சந்திரமதி பணியை விட்டு நின்று ஒரு வாரத்திற்கு மேலாகியிருந்தது.
எந்த அளவு ஆர்வமாக அந்த பணியில் சேர்ந்தாளோ அதே வேகத்தில் பணியிலிருந்து விலகியும் வந்துவிட்டாள்.
அதற்கு முழுமுதற் காரணம் ரோகிணி தான்!
திருமணம் செய்துக்கொள்ள இருப்பவனிற்கே அப்படியொரு கொடூரமான தண்டனை கொடுக்க நினைத்தவள்,சந்திரமதியை மட்டும் விட்டுவிடுவாளா என்ன?
அவளை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக அவளின் வாழ்க்கையே அழிக்க துணிந்திருந்தாள்.
ஆம்,அவளிற்கு இருந்த வன்மத்தில் சந்திரமதியின் மீது விலைமாது என்ற பட்டத்தைச் சூட்டியிருந்தாள்.
பணமும் அதிகாரமும் இருந்தால் தவறே செய்யாதவர்களையும் குற்றவாளிகளாக காட்ட முடியும் என்பது போல் எந்தவொரு குற்றமும் செய்யாமலே அவளின் மேல் பழி சுமத்தியிருந்தாள்.
விடுதிக்கு வரும் வாடிக்கையாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களிடம் தனது உடலை விற்றது போல் அநியாயமாக ஒரு கதையை பரப்பியிருந்தாள்.
ரோகிணி நினைத்திருந்தால் அவளை வேலையிலிருந்து நேரடியாகவே விரட்டி அடித்திருக்க முடியும்.
ஆனால் என்று அவள் நேர்வழியை பயன்படுத்தி ஒருவரை பழிவாங்கியிருக்கிறாள்.
தன் வன்மத்தை தீர்த்து கொள்வதற்காக அவள் இழிவான அந்த வழியை தான் தேர்ந்தெடுத்திருந்தாள்.
இதனால் சந்திரமதிக்கு அவப்பெயர் கிடைத்ததோடு மட்டுமின்றி சபையின் முன்பு அவளின் கற்பு விமர்சிக்கப்பட,அவளால் அதனை ஏற்கவே முடியவில்லை.
இதற்கு முன்பு கல்லூரியில் இதுப்போல் அவளின் நடத்தை அனைவரின் முன்பு விமர்சிக்கப்பட்டதாலே அவள் தீராத மன அழுத்தத்திற்கு உட்பட்டு இப்போது தான் சிறிது தேறியிருந்தாள்.
மீண்டும் பணியிலும் அதேப்போலான குற்றச்சாட்டு எழுந்ததும் அவள் மொத்தமாக உடைந்துவிட்டாள்.
அவளிற்கு முன்பாகவே அவளை பற்றி மற்றைய பணியாளர்கள் கிசுகிசுப்பதை கேட்கும் போது அவளின் மேனியெல்லாம் நெருப்பு பற்ற வைத்தது போல் தீப்பற்றி எரிந்தன.
தன் மீது அருவருப்பான பார்வையை வீசும் ஒவ்வொருவரிடமும் சென்று ‘நான் அப்படியானவள் இல்லை’ என சொல்ல முடியுமா என்ன?
மற்றவரின் பார்வையும் பேச்சும் அவளை ஒரு புறம் கூசச் செய்தது என்றால்,மற்றொரு புறம் அவர்களது துறை தலைவி அவளை அருவருக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி அடிமட்ட பணிகளை செய்ய வைத்தாள்.
அன்று ஜித்தேந்திரன் ரோகிணி சந்தித்த நாள் அன்று சந்திரமதிக்கு துடைக்கும் பணியை கொடுத்ததற்கு காரணமும் இது தான்!
சந்திரமதிக்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது.
அவளிற்கு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு செல்ல ஒரு நொடி ஆகாது.
கல்லூரியில் பிரச்சனை என்பதற்காக ஊருக்கு ஓடிச்சென்றது போல்,இங்கு பிரச்சனை என்றவுடன் எங்கு ஓடி செல்வது என்றெண்ணி பல்லை கடித்து அனைத்தையும் பொறுத்துக்கொண்டாள்.
அவளின் மீது இப்படியான பழியை சுமத்தியும் கூட மீனு ஒரு தோழியாய் உறுதுணையாக இருந்தாள்.
கல்லூரி காலத்தில் கிடைக்கப்பெறாத ஆறுதலும் ஆதரவும் தோழியின் வழியாக அவளிற்கு இங்கு கிடைத்தது.
அதுவே அவளிற்கு தற்சமயம் போதுமானதாக இருக்க,தன்னால் முடிந்த வகையில் அனைத்தையும் சமாளித்தாள்.
ஆனால் அவளை மொத்தமாய் உடைத்து நொறுக்கிப்படும் வகையில் வேறொரு பிரம்மாஸ்திரத்தை இறக்கியிருந்தாள் ரோகிணி.
அவளிற்கு தாம் அனைவரின் முன்பு அவமானப்பட்டு நின்றது போல் அவளையும் நிற்க வைத்து,அதற்கு மேலான ஒரு நரகத்தை காட்டி பணியை விட்டு துரத்தியடிக்க வேண்டும் என குரூரமாக திட்டம் தீட்டியிருந்தாள்.
அதற்காகவே அவளின் கடந்தக்காலம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து தேடி அழைத்து வந்திருந்தாள் ஹரிஷை…
ஹரிஷை மீண்டும் அந்த விடுதியில் கண்டதும் சந்திரமதியின் சர்வ அங்கமும் ஆடிப்போனது.
அவளிற்கு மீண்டும் பழைய நினைவுகள் எல்லாம் கண் முன் வந்து செல்ல,அவளின் மேனி நடுங்கத்தொடங்கின.
அவளிற்குள் ஒரு விதமான அச்சம் பரவி விரவ ஆரம்பித்த நிலையில்,அவள் அஞ்சியதற்கு தகுந்தாற் போலவே ரோகிணி ஹரிஷை பகடையாக பயன்படுத்தி அவளை அனைவரின் முன்பு அவமானப்படுத்தியிருந்தாள்.
