முகிழ்மதி 108

முகிழ்மதி 108:


 

 

நாளை தேர்தல் என்ற நிலையில் அன்று இரவு சோர்வுடன் வீட்டிற்கு வந்த சிறிய மகனிடம் “ஏன் கண்ணா லேட்டு?” என வானதி கனிவுடன் விசாரிக்க,

“வேலை ஜாஸ்திம்மா” என வழக்கம் போல் பொய்யுரைத்தான்.

ஆனால் அவன் முகத்தில் களைப்பையும் மீறிய ஒரு வெறுமை இருப்பதை உணர்ந்தவரின் உள்ளமும் துயரற்றது.

எப்போதும் கலகலவென இருக்கும் மகனின் முகத்தில் இழையோடிய சோகத்தைப் பார்ப்பதற்கு எந்த தாயிற்கு தான் மகிழ்ச்சியாக இருக்கும்?

அவருக்கு ஏனோ நெஞ்சம் பிசைந்தது.

“ஜித்து கண்ணா” என அவனின் தாய் உயிர் உருகும் குரலில் அழைக்க,

அதுவரை அவரின் முகம் கூட பார்த்து பேசியிராத ஆடவன் மெதுவாக நிமிர்ந்து அன்னையின் முகம் நோக்கினான்.

அவரின் முகத்திலிருந்த கவலையை கண்டதற்கு பிறகு நெற்றியை நீவிய ஜித்து ‘ப்ச் ஜித்து…உன்னாலே அம்மா கஷ்டப்படாறங்க பாரு…உன் கஷ்டம் உன்னோட போகட்டும்…கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு’ என தன்னை தானே திட்டி “அம்மா‌ எலெக்ஷன் முடிஞ்சதும் எல்லாம் சரியாகிடும்…நீங்க தேவையில்லாமல் எதையாவது யோசிக்காதீங்க” என அன்னையை சமாதானம் செய்ய முயல,

அவரோ “ஜித்து நான் உன்னை பெத்தவ…இந்த கல்யாணம் விஷயம் பேசினதிலிருந்தே உன் முகமே சரியில்லை…உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனா இப்போவே சொல்லு…நானே உன் கல்யாணத்தை நிறுத்தறேன்” என நெஞ்சுரத்துடன் இயம்பியவரை அவன் ஒற்றை புருவம் உயர்த்தி வியப்புடன் நோக்கினான்.

“அம்மா உங்களுக்கு கல்யாணத்தை நிறுத்திற அளவு தைரியம் இருக்கா?நீங்க பேசினது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சது என்ன நடக்கும் தெரியுமா?” என கேலியாக புருவம் உயர்த்தி கேட்க,

கணவனை பற்றி நினைத்தவுடன் வெகுண்டெழுந்த பெண்மணி “என்ன நடக்கும்?அவர் என்ன வேணா பண்ணட்டும்…நான் பார்த்துக்கறேன்…என் பிள்ளைங்களோட வாழ்க்கைக்கு முன்னாடி எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை” என வீரவேசத்துடன் பேசிய அன்னையினை பேச்சில் பூரிப்புற்றான் ஆடவன்.

அதனால் அன்னையின் தோளில் கையிட்டு “அம்மா பி கூல்… எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்…” என தாயை சிரித்தப்படி ஆறுதல் படுத்தினான்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒன்று என்றால் ஜகத்தையே எரிக்க தயாராகிவிடுவார் என்பது எவ்வளவு சாத்தியமான உண்மை!

தன் மீது வைத்த அன்பிற்காக அவரது உயிரான அகமுடையாரையே தாய் எதிர்க்க துணிந்து விட்டதை எண்ணி அவன் உள்ளம் நெகிழ்ந்தான்.

“அம்மா உங்ககிட்ட நான் ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன்…கேட்கட்டுமாம்மா?” என மிகவும் தீவிரமான குரலில் வினவ,

“என்ன கண்ணா?” என அவரும் அதே தொனியில் பதில் கேள்வி எழுப்ப,

அவனோ அவரை பின்னால் இருந்து அணைத்தவாறு “அம்மா வர வர நீங்க ரொம்ப அழகாகிட்டே வர்றீங்க?உங்க சந்துர் மம்மி சீக்ரெட் எனக்கும் கொஞ்சம் சொல்லமுடியுமா?” என்றான் குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன்…

அவரோ மகன் எதையோ முக்கியமாக பேசவிருக்கிறான் என்றெண்ணிய அன்னை அவனது பேச்சை கேட்டு ஒரு கணம் திகைத்தவர் பின்பு “டேய் படவா?நான் என்ன பேசறேன்…நீ என்ன பேசிட்டு இருக்கே?” என பின்னால் கைகள் கொண்டு அவனது தோளில் அடிக்க,

அவனோ “அட…அட முறைக்கும் போது கூட என் அம்மா எவ்வளவு அழகுடா சாமி” என பின்னாலிருந்தவாறே அவரின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவன்,

“எப்படிம்மா இவ்வளவு அழகா யங்கா இருக்கீங்க…உங்களை பார்க்கும் போது எனக்கே அம்புட்டு லவ் வருது…அப்போ அப்பாவுக்கு…” என கண்சிமிட்டியவனின் இதழோரம் சிரிப்பில் துடித்தது.

