முகிழ்மதி 110,111

முகிழ்மதி 110;


 

 

‘லூசா இவன்’ என மனதிற்குள் அவனை கண்டப்படி திட்டியவள் 
“எங்க சுத்தினாலும் அங்க வந்து சரியா நில்லுங்க…ஆளை பாரு” என அவனை அடிக்க முடியாத கோபத்தில் பல்லைக்கடித்தப்படி வசைப்பாட,அவனோ இதழ்பிரித்து தனது வசீகர புன்னகையை பூத்தான்.

அவனது புன்னகையை பார்த்தவளின் மனம் மீண்டும் தடுமாற ‘இவனை பார்க்கவேகூடாது…பேசியே ஆளை மயக்கிறான் ராஸ்கல்’ என திட்டிக்கொண்டே படீரென்று வேறுப்புறம் திரும்பிக்கொண்டாள்.

அதைப்பார்த்து மனம் வாடிய ஜித்து “சரி விடு…நீ இரண்டு மூணு நாள் டைம் எடுத்து யோசிச்சு சொல்லு…நான் வெயிட் பண்ணறேன் மூன்” என அவளிற்காக விட்டுக்கொடுத்தான்.

அவளோ வெடுக்கென்று இவன் புறம் திரும்பி “நீங்க எத்தனை நாள் டைம் கொடுத்தாலும் என் பதில் நோ தான்” என திட்டவட்டமாக அறிவித்தாள்.

அவனோ அதற்கெல்லாம் அசராமல் “சரி மூன்…நீ எதையும் யோசிக்க வேண்டாம்…நம்ப கல்யாணத்தை பத்தியும் யோசிக்க வேணாம்…முக்கியமா என்னை பத்தி எதையுமே யோசிக்காதே…நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு…கனவுலே கூட நான் வரமாட்டேன்…நல்லா சாப்பாடு…சாப்பிடும் போது தப்பி தவறி என்னை பத்தி யோசிக்காதே…நீ நல்லாயிருந்தாலே எனக்கு அது போதும்…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் குரலில் ஏற்ற இறக்கத்துடன் உரைக்க,

அவளோ அவனை நாசி விடைக்க முறைத்தாள்.

அவன் பேசிய விதத்திலே அவனை பற்றி மட்டுமே அவள் நாள் முழுவதும் நினைக்க வேண்டும் என்ற மறைமுக கட்டளை அடங்கியிருப்பதை அறிந்து, அவனை அவள் பார்வையால் எரித்தாள்.

அவளின் கோபம் கண்டு இதழ்பிரித்து தலையாட்டி சிரித்தவன் “சரி…சரி கூல்டவுன்…நான் நிஜமாவே கிளம்பறேன்…இப்போ உன்னை என்னோட கூட்டிட்டு போக முடியாது மூன்…அதனாலே உன்னை கார்ட் வீட்டுலே விட்டிருவாரு…நீ சேஃபா வீட்டுக்கு போ…எந்த சர்க்கஸ் வேலையும் பண்ணாதே” என தொடையை அழுத்தியப்படியே எழுந்து நின்றான்.

அவன் கிளம்புவதை கண்டு அவளிற்கு ஏமாற்றமாக இருந்தது.

அதனால் அவனை ஏறிட்டு ‘ஏதே அவ்வளவு தானா?’ என்பது போல் திகைப்பாக பார்க்க,

இருக்கையிலிருந்து இரண்டடி நடந்து சென்ற ஜித்து மீண்டும் திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்தவன் “ஆமா கேட்கணும்னு நினைச்சேன்…உன்னை ஒருத்தன் ஹோட்டலே கண்டப்படி பேசினானே யாரவன்?” என நெற்றி சுருங்க வினவ,

அவளோ “என்ன?என்னை உளவு பார்க்கறீங்களா?” என சிறிது கடுப்புடனே வினவ,

“இந்த கேள்விக்கு நான் ஆமா சொல்லட்டுமா இல்லைனு சொல்லட்டுமா?” என கேட்டு மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி அவளை விழியால் துளைக்க,

அவளோ “உண்மைய சொல்லுங்க” என்றாள் ஆற்றாமையுடன்…

அவனோ “பரவாயில்லை பஞ்ச் டையலாக் எல்லாம் நல்லா தான் பேசறே…பட் எனக்கு பதில் வேணும் சந்திரமதி” என்றவனின் குரலில் அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் மறைந்து ஒரு தீவிரம் குடியேறியிருந்தது.

அவளோ அவனிடம் எவ்வித பதிலும் கூறாமல் இமைத்தாழ்த்தி விரல் நகங்களை வருட “மூன் உன்னை தான் கேட்கறேன்…யாரவன்?அவனை பார்த்ததும் உன் முகம் ஒரு மாதிரி பேயறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு…நான் பார்த்தேன்…நார்மலா நான் பார்க்கிற மூன் அப்போ இல்லை…சொல்லு” என சற்று குரலுயர்த்தி அழுத்தமாக வினவ,

அவளிடம் அப்போதும் மௌனம்!

‘அக்கா தங்கச்சி மத்த விஷயத்திலே வேற வேற மாதிரி இருந்தாலும் இதிலே மட்டும் ஒரே மாதிரி இருங்காங்க…இரண்டு பேரும் செம்ம அழுத்தம்’ என மனதிற்குள் இரட்டை சகோதரியைத் திட்டிய ஜித்து “சொல்ல மாட்டில்லை…சரி விடு” என கடுப்பாக கூறி எழுந்துக்கொண்டான்.

உடனே வெடுக்கென்று தலையுயர்த்திய சந்திரமதி “ஏன் நீங்களே போய் கண்டுப்பிடிக்கப்போறீங்களா?” என படபடப்புடன் வினவினாள்‌.

அவனாக விசாரித்தால் அவளின் கடந்தகாலம் பற்றியும் தெரிய வரும் என்பதால் விளைந்த அச்சம் அவளிடம்!

அவனோ அவளை விழிகளால் துளைத்து “நான் தான் முன்னாடியே சொல்லிட்டனே மூன்…எந்த விஷயமா இருந்தாலும் உன் வாயிலிருந்து தான் நான் கேட்க ஆசைப்படறேன்…எனக்கு உன் பக்க நியாயம் மட்டும் தெரிஞ்சா போதும்…வேற எதுவும் எனக்கு தெரிய வேணாம்” என திட்டவட்டமாக கூறியவனின் முகம் கோபத்தில் திடீரென்று இறுகிட “இப்போதைக்கு அவன் உன்னை பேசின பேச்சுக்கு மூஞ்சு முகரைய பேத்திட்டு மட்டும் வர்றேன்” என்றான் காட்டமான குரலில்.

அவன் பேசியதை கேட்டு “ஏதே அடிக்கப்போறீங்களா?” என அதிர்ச்சியில் வாயில் கைவைத்துக்கொள்ள,

அவளின் பாவனை கண்டு வாய்விட்டு கடகடவென சிரித்தவன் “எங்களை என்ன நினைச்சே நீ…பார்க்க தான் நாங்க படு டீசன்ட்டு உள்ள பக்கா லோக்கல் மேடம்…” என்றவன் அவனது கைகடிக்காரத்தில் ஒளித்து வைத்திருந்த அந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் முன்பு காட்ட,அதைக்கண்டு ‘அடப்பாவி’ என அவள் மிரண்டு பின்னடைந்தாள்.

அவனோ “இது மாதிரி இன்னும் நிறைய ஐட்டம் இருக்கு…பார்க்கறீயா பேப்…” என கால்சட்டை பையினுள் கைவிட,

அவளோ “ஐயா சாமி…நீங்க பெரிய ரவுடி தான்…நான் ஒத்துக்கிறேன்…முதல்ல கத்திய எடுத்து உள்ள வைச்சிட்டு கிளம்புங்க” என சலிப்பும் பயமுமாய் கூறி கையெடுத்து கும்பிட,

“சரி சரி நீ பயப்படாறதாலே கத்திய உள்ள வைச்சிடறேன் மூன்” என மீண்டும் அதே கைகடிகாரத்தில் கத்தியை சொருகி வைத்தான்.