விருந்தாளியாக அந்த விடுதிக்கு வந்த ஹிரிஷ் விடுதியின் வரவேற்பறைக்கு நடுவே வந்து நின்று “இது தான் உங்க ஹோட்டலோட லட்சணமா சார்?கெஸ்ட்டா வரவங்களை இப்படி தான் ட்ரீட் பண்ணுவீங்களா?” என காட்டு கத்தல் போட்டு கூச்சலிட்டவன்,
சந்திரமதியை சுட்டிக்காட்டி “ஒரு ரூம் சர்வீஸ் கேர்ள் என்கிட்ட வந்து தப்பா நடந்துக்க முயற்சி பண்ணறாள்…ஒரு மணி நேரத்துக்கு பத்தாயிரம்னு வேற சொல்லறாள்…நான் ஏதோ நல்லவனா இருக்கப்போய் உங்ககிட்ட வந்து கம்பளையண்ட் பண்ணறேன்…இல்லைனா போலீஸிலே கம்பளையண்ட் கொடுத்திட்டு போயிட்டே இருப்பேன்…இப்படியான பொண்ணுங்களை எதுக்கு சார் வேலைக்கு வைக்கிறீங்க?எனக்கு ஒரு மாதிரியாகிடுச்சு…ச்சை” என அருவருப்போடு கூறுவது போல் அவளின் மீது அநியாயமாக குற்றத்தை சுமத்தினான்.
அவன் ஏதோ யோக்கியவன் போலவும் அவள் உடல் தேவைக்காக அலையும் பெண் போல் அவ்விடத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
அதைக்கேட்ட சந்திரமதிக்கு ஈரக்குலையே நடுங்கிப்போனது.
முதலில் சந்திரமதிக்கு அங்கு என்ன நடக்கின்றது என்று எதுவுமே புரியவில்லை.
அவளை சுற்றி நிற்கும் அனைவரும் காரிகையின் ஒழுக்கத்தை விமர்சிக்க ஆரம்பித்த கணத்திற்கு பிறகே அவளிற்கு அனைத்தும் புலப்படத் தொடங்கின.
ஹரிஷ் இந்த காட்சியில் இடம்பெற்றதும் இவையனைத்தும் பழிவெறி என்பது தெள்ள தெளிவாகியது.
‘இங்குமா?’ என எண்ணும் போதே அவளின் நெஞ்சத்தை யாரோ அழுத்துவது போலிருக்க,அவளிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
அவள் துணிச்சலான பெண் தான்…ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரின் விழிகளும் அவள் மீது அருவருப்புடன் பதிந்ததும் கூனி குறுகி விட்டாள்.
அவளிற்கு ஏனோ மூச்சடைத்திட,அவள் தன் சிந்தையே மறந்திருந்தாள்.
இன்றைய நிகழ்வு அவளிற்குள் மீண்டும் கடந்த கால சம்பவங்களை நினைவுறுத்த,அவளிற்கு தலை கிறுகிறுத்தது.
அவ்விடத்தில் தன் புற நியாயத்தை எடுத்து முன் வைக்க வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாதவளின் தேகமெல்லாம் நெருப்பாய் கொதிக்கத் தொடங்கின.
அவளிற்கு உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருக்க அவள் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.
இறுதியாக அவள் மூர்ச்சையாகும் வேளையில் கண்டது ஹரிஷின் கெக்களிக்கும் சிரிப்பையும் தன்னை தாங்கிய இருகரங்களையும் தான்!
அவளை முத்தமிட்ட நாட்களுக்கு பிறகு, ஜித்தேந்திரன் அவளை சந்திக்க விடுதிக்கு வரவே இல்லை.
அவளின் முகத்தில் விழிக்க குற்றவுணர்வு தடுக்க,அதன்பொருட்டே அவளை தவிர்த்தான்.
இந்நிலையில் அவளை எவ்வாறு எதிர்கொள்வது என திணறிய ஆடவனை ரோகிணி மிரட்டி விடுதிக்கு வரவழைத்திருந்தாள்.
அச்சமயம் தான் சந்திரமதி வேறொரு ஆடவனை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை கண்டு மனம் நொந்துப்போனான்.
அவனது இதயம் பலவீனமானதை தனக்கு சாதகமாக ரோகிணி உபயோகப்படுத்திக் கொள்ள திட்டமிட்டாள்.
அவனால் நிதானமாக எதையும் சிந்திக்க முடியாத ஒரு தளர்வான நிலை!
ஒரு பக்கம் சந்திரமதியின் புகைப்படம்,மற்றொரு புறம் முகிழ்மதியின் மானம் இரண்டிற்கும் இடையில் அவன் சிக்கி தவித்தான்.
அவன் மௌனமாக தனக்குள்ளே மருகிக்கொண்டிருந்தது எல்லாம் இரண்டே நாட்கள் தான்!
மூன்றாம் நாள் அவனது மூளை தெளிவாக சிந்திக்கத் தொடங்கின.
‘சந்திரமதியைப் பற்றி எந்தவொரு விஷயமும் தனக்கு இதுவரை தெரியாது…அவளாக அவனை ஏமாற்றவும் இல்லை…அவ்வாறு இருக்கையில் நாமாக ஏன் ஒரு முடிவிற்கு வர வேண்டும்’ என்று சரியான பாதையில் சிந்தித்தான்.
சீரான பாதையில் அவன் மூளை பயணிக்க ஆரம்பித்ததும்,அவனிற்கு ஒரு தெளிவு கிடைத்தது.
அதேசமயம் முகிழ்மதியினை தன் சுயநலத்திற்காக எந்தவொரு சிக்கலிலும் மாட்டிவிட முடியாது என்பதால் தன்னவளிடமிருந்து ஒதுங்கியே இருந்தான்.
