சந்திரமதியும் ஜித்துவும் மட்டும் இப்போது அவனறையில் இருந்தார்கள்.
ஜித்து அவனது கட்டிலில் சாவகாசமாக அமர்ந்திருந்தான்.
அவனிற்கு அவனது குடும்பத்தினரை பற்றி நன்கு தெரியும்.எனவே, எவ்வித பதட்டமும் இல்லாமல் அவன் சாதாரணமாக இருந்தான்.
ஆனால் சந்திரமதி தான் அறைக்குள் நுழைந்ததிலிருந்து நகத்தை கடித்தப்படி பதட்டத்துடன் அங்குமிங்கும் நடந்துக்கொண்டிருந்தாள்.
அவனது பேச்சில் மயங்கி திருமணம் செய்துக்கொண்டு வந்துவிட்டாள்.
இப்போது தன்னால் முகிழ்மதிக்கு ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என ஒரு புறம் பயமாக இருந்தது என்றால்,மற்றொரு புறம் தமையனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கவலை புழுவாய் அவளை அரித்தது.
அதனால் அவள் படபடப்பாக நகத்தை கடிக்க,சில நிமிடங்கள் வரை மௌனமாக அவளை ரசித்துக்கொண்டிருந்த ஜித்துவிற்கு அவள் விட்டால் நகத்தை கடித்து துப்புவதற்கு பதிலாக விழுங்கிவிடுவாள் என்று தோன்ற “மூன் நகத்தை கடிக்காதே…” என வேகமாக அவளின் அருகே வந்து கரத்தை தட்டி விட்டான்.
“ப்ச் ஜித்து…” என திரும்பி அவனை முறைக்க,
அவனோ “அப்பா பேசினதை நினைச்சு டென்ஷனா இருக்கியா மூன்?” என அவளின் தோள் பற்றி நிறுத்தி வினவினான்.
அவன் அவளருகே வந்து நின்று அவளை தீண்டியதை கூட உணராத நிலையில் அவள் இருந்தாள்.
அவளிற்குள் அப்படியொரு தவிப்பு…தடுமாற்றம்…
இருப்பினும்,அவனது கேள்விக்கு பதில் கூறும் விதமாக “ப்ச் அதெல்லாம் இல்லை ஜித்து…அவர் ஏதோ கோபத்திலே பேசிட்டாரு…எனக்கு புரியுது…அதுமட்டுமில்லாமல் எனக்காக நீங்களே பேசிட்டிங்களே…அதனாலே எனக்கு அது பிரச்சனையில்லை” என தன்னையும் அறியாமல் அவன் மனதை குளிர்வித்தவள்,
அடுத்த கணமே “நாம்ப அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டமோ ஜித்து?பேசாமல் உங்க அப்பாகிட்ட பொறுமையா பேசி கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமோனு இப்போ எனக்கு தோணுது” என்று கூறி அவன் முகத்தில் வெந்நீரை கொட்டினாள்.
அதுவரை அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி அவளின் இறுதி பேச்சில் தொலைந்துப்போயின.
அவளின் மீதிருந்த கரத்தை அகற்றிய ஜித்து “ஏன் என்னை கல்யாணம் பண்ணது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா?என்னை உனக்கு பிடிக்கலையா மூன்?” என உருக்கமான குரலில் அவன் வினவியதற்கு பிறகே அவள் விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.
அவன் முகத்தில் தெரிந்த வலியை உணர்ந்த பெண்ணவளிற்கு அதன்பிறகே தாம் சாதாரணமாக கூறிய சொல் அவனை காயப்படுத்தியிருக்கிறது என்பது புரிந்தது.
ஏன் என்றே தெரியவில்லை…
அவனது வலி அவளிற்கும் வலித்தது…
அதிசயமாய் இருந்தது அவளிற்கு…
அத்தோடு அவன் முகத்திலிருந்த துயர் துடைத்துவிட அவளின் உள்ளம் பரபரத்தன.
ஆதலால் ஒரு வித பரபரப்புடன் “இல்லை நான் அந்த அர்த்தத்திலே சொல்லலை ஜித்து…இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னு எல்லாத்தையும் சங்கடப்படுத்தி நாமளும் சங்கடப்பட்டு நின்னுயிருக்க வேணாம்னு தோணுச்சு…அதான் அப்படி சொன்னேன்…வேற ஒண்ணுமில்லை” என சமாதானமாக உரைத்தாள்.
“ஓ…” என யோசனையாக ஒற்றை புருவத்தை நீவியவன்,
“ஆர் யூ ஓகே வித் திஸ் மேரேஜ் மூன்…நான் உன்னை கட்டாயப்படுத்திட்டேனா?” என அவளை நேர் பார்வையாக பார்த்தப்படி வினவ,
ஒரே ஒரு கணம் அதற்கு என்ன பதில் கூறுவது என்று அவள் சிந்தித்தாள்.
ஆனால் சடுதியில் தொண்டையை செருமிய சந்திரமதி “எனக்கு சம்மதமில்லைனா நான் இங்க வரைக்கும் வந்திருக்கவே மாட்டேன் ஜித்து” என தீர்க்கமாக உரைத்ததற்கு பிறகே ஆடவனது முகம் தெளிந்தது.
ஏனென்றால்,அவளை அவசரப்படுத்தியதால் அவளிற்கு பிடிக்காமல் இந்த உறவை ஏற்றுக்கொண்டாளோ என அவனிற்குள் ஒரு தவிப்பு இருந்தது.
இப்போது அவள் விருப்பப்பட்டே அவனை திருமணம் செய்திருப்பது தெரிந்து நிம்மதியுற்றான்.
அவளிற்கு அவன் மேல் காதலில்லை என்பது அவனிற்கும் தெரியும்…ஆனால் இன்றைய பிடித்தம் நாளை காதலாக மாறும் என்ற நம்பிக்கையே அவனிற்கு தற்சமயம் போதுமானதாக இருந்தது.
“மூன் இங்க பாரு…தேவையில்லாமல் எதையாவது போட்டு குழப்பிக்காதே…உனக்கு எங்க அப்பாவை பத்தி சரியா தெரியலை…அவர் ஏதாவது நாடகம் போட்டவது பாட்டிய கரெக்ட் பண்ணி கல்யாணத்தை நடத்திடுவாரு…நமக்கு இது தான் சேஃப்” என அவளின் முந்தைய கேள்விக்கான பதிலை இப்போது உரைத்தான்.
அவனால் இப்போது வரை பாட்டியின் செயலை ஏற்க முடியவில்லை.
அவர் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக நின்ற சலிப்பு அவனுள் நீர் பூத்த நெருப்பாய் இருந்தன.
அவன் கூறியதை கேட்ட சந்திரமதியோ “ரோகிணி பண்ண விஷயத்தை வெளிப்படையா சொன்னாலும் உங்க அப்பா புரிஞ்சுக்க மாட்டாரா ஜித்து?” என தயக்கத்துடனே வினவ,
அவனோ ‘அதைப்பத்தி சொன்னால் அவரு கல்யாணத்தை நிறுத்தவாரு தான்…ஆனால் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதேடி சண்டைக்கோழி…இப்படி ஏதாவது கோல்மால் பண்ணா தான் நீ எனக்கு கிடைப்பே’ என உள்ளுக்குள் கட்டியம் கூறியவன் வெளியே “அதெல்லாம் அவர் நம்ப மாட்டாரு” என அடித்து கூறி,அது தான் உண்மை என்பது போல் அவளை நம்ப வைத்தான்.