அதன்பிறகே பெருமூச்சு ஒன்றை அவள் வெளியிட,அதைக்கண்டு சிரித்தவன் “சரி மூன்…டேக் கேர்…தயவு செஞ்சு வீம்பு பிடிச்சுக்கிட்டு தனியா எங்கியும் போகாதே…வேலைக்கும் போக வேண்டாம்…அந்த ரோகிணி ரொம்ப டேன்ஜரஸ்…அவளுக்கு முடிவுக்கட்டற வரை நீ பாதுகாப்பு இருக்கணும்…சேஃப்டியா இரு மூன்” என தன்னையும் மீறி அவளின் கன்னத்தை தட்டி சொல்ல,

உடனே வெடுக்கென்று அவன் கரத்தை தட்டிவிட்டு “ப்ச் தொடாதீங்கனு சொன்னேனில்லை” என்றாள் எரிச்சலாக…

‘ம்க்கும் முத்தமே கொடுத்தாச்சு…இப்போ போய் ஓவரா பண்ணிட்டு இருக்காள்…’ என சிகையை அழுந்தக்கோதி முணுமுணுக்க,

அவன் கூறியதை கேட்டு “என்ன?” என அவள் பத்ரகாளியாய் மாறியதும் கையை ‘அம்பேல்’ என தூக்கியவன் “சாரி” என்றவாறு அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் வாசல் வரை சென்றதும் “நிஜமாவே அவனை அடிக்கப்போறீங்களா?” என எச்சிலை கூட்டி விழுங்கியப்படி வினவ,

அவனோ மெதுவாக அவளை நோக்கி திரும்பி “கண்டிப்பா மூன்…உன்னை சும்மா யாராவது பேசினாலே அவனை நான் விட்டு வைக்க மாட்டேன்…உன்னை மயக்கம் போட்டு விழ வைக்கிற அளவு ஒருத்தன் பேசியிருக்கான்…அவனை நான் விட்டிருவானா?” என சிரித்துக்கொண்டே சொன்னாலும்,அவனது விழிகள் இரண்டும் வேட்டையாடும் வெறியில் பளபளத்தன.

அதைப்பார்த்து அவள் மிரள,சட்டென தன் முகப்பாவனையை மிருதுவாக மாற்றியவன் “யூ டோன்ட் வொர்ரி…நீ ரெஸ்ட் எடு…நான் பார்த்துக்கறேன் மூன்” என இதமாக உரைத்து விட்டே வெளியேறினான்.

அவளிற்கோ தவிப்பு…அச்சம்…குழப்பம் என அனைத்து உணர்வுகளும் ஆட்கொண்டன.

சில நிமிடங்களுக்கு பிறகு தோழியிடம் சொல்லி விட்டு அவள் வெளியே வர,அவளிற்காக ஆஜாபாகுவான தோற்றம் கொண்ட ஒருவன் வாசலில் காத்திருந்தான்.

ஜித்து கூறிய பாதுகாவலன் அவனாக தான் இருக்க வேண்டும் என்றெண்ணி பெருமூச்சை அவள் வெளியேற்ற “மேம் போகலாமா?” என அவளிற்கு கதவை திறந்துவிட்டான்.

அவளின் பாதுகாப்பிற்காக என்பதால் அவளாலும் அதனை மறுக்க முடியவில்லை.

வாகனத்தினுள் ஏறி அமர்ந்ததும் அந்த ஆடவன் அவளிடம் “எங்க போகணும் மேம்?” என விசாரித்தான்.

படீரென்று அவளின் புருவம் சுருங்கிய “ஏன் உங்க பாஸ் எதுவும் சொல்லலையா?” என வியப்பாக வினவ,

“நோ மேம்…சார் உங்களை கேட்டுக்க சொன்னாரு” என விளக்கம் கொடுக்க,

‘அப்போ நிஜமாவே என்னை பத்தி அவருக்கு எதுவும் தெரியாதா?’ என யோசனையினூடே தலையை பிடித்துக்கொண்டவள் பாதுகாவலனிடம் முகவரியை உரைத்தாள்.

இருக்கையில் விழி மூடி சாய்ந்துக்கொண்ட மங்கை அவனை பற்றி தான் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

‘ஒருத்தரை பத்தி எதுவும் தெரியாமல் இந்த அளவு நேசிக்க முடியுமா என்ன?’ என மனசாட்சியிடம் கேள்வி எழுப்ப,

‘எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது தானே காதல்…அது மாதிரி ஜித்துவுக்கு உன் மேலே காதல் வந்திருக்கும்’ என அவனிற்கு சாதகமாக அவளின் மனசாட்சி குரல் கொடுக்க,

‘நீ என்னோட மனசாட்சியா?இல்லை அவன் மனசாட்சியா?அவனுக்கு வக்காளத்து வாங்கறே…எனக்கு காதலும் வேணாம்…எந்த கத்திரிக்காயும் வேணாம்…போதும் ஒரு தடவைப்பட்டது’ என அதனை அதட்டி அடக்கிய பெண் கீழே இறங்கியதும் “இதை உங்க பாஸ்கிட்ட கொடுத்திடுங்க…டாக்சிலே வந்தால் எவ்வளவு கொடுப்பாங்களோ அதை விட இருநூறு சேர்த்து தான் கொடுத்திருக்கேன்…தேங்க்ஸ் சொல்லிடுங்க” என சிறிது பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.

“மேம் மேம் என்ன இது?” என பதறிப்போய் அவன் குரல் கொடுத்ததை அவள் செவிமடுக்கவே இல்லை.

வேறுவழியின்றி அந்த காசை எடுத்துச்சென்று தனது எஜமானனிடம் நீட்ட ‘சரியான திமிருப்பிடிச்சவ’ என திட்டிக்கொண்டே “காசை வைச்சிட்டு  போங்க செந்தில்…” என்றான் கடுப்புடன்…

“சரிங்க சார்” என பணத்தை மேசையில் வைக்க,

அவனிடம் “மேடம் எங்கியாவது வெளியப்போனால் தனியா விடாதீங்க…நீங்க விடாமல் ஃபாலோ பண்ணுங்க…” என கட்டளையும் பிறப்பிக்க,

“சரிங்க சார்” என்று அவன் கிளம்பிவிட்டான்.

‘என்ன பண்ணாலும் வழிக்கு வரமாட்டிக்கிறாளே?வாயை திறந்து சொன்னா தானே எனக்கும் அவ கஷ்டம் புரியும்…எதுவும் பேசமாட்டிக்கிறாளே?சண்டைக்கோழி’ என தனக்குள்ளே அவளை திட்டிக் கொண்டான்.

அதன்பிறகு அவளிடம் பேச அவன் இரண்டு முறை முயற்சித்தும் அவள் அவனிற்கு பிடி கொடுக்காமல் ஆட்டம் காட்டினாள்.

அவள் அவனிடம் பேசாததினால் அவனது மனம் வாடிப்போயிருந்தது.

அதையும் மீறி மீனுவை வைத்து அவளிடம் சந்தித்து பேச முற்பட “ஏங்க என் முடிவை தான் நான் அன்னைக்கே சொல்லிட்டனே…அப்புறம் எதுக்கு என்னை தொந்தரவு பண்ணறீங்க…எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லைங்க” என முகத்திலடித்தாற் போன்று கூறியிருந்தாள்.

அவளது கண்மூடித்தனமான நிராகரிப்பு அவனை வாட்டி வதைக்க,இந்நிலையில் அந்த ரோகிணி வேறு முகிழ்மதியைப் பற்றி அனைத்தையும் வெளியிட்டிருந்தாள்.

அதுவொரு பக்கம் அவனிற்கு தலைவலியைக் கொடுத்தன.

இப்போது வேறுவழியின்றி ரோகிணியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தமையனிடம் அவன் எடுத்துரைக்க “நீ என்ன பைத்தியம்டா…இவ்வளவு பெரிய விஷயத்தை இப்போ வந்து சொல்லிட்டு இருக்கே?” என கோபத்தில் இரைந்தான்.

அவனிடம் பதில் எதுவும் பேச முடியாமல் அவன் தலைக்குனிந்து நிற்க,

“உன்னை தான்டா கேள்வி கேட்கறேன்…வாயை திறந்து பேசு” என கத்தினான்.

அவனோ மெதுவாக தொண்டையை செருமி “நானே ஹேண்டில் பண்ணலாம்னு நினைச்சேன் அண்ணா…பட் விஷயம் பெருசுனு தெரிஞ்சவுடனே உங்ககிட்ட வந்திட்டேன்…சாரி அண்ணா” என மன்னிப்பை யாசிக்க,

“தலைக்கு மேலே தண்ணீ போகறதுக்கு முன்னாடி இப்போதாவது வந்து சொன்னீயே?” என சிடுசிடுத்தவன்,

நெற்றியை நீவியப்படி “ஆல்ரெடி எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு…இந்த அளவு நானே எதிர்பார்க்கலை…சரி…மீதிய நான் பார்த்துக்கிறேன் விடு” என சற்று இறங்கி வந்தான்.

“இல்லைண்ணா…நான் கொஞ்சம் அவங்களை பத்தி டீடையல் கலெக்ட் பண்ணி வைச்சிருக்கேன்…உங்களுக்கு இது உபயோகப்படுமானு பாருங்க” என சில காணொளி மற்றும் கோப்புகள் அடங்கிய ஆதாரங்களை அவனிடம் கொடுத்தான்.

அனைத்தையும் பார்வையிட்ட ரத்தினவேலிற்கே பேரதிர்ச்சி!

அவனும் இந்த அளவு மோசமானவர்கள் அவர்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.

அவனின் முகமும் நரம்புகளும் இறுகிவிட்டன.