ஏனெனில்,சந்திரமதியை நெருங்கினால் கூட ரோகிணி அதனை மோப்பம் பிடித்து ஏதேனும் கிறுக்குத்தனமாக செய்து வைப்பாள் என்று தெரிந்ததாலே விலகியிருந்தான்.
ரோகிணிக்கு உடன்பட்டு நடிப்பது போல் மற்றொரு புறம் அவளிற்கு எதிராக ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருந்தான்.
நேரடியாக அவளிடம் மோதுவதை காட்டிலும் மறைமுகமாக அவளது வலிமை பலவீனங்களை அறிந்து மரண அடியாக கொடுக்க உத்தேசித்தான் ஜித்து.
ஆகையால்,அவளிற்கு அடங்கி உடன்பட்டு நடப்பது போல் காட்டிக்கொண்டதால் நினைத்ததை நடத்தி முடித்த வெற்றிக்களிப்பில் அவளிருக்க,அவனோ மனதிற்குள் ‘இப்படியே நீ நினைச்சது நடந்திடுச்சினு சந்தோஷமா இரு…எனக்கும் அது தான் வேணும்’ என இகழ்ச்சியாக எண்ணி காயை நகர்த்தினான்.
ஆனால் அவளை பற்றி தோண்ட தோண்ட அவனிற்கு கிடைத்த தகவல்களையும் தடயங்களையும் அறிந்து தெரிந்துக் கொண்டவனிற்கு தலையை கிறுகிறுக்கத் தொடங்கின.
வெளியில் நல்லவர்கள் போல் வேடமிடும் அசோக் செல்வன் ஒரு பெரிய போதை மருந்து மாஃபியாவுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.
அதில் அவரது மகளான ரோகிணி தான் முக்கிய பங்கீட்டாளர்!
குறைந்த நாட்களில் இத்துணை பெரிய உயரத்திற்கு அவர்கள் வந்ததற்கு காரணமே இந்த ரகசிய போதை மருந்து வியாபாரம் தான் என்று தெரிந்ததும் ஜித்தேந்திரன் பேரதிர்ச்சி கொண்டான்.
இவர்களது வீட்டிற்கு நிச்சயம் செய்ய வந்ததற்கு காரணமே விஜயேந்திரனை வளைத்து பிடிப்பதற்கு தான்!
மற்றைய அமைச்சர்களை தன் கைகளுக்குள் போட்டுக்கொண்டவர்களால் முதலமைச்சரான விஜயேந்திரனை எந்த வகையிலும் நெருங்க முடியவில்லை.
கௌரவம்,தகுதி தராதரம் என்று விஜயேந்திரன் பேசினாலும் அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி!
அவரை எவ்வகையிலும் வளைக்கமுடியாது என்பதற்காகவே ஜித்து என்னும் மீனை தூண்டில் போட்டு பிடித்து, அதன் வழியாக அவர்கள் எண்ணியது அனைத்தையும் நிறைவேற்ற திட்டமிட்டிருந்தனர்.
மகள் தான் மிகவும் கீழ்த்தரமான பெண் என்றால்,தந்தை அவளையும் விட கேடுக்கெட்டவராக இருந்தார்.
பள்ளி மாணவர்கள் தொடக்கம் அனைவருக்கும் எளிதான வகையில் போதை மருந்து கிடைக்க வைப்பது தான் அவர்களது தலையாய நோக்கம்!
மொத்தத்தில்,அவர்களது குடும்பமே சமூக விரோத குடும்பம்!
குடும்பத்தின் மொத்த சரித்திரமும் அவனது கையில் கிடைத்த கணமே அவனிற்கு ஒரு விடயம் தெள்ளத்தெளிவாக புரிந்துப்போனது.
அவர்கள் நினைத்ததை நடத்தி முடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்,வேண்டுமென்றால் கொலையும் செய்வார்கள் என்பது புரிய ‘காட்’ என தலையை பிடித்துக்கொண்டான் ஜித்தேந்திரன்.
‘அப்பா என்ன வேலை செய்து வைச்சிருக்கீங்க நீங்க?’ என மானசீகமாக தந்தையிடம் கோபத்தோடு வினவினான்.
அவரை அறியாமல் வஞ்சகர்கள் விரித்த வலையில் சிக்கியிருக்கிறாரே தந்தை என அவருக்காக பரிதாபமும் கொண்டான்.
தனது குடும்பத்தினர் யாவருக்கும் எந்தவொரு தீங்கும் நிகழாமல் எவ்வாறு அவர்கள் விரித்த சிலந்தி வலையில் இருந்து தப்பிப்பது என்று தெரியாத அளவு ஒரு குழப்பம்!
கூடவே,ஒரு அச்சமும் அவனுள் ஊடுருவின.
அதற்காகவே தன்னவளிற்கு எந்தவொரு அபாயமும் நேரக்கூடாது என சந்திரமதியை காண்பதை கூட தவிர்த்துவிட்டான்.
ரோகிணியை பொறுத்தவரை ஜித்துவின் காதலை சுக்குல் நூறாக உடைத்து விட்டாள்.
அப்படியான பிம்பத்தை தான் அவனும் உருவாக்கி வைத்திருந்தான்.
சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ரோகிணியின் குடும்பத்தை அழிப்பது என்றால்,அது அத்துணை எளிதல்ல…
அவனால் தனித்து எதையும் செயல்படுத்த முடியாது என்பதறிந்து
தன் தமையனின் உதவியை நாடலாம் என சிந்தித்த வேளையில் மீனுவிடமிருந்து அதிர்ச்சிகரமான தகவல் வந்தது.
ரோகிணி அவனை கண்காணிப்பது அவன் அறிவான்.
ஆதலால்,அவனால் நேரடியாக தன்னவளை நெருங்க முடியாது என்பதால்,மீனுவின் வழியாக தன்னவளை கண்காணித்துக் கொண்டிருந்தான்.
அவளை உடனிருந்து காக்கவும் ஒரு பாதுகாவலனை ஏற்பாடு செய்திருந்தான்.
அவளின் வாய்மொழியாகவே தன்னவளிற்கு நடக்கும் அநியாயத்தை அறிந்த ஜித்தேந்திரனின் உதிரம் கொதித்தது.