அவனது பாவமாக முகத்தை நம்பிய சந்திரமதியும் “ப்ச் போங்க நீங்க ஏதேதோ சொல்லறீங்க? எனக்கு இப்போ இருக்கிற பெரிய பிரச்சனையே என்னாலே அத்தானுக்கும் முகிழுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது…அது தான் எனக்கு பெரிய டென்ஷனா இருக்கு…” என தவிப்பாக கூறிக்கொண்டே மீண்டும் நகம் கடிக்க செல்ல,
“ப்ச் நகம் கடிக்காதே மூன்…கெட்ட பழக்கம் அது” என அவளின் கரம் பற்றி தடுத்தவன் “நீ கவலைப்படாதே…எங்க அண்ணா அப்படியெல்லாம் செய்யக்கூடியவரில்லை…அவ்வளவு லவ்ஸ் அண்ணி மேலே” என சிரித்துக்கொண்டே கூற,
அவளும் ஆமோதிப்பாக தலையசைத்து “எனக்கும் அது தெரியுது…இருந்தாலும் டென்ஷனா இருக்கு” என இதழ்கடித்து அவஸ்தையாக உரைக்க,
அவளின் கடித்த இதழ்களை பார்த்த ஜித்துவோ “டென்ஷனா இருந்தால் அதை கூல் பண்ண என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு…ட்ரை பண்ணறீயா?” என்றவனின் விழிகள் இரண்டும் மின்னின.
“என்ன?” என்று கேட்டவள் அவனது விழிகள் விஷமத்துடன் ஒளிர்வதை பார்த்ததும்,சட்டென சுதாரித்து “ஜித்து..” என ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க,அதை துளியும் பொருட்படுத்தாமல் வேகமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
முதலில் அவளின் இதழை சிறைப்பிடிக்கவே அவனிற்குள் அவா…
ஆனால் அவ்வாறு செய்தால் அன்று போல் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாலும் விடுவாள் என்றெண்ணி வெறும் அணைப்போடு நின்றுவிட்டான்.
அவளோ அவன் ஏதேனும் விபரீதமாக செய்வான் என்று எதிர்பார்த்தாள் தான்.
ஆனால் இவ்வாறு அதிரடியாக அணைப்பான் என்று நினைக்கவில்லை.
ஒரு கணம் அவன் அணைப்பில் திடுக்கிட்ட பெண்,உடனே சுதாரித்தவளாய் “ஜித்து என்ன பண்ணறீங்க?முதல்ல நகருங்க…” என அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ள,
“ப்ச் ஜஸ்ட் இது கட்டிப்பிடி வைத்தியம் தான்…வேற எதுவுமில்லை…கொஞ்ச நேரம் அப்படியே இரு” என அவன் அவளை விடாமல் இறுக்கமாக அணைக்க,அவளிற்கோ அவனது அணைப்பு ஏதேதோ உணர்வுகளை தட்டியெழுப்ப ஆரம்பித்தன.
அதை மறைத்து “ஆமா நீங்க பெரிய வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்…அடச்சை முதல்ல நகருங்க” என ஆவேசமாக அவனை பிடித்து தள்ளிவிட்டாள்.
அவனோ அவளிடமிருந்து விலகி வந்ததும் “ஏன்டி நாயை விரட்டற மாதிரி விரட்டறே?” என கடுப்பாக கேட்க,
அவளோ “ஏதே ‘டி’யா?” என இடுப்பில் கைவைத்து முறைக்க,
“பின்ன நீ என்ன டா வா…டீ தானே” என நக்கல் தொனியில் அவளை வம்பிழுக்க,
“உங்களை” என அடிக்க கை ஓங்கியவள் இறுதி நொடியில் தாம் செய்யவிருக்கும் காரியம் உணர்ந்து சுதாரித்து கீழிறக்கியிருந்தாள்.
சட்டென அவனில் உரிமையெடுத்துக்கொள்ள அவளிற்குள் ஒரு தயக்கம்…
தன்னவளின் சங்கோஜம் உணர்ந்த ஜித்து “மூன் ஒரு விஷயத்தை செய்யணும்னு முடிவுப்பண்ணிட்டால் அதை எப்படியாவது செஞ்சிடணும்.” என இதழ்கடித்து சிரித்தப்படி அவனாகவே அவளின் கரம் பற்றி தன் கன்னத்தில் மெதுவாக தட்ட,
அவனது சரியாக மழிக்கப்படாத தாடி அவளின் உள்ளங்கையில் குத்தி அவளை விதிர் விதிர்க்க செய்ய “ப்ச் என்ன பண்ணறீங்க ஜித்து?” என கையை அவனிடமிருந்து வேகமாக உருவிக்கொண்டாள்.
அவனோ தாராளமாக இதழ்பிரித்து புன்னகைக்க,அவனது வசீகர புன்னகையில் மயங்க தூண்டிய மனதை அடக்கி “ஜித்து நான் போட்ட ரூல்ஸ் மறந்திட்டாங்களா?” என கேட்டாள் ஒரு வித சிடுசிடுப்புடன்..
அவனோ “மறக்கலை…மறக்கலை” என அசால்ட்டாக சொல்லிக்கொண்டே பின்னங்கழுத்தை வருட,
அவளும் “என்ன சொன்னேன்” என விடாப்பிடியாக சிறுப்பிள்ளையிடம் விதிமுறைகளை கேட்கும் ஆசிரியை தொனியில் கறாராக வினவினாள்.
அவனும் அதே சிறுப்பிள்ளையின் தோரணையுடன் “தேவையில்லாமல் கிட்ட வரக்கூடாது…உன்னை தொட்டு பேசக்கூடாது…உன் மனசு மாறிற வரை நான் வெயிட் பண்ணனும்…அட்வான்ட்டேஜ் எடுக்க க்கூடாது” என ஒவ்வொரு விரலாக நீட்டிக் கொண்டே அவன் விதிமுறைகளை குறிப்பிட,
“புரியுதில்லை…அப்புறம் என்ன?” என இடையில் ஒற்றை கைக்குற்றி புருவம் உயர்த்தினாள்.
அவனோ “இல்லை…நீ இவ்வளவு அழகா கிட்ட நிக்கும் போது எப்படி என்னால் என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியும் பொண்டாட்டி” என தாபமும் மோகமும் கொப்பளிக்கும் குரலில் சொன்னவனின் விழிகளோ அவளை தான் வஞ்சனையின்றி ரசித்துக்கொண்டிருந்தன.
அவன் கூறியது போல் அந்த அடர் ஊதா நிற சின்னக்கரை வைத்த பட்டுப்புடவையில் ஒப்பனையில்லாமலே அத்துணை அம்சமாய் இருந்தாள் அவள்.
அதனால் அவளின் எழில் கணவனை ஈர்க்க,அவளை பார்வையாலே புசித்தான் அவன்.
அவன் ‘பொண்டாட்டி’ என்று அழைத்ததே அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது என்றால்,அவனது மோகப் பார்வை அவளின் அடி வயிற்றை பிசைய வைத்தன.
