ஜித்தேந்திரன் காதல் விடயத்தை முதலில் தெரிவித்தது அவனது தாய் வானதியிடம் தான்!!
“அடப்பாவி இதுக்கு தான் என்ன நடந்தாலும் என் பக்கம் நிப்பியானு நீ கேட்டியாடா?” என அவர் பெரும் திகைப்புடன் வினவ,
“ஆமாம்மா…நீங்க தான் எங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்…அவ வேற என் லவ்வை அக்சப்ட் பண்ண மாட்டிங்கிறாள்…நீங்க வந்து பேசுங்க…பிளீஸ்…பிளீஸ்…” என அவனது தாயை அவளிடம் பேச வைப்பதற்காக வீரின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
ஆனால் அவருக்கு பின்பிருந்து இயக்கியது காஞ்சனா மாலா தான் என்பது யாவரும் அறியாத ரகசியம்!
மகனின் காதல் விடயத்தை பற்றி வானதி தனது மாமியாரிடம் தெரிவித்திருந்தார்.
அவன் சந்திரமதியை நேசிப்பது அவருக்கு பேரதிர்ச்சி!
‘அவளை பிடிக்கலை பிடிக்கலைனு அந்த புள்ளைய லவ் பண்ணியிருக்கான் பார்றேன்’ என மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவருக்கு சிறியதாக உறுத்தல் இருந்தது.
ஏனெனில்,சந்திரமதியை பற்றி முன்பிருந்தே பூபதி குடும்பத்தினர் யாவருக்கும் பெரிதாக அபிப்பிராயம் இருந்ததில்லை.
ஆனால் அவளும் வீரின் தங்கை என்று தெரிந்தப்பிறகு ஒரு ஆசுவாசம்,அவளும் நல்லப்பெண்ணாக இருக்கக்கூடும் என்று!
அதனால் “மருமகளே நீ உன் பையன் கேட்டுக்கிட்டப்படி அந்த பொண்ணுகிட்ட போய் பேசிப்பாரு…அடுத்த நாம்ப என்ன செய்யறதுனு பார்ப்போம்” என அவர் தான் வானதியை அங்கு அனுப்பினார்.
தேவகியை பார்ப்பதற்கு வந்தது போல் இருவரும் அங்கு சென்றதினால் சம்பிரதாயமாக அவரிடம் சில நிமிடங்கள் செலவளித்துவிட்டு தோட்டத்தில் இருந்த சந்திரமதியிடம் வந்தார்கள்.
வானதியின் விழிகள் அந்த இல்லத்திற்கு வந்ததிலிருந்தே அவளை தான் ஒவ்வொரு நொடியும் அவதானித்துக் கொண்டிருந்தது.
அவளது தாயினை எவ்வித முகச்சுளிப்புமின்றி பார்த்துக்கொள்ளும் பாங்கும், வீட்டிற்கு வந்தவர்களை உபசரித்த விதமும் அவரை ஈர்க்கவே செய்தன.
ஏனெனில், அவருக்கும் முன்பிருந்த சந்திரமதியை தெரியுமல்லவா?
நகத்தில் அழுக்குப்படாமல் வசதியாக வீட்டில் வளர்ந்த செல்வச்சீமாட்டியாயிற்றே அவள்!
யாரிடமும் பேசாமல் ஒதுங்கிய இருப்பாள்.
அதன் பொருட்டே,அவருக்கும் நெருடலாக இருந்தது.
பெரிய மகனை போலவே தனது சிறிய மகனிற்கும் ஒரு நல்லப்பெண் மனைவியாக அமையவேண்டும் என்பது அவரது விருப்பம்!
ஒவ்வொரு அன்னையினரின் விருப்பமும் அது தானே?
சந்திரமதி தற்போது அவர்களது அன்னை உருவாக்கிய வெண்ணிற ஊஞ்சலில் பதுமையென அமர்ந்திருந்தாள்.
அவனது நேசத்தை மறுத்துவிட்டு அவனை காண்பதற்கு ஒரு மாதிரியாக இருக்க,அவள் தனியே வெளியில் வந்து அமர்ந்து விட்டாள்.
“அம்மா அவகிட்ட இன்னைக்கு என்னை பத்தி நாலஞ்சு பிட்டு போட்டாவது அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிடுங்க…பிளீஸ்மா..” என காதோரம் மகன் கிசுகிசுக்க,
“டேய் நான் எதுக்கு பிட்டுப்போடணும்?என் பையன் சும்மாவே சிங்கம் மாதிரி தான்…உன்னை ஏத்துக்க அவளுக்கு என்ன பிரச்சனை?” என கோபத்தோடு வினவினார்.