இப்போதே அவளை அந்த நரகத்திலிருந்து காக்க அவனது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தாலும்,அவன் நேரடியாக இதில் இறங்கினால் அனைத்தும் நாசமாகிவிடும் என்று பொறுமை காத்தான்.
ஆனால் ஹரிஷின் மூலமாக ரோகிணி நடத்திய கொடூரமான நாடகத்தை அறிந்ததும்,அவன் துடித்துப்போனான்.
அதிலும் அனைவரின் முன்பு அவள் கூனிக் குறுகி நின்றதை பார்த்த பிறகு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
மீனுவின் அலைப்பேசியின் வழியாக அனைத்தையும் நேரடி ஒளிப்பரப்பாக கண்டிருந்த ஜித்து தனக்குள் விதித்த கட்டுப்பாட்டை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டான்.
அவள் மயங்கி விழும் சமயம் அவளை வந்து தாங்கிய கரத்திற்கு உரியவன் சந்திரமதியின் பாதுகாப்பிற்காக ஜித்தேந்திரன் ஏற்பாடு செய்திருந்த ஆள் தான்!
அவனின் உதவிக்கொண்டு அவளை மீனுவின் இல்லத்திற்கு அழைத்து வர செய்தான் ஜித்தேந்திரன்.
அவனும் அவள் கண்விழிக்கும் நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
அவனது மருத்துவ நண்பன் ஆதர்ஷையும் அங்கு வரும் படி கோரிக்கை வைத்தான்.
தன்னவள் பேச்சற்று படுத்திருந்த விதத்தை பார்த்த ஆடவனின் நெஞ்சில் பெரும் வலி!
நண்பன் வரும் வரை அவளருகே நீங்காமல் அவன் அமர்ந்திருக்க,அந்த மருத்துவன் அங்கு வந்து சேர்ந்ததும் “டேய் ஆதர்ஷ்…வந்திட்டியா?சீக்கிரம் வாடா…என்னானு பாருடா…” என வேகமாக எழுந்து நின்று படபடத்தவன்,
அத்தோடு நிற்காமல் “திடீர்னு மயங்கி விழுந்திட்டாள்…என்னானு செக் பண்ணுடா…வந்ததிலிருந்து கண்ணே முழிக்கலை…எனக்கு பயமா இருக்கு…வாடா ” என வெந்நீர் காலில் கொட்டியது போல் பதறியவனை எரிச்சலோடு நோக்கினான் அவன் நண்பன்.
அவனது கோபத்திற்கு காரணம் இருந்தது.
அவன் அங்கு வந்து சேருவதற்குள் குறைந்தப்பட்சமாக இருபது அழைப்பு கொடுத்ததோடு,இதே வசனம் மாறாமல் பேசிக்கொண்டே இருந்தான்.
அவனிற்கே ஒரு கட்டத்தில் எரிச்சலாக வந்தது.
வசனம் மாறாமல் நேரிலும் அதையே திருப்பி படிக்க “இருடா பார்க்கறேன்” என கடுப்பாக சந்திரமதியை பரிசோதனை செய்ய ஆரம்பித்தான்.
இப்போதும் அவளை அவன் ஆராய்ந்து முடிப்பதற்கு முன்பாக பின்னந்தலையை அழுத்தமாக தேய்த்தப்படியே “பெருசா எந்த பிரச்சனையும் இல்லையே …அவ ஓகே தானே…நல்லாயிருக்காளாடா…ஹாஸ்பெட்டல் வேணும்னா கூட்டிட்டு போகலாமா?” என படபடவென பொரிந்து தள்ளிய தோழனை திரும்பி முறைத்த ஆதர்ஷ் “டேய் ஒழுங்கு மரியாதையா நீ வெளிய போயிடு…இல்லை நான் ட்ரீட்மென்ட் பார்க்க மாட்டேன்” என்றான் உச்சக்கட்ட கடுப்புடன்…
அவனோ வெடுக்கென்று அவனை நோக்கி திரும்பி “ஏய் போடா…அவ கண்ணு முழிக்கிற வரை நான் இங்கியிருந்து போக மாட்டேன்…” என அழுத்தமாக சொல்ல,
“ம்க்கும்…போக மாட்டேன்னா நீயே வந்து அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பாரு…நான் கிளம்பறேன்” என அவன் எழுந்துக்கொள்ள முயல,
“அடச்சீ உட்காரு” என அவனது தோள்பட்டையை இறுக்கி அமர வைத்தவன் “நான் டாக்டருக்கு படிச்சா உன்னை ஏன்டா கூப்பிடப்போறேன்…ஒழுங்கு மரியாதைய என் மூனை கண் முழிக்க வை” என அதிகாரமாய் கட்டளையிட,
‘எல்லாம் என் நேரம்டா’ என முனகிய ஆதர்ஷ் “நான் உன் மூனுக்கு ட்ரிட்மெண்ட் பார்க்கணும்னா நீ மூடிட்டு வெளிய போ” என சிடுசிடுக்க,
ஜித்தேந்திரனிற்கு அவளின் நலனே முதன்மையாக இருக்க “சரி நான் எதுவும் பேசலை போதுமா?ஆனால் இங்கியே இருக்கேன்டா” என சட்டமாக அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கைகள் கட்டி நின்றுக்கொண்டான்.
‘இவன் திருந்தமாட்டான்’ என முனகிக்கொண்டே சந்திரமதியை இதயத்துடிப்பு மானி கொண்டு அவன் ஆராய்ந்தான்.
ஒரு இரண்டு நிமிடம் மட்டுமே அமைதியாக இருந்திருப்பான் ஜித்து.
மூன்றாவது நிமிடம் மீண்டும் புலம்பலை தொடங்கிவிட்டான்.