ஆயினும் எச்சிலை கூட்டி விழுங்கி “அதெல்லாம் முடியாது ஜித்து…ரூல்ஸ் இஸ் அ ரூல்ஸ்…நான் சொன்னதிலே ஒரு பாய்ண்ட் மீறினாலும் அண்ணன் வீட்டுக்கு கிளம்பிட்டே இருப்பேன்” என கண்டிப்பாக பேச முயன்றாலும் அவளின் முகத்தில் கிஞ்சித்தும் கோபமில்லை.
அதையறிந்த ஆடவனிற்கு கொண்டாட்டமாகிவிட “ஏதே அண்ணா வீட்டுக்கு கிளம்பிவியா?” என செல்ல கோபத்துடன் ஒற்றை புருவம் உயர்த்த,
அவளோ “ஆமா” என வீம்பிற்காக தலையாட்டியதும்,அவனோ இதழ்கடித்து வந்து சிரிப்பை அடக்கி “சரி கிளம்புடி” என்றான் அலட்சியமாக..
அதனை சற்றும் எதிர்பாராத மங்கை “ஏதே நான் கிளம்பட்டுமா?” என திகைப்புடன் வினவ,அவனோ எதுவும் பேசாமல் தெனாவெட்டாக நிற்க,
அவனது திமிர் அவளை தூண்டி விட்டதின் விளைவாக “சரி கிளம்பறேன்டா” என்றாள் அவனிற்கு இணையான திமிருடன்…
அவனோ அதிர்ச்சியில் விழி விரித்து “ஏதே டா வா?” என கூவ,
அவளோ இதழை சுழித்து “ஆமாடா…நீ டி போடும் போது நான் டா போடக்கூடாதுடா…நான் கிளம்பறேன்டா…” என வார்த்தைக்கு வார்த்தை ‘டா’ என்றழைத்து அவனை வெறுப்பேற்றி விட்டு, அங்கிருந்து அவள் கிளம்ப தயாராகிவிட,அதை ஏற்க முடியாத மணாளனோ “ஹே எங்கடி போறே?” என அவளின் கரத்தை பிடித்துச் சுண்டி இழுத்திருந்தான்.
அதை சற்றும் எதிர்பாராமல் “ஆ…” என அலறியவள் அதிரடியாக அவனது உரமேறிய நெஞ்சின் மீது வந்து மோதி நிற்க,
தன் தேகத்தில் வந்து மோதிய அவளின் முதுகுப்பகுதியை தன் சரீரத்தோடு சேர்த்து அணைத்தவன் “எங்கடி போறே?கஷ்டப்பட்டு உன்னை பேசி கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்தால் நீ என்னை விட்டு போவீயா?” என காதோரம் சீறிலான குரலில் அதட்ட,
அதில் அவளின் செவியோரம் மயிர்க்கூச்சரிந்திட,அத்துடன் தன் மேனியோடு மேனி உரசிய ஆடவனின் தேகம் வேறு அவளை படபடக்க வைக்க “ப்ச் ஜித்து…மறுபடியும் ரூல்ஸ் பிரேக் பண்ணறீங்க?” என அவள் விரல் நீட்டி கண்டிக்க,
அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “மூன் கொஞ்ச நேரத்துக்கு உன் ரூஷ்ஸ் கீல்ஸ் எல்லாம் ஒதுக்கி வைடி…ஐ வான்ட் டூ ஃபீல் யூ…தப்பாயில்லை…நம்ப கல்யாணம் நடந்ததை என்னாலே இன்னும் நம்பவே முடியலை…ஏதோ கனவு மாதிரி இருக்கு…இது கனவு இல்லை நிஜம் தான்னு நான் உணரனும்…பிளீஸ் கொஞ்ச நேரம் இப்படியே இருடி” என ஏக்கமும் காதலும் கலந்து உருகியவனின் குரலுக்கு கட்டுப்பட்டு சில வினாடிகள் அவனது அணைப்பிற்குள் அடங்கி நின்றாள்,அவனது இல்லப்பிராட்டி.
அதுவே அவளின் ஒத்துழைப்பாக கருதிய ஆடவன் அவளின் கையோடு கை கோர்த்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்க,அவளும் அவனிற்கு உடன்பட்டு மௌனமாக நின்றாள்.
அவன் தீண்டலில் அவளுள் பிடித்தமின்மையோ அசௌகரியமான உணர்வோ எதுவும் தோன்றவில்லை.
அதுவே அவளிற்கு வியப்பு தான்!
எவ்வாறு அவளின் மேனியும் நெஞ்சமும் அவனின் கட்டளைக்கு ஆட்பட்டு அமைதிக்காக்கின்றது என தன்னையே அவள் கேள்விக்கேட்ட நிலையில்,அதற்கான பதில் தான் அவளிற்கு கிடைக்கவில்லை.
அவனோ விழி மூடி அவளது கூந்தலில் சூடியிருந்த மல்லிகை பூவிலிருந்து வந்த வாசத்தை நாசி வழியே இழுத்து சுவாசித்தவன்,அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து தன்னவளின் பரிமளத்தையும் ஆழ்ந்து ஸ்பரிசிக்க ஆரம்பித்தான்.
அதுவரை நிர்மூலமாக இருந்த அவளின் இதயம் அவனது மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் எக்குத்தப்பாக தடுமாறியது என்றால்,தனது கழுத்தில் பதிந்திருந்த அவனது சொரசொரப்பான தாடை அவளின் மேனியை கூச வைத்தன.
அவளின் சிலிர்ப்பை உணர்ந்து இதழ்பிரித்து கள்ளப்புன்னகை பூத்த ஆடவனிற்கு தன்னவளின் உருகல் உற்சாகத்தைக் கொடுத்தன.
அதனால் அவளின் உணர்வுகளை மேலும் சோதிக்கும் விதமாக அவன் அவளின் கழுத்து வளைவில் இதழை குவித்து ஊதி அவளை திணறிடிக்க துவங்கிவிட,அது அவளின் மேனிக்குள் சில பல வேதியியல் மாற்றத்தை உண்டாக்கின.
அதனை உணர்ந்த அந்த குறும்புக்கார கண்ணனோ அத்துடன் நிறுத்தவில்லை.
கழுத்து வளைவில் முகம் புதைத்த ஆடவனின் உதடுகள் இப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அவளின் சங்குக்கழுத்தை இலேசாக உரசி சென்றிருந்தது.
கிட்டத்தட்ட அவன் அதரங்கள் அவளிற்கு முத்தமிட்டிருந்தன.
கண் மூடி திறக்கும் கணத்தில் நடந்து முடிந்த அந்த முத்த உரசலில் பாவையவளின் மேனி தூக்கிவாரிப்போட “டேய் இது தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கிற கதையா?ஓடி போயிடு” என ஆவேசமாக அவனை தள்ளிவிட்டாள்.