அவன் கோப்பை மூடி வைத்துவிட்டு “ஜித்து இப்போ சொல்லறேன் கேட்டுக்கோ…இன்னையிலிருந்து அவங்க விஷயத்தில் இருந்து நீ தள்ளியே இரு…நீ எதிலையும் இன்வால்வ் ஆகக்கூடாது…உனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது…அப்படி தான் நடக்கணும்‌…கல்யாண வேலை அது ஒரு பக்கம் நடக்கட்டும்…மீதிய நான் பார்த்துக்கிறேன்…காட் இட்” என கணீர் குரலில் சகோதரனை எச்சரித்தான்‌.

“சரி அண்ணா” என சிறியவன் தலையசைத்து தமையனின் கட்டளையை ஏற்றான்.

திடீரென்று எதுவோ நினைவு வந்தவனாக “ஆமா ஹோட்டல் ரிஸிடென்சிலே என்னடா பிரச்சனை?” என புருவம் உயர்த்தி ஜித்துவிடம் வினவ,

அவனோ திருடனிற்கு தேள் கொட்டிய உணர்வில் திருதிருவென விழித்து “எனக்கு எப்படி அண்ணா தெரியும்?” என சமாளிக்க முயன்றான்.

உடனே அவனை மேலிருந்து கீழாக  ஒரு பார்வை பார்த்த ரத்தினவேல் “சரி போ” என்றான்.

அவனோ ‘தப்பித்தால் போதும்டா சாமி’ என ஓடியே வந்துவிட்டான்.

ரத்தினவேலோ வழக்கம் போல் சலிப்பாக தலையாட்டியப்படி அலைப்பேசியை எடுத்து யாருக்கோ தொடர்புகொண்டான்.

ரத்தினவேலுவிடம் பொறுப்பை ஒப்படைத்ததற்கு பிறகு ரோகிணியிடமிருந்து அவனிற்கு எந்தவிதமான தொல்லைகளும் வரவில்லை.

‘இனி அண்ணன் எல்லாம் பார்த்துப்பான்’ என்ற நம்பிக்கை வந்திருக்க அவன் தனது காதலை பெறுவதற்காக போராடிக்கொண்டிருந்தான்.

அந்நேரமே சந்திரமதி வீரின் தங்கை என தெரிந்ததும் முதலில் திகைத்தாலும் பின்பு ‘வீர் அண்ணா…இல்லை இனி வீர் மச்சான்…அவர்கிட்ட பேசியாவது என் மூனை கல்யாணம் பண்ணி கடத்திட்டு வந்திடணும்’ என வீரை பார்க்க செல்வது போல் அவனது வீட்டிற்கு சென்றான்.

அன்றைய நாள் சந்திரமதியிடம் என்ன மந்திரம் போட்டானோ?,அதுவரை தன் முடிவில் உறுதியாக இருந்தவளின் மனம் குழம்பிய குட்டையாய் கலங்க ஆரம்பித்தது.

அவன் அவளிடம் பேசிவிட்டு சென்ற அடுத்த நாள் தனது அன்னையிற்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்த சந்திரமதி சஞ்சலத்துடன் தவித்துக்கொண்டிருந்தாள்.

அச்சமயம் அங்கு வந்த விஜயலட்சுமி அவளின் முகம் சரியில்லாததை பார்த்து “என்ன பாப்பா?ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என விசாரிக்க,

அவளோ மெதுவாக அவரை நோக்கி திரும்பி “ஒரு விஷயத்திலே என்ன முடிவெடுக்கிறதுனு தெரியாமல் குழப்பத்திலே இருக்கேன் விஜிம்மா” என்றாள் மனதை மறைக்காமல்…

“சரியோ தப்போ உன் மனசுக்கு தோன்றதை செய் பாப்பா…அது கண்டிப்பா நல்லதா தான் இருக்கும்” என அவளிற்கு தெம்பூட்டும் சொற்களை எடுத்துரைத்ததும்,

அவளின் மனம் இலேசாகிட “என் மேலே அவ்வளவு நம்பிக்கையா விஜிம்மா” என நெகிழ்வாக வினவினாள்.

அவரோ “நிச்சயம் பாப்பா…உன் மேலே நிறைய நம்பிக்கை இருக்கு…அதனாலே நீ ரொம்பயெல்லாம் யோசிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே…தோணறதை செய்” என தக்கச் சமயத்தில் அவளிற்கு தேவையான சரியான அறிவுரையை அவர் கூறிவிட,

“ஹும்” என தலையாட்டியவளின் விழிகளோ இப்போது அன்னையின் புறம் திரும்பின.

தன்னையே இமைக்காமல் பார்த்திருந்த தேவகியிடம் “அம்மா நீங்க என்ன சொல்லறீங்க?நீங்களும் எனக்கு எப்பவும் சப்போர்ட் பண்ணுவீங்களா?” என சோபையாக கேட்டுக்கொண்டே அவரின் வாயை துணிக் கொண்டு துடைத்துவிட்டாள்.

அவரிடமிருந்து பதில் எதுவும் திரும்பி வராது என்று அவள் நன்கு அறிவாள்.

இருப்பினும் தாயின் அரவணைப்பும் ஆறுதலும் அவளிற்கு தேவையாய் இருந்தது.

ஆனால் அவளே ஆச்சரியப்படும் விதமாக சட்டென அவளின் கரம் பற்றியவர் “நான் சப்போர்ட்டு உனக்கு…மதி…” என கோர்வையாக பேச முடியாமல் திக்கி திணறி என்றாலும் அவரின் ஆதரவை மகளிற்கு கொடுக்க,

“அம்மா…” என திகைப்போடு அவரை அவள் ஏறிட,

அவரோ “அம்மா சப்போர்ட் உனக்கு…” என சொன்னதை திரும்ப கூறினாலும்,அவளை பெற்றவளின் சொற்கள் அவளிற்குள் சந்தோஷ மத்தாப்பூவை வெடித்து சிதற வைத்தன.

அதனால் எழுந்த மகிழ்ச்சியுடன் “அம்மா எனக்கு இது போதும்மா…இது போதும்” என கண்ணீர் மல்க உரைத்த பூவையவள் அவரை அணைத்துக்கொண்டு தோளில் முகம் புதைத்தாள்.

‘என்ன முடிவு எடுக்கிறதுனு தெரியாமல் குழம்பிட்டு இருந்தேன்மா…உங்க இரண்டு பேரோட ஆதரவும் எனக்கு இருக்கும் போது எனக்கு என்ன கவலை?அண்ணா எப்பவும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு…இனி‌ எதையும் யோசிக்க வேண்டாம்’ என இரு தாயினரையும் மாறி மாறி நோக்கியவளின் குழப்பங்கள் அனைத்தும் அகன்றன.

அதுவரை அவன் பேசியதை பற்றி ‘என்ன முடிவெடுப்பது?’ என தெரியாமல் குழம்பிய சந்திரமதி ஒரு திடமான முடிவெடுத்தாள்.

ஒரு சில நாட்கள் கழித்து ரோகிணிக்கும் ஜித்துவிற்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண நாளிற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன.

திருமணத்திற்கு உரிய பரபரப்பு சிறிதும் அற்றவர்களாய் வீட்டினர் அனைவரும் ஒன்றாக உணவருந்தி கொண்டிருந்தனர்‌.

முன்னர் போல் யாரிடமும் ஒரு கலகலப்பு இல்லை.

ஏனெனில்,வழமையாக அனைவரையும் கலகலப்புடன் இணைக்கும் பாலமான ஜித்தேந்திரன் அங்கு இல்லை.

முதலில் அதை கவனித்த பாட்டி “ஆமா ஜித்து எங்கே வானதி?” என வினவ,

“தெரியலையே அத்தை…காலையிலே அவன் ரூமுக்கு முகிழ் காஃபி எடுத்திட்டு போனாள்…ஆனால் அவன் அங்கில்லை…ஆபிஸ் எதுவும் நேரமே போயிட்டேன் போலே” என்றதும் ரத்தினவேலின் இமைகள் இடுங்கின.

அச்சமயம் “ஐயா…பெரியம்மா…அங்க…அங்க…” என பேயறைந்தது போல் ஓடி வந்த பணியாளினியை கண்டு “என்னனு மெதுவா சொல்லு…” என அதட்டினார் விஜயேந்திரன்…

அவரோ நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க “அங்க சின்னய்யா கல்யாணம்…பொண்ணு” என ஏதேதோ உளறியதை கேட்டு விஜயேந்திரனிற்கு படபடவென வந்தது.

“பைத்தியக்காரி மாதிரி எதையாவது உளறாதே…போ” என அவரை திட்டிவிட்டு கையை கூட கழுவாமல் விறுவிறுவென வரவேற்பறைக்கு சென்றார்.

மற்றவரும் அவரை தொடர்ந்து கைகழுவிக்கொண்டு சென்றார்கள்.

வரவேற்பறைக்கு முன்னர் வந்து சேர்ந்த விஜயேந்திரனோ அங்கு பார்த்த காட்சியில் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.

அவரை பின்தொடர்ந்து வந்த மற்றவர்களுமே அக்காட்சியை கண்டு சிலையாகிப்போயினர்‌.

ஏனெனில்,கழுத்தில் மஞ்சள் நிற புது மாங்கல்யம் தொங்க சந்திரமதி நின்றிருக்க,அவளருகே ஜித்தேந்திரன் கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தான்.