அவன் பேசியதை கேட்ட வானதிக்கு முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது.

“ப்ச் என்னடா இது?அம்மாகிட்ட பேசறா பேச்சு இது?” என அவனின் தோளில் மீண்டும் ஒரு அடி வைத்து அவர் சிணுங்க,

“அட அட என் அம்மா வெட்கத்திலே கூட அழகா இருக்காங்களே…” என அவரின் கன்னம் கிள்ளி முத்தமிட,

“டேய் போடா” என வெட்க சிரிப்பு சிரித்தாலும் “பேச்சை மாத்தாதே உனக்கு என்ன பிரச்சனை?” என காரியத்தில் கண்ணாய் வினவ,

“ம்க்கும்…என் ராஜ தந்திரம் எல்லாம் வீணாகிடுச்சே” என போலியாக சலித்த ஜித்தேந்திரனோ “அம்மா பசிக்குது…” என வயிற்றை கையால் தொட்டுக்காட்டி பாவமாக உரைத்தான்.

அவரை திசைத்திருப்பி விடவே தாய்மையை தூண்டிவிடும் அஸ்திரத்தை ஏவினான்.

அடுத்த கணமே பெற்றவரின் உள்ளம் பிள்ளைக்காக பதறிப்போனது‌.

“மணி பதினொன்றை ஆகுது‌.. இன்னுமா நீ சாப்பிடலை வா முதல்ல நீ…” என அவனை கடிந்துக்கொண்டே அழைத்து சென்று சூடாக தோசை வார்த்து அவனிற்கு ஊட்டிவிட்டார்.

அவனோ கன்னத்தில் கைவைத்து தாயை விழி அகற்றாமல் ரசித்தவாறே அவர் கொடுத்த உணவை வாயில் வாங்கிக்கொண்டான்‌.

பிள்ளைகளுக்கு எத்துணை வயதாகினாலும் பெற்றவளிற்கு அவர்கள் அதே ஐந்து வயது குழந்தை தானே?

அதனால் அவனிற்கு ஊட்டிவிட்டு அவரே தனது முந்தானை கொண்டு வாயை துடைத்துவிட,அவரையே சில கணங்கள் அசையாமல் பார்த்திருந்தான் ஜித்தேந்திரன்.

திடீரென்று அவனிற்கு ‘என்ன தோன்றியதோ?’ தனக்கு முன்பே நின்றிருந்த தாயின் இடையில் முகம் புதைத்த ஆடவன் “அம்மா இதே மாதிரி எப்பவும் என் மேலே அன்பு காட்டுவீங்களாம்மா?” என்று கேட்டவனின் குரலில் ஏதோ ஒரு சோகம் இழையோடியது‌.

அவரோ தன் வயிற்றில் முகம் புதைந்திருந்த மகனின் சிகையை வருடியப்படியே “இதென்ன கண்ணா கேள்வி உனக்கு குழந்தையே வந்தாலும் அம்மா இதுப்போலே எப்பவும் அன்பு காட்டுவேன்” என்றதும் அவனது இதழ்கள் இலேசாக விரிந்தன.

உடனே தலையுயர்த்தி அவரை ஏறிட்ட ஜித்து “அம்மா நான் என்ன தப்பு பண்ணாலும் என்ன முடிவெடுத்தாலும் எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்களாம்மா?” என்றவனின் விழியில் ஒரு தவிப்பு இருந்தது.

குனிந்து அவன் முகம் நோக்கிய வானதி “இதென்ன கேள்வி?எப்பவும் என் பிள்ளைங்க தான் எனக்கு உசத்தி…அவங்க முதல்ல தப்பே பண்ணமாட்டாங்க…அப்படியே பண்ணாலும் அவங்க பக்கம் ஏதாவது நியாயம் இருக்கும்…என் பிள்ளைங்க மூணும் சொக்க தங்கம்…நீ என்ன செஞ்சாலும் என்ன முடிவெடுத்தாலும் நான் உன் கூட தான் நிப்பேன் ஜித்து…உங்களுக்கு அடுத்து தான் எனக்கு உங்க அப்பா கூட” என மகனின் முகத்தில் இருந்த தவிப்பை நீக்கும் பரபரப்புடன் அவனிடம் அந்த சொற்களை கூறியிருந்தார்.

அன்னையிடமிருந்து எந்தவொரு பதிலை எதிர்நோக்கி புதல்வன் காத்திருந்தானோ,அதையே அவரும் ஒப்புதல் வாக்காக கொடுத்ததும் அவனிற்குள் இருந்த துன்பங்கள் அனைத்தும் பஞ்சு பஞ்சாய் பறந்துப்போனது.