ஏனெனில்,ஒரு அன்னைக்கு எப்போதும் அவர் மகன் உசத்தி தானே?
தன் மகனை ஒருத்தி வேண்டாம் என்று கூறுவதா என்ற கோபம் அவருக்கு!
தாயின் பேச்சை கேட்டவனோ கையெடுத்து கும்பிட்டு “ஐய்யோ அம்மா உங்களை கெஞ்சு கேட்டுக்கிறேன்…தயவுசெஞ்சு அவகிட்ட போய் சிங்கம் அது இதுனு ஓவர் பில்டப் கொடுக்காதீங்க…அப்புறம் அவ என்னை அசிங்கமாக்கிவிட்டிருவாள்…இவ நம்ப முகிழ் அண்ணி மாதிரி இல்லைம்மா…புரிஞ்சுக்கோங்க” என புலம்ப,
உடனே அவரின் உள்ளம் சுருக்கென்றிட “ஏன்டா?அப்போ இவளும் ரோகிணி மாதிரி திமிருப்பிடிச்சவளா?உனக்கு சரிவருவாளா?” என ஒரு வித குழப்பத்துடனே வினவ,
“சேச்சே அப்படியில்லை பார்க்க தான் திமிருப்பிடிச்ச மாதிரி இருப்பாள்…பட் அவ கூட பேச ஆரம்பிச்சா தான் தெரியும் அவ ரொம்ப ஸ்வீட்னு…நம்பலைனா நீங்களே உங்க மருமககிட்ட போய் பேசிப் பாருங்கம்மா” என தன்னவளை நேசத்தோடு பார்த்தப்படி உரைக்க,
சட்டென திரும்பி புதல்வனை நோக்கிய வானதி “மருமகள்னு முடிவே பண்ணிட்டியாடா? எங்களுக்கு பிடிக்க வேணாமா?” என தீர்க்கமான குரலில் வினவ,
“அம்மா உங்களுக்கே தெரியும்…நம்ப குடும்பத்துக்கு செட்டாகமாட்டாள்ன்ற ஒரே காரணத்துக்காக தான் ரோகிணியை எனக்கு பிடிக்கலை…அப்படி இருக்கும் போது உங்க யாருக்கும் பிடிக்காத ஒரு பொண்ணை நான் காதலிச்சிடுவேனா?” என அன்னையை நோக்கி புருவம் உயர்த்தி கேட்டவன்,
“அம்மா எனக்கு புரியுது…முன்னாடி இருந்த சந்திரமதியை பார்த்து நீங்க தப்பு கணக்கு போட்டிட்டீங்க…தூர இருந்து பார்த்த சமயம் எனக்கும் அவளை பிடிக்கலை தான்…என்னைக்கு நான் அவளை கிட்டயிருந்து கவனிக்க ஆரம்பிச்சேனோ அப்போ தான் அவளை பத்தி எனக்கு முழுசா தெரிஞ்சது…இவ ரொம்ப இம்பரசிவான பொண்ணும்மா…நிச்சயமா தோற்றத்தை பார்த்து மட்டும் இவளை எனக்கு பிடிக்கலைமா…இவளோட துணிச்சல்,பேச்சு,மத்தவங்களை ஹேண்டில் பண்ணற விதம்,யாரை பத்தியும் பின்னாடி பேசாமல் முகத்துக்கு நேரா அவளோட மனசுலே இருக்கிறதை பேசறது…பணம் இருக்கோ இல்லையோ இது தான் நான்னு வெளிப்படையா அவ காட்டற விதம் இப்படி நிறைய விஷயங்கள் அவளை நோக்கி என்னை ஈர்த்துச்சும்மா…” என அவளை பற்றி மூச்சு விடாமல் விழியில் காதல் மிதிக்க பேசிக்கொண்டே சென்ற மகனை அசையாமல் நோக்கினார் அவன் அன்னை.
அவருக்கு ஒரு விடயம் நன்றாக புரிந்துவிட்டது,சந்திரமதியின் மீது அவன் தீராத காதலில் விழுந்துவிட்டான் என்பது!
அத்தோடு அவன் பேசிய விதத்திலே அவளின் மீது அவருக்கும் ஒரு நல்அபிப்ராயம் உருவாக்கிட,அவளிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அவருள் உதித்தன.
இவ்வாறெல்லாம் பேசி அன்னையின் மனதில் சூழ்ந்திருந்த குழப்பத்தை துரத்தியடித்து அவரை சந்திரமதியிடம் அழைத்து வந்தவன் “மூன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க” என அவளிடம் உரைக்க,
அவளோ அவர்கள் இருவரையும் அவ்விடத்தில் கண்டுவிட்டு அவசரமாக எழுந்து நின்றாள்.