ரத்தினவேல் மட்டும் தனது சகோதரனை விழிகளால் சுட்டெரிக்க,அவனது விழியில் தெரிந்த அனலை கண்டு சந்திரமதி அஞ்சி நடுங்கினாள்.

அதையறிந்தாற் போன்று ஜித்தேந்திரன் அவளின் கரம் பற்றி ‘நான் இருக்கிறேன்…பயப்படாதே’ என்பது போல் அழுத்தம் கொடுக்க,அவளோ விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.

அவனோ விழி மூடி ஆறுதல் கூறினாள்.

முகிழ்மதியோ நம்ப முடியாத பேரதிர்ச்சியுடன் “அக்கா” என முணுமுணுத்தாள்.
 

முகிழ்மதி 111:


 

 

எதிர்பாராமல் அதிரடியாக ஒருவன் திருமணம் செய்துக்கொண்டு வந்தால் ஒரு குடும்பத்தில் எப்படியான பூகம்பம்,சூறாவளி,புயல் எல்லாம் உண்டாகுமோ அவையெல்லாம் இங்கும் நிகழ்ந்தன.

விஜயேந்திரனை தவிர ஏனையோரின் உள்ளத்தில் ஆதங்கம் இருந்ததே ஒழிய,யாவரின் மனதிலும் வெஞ்சினமோ ரௌத்திரமோ இல்லை.

அவர் மட்டும் கொதித்துப்போய் கொலைவெறியில் நின்றிருந்தார்.

இதற்காக தானே…பெரிய மகனை போல் மற்ற இருவரும் காதல் கடலில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக தானே அவசர அவசரமாக அவர்களுக்கு இணையான வரன் பார்த்தது.

இப்போது அனைத்தும் சீரழிந்துப்போனதும் அவருக்கு இடி விழுந்தது போல் இருந்தது.

தமயந்தி காதல் விடயம் அறிந்த சமயம் கூட அவருக்கு நெஞ்சு வலிப்பது போல் தான் இருந்தது.

இக்கணம் மெய்யாகவே அவருக்கு இதயத்தில் வலி ஒன்று ஊடுருவ,அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு தான் நின்றிருந்தார்.

அவரது சிறிய மகனின் நம்பிக்கை துரோகத்தை அவரால் ஏற்கவே முடியவில்லை.

அவரின் அதரங்கள் கோபத்தில் ஏடாக்கூடமான சொற்களை உதிர்க்க பரபரத்தன.

அவையனைத்தும் அவனது இதயத்தை குத்தி கிழிப்பது போன்ற சொற்கள்!

ஆனால் அவரின் சொல் அம்புகள் பாய்வதற்கு முன்பாக வானதி முந்திக்கொண்டார்.

“ஜித்து இன்னும் இரண்டு நாளிலே கல்யாணம் வைச்சுக்கிட்டு என்னடா இதெல்லாம்?” என அவன் அன்னை ஆற்றாமையுடன் கேட்க,

“ஏன் அண்ணா இப்படியெல்லாம் பண்ணீங்க?” என‌ தமயந்தி ஒரு பக்கம் ஆதங்கத்துடன் வினவினாள்.

“எங்களையெல்லாம் அவமானப்படுத்தவே இப்படியெல்லாம் செய்யறீயா சின்னவனே?இப்போ எப்படிடா உன் அப்பா முகத்தை வெளிய காட்டுவான்?” என பற்றியிருந்த இருவரின் கரத்தையும் இயலாமையுடன் பார்த்தவரின் விழிகள் தனது புதல்வரை கவலையுடன் ஏறிட்டது.

ஜித்தேந்திரன் அவர்களது எந்தவொரு கேள்விக்கும் பதிலுரைக்காமல் அழுத்தமாக தன்னவளின் கரம் பற்றி நின்றிருக்க,

“உனக்கு இந்த பொண்ணு தான் பிடிச்சிருக்குன்னு வீட்டுலே முன்னாடியே சொல்லியிருந்தால் நாங்களே கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமேடா…இப்படி எதுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கறே?” என அனைவரின் மனதிலும் அரித்த வினாவை வானதி தொடுக்க,

அதுவரை மௌனமாக இருந்த ஜித்தேந்திரன் முதல் முறையாய் வாயை திறந்தான்.

“என்னை வேற என்ன தான்மா பண்ண சொல்லறீங்க?உங்க எல்லார்கிட்டயும் தனித்தனியா வந்து எனக்கு இந்த கல்யாணத்திலே விருப்பமில்லைனு சொல்லிட்டேன்…உங்களில் ஒருத்தராவது என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தீங்களா?எல்லாரும் என்னை கன்வீன்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறதிலே குறியா இருந்தீங்க?இல்லைனு மட்டும் சொல்லுங்க…பார்ப்போம்” என தனது பாட்டி மற்றும் தகப்பனை கத்திப்போன்ற கூரிய விழியால் குற்றம்சாட்டியவனின் குரலில் அப்படியொரு வலி!

கடந்த நாளைய போராட்டம் அவனது குரலில் பட்டவர்த்தனமாக தெரிந்தன.

மற்றவருக்கும் அது தான் உண்மை என்று தெரிந்ததால் பெரியவர்கள் யாவரும் எதுவும் பேசவில்லை.

அந்த மூதாட்டிக்கும் பேரனின் வேதனை புரிந்திட அவர் எதுவும் பேசமுடியாமல் பேரனையே வெறித்துப் பார்த்தார்.

அச்சமயம் “என்ன அண்ணா சொல்லறே?உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா?ஆனால் உன்னை கேட்டு தானே அண்ணா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாங்க” என திகைப்பும் யோசனையுமாய் தங்கை வினவ,

“நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட சமயம் என் மனசு வெள்ளை காகிதமா இருந்துச்சு தமி…அதனாலே ஒத்துக்கிட்டேன்…அடுத்த கொஞ்ச நாளிலே இந்த கல்யாணம் பிடிக்கலைனு எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டேன்…இன்குலுடிங் ரோகிணி…பட் யாருமே என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கலை…எல்லாருக்கும் என்னை விட அவங்க பாசம்,கௌரவம் இது மட்டும் தான் பெருசா இருந்துச்சு” என மனம் மரத்து பேசியவனை கண்டு அனைவருக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.

“என்னடா விளையாடிறீயா?உன் இஷ்டத்துக்கு ஆமா இல்லைனு விளையாடறதுக்கு இது விளையாட்டு விஷயம்னு நினைச்சியா?கல்யாணம்டா…ஒருத்தரோட எதிர்காலத்தையே நிர்ணயிக்கிற பந்தம்டா இது…” என எரிச்சலுடன் இடைப்புகுந்து விஜயேந்திரன் கத்தினார்.

தந்தையை விரக்தியாக நோக்கிய ஜித்தேந்திரன் “யூ ஆர் ரைட் அப்பா…கல்யாணம் என்ற பந்தத்துக்கு ஒருத்தரோட தலையெழுத்தையே மத்தக்கூடிய சக்தி இருக்கு…அந்த ரோகிணி மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தால்,எனக்கு எதிர்காலம்னு ஒண்ணு இருக்கவே இருக்காது…என்னோடது மட்டுமில்லை…இந்த குடும்பத்தோடு மொத்த தலையெழுத்தையும் அவ மொத்தமா அழிச்சிருப்பாள்…இந்த மாதிரி எதுவும் நடக்கக்கூடாதுனு தான் கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்” என தன்னுடைய செயலுக்கு விளக்கம் கூறினான்.

“என்னடா பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கே?நீ பண்ண காரியத்தை நியாயப்படுத்த அந்த பொண்ணை பத்தி கண்டதையும் பேசிட்டு இருக்கீயா?” என முகம் சிவக்க ருத்ர மூர்த்தியாய் இரைந்தார்.

அப்போதும் மகனின் புறத்திலிருக்கும் நியாயத்தை நித்தித்துவிட்டு ரோகிணிக்கு ஆதரவாக அவர் பேசியதை கேட்ட ஜித்தேந்திரனிற்கு மனம் வெறுத்துப்போனது.

“நான் கண்டதையும் பேசலைப்பா…இது தான்பா நிஜம்…இந்த கல்யாணம் பேசின சமயம் ரோகிணி பத்தி எனக்கு எதுவுமே தெரியாது…நாள் போக போக தான் அவளை பத்தி எனக்கு கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சது…ஷீ இஸ் நாட் ரைட் பர்சன் டூ மீ…அவளோட கேரக்டர்…பேசற விதம்…எதுவுமே எனக்கு பிடிக்கலை…அவளுக்கு கல்யாணம் பண்ணிக்க ஒரு பார்ட்னர் தேவையில்லைப்பா…அவ காலை பிடிச்சு சலாம் போட,அவளோட திமிரை காட்ட ஒரு ஆம்பளை அடிமை வேணும்…அப்படியான பொண்ணு கூட என்னாலே எப்படிப்பா வாழ முடியும்?” என அபரிமிதமான வருத்தத்துடன் தந்தையிடம் நியாயம் கேட்டவனின் முகம் ரோகிணியை பற்றி எண்ணியதும் ரௌத்திரத்தில் சிவந்துவிட்டது.