அதனால் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்த ஜித்தேந்திரன் “அம்மா ஐ லவ் யூ” என அவரின் கன்னத்தில் உற்சாகத்துடன் அழுந்த முத்தமிட்டிருந்தான்.

அதனை சற்றும் எதிர்பாராத வானதி ஒரு கணம் திகைத்து பின்பு “ஹே என்ன பண்ணறே ஜித்து?” என அவர் அதட்ட,

“சாரி அம்மா…நீங்க சொன்ன வார்த்தைய எப்பவும் மறக்காதீங்க…நீங்க கொடுத்த வாக்கை எப்பவும் காப்பாத்துங்க…குட் நைட் அம்மா” என இதழ்விரிந்த முறுவலுடன் கையசைத்துவிட்டு விடைப்பெற்றான்.

அவருக்கோ மகனின் பேச்சில் இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை..

ஆனால் அந்த மாயக்கண்ணன் விரித்த வலையில் வானதி வசமாக சிக்கியிருந்தார் என்பது மட்டும் நிஜம்!

தேர்தல் நாளும் நன்றாக நடந்து முடிந்திருந்தது.

பிள்ளைகள் மூவரும் அவரை எதிர்த்து பேசியதற்கு பிறகு விஜயேந்திரன் இப்போதெல்லாம் வீட்டில் முணுமுணுப்பதில்லை.

அதற்காக அவரின் பிடியிலிருந்து இறங்கி வந்துவிட்டாரா என்று கேட்டால் இல்லை.

தமயந்தி அவளின் முடிவில் உறுதியாக இருந்துவிட,ஜித்துவின் நிலை தான் என்ன என்றே தெரியவில்லை.

திருமண வேலைகள் மட்டும் தங்கு தடையின்றி நடந்துக் கொண்டிருந்தது.

ஜித்து அதனை தடுப்பதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

அதேப்போல் சமீப காலமாக ரோகிணியிடமிருந்து எந்தவொரு மிரட்டல் அழைப்புகளும் அவனிற்கு வரவில்லை.

அதனால் ஜித்து சிறிது சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தான்.

தேர்தல் பணிகள் முடிவுற்றதும் ரத்தினவேல் கவனம் தொழிலின் மீது திசைத்திரும்பியிருந்தது.

ஜித்துவின் வேலை பளு குறைந்ததினால் விரைவாகவே வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க ஆரம்பித்தான்.

அன்றும் தமயந்தியை அழைத்துக்கொண்டு அவன் வெளியே வந்திருந்தான்.

வெகு நாட்களுக்கு பிறகு திரைப்படம் பார்ப்பதற்காக அண்ணனும் தங்கையும் வந்திருந்தனர்.

அவர்களது அன்னையே “வீட்டுலே இவ்வளவு பிரச்சனை இருக்கு…உங்களுக்கு படத்துக்கு போகணுமா?” என அசூயையுடன் கேட்க,

“அம்மா பிரச்சனைகள் நம்மை சுத்தி எப்பவும் இருக்க தான் செய்யும்…அதுக்காக இந்த குட்டி குட்டி சந்தோஷங்களை இழக்க முடியாது…தமி முகமே சரியில்லை…நானும் அவளும் வெளிய போய் ரொம்ப நாளாகிடுச்சு…போயிட்டு வர்றோம்..பிளீஸ்” என அன்னையிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அழைத்து வந்திருந்தான் ஜித்தேந்திரன்.

இருவரும் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது 
திடீரென்று அவனிற்கு ஒரு அழைப்பு வர “லட்டு ஒரு நிமிஷம் இரு…நான் வந்திடறேன்” என அலைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

தமயந்தியின் தோழிகள் உடன் இருக்கும் தைரியத்தில் அவன் சென்றான்.

ஆனால் அவன் பேசிவிட்டு திரும்பி வந்த நேரம் தங்கையை காணவில்லை.

அவளின் தோழிகளிடம் விசாரித்தற்கு “ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்னு சொன்னாள்…இன்னும் வரலையண்ணா” என்றதும் ஜித்தேந்திரனிற்குள் பதட்டம் சூழ ஆரம்பித்தது.

அவளின் எண்ணிற்கு அழைத்துப்பார்க்க,எதிர்புறம் அழைப்பு மணி சென்றுக்கொண்டிருந்ததே ஒழிய,அழைப்பை எடுக்கும் மார்க்கம் மட்டுமில்லை.

‘அச்சச்சோ நான் வெளிய போயிருக்கவே கூடாது…தப்பு பண்ணிட்டமோ?’ என வேகமாக அவளை தேடிக்கொண்டு வெளியே வர,அவனது தங்கையோ யாரோ ஒரு ஆடவனுடன் சாவகாசமாக பேசிக்கொண்டிருந்தாள்.