அவள் தள்ளிவிட்டதினால் படீரென்று விழி திறந்தவன் ‘வடப்போச்சே’ என்பது போல் புது மனையாளை ஏமாற்றத்துடன் நோக்க,
“பாவம் போலே முகத்தை வைச்சிக்கிட்டு எல்லா வேலையும் பண்ணறது?ஆளை பாரு…இனி கிட்ட வாங்க…உங்களுக்கு இருக்கு” என அவள் கடுப்புடன் திட்டிக்கொண்டிருக்க,
அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “பின்ன நீ என்னோட இருக்கிறது கனவா நிஜமானு நான் எப்படிடி செக் பண்ணறது?” என ஏக்க பெருமூச்சுடன் அவளின் அழகை பருகியப்படி கேட்க,
அவனின் விழி விச்சில் மீண்டும் அவளின் இதயம் தடதடக்க,அதனை அடக்கிவிட்டு “உங்களுக்கு என்ன கனவா நினைவானு செக் பண்ணனும்…அவ்வளவு தானே இப்படி செக் பண்ணுங்க” என நறுக்கென அவனின் கரம் கிள்ளி அவனை “ஆ” என அலற வைத்தாள்.
அவனோ வலியில் தன் கரத்தை தேய்த்துக்கொண்டே “என்னடி நீ?ரொமென்ஸ்னா கிலோ என்ன விலைனு கேட்பே போலே…” என கடுப்புடன் திட்ட,
அவளோ அவனை நாசி விடைக்க முறைத்து “வெளிய என்ன நிலைமையிலே இருக்குன்னு தெரியாமல் நான் டென்ஷனிலே இருக்கேன்…உனக்கு ரொமென்ஸ் கேட்குதுதாடா” என பல்லைக்கடித்தாள்.
அவனோ “டோன்ட் வொர்ரி செல்லம்…என் குடும்பத்தை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்…சோ எல்லாமே நல்லதா தான் நடக்கும்…குறிப்பா என் அண்ணா எதையும் நடக்கவிடமாட்டாரு…பயப்படாதே” என அவளை மீண்டும் ஆறுதலாக அணைக்க வர,
இம்முறை உஷாராக பின்னடைந்தவள் “கிட்ட வந்தே மவனே கொன்னுடுவேன்…தள்ளிப்போ…” என ஒற்றை விரலால் அவனது நெஞ்சில் விரல் வைத்து தன்னிலிருந்து அவனை தள்ளி நிறுத்தினாள்.
அதில் எரிச்சலுற்ற ஆடவன் ‘நம்ப ஆளு இம்புட்டு உஷாரா இருக்க வேணாம்…ஹும்’ என மனதிற்குள் சலிப்புடன் புலம்பி சிகையை அழுந்தக்கோதியவன் “சரிடி சண்டைக்கோழி…கிட்ட வரலை போதுமா?” என்றான் உம்மென்ற முகத்துடன்…
அவளோ “ம்” என தெனாவெட்டாக மார்பிற்கு குறுக்கே கைகள் கட்டி நின்றுக்கொள்ள,
திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் “ஹான் சொல்ல மறந்திட்டேன் பாரு சண்டைக்கோழி ரூமுக்குள்ள வாடா…போடானு நீ என்ன வேணா பேசு…தயவுசெஞ்சு மத்தவங்க முன்னாடி எதுவும் பேசி வைக்காதேடி” என்றான் முன்னெச்சரிக்கையாக…
அவளோ “ஏன்…ஏன் ஏன் சொல்லக்கூடாது…நீ டி சொல்லறேயில்லை…நான் டா சொல்லுவேன்” என விதாண்டவாதத்தோடு அவனிடம் எகிறிக்கொண்டு செல்ல,
அவளின் மதி முகம் கோபத்தில் சிவந்திருப்பதை கண்ட ஜித்து சலிப்பாக தலையசைத்து “ஏய் சண்டைக்கோழி…உன்னை ‘டா’ சொல்லவேணாம்னு சொல்லலைடி…நம்ப ரூமுக்குள்ள செல்லமா என்னை என்ன வேணா கூப்பிடு…நம்ப வீட்டு பெரியவங்க என்ன தான் மார்டானா இருந்தாலும் சில விஷயத்தை அவங்களால் ஏத்துக்க முடியாது…அதுக்காக சொன்னேன்டி” என அவளை அவன் கண்டித்ததின் காரணம் பற்றி தெளிவுப்படுத்த,அவளிற்கும் அவனது நல்லெண்ணம் புரிந்தன.
ஆனாலும் ஒரு வீம்பு அவளுக்குள்!
எனவே “ஹலோ எனக்கும் எங்க எப்படி பேசணும்னு நல்லாவே தெரியும்…சும்மா உங்களை வெறுப்பேத்த தான் ‘டா’ சொன்னேன்…மத்தப்படி உங்களை செல்லம்மா கூப்பிட எனக்கு ஆசையா என்ன?” என்றாள் இதழை சுழித்து அலட்சியமாக…
அவனோ சுழித்த அவளின் இதழை ஒரு பெருமூச்சுடன் நோக்கி விட்டு “ஆஹான்…என்னை நீ வெறுப்பேத்தறே? இருக்கட்டும்…இருக்கட்டும்” என தாடையை நீவி ஒரு மார்க்கமாக கூற,
உடனே புருவம் சுருக்கியவள் ‘இவன் பார்வையே சரியில்லை…கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்’ என தனக்கு தானே எச்சரித்துக்கொண்டாள்.
ஆனால் அவளது கண்ணாளன் ஒரு ஆளை மயக்கும் வித்தைக்காரன் என்றும்,அவன் செய்யும் காதல் மாயத்தில் அவளிற்கும் மயங்கி நிற்பதை தவிர வேறு வழியில்லை என்பதையும் அக்கணம் அறிய தவறினாள்.

சில நிமிடங்களுக்கு பின்பு,
ஜித்தேந்திரன் தனது தமையனிடம் மன்னிப்பு கேட்டு வந்து நிற்க,அதேப்போல் சந்திரமதி அவளது பாசமலரிடம் மன்னிப்பு யாசித்து நின்றாள்.
“தப்பு செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிடுமாடா?யார் கொடுத்த தைரியத்தில் நீ இதை பண்ணிட்டு வந்து நிற்கறே?” என ரத்தினவேல் எடுத்த எடுப்பிலே சீற,
“இல்லைண்ணா ரோகிணியோட நடக்க இருக்கிற கல்யாணத்தை நீங்க நிறுத்திடுவீங்கனு தெரியும்…ஆனால் மூன்…சாரி சந்திரமதியை கல்யாணம் பண்ணிக்க அப்பா கண்டிப்பா எந்த காலத்திலும் சம்மதிக்கவே மாட்டாருனு தெரியும்…அவர் நம்ப சொல்றதை கேட்கிற நிலைமையில் இருந்தால் கூட பரவாயில்லை…அவர் வேற ஒரு ஜோன்லே இருந்தாருண்ணா…வீணா உங்களையும் என் பிரச்சனையிலே இழுத்துவிட்டு தொந்தரவு பண்ண மனசில்லாமல் தான் இப்படி பண்ணிட்டேன் அண்ணா” என தன்னுடைய சூழ்நிலையை அவன் தெளிவாக எடுத்துக்கூற,
“தொந்தரவு பண்ண மனசில்லைன்னா இப்படி தான் வீட்டுலே யாரையும் மதிக்காமல் உன் இஷ்டத்துக்கு நடந்துப்பியா?” என அவனை உஷ்ணத்துடன் முறைக்க,
‘என்னடா இவர்…இறங்கியே வரமாட்டிக்கிறாரு’ என பாவமாக முகத்தை வைத்து “சாரி அண்ணா” என மன்னிப்பை யாசிக்க,
“நான் உன்னை மன்னிச்சிட்டால் நீ திருட்டு கல்யாணம் பண்ணது இல்லாமல் ஆகிடும்னு சொல்லு நான் உன்னை மன்னிச்சிடறேன்” என்றான் கடுப்பாக.