“சாதாரண மயக்கம் தானே…பெருசா ஒண்ணுமில்லையேடா…” என பதட்டத்துடன் முகமெல்லாம் வியர்த்து விறுவிறுத்திருக்க,
சட்டென ஆதர்ஷ் திரும்பி அவனை முறைக்க,
சிகையை அழுந்தக்கோதி “ஊப்” என இதழை குவித்து ஊதிய ஜித்து “சரி நான் வெளிய போறேன்…அவ பத்திரம்” என்றவன்,
அவ்வறையில் இருந்த மீனுவிடம் “பார்த்துக்கோங்க பத்திரம்” என இருவரிடமும் மாறி மாறி ஆயிரம் முறை பத்திரங்கள் சொல்லிவிட்டு வெளியேறியவனை பார்க்க மீனுவிற்கு சிரிப்பு தான் வந்தது.
அதேசமயம் கெத்தாக வலம் வரும் மனிதன் தற்சமயம் சிறுப்பிள்ளை போல் நடப்பதை பார்த்த மீனுவின் மனம் கனிந்தன.
அவனது படபடப்பையும் பயத்தையும் வைத்தே தோழியை அவன் எந்த அளவு நேசிக்கிறான் என்பது புரிந்திட,அவளின் விழிகள் பிரம்மிப்பில் விரிந்தன.
அவளை போலவே அவனின் பதட்டமான பேச்சை கேட்ட சந்திரமதிக்கும் அவன் தன்னை இந்த அளவு நேசிக்கிறானா என்று தான் தோன்றின.
ஏனெனில்,ஜித்தேந்திரன் அங்கு வந்து சேர்ந்த சமயமே அவளிற்கு விழிப்பு வந்துவிட்டிருந்தது.
ஆனால் விழிகளை திறக்க முடியாத வகையில் தலை பாரமாய் கனக்க,விழி மூடி மௌனமாக இருந்தாள்.
அவன் அந்த அறைக்குள் வந்த சமயமே “மூன்…” என அவனது இதழ்கள் பரிதவிப்புடன் அழைக்க,அவனின் கரம் அவளின் கரத்தை மிருதுவாக பற்றிக்கொண்டான்.
அவனது பிடி கூட அவளை காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக பூவை பற்றியது மென்மையாக பிடித்திருந்தான்.
முதலில் அந்நிய ஆண்மகனின் கரம் தன்னை தீண்டியதும் தன் கரத்தை அவனிடமிருந்து உருவிக்கொள்ளவே அவள் முயன்றாள்.
ஆனால் அவளை பற்றியிருந்த ஆடவனின் கரத்தின் வழியே அவனது நடுக்கத்தை உணர்ந்தவளின் மேனி முதல் முறையாய் சிலிர்த்தது.
அவனோ விழிகள் கலங்க “மூன் சாரிடி…என்னாலே தான் உனக்கு இந்த நிலைமை…முன்னாடியே அந்த ரோகிணி பிசாசுக்கிட்டயிருந்து உன்னை காப்பாத்தியிருக்கணும்…உன்னை நான் நெருங்கினால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோனு பயந்து விலகியே இருந்திட்டேன்…அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியுது…ஐயம் சாரி மூன்” என அவளின் கரம் பற்றி தன் கன்னத்தில் அழுந்த பதிந்துக்கொண்டான்.
அவனது கன்னத்தில் பதிந்த அவளின் கரம் ஸ்பரிசித்த ஈரமே அவனது கண்ணீரை அவளிற்கு உணர்த்தியது.
‘அழறாரா?அதுவும் எனக்காகவா?ஆனால் ஏன்?எதுக்காக?’ என தன்னை தானே கேட்டுக்கொண்டவளிற்கு அதற்கான விடை தெரியாமல் இல்லை.
ஆனால் அதனை ஏற்க அவளின் மனம் தான் முரண்டின.
அவனோ அவளின் கரத்தை விட்டால் அவள் அங்கிருந்து மாயமாகிவிடுவாளோ என்ற பயத்துடன் தன் கன்னத்தோடு அழுத்தி வைத்திருந்தான்.
“எழுந்திரி மூன்…பிளீஸ் எனக்காக…” என அவனின் இதழ்கள் மட்டும் ஓயாமல் அவளிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தன.
அவனின் கண்ணீர் ஒரு புறம் அவளின் பூட்டிய இதயக்கதவை தட்டியது என்றால்,அவனின் நேசம் அவளின் இதயத்துடிப்பை அதிகரிக்க வைத்தன.
உடனே அவனிடமிருந்து அவள் கரத்தை வாங்க முயல,
அச்சமயமே அவனது நண்பன் ஆதர்ஷ் அங்கு வந்துவிட்டிருந்தான்.
நண்பனை கண்டதும் ஜித்தேந்திரன் வேகமாக கண்ணீரை தன் கருப்பு நிற சட்டையில் துடைத்துக்கொண்டு எழுந்துவிட்டான்.
அதற்கு பின்பு அவன் தன் நண்பனை போட்டு படுத்தியப் பாட்டில் அவளிற்குமே சிரிப்பு தான் வந்தது.
வெகு சில நாட்களுக்கு பிறகு பாறாங்கல்லாய் கனத்த இலேசாகிட,அவளிற்காக அவன் துடித்த துடிப்பை அவதானித்தவள் ‘நிஜமாவே என்னை இவ்வளவு லவ் பண்ணறாரா இவர்’ என்ற எண்ணம் தான் பிரதானமாக இருந்தன.
ஆயினும்,அவள் தன் உருகிய இதயத்தை இறுக்கமாக்கி கொண்டாள்.
ஏனெனில்,தன் கடந்தகால காதல் பற்றி அறிந்தால் தானாகவே அவன் மனம் மாறிவிடுவான் என்றெண்ணி இதயத்திற்குள் எந்த எதிர்பார்ப்பையும் புகுத்திக்கொள்ள அவள் அனுமதிக்கவில்லை.

ஆதர்ஷ் அவளை ஆராயும் போதே கண்விழித்த சந்திரமதி “டாக்டர் ஐயம் ஆல் ரைட்” என அயர்ச்சியுடன் மெத்தையில் கையூன்றி எழுந்து அமர்ந்தாள்.