அவளிற்கு எந்தவொரு ஆபத்துமில்லை என்ற பிறகே நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய ஜித்தேந்திரனிற்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

“தமயந்தி…” என கண்டிப்பான குரலில் அழைத்துக் கொண்டே அவளை நெருங்க,அவனின் விழிகள் எதிரில் உள்ளவனை துளைத்தது.

“அண்ணா வா வா இவர் ஆத்வீக்…என் காலேஜ் சீனியர்” என அவனை தனது தமையனிடம் அறிமுகப்படுத்தினாள்.

அவன் சம்பிரதாயமாக “ஹலோ” என எதிரில் உள்ளவனிடம் பேசியவன் “தமி உனக்கு எத்தனை தடவை கால் பண்ணேன்…நீ ஏன் ஃபோனை எடுக்கவே இல்லை” என்றவனின் குரலில் பட்டவர்த்தனமாக கோபம் கொப்பளித்தது.

அவனின் சினம் அறிந்த மங்கை “எனக்கு கால் பண்ணீயா?எப்போ?” என குழப்பமாக கேட்டுக்கொண்டே அலைப்பேசியை எடுத்து பார்த்தவள் படீரென நாக்கை கடித்து “சாரி அண்ணா…ஃபோன் சைலண்டிலே போயிடுச்சு போலே…சரியா கவனிக்கலை” என விளக்கம் அளித்தாள்.

தங்கையை முறைத்த ஜித்து அவள் முகம் சுருக்கியதும் “சரி சரி இனி கவனமா இரு” என அவளை பெரியவனாக கண்டித்தான்‌.

அதன்பிறகே அவனின் கவனம் எதிரில் இருந்த ஆத்விக்கின் புறம் திரும்பியது.

“ஹாய் ப்ரோ…டென்ஷனிலே உங்களை மறந்திட்டேன்…ஐயம் ஜித்து..‌.நீங்க” என அவனிடம் கைநீட்ட,

அவனோ “நான் ஆத்வீக்…பட் ப்ரோ இல்லை ஜித்து…நான் உங்களுக்கு மச்சான் முறை வேணும்” என சிரித்தவாறே கைகுலுக்கி உரைத்தான்.

“மச்சானா?” என கேள்வியாக ஜித்து புருவம் உயர்த்த,

தமயந்தியோ “ரோகிணி இருக்காங்களே அவருடைய அண்ணா இவரு” என விளக்கமாக எடுத்துக்கூறியதும் அவனின் முகம் அப்படியே மாறிப்போனது.

ரோகிணி சார்ந்த உறவுகளை கண்டாலே அவனிற்கு அருவருப்பாக இருந்தது.

அதனால் அதற்கு மேல் அவனிடம் பேசவே விருப்பமில்லாதவனாய் “சரிங்க ஆத்வீக்…இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்…வா தமயந்தி” என தங்கையை அவன் அழைத்த நேரம் வீர் திரையறங்கிற்குள் நுழைந்தான்.

அவனை கண்டதும் “வீர் அண்ணா நீங்க இங்க என்ன செய்யறீங்க?” என ஆச்சரியமாக ஜித்து வினவ,

அவனின் விழிகளோ அவனிற்கு அருகே நின்றிருந்த தமயந்தியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டன.

சிறிது நேரத்திற்கு முன்பு,

ஜித்தேந்திரன் ஏதோ பரபரப்பில் இருப்பதை கவனித்த தமயந்தியிற்கு அவன் ஏதோ அவசரத்தில் இருப்பது சொல்லாமலே புரிந்தது.

அதனால் தனது மூத்த சகோதரன் ரத்தினவேலிற்கு அழைத்து “அண்ணா தியேட்டரிலிருந்து என்னை அழைச்சுட்டு போக ஏதாவது ஆள் அனுப்பறீங்களா?” என கேட்க,

ரத்தினவேலோ செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விடுத்து “ஜித்து உன் கூட இல்லையா?” என இமைகள் இடுங்க வினவ,

அவளோ “ஜித்து அண்ணா என் கூட தான் இருக்காரு அண்ணா…ஆனால் அவர் ஏதோ அவசரத்தில் இருக்காருனு நினைக்கிறேன்…பாவம் என்கிட்ட சொல்லமுடியாமல் திணறாரு…அதான் நானே நம்ப ஆள் கூட வீட்டுக்கு போயிடலாம்னு நினைச்சேன்…யாரையாவது அனுப்பறீங்களா அண்ணா” என தெளிவாக விளக்கவுரை கொடுத்ததும் அவர்களின் சூழ்நிலை அறிந்த ரத்தினவேல் “ஓ…ஓகேம்மா புரியுது…நான் வீரை அனுப்பறேன்” என்றான் சாதாரணமாக..