“வாங்க ஆன்ட்டி…வாங்க” என இருவரையும் சம்பிரதாயமாக வரவேற்றவள்,அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் தாயிடம் திரும்பியவள் “இங்க உட்காருங்க ஆன்ட்டி” என ஊஞ்சலில் அவரை அமரும் படி உபசரித்தாள்.
அவரும் பெரிதாக எவ்வித பகட்டையும் வெளிப்படுத்தாமல் அவள் காட்டிய இடத்தில் அமர சென்றார்.
அவர் அமரும் போது ஊஞ்சல் இலேசாக தள்ளாட “ஆன்ட்டி பார்த்து” என பதறிப்போய் அவள் அந்த ஊஞ்சலின் கம்பியை இறுகப் பிடித்துக்கொள்ள,அச்சமயம் “அம்மா இருங்க…” என வேகமாக முன்னே வந்து அவரை தாங்கிப் பிடித்து அமர வைத்தவன்,தரையில் புரண்ட அவரது சேலை தலைப்பை கவனித்து சட்டென கீழே குனிந்தான்.
ஆண்மகனிற்குரிய எந்தவொரு அகந்தையுமின்றி அவரது புடவை முந்தானையை எடுத்து அவரின் மடியில் வைத்த ஜித்து “அம்மா ஆர் யூ ஓகே?இங்க சரி வரலைனா சொல்லுங்க…உள்ள போய் பேசலாம்” என பொறுமையாக தாயின் நலன் விசாரித்தான்.
அதனை சந்திரமதி ஒரு வித வியப்புடன் பார்த்திருந்தாள்.
அவளும் இங்கு வந்ததிலிருந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறாள்.அவன் அவனது தாயை ஒவ்வொரு இடத்திலும் ராணி போல் தாங்கிய விதத்திலே அவரின் மீது எத்தகைய அன்பை வைத்திருக்கிறான் என்று உணர்ந்தவளின் இதயம் மீண்டும் ஒரு முறை தடுமாறின.
அவளின் மனதை அவன் புறம் சாயவிடக்கூடாது என திடமாக கட்டுப்படுத்த முயன்றாலும் அவளால் அது முடியவே இல்லை.
ஒவ்வொரு முறை அவளின் நெஞ்சத்தை அவள் அடைக்க முயன்றும் அவன் சிறு பொறி போல் அவளிற்குள் நுழைந்து பூட்டி கிடந்த கதவை தட்டிக்கொண்டே இருந்தான்.
அன்னை பாதுகாப்பாக இருக்கிறார் என்று விசாரித்து அறிந்தப்பிறகே ஆசுவாசமானான் புதல்வன்.
அதன்பிறகே அவளின் புறம் திரும்பிய ஜித்து “மூன் நீயும் உட்காரு” என அவன் சொல்ல,
‘என்ன இவரு அவங்க அம்மா முன்னாடியே என்னை மூன்னு கூப்பிடறாரு…அவங்க ஏதாவது தப்பா நினைக்கமாட்டாங்களா?’ என சங்கடமாக எண்ணியவள் “இல்லை இருக்கட்டும்…நான் நிற்கறேன்” என்றாள் தயக்கமாக…
அவளின் தயக்கம் அறிந்து “பரவாயில்லை உட்காரும்மா…எவ்வளவு நேரம் நீ நின்னுட்டே இருப்பே” என வானதி உரைத்தப்பிறகே நிமிர்ந்து ஜித்துவை ஒரு பார்வை பார்த்தப்படி அமர்ந்தாள்.
அவள் அமர சென்றதும் மீண்டும் ஒரு முறை ஊஞ்சல் தள்ளாட,இம்முறை அதனை தாங்கினான் ஆடவன்.
அவள் வசதியாக அதில் அமர்ந்தப்பிறகு அவனை ஏறிட,அவனோ அவளை நோக்கி தனது வசீகரப்புன்னகையை சிந்தி பாவையவளின் மனதை மீண்டும் ஒரு முறை தடுமாற வைத்தான்.
‘கடவுளே’ என உள்ளுக்குள் எழுந்த படபடப்புடன் அவள் விழியை தாழ்த்திக்கொள்ள,ஆடவனோ அவளின் தடுமாற்றம் அறிந்து தாயிடம் திரும்பினான்.
அவரிடம் குனிந்து மீண்டும் ஒரு முறை நலன் விசாரித்தவன் “அம்மா குட் லக்…உங்க பையனோட எதிர்காலம் உங்க கையிலே தான் இருக்கு…பார்த்து பேசுங்க” என அவரின் காதோரம் கிசுகிசுக்க,
அவரோ சந்திரமதி தங்களை கவனிப்பதால் “சரிடா…சரிடா…நீ முதல்ல இடத்தை காலிப்பண்ணு” என சிரித்துக்கொண்டே பல்லிடுக்கில் அதட்டினார்.