அவளின் விழிகள் அவ்வறையை சுற்றி ஆராய்ச்சியாய் அளவிட தொடங்கிட “மதி என் வீடு தான் இது…பயப்படாதே” என மீனு அவளின் பார்வையை கவனித்து பதிலுரைத்தாள்.
“நீ தான் இங்க என்னை கூட்டிட்டு வந்தியா மீனு?” என சோபையான குரலில் அவள் வினவ,
“இல்லை மதி…ஜித்து தான் உன்னை இங்க கூட்டிட்டு வர சொன்னாரு” என அனைத்து விவரங்களையும் சொன்னதற்கு சந்திரமதி “ஓ..” என்றதோடு வேறு எதுவும் பேசவில்லை.
அவள் கண்மூடியிருந்த வேளையில் அவனது பிதற்றலை வைத்தே அவளிற்கு ஓரளவு அனைத்தும் புரிந்து தான் இருந்தது.
அதற்குள் ஆதர்ஷ் “பேசி முடிச்சிட்டீங்கன்னா நான் கொஞ்சம் உங்களை செக் பண்ணவா சிஸ்டர்?” என இடைப்புகுந்து பேச,
சந்திரமதி மறுக்க தொடங்கும் முன் “தயவுசெஞ்சு வேணாம்னு சொல்லாதீங்க சிஸ்டர்…நான் மட்டும் இப்போ செக் பண்ணாமல் வெளிய போனேன்…வெளிய ஒருத்தன் நிக்கறானே என் உசுரை எடுத்தாலும் எடுத்திருவான் பாவி பையன்” என சலிப்பும் கேலியுமாய் சொல்லியப்படி அவளை ஆராய்ந்தான்.
சந்திரமதியின் விழிகளோ அவனை தேடி ஒரே ஒரு கணம் அறையின் வெளியே சென்று மீள,அதனை சரியாக படித்த மீனு நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
‘ஏன் வாயை திறந்து கேட்டால் குறைஞ்சா போயிடுவாள்…சரியான பிடிவாதக்காரி’ என தோழியை திட்டிக்கொண்டே ஆதர்ஷை நோக்கினாள்.
அவனோ அவளை முழுமையாக பரிசோதித்து விட்டு “சமீப காலமா ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கீங்களா சிஸ்டர்?” என விசாரிக்க, சந்திரமதியிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
அது தான் நிஜம்!
ரோகிணி அவளிற்கு உண்டாக்கிய அவப்பெயரால் அவள் நிம்மதியாக தூங்கி நாட்கள் சில கடந்திருந்தன.
அத்தோடு ஜித்தேந்திரனின் நினைவுகள் ஒரு புறம் அவளை இம்சை செய்து அவளை நிம்மதியின்றி அலைய வைத்தது.
அதனை வெளிப்படுத்த விரும்பாமல் அவள் அமைதி காக்க,
அச்சமயம் அங்கிருந்த மீனு தான் “ஆமா டாக்டர்…வேலையிலே கொஞ்சம் டென்ஷன்…அதனாலே இரண்டு மூணு நாளா ஒரு மாதிரி தான் இருக்காள்” என தோழிக்கு ஆதரவாக முன் வந்து கூற,
“ஓ சரிங்க” என்றவன் சந்திரமதியிடம் திரும்பி “சிஸ்டர் நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க…உங்களுக்கு இந்த வேலை செட்டாகலைனா வேலைக்கு போக வேணாம் விட்டிருங்க…உங்களை நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணதாலே தான் பிபி குறைஞ்சு மயக்கம் வந்திருக்கு…நல்லா ரெஸ்ட் எடுங்க…நான் உங்களுக்கு ஒரு மூணு நாளைக்கு மட்டும் ஸ்லீப்பிங் பில்ஸ் தர்றேன்…அதை ஃபாலோ பண்ணுங்க” என ஒரு மருத்துவனாக அவளிற்கு தேவையான அறிவுரையைக் கூறிக்கொண்டிருக்க,
அப்பொழுது “டேய் இன்னுமா நீ செக் பண்ணிட்டு இருக்கே” என தனது சட்டையின் கையை மடித்துவிட்டு கேட்டுக்கொண்டே உள்ள வந்த ஜித்து, சந்திரமதி எழுந்து அமர்ந்திருப்பதை கண்டதும் “மூன் எழுந்திட்டியா?இப்போ எப்படி இருக்கு உனக்கு” என கட்டிலருகே அமர்ந்திருந்த நண்பனை இருக்கையோடு தள்ளிவிட்டு அவளருகே ஓடி செல்ல,
அவனோ “டேய் டேய் ஏன்டா இப்படி அட்டூழியம் பண்ணறே?” என கீழே விழப்போனவன் இறுதி நேரத்தில் அருகிலிருந்த கட்டிலின் முகப்பை பற்றி சமாளித்து எழுந்து நின்றான்.
அவளிற்கு மீனுவும் உதவினாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவனது நண்பனோ அங்கு நடந்த யாவையும் சிறிதும் பொருட்படுத்தாமல் “மூன் ஆர் யூ ஓகே?” என அவளின் கன்னம் பற்றி படபடப்பாக விசாரித்துக்கொண்டிருக்க,
‘அது சரி’ என சலிப்பாக தலையசைத்த ஆதர்ஷ் “நான் கிளம்பறேன்டா” என பல்லிடுக்கில் சொல்ல,
“கேட்குது கிளம்புடா” என அவனை நோக்கி திரும்பாமலே உரைக்க,
“சாவடிக்கிறான் லூசுப்பையன்” என எரிச்சலாக முனகிக்கொண்டே “டேக் கேர் சிஸ்டர்” என சந்திரமதியிடம் முறையாக விடைப்பெற்று வெளியேறினான்.