அவன் சொன்னதை கேட்ட தமயந்தியின் முகமோ அப்படியே மாறிவிட “அவரா?வேணாம் அண்ணா” என வேகமாக மறுப்பு தெரிவித்தாள்.

வீருக்கு அழைப்பதற்காக எண்ணை எடுத்துக்கொண்டிருந்த ஆடவன் ஒரு கணம் தன் செயலை நிறுத்துவிட்டு “ஏன்?” என்றான்…

அவளிடம் சில வினாடி பதில் ஏதுமில்லை…

ஓர் ஆழ்ந்த அமைதி அவளிடம்…

“தமி…” என அழுத்தமாக ரத்தினவேல் அழைத்ததும் வேறுவழியின்றி “அண்ணா என்கிட்ட எதுவும் கேட்காதீங்க…பிளீஸ்…வேற யாரையாவது அனுப்புங்க” என இறைஞ்சதலுடன் அவன் வேண்டிட,

தங்கையின் குரலில் இருந்த வலியை உணர்ந்த ஆடவன் “சரி நீ வை…நான் ஆள் அனுப்பறேன்” என அலைப்பேசியை துண்டித்தவன் அழைத்தது என்னவோ வீரை தான்!

“என்ன பூபதி?” என்று வந்த அந்த தீவிர விசுவாசியை மேலிருந்து கீழாக நோக்கினான்.

வழக்கமாக அவனிடம் இருக்கும் தோரணை இல்லை…

ஒரு வாரமாக மழிக்கப்படாத தாடி மீசையுடன் இருந்த நண்பனை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் சலிப்பாக தலையாட்டி கொண்டு “தமயந்தி தியேட்டரில் இருக்காள் வீர்…நீ போய் அவளை கூட்டிட்டு வந்து வீட்டுலே விட்டிரு” என்றான் கட்டளையாக…

ஆனால் அவன் கூறி முடித்த அடுத்த கணமே “ஏதே தியேட்டருக்கு தனியா போனாளா?” என்று கோபமாக தன்னை மீறி கேட்டிருக்க,

அவனை அழுந்த நோக்கிய ரத்தினவேல் “தனியா போகலை வீர்…ஜித்து கூட தான் போயிருக்காள்…” என அவன் நிதானமாக விளக்கம் தெரிவித்த பிறகே அவன் சமாதானமடைந்தான்.

அவனின் படபடப்பு குறைந்ததும் மீண்டும் மனம் முறுக்கிக்கொள்ள “சரி அப்போ நான் சம்பத்தை அனுப்பறேன் பூபதி” என்றுவிட்டு திரும்ப,

ரத்தினவேலோ இமைகள் இடுங்க “வீர் நான் உன்னை போக சொன்னேன்…” என்றான் அதிகாரமாக…

உடனே அவனை நோக்கி திரும்பிய வீர் “இல்லை பூபதி எனக்கு வேலை இருக்கு…” என தயக்கத்துடன் இழுக்க,

அவனை கூர்ந்து நோக்கிய ரத்தினவேல் “வீர் நான் உன்கிட்ட ரெக்வெஸ்ட் வைக்கலை…நீ தான் போகணும்னு ஆர்டர் போடறேன்…முதல்ல கிளம்பு” என கம்பீரத்துடன் ஆணைப்பிறப்பித்ததும்,அதற்கு மேலும் நண்பனின் கட்டளையை அவனால் மீற முடியவில்லை.

வேறுவழியின்றி வீர் அங்கு கிளம்பி வந்திருந்தான்.

அவன் வந்ததற்கான காரணம் தெரிவித்ததும் ஜித்துவோ “ஏய் அவசரக்குடுக்கை…அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?உன்னை வீட்டுலே விட்டுட்டு நான் போகமாட்டானா?” என தமயந்தியை பார்த்து வினவ,

அவளோ “நீ  சொல்லலைனா கூட நீ எனக்காக யோசிச்சு தான் இங்க இருக்கேன்னு தெரியும் அண்ணா…அதனாலே தான் ஆள் வர சொல்லிட்டேன்…நீ இப்போ எங்க போகணுமோ போ…பை” என புரிந்துணர்வுடன் பேசியவளை பெருமிதமாக நோக்கினான் ஜித்து.

மெய்யாகவே அவன் முக்கிய பணியாக ஒரு நபரை சந்திக்க செல்லவேண்டும்.ஆனால் தங்கையை படம் பார்க்க அழைத்து வந்துவிட்டு பாதியில் எழுந்து செல்வது சரியில்லை என்று பொறுமை காத்தான்‌.

இப்போது தன் அவசரத்தை புரிந்துக்கொண்டு செயல்பட்ட தங்கையின் புரிதலை கண்டு உருகிய தமையன் “தேங்க்ஸ்டி லட்டு” என நெகிழ்ச்சியுடன் விடைப்பெற்றான்‌.

வீரிடமும் “அண்ணா தமியை வீட்டுலே பத்திரமா கொண்டு போய் விட்டிருங்க…” என மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்லிவிட்டே அவசரமாக வெளியேறினான்.