“உங்களுக்கு அவளை பத்தி எதுவும் தெரியலைப்பா…அவ செஞ்சது எல்லாம் தெரிஞ்சா உங்களாலே தாங்க முடியாது…எனக்கு அவ செஞ்சதை இப்போ நினைச்சாலே உடம்பெல்லாம் கூசுது…அதைப் பத்தி பேச கூட எனக்கு அசிங்கமா இருக்கு…ஆனால் இப்பவும் நீங்க என்னை விட்டுட்டு அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணறீங்க” என உலைக்களமாக கொதித்த மனதுடன் வெதும்பிப்போய் பேசினான்.

“ஆமாடா ஆமா உன்னை நியாயப்படுத்திக்க அந்த பொண்ணை தப்பு தப்பா சொல்லுறீயா?உனக்கெல்லாம் வெட்கமா இல்லை?” என அப்போதும் மகனின் குரலில் தெரிந்த பிணியை உணராமல் இழிவாக பேசியவர்,அத்தோடு நிறுத்தாமல் “எங்க?உன் தலையிலே தான் மோகினி பேய் உட்கார்ந்து ஆடுதே…உனக்கு எப்படி அந்த நல்லப் பொண்ணை பிடிக்கும்?” என்றார் சந்திரமதியின் புறம் வெறுப்பான பார்வையை செலுத்தி…

அதில் சந்திரமதியின் முகம் கறுத்து சிறுத்துவிட்டது.

தன் மகனை பிடிக்க வந்த மோகினி அவள் என்னும் ரீதியில் அவர் குற்றப்பதிகை செய்திட,அவளின் மேனியெங்கும் விறைத்து இறுகின.

தன்னவளின் மேனி இறுக்கத்தை அவள் கரம் வழி உணர்ந்த ஜித்தேந்திரன் பற்றியிருந்த கரத்தில் அழுத்தத்தை கொடுத்தான்.

“அப்பா எதுவும் தெரியாமல் தேவையில்லாமல் வார்த்தையை விடாதீங்க…” என கடுமையாக எச்சரித்தவனின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“என்னடா வார்த்தைய விடக்கூடாது…இவ என்ன பண்ணி உன்னை மயக்கினாளோ தெரியலை…நடக்கிற கல்யாணத்தை நிறுத்திட்டு இவளை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கறே?” என அவர் பேச பேச சந்திரமதியின் மேனி கூனி குறுகிக்கொண்டே சென்றது.

அவளிற்கு இதுப்போலான அவதூறான குற்றச்சாட்டுகள் எதுவும் புதிதில்ல‌.

ஆனால் திருமணம் செய்துக்கொண்டு வந்த முதல் நாளே புகுந்த வீட்டில் இப்படியான சொற்களை கேட்டால் எந்தவொரு பெண்ணால் தான் ஏற்க முடியும்?

அவள் அந்த அந்நியாய பழிச் சொல்லில் கூனி குறுகி நின்றதும் அவளிற்காக முகிழ்மதியின் உள்ளம் பரிதவித்தது.

தமக்கைக்கு ஒன்று என்றால் அவளால் ஏற்க முடியுமா என்ன?

அவளின் விழிகள் அவளிற்கு ஆதரவாக பேச முடியாமல் கலங்கிப்போயின.

அவர் பேசிய சொற்கள் யாவும் அங்கிருந்த ஒருவருக்கும் பிடிக்கவில்லை.

மற்றவர்களே விரும்பவில்லை என்றால்,அவளை உயிராய் நேசிப்பவனிற்கு பிடிக்குமா என்ன?

சற்று முன்பு வரை கூட அவரிடம் பணிவாக மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஆடவன் இப்போது வெடித்து சிதறினான்.

“அப்பா உங்களுக்கு கோபம் இருந்தால் என்னை என்ன வேணா பேசுங்க…பிகாஸ் நான் உங்க பையன்…என்னை அடிக்க திட்ட கூட உங்களுக்கு உரிமை இருக்கலாம்…அவளை எதுவும் பேசறதுக்கு உங்களுக்கு உரிமையில்லைப்பா” என உச்சக்கட்ட சீற்றத்துடன் சீறினான்.

அவனது முகத்தில் படர்ந்திருந்த கோப உணர்வை பார்த்த குடும்பத்தினருக்கே அது திகைப்பாக இருந்தது.

‘நம்ப ஜித்துவுக்கு கோபப்பட தெரியுமா?’ என்ற ரீதியில் தான் அனைவரும் பார்த்தனர்.

அவனோ “அப்பா இப்பவும் சொல்லறேன்…வார்த்தையை விட்டுட்டால் அள்ள முடியாது…அதனாலே கோபத்திலே வார்த்தைய விடாதீங்க” என இறுதி முறையாக அவரை எச்சரித்தவன்,

சட்டென குரலை தாழ்த்தி “உங்களுக்கு என்னப்பா இவளை பத்தி தெரியும்?இவளை எவ்வளவு கஷ்டப்பட்டு கன்வீன்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கேன் தெரியுமா?இது எதுவும் தெரியாமல் கண்டப்படி வார்த்தைய விடறீங்க…அவ என்னோட மூன்…அவளை பத்தி நீங்க எதுவும் பேசக்கூடாது…பேசினால் இதுக்கு மேல் நான் அமைதியா இருக்கமாட்டேன்ப்பா” என தன் மனையாளை தோளோடு அணைத்து அழுத்தமான குரலில் மொழிந்தான்.

சந்திரமதிக்கே அவனது பேச்சு புதிதாக இருந்தது.

அவளிற்காக அவன் நின்று பேசிய விதமே அவளை என்னவோ செய்தது என்றால் ‘அவ என்னோட மூன்’ என்று தோளோடு அணைத்து அவன் அறிவித்ததும் அவளின் மேனியில் பல ஆயிரம் மின்சாரம் பாய்ந்த உணர்வு!

முதல் முறையாய் மனதிற்குள் ஒரு மெல்லிய சலனம்!

அவள் அவனை வியப்புடன் ஏறிட்டு நோக்க,அவனது முகத்திலிருந்த தீரம் கூட அவளின் மீதான அவனது நேசத்தை தான் பறைச்சாற்றின.

இங்கு மகனின் பேச்சிலிருந்து விஜயேந்திரனிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்துப்போனது.

இனி பிள்ளைகள் மூவரும் தன் கரத்தை மீறி சென்றுவிட்டார்கள் என்பது!

“ப்ச் போடா…நான் நம்பின எல்லாரும் என்னை ஏமாத்தறீங்க” என தனக்குள்ளே குமுறியவராய் இடிந்துப்போய் அமர்ந்துவிட்டார்.

அவரும் என்ன தான் செய்வார்?

பெரிய மகன் என்னவென்றால் தனது மனைவிக்காக அவளிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறான்.

சிறிய மகன் என்னவென்றால் அவரது விருப்பமின்றி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வந்து நிற்கிறான்.

அவரது மகளோ காதலில் விழுந்துவிட்டு அவனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என அடமாக நிற்கிறாள்.

ஒரு தந்தையாக தாம் தோற்றுப்போனதை அவரால் ஏற்க முடியவில்லை.

அவரது இயலாமை மற்றும் ஏமாற்றத்தின் வெளிப்பாடே வார்த்தைகளாய் வெளிப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு தான் கரடுமுரடானவர்…இயல்பில் அவர் ஒரு குழந்தையை போன்ற மனம் கொண்டவர்.

தோல்வியை அவரால் ஏற்க முடியாது…அதையறிந்தே காஞ்சனா மாலா தனது மகனை எதிர்க்க துணியவில்லை.

ஆயினும்,சந்திரமதியை அவர் அவ்வாறு பேசியது தவறு என்பதால் “விஜய் நம்ப பையன் பேரிலே தப்பை வைச்சுக்கிட்டு அந்த பொண்ணை மட்டும் குத்தம் சொல்லறது தப்புப்பா” என மகனிற்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்க முயல,

அவரோ “ஆமா போங்கம்மா…இங்க எல்லாம் சரியா நடக்குது…நான் பேசறது மட்டும் தான் தப்பு” என தலையை தாங்கிக்கொண்டார்.

அந்நொடி அவர் உணவருந்தி விட்டு கைகழுவவில்லை என்பதை கூட உணரவில்லை.

தமயந்தியிற்கு தமையன் மற்றும் தந்தை இருவரின் சூழ்நிலையும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

வேறுவழியின்றியே அவன் இந்த கட்டாய முடிவிற்கு தள்ளப்பட்டிருக்கிறான் என்றும் புலப்பட்டது.