அவனும் ஒரு பெருமூச்சுடன் “சரி நீங்க பேசுங்க” என இருவரையும் பொதுவாக பார்த்தவாறு கூறி,இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
அன்னையும் மகனும் ரகசியம் பேசுவதை சிறியவளின் கூரிய விழிகள் அவதானத்துக்கொண்டு தான் இருந்தன.
இருவருக்குமிடையே அதீத நெருக்கம் இருப்பதும் அவளிற்கு நன்றாக தெரிந்தது.
உலகில் அவளது தமையன் மட்டும் தான் தாயை கண் இமைப் போல் தாங்குவான் என்று எண்ணியிருந்தாள்.
ஆனால் அவனிற்கு இணையாக இன்னொருவனும் இருக்கிறான் என்று அவள் உணர்ந்த தருணம் அது தான்!
ஏற்கனவே குழம்பிய குட்டையாய் இருந்தவளின் மனம் மீண்டும் களங்க ஆரம்பித்தன.
அதேசமயம் அவர் அவளிடம் என்ன விடயமாக பேச வந்திருக்கிறார் என்பதை கச்சிதமாக கணித்தவள்,அவரிடம் நிற்சிந்தையுடன் மறுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு காத்திருந்தாள்.
“உன்னை கடைசியா அந்த கல்யாணத்திலே பார்த்தது…நீ எப்படிம்மா இருக்கே?” என மெதுவாக தனது உரையாடலை ஆரம்பித்தார்.
“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி.. நீங்க எப்படி இருக்கீங்க?அங்கிள் பாட்டியெல்லாம் எப்படி இருக்காங்க” என்று அவளும் பதிலுக்கு அவரை பற்றியும் மற்றவர்களை பற்றியும் நலன் விசாரித்தாள்.
அவரும் அதற்கு பதிலுரைத்திட,அதன்பிறகு அவரிடம் ‘என்ன பேசுவது?’ என தெரியாமல் அமைதியாக காத்தாள் அவள்.
அவளிற்கு சட்டென யாரிடமும் நெருங்கி பழக வராது.அவளின் மௌனத்திற்கு அதுவும் ஒரு காரணம்!
மற்றொரு காரணம்,எதுவாக இருந்தாலும் அவரிடமிருந்தே வரட்டும் என்று அவள் எண்ணினாள்.
அவரோ “இப்போ தான் நீயும் முகிழும் தேவகி மேடமோட பொண்ணுன்னு தெரிஞ்சது மதி…கேட்டவுடனே எல்லாருக்கும் பதறிப்போச்சு…உலகத்திலே இப்படியெல்லாம் கூட நடக்குமானு விசித்திரமா இருந்துச்சு…அதுவும் விஜயலட்சுமி செஞ்ச காரியத்தை நினைச்சா இப்பவும் பயங்கர கோபம் வருதும்மா…பாவம் நீங்க இரண்டு பேரும்…இரண்டு சின்னப்பிள்ளைங்களும் அந்த ராட்சசியை சமாளிச்சு இத்தனை வருஷம் வாழ்ந்ததை நினைச்சா ஒரு தாயா எனக்கு ஈரக்குலையே நடுங்குதும்மா…எப்படிம்மா?எப்படி அதெல்லாம் சமாளிச்சு இத்தனை வருஷம் வாழ்ந்தீங்க?” என அவர்களுக்கான மெய்யான வருத்தத்துடன் அவர் பேச,அதனை சந்திரமதியும் உணர்ந்துக்கொண்டாள்.
அந்த சம்பவங்களை பற்றி இப்போது நினைத்தாலும் அவளின் நெஞ்சம் குமுறின.
அவளின் இதயத்தை யாரோ ஒருவர் அழுத்துவது போலிருக்க,அவளிற்கு தொண்டை அடைத்தன.
அவளின் முகம் சிவந்து அவள் பேச முடியாமல் தவிப்பதை அறிந்த வானதியின் தாய்மை உள்ளம் கலங்கின.