அவனிடம் “ஹும்” என தலையாட்டியவனின் விழிகள் கூர்மையாக படிந்தது ஆத்வீக்கின் மீது!

‘யாரிவன்?’ என்பது போல் அவனின் விழிகள் புதியவனை துளைக்க,அவனிற்கான பதிலை கொடுக்க வேண்டியவளோ அவன் புறம் திரும்பவே இல்லை.

வீரின் மீது பெரும் கோபத்தில் இருந்ததால் அவனை நிச்சலனத்துடன் அலட்சியம் செய்துவிட்டாள் பாவை.

யாரோ ஒருவர் அவளிற்கு சம்மந்தமில்லாத நபர் நிற்பது போல் ஆத்வீக்கிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

அவனை கண்டுக் கொள்ளாமல் அவனிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வீரின் நெஞ்சம் பொறாமையில் கனன்றன‌.

ஐந்து நிமிடங்கள் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு “தமயந்தி லேட்டாகுது” என்றவனின் வார்த்தையில் அனல் தெறித்தது.

அவள் அவனிடம் திரும்பி பேசுவதற்குள் ஆத்வீக் “ப்ரோ பேசி முடிச்சிட்டு தமியை நான் டிராப் பண்ணிடறேன்…நீங்க வேணா கிளம்புங்க” என்றதும் வீருக்குள் சுறுசுறுவென ஆத்திரம் பொங்கின.

‘யாரு யாரைடா டிராப் பண்ணறது?’ என அவனது சட்டையை பிடித்து கேட்கும் அளவு ஆக்ரோஷம் முகிழ்ந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான் வீர்.

அதனால் அவனிற்கே உரிய பணிவுடன் “நோ தேங்க்ஸ் பிரதர்…அவங்க அண்ணன் பொறுப்பை என்னை நம்பி ஒப்படைச்சிருக்காரு…அதை என்னாலே மீறி முடியாது” என சாந்தமாக உரைத்தவன் “தமயந்தி நீ வா” என அவளை துளைக்கும் பார்வை பார்த்தான்‌.

அவனின் விழிகளில் ‘நீ இப்போதே என்னுடன் வரவேண்டும்’ என்ற மறைமுக கட்டளையிருக்க,

அவளோ வேறுவழியின்றி “ஆத்வீக் பை…இன்னொரு நாள் நாம்ப சந்திக்கலாம்…வீட்டுக்கு வாங்க” என சிரித்துக்கொண்டே விடைக்கொடுத்துவிட்டு வீரின் பின்பு நடந்துச் சென்றாள்.

இருவரும் ஒன்றாக நடந்து செல்வதை கண்ட ஆத்வீக்கின் முகம் அப்படியே மாறிப்போயின.

வீர் எப்போதும் போல் ஜீப்பின் முன் பக்க கதவை அவளிற்கு திறந்து விட,அவளோ மௌனமாக அதனை மறுத்துவிட்டு ஜீப்பின் பின் கதவை திறந்து அதில் ஏறி அமர்ந்தாள்.

அதனை ஒரு பெருமூச்சுடன் நோக்கிய வீர் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து வண்டியை எடுத்தான்.

அவளோ அவன் இருந்த திசைப் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை…அவனிடம் பேசவும் முற்படவில்லை.

வண்டியில் ஏறிய கணத்திலிருந்து வாய் ஓயாமல் பேசுபவளின் இதழ்கள் இன்று பூட்டியே இருந்தன.

ஆனால் அவனின் விழிகள் மொத்தமும் அவளின் மீது மட்டுமே நிலைப்பெற்று இருந்தன.

அவனின் செவியோ அவளின் வாயிலிருந்து வெளிப்படும் சொற்களுக்காக தவமிருந்தன.

அதனை உணர்ந்த தமயந்தி “ப்ச்” என சலித்துக்கொண்டே அலைப்பேசியை கையில் எடுத்தாள்.

அச்சமயம் அவளின் அலைப்பேசிக்கு ஆத்வீக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

உடனே அவளின் முகம் பூவாய் மலர்ந்திட “இப்போ தானே பார்த்தோம்…அதுக்குள்ள கால் பண்ணியிருக்கீங்க?” என வியப்புடன் வினவினாள்.

“ஆமா ஆமா ஆத்வி…வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்” என்றவளின் சிரிப்பு சத்தம் வீரின் செவியை குடைந்தன.

அவள் பேச பேச அவனின் முகம் அப்படியே இறுகிவிட்டன.

எதிரில் பேசியவன் ‘என்ன கேட்டானோ?’ அதற்கு “ஓ அவரா?” என்றவளின் விழிகள் ஒரு கணம் வீரின் மீது பதிந்து மீண்டன.

அவனை பற்றி தான் அவன் விசாரிக்கிறான் என்பது வீருக்கும் அவளின் வழியே புரிந்தன.