ஆயினும்,தகப்பன் ஒடுங்கி அமர்ந்ததை பார்க்க ஒரு மாதிரி இருக்க “அண்ணா உனக்கு அவங்களை பிடிச்சிருந்தால் வீட்டுலே முறையா சொல்லி கல்யாணம் பண்ணியிருக்கலாமே…” என தன்னை மீறி ஆதங்கத்துடன் வினவ,

“லட்டு நான் கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கே யாரும் என் பேச்சை மதிக்கலை…அப்படி இருக்கும் போது சந்திரமதியை எனக்கு பிடிச்சிருக்குன்னு நான் வந்து சொல்லியிருந்தால் மட்டும் என்ன மாற்றம் நடந்திருக்குப்போகுதுனு நீ நினைக்கிறே? அப்பவும் அப்பா கௌரவம் அந்தஸ்து அது இதுனு பேசி ரோகிணிக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே முயற்சி பண்ணியிருப்பாரு…இவங்கயெல்லாம் அதுக்கு ஆமா சாமி போட்டுட்டுப்போய் என்னை மண்டபத்திலே உட்கார வைச்சிருப்பாங்க…என்னாலே முடிஞ்ச எல்லா முயற்சியும் பண்ணி பார்த்திட்டு வேற வழியில்லைனு தெரிஞ்சவுடனே தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என தன்னுடைய சூழ்நிலையை நிறுத்தி நிதானமாக தங்கைக்கு எடுத்துரைத்தான்‌.

ஆனால் அவன் பேச்சில் காஞ்சனா மாலாவிற்கு சுருக்கென்றது‌.

ஏனெனில், பேரன் வந்து திருமணத்தை நிறுத்த வலியுறுத்தும் போது அவர் எதுவும் செய்யவில்லையே?

அவரை நம்பி ஏமாற்றமடைந்ததின் வலி இப்போது அவன் பேச்சில் தென்பட,அவரின் நெஞ்சம் துயருற்றது.

தமயந்தியும் தந்தையின் வறட்டுப்பிடிவாதம் அறிவாளே?

அவள் வெளிப்படையாக வீரின் மீதான நேசத்தை கூறியும் அவர் தன் கௌரவ அகந்தையிலிருந்து இறங்கி வரவில்லையே?

இப்போதும் அதனையே பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருப்பவர்,தமையன் விடயத்தில் மட்டும் சரியாக நடந்துக்கொள்வரா என்ன?

இதையெண்ணி பெருமூச்சு விட்ட வேளையில்…அவளின் பார்வை வட்டத்தில் ரத்தினவேல் விழுந்தான்.

‘அட இவர் இருக்காரே…அவர்கிட்ட சொல்லியிருந்தால் எல்லாமே சுபமா முடிஞ்சிருக்குமே?’ என அவளுள் தோன்றிட,அதையும் அவனிடம் கேள்வியாக வெளிப்படுத்தினாள்.

“நீ என்ன என்னமோ சொல்லறே…எல்லாம் ஓகே அண்ணா…ஆனால் எல்லார்கிட்டயும் பேசின நீ ஒரே ஒரு தடவை பெரிய அண்ணாகிட்ட பேசியிருக்கலாமில்லை…” என மனதில் உதித்ததை வெளியிலும் வினவினாள்.

அதுவரையிலும் ரத்தினவேல் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை.

அவனிடம் அப்படியொரு அழுத்தம்…தேகத்தில் ஒரு விறைப்பு!

சிறியவனோ இறுகி நின்ற தமையனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்கையிடம் திரும்பியவன் “அண்ணாகிட்ட பேசியிருக்கலாம் தான்…ஆனால் நான் அவர்கிட்ட பேசலை…அதுக்கு காரணம் இருக்கு லட்டு” என்றவனின் பதில் அவனது அண்ணனிற்கும் சேர்த்து தான் என்பது ரத்தினவேலிற்கு புரிந்தது.

ஆனாலும் அவனிடம் ஒரு மௌனம்!

ஜித்தேந்திரனோ தொண்டையை செருமி “தமி அண்ணாகிட்ட சொன்னால் அவர் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்கனு நல்லாவே தெரியும்…ஆனால் ஏற்கனவே இந்த கல்யாண விஷயம் ஆரம்பிச்சதிலிருந்து அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் நிறைய பிரச்சனை‌…சமீபமா இரண்டு பேரும் அடிக்கடி முட்டிக்கிட்டு நிக்கறாங்க…இதிலே எனக்காக இவங்க இரண்டும் மோதிக்கிட்டு குடும்பம் உடைஞ்சுப்போனால் என்னாலே அதை ஏத்துக்கவே முடியாது…என்ன கஷ்டமா இருந்தாலும் நானே பார்த்துக்கலாம்னு நினைச்சேன்” என கோபத்தில் இறுகி நின்றிருந்த தமையனை பார்த்தவாறே தன்புற நியாயத்தை எடுத்துரைத்தான்.

அதுவரை எதுவும் பேசாமல் இறுக்கமாக நின்றிருந்த ரத்தினவேல் சகோதரனின் உணர்வுகளை அளவிட ஆரம்பித்தான்.

தமயந்திக்கும் அவன் கூறிய காரணம் ஏற்புடையதாக இருக்கவே,அவளோ அமைதியுற்றாள்.

இப்போது அவ்விடத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி மட்டுமே நிலவின.

முகிழ்மதிக்கு தமக்கை இந்த வீட்டிற்கு மருமகளாக வந்ததில் மகிழ்ச்சி தான்!

ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என அவள் தயங்கி நின்றாள்.

குறிப்பாக,அவளின் கணவன்!

வெடித்து சிதற காத்திருக்கும் எரிமலை போல் சீற்றத்துடன் நின்றிருந்த கணவனை அவள் மிரட்சியுடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

அதுவரை அமைதியாக அனைத்தையும் பார்த்திருந்த ரத்தினவேல் சகோதரனின் அத்தகைய பதிலுக்கு பின்பு தன் மௌனத்தை உடைத்தான்.

அப்போது சகோதரனிடம் அவன் பேச விளையவில்லை.

மாறாக சந்திரமதியை நோக்கியவன் “உன் அண்ணனுக்கு இதை சொல்லிட்டியா சந்திரமதி?” என எடுத்து எடுப்பிலே தனது விசாரணையை அவளிடம் துவங்கினான்.

அவள் வேகமாக “அவருக்கும் இதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை…அவரை எதுவும் சொல்லாதீங்க அத்தான்” என படபடப்புடன் உரைக்க,

அவனோ அவளை அழுத்தமாக நோக்கி “ஏம்மா உனக்கு இந்த ஒரு மாசமா தான் அவனை தெரியும்…எனக்கு அவனை பதினைஞ்சு வருஷத்துக்கு மேலே தெரியும்…என் நண்பன் எனக்கு என்னைக்கும் துரோகம் செய்யமாட்டான்” என தன் நண்பனை பற்றிய பெருமிதத்துடன் நெஞ்சை நிமிர்த்தி மீசையை முறுக்கி சொன்னான்.

அதில் ஜித்தேந்திரனுக்கு ஒரு குத்தலும் பரிசாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதை அவனும் உணர்ந்தே இருக்க ஜித்தேந்தரன் சங்கடமாக கழுத்தை வருடினான்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ரத்தினவேல் “அவனுக்கு முதல்ல விஷயம் சொல்ல வேணாமா?அவனுக்கு ஃபோனை போட்டு இங்க வர சொல்லு” என அவளிடம் ஆணைப்பிறப்பித்தான்.

உடனே வெடுக்கென்று தலையுயர்த்திய விஜயேந்திரன் “அவனை எதுக்கு இங்க வர சொல்லறே பூபதி?இரண்டு பேரையும் அப்படியே அடிச்சு வெளிய துரத்தி விடு” என்றார் உச்சக்கட்ட சீற்றத்துடன்…

அவர் அவ்வாறு உரைத்ததும் “ஏங்க என்னங்க பேசறீங்க?ஆயிரம் தப்பு பண்ணாலும் அவன் நம்ப பையன்” என பதறிப்போய் வானதி சொல்ல,

“உனக்கு உன் பையன் தான் முக்கியம்னா நீயும் அவன் கூட வெளியப்போயிடு” என ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை மீண்டும் நிரூபித்தார் அவர்.

உடனே வானதியின் முகம் அப்படியே சுண்டிப்போனது.

இப்போது தந்தையின் பேச்சில் எரிச்சலுற்ற ரத்தினவேல் “அப்பா கொஞ்சம் நிறுத்தறீங்களா?இப்படி பேசி பேசி தான் பிரச்சனைய இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க…இதுக்கு மேலையும் பேசி பிரச்சனைய கம்பளீக்கேட் பண்ணாதீங்க” என கோபத்தில் இரைந்தான்.

“நான் பேசக்கூடாதுனா?இப்போ என்ன இவங்களுக்கு ஆராத்தி கரைச்சு வீட்டுக்குள்ள குடித்தனம் வைக்கப்போறீயா நீ?” என மணமக்கள் இருவரையும் சுட்டிக்காட்டி சொல்ல,

“தப்பு பண்ணிட்டாங்க சரி…பட் அந்த தப்பை செய்ய தூண்டினது யாரு?நீங்க தான்…” என நேரடியாக அவரை சுட்டிக்காட்டினான்.