அவன் எதுவும் பேசாமல் பரிதாபமாக விழிக்க “இப்படி மூஞ்சிய வைச்சே ஏமாத்துடா…” என நெற்றியை நீவிய ரத்தினவேல் சரமாரியாக அவனை வெளுத்து வாங்கி விட்டான்.
அவன் பேசிய பேச்சில் அவனது காதில் இருந்து இரத்தம் வராத குறை ஒன்று தான்!
அவனிற்கு அப்படியொரு வசைமாரி பொழிந்தன.
‘ஐய்யோ அண்ணா…என்னை விட்டிரு…தெரியாமல் பண்ணிட்டேன்’ என சிறியவன் கதறும் வரை அவனை விடவில்லை ரத்தினவேல்.
இங்கு ரத்தினவேல் தனது சகோதரனை வாட்டி வதைக்க,வீரோ தங்கையின் மீது வருத்தம் இருந்தப்போதிலும் மென்மையாகவே தன் சினத்தை வெளிப்படுத்தினான்.
அம்மா,தங்கைகள் என்று வந்தாலே அந்த முரட்டு மனிதன் உருகிவிடுவானே?
தங்கையை ஆதங்கத்துடன் நோக்கி “உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கலை மதிம்மா…நீங்க இரண்டு பேரும் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க தெரியுமா?” என வெற்றுக் குரலில் வினவினான்.
தமையனின் முகத்திலிருந்த வலியை அறிந்த சந்திரமதிக்கு ஒரு மாதிரியாகிவிட “அண்ணா” என்றாள் நாதழுதழுக்க…
முகிழ்மதியும் அவ்விடத்தில் தான் இருந்தாள்.
அவளிற்கு யாருக்கு சாதகமாக பேசுவது என்று தெரியாத சங்கடமான நிலை!
அதற்குள் சந்திரமதி “அண்ணா…” என ஆரம்பிக்க,
“இரும்மா” என அவளின் முன்பு ஒற்றை கைநீட்டி தடுத்து நிறுத்தியவன் “இரும்மா…நான் பேசி முடிச்சிடறேன்…இரண்டு வீட்டு சைடும் பெரியவங்க இவ்வளவு பேரு இருக்கும் போது ஒரு வார்த்தை யாருக்கிட்டயாவது இதை சொல்லியிருக்கலாமில்லைம்மா…அட்லீஸ்ட் என்கிட்ட சொல்லியிருக்கலாமே…நான் உன்னை புரிஞ்சுக்க மாட்டேன்னு நினைச்சிட்டீயா?” என மனத்தாங்கலுடன் குரல் கரகரக்க பேசினான்.
தமையனின் வேதனை அவளிற்கும் புரிந்திட,எவ்வாறு தன் சூழ்நிலையை எடுத்துக்கூறுவது என தெரியாமல் தனக்குள்ளே புழுங்கி நின்றாள் சந்திரமதி.
அதுவரை கைகளை பிசைந்தவாறு நின்றிருந்த முகிழ்மதி,தமக்கையின் முகத்தில் படர்ந்திருந்த கலக்கத்தை பார்த்துவிட்டு “அண்ணா நான் இடையிலே பேசறேன்னு தப்பா நினைக்காதீங்க” என தயக்கத்துடன் உரைத்தவள்,
“அக்கா காரணமில்லாமல் அப்படி பண்ணியிருக்கமாட்டாள்னு தோணுது அண்ணா…முதல்ல அக்கா என்ன சொல்றான்னு கேட்போமே” என வழக்கத்திற்கு மாறான பக்குவத்துடன் பேசினாள்.
தனக்காக சகோதரி பேசியதும் அவளை நன்றிப்பெருக்குடன் நோக்கினாள் சந்திரமதி.
அவளின் சொல்லில் இருந்த நியாயம் புரிய “சரி நீ சொல்லும்மா…திடீர்னு ஏன் இந்த கல்யாண முடிவு?” என தங்கையிடம் நிதானமாக விசாரிக்க,
முகிழ்மதியோ “அக்கா சொல்லு” என தமக்கையின் அருகே வந்து ஆதரவாக நின்றுக்கொள்ள,சகோதரி தனக்கு பக்கப்பலமாய் நின்றதும் அவளிற்கும் அது மன வலிமையை கொடுத்தன.
“அண்ணா நான் பண்ணது தப்புன்னு எனக்கே தெரியும்…முதல்ல எனக்கும் இந்த மாதிரி கல்யாணம் பண்ணறதிலே பெருசா உடன்பாடில்லை தான்…ஆனால் இதுக்கு நான் ஒத்துக்கிட்டதுக்கு காரணம்” என்றவள்,அவள் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட சூழ்நிலையை தெள்ள தெளிவாக எடுத்துரைத்ததும் அதிர்ச்சியில் உறைந்துப்போயினர் மற்ற இருவரும்.
அதில் முதலில் தன்னிலை அடைந்த வீர் “என்னம்மா சொல்லறே?நிஜமாவா?” என நம்ப முடியாத திகைப்புடன் வினவ,
“ஆமா அண்ணா…எனக்கு இப்போதைக்கு கல்யாணம் காதல் இது மேலே எல்லாம் உடன்பாடில்லைனு உனக்கே தெரியும்…ஆனால் இதுக்கு நான் ஒத்துக்கிட்டது காரணம் ஜித்து தான்…அவர் மேல் காதல் எல்லாம் இல்லை…ஆனால் அவர் காட்டற அன்பு,எனக்காக அவர் துடிக்கிற துடிப்பு இது எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு அண்ணா…அவரோட இருந்தால் நான் நானா இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணேன்…அவர் இருக்கிற இடம் ரொம்ப லவ்லியா இருக்கு…அவருக்கு ஒரு விஷயம் பிடிச்சுப் போனால் அதுக்காக என்ன வேணா செய்யறார்.மத்தவங்களோட உணர்வுகளுக்கு எப்பவும் மதிப்பு கொடுக்கிறார்…குறிப்பா,எனக்கு…என்னோட உணர்வுகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்…இதுவரை அவரா என்கிட்ட என்னோட பாஸ்ட் லைஃப் பத்தி எதுவும் கேட்டதில்லை…நானா அவர்கிட்ட அதைப்பத்தி சொன்ன சமயம் கூட அவர் எந்த அருவருப்போ முகச்சுளிப்போ இல்லாமல் ‘இதிலே உன் தப்பு எதுவுமில்லை மூன்…மூவ் ஆன் பண்ணு…கருப்பான உன் காதல் பக்கத்தை நான் வானவில்லா மாத்திக்காட்டறேன்…என்னை நம்பி என்னோட வா’னு சொன்னாரு…அவரோட இடத்தில் வேற யார் இருந்தாலும் கண்டிப்பா அப்படியொரு ரியாக்ஷன் கொடுத்திருக்கவே மாட்டாங்க…ஹீ இஸ் சம்திங் டிஃப்பெரண்ட் அண்ணா…அதுவே எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சுப்போச்சு…அதுமட்டுமில்லாமல் ஒரு விஷயம் தப்பா நடந்திடுச்சான்னு அதிலே உழன்றுட்டு இருக்காமல் அடுத்த என்ன அடுத்த என்னனு ஓடிட்டே இருக்காரு…அவரோட அந்த பிரசென்ஸ் ஆஃப் மைண்ட் தான் என்னை அட்ராக்ட் பண்ணது அண்ணா…அதுமட்டுமில்லாமல் அவரோட ஃபேமிலி மேலே அவர் வைச்சிருக்கிற அன்பு…அம்மா கூட அவர் காட்டற நெருக்கம்…இது தான் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு…தன்னோட குடும்பத்தையே இப்படி தாங்கறவரு கண்டிப்பா அவரோட பொண்டாட்டியும் தாங்குவாருனு தோணுச்சு…கொஞ்சம் சுயநலமா யோசிச்சேன்…அவரை எக்காரணத்தை கொண்டும் மிஸ் பண்ணிடவேக்கூடாதுனு ஃபீல் ஆச்சு அண்ணா…உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்…அவர்கிட்ட கூட இதையெல்லாம் நான் சொல்லலை…உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு அண்ணா…பிகாஸ் என் சொந்தம் நீங்க என்னை புரிஞ்சுப்பாங்கனு எனக்கு நம்பிக்கையிருந்துச்சு” என உணர்ச்சி பெருக்குடன் கூறியவளின் விழிகள் தங்கையையும் தமையனையும் பாசத்துடனும் தவிப்புடனும் ஏறிட்டன.