அவளின் பதிலுக்காக அவன் ஆர்வமாக காத்திருக்க,அவளோ அவனது இதயத்தில் ஒரு குடை தணலை அள்ளி கொட்டினாள்.

“எனக்கும் அவருக்கும் இடையே ஒண்ணுமில்லை ஆத்வி…அவர் அண்ணாவோட ஃப்ரெண்ட்…சின்ன வயசிலிருந்து பழக்கம்…அவ்வளவு தான்” என்றவள்,ஓரவிழியால் அவனது முகத்தின் உணர்வுகளை தான் அளந்துக்கொண்டிருந்தாள்.

‘நான் அவ அண்ணனோட ஃப்ரெண்டு மட்டும் தானா?வேற யாருமில்லையா?’ என மனம் சுணுங்கிவிட்டன.

அவளோ “ஹே நிஜம் தான்பா…நம்புங்க” என மெல்லியதாக புன்னகைத்தவள்,

“சரி சரி…சன்டே வீட்டுக்கு வர்றீங்களா?வாங்க…வாங்க…அம்மாவை ஸ்பெஷலா உங்களுக்காக சமைச்சு வைக்க சொல்லறேன் ஆத்வீ…பை பை” என உற்சாகமாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவளின் இதழில் இருந்த புன்னகை மீண்டும் மறைந்துப்போனது.

அதைப்பார்த்த வீருக்கு கடும் கோபம் வந்தது.

‘அதென்ன அவன்கிட்ட மட்டும் சிரிச்சு பேசறாள்…என்னை பார்த்தவுடனே உம்முன்னு மாறிடுது’ என கடுப்பாகிய வீர் “யாரிவன்?” என சீறலாக கேட்டிருந்தான்.

அவளை பார்க்கவே கூடாது என முடிவெடுத்தவனால் அவள் தன்னை விட்டு வேறொரு ஆடவனுடன் சாதாரணமாக பேசுவதை கூட ஏற்க முடியவில்லை‌.

அவனது அடி வயிறு நெருப்பாய் கொதிக்க,அவளோ “யாரு?” என புருவம் சுருக்கி அவனிடம் வினவ,

அவளின் பேச்சில் வழக்கமாக இருக்கும் அன்போ அக்கறையோ எதுவுமில்லை.

ஒரு அந்நியத்தன்மை மட்டுமே இருக்க…அவனிற்கு நெஞ்சம் வலித்தது.

“தியேட்டரிலே…அப்புறம் இப்போ ஃபோனிலே பேசினானே அவன்…” என அலைப்பேசியை விரலால் சுட்டிக்காட்டி உரைக்க,

சட்டென வீர் யாரையும் மரியாதையின்றி விளிக்கமாட்டான் என்பதால் தமயந்தியின் இமைகள் இடுங்கின.

அவனை கூர்மையாக அளவிட்ட தமயந்தியின் விழிகளோ நொடியில் அவனது பொறாமையுணர்வை அறிந்துக்கொண்டன.

‘ஓ…ரவுடி சாருக்கு பொறாமையா?இது நல்லாயிருக்கே’ என இதழுக்குள் வந்த சிரிப்பை அடக்கிய தமயந்தி “எனக்கு அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளை” என வேண்டுமென்றே வீம்பாக சொல்ல,

அதனை கேட்ட வீர் அதிர்ச்சியில் ஒரு கணம் வண்டியை கீறிச்சிட்டு நிறுத்தியிருந்தான்.

படீரென அவளை நோக்கி விழிகளை திருப்பிய வீர் “என்ன சொன்னே?” என தனது காதில் விழுந்த செய்தி பொய்யாக இருக்கவேண்டும் என்ற பதற்றத்துடன் அவன் வினவ,

அவளோ அவனை ஆழ்ந்து நோக்கி “அப்பா எனக்கு பார்த்த மாப்பிள்ளை…ரோகிணியோட அண்ணன்…அதுமட்டுமில்லாமல் அவர் என்னோட காலேஜ் சீனியர்…நல்ல மனுஷன்…அவர் தான் காலேஜ் பர்ஸ்ட்…” என அவனை பற்றிய புகழாரத்தை சூட்டிக்கொண்டே செல்ல அவனின் முகம் அப்படியே உயிருடன் மடிந்துவிட்டது.

தன்னவளின் வாயால் வேறு ஒருவனை புகழ்ந்தால் எந்தவொரு ஆண்மகனால் தான் ஏற்க முடியும்?

அவனது வாடிய முகத்தை நோக்கிய தமயந்தி ‘எனக்கு பார்த்த மாப்பிள்ளைனு சொன்னதுக்கே சாரோட முகம் செத்துப்போச்சு…இதிலே என்னை வேற ஒருத்தருக்கு விட்டுக்கொடுத்திருவாரா இவர்?இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீராப்புனு பார்க்கறேன்’ என நக்கலாக மனதிற்குள் எண்ணினாள்.