அவரோ “நான் என்ன பண்ணேன்?” என அதிர்ச்சியில் விழி விரிக்க,

“நீங்க என்ன பண்ணீங்கனு உங்க மனசாட்சிய கேளுங்க…அது சொல்லும்…என்கிட்ட கேட்காதீங்க” தந்தையின் மீதுள்ள கோபத்தில் அவரை எடுத்தெறிந்து பேசிவிட,

அதில் வெகுண்ட மனிதர் “பூபதி” என சீற்றத்துடன் பேச ஆரம்பித்ததும் “அப்பா ஜஸ்ட் ஸ்டாப் இட்” என அவரின் முன்பு ஒற்றை கை நீட்டி தடுத்து நிறுத்தியவன் “இதுவரை நீங்க பேசனீங்க…நான் அமைதியா இருந்தேன்…எப்போ உங்களுக்கு உங்க பிள்ளைங்க முக்கியமில்லை…உங்க கௌரவம் தான் முக்கியம்னு தோணுச்சோ…அப்போவே ஒரு அப்பாவா தோத்திட்டீங்க…நானும் எதுவும் பேசக்கூடாதுனு இத்தனை நாள் அமைதியா போனேன்…இதுக்கு மேலே அப்படி இருக்க முடியாது…உங்களுக்கு வேணா உங்க அந்தஸ்து பணம் பதவி இதெல்லாம் முக்கியமா இருக்கலாம்…எனக்கு என் குடும்பம் தான் ஃபர்ஸ்ட்” என ஐயம்திரிபுற நெஞ்சை நிமிர்த்தி கூறியவனின் சொற்களை முகம் சுணங்கி ஏறிட்டார் விஜயேந்திரன்.

“பூபதி…” என எப்போதும் போல் மகனிற்கு ஆதரவாக பாட்டி பேச ஆரம்பிக்க,

“பாட்டி தயவுசெஞ்சு எதுவும் பேசாதீங்க…உங்க பையனோட அகந்தையாலே என் தம்பி வாழ்க்கைய பலிக்கொடுக்க பார்த்திருக்காரு இந்த மனுஷன்…அது தெரியுமா உங்களுக்கு?அவனை மட்டுமில்லை…ஒட்டுமொத்தமா அவரோட சேர்த்து நம்ப குடும்பத்தையும் புதைக்குழிக்குள்ள இழுத்திட்டு போக பார்த்தாரு…இதை எதை பத்தி தெரிஞ்சுக்காமல் அவருக்கு வரிஞ்சிட்டு வராதீங்க பாட்டி” என எப்போதும் பாட்டியிடம் பொறுமையை கையாளுபவன் அன்று நிதானத்தை இழந்து பேசிவிட்டான்.

ஏனென்றால்,நியாயத்தின் பக்கம் நிற்பவர்,சமீப காலமாக கண்மூடித்தனமாக தந்தையின் சொல்லை பின்பற்றுவதை அவனால் ஏற்க முடியவில்லை.

அவன் பார்த்து பிரம்மித்த ஒரு பெண்மணி இவ்வாறு பாசத்திற்கு அடிப்பணிந்து பலவீனமாகி நிற்பது அவனிற்கு வருத்தத்தை அளித்தன.

அவரோ அவன் பேச்சில் இருந்த உட்பொருள் அறிந்து “என்னப்பா சொல்லறே?” என அதிர்ச்சியோடு விசாரிக்க,

குடும்பத்தில் உள்ள மற்றவரின் விழிகளிலும் அதிர்ச்சியை உணர்ந்த ரத்தினவேல் சட்டென சுதாரித்தான்.

அதனால் சிகையை அழுந்தக்கோதி “இப்போ எதுவும் பேச வேணாம்…உங்களுக்கே இன்னும் இரண்டு நாள் கழிச்சு எல்லாம் தெரிய வரும்…அதுவரை என்னை எதுவும் கேட்காதீங்க” என நிச்சலனத்துடன் எதையும் கூற மறுத்துவிட்டான்.

ஆனால் அவனது சினத்தை மேலும் கிளறிவிடுவதற்காகவே விஜயேந்திரன் “என்ன என்ன கேட்கக்கூடாது?இப்போ சம்மந்தி வீட்டுலே கூப்பிட்டு கேட்டால் நான் என்ன சொல்லறது?எப்படி அவங்க முகத்திலே முழிக்கிறது?” என மகனிடம் சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டு கிளம்ப,

தமையன் பதில் கூறுவதற்கு முன்பு அவனை முந்திக்கொண்டு “நீங்க யாருக்கும் பதில் சொல்லவும் வேணாம்…முழிக்கவும் வேணாம்…நல்லா யோசிச்சு பாருங்க…அவங்க உங்ககிட்ட கல்யாணம் விஷயமா பேசி எத்தனை நாளாச்சு?” என ஜித்தேந்திரன் நக்கல் கலந்த தொனியில் புருவம் உயர்த்தி கேட்க,

அவரோ ‘ஆமா…தேர்தலுக்கு அப்புறம் அவங்க என்கிட்ட பேசவே இல்லையே’ என்று எண்ணியவரின் சிந்தையில் குழப்பம் சூழ,

அதனை கண்டு இதழை வளைத்து புன்னகைத்த ஜித்தேந்திரன் “டோன்ட் வொர்ரிப்பா…அவங்க சைடிலிருந்து நமக்கு எந்த பிரச்சனையும் வராது…வரவும் விடமாட்டாரு அண்ணா…” என தனது தமையனை கர்வமாக பார்த்தப்படி கூற,ரத்தினவேலோ சட்டென திரும்பி அவனை விழிகளால் சுட்டெரித்தான்.

உடனே சகோதரன் கப்பென்று வாயை மூடிக்கொள்ள,ரத்தினவேலோ “நீ ஃபோனை போடும்மா” என சந்திரமதியைப் பார்த்து உரைக்க,

“ம்” என அவள் தயக்கமாக தலையாட்ட,

“அவகிட்ட ஃபோன் இல்லைண்ணா” என சகோதரன் மனைவியின் தயக்கம் அறிந்து பரிந்து வர,

“ஓ…சரி நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்…நீ அவனோட ரூமுக்கு போ” என மறைமுகமாக சகோதரனை அவளை அழைத்துக்கொண்டு செல்ல ஆணையிட,அதில் ஜித்தேந்திரனிற்கு ஏக வருத்தம்!

தமையன் அவனிடம் நேரடியாக பேசாததை எண்ணி கவலையுற்று அவனை மெதுவாக ஏறிட்டான் சிறியவன்.

அதற்குள் வானதியோ “ஏன்பா பூபதி…பொண்ணு பூஜையறையிலே விளக்கத்தேணும்பா…இன்னும் நிறைய சடங்கெல்லாம் இருக்கு…அதுக்குள்ள ஏன் அவங்களை அனுப்பறே?” என அவசரமாக வினவ,

படீரென்று திரும்பி தாயினை அவன் உறுத்து விழிக்க,

தமயந்தியோ “அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க…இப்போ இது ரொம்ப முக்கியமா?” என பல்லைக் கடித்து கூறியதும் அவர் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.

அதே கோபத்துடன் திடீரென்று சகோதரனின் புறம் திரும்பிய ரத்தினவேல் “நீ ஏன்டா இன்னும் இங்கயே நிற்கறே?மதிய கூட்டிட்டு உள்ள போடா” என தம்பியிடம் சீற,

அவனோ ஒரு கணம் மிரண்டு ‘காட்…அண்ணா செம்ம சூடா இருக்காரு போலே…இங்கிருந்தோம் கிரில் பண்ணாலும் பண்ணிடுவாரு’ என அஞ்சி “வா மூன்…” என மனையாளை அவசரமாக அங்கிருந்து அழைத்து சென்றான்.

உள்ளுக்குள் ‘ஹப்பா அண்ணா பேசிட்டாரு’ என்ற மகிழ்ச்சியும் அவனை ஆட்கொண்டது.

செல்லும் வரையிலும் தனது தமக்கையையே முகிழ்மதி வருத்தமாக பார்த்திருப்பதை அறிந்து,அவளின் கரம் பற்றி ஆறுதலாக அழுத்தினான் ரத்தினவேல்.

அவன் தந்த அழுத்தத்தில் அவள் விழி உயர்த்தி அவனை ஏறிட,அவளின் விழியில் தெரிந்த கலக்கம் கண்டு,அவன் விழிகள் கனிந்தன.

அதுவரை அவன் முகத்தில் இருந்த தீ ஜூவாலை இப்போது இல்லை.

மாறாக,ஒரு இதமும் கனிவும் அவன் முகத்தில் தோன்றிட,அவளிடம் அவன் ஆறுதலாக புன்னகைத்தான்.

அதன்பிறகே அவளின் மனமும் சமாதானமடைந்திட அவளும் மிருதுவாக இதழ்பிரித்து புன்னகைத்தப்படி ‘சரி’ என தலையாட்டினாள்.

அவனது அந்த ஒற்றை புன்னகையே அவளின் மனதிலிருந்த ஐயத்தை நீக்க போதுமானதாய் இருந்தது.