சட்டென அவளின் மடியில் இறுக்கமாக கோர்த்திருந்த கரம் பற்றி “என்னை மன்னிச்சிடும்மா…தெரியாமல் பழசை எல்லாம் ஞாபகப்படுத்திட்டேன் போலே…நீ அதை பத்தி பேசவேண்டாம் விடும்மா” என அவளின் கரத்தை அழுத்தி ஆறுதலரைக்க,
அவளோ விழி உயர்த்தி அடைத்த தொண்டையை செருமியவள் “பரவாயில்லைங்க ஆன்ட்டி…கொஞ்சம் எமோஷனலாகிட்டேன்…அவ்வளவு தான்” என்றாள் முயன்று வருவித்த குரலில்…
அவளின் விழிகள் கலங்கிய விதமும்,கரகரத்த குரலும் அவர்களது கடந்த வலியை அவருக்கு எடுத்துரைக்க அவரின் உள்ளம் இந்த இரு பெண்களுக்காக துடித்தன.
“நீ கஷ்டப்படறதை பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும்மா…இனி நீங்க இரண்டு பேரும் எதைப்பத்தி யோசிச்சும் கவலைப்பட வேண்டாம்மா…உங்களுக்காக வீர் தேவகி மேடம் இருக்காங்க…அதையெல்லத்தையும் விட மலைப்போல் உங்களுக்கு ஆதரவு கொடுக்க நம்ப குடும்பம் உங்களுக்கு பின்னாடி இருக்கு…வீணா பழசை நினைச்சு கலங்காமல் புதுசா ஒரு வாழ்க்கைய வாழும்மா” என பிடித்திருந்த அவளின் கரத்தை தட்டிக்கொடுத்து மறைமுகமாக அவளும் தங்களது வீட்டுப் பிள்ளை என்பதை தெளிவுப்படுத்தினார்.
அவரது மறைமுகமான குறிப்பு அவளிற்கும் சரியாக புரிந்திட,ஏனோ அதனை மறுக்க அவளிற்கும் தோன்றவில்லை.
அதன் காரணம் அவர் ‘நம்ப குடும்பம்’ என்றுரைத்தது அவளையும் அப்போதே அவர்களது குடும்பத்தில் ஒரு நபராக பாவித்து பேசிய விதம் தான்!
ஆயினும்,கண்ணிற்கு புலப்படாத ஏதோ ஒரு திரை அவளது இதயத்தை மறைத்திருக்க அவள் மௌனம் காத்தாள்.
ஆனால் வானதி அமைதியாக இருக்கவில்லை.
அவருக்கு அவரது மகனது சந்தோஷம் முக்கியமல்லவா?
அதனால் மெதுவாக தாம் அங்கு வந்த காரியத்தை பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.
“சரி விடும்மா…அதை பத்தி பேச வேணாம்…நாம்ப வேற பேசுவோம்” என்றவர்,தொண்டையை செருமி “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை மதி…நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்மா…உன்னை விரும்பறேன்னு என் பையன் நேத்து தான் சொன்னான்மா…உனக்கு அவனை பிடிச்சிருக்கா இல்லையாம்மா?” என அதிரடியாக அவளிடம் வினவினார்.
அவர் இவ்வாறு முகத்திற்கு நேரெதிரே கேட்பார் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.
அதனால் அவள் ஒரு வித திகைப்புடனே அவரை ஏறிட்டாள்.
அவளிற்கு சட்டென பதில் எதுவும் கூற முடியவில்லை.
அவர் கேட்டவுடனே மறுக்க தான் அவளின் மனமும் விளைகிறது.
ஏனெனில் அவன் மீது அவளிற்கு தான் காதல் எதுவுமில்லையே?
ஆனாலும் அவரின் முகத்திற்கு நேரெதிரே ‘உங்க பையனை எனக்கு பிடிக்கலை’ என எவ்வாறு கூற முடியும்?
ஆகையால்,எந்த வித பதிலும் கூற முடியாமல் தயங்க “நீ ஏன் தயங்குகிறேன்னு எனக்கு புரியுதும்மா…யாருக்கா இருந்தாலும் நேரடியா மறுப்பு தெரிவிக்க கஷ்டமா தான் இருக்கும்” என பெருமூச்சுடன் கூறியவரின் முகம் வாடிப்போனது.
அவரின் முகம் சுருங்கியதை கண்டவளின் மனம் தாளவில்லை.
அவளை விட வயதில் மூத்த பெண்மணியின் முகம் தன்னால் வாடுவதை பொறுக்க முடியாமல் “ஆன்ட்டி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…எனக்கு உங்க பையனை பிடிக்கும் தான்…ஆனால் இப்போதைக்கு எனக்கு கல்யாணத்திலே இஷ்டமில்லை ஆன்ட்டி…உங்களுக்கு தெரியாததுனு எதுவுமில்லை…எனக்கும் அத்தானுக்கும் மணமேடை வரை வந்து கல்யாணம் கடைசி நிமிஷத்தில் நின்னுடுச்சு…அப்படியொரு சூழ்நிலையில் நான் எப்படி அதே வீட்டுலே கல்யாணம் பண்ணிட்டு வர முடியும்?என் இடத்திலிருந்து நீங்க கொஞ்சம் யோசிங்களேன்” என அவள் இந்த காதலை மறுப்பதற்கான காரணத்தை அவரிடம் வெளிப்படுத்த,
அவள் தனது மகனின் நேசத்தை மறுப்பதற்கான காரணம் அவருக்கு நியாயமாக தோன்றின.
