும் மணமக்களிற்கான சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்க சென்றார்.

ஜித்தேந்திரன் அவளின் கரம் பற்றிய அடுத்த நாளே ரகசிய திருமணம் செய்துக்கொள்ள கேட்க, சந்திரமதி பேரதிர்ச்சியுற்றாள்.

அவள் மிரண்டு பின்வாங்க நினைக்கும் போது “நீ அவன் சொல்லற மாதிரி செய்மா…பின்னாடி எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” என அவளையும் அந்த அதிரடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததும் காஞ்சனா மாலா தான்!

அவர்கள் திருமணம் செய்து வீட்டிற்கு வந்தவுடன் பிரச்சனைகள் பூதங்கரமாக வெடிக்காமல் இருப்பதற்காக மருமகளை முன்னரே தயார்படுத்தி பேச வைத்திருந்தார்.

‘அதிகமா நாடகமாடி மாட்டிக்காதே மருமகளே’ என வானதியையும் எச்சரித்தார்.

பின்புறமிருந்து இவரது ஆலோசனையின் பெயரில் தான் அனைத்தும் நடக்கிறது என்று ஜித்தேந்திரனிற்கு கூட தெரியவில்லை.

அவனோ தன் அன்னை மட்டுமே ஆதரவாக இருக்கிறார் என்று எண்ணியிருந்தான்.

திருமணத்திற்கு பின்பே பாட்டி தனக்காக எடுத்த அபாயகரமான முடிவுகளை கேள்வியுற்ற பிறகு அவனிற்கு தலைகால் புரியவில்லை.

“மை டான் இஸ் பேக்…லவ் யூ டான்” என அவரை தனது முத்தத்தாலே கொண்டாடி தீர்த்தான்.

“டேய் ஓவரா ஆட்டம் போடாதே…உன் அண்ணனுக்கு தெரிஞ்சது என்னையும் சேர்த்து கைமா பண்ணிடுவான்…ஏற்கனவே மதியை கடத்தின விஷயத்திலே கடுப்புலே இருக்கான்…” என அவர் பேரனை குதூகலத்தை கட்டுப்படுத்த,

அவர் சொன்னதை கேட்டு “ஐய்யையோ பாட்டி…அதை மறந்திட்டமே?போச்சு” என தலையில் கைவைத்து கொள்ள,

“என்னடா சின்னவனே” என அவர் குழப்பாக கேட்க,

அவனோ ஒரு வித பீதியுடன் “பாட்டி இவ தான் பொண்டாட்டியா வரப்போறாள்னு தெரியாமல் நான் அவளை கடத்தி வேற தொலைச்சிட்டனே…நாளைக்கு நான் தான் கடத்தினேனு தெரிஞ்சா என்ன நடக்கும்” என திருதிருவென விழிக்க,

அவரோ “இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…நீ கேட்டே கல்யாணம் பண்ணி வைச்சாச்சு…அவளோட காலை புடிச்சு கெஞ்சுவியோ…இல்லை மடியிலே போட்டு கொஞ்சுவியோ…அவளை சமாளிக்க வேண்டியது உன் சாமர்த்தியம்” என மெதுவாக அதிலிருந்து கழண்டுக்கொண்டார்.

அவனோ “பாட்டி இதெல்லாம் அநியாயம் அக்கிரமம்…உன் பேரனை இப்படியெல்லாம் கழட்டிவிடக்கூடாது” என அவரை செல்லமாக முறைக்க,

“நீ யாருன்னே எனக்கு தெரியாது‌…நீ முதல்ல வெளியப் போடா” என அவரை அடித்து விரட்டிவிட்டிருந்தார்.

அவனோ ‘ஜித்து நீயா வாயை திறக்கிற வரை உன் பொண்டாட்டிக்கு எதுவும் தெரியாது…அதனால் தைரியமா இரு’ என தன்னை தானே தேற்றிக்கொண்டான்.

ஆனால் அவனது பித்தலாட்டம் அனைத்தும் விரைவிலே வெளியில் வரவிருக்கின்றது என்று அக்கணம் அறியவில்லை‌.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top