அவன் மீண்டும் ஒரு முறை பற்றியிருந்த அவளின் கரத்தில் அழுத்தத்தை கொடுக்க,அவளிற்கு அது ஆயிரம் யானையின் பலத்தை கொடுத்தன.

இந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய மனம் அறிந்து செயல்பட்ட கணவனின் அன்பில் எப்போதும் போல் அவள் உருகிப்போனாள்.

அவளின் நெஞ்சத்தில் நாளுக்கு நாள் அவன் உயர்ந்துக்கொண்டே செல்ல,அவனின் மீதுள்ள நேசம் உன்மத்தமாய் மாறத் தொடங்கின.

அதனால் அந்த கடுமையான சூழ்நிலையை மீறி கணவனை அவள் ரசித்துப் பார்த்திருக்க,அவளின் விழி வீச்சை அவன் அறிந்ததும் எக்குத்தப்பாக அவனின் உணர்வுகளும் பொங்கி பெருகின.

அவளை தன்னோடு சேர்த்தணைக்க துடித்த கரங்களை அடக்கி “ம்க்கும்” என தொண்டையை செருமி,அவளது கரத்தில் அவன் அழுத்தம் கொடுத்தான்.

அவளிற்கு அவன் கொடுத்த சமிக்ஞை புரிந்தால் அல்லவா?

அனைவரின் முன்பும் அவனையே இமைக்காமல் பார்க்க ‘காட்…இந்த சமயம் தான் இவ இப்படி பார்த்து வைக்கணுமா?’ என அவனிற்கு தோன்றாமல் இல்லை.

நல்லவேளையாக அவனை காக்கும் விதமாக காஞ்சனா மாலா பேச ஆரம்பித்தார்.

மணமக்கள் இருவரும் அங்கிருந்து அகன்றதும் “அவங்களை ஏன்பா இங்கிருந்து அனுப்பினே?ஏதாவது எங்ககிட்ட முக்கியமா பேசணுமா?” என பேரனின் ஒவ்வொரு செயலுக்கு பின்பிருக்கும் தர்மம் அறிந்து விசாரிக்க,

அதுவரை மனைவியின் பார்வையில் கசிந்துருகிய ரத்தினவேலின் முகத்தில் இப்போது தீவிரம் தத்தெடுத்திட “ம்” என நெற்றியை நீவியப்படி தலையாட்டினான்‌.

பாட்டியின் குரலில் தன்னிலை அடைந்த முகிழ்மதியிற்கும் தாம் இருக்குமிடம் உறைத்திட,மெதுவாக கணவனிடமிருந்து கரத்தை விலக்கிக்கொண்டாள்.

அவனும் அவளின் மீது அர்த்தமுள்ள ஒரு பார்வையை வீசிவிட்டு அங்கிருந்த நீள்விரிக்கையில் சென்று அமர்ந்தான்.

சூழ்நிலைக்கு ஏற்றது போன்று புரிந்து நடக்கும் மனைவியாளை எண்ணி அவன் மனம் புளங்காகிதம் கொண்டது

அதற்குள் “என்ன கண்ணா பேசணும்?” என காஞ்சனா மாலா விசாரித்ததும் அவன் மனைவி உட்பட அனைவரும் ஆர்வமாக அவனது முகம் பார்த்தனர்‌.

விஜயேந்திரன் மட்டும் ‘யாருக்கு வந்த விருந்தோ?’ என கொதித்துப்போய் அலட்சியமாக உட்கார்ந்திருந்தார்.

அவனோ ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளிவிட்டு “ஜித்து மதி கல்யாண விஷயம் தான்…அவங்களை வைச்சி ட்டு எதுவும் பேச வேணாம்னு தான் அனுப்பிட்டேன்” என பிடீகையுடன் ஆரம்பித்தவன்,சில நிமிடங்களில் அவனிற்குள் பகுத்தறிந்து உதித்த சில விடயங்களை பற்றி பேசினான்.

அவன் கூறிய திட்டத்தைப் பற்றி அனைவரிடமும் அபிப்பிராயம் கேட்க,அவன் பேசிய விஷயங்கள் அவர்களுக்கும் பிடித்துவிட,அதனால் அவனின் பேச்சிற்கு மறுப்பு கூறாமல் அனைவரும் ஒரு சேர தலையசைத்தனர்.

விஜயேந்திரன் மட்டும் மகன் பேசியதை கேட்டு தாம்தூம் என குதித்தார்.

ஆனால் வழக்கம் போல் குடும்பத்தினர் அனைவரும் அவரை புறம் தள்ளிவிட்டு தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர்.

அவர்களது கலந்துரையாடலின் சாராம்சம் இது தான்,

‘ஜித்து மதி இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு பின்பு வரும் முகூர்த்தத்தில் முறையாக திருமணம் செய்து வைத்துவிட்டு,அடுத்த இரண்டு நாட்கள் கழித்து,தங்கள் நால்வருக்கும் சேர்த்து ஒரு திருமண வரவேற்பு வைத்து திருமணத்தை உலகிற்கு அறிவித்துவிடலாம்’ என்பது தான்!

அனைவருக்கும் அவனது இந்த திட்டம் பிடித்திருக்க “சரி” என ஒப்புக்கொண்டனர்.

ஏனெனில்,ஜித்துவின் திருமணத்தை அந்த வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டதால் யாரிடமிருந்தும் பெரிதாக எதிர்ப்பு வரவில்லை.

“அப்போ சரி பேராண்டி…இவங்க கல்யாண விஷயம் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேணாம்…மதி வீர் கூட போகட்டும்…இரண்டு நாள் கழிச்சு முறையா கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துக்கலாம்” என காஞ்சனா மாலா ஒரு பக்கம் வீட்டின் பெரியவராக அவருடைய கருத்தை பகிர,அனைவருக்கும் அந்த திட்டமும் பிடித்துப்போக ஏற்றுக்கொண்டார்கள்.

விஜயேந்திரன் மட்டும் சிடுசிடுப்புடன் அமர்ந்திருந்தார்.

அனைவரும் அவரை மட்டும் ஒதுக்கி வைத்தது போலிருக்க,அந்த ஆடவர் உடைந்துப்போய் இருந்தார்.

வேண்டுமென்றே அவரை யாரும் ஒதுக்கவில்லை.அவராகவே தன்னுடைய வறட்டுப்பிடிவாதத்தால் ஒதுங்கிப்போனார்.

காஞ்சனா மாலாவிற்கு மகனின் நிலை துன்பத்தைக் கொடுக்க “விஜய் புள்ளைங்க சந்தோஷம் தான் நம்ப சந்தோஷம்…அது மட்டும் மனசிலே வைப்பா…அவன் பண்ணது தப்பு தான்…அவன் ஒண்ணும் எந்த முயற்சியும் செய்யாமல் கண்மூடித்தனமா நடந்துக்கலையே…நாம்ப பிள்ளைங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கலைனா…பிள்ளைங்க வேற என்ன தான் செய்வாங்க…தப்பு நம்ப பெயரில் தான் இருக்குப்பா”  என மகனிற்கு புரிய வைத்துவிடும் நோக்கத்துடன் அழுத்தம் திருத்தமாக உரைத்தவர்,

“அதுவும் இல்லாமல் பிள்ளைங்க அந்த ரோகிணி குடும்பத்தை பத்தி ஏதேதோ சொல்லறாங்க…எனக்கு என்னானு தெரியறதுக்கு முன்னாடியே பதறது…அவங்க சொல்லறதிலே கண்டிப்பா ஏதாவது உண்மை இருக்கும்…நாளைக்கு அந்த விஷயம் தெரிஞ்சு நம்ப பையன் கஷ்டப்படறதை பார்த்து அழறதை விட,அதிலிருந்து நம்ப பையன் தப்பிச்சிட்டான்னு நினைச்சு சந்தோஷம் பட்டுக்கோப்பா…முகத்தை தூக்கி வைச்சிருக்காதே…சட்டுனு ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும்…ஆனால் அவன் நிலையிலிருந்து யோசிச்சு பார்றேன்” என வயதில் மூத்தவருக்கே உரிய புரிந்துணர்வுடன் பேசி மகனிற்குள் தன் கருத்தை ஆழப்பதிய வைக்க முயல,அவரோ “அடப்போங்கம்மா…என்னவோ பண்ணுங்க” என முறுக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

உடனே பாட்டியின் முகம் வாடிவிட “அவர் போகட்டும் விடுங்க பாட்டி…இரண்டு நாள் கழிச்சு அவரே எல்லாத்தையும் புரிஞ்சுப்பாரு” என கரம் பற்றி ரத்தினவேல் ஆறுதல் கூறினான்.

இங்கு குடும்பமாக அவர்கள் இருவரையும் இரண்டு நாட்கள் பிரித்து வைப்பதை பற்றி திட்டமிடுவதை அறியாமல் ஜித்தேந்திரன் மகிழ்ச்சி வானில் சிறகடித்துப் பறந்துக்கொண்டிருந்தான்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top