ஒரு பெண்ணாக அவளின் சங்கடம் நூறு சதவீதம் சரியானது தான்.
இருப்பினும்,அவருக்கு தன் பிள்ளையின் வாழ்வே முதன்மையாக தெரிய “எனக்கு நீ சொல்லற காரணம் புரியுதும்மா…முதல் பையன் கூட கல்யாணம் வரை போய் நின்னுட்டு இரண்டாவது பையனோட காதல்னு வந்து நின்னால் எனக்கே அது ஒரு மாதிரி சங்கோஜமா தான் இருக்கும்…ஆனால் மத்தவங்களுக்காக நம்பளோட விருப்பத்தை சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க முடியாதேம்மா…எனக்கு என் பிள்ளைங்களோட சந்தோஷம் தான் முக்கியம்…எனக்கு வேற எதை பத்தியும் கவலையில்லை” என திடமான குரலில் உரைத்தவர்,
“சந்திரமதி என் பையனை பத்தி நானே பெருமையா சொல்லக்கூடாது தான்…ஆனால் மத்த இரண்டு பிள்ளைங்களை காட்டிலும் ஜித்து எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்…பூபதியும் சரி…தமயந்தியும் சரி சின்ன வயசிலிருந்தே இது தான் எனக்கு வேணும்னு தெளிவா இருப்பாங்க…அவங்களுக்கு வேணும்கறதை அடம் பிடிச்சு வாங்கிற அளவு அவங்களுக்கு தீரம் இருக்கு…ஆனால் சின்னவன் அப்படியில்லை…ரொம்ப சமத்து…இது தான் வேணும்…அது தான் வேணும்னு அடம் பிடிக்கிற பையன் கிடையாது…அவனுக்கு கிடைச்சதை வைச்சு சிறப்பா வாழற திறமை அவனுக்கு இருக்கு…அவனுக்கு பிடிக்காததை கூட பிடிச்ச மாதிரி மாத்திப்பான்…ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணி வாழுவான்…மத்த பிள்ளைங்க எல்லாம் படிப்பு,தொழில்,அரசியல் அது இதுனு பிஸியான நேரம்…சின்னவன் மட்டும் தான் குடும்பத்திலே இருக்கிற ஒவ்வொருவரை பத்தியும் யோசிச்சான்…நான் நாள் பூராவும் கிச்சன்லே அடைஞ்சு கிடந்தால் கூட அங்க வந்தும் ‘அம்மா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்’னு என் கூடவே இருப்பான்…நிக்கறது மட்டுமில்லை…எனக்கு உதவியும் செய்வான்…நான் மத்தவங்களோட பசியறிஞ்சு நடந்துக்கிட்டால் என்னோட பசியறிஞ்சு எனக்கு சமைச்சு கொடுக்கிற ஒரே ஆளு அவன் தான்…இந்த கல்யாண விஷயம் பிடிக்கலைனா கூட குடும்பத்துக்காக ரோகிணிய கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டான்…அவனாலே முடிஞ்ச வரை அவனுக்கு பிடிச்சதா மாத்த முயற்சி பண்ணான்…ஆனால் அவனுக்கு அது ஒத்து வராதுனு முடிவா தெரிஞ்ச பிறகு தான் விலக நினைச்சான்…அந்த சமயத்திலே தான் உன்னை பார்த்து விரும்ப ஆரம்பிச்சிருக்கான்…அவனுக்கு நீ ஏத்தப்பொண்ணுனு ஏதோ ஒரு இடத்திலே தோணியிருக்கு…உன் கூட வாழ்ந்தால் அவன் சந்தோஷமா இருப்பான்னு தெரிஞ்சதாலே தான் என்கிட்ட வந்து சொல்லியிருக்கான்…இப்போ சொல்லும்மா…சின்ன வயதிலிருந்து எல்லாத்தையும் அட்ஜ்ஸ்ட் பண்ணியே வாழ்ந்து பழக்கப்பட்ட பையன் முதல் முறையா விருப்பப்பட்ட விஷயம் நீ தான்…அப்படியிருக்கும் போது என்னாலே எப்படிம்மா மறுக்கமுடியும்?நான் உன்கிட்ட வந்து பேசின விஷயம் தெரிஞ்சால் அவன் அப்பா தாம்தூம்னு குதிக்க செய்வாரு…எனக்கு அதை பத்தி எல்லாம் கவலையில்லை…எனக்கு என் பையன் சந்தோஷமா இருக்கணும்…அவ்வளவு தான்…இப்போ நீ சொல்லும்மா நான் உன்கிட்ட வந்து பேசினது உனக்கு தப்பா தெரியாதா?” மிக நீளமாக தனது மகனைப் பற்றிய நல்ல விஷயங்களை எடுத்துக்கூறி அவளின் மனதில் ஒரு நேர்மறையான எண்ணங்களை உருவாக்கினார்.