அவனுடனே மீனுவும் வெளியே வந்துவிட “உங்களை அவன் அடிச்சு துரத்தறதுக்கு முன்னாடி நீங்களே வந்துட்டீங்களாங்க?” என ஆதர்ஷ் சிரிக்க,
அவனுடன் இணைந்து அவள் நகைத்தாலும் “சேச்சே இல்லைங்க டாக்டர்…ஜித்து ரொம்ப நல்ல கேரக்டர்…மதி கொஞ்சம் அடமெண்ட்…நான் இருந்தால் எதுவும் பேசவே மாட்டாள்…அதான் அவங்களுக்கு பிரைவேசி கொடுத்திட்டு வெளிய வந்திட்டேன்” என்றாள் மென் குரலில்.
அவனோ “அடப்போங்க…நீங்க தான் அவனை மெச்சிக்கணும்…காதல்ல அவனுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்…” என போலியாக திட்டியவன்,
“சரிங்க நான் கிளம்பறேன்…அவன்கிட்ட இந்த பிரிஸ்கிரிப்ஷன் மட்டும் கொடுத்திடுங்க…அவங்களை நல்லா ரெஸ்ட் எடுக்க வைங்க” என மருந்து சீட்டை கொடுத்தவன், அவளிடம் மேலும் சில விஷயங்கள் பேசிவிட்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் பக்கத்து அறையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது தாயினை பார்ப்பதற்கு சென்றாள் மீனு.
இங்கு மூடிய அறைக்குள் அவளும் அவனும் மட்டுமே இருந்தனர்.
அவர்கள் இருவரும் வெளியேறியதும் “மூன் ஆர் யூ ஓகே?” என மீண்டும் அவன் கேட்க,
அவளிற்கான அவனது தவிப்பை விழி வழியே அறிந்த சந்திரமதிக்கு இதயம் பிசைந்தது.
ஆயினும்,அவளோ அவனின் கேள்விக்கு பதிலுரைக்காமல் தன் கன்னத்தை பற்றியிருந்த அவன் கரத்தை குறிப்பாய் பார்க்கவும்,
அதன்பிறகே அவன் அவளிடம் அனுகூலம் எடுத்துக்கொண்டது புரிய “சாரி” என கரத்தை வெடுக்கென்று பின்னால் இழுத்துக்கொண்டான்.
அவளோ அவனை அழுத்தமாக நோக்கி “அன்னைக்கு ஏதோ போதையிலே இருந்தீங்கன்னு சும்மா விட்டுட்டு வந்தேன்…இன்னைக்கெல்லாம் சும்மா இருக்கமாட்டேன் ஜித்து” என எச்சரிக்க,
அவனோ “எங்க நீ சும்மா விட்டே…அதான் பளார்னு ஒண்ணு கொடுத்தியே…” என பாவமாக கூறி கன்னத்தில் கைவைத்து தேய்த்துக்கொள்ள,
அவனது பாவனை இதழோரம் முறுவலை பூக்க செய்தாலும் அதனை அடக்கிக்கொண்டாள்.
“நீங்க தான் ஹெல்ப் பண்ணீங்கனு மீனு சொன்னாள்…தேங்க் யூ” என மனமாற நன்றியுரைக்க,
அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக “நீயும் நானும் ஒண்ணு மூன்…நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்…” என மென்மையாக சொல்லிக்கொண்டே மெத்தையில் இருந்த அவளின் கரத்தை பற்ற,
உடனே சந்திரமதி தீப் பார்வை பார்க்கவும் “சாரி பழக்கத்தோஷம்…” என அசடுவழிய கூறி கரத்தை விலக்கினான்.
அவளோ இமைகள் இடுங்கிட “பழக்கத்தோஷம்னா எல்லா பொம்பளைங்க கையையும் தொட்டு தான் பேசுவீங்களா நீங்க” என கடுப்பாக கேட்டதும்,
அவனோ பதறிப்போய் “ஏய் ஏய் என்னை என்ன நினைச்சே?நான் ஸ்ரீ ராமன்…என்னோட சீதைனா அது நீ மட்டும் தான்…வேற யாரும் எனக்கில்லை” என சந்தடிச்சாக்கில் அவனது மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்திருக்க,
அதைக்கேட்டு “வாட்?” என அதிர்ந்து அவள் கூவியிருந்தாள்.
அவன் நேரடியாக இவ்வாறு சொல்லுவான் என அவளே நினைக்கவில்லை.
அவனோ இதழோரம் பூத்த புன்னகையுடன் “ஆமா மூன்…என்னோட சீதைனா அது நீ மட்டும் தான்…அதனாலே என்னை நீ கல்யாணம் பண்ணக்கிறீயா?” என்றான் அதிரடியாக…
ஒரு கணம் அவளிற்கு ஒன்றும் புரியவில்லை.
தன் காதில் விழுந்தது ‘நிஜம் தானா?’ என்பது போல் அவனை கூர்ந்து பார்க்க,
அவனோ “என்ன மூன் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,
அவளோ “ப்ச் விளையாடாதீங்க ஜித்து இன்னும் பத்து நாளிலே உங்களுக்கு கல்யாணம்…இப்போ வந்து ஏதேதோ உளறிட்டு இருக்கீங்க” என கோபத்தில் முகம் சிவக்க திட்ட,
அவளை அழுத்தமாக நோக்கிய ஆடவன் “மூன் ரோகிணி பத்தி உனக்கே நல்லா தெரியும்…அவளை நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறீயா நீ?” என தீட்சண்ய குரலில் கேட்க,
“அப்போ ஏன் இத்தனை நாளா கல்யாணத்தை நிறுத்தலையாம்…” என்றாள் நக்கல் பொதிந்த குரலில்…
அவளின் நக்கலை அவன் சிறிதும் பொருட்படுத்தாமல் “அதுக்கு ஒரு காரணம் இருக்கு…அதை உனக்கு நான் பொறுமையா சொல்லறேன்” என நிதானமாக பதிலுரைத்தவன்,
“பட் அதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லு மூன்…” என்றான் சிரித்தப்படி…
அவள் ‘என்ன?’ என்பது போல் ஏறிட,
அவளின் விழியோடு விழி கலந்த மன்னவன் “மூன் என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறீயா?” என மயக்கும் குரலில் வினவ,காரிகையவள் தடுமாறிப் போனாள்.