சகோதரியின் பேச்சை கேட்ட முகிழ்மதிக்கு அவள் எப்படியான சூழ்நிலையில் இந்த முடிவெடுத்திருக்கிறாள் என்பது புரிய “அக்கா எனக்கு உன் சூழ்நிலை புரியுது…கூடவே ஜித்து உனக்கு நல்ல சாய்ஸ்கா…அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்…ஒரு நாள் கூட என்னை அந்நியமா அவர் நடத்தினதே இல்லை…நான் விலகிப் போனாலும் விடாமல் என்கிட்ட வந்து பேசுவார்…வீட்டுலே யாரு சோகமா இருந்தாலும் அவர் தான் பேசி சிரிக்க வைப்பாரு…நல்ல மனுஷன்கா…இதையெல்லாம் விட இனி நீயும் என் கூடவே இருக்கப்போறேன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா” என நெகிழ்ச்சியான குரலில் கூறி அவளை அணைத்துக்கொள்ள,
“என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அம்மு” என அவளும் தங்கையை திரும்பி அணைத்துக்கொண்டாள்.
தங்கை தன்னை புரிந்துக்கொண்டதில் அவளின் நெஞ்சம் குளிர்ந்தாலும் அண்ணன் விலகியே இருப்பது அவளிற்கு வலிக்க “நான் பண்ணது தப்பனு தோணினால் எனக்கு மன்னிச்சிடுங்க அண்ணா” என அவள் விழிகள் கலங்க மன்னிப்பு வேண்ட,
தங்கையின் விழிகள் கலங்கினால் அவன் நெஞ்சில் உதிரம் கொட்டுமல்லவா?
அதனால் “சேச்சே…உன் மேலே கோபம் இருந்தால் தானேமா மன்னிக்க முடியும்…உன் மேலே எனக்கு என்ன கோபம்?வருத்தம் தான்…ஆனால் என் தங்கச்சி சந்தோஷமா இருந்தால் எனக்கு அதுவே போதும்மா” என வேகமாக முன் வந்து அவளின் தலையை பரிவுடன் வருட,
“அண்ணா…” என ஆனந்த கண்ணீருடன் அவனை அணைத்துக்கொண்டாள்.
தமையன் தன்னை மன்னித்துவிட்டது அறிந்து அவளின் விழியிலிருந்து கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்க “அழக்கூடாது மதிம்மா” என கரப்பான குரலில் உரைத்தவனின் விழியிலும் நீரின் சாரல்!
அது வருத்தத்தினால் வந்த கண்ணீர் அல்ல…
உச்சக்கட்ட மகிழ்ச்சியினால் விளைந்த கண்ணீர் அது…
இனி அவனிற்கு எந்தவொரு கவலையுமில்லை…
முகிழ்மதிக்கு கிடைத்தாற்போன்ற ஒரு வளமான வாழ்வு சந்திரமதிக்கு கிடைக்க வேண்டும் என்று அவன் நினைத்திருக்க,அதற்கு இணையான ஒரு வாழ்வு மற்ற தங்கைக்கும் கிடைத்ததில் அவன் நெக்குருகிப்போனான்.
ஜித்தேந்திரனை சிறு வயதிலிருந்து அவன் பார்க்கிறான்…அதனால் அவன் தன் தங்கையை நல்லப்படியாக பார்த்துக்கொள்வான் என்ற அலாதி நம்பிக்கை இருந்தது.
அவனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொன்னாய் மாறியதும் அவனிற்குள் அப்படியொரு ஆனந்தம்!
அதனால் தன்னிரு தங்கைகளையும் அணைத்து உச்சி முகர,அவர்களும் தாயுமானவனது கைக்குள் குழந்தையாய் அடங்கிப்போயினர்.
மூவரும் அப்படியே அணைத்த நிலையில் எவ்வளவு நேரம் பாச வலையில் கட்டுப்பட்டு இருந்தார்களோ வீரின் அலைப்பேசி அடிக்கும் ஓசையிலே தங்கள் கவனம் களைந்தனர்.
அவனது அலைப்பேசி சத்தம் கேட்டு பெண்கள் இருவரும் கண்ணை துடைத்துக்கொண்டு விலக,ஆடவனும் தனது சட்டையின் காலரால் கண்ணீரை துடைத்துக்கொண்டு அலைப்பேசியை எடுத்துப் பேசினான்.
அவனிற்கு அழைத்தது வேறு யாருமில்ல…அவனது நண்பன் ரத்தினவேல் தான்!
நண்பனின் அழைப்பில் அவன் முகம் பூவாய் மலர்ந்திட “சொல்லு பூபதி?” என்றான்.
கணவன் தான் பேசுகிறான் என்றவுடன் முகிழ்மதியின் முகம் பளீச்சென்றது.
அதை ஓரக்கண்ணால் அவதானித்த வீரின் நெஞ்சம் நிறைவுற்றது.
தோழனிடம் எதிர்கேள்வி எதுவும் தொடுக்காமல் “ம்..” மட்டுமே கொட்டியவனின் விழிகள் இப்போது மற்றொரு தங்கையின் மீது பதிந்தது.
அவள் சிந்தனையாக புருவம் சுருக்க “சரி பூபதி…நீ சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்” என தலையாட்டி அழைப்பை துண்டித்தான்.
“என்ன அண்ணா?” என இம்முறை பரபரப்புடன் கேட்டது முகிழ்மதி…
கணவன் என்ன பேசினான் என்று தெரிந்துக்கொள்வதில் அவளிற்கு அப்படியொரு ஆர்வம்…
“அது ஒண்ணுமில்லைம்மா…நம்ப மதியை வீட்டுக்கு கூட்டிட்டு போக சொன்னான்” என்றதும் முகிழ்மதிக்கு விடயம் புரிப்பட்டது.