வீரோ பின்னால் திரும்பி அவளை ஏறிட்டு “பூபதி இதை பத்தி எதுவும் என்கிட்ட சொல்லலையே” என நலிந்த குரலில் வினவ,

“இன்னும் கன் ஃபார்ம் ஆகலை…வெறும் பேச்சோடு நிக்குது…ஆனால் இரண்டு வீட்டுலையும் ஓகே சொல்லிட்டாங்க…அதனாலே கன்ஃபார்மானதும் சொல்லிக்கலாம்னு நினைச்சிருப்பாரு” என அப்படியே வாயிற்கு வந்தது அனைத்தையும் அள்ளி தெளித்தாள்.

அனைத்தையும் கேட்டு நெற்றியை நீவியப்படி “ஓ…” என ஏமாற்றத்துடன் இழுத்தவனோ மெதுவாக அவளை ஏறிட்டான்.

‘மத்தவங்களை விடு உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா?’ என்று கேட்க அவனின் நாவு துறுதுறுத்தாலும் அவளிடம் அவன் எதையும் கேட்கவில்லை.

அவளை விலக்கி வைக்கும் முடிவெடுத்தப்பிறகு அவளிற்கு ஒரு நல்ல வாழ்வு அமைந்தால் போதும் என்று சிந்தை கூறினாலும்,அவனது மனம் மட்டும் அவளிற்காக துடித்தன.

தன்னவள் தன் கையைவிட்டு செல்வதை அவன் மனம் விரும்பவில்லை.

அதனை வெளிப்படுத்த குமுறிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு அவன் விழுங்கிக்கொண்டான்.

அவளையே சில கணங்கள் அசையாமல் பார்த்த வீர் மௌனமாக திரும்பி வாகனத்தை எடுக்க,அவளோ வேண்டுமென்றே “நீங்க ஏன் வந்தீங்க?உங்களை அனுப்ப வேணாம்னு நான் அண்ணாகிட்ட சொன்னானே” என்றதும் அவனது நெஞ்சத்தில் பெரும் அடி விழுந்தது.

“ஏன்?” என அடைந்த தொண்டையை சரி செய்து கண்ணாடி வழியே அவள் முகம் பார்த்து அவன் வினவ,

“உங்களுக்கு நிறைய முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கும்…தேவையில்லாமல் எனக்காக உங்க பொக்கிஷமான நேரத்தை எதுக்கு வீணாக்கணும்?” என வேண்டுமென்றே அவனை காயப்படுத்தும் நோக்கத்துடனே வினவினாள்.

அவனோ சிறிது ஆதங்கத்துடன் “நான் அப்படி சொன்னானா?” என அடிப்பட்ட பார்வை பார்க்க,

அவளோ இதழை வளைத்து “உண்மைய சொல்லுங்க…நீங்களும் என்னை பார்க்க விரும்பலை தானே…அண்ணா தானே உங்களை கட்டாயப்படுத்தி இங்க அனுப்பினாரு” என அங்கு நடந்ததை அப்படியே படம் பிடித்து காணொளியாக பார்த்தது போல் அவள் கறாராக வினவ,

அது தான் உண்மை என்பதால் அவன் மௌனமாக இருக்க,அவளின் இதழ்கள் விரக்தியில் விரிந்தன.

அவளின் மனதில் ‘இல்லை’ என்று கூறிவிட மாட்டானா என்ற நப்பாசை சிறிது இருந்தது.

ஆனால் இப்போதும் அவன் தன் பிடியில் உறுதியாக இருப்பதை பார்த்தவளிற்கு மனம் வெறுத்துப்போனது.

‘நான் உனக்கு தானே…என் அப்பாவுக்காக என்னையே விட்டுக்கொடுக்க முடிவு பண்ணிட்டிங்கயில்லை…இப்படியே இருங்க வீர்’ என நெஞ்சில் எழுந்த சீற்றத்துடன் எண்ணியவள் “இனி என் அண்ணாவே சொன்னாலும் நீங்க என்னை கூப்பிட வராதீங்க…உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கலை…நான் எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்கிறேன்…புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லும் போதே அவளின் குரல் உடைய ஆரம்பித்தது‌.

அத்தோடு அவளின் பேச்சை கேட்ட வீரின் உள்ளமும் கண்ணாடி போல் உடைந்து நொறுங்கிப்போனது.

மேலும்,வந்ததிலிருந்து ஒரு முறை கூட அவளின் வாயிலிருந்து ஒரு முறை கூட ‘வீர்’ என்ற அழைப்பு வரவில்லை என்பதை கவனித்த வீரால் அவளின் நிராகரிப்பை ஏற்கவே முடியவில்லை.

ஒரு லட்சம் ஊசியால் குத்தியது போல் அவனின் நெஞ்சில் ரணம் கிளர்ந்தன.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top