அவனது விழிவீச்சும்,அவனது குரலில் வழிந்த காதலும் அவளை அப்படியே வசீகரித்திட,சட்டென விழி தாழ்த்தினாள் அவள்.
அவளின் தடுமாற்றமெல்லாம் ஒரே ஒரு வினாடி தான்!
அடுத்த கணமே விழி உயர்த்தி “முடியாது” என நிற்சிந்தையுடன் மறுத்துவிட்டாள்.
உடனே அவனின் முகம் வாடிட “ஏன்?” என வினவினான்.
“முதல்ல என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?மீறி மீறி போனால் என்னை ஒரு பத்து தடவை பார்த்திருப்பீங்களா?அவ்வளவு தான்…அதுக்கே உங்களுக்கு என் மேலே காதல் வந்திடுச்சா?” என புருவத்தை உயர்த்தி,அதேசமயம் அழுத்தமான குரலில் வினவ,
அவனோ அவளின் மதிமுகத்தை அசையாமல் நோக்கி “உன்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாதது உண்மை தான்…ஆனால் எனக்கு உன்னை தெரியுமே…அது போதும் எனக்கு…” என்றான் அதே அழுத்தத்துடன்…
“ப்ச் இந்த விடலை பையன் மாதிரி லவ் டையலாக் பேசிட்டு இருக்காதீங்க ஜித்து…பீ சிரியஸ்…உங்களுக்கு என் மேலே இருக்கிறது ஜஸ்ட் அட்ரெக்ஷன் மட்டும் தான்…வேற ஒண்ணுமில்லை” என தீர்மானமாக உரைக்க,
“மூன் பார்த்தவுடனே காதல் வர்றதுக்கு நீ சொன்ன மாதிரி நான் ஒண்ணும் விடலை பையன் இல்லை…அப்படி பார்த்தால் முதல் தடவை பொண்ணு பார்க்க வந்த சமயமே உன்னை பிடிச்சிருக்கணுமே…அப்படி எதுவுமில்லையே” என அவனும் பதிலுக்கு தன் நேசத்தை விட்டுக்கொடுக்காமல் பேச,
“அப்போ முகிழ் மாதிரியே நான் இருக்கிறதால் பிடிக்கலாம்” என அவளும் அவனிடம் இறங்கி வராமல் விவாதம் செய்ய ஆரம்பித்தாள்.
அவனும் அவளிற்கு சளைக்காமல் தன் பேச்சால் அவளை திணறிடித்தான்.
“நீ அண்ணி மாதிரி இருக்கலாம் மூன்…ஆனால் உனக்கும் அவங்களுக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு…அதெல்லாம் ரீசனில்லை” என்றான் தெள்ள தெளிவாக.
அவளோ ஒரு கட்டத்தில் சலிப்புற்று “ப்ச் எல்லாத்துக்கும் விதாண்டாவாதம் பண்ணாதீங்க ஜித்து…எனக்கு இப்போ காதல் கல்யாணம் இது மேலே எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை…நான் படிக்கணும்னு நினைக்கிறேன்” என அங்கலாய்ப்புடன் சொல்ல,
“சரி படி…அண்ணி கூட கல்யாணம் முடிச்சிட்டு படிக்கிறாங்களே…உனக்கும் அவங்க வயசு தானே நீயும் கல்யாணம் பண்ணிட்டு படி” என்றான் அசால்ட்டாக தோளை குலுக்கி…
அதில் கடுப்பாகிய சந்திரமதி “ஜித்து நான் சொல்லறது உங்களுக்கு புரியலையா?எனக்கு இப்போ யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என கோபத்துடன் இதழை சுழித்து சொல்ல,
அவனோ சுழித்த அவளின் இதழை பார்த்துக்கொண்டே “சரி இப்போ கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாம்…உனக்கு எப்போ என் மேலே காதல் வருதோ அப்போ சேர்ந்து வாழ்ந்துக்கலாம்” என வெகு எளிதாக ஒரு தீர்வை வழங்கினான்.
அதைக்கேட்டு “ஜித்து…” என அவள் பல்லைக்கடித்தாள்.
பின்பு ஆதி எங்கிருந்து தொடங்கினாலும் அவன் அந்தத்தை திருமணத்தில் வந்து நிறுத்துவதை கேட்டு எரிச்சலுற்றாள்.
அவளை சினத்தை கண்டு சிறிது இரக்கமுற்றவன் “சரி விடு…உன் வழிக்கே வர்றேன்…இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லறதுக்கு என்ன காரணம்?” என நிதானமாக விசாரிக்க,
அவளோ “இப்போ தான் உன்னை பத்தி எதுவும் தெரிய வேணாம்…நீ மட்டும் போதும்னு சொன்னீங்க…இப்போ எதுக்கு ரீசன் கேட்கறீங்க?” என நக்கலாக அவனது பதிலை கொண்டு அவனை மடக்க முயல,
‘ஆஹான்’ என தனக்குள்ளே சிரித்துக்கொண்ட ஜித்தேந்திரன்
“ஆமா இப்பவும் நான் என் முடிவிலே பின் வாங்கப்போறதில்லை…நான் நினைச்சிருந்தால் உன்னை பத்தி எல்லாமே பேக் கிரவுண்ட் செக் பண்ணி கண்டுப்பிடிச்சிருக்க முடியும்…ஆனால் அப்படி செய்ய நான் விருப்பப்படலை…உன் வாயாலே எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்…நீ சொல்ல விருப்பப்படலைனா கூட எனக்கு பிரச்சனை இல்லை…என்னை மட்டும் கல்யாணம் பண்ணிக்கோ…அதுமட்டும் போதும்” என அழுத்தமாக ஆரம்பித்து இறுதியில் ஆர்ப்பாட்டமாக திருமணத்தில் முடிக்க,அவளிற்கு வந்ததே ஆத்திரம்!
அவனது மண்டையில் எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கும் அளவு ஆவேசம் வந்தது.