ஆனால் அவர்களுக்குள் நடந்த உரையாடல் சந்திரமதிக்கு தெரியாது அல்லவா?
அதனால் அவளின் முகம் அப்படியே வெளுத்துப்போக,அதனை அறிந்து “பயப்படற மாதிரி எதுவுமில்லை மதிம்மா…” என வேகமாக அவளை அழைத்து செல்வதற்கான காரணம் அவன் குறிப்பிட்டதும்,அவளிற்கும் அது ஏற்புடையதாக இருந்தது.
ஏனெனில்,இப்படி தடாலடியாக திருமணம் செய்துக்கொண்டு இந்த வீட்டில் வாழ வருவதற்கு பதிலாக முறையான பந்தத்துடன் நுழைவது தான் அவளின் பெண்மைக்கு கௌரவம்!
ஆதலால் “சரி அண்ணா” என தலையாட்டினாலும் அவளின் எண்ணமெல்லாம் கணவன் மீது தான் இருந்தது.
கணவனிற்கு இதில் சிறிதும் உடன்பாடு இருக்காது என்பது அவளிற்கு சர்வ நிச்சயம்!!
அதனால் ‘அங்க என்ன அட்டகாசம் பண்ணிட்டு இருக்காருனு தெரியலையே’ என நெற்றி சுருங்க சிந்திக்கும் போதே அங்கு அவன் பாட்டியிடம் தான் சண்டையிட்டுக்கொண்டிருந்தான்.
ஏனெனில்,தாய் வழியே காஞ்சனா மாலா தான் இப்படியொரு ஏற்பாட்டிற்கு தயார் செய்தது என்று தெரிந்ததும் அவன் கடுப்பாகிவிட்டான்.
பின்பு அவன் கண்ட வண்ண வண்ண கனவுகளை எல்லாம் சிதைத்து சுக்குநூறாக்கினால் அவனும் என்ன தான் செய்வான்?
அவரிடம் தாம் பேச மாட்டோம் என்பதை கூட மறந்துவிட்டு “பாட்டி என் வாழ்க்கையிலே வாலி பால் விளையாடலைனா உங்களுக்கு தூக்கமே வராதா?ஏன் இப்படி என் காதல்ல கல்லை தூக்கிப்போடறீங்க?” என பொறுமையிழந்து அவரிடம் வந்து கத்தினான்.
நீள்விரிக்கையில் அமர்ந்திருந்த வாக்கிலே நிதானமாக அவனை கத்தவிட்டு வேடிக்கை பார்த்தார்,அந்த எண்பது வயது மூதாட்டி.
அவனே ஒரு கட்டத்தில் கத்திவிட்டு சோர்ந்துப்போய் “ஏன் பாட்டி இப்படி பண்ணறீங்க? நீங்களா எனக்காக எதையும் செய்ய மாட்டாங்க…நானா எனக்குனு எதையாவது செஞ்சா அதையும் இப்படி கெடுத்து விடறீங்க?நீங்க ஏன் இப்படி மாறிட்டீங்க? ஐ ரியலி ஹேட் யூ” என அத்தனை நாட்கள் மனதில் வைத்திருந்த ஆதங்கத்தை எல்லாம் சிறுப்பிள்ளை போல் அவரிடம் கொட்டினான்.
அவனை ஒரு பெருமூச்சுடன் ஏறிட்டவர் “பேசி முடிச்சிட்டேன்னா இங்க வா வந்து பக்கத்திலே உட்காரு சின்னவனே” என இருக்கையை தட்டிக்காட்ட,
“ப்ச்” என கோபத்தில் அவன் முறுக்கிக்கொள்ள,
“அட இங்க வாடா…இப்போ மட்டும் நீ வரலைனா இரண்டு நாள் பிரிச்சு வைச்ச உன் பொண்டாட்டிய ஒரு மாசம் பிரிச்சு விட்டிருவேன்” என்றதும் ‘ஏதே’ என அதிர்ச்சியுடன் அவரை திரும்பி அவன் ஏறிட,
“நிஜமா செய்வேன்டா” என அவர் மிரட்டியதும் ‘இந்த டான் செஞ்சாலும் செய்வாங்க’ என கடுப்புடனே புலம்பிக்கொண்டு இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அவன் அருகே வந்து அமர்ந்ததும் பக்கவாட்டாக அவரை நோக்கி திரும்பியவர் “உனக்கு என்கிட்ட வந்து பேச இத்தனை நாளாச்சாடா…அதுவும் கூட என்கிட்ட பேசணும்னு வரலை…உன் பொண்டாட்டிக்காக வந்திருக்கே…அப்படி தானே” என ஆற்றாமை கலந்த கோபத்துடன் அவர் கேட்க,
சட்டென அவரை நோக்கி திரும்பிய ஜித்து “உங்ககிட்ட வந்து என்ன பேச சொல்லுறீங்க பாட்டி?எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனு முதல் முதலா உங்ககிட்ட தான் வந்தேன்…ஆனால் நீங்க என் நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்டிங்க” என்றான் வருத்தம் தொய்ந்த குரலில்…
அவனது குரலில் மட்டுமில்லாமல் அவனது முகத்திலும் ஏமாற்றத்தின் சாயல் இப்போதும் இருந்தது.
பேரனின் துயர் அவர் அறிந்தாலும் அவனிற்கு மீறிய ஒரு துக்கத்தில் தான் அவரும் இருந்தார் என்பதை யாவரும் அறியவில்லை.
அதனால் “அப்போ உனக்கு ஆதரவா பேசினால் தான் நான் உன் பாட்டி…இல்லைனா நீ என்னை மனுசியா கூட மதிக்கமாட்டே…அப்படி தானேடா” என்றார் தன்னுடைய துக்கத்தையெல்லாம் ஒன்று திரட்டி..
அவனோ “பாட்டி நான் உங்ககூட பேசாமல் போனதுக்கு காரணம் இது மட்டுமில்லை…என் விஷயத்தை கூட விடுங்க…அதுக்கு பிறகு நம்ப வீட்டுலே எவ்வளவு விஷயம் நடந்துச்சு…ஆனால் எங்கியுமே நான் என்னோட டானை பார்க்கலையே…நான் பார்த்து வியந்த அந்த ஆளுமை எங்கே?நியாயத்துக்காக குரல் கொடுக்கிற என் பாட்டி எங்க போனாங்க…எல்லாரையும் விரல் நுனியிலே ஆட்டிப்படைக்கிற காஞ்சனா மாலா எங்கே பாட்டி?கடந்த சில நாட்களா உங்களோட ஒரிஜினலிட்டியை நான் எங்கியும் பார்க்கவே இல்லையே…இந்த வீட்டுலே எவ்வளவு அநியாயம் நடந்துச்சு…அதுக்கு காரணம் அப்பான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்…எந்த இடத்திலும் நீங்க அவரை கண்டிக்கவே இல்லை…அந்த நிமிஷம் தான் பாட்டி நான் மனசொடிஞ்சு போனேன்…அப்போ உங்களுக்கு நாங்க யாரும் தேவையில்லை…உங்க பையன் மட்டும் போதும்…அப்படி தானே பாட்டி?” என தன்னுள் நிறைந்திருந்த அழுத்தத்தையெல்லாம் அவ்விடத்தில் அவன் இறக்கி வைத்தான்.