அவரின் பேச்சிலிருந்தும் முகிழ்மதியின் வாய்மொழியாகவும் ஜித்துவின் குணங்கள் அவள் அறிந்திருந்தாள்.
ஆனாலும்,அவனை ஏற்க ஏதோ ஒரு தயக்கம்!
அதனால் தொண்டையை செருமியப்படி “ஆனால் ஆன்ட்டி உங்க பையனுக்கு இன்னும் சில நாளிலே வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் நடக்க இருக்கு…அப்படியிருக்கும் போது இதைப்பத்தி நாம்ப இப்போ பேசறது சரியா?எனக்கு ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு…” என தயக்கத்துடன் என்றாலும்,தன் மனதின் உறுத்தலை அவரிடம் அழுத்தமாக கேட்டுவிட,
அவரோ “இங்க பாரும்மா…அந்த கல்யாணத்தை பத்தி கவலைப்படாதே…சொல்லப்போனால் எங்க வீட்டுலே யாருக்குமே இந்த கல்யாணத்தில் உடன்பாடில்லை…அவனோட அப்பா மட்டும் குதிப்பார்…உனக்கு விருப்பமிருக்கா?நீ இதை செய்யணும்னு விருப்பப்படறீயா?உடனே செஞ்சிடு…மத்தவங்க என்ன நினைப்பாங்க?என்ன பேசுவாங்கனு நினைச்சிட்டே இருந்தால் நம்மால் வாழ்வே முடியாதும்மா…நீ உன்னை பத்தி மட்டும் யோசி” என அவளிற்கு தேவையான அறிவுரையை வழங்கினார்.
அத்தோடு அவளின் முடிவை அறிந்துக்கொள்ள அவர் ஆர்வமாக இருக்க, அவளிற்கு அப்போதும் சம்மதம் கூற வாய வரவில்லை.
அவள் அழுத்தமாக..அமைதியாக தனது மடியில் கோர்த்திருந்த கரத்தை பார்த்தப் படி அமர்ந்திருந்தாள்.
நியாயமாக பார்த்தால் அவளின் இந்த பிடிவாதத்தை கண்டு அவருக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.
ஆனால் அவளை இப்போது தான் இன்னும் அதிகமாக பிடித்திருந்தது.
ஒரு பெண்ணாக அவளின் தயக்கம்,மறுப்பிற்கும் பின்பு தெளிவான காரணங்கள் இருந்தன.
அவள் உடனடியாக ஒப்புக்கொண்டிருந்தால்,அவளின் மீது ஒரு எதிர்மறையான விம்பம் விழுந்திருக்கும்.
தற்போது அவளின் அமைதியான மறுப்பே அவளை பிடிக்க வைத்திருந்தது.
‘பரவாயில்லை…நாம்ப நினைக்கிற மாதிரியில்லை…இவ ரொம்ப நல்லப்பொண்ணு தான் போலே…நாம்ப தான் சரியா புரிஞ்சுக்காமல் இருந்திட்டோம்’ என தனக்குள் சிந்தித்து அவளை மெச்சிக்கொண்டார்.
அதனால் அவளை எப்பாடுபட்டாவது மகனிற்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவர்
“உனக்கும் அவனை பிடிச்சிருக்கிற மாதிரி தான் இருக்கு…அப்புறம் நீ ஏன் இவ்வளவு யோசிக்கிறேனு தெரியலைம்மா?சரி நான் உன்னை கட்டாயப்படுத்தலை…நீ நல்லா யோசிச்சு இரண்டு நாளிலே ஒரு முடிவெடும்மா” என்று அவளிற்கு அவகாசம் கொடுக்க,
அதில் விலுக்கென்று நிமிர்ந்து அவரை ஏறிட்டவள் ‘பையனை போலவே அம்மாவுக்கும் ரொம்ப தாராள மனசு…இரண்டு நாள்’ என மனதிற்குள் எழுந்த பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டாள்.