பேரனின் ஆயாசம் நிறைந்த சொற்கள் கண்டு கலங்கிய பெரியவர் “சின்னவனே ஏன்டா இப்படியெல்லாம் பேசறே?எனக்கு நீங்க எல்லாரும் தான்டா முக்கியம்” என அவனின் தோளில் கைவைக்க,
மெதுவாக அவரின் கையை விலக்கிய ஜித்து “பொய் சொல்லாதீங்க பாட்டி…உங்களுக்கு எங்க அப்பா மட்டும் தான் முக்கியம் வேற யாரும் தேவையில்லை” என மனம் மரத்துப்போய் சொன்னான்.
அவரோ “எனக்கு உங்க அப்பா முக்கியம் தான்டா…அதுக்காக என் பேரன் பேத்தி கஷ்டப்பட்டனும்னு நான் நினைப்பேனாடா” என தன்புற நியாயத்தை சொல்ல முற்பட,
அவனோ அவர் பேசியதை கேட்டு “ப்ச்” என சலிப்பாக கழுத்தை நீவினான்.
அவரிடம் பேசுவதற்கு அவனிற்கு சிறிதும் உடன்பாடில்லை.
அதேசமயம் அவனது செல்ல டானை ஒதுக்கி தள்ளவும் முடியாமல் தவித்தான்.
ஆதலால் “ஏன் பாட்டி?ஏன் இப்படி நீங்க மாறிப்போனீங்க? அண்ணனோட சந்தோஷத்துக்காக என்ன கோல்மால் எல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சீங்க.அப்படியெல்லாம் அதிரடியா இருக்கிற எங்க டானை சமீப காலமா நான் எங்கியுமே பார்க்கலையே…எனக்கு அது தான் பெரிய ஏமாற்றமா இருக்கு…அப்பா மேலே இருக்கிற பாசம் உங்க கண்ணை அப்படியா மறைச்சிடுச்சு பாட்டி?” என தளர்ச்சியுடன் கூடிய ஆதங்கத்துடன் வினவ,
“ஜித்து நீ என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கிறடா…எனக்கு உங்க அப்பா முக்கியம் தான்…அதுக்காக உன்னை அப்படியே விட்டிருவேன்னு நினைச்சியா?நிச்சயமா கிடையாது” என அவர் மறுப்பாக பேசிக்கொண்டிருக்கும் போதே “ப்ச் போங்க பாட்டி” என வெறுத்துப்போய் அவன் எழுந்துக்கொள்ள பார்க்க,
“ஜித்து பேசிட்டு இருக்கும் போது எங்கடா கிளம்பறே?முதல்ல உட்காரு” என அதிகாரமாய் கட்டளையிட்டதும் அவனால் அதனை மீற முடியாமல் வேண்டா வெறுப்பாக அமர்ந்தான்.
‘என்கிட்ட மட்டும் உங்க வீரத்தை காட்டுங்க…என் அப்பாகிட்ட காட்டிராதீங்க’ என அவன் கோபத்தில் முணுமுணுக்க “என்னையே திட்டற அளவு வளர்ந்திட்டியாடா நீ?” என அவர் அதட்ட,
“உங்களை திட்டற அளவு நான் பெரிய ஆள் இல்லை பாட்டி…என்ன பேசணுமோ பேசுங்க…கேட்கறேன்” என முகத்தை வேறுப்புறம் திருப்பி வைத்தப்படியே சிடுசிடுக்க,
அதில் சிறிது கோபமுற்றவர் “நீ அப்படி ஒண்ணும் கஷ்டப்பட்டு இங்க இருக்க வேணாம்…கிளம்பு…உன் பொண்டாட்டி எப்படி இந்த வீட்டுலே காலடி எடுத்து வைக்கிறான்னு நானும் பார்க்கறேன்…” என அவனிற்கு மீறி அவர் முறுக்கிக்கொண்டார்.
உடனே வெடுக்கென்று அவரின் புறம் திரும்பி “பாட்டி” என அவன் பல்லைக்கடிக்க,
“என்னடா ரொம்ப பண்ணறே?அந்த பொண்ணை இந்த வீட்டுக்குள்ள வர வைச்ச எனக்கு அவளை வரவிடாமல் செய்யவும் முடியும்?பார்க்கிறீயா பேராண்டி?” என நக்கலாக புருவம் உயர்த்தி கேட்க,
அவனோ “என்ன சொல்லறீங்க பாட்டி?” என புருவம் சுருக்கினான்.
அவனிற்கு அவரது பேச்சின் சாராம்சம் துளியும் புரியவில்லை.
அவரோ “உனக்கு தான் என்கிட்ட பேச விருப்பமில்லையே…நான் எதுக்கு சொல்லணும்?எதுவா இருந்தாலும் உன் பொண்டாட்டிகிட்ட போய் கேளு…கிளம்புடா” என அவனை அங்கிருந்து விரட்ட முயன்றார்.
அவனிற்கு இப்போது தான் ஒரு விடயம் நன்கு புரிந்தது.
முதல் நாள் அவளிடம் அவன் திருமணம் பற்றி பேசியதற்கு விருப்பமில்லை என்று கூறியவள்,அடுத்த நாள் அவளாகவே இந்த திருமணத்திற்கு சம்மதம் என தெரிவித்தது…
அன்று அவள் சம்மதித்த மகிழ்ச்சியில் இருந்ததால் அவன் எதையும் கவனித்திருக்கவில்லை.
இன்று அதைப்பற்றி நிதானமாக சிந்தித்ததும் ஒரு வேளை என்று எண்ணியவனின் இதயம் பரபரக்க “பாட்டி” என படபடப்புடன் அவன் அவரை காண,
அவரோ அவனிடம் “என்கிட்ட எதுவும் பேசாதே வெளிய போடா” என்றார் கடுப்பாக…
முன்பு வெளியேற துடித்தவனிற்கு இப்போது அங்கிருந்து செல்லவே விருப்பமில்லை.
“பாட்டி சொல்லுங்க…நீங்க தானா பாட்டி?ஆனால் எப்போ எப்படி பாட்டி?” என நிஜம் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் அடுக்கு அடுக்காக அவன் வினா தொடுக்க,
“சொல்ல முடியாது…நீ முதல்ல வெளிய போடா” என அவனை அங்கிருந்து விரட்டுவதிலே குறியாக இருந்தார்.
ஆனால் அவனா அங்கிருந்து செல்வான்…
அவரிடமிருந்து விபரம் அறிந்துக்கொள்ளும் முனைப்புடன் இருந்தவனோ “பாட்டி பிளீஸ்…பிளீஸ்…சாரி…சாரி…சொல்லுங்க பாட்டி…” என கெஞ்சி கொஞ்சி அவரை அணைத்து சமாதானம் செய்தவன் ஒரு வழியாக அவரிடம் மயக்கி பேசியே விஷயத்தை கறந்திருந்தான்.
அவர் கூறிய அனைத்தையும் கேட்ட ஜித்தேந்திரனின் மனதில் அதுவரை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் கரைந்து காணாமல் போனது.
தனக்காக…தன் வேதனை கண்டும் அவர் எதுவும் செய்யவில்லையே என அதுநாள் வரை வருத்தத்துடன் இருந்தவன்,இன்று அவனது திருமணம் நடந்ததற்கு காரணமே அவனது பாட்டி தான் என்று அறிந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.