அதேசமயம் அவளின் மனதை மேலும் கலங்கடிக்கும் விதமாக “வர்றேன் மதி…யோசித்து நல்ல முடிவா எடுப்பேன்னு நம்பி காத்திருக்கேன்…” என்றவர் அவளை தோளோடு அணைத்து உச்சிமுகூர்ந்துவிட்டே வெளியேறினார்.
அவரின் அந்த இதமான செய்கையும் அரவணைப்பும் அவளின் இதயத்தை சிலிர்க்க வைத்தன.
அன்னையின் அரவணைப்பின்றி வளர்ந்தவளிற்கு அதன் மதிப்பு தெரியும்.
ஆதலால்,அவரின் அந்த செயல் அவளை நெகிழ்த்தின.
அவர் பேசிவிட்டு சென்றப் பிறகு அவளின் நெஞ்சத்தில் பெரும் சலசலப்பு!
முன்பு தீர்க்கமாக தன் முடிவில் இருந்தவளால் அவர் பேசிவிட்டு சென்றப்பிறகு அமைதியாக இருக்க முடியவில்லை.
தனக்காக…தன் மீது அவன் வைத்துள்ள நேசத்திற்காக தன்னிலையில் இருந்து பணிந்து வந்து பேசிய வானதிக்காக அவள் மனம் இறங்கின.
அப்போதும் அவளின் கடந்த கால காதலை எண்ணி ஒரு தயக்கம் இருக்கவே செய்தன.
ஆனால் அந்த தயக்கத்தை முழுதாய் உடைத்தெறிந்தது காஞ்சனா மாலாவிடமிருந்து வந்த அழைப்பு!
தனக்காக இவ்வளவு பெரிய மனதி கௌரவம் பார்க்காமல் வந்து பேசிய விதமே அவளை மொத்தமாய் சாய்த்திருந்தது.
அதுவும் அவருடைய பேரனின் நேசத்திற்காக அவளிடம் பேசினார்.
அவளிற்கு முதலில் அழைத்தது என்னவோ வானதி தான்!
இரண்டு நாள் கழித்தும் அவளிடம் பதில் இல்லை என்றவுடன் “என்ன அத்தை அந்த பொண்ணு இதுவரை எதுவும் சொல்லலை…ஜித்துவை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு” என வானதி புலம்ப,
“அமைதியா இரு…எதுக்கு இப்படி அவசரப்படறே?அவளோட பக்கம் இருக்கிற நியாயம் உனக்கு புரியுதில்லை…அவளுக்கு அவகாசம் கொடும்மா” என வயதின் மூத்தவருக்குரிய பக்குவத்துடன் எடுத்துச் சொல்ல,
“ஆனால் கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு அத்தை…” என அவர் கையை பிசைந்தார்.
அவருக்கும் அதே எண்ணம் தான்!
இதில் தன் மகனிடம் இந்த திருமணத்தை நிறுத்த எந்த முயற்சியும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தது வேறு அவரை வாட்டி எடுத்தன.
மகனிற்கு அவர் செய்துக்கொடுத்த சத்தியமா?பேரனின் வாழ்வா? என்று வரும் போது பேரனின் வாழ்வு தான் முதன்மையாக இருந்தது.
ஆனால் நேரடியாக அவராக எந்தவொரு விடயத்திலும் தலையிடக்கூடாது என ஒதுங்கியே இருந்தார்.
தன் மருமகளை முன்னால் வைத்து பின்னாலிருந்து தனது பேரனிற்கு உதவிச்செய்யும் முடிவுடன் இருந்தார்.
இப்போது சந்திரமதியிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றவுடன் வேறுவழியின்றி அவரே காரியத்தில் இறங்க வேண்டிய கட்டாயம்!
புதல்வனிற்கு செய்துக்கொடுத்த சத்தியத்தை மீறுவது தவறாகினும் பேரனின் எதிர்காலத்திற்காக எதையும் செய்யலாம் என துணிந்துவிட்டார்.
அதனால் “நீ அவளுக்கு ஃபோனை போடும்மா…நான் பேசறேன்” என்றதும் “அத்தை” என அதிர்ச்சியில் அவர் கூவ,
“என் பேரன் தான்மா எனக்கு முக்கியம்…நீ போடு” என திட்டவட்டமாக கூறிவிட,தனது மாமியாரை எண்ணி பெருமிதமாக இருந்தது.
மகனிற்காக ஒரு அன்னையாக அவர் போராடுவதில் ஒரு நியாயம் இருந்தது.
ஆனால் அவருக்கு அப்படியொரு அவசியமில்லை எனினும் பேரனிற்காக அவர் முடிவெடுத்ததை
எண்ணி பூரித்துப்போனவராய் வருங்கால மருமகளிற்கு அழைத்துவிட்டார் அவர்.